Logo

ஸ்ட்ரே டாக்ஸ்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5871
Stray Dogs

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Stray Dogs - ஸ்ட்ரே டாக்ஸ்

(ஈரானிய திரைப்படம்)

2004ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படம்.

சில திரைப்படங்களை பார்த்த சில நிமிடங்களில் மறந்து விடுவோம். சிலவற்றை சில நாட்கள் மறக்காமல் இருப்போம். ஒரு சில படங்கள்தாம் எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனதை விட்டு சிறிதும் மறையாமல், சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் இது.

இப்படத்தின் இயக்குனர் Marziyeh Meshkini. பல அருமையான திரைப்படங்களை இயக்கி, உலக அளவில் புகழ் பெற்றிருக்கும் ஈரானிய திரைப்பட இயக்குனர் Mohsen Makmalbaf  இன் மனைவி இவர். 2000ஆம் ஆண்டில்  ‘The Day I Became a woman’   என்ற சிறந்த படத்தை இயக்கிய Marziyeh Meshkini  இயக்கத்தில் வெளியான இரண்டாவது படம் ‘Stray Dogs’.

2004ஆம் ஆண்டில் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம் முழுக்க முழுக்க ஆஃப்கானிஸ்தானில் படமாக்கப்பட்டது. போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, வீதிக்கு வந்த ஒரு இளம் வயது ஏழை சிறுவனையும் அவனுடைய ஐந்து வயது தங்கையையும் பற்றிய கண்ணீரை வரவழைக்கும் கதை இது.

இப்படத்தைப் பார்த்தபோது, பல இடங்களில் என்னை மறந்து என் கண்களில் கண்ணீர் அரும்பியது. இதில் வரும் அந்த ஏழை சிறுவனுக்காகவும் சிறுமிக்காகவும் என் மனதில் பரிதாப உணர்ச்சி தோன்றியது. இரக்கமற்ற போரின் கொடுமையால் பாதிக்கப்பட்டு, எந்த விதமான ஆதரவும் இல்லாமல் இதைப் போல தெருக்களில் எத்தனைக் கோடி சிறுவர்களும் சிறுமிகளும் அனாதைகளாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்தபோது, மனதில் இனம் புதியாத கனமும், கவலையும் உண்டாயின.

இத்தகைய பாதிப்பிற்கு என்னை ஆளாக்கிய ‘Stray Dogs’ படத்தின் கதைதான் என்ன?

ஆஃப்கானிஸ்தானின் காபுல் நகரத்தின் ஒரு புறப் பகுதியில் ஆழமான குழியொன்று இருக்கிறது.  அதற்குள் ஒரு சிறிய நாய் இருக்கிறது. அதன் மேற்பகுதியில் தீப் பந்தங்களுடன் பத்து சிறுவர்கள் நின்று கொண்டு, அப்பந்தங்களை காட்டிக் கொண்டும், குழிக்குள் போட்டுக் கொண்டும் இருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில்தான் சிறுவன் Zahedம் சிறுமி GolGhotaiயும் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் இருவர் மட்டும் தனியாக கீழே வருகிறார்கள். கீழே ஒரு பாதை இருக்கிறது. அதன் வழியே நுழைந்து, நெருப்புக்கு பயந்து நடுங்கியவாறு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் அந்த அழகான சிறிய வெள்ளை நிற நாயை அவர்கள் வெளியே எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் நாயைத் தூக்கிக் கொண்டு வருவது, மேலே நின்று கொண்டிருக்கும் சிறுவர்களின் கண்களில் படவில்லை.

சிறுமி GolGhotai நாயை இரக்கத்துடன் தூக்கி வைத்துக் கொண்டு நடக்க, அவளுடன் சேர்ந்து நடக்கிறான் அவளுடைய அன்பு அண்ணன் Zahed. இதுதான் ‘Stray Dogs’ படத்தின் முதல் காட்சி.

