
"அக்கா... எனக்கு ஸ்கூலுக்கு போய் நல்லா படிக்கணும்னு ஆசைக்கா. ஆனா... எங்க வீட்ல என்னைப் படிக்க வைக்கற அளவுக்கு வசதி இல்லக்கா..."
"அதனால என்ன பண்ணின? சும்மாவா சுத்திக்கிட்டிருக்க?" வழி மறித்து தன்னிடம் வந்து பேசிய சிறுவனிடம் பதற்றத்துடன் கேட்டாள் ப்ரியா.
ப்ரியா! கல்லூரி மாணவி. மாம்பழச் சாற்றையும், ஐஸ்க்ரீமையும் கலந்து செய்த கலவையின் பளபளப்பான முகம். பளிங்கு போன்ற உடல்வாகு. அளவான உயரம்.
ப்ரியாவின் அப்பா வசதியானவர். சொந்த வீடு, கார் உண்டு என்றாலும் ஆறு தோழியருடன் மூன்று 'பெப்’-ல் கல்லூரிக்கு ஜாலியாக வருவதுதான் அவளுக்குப் பிடித்தமானது.
"இந்த ஏப்ரல் வரைக்கும் ஸ்கூலுக்கு போய்க்கிட்டுதான்க்கா இருந்தேன். இந்த வருஷம்தான் எங்க அம்மா என்னை ஸ்கூலுக்கு போக வேணாம்னு சொல்லிட்டாங்க. ஏதாவது வேலைக்குப் போய் காசு கொண்டு வரச் சொல்றாங்கக்கா. எனக்கு படிக்கணும்க்கா. ஸ்கூல் ஃபீஸ் கட்டினாதான்க்கா படிக்க முடியும்."
"எவ்வளவுடா கட்டணும்?"
"எண்ணூறு ரூபா கட்டணும்க்கா. மூணு மாசத்துக்கு ஒருக்க கட்டச் சொல்றாங்க."
"மூணு மாசத்துக்கு எண்ணூறு ரூபான்னா ஒரு மாசத்துக்கு முன்னூறுக்கும் குறைச்சல்தானே? இதைக் கூடவா கட்ட முடியலை?"
"நீங்கள்ல்லாம் வசதியானவங்க. உங்களுக்கு இந்தக் கஷ்டமெல்லாம் தெரியாதுக்கா. இந்த ஒரு தடவை பணம் குடுங்கக்கா. ஏதாவது வேலை செஞ்சு சம்பாதிச்சு, அடுத்து பணம் கட்டறதுக்கு சேர்த்துடுவேன்க்கா..."
"பாவம்..." சொல்லியபடியே தன் ஹாண்ட் பேக்கை எடுத்தாள் ப்ரியா. தடுத்தாள் கார்த்திகா.
"ஏ ப்ரியா... அவன் கேட்டா உடனே பணத்தை எடுத்துக் குடுத்துடுவியா? அவன் சொல்றதெல்லாம் பொய். டி.நகர் க்ரௌண்ட்ல, சாயங்காலம் எங்க அம்மாவுக்குத் துணையா வாக்கிங் போகும்போது இவனை அங்கே அடிக்கடி பார்த்திருக்கேன். இப்பிடித்தான்... இதே பொய்யை சொல்லித்தான் போறவங்க வர்றவங்க கிட்டயெல்லாம் பணம் கேட்பான். சரியான சோம்பேறி. ஏமாத்துக்காரன்..."
"ச்சீ.. பாவம்டி. இவனைப் பார்த்தா அப்பிடி ஏமாத்தறவனா தோணலை. நீ வேற யாரையோ பார்த்துட்டு இவன்னு சொல்ற..."
"இல்லை. அவன்தான் இவன். எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. இங்க பாரு ப்ரியா... தர்மம் பண்ணாம இருக்கறதை விட தர்மம் பண்றதைத் தடுக்கறதுதான் பெரிய பாவம்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா அதே பெரியவங்கதான் பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னும் சொல்லியிருக்காங்க. நீ தர்மம் பண்றதை நான் தடுக்கலை. ஆனா பாத்திரம் அறிஞ்சு பிச்சையிடு. இவன் ஒரு ஃப்ராடு..."
ப்ரியா அந்தப் பையனைப் பார்த்தாள். அவனது முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவளுக்கு.
"ச்சீ... பாவம்டி... இந்த ஒரு தடவை குடுத்திடறேன். அவன் ஒழுங்கா படிக்கறானான்னு நாம செக் பண்ணிக்கலாம்…"
"ஆமா... நமக்கு வேற வேலையே இல்ல பாரு. இவன் படிக்கறானா கிழிக்கறானான்னு பார்க்கறதுதான் ரொம்ப முக்கியம். எனக்கென்ன வந்துச்சு? குடுக்கணும்னு முடிவு பண்ணிட்ட. குடு."
ப்ரியா, அந்தப் பையனிடம் பணத்தைக் கொடுத்தாள். பணத்தை வாங்கிக் கொண்ட அவன் கார்த்திகாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஓடினான்.
மூன்று 'பெப்’ல் அருணா, கார்த்திகா, சத்யா, புவனா, ஷைலா, ப்ரியா ஆகிய ஆறு பேரும் அட்டகாசமாய் கல்லூரியை சென்றடைந்தனர்.
கல்லூரி காம்பவுண்டிற்குள்ளிருந்த இரண்டு சக்கர வண்டிகள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினர். வகுப்பிற்குப் போகும் வழியிலிருந்த ஒரு மரத்தடியில், நாய்க்குட்டி ஒன்று சுருண்டு படுத்திருந்தது. ப்ரியா அதனருகே சென்றாள். பார்த்தாள். அதன் காலில் காயம். யாரோ கல்லால் எறிந்ததால் அடிபட்ட காயத்தில் லேசாக ரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தது. அடிபட்ட வலியினால் முனகிக் கொண்டிருந்த அதைப் பார்த்து மிகவும் பரிதாபப்பட்டாள் ப்ரியா.
"கொஞ்சம் இருங்கடி" என்றவள், தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த ஜோசப்பை பார்த்தாள்.
"ஜோசப் அண்ணே... ஜோசப் அண்ணே" ப்ரியா கூப்பிட்டதும் ஜோசப் திரும்பிப் பார்த்தான்.
"என்னம்மா ப்ரியா...?"
ப்ரியா என்று உச்சரிக்கத் தெரியாமல் 'பிரியா’ என்றுதான் அழைப்பான் ஜோசப். அவ்வப்போது ஏற்படும் பணக் கஷ்டத்திற்கு நிதி உதவி செய்து வரும் ப்ரியா மீது அவனுக்கு அதிக அன்பும், நன்றிக்கடனும் உண்டு. ப்ரியாவின் இரக்க சுபாவத்தின் பிரதிபலிப்பாக அவள் செய்யும் பண உதவிக்கு பிரதி உபகாரமாக சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொடுப்பான் ஜோசப்.
"ஜோசப் அண்ணே, ப்ளீஸ் இந்த நாய்க் குட்டியைத் தூக்கிக்கிட்டு 'பெப்’-ல என் பின்னாடி உட்காருங்க. பக்கத்துல இருக்கற வெட்னரி ஹாஸ்பிட்டல் போய் டாக்டர்கிட்ட காண்பிச்சு இதுக்கு மருந்து வாங்கிக் குடுக்கலாம். காயத்துக்குக் கட்டு போட்டுட்டு வரலாம். பாவம் ஜோசப் அண்ணே. ப்ளீஸ்..."
"இதோ வரேம்மா. கொஞ்சம் இரும்மா. இந்த ட்யூப்பை கொண்டு வச்சிட்டு வந்துடறேன்."
"சரி."
நாய்க்குட்டியின் அருகே உட்கார்ந்து விட்ட ப்ரியாவைப் பார்த்து ஒட்டு மொத்தமாக முறைத்தனர் அனைவரும். கார்த்திகா கத்தினாள். "ஏ ப்ரியா... க்ளாசுக்குப் போகணும்ங்கற நினைப்பு இல்லியா உனக்கு? நாய்க்குட்டி கிட்ட உட்கார்ந்துட்ட?... வா... வா... எழுந்திரு..."
"நீங்க போங்கடி. நான் இதைத் தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் போயிட்டுதான் வருவேன். பாவம்…"
"என்னமோ செய். காலங்கார்த்தால க்ளாஸை கட் அடிக்கறதுக்கு எங்களுக்கு பயம்மா இருக்கு..." ஷைலா, க்ளாசுக்கு நகர, மற்ற நான்கு பேரும் அவளைத் தொடர்ந்தனர்.
"இந்த ப்ரியா, எப்பவும் இப்பிடித்தான் பண்றா. க்ளாஸுக்கு கூட வராம அப்பிடியென்ன அந்த நாய்க்குட்டியைத் தூக்கிக்கிட்டு ஹாஸ்பிடல் போணும்னு?..." சத்யா அலுத்துக் கொண்டாள்.
"இதுவாவது பரவாயில்லை. வாய் இல்லாத ஜீவன் வலியில கஷ்டப்படுதேன்னு உதவி செய்றா. ஆனா வாயை வச்சுக்கிட்டு நல்லா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு விட்டு பணம் கேக்கறவங்களுக்கும் இரக்கப்பட்டு பணத்தைத் தூக்கி குடுக்கறா பாரு..." அருணா புலம்பினாள்.
"ஃப்ராடு... நம்பாதேன்னு எடுத்துச் சொல்லியும் அந்தப் பையனுக்கு பணம் குடுத்தாளே..." ஷைலா தன் பங்குக்குப் பேசினாள்.
"இந்த விஷயத்துல ப்ரியாவை திருத்தவே முடியாது. என்னிக்காவது எவன் கிட்டயாவது நல்லா வசம்மா மாட்டிக்கிட்டு ஏமாந்து நிக்கப் போறா..." புவனா கூறியதைக் கேட்ட மற்ற நால்வரும் அதை ஆமோதித்தனர்.
ப்ரியாவின் இரக்க குணத்தைப் பற்றியும், அதனால் அவளது ஏமாளித்தனத்தைப் பற்றியும் பேசி முடிப்பதற்குள் வகுப்பறையை நெருங்கி விட்டனர். எனவே அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தனர்.
"டேய்... இன்னிக்கு அந்த ப்ரியாகிட்ட பேசறதுக்குத் தயாரா வந்திருக்கேண்டா.." வினய் கூறியதும் அவனது கன்னத்தில் செல்லமாய் அறைந்தான் நரேன்.
"கிழிச்ச போ. தினமும் இதையேதான் சொல்ற. அவ பாட்டுக்கு வர்றா... போறா... உன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கறதே இல்லை. நீ போய் என்னத்தப் பேசிடப் போறே?"
"பொண்ணுங்க நம்பளைத் திரும்பிப் பார்க்கணும்னா நம்ப 'கெட்டப்பை’ அப்பப்ப மாத்திக்கணும்டா. நானும் ஒரு மாசமா, தினமும் வேற வேற கலர் பேண்ட், வேற வேற கலர் ஷர்ட், டீ ஷர்ட் அது இதுன்னு வகை வகையா கெட்டப்பை மாத்திட்டுதான் வரேன். அவளுக்கு எதுவுமே பிடிக்கலை போலிருக்கே... இன்னிக்கு இதோ பார்த்தியா? நான் போட்டிருக்கற இந்த ட்ரெஸ் புதுசு. இது வரைக்கும் இந்த கலர்ல நான் போட்டதே இல்லை. இன்னிக்கு அவ என்னை நிச்சயமா 'லுக்’ விடுவா.."
"லுக் விட்டா பரவாயில்லடா. கிக் விட்ரக் கூடாது. ஆமா... க்ளாஸ் டைம் ஆகியும் ப்ரியா வரலியே...? ரெண்டு 'பெப்’ ராணிகளோட பெப் மட்டும் நிக்குது. ப்ரியாவோட பெப்பைக் காணுமே. க்ளாசுக்கு கட் அடிச்சுட்டு காஃபி டே, சினிமா, தியேட்டர்னு ஊர் சுத்தறதுனா கூட மத்த 'பெப்’ ராணிங்க இல்லாம போக மாட்டாளே?..."
"லேட்டா வந்தாலும் வருவாடா. வெயிட் பண்ணுவோம். டேய் நரேன்... நேத்தி ராத்திரி ப்ரியாவைப் பத்தி ஒரு கனவுடா..."
"என்ன? அவளோட பெப்ல உன்னை உட்கார்த்தி வச்சு ஓட்டிட்டு போற மாதிரி கனவா? நீ அவளோட இடுப்பைப் பிடிச்சுக்கற மாதிரி கனவா? 'யாரோ யார் நெஞ்சில் இன்று யாரோ’ ன்னு எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஸார் பாட்டுப்பாட, அந்த சிவா மாதிரி நீயும் ஜாலியா இருக்கற மாதிரி கனவா? ம்… ம்... அங்க பாரு. உன் கனவு அப்பிடியே மெய்ப்படுது. ஆனா பெப்ல உட்கார்ந்திருக்கறது நீ இல்ல. தோட்டக்கார ஜோசப்பும், ஒரு நாய்க் குட்டியையும் பெப்ல பின்னாடி ஏத்திக்கிட்டு உன் கனவுக் கன்னி ப்ரியா வர்றா பாரு..." நரேன் பயங்கரமாய் கேலி செய்தான். இவர்கள் இருவரையும் பொருட்படுத்தாமல், ஜோசப் இறங்கியதும் பெப்பை நிறுத்தினாள் ப்ரியா. ஜோசப்பின் கையிலிருந்த நாய்க்குட்டியைத் தட்டிக் கொடுத்து கொஞ்சினாள். நாய்க்குட்டியின் காலில் புதிய பேண்டேஜ் போடப்பட்டிருந்தது.
"பார்த்தீங்களா ஜோசப் அண்ணே. டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போய் காண்பிச்சதுனால முனகாம சமத்தா இருக்கு பாருங்க. நாளைக்கே சரியாயிடும்னு டாக்டர் சொல்லியிருக்கார்."
"சரிம்மா. நான் இன்னும் செடிகளுக்கெல்லாம் தண்ணி ஊத்தி முடிக்கல. வரட்டா?"
"சரி ஜோசப் அண்ணே. ரொம்ப தேங்க்ஸ். இதை வாங்கிக்கோங்க."
ஐம்பது ரூபாய் நோட்டைக் கொடுத்தாள் ப்ரியா.
நாய்க்குட்டியைக் கீழே விட்டுவிட்டு பணத்தை வாங்கிக் கொண்ட ஜோசப்பிற்கு அதிக மகிழ்ச்சி. ப்ரியா, நாய்க்குட்டிக்கு 'டாட்டா’ சொல்லிவிட்டு நகர்ந்தாள். வகுப்பிற்கு நடந்தாள்.
வினய்யைக் கிள்ளினான் நரேன்.
"பேசுடா... என்னமோ... தயாரா வந்திருக்கேன்னு சொன்னியே..."
"இதோ போறேண்டா..."
வினய், மெதுவாக ப்ரியாவின் பின்னாடி நடந்தான்.
"எக்ஸ்க்யூஸ் மீ" குரல் கேட்டதும் திரும்பிப் பார்த்தாள் ப்ரியா.
"என்ன?" ப்ரியா, புருவம் உயர்த்திக் கேட்ட அழகில் சொக்கிப் போய் நின்றான் வினய்.
"அது... அது... வந்து... நாய்க்குட்டின்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமா?..." தட்டுத்தடுமாறிப் பேசிய வினய்யைப் பார்த்து சிரிப்பு வந்தது ப்ரியாவிற்கு.
சிரிப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டாள்.
"ஓ... ரொம்ப முக்கியமான விஷயமாத்தான் கூப்பிட்டிருக்கீங்க..." நக்கலாகப் பேசியதைப் புரிந்துக் கொண்ட வினய், சமாளித்தான்.
"நீங்க... நீங்க... நல்லா பாடுவீங்களாமே…"
"ஆமா. அப்பிடித்தான் எல்லாரும் சொல்றாங்க… அதுக்கென்ன?"
"எங்க சித்தப்பா பையன் ஒரு ம்யூசிக் ட்ரூப் வச்சிருக்கான். கல்யாண விசேஷங்கள்லயும், பொது நிகழ்ச்சிகள்லயும் நிறைய ம்யூசிக் ப்ரோக்ராம் பண்றான். ஆனா அவங்க ட்ரூப்ல பாடறதுக்கு பெண் பாடகிகள் கிடைக்க மாட்டேங்கறாங்களாம். உங்களுக்கு சம்மதம்ன்னா அவனோட ட்ரூப்ல நீங்க பாடலாமே... ப்ளீஸ். அவன் சாதாரணமான ஆளு இல்லைங்க. அவனும் ஒரு பாடகன். ரொம்ப நல்லா பாடுவான். கீ போர்டு வாசிப்பான். ஏ.ஆர்.ரெஹ்மான் ஸாரைக் கூடப் போய் பார்த்துட்டு வந்திருக்கான். படத்துல பாடறதுக்கு சான்ஸ் தர்றதா சொல்லி இருக்கார்..."
முதலில் தயங்கியவன், வீட்டில் வைத்து பலமுறை ஒத்திகை பார்த்ததன் விளைவாய், பின்னர் சகஜமாகப் பேசினான். 'அடப்பாவி, எதில பிடிக்கணுமோ அதில பிடிச்சுட்டானே...’ கேட்டுக் கொண்டிருந்த நரேன் வாய் பிளந்தான்.
கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா மென்மையாகப் புன்னகைத்தாள். யோசித்தாள்.
"ப்ளீஸ்... மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. என் சித்தப்பா பையன்னு சொன்னேன்ல அவன் பேரு அசோக். அவன் சரியா படிக்கலை. பாட்டு பாட்டுன்னு திரிஞ்சுட்டான். அவங்க பெரிய குடும்பம். கஷ்டப்படுற குடும்பம். அசோக், ம்யூசிக் ட்ரூப் மூலமா சம்பாதிக்கற பணத்துலதான் அவங்க குடும்ப வண்டி ஓடுது..."
'அடப்பாவி... என்னமா பில்டப் குடுக்கறான்...’ நரேன் ஆச்சர்யப்பட்டான்.
"ஒகோ... பாட்டு பாட்டுன்னு திரிஞ்சவர், இப்ப சோத்துக்குத் தாளம் போடறாராக்கும்…"
கலகலவென சிரித்தாள் ப்ரியா.
"அட... ஹ்யூமரா பேசறீங்களே..."
"ஹ்யூமன் பீயிங்கா பிறந்த எல்லாருக்குமே ஹ்யூமர் சென்ஸ் இருக்கும். சில பேரு அதை வெளிப்படுத்தறதில்ல. மனசுக்குள்ள தோணினாலும் 'உர்’ன்னு இருப்பாங்க..."
"நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்."
வினய் சொன்னதும் சிரித்தாள் ப்ரியா.
"என்ன, இப்ப நீங்க எனக்கு சிங் சாங் ஜால்ரா போடறீங்களா..."
அசடு வழிந்தான் வினய்.
"நான் கேட்ட விஷயம்?..."
"எக்ஸாம் டைம் இல்லைன்னா பார்க்கலாம்..."
"மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ரியா. அசோக் வீட்ல ரொம்ப கஷ்டம்..."
"என்னால முடிஞ்சப்ப கண்டிப்பா வந்து பாடறேன்னு சொல்லுங்க."
'அடிச்சான்டா வீக் பாய்ண்ட்ல’ நரேன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
ப்ரியாவின் வண்ண உடை, ஒரு புள்ளியாக மறையும் வரை பார்த்துக் கொண்டே நின்றான் வினய்.
"போதும்டா. வாடா போலாம். ப்ரியா லேட்டாவாவது க்ளாசுக்குப் போறா. நாம அது கூட போகாம சுத்திக்கிட்டே இருக்கோம்டா..."
"ப்ரியா பின்னால சுத்தினாத்தான் நான் அவளைக் கவர்ந்திழுக்க முடியும்..."
"கவர்ந்திழுக்க நீ என்ன காந்தத்தையா ஒட்டி வச்சிருக்க?..."
"மனசு ரெண்டும் ஒட்டறதுக்கு காந்தமும் தேவையில்ல; ஒண்ணும் தேவை இல்ல. காதல்தான் வரணும். அது வர்றதுக்கு நான் என்ன வேண்ணாலும் செய்வேன்..."
"வீர சாகசம் செஞ்செல்லாம் காதலை வரவழைக்க முடியாது. அது தானா பூக்கற பூ மாதிரி இதயத்துல பூக்கணும். மலர்ந்து மணம் வீசணும்..."
"வேணாம்டா. காதலை பூவுக்கு ஒப்பிட்டுப் பேசாதே. எத்தனை அழகா பூ மலர்ந்தாலும், எத்தனை சுகந்தமா மணம் பரப்பினாலும், பூ வாடக் கூடியது. காதல் அப்படியில்லை. அது காற்று மாதிரி. இந்த பூமி முழுசும் நிறைஞ்சிருக்கற காத்து மாதிரி அது நிரந்தரமானது."
"அடேங்கப்பா… பூமிங்கற.. காத்துங்கற… எங்க இருந்துடா இந்த வசனமெல்லாம் உனக்கு வருது?"
"இதயத்துல காதல் உதயமாயிட்டா... வசனமென்ன?! கவிதை மழையே வரும்..."
"ஐயோ வேணாம்பா மழை... அது சரி… ப்ரியாவை நீ காதலிக்கற ஓ.கே. அவ உன்னைக் காதலிக்கற மாதிரி எனக்குத் தெரியலை. சாதாரணமா, ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறா..."
"ஃப்ரெண்ட்ஷிப் காதலா மாறலாமில்லயா?"
"நிறைய காதல் ஜோடிகள்தான் 'நாம இனி ஃப்ரெண்ட்ஸாவே இருக்கலாம்’னு டைலாக் பேசறாங்களே..."
"நீ ஏண்டா இப்படி நெகட்டிவ்வாவே பேசற?"
"பின்ன என்னடா... நாலு வார்த்தை நல்லபடியா ஒரு நண்பன்ட்ட பேசற மாதிரி பேசியிருக்கா ப்ரியா. நீ என்னடான்னா அவ என்னமோ உன்னைக் காதலிக்கற மாதிரியே கனவு கண்டுக்கிட்டிருக்க?"
"என்னோட கனவு நிஜமாகும். கொஞ்சம் கொஞ்சமா அவ மனசைக் கலக்கி, அவளை என்னைக் காதலிக்க வைக்கறேன் பாரு.. ஆனா ஒரு சின்ன வருத்தம்டா... பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி வாங்கிப் போட்டுக்கிட்ட இந்த ட்ரஸ்ஸை அவ கவனிச்சுக் கூடப் பார்க்கலைடா..."
"உலகமகா வருத்தம்தான் போ. ஒழுங்கா படிச்சு முடிச்சு வாழ்க்கையில முன்னுக்கு வரணும். அதுக்கப்புறம்தான் காதல்... கத்தரிக்கா… புடலங்காயெல்லாம்…"
"காதல் இல்லாத கல்லூரி வாழ்க்கை என்னடா வாழ்க்கை? படிச்சு முன்னேறணும்னு சொன்னியே... அந்த முன்னேற்றத்துக்கு ஒரு தூண்டுகோலா காதல் இருக்கும். அதோட உணர்வுகள் இருக்கும். காதலியும் இருப்பா."
"எப்படியோ… உன் காதல் ஸக்ஸஸ் ஆக என் வாழ்த்துக்கள்!"
"நிச்சயமா ஸக்ஸஸ் ஆகும்டா."
"எப்பிடிடா அவ்வளவு நிச்சயமா சொல்ற?"
"ப்ரியாவை கவனிச்சியா? அவளுக்கு இளகின மனசு. வேற எதிலயும் அவ மசியலைன்னா, அவளுக்கு என் மேல இரக்கப்படற மாதிரி பேசுவேன். கொஞ்சம் கொஞ்சமா பேசி, அவ மனசுல இடம் பிடிப்பேன்."
"அவ மனசுல இடம் பிடிக்கறது இருக்கட்டும். இப்ப நாம கேன்ட்டீன்ல இடம் பிடிக்கணும். லஞ்ச் டைம் ஆச்சு. காலைல முழுசும் வெட்டி அரட்டை அடிச்சு க்ளாஸை கட் பண்ணியாச்சு. வா. வா…" இருவரும் கல்லூரி கேன்டீனுக்கு விரைந்தனர்.
"டேய் சித்தார்த்... உனக்காக நல்ல பொண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீ ஒரு வார்த்தை சரின்னு சொல்லு. பேசி முடிவு பண்ணிடறேன்." மாலினி, அமெரிக்காவில் இருக்கும் தன் மகனுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள்.
திருமண வயதில் மகன் இருந்த போதும், மாலினி இளமை குறையாத தோற்றத்தில் காணப்பட்டாள். எலுமிச்சை நிறம். வலது பக்கக் கன்னத்தில் இருந்த பெரிய கறுப்பான மரு, சின்னத்திரை அம்மா நடிகை மீரா கிருஷ்ணனை நினைவு படுத்தியது. காதிலும், கழுத்திலும் வைர நகைகள் மின்னியது. தினந்தோறும் அவள் உடுத்துவது பட்டுதான். ஜரிகை அதிகம் இல்லாத அழுத்தமான காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், அழகுடன் கம்பீரமும் இணைந்து செல்வச் சீமாட்டியின் மிடுக்குடன் இருந்தாள் மாலினி.
கணவர் மனோகரன் பெரிய தொழிலதிபர். அவரது உழைப்பும், அறிவுத் திறனும் தொழில் நுணுக்கமும் அவரை அந்தஸ்து ரீதியாக உயர்த்தியது. பணமழை பொழிந்தது.
ஆஸ்திக்கு ஒரே மகனான சித்தார்த்துக்கு பாலுடன் பண்பாட்டையும் ஊட்டி வளர்த்தாள் மாலினி. பணம் தன் மகனின் வளர்ப்பை தவறான பாதைக்கு வழி வகுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தாள். எனவே, சித்தார்த் அன்பும், பண்பும் ஒருங்கே இணைந்தவனாய் வளர்ந்தான். யாரையும் அதிர்ந்து பேச மாட்டான். இனிமையாக பேசுவான். எதற்கும் பிடிவாதம் பிடிக்க மாட்டான். உயர்கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் மாலினியும் மனோகரனும்.
"என்னம்மா நீங்க, இப்பதான் இங்க ஒரு கோர்ஸ் படிச்சு முடிச்சிருக்கேன். இன்னும் படிக்கணும்... அதுக்குள்ள பொண்ணைப் பார்த்துட்டேன்னு சொல்றீங்க. ப்ளீஸ் மா எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்மா..."
"ஏய்... அங்கே யாரையாவது லவ்ஸ் விட்டிட்ருக்கியா?... அப்பிடி இருந்தாலும் சொல்லுடா கண்ணா... நல்ல பொண்ணா இருந்தா....."
"அம்மா... அம்மா... ப்ளீஸ்மா உங்க கற்பனைக்கு ஒரு ப்ரேக் போடுங்கம்மா. நான் பாட்டுக்கு நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தவன், மேல படிக்க ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன். இப்போதைக்கு வேற எந்த ஐடியாவும் இல்லம்மா."
"நான் பார்த்து வச்சிருக்கற பொண்ணைப் பார்த்தின்னா… உன் ஐடியாவை மாத்திக்குவ."
"மாத்திக்கவே மாட்டேன்ம்மா. இன்னும் ரெண்டு வருஷம் இங்கே படிச்சு முடிச்சுட்டு அப்புறம்தாம்மா இந்தியா வரணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன்…"
"இன்னும் ரெண்டு வருஷமா? அவ்வளவு நாளெல்லாம் உன்னைப் பார்க்காம என்னால இருக்க முடியாதுப்பா. நீ படிக்கப் போய் மூணு வருஷமாச்சு. கொஞ்ச நாளா 'உன்னை எப்போ பார்ப்போம்’னு இருக்கு. அப்பாவும் உன்னை மிஸ் பண்றாரு..."
"அது வந்தும்மா... எனக்கும் உங்களையும், அப்பாவையும் பார்க்கணும் போலத்தான் இருக்கு. ஆனா... இன்னும் ரெண்டு வருஷம் நான் படிச்சுட்டு, அப்புறம் இந்தியா வரலாம்னு இருக்கேன்மா. ப்ளீஸ் மா... நீங்களும், அப்பாவும் ஒரு ட்ரிப் இங்கே வந்துட்டுப் போங்களேம்மா..."
"உன்னை இங்க வரச் சொன்னா… நீ எங்களை அங்க வரச் சொல்றியா? படவா... நாங்க இப்போதைக்கு எங்கேயும் நகர முடியாதுப்பா. உங்க பாட்டிக்கு எண்பது வயசுக்கு மேல ஆச்சு. அவங்களை யார் பொறுப்பிலயும் விட்டுட்டு வர முடியாது. உங்கப்பா கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது. எங்களுக்கு நீ ஒரே பையன் மாதிரி உங்க பாட்டிக்கு உங்கப்பா ஒரே மகன்தான? அதனால வேற யாரும் பார்த்துக்க வழியில்ல... அது மட்டும் இல்ல சித்தார்த்... உங்க பாட்டிக்கு எல்லாமே நானோ, உங்கப்பாவோதான் செய்யணும். ஒரு அவசரத்துல தப்பித்தவறி வேலைக்காரி கிட்ட சாப்பாடோ காபியோ குடுத்து விட்டுட்டேன்னா போச்சு... அன்னிக்கு முழுசும் பட்டினி கிடப்பாங்க. கோவிச்சுப்பாங்க. பாவம். வயசானவங்க. அவங்க ஆயுசு காலம் வரைக்கும் அவங்க மனம் கோணாம நடந்துக்கலாம்னு நானும், உங்கப்பாவும் அவங்களை விட்டுட்டு எங்கேயும் போறதில்லைப்பா. அதனால நாங்க வர முடியாது. நீ சீக்கிரமா வரப் பாருப்பா..."
"சரிம்மா. இன்னும் ஆறு மாசத்துல வந்துடறேன். அது சரி... பாட்டிக்கு ஞாபக சக்தியெல்லாம் எப்படி இருக்கு?"
"என்னை விட, உன்னை விட அவங்களுக்குத்தான் ஞாபக சக்தி அதிகமா இருக்கு. அவங்களோட அறுபதாவது வயசு வரைக்கும் தினமும் சாமி ஸ்லோகங்கள் எக்கச்சக்கமா படிச்சிருக்காங்க! அதனால அவங்களுக்கு மறதியே கிடையாது. சொல்லப் போனா... சில முக்கியமான விஷயங்களை பாட்டிதான் எனக்கு ஞாபகப் படுத்தறாங்க...! அதெல்லாம் சரி, நீ இப்ப விஷயத்துக்கு வா. பொண்ணோட ஃபோட்டோவை இ.மெயில் பண்றேன். நீ பாரு. உனக்குப் பிடிச்சா சொல்லு. உடனே கல்யாணத்தை வைக்கணும்னு அவசியமில்ல. ஒரு வருஷம் கழிச்சு கூட வச்சுக்கலாம். பொண்ணும் ஃபைனல் இயர் படிக்கறா. நமக்கு நல்ல டைம் இருக்கு..."
"அம்மா… அம்மா நீங்க பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கீங்க. எனக்கு யோசிக்கறதுக்கு டைம் குடுங்கம்மா."
"டைம் எடுத்துக்கோ. ஆனா பொண்ணு ஃபோட்டோவை அனுப்பறேன் பாரு. நான் சொல்றேன். பார்த்த அடுத்த நிமிஷம் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிடுவ. பொண்ணு அவ்வளவு அழகு..."
"அப்படியெல்லாம் அவசரப்பட மாட்டேன்மா."
"ஃபோட்டோவைப் பார்த்துட்டு அப்புறம் பேசுடா." மாலினி கைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்தார் மனோகரன்.
"யம்மா தாயே... அம்மாவும் பையனும் பேசி முடிச்சாச்சா இல்லியா? நான் சாப்பிட்டுட்டு ஆபீஸ் போகணும்..."
"சரிப்பா சித்தார்த். உங்க அப்பா சாப்பிடறதுக்காக வெயிட் பண்றார். வச்சுடறேன். டேக் கேர். இன்னிக்கே ஃபோட்டோ அனுப்பிடறேன். ஓ.கே."
கைப்பேசியை அடக்கிவிட்டு பரபரவென மனோகரனுக்கு காலை டிபனை எடுத்து வைத்தாள்.
"இன்னிக்கு என்னம்மா மாலினி இட்லி பூப்போல இருக்கு?! குருமா கூட சூப்பரா இருக்கே...?!" இட்லியைப் பிட்டு குருமாவைத் தொட்டு சுவைத்து சாப்பிட்டபடியே கேட்டார் மனோகரன்.
"நம்ப வீட்ல சமையல் வேலை செய்ற குமுதா, இன்னிக்கு மட்டம் போட்டுட்டா. அதனால இதெல்லாம் நானே செஞ்சேன்..."
"வாழ்க குமுதா. அடிக்கடி லீவு போட்டாள்னா சூப்பரான சாப்பாடு கிடைக்கும். இன்னும் ரெண்டு இட்லி போடும்மா..."
"அவ அடிக்கடி லீவு போட்டாள்னா உங்களுக்கு ருசியான சாப்பாடு கிடைக்கும். ஆனா எனக்கு கிச்சன்ல சமையல் வேலையே சரியா இருக்கும். அத்தையை யார் பார்த்துக்குவாங்க? அவங்களுக்கு குமுதாவோ அல்லது வேலைக்கார பொன்னம்மாவோ ஒரு தண்ணி கொண்டு போய் குடுத்தாக் கூட பிடிக்காது. அத்தைக்கு, எல்லாம் நான்தான் செய்யணும்."
"சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா… கோவிச்சுக்கறியே மாலி..."
"கோபமெல்லாம் ஒண்ணுமில்லீங்க. என் சமையல் ருசியா இருக்குன்னு நீங்க பாராட்டும்போது எனக்கெதுக்குங்க கோபம் வரப்போகுது? அத்தை இப்பிடி கொஞ்சம் கூட அட்ஜஸ் பண்ணிக்காம கண்டிப்பா இருக்கறதுனால என்னால எங்கேயும் போக முடியலை. மத்யானம் அவங்க தூங்கறப்ப ஷாப்பிங்… அங்க... இங்கன்னு போயிட்டு வர்றதுக்குள்ள முழிச்சிட்டாங்கன்னா போச்சு. 'எங்கே போன?’ 'ஏன் போன?' ‘போனா சுருக்க வரமுடியாதா’ அப்பிடி இப்பிடின்னு கோபமா பேசறாங்க. வயசானவங்களாச்சேன்னு நானும் பொறுமையாதாங்க அவங்களுக்கு எல்லாம் பண்றேன்."
"உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாம்மா? எங்க அம்மா, அவங்களோட சின்ன வயசுல ஓடி ஆடி வேலை செஞ்சவங்க. நம்ப சித்தார்த்துக்கு அவங்களேதான் எல்லாம் செய்வாங்க. அவனை எவ்வளவு நல்லா பார்த்துக்கிட்டாங்க?! அம்மா அவனை நல்லபடியா பார்த்துக்கிட்டதுனாலதான், நீ என் கூட வந்து நம்ம ஆபீஸை பார்த்துக்கிட்ட. உன்னோட நிர்வாகத் திறமையும் சேர்ந்துதான் நம்ம கம்பெனி டெவலப் ஆச்சு. அம்மாவுக்கு வயசு ஆகி ஆரோக்கியம் குறைஞ்சதுக்கப்புறம்தானே நீ அவங்க கூட வீட்ல இருக்க வேண்டியதாயிடுச்சு? இந்தக் காலத்துல மாமியாரை இப்பிடி கூடவே இருந்து கண்ணும் கருத்துமா அப்பிடி எத்தனை பேர் பார்த்துக்கறாங்க?... அதெல்லாம் சரி... சித்தார்த் கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தியே... என்ன விஷயம்?"
"அதாங்க… என் ஃப்ரெண்ட் நித்யா இருக்காள்ல்ல..."
"இந்தியா முழுசும் 'நித்யா பியூட்டி பார்லர்’னு ஏகப்பட்ட கிளைகள் ஆரம்பிச்சு சூப்பரா நடத்திக்கிட்டிருக்காளே அந்த நித்யாதானே?..."
"ஆமாங்க. அவளுக்கு ஒரே பொண்ணு ப்ரியா. நம்ப வீட்டுக்குக் கூட நித்யா அவளைக் கூட்டிட்டு வந்திருக்கா... அந்த ப்ரியாவை நம்ப சித்தார்த்துக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எனக்கு ஆசை. அதைப்பத்தி சித்தார்த் கிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்..."
"என்ன சொல்றான்? நீ கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டானே உன் பையன்... என்னைப் போலவே?"
"கேலி இருக்கட்டும். நான் சொல்றதை முழுசா கேளுங்க. சித்தார்த் இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சுத்தான் இந்தியாவுக்கே வருவானாம். அதுக்கப்புறமா பார்க்கலாம். இப்ப எனக்கு கல்யாணம் பண்ணிக்கற ஐடியாவே இல்லை. அப்பிடிங்கறான்."
