Logo

பேபெல்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4301
Babel

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பேபெல் – Babel

(ஹாலிவுட் திரைப்படம்)

2006

ஆம் ஆண்டில் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம். திரைப்பட விமர்சகர்களாலும், பார்வையாளர்களாலும் இன்று வரை தலையில் வைத்து கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று. Amores Perros, 21 grams ஆகிய படங்களை இயக்கிய Alejandro Gonzalez inarrituதான் இப்படத்தின் இயக்குநர்.

ஒரு படத்திற்கு மிகச் சிறந்த திரைக்கதை அமைப்பது எப்படி என்பதற்கு உதாரணமாக இப்படத்தை கூறலாம்.

 'Babel' படத்தின் கதை நான்கு நாடுகளில் நடைபெறுகிறது. நான்கு நாடுகளிலும் வேறு வேறு சம்பவங்கள் நடைபெறுகின்றன. அந்தச் சம்பவங்களில் வருபவர்கள் ஒருவரையொருவர் பார்க்காதவர்கள். ஆனால் கதையுடன் அவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறது- அவர்களுக்கே தெரியாமல். அதுதான் படத்தின் தனித்துவமே. இப்படியெல்லாம் கூட ஒரு திரைக்கதை அமைக்க முடியுமா என்ற வியப்பு நமக்கு படத்தைப் பார்க்கும்போது உண்டாகும். 

இப்படத்தின் கதை மொராக்கோ, ஜப்பான், அமெரிக்கா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.

 

மொராக்கோ

 

மொராக்கோவின் விலகி இருக்கும் ஒரு பழமையான கிராமப் பகுதி. இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் இருக்கின்றன. ஆடுகள் மேய்க்கும் அப்துல்லா என்ற ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதன் ஒரு சக்தி படைத்த துப்பாக்கியை விலைக்கு வாங்கிக் கொண்டு வருகிறான். அவன் விலைக்கு வாங்கியது தன்னுடைய நண்பனான ஹஸன் இப்ராஹிம் என்ற மனிதனிடமிருந்து, தன் ஆடுகளைப் பிடிப்பதற்காக வரும் நரிகளைச் சுடுவதற்காக அவன் அதை வாங்குகிறான். 

அந்த துப்பாக்கியை அவன் தன்னுடைய இரு மகன்களான யூஸுஃப்பிடமும், அஹ்மத்திடமும் தருகிறான். அவர்கள் ஆடுகளை மேய்க்கச் செல்லும்போது தங்களுடன் துப்பாக்கியையும் எடுத்துச் செல்கின்றனர். அந்தச் சகோதரர்கள் ஒற்றுமையுடன் இருந்ததே இல்லை. இளையவன் அஹமத், தன் சகோதரி ஆடை மாற்றுவதை மறைந்து நின்று பார்ப்பதைப் பார்த்த அண்ணன் அவனைக் கண்டிக்கிறான். அந்த துப்பாக்கியின் குண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும் என்பது தெரிந்த அந்தச் சகோதரர்கள் அதை சோதித்துப் பார்க்க நினைக்கின்றனர். முதலில் மலைப் பகுதியில் இருக்கும் பாறைகளை அவர்கள் சுட்டுப் பார்க்கின்றனர். மலையின் கீழ்ப் பகுதியிலிருக்கும் சாலையில் செல்லும் ஒரு காரை குறி வைக்கின்றனர். பிறகு காருக்கு எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தைக் குறி வைக்கின்றனர். அந்த பேருந்தில் மேற்கு திசை நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள்  பயணிக்கின்றனர்.  யூஸுஃப் குறி வைத்த குண்டு பேருந்தின் மீது பாய்கிறது. அதில் பயணம் செய்த சூஸன் ஜோன்ஸ் என்ற பயணி பலமான காயத்திற்கு உள்ளாகிறாள். அமெரிக்காவிலிருக்கும் சாண்டிகோ என்ற ஊரிலிருந்து அவள் விடுமுறையில் தன் கணவன் ரிச்சர்ட் ஜோன்ஸுடன் சுற்றுலா வந்திருக்கிறாள். தாங்கள் எவ்வளவு பெரிய மோசமான காரியத்தைச் செய்து விட்டோம் என்பதைப் புரிந்து கொண்ட அந்த இரு வெகுளித்தனமான சிறுவர்கள் அந்த துப்பாக்கியை அந்த இரவு நேரத்தில் மலையிலேயே ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு, அங்கிருந்து ஓடி தப்பிக்கிறார்கள். 

துப்பாக்கி குண்டு பாய்ந்து அமெரிக்க பெண் பேருந்தில் பாதிக்கப்பட்ட சம்பவம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. அமெரிக்கா முழுவதும் இது பேசப்படும் விஷயமாக மாறுகிறது. அது தீவிரவாதிகள் நடத்திய ஒரு பயங்கர செயல் என்றும், உடனடியாக மொராக்கோ அரசாங்கம் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க வேண்டுமென்றும் அமெரிக்க அரசாங்கம் கேட்டுக் கொள்கிறது. 

ஹஸனிடம் ஒரு துப்பாக்கி இருந்தது என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டு மொராக்கோ காவல்துறை, அவனின் வீட்டிற்கு வருகிறது. அவனிடமும், அவனுடைய மனைவியிடமும் கேள்வி கேட்டு போலீஸ் துளைக்கிறது. தனக்கு அந்த துப்பாக்கியை தந்தவர் ஜப்பானைச் சேர்ந்த ஒரு மனிதர் என்றும், சமீபத்தில் அதை அப்துல்லா என்ற தன் நண்பனுக்கு விற்று விட்டேன் என்றும் அவன் கூறுகிறான். விசாராணை நடத்தும் போலீஸ்காரர்களை சாலையில் பார்த்து பயந்தோடும் அந்த இரு சிறுவர்களும் தாங்கள் என்ன செய்து விட்டோம் என்பதை தங்களுடைய தந்தை அப்துல்லாவிடம் ஒப்புக் கொள்கிறார்கள். 


தாங்கள் சுட்டதில் அந்த அமெரிக்கப் பெண் இறந்து விட்டாள் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மூவரும் தங்களுடைய வீட்டிலிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கிறார்கள். போகும்போது தங்களுடன் துப்பாக்கியையும் எடுத்துச் செல்கின்றனர். மலைப் பகுதியில் ஏறிச் செல்லும் அவர்களைப் பார்த்து, போலீஸ்காரர்கள் சுடுகிறார்கள். தம்பி போலீஸ்காரர்களால் காலில் சுடப்பட, ஆவேசமான  யூஸுஃப் பதிலுக்குச் சுடுகிறான். அதில் ஒரு போலீஸ்காரர் தோளில் சுடப்படுகிறார். அவரால் நகரக் கூட முடியவில்லை. அவர்களின் தந்தை ஆத்திரமும், கவலையும் அடைய, யூஸுஃப் காவல்துறையின் முன்னால் வந்து நின்று, நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒப்புக் கொள்கிறான். தங்கள் எல்லோரையும் மன்னித்துவிடும்படியும், தன் தம்பிக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்க வேண்டுமென்றும் அவன் கேட்டுக் கொள்கிறான். அதற்குப் பிறகு அவர்களின் கதை என்ன என்பது நமக்குக் காட்டப்படவில்லை. 

