Logo

துல்பன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5152

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

துல்பன் - Tulpan

(கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம்)

2008 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த கஸாக்ஸ்டான் நாட்டு திரைப்படம் 'துல்பன்'.  100 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படம் கஸாக், ரஷ்ய மொழிகளில் எடுக்கப்பட்டது.  2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்கார் திரைப்பட விழாவிற்கு 'அயல்மொழி திரைப்படம்' என்ற பிரிவின் கீழ் திரையிடப்படுவதற்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.  இரண்டாவது ஆசியா-பசிபிக் திரைப்பட விழாவில் பங்கு பெற்று இப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழா, அதே ஆண்டில் நடைபெற்ற மான்ட்ரியல் திரைப்பட விழா ஆகிய விழாக்களிலும் 'துல்பன்' சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதைப் பெற்றது.

இப்படத்தின் இயக்குநர் Sergey Dvortsevoy (செர்ஜெய் ட்வார்ட்ஸெவாய்).  இவர் Kazakhstan இல் பிறந்தவர்.  அங்கேயே 28 வருடங்கள் வாழ்ந்தவர்.  ஒரு விமான நிறுவனத்தில் பணியாற்றியவர்.  அந்நாட்டின் கிராமப் பகுதி மக்களின் வாழ்க்கையைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர்.  'நியூயார்க் திரைப்பட விழா'வில் நடைபெற்ற ஒரு நேர்காணலின்போது, கஸாக்ஸ்டான் பின்புலத்தில் ஒரு திரைப்படத்தை இயக்க தான் திட்டமிட்டதைப் பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் கூறினார்.  'Hunger Steppe' என்ற வறண்டு போய் காணப்படும் பகுதியில்தான் இப்படத்தின் படப்பிடிப்பை தான் நடத்தியதாக அவர் கூறினார்.  அங்கு ஆட்டு மந்தைகளை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தும் ஏழை மக்களை மையமாக வைத்து தான் உருவாக்கிய 'துல்பன்' தான் எதிர்பார்த்ததைப் போலவே உலக மக்களிடம் மிகவும் சிறப்பான ஒரு பெயரைப் பெற்றதற்காக, தான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.

 அவருக்கு மட்டுமல்ல-படத்தைப் பார்க்கும் நமக்கும் அது ஒரு புதிய அனுபவமாகவே இருக்கும்.

'துல்பன்' திரைப்படத்தின் கதை என்ன என்பதைப் பார்ப்போமா?

படத்தின் ஆரம்பத்தில் பரந்து கிடக்கும் ஒரு பாலைவனத்தைப் போன்ற நிலப் பகுதி காட்டப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் தூசிப் படலம் பறந்து கொண்டிருக்கிறது.  சூறாவளிக் காற்று வீசுகிறது.  உரோமங்கள் அடர்த்தியாக வளர்ந்த செம்மறி ஆடுகள் நூற்றுக் கணக்கில் கும்பல் கும்பலாக அந்த வறண்ட நிலத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.  அந்த பாலைவனப் பகுதியில் ஒரு கூடாரத்தைப் போன்ற வீடு.  அந்த வீட்டிற்கு முன்னால் ஒரு சிறுவன் (நூகா) கையில் குச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.  அவனை விட மூத்த சிறுவன் பேட்டரியினால் இயங்கக் கூடிய ஒரு ரேடியோவை வைத்து உலக செய்திகளை எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கிறான்.  அவனை விட சற்று மூத்த சிறுமி அழகாக பாடிக் கொண்டிருக்கிறாள்.  அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள் அந்த குழந்தைகளின் தாயான சமல் (Samal).