"அவன் சொல்றது நியாயந்தானே மாலி?! இப்ப என்ன அவசரம் அவனோட கல்யாணத்துக்கு?"
"அவசரம் ஒண்ணும் இல்லைன்னு எனக்கும் தெரியும்ங்க. ஆனா அவசியம் வந்திருக்கு."
"அவசியமா?"
"ஆமாங்க. ஒண்ணு, அத்தையை முழு நேரமும் நானே பார்த்துக்க வேண்டியிருக்கிறதுனால என்னால நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போக முடியலை. போனாலும், போன இடத்துல நிம்மதியா இருக்க முடியலை. வீட்ல அத்தை இருக்காங்களே என்ன சொல்வாங்களோ என்னமோன்னு டென்ஷனாவே இருக்கு…"
"இதுக்கும் நம்ம சித்தார்த் கல்யாணத்துக்கும் என்னம்மா சம்பந்தம்?"
"சம்பந்தம் இருக்கறதுனாலதாங்க சீக்கிரமா சம்பந்தி ஆகணும்னு நினைக்கறேன். வீட்டுக்கு மருமக வந்துட்டா, நான் வெளில கிளில போயிட்டா அவ பார்த்துப்பா. நானும் ரிலாக்ஸ்டா எந்த டென்ஷனும் இல்லாம வெளியே போக, வர்ற வேலையை நிதானமா பார்த்துப்பேன். இது ஒரு சின்ன காரணம்தான். மத்தபடி, ப்ரியா அழகுன்னா அழகு அப்பிடி ஒரு அழகு. நம்ப சித்தார்த்தும் செக்கச் செவேல்னு அழகா இருக்கான். அவனுக்கேத்த அழகுல ப்ரியா இருக்கா. அதனாலதான் சித்தார்த்துக்கு சீக்கிரமா கல்யாணம் பண்ணனும்னு சொல்றேன்..."
"அதுக்கு ஏன் இவ்வளவு அவசரப்படற?"
"காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டுப் போனாங்கற கதையாயிடும்…"
"புரியலையே..."
"ப்ரியா, இப்ப ஃபைனல் இயர் படிக்கறா. அவ படிப்பை முடிக்க இன்னும் மூணு மாசம் இருக்கு. இப்பவே அவளுக்கு ஏகப்பட்ட வரன் வந்துக்கிட்டிருக்காம். எல்லா வரனுமே நல்ல வசதியான, பெரிய இடங்களாம். நித்யா சொன்னா. 'நகை, பணம்’னு எதைப் பத்தியும் டிமாண்ட் பண்ணாம 'பொண்ணைக் குடுத்தா போதும்’னு சொல்றாங்களாம். இப்ப புரியுதா...? நான் ஏன் அவசரப்படறேன்னு?... ப்ரியாவை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அவதான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரணும்னு ரொம்ப ஆசைப்படறேன்."
"நீ ஆசைப்பட்டா போதுமா? நித்யா சம்மதிக்கணுமே?"
"நித்யா சம்மதிக்காம இந்த விஷயத்தைப் பத்தி சித்தார்த்கிட்ட பேசுவேனா? நம்ம சித்தார்த்துக்கு, தன் பொண்ணு ப்ரியாவைக் குடுக்கறதுல நித்யா ரொம்ப ஆர்வமா இருக்கா."
"நித்யா ஆர்வமா இருக்காள்னு சொல்ற… ஓ.கே. உனக்கும் ரொம்ப இஷ்டமா இருக்கு... ஓ.கே. ஆனா… சித்தார்த் என்ன சொல்றான்?"
"இன்னும் ரெண்டு வருஷம் அமெரிக்காலயே படிச்சுட்டு அப்புறம்தான் இந்தியாவுக்கு வரலாம்னு இருக்கானாம். இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ங்கறான். நான் விடுவேனா… அவனை சமாதானம் பண்ணி, பொண்ணோட ஃபோட்டோ அனுப்பறேன் பார்த்துட்டு சொல்லுடான்னேன். டைம் குடுங்கம்மான்னு கேட்டான்."
"அம்மாவும் பையனுமா பேசிக்கறீங்க. இந்த அப்பாவை அம்போன்னு விட்டுட்டீங்க..." என்றபடி பலமாக சிரித்தார் மனோகரன்.
"நீங்க இந்த அளவுக்கு எனக்கு ஃப்ரீடம் குடுத்திருக்கீங்கன்னு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?..."
"இதென்னம்மா பெரிய விஷயம்? அம்மா நல்லா இருக்கும்போது என் கூட ஆபீசுக்கு வந்து ஹெல்ப் பண்ணின. இப்ப அம்மாவுக்கு வயசாயிட்டதால அவங்களை நல்லா பார்த்துக்கற. நம்ப ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு வச்சிருக்கோம். நீ பார்த்து எது செஞ்சாலும் சரியாத்தான் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. பொண்ணோட ஃபோட்டோவை சித்தார்த்துக்கு அனுப்பி வை. அவன் என்ன சொல்றானோ பார்க்கலாம். ஆனா அவனை வற்புறுத்தாத."
"நீங்க வேண்ணா பாருங்க. ப்ரியாவோட ஃபோட்டோவைப் பார்த்துட்டு இந்தப் பொண்ணுதான் வேணும்னு அவன், என்னை வற்புறுத்தப் போறான்."
"கடவுள் அருளால எல்லாம் நல்லபடியா நடக்கணும். அம்மா ரூமுக்குப் போய், அம்மாவைப் பார்த்து கொஞ்ச நேரம் பேசிட்டு அப்புறம் ஆபீஸ் கிளம்பறேன்."
"சரிங்க. நானும் வரேன். அத்தை ரூம்ல பெட்ஷீட், தலையணையெல்லாம் மாத்தணும்."
இருவரும், மனோகரனின் அம்மா தயாவின் அறைக்குச் சென்றனர்.
ப்ரியா, கல்லூரிக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தாள். கத்தரிப்பூ வண்ணச் சுடிதாரில் அவளது அழகு, மேலும் மிளிர்ந்தது. உடைக்கு ஏற்ற வண்ணத்தில் கம்மல், செயின், வளையல், வாட்ச் அனைத்தும் அணிந்திருந்த ப்ரியாவின் அழகு கொள்ளை அழகு. எடுப்பான மூக்கும், அகன்ற கண்களும், இயற்கையாகவே சிவந்திருந்த உதடுகளும் அமையப் பெற்றிருந்த ப்ரியாவின் முக அழகு அபாரமான அழகாக ஜொலித்தது.
"அம்மா, பணம் குடுங்கம்மா…"
"என்ன ப்ரியா… நேத்துதான் தௌசண்ட் ருபீஸ் வாங்கிட்டுப் போன? இன்னிக்கு மறுபடியும் பணம் கேக்கற? என்ன பண்ணின?"
"ஒரு சின்ன பையன்மா. படிக்கவே வசதி இல்லையாம். ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு பணம் இல்லாம படிப்பையே நிறுத்தச் சொல்லிட்டாங்களாம் அவங்க வீட்ல. பார்க்கவே பாவமா இருந்துச்சும்மா..."
"அதனால ஸ்கூல் ஃபீஸ் கட்டறதுக்கு உடனே பணத்தை எடுத்துக் குடுத்துட்டியாக்கும்?..."
"ஆமாம்மா. அப்புறம், ஒரு நாய்க்குட்டி கால்ல அடிபட்டு படுத்திருந்துச்சும்மா. வெட்னரி ஆஸ்பிடலுக்கு அதைத் தூக்கிட்டுப் போய் டாக்டர்ட்ட காண்பிச்சு, கட்டுப் போட்டுட்டு மருந்தும் வாங்கிட்டு வந்தேன்... அப்புறம் 'பெப்’ பின்னாடி உட்கார்ந்து நாய்க்குட்டியைப் பிடிச்சுக்கிட்டு வந்த ஜோசப்புக்கு 'டிப்ஸ்’ குடுத்தேம்மா..."
"போதும் ப்ரியா. நிறுத்திக்க. தினமும் இப்பிடி யாருக்காவது உதவி செய்றேன்னு பணத்தைத் தூக்கிக் குடுத்துட்டு வந்துடற. ஃப்ரெண்ட்ஸ் கூடப் போய் சுடிதார் எடுக்கப் போறேம்மான்னு சொல்லி பணம் கேட்ட. குடுத்தேன். உதவி செய்றது தப்புன்னு சொல்லலை. அதுக்கும் ஒரு அளவு இருக்கு. யார்கிட்டயும் ஏமாந்துடக் கூடாது. அதுக்குத்தான் சொல்றேன். இன்னிக்கு எதுக்கு பணம் கேக்கற?"
"பெப்புக்கு பெட்ரோல் போடணும்மா. அதுக்குத்தான்மா கேட்டேன்."
"வண்டிக்கு பெட்ரோல் போடு. பணத்தை செலவு பண்ணிட்டு வண்டியில பெட்ரோல் இல்லாம கஷ்டப்படாத. இந்தா" நித்யா, பீரோவில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள்.
"ப்ரியா... என்னோட ஃப்ரெண்ட் மாலினி ஆன்ட்டி நேத்து நம்ப வீட்டுக்கு வந்தா. உன்னை ரொம்ப கேட்டா. நீ காலேஜ்ல இருந்து வர லேட்டாயிடுச்சு. அதனால கிளம்பிட்டா..."
"ஓ… மாலினி ஆன்ட்டியா? எப்படிம்மா இருக்காங்க?"
"அவளுக்கென்ன? நல்லா இருக்கா. அவளோட பையன் அமெரிக்காவுல இருக்கான். அவனைப்பத்திதான் பேசிக்கிட்டிருந்தா."
"ஓ..."
"என்ன ஓ... யோசனையெல்லாம் நான் பேசறதைக் கவனிக்காம வேற எங்கயோ இருக்கு?!"
"அது ஒண்ணுமில்லம்மா... அந்த நாய்க்குட்டி நேத்து ராத்திரி முழுசும் என்ன பண்ணுச்சோ… பாவம்..."
"சரியா போச்சு போ. உன் கூட பேசறதுக்கு சும்மா இருக்கலாம்..."
"ஸாரிம்மா. காலேஜுக்கு டைம் ஆச்சு. பெட்ரோல் வேற போட்டுட்டுப் போகணும்..."
"சரி... சரி... கிளம்பு. உங்க அப்பா வாக்கிங் போயிட்டு வர்ற டைம் ஆச்சு. அவர் வர்றதுக்குள்ள நான் போய் பூஜையை முடிக்கணும்."
"சரிம்மா. டாட்டா."
ப்ரியா, 'பெப்’பில் ஏறி அமர்ந்து, அதை ஓட்டிச் செல்லும் அழகை சில நிமிடங்கள் நின்று ரசித்தாள் நித்யா.
கையில் கரண்டியுடன் சமையலறையை விட்டு வெளியே வந்த பரிமளா, கண்ணாடி முன்னால் நின்று தன்னைத்தானே ரசித்துக் கொண்டிருந்த வினய்யைப் பார்த்து கோபமாகப் பேசினாள்.
"போதும்டா. உன் அழகை நீயே ரசிக்கறது. சினிமாவுலயா நடிக்கப் போற? விதம் விதமா ட்ரஸ்ஸை மாட்டிக்கிட்டு நீ அலையறதும், துணிமணிக்கு செலவு பண்றதையும் பார்த்தா எனக்கு பத்திக்கிட்டு வருது..."
"பத்திக்கிட்டா தண்ணியை ஊத்தி அணைச்சுடுங்கம்மா. இப்பிடி டென்ஷன் ஆனிங்கன்னா பி.பி. ரொம்ப எகிறிடும்மா. டாக்டர் சொன்னதை மறந்துட்டீங்களா?"
"ஆஹா... ரொம்ப அக்கறைடா உனக்கு? ஆமா... படிப்பெல்லாம் எப்பிடி போய்க்கிட்டிருக்கு? ஊர் சுத்தறதெல்லாம் ஒரு லிமிட்டோட வச்சுக்கிட்டு ஒழுங்கா படிக்கற வேலையைப் பாரு. 'சம்பாதிச்சுப் போட அப்பா இருக்கார்’ங்கற நினைப்புல அநாவசியமா செலவு பண்ணாதே. அப்பாவை காக்கா புடிச்சு பணம் வாங்கி துணிமணியில கண்டபடி காசைப் போடற. உங்க அப்பாவுக்கு, அவரோட அப்பா சம்பாதிச்ச சொத்து எதுவும் கிடையாது. அவங்க அப்பாவோட டின் கம்பெனி தொழிலை, நுணுக்கமா தெரிஞ்சுக்கிட்டு சுயமா சம்பாதிக்கறார். நீ உங்கப்பாவோட சொத்து சுகங்களை நம்பியே வாழ்க்கையை ஓட்டிடலாம்னு நினைக்காம, நல்லபடியா படிச்சு முடிச்சு உனக்குன்னு ஒரு தொழிலையோ, நல்ல வேலையோ தேடிக்கணும். கலர் கலரா டிரஸ்ஸை மாட்டிக்கிட்டு காலேஜை வலம் வந்தா போதுமா? புத்தியையும் கொஞ்சம் தீட்டிக்கிட்டு நல்லா படிக்கறதுக்கு முயற்சி பண்ணு... நான் சொல்றது காதுல ஏறுதா இல்லியா?..."
"தினமும் நீங்க சொல்ற இதே டயலாக்கை நானும் தினமும் இந்தக் காதுல ஏத்தி இந்தக் காது வழியா விட்டுட்டிருக்கேன்னு நினைச்சுடாதீங்கம்மா. இந்தக் காதுல வாங்கி, இந்த மனசில ஏத்தி வச்சிருக்கேன்மா..."
"ரொம்ப நக்கலா போச்சுடா உனக்கு..."
"அதெல்லாம் இல்லம்மா. அம்மாகிட்ட சும்மா தமாசுக்கு பேசினேன். படிப்பைப் பொறுத்த வரைக்கும் என்னைப் பத்தின கவலையே வேண்டாம்மா. ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்துவேன். ஆடுவேன். பாடுவேன். அப்பப்ப பொண்ணுகளை ஸைட் அடிக்கறது மட்டும் கொஞ்சமா... கொஞ்சமே கொஞ்சமா..."
"மண்டையில போட்டேன்னா பாரு..."
வினய் பேசி முடிப்பதற்குள் கையிலிருந்த கரண்டியால் அவனை அடிப்பது போல பாவனை செய்தாள் பரிமளா.
"ஸாரிம்மா. ஸாரி. நான் காலேஜ் கிளம்பணும்மா. டாட்டா."
"சாயங்காலம் வருவீல்ல, அப்ப உன்னைப் பார்த்துக்கறேன்."
"வரேன்மா." கத்தியபடியே கல்லூரிக்குப் போவதற்காக வீட்டை விட்டு வெளியேறினான் வினய்.
கல்லூரியில் ப்ரியா மற்றும் அவளுடன் சேர்ந்து வரும் தோழியர் அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
சற்று சமீபமாக வந்துக் கொண்டிருந்த வினய்யைப் பார்த்த ப்ரியா அடிக்குரலில் பேசினாள்.
"அதோ வர்றான் பாருங்கடி ராமராஜன் ஸ்டைல்ல கலர் பாண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு? அவன்தான் நேத்து என் கிட்ட வந்து ம்யூசிக் ட்ரூப்ல பாடச் சொல்லிக் கேட்டான்..."
"அவனா? எந்த க்ளாஸ்? என்ன பேர்?"
"அவனோட பேரையோ அவன் என்ன படிக்கறான்னோ நான் கேட்டுக்கலை. யாரோ அவனோட கஸினாம். ம்யூசிக் ட்ரூப் நடத்தறானாம். பெண் பாடகிகள் கிடைக்கலியாம். என்னைப் பாடச் சொல்லிக் கேட்டான்."
"இங்கதான் வர்றான் போலிருக்கு. பேரு, ஊரு எல்லாத்தையும் கேட்ருவோம்" அருணா கூறினாள்.
அனைவரும் வினய் வரும் திசைப்பக்கம் பார்த்தனர்.
வினய், அவர்களருகே வந்து, தயங்கி நின்றான்.
"ப்ரியா... இவங்கள்ளல்லாம் உன் ஃப்ரெண்ட்ஸ்தானே..."
"ஆமா. இவ அருணா, இவ சத்யா, இவ கார்த்திகா, இவ புவனா, இவ ஷைலா."
"ஹாய்"
"ஹாய்" ஐந்து பேரும் சேர்ந்து ஹாய் சொன்னார்கள்.
"உங்க பேர்?"
"என் பேர் வினய்." ஸ்டைலாக தோளைக் குலுக்கியபடி கூறினான் வினய்.
"என்ன ப்ரியா, நீங்க ஒண்ணுமே பேச மாட்டேங்கறீங்க?"
"அதான் இவங்கள்லாம் சேர்ந்து பேசறாங்களே... ஆமா... இதென்ன ட்ரஸ்ன்னு தினத்துக்கும் ஒரு கலரா மாட்டிக்கிட்டு வரீங்க?"
"ஏன் உங்களுக்குப் பிடிக்கலியா?"
"எனக்கு பிடிக்கற மாதிரிதான் நீங்க ட்ரஸ் போட்டுக்கணும்னு ஒண்ணும் சட்டம் கிடையாது. ஆனா உங்க ட்ரஸ் கண்ணை உறுத்துது. ஜென்டிலா இல்லை."
'ஓ... ஜென்ட்டிலா இருக்கணுமா? அப்பதான் ப்ரியாவுக்குப் பிடிக்குமா... டேய் வினய்... ஒரு க்ளு கிடைச்சிருச்சுடா… நாளையிலிருந்து லைட் கலர் ஷர்ட்ஸ் போட்டு ப்ரியாவை அசத்திடுடா...’ தனக்குத் தானே மனதிற்குள் பேசிக் கொண்டான் வினய்.
"இப்பிடி பொண்ணுக பின்னாடி சுத்திக்கிட்டிருந்தா… படிப்பு எப்படி? எதிர்காலம் எப்படி?" புவனா கிண்டலாகக் கேட்டதைப் புரிந்துக் கொண்டான் வினய்.
"படிப்புல நான் நம்பர் ஒன். எதிர்காலத்தைப் பத்தி நிறைய சிந்திச்சு வச்சிருக்கேன். அதைப் பத்தியெல்லாம் இப்பவே சொல்லக்கூடாது. செயல் வீரனா, சாதிச்சதுக்கப்புறம்தான் சொல்லணும். சொல்றதென்ன... நீங்களே தெரிஞ்சுப்பீங்க..."
"வெரி குட். ஆமா... ப்ரியாவை உங்க கஸினோட ம்யூசிக் ட்ரூப்ல பாடக் கூப்பிட்டிருக்கீங்களாமே?" கார்த்திகா வேண்டுமென்றே அதட்டிக் கேட்பது போல கேட்டாள்.
"என்னடி ப்ரியா? இவரோட கஸின் ட்ரூப்ல பாடப் போறியா?"
ப்ரியா பதில் கூறுவதற்குள் வினய் குறுக்கே பேச ஆரம்பித்தான்.
"ப்ளீஸ் ப்ரியா, மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க. என்னோட கஸின் அசோக் கிட்ட 'எப்பிடியாச்சும் உனக்கு ஒரு சூப்பர் பெண் பாடகியை அறிமுகப்படுத்தறதா’ ப்ராமிஸ் பண்ணிட்டேன் ப்ரியா. ப்ளீஸ் ப்ரியா... அன்னிக்கு நான் கேட்டப்ப எக்ஸாம் இல்லாத டைம்னா பாடறேன்னு சொன்னீங்க. இன்னிக்கு இவங்கள்லாம் இருக்கறதுனாலயா என்னன்னு தெரியலை ரொம்ப யோசிக்கறீங்க..."
"நான் யோசிக்கறதுக்குக் காரணம் இவங்க யாரும் இல்ல. வீட்டில அம்மாகிட்டயோ அப்பாகிட்டயோ நான் இன்னும் பர்மிஷன் வாங்கல. அவங்க கிட்ட கேக்காம நான் உங்களுக்கு கன்ஃபர்ம்மான பதில் சொல்ல முடியாதே..."
"கண்டிப்பா கேக்கணும். அவங்களும் 'யெஸ்’ சொல்ற மாதிரி நீங்கதான் பார்த்து அதுக்கேத்த மாதிரி கேக்கணும் ப்ரியா. ப்ளீஸ்..."
வினய் கெஞ்சுவதைப் பார்க்க, ப்ரியாவிற்கு பாவமாக இருந்தது. அவளது இளகிய மனம் மேலும் இளகியது.
'ச்ச பாவம். எப்பிடி கெஞ்சறான்?!’ என்று நினைத்தவள், "நாளைக்குக் காலையில உங்களுக்கு யெஸ் ஆர் நோ சொல்லிடறேன் வினய்."
"ஐய்யோ 'யெஸ்’ மட்டும் சொல்லுங்க. 'நோ’ வேண்டாமே ப்ளீஸ்..."
"அது அம்மா, அப்பாட்ட பேசினப்புறம்தான் தெரியும்."
"சரி..." வினய்யின் குரல் உள்ளுக்குச் சென்றது. அவன் முக பாவம், ப்ரியாவின் மனதில் 'ஐயோ பாவம்’ என்ற உணர்வை உண்டாக்கியது.
"ஏ ப்ரியா… க்ளாசுக்குப் போலாம்." கார்த்திகா அழைத்தாள். வினய்க்கு 'டாட்டா’ கூறி அனைவரும் கிளம்பினர்.
ப்ரியா நடந்து செல்லும் அழகை ரசித்தபடியே சில விநாடிகள் நின்றிருந்தான். அதன் பின்னரே அவனது வகுப்பிற்குப் புறப்பட்டான்.
நித்யாவின் கணவர் பாஸ்கர், படுக்கையில் படுத்தபடியே பேப்பர் படித்துக் கொண்டிருந்தான். கழுத்துவரை போர்த்தப்பட்டிருந்த தடிமனான போர்வைக்கு வெளியே அவனது தலையும், கைகளும் மட்டும் தெரிந்தன. ஏ.ஸியின் குளிரில், இதமாக நன்கு மூடிக் கொண்டபடி படித்துக் கொண்டிருந்தான்.
மற்ற நாட்களில் விடியற்காலை எழுந்து வாக்கிங் போய் வந்து, தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றி, டி.வி.யில் செய்தி பார்த்து, கேட்டு, அதன்பின் குளித்து முடித்து, பூஜையறையில் இருபது நிமிடங்கள் சாமி கும்பிட்டுவிட்டு, அதன்பின் காலை உணவிற்காக டைனிங் ரூமிற்கு வருவான். சாப்பிட்டபின், அவனது சொந்த ஆபீசிற்குப் புறப்படுவான். திங்கள் முதல் சனிக்கிழமை வரை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படும் பாஸ்கர், வாரத்தில் ஒரு நாள் வரும் ஞாயிறு என்றால் போதும். ஒரே சோம்பல்தான். தாமதமாக எழுந்து, நிதானமாக காபி குடித்து, வாரப்பத்திரிகைகள் அனைத்தையும் படித்து, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை டி.வி.யில் பார்த்து அதன்பின்னர் ஆடி அமர காலை உணவை ரசித்து, சுவைத்து சாப்பிட்டு, மறுபடியும் ஒரு குட்டித்தூக்கம் போர்வைக்குள். 'அந்த சுகமே சுகம்’ என்பான் பாஸ்கர்.
அந்த ஒரு ஞாயிறு தரும் ஓய்வும், சுகமும் மீதி ஆறு நாட்களுக்கு சக்தியை அளிக்கிறது என்பது அவனது அனுபவம். நித்யாவும், வாரத்தில் ஆறு நாட்கள் உழைக்கும் தன் கணவன், ஞாயிற்றுக் கிழமை மட்டும் 'அவனது விருப்பப்படி இருக்கட்டும் என்று விட்டு விடுவாள்.
அன்று ஞாயிற்றுக் கிழமையாகையால் படுத்தபடியே பேப்பர் படித்துக் கொண்டிருந்த பாஸ்கரின் போர்வையை விலக்கினாள்.
"தொந்தரவு பண்ணாதே. இன்னிக்கு ஞாயித்துக்கிழமை…"
"முக்கியமான விஷயம்ங்க."
"சரி சரி. சொல்லு. என்ன விஷயம்?"
"நம்ம ப்ரியா நல்லா பாடறாள்ல..."
"இது என்ன புது விஷயமா? தெரிஞ்சதுதானே?"
"சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் பேசுங்களேன்."
"சரி, ப்ரியா பாடறா... மேலே சொல்லு."
"அவளோட காலேஜ்மேட் யாரோ வினய்ன்னு ஒரு பையனாம். அவனோட கஸின் ஒருத்தன் ம்யூஸிக் ட்ரூப் நடத்தறானாம். நம்ம ப்ரியாவை அந்த ட்ரூப்ல பாடச் சொல்லி கேக்கறானாம். ப்ரியா நம்மகிட்ட பர்மிஷன் கேக்கறா..."
"நம்ம ப்ரியா கேட்டு எதையாவது மறுத்திருக்கோமா. அவளுக்கு இஷ்டம்னா பாடட்டும். ஞாயித்துக்கிழமை அதுவும் சுகம்மா படுத்துக்கிட்டே பேப்பர் படிக்கற என்னை டிஸ்டர்ப் பண்ற அளவுக்கு இந்த விஷயம் ஒண்ணும் அவ்வளவு முக்கியம் இல்லையே. அவளுக்கு இனிமையான குரல் இருக்கு. நல்லா பாடற திறமை இருக்கு. வாய்ப்பு கிடைக்கறப்ப அதை பயன்படுத்திக்கறதுதான் புத்திசாலித்தனம். என் பொண்ணு புத்திசாலி..."
"அட… நீங்க வேற புரியாம பேசிக்கிட்டு? ப்ரியா நமக்கு ஒரே பொண்ணுன்னு செல்லம் குடுத்தாலும், அவ நம்பளைக் கேட்டுதான் எல்லாமே செய்யறா..."
"உன்னோட வளர்ப்பு அப்பிடி. நான் வேலை வேலைன்னு பிஸியா இருந்துட்டாலும் ப்ரியாவை நல்லபடியா வளர்த்திருக்க. சரி சரி. இன்னும் மூணு பக்கம் நியூஸ் படிக்கணும்..."
"ஓகோ... என்னை போகச் சொல்றீங்களா? உங்க கூட உட்கார்ந்து அரட்டை அடிக்கறதுக்கு ஒண்ணும் நான் அலைஞ்சுக்கிட்டு கிடக்கலை. ப்ரியா விஷயமா பேச வந்தேன். பேசியாச்சு. நீங்க பேப்பர் படிச்சா படிங்க. இல்லை... முகத்தை இன்னும் கூட போர்வையில நல்லா இழுத்து மூடிக்கிட்டு தூங்குங்க..."
"அட... கோவிச்சுக்கிட்டியா... சும்மா தமாஷுக்கு சொன்னா... இன்னிக்கு காலை டிபன், சன்டே ஸ்பெஷலாச்சே? என்ன மெனு?"
"இட்லி, கொத்துக்கறி, சட்னி. தோசையும் உண்டு."
"அடடடா... அட்டகாசமான மெனு. பண்ணு.. பண்ணு சூப்பரா பண்ணு." சொல்லிவிட்டு பேப்பரில் மூழ்கினான் பாஸ்கர். நித்யா மாடியிலிருந்து கீழே இறங்கினாள் சமைப்பதற்காக.
திருமண விசேஷங்களிலும், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பாடினாள் ப்ரியா. அவளது தேன் மதுரக் குரலாலும், பாடும் திறமையாலும் வினய்யின் சித்தப்பா மகன் அசோக்கின் ம்யூசிக் ட்ரூப்பிற்கு புகழ் கிடைத்தது. மேலும் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ப்ரியாவிற்கும் பாராட்டுகள் குவிந்தன.
அவளுக்கு நிகழ்ச்சி பற்றிய விபரங்கள், தேதி ஆகியவற்றை அறிவிப்பதன் மூலம், ப்ரியாவிடம், வினய் தொடர்ந்து பழகுவதற்கு வாய்ப்புகள் கிடைத்தன. வாட்டசாட்டமாக வளர்ந்த வாலிபன் என்கிறபோதும் வினய்யின் முகம் மட்டும் அப்பாவித்தனமாக வெகுளித்தனமாகத் தோன்றியது ப்ரியாவிற்கு. நல்ல நட்பு உருவானது அவர்களுக்குள். அந்த நட்பை சாதகமாகக் கொண்டு ப்ரியாவிடம் ஒரு நாள் தன் மனதைத் திறந்தான் வினய்.
"ப்ரியா... உன்கிட்ட கொஞ்சம் பேசணும்."
"அதான் அடிக்கடி பேசிக்கிட்டிருக்கோமே..."
"அதில்ல... ப்ரியா... நான்... நான்... உ... உ… உன்னை விரும்பறேன்..."
"விரும்பிதானே ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருக்கோம். இதென்ன புதுசா..."
"புதுசுதான் ப்ரியா. ஃப்ரெண்ட்ஷிப் வேற... இப்ப நான் சொல்ற 'விரும்பறேன்’ங்கறது வேற..."
"வினய்? என்ன சொல்ல வரீங்க? க்ளியரா பேசுங்க..."
"நம்ப நட்பு லைன் க்ளியரா இருக்கு. அந்த நட்பு... நட்பு... எனக்குள்ள... எனக்குள்ள... க… க… காதலா மாறியிருக்கு ப்ரியா..." இதைக் கூறி முடிப்பதற்குள் வினய்க்கு முகம் முழுவதும் வியர்த்து வழிந்தது. வார்த்தைகள் தெளிவாக வெளிவராமல் தடுமாற்றமாய் வந்தன.
வினய் தன்னிடம் இப்படி பேசுவான் என்று ப்ரியா எதிர்பார்க்கவில்லை. கடுமையான கோபம் கொண்டாள். வினய்யின் அப்பாவித்தனமான முகம் பார்த்து அவளது கோபம் தானாகவே சற்று தணிந்தது.
"என்ன வினய் நீங்க... நல்ல நட்போட பழகிட்டிருக்கீங்கன்னு சந்தோஷப்பட்டா இப்பிடி காதல்... அப்பிடி இப்படின்னு ட்ராக் மாறி பேசறீங்க. நீங்க எனக்கு ஒரு நல்ல ஃப்ரெண்ட். இப்பிடித்தான் நான் உங்க கூட பழகறேன்."
"நீ ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறேன்னு எனக்குத் தெரியும் ப்ரியா. ஆனா... இந்த காலேஜ் கேம்பஸ்ல முதல் முதலா உன்னைப் பார்த்த அந்த நிமிஷத்துல இருந்து உன் மேல எனக்கு காதல் வந்தாச்சு ப்ரியா... உன்னைக் காதலிச்சதனாலதான் உன் கூட பழக ஆரம்பிச்சேன். பாட்டுப் பாடச் சொல்லி, உன் கூட பேசிப்பழகற சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கிட்டேன். என்னை உனக்குப் பிடிக்கலையா?"
"நிறைய பிடிக்குது. ஆனா அது காதல் இல்லை. என் மனசுல அந்த உணர்வும் இல்லை."
"ப்ளீஸ் ப்ரியா. இல்லைன்னு சொல்லி என்னை ஏமாத்திடாதே. ப்ளீஸ்."
"ஏமாத்தறதா? நானா? என்ன வினய் உளர்றீங்க? நீங்க என்னை 'காதலிக்கறேன்’னு சொல்ற விதத்துலயா நான் உங்க கூட பழகினேன்? என்னோட க்ளாஸ்ல படிக்கற வினோத், சரவணன், அரவிந்த் இவங்க கூட எப்படிப் பழகறேனோ அது போலத்தான் உங்க கூடயும் பழகறேன்..."
"தெரியும் ப்ரியா. நீ உன் மனசுல நட்பைத் தவிர வேற எந்த எண்ணமும் இல்லாமத்தான் பழகறன்னு தெரியும். ஆனா என் மனசுக்கு அது தெரியலையே. நான் விடற ஒவ்வொரு மூச்சும் உன்னை நினைச்சுத்தான். எல்லாருக்கும் இதயம் 'லப்டப்’ன்னு துடிக்கும். ஆனா என்னோட இதயம் 'ப்ரியா ப்ரியா’ன்னுதான் துடிக்குது. ப்ளீஸ் ப்ரியா... நீ எனக்கு இல்லைன்னா நான் செத்துப் போயிடுவேன். இது சத்தியம்."
வினய்யின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.
"ஏ… ப்ரியா… நீ இங்க என்ன பண்ற? உன்னை எவ்வளவு நேரமா தேடிக்கிட்டிருக்கோம் தெரியுமா?" கார்த்திகாவும், அருணாவும் அங்கு வந்து சேர்ந்தனர்.
"ஹாய் வினய்? ப்ரியாவை பிரபல பாடகியாக்கிட்டீங்க போலிருக்கு? என்ன... உங்க முகமே சரியில்லயே? வாட் ஹாப்பண்ட் யா?" கார்த்திகா கேட்டதும் வினய் சுதாரித்துக் கொண்டான்.
"ஒண்ணுமில்லியே… ப்ரியாவை பாடகியாக்கினது நான் இல்லை. அவளோட திறமையை வெளிப்படுத்தினா. அதனால நல்ல பேர் கிடைச்சது. அது மட்டுமில்ல… என்னோட கஸின் அசோக்குக்குத்தான் ப்ரியா பாடறது ரொம்ப உதவியா இருக்கு. ப்ரியா பாடறதுனால அவனோட ட்ரூப்புக்கு நிறைய சான்சும் கிடைக்குது."
"வெரி குட் வினய். இன்னொரு விஷயம் தெரியுமா? என்னோட அண்ணன் சாய்ராம் ஒரு கிடார் ப்ளேயர். ஹாரிஸ் ஜெயராஜ் ஸார் ரிக்கார்டிங்ல நிறைய வாசிச்சிட்டிருக்கார். ஏற்கெனவே அண்ணன்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். எங்க அண்ணன் ஹாரிஸ் ஜெயராஜ் ஸார்ட்ட ப்ரியா பாட்டு பாடின சி.டி.யை குடுத்திருக்காராம். கூடிய சீக்கிரம் சினிமா ரிக்கார்டிங்ல ப்ரியா பாடுவா..."
"ஏ கார்த்திகா… வீட்டுக்குப் போலாம்னு ப்ரியாவைத் தேடிட்டு, இப்ப நீ ராமாயணம் பாடிட்டிருக்க… வாடி போலாம்." அருணா, கூப்பிட்டதும் அவசர அவசரமாய் ப்ரியாவும், கார்த்திகாவும் கிளம்பினர்.
"வினய்… டாட்டா. நாளைக்குப் பார்க்கலாம்."
மூவருக்கும் சேர்த்து கையசைத்த வினய், ப்ரியாவைப் பார்க்கும்போது மட்டும் கண்களால் பேசினான். அவனது பார்வையைத் தவிர்த்தபடி நகர்ந்தாள் ப்ரியா. ஆனால் இயல்பாக அவளுக்கே உரிய இரக்க சுபாவம் காரணமாக வினய்யின் மீது பரிதாபம் எழுந்தது. கல்லூரியின் இரண்டு சக்கர வண்டிகள் நிறுத்துமிடத்தில் காத்திருந்த புவனா, ஷைலா, சத்யா மூவரும் பெப்பில் ஏறிக் கொள்ள மூன்று 'பெப்’களும் கல்லூரி இளசுகளை ஏற்றிக் கொண்ட குஷியில் இளமைத் துள்ளலுடன் விரைந்தது.
அன்று திங்கள் கிழமை. சாப்பாட்டு மேஜை மீது சூடான உப்புமா, அழகான பூக்கள் வரையப்பட்ட கண்ணாடி பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதே டிஸைன் உள்ள சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் சட்னி. உயரமான கண்ணாடி டம்ளரில் தண்ணீர். சாப்பிடுவதற்கு அழகிய பீங்கான் ப்ளேட். இன்னொரு உயரமான கண்ணாடி டம்ளர் நிறைய சாத்துக்குடி பழச்சாறு நிரப்பப்பட்டிருந்தது. அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு, பாஸ்கர் சாப்பிட வருவதற்காக காத்திருந்தாள் நித்யா. அவன் சாப்பிடுவதற்காக மட்டுமல்லாமல், முக்கியமான விஷயத்தைப் பேசவும் அதுதான் சரியான தருணம் என்றும் எதிர்பார்த்திருந்தாள்.
கையில் ப்ரீஃப் கேசுடன் வந்த பாஸ்கர், ப்ரீஃப்கேஸை நாற்காலியின் அருகே, கார்பெட் மீது வைத்துவிட்டு உட்கார்ந்தான்.
உப்புமாவை பரிமாறியபடியே நித்யா, பேச ஆரம்பித்தாள்.
"ஏங்க, நம்ம ப்ரியாவோட கல்யாண விஷயம் பத்தி சொன்னேனே. இன்னிக்கு மாலினியோட வீட்டுக்குப் போய் நம்ம ப்ரியாவோட ஃபோட்டோவை குடுத்துட்டு, மாலினியோட பையன் சித்தார்த்தோட ஃபோட்டோவை வாங்கிட்டு வரலாம்னு நினைக்கறேன்..."