அடுத்த காட்சியில் பரட்டைத் தலையுடனும், அழுக்கு படிந்த ஆடைகளுடனும், வெறும் கால்களுடனும், ஏழை கோலத்துடனும் இருக்கும் அந்தச் சிறுவனும் சிறுமியும் ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்திற்கு முன்னால் வந்து நிற்கிறார்கள். அந்த கட்டிடத்தின் இரும்பால் ஆன வெளிக் கதவு மூடப்பட்டிருக்கிறது. வெளியே நின்று, அவர்கள் அந்தக் கதவின் தாழ்ப்பாளைக் கொண்டு தட்டுகிறார்கள். காவலாளி ஒருவன் வெளியே வருகிறான். அவர்களைப் பார்த்து ‘என்ன விஷயம்?’ என்று கேட்கிறான். சிறுவனும் சிறுமியும் ‘உள்ளே எங்களின் அம்மா இருக்கிறார்கள். நாங்கள் உள்ளே போக வேண்டும்’ என்று கூறுகிறார்கள். சிறுமியின் கையில் இருக்கும் நாயைப் பார்த்த காவலாளி ‘நாயை உள்ளே அனுமதிக்க முடியாது’ என்கிறான். அதற்கு அந்தச் சிறுமி ‘இந்த நாயை வெளியே விட்டால், குளிரில் நடுங்கி அது இறந்து விடும். அதனால் தயவு செய்து, இதை அனுமதியுங்கள்’ என்கிறாள். அது சரியாகப் படவே, காவலாளி நாயையும் உள்ளே செல்ல அனுமதிக்கிறான். சிறுவனும், சிறுமியும் நாயுடன் உள்ளே நுழைகிறார்கள்.

அப்போதுதான் அது ஒரு சிறைச்சாலை என்பதே நமக்கு தெரிய வருகிறது. அந்தச் சிறார்களின் அன்னை உள்ளே அடைக்கப்பட்டிருக்கிறாள். அவளையும் சேர்த்து, அங்கு மேலும் பல பெண்கள் கைதிகளாக இருக்கிறார்கள். தங்களின் அன்பு அன்னையுடன், அவள் பெற்ற அந்த பிள்ளைகள் போய் இணைகிறார்கள்.

அன்னைக்கு அருகில் சிறுவனும், சிறுமியும் படுத்துக் கொள்கிறார்கள். தன்னுடன் நாயையையும் இறுக பற்றிக் கொண்டு படுக்க வைத்திருக்கிறாள் சிறுமி. அவர்களுக்கு அடுத்த அறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏழை பெண் தன் குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். இதைப் போல மேலும் பல பெண்கள் கைதிகளாக அங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த சிறுவன், சிறுமி ஆகியோரின் தாய் தன் பிள்ளைகளுடன் படுத்துக் கொண்டே பேசுகிறாள். ‘நாளைக்கு சிறையிலிருக்கும் உன் அப்பாவிடம் நான் கூறுவதை அப்படியே போய் கூறுவாயா?’ என்று கேட்க, சிறுமி ‘சரி’ என்கிறாள். உடனே அந்த தாய் ‘நான் சொல்வதை, சிறிதும் மாறாமல் உன் அப்பாவிடம் சொல்லு. நான் இல்லாதப்போ, எப்படி உன் அம்மா இன்னொரு ஆளை திருமணம் செய்யலாம்னு கேட்பாரு. அதற்கு நீ சொல்லு நீங்க தலிபானாக மாறி போருக்குப் போய் ஐந்து வருடங்கள் ஆன பிறகும், நீங்க திரும்பி வரவே இல்லை. உங்களைப் பற்றி எந்தவிதமான தகவலும் இல்லை. நீங்க போர்ல இறந்துவிட்டீங்கன்னு நினைச்சு, அதற்குப் பிறகுதான் அம்மா இன்னொரு ஆளை கல்யாணம் பண்ணினாங்க. ஆனால், இந்த விஷயம் தெரிஞ்சதும், நீங்க அம்மாவைப் பற்றி ‘மோசமான பெண்ணு’ன்னும் ‘கெட்ட நடத்தை உள்ளவள்’னும், ‘விபச்சாரி’ன்னும் அரசாங்கத்துல புகார் பண்ணிட்டீங்க. எங்களைக் காப்பாத்துறதுக்கு வேறு வழி இல்லாமலும், நாங்க பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவும், நீங்க இனி வரப் போறது இல்லைன்னு உறுதியா தெரிஞ்ச பிறகும்தான் அம்மா அந்த இன்னொரு திருமணம் செய்யவே முடிவு செஞ்சாங்க. ஆனால், இது எதுவுமே தெரியாமல் நீங்கள் புகார் செய்ய, அரசாங்கம் ‘நடத்தை கெட்டவள்’னு முடிவு செஞ்சு அம்மாவை சிறைக்குள்ளே அடைச்சுடுச்சு. அம்மா சிறையில கிடக்க, நானும் அண்ணனும் படுக்க இடம் இல்லாமல் தவிச்சிக்கிட்டு இருக்கோம். பகல் முழுவதும் எங்கெல்லாமோ அலைஞ்சு, கையில் கோணியை வச்சுக்கிட்டு பழைய பேப்பர்களையும், கண்ட கண்ட பொருட்களையும் பொறுக்குறோம். அவற்றைக் கொண்டு போய் காயலான் கடையில போட்டு, கிடைக்கிற காசுல ரொட்டியோ பன்னோ வாங்கி சாப்பிடுறோம்.


