Logo

சினிமா பாரடைஸோ

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4578
Cinema Paradiso

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

சினிமா பாரடைஸோ – Cinema Paradiso

(இத்தாலி திரைப்படம்)

லக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்களைப் பார்க்கும் ரசிகர்களால் எப்போதும் கொண்டாடப்படும் படம் 'சினிமா பாரடைஸோ'.

1988ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் Giuseppe Tornatore. படத்தின் கதையை எழுதியவரும் அவரேதான்.

155 நிமிடங்கள் ஓடக் கூடிய படமிது.

சிறிய ஒரு ஊரில் பிறந்து வளர்ந்த ஒரு சிறுவன் படிப்படியாக வளர்ந்து, இத்தாலியின் புகழ் பெற்ற ஒரு திரைப்பட இயக்குநராக எப்படி ஆகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. படவுலகில் முத்திரை பதிக்கும் பெரிய ஆளாக வர வேண்டும் என்று மனதில் ஆசைப்படும் ஒவ்வொருவரும், கட்டாயம் பார்க்க வேண்டிய படமிது.

படத்தின் கதை இதுதான்:

ரோம் நகரத்தில், 1980இல், புகழ் பெற்ற திரைப்பட இயக்குநராக இருப்பவர் Salvatore Di Vita. அவர் ஒரு நாள் இரவில் தன் வேலைகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பி வருகிறார். வீட்டில் நல்ல தூக்கத்தில் இருக்கும் அவருடைய சினேகிதி, ஊரிலிருந்து அவருடைய தாய் ஃபோன் பண்ணியதாகவும், Alfredo என்ற மனிதர் இறந்து விட்டார் என்ற தகவலைக் கூறியதாகவும் கூறுகிறாள். ஆல்ஃப்ரெடோவின் கிராமமான Giancaldo, Sicilyயில் இருக்கிறது. அங்கிருந்து Salvatore ரோமிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டன. 'யார் அந்த ஆல்ஃப்ரெ டோ? ' என்று அவள் கேட்க, தன்னுடைய சிறு வயது நினைவுகளுக்குச் செல்கிறார் சால்வடோர்.

இரண்டாவது உலகப் போர் முடிந்து சில வருடங்கள் கடந்தோடிய காலம். அந்த கிராமத்தில் மிகவும் சுறுசுறுப்பான 6 வயது சிறுவன் சால்வடோர். அவனுடைய தந்தை போரில் இறந்து விட்டார். ஏழை விதவைத் தாய்க்குப் பிறந்த அறிவாளி சிறுவன் அவன். அவனுக்கு ஒரு சகோதரியும் இருக்கிறாள். அவனுடைய செல்லப் பெயர் டோடோ (Toto), அவனை அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெயரில்தான் அழைப்பார்கள்.

சிறுவன் டோடோவிற்கு சினிமா மீது அதிக மோகம். அந்த ஊரில் 'Cinema Paradiso' என்ற பெயரில் ஒரு திரையரங்கம் இருக்கிறது. பள்ளிக் கூடத்தில் இருக்கும் நேரம் போக, அவன் பெரும்பாலும் அந்தத் திரையரங்கத்தில்தான் இருப்பான். அங்கு ப்ரொஜக்டர் ஆப்பரேட்டராக இருப்பவர் தந்தை நிலையில் இருக்கும் ஆல்ஃப்ரெடோ. அவருக்கு சிறுவன் டோடோவின் மீது அளவற்ற அன்பு. அவனுடைய சினிமா ஆசையைப் பார்த்து அவர் வியப்படைகிறார்... சந்தோஷப்படுகிறார். ப்ரொஜக்டர் இருக்கும் அறையிலிருந்தே திரையில் ஓடும் படங்களைப் பார்ப்பதற்கு அவர் அவனை அனுமதிக்கிறார். அதன் மூலம் அவன் பல வகையான படங்களையும் பார்க்கிறான். படம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்கள் சில நேரங்களில் கூச்சல் போடுவார்கள். காரணம்- படம் திடீரென்று 'அதிர்ந்து' வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். அதன் காரணம் என்ன?

அந்த ஊரில் ஒரு பாதிரியார். எந்தப் படமாக இருந்தாலும், மக்களுக்கு திரையிட்டு காண்பிப்பதற்கு முன்னால், அதை திரையரங்கில் பாதிரியார் மட்டும் தனியே அமர்ந்து பார்ப்பார், முத்தக் காட்சிகளோ. படுகையறைக் காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளோ அதில் இருந்தால், அவற்றை நீக்கி விடும்படி அவர் ஆல்ஃப்ரெடோவிடம் கூறுவார். அதன்படி ஆல்ஃப்ரெடோவும் செய்வார்.