"போயிட்டு வாயேன். இன்னிக்கு ஒரு வழியா மாலினி கூட உன் பொழுது போயிடும்."
"இல்லங்க. இன்னிக்கு வெளி வேலைகள் நிறைய இருக்கு. ப்ரியாவோட சூடிதார் ஸெட் தைக்கக் குடுத்ததை வாங்கணும். எங்க சித்திகிட்ட குலோப்ஜாமூன் பண்ணச் சொல்லியிருந்தேன். அதை வாங்கணும். மாலினி வீடு நுங்கப்பாக்கத்துல. டெய்லர் கடை ப்ரின்ஸ் பிளாசாவுல. சித்தி வீடு தண்டையார் பேட்டையில. ஒவ்வொரு இடத்துக்கும் போறதுக்கே நிறைய டைம் எடுக்கும். எப்பிடியும் சாயங்காலமாயிரும் நான் திரும்பி வர்றதுக்கு. ப்ரியா காலேஜ்ல இருந்து வர்றதுக்குள்ள வந்தாகணும். அவ வீட்டுக்கு வர்றப்ப நான் இல்லைன்னா மூட் அவுட்டாகிடுவா."
"மாலினியோட பையனுக்கும், நம்ம ப்ரியாவுக்கும் கல்யாணம் உறுதியாயிடுச்சுன்னா நல்லாயிருக்கும். அந்தப் பையன் யூ.எஸ் போறப்ப வழியனுப்பறதுக்கு ஏர்போர்ட் போனோமே, அப்பவே அவன் மேல ஒரு நல்ல அபிப்ராயம் வந்துச்சு. பணக்கார வீட்டுப் பையன்ங்கற கர்வமோ பந்தாவோ இல்லாம அடக்கமா இருந்தான். ப்ரியாவை பெண் கேட்டு வந்த மத்த வரன்களை விட இந்த சித்தார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஸ்டேட்டஸ், பணம்ங்கற விஷயத்துக்கு மேல பையன் நல்ல குணமானவனா இருக்கணும். அதுதான் முக்கியம். யாரையும் சார்ந்திருக்காம சொந்தமா முன்னேறனும். சுயமா சம்பாதிக்கணும். இந்தத் தகுதிகளெல்லாம் சித்தார்த் கிட்ட நிச்சயமா இருக்கும்னு நான் நம்பறேன்."
"எனக்கும் அப்பிடிதான்ங்க. மாலினியை விட பெரிய பணக்கார இடத்தில் இருந்தெல்லாம் ப்ரியாவை பெண் கேட்டு சொல்லி அனுப்பறாங்க. ஆனா அதையெல்லாம் விட மாலினியோட சம்பந்தம் பண்றதுதான் நல்லதுன்னு நினைக்கறேன்."
"பார்க்கலாம். கல்யாணம்ங்கறது நம்ம கையில இல்லை. பெண் கழுத்துல விழற மூணு முடிச்சு, ஆண்டவன் போட்ட முடிச்சா இருக்கும். முயற்சி நம்பளோடது. முடிவு அந்தக் கடவுளோடது. சரிம்மா நான் கிளம்பறேன். சாப்பிட்டு முடித்து சாத்துக்குடி சாற்றைக் குடித்து முடித்த பாஸ்கர், ப்ரீஃப்கேஸை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
"தண்டையார் பேட்டைக்கெல்லாம் போறதுனா சின்னக் காரை எடுத்துட்டுப் போ. நான் இன்னிக்கு பெரிய கார்ல ஆபீஸ் போய்க்கறேன்." போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனான் பாஸ்கர்.
மாலினியின் வீடு. போர்டிகோவில் காரை நிறுத்தும்படி டிரைவரிடம் சொன்னாள் நித்யா. கார் நின்றதும் இறங்கினாள். மாலினிக்காக வாங்கி வந்திருந்த பழங்கள் இருந்த பையை எடுத்துக் கொண்டாள்.
கார் வந்து நிற்கும் ஓசை கேட்டு நித்யாவை வரவேற்க, வெளியே வந்தாள் மாலினி.
"வா நித்யா. கரெக்ட்டா சொன்ன டைமுக்கு வந்துட்டியே. இந்த ட்ராஃபிக் தொல்லை பெரிய கஷ்டமாச்சே. சரி, உள்ளே வா."
முன்னே நடந்த மாலினியைப் பின் தொடர்ந்தாள் நித்யா. கையிலிருந்த பையை மாலினியிடம் கொடுத்தாள்.
"ஒவ்வொரு தடவையும் ஏதாவது வாங்கிட்டுதான் வரணுமா என்ன?" பையை வாங்கிக் கொண்ட மாலினி கேட்டாள்.
"உனக்கு எப்பவும் பழம்தான் வாங்கிட்டு வர வேண்டியிருக்கு. ஸ்வீட்ஸ் சாப்பிட்டா வெயிட் போட்டுடும்னு ஸ்வீட்ஸ் சாப்பிட மாட்ட. பழங்கள்ன்னா விரும்பி சாப்பிடுவ. அதான். ஆனா… சும்மா சொல்லக்கூடாது மாலினி. சாப்பிடற விஷயத்துல ரொம்பக் கட்டுப்பாடா இருந்துக்கற. இருபத்தி நாலு வயசு பையனுக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. அவ்வளவு இளமையா இருக்க."
"உன்னோட காம்ப்ளிமென்ட்சுக்கு ரொம்ப தாங்க்ஸ். சாப்பிடறதுல கட்டுப்பாடா இருக்கறதுனால மட்டும் இளமைத் தோற்றத்துல இருக்க முடியாது நித்தி. யோகா பண்றேன். ஜிம்முக்குப் போறேன்."
"என்னால சாப்பிடாம இருக்க முடியாது. இந்த ஜிம் கிம்முக்கெல்லாம் போனா என் உடம்பும் வளையாது. என்னைப் பொறுத்தவரைக்கும் வாய்க்கு ருசியா சாப்பிடணும். இஷ்டப்பட்டதை சாப்பிடாம அப்பிடியென்ன கட்டுப்பாடு வேண்டியிருக்கு?"
"அதான் உன்னைப் பார்த்தாலே தெரியுதே. இடுப்புல பாரு எவ்வளவு சதை போட்டிருக்கு? முகத்துல டபுள் சின் போட்டிருக்கு."
"அட.... போட்டா போட்டுட்டுப் போகுது போ."
"சரி சரி. உட்காரு. உனக்குப் பிடிச்சமான கேசரியும், சாம்பார் வடையும் பண்ணச் சொல்லி இருக்கேன். எடுத்துட்டு வரச் சொல்றேன்."
"வேண்டாம் மாலினி. நான் நிறைய இடங்களுக்குப் போகணும். உன் பையன் சித்தார்த்தோட போட்டோவை வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்."
"நீ வரேன்னு சொன்னதுனால, உனக்கு பிடிக்குமேன்னு ரவா கேசரியும், வடையும் பண்ணச் சொல்லியிருக்கேங்கறேன். நீ என்னடான்னா வந்ததும் வராததுமா போணும்ங்கற. உன்னை யாரு விடப்போறா" கூறியவள் குமுதாவை அழைத்தாள்.
"குமுதா... கேசரியும், சாம்பார் வடையும் எடுத்துட்டு வா."
"இதோ கொண்டு வரேன்மா."
"மாலினி, ப்ரியா விஷயமா சித்தார்த்ட்ட பேசினியா?"
"ஓ... பேசினேனே... இப்ப கல்யாணம் வேண்டாம்மா. நான் இன்னும் படிக்கணும். வேலைக்குப் போகணும்ன்னான். ப்ரியாவோட போட்டோ அனுப்பறேன். அதைப் பார்த்துட்டு அப்புறம் சொல்லுன்னு சொல்லியிருக்கேன். அவங்க பாட்டி அதான் நித்யா, எங்க மாமியாரோட நிலைமையையும் அவனுக்கு எடுத்துச் சொன்னேன். பொண்ணுன்னாலும் சரி, பையன்னாலும் சரி முதலில் இப்பிடித்தான் 'கல்யாணம் வேணாம்’ 'கல்யாணம் வேணாம்’பாங்க நாம சொல்ற விதமா சொன்னா புரிஞ்சுப்பாங்க."
"அதே சமயம் அவங்களை வற்புறுத்தவும் கூடாது. இந்தக் காலத்துப் பிள்ளைங்களை ஜாக்ரதையா கையாளணும். இல்லாட்டி நாம ஒண்ணு நினைக்க, நடக்கறது வேற ஒண்ணா ஆயிடும்."
"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரியான விஷயம்."
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது நெய் மணக்கும் கேசரி மற்றும் சாம்பார் வடையை அழகான கிண்ணங்களில் எடுத்து வந்தாள் குமுதா.
"சாப்பிடு நித்யா."
நித்யா சுவைத்து சாப்பிட்டாள்.
"நீ வேற. எனக்கு பிடிக்கும்னு ரவா கேசரியும், வடையும் பண்ணிக் குடுத்துட்ட. நாக்கை அடக்க முடியாம நானும் சாப்பிட்டுட்டேன். இனிமேல் உன்கிட்ட முன் கூட்டியே சொல்லாமத்தான் வரணும் போலிருக்கு."
"என்னிக்கோ ஒரு நாள் வர்ற. சாப்பிடற. அது சரி, ப்ரியாவோட ஃபோட்டோவை நீ இன்னும் தரலியே?"
"இதோ." ஹாண்ட் பேக்கிலிருந்து ப்ரியாவின் போட்டோவை எடுத்துக் கொடுத்தாள் நித்யா.
அதை வாங்கிக் கொண்டு போய் அலங்கார அலமாரி மீது வைத்து விட்டு வேறு ஒரு கவரை எடுத்து வந்தாள் மாலினி.
"இந்தா நித்யா. இந்தக் கவர்ல எங்க சித்தார்த்தோட போட்டோ இருக்கு. எடுத்துட்டுப் போ. ஏற்கெனவே சித்தார்த்தை உன் ஹஸ்பண்ட் பார்த்திருக்கார். இருந்தாலும் சித்தார்த் வெளிநாடு போய் ரெண்டு வருஷமாச்சுல்ல. இது இப்ப லேட்டஸ்ட்டா எடுத்ததுன்னு அங்க இருந்து அனுப்பினான். ப்ரியாவும் பார்க்கறதுனா பார்த்துக்கட்டும். எடுத்துட்டுப் போ."
மாலினி கொடுத்த கவரை வாங்கி ஹேண்ட் பேகில் போட்டுக் கொண்டாள் நித்யா.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர் இருவரும்.
"உன் கூட பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை மாலினி. நான் கிளம்பறேன். நிறைய இடத்துக்குப் போக வேண்டி இருக்கு."
"சரி நித்யா. ப்ரியாவோட ஃபோட்டோவை சித்தார்த்துக்கு இ.மெயில் பண்ணிடறேன். அதுக்கப்புறம் என்ன சொல்றான்னு பார்க்கலாம்."
"ஃப்ரெண்ட்ஸா இருக்கற நாம சம்பந்திகளா மாறி, நமக்குள்ள ஏற்கெனவே இருக்கற நட்பு இன்னும் ஸ்ட்ராங்கா இருக்கணும்."
"கனவுகளை வளர்த்துக்காத நித்தி. கடவுளோட அருளும், பிராப்தமும் இருந்தா எல்லாம் நடக்கும்."
"அதென்ன அப்படி சொல்லிட்ட? கனவு கினவுன்னு? ம்? நம்பிக்கையோட இருந்தா நாம ஆசைப்படறது நிச்சயம் நடக்கும்."
"நடக்கறது எல்லாமே நன்மைக்காத்தான் இருக்கணும். நம்புவோம். நான் கிளம்பட்டா மாலினி? என் ஹஸ்பண்ட் கூட, நான் இங்க புறப்படும்போதே கேலி பண்ணித்தான் அனுப்பினார். மாலினி வீட்டுல இன்னிக்கு முழுசும் உன் பொழுது போயிடும்னு. ஓ.கே. மாலினி வரட்டுமா?"
"சரி நித்தி. போயிட்டு வா."
கார் வரை வந்து நித்யாவை வழியனுப்பி வைத்தாள் மாலினி.
ப்>ரியா உட்பட அவளது பட்டாளம் இணைந்த ஆறு பேரும், ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியிருந்த 'பெப்’ மீது சாய்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.
"இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமான்னு இருந்த அந்த வினய்யா உன்னைக் காதலிக்கறதா சொன்னான்?" ஆவலுடன் கேட்டாள் அருணா.
"ஆமா அருணா. ரொம்ப சீரியஸ்ஸா சொன்னான்."
"அவன் சொன்னது இருக்கட்டும். நீ என்ன சொன்ன?" கார்த்திகா, ப்ரியாவின் முகத்தை ஆராய்ந்தபடியே கேட்டாள்.
"ம்... சொரைக்காய்ல உப்பு இல்லைன்னு. அட நீ வேற. ஏதோ நல்ல பையனா இருக்கானேன்னு ஃப்ரெண்ட்லியா பழகினேன். இப்பிடி உளறுவான்னு நான் எதிர்பார்க்கலை. பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கா உருவான கதைதான் போ."
"யாரை குரங்குங்கற? வினய்யைய்யா?" ஷைலா சிரித்தபடியே கேட்க, ப்ரியா எரிச்சலானாள்.
"இல்லை. உன்னைத்தான்..."
"ஏய்..."
"என்னடி ஸஸ்பென்ஸ் வச்சே பேசிக்கிட்டிருக்க? அவன்கிட்ட நீ என்ன சொன்னன்னு சொல்லேன் ப்ளீஸ்" கோழி முட்டைக் கண்களை விரியத் திறந்து வைத்துக் கொண்டு, ப்ரியாவின் கன்னத்தைப் பிடித்துக் கெஞ்சினாள் சத்யா.
"நான் என்னடி சொல்லியிருப்பேன்? எனக்கு அவன் மேல அப்படி எந்த எண்ணமும் இல்லைன்னு சொன்னேன்..."
"நீ சொன்னதும் அவன் அப்படியே அப்ஸெட் ஆயிட்டானா..." இது புவனாவின் ஆர்வக் கோளாறு எழுப்பிய கேள்வி.
"இல்லை... அப்படியே ஆனந்தக் கூத்தாடினான். சொல்லு சொல்லுங்கறீங்க. சொல்லிக்கிட்டிருக்கும்போதே குறுக்க குறுக்க பேசறீங்க..."
"சரி சரி சொல்லு. நாங்க எதுவும் கேக்கல..." ஷைலா கன்னத்தில் போட்டுக்கொண்டபடியே கூறினாள்.
"நான் அப்படி சொன்னதும் அந்த வினய் ஏதேதோ பினாத்தினான். என்னை முதல் முதல்ல பார்த்தப்பவே லவ்ஸ் ஆயிட்டானாம். அவனோட இதயம் ப்ரியா ப்ரியான்னுதான் துடிக்குதாம். இப்பிடித்தான் ஏதேதோ பேசினான். ஏற்கெனவே அப்பாவித்தனமான முகம் அவனுக்கு. நான் அவன் கூட நட்பு ரீதியாத்தான் பழகறேன்னு சொன்னப்புறம் அவனைப் பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. அவன் பேசிக்கிட்டிருக்கும்போதுதான் அருணா என்னை கூப்பிட வந்தா. இவ்வளவுதான் நடந்துச்சு. போதுமா?"
"ஓ.கே. ஓ.கே. 'கல்லூரி வாழ்க்கையில இதெல்லாம் சகஜமப்பா’ன்னு கவுண்டமணி ஸ்டைல்ல ஈஸியா எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்." கார்த்திகா கூறியதும் அனைவரும் பலமாக சிரித்தனர். அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பளீர் என்று கண்களைக் கூச வைக்கும் அதிரடியான வண்ணங்களில் உடுத்திக் கொண்டிருந்த வினய், மிகவும் வெளிர் நிற உடைகளை அணிய ஆரம்பித்திருந்தான்.
"என்னடா வினய்... ஆளே டோட்டலா மாறிட்ட? ஜென்டிலா டிரஸ் பண்ண ஆரம்பிச்சிருக்க? ப்ரியாவுக்கு டார்க் கலர்ஸ் பிடிக்கலைன்னுதானே?"
"ஆமாண்டா நரேன். ஆனாலும் கூட அவ..."
"ஆனாலும் அவ உன்னை லவ் பண்ணலைன்னு சொல்லிட்டா. அதானே? இதைத்தாண்டா சொல்லிக்கிட்டே இருக்க. எடுத்த எடுப்பில உடனே சரி சொல்றதுக்கு நீ என்ன பாட்டு பாடறதுக்கா கூப்பிட்ட? அவ மனசுல இடம் கேட்டிருக்க. இவ்ளவு பெரிய விஷயத்துக்கு... கேட்ட மறு நிமிஷமே எப்படிடா பதில் சொல்வா?"
"சொல்லிட்டாளேடா. 'நோ’ சொல்லிட்டாளே..."
"கொஞ்சம் பிகு பண்ணிக்குவாங்கடா..."
"அப்புறம் சரின்னு சொல்லிடுவாளாடா?" மிக ஆர்வமாய் கேட்டான் வினய்.
"பொறுமையா இரு. விடா முயற்சியா தொடர்ந்து அவ விட்ட பேசு. மெல்ல மெல்லத்தாண்டா கதவு திறக்கும். ப்ரியாவுக்குத்தான் இளகின மனசாச்சே. அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும்ங்கற மாதிரி, அவ மனசு உருகற மாதிரி கெஞ்சிப் பாரு."
"நிஜம்மாவா சொல்ற?"
"ஆமாண்டா. அவளுக்கு என்ன பிடிக்குதோ அதை மட்டும் செய். அவளுக்குப் பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டா உன்னை அவளுக்குப் பிடிச்சிடும். இல்லைன்னா உனக்கு பைத்தியம் பிடிச்சுடும்..." கேலியாகச் சிரித்தான் நரேன்.
"நான் எவ்வளவு சீரியஸா இருக்கேன்? நீ என்னடான்னா சிரிச்சுப் பேசற… கேலி பண்ற..."
"சரி… சரி… கோவிச்சுக்காதே. வா. போலாம்."
வினய், அவனது பைக்கில் ஏறிக்கொள்ள, நரேன் அவன் பின்னே தொற்றிக் கொண்டான். பைக் ஓடும் வேகத்திலும், காற்றின் வீச்சிலும் இருவரது ஷர்ட்களும் பலூன் போல் உப்பிக் கொண்டன.