ராத்திரி ஆயிடுச்சுன்னா, சிறைக்குள்ளே வந்து அம்மாகூட சேர்ந்து படுத்துக்குறோம். சில நேரங்கள்ல சிறைக்குள்ளே கூட எங்களை விட மாட்டேங்குறாங்க. சட்டப்படி அப்படி பிள்ளைகளை உள்ளே விடக் கூடாதாம். எனினும், சிறையில இருக்குற ஒரு அதிகாரி எங்கள் மீது இரக்கப்பட்டு சிறைக்குள்ளே விட அனுமதிப்பாரு. சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல், இரவு நேரத்துல படுக்குறதுக்கு இடமில்லாமல் நானும் அண்ணனும் தவிச்சுக்கிட்டு இருக்கோம். எங்களோட பரிதாப நிலையைப் பார்த்து அம்மா கண்ணீர் விடுறாங்க. உண்மையை உணர்ந்து அம்மாவை நீங்க மன்னிச்சிட்டதாகச் சொன்னால், அம்மாவை வெளியே விட்டுடுவாங்க. கட்டாயம் நீங்க அம்மாவை மன்னிக்கணும்னு உன் அப்பாவை சந்திக்கிறப்போ நீ சொல்லணும். நான் சொன்னதை அப்படியே சொல்லுவியா? எங்கே...? ஒரு தடவை சொல்லிக் காட்டு... ‘என்கிறாள் அந்த தாய் தன் அன்பு மகளிடம். அந்தச் சிறுமி தன் தாய் கூறியதை அப்படியே கூறுகிறாள். தன் மகள் கூறுவதையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த ஏழை தாய். இப்படியே இரவு கழிகிறது.

பொழுது புலர்கிறது. சிறுவனும், சிறுமியும் சிறையை விட்டு வெளியே வருகிறார்கள். சிறுமியின் கையில் நாய் இருக்கிறது. தங்களின் தந்தை அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கு வருகிறார்கள். அங்கு அவர்கள் வருவதற்கு முன்பே, நிறைய பேர் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சிறுமியின் முறை வருவதற்கு முன்பே, பார்வையாளர்களுக்கான நேரம் முடிவடைந்து விடுகிறது. ‘இன்றைக்கு பார்க்க முடியாது. இன்னொரு நாள்தான் பார்க்க முடியும்’ என்று கூறி விடுகிறார்கள். தங்களின் தந்தையைப் பார்த்து, அன்னை கூறிய அத்தனை விஷயங்களையும் கூறிவிட வேண்டும் என்று ஆவலுடன் இருந்த சிறுமி ஏமாற்றமடைகிறாள். அவளுடன் அவளுடைய அண்ணனும் அங்கிருந்து கவலையுடன் இருவரும் நடந்து செல்கிறார்கள்.

இரவு நேரம். மீண்டும் அன்னையுடன் அவளுடைய பிள்ளைகள். சிறையின் அறையில்தான்... தங்களின் தந்தையைப் பார்க்க முடியாமல் போய்விட்டது என்பதையும், மறுநாள் வருமாறு கூறி விட்டார்கள் என்பதையும் சிறுமி கூறுகிறாள். மறுநாள் ‘அப்பாவைப் பார்க்கும்போது நான் சொன்னபடி கொஞ்சமும் மாற்றாமல் சொல்லணும்’  என்கிறாள் அன்னை. அதற்கு படுத்துக் கொண்டே ‘சரி’என்று தலையை ஆட்டுகிறாள் அந்த சிறுமி.

