Category: சினிமா Published Date Written by சுரா Hits: 4018
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
இன் திஸ் வேர்ல்ட் - In This World
(ஐரோப்பிய திரைப்படம்)
2002ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஐரோப்பிய திரைப்படம் 'இன் திஸ் வேர்ல்ட்'. உலகமெங்கும் இருக்கும் பத்திரிகையாளர்களாலும், விமர்சகர்களாலும் பாராட்டப்பட்ட படமிது. இதை வெறும் திரைப்படம் என்று கூறுவதை விட, திரைப்பட வடிவத்தில் எடுக்கப்பட்ட ஆவணப்படம் என்று கூறுவதே சரியாக இருக்கும்.
இப்படத்தின் இயக்குநர் மைக்கேல் வின்டர் பாட்டம் (Michael Winterbottom).
2003 ஆம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் Golden Bear விருதை இப்படம் பெற்றது.
பாகிஸ்தானின் பெஷாவரில் (Peshawar) இருக்கும் அகதிகள் முகாமிலிருந்த இரு அகதிகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
படத்தின் கதை இதுதான்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் அகதிகள் முகாமின் பெயர் 'Shamshatoo Refugee Camp'. 1979 இல் சோவியத் யூனியன் படையெடுப்பாலும், 2001 இல் அமெரிக்கா குண்டுகள் போட்டு, ஆஃப்கானிஸ்தானுக்குள் நுழைந்து போரில் ஈடுபட்டதாலும் உண்டான மோசமான விளைவுகளால் 53,000 அகதிகள் அந்த முகாமில் வந்து தங்கினர். பலவிதப்பட்ட பிரச்னைகள், சிரமங்கள், துயரக் கதைகள் ஆகியவற்றுக்கு மத்தியில் அவர்களுடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.
அந்த முகாமில் இருக்கும் ஒரு இளைஞன் இனாயத். அவனுடைய மருமகன் உறவு வரக் கூடிய சிறுவன் ஜமால். இருவருமே அகதிகள்தாம். ஆஃப்கானிஸ்தானில் ஒரு காலத்தில் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அவர்கள். இரு பெரும் வல்லரசு நாடுகளின் படையெடுப்புகளால் நம்முடைய நிலைமை இந்த அளவிற்கு மிகவும் கேவலமான நிலைமைக்கு வந்து விட்டதே என்று தினமும் அவர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். அந்த அவல வாழ்க்கையிலிருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதற்கான யோசனையில் இருவரும் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது இனாயத்தின் தந்தை அவர்களை எப்படியும் லண்டனுக்கு அனுப்பி வைத்து விடுவது என்ற முடிவைத் தெரிவிக்கிறார். சாதாரணமாக மனதில் முடிவை எடுத்து விடலாம். லண்டனுக்கு பாகிஸ்தானிலிருந்து ஒரு அகதி செல்வது என்பது நடைமுறையில் நடக்கக் கூடியதா? சட்ட ரீதியாக சாத்தியமில்லாத ஒன்று அது. பிறகு எப்படி அந்த இருவரும் லண்டனுக்குச் செல்ல முடியும்? சட்ட விரோதமாகத்தான் போக முடியும்.
கள்ளக் கடத்தைலைத் தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்சகளின் மூலம் -- தவறான வழிகளைப் பின்பற்றித்தான் அவர்கள் நிச்சயம் அங்சு செல்ல முடியும். இனாயத், ஜமால் இருவரின் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. கள்ளக் கடத்தல்காரர்களுக்கு லஞ்சப் பணம் கொடுத்து அவர்களை எப்படியாவது பாகிஸ்தான் அகதிகள் முகாமிலிருந்து கிளப்பிக் கொண்டு செல்வதற்கு உதவியாக இருக்கிறார் இனாயத்தின் தந்தை.
பஸ், லாரி என்று பலவற்றிலும் அவர்கள் இருவரும் பயணிக்கிறார்கள். அப்படி பயணம் செய்யும்போது, எங்கே சோதனைச் சாலைகளில் பிடிபட்டு விடுவோமோ என்ற பயம் இருவருக்குமே இருக்கிறது. மனம் துடிதுடிக்கத்தான் இருவருமே அமர்ந்திருக்கின்றனர். பெஷாவரிலிருந்து Quetta என்ற இடத்திற்குப் பயணமாகிறார்கள். பிறகு அங்கிருந்து ஈரானின் எல்லையில் இருக்கும் Taftan என்ற இடத்திற்கு. அங்குதான் அவர்களுக்கு சோதனை காத்திருக்கிறது. அவர்கள் பயணம் செய்யும் பேருந்திற்குள் சோதனை அதிகாரிகள் ஏறுகிறார்கள். ஒவ்வொருவரையும் சோதித்துப் பார்க்கும் அவர்கள் அவ்விருவரிடமும் வந்து 'நீங்கள் இருவரும் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களா?' என்று கேட்கின்றனர். அதற்கு அவர்கள் 'இல்லை.... நாங்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்' என்று கூறுகிறார்கள். 'அதற்கான சான்றுகள் உங்களிடம் இருக்கின்றனவா?' என்று அவர்கள் கேட்க, 'எங்களிடம் எந்தச் சான்றுகளும் இல்லை. ஆனால், நாங்கள் ஈரானைச் சேர்ந்தவர்கள்தாம்' என்கின்றனர். அவர்களின் பேச்சில் அந்த அதிகாரிகளுக்கு நம்பிக்கை வரவில்லை. அவர்களையே சந்தேகத்துடன் பார்க்கின்றனர். அவர்களை பேருந்திலிருந்து இறக்கி, சோதனைச் சாலைக்குக் கொண்டு செல்கின்றனர். அங்கு என்ன நடக்கும்? அவர்களிடம் முறையான சான்றுகள் எதுவுமே கிடையாது என்பதுதான் நமக்குத் தெரியுமே! ஆட்களை சட்ட விரோதமாக வேறு நாடுகளுக்கு கடத்தி விடும் மனிதர்களுக்குப் பணத்தைக் கொடுத்து பயணம் செய்தவர்கள்தானே அவர்கள்! விளைவு -- சிறுவன் ஜமாலும், இனாயத்தும் மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
அதற்காக அவர்கள் அமைதியாக இருந்து விடுவார்களா என்ன? இனாயத் தன் ஷுவிற்குள் மறைத்து வைத்திருந்த பணத்தை எடுத்து ஆட்களைக் கடத்தி அனுப்பி வைக்கும் ஏஜென்டிடம் தருகிறான். மீண்டும் அவர்களின் பயணம் ஆரம்பிக்கிறது. சென்ற முறை பேருந்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி பயணித்தது போல் இல்லாமல் பல்வேறு வகையான வாகனங்களிலும் அவர்கள் பயணிக்கின்றனர். ஒரு லாரியில் பழங்கள் ஏற்றப்படுகின்னறன. அதற்கு மத்தியில் ஒரு பெட்டியை வைத்து, அதற்குள் அவர்களை மறைந்து கொள்ளச் சொல்கின்றனர். அவர்கள் அந்தப் பெட்டிக்குள் செல்ல, பழங்கள் ஏற்றப்படுகின்றன. வெளியிலிருந்து பார்த்தால், லாரியில் பழங்கள் ஏற்றப்பட்டிருப்பது மட்டுமே தெரியும். உள்ளே ஆட்கள் ஏற்றப்பட்டிருப்பது தெரியாது. அந்தக் காட்சியைப் பார்க்கும்போது நமக்கே மனதில் கலக்கம் உண்டாகும். இப்படியெல்லாம் மனிதர்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கிறார்களா என்று நாம் நினைப்போம். காற்றே வராத அளவிற்கு இருக்கக் கூடிய ஒரு இறுக்கமான சூழ்நிலையில் நீண்ட தூரம் எவ்வளவோ கிலோ மீட்டர்கள் மலைகளின் மீதும், பாலைவனப் பகுதிகளிலும், வளைவுகளிலும், நினைத்துப் பார்க்க முடியாத திருப்பங்களிலும் பயணிப்பது என்றால் சாதாரண விஷயமா? அவர்களின் அந்தப் பயணத்தைப் படத்தில் பார்த்த போது, அவர்களுடைய மனம் அடித்துக் கொண்டதோ என்னவோ, என் மனம் வேகமாக அடித்துக் கொண்டதை என்னால் உணர முடிந்தது.
அவர்கள் ஈரானின் டெஹ்ரானுக்குள் நுழைகிறார்கள். அங்கிருந்து 'Maku' என்ற இடத்திற்கு. அங்கிருந்து கால் நடையாக ஒரு மலைப் பகுதியைக் கடந்தே, துர்க்கியை அடைகிறார்கள். இஸ்தான்புல் நகரத்தில் தங்களைப் போலவே வேறொரு நாட்டிற்குப் பயணிக்கும் ஒரு குடும்பத்தை அவர்கள் பார்க்கிறார்கள். ஒரு கணவன், அவனுடைய மனைவி, அவர்களுடைய கைக் குழந்தை... அவர்களும் சட்ட விரோதமாக பயணம் செய்பவர்கள்தாம். அவர்கள் அனைவரும் இத்தாலிக்கு அழைத்துக் கொண்டு செல்லப்படுகிறார்கள். எந்த வாகனத்தில்? படத்தில் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, உண்மையிலேயே நாம் அதிர்ச்சியில் உறைந்து போய் விடுவோம். ஒரு மிக நீளமான கன்டெய்னர் லாரியில் உள்ள ஒரு குழாய் போன்ற பகுதிக்குள் அவர்கள் அனைவரையும் அமரச் செய்து விட்டு, அதை வெளியே இறுக்கமாக இரும்புக் கம்பி கொண்டு மூடி விடுவார்கள். அதற்கு வெளியே கன்டெய்னரில் ஏற்றப்படும் சரக்குகள். காற்று என்பதே சிறிதும் நுழைய முடியாத ஒரு இடத்தில் ஐந்து பேரும் பல மணி நேரங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்வது என்பதை உங்களால் மனதில் கற்பனை பண்ணிப் பார்க்க முடிகிறதா? நினைக்கும்போது நம் இதயத் துடிப்பே நின்று விடுவதைப் போல நிச்சயம் நாம் உணர்வோம். ஆனால், எதைப் பற்றியும் கவலைப் படாமல், அடைக்கப்பட்ட அந்த இடத்திற்குள் அந்த ஐந்து பேரும் அமர்ந்திருப்பார்கள். ஜமால், இனாயத்துடன் சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டு வருவான். தங்களுக்குப் புதிதாக அறிமுகமான அந்த கணவனுடனும், மனைவியுடனும் மனம் திறந்து அவர்கள் பேசிக் கொண்டு வருவார்கள். அந்த இடத்திலிருந்து தப்பித்து வேறு நாட்டிற்குச் சென்று விட்டால் போதும் என்ற மன நிம்மதியுடன் அந்த கும்பல் இருப்பதை அவ்விருவரும் உணர்வார்கள். அந்த அழகான ஆண் குழந்தையின் கள்ளங்கபடமற்ற சிரிப்பில் தங்களின் பல நாள் கவலைகளை முற்றிலும் மறப்பார்கள் ஜமாலும், இனாயத்தும்.