அந்த பாலைவனப் பகுதியிலேயே இருக்கக்கூடிய இன்னொரு வீடு, பலகையால் செய்யப்பட்டிருக்கும் அந்த வீட்டிற்குள் கப்பல் படை வீரன் அணிந்திருக்கக் கூடிய உடைகளை அணிந்து அமர்ந்திருக்கிறான் ஆஸா (Asa).  இப்போது அவன் கப்பல் படையில் இல்லை.  முன்பு அவன் அங்கு இருந்தான், அங்கிருந்து அவன் அனுப்பப்பட்டு விட்டான்.  அதற்குப் பிறகு தன் அக்கா சமலைத் தேடி வந்து, அவளுடைய வீட்டில்தான் அவன் தங்கியிருக்கிறான்.  அவனுக்குச் சாப்பாடு போட்டு பார்த்துக் கொள்கிறார்கள் சமலும், அவளுடைய கணவன் ஓன்டாஸும் (Ondas).

இப்போது கப்பல் படை வீரனின் ஆடைகளுடன் வீட்டிற்குள் அமர்ந்திருக்கும் ஆஸா, எதற்காக அங்கு வந்திருக்கிறான் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?  தனக்கேற்ற இளம்பெண் ஒருத்தி அந்த வீட்டில் இருக்கிறாள்.  அவளை தான் திருமணம் செய்வதற்காக, அவன் பெண் கேட்டு வந்திருக்கிறான்.  அவனை அங்கு அழைத்து வந்திருப்பது, அவனுடைய அக்கா சமலின் கணவன் ஓன்டாஸ்.  அவர்களிடம் சற்று பருமனான உடலமைப்பைக் கொண்ட ஆஸாவின் நண்பன் போனியும் (Boni) இருக்கிறான்.

தரையில் அமர்ந்திருக்கும் அவர்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மணப் பெண்ணின் தந்தையும், தாயும்.  மணப் பெண்ணின் பெயர் 'துல்பன்'.  அவள் அந்த அறையில் இல்லை.  பக்கத்து அறையில் தொங்கிக் கொண்டிருக்கும் திரைச் சீலைக்குப் பின்னால் இருக்கிறாள்.  அதனால் அவளுடைய முகம் அறையில் அமர்ந்திருப்பவர்களுக்குச் சரியாக தெரியவில்லை.

கப்பல் படையிலிருந்து வெளியேறி வந்து விட்ட ஆஸா, தன் சகோதரி சமலின் கூடாரத்திற்குள் தங்கிக் கொண்டு, ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்.  தன் அக்காவின் கணவன் ஓன்டாஸைப் போல, தனக்கென்று ஏராளமான ஆடுகளைச் சொந்தத்தில் வைத்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான் ஆஸா.  ஆனால், நூற்றுக் கணக்கான செம்மறி ஆடுகளை தான் ஒரு மனிதன் மட்டும் கவனம் செலுத்தி பார்ப்பது என்பது, நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்பதையும் அவன் நினைத்துப் பார்க்கிறான்.  தன் சகோதரி சமல் எப்படி ஒரு குடும்பத்தை நிர்வாகம் செய்து கொண்டு, ஆட்டுக் கூட்டத்தையும் பார்த்துக் கொள்கிறாளோ, அதே போல தனக்கு வரும் மனைவியும் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆஸா தன் மனதில் நினைக்கிறான்.  பெரிய ஆட்டுக் கூட்டத்திற்குத் தலைவனாக தான் ஆக வேண்டுமென்றால், அதற்கு முதலில் தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு அவன் வருகிறான்.

அப்படி மனதில் நினைத்துக் கொண்டிருந்தபோதுதான் அவனுக்கு 'துல்பன்' என்ற அழகான இளம் பெண்ணைப் பற்றிய தகவல் கிடைக்கிறது.  இன்னும் சொல்லப் போனால் -- அந்த பாலைவனப் பகுதியிலேயே திருமண வயதில் இருக்கும் ஒரே இளம் பெண் துல்பன் மட்டுமே.  அவளை எப்படியும் திருமணம் செய்தே ஆவது என்ற தீர்மானத்துடன், துல்பனின் வீட்டில் வந்து அவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பெண் கேட்க வந்த இடத்தில், மணமகன் தன்னுடைய பெருமைகளை அள்ளி விட வேண்டாமா?  ஆஸாவும் அதைத்தான் செய்கிறான்.

