
சுராவின் முன்னுரை
‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன்.
அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இறுதிப் பகுதியை மொழிபெயர்க்கும்போது என் கண்களில் ஆனந்தத்தால் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. புதினத்தின் வெற்றிக்கு அதுவே சான்று.
இன்றைய இளம் தலைமுறைக் கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு புதினத்தை மொழிபெயர்க்க வேண்டும் என்னும் என் ஆசை இந்நூலை மொழிபெயர்த்ததன் மூலம் நிறைவேறியது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. இதை மொழிபெயர்க்கும்போது நானே 22 வயது இளைஞனாக மாறி இதில் வரும் கதாபாத்திரங்களுடன் சேர்ந்து பயணித்திருக்கிறேன் என்பதே ஒரு சுவாரசியமான அனுபவம்தானே! இவற்றை நீங்களும் உணர்வீர்கள் என நம்புகிறேன்.
இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)
தன்னுடையவை அல்லாத காரணங்களால் விவாகரத்து ஆன, நாயர், இருபத்தொன்பது வயது, ஐந்தடி ஐந்தங்குலம் உயரம், அழகான இளம்பெண், குழந்தைகள் இல்லை, வங்கியில் பணி. பிரச்சினைகள் இல்லாத, முப்பத்தைந்து வயதிற்கு அதிகமாகாத, வேலையில் இருக்கும் இளைஞர்களிடமிருந்து திருமண ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன...
ரேகா அதைப் படித்து விட்டு உரத்த குரலில் சிரித்தாள்.
தன்னுடையவை அல்லாத காரணம் என்று கூறும்போது அதன் அர்த்தம் என்னவாக இருக்கும்? கணவனின் மது அருந்து பழக்கம், வேறு பெண்களுடன் தொடர்பு, ஆண்மைக் குறைவு...
எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தப் பெண் தப்பித்து விட்டாளே! அது மட்டுமல்ல, மேலும் ஒரு சோதனையை நடத்த தன்னுடைய சம்மதத்தையும் தந்திருக்கிறாளே!
பத்திரிகை வந்தால் இப்போது ரேகா எடுத்தவுடன் வாசிப்பது தொழில் விளம்பரங்களையும், திருமணப் பகுதியையும்தான். இனி அவளுக்கு அவை இரண்டுமே வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பகுதிகளாகிவிட்டன.
பி.டெக். இறுதித் தேர்வு எழுதி முடித்து அவள் வீட்டிற்கு வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. அதற்குள் அவளுக்குத் தாங்க முடியாத அளவிற்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது. அவளுடைய தந்தை சிவராமகிருஷ்ணன் வங்கியில் மேனேஜராகப் பணிபுரிகிறார். அவளுடைய தாய் சுபத்ரா கல்லூரியில் பேராசிரியராகப் பணி செய்கிறாள். அவர்கள் வங்கிக்கும் கல்லூரிக்கும் போய்விட்டால், அதற்குப் பிறகு வீட்டில் அவள் மட்டும் தனியே இருப்பாள்.
தேர்வு முடிவுகள் வருவதற்குக் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு மாதங்கள் ஆகும். அது வந்தவுடன் எம்.டெக். படிக்க வேண்டும் என்ற ஆசை அவளுக்கு இருக்கிறது. இதற்கிடையில் ஏற்றுக்கொள்கிற மாதிரி ஒரு திருமணம் வந்தால், அதற்கும் அவள் தயார்தான். அதற்காக வெறும் இல்லத்தரசியாக மட்டும் இருந்துவிடவும் அவள் தயாராக இல்லை. வேலை கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் படிக்க வேண்டும். இரண்டு விஷயங்களுக்கும் சம்மதம் தருகின்ற ஒருவனுக்கு முன்னால் மட்டுமே அவள் தன் தலையைக் குனிவாள். இந்த விஷயத்தில் அவள் உறுதியுடன் இருந்தாள்.
தன்னுடையவை அல்லாத காரணங்களால் விவாகரத்துக்கு ஆளாக நேர்ந்த நாயர் இளம்பெண்ணைக் காப்பாற்ற, தன்னுடையவை அல்லாத காரணத்தால் விவாகரத்துக்கு ஆளான நாயர் இளைஞர்கள் யாராவது இருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ரேகா திருமணப் பகுதி முழுவதையும் தேடிப் பார்த்தாள். தன்னுடையவை அல்லாத காரணத்தால் விவாகரத்துக்கு ஆளான ஒரு கிறிஸ்துவ இளைஞனும், ஒரு முஸ்லிம் இளைஞனும் கிடைத்தார்கள். ஆனால், நாயர் இளம்பெண் அந்த அளவிற்கு பரந்த மனம் கொண்டவளாக இருப்பாள் என்று கூறுவதற்கில்லையே! அதேபோல அந்த இளைஞர்களும்.
ரேகா ஏமாற்றத்துடன் பக்கத்தைப் புரட்டினாள். கல்வியும் தொழில் வாய்ப்புகளும் அடுத்த பக்கங்களில் இருந்தன. ஒரு நாகரிக இளம்பெண்ணின் புகைப்படத்தைக் கொண்ட ஒரு விளம்பரம் திடீரென்று அவளுடைய கண்களை ஈர்த்தது.
உடனே ஆரம்பிக்க இருக்கிற ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸின் விளம்பரம் அது. வெறும் மூன்று மாதங்கள் மட்டுமே நடக்கக்கூடிய ஒரு விடுமுறைக் கால கோர்ஸ். பொறியியல் கல்லூரியில் அவள் படித்த பிரிவுக்கு உதவியாக இருக்கக்கூடிய கோர்ஸ் அது.
அதில் சேர்ந்தால் என்ன? பி.டெக். தேர்வு முடிவுகள் வந்து எம்.டெக். நுழைவுத் தேர்வும் முடிந்து, வகுப்பில் சேர இன்னும் நான்கைந்து மாதங்கள் ஆகும். அதுவரை வீட்டில் போரடித்து உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டாம்.
கோர்ஸ் நடக்கும் இடம் திருவன்நதபுரம். அதுகூட நல்லதுதான். வீடு கோட்டயத்தில் இருந்தாலும், பொறியியல் படித்த திருச்சூரில்தான். இனி எம்.டெக். படிக்கச் செல்வது கொச்சியில் அப்படியென்றால் திருவனந்தபுரம் நல்லதுதான்.
ஞாயிற்றுக் கிழமையாதலால் அவளுடைய தந்தையும் தாயும் வீட்டில் இருந்தார்கள். இப்போது தந்தையிடம் இது விஷயமாகப் பேசிவிடலாம். ஆனால், அதற்கு முன்பு மைக்ரோடெக் கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு வெப்சைட் இருக்கிறது.
ரேகா பத்திரிகையை எடுத்துக்கொண்டு படிகளில் இறங்கினாள். கீழே அவளுடைய தந்தையின் அறையில் இருந்தது கம்ப்யூட்டர்.
பார்த்தபோது சிவராமகிருஷ்ணன் வரவேற்பறையில் தொலைக்காட்சிப் பெட்டிக் முன்னால் உட்கார்ந்திருந்தார். டிஸ்கவரில் சேனலில் ஆஃப்ரிக்கன் யானைகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். சிவராமகிருஷ்ணன் மூன்றே மூன்று சேனல்களைத்தான் பார்ப்பார். டிஸ்கவரி, அனிமல் ப்ளானட், நேஷனல் ஜியாகிராஃபிக். காடும், கடலும், பறவைகளும் மிருகங்களும்தான் அவருடைய பிரியத்திற்குரியவை.
இன்டர்நெட்டில் ரேகா மைக்ரோடெக்கைப் பற்றிய எல்லா விஷயங்களையும் பரிசோதித்துப் பார்த்தாள். பிரச்சினையில்லை. பதினைந்து வருடங்களாக நல்ல நிலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிறுவனம்தான். அங்கு படித்துவிட்டு வெளியே வந்த பெரும்பாலான மாணவர்களுக்கும் நல்ல வேலைகள் கிடைத்திருக்கின்றன. வகுப்பு எடுப்பவர்கள் மிகவும் தேர்ந்தவர்கள்...
அவள் சிவராமகிருஷ்ணனின் அருகில் சென்று சோஃபாவில் உட்கார்ந்தாள். பத்திரிகை அவளுடைய கையில் இருந்தது. திரையில் இப்போது யானைகள் இல்லை. ஒட்டகச் சிவிங்கிகள் காட்சியளித்தன.
அடுத்த விளம்பர இடைவேளை வந்தபோது அவள் தான் வந்த விஷயத்தைச் சொன்னாள்.
‘‘அப்பா...’’
‘‘என்ன மகளே?’’
‘‘இந்த விளம்பரத்தைக் கொஞ்சம் படிச்சுப் பாருங்க. நல்ல கோர்ஸ் எனக்குப் பிரயோஜனமாக இருக்கும். சேர்ந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்.’’
சிவராமகிருஷ்ணன் பத்திரிகையை வாங்கிப் பார்த்தார். முழுவதையும் படிக்கக்கூடிய பொறுமை அவருக்கு இல்லை.
‘‘எவ்வளவு நாட்கள்?’’
‘‘வெறும் மூன்று மாதங்கள்தான்.’’
‘‘நீண்ட கால கோர்ஸ் இல்ல. சரி... அது இருக்கட்டும். ஃபீஸ் எவ்வளவு?’’
‘‘வெறும் பன்னிரண்டாயிரம்தான்.’’
‘‘ரொம்பவும் சாதாரண ஃபீஸ் அப்படித்தானே?’’
தன்னிடம் விளையாட்டாக அப்படிக் கேட்கிறாரா என்பதை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனினும் அவள் ‘ஆமாம்’ என்னும் அர்த்தத்தில் தலையை ஆட்டினாள்.
‘‘மூணு மாதங்கள். அங்கு தங்கியிருக்கணும். எல்லாவற்றையும் சேர்த்தால் இருபதாயிரம் ரூபாய் வரும். அப்படித்தானே?’’
‘‘கண்டவனெல்லாம் உங்க பணத்தைக் கொண்டு போய் மது அருந்தி காலி பண்றதைவிட உங்க மகளான என்னை அந்தப் பணத்தை வைத்துக் கல்வி கற்கச் செய்யறது எவ்வளவு பெரிய விஷயம்?’’ -அவள் கேட்டாள்.
‘‘கண்டவனெல்லாமா?’’ - அவள் கூறியது அவருக்குப் புரியவில்லை.
‘‘அப்பா, நான் உங்களுக்கு ஒரே ஒரு மகள்தானே? உங்க சம்பாத்தியம் முழுவதையும் எனக்குத்தானே தரப்போறீங்க? என்னைத் திருமணம் செய்துக்கப்போற பார்ட்டிக்கு மது அருந்துற பழக்கம் இருந்ததுன்னா...? இப்போ புரியுதா?’’
‘‘புரியுது... புரியுது...’’ - அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
தந்தையும் மகளும் நண்பர்களைப்போல நடந்து கொள்வார்கள். விளையாட்டாக எதை வேண்டுமென்றாலும் பேசலாம். அவளுடைய தாய் கொஞ்சம் சீரியஸ் டைப்.
‘‘உனக்கு சேரணும்னு தோணினா சேர்ந்துக்கோ. அம்மாக்கிட்ட இது விஷயமா பேசினியா?’’ & சிவராமகிருஷ்ணன் கேட்டார்.
‘‘இல்ல... தலை இருக்குறப்போ வால் ஆடணுமா என்ன?’’
அவள் அப்படிச் சொன்னதைக் கேட்டு அவளுடைய தந்தை மிகவும் சந்தோஷப்பட்டார். தன்மீது மகள் வைத்திருக்கும் மதிப்பை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘‘இருந்தாலும் அம்மாக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடு. நாம அவளை ஒரு பொருட்டாகவே நினைக்கலைன்னு பேச்சு வந்துடக்கூடாது...’’
‘‘சரி அப்பா... ரொம்ப நன்றி.’’
விளம்பர இடைவேளை முடிந்திருந்தது. சேனலில் முதலைகளைப் பற்றிய ஒரு டாக்குமெண்டரி ஆரம்பித்தது.
ரேகா எழுந்து தன் தாயின் அருகில் சென்றாள். சுபத்ரா சமையலறையில் இருந்தாள். வகுப்பு முடிந்து வந்துவிட்டால், அதற்குப் பிறகு சமையல் செய்வதில் அவள் ஆர்வமாக இறங்கிவிடுவாள்.
‘‘வா மகளே. நான் உனக்கு மீன் குருமா தயாரிக்கிறது எப்படின்றதைச் சொல்லித் தர்றேன். இவ்வளவு நாட்களா நீ ஹாஸ்டல்ல இருந்தே. இனியாவது நீ கொஞ்சம் சமையல் விஷயங்களைக் கத்துக்கணும்.’’ - ஆர்வத்துடன் சுபத்ரா சொன்னாள்.
‘‘அம்மா, அது நடக்குற மாதிரி தெரியல. நான் ஒரு கம்ப்யூட்டர் கோர்ஸ்ல சேரப்போறேன். கோர்ஸ் நடக்குறது திருவனந்தபுரத்துல...’’
‘‘அதாவது உனக்கு அப்பா, அம்மாகூட இருக்கணும்ன்ற எண்ணமே இல்ல... அப்படித்தானே? இங்கேயிருந்து புறப்படணும்ன்றதுதான் உன்னோட ஆசையே...’’
‘‘எப்படியாவது போகாம இருக்க முடியுமா அம்மா? ஏதாவதொரு மடையனுக்கு நீங்க என்னைத் திருமணம் செய்து கொடுப்பீங்க. அவன் என்னைத் தன்னோட அழைச்சிட்டுப் போயிடுவான்ல?’’
அதேதான் நானும் சொன்னேன். நல்ல வீட்டுல போய் இருக்கப்போகிற பெண்ணான நீ ஒரு தேநீர் தயாரிக்கவோ, சட்னி உண்டாக்கவோ தெரியாமல் இருக்குறேன்னா, அந்த வெட்கக்கேடு எனக்குத்தான்.’’
‘‘அந்த விஷயத்தைப் பற்றி நீங்க கவலைப்பட வேண்டாம் அம்மா. தேநீர் தயாரிக்கவும், சட்னி அரைக்கவும் தெரிஞ்ச பிறகுதான் நான் இங்கேயிருந்து கிளம்புவேன்.’’
கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்வதற்கு இறுதியில் சுபத்ரா அவளுக்கு ஒப்புதல் தந்தாள்.
இன்ஸ்டிட்டியூட்டின் இ-மெயில் முகவரி பத்திரிகையில் இருந்தது. ரேகா அன்றே அப்ளிகேஷன் ஃபாரம் கேட்டு ஒரு கடிதம் அனுப்பினாள். மூன்றாவது நாள் ஃபாரம் வந்து சேர்ந்தது.
ஃபாரத்தை பூர்த்தி செய்து அவள் தன் தந்தையிடம் தந்தாள். வங்கியிலிருந்து ட்ராஃப்ட் எடுத்து, அத்துடன் சேர்த்து அனுப்பியது சிவராமகிருஷ்ணன்தான்.
ஒருவாரம் சென்றதும் கோர்ஸுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாகவும், பதினைந்தாம் தேதி வந்து கோர்ஸில் சேர்ந்துகொள்ள வேண்டுமென்றும் அறிவிப்பு வந்தது. அப்போதுதான் வேறொரு பிரச்சினை எழுந்தது.
‘‘திருவனந்தபுரத்துல நீ எங்கே தங்குவே மகளே?’’
‘‘அங்கே எனக்கு சில ஃப்ரண்டுகள் இருக்காங்க அம்மா. நான் அவங்களை தொடர்பு கொள்ளுறேன். தங்குறதுல பிரச்சினை வராது...’’ -ரேகா சொன்னாள்.
பொறியியல் கல்லூரியில் அவளுக்கு சீனியராகப் படித்த ரஜனியின் வீடு சாஸ்தமங்கலத்தில் இருக்கிறது. அன்று இரவில் அவள் ரஜனியின் வீட்டுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள்.
ரஜனியின் தாய்தான் பேசினாள்.
‘‘அவள் இப்போ பெங்களூர்ல இருக்குறா மகளே. அங்கே பெல்லில் அப்ரண்டிஸா சேர்ந்திருக்குறா. என்ன விசேஷம் மகளே?’’
‘‘எனக்கு அங்கே ஒரு கோர்ஸ்ல சேர்றதுக்கு அட்மிஷன் கிடைச்சிருக்கு அம்மா. தங்குறதுக்கான இடத்தை இன்னும் ஏற்பாடு பண்ணல...’’-ரேகா சொன்னாள்.
‘‘இங்கேயே தங்கலாம். ரஜனியோட சித்தப்பா மகன் மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைச்சு, போன மாதத்துல இருந்து இங்கே எங்ககூடத்தான் தங்கியிருக்கான். அவனுக்கு ஒரு அறை தொடுத்துட்டதால...’’
அங்கு தன் காரியம் நடக்காது என்பதை ரேகா புரிந்து கொண்டாள்.
‘‘வேண்டாம் அம்மா. நான் வெறுமனே கூப்பிட்டேன். அவ்வளவுதான்...’’-அவள் தொலைபேசியை வைத்தாள்.
ஒய்.டபிள்யு.சி.ஏ- யில் ஜாலி குருவிலா இருக்கிறாள். அவள் அங்குள்ள ஏ.ஜீஸ் அலுவலகத்தில் வேலை பார்க்கிறாள். ப்ரீ டிகிரி படிக்கும்போது அவர்கள் சேர்ந்து படித்தார்கள். ரேகாவின் நெருங்கிய தோழி அவள்.
தொடர்ந்து அவள் ஜாலியை அழைத்தாள்.
‘‘இப்பவே இங்கே ஃபுல்லா இருக்குடி. வேணும்னா நீ விருந்தாளியா இங்கே இரண்டு நாட்கள் தங்கலாம். அதற்குமேலே இங்கே தங்க முடியும்னு தோணல.’’
அந்த வகையில் அந்தக் கதவும் மூடியது.
ரேகாவிற்கு சந்தீப் ஞாபகத்தில் வந்தான். அவன் அவளுடன் ஒரே வகுப்பில் படித்தவன். வீடு குமாரபுரத்தில் இருக்கிறது. அவனுடைய தந்தை பெரிய பிஸினஸ்மேன். தாய் சமூக சேவகி. அவனுடைய தாய் நினைத்தால் ஏதாவதொரு லேடீஸ் ஹாஸ்டலில் அவளுக்கு இடம் கிடைக்கும்.
சந்தீப்பை அழைத்து அவள் விஷயத்தைச் சொன்னாள்.
‘‘நீ திருவனந்தபுரத்துக்கு வர்றியா?’’ - அவன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
‘‘ஆமாம்... எனக்கு உன் உதவி தேவைப்படுது. உன் அம்மாவிடம் சொல்லி ஏதாவதொரு ஹாஸ்டல்ல எனக்கு ஒரு அறை ஏற்பாடு பண்ணித் தரணும்.’’
‘‘விஷயம் அவ்வளவுதானே! நான் பார்த்துக்குறேன். நாளை மறுநாள் நானே கூப்பிடுறேன்.’’ - அவன் சொன்னான்.
அதைக் கேட்டு அவளுக்கு நிம்மதி உண்டானது. தயங்கித் தயங்கித்தான் அவள் சந்தீப்பையே அழைத்தாள். அவனுடைய நடவடிக்கைகள் அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால், தேவை என்று வருகிறபோது உதவி கேட்காமல் இருக்க முடியாதே!
திங்கட்கிழமைதான் வகுப்பு ஆரம்பமாகிறது. இன்று புதன்கிழமை. ஞாயிற்றுக்கிழமையாவது அங்கு போய்ச் சேர வேண்டும். அதற்கு முன்னால்... வியாழக்கிழமை சாயங்காலம் சந்தீப் அழைத்தான்.
‘‘ரேகா, என் அம்மா எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தாங்க. நல்ல பெயர் வாங்கியிருக்கும் எந்த ஹாஸ்டல்களிலும் இந்தச் சமயத்துல இடம் கிடைக்கல. நல்ல பெயர் இல்லாத சில ஹாஸ்டல்கள் இருக்கு. பரவாயில்லையா?’’
‘‘வேண்டாம்...’’
‘‘இன்னொரு சாய்ஸ் கூட இருக்கு...’’ -அவன் சொன்னான்.
‘‘என்ன?’’
‘‘பன்னிரெண்டுக்கு பன்னிரெண்டு அடி அகலத்தைக் கொண்ட அறையிலதான் நான் இருக்கேன். இன்னொரு கட்டில் போடுற அளவுக்கு இடம் இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கத் தயாராக இருந்தா, எக்ஸ்ட்ரா கட்டில் போடலாமே நாம...’’
அவள் உடனடியாகத் தொலைபேசியைக் கீழே வைத்தாள்.
இனி என்ன செய்வது? அவளுக்குக் கவலை உண்டானது.
‘‘ஐந்நூறு ரூபாய்க்கான ட்ராஃப்ட் வீணாகப் போகுது. பரவாயில்லை மகளே. அந்த கோர்ஸ் படிக்க வேண்டாம்.’’- சிவராமகிருஷ்ணன் சொன்னார்.
‘‘சரிதான். மூணே மாதங்கள்ல நான் உனக்கு நம்ம ஊர் சமையல் அத்தனையும் கற்றுத் தர்றேன். வேணும்னா கொஞ்சம் சைனீஸ் சமையலைக்கூட...’’ - சுபத்ரா சொன்னாள்.
அவள் எந்த பதிலும் சொல்லவில்லை. மூன்று மாத திருவனந்தபுர வாழ்க்கை என்ற ஆசை அத்துடன் தகர்ந்து போனது.
சுபத்ராவின் தங்கை மல்லிகா நான்கைந்து வீடுகளைத் தாண்டி இருக்கிறாள். மல்லிகாவும் கல்லூரி விரிவுரையாளர்தான். அவளுடைய கணவர் டாக்டர் வேணுகோபால் மாவட்ட மருத்துவமனையில் ஆர்த்தோபீடிக்ஸ் சர்ஜனாகப் பணிபுரிகிறார்.
சனிக்கிழமை காலையில் ரேகா தன் சித்தியைப் பார்ப்பதற்காகச் சென்றாள். கல்லூரி இல்லாததால் சித்தி அன்று வீட்டில்தான் இருப்பாள், சிறிது நேரம் அங்கு போய் எதையாவது பேசி அறுத்துக்கொண்டிருக்கலாம் என்று நினைத்தாள் ரேகா. மல்லிகா பேசிக் கொண்டிருப்பதில் மிகுந்த விருப்பம் கொண்டவள். அவளுடைய மகன் உண்ணி ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். அவனுடன் ரேகா செஸ் விளையாடலாம்.
‘‘என்ன மகளே. உன் முகம் ரொம்பவும் வாடிப் போய் இருக்கு? அம்மாகூட ஏதாவது ஸ்டண்ட் போட்டியா என்ன?’’ - அவளுடைய ஏமாற்றம் தெரிந்த முகத்தைப் பார்த்து மல்லிகா கேட்டாள்.
‘‘என் முகத்துல அப்படி ஏதாவது தெரிந்தால், அது ஒரு நிறைவேறாமல் போன கனவின் வெளிப்பாடு சித்தி’’ - முகத்தைக் கடுமையாக வைத்துக்கொண்டு ரேகா சொன்னாள்.
‘‘காதல் தோல்வி ஏதாவது நடந்திடுச்சா மகளே?’’ - குரலைத் தாழ்த்திக் கொண்டு மல்லிகா கேட்டாள்.
‘‘அப்படி ஏதாவது நடந்திருந்தால, ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணுன்னு போயிருக்கலாமே! இது வேறமாதிரி விஷயம் சித்தி. தனியா வீட்டுல இருந்து வெறுப்பு உண்டானப்போ நான் ஒரு திட்டம் போட்டேன். ஆனா, அது நடக்காமப் போச்சு.’’
நடந்ததை அவள் விளக்கிச் சொன்னாள்.
‘‘விஷயம் இவ்வளவுதானா? நீ சரோஜத்தின் வீட்டில் மூணு மாதங்கள் அல்ல மூணு வருடங்கள்கூட தங்கிக்கலாம்’’
சாதாரணமான குரலில் மல்லிகா சொன்னாள்.
‘‘சரோஜமா? அது யாரு?’’
‘‘பல்கலைக்கழக கல்லூரியில் நான் எம்.ஏ. படிக்கிறப்போ, அவள் என்கூட படிச்சா. வீடு பேட்டையில இருக்கு. அவள் இப்போ போஸ் மிஸ்ட்ரஸ்ஸா வேலை பார்க்குறா. இரண்டு மூணு வருடங்களுக்கு முன்னால் கார்ய வட்டத்துக்கு ரிஃப்ரஷன் கோர்ஸுக்குப் போயிருந்தப்போ, ஒரு மாதம் நான் அவள் வீட்டில்தான் தங்கினேன்.’’
‘‘அங்கே யாரெல்லாம் இருக்காங்க?’’ -ரேகா கேட்டாள்.
‘‘அவளும் அவளோட ஒரு சகோதரரும் மட்டும்.’’
‘‘சகோதரரா?’’-சிறிய ஒரு ஆர்வத்துடன் அவள் கேட்டாள்.
அவளோட அண்ணன். ஐம்பது வயது இருக்கும். மாதவன் அண்ணனுக்குத் திருமணம் ஆயிடுச்சு. ஆனால், மனைவியும், பிள்ளைகளும் பாப்பனம்கோட்டில் - அவர்களின் வீட்டில் இருக்காங்க.’’
‘‘பிறகு எதற்கு மாதவன் அண்ணன் அங்கே போயி இருக்கல? அல்லது அவங்க ஏன் இங்கே வந்து இருக்கல?’’ -ரேகா கேட்டாள்.
‘‘பேட்டையில இருக்குற வீடு சரோஜத்தின் பெயர்ல இருக்கு. அவள் மட்டும் தனியா இருக்குறதால, மாதவன் அண்ணன் அவள்கூட வந்து இருக்காரு. மாதவன் அண்ணன் ராணுவத்தில் இருந்தவர். அங்கே இருந்து வெளியே வந்து மூணு நான்கு வருடங்கள் ஆச்சு. அவரோட மனைவி பாப்பனம்கோட்டுல ஆசிரியையா வேலை பார்க்குறாங்க.’’
‘‘சரோஜத்திற்கு திருமணம் ஆகலையா?’’
‘‘ஆயிடுச்சு. ஆனால், ஒரே வருடம்தான் சேர்ந்து வாழ்ந்தாங்க. அதற்குப் பிறகு விவாகரத்து ஆயிடுச்சு.’’
‘‘தன்னுடைய காரணங்கள் இல்லாமல்...’’- ரேகா சொன்னாள்.
‘‘நீ என்ன சொல்ற?’’ - மல்லிகாவிற்கு எதுவும் புரியவில்லை.
‘‘என்னை சரோஜம் அங்கே தங்க அனுமதிப்பாங்களா?’’
‘‘மதிய உணவு சாப்பிட அவள் அஞ்சல் நிலையத்துல இருந்து வருவாள். அப்போ கூப்பிடுவோம். வீட்டு எண்தான் என்கிட்ட இருக்கு’’-மல்லிகா சொன்னாள்.
சரோஜா கிளை அஞ்சல் நிலையத்தில் பணிபுரிகிறாள். பன்னிரெண்டு மணிக்கு அதை அடைத்துவிட்டு ஒரு மணிக்குத் திறப்பாள்.
பன்னிரெண்டரை மணி ஆனபோது மல்லிகா, சரோஜத்தின் வீட்டுக்குத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டாள்.
ரேகாவின் விஷயத்தைச் சொன்னபோது சரோஜம் மகிழ்ச்சியுடன் அதற்குச் சம்மதித்தாள்.
‘‘உன் அக்கா மகள்தானே! வரட்டும். ஆனால், நாங்கள் தயாரிக்கிற உணவைத்தான் கொடுக்க முடியும்.’’
‘‘அதுபோதும். மாதவன் அண்ணனிடம் கேட்க வேண்டியதிருக்குமோ?’’
‘‘அதெல்லாம் தேவையில்லை. பேயிங் கெஸ்ட் என்று சொல்லிவிட்டால் மாதவன் அண்ணன் எந்த எதிர்ப்பும் சொல்ல மாட்டாரு.’’
‘‘ரொம்ப நன்றி சரோஜம்.’’
ரிஸீவரை வைத்துவிட்டு, மல்லிகா ரேகாவைப் பார்த்தாள்.
‘‘அந்த விஷயம் சரி ஆயிடுச்சு.’’
‘‘ரொம்ப நன்றி சித்தி.’’
ஒரு பழைய சூட்கேஸின் அடியிலிருந்து கல்லூரியில் படிக்கும்போது எடுத்த ஒரு க்ரூப் புகைப்படத்தை எடுத்து மல்லிகா அவளிடம் காட்டினாள். மொத்தம் பதினான்கு பேர் இருந்தார்கள். அதில் எட்டு பேர் பெண்கள்.
‘‘இதுதான் சரோஜம்’’- நடுவில் சிறிது வெட்கத்துடன் நின்றிருந்த அழகான ஒரு இளம்பெண்ணைத் தொட்டுக் காட்டியவாறு மல்லிகா சொன்னாள்.
‘‘பார்க்குறப்போ அவங்க ரொம்பவும் அப்பாவி மாதிரி தெரியுதே!’’
‘‘ஆமாம். அப்பாவியா இருந்ததுதான் அவளோட தப்பே.’’
‘‘இதுதான் ஜெயகிருஷ்ணன். அவங்களுக்குள்ளே ஒரு நெருக்கம் இருந்தது.’’ - தாடி வளர்த்த, மெலிந்து போயிருந்த ஒரு இளைஞனைச் சுட்டிக் காட்டியவாறு மல்லிகா சொன்னாள்.
‘‘அந்தக் காதல்ல என்ன நடந்தது?’’ - ரேகா கேட்டாள்.
சரோஜத்தின் வீட்டைச் சேர்ந்தவர்கள் சம்மதிக்கல...’’