மறுநாள் பகல். அண்ணனும், தங்கையும் கையில் கோணியை வைத்துக் கொண்டு ஏராளமான குப்பைகள் கொட்டப்பட்டிருக்கும் இடத்தில் பேப்பர்களையும், தேவைப்படும் பொருட்களையும், பழைய சாமான்களையும் பொறுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலவே இன்னும் ஏராளமான சிறுவர்களும், சிறுமிகளும் குப்பை பொறுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். எல்லோருமே அனாதைகள்தான். பரட்டைத் தலைகளுடனும், அழுக்கடைந்து போன ஆடைகளுடனும், ஒட்டிய வயிறுகளுடனும் குப்பை மேடுகளில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அந்தச் சிறுவர்களையும், சிறுமிகளையும் பார்க்கும்போது போரின் கொடுமைகளும், அதன் காரணமாக கள்ளங்கபடமற்ற அந்த பிஞ்சு உள்ளங்கள் ஆதரவற்ற அனாதைகளாக வீதிகளில் வீசி எறியப்பட்ட அவல நிலையும், அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரமங்களும் நம் மனதை ஆக்கிரமித்து, நம் கண்களில் கண்ணீர் வரச் செய்யும்.

தாங்கள் குப்பைகளில் இருந்து பொறுக்கிய பழைய பொருட்களைக் கொண்டு போய், பழைய சாமான்கள் வாங்கப்படும் ஒரு கடையில் அந்தச் சிறுவனும், சிறுவனும் விற்கிறார்கள். அங்கு காசு கொடுக்கப்பட, அதைக் கொண்டு ரொட்டியும், பன்னும் வாங்கி அவர்கள் இருவரும் சாப்பிடுகிறார்கள்.

இரவு நேரம். சிறுவன் முன்னால் நடக்க, சிறுமி நாயைத் தூக்கி வைத்துக் கொண்டு தன் அண்ணனைப் பின்பற்றி வருகிறாள். இருவரும் தங்களின் அன்னை இருக்கும் சிறைக்கு முன்னால் வந்து நிற்கிறார்கள். வெளியே இருக்கும் இரும்பு தாழ்ப்பாளைத் தட்ட, காவலாளி ஒருவர் வந்து நிற்கிறான். ‘என்ன விஷயம்?’ என்கிறான். ‘எங்களின் அம்மா உள்ளே இருக்குறாங்க. நாங்க உள்ளே போகணும்’என்கிறார்கள் அந்த சிறுவனும், சிறுமியும். அவன் அதற்கு மறுக்கிறான். ‘உள்ளே இருக்கும் அதிகாரியிடம் போய் சொல்லுங்கள். அவர் எங்களை அனுமதிப்பார்’ என்கிறான் சிறுவன். அடுத்த நிமிடம் அதிகாரி வெளியே வருகிறார். அவர் சிறுவனிடமும் சிறுமியிடமும் ‘கவர்னர் யாரையும் உள்ளே விடக் கூடாது என்று கூறிவிட்டார். அதனால் உங்களை உள்ளே விட முடியாது. வேறு எங்காவது போய் தங்கிக் கொள்ளுங்கள். இனிமேல் இந்தப் பக்கம் எப்போதும் வர வேண்டாம்’ என்று கூறுகிறார்.

என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நிற்கும் அந்த அன்பு அண்ணனும், தங்கையும் அங்கிருந்து நகர்கிறார்கள்.

நகரத்தின் ஒதுக்குப்புறம். வானத்தில் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது. அந்த இருட்டு வேளையில்... நிலவு வெளிச்சத்தில்... தந்தையும் தாயும் உயிருடன் இருந்தும், வீடற்ற, ஆதரவற்ற அனாதைகளாக இருக்கும் அந்த அன்புச் சகோதரனும் சகோதரியும் இரவை எங்கே கழிப்பது என்ற கவலையுடன் இருக்கிறார்கள். அப்போது தூரத்தில் ஏதோ வெளிச்சம் தெரிகிறது. அந்த இடத்தை நோக்கி அவர்கள் நடக்கிறார்கள்.

