
‘‘அட, என்ன நீ...? புதுசா கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு மாதிரி வெட்கப்பட்டுக்கிட்டு? ‘டார்லிங்’ ‘டியர்’னு அலட்டலா கூப்பிட்டுக்கிட்டிருந்த உனக்கா இவ்ளவு வெட்கம்?! வினோத்தோட கையை கெட்டியா புடிச்சுக்கோ. அவன் கூட இணைஞ்ச உன்னோட மறுவாழ்க்கையையும் கெட்டியா பிடிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ ஆரம்பி...’’
திடீரென பவித்ராவை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைத்ததையும், அவளுக்கு அறிவுரை கூறி ராதா வாழ்த்துவதையும் கேட்ட வினோத்திற்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் ஒரு சேர தோன்றியது.
‘‘என்ன வினோத்?! ‘திருதிரு’ன்னு விழிக்கிற? பவித்ரா இப்ப பழைய பவித்ரா இல்லை. புது பவித்ரா. ‘பவித்ரா பழையபடி முருங்கை மரம் ஏறிடுவாளோ’ன்னு யோசிக்கிறியா? ஊகும். அவ முழுசா, நல்லபடியா மாறிட்டா. அதைப் பத்தியெல்லாம் இப்ப... இந்த சூழ்நிலையில பேச வேண்டாம். அவ ஏன் வித்தியாசமா நடந்துக்கிட்டா... இப்ப எப்பிடி மாறினாங்கிறதையெல்லாம், விவரமா... விளக்கமா இன்னொரு நாள் நான் சொல்றேன். நான்தான் தனிமரமா ஆகிட்டேன். உனக்கும் அப்பிடி ஒரு நிலைமை வந்துடக் கூடாதேன்னு கவலைப்பட்டேன். இப்ப எனக்கு நிம்மதியாச்சு...’’
ராதா பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஓடி வந்த மஞ்சுவை அள்ளி அணைத்துக் கொண்டாள் பவித்ரா. அவள் அங்கிருந்து நகர்ந்ததும் ராதாவிடம் தன் மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு கேள்வியைக் கேட்டான் வினோத்.
‘‘வந்து... நான்... ஒரு விஷயம் கேட்டேனே? அதுக்கு அவகாசம் வேணும், அவகாசம் வேணும்’ன்னு சொல்லி... சொல்லியே கிட்டத்தட்ட ஆறுமாச காலம் ஆகிடுச்சே? டைம் வேணும்’ன்னு எதுக்காகக் கேட்ட?! நான் கேட்ட அன்னிக்கே... உன்னோட மறுப்பை சொல்லி இருக்கலாமே...?’’ தயக்கத்துடன் கேட்ட வினோத்திற்கு, தயங்காமல் பதில் கூற ஆரம்பித்தாள் ராதா.
‘‘கண்டிப்பா... உன்னோட இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லியே ஆகணும். சொல்றேன். என் வாழ்க்கையில எனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு பிரச்னையிலயும்... ஒவ்வொரு கால கட்டத்துலயும் ‘உனக்காக நான் இருக்கேன்’ன்னு ஓடி வந்து உதவி செஞ்சவன் நீ. பொருளாதார விஷயத்துல மட்டுமல்ல... வாழ்வாதார ரீதியாவும் உண்மையான ஒரு உறுதுணையா உதவி செஞ்சிருக்க. நீ இல்லாம... உன்னோட சப்போர்ட் இல்லாம நான் இந்த அளவுக்கு, என்னோட சொந்தக் கால்கள்ல நிக்க முடியாது. வாடிப் போன செடிக்கு, தகுந்த சமயத்துல தொடர்ந்து தண்ணி ஊத்தினா... அது மறுபடி துளிர்த்து வளர ஆரம்பிக்கும். அதுபோல அன்பால... துணிச்சலைக் குடுத்த..., தைரியத்தைக் குடுத்த. பணம் இல்லாம நான் தவிச்சப்ப... கணக்குப் பார்க்காம பண உதவியும் செஞ்ச. என்னதான் ஏராளமா சம்பாதிச்சாலும், எல்லாருக்குமேவா ஏராளமா பண உதவி செய்யற மனசு இருக்கு?! உதவிங்கறது பணத்தைப் பொறுத்தது இல்லை. மனதைப் பொறுத்தது. என் புருஷன் என்னை அனாதரவா விட்டுட்டுப் போனதுல இருந்து இன்னிக்கு வரைக்கும், உன்னோட அன்பினாலயும், ஆதரவுலயும்தான் உறுதியா நிக்கறேன். என்னையும், என் குழந்தையையும் நடுத்தெருவுல விட்டுட்டுப் போன என்னோட புருஷன், என் வீடு தேடி வந்து நடு வீட்ல நின்னுக்கிட்டு... ஒரு பிச்சைக்காரன் மாதிரி பணத்துக்கு என்னிடம் கெஞ்சினாரே... அந்த அளவுக்கு என்னோட நிலைமை மாறினதுக்கு காரணம் நீதானே? அமிர்தம்மா, விஜயராகவன் அப்பா... இவங்களோட ஆதரவு கிடைக்கறதுக்கு ஒரு வழிகாட்டியும் நீதானே? அவங்களை ஸ்ரீனிவாஸ் அறிமுகப்படுத்தி வச்சாலும், ஸ்ரீனிவாஸ் எனக்கு அறிமுகமாகறதுக்கு காரணம் நீதானே? நான் யார்? உன்னோட மாமா மகள்! கூடப்பிறந்த அக்கா தங்கச்சிக்கே ஒரு கஷ்டம்ன்னு தெரிஞ்சா... ஓடி ஒளிஞ்சுக்கற அண்ணன்க இருக்கற இந்தக் காலத்துல.... எனக்கு இப்பிடி எடுத்துக் கட்டி, எல்லாத்தையும் இழுத்துப் போட்டு உதவி செய்யணும்னு என்ன கட்டாயம் உனக்கு? மாமன் மகள், அத்தை மகன் உறவு மட்டுமேவா இதுக்குக் காரணம்? உன்னோட உள்மனசுல ஊறிப்போய் இருக்கற அன்பு! அதுதானே காரணம்?