அந்தக் கருப்பு - வெள்ளை புகைப்படத்திலிருந்த சரோஜத்தை ரேகா உற்றுப் பார்த்தாள். அவளுடைய சித்திக்கு இப்போது முப்பத்தெட்டு வயது இருக்கும். சரோஜத்திற்கு அதே வயதுதான் இருக்கும். இப்போது சரோஜத்திடம் இந்த அழகு இருக்குமா?
சரோஜத்தைப் பற்றிய விஷயத்தை வீட்டில் சொன்னபோது ரேகாவின் தந்தைக்கும், தாய்க்கும் நிம்மதி உண்டானது.
மல்லிகாவின் ஏற்பாடுதானே! அப்படின்னா பயப்படுறதுக்கு எதுவுமில்லை’’ - சிவராமகிருஷ்ணன் கூறினார்.
‘‘நாளைக்கு இவளைக் கொண்டு போய் அங்கே விட்டுட்டு வரணும்’’- சுபத்ரா சொன்னாள்.
‘‘அதற்காக தேவையில்லாமல் அப்பா சிரமப்பட வேண்டாம். என்னை ட்ரெயின்ல ஏற்றிவிட்டால் போதும். முகவரியும், தொலைபேசி எண்ணும்தான் இருக்கே! நான் தனியாகவே போயிடுவேன்’’- ரேகா சொன்னாள்.
அவளுடைய தாய்க்கு அதில் உடன்பாடில்லை. ஆனால் அவளுடைய தந்தை அதை ஒப்புக் கொண்டாள்.
‘‘தனியாகப் போறதில் பிரச்சினை எதுவும் இல்லை. அது இவளுக்கு ஒரு தன்னம்பிக்கை உணர்வை உண்டாக்கும். தவிர இவள் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே!’’
அன்றே ரேகா சூட்கேஸ், ஏர்பேக் ஆகியவற்றை தயார் பண்ணி வைத்தாள். மறுநாள் காலையில் சிவராமகிருஷ்ணன் அவளைத் திருவனந்தபுரத்திற்கு செல்லும் ட்ரெயினில் ஏற்றிவிட்டார்.
மதியத்திற்கு முன்னால் அவள் பேட்டை ஸ்டேஷனில் இறங்கினாள். அப்போதே அவள் செல்ஃபோனில் சரோஜத்தை அழைத்தாள்.
‘‘ஒரு ஆட்டோ பிடித்து வந்திடு மகளே. மினிமம் சார்ஜ் இருக்குற தூரம்தான். இல்லாட்டி, அங்கேயே நில்லு நான் வர்றேன்’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘வேண்டாம்... நானே வந்திடுறேன்.’’
ஆட்டோ அவளை சரோஜா நிவாஸ் என்ற பழைய இரண்டடுக்கு வீட்டுக்கு முன்னால் கொண்டுபோய் விட்டது. சரோஜம் வெளியே அவளை எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
சரோஜத்தின் அழகில் அப்படியொன்றும் குறைவு உண்டாகியிருக்கவில்லை என்று ரேகாவிற்குத் தோன்றியது. ஆடம்பரம் சிறிதும் இல்லாத உடல். நெற்றியில் திருநீறு. ஒரு பக்தையாக நின்றிருந்தாள்.
‘‘மகளே... உன் அறை மாடியில இருக்கு.’’
அவளை சரோஜம் படிகளில் ஏறி மாடிக்கு அழைத்துச் சென்றாள். அங்கிருந்த கதவைத் திறந்தபோது விசாலமான அறை தெரிந்தது. கட்டில், மேஜை, நாற்காலி. மேலே பழைய பாணியில் அமைந்த சீலிங் ஃபேன்.
அறையில் இரண்டு சாளரங்கள் இருந்தன. ஒரு சாளரத்தை சரோஜம் திறந்தாள்.
‘‘பிடிச்சிருக்கா?’’ - சரோஜம் கேட்டாள்.
‘‘ம்... நல்ல காற்றும் வெளிச்சமும் இருக்குற அறை’’ - ரேகா சொன்னாள்.
‘‘இன்னொரு சாளரத்தைத் திறக்க வேண்டாம். தெரியுதா?’’
‘‘ஏன்?’’
‘‘அந்தப் பக்கம் ஒரு வாடகை வீடு இருக்கு. நான்கைந்து பேச்சிலர்ஸ் அங்கே தங்கியிருக்காங்க.’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘பேச்சிலர்ஸா?’’
‘‘ம்... ஒரு ஆளைத் தவிர நான்கு பேரும் இளைஞர்கள். திருமணம் ஆகாதவர்கள்னு தோணுது.’’
ரேகாவிற்கு விஸில் அடிக்க வேண்டும்போல் இருந்தது. அடுத்த மூன்று மாதங்கள் மிகவும் சுவாரசியமாகக் கடந்து செல்லும் என்பது மட்டும் உறுதி.
சரோஜத்திற்கு தலைமுடி சற்று சுருண்டிருந்தது. காலையில் குளித்து முடித்து பின்னப்பட்ட தலைமுடி இரு தோள்களையும் தாண்டி பரந்து கிடக்கும். பிள்ளை எதுவும் பெறாததால் அவளுடைய உடல் வனப்பிற்கு எந்தக் கேடும் உண்டாகவில்லை.
ரேகாவின் சித்தியின் வயதுதான் என்றாலும் அந்த அளவிற்கு வயது இருப்பதை சரோஜத்தைப் பார்க்கும்போது யாராலும் உணர முடியாது. கரை போட்ட முண்டும், மேற்துண்டும், கருப்பு நிற ரவிக்கையும்தான் அவளுடைய ஆடைகள். அவளுடைய வெளுத்த உடலுக்கு எல்லா நிறங்களும் பொருத்தமாகவே இருக்கும்.
அவளை ரேகா எப்படி அழைப்பது? அக்கா என்று அழைக்கலாம். ஆனால், தன்னுடைய சித்தியின் தோழியாக சரோஜம் இருக்கும்போது ரேகா அப்படி அழைத்தாள் சரியாக இருக்காது.
ஆன்ட்டி என்று அழைக்கலாம். அப்படி அழைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
‘‘ரேகா மதியம் எதுவும் சாப்பிடலையே?’’ - சரோஜம் கேட்டாள்.
‘‘இல்லை ட்ரெயினை விட்டு இறங்கி நேரா இங்கேதான் வர்றேன்’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்படின்னா கீழே வா. மாதவன் அண்ணன் சாப்பிட்டுட்டார். நாங்கள் பன்னிரெண்டரை ஆகுறப்போ சாப்பிடுவோம். ஒருமணி ஆயிடுச்சுன்னா, அஞ்சல் நிலையத்துக்கு போகணும்ல? இன்னைக்கு நீ வரணும்ன்றதுக்காக நான் காத்திருந்தேன்’’- சரோஜம் சொன்னாள்.
அவள் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி ஒன்று கடந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன.
‘‘ஆன்ட்டி... நீங்க போங்க வீட்டுக்கு ஃபோன் பண்ணி இங்கே வந்து சேர்ந்துட்டதா சொல்லணும். நான் இதோ வந்திடுறேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘ஃபோன் கீழே இருக்கு.’’
‘‘என் கையில மொபைல் இருக்கு.’’
சரோஜம் அதைக் கேட்டுச் சிரித்தாள். வரிசையான வெண்மை நிறப் பற்கள். அழகான சிரிப்பு. ஆனால், அந்தச் சிரிப்பில் கவலையின் சாயல் இருந்தது.
அவள் திரும்பி அறையிலிருந்து கீழே இறங்கினாள். பின்பாகம் வரை கூந்தல் தொங்கிக் கொண்டிருந்தது. தலைமுடியின் நுனியில் ஒரு துளசிக் கதிர் தொங்கிக் கொண்டிருந்தது.
ஹேன்ட் பேக்கிலிருந்து தன்னுடைய செல்ஃபோனை எடுத்து ரேகா வீட்டிற்கு எண்களை அழுத்தினாள். சிவராமகிருஷ்ணன்தான் தொலைபேசியை எடுத்தார்.
‘‘அப்பா, நான் இப்போ சரோஜா நிவாஸுக்கு பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘கஷ்டம் எதுவும் இல்லையே!’’
‘‘இல்லப்பா...’’
‘‘ஏதாவது இருந்தால், தொலைபேசி மூலம் சொல்லிடு.’’
‘‘ஏதாவது இருந்தால், அவ்வப்போது என்னோட ரன்னிங் கமெண்ட்ரியை நீங்க எதிர்பார்க்கலாம். நான் இங்கே வந்து சேர்ந்துட்டேன்னு சித்திக்கிட்ட சொல்லிடுங்க. சித்திக்கிட்ட நான் பிறகு தொலைபேசி மூலம் பேசிக்கிறேன்.’’
‘‘சரி...’’
‘‘அம்மாவிடமும் விஷயத்தைச் சொல்லிடுங்க.’’
பேசி முடித்து ரேகா படிகளில் கீழே இறங்கிச் சென்றாள். படிகள் இறங்கிச் செல்லும் அறைக்கு அருகில் இருந்தது சாப்பிடும் அறை. வெள்ளியைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்த இரண்டு ஸ்டீல் ப்ளேட்டுகளில் சம்பா அரிசியாலான சாதத்தை சரோஜம் பரிமாறினாள்.
‘‘கை கழுவிவிட்டு, உட்காரு’’- அவள் சொன்னாள்.
சாப்பிடும் அறையிலேயே வாஷ்பேசின் இருந்தது. ரேகா கைகளைக் கழுவிவிட்டு சாப்பிடுவதற்காக உட்கார்ந்தாள்.
‘‘ரேகா நீ சைவம் இல்லையே?’’ & சரோஜம் கேட்டாள்.
‘‘இல்ல...’’
‘‘மாமிசமோ மீனோ இல்லாமல் ஒரு கவளம்கூட மாதவன் அண்ணன் வாய்க்கு உள்ளே இறங்காது. காலையில் ஒன்பது மணி ஆயிடுச்சுன்னா, நான் அஞ்சல் அலுவலகத்துக்குப் போகணும்ல? அதனால மாதவன் அண்ணன்தான் மார்க்கெட்டுக்குப் போயி எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டு வருவாரு. ஜானகி வந்து எல்லாவற்றையும் தயார் பண்ணி வச்சிட்டுப் போயிடுவாள். ஜானகிக்கு நான்கைந்து வீடுகள்ல வேலை இருக்கு.’’
வறுத்த மீனை சரோஜம் ரேகாவின் ப்ளேட்டில் பரிமாறினாள். அவள் சைவம். ஏதோ ஒரு ஊறுகாய், அப்பளம், வெண்டைக்காய் பொரியல் ஆகியவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு சாதம் சாப்பிட்டாள்.
‘‘மாதவன் அண்ணன் இங்கே இல்லையா?’’ - ரேகா கேட்டாள்.
‘‘தூங்கிக்கிட்டு இருக்காரு. சாப்பிட்டு முடிச்சு மூணு மணி வரை தூங்குவாரு. அதற்குப் பிறகு பாப்பனம்கோட்டிற்குப் போவாரு. அங்கேயிருந்து சாயங்காலம்தான் வருவாரு.’’ - சரோஜம் கூறினாள்.
‘‘மாதவன் அண்ணனின் மனைவியும் பிள்ளைகளும் இங்கே வந்து இருக்காததற்குக் காரணம் என்ன?’’
இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக்கூடாது என்று அந்தக் கணத்திலேயே ரேகாவிற்குத் தோன்றியது. தான் தேவைக்கும் அதிகமாக சுதந்திரம் எடுத்துக் கொண்டு விட்டோமோ என்று அவள் நினைத்தாள்.
‘‘அய்யோ... இல்ல ரேகா... நான் இங்கே தனியாகத்தானே இருக்கேன்! இங்கே என்னை நினைச்சுத்தான் அவர் அங்கே போய் இருக்காம இருக்கார்.’’
சாப்பிட்டு முடித்து தட்டுகளைக் கழுவுவதற்காக ரேகாவும் சென்றாலும் சரோஜம் அதற்குச் சம்மதிக்கவில்லை. மெதுவாக முன்னோக்கி நடந்து சென்றாள். கம்பிகளாலான வேலி கட்டிய ஒரு வராந்தா அங்கே இருந்தது. அங்கு உறுதியான மரத்தாலான ஒரு பழைய நாற்காலி இருந்தது. மாதவன் அண்ணனின் சிம்மாசனம் அது என்பதை அவள் புரிந்துகொண்டாள்.
முற்றத்தின் மத்தியில் துளசித்தளம் இருந்தது. நிறைய கிளைகளையும் இலைகளையும் கொண்ட கிருஷ்ண துளசியும் அந்தக் கூட்டத்தில் இருந்தது. முற்றத்தில் ஏராளமான செடிகள் இருந்தன. மந்தாரையும் மாங்காய் நாறியும், நந்தியார் வட்டையும், கொத்தமல்லியும்... அங்கிருந்த மரத்தில் பிச்சுக்காடி படர்ந்திருந்தது. கேட்டிற்கு அருகில் ஒரு ராஜமல்லிகை இருந்தது.
வடக்குப் பக்கத்தில்தான் பேச்சிலர்கள் தங்கியிருக்கும் வீடு இருக்க வேண்டும்.
வடக்குப் பக்கம் இருந்த சாளரத்தைத் திறக்கக்கூடாது என்று சரோஜம் ஆன்ட்டி கூறியிருக்கிறாளே! அவள் மெதுவாக சாளரத்தைத் திறந்து பார்த்தாள். மஞ்சள் நிற பெயின்ட் அடித்த ஒரு வீடு சுவருக்கு மேலே தெரிந்தது. ஒற்றை அடுக்கைக் கொண்ட கான்க்ரீட்டாலான வீடு அது.
பேச்சிலர்கள் வேலையில் இருக்கக் கூடியவர்களாக இருப்பார்களா? இல்லாவிட்டால் கல்லூரியில் படிக்கும் மாணவர்களா? மாணவர்களாக இருக்கும்பட்சம் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று கூறப்பட்டிருப்பார்களே! பேச்சிலர்கள் என்று குறிப்பிடப்பட்டதால் அவர்கள் வேலையில் இருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும்.
ரேகா தன்னுடைய அறைக்குச் சென்றாள். வேண்டுமென்றால் சிறிது நேரம் படுக்கலாம். படுத்தால் தூங்கிவிடுவாள். பகல் நேரத்தில் தூங்கினால் இரவு உறக்கம் வர நேரமாகும். இதில் வந்திருப்பது புதிய வீடு வேறு.
வடக்கு பக்கம் இருக்கும் சாளரத்தைக் கொஞ்சம் திறந்து பார்த்தால் என்ன?
சரோஜம் ஆன்ட்டி அதைத் தெரிந்துகொண்டுவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். அவள் சென்று கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டாள். வார்னீஷ் அடித்த மரப்பலகைகளாலான இரண்டு கதவுகள் இருந்தன. சாளரத்திற்கு ஓசை உண்டாக்காமல் தாழ்ப்பாளை நீக்கி அவள் ஒருபக்க சாளரத்தை மெதுவாகத் திறந்தாள்.
பேச்சிலர்கள் இருந்த வீட்டின் மொட்டை மாடியில் இழுத்துக் கட்டப்பட்டிருநவ்த கொடியில் நான்கைந்து பேன்ட்டுகளும் சில சட்டைகளும் உலர்வதற்காகத் தொங்கவிடப்பட்டிருந்தன. அவற்றுடன் இரண்டு ஜீன்ஸ்களும் இருந்தன. அப்படியென்றால் ஜீன்ஸ்களை சலவை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் உள்ள ஆளும் அந்தக் கூட்டத்தில் இருப்பதை அவள் தெரிந்து கொண்டாள்.
ஏதோ ஒரு அறையிலிருந்து ஒரு இந்திப் பாடல் கேட்டது. யாரும் பாடவில்லை. டேப் ரிக்கார்டரோ, டெலிவிஷனோதான்.
முன்பக்கமிருந்த வெற்றிடத்தில இரண்டு பைக்குகள் நின்றிருந்தன. முற்றத்தில் குறுக்காக ஒரு நெட் இழுத்துக் கட்டப்பட்டிருந்தது. பேட்மிட்டனோ, ஷட்டில காக்கோ விளையாடக்கூடிய பார்ட்டிகளாக அவர்கள் இருக்க வேண்டும்.
தெற்குப் பக்கத்தில் இரண்டு சாளரங்கள் இருந்தன. இரண்டு அறைகள் அங்கு இருக்க வேண்டும். ஒன்று திறந்து கிடந்தது. திடீரென்று வாசலில் யாரோ கதவைத் தட்டும் சத்தத்தை ரேகா கேட்டாள் அவள் அதிர்ந்து போய் விட்டாள்.
‘‘ரேகா... ரேகா...’’
சரோஜத்தின் குரல்தான்.
ஓசை உண்டாகாதபடி அவள் சாளரத்தை அடைத்தாள். பிறகு நடந்து சென்று கதவைத் திறந்தாள்.
‘‘என்ன ஆன்ட்டி?’’ -அவள் கேட்டாள்.
‘‘படுத்திருந்தியா? மாதவன் அண்ணன் எழுந்திரிச்சிட்டாரு. உன்னைப் பார்க்கணும்னு சொன்னாரு. அதுனாலதான் நான் வந்தேன்’’- மன்னிப்புக் கேட்கிற தொனியில் சரோஜம் சொன்னாள்.
‘‘அதுனால என்ன? நான் வர்றேனே! மாதவன் அண்ணனை நானும் தெரிஞ்சிக்கணுமே!’’
சரோஜத்துடன் சேர்ந்து ரேகா படிகளில் இறங்கிச் சென்றாள். எங்கோ பயணம் போவதற்காகத் தயார் நிலையில் நின்றிருந்தார் மாதவன் அண்ணன். உடலுக்கேற்ற உயரமும், எடையும் அவருக்கு இருந்தன. பேன்ட்டும், சட்டையும் அணிந்திருந்தார். கொஞ்சம் தொப்பை காணப்பட்டது. ஒட்ட வெட்டிய தலைமுடி, நுனியில் பிரித்து வைக்கப்பட்ட மீசை, புகை பிடித்துக் கறுப்பான உதடுகள், சரோஜம் ஆன்ட்டியின் சகோதரர்தான் மாதவன் அண்ணன் என்ற விஷயம் பார்க்கும்போது யாருக்கும் தோன்றாது. சரோஜம் ஆன்ட்டின் நிறம் மட்டுமே மாதவன் அண்ணனுக்கும் இருந்தது.
‘‘ரேகா என்பதுதான் பெயர் அப்படித்தானே?’’ - மாதவன் அண்ணன் கேட்டார்.
‘‘ஆமாம்...’’ - அவள் சொன்னாள்.
‘‘உங்க கம்ப்யூட்டர் கல்லூரி எங்கே இருக்கு?’’
‘‘வெள்ளையம்பலத்துல...’’
‘‘இடம் தெரியுமா?’’
‘‘இல்ல... கண்டுபிடிச்சிடலாம்.’’
‘‘இது நகரம்... உங்க ஊர் மாதிரி இல்ல. ரொம்பவும் கவனமா இருக்கணும். ஏதாவது சிரமம் இருந்தால், சொன்னா போதும்...’’
அவள் தலையை ஆட்டினாள்.
‘‘அப்படின்னா, நான் போயிட்டு வர்றேன் சரோஜம்.’’
ஒரு ப்ளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு மாதவன் அண்ணன் வெளியேறினார்.
‘‘சாலைக்குப் போய் காய்கறி வாங்கிக்கிட்டு பாப்பனம்கோட்டுக்குப் போங்க. வெறும் கையோட போனால், வசந்தா அண்ணி முணுமுணுக்க ஆரம்பிச்சிடுவாங்க’’- சரோஜம் சொன்னாள்.
அவளுடைய வார்த்தைகளில் கோபமா அல்லது வெறுப்பா- இவற்றில் எது மறைந்திருக்கிறது என்பதை ரேகாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அப்போது கேட்டைத் திறந்து ஒரு பத்து வயதுப் பையன் வந்தான். அவனுடைய கையில் இரண்டு பால் கவர்கள் இருந்தன.
‘‘ஜானகியின் மகன். பழவங்காடி விநாயகர் கோவிலுக்கும் ஆற்றுக்காலுக்கும் போறப்போ என்னோட வர்றது இவன்தான்’’ - சரோஜம் சொன்னாள்.
கோபாலகிருஷ்ணன் வெட்கத்துடன் சிரித்தான்.
‘‘கோபாலகிருஷ்ணன், என்ன வகுப்பு படிக்கிறே?’’ - ரேகா கேட்டாள்.
‘‘ஐந்து...’’ - அவன் சொன்னான்.
‘‘ரேகா, உனக்குக் கடையில் இருந்து எதாவது வாங்கணும்னா கோபாலகிருஷ்ணனிடம் சொன்னால் போதும். அவன் வாங்கிக் கொண்டுவந்து தருவான்.’’
‘‘சரி... கோபாலகிருஷ்ணனை என்னுடைய உதவியாளராகவும் நான் நியமித்துவிட்டேன்.’’ - அவள் சொன்னாள்.
கடையிலிருந்து ஒரு பொருள் தேவைப்பட்டது. ஆனால், கோபாலகிருஷ்ணன் மூலம் அதை வாங்க முடியாது என்பதும் அவளுக்கு நினைவில் வந்தது.
சரோஜம் இரண்டு பேருக்கும் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள்.
‘‘சாயங்காலம் நான் ஸ்ரீகண்டேஸ்வரம் கோவிலுக்குப் போறேன். ரேகா, நீர் வர்றியா?’’ சரோஜம் கேட்டாள்.
கல்வி கற்பதற்காகத்தானே வந்திருக்கிறாள்! நாளை வகுப்பு தொடங்குகிறது. கடவுளின் ஆசியைத் தேடுவது ஒரு தவறும் இல்லை.
‘‘நானும் வர்றேன் ஆன்ட்டி.’’
‘‘அப்படின்னா சீக்கிரமே நீ குளிச்சுத் தயாராகணும்.’’
குளித்து முடித்து ரேகா பட்டுப்புடவையை எடுத்து அணிந்தாள். கோவிலுக்குப் போகிறாள் அல்லவா? புடவை கட்டுவதுதான் பொருத்தமாக இருக்கும்.
‘‘புடவை உடுத்தினவுடன் ரேகா, நீ ஆளோ மாறிப்போயிட்டியே? சுடிதார் அணிந்துகொண்டு வந்த ரேகா மாதிரியே இல்லை...’’ ஆச்சரியத்துடன் சரோஜம் சொன்னாள்.
அவள் சிரித்தாள். தன் எத்தனையெத்தனை வேடங்களை ஆன்ட்டி இனிமேல் பார்க்கப் போகிறாள் என்று அப்போது அவள் மனதில் நினைத்துக் கொண்டாள்.
வீட்டைப் பூட்டி, கேட்டை அடைத்துவிட்டு அவர்கள் சாலையில் இறங்கினார்கள். பேச்சிலர்கள் இருக்கும் வீட்டின் வழியாகத்தான் அவர்கள் நடந்தார்கள். கேட்டைத் தாண்டி இருந்த சுவரில் வீட்டின் பெயர் பெயர் எழுதப்பட்டிருப்பதை ரேகா பார்த்தாள். கார்த்தியாயனி இல்லம்.
இங்கு இருக்கும் வீடுகள் அனைத்து பெண்களின் பெயர்களில் தான் இருக்குமோ?
‘‘ஆன்ட்டி, கோவில் பக்கத்துலயா இருக்கு?’’ - ரேகா கேட்டாள்.
‘‘பேருந்துல போணும்’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘நாம ஆட்டோ பிடிச்சுப் போனா என்ன?’’
‘‘எதற்குத் தேவையில்லாம பணத்தைச் செலவழிக்கணும்? நாம தொழுதுட்டு வெளியே வர்றது வரை அவங்க காத்திருக்க மாட்டாங்க. திரும்பி வர்றதுக்கு இன்னொரு ஆட்டோவைப் பிடிக்கணும்.’’
அவர்கள் பேருந்தில்தான் கோவிலுக்குச் சென்றார்கள். கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது. சிவனுக்கு சமர்ப்பிக்க சரோஜம் குவளை மாலை வாங்கினாள்.
கர்ப்பக் கிருகத்திற்கு முன்னால் சரோஜம் தன் கண்களை மூடிக் கொண்டு கூப்பிய கைகளுடன் நீண்ட நேரம் நின்றிருந்தாள். அவளுடைய உதடுகள் என்னவோ மெதுவாக முணுமுணுத்துக்ச கொண்டிருந்தன.
அவள் சிவனிடம் அப்படி என்ன வேண்டியிருப்பாள்? வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகவேண்டும் என்று வேண்டியிருப்பாளோ? தனக்கு ஏற்ற ஒரு ஆணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருப்பாளோ?
இன்னொரு திருமணத்திற்கு சரோஜம் ஆன்ட்டி விருப்பப்படவில்லையா? அதற்காக முயற்சி செய்யவில்லையா? அப்படி முயற்சி செய்திருந்தால், என்ன காரணத்தால் திருமணம் நடக்கவில்லை?
அவர்கள் திரும்பவும் சரோஜா நிவாஸை அடைந்தபோது, மாலை நேரம் ஆகியிருந்தது. வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
‘‘மாதவன் அண்ணன் வந்திருப்பார். இன்னொரு சாவி அவர் கையில் இருக்கு’’ - சரோஜம் சொன்னாள்.
கேட்டைத் திறந்து அவர்கள் உள்ளே நுழைந்தார்கள்.
‘‘யார் அது?’’ - மாதவன் அண்ணன் அறைக்குள்ளிருந்து கேள்வி வந்தது.
‘‘நாங்கதான் மாதவன் அண்ணா!’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘கொஞ்சம் ஐஸ்வாட்டர் வேணும்’’ - மாதவன் அண்ணன் சொன்னார்.
சரோஜம் ஆன்ட்டியின் முகம் சற்று வெளிறியதை ரேகா கவனித்தாள். அவள் மாடிக்கு ஏறிச் சென்றாள்.
சிறிது நேரம் சென்ற பிறகு சரோஜம் அவளுடைய அறைக்கு வந்தாள். வாசிப்பதற்கு சில பேப்பர் பேக்குகளைத் தன்னுடன் ரேகா கொண்டு வந்திருந்தாள். அவள் அதை அப்போது பேக்கில் தேடிக் கொண்டிருந்தாள். சிட்னி ஷெல்டனின் ‘மாஸ்டர் ஆஃப் தி கேம்’ கையில் கிடைத்தது.
‘‘படிக்கிற காலத்தில் நான் நிறைய வாசித்துக் கொண்டிருப்பேன். கல்லூரி நூல் நிலையத்தில் இருந்த பெரும்பாலான நாவல்களும் நான் படிச்சு முடித்தவைதான். ஆங்கிலம், மலையாளம்- இரண்டு மொழிகளிலும் நான் படிப்பேன்’’- சரோஜம் சொன்னாள்.
‘‘இப்போ படிக்கிறது இல்லையா?’’
‘‘படிக்கக்கூடிய மனநிலை எப்பவோ என்னை விட்டுப் போயிடுச்சு.’’ - கவலையான நினைவுகளுடன் அவள் சொன்னாள்.
ஒரு வருடம் மட்டுமே நீடித்த திருமண வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் ரேகா. ஆனால், இப்போது வேண்டாம். கேட்கிற அளவிற்கு இன்னும் அவர்களுக்குள் நெருக்கம் உண்டாகவில்லை.
‘‘மாதவன் அண்ணன் ராணுவத்தில் இருந்தார்ல! அங்கு பழகின பழக்கம் இது... சாயங்காலம் ஆயிட்டா கொஞ்சம் ரம் சாப்பிடுவார். வசந்தி அண்ணிக்கு அது பிடிக்காது. அதுனாலதான் பாவம் இங்கே வந்துட்டாரு...’’
சரோஜம் கூறிய விஷயம் அந்த அளவிற்கு நம்பக் கூடியதாக இல்லை என்று நினைத்தாள் ரேகா. மனைவியுடன் இரவு நேரத்தில் சேர்ந்து உறங்குவதைவிட சாயங்கால வேளையில் ரம் அருந்துவது மாதவன் அண்ணனுக்கு முக்கியமான விஷயமாகிவிட்டதா என்ன?
நான் மட்டும் இங்கே தனியாக இருக்கிறேன்- என்னை நினைத்து மட்டும் தான் அங்கே அவர் தங்குவதில் என்று இன்றுதானே சரோஜம் ஆன்ட்டி சொன்னாள்!
இதில் எது உண்மையானது?
எவ்வளவு குடிச்சாலும் மாதவன் அண்ணனால் ஒரு தொந்தரவும் உண்டாகாது. இங்கே இப்படி ஒரு ஆள் இருக்காருன்னு யாருக்குமே தெரியாது. அமைதியா படுத்துத் தூங்கிடுவாரு.’’ -சரோஜம் சொன்னாள்.
ரேகா அதற்குப் பதிலெதுவும் கூறவில்லை.
‘‘படி... சாப்பிடுற நேரம் வர்றப்போ நான் கூப்பிடுறேன்.’’
சரோஜம் கீழே இறங்கிச் சென்றாள்.
அவள் கூறியது சரியாகவே இருந்தது. அதற்குப் பிறகு மாதவன் அண்ணனின் ஓசையே கேட்கவில்லை.
மல்லிகா சித்திக்கு மாதவன் அண்ணனை நன்கு தெரியுமே! பாதுகாப்பு இல்லாத இடம் என்று பட்டிருந்தால் தன்னை இங்கு சித்தி அனுப்பியிருப்பாளா?
மறுநாள் காலையில் ஒன்பது மணி ஆவதற்கு முன்னால் சரோஜம் அஞ்சல் அலுவலகத்திற்குப் போவதற்காக ஆடைகள் அணிந்து தயாராக இருந்தாள். மிகவும் அருகிலேயே அஞ்சல் அலுவலகம் இருந்தது. அதிகபட்சம் இரண்டு நிமிட நேரம் நடந்தால் போதும்.