சிறிய சிறிய பெட்டிகள் அங்கு வரிசையாக வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கிருந்த ஒரு பெட்டிக்குள் இரவு முழுக்க உட்கார்ந்து கொள்ளலாம் என்று சிறுவன் முயற்சிக்கிறான். ஆனால், அவனுக்கு முன்பே அதற்குள் வேறொரு சிறுவன் உட்கார்ந்திருக்கிறான். அப்போதுதான் தெரிகிறது  இரவில் தங்குவதற்கு இடம் இல்லாத பலரும் அங்கு காசு கொடுத்து தங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையே. அங்கு அந்த வர்த்தகத்தைச் செய்து கொண்டிருப்பவன் ஒரு சிறுவன். அவனிடம், தானும் தன் தங்கையும் அந்த இரவில் அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்கிறான் சிறுவன். அதற்கு அந்த பொறுப்பாளரான சிறுவன் ‘நீ வேண்டுமானால் தங்கலாம். உன் தங்கை பெண். ஆதலால், அவளை இங்க அனுமதிக்க முடியாது’ என்கிறான் பிடிவாதமாக. ‘என்னை விட்டுவிட்டு என் தங்கை எங்கு போவாள்?’ என்று சிறுவன்’பரிதாபமாக கேட்க, பரிதாபமாக கேட்க, அங்கிருக்கும் பொறுப்பாளரான சிறுவன் சரி... இன்றைக்கு மட்டும் உன் தங்கையுடன் தங்கிக் கொள். நாளைக்கு வருவதாக இருந்தால், உன் தங்கையை அனுமதிக்க முடியாது’ என்கிறான். அன்றைய இரவை அங்கேயே அந்த அண்ணனும் அவனின் செல்ல தங்கையும் செலவழிக்கின்றனர்.

பொழுது விடிகிறது. இரவில் அந்த இடத்தில் தங்கிய ஒவ்வொருவரும் சிறுவனிடம் காசைக் கொடுத்து விட்டு, கிளம்புகிறார்கள். நம் சிறுவனும் காசைத் தந்துவிட்டு, தன் தங்கையுடன் அங்கிருந்து புறப்படுகிறான்.


ஆண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறைச் சாலை. அங்குதான் அந்த சிறுவன், சிறுமி இருவரின் தந்தையும், தலிபான் போராளியுமான மனிதன் அடைக்கப்பட்டிருக்கிறான், யாராவது ஒருவர்தான் பார்க்க முடியும் என்ற விதி இருந்ததால், சிறுமி தன் பெயரை ஏற்கெனவே கொடுத்திருந்தாள். சிறையில் இருப்பவர்களைப் பார்ப்பதற்காக வெளியே ஏராளமான பேர் காத்திருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் நம் சிறுவனும், சிறுமியும் கூட இருக்கின்றனர். சிறுமியின் பெயர் அழைக்கப்படுகிறது. சிறுமி நாய்க்குட்டியுடன் வேகமாக நடந்து சிறைக்குள் செல்கிறாள்.

தன் தாய் எதையெதையெல்லாம் கூற வேண்டும் என்று கூறினாளோ, அதை சிறிதும் மறக்காமல் தன் தந்தையிடம் கூறுகிறாள் அந்தச் சிறுமி. பார்வையாளர்களுக்கான நேரம் முடிய, சிறுமி வெளியேற்றப்படுகிறாள்.

இப்போது அந்த அண்ணனுக்கும், தங்கைக்கும் இரவில் எங்கு தங்குவது என்ற பிரச்னை. ‘நம் அப்பா சிறையில் இருக்கிறார். அம்மாவோ வேறொரு சிறையில் இருக்காங்க. அவர்களைப் போல நாமும் சிறையில் இருந்தால் என்ன? சிறையில் இருக்க வேண்டுமென்றால், எதாவது குற்றம் செய்யணும். அப்படியென்றால், நம்மை கைது பண்ணி சிறைக்குள் அடைச்சிடுவாங்க. எந்த கவலையும் இல்லாமல் சிறைக்குள்ளேயே இருந்திடலாம்’ என்கிறாள்  நம் சிறுமி. அது சரி என்று அந்த சிறுவனுக்கும் படுகிறது.