இ.மெயிலில் வந்திருந்த ப்ரியாவின் போட்டோவைப் பார்த்தான் சித்தார்த். ப்ரியாவின் அழகு அவனைக் கவர்ந்தது. அழகிய நீண்ட கண்கள். சிவந்த அதரங்கள். மாம்பழக்கதுப்புகள் போன்ற கன்னங்கள். அடர்ந்த கூந்தலில் முன்பகுதியை அள்ளி எடுத்து க்ளிப் போட்டு, மீதமுள்ள நீண்ட முடியை லூஸாகத் தொங்க விட்டிருந்தாள். அந்த சிகையலங்காரத்தில் மிகையான அழகில் காணப்பட்ட ப்ரியா, சித்தார்த்தின் இதயத்திற்குள் ஸ்லோ மோஷனில் நுழைந்தாள். அவனது ரத்த நாளங்களில் இழைந்தாள். படிப்பு, வேலை என்று அவற்றில் கவனமாக இருந்த சித்தார்த்தின் மனதிலிருந்த மேக மூட்டம், மெல்ல விலகியது. அங்கே ப்ரியா, பத்மாசனம் போட்டு உட்கார்ந்தாள்.
தன் கைப்பையிலிருந்த சித்தார்த்தின் போட்டோ இருந்த கவரை எடுத்து ப்ரியாவிடம் கொடுத்தாள் நித்யா.
"என்னம்மா?"
"மாலினி ஆன்ட்டியோட மகன் சித்தார்த்தோட போட்டோ உள்ளே இருக்கு. எடுத்துப் பாரும்மா."
"எதுக்கும்மா இதெல்லாம்?"
"சொல்றேன். முதல்ல போட்டோவை பாரு. சித்தார்த் வெளிநாடு போறப்ப நீ ஏர்போர்ட்டுக்கு வரலை. அதுக்கு முன்னால கூட நீ அவனை ரொம்ப அபூர்வமாத்தான் பார்த்திருக்க. இது அவனோட லேட்டஸ்ட் போட்டோ. இப்ப பாரு."
"நான் பார்த்து...?"
"முதல்ல பாரும்மா."
ப்ரியா, கவரில் இருந்த சித்தார்த்தின் போட்டோவை எடுத்தாள். பார்த்தாள்.
இளமையான கமலஹாசனின் சாயல். ஷாருக்கின் பளபளவென மின்னும் திராட்சைக் கண்கள். மீசை இல்லாத வழவழப்பான முகம். வசீகரமாக காணப்பட்ட சித்தார்த்தை, புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவிற்கு மனதை என்னவோ செய்தது. இனம் புரியாத ஓர் உணர்வு ஆட்கொண்டது. பார்த்தாள். ரசித்தாள்.
"என்ன ப்ரியா... போட்டோவை திருப்பித் தர்ற ஐடியாவே இல்லியா?"
நித்யாவின் குரலால் கவனத்திற்கு வந்தாள் ப்ரியா. சுதாரித்தபடி பேசினாள்.
"இந்தாங்கம்மா. ஆனா இந்த சித்தார்த்தோட போட்டோவை என் கிட்ட எதுக்காகம்மா காமிச்சீங்க?"
"சித்தார்த்தை உனக்காக வரன் பார்த்து வச்சிருக்கோம். உன்னோட போட்டோவை மாலினி ஆன்ட்டிக்குக் குடுத்து சித்தார்த்துக்கு இ.மெயில் பண்ணச் சொல்லி இருக்கேன். இப்போதைக்கு நடந்தது இவ்வளவுதான். அது சரி. போட்டோவைப் பத்தி ஒண்ணுமே சொல்லாம நைஸா நகர்ந்து போறியே..."
வெட்கத்தில் காது மடல்கள் சிவக்க, நித்யாவின் முகத்தைப் பார்க்காமல், தனது நகத்தைப் பார்த்தபடி "நல்லாயிருக்கார்மா. பழைய படத்துல வர்ற கமல் மாதரி இருக்கார்மா" கூறிவிட்டு தன் அறைக்குச் சென்று விட்டாள்.
'ஸ்பென்சர்ஸ் ப்ளாஸா’ வர்த்தக வளாகம்! பிரம்மாண்டமாய் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு அடையாளமாய் உயர்ந்து நின்றது. எத்தனை மாடிகள்! அத்தனை மாடிகளிலும் ஏராளமான கடைகள்! கடைகள் என்றால் சாதாரண கடைகள் அல்ல. ஏகமாய் செலவு செய்து அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தோழிகள் புடை சூழ ப்ரியா ஸ்பென்ஸர்ஸ் ப்ளாசாவிற்குள் நுழைந்தாள். அனைவரது கையிலும் கோன் ஐஸ்க்ரீம். தோள்களில் உடைக்குப் பொருத்தமான வண்ணத்தில் ஹேண்ட் பேக். விதவிதமான ஜீன்ஸ் பேண்ட், டி ஷர்ட்டில் ஆனந்தமாய் உலா வந்துக் கொண்டிருந்தனர்.
'வெஸ்ட்ஸைட்’ எனும் ஆயத்த ஆடை கடைக்குள் நுழைந்து, ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பதும், அதைப்பற்றி மற்றவர்கள் விமர்சிப்பதுமாக கடையையே கலக்கினார்கள்.
அவரவர் விரும்பிய உடைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.
"ஏ… ப்ரியா, எனக்கு லேண்ட் மார்க் போணும். வாங்கடி" ஷைலா கேட்டாள்.
"ஓ… போலாமே."
அடுத்தபடியாக 'லேண்ட் மார்க்’ எனப்படும் கடைக்குச் சென்றனர். பாட்டு சி.டி., திரைப்பட சி.டி., புத்தகங்கள், பேனா என்று அங்கேயும் ஏகப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர்.
ப்ரியா, ஆங்கிலப் புத்தகப் பிரிவில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களில் குறிப்பிட்ட ஒரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தாள்.
"ஹாய் ப்ரியா..."
குரல் கேட்டதும் புத்தகம் பார்ப்பதை விட்டு, திரும்பிப் பார்த்தாள் ப்ரியா.
அங்கே வினய்யும், நரேனும் சிரித்த முகத்துடன் நின்றிருந்தனர்.
"ஹாய் வினய்… ஹாய் நரேன்... என்ன விஷயம்? நாங்க இங்கே இருக்கோம்னு உங்க மூக்குல வியர்த்துடுச்சா?"
"நாங்க தற்செயலா வந்தோம். அது சரி ப்ரியா, நேத்து ஒரு பப்ளிக் ஃபங்க்ஷன்ல நடந்த ம்யூசிக் ப்ரோக்ராம்ல மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. ஸாரோட பழைய பாட்டு 'பார்த்த ஞாபகம் இல்லையோ’ பாட்டை சூப்பரா பாடினியாமே? ஆடியன்ஸ் ரொம்ப நேரமா கை தட்டினாங்களாமே? அசோக் சொன்னான்..."
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்பொழுது நரேன் அங்கிருந்து நைஸாக நகர்ந்தான்.
"அந்தப் பாட்டு எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லா அனுபவிச்சுப் பாடுவேன்."
"அது சரி, உன்னோட தோழியர் பட்டாளம் யாரும் வரலியா?"
"அவங்க வராமலா? ஆளாளுக்கு ஒவ்வொரு செக்ஷன்ல நிக்கறாங்க."
நரேன் அங்கிருந்து நகர்ந்துவிட்டதைக் கவனித்தான் வினய். கிசுகிசுப்பான குரலில் பேச ஆரம்பித்தான்.
"ப்ரியா... நான்... நான்… சொன்னது... ப்ரியா... ப்ளீஸ் ப்ரியா... நோ சொல்லிடாதே ப்ரியா. நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன். நீ இல்லைன்னா நான் என் உயிரை விட்டுடுவேன்… நிச்சயமா... நீ எனக்குக் கிடைக்கலைன்னா நான் செத்துப் போயிடுவேன்...."
"வினய் என்ன இது? உங்க பேச்சே சரி இல்லை. ஏன் திரும்பத் திரும்ப அதைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கீங்க?"
"விரும்பறதை அடையணும்னா திரும்பத் திரும்ப முயற்சி செய்றது மனித இயல்பு..."
"ஒரு பொண்ணு ஒருத்தன் கூட காதலிக்கற எண்ணத்துல பழகாம நட்பு ரீதியா மட்டும்தான் பழகறதா சொன்னப்புறமும் அவகிட்ட அதைப்பத்தி பேசி அவளைக் கஷ்டப்படுத்தறது மனித இயல்பே கிடையாது.."
"நட்பு? அது யாருக்கு வேணும்? எனக்கு உன்னோட காதல்தான் வேணும்."
"காதல் என்ன கடைச்சரக்கா? கேட்டதும் எடுத்துக் குடுக்கறதுக்கு?"
"ப்ளீஸ் ப்ரியா... நான் உன்னை அவசரப்படுத்தல. நிதானமா யோசிச்சுச் சொல்லு. நீ இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலை. அப்பிடி ஒரு வாழ்க்கை வாழ நான் உயிரோடு இருக்கவே மாட்டேன். செத்துப் போயிடுவேன். ப்ளீஸ் ப்ரியா..." வினய்யின் கண்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டு விழவா என்று யோசித்துக் கொண்டிருந்தன.
இதைக்கண்ட ப்ரியா பதறினாள். நெஞ்சம் கலங்கினாள்.
"ஐய்யோ... என்ன வினய் இது? பொண்ணு மாதிரி கண்ணைக் கசக்கிக்கிட்டு... ப்ளீஸ் வினய். இனிமேல நாம இதைப் பத்தி பேச வேண்டாமே..."
"பேசாம இருந்தா... என் காதல்? உன்கிட்ட பேசாம அது எனக்கு எப்படிக் கிடைக்கும்?"
இதற்குள் அவளது தோழிகள் பட்டாளம் அங்கு வந்து சேர்ந்தனர்.
"ஹாய்... வினய்" கோரஸ்ஸாக அனைவரும் வினய்க்கு 'ஹாய்’ சொன்னார்கள். சோகத்துக்கு மாறியிருந்த தன் முகத்தை சகஜ நிலைக்குக் கொண்டு வந்த வினய், அவர்களைப் பார்த்து புன்னகைத்தான்.
"இன்னிக்கு வினய்தான் நம்ப எல்லாருக்கும் லன்ஞ்ச் ஸ்பான்சர் பண்றாராம்." கார்த்திகா, வினய்யை சீண்டினாள்.
"அதுக்கென்ன. போலாமே..."
"நோ… நோ எத்தனை மணியானாலும் லஞ்ச் சாப்பிடறதுக்கு வீட்டுக்கு வந்துடணும்னு அம்மா ரொம்ப ஸ்டிரிக்டா சொல்லி அனுப்பியிருக்காங்க" ப்ரியா இவ்விதம் கூறியதும், கார்த்திகா உட்பட அத்தனை பேரும் திருதிருவென முழித்தனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வினய்க்குத் தெரிந்து விடாமல் மிக்க கவனமாக கார்த்திகாவைப் பார்த்து கண் அடித்தாள் ப்ரியா.
'ஏதோ விஷயம் இருக்கு. அதனாலதான் லஞ்ச் சாப்பிட ஹோட்டலுக்குப் போறதா இருந்த ப்ளானை மாத்திக்கிட்டிருக்கா. அதனாலதான் அம்மா... வீட்ல… லஞ்ச்... அப்பிடி இப்பிடின்னு கதை விடறா...” புரிந்து கொண்ட கார்த்திகா அனைவரையும் அழைத்தாள்.
ப்ரியா தன்னைத் தவிர்ப்பதைப் புரிந்து கொண்ட வினய்யும் கிளம்பினான்.
"ப்ரெண்ட்ஸ்... நானும் கிளம்பறேன்" அதே சமயம், நரேனும் அங்கு வந்து சேர்ந்தான். இருவரும் கிளம்பினார்கள்.
அவர்கள் போனதும், கார்த்திகா, ப்ரியாவைப் பிடித்துக் கொண்டாள்.
"ஏ ப்ரியா? என்ன ஆச்சு? என்ன நடந்தது? வினய் என்ன சொன்னான்? ஏன் நாம ஹோட்டலுக்குப் போற ப்ளானை மாத்தின?..."
"யம்மா தாயே... கொஞ்சம் மூச்சு விட்டுக்க. நீ பாட்டுக்கு கேள்விகளை அடுக்கிக்கிட்டே போற? வினய் என்ன சொல்லுவான்? வழக்கமான பல்லவியைத்தான் பாடினான். அந்த எண்ணமே உனக்கு வேண்டாம்னு சொன்னதும் பொண்ணு மாதிரி கண்ணுல கண்ணீர் விடறான். பார்க்கவே பாவமா இருந்துச்சு. இப்பிடி ஒரு மூட்ல அவன் கூட சேர்ந்து லஞ்சுக்குப் போக வேண்டாம்னுதான் வீட்டுக்குப் போலாம்னு சொன்னேன். நல்ல வேளை. நான் கண் அடிச்சதும் கார்த்திகா புரிஞ்சுக்கிட்டா."
"இது கூடப் புரியலைன்னா நம்ப ப்ரெண்ட்ஷிப்புக்கு என்னடி அர்த்தம்?"
"சரி… நரேனும், வினய்யும் போயிட்டாங்க. நாம இப்ப எங்க சாப்பிடப் போறோம்? எனக்கு பசிக்குது" பசி தாங்க முடியாத ஷைலா, ப்ரியாவின் கையைக் கிள்ளினாள்.
"உனக்குப் பசி வயித்தைக் கிள்ளினா நீ என் கையைக் கிள்ளறியே… ஹேய் ப்ரெண்ட்ஸ்! இன்னும் கொஞ்சம் விட்டா இவ நம்பளையே பிச்சுத் தின்னுடுவா. வாங்கடி. முதல்ல இந்த காம்ப்ளெக்ஸ்ஸை விட்டு வெளில போயிடலாம். அந்த நரேனும், வினய்யும் இங்கதான் எங்கயாவது சுத்திக்கிட்டிருப்பாங்க. வாங்க வெளியே போயிடலாம்" ப்ரியா முன்னே நடந்தாள். அவளது முதுகை தட்டினாள் புவனா.
"அவங்க ரெண்டு பேருக்காக நாம ஏன் பயந்து ஓடணும்?" புவனா கேட்டதும் ப்ரியா அவளை முறைத்தாள்.
"பயம் ஒண்ணும் இல்ல. இன்னிக்கு நம்மளோட ஹாலிடே மூட்ல தேவையில்லாத விஷயங்களைத் தவிர்க்கணும்னுதான் சொல்றேன். வாங்க போலாம்."
ஆறு பேரும் தாங்கள் வாங்கிய பொருட்கள் அடங்கிய வண்ண வண்ணமான ப்ளாஸ்டிக் பைகளுடன் நடந்தனர். வெளியே வந்தனர்.
"ப்ரியா, ப்ரின்ஸ் ப்ளாசாவுல ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்ட் இருக்கு. போன வாரம் எங்க வீட்ல, எல்லாரும் அங்கதான் போனோம். எங்க அப்பா, அவரோட ஆபீஸ் மீட்டிங் அங்கதான் நடந்துச்சுன்னு சொல்லி எங்களைக் கூட்டிட்டுப் போனார். எல்லா ஐட்டமும் டேஸ்ட்டா இருந்துச்சு" அருணா கூறினாள்.
"ஓ.கே. ஒரு மாறுதலுக்கு அங்கேதான் போய் பார்ப்போமே" ப்ரியா சம்மதித்ததும் அந்த ஆறு இளம் சிட்டுகளும் 'பெப்’பில் சவாரி செய்தனர்.
அமெரிக்கா. நண்பன் ஒருவனுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்த சித்தார்த், அடிக்கடி ப்ரியாவின் புகைப்படத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்தான் அவனது நண்பன் திலீபன்.
"கல்யாணம் இப்ப வேண்டவே வேண்டாம். மேல்படிப்பு, வேலை, அனுபவம்… அது… இதுன்னு உங்கம்மாகிட்ட வாயைக் கிழிச்சியே? இப்ப என்னடான்னா ஒரு நாளைக்கு நூறு தடவை அந்தப் பொண்ணோட போட்டோவைப் பார்த்துக்கிட்டிருக்க? ஐயாவுக்கு கல்யாண ஆசை வந்துடுச்சோ?" திலீபன் கிண்டலாகப் பேசினான்.
"இது கல்யாண ஆசை இல்லடா. இந்தப் பொண்ணு மேல வந்திருக்கற ஆசை! இவளைப் பார்த்தப்புறம்தான் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா அது இவ கூடத்தான் நடக்கணும்னு ரொம்ப ஆசைப்படறேன்."
"ரொம்ப அதிசயமாத்தாண்டா இருக்கு. வெளில எங்கெங்கயோ சுத்தியிருக்கோம். ஒரு நாள் கூட எந்தப் பொண்ணையும் சும்மா… 'ஜஸ்ட் லைக் தட்’ கூடப் பார்க்காத நீ.. இந்தப் பொண்ணோட போட்டோவைப் பார்த்துட்டு இப்படி மாறிட்டியேடா..."
"மாத்திட்டாடா என் ப்ரியா..."
"என்ன? என் ப்ரியாவா? அடேங்கப்பா... ரொம்ப அட்வான்ஸா போயிக்கிட்டிருக்க?... பார்த்து."
"போட்டோவுல அவளைப் பார்த்ததில இருந்துதாண்டா இப்பிடி.... ஆகிட்டேன். அவளைப் பார்க்கறதுல சுகம்… அவளை நினைக்கறது சுகம். அவளைப் பத்தி உன் கூட பேசறதும் சுகம்..."
"இந்த நாட்டு வெள்ளைக்காரப் பொண்ணுக உன்னோட ஒரு பார்வைக்காக ஏங்கிக் கிடக்கறாளுக. உன் பின்னாடியே லோ லோன்னு அலையறாளுக. வெளுப்பும், சிவப்பும் கலந்த கலர்ல எடுப்பான அங்கங்கள் மேலும் எடுப்பா தெரியற மாதிரி 'சிக்’ன்னு உடுத்திக்கிட்டு, ஏற்ற இறக்கங்களை வெளிப்படுத்திக்கிட்டு திரியற பொண்ணுக இருக்கற இந்த நாட்டுல ஒரு பொண்ணைப் பத்தி கூட நீ இது வரைக்கும் பேசினதே இல்லை. முகம் மட்டுமே க்ளோஸப்பா இருக்கற ஒரு போட்டோவைப் பார்த்துட்டு இவ்வளவு ஆழமா அவளை விரும்ப ஆரம்பிச்சுட்ட."
"உடையலங்காரத்துல வெளிப்படற உடல் அழகைப் பார்த்து வர்றதுக்குப் பேர் காதல் இல்லடா. தட் இஸ் ஒன்லி இம்பாச்சுவேஷன்! ப்ரியாவோட முகத்துல என் வாழ்க்கையையே பார்க்கறேன்டா."
"அமுல் பேபி மாதிரி முகத்தை வச்சுக்கிட்டு படிப்பு படிப்புன்னு புத்தகப்புழுவா இருந்த நீ... இப்ப, ப்ரியாவோட முகத்துல உன் வாழ்க்கையைப் பார்க்கறதா டைலாக் பேசற. தேறிட்டடா பையா..."
"நான் மாறினதும், தேறினதும் என் ப்ரியாவால..."
"சரிப்பா. போதும்ப்பா. இப்ப சாப்பிடப் போலாம்… வாப்பா."
சந்தோஷமாக சிரித்தபடி இருவரும் கிளம்பினர்.
கல்லூரியில் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், ப்ரியா குழுவினர் வரும் முன்பே அங்கு வந்து நின்று தவம் கிடந்தான் வினய்.
"டேய், பாவம்டா அந்த ப்ரியா. இப்படி அவளைத் துரத்தி துரத்தி உன் காதலை சொல்லி ஏண்டா அவளைக் கஷ்டப்படுத்தற?" நரேன் தினமும் கேட்கும் கேள்வி.
"நிச்சயம் அவ மனசு மாறி, என்னை விரும்ப ஆரம்பிப்பா. நீ வேண்ணா பாரு..." வினய் தினமும் கூறும் பதில்.
"உன்னைத் திருத்த முடியாதுடா. ஆளை விடு. நீ ப்ரியாவைப் பார்க்காம க்ளாசுக்கு வர மாட்ட. நான் போறேன். நீ வந்து சேரு." நரேன் கிளம்பிச் சென்றான்.
வினய், ப்ரியாவின் வருகைக்காகக் காத்திருந்தான்.
லேசாக தூற ஆரம்பித்திருந்த மழை திடீரென பலமாக வலுத்தது. திறந்திருந்த ஜன்னல் கதவுகளை மூடினாள் நித்யா.
"மழை பெய்யறதே அபூர்வம். இந்த லட்சணத்துல அஞ்சு நிமிஷம் தொடர்ந்து பெய்யறதுக்குள்ள ஜன்னல் கதவையெல்லாம் இப்படி மூடினா பெய்யற மழை கூட தானாவே நின்னுடும்..."
"அதுக்காக? ஜன்னல்ல போட்டிருக்கற காஸ்ட்லி ஸ்க்ரீன் துணியெல்லாம் நனையட்டும்ங்கறீங்களா? அதை விடுங்க. ஒரு சந்தோஷமான சமாச்சாரம்! மாலினியோட பையன் சித்தார்த்துக்கு நம்ப ப்ரியாவை பிடிச்சிருக்காம்."
"வெரி குட். ப்ரியாவுக்கு அந்தப் பையனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்காள்ல? இனிமேல நீ, உன் உயிர்த் தோழி மாலினிகிட்ட பேசிடு."
"நாங்க ரெண்டு பேரும் பேசினா போதுமா? மாலினியோட ஹஸ்பண்ட், நீங்க, நாம எல்லாரும் சேர்ந்து பேசணும்..."
டெலிபோன் மணி கிணுகிணுத்தது. நித்யா எடுத்துப் பேசினாள்.
"ஹலோ."
"ஹலோ… நித்யாதானே? நித்யா... எங்க மாமியாருக்கு உடம்பு சரியில்ல. நர்ஸிங்ஹோம்ல அட்மிட் பண்ணி இருக்கோம். நம்ப பிள்ளைங்க கல்யாண விஷயமா இப்ப நாம எதுவும் பேச வேண்டாம்னு என் ஹஸ்பண்ட் சொல்றாரு. எங்க அத்தைக்கு ஒரே பேரன் சித்தார்த். அதனால அவனோட கல்யாணத்தைக் கண் குளிரப் பார்க்கணும்னு அவங்களுக்கு ரொம்ப ஆசை. என்ன நித்தி... ஏதோ அப்செட் ஆன மாதிரி தோணுது. நீ அப்செட் ஆகற மாதிரி ஒண்ணுமில்ல நித்தி. நான் ஏற்கெனவே உன்கிட்ட சொன்னது சொன்னதுதான். சித்தார்த்துக்கு, உன் பொண்ணு ப்ரியாவை பிடிச்சிருக்கு. அதில எந்த மாற்றமும் இல்லை. ஆனா அத்தைக்கு உடம்பு சரியில்லாததுனால இப்போதைக்கு எதுவும் பேச வேண்டாம்னு என் ஹஸ்பண்ட் சொல்றாரு. அவ்வளவுதான். எப்படியும் சித்தார்த்தும் படிப்பு முடிக்க இன்னும் நாளாகும். அதனால அத்தை நல்லபடியா வீடு திரும்பினதும் நாம நாலு பேரும் பேசலாம். நமக்குள்ள பேசினதுக்கப்புறம் நம் சொந்தக்காரங்கள்ல முக்கியமானவங்களைக் கூப்பிட்டுப் பேசி, உறுதி பண்ணிக்கலாம். அத்தையோட ஹெல்த் கண்டிஷனைப் பொறுத்துத்தான் இனி எல்லாம் நடக்கணும்."
"சரி மாலினி. உன் மாமியார் சீக்கிரமா வீட்டுக்கு வரட்டும். மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். அது சரி எந்த நர்ஸிங்ஹோம்ல அட்மிட் பண்ணி இருக்கீங்க?"
"அப்பல்லோ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். சரி நித்தி வச்சுடட்டுமா"
"ஓ.கே."
ரிஸீவரை வைத்துவிட்டு வந்த நித்யா, கணவனிடம் அனைத்து விபரங்களையும் கூறினாள்.
"சரிம்மா. எது எது எப்ப நடக்கணுமோ அப்பதான் நடக்கும். இன்னிக்கு என் ப்ரெண்டு சொக்கலிங்கம், 'ஸெல்போன் வாங்கணும். நீயும் கொஞ்சம் கூட வாயேன்’னு கூப்பிட்டான். நான் போயிட்டு வந்துடட்டுமா?"
"மழையா இருக்கேங்க"
"கார்லதானம்மா போறேன்..."
"ஏன், உங்க ப்ரெண்டுக்கு ஸெல்போன் வாங்கறதுக்கு கூட ஒரு ஆள் வேணுமா?"
"அவன் அப்படித்தான். எது வாங்கணும்ன்னாலும் அவனுக்கு நான் கூடப் போய் வாங்கித் தரணும். போயிட்டு வந்துடறேன்."
"சரிங்க"
பாஸ்கர் கிளம்பினான்.
பாஸ்கர் கிளம்பியதும் நித்யா, யோசனையில் ஆழ்ந்தாள்.
'ப்ரியாவுக்கு சித்தார்த்தை பிடிச்சிருக்குன்னு மாலினிட்ட சொன்னப்ப அவ ரொம்ப சந்தோஷப்பட்டா. அதில எந்த சந்தேகமும் இல்லை. ஆனா இப்ப என்னவோ அத்தைக்கு உடம்பு குணமானப்புறம் பேசிக்கலாம்னு சொல்றா. வேற ஏதாவது காரணம் இருக்குமோ? சச்ச.. அப்படியெல்லாம் இருக்காது. அவதான் தெளிவா சொன்னாளே 'நீ ஒண்ணும் அப்ஸெட் ஆகாதே’ன்னு. அவளோட மாமியார்க்கு கல்யாணமாகி ரொம்ப லேட்டாதான் மாலினியோட ஹஸ்பண்ட் மனோகரன் பிறந்தாராம். அதனால மகன் வயித்துப் பேரனோட கல்யாணத்தைப் பார்க்கறதுக்குள்ள வயசு அதிகமாயிடுச்சு. தன் பையனோட கல்யாணத்தை தன்னோட அம்மா கண்குளிர பார்க்கணும்னு மனோகரன் ஆசைப்படறது நியாயம்தானே? அதனாலதான் அவங்களுக்கு நல்லபடியா குணமானப்புறம் கல்யாண விஷயம் பேசலாம்னு சொல்லியிருக்காரு. நான்தான் ஏதேதோ யோசிச்சு குழம்பறேன்? ப்ரியாவுக்கும், நித்யாவோட பையனுக்கும் கல்யாணம் நடக்கணும். குரு ராகவேந்ரா… நீதாம்பா என் ஆசையை நிறைவேத்தணும்.’ யோசனையிலிருந்த நித்யா, பிரார்த்தனையில் மனதை செலுத்தினாள்.
துப்பட்டாவின் நுனிப்பகுதியை முறுக்கியபடி முக வாட்டத்துடன் காணப்பட்ட ப்ரியாவைப் பார்த்தாள் கார்த்திகா.
"என்ன ப்ரியா, நானும் பாக்கறேன்... கொஞ்ச நாளா ரொம்ப டல்லா இருக்க. என்ன விஷயம்?" கார்த்திகா கேட்டதும் முறுக்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை மேலும் இறுக முறுக்கினாள்.
"ப்ரெண்ட்ஸ் கிட்ட கூட பகிர்ந்துக்க முடியாம அப்படி என்னடி ஆச்சு உனக்கு?" புவனாவும் கேட்டாள்.
"அவளுக்கு என்ன பிரச்சனைன்னு மெதுவா கேளுங்கடி." ஷைலா, ப்ரியாவின் முகத்தைப் பார்த்தபடியே கூறினாள்.
"ப்ரியா, அந்த வினய் உனக்கு ஏதாவது பிரச்சனை பண்றானா" ஷைலா, நேரடியாக விசாரணைக்கு வந்தாள்.
"மனம் விட்டு பேசு ப்ரியா. கலகலன்னு இருக்கற நீ இப்பிடி 'உம்’ன்னு இருக்கறது நல்லாவே இல்ல. ப்ளீஸ் உன் பிரச்சனை என்னன்னு சொல்லு." சத்யாவும் சேர்ந்து கொள்ள, ப்ரியா, மனம்விட்டு பேச ஆரம்பித்தாள்.
"பிரச்சனைன்னு பெரிசா ஒண்ணுமில்லை. வினய் என்னை லவ் பண்றதா தினமும் சொல்றான். என்னைப் பார்க்கறப்பல்லாம் அதையே சொல்றான். சாதாரணமா சொல்றது இல்லை. கெஞ்சறான். அவன் அப்படி கெஞ்சும்போது அவனைப் பார்க்க ரொம்ப பாவமா இருக்கு..."
"ஓப்பனா சொல்லு. நீ அவனை விரும்பறியா இல்லையா?" கார்த்திகா கேட்டாள்.
"ஏற்கெனவே நான்தான் உங்ககிட்ட சொல்லி இருக்கேனே, எனக்கு அவன்மேல அப்படி எதுவுமே கிடையாது. நட்பு மட்டும்தான். அவன் நல்லவன். பண்பானவன். எனக்கு அவன் மேல பரிதாபம்தான் வருதே தவிர காதல் வரலை. எங்க வீட்ல, எனக்கு எங்க அம்மாவோட ப்ரெண்டு மாலினி ஆன்ட்டின்னு சொல்லி இருக்கேன்ல. அவங்களோட பையனை வரன் பார்த்துக்கிட்டிருக்காங்க. போட்டோ காண்பிச்சாங்க. எனக்கு... எனக்கு.. அவரை ரொம்பப் பிடிச்சிருக்கு." ப்ரியா கூறியதும் அனைவரும் 'யே...’ என்று கோரஸ்ஸாகக் கத்தினார்கள்.
"அடிப்பாவி... இவ்வளவு தூரம் நடந்திருக்கு. சொல்லவே இல்லையே." அருணா கேட்டாள்.
"இவ்வளவு தூரம், அவ்வளவு தூரம்னு எதுவும் நடக்கலை. ஜஸ்ட் போட்டோ காண்பிச்சாங்க. அவ்வளவுதான்."
"அவளைப் பிடிச்சிருக்குன்னு நீ சொன்ன விதமே உன்னைக் காட்டிக் குடுக்குதே. வெட்கத்துல கன்னம் சிவந்துச்சு. எங்களை நேருக்கு நேர் பார்க்காம பேசற..." சத்யா கூறியதும் சிரிப்பலை பரவியது.
கார்த்திகா அனைவரையும் அடக்கினாள்.
"கொஞ்ச நேரம் சும்மா இருங்கடி. ப்ரியாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா? வினய் மேல இரக்கப்பட்டு பாவம்… மனசு நொந்து போய் இருக்கா. கருணை காதலாகுமா? இதை ஏன் அந்த வினய் புரிஞ்சுக்க மாட்டேங்கறான்?"
"நீ இல்லாம நான் இல்லை. ‘நீ மறுத்துட்டா நான் செத்துப் போயிடுவேன்’னு சொல்றான் கார்த்திகா..."
"அடக்கடவுளே! அப்படியா மிரட்டறான்?"
"சீச்சி... மிரட்டலெல்லாம் இல்லை கார்த்திகா. கால்ல விழாத குறையா கெஞ்சறான்..."
"நெத்தியடியா சொல்லிட வேண்டியதுதானே… உனக்கு வேற மாப்பிள்ளை பார்த்துக்கிட்டிருக்காங்கன்னு?"
"அதுதான் என்னால முடியலடி."
"உனக்கு வினய் மேல எந்த எண்ணமும் இல்லைதானே? நிச்சயமா இல்லைதானே."
"எனக்கு அவனைப் பார்த்தா பரிதாபம்தான் வருதே தவிர வேற எந்த எண்ணமும் இல்லை கார்த்திகா."
"ஷ்யூர்?"
"வெரி ஷ்யூர்."
"உங்க வீட்ல பார்த்திருக்கற பையனை உனக்குப் பிடிச்சிருக்கு. வினய் மேல உனக்கு நட்பு மட்டும்தான். ஆனா அவன் உன்னை விரும்பறான். கல்யாணமும் பண்ணிக்க நினைக்கிறான். 'செத்து போயிடுவேன்’ங்கறான். உன்னால அவன்கிட்ட தைர்யமா பேச முடியலை. உன்னோட இளகின மனசு அவனுக்கு ப்ளஸ் பாயிண்ட். உனக்கு அதுவே வீக் பாயிண்ட். ஆனா ஈஸியா தீர்ந்து போற பிரச்னையை பெரிசா வளர்த்துக்கிட்டிருக்க. அதுக்குக் காரணம் உன்னோட ஸாஃப்ட் கார்னர் நேச்சர். படிக்கற வசதி இல்லாத ஏழை பையனுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டின. ஓ.கே..."
"அவன் ஒரு ஃப்ராடாச்சே." புவனா குறுக்கிட்டாள்.
"ஏ முந்திரி கொட்டை, கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா." அவளை அதட்டிய கார்த்திகா தொடர்ந்தாள்.
"ஒரு நாய்க்குட்டிக்கு அடிபட்டதுக்கு ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கிட்டு ஓடின. தோட்டக்கார ஜோசப் அண்ணன் சம்பளம் பத்தாம கஷ்டப்படறானேன்னு பணத்தைத் தூக்கிக் குடுக்கற. இப்படி கஷ்டப்படறவங்க மேல இரக்கப்பட்டு 'ஐயோ பாவம்ன்னு உதவி பண்ற. ஓ.கே. ஆனா உனக்கு இஷ்டம் இல்லாத விஷயத்தைத் திரும்பத் திரும்ப சொல்லி உன்னைக் கஷ்டப்படுத்தற வினய் மேல இரக்கப் படறது சரியே இல்லை..."
"'செத்துப் போயிடுவேன்’னு அவன் சொல்றப்ப எனக்கு பயமா இருக்கு கார்த்திகா. அவனை மறுத்துப் பேச வாய் வரமாட்டேங்குது..."
"உனக்கு பார்த்திருக்கற பையனோட பேர் என்ன? எந்த நாட்டில இருக்கான்?"
"சித்தார்த். அவர் அமெரிக்காவுல படிச்சிக்கிட்டிருக்கார்."
"ஆள் எப்படி? நல்ல அழகா?"
"ரொம்பவே அழகு." சொல்லிவிட்டு வெட்கச்சிரிப்பு சிரித்தாள் ப்ரியா.
"சித்தார்த்தைப் பத்தி பேசறப்ப உன் முகத்துல தெரியற சந்தோஷமே உன் மனசுல அந்த சித்தார்த் வந்து உட்கார்ந்துட்டார்னு காட்டிக் குடுக்குது. இளகின மனசு காரணமாவோ பழகின தோஷத்துக்காகவோ அந்த வினய்க்கு சம்மதம் சொல்லிடாதே. இது ரன்னிங் ரேஸ் இல்லை. வாழ்க்கை. உன்னோட எதிர்காலம். புரிஞ்சுதா?"
கார்த்திகா உறுதியாகவும், சற்று மிரட்டலாகவும் பேசியதைக் கேட்ட ப்ரியா, மௌனமாய் தலையசைத்தாள்.
ஸெல்போனில் புவனாவின் நம்பரை அழுத்தினாள் கார்த்திகா.
"ஹாய் கார்த்திகா... என்னடி காலேஜ்க்கு கிளம்பி உனக்காகக் காத்துக்கிட்டிருக்கேன் நீ என்னடான்னா மொபைல்ல கூப்பிடற? என்ன விஷயம்?"
"இன்னிக்கு நீயும், நானும் காலேஜுக்கு கட்..."
"ஏன்...?"
"நேர்ல சொல்றேன். நான் சொல்றதை முதல்ல செய். ப்ரியா வீட்டுக்கு போன் பண்ணி, நாம ரெண்டு பேரும் இன்னிக்கு காலேஜுக்கு வரலைன்னு சொல்லு."
"ஐய்யோ.... என்ன காரணம்னு கேட்டா...?"
"அதையும் நான்தான் சொல்லணுமா? எதையாவது சொல்லி சமாளிச்சுட்டு, சிட்டி சென்ட்டரில் இருக்கற கஃபே காபி டேக்கு வந்துடு. நீ உன்னோட 'பெப்’ல அங்கே வந்துடு. நான் எங்க அண்ணனை அவனோட பைக்ல 'சிட்டி சென்டர்’ல கொண்டு வந்து விடச் சொல்லி வந்துடறேன்"
"அப்படி என்ன விஷயம்?"
"நீ வா. நேர்ல நிறைய பேசணும்."
"சரி கார்த்திகா. வந்துடறேன்."
மொபைல் போனுக்கு ஓய்வு கிடைத்தது.