அப்போது ரேகாவும் தயார் நிலையில் இருந்தாள். வெள்ளையம் பலத்திற்கு அவளை சரோஜம்தான் பேருந்தில் ஏற்றிவிட்டாள்.
ஒன்பதரை மணி ஆனபோது அவள் மைக்ரோடெக் கம்ப்யூட்டர் இன்ஸ்டிட்யூட்டை அடைந்தாள். பெரிய ஒரு இரண்டடுக்குக் கொண்ட கட்டிடத்தில் அது செயல்பட்டுக் கொண்டிருந்தது. நவீன பாணியில் அமைக்கப்பட்டிருந்த அலுவலகமும், வகுப்பறைகளும்... படிப்பதற்காக அழகாக ஆடைகள் அணிந்து வந்திருந்த இளம்பெண்களும் இளைஞர்களும்...
ரேகா ப்ரின்ஸிப்பாலைப் போய்ப் பார்த்தாள். வகுப்பில் சேர அனுமதிக்கப்பட்டாள். அலுவலகத்தில் ஃபீஸைக் கட்டினாள். பதினாறு பேர் கொண்ட பேட்சாக இருந்தது அது. பத்து மணிக்கு வகுப்புத் தொடங்கியது.
ஸ்ரீஜா என்ற இளம்பெண்தான் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். மதிய நேரம் வந்தபோது அவர்கள் இருவரும் தோழிகளாகிவிட்டனர். ஸ்ரீஜா பி.டெக்கில் தேர்ச்சி பெற்றிருந்தாள். அவளுடைய வீடு பூஜப்புரயில் இருந்தது.
அன்று நான்கு மணிவரை வகுப்பு நடந்தது. மறுநாள் முதல் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து மதியம் ஒரு மணி வரை மட்டுமே வகுப்பு.
வகுப்புகள் சுவாரசியமாக இருந்தன.
ரேகா காலையில் எட்டு மணி ஆகும்போது சரோஜா நிவாஸை விட்டுப் புறப்படுவாள். இன்ஸ்டிட்யூட்டிலிருந்து இரண்டு மணிக்குத் திரும்பி வந்து சேருவாள். அந்தச் சமயத்தில் சரோஜம் அஞ்சல் அலுவலகத்தில் இருப்பாள்.
அவளுக்குக் கதவைத் திறந்து விடுவது மாதவன் அண்ணன்தான். அவர் அவளுடன் நட்புணர்வுடன் உரையாடுவார். அவள், தானே உணவை எடுத்துச் சாப்பிடுவாள்.
மாதவன் அண்ணன் படிகளில் ஏறி மாடிக்கு வரமாட்டார். வெளியே செல்லும்போது கீழே இருந்தவாறு குரல் எழுப்பிக் கூறுவார்.
ஜானகியின் மகன் கோபாலகிருஷ்ணன் பள்ளிக்கூடம் விட்டபிறகு தினமும் வருவான். வாங்குவதற்கு எதையாவது மறந்திருந்தால் அவள் அவனிடம் சொல்லி வாங்குவாள்.
தனியாக இருக்கும்போது ரேகா வடக்குப் பக்கம் இருக்கும் சாளரத்தைத் திறப்பாள். அங்கு இருக்கும் ஐந்து பேரையும் அவள் பல நேரங்களிலும் பார்த்துவிட்டாள். நான்கு பேர் இளைஞர்கள். ஒரு ஆள் நாற்பது வயது இருக்கக்கூடிய ஒரு மனிதன். நடந்து கொள்ளும் விதத்திலும், மற்றவர்களுடன் உள்ள அணுகுமுறையிலும் அந்த ஆள்தான் இருப்பவர்களிலேயே நல்ல மனிதனாகத் தெரிந்தான். அவனுக்கு தர்மேந்திரா என்று அவள் பெயர் வைத்தாள்.
மற்ற நான்கு பேருக்கும் இளமைக்கே உரிய வெளிப்பாடுகள் இருந்தன. சாளரத்திற்கு அருகில் அவளைப் பார்த்ததும் நான்கு பேரும் ரொமான்டிக்காக மாறிவிடுவார்கள்.
வெளுத்து, உயரமான, நன்கு ஷேவ் செய்த பாடி பில்டர் அவர்களில் ஒருவன். அவள் அவனுக்கு சல்மான்கான் என்று பெயரிட்டாள். காலையில் அரைமணிநேரம் அவனுடைய உடற்பயிற்சி நடக்கும்.
உயரம் குறைவான, முடியை ஒட்டி வெட்டியிருக்கும் ஆள்தான் மூன்றாவது இளைஞன். அவனும் நன்கு சவரம் செய்திருப்பான். அவனுக்கு சச்சின் டெண்டுல்கர் என்று அவர் பெயர் வைத்திருந்தாள்.
நான்காவது ஆள் கொஞ்சம் பூனைக் கண்களைக் கொண்ட ப்யூட்டி பார்லருக்குச் சென்று தன் தலைமுடியைச செம்பட்டை நிறத்தில் ஆக்கிக் கொண்ட, உதட்டுக்கு மேலே மீசை உள்ள இளைஞன். அவனை அவள் ஜாக்கி ஷெராஃப் என்று அழைத்தாள்.
இந்தித் திரைப்படங்களையும், கிரிக்கெட்டையும் உயிரென நேசிக்கும் அவள் ஐந்தாவது ஆளின் விஷயத்தில் மட்டும் தோற்றுவிட்டாள். நீலநிற ஜீன்ஸும் வெள்ளை நிறமுள்ள குர்தாவும்தான் அவன் எப்போதும் அணியும் ஆடைகள். தாடியை வளர்ந்து அழகாக ‘டிரிம்’ செய்திருப்பான். ஃப்ரேம் இல்லாத கண்ணாடியும் உண்டு. ஒருவேளை அவன் கவிஞனாக இருக்கலாம். இல்லாவிட்டால் அறிவு ஜீவி. கவிஞர் என்று பெயரிடலாமா அல்லது புஜி என்று அழைக்கலாமா என்று அவள் சிறிது நேரம் ஆலோசனை செய்தாள்.
சீட்டு எழுதிக் குலுக்கிப்போட்டு எடுத்த போது கவிஞன் என்ற பெயர் வந்தது.
சரோஜா நிவாஸுக்கும் கார்த்தியாயினி இல்லத்திற்கும் இடையில் சுற்றிலும் சுவர் எழுப்பப்பட்ட ஒரு காலி இடம் இருந்தது. அதனால் அங்கிருந்து உரத்த குரலில் பேசினால்தான் இங்கு கேட்கும்.
மாதவன் அண்ணன்மீது கொண்ட பயம் காரணமாக இருக்கலாம் - பேச்சிலர்கள் யாரும் உரத்த குரலில் அவளிடம் எதுவும் பேசவில்லை. ஆனால், சச்சின் தன் கையை ஆட்டிக் காட்டுவான். சல்மான் ஒரு ஃபிளையிங் கிஸ் அனுப்புவான். ஜாக்கி ஒரு நடனம் ஆடுவான். கவிஞன் ஒரு காதல் பாடகனைப் போல அவளுக்கு நேராக கையை நீட்டிப் பாடுவதைப் போல நடிப்பான். தர்மேந்திரா அவளைப் பார்த்ததும் பார்க்காதது மாதிரி காட்டிக் கொள்வான்.
சுவர் கட்டப்பட்டிருந்த காலி இடத்தில் ஒரு வீட்டிற்கான அடித்தளம் போடப்பட்டு, அது புதர்கள் மண்டிக் காட்சியளித்தது. எப்போதாவது அந்த வீடு உயரமாக எழும்பட்சம், கார்த்தியாயினி இல்லத்தில் நின்று கொண்டு பார்த்தால் சரோஜா நிவாஸ் தெரியவே தெரியாது.
சல்மானுக்கும் ஜாக்கிக்கும் பைக்குகள் இருக்கின்றன. பல நேரங்களில் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்துதான் சச்சினும் கவிஞரும் போவார்கள். காலையில் ரேகா பேருந்திற்காகக் காத்து நிற்கும்போது அவர்களை அவள் பார்ப்பாள். அருகில் வந்து பேசுவதற்கான தைரியம் இல்லாமல் அவர்கள் காதல் வயப்பட்டு அவளைப் பார்த்து சிரித்துவிட்டுப் போவார்கள்.
ஐந்து பேரும் காலையில் வெவ்வேறு நேரங்களில் போவார்கள். சாயங்காலம் வெவ்வேறு நேரங்களில் திரும்பி வருவார்கள்.
வடக்குப் பக்கம் இருக்கும் சாளரத்தைத் திறந்தால், யாராவது அவளைப் பார்ப்பதற்காக வந்து நிற்பார்கள். அவள் யாரையும் பொருட்படுத்துவதே இல்லை. செல்ஃபோனில் பேசிக் கொண்டோ பேசுவதைப் போல நடித்துக்கொண்டே அறையில் இங்குமங்குமாக அவள் நடப்பாள். இல்லாவிட்டால் மாடியில் இருக்கும் வராந்தாவிலுள்ள கொடியில் நேரத்தை எடுத்துக் கொண்டு ஆடைகளை உலரப் போடுவாள். கார்த்தியாயனி இல்லத்தின் பக்கம் திரும்பிக்கூட பார்க்க மாட்டாள்.
ஒரு நாள் பச்சை, நேவி ப்ளூ நிறத்தில் இருந்த சுடிதாரையும் துப்பட்டாவையும் அவள் இன்ஸ்டிட்யூட்டிற்குப் போவதற்காக அணிந்திருந்தாள். அன்று சாயங்காலம் அவளுடைய செல்ஃபோனில் ஒரு மெசேஜ் வந்தது.
‘ரிலையன்ஸின் மாடல் கேர்ளா? எனினும், பச்சையும் நீலமும் அருமையான காம்பினேஷன். இந்த அழகை நான் ஆராதிக்கிறேன்.’
மெசேஜ் அனுப்பியது யார் என்று அவள் உடனடியாகப் பார்த்தாள். - பாய் நெக்ஸ்ட் டோர்.
பக்கத்து வீட்டு இளைஞன். ஐந்து பேரில் யாராக இருக்கும் இந்த இளைஞன்? யாருக்கும் கொடுத்திராத அவளுடைய செல்ஃபோன் எண் எப்படி அந்த இளைஞனின் கையில் கிடைத்தது?
ரேகா அந்த மெசேஜை மீண்டும் வாசித்தாள். அதை அனுப்பிய ஆளின் செல்ஃபோன் எண் இறுதியில் இருந்தது.
பக்கத்து வீட்டிலிருக்கும் எந்த இளைஞனின் எண்ணாக இருக்கும் அது? புன்சிரிப்புடன் அவள் படுக்கையில் சாய்ந்தாள்.
வேடிக்கை விளையாட்டு ஆரம்பமாகிவிட்டது என்பதை ரேகா புரிந்து கொண்டாள். பேச்சிலர்களில் ஒருவன் பந்தை இந்தப் பக்க மைதானத்தை நோக்கி அடித்து விட்டிருக்கிறான்.
இனி பந்தை அந்தப் பக்க மைதானத்தை நோக்கி திருப்பி அடிக்கலாம். இல்லாவிட்டால் கண்டு கொள்ளாதது மாதிரி வெறுமனே இருக்கவும் செய்யலாம்.
தற்போதைக்கு எதுவும் செய்யவேண்டாம். வெறுமனே எதுவும் செய்யாமல் இருப்போம். விளையாட்டு மெதுவாக நடந்து கொண்டு இருக்கட்டும்.
ரேகா எழுந்து வடக்குப் பக்கம் இருந்த சாளரத்தைத் திறந்து பார்த்தாள். கார்த்தியாயனி இல்லத்திற்கு யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. வீடு அமைதியாக இருந்தது.
அவள் படிகளில் இறங்கிக் கீழே சென்றாள். சரோஜம் டி.வி.யில் பரத நாட்டியம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்ததும் சரோஜம் சிரித்தாள்.
‘‘சரோஜம் ஆன்ட்டி. உங்களுக்கு பரதநாட்டியம் ரொம்பவும் பிடிக்குமா?’’ - அருகில் சென்று சோஃபாவில் உட்கார்ந்தவாறு ரேகா கேட்டாள்.
‘‘தூர்தர்ஷன் மட்டும்தானே இருக்கு! அதுல இருக்குறதைத்தானே பார்க்க முடியும்’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘ஏன் கேபிள் இணைப்பு கொடுக்கல?’’
‘‘மாதம் நூற்றைம்பது ரூபாய் கொடுக்கணும். அதை மாதவன் அண்ணன் செய்யவே மாட்டாரு. அவர் டி.வி. பார்க்குறதும் இல்ல...’’
‘‘மாதவன் அண்ணனுக்கு விருப்பமில்லைன்னா பார்க்காமல் இருக்கட்டும். கேபிள் இணைப்பு கொடுக்கணும். இருபத்து நான்கு மணி நேரமும் எவ்வளவு நிகழ்ச்சிகள் இருக்கு, ஆன்ட்டி! பாடல்களும் நடனங்களும், திரைப்படங்களும்! நூற்றைம்பது ரூபாய்தானே! ஆன்ட்டி அதை நீங்க கொடுங்க.’’
சரோஜம் அதைக் கேட்டுச் சிரித்தாள். அது ஒரு வெளிறிப்போன சிரிப்பாக இருந்தது.
‘‘சம்பளம் கிடைத்தால், அதை அப்படியே நான் மாதவன் அண்ணன் கையில கொடுத்திடுவேன். பிறகு எப்படி என் கையில் பணம் இருக்கும்? கோவிலுக்குப் போகணும்னா அவ்வப்போ இருபதோ, முப்பதோ தருவாரு. எனக்கு வேற என்ன செலவு இருக்கு?’’
அவள் ஆச்சரியத்துடன் சரோஜத்தைப் பார்த்தாள். மத்திய அரசாங்க வேலையில் இருக்கிறாள். தன்னுடைய சம்பளம் முழுவதையும் அண்ணனிடம் கொடுத்துவிட்டு, தன் சொந்தத் செலவிற்குக் கையை நீட்ட வேண்டிய நிலையில் அவள் இருக்கிறாள்.
‘‘ஆன்ட்டி, இனிமேல் உங்களுக்கு தேவைப்படும் பணத்தை எடுத்து வைத்துக் கொண்டு மீதிப் பணத்தை கொடுங்க.’’ - ரேகா சொன்னாள்.
‘‘மாதவன் அண்ணனுக்கு அது கொஞ்சமும் பிடிக்காது. ஏன் தேவையில்லாம...’’ - செலயற்ற தன்மையுடன் சரோஜம் சொன்னாள்.
விஷயத்தை மாற்றுவததுதான் நல்லது என்று ரேகா நினைத்தாள்.
‘‘ஆன்ட்டி, அந்தக் கார்த்தியாயனி இல்லத்தில் இருப்பவர்கள் கல்லூரி மாணவர்களா இல்லாவிட்டால் வேலை பார்ப்பவர்களா?’’ - அவள் கேட்டாள்.
‘‘ஏன்? ரேகா, அவங்கள்ல யாராவது உனக்கு பிரச்சினை உண்டாக்கினாங்களா?’’ - பதைபதைப்புடன் சரோஜம் கேட்டாள்.
‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல... அந்தப் பக்கம் இருக்குற சாளரத்தை நான் திறக்கிறதே இல்ல. காலையில பேருந்துல ஏறுவதற்காக நிற்கிறப்போ, அந்த வீட்டுல இருந்து பைக்கில் சிலர் ஏறிப்போவதை நான் பார்த்திருக்கேன். அதனால கேட்டேன்’’- அவள் சொன்னாள்.
‘‘எனக்குத் தெரியாது ரேகா. நான் அந்தப் பக்கம் பார்க்குறதே இல்ல. ஒரு ஆள் கொஞ்சம் வயதான ஆள். மீதி நான்கு பேரும் இளைஞர்கள்.’’
அந்த வீட்டைப் பார்ப்பதே இல்லை என்றாலும், அங்கு மொத்தம் ஐந்துபேர் இருக்கிறார்கள் என்பதையும் ஒருவன் சற்று வயதான ஆள் என்பதையும் மீதி நான்கு பேர் இளைஞர்கள் என்பதையும் சரோஜம் ஆன்ட்டி தெரிந்து வைத்திருக்கிறாள்.
‘‘தேவையில்லாமல் நாம் ஏன் அவர்களைப் பார்த்து பயப்படணும்? அவர்கள் இதுவரை நமக்கு எந்தப் பிரச்சினைகளையும் உண்டாக்கவில்லையே? - ரேகா கேட்டாள்.
‘‘அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. மாதவன் அண்ணனுக்கு அவர்களைப் பிடிக்கவே பிடிக்காது. சாலையில் போறப்போ இந்தப் பக்கம் பார்க்குறதா சொல்லி அவங்கள்ல ஒருத்தனிடம் மாதவன் அண்ணன் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி சண்டை போட ஆரம்பிச்சிட்டாரு...’’
அங்கும் இங்கும் போகும்போது சரோஜம் ஆன்ட்டியை கேட்டின் வழியாகப் பார்த்த அந்த தைரியசாலி யாராக இருக்கும்?
கேபிள் இணைப்பு கொடுப்பதற்கு மாதவன் அண்ணனை சம்மதிக்கச் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்துடன் ரேகா அங்கிருந்த எழுந்து மாடிக்கே சென்றாள்.
மறுநாள் காலையில் வகுப்பிற்குப் போவதற்கு அவள் இளம் ரோஸ் நிறத்திலிருந்த சுடிதாரும், டாப்பும், துப்பட்டாவும் அணிந்திருந்தாள். பக்கத்து வீட்டு இளைஞனிடமிருந்து ஏதாவது கமெண்ட் வரும் என்று அவள் எதிர்பார்த்தாள்.
அவள் பேருந்து வருவதை எதிர்பார்த்து, பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருக்கும்போது, பேச்சிலர்கள் நான்கு பேரும் இரண்டு பைக்குகளில் அவளைக் கடந்து சென்றார்கள். நான்கு பேரும் அவளைப் பார்த்துக் கொண்டுதான் போனார்கள். அவள் அவர்களைப் பார்க்காதது மாதிரி நின்று கொண்டிருந்தாள்.
இறுதியில் கார்த்தியாயனி இல்லத்திலிருந்து வெளியே வந்தது தர்மேந்திராதான். தூய வெள்ளை நிறத்தில் பேண்ட், சட்டை, அகலம் குறைவாக இருந்த பெல்ட், கறுப்பு நிற ஷூக்கள் - இவைதான் அவன் அணிந்திருந்தவை. கையில் ப்ரீஃப்கேஸ் இருந்தது.
அவன் வக்கீலாக இருப்பானோ என்று அவள் சந்தேகப்பட்டாள். ப்ரீஃப்கேஸில் கருப்பு நிற கவுன் இருக்க வேண்டும்.
ஒரு ஆட்டோ ரிக்ஷாவைக் கைகாட்டி நிறுத்தி அதில் ஏறி அவன் சென்றான்.
ரேகா கம்ப்யூட்டர் வகுப்பில் இருக்கும்போது ஹேண்ட் பேக்கிலிருந்து மெல்லிய ஒரு பீப் சத்தம் ஒலிப்பதை அவள் கேட்டாள். செல்லில் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
யாருடைய மெசேஜ் என்பதைத் தெரிந்துகொள்ள அவளுடைய மனம் மிகவும் அவசரப்பட்டாலும், அவள் அதை அடக்கிக் கொண்டாள். வகுப்பு முடியட்டும். அதுவரை மன்னிக்க வேண்டும்.
மதிய உணவு இடைவேளை நேரத்தில் அவர் செல்ஃபோனை எடுத்து மெசேஜைப் பார்த்தாள்.
‘எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ். யு ஆர் ஸ்வீட் இன் ரோஸ்.’
பாய் நெக்ஸ்ட் டோர்.’
மெசேஜை வாசித்த அவள் புன்னகைத்தாள். இந்த வகையில் பையன்களின் இலக்கியத்தைத் தினமும் படிக்க வேண்டியதிருக்கும்.
வகுப்பு முடிந்து ரேகா சரோஜா நிவாஸை அடைந்தபோது மாதவன் அண்ணன் முன்பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். மிகவும் கவனத்துடன் அவர் செருப்பை பாலீஷ் செய்து கொண்டிருந்தார்.
உணவு சாப்பிடுவதற்கு முன்னால் மாதவன் அண்ணனுடன் சில வசனங்களைப் பேசலாம் என்று அவள் நினைத்தாள். அதற்கு ஆரம்பம் என்பது மாதிரி அவள் அவரைப் பார்த்து இதயத்தின் அடியிலிருந்து சிரித்தாள்.
‘‘என்ன ரேகா, வகுப்பில் பிரச்சினை எதுவும் இல்லையே?’’ - நல்ல மனதுடன் அவர் கேட்டார்.
‘‘இல்ல மாதவன் அண்ணா!’’
‘‘ஏதாவது சிரமங்கள் இருந்தால் சொல்லிடணும்.’’
வகுப்பில் பிரச்சினைகள் இருந்தால், இந்த முன்னாள் இராணுவ வீரர் வந்து என்ன செய்ய முடியும்? ஆனால், இதுதான் வேறொரு விஷயத்தைக் கூறுவதற்கான சரியான நேரம்.
‘‘ஆனால், வகுப்பு முடிந்து வந்த பிறகு பொழுதுபோவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்கு, மாதவன் அண்ணா! பயங்கரமாக போரடிக்குது...’’ - அவள் சொன்னாள்.
‘‘அதற்கு இப்போ என்ன செய்ய முடியும் ரேகா? இருக்குற நேரத்தை வீண் செய்யாமல் இங்கே இருந்துக்கிட்டே எதையாவது படிக்க வேண்டியதுதானே?’’
‘‘படிக்கணும்னா கம்ப்யூட்டர் வேணும். மாதவன் அண்ணா, இங்கே ஏன் கேபிள் இணைப்பு எடுக்கல?’’ - அவள் கேட்டாள்.
‘‘இங்கே ஏன் எடுக்கலைன்னா... நானும் சரோஜமும் டி.வி. பார்க்குறது இல்ல. பிறகு எதற்குத் தேவையில்லாமல் பணத்தை விரயம் செய்யணும்?’’
‘‘இரண்டு மூன்று மாதங்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான். பணத்தை நான் தந்திடுறேன். கேபிள்காரர்களிடம் கொஞ்சம் வரச் சொல்ல முடியுமா?’’
‘‘அதற்கென்ன... இப்பவே சொல்லிடுறேன்.’’
மாதவன் அண்ணன் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு அப்போதே வெளியேறிப் போனார். ரேகா அதை எதிர்பார்க்கவே இல்லை.
அரைமணிநேரம் சென்றதும் கேபிளுடன் இரண்டு பையன்கள் வந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் மாதவன் அண்ணன் வந்தார்.
பையன்கள் சாலையிலிருந்து கேபிளை இழுத்து இணைப்பு தருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். மாதவன் அண்ணன் ரேகாவைச் சற்று தள்ளிக் கொண்டு போய் நிறுத்தி ரகசியமான குரலில் பேசினார்.
‘‘அவர்கள் இருநூறு ரூபாய் கேட்கிறார்கள். நான் நூற்றைம்பது ரூபாய்ல பேசி முடிச்சிடுறேன். பணத்தை என்கிட்ட கொடுத்திடு...’’
‘‘தர்றேன் மாதவன் அண்ணா! டி.வி.யை மாடியில வச்சிக்கிடட்டா? நான் அங்கேயிருந்தே பார்த்துக்குவேன்’’ - அவள் சொன்னாள்.
‘‘அதுனால என்ன? வச்சுக்கோ. நான் பையன்கிட்ட சொல்லிடுறேன்.’’
ரேகா அறைக்குள் சென்று நூற்றைம்பது ரூபாய் எடுத்து மாதவன் அண்ணனிடம் கொடுத்தாள்.
பையன்கள் டி.வி. செட்டை எடுத்து மாடிக்குக் கொண்டு வந்து வைத்தார்கள். கேபிள் இணைப்பு கொடுத்து சேனல்களை சரி பண்ணினார்கள்.
‘‘பாருங்க அக்கா’’ - ரிமோட்டை இயக்கியவாறு பையன் சொன்னான்.
ரேகா சேனல்களை ஒவ்வொன்றாகக் க்ளிக் செய்து பார்த்தாள். மொத்தம் எண்பது சேனல்கள் இருந்தன. அவளுக்குத் திருப்தி உண்டானது.
‘‘மாத வாடகை எவ்வளவு?’’ - வெறுமனே கேட்டாள்.
‘‘போன மாதம் வரை நூற்றைம்பதாக இருந்தது அக்கா. ரொம்பவும் போட்டி. அதனால் இந்த மாதம் முதல் நாங்கள் நூறு ரூபாயாகக் குறைச்சிட்டோம். அந்த அண்ணன்கிட்ட நாங்க சொல்லியிருந்தோமே!’’
மாதவன் அண்ணன் சரியான ஆள்தான். அவள் தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
‘‘அந்த அண்ணன்கிட்ட இருந்து பணம் வாங்கிக்கங்க... சரியா?’’- அவள் சொன்னாள்.
பையன்கள் கீழே இறங்கிச் சென்றார்கள்.
ரேகா பார்த்தபோது சோனியில் ஒரு பழைய இந்திப்படம் ஓடிக் கொண்டிருந்தது. ஹேமமாலினி இரட்டை வேடங்களில் நடித்த ‘சீதா அவுர் கீதா’. தர்மேந்திராவும் சஞ்சீவ் குமாரும் கதாநாயகர்கள்.
அவளுக்கு அப்போது செல்ஃபோனில் வந்த மெசேஜ் ஞாபகத்தில் வந்தது. நிச்சயமாக அதை தர்மேந்திரா அனுப்பியிருக்க வாய்ப்பே இல்லை.
எது எப்படி இருந்தாலும் ஒரு பதில்கொடுப்போம். அவள் சென்று செல்ஃபோனை எடுத்து மெசேஜை மீண்டும் ஒருமுறை படித்தாள்.
‘எ ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ். யு ஆர் ஸ்வீட் இன் ரோஸ்’. என்ன பதில் கொடுப்பது? வேண்டாம்... அதிகமாக எதுவும் வேண்டாம்.
‘தேங்க்ஸ் ஃபார் தி காம்ப்ளிமெண்ட் - கேர்ள் நெக்ஸ்ட் டோர்.’’
இவ்வளவு போதும் மீதி ஆள் யார் என்பதை தெரிந்த பிறகு.
அப்போதே அவள் பக்கத்து வீட்டு இளைஞனின் நம்பருக்கு மெசேஜ் அனுப்பினாள். உடனடியாக ரிப்போர்ட் கிடைத்தது. மெசேஜ் டெலிவர்ட். பையன்கள் இப்போது அதைப் படித்து அதிர்ச்சியில் மூழ்கியிருப்பார்கள். அப்படியே இருக்கட்டும்.
மணி ஐந்து. இனி குளிக்கலாம். சரோஜம் ஆன்ட்டி ஐந்தேகால் ஆகும்போது வருவாள். முடிந்தால் சற்று வெளியே போய்வரலாம். ஏதாவதொரு கோவிலுக்கு.
செல்ஃபோனை சார்ஜ் செய்ய வைத்துவிட்டு அவள் கூந்தலில் எண்ணெய் தேய்க்க ஆரம்பித்தாள். அவளுடைய தாய் அவளுக்கென்றே எடுத்தனுப்பியிருந்த எண்ணெய் அது. தேங்காய் எண்ணெயில் தயாரித்த நீலிப்ருங்காதி.
குளிர்ச்சியாகத் தலையில் எண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் அவள் நின்றிருப்பாள். பிறகு ஷாம்பு தேய்த்து சுத்தமாகக் கழுவுவாள். காய்ச்சிய எண்ணெயின் வாசனையுடன் நடப்பதில் அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை.
எண்ணெய் தேய்த்து ஒரு கிராமத்துப் பெண்ணாக ரேகா நின்று கொண்டிருக்கும்போது செல்ஃபோன் மணி ஒலித்தது. அவள் சென்று அதை எடுத்துப் பார்த்தாள். அந்த அளவிற்கு அவளுக்கு அறிமுகமில்லாத நம்பர் திரையில் தெரிந்தது.
பக்கத்து வீட்டு இளைஞனின் நம்பர்தான் அதுஎன்பது அடுத்த நிமிடமே அவள் புரிந்து கொண்டாள்.
பேசலாம். என்ன விஷயம் என்பதைத் தெரிந்து கொள்ளலாமே!
‘‘ஹலோ...’’ - என்றாள் அவள்.
‘‘ரேகாதானே?’’ - ஒரு ஆண் குரல் கேட்டது.
‘‘ஆமாம்...’’
‘‘இது நான்தான்.’’
‘‘நான்தான்னா?’’ - அவள் கேட்டாள்.
‘‘பாய் நெக்ஸ்ட் டோர்.’’
‘‘அது தெரியுது. சல்மானா?’’
‘‘இல்ல...’’
‘‘சச்சினா?’’
‘‘இல்ல...’’
‘‘அப்படின்னா ஜாக்கியா இருக்கும்’’ - அவள் சொன்னாள்.
‘‘இல்ல...’’
‘‘பிறகு யாரு? கவிஞரா?’’
‘‘எந்தக் கவிஞர்?’’
‘‘அப்படின்னா தர்மேந்திராவா இருக்கும். ஆனால், குரலைக் கேக்குறப்போ, கொஞ்சம் வயசு குறைவா தெரியுதே!’’ - அவள் சொன்னாள்.
இப்ப சொல்லப்பட்டவங்கள்லாம் யாரு?’’
‘‘புரியல... அப்படித்தானே? சரி... நீங்க யாரு நண்பரே?’’ - அவள் கேட்டாள்.
‘‘என் பேரு அர்ஜுன்.’’
‘‘ஓ... பஞ்ச பாண்டவர்களில் மூணாவது ஆள்.’’ - அவள் சொன்னாள்.
‘‘பேசுறதைக் கேக்குறப்போ தமாஷா பேசக் கூடிய நபர்னு தெரியுது. முதல் தடவை பார்த்தப்பவே ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. அறிமுகமாகணும்னு விருப்பப்பட்டேன்’’ - அர்ஜுன் சொன்னான்.