கப்பல் படையில் இருந்தபோது தான் துணிச்சலாக போர் புரிந்த சம்பவங்களையும், அப்போது நடைபெற்ற சுவையான பல நிகழ்ச்சிகளையும், கடலுக்குள் வாழக் கூடிய உயிரினங்களையும், நினைத்துப் பார்க்க முடியாத ராட்சச வடிவத்தில் இருக்கும் கடல் வாழ் பிராணிகளையும் அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் கூறுகிறான்.  அவன் கூறும் விஷயங்களை மிகுந்த ஆர்வத்துடன் அங்கு இருப்பவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அவனுடைய சுய புராணத்தை திரைச் சீலைக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் துல்பனும் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.  எனினும், அவளுடைய உருவம் நமக்கு காட்டப்படவில்லை.

ஆஸா கூறும் கடல் குதிரை, ஆக்டோபஸ் ஆகியவை பற்றிய சுவாரசியமான தகவல்களை ஓன்டாஸ், போனி இருவரும் கூட தங்களையே மறந்து கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.  பெண்ணுக்கு வரதட்சணையாக 10 ஆடுகளையும், ஒரு சர விளக்கையும் தருவதாக ஓன்டாஸ் கூறுகிறான்  ஒரு சர விளக்கை கையோடு அங்கு கொண்டும் வந்திருக்கின்றனர்.  'உங்கள் பெண்ணின் முடிவைக் கேட்டு கூறுங்கள்' என்று பெண்ணின் பெற்றோரிடம் கூறுகிறான் ஆஸா.


அடுத்த காட்சி---

பாலைவனத்தில் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஒரு வாகனம், ஒரு ஜீப்பின் வடிவத்தில் இருக்கக் கூடிய அதில் வெள்ளரிக்காய், காய்கறிகள் ஆகியவற்றை அந்த வறண்டு போன நிலப் பகுதியில் வாழ்பவர்களுக்குக் கொண்டு வந்து தரும் வேலையைச் செய்கிறான் போனி.  மேற்கத்திய பழக்க வழக்கங்களிலும், நாகரீகத்திலும், இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவன் போனி.  அவன் 'பாப்' பாணியில் ஒரு பாடலை உற்சாகத்துடன் பாடியவாறு, அந்த வாகனத்தை வேகமாக ஓட்ட, மிகுந்த உற்சாகத்துடன் கைகளை ஆட்டியவாறு பயணிக்கிறான் ஆஸா.  'திருமணத்திற்குப் பெண்ணைப் பார்த்தாகி விட்டது.  வரதட்சணையும் என்ன என்பதைக் கூறியாகி விட்டது.  இனி துல்பன் நமக்குக் கிடைத்த மாதிரிதான்...  அவள் வாழ்க்கையில் இணைந்து விட்டால், பிறகு என்ன?  சந்தோஷத்திற்குக் கேட்கவா வேண்டும்?  அவளைத் திருமணம் செய்த பிறகு, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் ஒரு பெரிய ஆட்டு மந்தைக்குத் தலைவனாக நாம் ஆகி விட வேண்டும்' என்ற கற்பனைக் கோட்டையில் மிதக்கும் ஆஸா, போனியின் மேற்கத்திய பாணி பாடலுக்கு மிகவும் குஷியாக கைகளை ஆட்டி, தன் மனதில் இருக்கும் சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறான்.  மனதில் நினைத்த காரியம் நடக்கப் போகிறது என்ற மகிழ்ச்சி ஆஸாவுக்கு...  அவனுடைய நண்பன் போனிக்கும்தான்.

ஆனால், அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.  பாடலின் இறுதியில் ஒரு மிகப் பெரிய குண்டைத்  தூக்கிப் போடுகிறான் ஓன்டாஸ்.  அது--- மணப்பெண் துல்பனுக்கு ஆஸாவைப் பிடிக்கவில்லை என்பதுதான்.  அவனை வேண்டாம் என்று மறுத்ததற்கு அவள் கூறிய காரணம்--- 'ஆஸாவின் காதுகள் மிகவும் பெரியதாக இருக்கின்றன' என்பதுதான்.  அதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் விடுகிறான் ஆஸா.  தன் மனதில் கட்டி வைத்திருந்த காதல் கோட்டை இவ்வளவு சீக்கிரம் சரிந்து தூள் தூளாகும் என்று அவன் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை,  அதனால் பேசுவதற்கு வார்த்தை இல்லாமல், மவுனமாக இருக்கிறான் அவன்.