இப்போது கதை ரிச்சர்ட், சூஸன் ஆகியோரை நோக்கி நகர்கிறது. அந்த தம்பதிகளுக்கிடையே சில பிரச்சினைகள்... கருத்து வேறுபாடுகள்... கவலைகள். அவர்களின் மூன்றாவது மகன் குழந்தைப் பருவத்தில் இறந்துவிட, அவர்கள் அதற்காக ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்கின்றனர். சூஸன் பேருந்தில் சுடப்பட, உடனடியாக அருகிலிருக்கும் கிராமத்திற்கு பேருந்தைத் திருப்பும்படி ஓட்டுநருக்கு கட்டளை பிறப்பிக்கிறான் ரிச்சர்ட். `டாஸாரின்' என்ற அந்த குக்கிராமத்தில் எந்தவித மருத்துவ வசதியும் இல்லை. அங்கிருக்கும் ஒரு கால்நடை மருத்துவர் இரத்தம் வெளியே வராமல் சூஸனுக்கு தையல் போடுகிறார். மற்ற பயணிகள் பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள். நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கே மீண்டும் தாக்குதல் நடைபெற்று விடுமோ என்று அஞ்சும் பயணிகள், அங்கிருந்த செல்ல துவங்குகின்றனர். ஆனால், சூஸன் தற்போது அவர்களுடன் பயணிக்க முடியாது. அவளுடைய உடல்நிலை அதற்கேற்ற நிலையில் இல்லை. ஆம்புலன்ஸ் வந்து சேரும் வரை, அவர்களை இருக்கும்படி கேட்டுக் கொள்கிறான் ரிச்சர்ட். அங்கிருந்து  ஒரே ஒரு தொலைப்பேசியில் பல முறை தொடர்பு கொண்டும், வாக்குறுதி அளிக்கப்பட்டும், இறுதி வரை ஆம்புலன்ஸ் வரவேயில்லை. ரிச்சர்ட் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்க, மற்ற பயணிகளுடன் பேருந்து அந்த கிராமத்திலிருந்து கிளம்புகிறது. ரிச்சர்டுக்கு துணையாக இருக்கும் ஒரே உயிர்- பேருந்தில் வழிகாட்டியாக வந்த அன்வர். அமெரிக்காவுக்கும், மொராக்கோவிற்கும் இடையே இருக்கக் கூடிய அரசியல் பிரச்சினைகளால், உடனடி உதவி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. எனினும், இறுதியாக அமெரிக்க தூதரகத்தின் உதவியால் ஒரு ஹெலிகாப்டர் வந்து சேர்கிறது. அமெரிக்க மருத்துவமனையில் ஐந்து நாட்கள் இருந்த சூஸன் குணமாகி, வீட்டிற்கு வருகிறாள்.

 

ஜப்பான்

 

இப்போது கதை ஜப்பானுக்கு நகர்கிறது. ஜப்பானைச் சேர்ந்த சீக்கோ என்ற இளம்பெண் காட்டப்படுகிறாள். கேட்கும் சக்தியற்ற அவளை எந்த இளைஞனும் கண்டு கொள்வதில்லை. யாராவது தன்னை பார்க்க மாட்டார்களா என்று ஏங்குகிறாள் அவள். அதற்காக உடல் அவயவங்களை வெளிக்காட்டி, இளைஞர்களைச் சுண்டி இழுப்பதற்குக் கூட அவள் முயல்கிறாள்.

அவள் தன்னுடைய தந்தையுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கிறாள். அவளுடைய தாய் மரணமடைந்து விட்டாள். அந்த பாதிப்பிலிருந்து அவள் இன்னும் விடுபடவில்லை. ஒரு நாள் அவள் வீட்டில் தனியே இருக்க, இரு புலனாய்வு அதிகாரிகள் அங்கு வருகின்றனர். தன் தாயின் மரண சம்பவத்தில் தன் தந்தை மீது சந்தேகப்பட்டு விசாரிக்க அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்ட அந்த இளம்பெண், தன் தாய் மாடியிலிருந்து கீழே குதித்தபோது தந்தை தூங்கிக் கொண்டிருந்ததாகவும், தாய் கீழே விழுந்து சாவதை தன் கண்களால் நேரடியாக பார்த்ததாகவும் கூறுகிறாள். அதற்குப் பிறகுதான் அவளுக்கே தெரிகிறது- அவளுடைய தந்தை யாஸுஜிரோ வேட்டையாடும் ஒரு பயணத்தை மொராக்கோவிற்கு மேற்கொண்டதைப் பற்றி விசாரிப்பதற்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற உண்மையே. யாஸுஜிரோ வேட்டையாடுவதில் மிகுந்த ஆர்வம்  கொண்டவர். மொராக்கோவிற்கு வேட்டைக்காக பயணம் சென்றிருந்த போது, தனக்கு உதவியாக இருந்த ஹஸன், என்ற மனிதனுக்குப் பரிசாக அவர் ஒரு துப்பாக்கியைத் தருகிறார். அந்த துப்பாக்கிதான் படத்தின் ஆரம்பத்தில் ஹஸன் அப்துல்லாவிற்கு விற்ற துப்பாக்கி.

புலனாய்வு செய்ய வந்தவர்களில் மாமியா என்ற இளைஞனை சீக்கோவிற்கு மிகவும் பிடித்து விடுகிறது. தன் உடலிலிருந்த ஆடைகளை நீக்கி விட்டு, அவனை எப்படியும் அடைய அவள் முயற்சிக்கிறாள். ஆனால், தான் அதற்கெல்லாம் சபலமடையக் கூடியவன் அல்ல என்பதை அவன் நிரூபிக்கிறான். அவளுடைய நிலையை நினைத்து அவன் கவலை கொள்கிறான். அவளை அவன் தேற்ற, அவள் கண்ணீர் விட்டு அழுகிறாள். ஒரு குறிப்பை எழுதி அவனிடம் கொடுக்கும். அவள், அங்கிருந்து சென்ற பிறகுதான் அதை அவன் வாசிக்க வேண்டும் என்கிறாள். தான் துப்பாக்கியைப் பரிசாகக் கொடுத்ததாக  கூறும் யாஸுஜிரோவிடம், மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்ட அவருடைய மனைவியின் மரணத்திற்காக தான் வருத்தப்படுவதாக மாமியா கூற, `என் மனைவி தன் தலையில் சுட்டுக் கொண்டு இறந்து விட்டாள். அந்த உடலை முதலில் பார்த்தவளே சீக்கோதான். இதை நான் போலீஸிடம் பல தடவை கூறி விட்டேன்' என்கிறார்.

சீக்கோ மாடியில் இப்போதும் நிர்வாண நிலையில் நின்று கொண்டிருக்கிறாள். அவளின் தந்தை வீட்டிற்குள் வருகிறார். இருவரும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த வீட்டிலிருந்து கிளம்பிய மாமியா, ஒரு ரெஸ்ட்டாரெண்ட்டில் நின்று, சீக்கோ என்ன எழுதியிருக்கிறாள் என்பதை வாசிக்கிறான். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது நமக்கு காட்டப்படவில்லை. 


அமெரிக்கா, மெக்ஸிகோ

 

இப்போது படம் அமெரிக்காவிற்கும், மெக்ஸிகோவிற்கும் நகர்கிறது. கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியான சான்டிகோவில் இருக்கும் ஒரு மாடி வீட்டில் அமேலியா என்ற நடுத்தர வயதைத் தாண்டிய பணிப் பெண் இருக்கிறாள். அவளுடன் இரு சிறுவர்கள். அவர்கள் இருவரும் ரிச்சர்ட்- சூஸன் தம்பதிகளின் மகன்கள். அது ரிச்சர்டின் வீடு. மொராக்கோவிற்கு பயணம் சென்ற அவர்கள், அமேலியாவின் பாதுகாப்பில் தங்களின் பிள்ளைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அமேலியாவின் மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு அவள் செல்ல வேண்டும். ஆனால், மொராக்கோவில் சூஸனுக்கு குண்டு பாய்ந்து விட்டதால், அந்த தம்பதிகள் குறிப்பிட்ட நாளில் திரும்பி வர முடியவில்லை. எங்கே தன் மகனின் திருமணத்திற்குச்  செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற பதைபதைப்புடன் இருக்கிறாள் அமேலியா. பிள்ளைகளை என்ன செய்வது என்ற பதட்டத்துடன் ரிச்சர்ட் தொலைபேசியில் அறிவுரை கேட்க, அந்த திருமணத்தையே ரத்து செய்யும்படி அவன் கூறுகிறான். அவனுடைய அனுமதியே இல்லாமல், அமேலியா தன் மகனின் திருமணம் நடக்கும் மெக்ஸிகோவில் உள்ள டிஜுவானா என்ற இடத்திற்கு குழந்தைகளுடன் செல்ல தீர்மானிக்கிறாள். அவளின் உறவினரான சாண்டியாகோ தன் காரில் எப்படியோ மெக்ஸிகோவிற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகிறான்.

மெக்ஸிகோவின் பழக்க வழக்கங்கள் புதுமையாக இருக்கின்றன குழந்தைகளுக்கு. திருமண நிகழ்ச்சிகள் மாலையைத் தாண்டியும் நீடிக்கின்றன. இரவில் அங்கு தங்காமல், பிள்ளைகளுடன் மீண்டும் சான்டியாகோவின் காரிலேயே அமெரிக்காவிற்குத் திரும்ப தீர்மானிக்கிறாள் அமேலியா. சான்டியாகோ நன்கு குடித்திருக்கிறான். அவனுடைய காரில் அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் ஏன் இருக்கிறார்கள் என்று எல்லைப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகம்  கொள்கிறார்கள்.  நான்கு பேருக்குமான பாஸ்போர்ட்கள் அமேலியாவிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியே பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கூடிய பெற்றோரின் அனுமதிச் சீட்டு அவளிடம் இல்லை. அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்க, மதுவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் சான்டியாகோ, காரை மிகவும் வேகமாக கிளப்புகிறான். ஒரு பாலைவனப் பகுதியில் அமேலியாவையும், குழந்தைகளையும் இறக்கிவிட்டு, அவன் எல்லைப் பகுதி அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக பாய்ந்து செல்கிறான்.  அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் என்பது படத்தில் காட்டப்படவில்லை.

நீர், உணவு எதுவுமே இல்லாமல் அந்த இரவு நேரத்தை அந்த பாலைவனப் பகுதியிலேயே செலவிடுகின்றனர் அமேலியாவும், இரு சிறுவர்களும். உடனடியாக ஏதாவது உதவி கிடைக்கவில்லையென்றால், தாங்கள் எல்லோரும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அமேலியா, சிறுவர்களை அந்த இடத்தை விட்டு வேறெங்கும் நகரவே கூடாது என்று கூறிவிட்டு உதவி தேடிச் செல்ல, அவளை ஒரு அமெரிக்க காவல்துறை அதிகாரி பார்த்து விடுகிறார். பின்னர், அவளுடன் அவர் குழந்தை விடப்பட்ட இடத்திற்குச் செல்ல, அங்கு அவர்கள் இல்லை... அமேலியா மீண்டும் எல்லைப் பகுதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்பதும், விஷயத்தைக் கேள்விப்பட்ட ரிச்சர்ட் மிகுந்த ஆத்திரம் அடைந்து விட்டான் என்பதும், அவளை வேலையிலிருந்து அவன் நீக்கி விட்டான் என்பதும் தெரிய வருகிறது. எனினும், அவள் மீது அவன் குற்றச்சாட்டு எதுவும் சுமத்தவில்லை. 

அதைத் தொடர்ந்து இதுவரை சட்டத்திற்கு விரோதமாக வேலை பார்த்ததால், அமெரிக்காவிலிருந்து அவள் வெளியேற்றப்படுகிறாள். தான் அமெரிக்காவில் 16 வருடங்கள் வேலை பார்த்ததாகவும், அந்த குழந்தைகளை தன் பிள்ளைகள் என்றே தான் நினைத்ததாகவும் கூறுகிறாள் அமேலியா. அது எதுவுமே அவளுக்கு கை கொடுக்க வில்லை. படம் முடியப் போகும் நிலையில், மெக்ஸிகோவின் `டீஜுவானா'வின் எல்லையில், திருமணத்திற்காக தான் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடை பாலைவனத்தில் சிக்கிக் கொண்டதால் கிழிந்து, அழுக்கடைந்து போய் காணப்பட்ட கோலத்துடன் அமேலியா தன் மகனை கண்ணீருடன் சந்திக்கிறாள்.

  இந்த படத்தில் Richard Jones ஆக நடித்தவர் Brad Pitt. Susan Jones கதாபாத்திரத்தில் Cate Blanchett.. இருவரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். Amelia வாக Adriana Barraza. என்ன இயல்பான நடிப்புத் திறமை!

ஜப்பானிய இளம்பெண் சீக்கோவாக நடித்த Rinko Kikuchi- ஒரு அழகுச் சிலையே தான்!

 'Babel' படம்  இசைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. (இப்போது கூட இசை காதில் ஒலிக்கிறது.) 

கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான விருது, படத்தின் இயக்குநர் Alejandro விற்கு வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை வைத்து, ஒரு நேர்த்தியான கதையை உருவாக்கி, அதை மிகச் சிறந்த படமாக இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக இயக்குநர்  Alejandroவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.