‘‘பக்கத்து வீடுதானே? வந்து அறிமுகமாகிக் கொள்ள வேண்டியதுதானே? வேணும்னா இப்பவே கூட வாங்க.’’
‘‘அய்யோ வேண்டாம்... பூதம் அண்ணனை நினைச்சா பயமா இருக்கு.’’
‘‘பூதம் அண்ணனா? அது யாரு? - அவள் கேட்டாள்.
‘‘சொத்துக்களைக் காவல் காக்குற ஒரு பூதம் அங்கு இருக்குதே! முன்பு ஒரு சொத்துதான் இருந்தது. இப்போ இரண்டு சொத்துக்கள் இருக்கே! முன்னாடி ஒரு சமயம் எங்க ராகுலை அடிக்கிறதுக்காக பிடிச்சு நிறுத்திட்டாரு அந்த ஆளு...’’
அதைக் கேட்டு ரேகா விழுந்து விழுந்து சிரித்தாள். பூதம் அண்ணன் மாதவன் அண்ணனுக்குப் பொருத்தமான பெயர்தான்.
‘‘அது இருக்கட்டும். என் நம்பரை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’ - அவள் கேட்டாள்.
‘‘அறிவைப் பயன்படுத்தி.’’
‘‘இருக்கலாம். ஆனால் அது எப்படின்னுதான் நான் கேட்டேன்.’’
‘‘சொல்றதுக்கு அனுமதி இல்ல... காரணம் - அதன் பெருமை வேறொரு ஆளைச் சேர்ந்தது’’ -அர்ஜுன் சொன்னான்.
‘‘யுதிஷ்டிரனா? இல்லாட்டி பீமசேனனா?’’
‘‘புரியல...’’
‘‘புரிய வேண்டாம். தற்போதைக்கு இவ்வளவுபோதும். வெறுமனே போனுக்காக காசை வீண் பண்ண வேண்டாம். பை’’ - அவள் சொன்னாள்.
‘‘பை...’’
அவள் ஃபோனைத் துண்டித்தபோது சரோஜம் படிகளில் ஏறி வந்தாள். அஞ்சல் அலுவலகத்திலிருந்து வந்த ஆடைகளுடன் அவள் இருந்தாள்.
‘‘யார்கூட பேசிக்கிடடு இருந்தே?’’ - ஆர்வத்துடன் சரோஜம் கேட்டாள்.
‘‘ஒரு ஃப்ரண்ட்’’ - ரேகா சொன்னாள்.
‘‘பாய் ஃப்ரண்டா?’’ - விளையாட்டாக அவள் கேட்டாள்.
‘‘ம்...’’ - திருட்டுச் சிரிப்புடன் அவள் மெதுவான குரலில் சொன்னாள்.
‘‘தொடங்கி எவ்வளவு நாட்களாச்சு?’’
‘‘இங்கே வந்த பிறகுதான்...’’ - ஆச்சரியத்துடன் சரோஜம் அவளைப் பார்த்தாள்.
அந்த உரையாடல் தொடராமல் இருப்பதற்காக ரேகா அப்போது கேபிள் இணைப்பு கிடைத்த விஷயத்தைச் சொன்னாள்.
‘‘மாதவன் அண்ணன் சம்மதிச்சிட்டாரா?’’
‘‘பிறகு என்ன? இதோ ஆன்ட்டி... பாருங்க.’’
ரிமோட்டை எடுத்து அவள் டி.வி.யை ஆன் செய்தாள். அப்போது எச்.பி.ஓ. சேனலில் ஒரு அமெரிக்கன் வைல்ட் வெஸ்ட் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. குறைந்த ஆடைகள் அணிந்த கதாநாயகியை கதாநாயகன் கட்டிப்பிடித்து நீண்ட நேரமாக அழுத்தி முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
‘‘அய்யோ... என்ன ரேகா இது? சீக்கிரமா இதை மாற்று...’’ வெட்கத்தில் சிவந்த முகத்துடன் சரோஜம் சொன்னாள்.
‘‘பாருங்க ஆன்ட்டி... தப்பு இல்லை...’’
‘‘வேண்டாம் மாதவன் அண்ணன் விஷயம் தெரிஞ்சு வந்துட்டா...’’ - சரோஜம் வேகமாகப் படிகளில் இறங்கிக் கீழே சென்றாள்.
ரேகா விழுந்து விழுந்து சிரித்தாள்.
நேரம் இரவு எட்டு மணி முடிந்து பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்தது. கேட்டைக் கடந்து கார்த்தியாயனி இல்லத்தின் வாசலில் ஒரு பைக் வந்து நின்றது.
பைக்கை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு அர்ஜுன் ஆனந்த் படுவேகமாக உள்ளே ஓடினான். தன்னுடைய அறைக்கு போவதற்குப் பதிலாக அவன் அவசர அவசரமாக ஹரிதாஸின் அறைக் கதவைத் தட்டினான்.
‘‘அண்ணா... கதவைத் திறங்க அண்ணா...’’
வாசித்துக் கொண்டிருந்த ரீடர்ஸ் டைஜஸ்ட்டை மூடி வைத்து விட்டு, ஹரிதாஸ் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.
‘‘அண்ணா, நான் இன்னைக்கு அவகூட செல்ஃபோனில் பேசினேன். நாம நினைச்சது மாதிரி இல்ல அண்ணா அவள் ரொம்பவும் ஸ்மார்ட்.’’ - உள்ளே வந்து படுக்கையில் அமர்ந்துகொண்டு அர்ஜுன் சொன்னான்.
‘‘அப்படி நான் எதுவும் நினைக்கலையே!’’
‘‘அண்ணா, உங்களுக்கு ஹரிதாஸ் என்ற பெயர் இல்லாம வேற ஒரு பெயரும் இருக்கு. யுதிஷ்டிரன். அவள் சொன்னதுதான்...’’
‘‘அவள் வேற என்னவெல்லாம் சொன்னாள்?’’
ரேகாவுடன் நடந்த உரையாடலைச் சிறிதுகூட விடாமல் அவன் சொன்னான்.
‘‘அப்படின்னா ஜாக்கின்றது நீதான்’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘நானா?’’
‘‘ஆமா... உன் முடியையும், செம்பட்டை மீசையையும் பூனைக் கண்களையும் பார்த்தால் ஜாக்கி ஷெராஃபின் தம்பியாக இருக்கும்னு எனக்குக்கூட தோணியிருக்கு.’’
‘‘அப்படின்னா தர்மேந்திரான்னு சொன்னது அண்ணா, உங்களை மனசுல வச்சுத்தான் இருக்கும். நான்தான் சொன்னேனே. அவள் மிகச்சிறந்த புத்திசாலி. அவளை டீல் பண்ணனும்னா அதுக்கு எனக்கு உங்க உதவி வேணும்.’’
ஹரிதாஸ் உதவி செய்துதான் அர்ஜுனுக்கு ரேகாவின் செல்ஃபோன் நம்பரே கிடைத்தது. கையும் களவுமாக சிலர் சிக்க வேண்டியதிருக்கும் என்ற காரணத்தால்தான் நம்பர் எப்படிக் கிடைத்தது என்று ரேகா கேட்டபோது, அவன் கூறவில்லை.
செக்ரட்டேரியட்டில் செக்ஷன் அதிகாரியாக ஹரிதாஸ் பணியாற்றுகிறான். மூன்று விஷயங்களில் அவன் எம்.ஏ. பட்டம் வாங்கியிருக்கிறான். அது தவிர, சட்டத்திலும் பட்டம் பெற்றிருக்கிறான். நல்ல அறிவாளி. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதற்குத்தீர்வு கண்டுபிடிப்பதில் திறமைசாலி அவன். கார்த்தியாயனி இல்லத்தில் அவன்தான் வயதில் மூத்தவன். அதனால் எல்லோருக்கும் அவன் அண்ணனாக இருந்தான்.
எம்.எஸ்ஸி. முதல் வகுப்பு வாங்கி தேர்ச்சி பெற்ற பிறகு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி பெறும் நபராக சேர்ந்திருந்தான் அர்ஜுன். சரோஜா நிவாஸின் மாடியில் ரேகாவைப் பார்த்த நாளிலிருந்து அவனிடம் ஒரு சலனம் உண்டானதென்னவோ உண்மை.
அர்ஜுன் மட்டுமல்ல - பல்கலைக்கழத்தில் உதவியாளராகப் பணியாற்றும் அனூப்பும், கலைக்கல்லூரியில் இறுதி வருட மாணவனான ஜெயந்தும், ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்கும் ராகுலும்கூட அவளை நோட்டமிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள்.
ராகுல்தான் ஹரிதாஸுக்கு முன்னால் விஷயத்தை வெளியிட்டான்.
‘‘அவளிடம் செல்ஃபோன் இருக்கு, அண்ணா அதன் நம்பர் கிடைக்க என்ன வழி?’’ - அவன் கேட்டான். ஒரு நிமிட நேரம் ஹரிதாஸ் சிந்தனையில் மூழ்கினான்.
‘‘அதற்கு கொஞ்சம் செலவாகும்’’ - இறுதியில் அவன் சொன்னான்.
‘‘என்ன செலவு?’’
‘‘ஒரு புட்டி குளிர்ந்த பீர்... ஒரு சாக்லேட் பார்...’’
‘‘அது என்ன காம்பினேஷன் அண்ணா? பீருடன் யாராவது சாக்லேட்டைச் சாப்பிடுவார்களா?’’ - அவன் கேட்டான்.
‘‘நீ அப்பத்தைத் தின்னால்போதும். குழி எத்தனை இருக்குன்னு எண்ண வேண்டாம். உன் செல்ஃபோன்ல அவளோட நம்பரை வரவழைச்சுத் தருவேன். அது போதாதா?’’ - ஹரிதாஸ் கேட்டான்.
‘‘போதும்...’’
ஹரிதாஸ் மது அருந்துவதில்லை. எப்போதாவது ஒரு பீர் மட்டும் அருந்துவான்.
மறுநாள் ஒரு புட்டி குளிர்ந்த பீரையும், ஒரு பெரிய சாக்லேட் பாரையும் வாங்கி ஹரிதாஸிடம் கொடுத்தான் அர்ஜுன்.
அர்ஜுன் கனவில்கூட நினைத்திராத தந்திரத்தைப் பயன்படுத்தி ஹரிதாஸ் அவனுடைய செல்ஃபோனில் ரேகாவின் செல்ஃபோன் நம்பர் வரும்படி செய்தான்.
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் ரேகாவின் செல்ஃபோன் நம்பர் கிடைத்தது. பேச்சிலர்கள் அன்று காலை ஒன்பது மணிவரை படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பிறகு பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தார்கள். அது முடிந்ததும், துணிகளைச் சலவை செய்வதில் இறங்கினார்கள். பன்னிரண்டரை ஆனபோது, இரண்டு பைக்குகளில் நான்கு பேர் உட்கார்ந்து ஏதாவதொரு ஹோட்டலுக்கு உணவு சாப்பிடச் செல்வார்கள்.
புதிய திரைப்படம் திரையிடப்பட்டிருந்ததால் சாப்பிட்டு முடிந்ததும், பகல்காட்சி பார்ப்பதற்காகச் செல்வார்கள். சில நேரங்களில் திரும்பி வந்து மீண்டும் தூங்கிவிட்டு சாயங்காலம் வாசலில் ஷட்டில்காக் விளையாடுவார்கள். இல்லாவிட்டால் முதல் காட்சி திரைப்படம் பார்க்கவோ, வேறு ஏதாவது நிகழ்ச்சி தாகூர் தியேட்டரிலோ, நிசாகந்தி ஆடிட்டோரியத்திலோ வி.ஜெ.டி. ஹாலிலோ இருந்தால் போய்விடுவார்கள்.
படிப்பதும், பழைய இந்தித் திரைப்படப் பாடல்களைக் கேட்பதும்தான் ஹரிதாஸின் முக்கிய பொழுதுபோக்கு விஷயங்களாக இருந்தன. அதனால் உணவு சாப்பிட மட்டுமே - அவன் விடுமுறை நாட்களில் வெளியே செல்வான். இலக்கிய கூட்டங்களையும் சாஸ்த்ரீய சங்கீதத்தையும் நடனத்தையும் அவன் விடுவதே இல்லை.
ஞாயிற்றுக்கிழமை மதியம் மற்றவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிடச் செல்வதற்காக அர்ஜுன் தயாரானபோது, ஹரிதாஸ் அவனை அழைத்து மெதுவான குரலில் சொன்னான்.
‘‘நாம இன்னைக்கு பாலனின் கடைக்குப்போய் சாப்பிடுவோம்டா...’’
‘‘ஏன் அண்ணா?’’
‘‘விஷயம் இருக்கு. அவங்க போய்க்கிடட்டும்.’’
கார்த்தியாயனி இல்லத்திற்கு அருகில் உள்ள சந்திப்பில் இருக்கு ஒரு சிறிய ஹோட்டல்தான் பாலனுக்குச் சொந்தமான குருவாயூரப்பன் ஹோட்டல். பேச்சிலர்கள் காலையிலும் இரவிலும் அங்குதான் உணவு சாப்பிடுவார்கள். பாலனின் வீட்டோடு சேர்ந்து அந்த ஹோட்டல் இருந்தது. பாலனின் மனைவியும் பிள்ளைகளும் சேர்ந்து உணவைத் தயாரிப்பார்கள். அதனால் இடியாப்பத்திற்கும், தோசைக்கும், புட்டுக்கும், சாம்பாருக்கும், முட்டை ரோஸ்ட்டிற்கும், கடலைக் குழம்பிற்கும், சாதத்திற்கும் பொரியல்களுக்கும் வீட்டில் தயாரிக்கப்படும் உணவின் ருசி இருக்கும்.
அன்று மதியம் ஹரிதாஸும் அர்ஜுனும் பாலனின் கடைக்குப் போய் உணவு சாப்பிட்டார்கள். மற்றவர்கள் பகல்காட்சி படம் பார்க்கப் போய்விட்டார்கள்.
‘‘மூணரை மணி தாண்டுறப்போ அந்த கோபாலகிருஷ்ணன் சரோஜா நிவாஸுக்கு பால் கொடுக்க வருவான். அந்த நேரம் நீ என்னை எழுப்பனும். நான் கொஞ்ச நேரம் தூங்கப்போறேன்.’’ -ஹரிதாஸ் சொன்னான்.
‘‘அங்கேயுள்ள வேலைக்காரப் பெண்ணோட மகன்தானே? எதற்கு அண்ணா?’’ - புரியாமல் அர்ஜுன் கேட்டான்.
‘‘சொன்னதை நீ செஞ்சா போதும்.’’
ஹரிதாஸ் மதிய தூக்கத்தில் மூழ்கினான். அர்ஜுன் வராந்தாவில் உட்கார்ந்திருந்தான். சரோஜா நிவாஸில் ரேகாவின் அறையிலிருந்த சாளரம் மூடப்பட்டிருந்தது. அவளுடைய செல்ஃபோன் நம்பர் கிடைத்திருந்தால், அதன்மூலம் அவளை அழைக்கலாம். ஞாயிற்றுக்கிழமையாதலால் அவள் வீட்டில்தான் இருந்தாள். எப்படி இருந்தாலும் அண்ணன் அவளுடைய செல்ஃபோன் நம்பரை வாங்கித் தருவது உறுதி.
மூன்று மணி தாண்டி நாற்பது நிமிடங்கள் ஆனபோது கோபாலகிருஷ்ணன் இரண்டு பால்கவர்களுடன் வருவதை அர்ஜுன் பார்த்தான். அவன் ஓடிச் சென்று ஹரிதாஸை எழுப்பினான்.
‘‘அண்ணா... அவன் வர்றான்.’’
‘‘யாரு?’’
‘‘கோபாலகிருஷ்ணன்.’’
ஹரிதாஸ் எழுந்து கேட்டிற்கருகில் சென்றான். கோபாலகிருஷ்ணன் அப்போது கேட்டிற்கு முன்னால் வந்திருந்தான்.
‘‘கோபாலகிருஷ்ணா, இங்கே வா’’- ஹரிதாஸ் நட்புணர்வுடன் சொன்னான். அவன் வேகமாக ஹரிதாஸுக்கு அருகில் வந்தான்.
‘‘என்னை எதுக்கு சார் கூப்பிட்டீங்க?’’
‘‘நான் ஒரு காரியம் சொன்னா செய்வியா?’’ - ஹரிதாஸ் கேட்டான்.
‘‘சொல்லுங்க... செய்யிறேன்.’’
ஹரிதாஸ் சாருக்கு என்ன உதவி வேண்டுமென்றாலும், அதைச் செய்ய அவன் தயாராக இருந்தான். அதற்குக் காரணம் இருக்கிறது. பள்ளிக்கூடத்தில் புதிய சிறுநீர் கழிப்பிடம் கட்டுவதற்காக எல்லா மாணவர்களிடமும் வகுப்பு ஆசிரியர் ஒரு அட்டையைத் தந்திருந்தார். ஒவ்வொரு அட்டையிலும் இருபது காலியிடங்கள் இருந்தன. நன்கொடை தருபவர்களை அணுகி ஐந்து ரூபாய்வீதம் வாங்கி, இருபது காலி இடங்களிலும் கையெழுத்துப் போட வைத்து நூறு ரூபாய் சேர்ப்பது என்பது மாணவர்கள்மீது சுமத்தப்பட்டிருந்த கடமை.
அட்டையுடன் கோபாலகிருஷ்ணன் முதலில் அணுகியது சரோஜத்தைத்தான். சரோஜம் ஐந்து ரூபாய் தந்து ஒரு காலி இடத்தில் தன்னுடைய கையெழுத்துப் போட்டுத் தந்தாள். மாதவன் அண்ணனை அணுகியபோது, கையிலிருந்த பணம் தீர்ந்துவிட்டது... அடுத்த மாதம் பார்க்கலாம் என்று கூறிப் பின்வாங்கிக் கொண்டார்.
ஒருவார காலம் பல இடங்களிலும் பிச்சை எடுக்கிற மாதிரி அலைந்தும், அவனால் வெறும் நான்கு காலி இடங்களில்தான் கையெழுத்து வாங்க முடிந்தது. இறுதியில் ஜானகி சொன்னதைப் பின்பற்றி அவன் கார்த்தியாயனி இல்லத்திற்குச் சென்றான். அங்கு ஐந்து சார்கள் இருக்கிறார்கள். ஐந்து காலி இடங்களிலாவது கையெழுத்து கிடைக்காதா?
அவன் போனபோது அங்கு ஹரிதாஸ் மட்டும்தான் இருந்தான். அவனுடைய பரிதாப நிலையைப் பார்த்து ஹரிதாஸ் மீதியிருந்த பதினாறு இடங்களிலும் தன் கையெழுத்தைப் போட்டு, எண்பது ரூபாயைத் தந்தான்.
வகுப்பில் அவனுடைய மானத்தைக் காப்பாற்றிய ஹரிதாஸ் சாரை அவனால் மறக்க முடியுமா?
‘‘அங்கே ஒரு அக்கா படிக்கிறதுக்காக வந்திருக்காங்கள்ல?’’ - ஹரிதாஸ் கேட்டான்.
‘‘ஆமா...’’
‘‘அவளோட பேர் என்ன?’’
‘‘ரேகா...’’ - கோபாலகிருஷ்ணன் சொன்னான்.
‘‘அந்த அக்காவுக்கு ஒரு ஃபோன் இருக்கு. நீ அதைப் பார்த்திருக்கியா கோபாலகிருஷ்ணன்?’’
‘‘பார்த்திருக்கேன் சார். காதுல வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டே ரேகா அக்கா அதுல பேசுவாங்க.’’ -அவன் சொன்னான்.
‘‘கோபாலகிருஷ்ணன் யாருக்கும் தெரியாமல் நீ அந்த ஃபோனை எடுத்து ட்ரவுசர் பாக்கெட்டுல போட்டு இங்கே கொண்டுவரணும். நான் அதைப் பார்த்துட்டு உடனே திருப்பித் தந்திடுறேன். யாருக்கும் தெரியாமல் நீ அதை அங்கே கொண்டுபோய் வச்சிடலாம்.’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘அது அக்காவோட அறை. அக்காவுக்குத் தெரியாமல் அதை எடுக்க முடியாது.’’
அதற்கு ஹரிதாஸ் கையில் ஒரு வழி இருந்தது.
‘‘கோபாலகிருஷ்ணன், நீ அங்கேயே இரு. அக்கா குளிக்கிறதுக்காக போனவுடன், அதை நீ எடுத்துக்கிட்டு வந்திடு. முடியும்ல?’’
‘முடியும்’ என்ற அர்த்தத்தில் அவன் தலையைக் குலுக்கினான்.
ஹரிதாஸ் கார்த்தியாயனி இல்லத்திற்குத் திரும்பிச் சென்றபோது வாசலில் அர்ஜுன் அவனை எதிர்பார்த்து நின்றிருந்தான்.
‘‘பையன்கிட்ட என்ன பேசினீங்க அண்ணா?’’ - அவன் கேட்டான்.
‘‘சும்மா பேசிக்கிட்டிருந்தேன்’’ - மோகன்லால் ஸ்டைலில் கண்களை இறுக்கிக்கொண்டு புன்னகைத்தவாறு ஹரிதாஸ் சொன்னான்.
ஐந்து மணியானபோது கோபாலகிருஷ்ணன் திருடனைப்போல் பதைபதைப்புடன் அங்கு வந்தான்.
‘‘கிடைச்சதா?’’ - ஹரிதாஸ் கேட்டான்.
அவன் பாக்கெட்டிலிருந்து ரேகாவின் செல்ஃபோனை எடுத்து ஹரிதாஸிடம் நீட்டினான். அவன் உடனே அர்ஜுனின் செல் நம்பரை அதில் டயல்செய்தான். பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும், அழைப்பை ஹரிதாஸ் கேன்சல் செய்தான். ஒரு மிஸ்டு கால். அவ்வளவுதான்.
அர்ஜுனின் நம்பரை ரேகாவின் செல்ஃபோனில் இருந்து அழித்துவிட்டு, ஹரிதாஸ் அதை கோபாலகிருஷ்ணனிடம் திரும்பத் தந்தான். அத்துடன் ஒரு சாக்லேட் பாரையும்.
‘‘யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது. சீக்கிரமா இதைக் கொண்டுபோய் வச்சிடு’’ - அவன் சொன்னான்.
கோபாலகிருஷ்ணன் உடனடியாக அங்கிருந்து கிளம்பினான்.
ஹரிதாஸ் வேகமாக அர்ஜுனின் அறைக்குச் சென்றான்.
‘‘டேய், ஒரு மிஸ்டு கால் வந்ததா?’’ - அவன் கேட்டான்.
‘‘வந்தது அண்ணா... ஒரு புதிய நம்பர்...’’ - அவன் சொன்னான்.
‘‘அது ரேகாவின் நம்பர்.’’
‘‘ரேகாவா?’’
‘‘சரோஜா நிவாஸில் இருக்கும் உன் கனவுக்கன்னி.’’
நடந்த சம்பவங்களை ஹரிதாஸ் சொன்னபோது, அர்ஜுன் அவனை இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டான்.
‘‘அண்ணா, யூ ஆர் எ ஜீனியஸ்.’’
‘‘கோ மேன்... என்ஜாய்...’’
மறுநாளிலிருந்து ரேகாவிற்கு அர்ஜுன் மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பித்தான். இன்று அவளுடன் அவன் பேசவும் செய்துவிட்டான். உற்சாகத்தைத் தரக்கூடிய வளர்ச்சிகள்.
‘‘இனி எதுக்கு என் உதவி? அது தேவையில்ல. நீ ஒரு ஆண்பிள்ளை. அவளை டீல் பண்ண நீயே போதும்’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘இருந்தாலும், அண்ணா...’’
‘‘போ மகனே, நான் படிக்க வேண்டியதிருக்கு. குட் லக் அன்ட் குட் நைட், மை டியர் ஜாக்கி ஷெராஃப்.’’
சிரித்துக்கொண்டே அர்ஜுன் ஆனந்த் தன்னுடைய அறைக்குச் சென்றான்.
இரவு உணவு முடிந்து, எம்.டி.வியில் நான் ஸ்டாப் ஹிட்ஸைக் கண்டு கொண்டும், கேட்டுக் கொண்டும் இருந்தாள் ரேகா. அப்போது அவளுடைய செல்ஃபோன் ஒலித்தது.
பார்த்தபோது, அதில் ஜாக்கி ஷெராஃபின் நம்பர் இருந்தது.
‘‘ஹலோ...’’ - என்றாள் அவள்.
‘‘என்ன செய்றீங்க?’’ - அர்ஜுன் கேட்டான்.
‘‘படத்தைப் பார்த்துக்கொண்டே பாட்டு கேக்குறேன், எம்.டி.வி.யில்...’’
‘‘தூங்குறது எப்போ?’’
‘‘பத்து மணி ஆகுலையே! பதினொரு மணிவரை இப்படியே போகும். ஆமா... இப்போ அழைச்சதுக்குக் காரணம்?’’ - அவள் கேட்டாள்.
‘‘சும்மாதான்.’’
‘‘வெறுமனே சும்மாவுக்கா?’’
‘‘இல்ல... நேர்ல பார்க்கணும்னு நினைக்கிறேன். எப்ப முடியும்?’’ அவன் கேட்டான்.
‘‘இப்பவேன்னா?’’
‘‘இப்பவா?’’ - நம்பிக்கை வராமல் அவன் கேட்டான்.
‘‘ஆமா... நான் சாளரத்துக்குப பக்கத்துல வந்து நிக்கிறேன். விளக்கு இருப்பதால் அங்கேயிருந்து பார்த்தாலே, என்னை நல்லா பார்க்கலாமே’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்படி இல்ல... பக்கத்துல பார்க்கணும்.’’
‘‘அதற்கு ஒரு பைனாக்குலர் ஏற்பாடு செய்தால் போதும்.’’
‘‘அழகிதான்... ஒத்துக்குறேன். ஆனால், இவ்வளவு வெய்ட் தேவையில்ல... தலைக்கனம் தேவையில்ல...’’ - அவன் சொன்னான்.
‘‘அந்த அளவுக்கு வெய்ட் ஒண்ணும் இல்ல. வெறும் நாற்பத்தொன்பது கிலோ மட்டுமே...’’
‘‘அப்படின்னா... அந்த அளவுகளையும் இப்போ சொல்ல முடியுமா?’’
‘‘சொல்லலாம். ஆனா, ஜாக்கி... உங்களோட தூக்கம் பாழாயிடும். போய்த் தூங்குங்க...’’ - ரேகா சொன்னாள்.
அவள் செல்ஃபோனை டிஸ்கனெக்ட் செய்தாள். தற்போதைக்கு இவ்வளவு போதும் உடனடியாக நெருங்கக் கூடாது சில விஷயங்களில் சிறிது காத்திருக்க வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கிறது.
அவள் சேனலை மாற்றியபோது நேஷனல் ஜியாகிராஃபிக் வந்தது. திரை முழுக்க ஒட்டகச் சிவிங்கிகள். அவளுக்கு அப்போது தன்னுடைய தந்தையின் ஞாபகம் வந்தது. அவளின் தந்தை இப்போது ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்துக் கொண்டிருப்பார்.
அவள் ஃபோனை எடுத்து சிவராமகிருஷ்ணனை அழைத்தாள்.
‘‘அப்பா...’’
‘‘என்ன மகளே, இந்த நேரத்துல...?’’
‘‘நேஷனல் ஜியாகிராஃபிக்கில் நான் இப்போ ஒட்டகச் சிவிங்கிகளைப் பார்த்தேன். அப்போ உங்க ஞாபகம் வந்திடுச்சு அப்பா. அதுதான் அழைச்சேன்...’’ - அவள் சொன்னாள்.
‘‘மனிதக் குரங்கைப் பார்க்குறப்போ உனக்கு உன் அம்மாவோட ஞாபகம் வந்துரும்... அப்படித்தானே?’’ - சிவராமகிருஷ்ணன் கேட்டார்.
அவள் அதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.
‘‘அப்பா, யாரைப் பார்க்குறப்போ உங்களுக்கு என் ஞாபகம் வரும்?’’ - அவள் கேட்டாள்.
‘‘உராங் உட்டான் என்று கேள்விப்பட்டிருக்கியா மகளே?’’
‘‘ம்... குரங்கோட வேறொரு இனம்தானே? தமாஷ் போதும்... அம்மா என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்க?’’
‘‘நாளை வகுப்புக்கான தயாரெடுப்புல இருக்கா... கூப்பிடுறேன்.’’
சிவராமகிருஷ்ணன் சுபத்ராவை அழைத்து ரிஸீவரைக் கொடுத்தார்.
‘‘சாப்பாடு விஷயம் எப்படி இருக்கு மகளே?’’ - சுபத்ரா கேட்டாள்.
‘‘நான்கு வருடங்கள் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுப் பழகிப் போச்சே! எந்த சீனாவுக்குப் போனாலும் பாம்பின் நடுத்துண்டையே தின்னுற அளவுக்கு நான் தயாராயிட்டேன்.’’
‘‘அடுத்த வாரம் இங்கே வா. கொஞ்சம் ஊறுகாய் கொடுத்தனுப்புறேன்’’ - சுபத்ரா சொன்னாள்.
‘‘வரமுடியும்னு எனக்குத் தோணல அம்மா. படிக்கிறதுக்கு நிறைய இருக்கு.’’
‘‘அப்படின்னா, ஊறுகாயை நான் கொரியர் மூலமா அனுப்பி வைக்கிறேன்.’’
‘‘அது போதும்.’’
ரேகா ஃபோனைக் கீழே வைத்தபோது, வாசலில் யாரோ மெதுவாக கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அவள் அதிர்ந்துபோய் விட்டாள். சினிமா ஸ்டைலில் ஜாக்கி சுவரை ஏறிக் குதித்து சுவரையொட்டியிருக்கும் குழாயைப் பிடித்து மேலே ஏறி வந்திருப்பானோ?
‘‘யார் அது?’’ - பதறுகிற குரலில் அவள் கேட்டாள்.