இரவு நேரம். சமல் - ஓன்டாஸ் தம்பதிகளின் கூடாரம். அவர்களின் மகன் ரேடியோவில் 'ப்ரேக்கிங் நியூஸ்!' கேட்டுக் கொண்டிருக்கிறான், 'ஜப்பானில் பூகம்பம்! ரிக்டர் ஸ்கேல் 7!' என்று தான் கேட்ட செய்தியை, தன் தந்தையிடமும், தாயிடமும் கூறுகிறான்.  அவனுடைய அக்கா ஒரு நாட்டுப் புறப் பாடலை அழகான குரலில் பாடுகிறாள்.  எல்லோருக்கும் இளைய சிறுவன் ஒரு குச்சியால் அடித்துக் கொண்டே வீட்டிற்குள் ஓடிக் கொண்டிருக்கிறான்.  தரையில் மிகவும் தளர்ந்து போய், சோர்வடைந்த கண்களுடன் படுத்திருக்கிறான் ஓன்டாஸ்.  இறுதியாக ஒரு அருமையான கிராமிய பாடலை தன்னுடைய இனிமையான குரலில் பாடுகிறாள் சமல்.  நம் இந்திய கிராமிய பாடலைப் போலவே இருக்கிறது அது!  அந்த இனிமையான பாடலில் அங்கு இருக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமல்ல -- நாமும் சொக்கிப் போய் விடுகிறோம் என்பதுதான் உண்மை, பாடலைப் பாடியவாறு, சமல் தன் கணவன் ஓன்டாஸுடன் நெருங்கி படுக்கிறாள். ஓன்டாஸும் அவளை இறுக தழுவுகிறான்.  இப்போது குழந்தைகள் மண்ணெண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் அந்த கூடாரத்திற்குள் தங்களை மறந்து உறங்கிக் கொண்டிருக்கின்றன.  ஆஸா அப்போது வீட்டிற்குள் வருகிறான்.  அவன் வரும் ஓசை கேட்டதும், திரும்பிப் படுக்கிறாள் சமல்.  ஆஸா ஒரு ஓரத்தில் போய் படுக்கிறான்.  ஆடுகளை மேய்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஏழ்மையான குடும்பம் உயிர்ப்புடன் நமக்கு காட்டப்படுகிறது.

கூடாரத்திற்குள் தனியாக இருக்கும்போது இரவு வேளைகளில் முகம் பார்க்கும் கண்ணாடியை முன்னால் வைத்து, அதில் தன்னுடைய காதுகளைப் பார்க்கிறான் ஆஸா, 'உண்மையிலேயே தன்னுடைய செவிகள் அளவில் பெரியவைதானா?  தனக்கு மணமகளாக வர வேண்டிய துல்பன், காதுகள் பெரிதாக இருப்பதால் தன்னை ஒரேயடியாக நிராகரித்து விட்டாளே!'  என்று அப்போது கவலையுடன் நினைத்துப் பார்க்கிறான் ஆஸா.  தன் மனதிற்குள் இருக்கும் குமுறல்களை வெளிக்காட்ட முடியாமல் அவன் தவிக்கிறான்.

சமலின் கூடாரத்திற்கு வெளியே ஏராளமான செம்மறி ஆடுகள் புழுதியைக் கிளப்பியவாறு குழுமியிருக்கின்றன.  சற்று தள்ளி...  ஒட்டகங்கள், கழுதைகள்...  அவற்றுக்கு மத்தியில் ஆஸாவும், ஓன்டாஸும்.  ஜீப்பைப் போன்ற வாகனத்துடன் அவ்வப்போது புழுதியைக் கிளப்பியவாறு வெள்ளரிக் காய்களுடனுடனும், காய்கறிகளுடனும் வந்து நிற்கிறான் காவிக் கறை படிந்த பற்களுடன் மேற்கத்திய நாகரீகத்தின் மீது மோகம் கொண்ட போனி.