அவ்வாறு வெட்டப்பட்ட காட்சிகள் ப்ரொஜக்டர் அறையின் தரையில், ஒரு ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். 'அவற்றில் என்ன இருக்கிறது? அதை நான் எடுத்துக் கொள்ளட்டுமா? ' என்று கேட்கும் டோடோவிடம் 'இப்போது இல்லை. பின்னர் ஒருநாள் உனக்கு நான் இவற்றைத் தருவேன்' என்கிறார் ஆல்ஃப்ரெடோ.

டோடோ படிக்கும் பள்ளிக் கூடத்தில் தேர்வு நடக்கிறது. அதில் வயதான சிலரும் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் ஆல்ஃப்ரெடோவும் ஒருவர். அவருக்கு ஒரு கேள்விக்கு சரியான பதில் தெரியவில்லை. அருகில் அமர்ந்திருக்கும் டோடோவிடம் 'பதில் என்ன?' என்று கேட்கிறார். 'நான் கூறுவேன். அதற்கு பதிலாக எனக்கு ப்ரொஜக்டரை இயக்குவது எப்படி என்பதைக் கற்றுத் தர வேண்டும்' என்கிறான் டோடோ. அதற்கு அவர் சம்மதிக்க, சரியான பதிலை டோடோ கூறுகிறான்.

தான் வாக்களித்தபடி, சிறுவன் டோடோவிற்கு ப்ரொஜக்டரில் ஃபிலிம் ரோலை எப்படி மாட்டுவது, அதை எப்படி இயக்குவது என்பதையெல்லாம் முறையாக கற்றுத் தருகிறார் ஆல்ஃப்ரெடோ.

அந்தத் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படத்திற்கு அன்று இறுதி நாள். ஆனால், திரையரங்கிற்கு முன்னால் ஒரே கூட்டம். படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஆரவாரம் செய்கிறார்கள் எல்லோரும். அப்போது சிறிதும் எதிர்பாராமல் புத்திசாலித்தனமான ஒரு காரியத்தைச் செய்கிறார் ஆல்ஃப்ரெடோ. ப்ரொஜக்டருக்கு அருகில் இருக்கும் கண்ணாடியை அவர் நீக்க, படம் திரையரங்கிற்கு வெளியே தெரிகிறது. திரையரங்கிற்கு வெளியே நின்று கொண்டு, மக்கள் படத்தைப் பார்க்கிறார்கள். அதைப் பார்த்து சிறுவன் டோடோவிற்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

திடீரென்று திரையரங்கில் நெருப்பு பிடிக்கிறது. Nitrate Film ஆக இருப்பதால், மிகவும் எளிதில் தீ பிடித்து எரிகிறது. டோடோ, ஆல்ஃப்ரெடோவைக் காப்பாற்றி விடுகிறான். ஆனால், ஃபிலிம் ரோல்கள் வெடித்து, ஆல்ஃப்ரெடோவின் முகத்தில் சிதற, அவருக்கு கண் பார்வை நிரந்தரமாக இல்லாமற் போகிறது.


'சினிமா பாரடைஸோ' திரையரங்கம் அந்த நெருப்பு விபத்தில் பாதிக்கப்படுகிறது. அதை மீண்டும் புதுப்பிக்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த Ciccio என்பவர்.. இன்னும் சிறுவன் நிலையில் இருக்கும் டோடோ, அந்தத் திரையரங்கின் Projector Operator ஆக ஆகிறான். அந்த கிராமத்திலேயே அதை இயக்கத் தெரிந்தவன் அவன் ஒருவன் மட்டுமே.

10 வருடங்கள் கடந்தோடுகின்றன. டோடோ உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறான். பள்ளி நேரம் போக, மீதி நேரத்தில் திரையரங்கத்திற்குச் சென்று படத்தை ஓட்டுகிறான். அவனுக்கும் ஆல்ஃப்ரெடோவிற்குமிடையே உள்ள உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. முன்பை விட அது பலம் கொண்டதாக ஆகிறது. உலக அளவில் பேசப்படும் பல காவிய நிலையில் இருக்கும் திரைப்படங்களைப் பற்றி அவனுக்குக் கூறுகிறார் ஆல்ஃப்ரெடோ. ஒரு சிறிய கேமராவிற்குள் ஃபிலிமை மாட்டி, டோடோ பலவற்றையும் படம் பிடித்து சோதனை செய்து பார்க்கிறான். அப்படி அவன் ஒரு இளம் பெண்ணையும் படம் பிடிக்கிறான். Elena என்ற அந்தப் பெண் ஒரு பணக்காரரின் மகள். படிப்படியாக அவர்களுக்கிடையே காதல் அரும்புகிறது. எலீனா தனக்குக் கிடைத்த சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறான் டோடோ.