‘‘நான்தான் ரேகா’’ - சரோஜம் ஆன்ட்டியின் குரல் வந்தது.
அவள் வேகமாகச் சென்று கதவைத் திறந்தாள். வெளியே சரோஜம் நின்றிருந்தாள்.
‘‘ஆன்ட்டி, உள்ளே வாங்க’’- அவள் சொன்னாள்.
சரோஜம் அறைக்குள் வந்தாள். டி.வி. திரையை அவள் ஓரக் கண்களால் பார்ப்பதைக் கண்டதும் ரேகாவிற்கு சிரிப்பு வந்தது. பார்க்கக் கூடாத காட்சிகள் ஏதாவது வருமோ என்பதுதான் அந்த அப்பிராணியின் பயமாக இருக்கும்.
‘‘படுத்தால் தூக்கம் வரமாட்டேங்குது. ரேகா, உன்கிட்ட வாசிக்கிறதுக்கு ஏதாவது இருக்கா?’’ சரோஜம் கேட்டாள்.
‘‘ஆங்கில நாவல் உங்களுக்குப் பிடிக்குமா ஆன்ட்டி?’’
‘‘ம்... கல்லூரியில் படிக்கிற காலத்தில் நூல் நிலையத்துல இருந்து எடுத்துப் படிக்கிறதுண்டு. ஷார்லட் ப்ராண்டி, எமிலி ப்ராண்டி ஜேன் ஆஸ்டின் எல்லாரையும் படிப்பேன். கல்லூரியை விட்ட பிறகு படிக்கிறதுக்கு எதுவும் கிடைக்கல.’’
‘‘ஆன்ட்டி, அப்போ நீங்க படிச்சது க்ளாசிக்குகள். இப்போ பைங்கிளிக் கதைகள்தான் கொடிகட்டி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மாதிரிக்கு ஒரு புத்தகம் தர்றேன். வாசித்துப்பாருங்க.’’
அவள் சிட்னி ஷெல்டனின் ‘தி அதர் ஸைட் ஆஃப் மிட்நைட்’ என்ற புத்தகத்தை எடுத்துத் தந்தாள். அதன் அட்டைப் படத்தைப் பார்த்ததும் சரோஜம் சற்று சந்தேகப்பட்டாள்.
‘‘ஏதாவது பிரச்சினைகள் இருக்குற புத்தகமா?’’
‘‘ஏதோ கொஞ்சம்...’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்படின்னா வேண்டாம்...’’
அது அரை மனதுடன் வரும் மறுப்பு என்பதை ரேகா புரிந்து கொண்டாள். அதனால் அவள் அதைக் காதில் வாங்காதது மாதிரி காட்டிக் கொண்டாள்.
‘‘கல்லூரியில் படிக்கிறப்போ ஆன்ட்டி உங்களுக்குக் காதல் உண்டாகியிருந்ததா?’’ - அவள் கேட்டாள்.
சரோஜம் சற்று தயங்கினாள்.
‘‘எனக்கா? ச்சே... என்ன ரேகா சொல்ற?’’ - கேட்கக் கூடாத ஏதோ ஒன்றைக் கேட்டுவிட்ட மாதிரி சரோஜம் அவளைப் பார்த்தாள்.
‘‘பொய் சொல்லக் கூடாது. வெளுத்து, மெலிந்த, தாடி வளர்ந்த, சுருட்டை முடிகொண்ட...’’
சரோஜம் திடீரென்று தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.
‘‘இப்போ அந்த ஜெயகிருஷ்ணன் எங்கே இருக்கார்?’’ - ரேகா கேட்டாள்.
‘‘தெரியல...’’
‘‘அதற்குப் பிறகு பார்க்கலையா?’’
‘‘இல்ல...’’
‘‘ஆன்ட்டி, ஏன் ஜெயகிருஷ்ணனை நீங்க திருமணம் செய்யல?’’
‘‘விதிப்படிதானே எல்லாம் நடக்கும்!’’ - சரோஜம் சொன்னாள்.
அதுவரை கேட்பதற்குத் தயங்கிக் கொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்க எப்படியோ ரேகாவிற்கு அந்த நேரத்தில் தைரியம் வந்தது?
‘‘ஆன்ட்டி, என்ன காரணத்துக்காக நீங்க விவாகரத்து பண்ணினீங்க?’’
என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் சரோஜம் ஒரு நிமிடம் அமைதியாக நின்றிருந்தாள்.
‘‘ரேகா, நான் அதை எப்படி உன்கிட்ட சொல்லுவேன்! ஒருவருட காலம் நாங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும், நான் பிரசவம் எதுவும் ஆகல. காரணம் என்னன்னு தெரியுமா?’’
‘‘என்ன காரணம்?’’
‘‘ஒரு இரவில்கூட நாங்கள் கணவன் - மனைவியைப்போல ஒண்ணா சேர்ந்து உறங்கியது இல்ல. பிறகு எப்படி நான் கர்ப்பம் தரிப்பேன்? வீட்டில் இருந்தவர்களின் வற்புறுத்தல் தாங்க முடியாமல்தான் அந்த ஆளு திருமணமே செய்திருக்காரு’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘அந்த ஆளுக்கு வேற ஏதாவது காதல் தொடர்பு இருந்ததா?’’
‘‘இருந்தது. ஆனால், காதலியுடன் இல்ல. காதல் இருந்தது காதலர்களுடன்தான்.’’
அதற்குமேல் எதுவும் கூறாமல் சரோஜம் கீழே இறங்கிச் சென்றாள்.
ரேகாவால் அன்று நினைத்தவுடன் உறங்க முடியவில்லை. அவளுடைய சிந்தனை முழுவதும் சரோஜத்தைப் பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது. பாவம் அவள்! இப்போதும் அவளிடம் இளமை இருக்கிறது. தன் விருப்பங்களை மனதிற்குள் அடக்கிக் கொண்டு தலைமுடி நுனியில் துளசிக் கொத்தையும், நெற்றியில் விபூதியையும் அணிந்துகொண்டு நடக்கிறாள்.
மறுநாள் சாயங்காலம் அர்ஜுனின் ஃபோன் அழைப்பு வந்தது. ரேகா குளித்து முடித்து ஆடை மாற்றிக் கொண்டிருந்தாள்.
‘‘பேசுவதற்கு இப்போ வசதிக் குறைவு எதுவும் இல்லையே!’’ - அவன் கேட்டான்.
‘‘புரியல...’’ - அவள் சொன்னாள்.
‘‘பக்கத்துல வேற யாராவது இருக்காங்களான்னு நான் கேட்டேன்.’’
‘‘இல்ல பூதம் அண்ணன் தன் மனைவியின் வீட்டிற்கு போயிருக்கிறார். சரோஜம் ஆன்ட்டி கீழே என்னவோ வேலையில் இருக்கிறாள்.’’
‘‘ரேகா, நான் உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.’’ - அர்ஜுன் சொன்னான்.
‘‘எதற்கு?’’
‘‘வெறுமனே பேச...’’
‘‘இப்போ வெறுமனேதானே பேசிக்கொண்டு இருக்கீங்க? ஓ... ஒரு வித்தியாசம் இருக்கு. ஜாக்கி, உங்க ஃபோன் பில் கூடிக்கொண்டு இருக்குது. நேர்ல சந்திச்சுப் பேசினா, அந்தச் செலவு லாபம்தான்.’’
‘‘எல்லாம் விளையாட்டுதான். சனிக்கிழமை ஃப்ரீயா இருந்தா, மியூஸியத்துக்கு வாங்க. நேரம் சொன்னா நான் அங்கே வந்திடுவேன்.’’
அவள் சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கினாள். கம்ப்யூட்டர் மையத்திலிருந்து அவள் திரும்பி வருவது மியூஸியத்தின் வழியாகத்தான். சனிக்கிழமை அங்கு இறங்க வேண்டியதுதான். ஜாக்கிக்கு அரைமணி நேரம் ஒதுக்கித் தரலாம்.
‘‘மதியம் இரண்டு மணி. என்ன சொல்றீங்க?’’ - அவள் கேட்டாள்.
‘‘மதியம் நேரம் கொஞ்சம்கூட ரொமான்ட்டிக்காவே இருக்காது. இருந்தாலும் நான் ரெடிதான். வாங்க. அன்னைக்கு நாம பார்க்கலாம்.’’ என்றான் அவன்.
‘‘கொஞ்சம் நில்லுங்க. ஒரு விஷயம் கேட்கணும்... என்மீது காதல் ஏதாவது இருக்கா என்ன?’’
‘‘அப்படி இருந்தால்?’’
‘‘வேண்டாம் மகனே. அந்த வேலைக்கு நான் இல்ல. வெறுமனே ஃப்ரண்ட்ஷிப் என்றால் மட்டுமே நான் தயார். எப்போ லைன் மாறுதோ, அப்போ நான் குட்பை சொல்லிடுவேன். அக்ரீட்?’’
‘‘அக்ரீட்...’’ - அவன் சொன்னான்.
‘‘அப்படின்னா சனிக்கிழமை இரண்டு மணிக்கு மியூஸியத்தின் கேட்டுக் அருகில்... வாட்டர் ஒர்க்ஸுக்கு அருகில் இருக்கும் கேட்டுக்குப் பக்கத்தில் நின்றிருங்க. ஓகே?’’
‘‘ஓகே.’’
சனிக்கிழமை கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து சிட்டி பஸ்ஸில் ஏறி அவள் மியூஸியம் கேட்டிற்கு அருகிலிருந்த நிறுத்தத்தில் பஸ்ஸை விட்டு இறங்கினாள். அர்ஜுன் ஆனந்த் அப்போது அவளை எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தான். நீலநிற ஜீன்ஸையும், காட்டன் சட்டையையும் அவன் அணிந்திருந்தான. அவன் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தான்.
‘‘நாம ஏதாவது சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து பேசுவோம்’’ - மியூஸியம் பகுதியில் இருந்த விசாலமான பூங்காவைக் கடந்து சென்றபோது அவன் சொன்னான்.
‘‘ஜாக்கி, நீங்க என்ன பண்ணுறீங்க?’’ - ஒன்றாகச் சேர்ந்து நடக்கும்போது அவள் கேட்டாள்.
‘‘விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஃபிக் ஆஃபீசர் ட்ரெயினியா இருக்கேன். எம்.எஸ்ஸியில் முதல் வகுப்பும் ரேங்கும் வாங்கித் தேர்ச்சி பெற்றேன்.’’ - அவன் சொன்னான்.
‘‘இந்தப் பூனைக் கண் பரம்பரையா வந்ததா?’’
‘‘இல்ல... இது எனக்கு மட்டுமே சொந்தம்.’’
‘‘அது பார்க்குறதுக்கு அழகா இருக்கு’’ - அவள் சொன்னாள்.
‘‘நன்றி.’’
காலியாக ஒரு சிமெண்ட் பெஞ்ச் ஒரு மர நிழலில் இருப்பதைப் பார்த்ததும், அவர்கள் அதில் போய் அமர்ந்தார்கள்.
‘‘கார்த்தியாயனி இல்லத்திலிருக்கும் மற்றவர்களைப் பற்றி சொல்லுங்க’’ - அவள் கேட்டாள்.
அவன் சச்சின் என்று அழைக்கும் அனூபைப் பற்றியும், சல்மான் என்று குறிப்பிடும் ராகுலைப் பற்றியும், கவிஞர் என்று அழைக்கும் ஜெயந்தைப் பற்றியும் தர்மேந்திரா என்று அழைக்கும் ஹரிதாஸைப் பற்றியும் விளக்கிச் சொன்னான்.
‘‘அப்படின்னா தர்மேந்திரா இன்னும் திருமணம் ஆகாத ஆள்?’’ - ஆச்சரியத்துடன் அவள் கேட்டாள்.
‘‘ஆமா... அன் எலிஜிபிள் க்ரானிக் பேச்சிலர்.’’
‘‘எவ்வளவு வயது இருக்கும்?’’ - திடீரென்று அவள் கேட்டாள்.
‘‘போன ஜனவரியில்தான் நாங்கள் அண்ணனோட முப்பத்தொன்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடினோம்.’’
சரோஜம் ஆன்ட்டிக்கு ஒரு பெர்ஃபெக்ட் மேட்ச் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருந்தும், என்ன காரணத்தால் அவர்களுக்கிடையே ஒரு இதய உறவு உண்டாகவில்லை?
ஒரு பூதம் அண்ணன்...
‘‘அண்ணன் இதுவரை திருமணம் செய்யாமல் இருக்குறதுக்கு என்ன காரணம்?’’ - ரேகா கேட்டாள்.
‘‘தெரியல...’’
‘‘காதல் தோல்வியா?’’
‘‘அதைப் பற்றி அண்ணன் எதுவும் சொன்னது இல்ல.’’
அவள் ஒரு நிமிடம் சிந்தனையில் மூழ்கினாள்.
‘‘ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகம்... அதன் பெயர் ‘எ மிட் சம்மர் நைட் ட்ரீம்.’ அர்ஜுன், நீங்க அதைப் படிச்சிருக்கீங்களா?’’
‘‘இல்ல... என் சப்ஜெக்ட் ஃபிசிக்ஸ்...’’
‘‘என் சப்ஜெக்ட் என்ஜினியரிங். இருந்தாலும், அதைப் படிச்சிருக்கேன்.’’
‘‘ரேகா அந்த நாடகத்தைப் பற்றி இப்போ நீங்க பேசுறதுக்குக் காரணம்?’’
அர்ஜுன் கேட்டான்.
‘‘சொல்றேன். நான் ஒரு முக்கிய விஷயத்தைப் பற்றி ஆழமா சிந்திக்கப் போறேன். அர்ஜுன், இந்த விஷயத்துல நீங்க எனக்கு உதவ முடியுமா?’’
‘‘கட்டாயமா...’’
‘‘உறுதியா?’’ - கையை நீட்டியவாறு அவள் கேட்டாள்.
‘‘உறுதியா...’’ - அவளுடைய மென்மையான கையில் தன் கையை வைத்துக்கொண்டு அவன் சொன்னான்.
அவள் அழகாக சிரித்தாள்.
ரேகா சொன்ன விஷயங்களை மிகவும் கவனமாக அர்ஜுன் கேட்டான். திடீரென்று அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்தன்மை வந்து சேர்ந்தது.
‘‘ஐடியா நல்லாத்தான் இருக்கு. ஆனா, வெற்றிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்ல’’ - இறுதியில் அவன் சொன்னான்.
‘‘திருமணமே செய்துக்குறதா இல்லைன்னு தர்மேந்திரா உறுதி எடுத்திருக்கிறாரா என்ன?’’ - அவள் கேட்டாள்.
‘‘அது எனக்குத் தெரியாது. ஆனா, திருமணம் செய்து கொள்வதில் அண்ணனுக்கு அந்த அளவுக்கு ஆர்வம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் திருமணம் எப்பவோ நடந்திருக்குமே!’’
‘‘எது எப்படியோ, நாம முயற்சி பண்ணிப் பார்ப்போம். நடந்தால் - இலக்கிய மொழியில் கூறுவது மாதிரி - இரண்டு வாழ்க்கையும் ஒன்றாகத் தளிர்க்கும்.’’ - என்றாள் அவள்.
‘‘ரேகா, இந்த விஷயத்தில் என் உதவியை நீங்க எதிர்பார்க்கலாம். யூ கோ அஹெட் வித் யுவர் ப்ளான்ஸ்...’’
பாளையம் வரை ஒன்றாகவே நடந்து ஒரு ரெஸ்ட்டாரெண்டிற்குள் நுழைந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு விட்டுத்தான் இருவரும் தனித் தனியாகப் பிரிந்து சென்றார்கள்.
ஏதாவதொரு விஷயத்தைப் பற்றி முடிவு செய்து விட்டால், பிறகு அதை நீட்டிக்கொண்டு போகும் பழக்கத்தைக் கொண்டவள் அல்ல ரேகா. ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள். தொடர்ந்து மேட்ரிமோனியல் பகுதியில் இருந்த எல்லா விளம்பரங்களையும் படித்தாள்.
சரோஜம் ஆன்ட்டிக்காக திருமண விளரம்பத்தைத் தயார் பண்ணும்போது, அது எந்தமாதிரி இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?
நோட்டுப் புத்தகத்திலிருந்து ஒரு தாளைக் கிழித்து அவள் ஒரு விளம்பரத்தை எழுதித் தயார் பண்ணினாள். அதைப் படித்துப் பார்த்தபோது அவளுக்கு அந்த அளவிற்குத் திருப்தி உண்டாகவில்லை. என்னவோ விடுபட்டிருந்தது.
ஐந்து முறை அதை மாற்றி மாற்றி எழுதிய பிறகுதான் தவறு எதுவும் இல்லை என்று அவளுக்குத் தோன்றிய ஒரு திருமண விளம்பரம் முழுமையான வடிவத்திற்கு வந்தது.
‘ஒரு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன்னுடையது அல்லாத காரணத்தால் விவாகரத்துக்கு ஆளான, வெளுத்த, அழகான நாயர் இளம்பெண், 38 வயது, திருவாதிரை நட்சத்திரம், மத்திய அரசாங்கத்தில் வேலை, எந்தப் பிரச்சினைகளும் இல்லை. வேலையில் இருக்கும் 46 வயதிற்கு அதிகம் இல்லாத ஆண்களிடமிருந்து திருமண ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.’
இதுபோதும் சில பதில்களாவது கட்டாயம் வராமல் இருக்காது. அவற்றிலிருந்து ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை தர்மேந்திரா...
படிகளில் ஏறி யாரோ வரும் சத்தத்தைக் கேட்டதும் ரேகா வேகமாக நோட்டுப் புத்தகத்தை மூடி வைத்தாள். தற்போதைக்கு சரோஜம் ஆன்ட்டிக்கு எதுவும் தெரியவேண்டாம்.
அவள் சென்று கதவைத் திறந்தாள். சரோஜத்தின் கையில் ஷெல்டனின் நாவல் இருந்தது.
‘‘இதைத் தருவதற்காக நான் வந்தேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘பிடிக்கல... அப்படித்தானே?’’ - அவள் சொன்னாள்.
‘‘பிடிக்கலைன்னு யார் சொன்னது? நான் இதைப் படிச்சு முடிச்சிட்டேன்.’’
‘‘இவ்வளவு சீக்கிரமாவா?’’ - அவள் ஆச்சரியபட்டாள்.
‘‘ம்.. இதைப்போல நாவல் வேறு ஏதாவது இருந்தால் தா ரேகா. படிக்கிறதுக்கு சுவாரசியமா இருக்கு.’’
ரேகா, ஷெல்டனின் வேறொரு நாவலை எடுத்துத் தந்தாள். படித்து மகிழட்டும்.
‘சரோஜம் ஆன்ட்டிக்காக நான் ஒரு திருமண விளம்பரம் தயார் பண்ணி வைத்திருக்கிறேன்’ என்று கூறலாமா? அப்படிக் கூறினால், அவளுடைய பதில் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
‘‘சரோஜம்...’’ - திடீரென்று கீழேயிருந்து மாதவன் அண்ணனின் அழைப்புச் சத்தம் கேட்டது.
‘‘மற்ற விஷயம் ஆரம்பமாகுற நேரம் வந்திருச்சு. ஏதாவது தொட்டுக்குறதுக்கு வேணும். அதுக்குத்தான் இந்த அழைப்பு...’’ - சரோஜம் ஆன்ட்டி சொன்னாள்.
அவளுடைய குரலில் வெறுப்பு கலந்திருந்தது. அதற்குமேல் எதுவும் கூறுவதற்கு நிற்காமல் அவள் கீழே இறங்கிச் சென்றாள்.
ரேகா கடிகாரத்தைப் பார்த்தாள். ஏழரை மணி ஆகியிருந்தது. இனி ஒருமணி நேரம் மாதவன் அண்ணனின் தீனியும் குடியும்தான். ஒன்பது ஆவதற்கு முன்னால் அவர் தூங்க ஆரம்பித்துவிடுவார்.
இங்கு அவள் தங்க வந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகிறது. பேயிங் கெஸ்ட்தான் பணம் கொடுக்க வேண்டும். சரோஜம் ஆன்ட்டியிடம் கேட்டால் பணம் எவ்வளவு என்று கூறுவாள் என்று தோன்றவில்லை.
சிறிது நேரம் சென்றதும் ரேகா கீழே இறங்கிச் சென்றாள். மாதவன் அண்ணன் சாப்பிட்டு முடித்து கை கழுவிக் கொண்டிருந்தாள். அவர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். ரம்மின் வாசனை வந்த ஒரு புன்னகை அது.
‘‘ரேகா, வீட்டுக்கு எதுவும் போகலையா?’’- மாதவன் அண்ணன் கேட்டார்.
‘‘என்ன மாதவன் அண்ணா! என்னை வீட்டுக்கு விரட்டணும்னு நினைக்கிறீங்களா?’’ - அவள் விளையாட்டாக கேட்டாள்.
‘‘அப்பாவையும் அம்மாவையும் பார்க்கணும்ன்ற ஆசை இல்லையா’ன்னு கேட்டேன். வந்து இப்போ ஒரு மாதம் ஆயிடுச்சே!’’
அது ஒரு ஞாபகப்படுத்தலைப்போல அவளுக்குத் தோன்றியது. மாதம் ஒன்றாகிவிட்டது.
‘‘மாதவன் அண்ணா உங்கக்கிட்ட ஒரு விஷயத்தைக் கேக்குறதுக்குத்தான் நான் இப்போ வந்தேன். இங்க தங்குறதுக்கு நான் எவ்வளவு ரூபாய் தரணும்?’’ - அவள் கேட்டாள்.
மாதவன் அண்ணன் சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கினார்.
‘‘அதாவது... தனியா தங்குறதுக்கு இந்த மாதிரி ஒரு அறை ஆயிரம் ரூபாய்க்குக்கூட கிடைக்காது. பிறகு உணவு... மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் தந்தால் போதும்.’’
‘‘நாளைக்கு நான் சரோஜம் ஆன்ட்டி கையில கொடுத்திடுறேன்.’’
‘‘வேண்டாம் மகளே இங்கே பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை கவனிக்கிறதே நான்தான்’’- மாதவன் அண்ணன் சொன்னார்.
கதவுக்குப் பின்னால் அப்போது சரோஜத்தின் பாதி உருவம் தெரிவதை அவள் பார்த்தாள். கூட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்பறவை அவள் என்று அப்போது ரேகா நினைத்தாள்.
ரேகாவும் சரோஜமும் சேர்ந்து வழக்கம்போல இரவு உணவு சாப்பிட்டார்கள். மாதவன் அண்ணன் வெறுமனே வாசலில் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தார்.
‘‘சரோஜம் ஆன்ட்டி, கொஞ்ச நேரம் கழிச்சு மாடிக்கு வர்றீங்களா?’’- அவள் கேட்டாள்.
‘‘எதற்கு ரேகா?’’
‘‘ஒரு விஷயத்தைப் பற்றி பேசணும்.’’
அவள் ரேகாவையே பார்த்தாள்.
‘‘வர்றேன்.’’
எந்த விஷயத்தைப் பற்றி பேசப்போகிறாள் என்பதைப் பற்றி யூகிக்க சரோஜத்தால் முடியவில்லை என்பது அவளுடைய முகத்தைப் பார்க்கும்போதே ரேகாவிற்குத் தெரிந்தது.
படிகளில்காலடிச் சத்தம் வந்தபோது அவள் தன் கைவிரல் நகங்களில் சாயத்தைப் பூசிக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். சரோஜம் அறைக்குள் நுழைந்து ஆர்வத்துடன் நெய்ல் பாலீஷின் புட்டியை எடுத்து முகர்ந்து பார்த்தாள்.
‘‘இந்த வண்ணம் நல்லா இருக்குதா ஆன்ட்டி?’’ - மெரூன் நிறத்திலிருந்த விரல் நகங்களைக் காட்டியவாறு ரேகா கேட்டாள்.
‘‘பரவாயில்ல... எனக்குப் பிடிச்சிருக்கு’’ - அவள் சொன்னாள்.
ரேகா அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு விரல்களையே பார்த்தாள். நல்ல அழகான நீளமான விரல்கள்.
‘‘நான் இந்த விரல்களில் பாலீஷ் போடட்டுமா?’’- அவள் கேட்டாள்.
‘‘அய்யோ வேண்டாம்’’ - உடனடியாக கையைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டாள்.
‘‘சரோஜம் ஆன்ட்டி, உங்களுக்குன்னு இருக்குற அழகை இப்படி வீண் செய்யக்கூடாது மூடிப் புதைச்சு வச்சு நடக்கக்கூடாது. அந்தக் கையை இங்கே தாங்க’’ - அவள் சொன்னாள்.
‘‘வேண்டாம் ரேகா... நான் அழகுபடுத்திக்கொண்டு நடக்குறதை மாதவன் அண்ணன் விரும்பமாட்டார்.’’
‘‘சரோஜம் ஆன்ட்டி, உங்க சம்பளம் முழுவதையும் பறிச்சு வச்சிக்கிட்டு மாதவன் அண்ணன் தண்ணி அடிக்கிறதைப் பற்றி உங்களுக்கு விருப்பமின்மை எதுவும் இல்லையா?’’
அவளை வெறுமனே பார்த்தாளே தவிர, அதற்கு சரோஜம் எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘அந்தக் கையை இங்கே தாங்க.’’
ரேகா அவளுடைய கையை பலமாகப் பிடித்து, எல்லா நகங்களிலும் பாலீஷ் பூசினாள்.
‘‘ஆன்ட்டி, நான் ஒரு விஷயம் கேட்டா, நீங்க உண்மையைச் சொல்வீங்களா?’’ - அவள் கேட்டாள்.
‘‘என்ன விஷயம்?’’
‘‘இப்படி மாதவன் அண்ணனின் தங்கையாக மட்டும் வாழ்ந்து ஆயுள் முழுவதையும் முடிச்சிர்றதுதான் உங்களோட நோக்கமா ஆன்ட்டி?’’
‘‘புரியல...’’
‘‘திரும்பவும் திருமணம் செய்துக்கணும்னு ஒருமுறைகூட நீங்க ஆசைப்படலையா ஆன்ட்டி?’’ - அவள் கேட்டாள்.
சரோஜம் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
‘‘மாதவன் அண்ணனுக்கு அது பிடிக்காமப் போயிட்டா...? அப்படித்தானே? தங்கையின் சம்பளத்திற்கு வேறொரு ஆள் உரிமை கொண்டாடுறதை மாதவன் அண்ணனால் ஏத்துக்க முடியுமா?’’ -கிண்டலுடன் ரேகா கேட்டாள்.
‘‘அப்படியெல்லாம் சொல்லாதே மாதவன் அண்ணனை விட்டா இந்த உலகத்தில் எனக்குன்னு வேற யார் இருக்காங்க? என்னை நினைச்சு மட்டுமே அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் போய் தங்காம இருக்காரு.’’
அப்படின்னா நீங்க மாதவன் அண்ணனுக்கும் அவரோட மனைவிக்கும் பயங்கரமான துரோகச் செயல் செய்துக்கிட்டு இருக்கீங்க ஆன்ட்டி. தன்னுடைய கணவனுடன் இரவு நேரத்தில் உறங்கணுமென்ற விருப்பம் அந்தப் பெண்ணுக்கு இல்லாமப் போயிடுமா? அது நடக்காமப் போனதுக்கு நீங்க மட்டுமே காரணம் ஆன்ட்டி. இது உங்க பேர்ல இருக்கக்கூடிய வீடு. திருமணம் ஆயிட்டா. உங்க கணவனுடன் நீங்க இந்த வீட்டுல இருக்கலாம் ஆன்ட்டி. மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் போய்த் தங்கலாம்.’’
‘‘வேண்டாம் ரேகா. அது சரியா வராது’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘சரியாகுதான்னு நாம கொஞ்சம் பார்ப்போமே! ஆன்ட்டி... இதைக் கொஞ்சம் படிங்க.’’
ரேகா தான் எழுதி வைத்திருந்த திருமண விளம்பரத்தை எடுத்து சரோஜத்திடம் கொடுத்தாள். அதை வாசித்ததும், சரோஜத்தின் முகம் ஒருமாதிரி ஆகிவிட்டது.
‘‘என்ன இது?’’
‘‘பத்திரிகையில் கொடுக்குறதுக்குத்தான் ஆன்ட்டி. உங்களை விருப்பப்படுபவர்கள் யாராவது இருக்காங்களான்னு தெரிஞ்சிக்கலாமே!’’
‘‘அய்யோ.. வேண்டாம்... தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்காதே’’ - பயத்துடன் அவள் சொன்னாள்.
‘‘ஆன்ட்டி, நீங்க ஏன் பயப்படுறீங்க? உங்களுக்காக நான் என் பேர்ல இந்த விளம்பரத்தைக் கொடுக்கப் போறேன். பதில்கள் என் பெயருக்குத்தான் வரும். நாம ரெண்டு பேரும் உட்கார்ந்து அதுல ஒரு ஆளைத் தேர்ந்தெடுப்போம்.’’
‘‘வேண்டாம்... இந்த விஷயம் மாதவன் அண்ணனுக்கு எப்படியாவது தெரிஞ்சு போச்சுன்னா, அன்னைக்கே உன்னை இங்கேயிருந்து மூட்டை கட்டி அனுப்பி வச்சிட்டுத்தான் மறு வேலை பார்ப்பாரு...’’
‘‘அப்படி மூட்டை கட்டி அனுப்புறதுன்னா அனுப்பட்டும். நான் இங்கே நிரந்தரமா தங்குறதுக்கு ஒண்ணும் வரலையே! ஆன்ட்டி, நீங்க இப்படி ஆஸ்ரமத்துல இருக்குற ஒரு துறவு பூண்ட ஒரு பெண்ணைப் போல நடக்குறது சரியில்ல. நல்ல வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணியணும். கண்களில் மை தடவணும். பொட்டு வைக்கணும். நகைகள் அணியணும். பூச்சூடணும். திருமணம் செய்துக்கணும்.’’
‘‘இதற்குமேல் நான் எதையும் கேட்க விரும்பல. நான் போறேன்.’’ அமைதியற்ற மனநிலையுடன் சரோஜம் அறையைவிட்டு இறங்கிச் சென்றாள்.