அதைத் தொடர்ந்து அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான் சிறுவன். அப்போது ஒரு வசதி படைத்த பெண் கடைகளில் வாங்கிய பொருட்கள் அடங்கிய பையை கையில் வைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். வேகமாக ஓடிய சிறுவன் பையை அவளிடமிருந்து பறித்துக் கொண்டு மெதுவாக ஓடுகிறான். அவள் தன்னைப் பிடித்துவிட வேண்டும் என்பதற்காகவே அவன் மெதுவாக ஓடுகிறான். அவளும் அவனைப் பிடித்து, பையை வாங்கிக் கொள்கிறாள். ‘நான் உங்களின் பையைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடன். காவல் துறையிடம் உடனடியாக கூறி, என்னை கைது செய்து, சிறையில் அடைக்கச் சொல்லுங்கள்’ என்று கெஞ்சுகிறான் சிறுவன். அதைக் கேட்டு அந்தப் பெண் அவனையே வினோதமாக பார்க்கிறாள். பின்னர் என்ன நினைத்தாளோ, அவனை எதுவுமே செய்யாமல் அவள் சிறுவனிடமிருந்து வாங்கிய பையைக் கையில் எடுத்துக் கொண்டு வேகமாக நடக்கிறாள். சிறுவனோ திரும்பத் திரும்ப ‘என்னை போலீஸிடம் பிடித்துக் கொடுத்து சிறையில் அடைக்கச் சொல்லுங்கள்’என்று கூறுயவாறு, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருக்கிறான். அவனுக்குப் பின்னால் நம் செல்லக் குட்டி கையில் நாய்க்குட்டியுடன்! சிறுவனின் கெஞ்சலைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தன் வீட்டிற்குள் போய் விடுகிறாள் அந்தப் பெண்.

சிறுவனும், சிறுமியும் மீண்டும் தெருவில்! இரவில் தங்குவதற்கு இடமில்லாமல் மீண்டும் ஒரு இரவில் தங்கிய இடத்திற்குச் செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு தங்குவதற்கு இடம் தந்த சிறுவன்’ சிறைக்குப் போகணுமா? ஒரு சைக்கிள் திருடனைப் பற்றிய படம் ஒரு திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை போய் பார்....’ என்கிறான்.

அதைத் தொடர்ந்து சிறுவனும், சிறுமியும் ஒரு திரையரங்கிற்கு வருகிறார்கள். அங்கு Francis Ford Cuppola இயக்கிய உலக புகழ் பெற்ற திரைப்படமான ‘The Bicycle Thieves’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட்டமே இல்லை. ‘இந்தப் படத்தைப் பார்ப்பதற்காகவா வந்திருக்கிறீர்கள்? இதை ‘புதிய அலை’ படம் என்கிறார்கள். இதை பார்ப்பதற்கு மிகவும் குறைவான ஆட்கள்தாம் வருவார்கள். வேறு திரையிரங்கில் நல்ல ஆக்ஷன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதை போய் பாருங்கள்’ என்கிறான் அந்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியன். ஆனால், சிறுவனோ ‘இந்த படத்தைத்தான் நாங்கள் பார்க்க வேண்டும்’ என்கிறான். அவனையே வினோதமாக பார்க்கிறான் அந்த மனிதன்.

அண்ணனும், தங்கையும் திரையரங்கிற்குள் போய் அமர்கிறார்கள். அந்த மனிதன் கூறியதைப் போல மிகவும் குறைவான அளவிலேயே ஆட்கள் உள்ளே இருக்கிறார்கள். இங்கும்... அங்குமாக... பத்து பேர் இருந்தாலே அதிகம். ஒரு சைக்கிள் திருடனைப் பற்றிய கதை. சைக்கிள் இருந்தால்தான் ஒருவனுக்கு வேலை கிடைக்கும். ஆனால், அவனிடம் சைக்கிள் இல்லை. அதனால் தெருவில் நின்று கொண்டிருக்கும் ஒரு சைக்கிளை படத்தில் வரும் மனிதன் திருடி விடுகிறான். அவன் எப்படி சைக்கிளைத் திருடிக் கொண்டு செல்கிறான் என்பதை படத்தில் சுவாரசியமாக காட்டுகிறார்கள். அந்த காட்சி நம் பையனுக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

படத்தைப் பார்த்ததோடு நின்று விட்டால் போதுமா? அதை உடனடியாக செயல் வடிவில் காட்ட வேண்டாமா? நம் சிறுவன் களத்தில் இறங்குகிறான். ஒரு இடத்தில் ஏராளமான சைக்கிள்கள் நின்று கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றை திருடி எடுத்து ஓட்டிக் கொண்டு செல்கிறான் சிறுவன். அதைப் பார்த்து ‘திருடன்... திருடன்...!’ என்று ஒரு குரல். குரலை எழுப்பியது வேறு யார்? நம் செல்லக் குட்டிதான். எப்படியும் கைது செய்யப்பட்டு, சிறைக்குள் போய் தங்க வேண்டும் என்பதுதானே அந்த அண்ணன், தங்கை இருவரின் ஆசையும்!

