Logo

பியாண்ட் தி நெக்ஸ்ட் மவுண்டன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4349

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

பியாண்ட் தி நெக்ஸ்ட் மவுண்டன்- Beyond the Next Mountain

(அமெரிக்க திரைப்படம்)

2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம் 'Beyond the Next Mountain'. 97 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்தப் படத்தை இயக்கியவர்கள் Rolf Forsberg, James F.Collier. திரைக்கதையை எழுதியவர் Rolf Forsberg.

இது ஒரு உண்மை கதை.

வரலாற்றில் இடம் பெற்ற Dr.Rochunga Pudaite என்ற மாமனிதரின் வாழ்க்கைக் கதையே இது. இந்தியாவின் மலைப் பகுதியான மணிப்பூரில் உள்ள Senuon என்ற குக்கிராமத்தில் பிறந்த அவர் தன்னுடைய Hmar என்ற மலை வாழ் மக்கள் பேசும் மொழிக்கு பைபிளை மொழி பெயர்த்து, அந்த மக்கள் அனைவரும் அதை வாசிக்கும்படி செய்தார். அது தவிர, 'Bibles for the world' என்ற அமைப்பின் தலைவராக இருந்து, உலகமெங்கும் இருக்கும் 108 நாடுகளுக்கு 15 மில்லியன் 'புதிய ஏற்பாடு' பிரதிகளை இலவசமாக மக்களுக்கு கொண்டு போய் சேர்த்து சாதனை புரிந்தார். பல நூல்களையும் எழுதினார்.

உலகம் முழுவதும் பயணம் செய்து பைபிளின் கருத்துக்களைச் சொற்பொழிவாற்றினார். 100 நாடுகளுக்கு இரண்டு மில்லியன் மைல்கள் பயணித்திருக்கிறார். அவருடைய தலைமையின் கீழ் மணிப்பூர், மிஸோரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் ஒரு கல்லூரி, 5 உயர் நிலைப் பள்ளிக் கூடங்கள், 25 கிராமப் பள்ளிகள் நிறுவப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2002ஆம் ஆண்டில் 'Operation Dalit Indians' என்ற அமைப்பை நிறுவி, டில்லியில் அதன் கீழ் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் கற்பதற்காக 5 கல்விக் கூடங்களை ஆரம்பித்தார்.

அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற அவர், மதம் சம்பந்தப்பட்ட கல்வியை ஸ்காட்லேண்டிலும், அமெரிக்காவில் உள்ள Wheaton Collegeஇலும் பயின்றார். பின்னர் Illinois Universityயில் கல்வியில் Master of Science பட்டம் பெற்றார்.

1976ஆம் ஆண்டில் Ohioவில் உள்ள Malone College, அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 2000ஆம் வருடம் Dallas Baptist University அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளித்தது.

அமெரிக்காவின் 'Who's who' நூலில் அவருடைய பெயர் இடம் பெற்றிருக்கிறது. 'வாழ்நாளில் சாதனைகள் புரிந்த மனிதர்' என்று அவரை Cambridge Univeristy குறிப்பிட்டிருக்கிறது. Billy Graham, மதர் தெரேசா ஆகியோருடன் கிறிஸ்தவ நம்பிக்கையை உலக மக்களிடம் பரப்பியவர் என்று Dr.Rochunga Pudaite இன் பெயரையும் இடம் பெறச் செய்திருக்கிறார்கள்.

Colorado மாநிலத்தில் உள்ள 'Colorado Springs' என்ற இடத்தில் தன் மனைவி Mawii உடன், ரோச்சுங்கா புடைட் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு பால், ஜான், மேரி என்ற மூன்று மக்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரப் பிள்ளைகளும்.

இப்போது படத்திற்கு வருவோம்.

'Beyond the Next Mountain' திரைப்படம் 1908இல் ஆரம்பிக்கிறது.

Watkin Roberts என்ற வெள்ளைக்கார இளைஞன் ஒரு அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறான். அவன் ஒரு வேதியியல் விஞ்ஞானி. இந்தியாவின் மணிப்பூரில் உள்ள Hmar பழங்குடி மக்களிடம், பைபிள் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவன் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கிறான். தான் வந்திருக்கும் நோக்கத்தை அவன் கூற, அங்கிருந்த அதிகாரி அவனை பயமுறுத்துகிறார். 'இது நடக்காத விஷயம். 1871ஆம் ஆண்டிலேயே தேயிலை தோட்டங்களில் இருந்து 500 வெள்ளைக்காரர்களின் தலைகளைக் கொய்தவர்கள் Hmar பழங்குடி மக்கள். நீ சென்றால் உயிருடன் திரும்பி வர முடியாது' என்கிறார்.

ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் ஒரு கழுதையின் மீது ஏறி சவாரி செய்தவாறு, அடர்ந்த காட்டின் வழியாக Hmar பழங்குடி மக்கள் வாழும் கிராமங்களை நோக்கி வருகிறான். வழியில் நாட்டு துப்பாக்கிகளுடன் அவனைத் தாக்குகின்றனர். அவன் வரும் வழியில் நெருப்பு வைக்கிறார்கள். அதற்குப் பிறகும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த இளைஞன் தன் பயணத்தைத் தொடர்கிறான்.

ஒரு Hmar இனத்தைச் சேர்ந்த சிறுவன் காட்டில் மரங்களுக்கு மத்தியில் புயலென ஓடுகிறான். Watkin Roberts பாடியவாறு கழுதையுடன் நடந்து வருகிறான். Hmar பழங்குடி மக்கள் காட்டப்படுகிறார்கள். அவர்களைப் பார்த்து 'நான் உங்களின் சகோதரன். நான் கடவுளிடமிருந்து சமாதானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். அது முழுவதும் இந்நூலில் கூறப்பட்டிருக்கிறது' என்று கூறும் அவன் பைபிளை வாசிக்கிறான்.

இப்போது - வருடம் 1934. சிறுவன் Rochungaவின் குரல் ஒலிக்கிறது:

'நான் பிறப்பதற்கு முன்பு இங்கு வந்திருந்த ஒரு வெள்ளைக்காரரைப் பற்றி என்னிடம் என் தந்தை கூறியிருக்கிறார். எங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் அவரை Mr.Young man என்று அழைத்ததாக கூறினார். அந்த வெள்ளைக்காரர் கூறிய கதைகளால், எங்களுடைய வழிமுறைகள் நிரந்தரமாக மாறிவிட்டன என்பதையும் கூறினார். திரு.Young man இருந்த காலத்தில் என் தந்தை தன் பெயரை ஏசுவிற்கு ஒப்புக் கொடுத்து விட்டார் அப்போது அவருக்கு 15 வயது.

இப்போது நான் அவருடைய மகன். இந்த மலைப் பகுதியில் அவர்தான் கிறிஸ்தவ கருத்துக்களை மக்களிடம் பரப்பிக் கொண்டிருப்பவர். என் தந்தையின் பெயர் Chawnga. எங்களுக்கு மட்டுமல்ல- பல காட்டுவாழ் மிருகங்களுக்கும் காடுதான் வீடு. காடுதான் எங்களுக்கு அடைக்கலமாகவும், பலமாகவும் இருக்கிறது.'

தொடர்ந்து காடுகளுக்குள் புலி, யானை, குரங்குகள் ஆகியவை காட்டப்படுகின்றன,

நடுத்தர வயது கொண்ட Hmar பழங்குடி மனிதன் காட்டப்படுகிறான். அவன்தான் Chawnga. அவனை நோக்கி ஓடி வருகிறான் ஒரு எட்டு வயது சிறுவன். அவன்தான் நம் கதாநாயகன்- ரோச்சுங்கா. மலை வாழ் இன சிறுவர்கள் அணியக் கூடிய ஆடைகளை அவன் அணிந்திருக்கிறான். அவனுடைய தந்தையும்.

அவர்களைச் சுற்றிலும் மலைகள். தூரத்தில் தெரியும் ஒரு மலையைச் சுட்டிக் காட்டும் சிறுவன் 'அந்த மலைக்குப் பின்னால் என்ன இருக்கிறது அப்பா?' என்று கேட்க, 'அதற்குப் பின்னால் இன்னொரு மலை...' என்கிறான் அந்தத் தந்தை. தொடர்ந்து 'அங்கு Churachandpur என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு ஒரு சிறிய பள்ளிக் கூடம் இருக்கிறது. நம் கிராமத்தில் பள்ளிக்கூடம் இல்லை. அங்கு போக வேண்டுமானால், 96 மைல்கள் பயணிக்க வேண்டும்' என்று கூறுகிறான். யானைகளிடமிருந்து எப்படி தப்பித்துச் செல்வது என்பதையும் சொல்லித் தருகிறான்.

தன் தந்தையிடம் விடை பெற்றுக் கொண்டு அந்தச் சிறுவன் அந்த கிராமத்தை விட்டு கிளம்புகிறான். கல்வி கற்பதற்காக அங்கிருந்து கிளம்பிச் செல்லும் முதல் சிறுவனே அவன்தான்.


சிறுவன் மலை, அடர்ந்த காடுகளையெல்லாம் கடந்து 'சுரசாந்த்பூர்' என்ற அந்த கிராமத்திற்கு நடந்தே வருகிறான். அங்குள்ள மாணவர்களுக்கு மத்தியில் அவனும் தரையில் அமர்கிறான். ஆசிரியர் ஆங்கில 'ஏ... பி... சி... டி...'யை கற்றுத் தருகிறார். படிப்பு தொடர்கிறது. மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுணர்வுடனும் ஆசிரியர் கற்றுத் தருவதைக் கற்கிறான் ரோச்சுங்கா. ஆசிரியர் ஒரு அட்டையைக் காட்டி அவனை வாசிக்கும்படி கூறுகிறார். அவன். God is our refuge and strength' என்று அருமையாக வாசிக்கிறான். 'உன்னுடைய ஆங்கில அறிவு மிகவும் நன்றாக இருக்கிறது. ஒருநாள் நீ ஒரு நல்ல ஆசிரியராக வருவாய். மலைவாழ் சிறுவர்களுக்கு நீ ஆங்கிலம் கற்றுத் தருவாய்' என்கிறார் ஆசிரியர். அதைக் கேட்டு சந்தோஷத்துடன் புன்னகைக்கிறான் சிறுவன் ரோச்சுங்கா.

தன் கிராமத்தில் உள்ள Hmar இன சிறுவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறான் ரோச்சுங்கா. இப்போது அவன் இளைஞனாக காட்டப்படுகிறான்.

1942ஆம் ஆண்டு.

ஹிட்லர் என்ற மனிதரைப் பற்றி Hmar இன மக்கள் கேள்விப்படுகிறார்கள். அவருக்கு ஆதரவாக ஜப்பான் நாடு இருப்பதையும்.

வெளிநாட்டினர் படைக்களன்களுடன் அந்தப் பகுதியில் காலடி எடுத்து வைக்கின்றனர். உலகப் போர் நடைபெறும் காலம். அவர்களின் முகாம்கள் பல இடங்களில் அமைக்கப்படுகின்றன.

அவர்களுக்கு 'ஆங்கிலம் தெரிந்த ஒரு இளைஞன் அந்தப் பகுதியில் இருப்பது' தெரிய வருகிறது. அது யார்? நம் ரோச்சுங்காதான். தங்களுடைய தகவல்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு அவனை பயன்படுத்துகின்றனர். அதற்குப் பரிசாக அவனுக்குப் பணம் தரப்படுகிறது. ஆரம்பத்தில் மறுக்கும் அவன், பின்னர் அதைப் பெற்றுக் கொள்கிறான். பணத்தை வைத்து பள்ளிக் கூடம், மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படுகிறான் ரோச்சுங்கா.

'சில்சார்' என்றொரு மலைப் பகுதி நகரம். அங்கு புகை வண்டி நிலையம் கூட இருக்கிறது. காந்தி, நேரு ஆகியோரின் படங்களை ஒரு மனிதன் விற்றுக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் ரோச்சுங்காவும் இருக்கிறான். அவனிடமிருந்து கற்று, ரோச்சுங்கா சிகரெட் விற்கிறான். காசுகளைக் கொடுத்து மக்கள் சிகரெட்டுகளை வாங்குகிறார்கள். அப்போது அங்கு வருகிறான் ரோச்சுங்காவின் தந்தை Chawnga.

'நான் ராணுவ வீரர்களுடன் இருந்தேன். பணம் சம்பாதித்தேன். நாலணா சம்பாதிப்பதைப் பற்றி நீங்கள் கூறியிருக்கிறீர்கள். இப்போது என்னிடம் 100 ரூபாய் இருக்கிறது. நான் சென்ற மாதம் 'ஷில்லாங்' நகரத்தைப் பார்த்தேன். 'இம்பால்' நகரத்திற்கு நான் பேருந்தில் பயணம் செய்தேன். பேருந்து ஓட்டுநரிடம் பணத்தைக் கொடுத்தால், சக்கரங்கள் உங்களை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும், என்று சந்தோஷத்துடன் ரோச்சுங்கா கூற, 'போர் முடிவடைந்து விட்டது. நீ போய் டில்லியில் பிரதம அமைச்சரைப் பார். கடவுள் உனக்கு உதவுவார். நான் மலையில் வேண்டிக் கொள்வேன்' என்று கூறுகிறான் அவனுடைய தந்தை.

இப்போது டில்லி-

பிரதம அமைச்சரின் மாளிகை-

காவலாளியிடம் பேண்ட், கோட்டுடன் இருக்கும் ரோச்சுங்கா உள்ளே செல்வதற்கு அனுமதி கேட்கிறான். 'அனுமதிச் சீட்டு இருக்கிறதா?' என்று அவன் கேட்க, 'இல்லை' என்கிறான் ரோச்சுங்கா. அவனுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அடுத்த நிமிடம் தான் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, Hmar பழங்குடியினரின் ஆடைகளுடன் உள்ளே செல்கிறான் ரோச்சுங்கா.

உள்ளே-

கோட்டில் ரோஜா மலர் அணிந்த கோலத்துடன் அமர்ந்திருக்கிறார் பிரதம அமைச்சர் ஐவஹர்லால் நேரு. 'நான் பல்கலைக் கழகத்தில் சேர்வதற்கு அரசாங்க உதவிக்காக மனு செய்தேன். எனக்கு அதற்கான தகுதியில்லை என்று பதில் வந்திருக்கிறது. Hmar இனம், மக்கள் தொகை கணக்கெடுப்பிலேயே இல்லையாம்' என்கிறான் ரோச்சுங்கா. Hmar இனம் இனி கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், ரோச்சுங்காவிற்கு அரசாங்கத்தின் பண உதவி உடனடியாக கிடைக்க ஆவன செய்வதாகவும் கூறுகிறார் நேரு.

அவ்வளவுதான்-

வெளியே வரும் ரோச்சுங்கா துள்ளிக் குதித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்குவதைப் பார்க்க வேண்டுமே!

மலைவாழ் மக்கள் அமர்ந்திருக்கும் கூட்டத்தில், ரோச்சுங்கா ஒரு அழகான இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் பெயர் Mawii. அவளும் வைத்த கண் எடுக்காது, ரோச்சுங்காவைப் பார்க்கிறாள்.

அலகாபாத் பல்கலைக் கழகம்-

அங்கு கற்றுக் கொண்டிருக்கும் ரோச்சுங்கா ஷில்லாங் செயின்ட். மேரீஸ் கல்லூரியில் படிக்கும் Mawiiக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறான். 'முன்பு நாங்கள் எதிரிகளின் தலைகளை வெட்டினோம். இப்போது பகைவர்களுக்காக பிரார்த்திக்கிறோம். முன்பு பலவீனர்களாக இருந்தோம். இப்போது பலசாலிகளாக இருக்கிறோம். முன்பு தற்கொலைகள் எங்களுக்கிடையே அதிகமாக இருக்கும். இப்போது அது மிகவும் அரிதாகி விட்டது. மாற்றங்கள் வெள்ளைக்காரர்களாலோ அடக்கு முறைகளாலோ, சாட்டைகளாலோ, துப்பாக்கிகளாலோ வரவில்லை. ஒரே ஒரு புத்தகத்திலிருந்துதான் வந்தது...' என்று அவன் அதில் எழுதுகிறான். அதற்கு அவள் பதில் எழுதுகிறாள். அவன் அதை ஆர்வத்துடன் படிக்கிறான்.

பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. தன்னுடைய மணிப்பூர் மலைப் பகுதியைப் பற்றியும், Hmar பழங்குடியினரைப் பற்றியும் நெஞ்சுருக பேசுகிறான் ரோச்சுங்கா.

அவனுக்கு ஸ்காட்லேண்டில் போய் படிப்பதற்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும் தகவல் வருகிறது.

இப்போது ஸ்காட்லேண்ட்-

ஹீப்ரு, க்ரேக்க மொழிகளை இரவு, பகல் பாராமல் கற்கிறான் ரோச்சுங்கா. 'முழு உலகத்துடன் ஒப்பிடும்போது, நாம் எவ்வளவு சிறியவர்களாக இருக்கிறோம்!' என்று தன் காதலி Mawiiக்கு அவன் கடிதம் எழுதுகிறான்.

அமெரிக்காவின் சிக்காகோ நகரம்-

டாக்டர் Bob Pierce அவனுடைய படிப்புச் செலவை ஏற்றுக் கொள்கிறார். அவன் ரெஸ்ட்டாரெண்டில் சமையல் செய்து கொண்டும். தட்டுகளைக் கழுவிக் கொண்டும் படிப்பைத் தொடர்கிறான். இரவில் நீண்ட நேரம் அமர்ந்து படிக்கிறான், எழுதுகிறான், மொழி பெயர்க்கிறான். தன் பேராசிரியரிடம் அவன் 'எங்கள் இன மக்களுக்கு பேச்சு மொழி மட்டுமே இருக்கிறது. எழுத்து மொழி இல்லை. நான் பைபிளை Hmar மொழியில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறேன். இது மட்டுமே எங்கள் மக்களை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்' என்கிறான் ரோச்சுங்கா. மூன்று வருடங்களாக அவன் செய்த மொழி பெயர்ப்பு முடிவுக்கு வருகிறது. அவன் மொழி பெயர்த்த பைபிள் அவனுக்கு முன்னால் மேஜையில் இருக்கிறது.

தன்னுடைய மொழி பெயர்ப்பை லண்டனிலிருக்கும் 'British and Foreign Bible Society' என்ற அமைப்பிற்கு கப்பல் மூலம் அனுப்புகிறான் சந்தோஷத்துடன் ரோச்சுங்கா.


கெனடாவின் Torontoவிலிருந்து ஒரு கடிதம் அவனைப் பற்றி விசாரித்து வருகிறது. கடிதத்தை எழுதியிருப்பவர் Watkin Roberts., அடுத்த சில நாட்களில் அவன் புகை வண்டி மூலம் டொரான்டோவிற்குப் பயணமாகிறான்.

Watkin Roberts இன் அறைக்கு முன்னால் அவன் காத்திருக்கிறான். அப்போது தான் சிறுவனாக இருந்த காலத்தை அவன் நினைத்துப் பார்க்கிறான். தன் கிராமத்திற்கு எந்தக் காலத்திலோ வந்து, பைபிளை மக்களிடம் பரப்பிய Mr.Young Manஐ அவன் சந்திக்கப் போகிறான்- வாழ்க்கையிலேயே முதல் தடவையாக.

அப்போது பக்கவாதத்தால் ஒரு பக்கம் பாதிக்கப்பட்ட ஒரு பெரியவர் அங்கு மாடிகளில் ஏறி வருகிறார். அவர்தான் Watkin Roberts. அவருடன் தேநீர் அருந்தியவாறு 'கடவுள் வெள்ளைக்காரர் அல்ல என்று கூறியவர் நீங்கள். நான் Chawngaவின் மகன். காட்டில் இருக்கும் ஒவ்வொரு இலையும் உங்களின் பெயரைக் கூறும். இந்தியாவின் சுதந்திரம் எங்களுக்கு மத சுதந்திரத்தை அளித்திருக்கிறது. இப்போது எங்களின் மலையில் 100 தேவாலயங்கள் இருக்கின்றன. நாங்கள் உங்களின் பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம்' என்று கூறும் ரோச்சுங்கா, பாடல் வரிகளைப் பாடுகிறான். அவனையே புன்னகையுடன் பார்க்கிறார் Watkin Roberts.

மணிப்பூர் மலைப் பகுதி-

ஒரு பெரிய பார்சல் வர, அதை படகில் வைத்து செலுத்துகிறான் Chawnga. அவை முழுவதும் பைபிள்கள்- Hmar மொழியில் மொழி பெயர்க்கப்பட்டவை.

உயரமான மலைப் பகுதி-

கையில் 'புதிய ஏற்பாடு' நூலுடன் உற்சாகத்துடன் நடந்து செல்கிறான் Chawnga. உணர்ச்சி வசப்பட்டு, தலையைத் தரையில் வைத்து, மண்டி போட்டு வணங்குகிறான். கடவுளுக்கு அவன் நன்றி கூறுகிறான்- அவன் ஆசைப்பட்டது அதுதானே!

ரோச்சுங்கா கேட்டுக் கொண்டபடி, தன் அண்ணனின் மூலம் தந்தையின் அனுமதியை, அவனைத் திருமணம் செய்து கொள்வதற்கு பெற்று விடுகிறாள் Mawii. அவள் காத்திருக்க, ரோச்சுங்கா வருகிறான். இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது.

பிரதம அமைச்சரிடமிருந்து ரோச்சுங்காவிற்கு ஒரு கடிதம் வருகிறது. மறுநாள் மாலை 3 மணிக்கு அவனை வரும்படி அவர் கூறியிருக்கிறார். பிரதம அமைச்சர் நேருவை அவன் போய் பார்க்கிறான். மலை வாழ் மக்கள் பயன்படும் வகையில் அவனுக்கு அரசாங்கத்தின் சார்பாக ஒரு பொறுப்பான பதவியை வழங்க தான் திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை என்றும் அவர் கூறுகிறார். ஆனால், குடியரசுத் தலைவர் அதை நிராகரித்து விடுகிறார். ஸ்காட்லேண்ட், அமெரிக்கா ஆகிய இடங்களில் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கற்றதாலும், பைபிளை Hmar மொழிக்கு மொழி பெயர்த்ததாலும், அவனை வெள்ளைக்காரர்களின் தூதுவன் என்று அவர் குற்றம் சாட்டுகிறார். அந்த மன வேதனையுடன், அவன் அங்கிருந்து வெளியேறுகிறான்.

பசுமையான மலைப் பகுதி. ரோச்சுங்கா நின்றிருக்கிறான். Mawii அவனை நோக்கி வருகிறாள். அவனுக்கு அருகில் அவள் புன்னகையுடன் வர, இருவரும் சந்தோஷத்துடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் படம் முடிவடைகிறது.

இப்போது வர்ணனையாளரின் குரல் மட்டும்-

ரோச்சுங்காவும், Mawiiயும் சேர்ந்து 80 பள்ளிக் கூடங்களையும், ஒரு மருத்துவமனையையும், ஒரு Vocational Training Centreஐயும் வட கிழக்கு இந்திய மக்களுக்காக உண்டாக்கினார்கள்.

இன்று 85 சதவிகித Hmar இன மக்களுக்கு படிக்கவும், எழுதவும் தெரியும்.

1972ஆம் ஆண்டிலிருந்து பலரின் ஆதரவுடன், கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து இலட்சக்கணக்கான பைபிள்களை இந்தியாவின் பெரும் நகரங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல- பாகிஸ்தான், பர்மா, இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், தாய்வான், தாய்லாண்ட், சிங்கப்பூர், ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கும் இலவசமாக அனுப்பி வைத்தனர்.

அதற்கு என்றுமே முடிவு இல்லை. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.