ரேகா அந்த நிமிடமே அர்ஜுனின் செல்ஃபோனுக்கு அழைப்பு விட்டாள்.
‘‘பேசினீங்களா?’’ - அவன் கேட்டான்.
‘‘ம்... ஆனால், சம்மதிக்கிற அறிகுறி இல்ல. எது எப்படி இருந்தாலும், நாம் மேட்ரிமோனியல் விளம்பரத்தைத் தருவோம். மேட்டர் தயாரா இருக்கு. எழுதிக்கங்க. நான் சொல்லுறேன்.’’
‘‘ஒரு செகண்ட்... பேனா எடுத்துக்குறேன். ஓ...கே... சொல்லுங்க.’’ - அவள் ஃபோன் மூலம் கூறிய மேட்டரை அர்ஜுன் எழுதினான்.
‘‘நாளைக்கே இதைப் பத்திரிகை அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுக்கணும். எல்லா விஷயங்களையும் நான் உங்கக்கிட்ட ஒப்படைக்கிறேன், அர்ஜுன். செலவுகளை நான் பார்த்துக்கிறேன்.’’
‘‘ரேகா, உங்க கம்ப்யூட்டர் மையத்தின் முகவரியைக் கொடுக்குறதுதான் புத்திசாலித்தனம்?’’ - அவன் கேட்டான்.
‘‘ஆமாம்... தற்போதைக்கு இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்.’’
மறுநாளே திருமண விளம்பரத்தை அர்ஜுன் பத்திரிகை அலுவலகத்திற்குக் கொண்டுபோய் கொடுத்தான்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னால் வந்த ஞாயிற்றுக்கிழமை பத்திரிகையில் ரேகா கொடுத்த விளம்பரம் வந்திருந்தது. அவள் அதை சரோஜத்திடம் காட்டினாள்.
‘‘கடவுளே! இனி என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ! நான்தான் இந்த விளம்பரத்தைக் கொடுத்தேன்னு மாதவன் அண்ணன் நினைக்கப் போறாரு’’- அவள் சொன்னாள்.
‘‘எதை வேணும்னாலும் நினைச்சிட்டுப் போகட்டும். பொறுப்புல இருப்பவர்கள் செய்ய வேண்டிய காரியங்களை ஒழுங்கா செய்யலைன்னா, ஊர்க்காரங்க அதைப் பொறுப்பேற்று செய்துடுவாங்க, நான் மாதவன் அண்ணன்கிட்ட சொல்லிக்கிறேன்.’’
ரேகா அந்த நிமிடமே அர்ஜுனை அழைத்தாள்.
‘‘பார்த்தீங்களா? இன்னைக்கு பத்திரிகையில நாம தந்த விளம்பரம் வந்திருக்கு.’’
‘‘அப்படியா? அப்படின்னா வேலையைத் தொடங்க வேண்டியதுதான்.’’
அர்ஜுன் முன்பக்கத்திலிருந்த அறைக்குச் சென்றான். ஹரிதாஸும் ராகுலும் ஜெயந்தும் பத்திரிகை படிப்பதில் மூழ்கியிருந்தார்கள். கார்த்தியாயனி இல்லத்திற்கு மூன்று பத்திரிகைகள் வருகின்றன. ஒரு ஆங்கிலப் பத்திரிகையும் இரண்டு மலையாளப் பத்திரிகைகளும். ஞாயிற்றுக்கிழமை ஒன்பது மணி வரை பத்திரிகை வாசிப்பது நீண்டு கொண்டிக்கும்.
ராகுலின் கையிலிருந்த மலையாளப் பத்திரிகையின் மேட்ரிமோனியல் பகுதி இருந்த பக்கங்களை அர்ஜுன் பிடித்து இழுத்தான்.
‘‘நீ இப்பவும் ட்ரெயினிதானேடா? வேலை கிடைச்ச பிறகு திருமணம் செய்தால் போதும்.’’ - ராகுல் சொன்னான்.
‘‘திருமணம் செய்றதுக்காக இல்லைடா. இது படிக்கிறதுக்கு சுவாரசியமா இருக்கும்.’’
நான்குபேரும் அமைதியாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘அண்ணா... இதோ... வெளுத்த, அழகான ஒரு நாயர் இளம்பெண் தந்திருக்கும் விளம்பரம் வந்திருக்கு. வயது முப்பத்தெட்டு. மத்திய அரசாங்கத்தில் வேலை.’’ - திடீரென்று அர்ஜுன் சொன்னான்.
‘‘அண்ணனின் முகம் மாறனும்னா முப்பத்தெட்டு வயதைக் கொண்ட வெளுத்த அழகியெல்லாம் போதாது. தேவலோகத்தில் இருந்து சாட்சாத் மேனகையே இறங்கி வரணும்.’’ - ஜெயந்த் சொன்னான்.
ஹரிதாஸ் தலையை உயர்த்திப் பார்த்தானே தவிர, ஒரு வார்த்தைகூட பேசவில்லை.
‘‘எங்கே... நான் வாசித்துப் பார்க்குறேன்.’’ - ராகுல் பத்திரிகையைப் பிடுங்கி வாங்கிப் படித்தான்.
‘‘அண்ணா, மூணு மாதங்கள் கடந்தால் ட்ரெயினிங் முடிந்துநான் இங்கேயிருந்துபோயிடுவேன். நான்கு மாதங்கள் முடிந்தால் ஜெயந்தின் படிப்பு முடிஞ்சிடும். ராகுலை எடுத்துக்கிட்டா, எப்போ வேணும்னாலும் ட்ரான்ஸ்ஃபர் கிடைப்பதை எதிர்பார்த்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கான். நாங்க மூணு பேரும் போயிட்டா, இங்கே நீங்க மட்டும் தனியா இருந்து என்ன செய்வீங்க அண்ணா?’’- அர்ஜுன் கேட்டான்.
‘‘நீ சொல்றது சரிதான். அண்ணன் வெளுத்த அழகியான இந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்து சந்தோஷமா வாழ்வாரு. மத்திய அரசாங்கத்தின் வேலையில் இருப்பதால் எந்த மாநிலத்துல இருந்தாலும் தலைநகரில் இருக்குற மாதிரி ட்ரான்ஸ்ஃபர் கிடைக்குறதுல கஷ்டமே இருக்காது’’- ஜெயந்த் சொன்னான்.
‘‘அண்ணா உங்களுக்கு இது சரியாக இருக்காது. இந்தப் பெண் ஒரு வருடம் ஒன்றாக வாழ்ந்துவிட்டு விவாகரத்து வாங்கினவள். உங்களுக்கு இதழ்படாத இளம்பெண் கிடைப்பாள்.’’ - ராகுல் சொன்னான்.
‘‘அப்படின்னா முத்தம் தரப்படாதவள். திருமணமாகாதவள்.’’
‘‘இது ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பா இருக்கே, ராகுல்! திருமணமாகாத பெண்களுக்கு இப்படியொரு பட்டம் இருக்குன்னு எனக்கே இப்பத்தான் தெரியுது. அண்ணா, ஏன் பேசாம இருக்கீங்க?’’
‘‘நான் நிம்மதியா வாழ்றதை உன்னால பொறுத்துக்க முடியல... அப்படித்தானே?’’ - கேட்கக் கூடாததை காதில் கேட்டுவிட்ட மாதிரி ஹரிதாஸ் கேட்டான்.
‘‘அண்ணா, எது எப்படியோ... உங்களுக்காக நான் இதற்கு பதில் எழுதப்போறேன். என்ன இருந்தாலும் பதில் வரட்டும்’’ - அர்ஜுன் சொன்னான்.
‘‘சரிதான்... அண்ணனையும், அழைச்சிட்டு நாம பெண் பார்க்கப் போகணும். அது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும்’’ - ஜெயந்த் சொன்னான்.
அன்றே பத்திரிகையின் தபால் பெட்டி எண்ணுக்கு ஹரிதாஸைப் பற்றிய விவரங்களுடன் அர்ஜுன் ஒரு கடிதம் எழுதி அனுப்பினான்.
இரண்டு வாரங்கள் கடந்த பிறகு கம்ப்யூட்டர் மையத்தின் முகவரியில் ரேகாவிற்கு பதிவு செய்து அனுப்பப்பட்ட ஒரு தடிமனான அஞ்சல் உறை வந்து சேர்ந்தது. பத்திரிகை அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட உறை அது.
‘‘ஆன்ட்டி, நம்ம விளம்பரத்தைப் பார்த்து எழுதப்பட்ட பதில் கடிதங்கள் வந்திருக்கு. நான் இதுவரை அதைத் திறந்து பார்க்கல. வாங்க... பார்க்கலாம்.’’ - அன்று சரோஜம் அஞ்சல் அலுவலகத்திலிருந்து வந்தபோது அவள் சொன்னாள்.
‘‘வேண்டாம். இந்த விளையாட்டு நான் தயாரா இல்ல...’’ - அவள் விருப்பமில்லாததைப்போல் காட்டிக் கொண்டு ஒதுங்கி நின்றாள்.
‘‘வாங்க ஆன்ட்டி... எனக்குக் கொஞ்சம் உதவக் கூடாதா? திருமணம் வேண்டாம்னா விட்டிருங்க... எல்லா கடிதங்களையும் வாசிச்சு முடிச்சிட்டு கிழிச்செறிஞ்சிடுவோம்.’’
அதற்குப் பிறகு சரோஜம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்கு போய்விட்டிருந்தார். எனினும், கதவை அடைத்து தாழ்போட்டுவிட்டுத்தான் அவர்கள் கடிதங்களைப் பிரித்துப் பார்த்தார்கள்.
மொத்தம் பதினேழு கடிதங்கள் இருந்தன. ரேகாவும் சரோஜமும் ஒவ்வொன்றாகப் பிரித்துப் படித்தார்கள். இடையில் ரேகா கடைக்கண்ணால் பார்த்தபோது கடிதங்களை வாசித்துக் கொண்டிருந்த சரோஜத்தின் முகத்தில் ஆர்வமும், கண்களில் பிரகாசமும் இருப்பதை அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது.
‘‘அய்யோ.. ரேகா’’ - திடீரென்று ஒரு அதிர்ச்சியுடன் சரோஜம் அழைத்தாள்.
‘‘என்ன ஆன்ட்டி?’’
‘‘இது... இது யாருன்னு பாரு...’’
எதுவுமே தெரியாத மாதிரி ரேகா அந்தக் கடிதத்தை வாங்கிப் பார்த்தாள். அவள் வேண்டுமென்றே எடுக்காமல் விட்ட கடிதம் அது. உறையின் மூலையில் அடையாளத்தை அர்ஜுன் ஒரு நட்சத்திரத்தை வரைந்திருந்தான்.
‘‘ஹரிதாஸ், கார்த்தியாயனி இல்லம்... இது பக்கத்து வீட்டுல இருக்குற ஆள்தானே?’’ - கடிதத்தைப் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டாள்.
‘‘இருப்பவர்களில் சற்று வயதான ஆள். நாற்பத்தி ரெண்டு வயதுன்னு எழுதப்பட்டிருக்கு...’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘ஆனால், பார்த்தால் அந்த அளவிற்கு வயதான மாதிரி தெரியாது. நாம அந்த ஆளுக்கு முதல்ல பதில் எழுதுவோம். என்ன ஆன்ட்டி...’’
‘‘வேண்டாம் எனக்காகத்தான் நீ விளம்பரம் கொடுத்தேன்ற விஷயம் அந்த ஆளுக்கு தெரிய வேண்டாம். பிறகு அந்த வீட்டுக்கு முன்னாடி நடக்கக்கூட என்னால முடியாது ரேகா’’ - பதைபதைப்புடன் சரோஜம் சொன்னாள்.
‘‘ஆன்ட்டி, நீங்க எது வேணும்னாலும் சொல்லுங்க... நான் இந்தக் கடிதத்துக்கு பதில் எழுதத்தான் போறேன்.’’
சொன்னது மாதிரியே மறுநாள் ரேகா அந்தக் கடிதத்திற்குப் பதில் எழுதினாள். சரோஜத்தைப் பற்றிய எல்லா விவரங்களையும் கடிதத்தில் அவள் எழுதியிருந்தாள்.
மறுநாள் சாயங்காலம் கார்த்தியாயனி இல்லத்திற்கு முதலில் வந்து சேர்ந்தவன் ஹரிதாஸ்தான். கேட்டிற்குப் பின்னால் வைக்கப்பட்டிருந்த தபால் பெட்டியை அவன் வழக்கம்போல பரிசோதித்தான். ஒரு கடிதமும் இரண்டு வார இதழ்களும் அதில் இருந்தன.
அன்று அர்ஜுன் வந்தபோது மணி எட்டை தாண்டியிருந்தது. ஹரிதாஸ் அவனை தன் அறைக்கு வரும்படி அழைத்தான்.
‘‘நீ அனுப்பிய கடிதத்துக்குப் பதில் வந்திருக்கு. இதோ... படிச்சுப் பாரு...’’ - உறையை எடுத்து நீட்டியவாறு அவன் சொன்னான். எதுவுமே தெரியாத மாதிரி அர்ஜுன் அந்தக் கடிதத்தை வாங்கி வாசித்தான்.
‘‘அய்யோ அண்ணா... இது நம்ம பூதம் அண்ணனோட தங்கைதானே? ஆச்சரியமா இருக்கே!’’ - அவன் சொன்னான்.
‘‘உண்மையைச் சொல்லு... இந்தத் திட்டத்திற்குப் பின்னால் யார் இருக்குறது? நீயா இல்லாட்டி அவளா?’’ - சீரியஸான குரலில் அவன் கேட்டான்.
‘‘அந்தப் பெண்ணுக்காக ரேகா மேட்ரிமோனியில் விளம்பரம் கொடுத்த விஷயத்தை என்கிட்ட சொல்லியிருந்தாள். வெறுமனே ஒரு சுவாரசியத்துக்காக உங்களுக்காக நான் எழுதிப்போட்டேன் அவ்வளவுதான். அதுக்காக...’’ - அவன் தப்பிக்கப் பார்த்தான்.
‘‘இருந்தாலும் இது மோசமான விஷயம்டா. அந்தப் பெண் இதைப் படிச்சிருப்பா. அதுதான் என்னைக் கவலைப்பட வைக்குது.’’
‘‘அந்தக் கிழவனுக்குத் தெரியாமல் ரேகா செய்த வேலை இது. அந்தப் பெண்ணின் வருமானத்தை மனசுல வச்சுக்கிட்டுத்தான் அந்த ஆளு அவங்களோட திருமணத்தை இதுவரை நடத்தாமலே இருக்கிறாரு அண்ணா...’’ - அர்ஜுன் சொன்னான்.
‘‘இப்போ என்ன செய்யிறது?’’ - சிந்தனையுடன் ஹரிதாஸ் அறையில் இங்குமங்குமாக நடந்தான்.
‘‘அந்தப் பாவப்பட்ட பெண்ணுக்கு ஒரு வாழ்க்கை கொடுங்க அண்ணா. உங்களை அவங்களுக்கு பிடிச்சிருக்கு. அதுனாலதானே பதில் எழுதியிருக்காங்க!’’
‘‘சரோஜத்திற்குத் தெரியாமல் ரேகா தன் கைப்பட எழுதிய கடிதமா இதுன்னு தெரியலையே!’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘அதுக்கு ஒரு வழி இருக்கு. இப்போ நேரடியா கேட்டுட்டா தெரிஞ்சிடப் போகுது’’ - அர்ஜுன் செல்ஃபோனில் ரேகாவை அழைத்தான்.
‘‘ரேகா, அண்ணன் சரோஜம் ஆன்ட்டிகூட கொஞ்சம் பேச விரும்புறாரு. அதுக்கு என்ன வழி?’’ - அவன் கேட்டான்.
‘‘கடிதம் கிடைச்சதா?’’
‘‘ம்... சரோஜம் ஆன்ட்டிக்குத் தெரிந்துதான் அந்தக் கடிதம் எழுதப்பட்டதான்னு அண்ணனுக்குத் தெரியணுமாம். அதுனாலதான்... கொஞ்சம் கூப்பிடுறீங்களா?’’
‘‘அதற்கென்ன? நான் ஆன்ட்டியை என் அறைக்கு அழைச்சிட்டு வர்றேன். பிறகு நான் அங்கு ஃபோன் பண்ணுறேன். போதும்ல?’’ - அவள் கேட்டாள்.
‘‘போதும்...’’
அர்ஜுனும் ஹரிதாஸும் காத்திருந்தார்கள். ஐந்து நிமிடங்கள் கடந்த பிறகு, அர்ஜுனின் ஃபோனில் மணி அடிக்க ஆரம்பித்தது.
செல்ஃபோனைக் காதோடு சேர்த்து வைத்துக் கொண்டு ரேகா நின்றிருந்தாள். அர்ஜுனின் செல்லில் மணி அடிக்கிறது. இப்போது அவன் பேசுவான். அவனுக்குப் பக்கத்தில் தர்மேந்திராவும் இருப்பான்.
‘‘ஹலோ...’’ - திடீரென்று அவளுடைய காதில் அர்ஜுனின் குரல் ஒலித்தது.
‘‘ஹலோ... அர்ஜுன் அண்ணன் எதைத் தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறாரு?’’- அவள் கேட்டாள்.
‘‘நான் அண்ணன்கிட்ட ஃபோனைத் தர்றேன். ஃபோனைக் கையிலேயே வச்சிருங்க.’’
செல்ஃபோன் கை மாறும் நேரம் தர்மேந்திராவின் கேள்விகளுக்கான பதில்களை ரேகா தன் மனதில் தயார் பண்ணி வைத்திருந்தாள்.
‘‘ஹலோ ரேகா...’’ - திடீரென்று தர்மேந்திராவின் கம்பீரமான குரல் கேட்டது.
‘‘ஹலோ... அண்ணா! நம்மிடையே நேரடியான அறிமுகம் இல்லாவிட்டாலும், அர்ஜுன் சொல்லி உங்களைப் பற்றி எனக்குத் தெரியும். நீங்க பேச விரும்புறது என்கூடவா இல்லாட்டி சரோஜம் ஆன்ட்டி கூடவா?’’ - அவள் கேட்டாள்.
‘‘உங்களுடைய சரோஜம் ஆன்ட்டியுடன்... எனக்கு ஒரு விஷயம் தெரியணும்’’ - அவன் சொன்னான்.
‘‘சரோஜம் ஆன்ட்டி மாதவன் அண்ணனுக்கு சாதம் பரிமாறிக் கொண்டிருக்காங்க. அரை மணிநேரம் கடந்தால் ஆன்ட்டி ஃப்ரி ஆயிடுவாங்க. அப்போ அங்கே ஃபோன் பண்ணினா போதுமா?’’
‘‘போதும்... ரேகா, நான் ஒரு விஷயம் கேட்டால், நீங்க அதற்கு உண்மையைச் சொல்லணும். மாதவன் அண்ணனா திருமண விளம்பரம் கொடுத்தாரு?’’
‘‘இல்ல.’’
‘‘பிறகு?’’
‘‘நான்தான்...’’ - அவள் சொன்னாள்.
‘‘மாதவன் அண்ணனுக்குத் தெரிந்து, அவருடைய சம்மதத்தோடா இந்த விளம்பரத்தைக் கொடுத்தீங்க?’’
‘‘இல்ல... ஆனால், சரோஜம் ஆன்ட்டியுடன் கலந்து பேசிய பிறகுதான் கொடுத்தேன். தங்கையின் திருமணத்தை நடத்தணும் என்ற சிந்தனையே மாதவன் அண்ணனுக்கு இல்ல.’’
‘‘என் கடிதத்துக்குப் பதில் எழுதியது யார்?’’ - தர்மேந்திரா கேட்டான்.
‘‘நான்தான். ஆனால், அண்ணா! உங்க கடிதத்தைப் பிரிச்சுப் படிச்சது சரோஜம் ஆன்ட்டிதான். ஆச்சரியத்துடன் அவங்க அதை என்கிட்ட தந்தாங்க. சரோஜம் ஆன்ட்டிக்கு நல்லா தெரிஞ்சுதான் நான் அதற்குப் பதில் எழுதினேன்’’ - ரேகா சொன்னாள்.
அவள் கூறியது அனைத்தும் உண்மைதானே! ஆனால், சரோஜம் ஆன்ட்டியின் சம்மதம் அதற்குக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. அதேநேரத்தில் அப்போது சரோஜம் ஆன்ட்டியின் முகத்தில் அரை மனதின் வெளிப்பாடு தெரியத்தான் செய்தது.
‘‘அப்படின்னா நான் தெரிஞ்சிக்க வேண்டியது என்ன? சரோஜத்தை நான் திருமணம் செய்து கொள்வதைப்பற்றி அவங்களுக்கு சம்மதம்னு எடுத்துக்கலாமா?’’ - தர்மேந்திரா கேட்டான்.
‘‘அண்ணா, இதைவிடத் தெளிவாக எப்படி நான் சொல்ல முடியும்? சரோஜம் ஆன்ட்டியை எனக்குச் சில வாரங்கள்தான் அறிமுகம். நான் புரிஞ்சிக்கிட்டது வரையில் ஆன்ட்டி ரொம்ப பாவம். அன்பு செலுத்தவும், அன்பு செலுத்தப்படவும் விரும்புகிற ஒரு இதயத்தின் சொந்தக்காரி அவங்க’’- அவள் சொன்னாள்.
‘‘சரோஜம் விவாகரத்து செய்து கொண்டதற்குக் காரணம் என்ன?’’
‘‘அதற்கான காரணத்தை ஃபோனில் சொன்னால் சரியாக வராது. நாம ஒரு நாள் நேரில் பார்க்கும்போது பேசுவோம். எது எப்படி இருந்தாலும், தப்பு சரோஜம் ஆன்ட்டியோடது இல்ல. அது மட்டும் உண்மை.’’
‘‘தங்கையின் திருமணத்தை நடத்துறதுல மாதவன் அண்ணனுக்கு ஏன் விருப்பம் இல்லாம இருக்கு?’’
‘‘இரண்டு மூணு காரணங்கள் இருக்கு. சரோஜம் ஆன்ட்டிக்கு பங்காகக் கிடைத்த வீடுதான் சரோஜா நிவாஸ். ஆன்ட்டிக்குத் திருமணம் ஆயிட்டா, மாதவன் அண்ணன் இங்கேயிருந்து வெளியேறி ஆகணும். அது மட்டுமல்ல - ஆன்ட்டியின் சம்பளத்திற்கு வேறொரு வாரிசு வந்திடுவாரு. இரண்டையும் விட்டுக்கொடுக்க மாதவன் அண்ணன் தயாராக இல்ல...’’ - ரேகா சொன்னாள்.
‘‘எது எப்படி இருந்தாலும், நான் கொஞ்சம் சரோஜம் கூட பேசணும்’’- தர்மேந்திரா சொன்னான்.
‘‘அதற்கு நான் வழி உண்டாக்கித் தர்றேன்.’’
அந்த உரையாடல் அத்துடன் நின்றது. மாதவன் அண்ணன் இரவு உணவு சாப்பிட்டு முடித்ததும், ரேகாவிற்கு சரோஜம் சுதந்திரமாகக் கிடைத்தாள்.
‘‘தூங்குறதுக்கு முன்னாடி ஆன்ட்டி, கொஞ்சம் மேலே வாங்க. நான் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசணும்’’ - அவள் சொன்னாள்.
‘‘என்ன விஷயம் ரேகா?’’
‘‘இப்போ அதைச் சொன்னா... ஆன்ட்டி, நீங்க வரமாட்டீங்க. மேலே வந்தபிறகு சொல்றேன்.’’ - விரிந்த ஒரு சிரிப்புடன் அவள் படிகளில் ஏறி மாடிக்குச் சென்றாள்.
அண்ணன் சொன்ன விஷயத்தைக் கூறும்போது சரோஜம் ஆன்ட்டியின் செயல்பாடு எப்படி இருக்கும்? அதிர்ச்சியடைவாள். அது மட்டும் உறுதி. அண்ணனுடன் பேச சம்மதிக்க மாட்டாள். அப்படியென்றால்... என்ன செய்வது?
எதையாவது செய்யாமல் இருக்க முடியாது.
சிறிது நேரம் சென்றதும் படிகளில் காலடிச் சத்தம் கேட்டது. ரேகா தன்னைத் தயார்படுத்திக் கொண்டு உட்கார்ந்தாள். திருமண விளம்பரத்திற்குப் பின்னால் ஒரு தீவிரமான திட்டம் இருக்கிறது என்பதை எந்தக் காரணம் கொண்டு சரோஜம் ஆன்ட்டி தெரிந்துகொள்ளக் கூடாது.
‘‘ரேகா, என்கூட பேசுற அளவுக்கு அப்படி என்ன விஷயம்?’’ - அறைக்குள் நுழைந்துகொண்டே சரோஜம் கேட்டாள்.
‘‘ஆன்ட்டி! இங்கே உட்காருங்க. நம்ம கார்த்தியாயனி இல்லத்தில் இருக்கும் மிஸ்டர் ஹரிதாஸுக்கு ஒரு பதில் கடிதம் அனுப்பினேன்ல...! அது அங்கே கிடைச்சாச்சு...’’ - அவள் சொன்னாள்.
‘‘உன்கிட்ட யாரு அதைச் சொன்னது ரேகா?’’ - ஆர்வத்தில் விரிந்த கண்களுடன் சரோஜம் கேட்டாள்.
‘‘கம்பியில்லா கம்பி வழியாகத் தகவல் வந்தது. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என் செல்ஃபோனுக்கு அங்கேயிருந்த ஒரு அழைப்பு வந்தது.’’
‘‘உன் செல்ஃபோன் நம்பர் அந்த ஆளுக்கு எப்படிக் கிடைத்தது?’’
‘‘பதில் கடிதத்துல நான் என் செல்ஃபோன் நம்பரை எழுதியிருந்தேன்.’’ - அவள் பொய் சொன்னாள்.
‘‘என்ன சொல்றதுக்காக அவர் அழைச்சார்?’’ - ஆர்வம் இல்லாததைப்போல் காட்டிக்கொண்டு சரோஜம் கேட்டாள்.
‘‘ஆன்ட்டி, உங்ககூட அவர் பேச விரும்புறார். அவரை உண்மையாகவே விருப்பப்பட்டுத்தான் கடிதம் எழுதினீங்களான்னு கேட்டுத் தெரிஞ்சிக்கணுமாம்.’’
‘‘அய்யோ... வேண்டாம்... நான் எதுவும் பேச விரும்பல. இனி இந்த விஷயத்துக்கு நான் இல்ல ரேகா. என்னை விட்டுடு.’’ - போவதற்காக எழுந்துகொண்டே சரோஜம் சொன்னாள்.
ரேகா அவளைப் பிடித்து உட்கார வைத்தாள்.
‘‘இருங்க... போகலாம். பேசுறதுக்கு நீங்க ஒண்ணும் நேர்ல பார்க்கப்போறது இல்லையே! நான் இப்போ என் ஃபோனில் மிஸ்டர் ஹரிதாஸைக் கூப்பிடப் போறேன். அப்போ ஃபோன் மூலமா பேசிக்கலாம். இதயத்தைத் திறந்து பேசணும்னு தோணினால், நான் வெளியே வேணும்னா நிக்கிறேன்... சரியா?’’
‘‘விளையாட்டு கொஞ்சம் அதிகமா போய்க்கிட்டு இருக்கு ரேகா. நான் அதற்குத் தயாரா இல்ல. அந்த ஆளுக்கு கடிதம் அனுப்பினது மிகப் பெரிய தவறாகப் போயிடுச்சு. அந்த ஆளு இனி என்னைப் பற்றி என்ன நினைப்பாரு? ச்சே...’’
‘‘ஆன்ட்டி, அந்த ஆளு உங்களைப் பற்றி என்ன சொன்னார்னு தெரிஞ்சிக்கணுமா?’’
திடீரென்று சரோஜம் முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளைப் பார்த்தாள். அவளுடைய கண்களில் மின்னி மறைந்த ஒளியை அவள் பார்த்தாள்.
‘‘என்ன சொன்னாரு?’’
‘‘சரோஜத்தை முன்பிருந்தே எனக்குப் பிடிக்கும். பல நேரங்கள்ல பார்க்குறப்போ பேசணும்னு விரும்பியிருக்கேன். ஆனால், எப்பவும் தரையையே பார்த்து நடந்துக்கிட்டு போனால்... அழைச்சு நிறுத்தலாம்னு பார்த்தால், அவங்களோட பேர் தெரியாதேன்னு அவர் சொன்னார்.’’
‘‘பொய்... சுத்தப் பொய்...’’ - நம்பிக்கை வராததைப்போல சரோஜம் சொன்னாள்.
‘‘ஆன்ட்டி, உங்ககிட்ட பொய் சொல்லி நான் என்ன அடையப்போறேன்? சந்தேகம் இருந்தால்... இதோ இப்பவே ஃபோன்ல கூப்பிட்டுத் தர்றேன். நீங்க பேசிப் பாருங்க...’’ - என்றாள் அவள்.
‘‘வேண்டாம்... நான் போறேன் - எனக்கு வேறு வேலைகள் இருக்கு.’’
சரோஜம் வேகமாகப் படிகளில் இறங்கிச் சென்றாள்.
ரேகாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சரோஜம் ஆன்ட்டியை அழைத்து பேச வைப்பதாக அண்ணனிடம் அவள் உறுதியாகக் கூறியிருந்தாள். அண்ணன் இப்போது என்ன நினைப்பார்?
அவள் அர்ஜுனை அழைத்தாள்.
‘‘சரோஜம் ஆன்ட்டி வந்துட்டாங்களா?’’ - அவன் கேட்டான்.
‘‘இல்ல... நான் விவரத்தைச் சொன்னவுடன், ஆன்ட்டிக்கு தாங்க முடியாத அளவுக்கு வெட்கம். இன்னைக்கு நடக்குறது மாதிரி தெரியல...’’ - அவள் சொன்னாள்.