ஆகாயம் அளவுக்கு அன்பு வச்சு, ஆதரவு குடுத்து, உதவி செஞ்சு... ஒரு உறுதியான தூணா, என்னைத் தாங்கிப் பிடிச்சு, தூக்கி நிறுத்தினியே... இமயம் அளவுக்கு உதவிகள் செஞ்ச உனக்கு என்னோட இதயத்துல... நீ கேட்ட இடத்தைத் தரமுடியாது, மாட்டேன்னு... எடுத்த எடுப்பிலேயே முகத்துல அடிக்கிற மாதிரி பதில் சொல்ல முடியுமா? மறத்துப் பேசறதுக்கு என்னோட மனநிலையைத் தயார் பண்ணிக்கத்தான் ஆரம்பத்துல டைம் கேட்டேன்.
அதுக்கப்புறம் பவித்ராகிட்ட பேசி அவளைத் தயார் பண்றதுக்கு டைம் கேட்டேன். பவித்ராவுக்கு மனநல பாதிப்பு ஆகி இருந்துச்சு. இதுக்குரிய டரீட்மென்ட் முடிஞ்சு... அவளை ஒரு நல்ல மனைவியா... நல்ல தாயா... உன்கிட்ட ஒப்படைக்கணும்ங்கறதுக்காகவும் டைம் கேட்டேன். போதுமா விளக்கம்? இப்பவும்... எப்பவும்... நீ... என் அன்பிற்குரிய வினோத். பவித்ரா என்னைப் புரிஞ்சுக்கிட்டா. அதுதான் பெரிய சந்தோஷம்! உன்னையும் புரிஞ்சுக்கிட்டாளே... அது எல்லாத்தையும்விட ரொம்ப ரொம்ப சந்தோஷம்! நான், ஸ்வாதி, நீ, பவித்ரா, மஞ்சு... நாம எல்லாரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு ஆனந்தமா நாம வாழப் போற வாழ்க்கை... இதோ நம்ப கண்முன்னால... நம் உள்ளங்கைகளுக்குள்ள இருக்கு... உன்னோட தனிமைத் தீ அணைஞ்சு போய்... இனிமைத் தேன்... உன் வாழ்க்கையில நிரம்பி வழியப் போகுது. அதை அனுபவி. இன்னொரு விஷயம் வினோத்... பாலசந்தர் ஸாரோட ‘நாற்பத்தேழு நாட்கள்’ படம் பார்த்திருக்கியா? இக்கட்டான சூழ்நிலையில இருந்து, தன்னைக் காப்பாத்தின சரத்பாபுவை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கேட்கும்போது ஜெயப்ரதா ‘கடவுளை கல்யாணம் பண்ணிக்க முடியுமா’ன்னு சொல்லுவாங்க. கே.பாலசந்தர் ஸார் எவ்ளவு அழகா சிந்திச்சிருக்கார்?! ஒற்றை வரியில... ஒரு கவிதை மாதிரி, ஜெயப்ரதாவோட பதிலை வசனமா வச்சுட்டாரு... நானும் உன்னை கடவுளாத்தான் நினைக்கிறேன்... மதிக்கிறேன்...’’
ராதாவின் விளக்கத்தில் குளிர்ந்தான் வினோத். அவளையும், அவளுடைய நீரோடை போன்ற மனதையும் புரிந்து கொண்டான். அதன் பிரதிபலிப்பாக அவனது முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
‘‘ராதா... உன்னோட மனசைப் பத்தி... என்ன சொல்றதுன்னே தெரியலை. உன்னுடன் மறுமணம்ங்கற எண்ணத்துல... என்னோட மனசு கூட ஒரு கணம் மாசுபட்டுப் போச்சு. ஆனா... உன்னோட புனிதமான இதயத்துல என்னை ரொம்ப உயரத்துல... கடவுளுக்கு சமமா தூக்கி வச்சிருக்க. எனக்கு அந்த அளவுக்கு தகுதி இருக்கோ இல்லையோ... உனக்கு நான் செஞ்ச உதவிகள் எல்லாம் தூய்மையான மனசோட செஞ்சதுதான். அதில் எந்த உள்நோக்கமும் கிடையாது...’’
‘‘அட... நீ என்ன வினோத்? உன்னை அப்பிடி நான் நினைப்பேனா? உன்னோட அன்பும், பாசமும் பரிசுத்தமானது. நீ சொல்லவே வேண்டியதில்லை.’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook