
"பாருங்க... மணி இன்னும் வந்து சேரவில்லை. இன்னைக்கு நாம அவனுடன் இருந்து தேநீர் குடிப்போம் என்று நான் நினைத்தேன்.”
"ஆமாம்... நானும் அதை உண்மையாகவே நினைத்திருந்தேன்."
சாதாரணமாக ஒரு தவறை மறைப்பதற்கு முயற்சித்துக் கொண்டே நான் அதைச் சொன்னேன். அதுவரையில் நான் மணியைப் பற்றி எதுவுமே கேட்கவில்லையே! ஒரு மகன் மீது இருக்கும் பாசத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். அதை மாற்றுவதற்காக நான் 'ஆர்வத்துடன்' மணியைப் பற்றி அதற்குப் பிறகு பலவற்றையும் கேட்டேன். இப்படியே சிறிது நேரம் சென்றது.
ஐந்து மணி ஆனபோது மரங்கள் மீது மஞ்சள் வெயில் படர்ந்து சுகமான இளம் காற்று வீச ஆரம்பித்தது. ஹோட்டலில் இருந்து வானொலிப் பாட்டு கேட்டது. மூச்சுவிட முடியாமல் செய்து கொண்டிருந்த அந்த சுற்றுப் புறங்கள் மெதுவாக மாறிக் கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் ஒரு அஞ்சல் ஊழியர் எங்களை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தேன். கனகம் ஆர்வத்துடன் எழுந்து அவரை நோக்கிச் சென்றாள். முகவரி சரிதானா என்று பார்த்துவிட்டு அவர் ஒரு தந்தித் தகவலை அவளிடம் தந்தார்.
"மணியின் தந்தியாகத்தான் இருக்க வேண்டும். நான் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."
"சென்னையில் இருந்து வந்திருக்கு. மணியின் தந்திதான்"- அவள் படிப்பதற்கிடையில் சொன்னாள்.
"அவன் வரவில்லையாம். வேலை முடிந்துவிட்டால் சீக்கிரமா நான் அங்கே வந்துவிடுவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானாம்."
கனகம் தீவிர சிந்தனையில் மூழ்கினாள். அவள் அந்த தந்தியைச் சுருட்டி குழாய் போல ஆக்கி உதட்டில் வைத்து ஊதியவாறு எதையோ திட்டமிடுவதைப் போல நின்றிருந்தாள்.
"அப்படின்னா, நான் நாளைக்குப் போகணும். அவனைப் பார்க்குறதுக்கு எனக்கு அவ்வளவு ஆர்வமா இருக்கு"- அவள் மீண்டும் எனக்கருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: "நாம கொஞ்ச நாட்களாவது ஒன்று சேர்ந்து இருக்க முடியும்னு நான் நினைச்சேன். மணி எந்தச் சமயத்திலும் என் விருப்பத்திற்கு எதிராக நடந்தது இல்லை. அவனுக்கு பயணம் சோர்வைத் தரும் ஒரு விஷயமாக தோன்றியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், நேற்று கடிதம் எழுதியது நல்லதாகப் போய்விட்டது. இந்த அவசரத்துக்கு மத்தியில் என்னால் எதையும் பேசவே முடியாது."
"ஆமாம்... நிச்சயமாக. அந்தக் கடிதத்தால் நாம எவ்வளவோ நெருங்க முடிஞ்சிருக்கே!"
நான் அப்படித்தான் சொன்னேன். நிச்சயமாக அது சுய உணர்வுடன் சொல்லப்பட்டது.
"அப்படியா? சகோதரி, ஒருவேளை என்னைவிட்டு எங்கே நீங்க கொஞ்சமாவது விலகிப் போயிடுவீங்களோன்னு நான் பயந்தேன். இருந்தாலும் அதை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை."
"திறந்த மனதுடன் நெருங்கத்தான் முடியுமே தவிர, விலகுவதற்கு யாரால் முடியும்?"
கனகம் என்னுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு என்னவோ கூற முயன்றாள். ஆனால், அவள் அமைதியாக என் முகத்தைப் பார்க்க மட்டுமே செய்து கொண்டிருந்தாள். வெள்ளி ரேகைகள் படரத் தொடங்கியிருந்த அந்தத் தலை முடியும், முதுமையை அறிவிக்கும்- சுருக்கங்கள் விழுந்திருக்கும் அந்த முகமும் ஏதோ புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இளமை ஒளியால் பிரகாசிப்பதைப் போல எனக்குத் தோன்றியது.
"ஹா! நாம் எவ்வளவோ முன்பு அறிமுகமாகியிருந்திருக்க வேண்டும்!"
என் கையில் இருந்த தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டே அவள் கனவில் பேசுவதைப் போல சொன்னாள். மீண்டும் கனகம் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.
"வாங்க... நாம உள்ளே போகலாம். சகோதரி, நீங்கள் மணியின் புகைப்படத்தைப் பார்க்க வேண்டாமா? அவனை நேரில் பார்க்க முடியாமல் போய் விட்டாலும்..."
நாங்கள் எழுந்தோம். நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது. நகரம் மின் விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நான் கனகத்தைப் பின் தொடர்ந்து நடந்தேன். ஏதோ பூமியைப் பற்றிய படத்தைக் காட்டி, புவியியல் பற்றி பாடம் கற்றுத் தரப்போகிற ஒரு ஆசிரியையைப் பின் தொடர்ந்து செல்வதைப் போல் நான் உணர்ந்தேன்.
"பாருங்க... போன வருடம் அவன் கல்கத்தாவில் இருந்து அனுப்பியது..."
அவள் சுவரிலிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்து எனக்கு நேராக நீட்டியவாறு சொன்னாள். தொடர்ந்து என்னையும் படத்தையும் மாறி மாறிப் பார்த்தவாறு சிந்தனையுடன் நின்றிருந்தாள்.
புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்த நிமிடம் என்னுடைய இதயத்தில் அலையடித்த உணர்ச்சிகளை நான் எப்படி வெளியிடுவேன்? அது மணியின் புகைப்படம் தானா? நான் என் கண்களைச் சுருக்கிக் கொண்டு, ஒரு புதிய காட்சிக்கு என்னைத் தயார் பண்ணிக் கொண்டு மீண்டும் கண்களைத் திறந்தேன். அந்தப் படம் அதே நிலையில் இருந்தது. எரிந்து கொண்டிருந்த ஒரு வேதனை வயிற்றிலிருந்து கிளம்பி மேல்நோக்கி நகர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் சந்தேகத்துடன் கனகத்தின் முகத்தையே பார்த்தேன். அவள் அப்போதும் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"என் மகனை முன்பே பார்த்திருப்பதைப் போல் தோணுது... அப்படித்தானே?"
அந்த ஆசிரியையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எனக்கு மேலும் தெளிவாகத் தெரிந்தன.
"ஆமாம்... ஆமாம்... எனக்குத் தெரிந்திருப்பதைப் போல... தோணுது..."
"சரிதான்... இது அவனுடைய மிகச் சிறந்த புகைப்படம். அவனை நேரில் பார்ப்பதைப் போலவே இருக்கும்."
என்னால் எதையும் கூற முடியவில்லை. என் மனதில் உண்டான சந்தேகத்தை வெளியில் கூற முடியாமல் இருந்தேன். அதை நினைத்துப் பார்க்கவே என்னால் முடியவில்லை. அது என்னுடைய வயதிற்கும் புனிதத் தன்மைக்கும் எதிராக இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.
கனகம் அந்த நேரத்தில் என் கையை இறுகப் பற்றிக் கொண்டு, அந்த அறையில் சுவரோடு சேர்த்துப் போடப்பட்டிருந்த கட்டிலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.
"சகோதரி, எனக்கு நீண்ட நேரம் இல்லை. நான் இன்னும் கொஞ்சம் நிதானமாக இதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். மனதை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்க."
அவள் எழுந்து எதிரில் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த இன்னொரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு என்னை நோக்கி வந்தாள்.
"அவனுக்கு அவனுடைய தந்தையின் சாயல் எந்த அளவுக்கு அப்படியே இருக்குன்றதைப் பாருங்க"- அவள் நடப்பதற்கு மத்தியில் சொன்னாள்: "அவர் திருமணத்திற்கு அனுமதி வாங்குவதற்காக இரண்டாவது தடவையாக என்னைத் தேடி வந்த விஷயத்தைத்தான் நான் எழுதியிருந்தேனே! நான் அவ்வளவு சீக்கிரமா அதற்கு சம்மதிக்க மாட்டேன்னு அவர் நினைத்திருக்கலாம்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook