Logo

மண் விளக்கு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6827
mann-vilakku

சுராவின் முன்னுரை

சாராதிந்து பந்தோபாத்யாய் (Saradindu Bandupadhyay) எழுதிய வங்கமொழிப் புதினமான ‘ம்ரித ப்ரதீப்’யை ‘மண்விளக்கு’ (Mann Vilakku) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன்.

வங்க மொழியின் மூத்த எழுத்தாளரான சாராதிந்து பந்தோபாத்யாய் 1899-ஆம் ஆண்டில் பிறந்தவர். ஏராளமான நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கும் அவர் திரைப்படத்துறையிலும் பணிபுரிந்திருக்கிறார்.

பல இந்தி, வங்க மொழிப் படங்களில் திரைக்கதாசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவரின் பல கதைகள் இந்தியிலும், வங்க மொழியிலும் திரைப்படங்களாக வந்திருக்கின்றன. அவர் எழுதிய ‘சிறியாக் கானா’ என்ற புதினத்தை சத்யஜித்ரே வங்க மொழியில் திரைப்படமாக இயக்கியிருக்கிறார். அவரின் ‘தாதர் கீர்த்தி’ என்ற சிறுகதை தருண் மஜூம்தார் இயக்க, வங்கமொழியில் படமாக வந்திருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகம் அவருக்கு விருது வழங்கி கெளரவித்திருக்கிறது.

1970-ஆம் ஆண்டில் மரணத்தைத் தழுவிய சாராதிந்து பந்தோபாத்யாய் எழுதிய இந்த நாவலை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


மிகப்பெரிய அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் உயிரியல் நிபுணர்களும், பூமிக்குக் கீழே புதைந்து கிடக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மிருகங்களின் எலும்புக் கூடுகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த மிருகங்கள் கடந்தகாலத்தில் உண்மையாகவே எப்படி இருந்திருக்கும் என்பதை விவரித்துக் கூற முயற்சிக்கும்போது, அவர்கள் சில நேரங்களில் தங்களின் கற்பனையைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். அப்படி அவர்கள் கற்பனை செய்து கூறும் வடிவம் அந்த மிருகத்தின் உண்மையான தோற்றத்துடன் ஒத்துப் போகிறதா இல்லையா என்பது தொடர் விவாதத்திற்கும் முரண்படுவதற்குமான விஷயமாக மாறும்.

மண்ணுக்குக் கீழே புதையுண்டு கிடக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய மிருகங்களின் எலும்புக்கூடுகளைப் போன்ற நிலையில் இருப்பதுதான் நம் நாட்டின் வரலாறும். பலவிதமான சிரமங்களுக்குப் பிறகு, முழு எலும்புக்கூடுமே கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், கடந்த காலத்தைப் பற்றிய முழு உண்மையையும் கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒரு விஷயமாக ஆகிவிடுகிறது. இந்த மாதிரியான உயர்ந்த விவாதங்களில் பங்குபெறும் மிகச்சிறந்த அறிவாளிகள் சில நேரங்களில் அரைகுறையான உண்மைகளைக் கூறி, பொதுமக்களை குழப்பத்திற்குள்ளாக்குவார்கள். எந்தவிதமான உறுதியான முடிவுக்கும் வராமலேயே, பாதியிலேயே கைவிடும் சூழ்நிலை வரும் வரை, பொதுமக்கள் அதில் சிறிதுகூட அக்கறை செலுத்துவதே இல்லை. அதனால், இந்த மாதிரியான எலும்புக்கூடுகளைப் போன்ற மேலோட்டமான உண்மைகளிலிருந்து என் நாட்டின் வரலாற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியும் என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம் என்றே நான் எப்போதும் உணர்கிறேன். மண் விளக்கின் கதை என்னுடைய பார்வையின் தன்மை என்பதைக் காட்டும்.

நடந்து செல்லும்போது, ஒரு கனவில் நடப்பதைப்போல, நான் பழைய நகரமான பாடலிபுத்திரத்தின் அகழ்வாராய்ச்சி செய்யும் இடத்தில் அந்த மண் விளக்கை ஒரு குப்பைக் குவியலில் கண்டுபிடித்தேன். அது மிகவும் சாதாரண பண்டைக்கால மண் விளக்கைப்போலவே காணப்பட்டது.  கால மாற்றத்தால் அது தாளைப்போல மிகவும் மென்மையாக இருந்தது. ஆனால், பல வருடங்கள் கடந்து சென்ற பிறகும், அது எரிந்த இடத்தில் ஒரு கறுப்பு நிற புள்ளி காணப்பட்டது. அந்த பாழாய்ப்போன, மிகச் சாதாரணமான விளக்கிலிருந்து உண்டான நெருப்பு ஒரு சாம்ராஜ்ஜியத்தையே எப்படி அழித்தது- வரலாற்றின் போக்கையே வேறு பக்கம் எப்படித் திருப்பிவிட்டது. என்பதைக் கூறினால் யார் நம்புவார்கள்?

அந்த விளக்கிற்கு முக்கியத்துவம் அளித்து காட்சியகங்களில் வைத்திருப்பதற்கு பதிலாக, மிகப்பெரிய வரலாற்று அறிஞர்கள் அதை வெளியே விட்டெறிந்து விட்டார்கள். நான் அதை எடுத்து, வீட்டுக்குக் கொண்டு வந்து, மாலை நேரத்தில்- எண்ணெய்யை ஊற்றி என்னுடைய தனிமையான அறையில் அதை எரிய வைத்தேன்.  அது எவ்வளவு வருடங்களுக்குப் பிறகு ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது! இந்தக் கேள்விக்கு மிகவும் படித்த வரலாற்று அறிஞர்களுக்கு எப்படி விடை அளிக்கத் தெரியும்? அந்த சிறிய விளக்கு வரலாற்றின் எந்த இருண்ட பக்கத்திற்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது? அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருப்பவர்கள் வாசித்துக் கூறுவதற்கு அந்த விளக்கில் எந்த எழுத்துகளும் செதுக்கப்பட்டிருக்கவில்லை. அதனால், என்னுடைய கடந்தகால வாழ்க்கையைக் கண்டுபிடிக்கக்கூடிய சிறப்புத் திறன் கொண்ட, ஏழை ரெயில்வே க்ளார்க்கான என்னிடமே அது இருந்துவிட்டது. என்னுடைய புரிதல்களின் இருண்ட ஆழங்களுக்குள் மறைந்து கிடந்த வரலாற்றைத் தோண்டிப் பார்க்கக் கூடிய திறமை எனக்கு இருந்தது.

என்னுடைய அறையில் மூடப்பட்ட கதவுகளுக்குள் நான் விளக்கை எரியச் செய்தவுடன், ஒரே நிமிடத்தில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு மாறுதல் அங்கு உண்டானது. அதிர்ச்சியடைந்த என் மனம் தன்னுடைய பழைய நண்பனின்- அந்த எரிந்து கொண்டிருக்கும் மண் விளக்கின் செயலைத் தொடர்ந்து கடந்தகாலத்தை நோக்கித் திரும்பியது. ஒரே நொடியில், பாடலிபுத்திரம் என்ற அந்த மிகப் பெரிய நகரம், மகத நாட்டு அரசனின் முக்கியத்துவமே இல்லாத சாதாரண தலைநகரமாக மாறியது. சிறிய சிறிய நிகழ்ச்சிகளுடனும், எத்தனையோ வருடங்களுக்கு முன்பு பேசப்பட்ட முக்கியத்துவமற்ற வார்த்தைகளுடனும் என்னுடைய நினைவுகள் பசுமையாக இருந்தன. நிகழ்காலம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. என்னுடைய மனக்கண்ணுக்கு இன்னொரு பிறவியும் தோற்றமும்தான் தெளிவான உண்மைகளாகத் தெரிந்தன.

அந்த விளக்கின்  வெளிச்சத்தில் இருந்துகொண்டு நான் இந்தக் கதையை  எழுதுகிறேன்.

2

சுமார் பதினாறு நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஒரு சிறிய நிலாச்சுவான்தாரான கடோத்கச்ச குப்தர் என்பவரின் மகனாகப் பிறந்த சந்திரகுப்தன், மிகப்பெரிய செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்த லிச்சாவி குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டான். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் அவன் பாடலிபுத்திரத்தை தன் கைக்குள் கொண்டு வந்தான். அதை வெற்றி பெற்று, அந்த இடத்தில் அவன் தன் ஆட்சியை நிறுவினான். பிற்காலத்தில் மிகப்பெரிய நகரமாக விளங்கிய பாடலிபுத்திரம் அல்ல அது. ஒரு சிறிய- சாதாரண தலைநகரமாக அது இருந்தது. சந்திரகுப்தனின் அப்போதிருந்த அதிகாரத்தைப் பற்றி வரலாற்று அறிஞர்களுக்கு மத்தியில் பலவிதமான மாறுபட்ட சர்ச்சைகள் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தன. நான் அந்தக் காலகட்டத்தில்- வேறொரு பிறவியில்- உயிருடன் வாழ்ந்துகொண்டிருந்ததால்- சந்திரகுப்தன் அரசனாக ஆகிவிட்டிருந்தாலும், அவன் பெயரளவில் மட்டுமே  அரசன் என்ற விஷயம் எனக்கு நன்கு தெரியும். லிச்சாவி குடும்பத்திலிருந்து வந்திருந்த அரசி குமாரதேவி மிகவும் சக்தி படைத்தவளாக இருந்தாள். அவள்தான் உண்மையாகவே ஆட்சி செய்பவளாக இருந்தாள். அரசாங்கத்தின் நாணயங்களில் கூட அவளுடைய உருவம்தான் அச்சிடப்பட்டிருந்தன. அவளுடைய உருவத்துடன் லிச்சாவி குடும்பத்தின் பெயரும் அதில் அச்சிடப்பட்டிருந்தது. ஒருமுறை சந்திரகுப்தன் தன்னுடைய பலம் என்ன என்பதைக் காட்டுவதற்கு முயற்சி செய்தான். ஆனால், தான் கூறியதை யாருமே மதிக்கவில்லை என்பதை அவன் கண்டுகொண்டான்.

அவன் ஒரு மிகப் பெரிய போர் வீரன். அதனால் இந்த விஷயம் அவனுடைய சுய மரியாதைக்குக் கிடைத்த பலத்த அடியாக இருந்தது. அவனுடைய பிரயோஜனமற்ற கோபமும், திருப்தியற்ற தன்மையும் அவனை பெண்களின்மீதும், மதுவின் பக்கமும், சூதாட் டத்தை நோக்கியும், அருகிலிருந்த காடுகளில் வேட்டையாடச் செல்வதிலும் திருப்பிவிட்டன.

மக்களைப் பொறுத்த வரையில் தங்களை அரசன் ஆட்சி செய்கிறானா அல்லது அரசி ஆட்சி செய்கிறாளா என்பதைப் பற்றியெல்லாம் கவலையே இல்லை. நோயோ பஞ்சமோ போரோ இல்லாத வரையில் அவர்களுக்கு சந்தோஷமே. இதற்கு முன்பு, மகத அரசு சிறுசிறு அரசுகளாக உடைந்து, சிறிய சிறிய விஷயங்களுக்குக்கூட ஒன்றோடொன்று சண்டை போட்டுக் கொண்டிருந்தன. இந்த விஷயம் மக்களுக்கு ஏராளமான பிரச்சினைகளைத் தந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட நேரத்தில் சந்திர குப்தன் பாடலிபுத்திரத்தையும் அதனுடன் ஒட்டியிருந்த பகுதிகளையும் ஆக்கிரமித்து, அந்த இடங்களில் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கினான்.


புதிதாக வந்து சேர்ந்த அமைதித்தன்மையால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அதனால் தங்களை உண்மையாகவே ஆட்சி செய்து கொண்டிருப்பது யார் என்பது போன்ற சிறிய விஷயங்களைப் பற்றி நினைத்து தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை.

அந்த இளம் வயது அரசி தன்னுடைய குழந்தையாக இருந்த மகன் சமுத்திரகுப்தனுடன் நாட்டை ஆட்சி செய்தாள். அவளுடைய முழுக் கவனமும் அவன்மீதுதான் இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இளவேனிற் காலத்தில் ஒரு நாள் அரசன் சந்திரகுப்தன் நகரத்தைத் தாண்டியிருந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாடுவதற்காகச் சென்றான். காட்டில் மிகப்பெரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் அழகாக கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருந்த கூடாரங்களுக்குள் அடிமைப் பெண்கள், நடனமாடும் பெண்கள், இசைக் கலைஞர்கள், சமையல்காரர்கள், ஏராளமான பணியாட்கள் ஆகியோர் இருந்துகொண்டு காட்டின் அமைதிக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டிருந்தார்கள். தொடர்ந்து நண்பர்களும் சக மனிதர்களும் பின்பற்றி வர, அரசன் அங்கு வந்தான்.

காலை நேரத்தில், சந்திரகுப்தன் சதுரங்க விளையாட்டில் ஈடுபட்டும், சேவல் சண்டையைப் பார்த்துக் கொண்டும் தன்னை சந்தோஷப்படுத்திக் கொண்டிருந்தான். மதிய வேளையில் மது அருந்திவிட்டு, சாப்பிட்ட பிறகு தன்னுடன் எப்போதும் இருக்கும் நான்கு மனிதர்களுடன் அவன் காட்டுக்குள் சென்றான். மற்ற எல்லாரும் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே இருந்துகொண்டார்கள். அந்த நான்கு நண்பர்களும் ஒரே மாதிரி அயோக்கியத்தனம் கொண்டவர்களாகவும் ஒரே வயதைக் கொண்டவர் களாகவும் இருந்தார்கள். அவர்கள் அரசனைப் பின்பற்றியவாறு, தமாஷ்கள் கூறிக்கொண்டும் உரத்த குரலில் சிரித்துகொண்டும் வந்தார்கள்.

பிற்பகல் சுமார் மூன்று மணி ஆனபோது, வேட்டையில் ஈடுபடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அப்போது திடீரென்று ஒரு சிறிய ஓடைக்கு அருகில் அவர்கள் நின்றார்கள். அந்தக் காட்சியை முதலில் பார்த்ததென்னவோ அரசன்தான். ஓடையில் அந்தப் பக்கக் கரையில், ஒரு பெண் உருவம் இறந்து போனதைப்போல படுத்திருப்பதை அவன் பார்த்தான். அவளுடைய உடலில் ஒரு ஆடைகூட இல்லை. அவளுடைய தொண்டை, உதடுகள், செவி- எல்லா இடங்களிலும் ரத்தக்கறை படிந்திருந்தது. அவள் கொள்ளைக்காரர்களிடம் சிக்கியிருக்கிறாள் என்பதைப் பார்த்தவுடனே தெரிந்துகொள்ள முடிந்தது.

அரசன் தன்னுடைய குதிரையை விட்டுக் கீழே இறங்கி, வேகமாக அந்தப் பெண்ணை நோக்கி நடந்தான். அவள் ஒரு இளம்பெண் என்பதையும் பதினாறு அல்லது பதினைந்து வயதுதான் அவளுக்கு இருக்கும் என்பதையும் அவன் தெரிந்துகொண்டான். அவளுடைய இளமை நிறைந்த அழகான உடலை மனதில் பாராட்டிக் கொண்டே அரசன் பார்த்தான். தொடர்ந்து அவன் குனிந்து, அவளுடைய இதயத்திற்கு அருகில் காதை வைத்துக் கேட்டான்... அவள் உயிருடன் இருந்தாள்.

அவனுடைய நண்பர்கள் அதற்குள் அங்கு வந்து அவனைச் சுற்றி நின்றார்கள். அவர்கள் நிர்வாணக் கோலத்தில் கிடந்த அந்தப் பெண்ணையே பேராசையுடன் பார்த்தார்கள். திடீரென்று மன்னன் திரும்பி அவர்களைப் பார்த்துக் கேட்டான்: “இந்தப் பெண் யாருக்குச் சொந்தமானவள்?''

ஆர்வத்துடனும் ஆச்சரியத்துடனும் இருந்த அரசனின் முக வெளிப்பாட்டைப் பார்த்து அவர்களில் யாருக்குமே அவனிடம் பேசுவதற்கான தைரியம் வரவில்லை. ஒருவன் உளறினான்: “இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அரசனுக்குச் சொந்தமானவர்களே.''

சொல்லப் போனால்- அரசன் வேறொரு மாதிரியான பதிலை எதிர்பார்த்தான். அவன் தன்னுடன் வந்திருந்த இரண்டாவது மனிதனைப் பார்த்துக் கேட்டான். “இந்தப் பெண் யாருக்குச் சொந்தமானவள்?''

அரசன் எந்த மாதிரியான பதிலை எதிர்பார்க்கிறான் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். அவன் சொன்னான்: “அரசனுக்கு...''

தன்னுடன் வந்திருந்த மூன்றாவது மனிதனை சந்திரகுப்தன் கேள்விக் குறியுடன் பார்த்தான். அந்த மூன்றாவது மனிதனால் தனக்குள் உண்டான பேராசையையும், அந்தப் பெண்மீது உண்டான ஆவலையும் அடக்கி வைக்க முடியவில்லை. அவன் சிரிப்பதற்கு முயற்சி செய்துகொண்டே சொன்னான்: “கொள்ளைக்காரர்களால் தொடப்பட்டு, வீசி எறியப்பட்ட ஒரு பெண், அரசனுக்குப் பொருத்தமானவளாக இருக்க மாட்டாள் மன்னா. இந்தப் பெண்ணை எனக்குக் கொடுத்துவிடுங்கள்.''

அரசன் அந்த மனிதனை கோபத்துடன் பார்த்தான். பிறகு உரத்த குரலில் சிரித்துக்கொண்டே சொன்னான்: “சக்ரயுத்தா! இந்த சொர்க்கத்திற்கு நிகரான  மலரை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய்? நீ இதற்குத் தகுதியானவன் அல்ல. இந்தப் பெண் எனக்குச் சொந்தமானவள்.''

அவன் தன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்து, அந்தத் துணியைக் கொண்டு பெண்ணின் உடலை மூடினான்.

அந்தப் பேராசை கொண்ட மனிதன் தன் நம்பிக்கையை கைவிடுவதற்குத் தயாராக இல்லை. அவன் சொன்னான்: “இது நல்லது இல்லை அரசரே! இதைப் பற்றி கேள்விப்பட நேர்ந்தால், அரசி என்ன கூறுவார்?''

அரசன் அவனை நோக்கி கோபத்துடன் திரும்பினான். சக்ரயுத்தன் ஒரு உணர்ச்சிகரமான நரம்பைத் தொட்டுவிட்டான். அரசன் சொன்னான்: “நீ... கீழ்த்தரமான வேலைக்காரனே! அரசி என்னுடைய எஜமானி அல்ல. நான்தான் அவளுக்கு எஜமானன். உனக்குப் புரிகிறதா! இந்த நாடு எனக்குச் சொந்தமானது. இந்தப் பெண் எனக்குச் சொந்தமானவள். இவள் அரசிக்கு சொந்தமானவள் அல்ல...''                                                                                                                       

திடீரென்று உண்டான அந்த கோப அலை அங்கிருந்த நண்பர்களை அமைதியாக இருக்கச் செய்துவிட்டது. அரசன் தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவான குரலில் சொன்னான்: “நான் இந்தப் பெண்ணை என்னுடைய அரசியாக  ஏற்றுக்கொள்கிறேன். நண்பர்களே, நீங்கள் இவளுடைய பாதத்தை பணிவுடன் வந்து தொடுங்கள்.'' சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போல, அவர்கள் அவன் கூறியபடி செய்தார்கள்.

தொடர்ந்து அரசன் அந்த சுய உணர்வற்ற சரீரத்தைத் தன் கைகளில் தூக்கி எடுத்து, தாங்கள் முகாமிட்டிருந்த இடத்திற்குத் திரும்பிச் செல்வதற்காக குதிரையின்மீது ஏறினான். ஓசை எழுப்பியவாறு சென்று கொண்டிருந்த குதிரையின்மேல் இருந்த அந்தப் பெண்ணின் நீளமான, விரிந்து கிடந்த கூந்தல்- அவளுக்குப் பின்னால் ஒரு எரிநட்சத்திரத்தைப் போல பறந்து கொண்டிருந்தது.

முகாமில் சுய உணர்வைப் பெற்ற அந்தப் பெண் தன்னுடைய கதையைக் கூறினாள். அவளுடைய பெயர் சோமதத்தை. ஸ்ரவஸ்தி என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு வியாபாரியின் மகள். அவள் தன்னுடைய தந்தையுடன் சம்பா என்ற இடத்திற்குச் சென்று கொண்டிருந்தாள். அப்போது அவர்களை கொள்ளையர்கள் வழி மறித்துவிட்டார்கள். அவளுடைய தந்தை  கொல்லப்பட்டுவிட்டார். கொள்ளையர்களின் தலைவன் அப்பெண்ணை தனக்குச் சொந்தமாக ஆக்கிக் கொள்ள நினைத்தான். வெகுசீக்கிரமே, அவளை யார் சொந்தமாக்கிக் கொள்வது என்ற விஷயத்தில் கொள்ளையர் களுக்கிடையே சண்டை உண்டாக ஆரம்பித்தது. தொடர்ந்து அவர்கள் போரிட ஆரம்பித்தார்கள். ஒருவரை விரட்டிக் கொண்டு இன்னொருவர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.


சொல்லப் போனால்- தங்களுக்கிடையே உண்டான சண்டைக்குக் காரணம் என்ன என்பதை முழுமையாக அவர்கள் மறந்து விட்டார்கள். திடீரென்று, ஒரு புத்திசாலித்தனம் நிறைந்த கொள்ளையன் அந்தப் பெண்ணின் தலையில் தாக்கினான். அதன் மூலம் அவன் அவளை மயக்க மடையச் செய்தான். தொடர்ந்து அவளுடைய ஆடைகளை அவன் கழற்றினான். தாங்கள் திரும்பி வருவதற்கு முன்னால், அவள் சுய உணர்விற்கு வந்து விட்டாலும், அங்கிருந்து அவள் ஓடாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் அந்தக் காரியத்தைச் செய்தான். அந்த நேரத்தில்தான் மன்னன் தன்னுடைய நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

உரிய நேரத்தில், சந்திரகுப்தன் சோமதத்தையை ஒரு சாரட் வண்டியில் ஏற்றி தன்னுடைய நாட்டுக்குக் கொண்டு சென்றான். சில வினோதமான சடங்குகளைச் செய்து, அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்டார்கள். அவளுக்கு பணிப் பெண்களும் பணியாட்களும் உடனிருக்க, ஒரு தனி அரண்மனையை ஏற்பாடு செய்து கொடுத்தான் மன்னன்.அரசனின் இந்த நடவடிக்கையைப் பற்றி குமாரதேவி கேள்விப்பட்டாள். அவனிடம் இதைப் பற்றி ஏதாவது கேள்விகள் கேட்பதற்குக்கூட அவளுக்குப் பிடிக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்- அந்தக் காலத்தில் மன்னர்கள் பல திருமணங்கள் செய்துகொள்வது என்பது சர்வசாதாரணமான விஷயமாகவே இருந்தது.

சில நேரங்களில், அவர்கள் விலை மாதர்களையும் நடனமாடும் பெண்களையும்கூட திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் குமாரதேவி பெரிய அளவில் மனதில் வருத்தப்பட்டுக் கொள்ளவில்லை. அதற்கு பதிலாக நாட்டை ஆட்சி செய்வதிலும், தன்னுடைய இளம் வயது மகன் சமுத்திரகுப்தன் அவனுடைய தந்தையைவிட சிறந்த அரசனாக வரவேண்டும் என்பதற்காக பயிற்சிகளை தருவதிலும் அவள் தன் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாள். சந்திரகுப்தன் தன்னுடைய நேரத்தை சோமதத்தையின் அரண்மனையில், அவளுடன் இருப்பதில் செலவழித்துக் கொண்டிருந்தான்.

இப்படியே ஆறு மாதங்கள் கடந்தோடிவிட்டன.

ஒரு வசந்தகாலத்தின் காலை வேளையில், ஒரு மிகப்பெரிய ராணுவம் வெட்டுக் கிளிகளைப்போல உள்ளே நுழைந்து அவனுடைய நாடெங்கும் பரவி நின்றது. வரலாற்றுரீதியாக பார்க்கப் போனால், அது ஒரு முக்கியமான நிகழ்வு அல்ல. புஸ்கர் என்ற பாலைவனம் நிறைந்த நாட்டைச் சேர்ந்த சந்திரவர்மன் என்ற அரசன், வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் மகத நாட்டைக் கடந்து கொண்டிருந்தான். மகத நாட்டைச் சேர்ந்த போர் வீரர்கள் அனுபவமற்றவர்களாகவும் கோழைகளாகவும் இருந்ததால், வெகு சீக்கிரமே அவனால் மகத நாட்டைப் பிடிக்க முடிந்தது. ஆனால், பாடலிபுத்திரத்தை வெற்றி பெறுவதற்கு மிகச் சிரமங்கள் இருப்பதை அவன் உணர்ந்து கொண்டான். அவனுடைய கடலைப்போல தோன்றிய போர் வீரர்களுக்கு மத்தியில், பாடலிபுத்திரம் பகைவர்கள் உள்ளே நுழைந்துவிடாத வண்ணம் தன்னுடைய பத்து இரும்பாலான நுழைவாயில்களையும் அடைத்துக் கொண்டு ஒரு தீவைப்போல நின்றிருந்தது.

அந்தச் சமயத்தில்  மகத நாட்டின் மன்னனான சந்திரகுப்தன் சோமதத்தையின் படுக்கையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அவன் எழுந்தான். அரசர்களுக்கே உண்டாகக் கூடிய கோபம் அவனுக்கும் உண்டானது. ஆனால், அது சிறிது நேரத்திற்குத்தான். தொடர்ந்து அவன் தன்னுடைய போர்க் கருவியைத் தேடினான். திடீரென்று அவன் குமாரதேவியை நினைத் துப் பார்த்தான். தொடர்ந்து அவனுடைய உற்சாகம் குறைந்துவிட்டது. அவன் கேலியாக சிரித்துக் கொண்டே சொன்னான். “பகைவர்கள் வந்து தாக்கினால், நான் என்ன செய்வது? நீ என்னுடைய அரசியிடம் செல்.'' பிறகு அவன் தன் படுக்கையில் போய் படுத்துக்கொண்டான்.

சோமதத்தை தன்னுடைய அரண்மனையின் மாடியிலிருந்து வேகமாக கீழே இறங்கி  வந்தாள். மன்னன் முன்பைப்போலவே, தன் நாட்டைப் பற்றி எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் அர்த்தத்துடன் சிரித்தவாறு அவனுடைய முன் தலையைத் தொட்டுக்கொண்டே மெதுவான குரலில் சொன்னாள்: “தூங்குங்கள் என் அரசரே தூங்குங்கள்...''

பணியாள் வந்து அரசியிடம் செய்தியை சொன்னான். அவள் தன்னுடைய பத்து வயதேயான இளவரசன் சமுத்திரகுப்தனைப் பார்த்து சொன்னாள்.

“மகனே! லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த பேரப் பிள்ளை நீ. இதை நீ எந்தச் சமயத்திலும் மறந்துவிடாதே. பாடலிபுத்திரம் உன்னுடைய கால்களுக்குக் கீழே இருக்கும் நாடு. பாரதத்தைப்போல, சந்திரகுப்த மவுரியத்தைப்போல, அசோகத்தைப்போல- மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருக்கும் இந்த முழு நாடும் உன்னுடைய அரசாட்சிக்குரியது. இதை ஞாபகத்தில் வைத்துக்கொள். உன்னுடைய வலிமையால் நீ எல்லா இடங்களையும் வெற்றி பெறுவாய்... குஜராத்திலிருந்து கிழக்கு திசையில் உள்ள சமவெளி வரை, வடக்கிலுள்ள மலைப் பகுதிலிருந்து தெற்கிலிருக்கும் திராவிடர்களின் நாடுகள் வரை... உன்னுடைய வீச்சு மேற்கிலிருந்து கிழக்கு வரை, வடக்கிலிருந்து தெற்கு வரை இருக்கும்.''

தன் அன்னை சொல்வதை அந்தச் சிறுவன் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய கையில் பொன்னாலான வாள் இருந்தது. அந்தச் சமயத்தில் அரண்மனை பணியாள் ஒருவன் வந்து, நாடு தாக்கப்பட்டிருக்கும் செய்தியைத் தெரிவித்தான். அதைக் கேட்டு அரசி வெளிறிப் போய்விட்டாள்.

அவள் அதே இடத்தில் சிலையென சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தாள். அவள் "அரசன் எங்கே?' என்று கேட்க நினைத்தாள். ஆனால் அப்படிக் கேட்காமலே இருந்துவிட்டாள். அதற்கு பதிலாக அவள் சொன்னாள்: “தலைமை அமைச்சரிடம் தூதுவனை அனுப்பி வை. கோட்டையின் அனைத்துக் கதவுகளையும் மூடி விடு. ஒரு போர் இல்லாமல் நான் சரணடைய மாட்டேன்.''

ஆனால், அரசியின் உத்தரவுகள் கிடைப்பதற்கு முன்பே, தலைமை அமைச்சர் கோட்டையின் கதவுகளை முடிவிட்டார்.  கோட்டையின் மேல் பகுதிகளில் எச்சரிக்கை விடுக்கப்பட்ட காவலாளிகள் கைகளில் ஈட்டிகளை வைத்துக் கொண்டு நடந்துகொண்டிருந்தனர். கதவுகளுக்குமேலே பெரிய கொப்பரைகளில் எண்ணெய் காய்ச்சப்பட்டுக் கொண்டிருந்தது. அகழியின் அந்தப் பக்கத்தில் பகைவர்களை கவனித்துக் கொண்டிருந்த போர் வீரர்கள் விஷம் தடவப்பட்ட அம்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கலை வேலைப்பாடுகள் அமைந்த உருக்காலான கவசங்களை அணிந்திருந்தார்கள். பசியாக இருந்த முதலைகள் அகழியின் நீரில் மிதந்து கொண்டிருந்தன. கோட்டைக்குள், எதிரிகளின் நடமாட்டங்களை போர்வீரர்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தனர். வெளியே, எதிரி முகாமைச் சேர்ந்த போர் வீரர்கள் கோட்டையின் பிரதான வாயிலை அவ்வப்போது தாக்கிக்கொண்டிருந்தார்கள். மேலேயிருந்து சூடான எண்ணெய் அவர்களின்மீது ஊற்றப்பட்டது. தாக்க வந்தவர்கள் உற்சாகத்தை இழந்து, தங்கள் அணியில் இறந்தவர்களையும் காயம் பட்டவர்களையும் விட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.

ஒரு நாள் முழுக்க போர் நடைபெற்றது! சந்திரவர்மன் யானைகளை வைத்து பிரதான நுழைவாயிலை உடைப்பதற்கு முயற்சி செய்தான். ஆனால், அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.


அம்புகளைப் பார்த்து பயந்து, யானைகள் தங்கள் பாகன்களை வீசி எறிந்துவிட்டுத் திரும்பி ஓடின. போர் செய்து கோட்டையை வெல்ல முடியாது என்ற விஷயத்தை சந்திரவர்மன் புரிந்துகொண்டான். தாக்குவதை நிறுத்திவிட்டு, கோட்டைக்கு ஒரு தடை போட்டான். கோட்டைக்கு வெளியே, பல மைல்கள் தூரத்திற்கு பகைவர் படை வீரர்கள் நிறைந்து நின்றிருப்பது தெரிந்தது. பாடலிபுத்திரத்தின் கோட்டைக்குள் ஒரு எறும்புகூட நுழைய முடியாது.

இந்த விஷயத்தை உயர் அதிகாரிகள் அரசியின் காதுகளுக்கு எடுத்துச் சென்றார்கள். “உடனடியாக ஆபத்து எதுவுமில்லை. ஆனால், வெளியே இருந்து வரக்கூடிய பொருட்களைத் தடுத்து நிறுத்தி, சந்திரவர்மன் எங்களை பட்டினி போட்டு சாகடிக்க முயற்சிக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்'' என்றார்கள் அவர்கள்.

போர் விஷயங்களில் சந்திரவர்மன் மிகச் சிறந்த திறமைசாலி. அவனுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. சிறிய, பலவீனமான பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அவன் அவசரப் படவில்லை. மகத நாட்டின் வேறு பகுதிகளில் தன்னுடைய வெற்றிப் பதாகையைப் பறக்கச் செய்ய வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான்.

ஆனால் நாட்கணக்கிலும் மாதக்கணக்கிலும் போர்புரிந்த பிறகு, அவனுடைய படை மிகவும் களைத்துப் போனது. அவர்கள் தங்களுக்கு சிறிது ஓய்வு வேண்டும் என்று விரும்பினார்கள் அதைத் தொடர்ந்து, அவன் அந்த பலவீனமான நாட்டுக்குள்ளும், அதற்கு அருகிலும் அவர்கள் விரும்புகிற அளவிற்கு ஓய்வு எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அளித்தான். அவனுடைய கப்பல் படை கங்கை நதியில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் அவனுடைய இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. பாடலிபுத்திரத்திற்கு பொருட்கள் செல்ல தடை உண்டாக்கப்பட்டது. படைக்கு ஓய்வு எடுக்க சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது.

 

தடை உண்டாக்கப்பட்ட ஐந்தாவது நாள், அதிகாரிகள் வந்து அரசியிடம் கோட்டைக்குள் உணவுத் தட்டுப்பாடு உண்டாகிவிட்டது என்ற செய்தியைக் கூறினார்கள். அதற்கு ஒரு வழி காணவேண்டும் என்பதையும் கூறினார்கள்.

அமைச்சர்களுடன் ஒரு நீண்ட கருத்துப் பரிமாற்றம் செய்து முடித்த பிறகு அரசி சொன்னாள்: “வெளியே இருந்து உணவுப் பொருட்களை உள்ளே கொண்டு வருவதற்கு ரகசிய வழி எதுவும் இல்லையா?''

அவர்கள் சொன்னார்கள்: “இருக்கலாம்... ஆனால் எங்களுக்கு அதைப் பற்றித் தெரியாது. நாங்கள் உணவுப் பொருட்களை ஆற்றின் வழியாகக் கொண்டு வந்துவிட முடியும். ஆனால், சந்திரவர்மன் அங்கும் கப்பல் படையைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.''

“அப்படியென்றால், நாம் என்ன செய்வது?''

“ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.''

அந்த கலந்துரையாடல் மேலும் தொடர்ந்து  நடந்து கொண்டிருந்தது. அமைச்சர்கள் அங்கிருந்து கிளம்பிச்சென்ற பிறகு, அரசி வேறு யார் கண்களிலும் படாமல் மாடிக்குச் சென்றாள். அவள் தூது செல்லக்கூடிய ஒரு புறாவைத் தன்னுடைய ஆடைக்குள் இருந்து எடுத்து, அதை காற்றில் வீசினாள். அந்தப் புறா அரண்மனையை இரண்டு முறை சுற்றிவிட்டு, வடக்கு திசையை நோக்கிப் பறந்து சென்றது. குமாரதேவி அதை எவ்வளவு தூரம்வரை பார்க்கமுடியுமோ அவ்வளவு தூரம் பார்த்துக்கொண்டிருந்தாள். தொடர்ந்து ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டபடியே அவள் மாடியிலிருந்து மெதுவாகக் கீழே இறங்கி வந்தாள்.

மேலும் எட்டு நாட்கள் கடந்தன. சந்திரவர்மன் தாக்குதல் நடத்த முயற்சிக்கவேயில்லை. ஆனால், உணவுப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான தடையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தான். வெகு சீக்கிரம் உணவு என்பது சிறிதும் கிடைக்காத ஒன்றாகவும், கோட்டைக்குள் விலை மதிப்பு கொண்டதாகவும் ஆனது. மக்கள் நிம்மதி இழந்தவர்களாகவும், பதைபதைப்பு அடைந்தவர்களாகவும் ஆனார்கள். இந்த நிலைமை, மேலும் இரண்டு வாரங்கள் நீடித்தது. பல்குண மாதம் (பிப்ரவரி) முடிவுக்கு வந்தது.

3

ந்தப் பிறவியில் ஒரு ரயில்வே க்ளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கும்  நான் இரவு நேரத்தில் விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, வெட்கத்துடன் நினைத் துப் பார்த்தேன். அந்தக் காலத்தில் வெறுப்பை அளிக்கக்கூடிய, காமவெறி பிடித்த சக்ரயுத்த இஷான் வர்மனாக இருந்து கொண்டு, சுயஉணர்வு இல்லாத சோமதத்தையின் நிர்வாண கோலத்தில் கிடந்த அழகிய உடலைப் பார்த்து மோகத்துடன் நின்றிருந்ததை மனதில் திரும்பக் கொண்டுவந்து பார்க்கிறேன். சந்திரகுப்தனிடம் சோமதத்தையை எனக்குத் தந்துவிடு என்று தைரியமாகக் கேட்டவன் நான்தான். சந்திரகுப்தனின் தந்தையான கடோத்கச்சன் என்ற பலம் பொருந்திய நிலச்சுவான்தாருக்கு இணையான நிலச்சுவான்தாராக இருந்த ஒருவரின் மகன் நான். ஆனால், பாடலிபுத்திரத்தின் சிம்மாசனத்தில் உட்கார வைக்கக்கூடிய அளவிற்கு பலம் கொண்ட லிச்சாவி குடும்பத்தின் உதவியைப் பெறுகிற அளவிற்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. போதாதற்கு, என் தந்தையின் மறைவிற்குப் பிறகு, அவர் எனக்கு விட்டுச்சென்ற சொத்தை வைத்துக்கொண்டு நான் கட்டுப்பாடற்ற  ஒரு வாழ்க்கையை வாழ்ந்தேன். அரசனின் நெருங்கிய நண்பனாகவும் நான் ஆகிவிட்டேன்.

சோமதத்தையை அடைய வேண்டுமென்ற ஆசையில் நான் மதுவில் மிதந்தேன். அந்த ஆசை அர்த்தமே அற்றது, நியாயமற்றது; ஏற்றுக்கொள்ள முடியாதது. அது பைத்தியக்காரத்தனத்திற்கு நிகரானது. இதற்கு முன்பு நான் இந்த அளவுக்கு மனவேதனையுடன் இருந்ததே இல்லை. நான் எப்போதும் கட்டுப்பாடற்ற  அரக்கத்தனம் நிறைந்த குதிரையாகவே இருந்திருக்கிறேன். நான் எதை அடைய வேண்டுமென்று ஆசைப்படுவேனோ, அதை எந்தச் சமயத்திலும் அடையாமல் விட்டதே இல்லை- அது பெண்ணாக இருந்தாலும், சொத்தாக இருந்தாலும்! நேர்வழியிலோ குறுக்கு வழியிலோ... எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் நான் கவலைப்பட்டதேயில்லை.

ஒரு கழுகு தன்னுடைய இரையைப் பறித்துச் செல்வதைப்போல, சந்திரகுப்தன் என்னுடைய காமவெறி நிறைந்த கண்களிடமிருந்து சோமதத்தையைப் பறித்துச் சென்றபோது, என் இதயம் முழுவதும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வெறுப்பாலும் கோபத்தாலும் நிறைந்தது. எந்த விதத்தில் பார்த்தாலும் சந்திரகுப்தன் என்னைவிட உயர்ந்தவன் என்று நான் நினைக்கவேயில்லை. பலம் கொண்ட மாமனாராலும் மாமியாராலும் உதவி செய்யப்பட்டிருக்கும்பட்சம், நான்கூடத்தான் அவனுடைய நிலையில்  இருந்திருப்பேன். நான் எந்த விதத்திலும் அவனைவிட பலத்திலோ, போர்த் திறமையிலோ, வம்ச அளவிலோ தாழ்ந்தவன் என்று கூறுவதற்கில்லை. அப்படி இருக்கும்போது நான் ஆசைப்பட்ட ஒரு பொருளை என்னிடமிருந்து அவன் எப்படிப் பறித்துச் செல்லலாம்?

அந்த நாளில் என்னுடன் இருந்துகொண்டு நான் அரசனால் அவமானப்படுத்தப்படுவதைப் பார்த்த என்னுடைய மற்ற நண்பர்கள் தங்களுடைய கிண்டல் நிறைந்த, குத்தலான வார்த்தைகளால் எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் அடிக்கொருமுறை கூறிய குத்தல் வார்த்தைகள் என்னை வெறிகொள்ளச் செய்தன.

ஒருநாள், அரசவைக்கு சந்திரகுப்தன் வராமல் இருந்து, அவையில் இருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தபோது, அந்த மூன்று பேர்களில் ஒருவனான சித்தாபால் உரத்த குரலில் என்னைப் பார்த்துச் சொன்னான்:


“சக்ரயுத்தா, இந்த நகையைப் பார். கோசலை நாட்டைச் சேர்ந்த ஒரு வியாபாரி இதை மன்னனுக்கு பரிசாக அளித்திருக்கிறான். இந்த நகை சுத்தமானதாக இருந்தால், இதை நான் வைத்துக் கொள்வதாகவும் இல்லாவிட்டால் இதை உனக்கு கொடுத்து விடப் போவதாகவும் அரசன் அவனிடம் கூறியிருக்கிறார். இந்த நகை உண்மையானதுதானா என்பதைப் பார்த்துக் கொள்!'' இதைக் கூறிவிட்டு, விலை மதிப்பே இல்லாத சிறிய கல்லை அவன் என் கண்களுக்கு அருகில்  காட்டினான்.

அரசவையில் இருந்த ஆட்கள் அவனுடைய கிண்டல் கலந்த பேச்சைக் கேட்டு ஆரவாரம் எழுப்பிக் கொண்டு சிரித்தார்கள். அடிமைப் பெண்கள் அரசவையில் அமர்ந்திருந்த ஆட்களுக்கு சாமரம் வீசுவதைப்போல, கேலியாகச் சிரித்தார்கள். எனக்கு அவமானம் உண்டானதைப்போல உணர்ந்தேன். வெகு சீக்கிரமே . பாடலிபுத்திரத்தில் இருப்பவர்கள் எல்லாரும் என்னைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். நான் எந்த கொண்டாட்டத்திற்குச் சென்றாலும், சந்திப்பிற்குச் சென்றாலும் நான் அங்கு போய்ச் சேர்ந்ததுதான் தாமதமாக இருக்கும்- அங்கு இருப் பவர்கள். அர்த்தத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள ஆரம்பிப்பார்கள். நான் அரசவைக்குள் நுழைந்தவுடன், அரசன்கூட தன்னுடைய முகத்தைச் சுளித்துக் கொள்வான். அதனால் நான் அரசவைக்குச் செல்வதையும், மக்கள் கூடியிருக்கும் எந்த இடத்திற்குப் போவதையும் மக்கள் ஒன்று சேர்ந்திருக்கும் எந்தவொரு நிகழ்ச்சிக்குச் செல்வதையும் நிறுத்திக்கொண்டேன். நான் அவமான உணர்ச்சியால் எரிந்து, கோபமுற்று, மக்களையே நிராகரித்தேன்.

அப்படிப்பட்ட நேரத்தில்தான் சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தைத் தாக்கினான். நான் ஒரு போர் புரியும் சத்திரியன். அதனால் நான் போருக்கு அழைக்கப்பட்டேன். படைத்தலைவரான விரோத்வர்மன் நூறு வீரர்களுக்கு என்னைத் தலைவனாக ஆக்கினார். பாடலிபுத்திரத்தின் மேற்குப் பக்க வாயிலான "கவுதம் துவா'ரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது.

4

து ஒரு அமாவாசை இரவு. எப்போதும்போல நான் மட்டும் தனியே கோட்டையில் முகப்புப் பகுதியில் நடந்து கொண்டிருந்தேன். வசந்தகாலம் நெருங்கிக் கொண்டிருந்தது. காற்று மிகவும் கனமாக, மலர்களின் கசப்பு- இனிப்பு கலந்த நறுமணத்துடன் வீசிக்கொண்டிருந்தது. பகைவர்களின் முகாம்களில் எரிந்து கொண்டிருந்த விளக்குகள் கோட்டைக்கு வெளியே கிட்டத்தட்ட அணைந்துவிட்டிருந்தன. கீழே, அகழியில் இருந்த தெளிவான  நீரில் வானத்திலிருந்த நட்சத்திரங்கள் தெரிந்தன. கோட்டைக்குள் இருந்த நகரில் எந்தவொரு ஓசையும் இல்லை- வெளிச்சமும் இல்லை- கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டு விட்டிருந்தன. இன்னும் சொல்லப் போனால்- பிரதான வீதியே இருளில் மூழ்கிக் கிடந்தது. மிகப்பெரிய, இரவின் இருண்ட இறக் கைகள் முழு உலகத்தையும் மூடி விட்டிருந்தன.

பாடலிபுத்திரம் தூங்கிக் கொண்டிருந்தது. போர் வீரர்களும்தான். கோட்டையின் வாயில்களில் இருந்த காவலாளிகள் மட்டும் தூங்காமல் கண் விழித்திருந்தார்கள். கோட்டையின் முகப்புப் பகுதி யில் அவர்கள் நின்று கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. இரவு நேரத்தில் அவர்கள் மேலும் அதிகமான கவனத்துடன் இருந்தார்கள். இருண்டு போயிருக்கும் நேரத்தில் எங்கே பகைவர்கள் கோட்டைக்குள் நுழைந்துவிடப் போகிறார்களோ என்ற பயமே அதற்குக் காரணம்.

நள்ளிரவு நேரம் அரண்மனையிலிருந்து  புறப் பட்டு வந்த இசையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் பாடலிபுத்திரத்தின் பத்து நுழைவாயில்களையும் காத்துக்கொண்டிருந்த காவலாளிகள் முரசை ஒலிக்கச் செய்து நேரத்தை அறிவித்தார்கள். இரவின் அமைதியை அந்தச் சத்தம் கலைத்தது. அது படிப்படியாக காற்றில் கரைந்து காணாமல் போனது. அந்த நகரம் எதிரியைப் பார்த்து எச்சரிக்கை விடுவதைப்போல இருந்தது: "கவனமாக இரு... நான் கண் விழித்திருக்கிறேன்.' தனிமையில் நடந்துகொண்டிருந்தபோது, நான் மிகவும் ஆழமான சிந்தனையில் மூழ்கினேன்.

என்னுடைய படுக்கையில் நிம்மதியாக படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, இந்த நள்ளிரவு நேரத்தில் இரவில் நடமாடும் பூச்சியைப்போல நான் ஏன் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்? பாடலிபுத்திரத்தின் கோட்டையைப் பாதுகாப்பதன் மூலம் எனக்கு என்ன நன்மை கிடைக் கப் போகிறது? இவையனைத்திற்கும் உரிமையாளனான மன்னன் தன்னுடைய காதலியின் கரங்களுக்குள் மிகவும் சந்தோஷமாக தூங்கிக் கொண்டிருக்கிறான். பாடலிபுத்திரம் சந்திரவர்மனின் கைகளில் சிக்கிக் கொண்டால் அதைப் பற்றி எனக்கு என்ன கவலை? கோட்டைக்குள் மக்கள் பட்டினி கிடந்து கொண்டிருக்கிறார்கள். நகரத்தின் சில பகுதிகளில் நோய்கள் பரவிவிட்டிருக்கின்றன. வெளியிலிருந்து உணவுப் பொருட்களைக் கொண்டு வரமுடியவில்லை. இரவு நேரத்தில் மட்டுமே பகைவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, சில மீனவர்கள் மீன்களைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறிய அளவில் பிடிக்கப்படும் அந்த மீன்களை வைத்து முழு நகரமும் சாப்பிட முடியாது. இதே நிலைமை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும்? ஒருநாள் பாடலிபுத்திரம் பகைவனிடம் தலை குனியப் போகிறது. அது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படியென்றால், இப்போது நாம் ஏன் இந்த அளவுக்கு சிரமப்பட வேண்டும்? முழுநாடே சந்திரவர்மனிடம் சரணடைந்து விட்டது. பாடலிபுத்திரம் என்ற இந்த நகரம் மட்டும் எவ்வளவு நாட்கள் அவனிடம் சிக்காமல் இருக்கப் போகிறது? சந்திரகுப்தன் ஒரு தகுதியான அரசனாக இருந்திருந்தால், அவனே இந்த நகரத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஏற்கெனவே ஈடுபட்டிருப்பான். இந்த நகரத்தைக் காப்பாற்றுவதற்கு நான் ஏன் இந்த உதவாக்கரை அரசனுக்கு உதவ வேண்டும்? அவன் எப்போதாவது ஏதாவது எனக்கு செய்திருக்கிறானா? நான் மனதில் ஆசைப் பட்ட பொருளை அவன் அபகரித்துக் கொண்டான். என் மக்கள் மத்தியிலேயே என்னை மற்றவர்கள் கிண்டல் செய்து சிரிக்கக் கூடியவனாக ஆக்கினான். சோமதத்தை- மனிதர்களின் காமவெறியைத் தணிப்பதற்காக படைக்கப்பட்ட தேவதை அவள். நான் அவளைச் சொந்தமானவளாக ஆக்காமல் இருந்தால், என்னுடைய தாகம் தீருமா? அவள் சந்திரகுப்தனின் காதலியாக இப்போது இருக்கிறாள். அவளை சந்திரகுப்தன் திருமணம் செய்து கொண்டானா? அது எனக்கு முக்கியமே இல்லை. நான் அவளை விரும்பினேன். நேர் வழியிலோ, குறுக்கு வழியிலோ அவளை நான் அடைந்தே தீருவேன். நான் வெற்றி பெறுவேனா? பெண்கள் பொதுவாகவே நிலையற்ற மனதைக் கொண்டவர்கள் என்று கூறுவார்கள். அவள் எவ்வளவு  நாட்களுக்கு சந்திரகுப்தனிடம் நம்பிக்கைக்கு உரியவளாக இருக்கப் போகிறாள்? அதற்குப் பிறகு... சந்திரகுப்தா! உலகத்திற்கு முன்னால் உன்னை கிண்டலுக்குரிய பொருளாக ஆக்கப் போவதே நான்தான்... அதுதான் அவனை நான் பழிவாங்கும் சரியான வழியாக இருக்கும்.

இப்படிப்பட்ட சிந்தனைகளில்  நான் முழுமையாக மூழ்கிப் போய் விட்டேன். அப்படியே கவுதம் துவாரிலிருந்து சிறிது தூரம் தள்ளி நடந்து வந்துவிட்டேன். கோட்டையில் இந்த  முகப்புப் பகுதி இரவு நேரத்தில் மிகவும் தனிமைச் சூழலில் இருந்தது. கோட்டையின் இந்தப் பகுதிக்கு யாரும் வரமாட்டார்கள்.


சொல்லப்போனால்- இந்தப் பகுதியை கவனித்துக் கொள்வதற்கு காவலாளிகளேகூட தேவையில்லை. இங்குமங்குமாகப் பார்த்துக் கொண்டே, நான் ஏற்கெனவே இருந்த இடத்திற்குத் திரும்பிவர தீர்மானித்தேன். திடீரென்று, கோட்டையின் மேற்பகுதியின் மூலையில், ஒரு முட்கள் வளர்ந்திருந்த அடர்ந்த புதருக்குப் பின்னால் ஒரு விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். எதிரிகள் கோட்டைக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக அந்த முட்புதர்கள் அங்கு உண்டாக்கப்பட்டிருந்தன. சில நேரங்களில் அந்த முட்புதர்கள் மிகவும் உயரமாக வளர்ந்து, கோட்டையின் மேற்பகுதியையும் தாண்டிப் போயிருந்தன. இரண்டு உயரமான புதர்களுக்கு மத்தியில் அந்த விளக்கு எரிந்துகொண்டிருந்தது. விளக்கு மேலும் கீழுமாகவும் வட்டமாகவும் அசைந்து கொண்டிருந்தது. யாரென்று தெரியாத  ஒரு கடவுளுக்கு ஒரு மறைவில் இருக்கும் கை பிரார்த்தனைகள் செய்வதைப்போல அது இருந்தது.

நான் என் காலணிகளைத் திறந்து, என்னுடைய இடுப்பிலிருந்த வாளை உருவி, அந்த அசைந்து கொண்டிருந்த விளக்கை நோக்கி மெதுவாக நடந்தேன். புதருக்குள் நுழைந்தபோது, அகழியின் அந்தப் பகுதியிலிருந்த எதிரிகளின் முகாமையே ஒரு பெண் கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் மெதுவாக எரிந்து கொண்டிருந்த விளக்கை அசைத்துக் கொண்டிருந்தாள். பின்னால் இருந்துகொண்டு, அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், மலர்களாலும் நகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அவளுடைய கூந்தலை என்னால் பார்க்க முடிந்தது. உடனடியாக அந்தப் பெண் ஒரு ஒற்றனாகத்தான் இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு நான் வந்து விட்டேன்- அவள் எதிரிக்கு விளக்கின் ஒளி மூலம் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறாள். நான் அவளுடைய தோள்களை மெதுவாகத் தொட்டேன். ஆழமாக ஒரு மூச்சை விட்டவாறு, அந்தப் பெண் பின்னால் திரும்பினாள். அவள் கைகளில் வைத்திருந்த அவளுக்குச் சொந்தமான அந்த விளக்கின் வெளிச்சத்திலிருந்தே அவளை யாரென்று நான் அடையாளம் தெரிந்து கொண்டேன்- சோமதத்தை!

இப்படியும் அப்படியுமாக அசைந்து கொண்டிருந்த விளக்கின் வெளிச்சம் அவளுடைய கலவர மடைந்த முகத்தின்மீது விழுந்து  கொண்டிருந்தது. கண்களின் கறுப்பு மணிகள் மேலும் பெரியனவாகத் தெரிந்தன. ஒரு நிமிடம், அவள் உண்மையிலேயே சோமதத்தைதானா அல்லது என் தவறான கற்பனையின் மூலம் அப்படி நான் நினைத்து விட்டேனா என்றுகூட நினைத்தேன். நான் மனதில் ஆசைப்பட்ட ஒரு பொருளைப் பற்றியே தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்ததால், இப்படியொரு கற்பனையை நான் செய்து விட்டேனோ? சோமதத்தையின் நடுங்கிக் கொண்டிருந்த கைகளில் இருந்த விளக்கைப் பார்த்ததும், நான் நினைத்தது தவறானது அல்ல என்ற முடிவுக்கு வந்தேன்- அந்த விளக்கு கீழே விழும் நிலையில் இருந்தது. நான் மிகவும் வேகமாக என்னுடைய வாளை உறைக்குள் போட்டுவிட்டு, என் கைகளில் அந்த விளக்கை எடுத்து, அதை நன்கு பார்ப்பதற்காக உயர்த்திக் கொண்டே கிண்டலான குரலில் சொன்னேன். “என்ன வினோதம்? மிக உயர்ந்த நிலையில் இருக்கும் பெண்- சோமதத்தை!''

சோமதத்தை பயம் கலந்த அழுகையுடன், ஒரு கையை தன் மார்பின்மீது வைத்தாள். அப்போது ஒரு கத்தி அவளுடைய கையில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். கூர்மையான நுனிப் பகுதி என் மார்பின் மீது இருந்த கவசத்தைத் தொட்டுக் கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன்.

அதை மட்டும் அணியாமலிருந்தால், நான் நிச்சயம் அப்போது  கொல்லப்பட்டிருப்பேன். நான் அந்த கத்தியைப் பிடுங்கி என் இடுப்பில் இருந்த கச்சையில் சொருகி வைத்தேன். தொடர்ந்து நான் என்னுடைய பலமான கைகளால் அவளைப் பற்றி னேன். நான் அவளுடைய செவியில் மெதுவான குரலில் சொன்னேன்: “சோமதத்தை, நீ... ஒரு சூனியக்காரி! இறுதியில் நீ எனக்கானவளாக ஆகிவிட்டாய்!'' விளக்கு தரையில் விழுந்து அணைந்தது. பிடிபட்ட பெண் புலியைப்போல அவள் என் கைகளில் சிக்கிக் கொண்டு திமிறிக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய நகங்களால் என் முகத்தைக் கிழித்தாள். நான் அவளை என் மார்பின்மீது பலமாக அழுத்திக் கொண்டே சொன்னேன்:

“நல்லது... நல்லது... நாளை நான் உன்னுடைய நகக் கீறல்களை சந்திரகுப்தனிடம் காட்டுகிறேன்.''

திடீரென்று, சோமதத்தை என் கைகளில் நிலைகுலைந்ததைப்போல தோன்றியது. அந்த இருளில் அவள் மயக்கமடைந்து விட்டாள் என்று நான் நினைத்தேன். தொடர்ந்து அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து  வந்த ஒரு வகையான ஓசையை வைத்து, சோமதத்தை அழுதுகொண்டிருக்கிறாள் என்பதை உணரமுடிந்தது. அவள் அழட்டும் என்று நான் அனுமதித்தேன். என் கைகளில் இருந்தபடி ஒரு பெண் அழுவதென்பது இது முதல் முறை அல்ல. ஆரம்பத்தில், அவர்கள் எல்லாருமே இப்படித்தான் அழுவார்கள்.

கசப்புணர்வுடன் சிறிது நேரம் அழுதுவிட்டு, சோமதத்தை நேராக உட்கார்ந்து கொண்டு கண்ணீர் கலந்த குரலில் சொன்னாள்: “நீங்கள் யார்? நீங்கள் ஏன் என்னைப் பிடித்தீர்கள்? நான் உடனடியாக இங்கிருந்து செல்ல வேண்டும்.''

நான் அவள்மீது இருந்த என்னுடைய பிடியை விடவில்லை. “நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்ள வேண்டுமா? என் பெயர் சக்ரயுத்த இஷான் வர்மன். உன் சந்திரகுப்தனின் நண்பர்களில் ஒருவன். இப்போதைக்கு நான் இந்த வாயிலுக்கு காவலாளியாக நின்று கொண்டிருக்கிறேன். இதற்கு மேலும் நீ தெரிந்துகொள்ள விரும்பினால் கூறுகிறேன். உன்மீது பைத்தியம் பிடிக்கிற அளவிற்கு மோகம் வைத்திருக்கக்கூடிய மனிதன் நான். அந்த ஓடையின் அருகில் சுய உணர்வற்று உன்னை என்றைக்குப் பார்த்தேனோ, அந்த நாளிலிருந்தே நான் உன் அழகை வழிபடத் தொடங்கிவிட்டேன்.''

சோமதத்தை நடுங்குவதைப்போல எனக்குத் தோன்றியது. நான் சொன்னேன்: “ம்... அப்படியென் றால், நீ என்னை அடையாளம் தெரிந்துகொண்டாய். ஆமாம்... சொர்க்கத்தின் தேவதையால் ஆட்கொள்ளப்பட்ட அதே மனிதன் தான் நான்...''

சோமதத்தை சொன்னாள்: “நீங்கள்... பாவம் செய்த மனிதர்! என்னைப் போகவிடுங்கள். இல்லாவிட்டால் அரசனிடம் உங்களின் தலையை வாங்கும்படி நான் கூறுவேன்.''

நான் சிரித்தேன். “நீ... பாவச் செயல் செய்தவள்! நான் உன்னைப் போக விடமாட்டேன். உன்னைப் போக அனுமதித்தால், மகாராணி என்னுடைய தலையை வெட்டி விடுவார்கள். நள்ளிரவு நேரத்தில் நீ அரண்மனையை விட்டு வெளியே வந்ததற்குக் காரணம் என்ன? அரண்மனை மேற்பகுதியில் இந்த விளக்கை வைத்துக்கொண்டு நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?''

சோமதத்தை சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு அவள் சொன்னாள்: “நான் அரண்மனையை விட்டு வெளியே வருவதற்கு அரசரின் அனுமதியைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன்.''

நான் கிண்டல் கலந்த குரலில் சொன்னேன்: “எதிரியிடம் விளக்கை வைத்துக்கொண்டு தகவல் அனுப்பி வைக்கும்படி சந்திரகுப்தன் உன்னிடம் கூறியிருக்கிறாரா?''


சோமதத்தை மீண்டும் நடுங்கினாள்: “புத்த மதத்தைச் சேர்ந்த மடத்திற்கு வந்து, அங்கிருக்கும் ஏழை மக்களுக்குச் சேவை செய்ய நான் அரசரின் அனுமதியைப் பெற்றிருக்கிறேன்.''

“கோட்டையின் மேற்பகுதியில் இருந்துகொண்டு நீ ஏழைகளுக்கு அப்படியென்ன உதவியைச் செய்துவிட முடியும்?''

“கோட்டையின் மேற்பகுதியில் காயம்பட்ட போர் வீரர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைப் பார்ப்பதற்காக வந்தேன்.''

“அப்படியா? நான் இன்று இரவு உன்னை என் பொறுப்பில் பிணைக் கைதியாக வைத்திருக்கிறேன். நாளை நீ இந்த விளக்கங்களை சந்திரகுப்தனிடம் கூறிக்கொள்ளலாம். நான் காவலாளியை அழைக்கட்டுமா?''

சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள்.

நான் மீண்டும் கேட்டேன்: “நான் காவலாளியை அழைக்கட்டுமா?''

பதைபதைப்பு கலந்த குரலில் சோமதத்தை சொன்னாள்: “உனக்கு எது வேண்டுமானாலும் அதை நான் தருகிறேன். தயவுசெய்து என்னைப் போக விடு.''

நான் சொன்னேன்: “ எனக்கு எது வேண்டுமோ, அதற்காக உன்னிடம் நான் கெஞ்ச வேண்டியதில்லை. நானே பலவந்தமாக அதை எடுத்துக் கொள்வேன்.''

பயந்துபோன குரலில் அவள் கேட்டாள்:  “உனக்கு என்ன வேண்டும்?''

“நீ .....''

மீண்டும் என்னிடமிருந்து விடுபடுவதற்கு அவள் போராடினாள். அவள் திரும்பத் திரும்ப என்னுடைய மார்பின்மீது அடித்தபடி சொன்னாள்: “என்னைப் போகவிடு.... என்னைப் போக விடு...... நான் இந்த நாட்டின் அரசி..... நீ என்னைத் துன்புறுத்தினால், மரணத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.''

நான் சொன்னேன்: “நீ சந்திரவர்மனின் உளவாளி. நீ உன்னுடைய அழகைக் கொண்டு அரசனின் மனதை மயக்கி விட்டாய். அதை வைத்து அரண்மனைக்குள் நுழைந்தும் விட்டாய். நான் உன்னைத் துன்புறுத்தினால் குமாரதேவி எனக்கு பரிசுகள் தருவாள். ஞாபகத்தில் வைத்துக்கொள்.... நீ அரசனின் எஜமானி.''

“என்மீது இரக்கம் காட்டு.... நான் உன்னுடைய மன்னனின் மனைவி.''

“நீ ஒரு வேவு பார்க்கும் பெண்...'' தொடர்ந்து அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அழுதாள். அவளுடைய பரிதாபமான அழுகையைப் பார்த்து கல்கூட கண்ணீர் விட்டிருக்கும். நான் கொடூரமானவனாகவும், பேராசை நிறைந்தவனாகவும், காமவயப்பட்டவனாகவும் இருந்தேன். அவளுடைய கண்ணீரைப் பார்த்தும் நான் எந்தவித சலனமும் அடையாமல் இருந்தேன்.

சோமதத்தை மீண்டும் கேட்டாள்: “என்மீது உனக்கு இரக்கமே இல்லையா?''

நான் சொன்னேன்: “நான் எதை விரும்புகிறேனோ, அதை நீ தருவதாக இருந்தால் நான் உன்னை இத்துடன் விட வாய்ப்பிருக்கிறது. அதற்குப் பிறகு எந்த விஷயத்தையும் நான் சந்திரகுப்தனிடம் கூற மாட்டேன்.''

சோமதத்தை சொன்னாள்: “நான் அப்படிப்பட்ட பெண் அல்ல. சந்திரகுப்தன் என்னுடைய கணவர். நான் அவரைக் காதலிக்கிறேன். ஆமாம்.... நான் சந்திரவர்மனின் ஒற்றன்தான். நான் மகத நாட்டுக்கு ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன்தான் வந்தேன்.

அப்போது காதல் என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. நான் என்னுடைய கணவரின் நாட்டை இன்னொரு மனிதருக்குத் தருவதற்கு முயற்சிக்கிறேன். நான் ஏன் அதைச் செய்கிறேன்? உன்னால் அதை எந்தச் சமயத்திலும் புரிந்துகொள்ள முடியாது.

ஆனால், நான் உன்னிடம் சத்தியம் செய்து கூறுகிறேன்- நான் என் கணவர்மீது அன்பு வைத்திருக்கிறேன். என் வாழ்க்கையில் அவரைத் தவிர வேறு எந்த மனிதனுக்கும் இடமில்லை. என்மீது கருணை காட்டு. என்னை விடுவித்து, போக வை. சந்திரவர்மன் மகத நாட்டையும், பாடலிபுத்திரத்தையும் கைப்பற்றிய பிறகு, அவரிடம் காசி, கோசலை, சம்பா, கவுர் ஊர்களில் உனக்கு எது வேண்டுமோ, அதைத் தரும்படிக் கூறுகிறேன். நான் இந்த விஷயத்தை சத்தியம் செய்து உன்னிடம் கூறுகிறேன். என்மீது சந்திரவர்மனுக்கு ஏராளமான பாசம் இருக்கிறது. என்னுடைய விருப்பங்கள் எதையும் அவர் மறுக்கவேமாட்டார்.''

“சந்திரவர்மனால் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற முடியாமல் போனால்....?

“அது நடக்காத விஷயம்....''

“அப்படியா? நீ சந்திரகுப்தன்மீது அந்த அளவிற்கு காதல் வைத்திருந்தால், நீ ஏன் அவரையும், அவருடைய  நாட்டையும் அழிக்க வேண்டுமென்று நினைக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா?''

“சந்திரவர்மன் என்னுடைய தந்தை.''

நான் அதிர்ச்சியடைந்தேன்: "நீ.... சந்திரவர்மனின் மகளா?''

வெட்கம் கலந்த குரலில் அவள் சொன்னாள்:

“ஆமாம்... ஆனால், ஒரு விலைமாதுக்குப் பிறந்தேன்.''

“இப்போது நான் புரிந்து கொள்கிறேன்.''

“நீ மனிதப் பிறவியே இல்லை.... உன்னால் எதையும் புரிந்துகொள்ள முடியாது. நான் சிறுவயதிலிருந்தே அரண்மனையில் வளர்க்கப்பட்டவள்''

“உன்னுடைய தந்தைக்காக உன்னுடைய கணவரை அழிப்பதற்கு நீ தயாராக இருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆனால், நீ.... சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். எனக்கு கவுர், சம்பா, வாரணாசி- எதுவுமே தேவையில்லை. எனக்குத் தேவை நீதான். எனக்கு எது வேண்டுமோ அதை மறுக்காதே. நீ அதை மறுத்தால், உன்னுடைய இரவு நேர சாகசங்களை நான்அரசனிடமும் அரசியிடம் கூறி விடுவேன்.''

நடுங்குகிற குரலில் சோமதத்தை சொன்னாள்: “நீ விருப்பப்பட்டால், என்னைக் கொன்று என்னுடைய உடலை அகழியின் நீருக்குள் எறிந்து விடலாம். ஆனால், அரசனிடம் எந்த விஷயத்தையும் கூறாதே. ஆண்கள் என்றாலே எப்போதும் சந்தேக குணத்துடன்தான் இருப்பார்கள். என்னுடைய உண்மையான உள் நோக்கங்களை அவரால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால், என்மீது நம்பிக்கை அற்றவராக ஆகிவிடுவார். அவரிடம் எந்த விஷயத்தையும் கூற மாட்டேன் என்று நீ எனக்கு சத்தியம் செய்து கூறு.''

ஒரு பெண்ணின் மனம் எப்படியெல்லாம் செயல்படும் என்பதைப் புரிந்துகொள்வது சிரமமான விஷயம்தான். நான் சொன்னேன். “சரி... நான் அரசனிடம் எதைப் பற்றியும் கூற மாட்டேன்.

ஆனால், எனக்கு என்ன பரிசு?''

சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள்.

நான் மீண்டும் கேட்டேன்: “என் பரிசு....?''

அதற்குப் பிறகும் அவள் அமைதியாகவே இருந்தாள்.

நான் அளவற்ற மோகம் கொண்டு பைத்தியம் பிடித்த நிலையில் இருந்தேன். நான் அவளை என்மீது இழுத்து நசுக்கியவாறு, முத்தம் கொடுத்து விட்டு சொன்னேன். “சோமதத்தை, உன்னுடைய அழகின் நெருப்பு ஜுவாலைக்கு என்னை நானே தியாகம் செய்து கொள்கிறேன்.''

சோமதத்தை ஒரு தீர்க்கதரிசியைப்போலவும் இதயத்தைத் தொடுகிற குரலிலும் சொன்னாள்: “நீ மட்டும் அல்ல- சந்திரகுப்தன், மகதநாடு, நான்.... நாம் எல்லாருமே எரிந்து சாம்பலாகப் போகிறோம்.''

5

கரத்தின் மையப் பகுதியில், பழமையான அந்த அரண்மனை இரண்டு கல் பரப்பளவிற்கு இருந்த நிலப் பகுதியில் கம்பீரமாக நின்றிருந்தது. அது எல்லா பக்கங்களிலும் உயர்ந்த கற்களாலான சுவர்களால் சூழப்பட்டிருந்தது. கிழக்குப் பக்கத்திலிருந்த பிரதான தெருவில், அழகான வேலைப்பாடுகள் அமைந்த உயரமான கல்லாலான கதவு இருந்தது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால்- வினோதமான முறையில் அமைந்த, இரண்டு மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடம் இருந்தது. நிறைய தூண்கள் அதைத் தாங்கிக் கொண்டிருந்தன. அதற்குப் பின்னால் ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக கட்டடங்கள்.....


அவற்றில் ஒன்று கருவூலம். இன்னொன்று ஆபரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்... ஒரு கோவில்.... ஒரு அருங்காட்சியகம்.... நடுவில் ஒரு தாமரைக் குளம்... அங்கு ஏராளமான நீர்ப்பறவைகளும் மீன்களும் இருந்தன. அவை எல்லாவற்றுக்கும் பின்னால், அரண்மனையின் உட்பகுதி இருந்தது. அதைச் சுற்றி ஆழமான அகழி. அரண் மனையில் அந்தப் பகுதிக்கு யாராவது செல்ல வேண்டுமென்றால், ஒரு பாலத்தை நடந்து கடந்து செல்ல வேண்டும். பாலத்தின் ஆரம்பப் பகுதி போர்வீரர்களின் தொடர் கண்காணிப்பில் எப்போதும் இருந்த வண்ணம் இருக்கும். வாயிலில், அழகான கலை வேலைப்பாடுகள் அமைந்த தூண்கள் இருந்தன. அந்தப் பகுதியிலிருந்த அனைத்து கட்டடங்களும் மூன்று மாடிகளைக் கொண்டவையாக இருந்தன. முதல் மாடி பளிங்குக் கற்களால் அமைக்கப்பட்டி ருந்தது. இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகள் மரங்களால் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த அரண்மனை சந்திரகுப்தனால் அமைக்கப்பட்டது அல்ல. அதை மவுரிய வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் கட்டினார்கள். மகத நாட்டை வெற்றி பெற்றபிறகு, சந்திரகுப்தன் அதைக் கைப்பற்றிக் கொண்டான்.

அவன் அதைக் கைப்பற்றியுடன், அரண்மனையின் எந்தப் பகுதி மிகவும் முக்கியமானது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சித்தான்- அரசனும் அரசியும் மட்டுமே இருக்கக் கூடிய- யாருக்குமே தெரியாத ரகசிய இடத்தை! ஆனால், அவனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு ரகசியமான அறை. அது மற்ற அறைகளைப்போலவே இருக்கும். ஆனால், அதன் சுவர்களிலும்  மேற்கூரையிலும் நிறைய கதவுகள் இருந்தன. அவை கீழே இருக்கும் சுரங்கப் பாதைகளில் போய் முடிந்தன. அந்த சுரங்கப் பாதைகள் பெரும்பாலும் அரண்மனைக்கு வெளியே போய் முடிந்தன. ஆபத்து வரும் காலங்களில், கோட்டைக்குள்ளிருந்து தப்பித்துச் செல்வதற்கு அந்த சுரங்கப் பாதைகள்தான் பயன்படுத்தப்பட்டன. ஒரு அரண்மனையின் மிக முக்கியமான பகுதியாக அது இருந்தது. அரசனுக்கும் அரசிக்கும் மட்டுமே அவை எங்கெங்கு சென்று  முடிவடைகின்றன என்ற விஷயம் தெரிந்திருக்கும். தான் மரணமடைவதற்கு முன்னால்,  அந்த ரகசியத்தை அரசன் தன்னுடைய மகனிடம் கூறுவான். அந்த அரசனுக்குப் பின்னால், ஆட்சிக்கு வரக்கூடியவன் யாரோ, அவனிடம்....

முந்தைய நாள் இரவு நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு நான் மறுநாள் காலையில், அந்த அரண்மனைக்குள் ரகசியமான உள் நோக்கத்துடன் வந்தேன். அரசவை நிறைய மனிதர்களால் நிறைந் திருந்தது. எல்லாரும் அங்கு இருந்தார்கள்- அமைச்சர்கள், உறுப்பினர்கள், படைத் தளபதிகள், வர்த்தகர்கள்.... அனைவரும் மிகவும் கவலையில் மூழ்கியவர்களாகவும் ஆவேசம் கொண்டவர்களாகவும் காணப்பட்டனர். அறை குரல்களால் நிறைந்திருந்தது. நடுப்பகுதியில் சந்திரகுப்தன் தன்னுடைய பொன்னால் அமைக்கப்பட்ட சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்தான். அவனைச் சுற்றி நடைபெறும் விஷயங்களுக்கு, முற்றிலும் சம்பந்தமே இல்லாதவனைபோல அவன் காணப்பட்டான். நான் உள்ளே நுழைந்தவுடன், அவன் ஆர்வமே இல்லாமல் என்னைப் பார்த்தான். நான் போலியான மரியாதையுடன் வணக்கம் சொன்னேன். அவன் சந்தோஷமே இல்லாமல் தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன். "சந்திரகுப்தா, எனக்கு இந்த விஷயம் தெரிந்தால்!'

நான் அரசவையைச் சுற்றி நடக்க ஆரம்பித்து, அரசனின் நண்பனைப் பார்த்தேன். அரசனுக்கு மிகவும் அருகில் இருந்து கொண்டு, அவனுடைய தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டியது அவனுடைய பொறுப்பு. அவனுடன் எனக்கு எப்படியோ நெருங்கிய நட்பு இருந்தது. கடந்த காலத்தில் அவனிடமிருந்து பல ரகசிய தகவல்களையும் நான் கறந்திருக்கிறேன் நான் அவனிடம் கேட்டேன்: “பல்லவா, என்ன செய்தி?''

பல்லவன் சொன்னான்: “புதிதாக எதுவுமில்லை. முக்கியமான அறையிலிருந்து வெளியே செல்லும் ரகசிய சுரங்கப் பாதைகள் எங்கே இருக்கின்றன என்ற விஷயம் தெரிந்திருந்தால், கடவுளால் கைவிடப்பட்ட இந்த நாட்டை விட்டு நிரந்தரமாக தான் போய்விடப் போவதாக மன்னர் கூறிக் கொண்டிருந்தார்.''

நான் கேட்டேன்: “ஏன் இந்த வெறுப்பு?''

பல்லவன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே சொன்னான்: “எல்லா விஷயங்களிலும் அவருக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது என்று இதற்கு அர்த்தம் இல்லை. சரி... இருக்கட்டும்... நீண்ட நாட்களாகவே உன்னை நான் பார்க்கவில்லையே! நீ எங்கே போயிருந்தாய்?''

நான் சொன்னேன்: “நான் தொடர்ந்து கவுதம் துவாரைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன்.

அதனால், எனக்கு நேரமே இல்லாமல் போய்விட்டது. படைத் தலைவர் விரோத் வர்மன் எங்கே?''

பல்லவன் சொன்னான்: “அவர் மேலே இருக்கிறார்... இன்னொரு அமைச்சருடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்.''

“நானும்... அவருடன் பேச விரும்புகிறேன்.'' இதைக் கூறிக் கொண்டே நான் இரண்டாவது மாடிக்கு படிகளில் ஏறிச் சென்றேன்.

விரோத் வர்மன் தனியாக இருந்த ஒரு அறையில் அமைச்சருடன் அமைதியாக உரையாடிக் கொண்டிருந்தார். நான் உள்ளே நுழைந்தவுடன், அவர்கள் கேள்வி தொனிக்க என்னைப் பார்த்தார்கள். நான் எந்தவித தயக்கமும் இல்லாமல் கேட்டேன். “இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடித்திருக்கும்? கோட்டைக் குள் உணவு, நீர் எதுவுமே இல்லை. எல்லாமே மிகவும் விலை மதிப்புள்ளதாக ஆகிவிட்டது. பசியின் கொடுமையில் சிக்கி, மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதைவிட, போர்க்களத்தில் இறப்பது எவ்வளவோ மேல். ஆனால், எதிரியிடம் சண்டை போடுவதற்கான எந்த முயற்சியும் நடந்ததாகத் தெரியவில்லை. கோட்டையின் கதவுகளை மூடிக் கொண்டு இருந்து விட்டால் போதுமா? மக்கள் அதைத்தான் பேசிக் கொள்கிறார்கள். போர் வீரர்களும், காவலாளிகளும்கூட சந்தோஷமில்லாமல் இருக்கிறார்கள்.''

“அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்?''

நான் சொன்னேன்: “நேற்று மாலையில் நான் சந்தாபால் என்ற இடத்தில் எல்லாரும் குழுமியிருக்கும் ஒரு இடத்திற்குச் சென்றேன். காலி வயிறுகளை வைத்துக் கொண்டு மிகப்பெரிய போர்ப்படையை வைத்திருக்கும் சந்திரவர்மனுடன் மோதுவது என்பதே பிரயோஜனமில்லாத ஒரு காரியமென்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். ஒருநாள் அவனுடைய போர்ப்படை கோட்டையைக் கைப்பற்றப் போவது உறுதி என்று கூறினார்கள். அதனால், அவனை நிறுத்தி வைக்க முயற்சிப்பதைவிட, உள்ளே அவனை நுழைய அனுமதிப்பதுதான் சிறந்தது என்று அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படிச் செய்தால், அந்தப் பகைவன் நம்மிடம் கருணை மனம் கொண்டாவது நடப்பான் என்று அவர்கள் கூறிக்கொண்டார்கள்.''

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டார்கள். விரோத் வர்மன் சொன்னார்: “சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தை கைப்பற்றப் போவதில்லை. அவன் தன்னுடைய வெற்றியின் இறுதி நிலையை இங்கு அடைந்திருக்கிறான்.''

“ஆனால்....''

விரோத் வர்மன் என்னைத் தடுத்தார் : “இங்கு ஆனால் அது இதுவெல்லாம் தேவையில்லை. இன்னும் பத்தே நாட்களுக்குள், அவன் தன்னுடைய வாலை தன் கால்களுக்குள் சொருகிக் கொண்டு ஓடப் போகிறான். நீ பின்னால் போக ஆசைப்பட்டால்,

அவனைப் பின்பற்றி ஓடு...!''


அந்த இரண்டு வயதான மனிதர்களுக்குப் பின்னால் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். அந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நான் சொன்னேன்: “அது எப்படி நடக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. பத்து நாட்களில், இந்த நகரம் ஒரு சுடுகாடாக மாறப் போகிறது. அதற்குப் பிறகு சந்திரவர்மன் இங்கு வந்து தங்கினானா அல்லது ஓடுகிறானா என்பதெல்லாம் முக்கியமான விஷயமே இல்லை.''.

விரோத்வர்மன் சொன்னார்: “நாளையிலிருந்து கோட்டைக்குள் ஏராளமான உணவுப் பொருட்கள் வரப்போகின்றன.''

நான் அவர்களையே ஆச்சரியத்துடன் பார்த்தேன். உணவுப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன என்பதைப் பற்றி அவர்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அதை அவர்களிடம் நான் கேட்கவில்லை. நான் சொன்னேன்:

“உணவு கிடைக்கிறது என்ற விஷயம் சந்திரவர்மனிடமிருந்து தப்பிப்பதற்கு எந்த விதத்தில் உதவப் போகிறது?''

விரோத்வர்மன் சொன்னார். “பத்தே நாட்களில் சந்திரவர்மனை ஓடச் செய்வேன் என்று நான்தான் சொன்னேனே?''

“இந்த பத்து நாட்களுக்கு போர் வீரர்களுக்கும் மக்களுக்கும் நீங்கள் என்ன விளக்கத்தைக் கூறப் போகிறீர்கள்? அவர்கள் எதிர்ப்பைக் காட்டினால்....''

விரோத்வர்மன் உரத்த குரலில் கத்தினார். “எதிர்ப்பைக் காட்டுவார்களா? சக்ரயுத்தா, இந்தக் கோட்டையை எதிரி கைப்பற்றி விடுவான் என்று பேசும் வீரர்கள் மரணத்திற்குள் தள்ளப்படுவார்கள். எதிர்த்துப் பேச முயற்சிக்கும் மக்கள் அகழிக்குள் கிடக்கும் முதலைகளுக்கு இரையாக்கப்படுவார்கள். எதிர்ப்பை வெளிப்படுத்துபவன்- நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன்.'' அவர் சற்று சாந்தமாகி விட்டு, தொடர்ந்து சொன்னார்: “உன்னிடம் யார் கேள்வி கேட்கிறார்களோ, அவர்களைப் பார்த்து நீ போய்க் கூறு- சந்திர வர்மன் வெகுசீக்கிரமே காணாமல் போகப் போகிறான் என்றொரு தகவல் வந்து சேர்ந்திருக்கிறது என்று....''

தகவல்! நான் உண்மையைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் இருவருக்கும் என்னுடைய மரியாதையைச் செலுத்தி விட்டு, நான் புறப்படுவதற்குத் தயாரானேன். அப்போது என்னைத் திரும்ப அழைத்த அமைச்சர் சொன்னார்: “சக்ரயுத்தா, நீ மனதில் ஏதாவது நினைத்தால், அதை உனக்குள் வைத்துக் கொள்''

“சரி... '' என்றேன் நான். சொல்லும்போதே சிரித்துக் கொண்டேன்.

அன்று நள்ளிரவு நேரத்திற்குப் பிறகு சோமதத்தை என்னைத் தேடி மீண்டும் வந்தாள். முந்தைய இரவு அவள் எந்த இடத்தில் இருந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தாளோ, அந்த இடத்திற்கு நான் ஏற்கெனவே வந்து விட்டேன். அவள் ஒரு விளக்குடன் தன்னுடைய வசீகரிக்கக் கூடிய அழகுடன் எனக்கு முன்னால் வந்து நின்றாள். நான் அவளை என்னுடைய கரங்களுக்குள் பிடித்திழுத்தேன். சோமதத்தை புன்னகைத்துக் கொண்டே எந்தவித எதிர்ப்பையும் காட்டாமல் என்னுடைய அணைப்பை ஏற்றுக் கொண்டாள்.

ஒரே இரவில் இப்படியொரு மாற்றமா! ஒரு பெண்ணின் இதயம் உண்மையிலேயே புரிந்து கொள்ள முடியாத புதிர்தான். பெண்களிடம் உள்ள இந்த பலவீனத்தை நான் புரிந்து கொள்ளாதவன் இல்லை.

நான் சொன்னேன்: “சோமதத்தை, சந்திரகுப்தன் இல்லாமல் இந்த உலகத்தில் வேறு யாராவது மனிதன் இருக்கிறானா?''

சோமதத்தை தன்னுடைய கைகளை என் கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டே என் காதிற்கு அருகில் வந்து சொன்னாள்: “நான் ஏற்கெனவே அதைத்தான் நினைத்துப் பார்த்தேன். ஆனால், இப்போது எனக்குத் தெரியும்- உன்னைப்போல ஒருவன் இல்லை.''

நான் அவளுடைய அழகால், அவள் ஸ்பரிசம் தந்த உணர்ச்சியால், அவளுடைய நறுமணத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். நினைவில் நிற்காத காலத்திலிருந்து இப்படித்தான் பெண்கள் ஆண்களைத் தங்களுக்குக் கீழே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்களோ?

நான் சொன்னேன்: “சோமதத்தை, என் காதலி நீ. முழுமையாக நீ எனக்குச் சொந்தமானவளாக ஆகவேண்டுமென்று நான் விரும்புகிறேன். இப்படி யாருக்கும் தெரியாமல் ரகசியமான சில மணி நேரங்களுக்கு மட்டுமல்ல.''

சோமதத்தை தன்னுடைய தலையை என்னுடைய தோள்களின்மீது வைத்து, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுச் சொன்னாள்: “ஆனால்... அது எப்படி முடியும்? நான் அரசன் சந்திரகுப்தனுக்குச் சொந்தமானவளாயிற்றே!''

நாங்கள் எதுவும் பேசாமல் அமைதியாக சற்று நேரம் இருந்தோம். சோமதத்தையைப் போன்ற பெண்ணின் அழகான ஈர்ப்பு- இன்னும் என்னைப் போல் அவளை முழுமையாக சொந்தமாக ஆக்கிக் கொள்ளாத ஒரு மனிதனுக்கு எந்த அளவிற்கு இருக்கும் என்பதை வார்த்தைகளால் விவரித்துக் கூறுவது மிகவும் சிரமமான விஷயமே. நான் முற்றிலும் அவளுடைய காந்த வளையத்தில் சிக்கிக் கிடந்தேன். அவள் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தாள். நான் அவளை எனக்கே சொந்தமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஒரு மனிதனுக்குள் இருக்கும் நெருப்பை எப்போதும் உயிர்ப்புடன் இருக்கச் செய்யக்கூடிய ஏதோவொன்று அவளிடம் இருந்தது. அதற்கு முடிவு என்பதே இல்லாமல் இருந்தது.

அவளைப் போன்ற ஒரு பெண்ணுக்காக எந்தவொரு மனிதனும் தன்னிடமிருக்கும் எல்லாவற்றையும் தியாகம் செய்து விடுவான். தன்னிடம் இருக்கும் உயர்ந்த தீர்மானங்கள் அனைத்தையும் அவன் காற்றில் பறக்கவிட்டு விடுவான். அவனைச் சுற்றியிருக்கும் உலகம் தாறுமாறாகப் போய் விட்டிருந்தாலும் அதைப்பற்றியெல்லாம் அவன் சிறிதும் கவலைப்படமாட்டான்.

“நேற்று நீ எதிரிக்கு என்ன தகவலை அனுப்பி விட்டாய்?''

சோமதத்தை தன்னுடைய தலையை என் தோள்களிலிருந்து உயர்த்தி என் மன ஓட்டங்களைப் படிப்பதைப்போல என் கண்களையே கூர்ந்து பார்த்தாள். பிறகு அவள் சொன்னாள்: “நான் கோட்டையைப் பற்றிய சில தகவல்களைத் தெரிவித்தேன்.''

“அது எனக்குத் தெரியும். ஆனால், என்ன தகவல்?''

“கோட்டையில் உணவுப் பொருட்கள் இல்லை என்ற விஷயத்தை அவர்களுக்கு நான் தெரிய வைத்தேன்.''

“நீ தவறான தகவலை அனுப்பிவிட்டிருக்கிறாய். நாளை காலையிலிருந்து கோட்டையில் உணவுத் தட்டுப்பாடு என்பதே இருக்காது.''

சோமதத்தை ஆச்சரியத்துடன் நிமிர்ந்து உட்கார்ந்தாள். “உண்மையாகவா? உணவுப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன?''

“அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒருவேளை ரகசியமாக இருக்கும் ஒரு சுரங்கப் பாதை கண்டு பிடிக்கப்பட்டிருக்கலாம். அந்த சுரங்கப் பாதையின் வழியாக வெளியிலிருந்து உணவுப் பொருட்கள் கொண்டுவரப் படலாம்.''

“சுரங்கப் பாதை! சுரங்கப் பாதை எங்கே இருக்கிறது?''

“எனக்கு எப்படித் தெரியும்? அப்படி இருக்குமென்று நான் நினைக்கிறேன். கோட்டையில் நாளையிலிருந்து உணவுப் பொருட்களுக்கு எந்தவிதப் பஞ்சமும் இருக்காது என்ற விஷயம் மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். அது மட்டுமல்ல; சந்திரவர்மன் வெகுசீக்கிரமே வெளியே இருந்து கோட்டையைத் தாக்கப் போகிறார். வைஷாலியிலிருந்து ஒரு போர்ப்படை வந்து கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.''


“நீ என்னிடம் கூறுவது உண்மையா? நீ என்னிடம் பொய் கூறவில்லை என்று உன்னால் உறுதியாகக் கூறமுடியுமா?''

“நான் உண்மையைத்தான் கூறுகிறேன். நான் இந்தத் தகவல்கள் அனைத்தையும் இன்று விரோத்வர்மனிடம் இருந்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.''

சோமதத்தை வெறுப்புடன் தன்னுடைய தலையின் முன்பகுதியில் அடித்துக் கொண்டாள். “இந்த விஷயம் எனக்கு ஏன் நேற்று தெரியாமல் போனது? எனக்குத் தெரிந்திருந்தால், என் வாழ்க்கையையே நான் கொடுத்திருப்பேன். ஆனால், எந்தச் சமயத்திலும்....''

சோமதத்தை என்னை கோபமுற்ற கண்களுடன் பார்த்தாள். நீண்ட நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். பிறகு சொன்னாள்: “எது விதிப்படி நடக்க வேண்டுமோ, அது நடந்திருக்கிறது. ஒருவரின் தலைவிதியை யாராலும் மாற்றவே முடியாது. ஒரு வேசியின் மகளுக்கு என்னதான் விதிக்கப்பட்டிருக்கும்?''

நான் அவளை என் கரங்களில் எடுத்தேன். பிறகு சொன்னேன்: “சோமதத்தை, நீ எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீ எனக்குச் சொந்தமானவள். சக்ரயுத்த இஷான் வர்மனாகிய நான் உனக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன். நான் நெருப்புக்குள் இறங்குவேன். ஆழமான நீருக்குள் குதிப்பேன். உனக்காக சந்திரகுப்தனை அழிப்பேன்- அவனுடைய நேரம் வந்துவிட்டது.''

“நீ சந்திரகுப்தனை அழிப்பாயா?''

“ஆமாம்... உன்னால் அவனை அழிக்க முடிகிறது என்றால், என்னால் ஏன் முடியாது? எனக்கு அவன் யார்?''

“உன்னுடைய நண்பர்!''

“என்னுடைய உண்மையான நண்பன் அல்ல! அவனுடைய தவறான செயல்களுக்கு நானும் உடந்தையாக இருந்திருக்கிறேன். நான் அவனைப் புகழ்ந்து பேசக்கூடியவன். அதற்குமேல் எதுவுமில்லை. அவன் ஒரு சமயம் என்னிடமிருந்து உன்னைப் பறித்துக் கொண்டான். நான் இப்போது அதே காரியத்தைத்தான் செய்திருக்கிறேன். அவனுடன் எனக்கு என்ன நட்பு? அவனை அழித்து, இந்த நாட்டை விட்டே வீசி எறிவதில் உன்னுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்.''

சிறிது நேரத்திற்கு சோமதத்தை மிகவும் அமைதியாக இருந்தாள். பிறகு சொன்னாள்: “நீ என்ன செய்ய விரும்புகிறாய்?''

“நான் உன்னிடம் கூறுகிறேன். இன்று காலையில் விரோத்வர்மனிடமிருந்து தெரிந்து கொண்டதன் மூலம் லிச்சாவியிலிருந்து பாடலிபுத்திரத்தை நோக்கி ஒரு போர்ப்படை அடுத்த பத்து நாட்களுக்குள் வந்துசேர இருக்கிறது என்ற தகவலைப் பெற முடிந்திருக்கிறது. தூது வரும் புறாக்களின் மூலம் இந்தச் செய்தி இங்கு வந்திருக்க வேண்டும். சந்திரவர்மன் பாடலிபுத்திரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டால், அந்த போர்ப்படை வந்து சேர்வதற் குள் அவர் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பாடலிபுத்திரத்தை அவரால் கைப்பற்ற முடியாமல் போய் விடும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவருக்கே அது ஆபத்தானதாகக்கூட ஆகிவிடும். அந்த ஆக்கிரமிப்பிலிருந்து அவரால் தப்பிக்க முடியாமல்கூட போகலாம். நாளையிலிருந்து கிடைக்கப் போகும் உணவுப் பொருட்களால் கோட்டைக்குள்ளிருக்கும் மக்கள் பலசாலியாகிவிடுவார்கள். வேறு என்ன மாற்று வழி?''

“என்ன?''

“சதித்திட்டம் தீட்ட வேண்டியதுதான்.''

“சதித்திட்டத்திற்கு யார் ஒப்புக் கொள்வார்கள்?''

“நான் செய்வேன்... அதற்கு பிரதிபலனாக சந்திரவர்மன் எனக்கு என்ன தருவார்?''

“உனக்கு ஏற்கெனவே கிடைத்திருப்பதில் திருப்தி இல்லையா?''

“இல்லை... எனக்கு அரச சிம்மாசனம் தேவையில்லை என்று நேற்று நான் உன்னிடம் சொன்னேன். ஆனால் அது தவறு. ஆளுவதற்கு எனக்கு ஒரு நாட்டைப் பெறாமல் உன்னுடன் மட்டும் என்னால் திருப்தியடைந்துவிட முடியாது. இன்னும் சொல்லப்போனால்- நீ அரச வாழ்க்கையின் செல்வத்தை ருசி பார்த்தவள். குறைவான வசதிகளில், நீயும் சந்தோஷமாக இருக்க முடியாது.''

“உண்மைதான்.... குறைவான வசதிகளில், நான் சந்தோஷம் கொள்ள மாட்டேன். அப்படியென்றால், உன்னுடைய சதித்திட்டத்திற்கு நீ என்ன வேண்டும் என்று விரும்புகிறாய்?''

“நான் ஏற்கெனவே எல்லா விஷயங்களையும் திட்டமிட்டு விட்டேன். எல்லா செய்திகளையும் நீ உன்னுடைய விளக்கின் மூலம் சந்திரவர்மனுக்கு தெரியப்படுத்து. சதித்திட்டத்தின் மூலம் மட்டுமே இந்தக் கோட்டையைக் கைப்பற்ற முடியும் என்ற விஷயத்தை அவருக்குத் தெரியப்படுத்து. அவருக்காகவும் அவருடைய படைக்காகவும் கோட்டையின் கதவுகளைத் திறந்து வைப்பதற்கு ஒரு படைத் தலைவர் தயாராக இருக்கிறார் என்பதையும் அவரிடம் கூறு. அந்தப் படைத் தலைவருக்கு மகத நாட்டை ஆளக்கூடிய உரிமையை அதற்குப் பரிசாகத் தரவேண்டும் என்பதையும் கூறு.''

சோமதத்தை சிறிது நேரம் ஒரு சிலையைப்போல நின்று விட்டு, உரத்த குரலில் வாய்விட்டுச் சிரித்தாள். அசைந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில், அவளுடைய சிரித்துக் கொண்டிருக்கும் முகம் வேறொரு முகமாகத் தெரிந்தது. அவள் சொன்னாள்: “நல்லது... நல்லது... நானே அதை விரும்பினேன். என் தந்தையை சந்தோஷப்படுத்தி, மகத நாட்டை ஆளும் உரிமையை ஒரு மனிதனுக்காக கேட்டுப்பெற்று, திமிர் பிடித்த அந்த பெண்ணின் கர்வத்தை அடக்க வேண்டுமென்று நான் நினைத்தேன். அதனால் இந்த திட்டம் என்னைப் பொறுத்தவரை சரிதான். நாம் இருவரும் சேர்ந்து திட்டமிடுவோம். என் தந்தை இந்தக் கோட்டையை ஆக்கிரமிப்பார். மகத நாட்டின் சிம்மாசனத்தில் நீ உட்கார். நான் உன் அரசியாக ஆவேன். நல்ல விஷயம்!'' சோமதத்தை வினோதமான ஒரு சிரிப்பை மீண்டும் வெளிப்படுத்தினாள்.

நான் சொன்னேன்: “சந்திரகுப்தன் கொல்லப்பட வேண்டும். அவன் உயிருடன் இருந்து எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. இல்லையென்றால் பின்னர் தொந்தரவுகள் உண்டாகும். ஒரு நல்ல விஷயம் இருக்கிறது- சந்திரகுப்தனால் இங்கிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. ஏனென்றால், கோட்டையை விட்டு வெளியே செல்லக்கூடிய ரகசியமான சுரங்கப் பாதைகளின் கதவுகள் எங்கே இருக்கின்றன என்று அவனுக்குத் தெரியாது.''

இன்னும் சோமதத்தைக்கு சந்திரகுப்தன்மீது ஏதாவது பலவீனம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே, வேண்டுமென்றே நான் இந்த விஷயங்களை அவளிடம் சொன்னேன். அவளுடைய முகத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் இருப்பதைப் பார்த்தேன். அவள் ஒரு முடிவு எடுத்ததைப்போல தன் இரண்டு உதடுகளையும் ஒன்று சேர்த்து அழுத்தினாள்.  கண்களை இமைக்காமல் என்னை வெறித்துப் பார்த்த அவள் கேட்டாள்: “ரகசிய சுரங்கப் பாதைகள் என்றால் என்ன?''

நான் விளக்கிக் கூறியதைக் கேட்டு, அவள் சந்தோஷப்பட்டாள். என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டே அவள் சொன்னாள்: “என் காதலுக்கு உரியவரே, எங்கே சந்திரகுப்தன் தன் மனைவி குமாரதேவியுடனும் மகனுடனும் தப்பித்துச் சென்று விடுவாரோ என்பதை நினைத்து நான் கவலைப்பட்டேன். இப்போது எனக்கு நிம்மதி உண்டாகி விட்டது. கவலையே படாதே. நாம் இருவரும் மகத நாட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்து இன்பம் காணுவோம்.''

“சந்திரகுப்தனை என்ன செய்வது?''

“அதைப் பற்றி கவலைப் படாதே. எதைச் செய்ய வேண்டுமோ, அதை நான் செய்கிறேன்.''


பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று என் உடலில் வந்து மோதிக் கொண்டிருந்தது. ஒரு சிறிய, மறைந்து கொண்டிருந்த நிலவு கிழக்கு திசை வானத்தில் தெரிந்தது. நான் சொன்னேன்: “சிறிதும் தாமதிக்க வேண்டாம். இரவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இப்போதே உன்னுடைய செய்தியை அனுப்பு..''

சோமதத்தை கோட்டையின் மேற்பகுதியில் தன்னுடைய விளக்குடன் நின்றிருந்தாள். முன்னால் நீட்டப்பட்ட கையில் விளக்குடன் நின்று, ஒரு இரவுப் பறவையைப்போல ஒரு குரலை எழுப்பினாள். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்! கோட்டையின் எதிர் திசையிலிருந்து அதேபோன்ற ஒரு குரல் ஒலிப்பதை நான் கேட்டேன். தொடர்ந்து அவள் ஒரு ஆலயத்தின் பெண் துறவியைப்போல, விளக்கை மெதுவாக ஆட்டினாள். அவளுடைய முகம் மிகவும் இறுக்கமாக இருந்தது. அவளுடைய கண்கள் மிகவும் கூர்மையாக இருந்தன. அவள் எல்லாவற்றையும் முடித்தபோது, அமைதியான காற்றில் ஒரு குயிலின் சத்தம் கேட்டது. சோமதத்தை தன்னுடைய விளக்கை தரையில் வைத்து விட்டுச் சொன்னாள்: “உனக்கு நாளை ஒரு பதில் கிடைக்கும்''.

6

காலையில் மக்கள் கண் விழித்தபோது, கோட்டையில் இருந்த கடைகள் முழுவதும் உணவுப் பொருட்களுடன் இருப்பதைப் பார்த்தார்கள். அவை அனைத்தும் எங்கிருந்து வந்தன என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. அங்குள்ள பழமையான புத்த மடத்திலிருந்து உணவுப் பொருட்கள் எடுத்துக் கொண்டு வரப்படுவதை மட்டும் அவர்கள் பார்த்தார்கள். மக்கள் சந்தோஷத்தில் சத்தம் போட்டுக் கத்தினார்கள். கடைகளை நோக்கி ஓடினார்கள்.

சந்திரகுப்தன் படுக்கையில் படுத்திருக்க, இரண்டு மனிதர்கள் அவனுடைய உடலை எண்ணெய் போட்டுத் தடவி விட்டுக் கொண்டிருந்தார்கள். உரத்த குரலில் சத்தம் வந்ததைக் கேட்ட அவன் பாதி கண்களைத் திறந்தபடி கேட்டான்: “அது என்ன சத்தம்? சந்திரவர்மன் கோட்டைக்குள் நுழைந்து விட்டானோ?” அவனுடைய தனி உதவியாளர் அவனுக்கு அருகில் ஒரு குவளையில் பழச்சாறை வைத்துக் கொண்டு நின்றிருந்தான். அரசன் தான் குளித்து முடித்தவுடன் அந்த பழச் சாறைப் பருகுவான். அவன் சொன்னான்: “இல்லை அரசே! நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைத்திருக்கின்றன. அதனால் அவர்கள் அரசரை வாழ்த்துகிறார்கள்.”

சந்திரகுப்தன் கேட்டான்: “உணவு பொருட்கள் எங்கிருந்து வந்தன?”

அந்த தனி உதவியாளருக்கு அதற்குமேல் அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனினும், அவன் அரசனுக்கு பதில் கூறியாக வேண்டும். அவன் சொன்னான்: “புத்த மடத்தில் உணவுப் பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன. புத்த துறவிகள் அவற்றை மக்களிடம் வினியோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

அரசனுக்கு எந்த விஷயத்திலும் ஈடுபாடு இல்லை. அவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டே சொன்னான்: “நீ இந்த விஷயத்தை அரசிக்கு தெரியப்படுத்து. பட்டினி கிடக்கும் மக்களை நினைத்து அவள் மிகவும் கவலையில் இருந்தாள்.”

அரசன் சோமதத்தையை மனதில் வைத்துக் கொண்டுதான் கூறுகிறான் என்று அவனுடைய உதவியாளர் நினைத்ததால், அரசனின் கிண்டல் கலந்த வார்த்தைகள் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கவில்லை. அவன் அவளுக்கு செய்தியைக் கூறுவதற்காக வெளியேறினான். வெளியே செல்லும் ஒரு பணிப் பெண்ணை அவன் பார்த்தான். அவன் அவளை அழைத்து, அந்தச் செய்தியை சோமதத்தையிடம் கூறும்படிச் சொன்னான். பணிப்பெண் அவளிடம் போய் செய்தியைச் சொன்னாள். சோமதத்தை குளிர்ந்த தரையில் படுத்துக் கொண்டே, ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தாள். அந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் அவள் எழுந்து உட்கார்ந்தாள். அவளுடைய கண்களைச் சுற்றிலும் கறுப்பு வளையங்கள் விழுந்து விட்டிருந்தன. அவளுடைய முகம் வெளிறிப்போய் காணப்பட்டது. ஆனால், அது அவளுடைய பேரழகைச் சிறிதும் குறைக்கவில்லை.

அவள் பணிப்பெண்ணை அழைத்துச் சொன்னாள்: “நீ புத்த மடத்திற்குச் சென்று, அங்கிருக்கும் அகின்சான் என்ற துறவியைப் பார்த்து என்னை வந்து சந்திக்கும்படி கூறு. தீபன் விதா என்ற புத்தமத பெண் துறவி அவரைப் பார்க்க விரும்புவதாகக் கூறு… என்னுடைய அறைகளுக்குள் அவர் வரும்போது வாயில் காப்போர் தடுத்தால், அவர்களிடம் இந்த முத்திரையைக் காட்டும்படி அவரிடம் கூறு.” அவள் தன் கழுத்தில் முத்திரையுடன் தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியைக் கழற்றி பணிப் பெண்ணிடம் கொடுத்தாள்.

பயந்துபோன பணிப்பெண் சொன்னாள்: “ஆனால்… குமாரதேவிக்கு இந்த விஷயம் தெரிந்தால்….”

கோபமுற்ற சோமதத்தை சொன்னாள்: “என்னைத் தொல்லைப்படுத்துவதை நிறுத்திக் கொள். நான் உன்னிடம் எதைச் செய்யச் சொன்னேனோ, அதைச் செய்.”

வெளியே செல்லும்போது பணிப்பெண் தனக்குத் தானே கூறிக் கொண்டாள். ‘உங்களுக்கு என்ன? உயர்நிலைப் பெண்கள் இருக்கக்கூடிய பகுதிக்குள் துறவி நுழைந்திருக்கிறார் என்ற செய்தி அரசிக்குத் தெரிய வந்தால், அவள் என் தலையையே வெட்டி விடுவாள்.’

பணிப்பெண் அகின்சானுடன் திரும்பி வந்தபோது சோமதத்தை குளித்து முடித்திருந்தாள். துறவி உள்ளே நுழைந்து, தன்னுடைய ஆசனத்தில் போய் உட்கார்ந்து, ஆசீர்வதிப்பதற்காக தன் கையை உயர்த்தினார். தொடர்ந்து அவர் ஏதோ கேட்பதைப் போல அவளைப் பார்த்தார். அவர் வயதான மனிதராக இருந்தார். சவரம் செய்யப்பட்ட தலையுடனும், துறவிகளுக்கென்றே இருக்கக் கூடிய ஆடைகளுடனும் இருந்த அகின்சான் ஒரு தெய்வீகத் தன்மை கொண்ட அமைதி தவழ காணப்பட்டார்.

சோமதத்தை பணிப்பெண்ணை அங்கிருந்து செல்லும்படி கூறினாள். தொடர்ந்து அவள் தன்னுடைய கைகளைக் குவித்து வைத்துக் கொண்டே கூறினாள். “சுவாமி நான் மடத்திற்குச் சென்று அங்கிருக்கும் ஏழைகளுக்கு ரகசியமாக உதவி செய்வதுண்டு. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.”

அகின்சான் சொன்னார்: “கடவுளுக்கும் ஏழைகளுக்கும் யார் ரகசியமான சேவை செய்கிறார்களோ, அவர்களை புத்தர் மேலும் அதிகமாக ஆசீர்வதிப்பார்.”

சோமதத்தை சொன்னாள்: “இன்று இரவு என்னால் மடத்திற்குச் செல்ல முடியவில்லை அதனால், அரசி குமார தேவி பெளத்தர்களின் மீது வெறுப்பு கொண்டவளாக இருக்கிறாள் என்ற உண்மை நன்கு தெரிந்திருந்தும், நான் தைரியமாக உங்களை இங்கு வரவழைத்திருக்கிறேன். நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.”

அகின்சான் சொன்னார்: உரிய நேரம் வரும் போது அரசி குமாரதேவிக்கு புத்தர் ஞானத்தை போதிப்பார். உங்களின் கேள்விகள் என்ன?

சோமதத்தை சொன்னாள்: “இன்று கோட்டைக்குள் நிறைய உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?”

“ஆமாம்… அது உண்மைதான்.”

“அது எப்படி வந்தது?”

துறவி சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தார். பிறகு சொன்னார்: “புத்தரின் கருணையால்…”

சோமதத்தை பொறுமையை இழந்து கேட்டாள்: “அது எனக்குத் தெரியும். ஆனால், எது எந்த வழியின் மூலம் வந்தது?”


அகின்சான் சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னார். “மடத்தின் வழியாக…”

“அதுவும் எனக்குத் தெரியும், மடத்தில் உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தனவா?”

“இல்லை…”

“பிறகு?”

“அது மிகப் பெரிய ரகசியம்… தீபன்விதா, என்னிடம் எந்தக் கேள்விகளையும் கேட்காதீர்கள். நான் அவற்றுக்கு பதில் கூற மாட்டேன்.”

“அப்படியென்றால், நான் கூறுகிறேன். மடத்திற்குள் ஒரு ரகசிய சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. வெளியிலிருந்த அந்த சுரங்கப் பாதையின் வழியாக உணவுப் பொருட்கள் வருகின்றன. நான் கூறுவது சரியா?”

துறவி தயங்கிக் கொண்டே சொன்னார்: “ஆமாம்… உங்களுக்கு உண்மை தெரிந்திருக்கும்பட்சம், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?”

“எனக்கு எதுவும் தெரியாது. அது நான் மனதில் நினைத்த விஷயம். சுவாமி, தயவுசெய்து உங்களுடைய மகளாகவும் பக்தையாகவும் இருக்கும் என்னிடம் கருணை காட்டுங்கள். அந்தச் சுரங்கப் பாதை எப்போது, எப்படி கண்டுபிடிக்கப்பட்டது?”

துறவி சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினார். கண்களை மூடிக் கொண்டு தன்னைப் படைத்தவரிடம் உத்தரவு கேட்பதைப் போல இருந்துவிட்டு, பிறகு சொன்னார். “நான் கூறுவதை கவனமாகக் கேளுங்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை, அந்தச் சுரங்கப் பாதையைப் பற்றி எனக்கு சிறிதுகூட தெரியாது. எனக்கு முன்னால் இருந்த மடத்தின் தலைவர் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால், தன்னுடைய மரணத்திற்கு முன்பு என்னிடம் எந்த விஷயத்தையும் கூறியதில்லை.”

சோமதத்தை கண்களை அகல விரிய வைத்துக் கொண்டு, சிறிதும் இமைக்காமல், அவரையே முழுக் கவனத்துடன் பார்த்தவாறு அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

அகின்சான் தொடர்ந்து சொன்னார்: “மடத்தில் ஒரு பாதாள அறை இருக்கிறது. அங்கு நாங்கள் புத்தரின் பொருட்களை வைத்திருக்கிறோம்… அதற்கு மேலே இன்னொரு அறை இருக்கின்றது. அதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த அறை அதிகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. நான் சில நேரங்களில் அங்கு தியானம் செய்வதற்காகச் செல்வேன். கடந்த பெளர்ணமி நாளன்று இரவு, அந்த அறைக்குச் சென்றேன். அறை மிகவும் அழுக்காக இருந்தது. மேற்கூரையின் மையத்தில் ஒரு தேன் கூடு இருப்பதைப் பார்த்தேன். அந்த இடத்தில் வழிபடும் சக்கரம் செதுக்கப்பட்டிருந்தது. ஒரு மூங்கிலின் மேற்பகுதியில் நெருப்பைப் பற்ற வைத்து நான் தேனீக்களை விரட்ட முயற்சித்தேன். தேனீக்கள் அங்கிருந்து சென்றவுடன் தேன் கூட்டை அழிக்க வேண்டும் என்பதற்காக அதை ஒரு தள்ளு தள்ளினேன். நான் அதைச் செய்ய முயற்சித்தபோது, அங்கிருந்த வழிபாடு செய்யப் பயன்படும் சக்கரத்தின் மையத்தில் இருந்த சிறிய துவாரத்திற்குள் மூங்கில் மாட்டிக் கொண்டது. திடீரென்று சுவரின் ஒரு பக்கம் சற்று நகர்ந்தது. நான் மிகவும் ஆச்சரியப்பட்டு, சதுரமாக இருந்த வாய்ப்பகுதியைப் பார்ப்பதற்காகச் சென்றேன். இருட்டில் படிகள் கீழே இறங்கிச் செல்வதை நான் பார்த்தேன்.

மற்ற மனிதர்கள் அதைப் பார்த்து விடுவார்களே என்பதைத் தடுப்பதற்காக, நான் பிறகு… வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால், அந்த அறையின் கதவை மூடிவிட்டு வந்துவிட்டேன். இரவில் எல்லாரும் தூக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்தபோது, நான் ஒரு விளக்கை கையில் எடுத்துக் கொண்டு அந்தப் படிகளில் இறங்கினேன். படிகள் கற்களால் அமைக்கப்பட்டிருந்தன. அவை மிகவும் குறுகலாக இருந்தன. மேற்கூரை மிகவும் தாழ்வாக இருந்தது. ஒரு ஆள் நிமிர்ந்து நிற்க முடியாது. ஆங்காங்கே தரையில் காற்று வருவதற்காக துளைகள் இருந்தன. முன்னோக்கி நடந்து செல்லும்போது, நடந்து செல்பவர்கள் அந்தத் துளைகளைத் தவிர்த்துவிட்டுச் செல்ல வேண்டும். நான் நீண்ட நேரம் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடையவே இல்லை. என் விளக்கிலிருந்த எண்ணெய் முழுவதும் தீர்ந்து போய் விட்டது. அதனால், நான் திரும்பி வர வேண்டியதாகிவிட்டது. அடுத்த ஐந்து இரவுகளிலும் நான் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடைவதற்காக முயற்சித்து, ஆறாவது இரவன்று அந்த முயற்சியில் இறுதியாக வெற்றி பெற்றேன். நான் சுரங்கப் பாதையின் இறுதிப் பகுதியை அடைந்தேன். அது ‘காகத்தின் பாதம்’ மடத்தின் வாசலில் போய் முடிந்தது.”

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே சோமதத்தை கேட்டாள்: “பிறகு?”

துறவி கவலை நிறைந்த குரலில் சொன்னார்: “ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய அந்த மடம் தன்னுடைய செல்வாக்கை இழந்து விட்டது. அது அழிந்து போய் பாம்புகளின் இல்லமாகி மாறி, கேட்பாரற்ற நிலையில் இருந்தது. கவுதமரின் அளவற்ற அன்பு என்னை அந்தப் பாதையைக் காணச் செய்தது. நான் திரும்பி வந்து அரசுப் பொறுப்பில் இருந்த முக்கியமான அதிகாரிகளிடம், அந்த சுரங்கப் பாதையின் வழியாக கோட்டையில் பட்டினி கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்களைக் கொண்டுவர முடியும் என்று கூறினேன்.”

துறவி மிகவும் அமைதியாக இருந்தார். சோமதத்தை அமைதியாக அமர்ந்து, ஆழமான சிந்தனையில் மூழ்கியிருந்தாள். துறவி புறப்படுவதற்காக எழுந்தார். சோமதத்தை கைகளைக் குவித்துக் கொண்டே கேட்டாள்: “இன்னும் ஒரே ஒரு கேள்வி. இந்தக் கோட்டையைக் கட்டிய மனிதர், புத்த மதத்தை சேர்ந்த ஒருவரா?”

அகின்சான் சொன்னார்: “ஆமாம்… இந்த அரண்மனையைக் கட்டியவர் அசோக மன்னன் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போது கட்டப்பட்ட இந்த மடமும் அவருக்குச் சொந்தமானதே.”

சோமதத்தை எழுந்தாள். “தயவு செய்து எனக்கு உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள். என் மனதில் இருக்கும் விருப்பம் நிறைவேறட்டும்.”

வயதான துறவி சிரித்துக் கொண்டே சொன்னார்.

“புத்தர் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாராக! அவர் அனைத்தையும் அறிந்தவர்.”

துறவி அங்கிருந்து நகர்ந்தவுடன், சோமதத்தை குழப்பமான மனதுடன் அறைக்குள் சிந்தனையில் மூழ்கியவாறு இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தாள். வழிபடும் சக்கரம்! வழிபடும் சக்கரம்! ஆனால் அரண்மனையில் வழிபடும் சக்கரங்கள் செதுக்கப்பட்டிருக்கவில்லை. புத்தருடன் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இந்து மதத்தில் ஆழமான ஈடுபாடு கொண்ட குமார தேவியால் நீக்கப்பட்டிருந்தன. அவற்றின் இடத்தில் அவள் ஆண் தெய்வங்கள் மற்றும் பெண் தெய்வங்களின் உருவங்களை இடம்பெறச் செய்திருந்தாள்.

அறையின் மேற்பகுதியையும் தரையையும் பார்த்துக் கொண்டிருந்த சோமதத்தை, திடீரென்று மேற்கூரையைக் கூர்ந்து பார்த்தாள். கூரையில் ஒரு வழிபடும் சக்கரம் செதுக்கப்பட்டிருப்பதை அவள் கவனித்தாள். அதன் மையப் பகுதியில் ஒரு சிறிய துவாரம் இருந்தது. அந்த வழிபடும் சக்கரம் நீக்கப்பட வேண்டிய ஒன்று ஒன்று குமாரதேவி நினைக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால்- அதை எட்டுவது என்பது அந்த அளவிற்கு எளிதான விஷயமாக இல்லை. மிகவும் சிரமப்பட்டு பார்க்கக் கூடிய விதத்தில்தான் அது இருந்தது.


சோமதத்தை பணிப் பெண்ணை அழைப்பதற்காக வெளியே வேகமாக ஓடினாள். ஆர்வத்துடன் அவள் பணிப் பெண்ணிடம், போர்க் கருவிகள் வைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து வில்லையும் அம்பையும் எடுத்து வரும்படி சொன்னாள். “உன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், அவர்களிடம் அரசனின் மனைவி சோமதத்தை போர் பற்றிய விஷயங்களில் பயிற்சி பெற விரும்புகிறாள் என்று கூறு.” அவள் பணிப் பெண்ணிடம் கூறினாள்.

7

ரவு முழுவதும் புல்லாங்குழலின் ஆக்கிரமிப்பு நிறைந்ததாக இருந்தது. சோமதத்தை மிகவும் அமைதியாக விளக்கிற்கு முன்னால் உட்கார்ந்திருந்தாள். அவள் இசையை மிகவும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். நான் கோட்டையின் சுவரின்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். புல்லாங்குழல் முதலில் வசந்த காலத்தைப் பற்றிய ராகத்தில் இருந்தது- வசந்த பஹார் என்பது அந்த ராகத்தின் பெயர். பிறகு அது குர்ஜாரி ராகத்திற்கு மாறியது. மீண்டும் அது வசந்த பஹாருக்கு வந்தது. இறுதியாக மால்கோஷ் என்ற ராகத்தில் முடிந்தது. இசை பலவித ஆழமான திருப்பங்கள் கொண்டதாக இருந்தது. வேகமாகவும் இருந்தது. ஒவ்வொரு மாற்றமும் வேறுபட்ட பாதிப்பையும் வேறுபட்ட அர்த்தத்தையும் கொண்டதாக இருந்தது. பிறகு புல்லாங்குழல் அமைதியானது.

“புல்லாங்குழலின் இசை உனக்கு என்ன சொன்னது?”

சோமதத்தை ஒரு குழப்பத்திலிருந்து விடுபடுவதைப் போல இருந்தாள். அவள் நீண்ட பெருமூச்சு விட்டபடி சொன்னாள்: “நீ எதை விரும்பினாயோ, அது உனக்குக் கிடைக்கும். நீ மகத நாட்டின் மன்னனாக ஆவாய். அடுத்த அமாவாசை நாளன்று, இரண்டாவது ஜாமத்தின்போது இந்த விளக்கைக் கொண்டு நான் அரண்மனைக்கு நெருப்பு வைப்பேன். நெருப்பு பரவிக் கொண்டிருக்கும்போது, நீ வாயில் கதவைத் திறக்க வேண்டும்- கவுதம் துவாரின் கதவை! அரண்மனையில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்புதான் சந்திரவர்மன் வந்து தாக்குதலை நடத்தலாம் என்பதற்கான சைகை. நீ கதவைத் திறந்ததும், அவர் தன்னுடைய படைகளுடன் உள்ளே நுழைவார். எல்லாரும் நெருப்பை அணைப்பதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதையே பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பமாக சந்திரவர்மன் பயன்படுத்திக் கொள்வார்.”

நான் ஆர்வத்துடன் சொன்னேன்: “அமாவாசை இரவு! அப்படியென்றால்… நாளை மறுநாள்…”

“ஆமாம்… நாங்கள் தாமதப்படுத்த விரும்பவில்லை. இல்லாவிட்டால் லிச்சாவி போர்ப்படை வந்தாலும் வந்துவிடும். அது நம் திட்டத்தையே நொறுக்கிவிடும்.”

தொடர்ந்து சோமதத்தை மீண்டும் அமைதியில் மூழ்கிவிட்டாள். கண்களை சிறிதும் இமைக்காமல் அவள் விளக்கின் வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் பேசுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன். “புல்லாங்குழலின் இசையை உன்னால் அந்த அளவிற்கு சரியாக எப்படிப் புரிந்து கொள்ள முடிகிறது? என்னால் வேறுபட்ட ராகங்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது” என்றேன்.

சோமதத்தை சொன்னாள்: “வேறுபட்ட மெட்டுகளுக்குள் மறைந்திருக்கும் வர்த்தைகளையும், ராகத்தில் இருக்கும் உணர்வுகளையும் என்னால் கண்டுபிடித்துவிட முடியும். புல்லாங்குழலை எந்த நபர் வாசிக்கிறாரோ, அதே மனிதர்தான் எனக்கும் கற்றுத் தந்திருக்கிறார்.”

மீண்டும் ஒரு நீண்ட மவுனம் நிலவியது. என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அமைதியை இல்லாமல் செய்ய விரும்பிய நான் சொன்னேன்: “நீ எதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறாய்?”

சோமதத்தை தன்னுடைய முகத்தை உயர்த்திக் கொண்டு சொன்னாள்: “இந்தச் சிறிய விளக்கு எந்த அளவிற்கு சக்தி படைத்ததாக இருக்கிறது என்பதைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது மிகவும் சிறியது. இதை தரையில் வீசி எறிந்தால், துண்டு துண்டாகச் சிதறி விடும். அதே நேரத்தில்- ஒரு அரசையே அழிக்கக் கூடிய சக்தி இதற்கு இருக்கிறது. நானும் என்னைப் போன்ற பலரும் இந்த விளக்கைப்போல சிறியவர்கள்- முக்கியத்துவம் அற்றவர்கள். ஆனால், நம்முடைய புற அழகின் சபிக்கப்பட்ட வெளிச்சத்தைக் கொண்டு, நாம் பல தலைமுறைகளை அழிக்கலாம்.”

அவள் என்ன உணர்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு சொன்னேன்: “உன்னை ஒரு மண் விளக்குடன் ஒப்பிட்டுப் பேசாதே. நீ ஒரு பொன் விளக்கு. நீ முழு மகத நாட்டையும் வெளிச்சத்தில் குளிக்க வைப்பாய்.”

சோமதத்தை எழுந்து கொண்டே சொன்னாள்: “நான் எரிந்து கொண்டிருக்கும் இடத்திற்கு- ஒரு சுடுகாட்டிற்கு விளக்காக இருந்து கொண்டிருப்பவள். நான் இப்போது புறப்படுகிறேன். அமாவாசை நாளன்று இரவு வேளையில் மீண்டும் நாம் சந்திப்போம். சந்திரவர்மனை அரசவைக்கு அழைத்துக் கொண்டு வா. அந்த நாளன்று நான் உனக்காக இங்கு காத்துக் கொண்டிருப்பேன்.”

நான் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டே சொன்னேன்: “நம்முடைய விருப்பம் அந்த நாளன்று நிறைவேறப் போகிறது.”

சோமதத்தை மெல்ல சிரித்துக் கொண்டே சொன்னாள்: “ஆமாம்… அன்றுதான் என்னுடைய ஆசை நிறைவேறப் போகிறது.”

8

ரசன் சந்திரகுப்தன் சோமதத்தையின் அறையில் தூங்கிக் கொண்டிருந்தான். திடீரென்று அவன் பலமாக மூச்சுவிட முடியாத அளவிற்கு வந்த புகையின் வாசனையால் எழுந்தான். தன்னுடைய கண்களைத் திறக்காமலே, அவன் சோமதத்தையை அழைத்தான். எந்த பதிலும் வரவில்லை. பாதி மூடியிருந்த- தூக்கக் கலக்கத்துடன் இருந்த கண்களால் அவன் பார்த்தபோது, படுக்கையில் சோமதத்தை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டான். அவன் அறையைச் சுற்றிலும் பார்த்தான். ஆனால், அவன் கண்களில் அவள் தென்படவில்லை.

அப்போது முழு அரண்மனையும் எழுந்து விட்டிருந்தது. பயந்துபோன பெண்கள் உரத்த குரலில் அழுது கொண்டிருந்தார்கள். வீடுகளில் வளரும் பிராணிகளும் பறவைகளும் பயத்தால் கத்திக் கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும்  மேலாக, அனைத்தையும் விழுங்கிக் கொண்டிருந்த நெருப்பின் ஓசை மற்ற எல்லா சத்தங்களையும் அடக்கி, சுற்றிலும்  இருந்த காற்றை வெப்பமாக்கிக்  கொண்டிருந்தது. அந்த மரத்தாலான அரண்மனையில் எதையும் காப்பாற்றுவது என்பது இயலாத விஷயமாக இருந் தது. ஒருவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு ஒரே வழி- அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடுவதுதான். அங்கிருந்த மக்கள் எல்லாரும் தங்களுடைய பொருட்களை வேகவேகமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அரசனோ அல்லது அரசியோ பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ- உயிருடன் இருக்கிறார்களா என்பதைப் பற்றியோ யாரும் கவலைப் படவில்லை. அவர்களுடைய முழுக் கவனமுமே அவர்கள் தப்பித்துச் செல்வதில்தான் இருந்தது.

நெருப்பு மிகவும் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. அது ஒரு இடம் முடிந்ததும் இன்னொரு இடத்திற்குப் பரவிச் சென்று கொண்டிருந்தது. காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது. நெருப்பின் வெளிச்சத்தில் அமாவாசை இரவு கிழிந்து அழிந்து கொண்டிருந்தது.


அந்த முழுப் பகுதியும் சிவப்பு நிறமாக ஆனது. தூரத்திலிருந்து அதைப் பார்க்க முடிந்தது. முதலில் மக்கள் அரண்மனையை நோக்கி ஓடினார்கள். அவர்கள் கத்திக்கொண்டே அதைச் சுற்றிலும் போய் நின்றார்கள். திடீரென்று சந்தோஷக் கூப்பாடுகளும் வெற்றி முழக்கங்களும் தூரத்தில் கேட்டன. கூட்டத்திலிருந்த ஒரு மனிதன் கத்தினான்: “ஓடுங்கள்! ஓடுங்கள்... பகைவன் நகரத்திற்குள் நுழைந்துவிட்டான்.'' உடனடியாக மக்கள் கூட்டம் கலைந்து தாறுமாறாக ஓட ஆரம்பித்தது. ஓடும் வழியில் இருந்த தடைக்கல்லில் மோதி பலர் தங்களின் கால்களை ஒடித்துக் கொண்டார்கள். பலர் மூச்சுவிட முடியாமல் இறந்தார்கள். துயரத்தால் உண்டான சலனமும் அழுகையும் கோட்டையிலும் அரண்மனையிலும் ஒலித்த வண்ணம் இருந்தது. இது இப்போது நகரமெங்கும் பரவிக் கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் சோமதத்தை எங்கே இருந்தாள்?

சோமதத்தை அரசி குமாரதேவியின் அரண் மனைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். அவளுடைய கூந்தல் சுதந்திரமாக கிடந்தது. அவளுடைய ஆடைகள் கலைந்து காணப்பட்டன. அரசியின் அரண்மனை அந்தச் சமயத்தில் நெருப்பிற்கு இரையாகாமல் இருந்தது. ஆனால், பணியாட்களும் பணிப்பெண்களும் காவலாளிகளும் தங்களின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அரசியையும் அவளுடைய மகனையும் பாதுகாக்காமல் ஓடிவிட்டிருந்தனர். அரசி தன் மகனைத் தன்னுடைய கரங்களில் பிடித்த வண்ணம் அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தாள்.

சோமதத்தை அவளைக் குலுக்கி எழுப்பிக் கொண்டே சொன்னாள்: “என் அரசியே! தயவு செய்து எழுந்திருங்கள். அரண்மனையில் நெருப்பு பிடித்திருக்கிறது.''

குமாரதேவி படுக்கையை விட்டு எழுந்து, தூக்கக் கலக்கத்துடன் கேட்டாள்: “யார் அது?''

“நான்தான் சோமதத்தை. இனிமேலும் தாமதிக் காதீர்கள். உடனடியாக எழுந்திருங்கள்.'' இதைக் கூறிக் கொண்டே அவள் தூங்கிக்கொண்டிருந்த இளவரசன் சமுத்திரகுப்தனை தன் கைகளில் தூக்கினாள்.

அதற்குள் குமாரதேவி எழுந்து விட்டிருந்தாள். அவள் சோமதத்தையை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னாள்: “என் மகனைத் தொடதே, பணியாட்கள் எங்கே?''

“அவர்கள் எல்லாரும் ஓடிவிட்டார்கள்.''

“அரண்மனையில் எப்படி நெருப்பு பற்றியது?''

“நான்தான் அரண்மனைக்கு நெருப்பு வைத்தேன்.''

அதற்குமேல் இப்போது மறைத்து வைப்பதற்கு எதுவுமில்லை. சோமதத்தை குமாரதேவியையே தைரியம் நிறைந்த கண்களுடன் பார்த்தாள்.

குமாரதேவி உரத்த குரலில் கத்தினாள்: “நீ... வேசி! ஒருநாள் நீ இதைச் செய்வாய் என்று நான் எதிர்பார்த்தேன். நீ புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு துறவியை உன்னுடைய அறைக்குள் அழைத்துச் சென்றபோதே உன்னுடைய திட்டத்தை நான் புரிந்து கொண்டேன்.''

சோமதத்தை சொன்னாள்: “அரசியே! உங்களுடைய கோபத்தில் ஒரு அப்பாவி மனிதனின் மீது பழி கூறாதீர்கள். அந்த புத்த துறவியால்தான் இப்போது உங்களைக் காப்பாற்ற என்னால் முடிந் திருக்கிறது. இப்போது வாருங்கள்... பிரதான அரண்மனை முழுமையாக எரிந்து நாசமாகிவிட்டது. நீங்கள் தாமதித்தால், என்னால் உங்களைக் காப்பாற்ற இயலாமல் போய்விடும்.''

“நீ என்னைக் காப்பாற்றப் போகிறாயா? என்னை நானே காப்பாற்றிக் கொள்ள முடியாதா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?''

“இல்லை... என் அன்பான அரசியே! இன்று மட் டும் தான் என்னால் உங்களைக் காப்பாற்ற முடியும்.''

“நீ  இதன் மூலம் என்ன சொல்ல வருகிறாய்?''

“இதற்கு அர்த்தம்- சந்திரவர்மனின் படை நகரத்திற்குள் நுழைந்துவிட்டது. இந்த நேரத்தில் அரண்மனையின் எரியாத பகுதிகளை அவர்கள் ஆக்கிரமித்திருப்பார்கள்.''

குமாரதேவியின் கண்கள் ஒளிர்ந்தன. “நீ... மாயஜாலக் காரி! நீதான் இதற்கெல்லாம் காரணம். உன்னால் மகத அரசே அழிந்துவிட்டது...''

சோமதத்தை அமைதியான குரலில் கூறினாள்: “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நீ இதற்கு மேலும் தாமதித்தால், இளவரசரைக் காப்பாற்ற முடியாமலே போய்விடும். அரண்மனையை நெருப்பு எப்படி சுற்றி வளைத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்.''

திறந்திருந்த சாளரத்தின் வழியாக புகை வேகமாக நுழைய ஆரம்பித்திருந்தது.

சோமதத்தை தன் கைகளில் இளவரசன் சமுத்திரகுப்தனை எடுத்துக் கொண்டே சொன்னாள்: “இன்று நான் என் கணவரின் வாரிசை காப்பாற்றுகிறேன். அதற்காகத்தான் நான் இங்கே வந்தேன். நீங்கள் இங்கே இருக்க விருப்பப்பட்டால் இருக்கலாம். நான் போகிறேன்.'' இந்த வார்த்தைகளைக் கூறிக்கொண்டே, அவள் கதவை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

குமாரதேவி ஓடிச்சென்று அவளுடைய கரங்களைப் பற்றினாள்: “நீ... பேயே! என் மகனை என்னிடம் கொடு.''

சோமதத்தை அரசியை தன் கோபமுற்ற பார்வையால் எரித்து விடுவதைப் போல பார்த்துக்கொண்டே சொன்னாள்: “மூளையற்ற பெண்ணே! உங்களுக்கு எது நல்லது என்பதையே புரிந்துகொள்ளத் தெரியவில்லையா? என் கணவரின் மகன் என்னுடைய மகனும்தானே? இந்த அரண்மனை என்னால் நெருப்பு வைக்கப்படவில்லை. அதே நேரத்தில் உங்களின் பிடிவாதத்தாலும் கர்வத்தாலும்... அதன் காரணமாக உங்களின் சொந்த கணவரையே நீங்கள் ஒதுக்கினீர்கள். இந்த நெருப்பில் நீங்கள் எரிய வேண்டும்.''

சோமதத்தை இளவரசனைத் தூக்கிக் கொண்டு புகை பரவிவிட்டிருந்த வாசல்கள் வழியாக ஓடிக்கொண்டிருந்தாள். குமாரதேவி தன்னையே அறியாமல் அழுதுகொண்டும், அவளைத் திட்டிக்கொண்டும் சோமதத்தையைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்.

தன்னுடைய படுக்கையறைக்குத் திரும்பி வந்த சோமதத்தை அங்கு அரசன் குழப்பமான அமைதியுடன் படுக்கையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தாள். தன்னைச் சுற்றிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையே அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அறை முழுவதும் புகை நிறைந்திருந்தது. அறையின் நான்கு பக்கங்களிலும் இருந்த நான்கு விளக்குகளும் மங்கலாகத் தெரிந்தன.

சோமதத்தை பதைபதைப்புடன் இளவரசனை அரசனின் மடியில் வைத்துவிட்டு, ஒரு வில்லையும் அம்பையும் எடுத்துக்கொண்டு வந்தாள். புகை மண்டலத்திற்கு மத்தியில்- தெளிவாகப் பார்க்க முடியவில்லையென்றாலும், அவள் தர்மசக்கரம் என்று அழைக்கப்படும் வழிபடும் சக்கரத்தின் மையத்தில் இருந்த துவாரத்தைக் கூர்ந்து பார்ப்பதற்கு முயற்சி செய்தாள். அவளுடைய கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. அவள் தன்னுடைய குறியைத் தவற விட்டாள். அம்பு சுவரின்மீது போய் மோதியது. அடுத்த அம்போ தரையில் விழுந்தது. சோமதத்தை நம்பிக்கையை இழந்து தேம்பி அழுதாள். ரகசிய கதவு எந்தச் சமயத்திலும் திறக்காதா? பிறகு தன்னுடைய அன்பான கணவனையும் அவனுடைய மகனையும் அவள் எப்படிக் காப்பாற்றுவாள்?

முன்னேறி வந்து கொண்டிருந்த நெருப்பால் அறை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமாகிக் கொண்டிருந்தது. அரசனும் குமாரதேவியும் பேசும் சக்தியை இழந்து, பார்வையாளர்களைப்போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். சோமதத்தை தன்னுடைய உணர்வுகளை மிகவும் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டு, மீண்டும் மேற்கூரையின்மீது குறி வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். புகை, கண்ணீர் ஆகியவற்றுக்கு மத்தியில்  குறி வைப்பது என்பது மிகவும் சிரமத்திற்குரிய விஷயமாக இருந்தது. அவள் மிகவும் அக்கறை எடுத்து முயற்சி செய்தாள்.


இந்த முறை அம்பு சரியான இடத்தில் போய் மோதியது- மேற்கூரையிலிருந்த சக்கரத்தின் மையப் பகுதியில் இருந்த துவாரத்தில்! உடனடியாக சுவரில் ஒரு ரகசியக் கதவு திறந்தது. அப்போது இருண்ட சுரங்கப் பாதைக்குள் செல்லும் படிகள் தெரிந்தன. சோமதத்தை உணர்ச்சிவசப்பட்டு நின்றாள். சிறிது நேரம் அவள் தரையில் படுத்து அழுதாள். பிறகு வேகமாக எழுந்து குமாரதேவியிடம் சென்று சொன்னாள்: “என் அரசியே! இப்போது உங்கள் கணவருடனும் மகனுடனும் இந்த சுரங்கப் பாதைக்குள் செல்லுங்கள். இது மிகவும் பழமையான, நகரத்திற்கு வெளியே எதிரிகளின் பார்வையிலிருந்து விலகி, கேட்பாரற்ற நிலையில் கிடக்கும் ஒரு மடத்தில் போய் முடியும். நீங்கள் அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிச் சென்றுவிடலாம்.''

சந்திரகுப்தன் சுரங்கப் பாதையின் ஆரம்பப் பகுதியையே வெறித்துப் பார்த்தான். அவன் சொன்னான்: “தப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?''

“எதிரிகள் நகரத்தை ஆக்கிரமித்துவிட்டார்கள்.''

அரசனும் அரசியும் இளம் இளவரசனுடன் சுரங்கப் பாதைக்குள் நுழைந்தார்கள். சோமதத்தை அரசனுக்கு கண்ணீர் மல்க ஒரு பிரியா விடை கொடுத்தாள். திடீரென்று சந்திரகுப்தன் தன்னுடைய சுயஉணர்விற்கு வந்தான். “நீ எங்களுடன் வர வில்லையா, சோமதத்தை?''

சோமதத்தை தன்னுடைய முகத்தை கைகளைக் கொண்டு மறைத்துக் கொண்டாள். “இல்லை, என் அன்பிற்குரிய அரசே! நான் உங்களுடன் வரும் நிலையில் இல்லை. அரசி உங்களிடம் எல்லா விஷயங்களையும் கூறுவார். சந்திரவர்மன் என்னுடைய தந்தை. இதைத் தெரிந்துகொண்டு, என்னை மன்னித்துவிடும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் புறப் பட்டாக வேண்டும்... நான் இன்னொரு பாதையில் செல்கிறேன்.''

சோமதத்தை பலவந்தமாக சுரங்கப் பாதையின் கதவை மூடியதும், இதயமே நொறுங்கிப் போகும் அளவிற்கு உரத்த குரலில் சந்திரகுப்தன் அழுதான். சோமதத்தை அழுது கொண்டே கூறினாள்: “நான் இறந்து விட வேண்டும்... நான் உங்களை இந்த வாழ்வுக்குப் பிறகு சந்திப்பேன். நாம் இருவரும் இந்தப் பிறவியில் இனி எப்போதும் சந்திக்க மாட்டோம்.''

தரையில் உட்கார்ந்து கொண்டு, சோமதத்தை மனதில் கசப்பு உண்டாக தேம்பித் தேம்பி அழுதாள். ஆனால், அவளுடைய கண்ணீரால் அரண்மனையில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்க முடியவில்லை.

9

ந்திரவர்மனின் போர்ப்படை கவுதம் துவாரின் வாயிலின் வழியாக, அதன் தளபதி சந்திரவர்மனே முன்செல்ல கோட்டைக்குள் நுழைந்தது. நான் அங்கிருந்த காவலாளிகள் எல்லாரையும் அங்கிருந்து அகன்றுவிடும்படிக் கூறிவிட்டேன். அப்படியென்றால்தான் அங்கு ரத்தம் சிந்தாமல் இருக்கும்.

சந்திரவர்மன் என்னைப் பார்த்துக் கேட்டான்: “நீதான் துரோகியா?''

அவனுடைய குரலின் தன்மையே எனக்குப் பிடிக்கவில்லை. அவனுடைய நன்மைக்காகத்தான் நான் என்னுடைய அரசனுக்கே துரோகம் செய்தேன். எது எப்படி இருந்தாலும், நான் பணிவான குரலில் சொன்னேன்: “ஆமாம்... என் அரசரே! வெற்றி உங்களுக்குக் கிடைக்கட்டும்.''

சந்திரவர்மன் தன் கொடூரமான கண்களால் என்னையே பார்த்தான். பிறகு சொன்னான்: “எங்களை அரண்மனைக்குள் அழைத்துச் செல்.''

நெருப்பில் எரிந்து கொண்டிருந்த அரண் மனைக்குள் அவனை அழைத்துச் செல்வதென்பது சிரமமான விஷயமாக இல்லை. அரண்மனையில் வாசலுக்குள் நுழைவதற்கு எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லாததால், அரசவை இருந்த இடத்திற்குச் சென்றோம்.

அந்த இடத்திற்கு இன்னும் நெருப்பு பரவாமல் இருந்தது. அந்த அறை மிகவும் இருண்டதாகவும் ஆட்கள் யாருமே இல்லாமலும் இருந்தது. அரசனின் சிம்மாசனத்திற்கு அருகில் சோமதத்தை மட்டும் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அவள் ஒரு மின்னல் கலந்த இடியைக் கொண்ட மேகத்தைப்போல காணப்பட்டாள்.

அவளுடைய நீளமான கறுத்த கூந்தல் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் நெற்றியில் சிவப்பு நிறத் தில் குறி வைத்திருந்தாள். அவளுடைய கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. இருண்ட அரசவை படைவீரர்களால் விளக்கேற்றப்பட்டு வெளிச்சம் நிறைந்ததாக ஆனது. சோமதத்தை வேகமாக முன்னோக்கி வந்து, சந்திரவர்மனின் பாதத்தைத் தொட்டாள். சந்திரவர்மன் மிகுந்த பாசத்துடன்அவளையே பார்த்தான். பிறகு, மென்மையான குரலில் “என் அன்பு மகளே!'' என்றான்.

சோமதத்தை தழுதழுத்த குரலில், “தந்தையே, நான் உங்களுடைய விருப்பங்களை நிறைவேற்றி விட்டேன்.'' என்றாள்.

சந்திரவர்மன் சொன்னான்: “என் மகளே! நான் உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இந்த விலைமதிப்பற்ற கழுத்தில் அணியும் பதக்கத்தை நீ பெற்றுக்கொள்ள வேண்டும்.'' அவன் ஒரு பதக்கத்தை தன் மார்பிலிருந்து எடுத்து சோமதத்தையிடம் கொடுத்தான்.

சோமதத்தை கழுத்தில் அணியும் அந்தப் பதக்கத்தை வீசி எறிந்துவிட்டுக் கூறினாள்: “எனக்கு எந்தப் பரிசும் வேண்டாம். என் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் முடிந்துவிட்டன.''

சந்திரவர்மன் ஆச்சரியம் மேலோங்க கேட்டான்: “சந்திரகுப்தன் எங்கே?''

“உங்களால் என் கணவரைப் பார்க்க முடியாது. அவர் அரண்மனையை விட்டு வெளியேறிவிட்டார்.''

“அவன் எங்கே சென்றிருக்கிறான்?''

“ஒரு ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக அவர் தப்பித்துச் செல்ல நான் உதவினேன்.''

“நீ ஏன் அதைச் செய்தாய்?''

“எனக்கு வேறு வழி தெரியவில்லை. அவர் இதற்கு மேலும் இங்கு இருந்தால், எல்லா விஷயங்களையும் அவர் தெரிந்துகொள்ள நேரிடும். அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கு இல்லை தந்தையே! நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன். ஒரு பெண்ணுக்கு மதிப்புள்ளவையாக என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை எல்லாவற்றையும் ஒரு கொடூரமான மிருகம் என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டது.''

அவள் வெறுப்பு நிறைந்த கண்களுடன் என் பக்கம் திரும்பினாள். அவள் என்னை நோக்கி விரலை நீட்டியவாறு சொன்னாள்: “நான் எவற்றையெல்லாம் மதிப்பு உள்ளவையாக நினைத்தேனோ, அவற்றையெல்லாம் தனக்குத் தந்து விடும்படி இந்த கொடூரமான மிருகம் என்னை பலவந்தம் செய்தது.''

என் மூளைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் ரத்தம் வேகமாகப் பாய்ந்தது. நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். என்னைச் சுற்றியிருக்கும் உலகமே நின்றுவிட்டதைப்போல உணர்ந்தேன். ஒரு உறுமலுடன் சந்திரவர்மன் என்னை நோக்கி வந்து, என் தலைமயிரைப் பற்றி, தன்னுடைய  இன்னொரு கையின் விரல்களைக் கொண்டு என் கண்களைப் பிடுங்குவதற்குத் தயாரானான்.

குரூரமான ஒரு சிரிப்புடன் சோமதத்தை சொன்னாள்: “தந்தையே! சற்று பொறுங்கள். நான் என்னுடைய பரிசைப் பெற விரும்புகிறேன். இந்த அரக்கனை இப்போது கொல்ல வேண்டாம். இவன் படிப்படியாக, வேதனை அடைந்து சாகட்டும். விஷத் தன்மை கொண்ட- முட்கள் முழுமையாக நிறைந் திருக்கும் கிணற்றுக்குள் கிடந்து இவன் மெல்ல மெல்ல சாகட்டும். புழுக்கள் தின்று கொண்டிருக்கும் அழுகிப்போன பன்றி மாமிசத்தை மட்டுமே இவன் சாப்பிடட்டும்...

இவன் இறப்பதற்கு முன்னால், இவனுடைய கைகள் ஒரு குஷ்ட ரோகியின் கைகளைப்போல கீழே விழட்டும்... அதற்குப் பிறகுதான் என்னுடைய ஆன்மாவுக்கு சாந்தி உண்டாகும்.''


சந்திரவர்மன் சொன்னான்: “நீ சந்தோஷப்படும் வண்ணம், நான் அதைச் செய்வேன் என் மகளே!''

சில மனிதர்கள் என்னை தரையில் வீசி எறிந்து பிறகு கயிற்றால் கட்டினார்கள். சோமதத்தை எனக்கு அருகில் வந்து என் முகத்தில் மிதித்தாள். பிறகு அவள் சந்திரவர்மனை நோக்கித் திரும்பி, “தயவு செய்து இப்போது ஒரு தந்தையின் கடமையைச் செய்யுங்கள்'' என்றாள்.

சந்திரவர்மனின் குரல் இடறியது. “நான் எதைச் செய்ய வேண்டுமென்று நீ விருப்பப்படுகிறாய்?'

சோமதத்தை சொன்னாள்: “என்னுடைய பிறப்பிற்கு நீங்கள்தான் பொறுப்பு. இப்போது நீங்கள் இந்த உடலை அழியுங்கள்.''

சந்திரவர்மன் ஒரு சிலையைப்போல நின்று விட்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மெதுவான குரலில் சொன்னான்: “சரி...''

“என் ஆன்மா புனிதமானது- அதை இந்த அசுத்தமான உடலிலிருந்து தயவுசெய்து விடுதலை செய்யுங்கள்'' என்றாள் சோமதத்தைஅவள் தன் தந்தைக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு நின்றாள். சந்திரவர்மன் உறுதியான குரலில் சொன்னான்: “என்னையே பாருங்கள்! என் மகளின் உடல் அசுத்தமானதாக ஆகி வெறுப்பிற்கு இலக்காகிவிட்டது. நான் அதை அழிக்கிறேன்.''

அவன் தன்னுடைய ஈட்டியை அவளுடைய மார்பைக் குறி வைத்துக் கொண்டே பின்னோக்கி நகர்ந்தான். சோமதத்தை பயமே இல்லாத கண்களுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நான் பயந்துபோய் கண்களை மூடிக்கொண்டேன்.

நான் மீண்டும் கண்களைத் திறந்தபோது- அங்கிருந்த வெள்ளை நிற பளிங்குத் தரையில் சோமதத்தையின் உயிரற்ற உடல் ரத்தத்தில் தோய்ந்து கிடப்பதைப் பார்த்தேன்.

பின்கதை

பாடலிபுத்திரத்தின் அரண்மனைக்கு அருகில் இருந்த பாதி வறண்டு போயிருந்த ஒரு கிணற்றில் நான் வீசி எறியப்பட்டேன். கிணற்றின் வாய்ப் பகுதி ஒரு பலமான இரும்பு வலையால் மூடப்பட்டிருந்த என்னுடைய இடுப்புப் பகுதி வரை கிணற்றின் வழவழப்பான நீருக்குள் மூழ்கியிருக்க, நான் அடுத்த மூன்று மாதங்களும் அங்கேயே வாழ்ந்தேன். பாம்புகளும் தவளைகளும் மட்டுமே என்னுடைய நண்பர்களாக இருந்தார்கள். ஒரு உயர்நிலை பணிப் பெண் ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த சுத்திகரிப்புப்  பெண்ணுடன் வருவாள். அந்த தாழ்ந்த இனப் பெண் புழுக்கள் தின்று கொண்டிருக்கும் பன்றியின் மாமிசத்தை நான் சாப்பிடுவதற்காக கிணற்றுக்குள் எறிவாள். நான் அந்தப் பெண்ணுடன் ஒரு வினோதமான நட்பை உண்டாக்கிக் கொண்டேன். தான் அவளுக்கு லஞ்சம் தருவதாகக்கூட கூறினேன். இங்கிருந்து நான் தப்பிப்பதற்கு எனக்கு அவள் உதவினால், அவளுக்கு பத்தாயிரம் பொற்காசுகளைத் தருவதாகக் கூறினேன். ஆனால் பயந்துபோன அந்தப் பணிப்பெண் என்னைத் திட்டிவிட்டு ஓடிவிட்டாள். அதற்குப் பிறகு அவள் அங்கு வரவே இல்லை.

நான் இந்த நரகத்தில் இருந்துகொண்டு சோமதத்தையை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தேன். அவள் சந்திரவர்மனால் ஒரு ஒற்று வேலை செய்யும் பெண்ணாக அமர்த்தப்பட்டாள். சந்திரகுப்தனின் அரண்மனைக்குள் அவள் எப்படியோ நுழைந்துவிட்டாள். அவன் அவளைத் திருமணம் செய்துகொண்டான். அவள் தன் கணவன்மீது இந்த அளவுக்கு ஆழமான காதல் கொண்டவளாக ஆவோம் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அவளுடைய தந்தை கோட்டையைக் கைப்பற்றப் போகும் செயலுக்கு உடந்தையாக இருப்பதன் மூலம் தன் கணவனுக்கு துரோகம் செய்வது என்பது அவளைப் பொறுத்தவரையில் மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது. குமாரதேவி தன் கணவன் மீது மிகுந்த வெறுப்புடன் இருக்கிறாள் என்பதும், எல்லா வகையிலும் அவனை அவள் பொருட்படுத்தவே இல்லை என்பதும் அவளுக்குத் தெரியும். சோமதத்தையால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி கோட்டையை தன் தந்தையிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும் என்பதில் தெளிவான முடிவை மனதில் எடுத்திருந்தாள்.

ஆனால், தன்னுடைய சேவைகளுக்கான பரிசாக தன் தந்தையிடம் அதைத் திரும்பவும் கேட்டுப் பெறவேண்டும் என்று அவள் தீர்மானித்திருந்தாள்.

அதற்குப் பிறகு பாடலிபுத்திரத்தின் அரசனாக தன் அன்பிற்குரிய கணவனை ஆக்குவது என்று அவள் முடிவெடுத்திருந்தாள். குமாரதேவியின் பலமும் கர்வமும் அழிந்துவிடும். அதற்குப் பிறகு சந்திரகுப்தனுடன் சேர்ந்து கமாராணியாக சோமதத்தையே ஆட்சி செய்வாள்.

ஆனால், என்னுடைய காமவெறி அவளுடைய திட்டங்களை அழித்துவிட்டது. அவள் மிகப்பெரிய தொல்லையில் சிக்கிக் கொண்டாள். அவள் ஒரு ஒற்று வேலை பார்த்த பெண் என்ற உண்மை தெரிந்தால், அவளுடைய அன்பிற்குரிய கணவனிடம் உண்டாகும் வெறுப்பையும் நம்பிக்கையற்ற தன்மையையும் அவளால் தாங்கிக்கொள்ள முடியாது. தன்னைப் பற்றிய எந்த விஷயமும் சந்திரகுப்தனுக்குத் தெரியக்கூடாது என்பதுதான் அவளுடைய முழு எண்ணமும். அப்படியென்றால் மட்டுமே, அவள்மீது அவன் கொண்டிருக்கும் காதல் சிறிதும் பாதிப்படையாமல் இருக்கும்.

அவள் என்னுடைய திட்டத்தின்படி நடந்தாள். ஆனால் சந்திரகுப்தன், குமாரதேவி, அவர்களுடைய மகன் சமுத்திரகுப்தன் ஆகியோர் ரகசிய சுரங்கப் பாதையின் வழியாக தப்பித்துச் செல்வதற்கு அவள் உதவினாள். தன்னுடைய உண்மையான காதலி அவள் என்ற தெளிவான தீர்மானத்துடன் எப்போதும் சந்திரகுப்தன் இருக்கும்வரை, சோமதத்தை இறப் பதற்கு பயப்படவில்லை. எப்படியெல்லாம் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் ஒரு பெண்ணின் மனம் செயல்படுகிறது என்பதே வினோதமான விஷயம்தான்! தன்னுடைய அன்பிற்குரிய கணவனின் கண்களில் தான் எப்போதும் காதல் தேவதையாக நிறைந்திருக்க வேண்டும் என்பதற்காக அவள் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டாள்.

நம்முடைய முந்தைய பிறவிகளில் நமக்குத் தெரிந்தவர்களை, இந்தப் பிறவியில் நாம் சந்திக்க நேர்வதுண்டு என்பதை நான் நம்புகிறேன். சோமதத்தையை நான் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், நான் உடனடியாக அவளை அடையாளம் கண்டுகொள்வேன். ஒருகாலத்தில் அவள் எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் அவள்மீது கொண்டிருந்த அளவற்ற வெறியை அவளுடைய புதிய வாழ்க்கையின் புதிய தோற்றம் சிறிதும் தணித்துவிடாது.

ஆனால், அவள் என்னை அடையாளம் தெரிந்துகொள்வாளா? அவள் முகத்தைச் சுளிக்கமாட்டாளா? இப்போது அவள் என்னைச் சந்திக்க நேர்ந்தால், அவளுடைய உதடுகள் வெறுப்பால் இறுகாதா? நான் எதை விரும்புவேன் என்பது எனக்குத்தான் தெரியும்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.