‘‘பரவாயில்ல. பிறகு வசதி எப்போ கிடைக்குதோ அப்போ பேசிக்கலாம். அண்ணனுக்கு கொஞ்சம் ஆர்வம் இருக்குறது மாதிரி தெரியுது. பக்கத்து வீட்டில் இருக்கும் அழகியை அண்ணன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மனதில் நினைச்சிருக்கிறார் என்பதை என்னால் புரிஞ்சிக்க முடியுது.’’
‘‘அப்படின்னா நம்ம திட்டம் கட்டாயம் வெற்றிபெறும். சரோஜம் ஆன்ட்டியை சரிக்குக் கொண்டுவர்ற பொறுப்பை நான் ஏத்துக்குறேன். இரண்டபேரின் இதயங்களிலும் காதல் உணர்வை உண்டாக்குவதுதான் நம்மோட வேலை. புரியுதா ஜாக்கி?’’
அதைக் கேட்டு அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான்.
ஹால்மார்க் சேனலில் ஒரு திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்து முடித்துவிட்டுத்தான் ரேகா தூங்குவதற்காகப் படுத்தாள். அப்போது நேரம் பதினொன்றரை ஆகியிருந்தது.
கண்களில் உறக்கம் வந்து அணைத்துக்கொண்ட நேரத்தில் யாரோ தட்டுவதை அவள் உணர்ந்தாள். அவள் எழுந்து விளக்கைப் போட்டாள்.
‘‘ரேகா...’’ - சரோஜம் தாழ்ந்த குரலில் அழைப்பதை அவள் கேட்டாள்.
அவள் கதவைத் திறந்தாள். வெளியே மன்னிப்புக் கேட்கிற மாதிரி சரோஜம் நின்றிருந்தாள்.
‘‘படுத்தாச்சா?’’ - அவள் கேட்டாள்.
‘‘இல்ல, ஆன்ட்டி... உள்ளே வாங்க.’’
சரோஜம் உள்ளே நுழைந்த பின்னால் கதவை அடைத்தாள்.
‘‘படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குது’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘என்ன ஆச்சு?’’ - ரேகா கேட்டாள்.
‘‘என்ன ஆச்சா? எல்லா விஷயங்களையும் செய்து முடிச்சிட்டு எனக்கு எதுவுமே தெரியாது; ராமா, நாராயணா என்று இருக்குறவளாச்சே... நீ...!’’
‘‘நான் அப்படி என்ன செய்துட்டேன்னு சொல்றீங்க ஆன்ட்டி?’’
‘‘என் மன அமைதியைக் கெடுத்துட்டே. அதுதான் நீ செய்தது.’’
அதைக் கேட்டு ரேகா புன்னகைத்தாள். சரோஜம் என்ன சொல்கிறாள் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
‘‘அது ஒரு சுகமான மன அமைதியின்மைதானே ஆன்ட்டி? மிஸ்டர் ஹரிதாஸ்கூட இப்ப பேசணுமா? நான் கூப்பிடுறேன்...’’
‘‘அய்யோ வேண்டாம்.’’
ரேகா சென்று கார்த்தியாயனி இல்லத்திற்கு நேராக இருந்த சாளரத்தைத் திறந்து பார்த்தாள். அங்கு ஒரு அறையில் எப்போதும் விளக்கு எரிந்துகொண்டிருந்தது.
‘‘அதோ பாருங்க... அங்கேயும் ஒரு தனிமையில் இருக்கும் இதயம் தூக்கம் வராமல் நடு இரவு வேளையில் விளக்கை எரியவிட்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறது.’’
சரோஜம் சாளரத்தின் அருகில் வந்து பார்த்தாள்.
‘‘ஆன்ட்டி, நான் ஒரு விஷயத்தைப் பற்றி கேட்டாள், நீங்க உண்மையைச் சொல்லணும்.’’
‘‘ரேகா, உன்கிட்ட நான் பொய் எதுவும் சொன்னதில்லையே!’’
‘‘ஹரிதாஸ் சார் உங்களைத் திருமணம் செய்துகொள்வது உங்களுக்கு விருப்பமான ஒன்றுதானா?’’ -அவள் கேட்டாள்.
‘‘என் விருப்பத்திற்கும் விருப்பமின்மைக்கும் என்ன முக்கியத்துவம் இருக்கிறது! மாதவன் அண்ணனின் சம்மதம் இல்லாமல் எதுவுமே நடக்காது’’ - அவள் சொன்னாள்.
‘‘மாதவன் அண்ணன் சம்மதத்தை நாம வாங்கிடுவோம்.’’
‘‘நடக்காத விஷயம்.’’
‘‘பார்ப்போம். ஆனால், அதற்கு முன்னால் எனக்கு ஒரு விஷயம் தெரியணும். கடைசியில் எல்லாம் சரியாகி வர்றப்போ, நீங்க கால்களை வேறு பக்கம் மாற்றி வச்சுடுவீங்களா ஆன்ட்டி?’’
‘‘அப்படி மாறுவேன்னு நீ நினைக்கிறியா ரேகா?’’ - அவள் கேட்டாள்.
அதற்கு மேல் எதுவும் பேசாமல் சரோஜம் கீழே இறங்கிச் சென்றாள். ரேகா ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள். மாதவன் அண்ணனின் மனதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நாளைக்குப் பார்ப்போம்.
மறுநாள் மதியம் கம்ப்யூட்டர் வகுப்பு முடிந்து ரேகா வந்தபோது, சாப்பிட்டு முடித்த திருப்தியுடன் புகை பிடித்துக்கொண்டு மாதவன் அண்ணன் முன்பக்கத்திலிருந்த அறையில் அமர்ந்திருந்தார்.
‘‘ரேகா, மூணு மாத கோர்ஸ்தானே?’’ - அவர் கேட்டார்.
‘‘ஆமா...’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்படின்னா அதிகபட்சம் இன்னும் ஒரு மாத காலம்தான் உன்னை இங்கே பார்க்க முடியும்.’’
அப்போதுதான் அவளும் அந்த விஷயத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். கோர்ஸ் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. இங்கேயிருந்து போவதற்கு முன்பு...
‘‘மாதவன் அண்ணா, உங்ககிட்ட ஒரு விஷயத்தைப் பற்றி கேட்கணும்னு கொஞ்ச நாட்களாகவே நான் நினைச்சுக்கிட்டு இருக்கேன்’’ - அவள் கேட்டாள்.
‘‘என்ன ரேகா?’’
‘‘உங்களைப்போல தங்கைமீது அன்பு வைத்திருக்கும் ஒரு அண்ணனை நான் இதுவரை பார்த்தது இல்ல. அதனால்தானே சரோஜம் ஆன்ட்டி இங்கே தனியா இருக்குறாங்கன்னு நினைச்சு தினமும் இரவு நேரத்துல நீங்க இங்கேயே தங்குறீங்க?’’
‘‘எங்க அம்மா சாகுறப்போ சரோஜத்தை என்கிட்ட ஒப்படைச்சிட்டுப் போயிட்டாங்க. என்னால அதை மறக்க முடியாதே! நல்ல வயசுல அவளுக்குத் திருமணம் செய்து அனுப்பினேன். ஆனால், அவளோட விதி...’’
‘‘அந்த விஷயத்தைப் பற்றித்தான் நான் கேட்க விரும்புறேன். சரோஜம் ஆன்ட்டிக்கு இப்போகூட வயசு குறைவுதானே மாதவன் அண்ணா? ஆன்ட்டிக்குத் திரும்பவும் திருமணம் செய்து அனுப்பி வைக்கணும்ன்ற விஷயத்தைப் பற்றி நீங்க சிந்திச்சுப் பார்த்தால் என்ன?’’ - எதுவுமே தெரியாத மாதிரி ரேகா கேட்டாள்.
‘‘சரிதான்... நான் எத்தனை திருமண ஆலோசனைகளைக் கொண்டு வந்தேன் தெரியுமா? இனிமேல் திருமணமே வேண்டாம்னு சொல்லிக்கிட்டு இருக்குறவள் அவள். பிறகு, நான் என்ன செய்றது ரேகா?’’ - செயலற்ற நிலையில் இருப்பதைப்போல் மாதவன் அண்ணன் கேட்டார்.
‘‘சரோஜம் ஆன்ட்டிக்கு வயசாகிக்கிட்டே போகுது இல்ல? எப்பவும் துணைக்கு நீங்க இருக்க முடியாது. நிலைமை அப்படி இருக்குறப்போ. நீங்கதானே அதைத் தெரிஞ்சு செய்யணும்...’’
‘‘இந்த விஷயத்தைப் பற்றி அவள் உன்கிட்ட ஏதாவது பேசினாளா என்ன?’’ - சந்தேகத்துடன் கேட்டாள்.
‘‘இல்ல... எனக்குத் தோணியதை நான் சொன்னேன்.’’
‘‘நல்ல திருமண ஆலோசனை ஏதாவது வரட்டும். அப்போ நாம இதைப் பற்றி சிந்திப்போம்’’ - நழுவுகிற பாணியில் அவர் சொன்னார்.
‘‘பத்திரிகையில் நாம இது சம்பந்தமா ஒரு விளம்பரம் கொடுத்தால் என்ன, மாதவன் அண்ணா?’’ - அவள் கேட்டாள்.
‘‘அது நிறைய பணச் செலவு வர்ற ஒரு விஷயமாச்சே! பத்தாயிரம் ரூபாயாவது அதற்கு வேணும். அது மட்டுமல்ல - ஒவ்வொருத்தனும் எழுதி அனுப்புறதை நாம முழுமையா நம்ப முடியுமா? நாற்பத்தஞ்சு வயதுதான் நடக்குதுன்னும், திருமணம் ஆகவில்லைன்னும் எழுதுவான். யாருக்கும் தெரியாமல் அவனுக்கு மனைவியும், இரண்டு பிள்ளைகளும் இருப்பாங்க. எல்லாம் முடிஞ்ச பிறகுதான் நமக்கே தப்பு நடந்திருச்சுன்னு தெரியவரும்.’’
‘‘அப்படின்னா எனக்குத் தெரிஞ்ச யாராவது இருந்தாங்கன்னா, நான் பார்க்கட்டுமா?’’ - அவள் கேட்டாள்.
‘‘அப்படி யாராவது இருக்காங்களா?’’
‘‘ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். இரண்டு நாட்கள்ல சொல்றேன்.’’
‘‘அவசரமில்ல. மெதுவா சொன்னால் போதும்.’’
ரேகாவிற்கு சற்று நிம்மதி உண்டானதைப் போல் இருந்தது. மாதவன் அண்ணனிடமிருந்து இந்த விஷயத்திற்கு சம்மதம் கிடைத்து விட்டதே! தற்போதைக்கு சொல்லிக் கொள்வதற்கு இது போதும்.
சாயங்காலம் அர்ஜுனின் அழைப்பு வந்தது.
‘‘ரேகா, சரோஜம் ஆன்ட்டியின் வெட்கம் மாறிடுச்சா?’’ - அவன் கேட்டான்.
‘‘மாறிக்கொண்டிருக்கு முழுமையா மாறல. ஆமா... அண்ணன் என்ன பண்றாரு?’’
‘‘உங்களை அவசியம் சந்திக்கணும்னு அண்ணன் விருப்பப்படுறாரு. எப்போ சரியா இருக்கும்?’’
‘‘எனக்கு மதியம் வரைதானே வகுப்பு. அதனால் எப்பவும் மதியத்திற்குப் பின்னாடி நான் ஃப்ரிதான்’’- அவள் சொன்னாள்.
‘‘நான் அண்ணன்கிட்ட பேசிய பிறகு கூப்பிடுறேன்.’’
அன்று சரோஜம் அலுவலகத்திலிருந்து வந்தபோது ரேகா வாசலில் நின்றிருந்தாள். அவள் சரோஜத்தின் மந்தாரைக்கும் துளசிக்கும் வாடாமல்லிக்கும் பிச்சிக்கும் நீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
‘‘மாதவன் அண்ணன் போயாச்சா ரேகா?’’
‘‘மாதவன் அண்ணன் எப்பவோ பாப்பனம்கோட்டை அடைந்து தேநீர் குடித்து முடித்து தன் மனைவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பார். ஆன்ட்டி, நீங்க சொல்ற அளவுக்கு மனிதத் தன்மை இல்லாதவர் அல்ல மாதவன் அண்ணன். பொருத்தமான ஒரு ஆண் கிடைத்தால், உடனடியாக உங்க திருமணத்தை நடத்தத் தயாரா இருக்கிறார் மாதவன் அண்ணன். எனக்குத் தெரிஞ்சு யாராவது இருக்காங்களான்னுகூட கேட்டார்’’ - அவள் சொன்னாள்.
‘‘என்ன ரேகா, எதுக்கு இப்படி ஊர்ல இல்லாத பொய்களை உருவாக்குற? அந்த அளவுக்கு நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்?’’ - சரோஜம் கேட்டாள்.
‘‘நம்ப வேண்டாம்... ஆனால், தங்கைமீது அன்பு இருக்கும் என்பதை சீக்கிரமே நீங்க புரிஞ்சுக்கத்தான் போறீங்க, ஆன்ட்டி.’’
‘‘மாதவன் அண்ணனை நான் புரிஞ்சு வச்சிருக்குற அளவுக்கு உன்னால தெரிஞ்சிக்க முடியாது மகளே.’’
அலட்சியமாக சிரித்த சரோஜம் பேக், குடை ஆகியவற்றுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.
இரவில் அர்ஜுனின் அழைப்பு வந்தது. ஆனால், ஹரிதாஸ்தான் பேசினான்.
‘‘ரேகா, நாளை மதியம் மூன்றரை மணிக்கு நாம சந்திக்கிறோம். ஸ்பென்சர் சந்திப்பில் பாரிஸ் – டி - கஃபே என்ற ஒரு ரெஸ்டாரெண்ட் இருக்கு. அங்குதான் நாம சந்திக்கிறோம். வருவதற்கு சிரமம் எதுவும் இருக்கா?’’
‘‘இல்ல... ஆனால், இந்த ஸ்பென்சர் சந்திப்பு எனக்குத் தெரியாதே!’’ - அவள் சொன்னாள்.
‘‘வெள்ளையம்பலத்திலிருந்து பஸ் பல்கலைக்கழகக் கல்லூரி நிறுத்தத்தில் இறங்குங்க. நேரா முன்னோக்கி நடந்தால் ஸ்பென்சர் சந்திப்புதான்...’’
‘‘நான் வர்றேன். ஜாக்கியும் வர்றாரா?’’
‘‘இல்ல... தர்மேந்திரா மட்டும்தான்.’’
அதைக்கேட்டு அவள் சிரித்துவிட்டாள். பழகுவதற்கு இனிய மனிதன்தான். சரோஜம் ஆன்ட்டிக்கு இப்படிப்பட்ட ஒரு ஆள்தான் தேவை.
தர்மேந்திராவுடன் நடக்க இருக்கிற மறுநாள் சந்திப்பைப் பற்றி அவள் சரோஜத்திடம் கூறவில்லை. எதற்காக அந்த அப்பிராணியின் மன அமைதியை மேலும் கெடுக்க வேண்டும் என்று அவள் நினைத்ததே காரணம்.
மறுநாள் பிற்பகல் மூன்றரை மணி ஆனபோது ரேகா பாரிஸ் – டி - கஃபேக்குள் நுழைந்தாள். ஹரிதாஸ் அப்போது அவளுக்காக அங்கு காத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவளைப் பார்த்ததும் அவன் எழுந்து வந்து வரவேற்று காலியாகக் கிடந்த ஒரு மேஜைக்கு அருகில் அவளை அழைத்துச் சென்றான்.
‘‘சிரமம் எதுவும் இல்லையே?’’ - அவன் மரியாதையுடன் கேட்டான்.
‘‘நோ... ராதர் இட் ஈஸ் எ ப்ளஷர்’’ - அவள் சொன்னாள்.
அவர்களின் மேஜையின் இரு பக்கங்களிலுமாக உட்கார்ந்தார்கள்.
‘‘ரேகா, என்ன பருகுறீங்க?’’ - அவன் கேட்டான்.
‘‘காஃபி.’’
இரண்டு காஃபிக்கு ஆர்டர் சென்றது.
‘‘சார், சரோஜம் ஆன்ட்டியைப் பற்றி நீங்க என்ன தெரிஞ்சிக்கணும்?’’ - அவள் கேட்டாள்.
‘‘ரேகா, என்னை அண்ணன் என்றோ, தர்மேந்திரா என்றோ நீங்க அழைக்கலாம். ஃபோன்ல பேசினப்போ அண்ணன்னுதானே கூப்பிட்டீங்க. இப்போ இந்த சார் எங்கேயிருந்து கிடைச்சது?’’
அவள் புன்னகைத்தாள்.
‘‘அண்ணா, உங்களுக்கு சரோஜம் ஆன்ட்டியைப் பற்றி என்ன தெரிஞ்சிக்கணும்?’’
‘‘சரோஜத்தின் திருமண உறவில் விரிசல் உண்டானதற்குக் காரணம் என்ன?’’ - ஹரிதாஸ் கேட்டான்.
சரோஜம் சொன்ன காரணங்களை அவள் சொன்னாள். பிறகு அவன் கேட்ட கேள்விகளுக்குத் தனக்குத் தெரிந்த அளவில் பதில்களைக் கூறினாள்.
‘‘சரோஜம் எம்.ஏ. முடிச்சாச்சு. அப்படித்தானே?’’ - ஆர்வத்துடன் அவன் கேட்டான்.
‘‘ஆமா... லிட்டரேச்சர் படிச்சிருக்காங்க.’’
‘‘சரோஜத்தின் மாதவன் அண்ணன் கொஞ்சம் முரட்டுத்தனமான ஆள் என்பது என் வீட்டில் இருப்பவர்களின் கருத்து’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘பலரும் நினைக்கிற மாதிரி அந்த அளவுக்குக் கடினமான இதயத்தைக் கொண்ட மனிதர் இல்லை அவர். பொருத்தமான ஆள் வந்தால் ஆன்ட்டியின் திருமணத்தை நடத்தி வைப்பதாக நேற்று என்கிட்ட சொன்னார்.’’
‘‘கார்த்தியாயனி இல்லத்தில் நான் வந்து தங்க ஆரம்பித்து இப்போ மூணு வருடங்கள் ஆகிவிட்டன. சரோஜத்தை அப்பவே கவனிச்சிருக்கேன். ஒரு துக்க கதாபாத்திரம் என்று மனதில் பட்டிருக்கு.’’ - அவன் சொன்னான்.
‘‘விருப்பம் ஏதாவது...’’
‘‘இல்ல... ஆனால், ஆர்வம் தோணியிருக்கு. இவ்வளவு விஷயங்களும் தெரிஞ்ச பிறகு, சரோஜத்தை திருமணம் செய்ய எனக்கு விருப்பம்தான்.’’
‘‘சரோஜம் ஆன்ட்டிக்காக நான் சில கேள்விகளை உங்களிடம் கேட்கலாமா? உங்களுக்கு சொந்தம்னு யார் யார் இருக்காங்க?’’ - அவள் கேட்டாள்.
‘‘அப்பாவும் அம்மாவும் எப்பவோ இறந்துட்டாங்க. ஒரு தம்பியும் தங்கையும் இருக்காங்க. தம்பி டில்லியில் குடும்பத்துடன் இருக்கிறான். தங்கைக்கும் திருமணம் ஆயிடுச்சு. குடும்ப வீட்டை அவளுக்குக் கொடுத்தாச்சு.’’
‘‘நீங்க இதுவரை ஏன் திருமணமே செய்துக்கல அண்ணா?’’
‘‘முன்னால் நின்று திருமணம் செய்து வைக்க யாருமில்லை. அதுதான் உண்மை. நானே இந்த விஷயத்துல தனியா இறங்கி ஏற்பாடுகளைச் செய்றதுக்கு கூச்சம் அனுமதிக்கல. ஒரு குறிப்பிட்ட வயது தாண்டின பிறகு, இனி அது தேவையில்லைன்னு மனசுல தோண ஆரம்பிச்சிடுச்சு.’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘அப்படியொண்ணும் வயசு தாண்டிடலையே!’’ - அவன் சொன்னாள்.
காஃபி வந்தது.
‘‘நான் சரோஜத்தைக் கொஞ்சம் பார்க்கணும்னு நினைக்கிறேன்.’’
‘‘வெறுமனே பார்த்தால் போதும்னா, தபால் தலைகள் வாங்குறதுக்காக அஞ்சல் நிலையத்துக்குப் போனால் போதுமே!’’
‘‘பேசவும் செய்யணும்.’’
‘‘அப்படின்னா ஒருநாள் சரோஜா நிவாஸுக்கு வாங்க.’’
அரைமணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் பிரிந்தார்கள்.
மறுநாள் சாயங்காலம் அலுவலகத்திலிருந்து வந்தபோது சரோஜம் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க படிகளில் ஏறி ஓடிவந்தாள்.
‘‘என்ன ஆன்ட்டி?’’ - ரேகா கேட்டாள்.
‘‘அந்த ஆளு அஞ்சல் நிலையத்துக்கு இன்னைக்கு வந்தாரு ரேகா. பத்து ரெவின்யூ ஸ்டாம்புகள் வேணும்னு சொன்னாரு. எனக்கு ஒரே பரபரப்பு. பத்துக்குப் பதிலாக இருபது ஸ்டாம்புகளை நான் கொடுத்துட்டேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘பிறகு?’’
‘‘ஸ்டாம்புகளை எண்ணுறப்போ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும்னு சொல்லி பத்து ஸ்டாம்புகளைத் திருப்பிக் கொடுத்திட்டாரு.’’
‘‘ஆளைப் பிடிச்சிருக்கா?’’
சரோஜம் அதற்குப் புன்னகைக்க மட்டும் செய்தாள்.
‘‘ஞாயிற்றுக்கிழமை மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் போன பிறகு, நான் நாலு பேரையும் இங்கே வரச்சொல்லட்டா? பார்ப்போம். பேசுவோம். என்ன?’’ - அவள் கேட்டாள்.
‘‘அய்யோ... வேண்டாம்.’’
‘‘நான் வரச்சொல்றேன். பெண் பார்க்கும் நிகழ்ச்சி அன்னைக்கு நடக்கட்டும்.’’
‘‘மாதவன் அண்ணனுக்கு இது தெரிஞ்சா...?’’
‘‘ஒரு பிரச்சினையும் வராது. நான் சொல்றேன்ல...’’
அன்றே அர்ஜுனை அழைத்து ரேகா அந்த விஷயத்தைச் சொன்னாள். ஞாயிற்றுக்கிழமை அவர்கள் வருவதாக மறுநாள் கூறப்பட்டும்விட்டது.
அந்த ஞாயிற்றுக்கிழமை இரண்டு மணி ஆனபோது மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்குப் புறப்பட்டார். இரண்டரை மணி ஆனபோது ஹரிதாஸும் மற்றவர்களும் சரோஜா நிவாஸுக்குள் நுழைந்தார்கள். ரேகா அவர்களை வரவேற்று உட்கார வைத்தாள்.
அப்போது யாரோ கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. பார்த்தபோது மாதவன் அண்ணன் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
ஹரிதாஸும் நண்பர்களும் பதைபதைப்புடன் ரேகாவைப் பார்த்தார்கள். அவளுடைய முகம் வெளிறிப்போனது.
மாதவன் அண்ணனைப் பார்த்ததும் ரேகாவின் தைரியம் முழுவதும் இல்லாமல் போனது. அவர் திரும்பவும் வீட்டிற்குள் வருவார் என்பதை அவள் கனவில் கூட நினைத்தது இல்லை.
‘‘நாங்கள் வரும் விஷயம் மாதவன் அண்ணனுக்குத் தெரியுமா?’’ - திடீரென்று ஹரிதாஸ் கேட்டான்.
‘‘தெரியாது... நாங்கள் சொல்லல...’’ - பதைபதைப்புடன் ரேகா சொன்னாள்.
கார்த்தியாயனி இல்லத்தில் இருப்பவர்களைப் பற்றி மாதவன் அண்ணனுக்கு சிறிதுகூட நல்ல அபிப்ராயம் இல்லை. ஒருமுறை கேட் வழியாக இங்கு எதற்காகப் பார்க்க வேண்டும் என்று கேட்டு ராகுலை நிறுத்திஅடிக்க முயன்ற மனிதர் அவர்.
ரேகா அடுத்த நிமிடம் முன்பக்கம் இறங்கிச் சென்றாள். வாசலைத் தாண்டி வந்து கொண்டிருந்த மாதவன் அண்ணன் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்.
‘‘வசந்தா அவளோட செருப்பை சரி பண்ணித் தருவதற்காக என்கிட்ட கொடுத்து அனுப்பியிருந்தாள். நான் அதை எடுத்துட்டுப் போக மறந்துட்டேன்...’’
வராந்தாவிற்குள் வந்தபோதுதான் முன்பக்க அறையில் உட்கார்ந்திருந்த ஹரிதாஸையும் அர்ஜுனையும் ராகுலையும் ஜெயந்தையும் அனூப்பையும் மாதவன் அண்ணன் பார்த்தார். நம்ப முடியாமல் அவர் அவர்களையே மாறி மாறிப் பார்த்தார்.
அடுத்த நிமிடம் மாதவன் அண்ணனுடைய முகம் கறுத்தது.
‘‘இங்கே உங்களுக்கு என்ன வேலை?’’ - குரலை உயர்த்தி அவர் கேட்டார்.
‘‘நான்... நாங்கள்...’’ - என்ன சொல்வதென்று தெரியாமல் ஹரிதாஸ் தடுமாறினான்.
‘‘மாதவன் அண்ணா, நான் சொல்லித்தான் இவங்க வந்திருக்காங்க. தெரியும்ல... கார்த்தியாயனி இல்லத்துல இருக்குறவங்க...’’ - ரேகா திடீரென்று இடையில் புகுந்தாள்.
‘‘சொல்ல வேண்டாம்... எனக்குத் தெரியும்... எல்லா இவன்மார்களையும்... வீட்டில் ஆம்பளைங்க இல்லாத நேரமா பார்த்து நீ வீட்டுக்குள்ளே வந்திருக்குற நோக்கம் என்னன்னு புரியுது. உன்னை மாதிரி பல ஆளுங்களை பார்த்தவன் நான். பெண்களைக் கண்ணையும் கையையும் காட்டி வசீகரிச்சு...’’
‘‘மாதவன் அண்ணா! நீங்க எங்களைப் பற்றி தப்பாப் புரிஞ்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேசுறீங்க...’’ - ஹரிதாஸ் சொல்ல ஆரம்பித்தான்.
‘‘யார்டா உன் மாதவன் அண்ணன்? எழுந்திரிங்க... ம்... எழுந்திரிக்கச் சொன்னேன்ல...’’ - மிரட்டும் குரலில் முஷ்டியைச் சுருட்டி வைத்துக் கொண்டு மாதவன் அண்ணன் ஹரிதாஸை நெருங்கினார்.
தங்களையும் மீறி ஹரிதாஸும் மற்றவர்களும் எழுந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் ரேகா பதைபதைப்புடன் பார்த்தாள். பயந்து நடுங்கிப் போய் சரோஜம் கதவுக்குப் பின்னால் சுவரோடு சாய்ந்து நின்றிருந்தாள்.
‘‘ஏய் மிஸ்டர்... நீங்க பார்த்துப் பேசணும். இது உங்க வீடுன்னுகூட நான் பார்க்க மாட்டேன். மரியாதைக் குறைவா ஏதாவது பேசினால் நான் அடிச்சு...’’ - ராகுல் எதற்கும் தயாராகி மாதவன் அண்ணனை நெருங்கினான்.
‘‘நீ என்னை என்னடா செய்ய முடியும்? அடிச்சிருவியா? எங்கே அடி... பார்ப்போம்’’ - மாதவன் அண்ணன் சவாலை ஏற்றுக் கொண்ட மாதிரி முன்னோக்கி வந்தார்.
ரேகா அடுத்த நிமிடம் அவர்களுக்கிடையில் வந்து நின்றாள்.
‘‘ப்ளீஸ்... மாதவன் அண்ணா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க... ஹரிதாஸ் சார் சரோஜம் ஆன்ட்டியை திருமணம் செய்துகொள்ள விரும்புறாரு. இந்த விஷயத்தைப் பேசுறதுக்காகத்தான் இவங்க இங்க வந்ததே. நான்தான் இவங்களை இங்கே வரச்சொன்னேன். தயவு செய்து இவங்களை அவமானப்படுத்தாதீங்க...’’ - கலங்கிய கண்களுடன் அவள் சொன்னாள்.
‘‘என் தங்கைக்குத் திருமணம் செய்து வைக்க பேசுறதுக்கு நீ யாருடி? வாடகைக்காரி வீட்டுக்காரியாகலாம்னு பார்க்காதே. நீ இங்கே வந்த அன்னைக்கே என் மனசுல பட்டது... நீ சரியான ஆள் இல்லைன்னு. இவன்கள் இந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சதுக்கு நீ ஒருத்திதான்டி காரணம்...’’ - மாதவன் அண்ணன் அவளை நோக்கித் திரும்பினார்.
‘‘மாதவன் அண்ணா! என்னை மன்னிக்கணும். சரோஜம் ஆன்ட்டியின் திருமணம் நடக்க வேண்டும்ன்ற விருப்பம் மட்டுமே எனக்கு. உங்களின் அனுமதி கிடைத்ததால் மட்டுமே நான்... உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயமாக இது இருக்கட்டுமேன்னு நினைச்சுத்தான், முன்கூட்டியே இதைப்பற்றி உங்களிடம் சொல்லல...’’ - ரேகா சொன்னாள்.
‘‘என் தங்கைக்கு திருமண விஷயமா பேசுறதுக்கு உன் உதவியொண்ணும் எனக்குத் தேவையில்லைடி. அது மட்டுமல்ல. நல்ல அந்தஸ்தும், கவுரவமும் உள்ள குடும்பத்தில் பிறந்த பையன் என் தங்கைக்குக் கிடைப்பான். இந்த மாதிரியான கேடுகெட்டவன்களை என் வீட்டுக்குள்ளே நுழையவிட்டது எனக்கு மானக்கேடான விஷயம்...’’ - மாதவன் அண்ணன் மீண்டும் தன் குரலை உயர்த்தினார்.