ஆடு பிரசவமாகும் காட்சி காட்டப்படுகிறது.  ஒரு குட்டியைப் பெற்றெடுப்பதற்கு ஆடு எவ்வளவு சிரமப்படுகிறது என்பதை காட்சி மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.  அப்படி பலவித கஷ்டங்களுக்குப் பிறகு பிறக்கும் குட்டி எந்தவித அசைவுமில்லாமல் இருக்கிறது.   ஓன்டாஸ் ஆட்டுக்குட்டியின் வாயின் மீது தன் வாயை வைத்து காற்றை ஊதுகிறான்.  அந்த காற்று பட்ட பிறகாவது, ஆட்டுக்குட்டியின் சரீரத்தில் அசைவு உண்டாகாதா என்ற நினைப்பு அவனுக்கு.  ஆனால், சிறிய அசைவு கூட அதனிடம் உண்டாகவில்லை.  அப்போதுதான் அந்த ஆட்டுக்குட்டி உயிருடன் இல்லை என்பதே ஓன்டாஸுக்குத் தெரிய வருகிறது.  நடந்து கொண்டிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றையும் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் கவனித்துக் கொண்டிருக்கிறான் ஆஸா.  சொந்தத்தில் ஆட்டு மந்தையை வைத்திருக்க வேண்டும் என்ற இலட்சியத்துடன் இருக்கும் அவன் கட்டாயம் இவற்றையெல்லாம் தெரிந்திருக்க வேண்டுமே!

மீண்டும் துல்பனின் வீடு.  அவள் மீது தணியாத மோகத்துடன் வாசற் கதவின் அருகில் போய் நிற்கிறான் ஆஸா.  அவனுடன் அவனுடைய நெருங்கிய நண்பனான போனியும்.  ஆஸாவின் கையில் பத்திரிகையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட ஒரு படம் இருக்கிறது.  அது வேல்ஸ் இளவரசரின் படம்.  ஆஸா கதவைத் தட்டுகிறான்... 'துல்பன்... நான்தான்... ஆஸா.  உன்னை என்னால் மறக்க முடியவில்லை.  நீதான் என் வருங்கால மனைவி என்று எப்போதோ முடிவு செய்து விட்டேன். உன் முகத்தை நான் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்' என்று அவன் கூறுகிறான்.  அவளுடைய கூந்தல் இருட்டுக்குள் பளபளத்துக் கொண்டிருக்கிறது.   பக்கவாட்டில் அவளுடைய முகத்தைச் சற்று பார்க்க முடிகிறது.  உண்மையிலேயே துல்பன் பேரழகியேதான்....  இப்போது தன் மனதில் உள்ளதை வெளிப்படையாக அவளிடம் கூறுகிறான் ஆஸா... 'துல்பன், நீ என் காதுகள் பெரிதாக இருக்கின்றன என்று குறை கூறினாயாம்.  இது ஒரு பெரிய விஷயமா?  இதோ... இந்த படத்தைப் பார்.  இது வேல்ஸ் இளவரசரின் படம்.  அவருடைய காதுகள் என் காதுகளை விட அளவில் பெரியவையாக இருக்கின்றன.  அவரை விரும்பி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளவில்லையா?  இதை நீ சிறிது சிந்தித்துப் பார்.  என் மீது இரக்கம் காட்டி, என்னை உன் கணவனாக ஏற்றுக் கொள்.  சிந்தித்து முடிவு செய்.  உன் முடிவுக்காக நான் காத்திருக்கிறேன்' என்கிறான் ஆஸா.  கதவு மூடப்படுகிறது.  அவள் சிந்திக்க வேண்டாமா?  அங்கிருந்து கிளம்புகின்றனர் ஆஸாவும், போனியும்.


பாலைவன மணல் பகுதியில் ஆடுகள் பிரசவித்த குட்டிகள் இங்குமங்குமாக இறந்து கிடக்கின்றன, இந்த விஷயத்தை மிருக மருத்துவரின் பார்வைக்குக் கொண்டு செல்கிறான் ஓன்டாஸ்.  அவர் ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய மனிதர்.  அவர் ஒரு நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகக் குட்டியை ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் ஏற்றி வைத்தவாறு அங்கு வருகிறார்.  இறந்து கிடக்கும் ஆட்டுக்குட்டியின் வாயைப் பிளந்து இப்படியும் அப்படியுமாக பார்க்கிறார்.  அது இறந்து விட்டது, பிழைப்பதற்கு வழியில்லை என்பது தெரிந்தவுடன், புழுதி பறக்க, தன் மோட்டார் சைக்கிளில் ஒட்டகக் குட்டியுடன் அவர் கிளம்புகிறார்.

ஆஸாவிற்கு தன் சகோதரியின் கணவன் ஓன்டாஸுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடும், சண்டையும் உண்டாகும்.  அந்த மாதிரி நேரங்களில் 'நான் இங்கிருந்து கிளம்புகிறேன்' என்று கோபத்துடன் கிளம்புவான் ஆஸா.  பரந்து கிடக்கும் பாலைவனப் பகுதியில் கோபித்துக் கொண்டு செல்லும் தன் தம்பியைப் பின் தொடர்ந்து ஓடுவாள் சமல்.  கண்ணீர் மல்க அவனிடம் கெஞ்சி, மீண்டும் அவனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவாள் சமல்.  தன் தம்பியின் மீது உயிரையே வைத்திருக்கும் அன்பு மனம் கொண்ட அருமையான அக்கா அவள்!

சமலின் குடும்பம்.  அவளின் மகள் கிராமிய பாடலை பாடிக் கொண்டிருக்கிறாள்.  மகன் ரேடியோவில் உலக செய்தியைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.  எல்லோருக்கும் இளைய மகன் தன் விருப்பப்படி எல்லோரையும் அடித்தவாறு, வீடெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறான்.  சமல் தன் கவலைகள் அனைத்தையும் மறந்து, காற்றைக் கிழித்துக் கொண்டு பாடுகிறாள்.  அவர்கள் எல்லோரையும் பார்த்தவாறு படுத்திருக்கிறான் ஓன்டாஸ்.

துல்பனின் வீட்டு வாசலில் போய் நிற்கிறான் ஆஸா.  அவனுடன் போனியும். மூடப்பட்டிருந்த கதவிற்கு வெளியே நின்று துல்பனை அழைக்கிறான் ஆஸா.  பல முறை அழைத்தும், கதவு திறக்கப்படவில்லை.  அப்போது அங்கு வேகமாக வருகிறாள் துல்பனின் தாய்.  'துல்பன் இங்கு இல்லை.  நீ இங்கிருந்து புறப்படு. இனிமேல் இங்கு நீ வரக் கூடாது.  உன்னை என் மகளுக்குப் பிடிக்கவில்லை.  நீ கொண்டு வந்த சர விளக்கை நீயே எடுத்துக் கொள்' என்று கூறி, சர விளக்கை அவனிடமே திருப்பித் தருகிறாள்.  அத்துடன் நிற்காமல், அவனை விரட்டியும் அடிக்கிறாள்.  தன்னுடைய கனவு தேவதையாக கற்பனை பண்ணிய துல்பன் இனிமேல் தனக்கு இல்லவே இல்லை என்ற மிகப் பெரிய ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்புகிறான் ஆஸா.  அவனுடைய நிலைமையைப் பார்த்து உண்மையிலேயே நமக்குக் கூட வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது.

சமலின் கணவன் ஓன்டாஸுடன் சண்டை போட்டு கோபித்துக் கொண்டு வேகமாக கிளம்பிச் செல்கிறான் ஆஸா.  சமல் அவனுக்குப் பின்னால் ஓடுகிறாள்.  திரும்பி வரும்படி கெஞ்சுகிறாள்.  ஆனால், அவன் கேட்பதாக இல்லை.  இன்னும் வேகமாக நடக்கிறான்.  கண்களில் கண்ணீர் வழிய, புயலென செல்லும் தன் அன்புத் தம்பியையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறாள் சமல்.

பாலைவனப் பகுதி.  பரந்து கிடக்கும் வறண்டு போன வெட்ட வெளியில் வேகமாக நடந்து வந்து கொண்டிருக்கிறான் ஆஸா.  அப்போது ஒரு இடத்தில் கர்ப்பமான ஒரு செம்மறி ஆடு வேதனையுடன் படுத்திருக்கிறது.  அது பிரசவமாகக் கூடிய நிலையில் இருக்கிறது.  அதைப் பார்த்து 'ஓன்டாஸ்... ஓன்டாஸ்...' என்று சத்தம் போடுகிறான் ஆஸா.  ஆனால், எங்கோ இருக்கும் ஓன்டாஸின் காதுகளில் அது எப்படி விழும்?  ஆஸாதான் ஆட்டின் பிரசவ காட்சியை ஏற்கெனவே பார்த்திருக்கிறானே!  அந்த அனுபவத்தில் அவன் தன் கைகளை பயன்படுத்தி ஆட்டுக்குட்டியின் வெளியே வந்த கால்களை இழுத்து, அதை வெளியே எடுக்கிறான்.  சிறிது சிறிதாக ஆட்டுக் குட்டியின் தலைப் பகுதி வெளியே வருகிறது.  புழுதியில் விழுந்து அது சுருண்டு கிடக்கிறது.  அதன் வாயில் தன் வாயை வைத்து காற்றை ஊதுகிறான் ஆஸா.  ஆட்டுக்குட்டி மெதுவாக அசைகிறது.  அதற்கு எந்த ஆபத்தும் இல்லை.  அதை தாய் ஆட்டின் அருகில் போய் போடுகிறான் ஆஸா.  தாய் ஆடு தன் குட்டியை வாஞ்சையுடன் நக்கி, பால் தருகிறது.  அந்த அழகான காட்சியை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் ஆஸா.  ஒரு ஆட்டின் பிரசவத்தைத் தன்னுடைய கையால் நிறைவேற்றிய மிகப் பெரிய பெருமிதம் அவனுடைய முகத்தில்!

சமலின் கூடாரம் பிரிக்கப்படுகிறது.  கூடாரமும், வீட்டிற்குள் இருந்த பொருட்களும் வாகனத்தில் ஏற்றப்படுகின்றன.  சமல், அவளுடைய இரண்டு மகன்கள், ஒரு மகள் அனைவரும் அதில் ஏறுகின்றனர்.  அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்குக் கிளம்புகின்றனர்.  இன்னொரு பாலைவனப் பகுதிக்கு.  அவர்கள் வேறு எங்கு போவார்கள்?  இது அவர்களுக்குப் பழகிப் போன விஷயம்தானே!

அந்த ஏழ்மையான குடும்பத்திற்குப் பின்னால் அவர்களுடைய ஆட்டு மந்தை.

 அதற்குப் பின்னால் கழுதையில் அமர்ந்திருக்கும் ஓன்டாஸ்.  அவனுக்கு அருகில்.... ஆஸா!  அவன் வேறு எங்கு போவான்?

அந்த விரிந்து கிடக்கும் பாலைவனத்தில் அவர்கள் இன்னொரு இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள். அந்த ஏழை உயிர்களுக்கும், ஆட்டு மந்தைக்கும் பின்னால் ஒரே தூசிப் படலம்!

அவற்றையெல்லாம் தாண்டி அந்த அன்பு உள்ளங்களும், அந்த செம்மறி ஆடுகளின் கூட்டமும் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து, ஒரு புதிய உலகத்தையே பார்க்கக் கூடிய மிகப் பெரிய வாய்ப்பு நமக்குக் கிடைத்த உணர்வுடன் நாம் அமர்ந்திருக்கிறோம்.

தான் பார்த்த மக்களின் சந்தோஷம், கவலைகள், ஏக்கம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், இலட்சியம் அனைத்தையும் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உயிரோட்டத்துடன் சித்தரித்த இயக்குநர் செர்ஜெய் ட்வார்ட்ஸெவாய்க்கு -- ஒரு ராயல் சல்யூட்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.