அந்த காதல் எலீனாவின் தந்தைக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அவர் அதை எதிர்க்கிறார். இதற்கிடையில் ஒருநாள் எலீனாவின் தந்தைக்கு வேறு ஊருக்கு மாறுதல் உண்டாக, அந்த குடும்பம் அந்த ஊரை விட்டு கிளம்பிச் செல்ல முடிவெடுக்கிறது. அதை எலீனா, டோடோவிடம் தெரிவிக்கிறாள். டோடோவிற்கும் ராணுவத்திலிருந்து அழைப்பு வருகிறது.

என்ன செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்காக எலீனாவை மாலை 5 மணிக்கு 'சினிமா பாரடைஸோ' திரையரங்கிற்கு வரச் சொல்லுகிறான் டோடோ. மாலையில் அவளுக்காக அவன் காத்திருக்கிறான். ஆனால், அவள் வரவில்லை. அப்போது அங்கு ஆல்ஃப்ரெடோ வருகிறார். அவரை அமரச் சொல்லி விட்டு, எலீனாவின் வீட்டிற்குச் செல்கிறான் டோடோ. அங்கும் அவள் இல்லாமற் போகவே, மீண்டும் திரையரங்கிற்கு அவன் திரும்பி வருகிறான். 'எலீனா வந்தாளா?' என்று கேட்க, ஆல்ஃப்ரெடோ 'இல்லை' என்கிறார்.

எலீனா தன் பெற்றோருடன் வேறு ஊருக்குச் சென்று விடுகிறாள்- அவனிடம் விடை பெறாமலேயே. மனம் வெறுத்துப் போன டோடோ ராணுவத்தில் போய் சேர்கிறான்.

ராணுவத்தில் இருக்கும்போது, அவன் தொடர்ந்து எலீனாவிற்குக் கடிதங்கள் எழுதுகிறான். ஆனால், அந்த எல்லா கடிதங்களும் அவனுக்கே திரும்பி வந்து விடுகின்றன. காரணம் என்ன என்று தெரியாமல் அவன் தவிக்கிறான்.

ராணுவத்திலிருந்து ஒரு வருடம் கழித்து அவன் திரும்பி வருகிறான். 'சினிமா பாரடைஸோ' திரையரங்கில் இப்போது வேறொரு ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். டோடோ ஆல்ஃப்ரெடோவைப் போய் பார்க்கிறான். எலீனாவைப் பற்றிய தன் கவலைகளை அவன் வெளிப்படுத்துகிறான். 'அவளை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே. வாழ்கையில் முன்னுக்கு வருவதற்கு வழியைப் பார்' என்கிறார் ஆல்ஃப்ரெடோ.

புகை வண்டி நிலையம். டோடோவும் ஆல்ஃப்ரெடோவும் அங்கிருக்கும் பெஞ்சில் அமர்ந்திருக்கிறார்கள். 'இந்த ஜியான்கால்டோ என்ற கிராமத்தை விட்டு இப்போது நீ கிளம்பிப் போகிறாய். இது ஒரு சிறிய ஊர். உன்னுடைய கனவுகள் நிறைவேறுவதற்கான ஊர் இது அல்ல. இங்கிருந்து கிளம்பினால்தான் நீ பெரிய ஆளாக வாழ்க்கையில் முன்னேறி வர முடியும். ஆனால், ஒரு விஷயம்... நீ கிளம்பிச் செல்லும் அடுத்த நிமிடமே இந்த ஊர், இங்குள்ள மனிதர்கள் அனைவரையும் மறந்து விடு. உன் குடும்பத்தை நினைக்காதே. என்னைக் கூட நினைக்காதே. எல்லோரையும் முழுமையாக மறந்து விடு. அப்படியென்றால்தான் நீ வளர முடியும். நீ இந்த ஊருக்கே திரும்பி வரக் கூடாது. வந்தால், உன்னிடம் நான் பேசவே மாட்டேன்' என்கிறார் ஆல்ஃப்ரெடோ.

புகை வண்டி வருகிறது. டோடோ கிளம்புகிறான். அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறார் ஆல்ஃப்ரெடோ.