‘‘யார்டா கேடுகெட்டவன்க... இன்னொரு தடவை நீ சொல்லு... பார்ப்போம்...’’ - ராகுல் கையை உயர்த்திக் கொண்டுவேகமாகச் சென்றான்.
ஜெயந்தும் அனூப்பும் சேர்ந்து ராகுலைப் பின்னால் பிடித்து இழுத்தார்கள்.
‘‘எல்லாம் என் தப்பு... நான் யோசிக்காம கிளம்பி வந்துட்டேன். வாங்க... நாம போகலாம்.’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘உன் காலை அடிச்சு உடைச்சு இங்கே போட என்னால முடியாதது இல்ல... ஆனா... போயிடு... என் வீட்டில் கலாட்டா நடந்திருக்குன்னு ஊர்க்காரங்களுக்குத் தெரிய வேண்டாம்...’’ - மாதவன் அண்ணன் ஏளனமாகச் சொன்னார்.
பேச்சிலர்கள் எதுவும் கூறாமல் வெளியேறினார்கள். ரேகா திகைத்துப் போய் நின்றிருந்தாள். இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை.
‘‘சரோஜம்...’’ - மாதவன் அண்ணன் உரத்த குரலில் அழைத்தார்.
‘‘என்ன?’’ - அவள் கேட்டாள்.
‘‘இங்கே வா...’’ - அவர் கட்டளையிட்டார்.
கதவுக்குப் பின்னால் நின்றிருந்த சரோஜம் தட்டுத்தடுமாறிய காலடிகளுடன் முன்பக்கமிருந்த அறைக்கு வந்தாள். அவளுடைய முகம் பயத்தால் வெளிறிப்போயிருந்தது.
‘‘உனக்குத் தெரிஞ்சாடி இங்கே இந்த நாடகம் நடந்தது?’’ - வெடி வெடிக்கும் குரலில் அவர் கேட்டார்.
சரோஜம் அதைக்கேட்டு நடுங்கிச் சிதறி விட்டாள். அவர் தன்னை அங்கிருந்து போகச் சொல்லப்போவது உறுதி என்பது மட்டும் ரேகாவிற்குத் தெரிந்தது.
‘‘ரேகாவிடம் நான் ஏற்கெனவே சொன்னேன் - எந்தக் காரியத்தையும் செய்ய வேண்டாம்னு’’ - நடுங்குகிற குரலில் சரோஜம் சொன்னாள்.
‘‘அந்தப் பொறம்போக்குப் பயலை நீ கல்யாணம் பண்ணணுமா?’’
‘‘வேண்டாம்...’’
‘‘ம்... போ... இனிமேல் இப்படியொரு சம்பவம் நடக்கக்கூடாது.’’
சரோஜம் ரேகாவைச் சிறிதுகூட பார்க்காமல் உள்ளே போனாள்.
பிறகு மாதவன் அண்ணன் ரேகாவிற்கு நேராகத் திரும்பினார்.
‘‘போதும்.. நீ இங்கே தங்கினது. இன்னைக்கே நீ இங்கேயிருந்து கிளம்பணும்...’’ - அவர் சொன்னார்.
ரேகா எதுவும் பேசவில்லை. உடனடியாக வேறொரு தங்குமிடத்தைக் கண்டுபிடிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிவடைய இனியும் ஒருமாதம் இருக்கிறது. அதற்கு முன்பே பெட்டி, படுக்கைகளுடன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றால்...
கோர்ஸை முழுமையாக முடித்து தேர்வு முடியாமல் வீட்டிற்குச் சென்றால் தந்தையிடமும் தாயிடமும் என்ன கூறுவது?
‘‘நான் திரும்பி வர்றப்போ நீ இங்கே இருக்கக்கூடாது புரியுதா?’’
அவளுக்கு இறுதி எச்சரிக்கையைக் கூறிவிட்டு அவர் கோபத்துடன் வெளியேறினார்.
ரேகா, சரோஜத்தின் அருகில் சென்றாள். சுவர்மீது சாய்ந்து நின்றுகொண்டு அவள் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.
‘‘ஆன்ட்டி...’’ - அவள் அழைத்தாள். முகத்தை உயர்த்தி சரோஜம் அவளைப் பார்த்தாள்.
‘‘என்மீது கோபம்னு தோணுது. அப்படித்தானே? என்னால...’’
‘‘எனக்கு யார்மீது கோபம் இல்ல. எல்லாம் என் விதி...’’ - அவள் சொன்னாள்.
‘‘அந்த விதியைக் கொஞ்சம் திருத்தி எழுத முடியுமான்னு நான் ஒரு முயற்சி பண்ணிப் பார்த்தேன். ஆனால், மாதவன் அண்ணன் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வருவார்ன்னு நான் சிறிதுகூட நினைக்கல. ஹரிதாஸ் சாரும் ஆன்ட்டியும் மனம் திறந்து பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை உண்டாக்குவதற்குத்தான் நான் அவர்களை அழைத்திருந்தேன்.’’
‘‘மாதவன் அண்ணன் அப்போ வராம இருந்திருந்தாலும் இந்த திருமணம் நடக்காது. மாதவன் அண்ணன் ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சு இதை நிறுத்திடுவார்.’’
‘‘நான் இன்னைக்கே இங்கேயிருந்து போகணும்னு மாதவன் அண்ணன் சொன்னாரே!’’
‘‘நானும் கேட்டேன். எல்லாம் உன்னோட வேலைதான். எனக்கு இதையெல்லாம் செய்வதற்கான தைரியம் இல்லைன்னு மாதவன் அண்ணனுக்கு நல்லா தெரியும். ரேகா, கோர்ஸை முழுமையா முடிக்காமல் நீ ஊருக்குத் திரும்பிப் போறதுன்றது உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய ஒரு விஷயம்தான்’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘மணி மூணாயிடுச்சு. இப்போ புறப்பட்டால், திருச்சூருக்குப் போறப்போ இரவு ரொம்ப நேரம் ஆயிடும்.’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்போ... போறதுன்னு தீர்மானிச்சிட்டியா?’’
‘‘இனிமேல் நான் இங்கே இருக்குறது சரியா வராது. அப்படி இருந்தால் அது எனக்கும் மாதவன் அண்ணனுக்கும் உங்களுக்கும் பிரச்சினைகளைத் தரக்கூடிய ஒரு செயலா இருக்கும். ஏதாவது ஹாஸ்டல்ல இடம் கிடைக்குறதுன்றது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம். எனக்கு இங்கே தெரிஞ்சவங்க வேற யாருமில்ல...’’
இரண்டு பேரும் சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தார்கள்.
‘‘எது எப்படி இருந்தாலும் நான் நாளைக்குக் காலையில்தான் போவேன். இல்லாட்டி மாதவன் அண்ணன் வந்து என்னைப் பிடிச்சு வெளியே தள்ளட்டும்.’’- ரேகா சொன்னாள்.
அவள் படிகளில் ஏறி மாடிக்குச் சென்றாள். இனி இந்த வீட்டில் தங்கினால் சரியாக இருக்காது. சிறையில் இருப்பதைப்போல் இருக்கும் அது. சுதந்திரம் சிறிதும் இருக்காது எல்லா நேரங்களிலும் அவள் கவனிக்கப்பட்டுக் கொண்டிருப்பாள். தமாஷான விஷயங்கள் இருக்காது. சிரிப்புக்கு இடமே இருக்காது.
ஏர்பேக்கை எடுத்து அவள் தன்னுடைய ஆடைகளை அதில் வைக்க ஆரம்பித்தாள். நாளை வருவதாக வீட்டிற்கு ஃபோன் பண்ணிச் சொல்ல வேண்டும். ஆனால், என்ன காரணத்தைக் கூறுவாள்?
திடீரென்று அவளுடைய செல்ஃபோனில் மணி அடிக்க ஆரம்பித்தது. அவள் வேகமாகச் சென்று அதை எடுத்தாள். அர்ஜுன்தான் அழைத்தான்.
‘‘ஹலோ ஜாக்கி’’ - அவள் சொன்னாள்.
‘‘ரேகா, நீங்க செய்தது சரிதானா? இங்கே வந்தவுடன் ராகுலும் ஜெயந்தும், அனூப்பும் என்னை அடிச்சு உதைக்கல. அது ஒண்ணுதான் மிச்சம். உங்க வார்த்தைகளைக் கேட்டு அங்கே வந்ததுக்கு அவங்க என்னை என்னவெல்லாம் சொன்னாங்க தெரியுமா?’’
‘‘ஸாரி ஜாக்கி. இனி என் வார்த்தைகளைக் கேட்க வேண்டியது இருக்காது. நான் இங்கேயிருந்து கிளம்புறேன்.’’ - அவள் சொன்னாள்.
‘‘அப்படின்னா...’’
‘‘இன்னைக்கே அறையைக் காலி பண்ணணும்னு மாதவன் அண்ணன் கடுமையா சொல்லிட்டாரு. நாளை காலை ஏழரை மணிக்கு ஐலண்ட் எக்ஸ்பிரஸ்ஸில் நான் ஊருக்குப் போறேன்.’’
‘‘அப்படின்னா கோர்ஸ்...?’’
‘‘முழுமையடையாத சில படிப்புகள் யாருடைய வாழ்க்கையில் இல்லாமல் இருக்கு?’’
‘‘பரவாயில்ல... நீங்க கவலைப்பட வேண்டாம்.’’
‘‘அண்ணன் என்ன சொல்றாரு?’’
‘‘வந்தவுடன் அறைக்குள் நுழைஞ்சு கதவை அடைச்சார். அண்ணனுக்கு அது மிகவும் அதிர்ச்சி தந்த ஒரு சம்பவமாக ஆகிவிட்டது.’’
‘‘அண்ணன் என்னை மனசுக்குள்ளே திட்டியிருப்பாரு’’ - அவள் சொன்னாள்.
‘‘அண்ணன் அப்படிப்பட்ட ஆள் இல்லை. உங்க கையில் நம்பர் இருக்குல்ல! நேரம் கிடைக்கிறப்போ அழைச்சு பேசணும்.’’
அன்று மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்குச் செல்லவேயில்லை. ஒருமணி நேரம் சென்றதும், அவர் திரும்பி வந்தார்.
சிறிது நேரம் சென்றதும் அவர் படிகளில் ஏறி மாடிக்கு வந்தார். அவர் மது அருந்தியிருந்தார். கண்கள் மிகவும் சிவந்து காணப்பட்டது.
அடைக்கப்பட்டிருந்த கதவை அவர் தொடர்ந்து தட்டினார். ரேகா எழுந்து சென்று கதவைத் திறந்தாள். ‘‘நீ இன்னமும் போகலையா?’’ - குரலை உயர்த்திக் கேட்டார்.
அவள் எதுவும் பேசவில்லை.
‘‘இந்த நிமிடமே இங்கேயிருந்து கிளம்பணும். இந்த நிமிடமே... இனியும் உன்னை இந்த வீட்டில் வச்சிருக்க முடியாது. நீ விஷம். என் தங்கையை நீ கெடுத்திடுவே. சீக்கிரம் கிளம்பு...’’
அவள் அறைக்குள் வந்து அவளுடையபேக்கை எடுத்தார்.
திடீரென்று ரேகாவிற்கு எப்படியோ கொஞ்சம் தைரியம் வந்தது.
‘‘பேக்கை அங்கே வைங்க’’ - அவள் சொன்னாள்.
அவளுடைய குரலில் அந்த அளவிற்கு கடுமை இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் அவளையே வெறித்துப் பார்த்தார்.
‘‘இது உங்களின் வீடாக இருக்கலாம். ஆனால், இந்த அறையை நீங்க எனக்கு வாடகைக்கு தந்திருக்கீங்க. என் அனுமதியில்லாமல் நீங்க இங்கு வர உரிமையே இல்லை. பேக்கை அங்கே வச்சிட்டு மரியாதையா இறங்கிப் போங்க’’ - அவள் சொன்னாள்.
‘‘நீ என்னை பயமுறுத்துறீயா?’’- கிண்டலான குரலில் அவர் கேட்டார்.
‘‘பயமுறுத்தல ஒரு இளம்பெண் தனியாக இருக்குற அறைக்குள் ஒரு ஆண் பலவந்தமா நுழைஞ்சு வந்தால், அந்த மனிதர் போலீஸ்கிட்ட விளக்கம் சொல்ல வேண்டியதிருக்கும்’’ - செல்ஃபோனைக் கையில் எடுத்தவாறு அவள் சொன்னாள்.
பேக்கை தரையில் வைத்துவிட்டு அவர் அவளை முறைத்துப் பார்த்தார்.
‘‘இங்கே பார். இருபத்துநாலு மணி நேரத்திற்குள் உன்னை நான் இங்கேயிருந்து வெளியே வீசி எறியிறேன்’’ - அவர் உரத்த குரலில் கத்தினார்.
‘‘அந்த அளவுக்குச் சிரமப்பட வேண்டாம். நாளை காலையில் நான் அறையைக் காலி பண்ணிடுவேன். வாடகை பாக்கி எவ்வளவுன்னு கணக்கு பார்த்து சொன்னா போதும்...’’
வந்ததைப் போலவே அவர் கீழே இறங்கிச் சென்றார். ரேகா மீண்டும் பொருட்களை பேக் பண்ண ஆரம்பித்தாள்.
இரவில் சாப்பிடுவதற்கு அவள் கீழே செல்லவில்லை. வழக்கமான நேரம் கடந்தபிறகும் அவள் செல்லாமல் இருக்கவே, சரோஜம் ஏறி மேலே வந்தாள்.
‘‘என்ன? இன்னைக்கு உண்ணாவிரதமா?’’ - அவள் கேட்டாள்.
‘‘பசியில்லாததால் வரல...’’ - அவள் சொன்னாள்.
‘‘ரேகா, நீ இரவுநேரம் சாப்பிடாமல் இருந்தால் எனக்கு மனசு கஷ்டமாக இருக்கும். எது எப்படியோ நாளை நீ கிளம்புறேல்ல? வா... குடிச்சு குடிச்சு மாதவன் அண்ணன் தூங்கிட்டாரு.’’
சரோஜம் மீண்டும் வற்புறுத்தவே, அவள் சென்று சாப்பிட்டாள். படுப்பதற்கு முன்னால் சரோஜம் அவளுடைய அறைக்கு வந்தாள்.
‘‘காலையில் ஒருவேளை பேசுவதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிடலாம் ரேகா. மாதவன் அண்ணனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.’’ - சரோஜம் சொன்னாள்.
‘‘அதற்கான அவசியமே இல்ல ஆன்ட்டி. மாதவன் அண்ணன் சொன்னது உண்மைதானே? மாதவன் அண்ணனின் தங்கைக்குத் திருமணம் செய்து வைத்து அனுப்பி வைக்க நான் யார்? அதற்கு முன் கை எடுக்க எனக்கு என்ன உரிமை இருக்கு? ஆன்ட்டி. உங்களுக்கு இல்லாத ஆர்வம் எனக்கு எதற்கு? - அவள் கேட்டாள்.
‘‘ரேகா, எனக்கு விருப்பமில்லைன்னா இப்பவும் நீ நினைக்கிறே?’’
‘‘விருப்பம் மட்டும் இருந்தால் போதாது... தைரியமும் இருக்கணும். ஆன்ட்டி, உங்களுக்கு இல்லாமல் போனது அதுதான். அண்ணனின் நிழலைவிட்டு விலகிய வாழ்க்கை வாழ உங்களால் முடியாது. அடிமைத்தனத்தில்தான் உங்களுக்குச் சந்தோஷம்.’’
‘‘ரேகா...’’ - அவள் கூப்பாடு போடுவதைப்போல் இருந்தது.
தான் சொன்னது சற்று அதிகமாகிவிட்டது என்று அவளுக்குத் தோன்றியது. பிரியும்போது எதற்குப் பழி கூறலும் குற்றம் சுமத்தலும்?
‘‘மனதில் அடக்கி வைக்க முடியாமல் சொல்லிவிட்டேன். ஆன்ட்டி... என்னை மன்னிச்சிடுங்க.’’
‘‘ரேகா, நீ என்னைப் பற்றி சொன்னதெல்லாம் உண்மைதான். என்னைக் காப்பாற்றி அழைச்சிட்டுப் போக இனியொரு ராஜகுமாரன் வரமாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும்’’ - சரோஜம் சொன்னாள்.
புடவைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்த சரோஜம் கீழே இறங்கிச் சென்றாள்.
ரேகா கடிகாரத்தைப் பார்த்தாள். மணி பத்து ஆகியிருந்தது. அவளுடைய தந்தை தூங்குவதற்கான நேரம் ஆகவில்லை. அவள் தன் வீட்டு எண்ணை டயல் செய்தாள்.
சிவராமகிருஷ்ணன்தான் ரிஸீவரை எடுத்தார்.
‘‘ஹலோ... அப்பா, நான்தான்’’ - அவள் சொன்னாள்.
‘‘என்ன மகளே, இந்த நேரத்துல...?’’
‘‘அப்பா, உங்களை அதிர்ச்சியடையச் செய்றதுக்காக அழைச்சேன்...’’
‘‘ஒரு நிமிடம்... இதோ... நான் அதிர்ச்சியடையத் தயாராயிட்டேன். இனி சொல்லு...’’ - சிவராமகிருஷ்ணன் சொன்னார்.
‘‘கோர்ஸைப் போதும்னு நிறுத்திட்டு நாளைக்கு நான் வீட்டுக்கு வர்றேன்.’’
‘‘என்ன மகளே, இவ்வளவு சீக்கிரம்...?’’
‘‘எனக்கு வெறுத்துப் போச்சு. சரியான போர்... நினைச்ச மாதிரி பயனுள்ளதா கோர்ஸ் இல்ல...’’
‘‘நோ ப்ராப்ளம். நீ எந்த வண்டியில வர்ற?’’
‘‘ஐலண்ட் எக்ஸ்பிரஸ்ல...’’
‘‘சவுகரியம் இருந்தால் ஸ்டேஷனுக்கு நானே வர்றேன். இல்லாட்டி வண்டியை அனுப்புறேன்.’’
‘‘தேங்க்ஸ் அப்பா... குட்நைட்...’’
‘‘குட்நைட்...’’
அவளுக்கு நிம்மதியாக இருந்தது. கேள்வி கேட்டல் இல்லை. குற்றப்படுத்தல் இல்லை. இதைப் போன்ற ஒரு தந்தை கிடைக்க அவள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
ரேகா சென்று கார்த்தியாயனி இல்லத்திற்கு நேராக இருந்த சாளரத்தைத் திறந்தாள். அங்கு எந்த அறையிலும் வெளிச்சம் இல்லை. மரண வீட்டைப்போல அமைதியாக இருந்தது. பேச்சிலர்கள் சீக்கிரமே தூங்கிவிட்டனர்.
அவளும் தூங்குவதற்காகப் படுத்தாள். ஆனால், அவ்வளவு சீக்கிரமாகத் தூக்கம் வரவில்லை.
காலையில் அவள் சாலையில் இறங்கிச் சென்று ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவை அழைத்தாள். மாதவன் அண்ணனைப் பார்ப்பதற்காகச் செல்லவில்லை. சரோஜத்திடம் விடைபெற்றுக்கொண்டு பெட்டியையும் பேக்கையும் ஆட்டோ ரிக்க்ஷாவில் வைத்து தம்பானூருக்குப் புறப்பட்டாள்.
இரண்டாவது ப்ளாட்ஃபாரத்தில் ட்ரெயின் நின்றுகொண்டிருந்தது. ஒரு பக்கவாட்டு இருக்கையைப் பார்த்து அதில் போய் உட்கார்ந்தாள். அப்போது ப்ளாட்ஃபாரத்தின் ஒரு எல்லையிலிருந்து அவளைத் தேடியவாறு அர்ஜுன் வந்து கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். சாளரத்தின் வழியாக வெளியே கையை நீட்டி அசைத்து அவள் அவனை அழைத்தாள்.
‘‘கிளம்புறதுக்கு முன்னாடி என்னை ஏன் நீங்க அழைக்கல?’’- அர்ஜுன் கேட்டான்.
‘‘யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நினைச்சேன்’’ - அவள் சொன்னாள்.
‘‘நீங்க போறேன்னு தெரிஞ்சதும் அண்ணனுக்கு பெரிய மன வருத்தமாயிடுச்சு. இந்த அளவுக்கு விஷயம் போகும்னு அண்ணன் கொஞ்சமும் நினைக்கல.’’
‘‘யாருமே நினைக்கலையே!’’
‘‘அண்ணன் உங்ககூட ஃபோன்ல பேசுவார். இன்னைக்கோ நாளைக்கோ...’’
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு ஒலிபெருக்கியில் ஒலித்தது.
‘‘ஏதாவது விசேஷங்கள் இருக்குறப்போ. நீங்க ஃபோன் பண்ணுவீங்களா?’’ - அர்ஜுன் கேட்டான்.
‘‘பண்றேன்.’’
‘‘உங்களைப் போன்ற ஒரு ஃப்ரெண்ட் இதுவரை எனக்குக் கிடைச்சது இல்ல...’’
‘‘ஜாக்கி, எனக்கு நீங்களும் ஒரு நல்ல ஃப்ரெண்டா இருந்தீங்க. நமக்கிடையே நல்ல ஒரு ஃப்ரெண்ட்ஷிப் இருந்தது. ஆனால், இது இப்படி முடிவுக்கு வந்ததைப் பற்றி எனக்கு மனசுல வருத்தம்தான்...’’ அவள் சொன்னாள்.
‘‘சம்டைம்ஸ்... வீ வில் மீட் அகெய்ன்’’ பச்சை விளக்கு எரிந்தது. வண்டியின் விஸில் முழங்கியது. சக்கரங்கள் மெதுவாக நகர ஆரம்பித்தன. அர்ஜுன் கையை உயர்த்தி விரல்களை ஆட்டினான்.
‘‘பை...’’ - கையை உயர்த்தி அவளும் சொன்னாள்.
கசப்பான ஒரு நினைவுடன் அவள் நகரத்திடம் விடைபெற்றாள். திருச்சூரை அடைந்தபோது சிவராமகிருஷ்ணன் காருடன் அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சூட்கேஸையும் பேக்கையும் அவர் எடுத்தார்.
‘‘அம்மா எங்கே?’’- ரேகா கேட்டாள்.
‘‘கல்லூரிக்குப் போயிருக்கா. அரைமணி நேரத்துல வர்றதா சொல்லிவிட்டு வங்கியில இருந்து நான் வந்தேன். பயணம் எப்படி இருந்தது?’’
‘‘ஃபைன்...’’
லக்கேஜைப் பின் இருக்கையில் வைத்துவிட்டு அவர்கள் முன்னால் ஏறினார்கள்.
‘‘உண்மையைச் சொல்லு. நீ திடீர்னு எல்லாத்தையும் முடிவுக்கு கொண்டு வந்துட்டுத் திரும்பி வர்றதுக்கு என்ன காரணம்?’’ - வண்டியை ஓட்டிக்கொண்டே சிவராமகிருஷ்ணன் கேட்டார்.
நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவள் சுருக்கமாகச் சொன்னாள்.
‘‘கடைசியில் நீ தோத்துட்டே... அப்படித்தானே மகளே?’’
‘‘யெஸ்...’’
‘‘பரவாயில்ல... அதை நினைச்சு கவலைப்படவேண்டாம். இப்படியும் நம் வாழ்க்கையில் ஒரு அனுபவம். அப்படி நினைச்சா போதும்’’ - அவளுடைய தோளில் தன் இடது கையை வைத்துக் கொண்டு அவர் சொன்னார்.
அவளுக்கு மிகுந்த ஆறுதலாக அது இருந்தது.
அன்று இரவு ஹரிதாஸின் ஃபோன் வந்தது. அவள் அப்போது மொட்டை மாடியில் தனியாக உட்கார்ந்து தெளிந்த வானத்திலிருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘‘ரேகா, இப்போ எங்கே இருக்கீங்க?’’
‘‘வீட்டில்...’’ - அவள் சொன்னாள்.
‘‘எதையும் முழுமை செய்யாமல் போக வேண்டியதாயிடுச்சு இல்லையா? அர்ஜுன் சொல்லித்தான் நீங்க போற விஷயம் எனக்குத் தெரிஞ்சது’’ - அவன் சொன்னான்.
‘‘வாழ்க்கையின் ஒரு அத்தியாயம் அப்படி முடிஞ்சிடுச்சு.’’
‘‘கார்த்தியாயனி இல்லத்திலிருந்து நாங்கள் வேற இடத்துக்கு மாறப் போறோம். வேற ஒரு வீட்டைத் தேடிக்கொண்டிருக்கிறோம். இனி இங்கே இருக்க முடியாது.’’
‘‘சரோஜம் ஆன்ட்டிக்கு உங்கமேல விருப்பம்தான்’’ - அவள் சொன்னாள்.
‘‘திருமணத்தைப் பற்றி நான் சிறிதும் சிந்திக்காமல் இருந்த நேரத்துல நீங்க இப்படியொரு விளையாட்டை அரங்கேற்றம் செய்தீங்க. எது எப்படி இருந்தாலும் நான் இப்போ திருமணத்தைப் பற்றி சீரியஸா நினைக்க ஆரம்பிச்சிட்டேன். மேட்ரிமோனியல் பகுதியில் கொடுப்பதற்காக ஒரு மேட்டர் தயார் பண்ணிக்கூட வச்சிட்டேன்.’’ - ஹரிதாஸ் சொன்னான்.
‘‘இப்பவே அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.’’
அதற்குப் பிறகும் சிறிது நேரம் பேசிவிட்டுத்தான் அவன் ஃபோனை வைத்தான். ஃபோனை மடியில் வைத்தவாறு ரேகா நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு வெறுமனே உட்கார்ந்திருந்தாள்.
நாட்கள் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. அவளுடைய தந்தை வங்கிக்கும், தாய் கல்லூரிக்கும் போய்விட்டால் ரேகா மட்டும் வீட்டில் தனியாக இருப்பாள். வாசிப்பு, டி.வி., நெட்... அவள் நேரத்தை இப்படித்தான் ஓட்டிக் கொண்டிருந்தாள்.
இறுதியில் பி.டெக்., தேர்வுக்கான முடிவு வந்தது. முதல் வகுப்பில் அவள் தேர்ச்சி பெற்றிருந்தாள். எம்.டெக்கில் சேர பொது நுழைவுத் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள அவள் தீர்மானித்தாள்.
ஒரு மதிய வேளையில் சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் தூங்கலாம் என்று அவள் படுத்திருந்தபோது ஃபோன் ஒலித்தது. ரேகா செல்லை எடுத்துப் பார்த்தாள். குருவாயூர் பகுதியைச் சேர்ந்த நம்பர் என்பதை அவள் புரிந்துகொண்டாள்.
‘‘ஹலோ...’’
‘‘ரேகா, நான்தான்’’ - ஹரிதாஸின் குரலை அவள் கேட்டாள்.
‘‘அண்ணனா? என்ன, குருவாயூர்ல?’’ - அவள் கேட்டாள்.
‘‘இன்னைக்கு குருவாயூர்ல என் திருமணம் நடந்தது...’’ - அவன் சொன்னான்.
‘‘அதுக்கு என்னை நீங்க அழைக்கலையே! இவ்வளவு பக்கத்துல இருந்துக்கிட்டு...’’ - அவள் வருத்தத்துடன் சொன்னாள்.
‘‘உங்க மனைவியை எனக்குப் பார்க்கணும்போல இருக்கு.’’
‘‘பார்க்குறது இன்னொரு நாள் இருக்கட்டும். வேணும்னா இப்போ பேசுங்க. நான் ஃபோனைத் தர்றேன்’’ - அவன் சொன்னான்.
‘‘பயப்பட வேண்டாம். நான் பழைய கதை எதையும் சொல்ல மாட்டேன்’’ - அவள் சொன்னாள்.
ரிஸீவர் கை மாறும் சத்தத்தை அவள் கேட்டாள்.
‘‘ரேகா, நான்தான்...’’
சரோஜத்தின் குரல்தான் அது.
‘‘ஆன்ட்டி...’’ - அவள் நம்பிக்கையே வராமல் அழைத்தாள்.
‘‘நேற்று மாதவன் அண்ணன் பாப்பனம்கோட்டிற்கு போன பிறகு நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து குருவாயூருக்கு பஸ் ஏறிட்டோம். கண்ணனுக்கு முன்னால நாங்க ஒருவருக்கொருவர் மாலை போட்டுத் தம்பதிகளா ஆயிட்டோம் ரேகா, மாதவன் அண்ணனுக்கு இதைப் பற்றி இப்பக்கூட எதுவும் தெரியாது’’ - அவள் சொன்னாள்.
‘‘ஆன்ட்டி, நான் உங்களைப் பார்க்கணும். நீங்க இந்த வழியா வரணும், வருவீங்களா?’’ - அவள் கேட்டாள்.
‘‘வரணும்ன்ற விருப்பம் எனக்கும் இருக்கு. நான் ஃபோனைத் தர்றேன்.’’
சரோஜம் ரிஸீவரை ஹரிதாஸிடம் கொடுத்தாள்.
‘‘இன்னைக்கு நாங்க இங்கேயே தங்குகிறோம். நாளை ஞாயிற்றுக்கிழமைதானே! ரேகா மதியம் உங்க வீட்டில் சாப்பாடு... சரிதானா?’’ - அவன் கேட்டான்.
‘‘தேங்க்ஸ், அண்ணா!’’
ஃபோனை வைத்துவிட்டு ரேகா அந்த நிமிடமே வங்கிக்கு ஃபோன் செய்தாள்.
‘‘அப்பா, இன்னொரு ரிசல்ட்டையும் நான் தெரிஞ்சிக்கிட்டேன். அதிலும் எனக்கு முதல் வகுப்பு கிடைச்சிருக்கு’’ - அவள் சொன்னாள்.
‘‘எதனோட ரிசல்ட்?’’ - சிவராமகிருஷ்ணன் கேட்டார்.
‘‘அதை வர்றப்போ சொல்றேன்.’’
ரிஸீவரை வைத்துவிட்டு அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.