சிட்டி சென்டர் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் வளாகம். பிரம்மாண்டமான கட்டிடம்! எங்கு பார்த்தாலும் பணம் விளையாடியது. பணக்காரத்தன்மையை பறை சாற்றியது. பணத்தை எண்ணிக் கொடுத்து எந்தப் பொருளும் வாங்க முடியாமல், அள்ளிக் கொடுத்து வாங்க வேண்டிய விலையில் இருந்தன.
பெரும் வசதியானவர்கள், ஏகப்பட்ட பொருட்கள் மற்றும் துணிமணி வகைகள் நிரப்பப்பட்ட பைகளை சுமக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடமாட, வசதி இல்லாத சாமான்ய மக்கள், வேடிக்கை பார்த்தபடி சுற்றி சுற்றி வந்தனர்.
அங்கே இரண்டாவது மாடியிலிருந்த 'கஃபே காபி டே’ இக்கால இளைஞர்களின் அரட்டை அரங்கம். அங்கே சந்தித்துக் கொண்ட புவனாவும், கார்த்திகாவும் எதிர் எதிராக உட்கார்ந்தனர்.
"எனக்கு கோல்ட் காபி. உனக்கு?"
"எனக்கும் அதேதான்."
குளிர்ந்த காபிக்கு ஆர்டர் கொடுத்தனர்.
"ப்ரியாவுக்குப் பார்த்திருக்கற மாப்பிள்ளையோட பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியாம நர்ஸிங்ஹோம்ல அட்மிட் பண்ணி இருந்தாங்களாம். அதனால பையனோட போட்டோ பார்த்ததோட பொண்ணு, மாப்பிள்ளை விஷயத்தை தற்காலிகமா நிறுத்தி வச்சிருந்திருக்காங்க. ஆனா ஆஸ்பத்திரிக்கு போன பாட்டி, பரிபூரணமா குணமாகி எழுந்திருச்சிட்டாங்களாம். 'என் பேரனோட கல்யாணத்தை உடனே நடத்தணும். என் கால், கை, கண், நல்லா இருக்கறப்பவே அவனோட கல்யாணத்தைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்படறாங்களாம்.’ அது மட்டும் இல்லை. 'இப்ப உடனடியா கல்யாணத்தை நடத்தணும். சித்தார்த்தை அமெரிக்காவுல இருந்து உடனே கிளம்பி வரச் சொல்லு’ன்னு பிடிவாதம் பிடிக்கறாங்களாம். அந்தப் பாட்டியோட ஆசை நியாயமானதுங்கறதுனால மாப்பிள்ளை வீட்டுக்காரங்க அவசரப்படறாங்களாம்..."
"அதனால என்ன செய்யப் போறாங்களாம்?" பதற்றத்துடன் கேட்டாள் புவனா.
"என்ன செய்வாங்க... உடனே பையனை கிளம்பி வரச் சொல்லிட்டாங்களாம். ப்ரியாவோட அம்மா, அப்பா, சித்தார்த்தோட அம்மா, அப்பா எல்லாரும் கலந்து பேசிட்டாங்களாம். வினய் 'செத்துப் போயிடுவேன்’ 'செத்துப் போயிடுவேன்’னு சீரியஸா சொல்றதை நினைச்சு ரொம்ப பயந்து போய் எனக்கு நேத்து ராத்திரி போன் பண்ணினா. அழுதா. 'நான் பார்த்துக்கறேன். கவலைப்படாத’ன்னு தைரியம் சொன்னேன். இது விஷயமா என்ன பண்ணலாம்னு கேக்கறதுக்குத்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன்."
"அடக்கடவுளே... நிறைய டைம் இருக்குன்னு நினைச்சோமே. கல்யாணத்தேதி குறிச்சுட்டாங்களா?"
"நாளன்னிக்கு பையன் வரானாம். வந்த மறுநாள் கல்யாணமாம். அதனாலதான் ப்ரியா ரொம்ப பயப்படறா. ப்ரியாவோட கல்யாண வேலைகள் ரொம்ப வேகமா நடந்துக்கிட்டிருக்காம். இன்விடேஷன் கூட ப்ரிண்ட் ஆயிடுச்சாம். கல்யாண பத்திரிகை குடுத்து எல்லாரையும் இன்வைட் பண்றதுக்கு ப்ரியாவோட அம்மா நாளைக்கு காலேஜ்க்கு வரப்போறாங்களாம். அப்போ இந்த விஷயம் வினய்க்கு தெரிஞ்சுடும். அவன் தற்கொலை பண்ணிக்குவானோன்னு பயந்து நடுங்கறா. அதனால இப்ப உடனே வினய்க்கு போன் பண்ணி, அவனை இங்கே வரச் சொல்லுவோம். அவன்கிட்ட நாம பேசலாம். எடுத்துச் சொல்லலாம்..."
"அவனை நல்லா விளாசு விளாசுன்னு விளாசணும்..."
"நோ… நோ.. அவசரப்படாத. ஆத்திரப்படாத. அவன்கிட்ட தன்மையாத்தான் பேசணும். மூர்க்கமா பேசினா முட்டாள்தனமா ஏதாவது பண்ணிடுவான். ஒரு விஷயம் புவனா, எந்த விஷயத்தையுமே ஓப்பனா, வெளிப்படையா, மனம்திறந்து பேசிட்டோம்னா சுலபமா தீர்வு கிடைச்சுடும்னு ஒரு புஸ்தகத்துல படிச்சேன். ப்ராக்டிக்கலா பார்த்தா இது சாத்தியம்தான். இப்பவே வினய்யை கூப்பிட்டுடலாம்..."
கார்த்திகா, தன் மொபைல் போனை எடுத்தாள். வினய்யை அழைத்தாள். ஏன் எதற்கு என்று எதுவும் கூறாமல் 'முக்கியமான விஷயம். உடனே வாங்க’ன்னு மட்டும் கூறினாள்.
முப்பது நிமிடங்களில் வினய் அங்கே வந்தான். கார்த்திகாவையும், புவனாவையும் பார்த்த வினய்யின் கண்கள், ப்ரியாவைத் தேடின.
"என்ன கார்த்திகா? க்ளாசுக்கு வராம இங்கே உட்கார்ந்திருக்கீங்க? என்னையும் க்ளாஸ் நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க…?" ஆச்சர்யமும், திகைப்புமாக கேள்விகளை அடுக்கினான் வினய்.
"உட்காருங்க வினய். என்ன சாப்பிடறீங்க?" வினய் உட்கார்ந்தான்.
"எனக்கு எதுவும் வேணாம்."
"காபி மட்டுமாவது சாப்பிடுங்க" புவனா காபிக்கு ஆர்டர் கொடுத்தாள்.
காபி வந்தது. குடித்து முடித்த வினய் சற்று அமைதியானான். கார்த்திகா பேச ஆரம்பித்தாள்.
"வினய், நம்ம காலேஜ்ல நாங்க பழகற ரொம்ப கொஞ்ச பேர்ல நீங்களும் ஒருத்தர். நீங்க நல்லவர். நாகரீகமானவர். ஆனா உங்களை மாதிரி ஆண்களுக்கு சில சமயம் சில விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டியிருக்கு."
ஒண்ணும் புரியாமல் விழித்தான் வினய்.
அவனது பிரதிபலிப்பான செய்கைகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள் கார்த்திகா.
"ஒரு பொண்ணு, தன்னைக் கவனிக்கணும், அவளைக் கவர்ந்திழுக்கணும்ங்கறதுக்காக ஆண்கள் தங்கள் நடை, உடைகளை மாத்திக்கறாங்க. இது பொதுவான மனித இயல்பு. அதே ஆண், ஒரு பொண்ணு, தன்னை ஏறெடுத்துப் பார்க்கலைன்னு தெரிஞ்சதும் அவளுக்குப் பிடிச்சமான வேற ட்ரஸ், வேற கலர்னு மாத்திக்கறான்.
“அவ பார்க்கறது உடையை மட்டும் இல்லை. உடைக்குப் பின்னால மறைஞ்சிருக்கற உள்ளத்தையும் சேர்த்துத்தான் பார்க்கறா. ஒரு பொண்ணை காதலிக்க ஆரம்பிச்சுட்டா, ஆரம்ப காலத்துல அவளுக்காக உங்களை மாத்திக்கறீங்க. அந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னோ, எந்த மாதிரியான உணர்வு இருக்குன்னோ புரிஞ்சுக்காமலே அவ பின்னாடி சுத்தறது, அவளைக் காதலிக்கறதா சொல்றது.... இதெல்லாம்தான் நடக்குது.
“அவ மனசுல நாம இருக்கமான்னு எந்த ஆணுமே யோசிக்கறதில்லை. அந்தப் பொண்ணு தன்னை விரும்பாட்டாலும் 'அவளை அடைஞ்சே தீருவேன்’னு வீரவசனம் பேசறது... இல்லைன்னா அவளோட மென்மையான மனசை மேலும் மென்மையாகற மாதிரி டைலாக் விடறது.
“அவளோட மனசுல காதல் தோணுதோ இல்லையோ அதைப் பத்தியெல்லாம் ஆண்கள் கவலைப்படறதே இல்லை. எதையாவது சொல்லி, அவ மனசைக் கிள்ளி பலவந்தமா காதலை உண்டாக்கறது எந்த வகையில நியாயம்? சொல்லப்போனா அப்படி பலவந்தமா உருவாகற காதல் உண்மையான காதலே இல்லை. அது வெறும் கருணை மட்டும்தான்.
கருணையை, காதல்னு குழப்பிக்கிட்டு, தன் வாழ்க்கையையே வெறுமையாக்கிக்கறா. உலகத்துல பொண்ணா பிறந்துட்ட ஒவ்வொரு பொண்ணுக்கும் விதம்விதமான கனவுகளும், ஆசைகளும் அடங்கின ஓர் உணர்வு இருக்கு. அந்த உணர்வைக் கொன்னுட்டு அவளை அடையறதுனால அவன் மட்டுமே சந்தோஷமா இருக்கலாம். ஆனா அவ? துக்கம் பொங்கற வாழ்வுதான் மிச்சம்.
“காதலிக்கற பொண்ணு இளகின மனசுக்காரியா இருந்துட்டா போதும். அவளோட புத்தியே மழுங்கிப் போற அளவுக்கு நாடகமாடறதும் நடக்குது. நீ என்னைக் காதலிக்கலைன்னா என்னை நானே குத்திக்குவேன், நீ கிடைக்கலைன்னா நான் செத்துப் போயிடுவேன்னு திரும்பத் திரும்ப சொல்லி அவளை டார்ச்சர் பண்றது..."
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சடாரென நிமிர்ந்து பார்த்தான் வினய்.
"கார்த்திகா... நீ... நீங்க... சொல்றது... நான்... நான்... ப்ரியாட்ட..."
"ஆமா வினய். இவ்வளவு நேரம் நான் பேசினது உங்களையும் சேர்த்துத்தான். ப்ரியா மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க நீங்க முயற்சி கூட செய்யலை. 'நான் அழகன், அறிவாளி, என்னை அவளும் விரும்பித்தான் ஆகணும்’ங்கற ஆணாதிக்கம் ரொம்ப தப்பானது. பொதுவா ஒரு பொண்ணோட ஆழமான மனசுக்குள்ள இருக்கற எதிர்பார்ப்புகளை புரிஞ்சுக்க முடியலைன்னா விட்டுடணும். எதிர்த்து நின்னு போராடி, அவளை உங்க வலையில மாட்ட வைக்கறது எந்த வகையில நியாயம்?
“மனசார ஒருத்தனை விரும்பி, தன் இதயத்துல இடம் குடுத்துட்டு, மணமேடையில இன்னொருத்தன் பக்கத்துல உட்கார்றது ஒரு பொண்ணுக்கு எவ்வளவு கொடுமையான விஷயம் தெரியுமா? ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையும், திருமண மேடையிலதான் ஆரம்பமாகுது. ஆனா, ஒருத்தனை காதலிச்சுட்டு வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்கற நிலைமை ஏற்படும்போது அந்த திருமண மேடையில அவளோட வாழ்க்கை முடிஞ்சுடுது. யந்திரத்தனமான வாழ்க்கைதான் வாழ்வா.”
“தன்னை விரும்பறவனை விட, தான் விரும்பற ஒருத்தனைத்தான் ஒரு பொண்ணு காதலிப்பா. கல்யாணமும் பண்ணிக்கணும்னு ஆசைப்படுவா.”
“ப்ரியாவைப் பார்த்ததும் அவளைக் காதலிச்சீங்க. காதலிச்ச நீங்க அவகிட்டயும் சொன்னீங்க. அவ நாசூக்கா மறுத்தப்ப, அவளை விட்டு விலகாம அவளை உங்க வசப்படுத்தற வழியைத்தான் பார்த்தீங்க. அவளோட இளகின மனசைப் பயன்படுத்தி 'செத்துப் போயிடுவேன்’னு அவளை மிரட்டியிருக்கீங்க. அதனால அவளுக்கு உங்க மேல பரிதாபம் வந்துச்சே தவிர காதல் வரலை. அது மனித இயல்பின் வெளிப்பாடான கருணை மட்டுமே. காதல் இல்லை. தன்னால ஒரு உயிர் போயிடக்கூடாது, ஒரு உயிர் பலியாகறதுக்கு தான் காரணமாகிடக் கூடாதுங்கறதுக்காக மட்டும்தான் அவ, மௌனமா இருந்துட்டா. இதுக்குப் பேர் காதலா?"
"கார்த்திகா.... நீ... நீங்க சொல்றது...."
"அத்தனையும் உண்மை. ப்ரியா உங்களைக் காதலிக்கலை... இது உங்களுக்கும் தெரியும்...."
கார்த்திகாவின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள், வினய்யின் இதயத்தை துளைத்து, அவனை சிந்திக்க வைத்தன. கார்த்திகா கூறிய உண்மைகள் அவனை சுட்டெரித்தன. தன் தவறை உணர்ந்தான். வருந்தினான். திருந்தினான்.
"ஸாரி கார்த்திகா. நீங்க சொன்னதெல்லாம் சரி. நான் செஞ்சதெல்லாம் தப்பு..."
தெளிவு பெற்ற வினய்யின் பேச்சைக் கேட்ட புவனா, குறுக்கிட்டாள்.
"இப்ப இதைப் பத்தி பேச உங்களை ஏன் இவ்வளவு அவசரமா கூப்பிட்டோம்னு தெரியுமா? ப்ரியாவுக்கு அவங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்திருக்காங்க..." என்று ஆரம்பித்து இன்னும் மூன்று நாட்களில் அவளுக்கு திருமணத்தேதி குறித்திருப்பது பற்றியது வரை கூறி முடித்தாள்.
"நாளைக்கு அவங்கம்மா இன்விடேஷன் குடுக்க காலேஜுக்கு வர்றாங்களாம். அப்ப, தீடீர்னு இந்த விஷயம் தெரிஞ்சு, நீங்க தற்கொலை ஏதாவது பண்ணிப்பீங்களோன்னு ப்ரியா பயந்து நடுங்கிட்டா. அழுது அழுது அவ குரல் கூட கமறிப் போச்சு." கார்த்திகா பேசியதும் மறுபடி புவனா ஆரம்பித்தாள்.
"கார்த்திகாதான் இந்த ஐடியா குடுத்தா. எதையும் மனம் விட்டு பேசிட்டா பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும்னு அவ சொன்னது சரியாயிடுச்சு. நீங்களும் புரிஞ்சுக்கிட்டீங்க. தாங்க்ஸ் வினய்." புவனா, வினய்யின் கையைப் பிடித்துக் குலுக்கினாள்.
"ப்ரியா, அவங்க வீட்ல பார்த்த பையனை விரும்பறா. ஆனா உங்களோட குறுக்கீடு அவளைப் பாடா படுத்திடுச்சு. எப்படியோ, உங்களுக்குப் புரிய வச்சுட்டோம். இதில இன்னொரு விஷயம் என்னன்னா... ப்ரியாவோட பேரண்ட்ஸையோ, சித்தார்த்தோட பேரண்ட்ஸையோ இந்த விஷயத்துல இழுக்கக் கூடாதுன்னு திட்டம் போட்டோம். பாவம். நாம நல்லா படிச்சு முன்னேறி நல்லபடியா ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கணும்னு ஆசைப்படற நம்பளோட பெத்தவங்களுக்குத் தேவையில்லாத டென்ஷன் குடுக்கறது நன்றி இல்லாத செயல். நாமளே இப்ப பேசி சரி பண்ணிட்டோம். இல்லைன்னா இது ஒரு மிகப்பெரிய பிரச்சனையா உருவாகும்..."
"கார்த்திகா, புவனா நீங்க ரெண்டு பேரும் என்னை மனுஷனா மதிச்சு நிதானமாவும், தன்மையாவும் பேசி, நிலைமையைப் புரிய வச்சீங்க. நீங்க கோபமாவோ, மிரட்டலாவோ பேசி இருந்தா நானும் என் ஈகோவை விட்டுக் குடுக்காம முரட்டுத்தனமா பேசி இருப்பேன். எதிர் மறையா செயல்பட்டிருப்பேன். ஓப்பனா பேசி ப்ரியாவுக்கு பெரிய பிரச்சனையானவனா இருந்த என்னை அவளுக்கு ஒரு உண்மையான ப்ரெண்டா உணர வச்சுட்டீங்க. நான்தான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணும்."
"முதல்ல ப்ரியாகிட்ட இங்க நடந்ததையெல்லாம் சொல்லி அவ மனசுல உள்ள பாரத்தை இறக்கி வைக்கணும். 'கல்யாணப் பொண்ணா லட்சணமா குஷியா இருடி’ன்னு சொல்லணும்." கூறிய கார்த்திகா தன் மொபைலில் ப்ரியாவைக் கூப்பிட்டு, நடந்ததை சந்தோஷமாக விவரித்தாள்.
பலநூறு முறை தாங்க்ஸ் சொன்னாள் ப்ரியா.
"கார்த்திகா... புவனா... இங்கயே ப்ரியாவுக்கு கல்யாண பரிசு வாங்கிடலாமே" வினய் கூறினான்.
"ம்கூம். நாங்க ஆறு பேரும் எங்களோட மூணு 'பெப்’ல வந்துதான் கிப்ட் வாங்குவோம்."
"நீங்க வர்றப்ப, நானும் ஜாய்ன் பண்ணிக்கலாமா?"
"ஓ... தாராளமா..."
"ஒன் மோர் கோல்ட் காபி குடிச்சுட்டு ஜில்லுன்னு போலாமே" புவனா கூற மூவரும் சந்தோஷமாக காபி சாப்பிட உட்கார்ந்தனர்.
வினய்யின் மனதிலிருந்த அறியாமை எனும் மேக மூட்டம் விலகியது. மகிழ்ச்சிகரமான நிமிடங்கள் துவங்கியது.