அவர் கூறியபடி டோடோ அந்த கிராமத்திற்குத் திரும்பி வரவேயில்லை. 30 வருடங்கள் கடந்தோடி விட்டன. இந்த 30 வருடங்களில் ஊருக்கு வருவது... யாருக்கேனும் கடிதம் எழுதுவது... இப்படிக் கூட எதுவும் நடக்கவில்லை.

இப்போது டோடோ, இத்தாலியின் புகழ் பெற்ற திரைப்பட இயக்குநரான சால்வடோர்.  வீட்டில்... இரவு நேரத்தில் அமர்ந்து தன்னுடைய இளம் பருவத்து நாட்களை மனதில் அசை போட்ட அவரின் நினைவுகளில் முழுக்க முழுக்க ஆல்ஃப்ரெடோ நிறைந்திருக்கிறார்.

ஆல்ஃப்ரெடோவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் வந்த இயக்குநர் சால்வடோர், 30 வருடங்களுக்குப் பிறகு தான் பிறந்த மண்ணில் கால் வைக்கிறார். ஊர் எவ்வளவோ மாறியிருக்கிறது. தன்னுடைய நரை விழுந்த நிலையில் இருக்கும் அன்பு தாயைப் பார்க்கிறார். அவருடைய தங்கைக்குத் திருமணமாகி, குழந்தைகள் இருக்கின்றன.

மிகவும் குறைவான ஆட்களே ஆல்ஃப்ரெடோவின் இறுதி பயணத்தில் கலந்து கொள்கிறார்கள். அதில் கலந்து கொண்டவர்களில் பலரும் சால்வடோரை இளம் வயதில் பார்த்தவர்கள்தாம். எல்லாம் முடிந்ததும், சால்வடோர் தன்னை வளர்த்த 'சினிமா பாரடைஸோ' திரையரங்கிற்குச் செல்கிறார். அதன் உரிமையாளரிடம் பேசுகிறார். அந்தத் திரையரங்கை மறுநாள் இடிக்கப் போவதாகவும், புதிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் அங்கு வர இருப்பதாகவும் கூறுகிறார் அவர். அதைக் கேட்டு மிகவும் கவலைப்படுகிறார் சால்வடோர். தன்னுடைய கனவு கோட்டையே இடிந்து விழுவதைப் போல அவர் உணர்கிறார்.

 


கிராமத்தின் தெருவில் ஒரு இளம் பெண்ணைப் பார்க்கிறார் சால்வடோர். பார்ப்பதற்கு அவள் எலீனாவைப் போலவே இருக்கிறாள். அவளைப் பின் பற்றி அவர் செல்கிறார். அங்கு அந்த இளம் பெண்ணின் தாய் எலீனா இருக்கிறாள். எலீனாவின் மகள் அவள். எலீனாவிற்கும் அரசியல்வாதியான அவளுடைய கணவனுக்குமிடையே உண்டான திருமண உறவு தோல்வியில் முடிகிறது. தன்னுடைய மகளுடன் அவள் அந்த கிராமத்திற்கே வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

தொலைபேசியில் அவளுடன் சால்வடோர் தொடர்பு கொள்கிறார். ஆரம்பத்தில் சந்திக்க மறுக்கும் எலீனா, பின்னர் அவரைச் சந்திக்க ஒப்புக் கொள்கிறாள். 30 வருடங்களுக்குப் பிறகு அவரும் எலீனாவும் ஒரு காரில் சந்திக்கிறார்கள். 'நான் அன்று சாயங்காலம் உன்னைப் பார்ப்பதற்காக வந்தேன். ஆல்ஃப்ரெட்டோதான் என்னைப் போகச் சொல்லி விட்டார். 'அவன் வளர வேண்டியவன். பெரிய ஆளாக வரப் போகிறவன். நீ அவன் வாழ்க்கையில் நுழைந்து அந்த வளர்ச்சியைப் பாழாக்கி விடாதே' என்று அவர்தான் சொன்னார். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- நான் உன் வாழ்க்கையில் பங்கு பெற்றிருந்தால், நீ இந்த அளவிற்கு வளர்ந்து இருக்க மாட்டாய்' என்கிறாள் அவள். ஆல்ஃப்ரெடோவை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் சால்வடோர்.

ஆல்ஃப்ரெடோவின் மனைவியைப் போய் பார்க்கிறார் சல்வடோர். தன் கணவர் அவர் மீது வைத்திருந்த அளவற்ற அன்பை அவள் கூறுகிறாள். அவரைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும், திரும்பத் திரும்ப அதை வாசிக்கச் சொல்லி அவர் கேட்பார் என்கிறாள் அவள். தொடர்ந்து, சிறு சிறு ஃபிலிம் சுருள்கள் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வட்டமான பெட்டியை அவள் கொண்டு வந்து கொடுத்து, 'இதை உன்னிடம் என் கணவர் தரச் சொன்னார்' என்கிறாள்.

மறுநாள் மக்கள் கூடியிருக்க, 'சினிமா பாரடைஸோ' என்ற அந்த கனவுச் சின்னம் இடிக்கப்படுகிறது. கனத்த இதயத்துடன் அதைப் பார்த்த சால்வடோர், தன் சொந்த மண்ணை விட்டு நகரத்திற்குக் கிளம்புகிறார்.

சால்வடோர் இயக்கிய புதிய படம் பல விருதுகளையும் பெறுகிறது. அவரைப் பாராட்டுவதற்காக பத்திரிகையாளர்களும், பிறரும் காத்திருக்கின்றனர். அவர்களைப் பொருட்படுத்தாமல், உள்ளே சென்ற சால்வடோர் அங்கிருக்கும் சிறிய திரை அரங்கில் அமர்கிறார். சொந்த ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த ஃபிலிம் சுருள்கள் ஓட்டப்படுகின்றன. அவர் மட்டும் தனியே அமர்ந்து, என்றோ வெட்டப்பட்ட அந்த முத்தக் காட்சிகளைப் பார்க்கிறார். சிறுவன் டோடோவாக இருந்தபோது 'பின்னர் ஒருநாள் நான் தருவேன்' என்றார் ஆப்பரேட்டர் ஆல்ஃப்ரெடோ. சொன்ன வாக்கை அவர் காப்பாற்றியிருக்கிறார். கண்களில் நீ கசிய, திரை அரங்கின் மெல்லிய வெளிச்சத்தில் சால்வடோர் அமர்ந்திருக்கிறார். அத்துடன் படம் முடிவடைகிறது.

ஒரு சிறிய ஊரில் பிறந்த ஒரு சிறுவன், கலை ஆர்வத்தால் எப்படி வாழ்க்கையில் வளர்ந்து, ஒரு புகழ் பெற்ற திரைப்பட இயக்குநராக ஆகிறான், அவனுடைய வளர்ச்சியில் 'சினிமா பாரடைஸோ' என்ற அந்த திரை அரங்கம் எவ்வளவு பெரிய பங்கு வகிக்கிறது, ஆல்ஃப்ரெடோ என்ற ஆப்பரேட்டர் எப்படி ஒரு உந்து சக்தியாக இருக்கிறார் என்பதையெல்லாம் மிகவும் அருமையாக காட்டி, ஒரு காவியத்தையே படைத்திருக்கிறார் இயக்குநர் கய்செப்பே டோர்னடோர் (Guiseppe Tornatore).

இந்த உலக புகழ் பெற்ற இத்தாலிப் படத்தில் இயக்குநர் சால்வடோராக Jaques Perrin, வாலிபன் சால்வடோராக Marco Leonardi,  சிறுவன் டோடோவாக Salvatore Cascio  மூவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஆல்ஃப்ரெடோ கதாபாத்திரத்திற்கு உயிர் தந்திருப்பவர் - Philippe Noiret.

இளம் பெண் எலீனாவாக- Agnese Nano.

வயதான எலீனாவாக- Brigitte Fossey.

'சினிமா பாரடைஸோ' வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 'ஒரு காவியம்' என்று பத்திரிகைகளாலும், மக்களாலும் கொண்டாடப்பட்டது. 1989க்கான சிறந்த வெளிநாட்டுப் படம் என்பதற்கான ஆஸ்கார் விருதை இப்படம் பெற்றது.

1989ஆம் ஆண்டில் நடைபெற்ற Cannes Film Festival இல் விருது பெற்ற இப்படம் Golden Globe Awards, Bafta Awards ஆகியவற்றையும் பெற்றது.

இந்தப் படத்தை ஒருமுறை பார்த்து விட்டால், அது எந்த காலத்திலும் நம் நெஞ்சை விட்டு நீங்கவே நீங்காது. படத்தில் இடம் பெறும் ஆழமான காட்சிகளையும், உணர்ச்சிமயமான உரையாடல்களையும், கதாபாத்திரங்களையும் நம்மால் எந்தச் சமயத்திலும் மறக்கவே முடியாது. நம் உள்ளத்திற்குள் கதாபாத்திரங்கள் கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

 Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.