போலீஸ் சைக்கிளைத் திருடிய நம் சிறுவனைப் பிடித்து விடுகிறது. அவனை பிடித்து, கைது பண்ணி குற்றவாளிகளைக் கொண்டு செல்லும் வண்டியில் ஏற்றி சிறைக்குக் கொண்டு செல்கிறார்கள். அவனைக் கொண்டு செல்லும் வண்டி வேகமாக விரைந்து போய்க் கொண்டிருக்கிறது. அதற்குப் பின்னால் ‘அண்ணா... அண்ணா...’ என்று பரிதாபமாக கத்திக் கொண்டே ஓடி வந்து கொண்டிருக்கிறாள் அவனின் அன்புத் தங்கை.

வாகனத்தின் வேகத்திற்கு அவளால் ஈடு கொடுக்க முடியுமா? வண்டி ஓடி மறைகிறது.

அந்த அன்புத் தங்கை அனாதையாக... நடுத் தெருவில்!

பையனை சிறுவர்களுக்கான சிறையில் அடைக்கிறார்கள். தன்னை தன் தாய் இருக்கும் சிறையில் அடைக்கும்படி கூறுகிறான் சிறுவன். ‘அது பெண்களுக்கான சிறை. இது சிறுவர்களுக்கான சிறை. இங்குதான் நீ இருந்தாக வேண்டும்’ என்கின்றனர் சிறை அதிகாரிகள். தன் தாய் ஒரு சிறையில்... தன் தந்தை இன்னொரு சிறையில்... தான் இந்தச் சிறையில்... தன் பாசத் தங்கையோ எங்கோ ஆதரவில்லாமல், அனாதையாக நடு வீதியில்! அந்த அபலைச் சிறுமியின் கதி இனி என்ன?

இந்த இடத்தில் படம் முடிவடைகிறது. படம் முடியும்போது, நம் கண்களில் வழியும் கண்ணீரை நம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியாது.


படத்தை காவியம் என இயக்கியிருக்கும் Marziyeh Meshkiniஐ எழுந்து நின்று கைத் தட்டி, பாராட்ட வேண்டும் என்ற உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் உண்டாகும்.

சண்டைக் காட்சிகள் நிறைந்த மசாலா படங்களை பல கோடி ரூபாய் செலவு செய்து எடுத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்து விட்டோம் என்று மார்பை நிமிர்த்திக் கொண்டு கம்பீரமாக நடந்து கொண்டிருக்கும் இங்குள்ள பல இயக்குனர்களை, இந்தப் படத்தின் இயக்குனரோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இவர்களைப் பார்த்து நமக்கு ஏளனம் கலந்த சிரிப்புத்தான் வருகிறது. அந்தப் பெண்ணும் இயக்குனர்! மூளையையே பயன்படுத்தாமல் (மூளை இருந்தால்தானே!) படங்களை இயக்கும் இந்தப் பிறவிகளும் இயக்குனர்களா?

படத்தில் சிறுவனாக நடித்தவனின் பெயர் Zahed

சிறுமியாக நடித்த ‘செல்லக்குட்டி’ யின் பெயர் GolGhotai

இந்த இருவருமே படங்களில் நடித்தவர்கள் அல்ல. தெருக்களில் பொறுக்கிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்த ஏழை சிறார்களே. இருவருக்கும் இதுதான் முதல் படம்.

ஆரம்பத்தில் சிறுவனுக்கு முக்கியத்துவம் தந்துதான் திரைக்கதை எழுதியிருக்கிறார் Marzieh Meshkini. நடிப்பதற்காக சிறுவர், சிறுமிகளை வரவழைத்து பார்த்தபோது, சிறுமி GolGhotaiயின் அபார திறமையைப் பார்த்து வியந்து போய் நின்று விட்டாராம் Marzieh. விளைவு? சிறுவனை இரண்டாவது கதாபாத்திரமாக ஆக்கி, முழு கதையையும் சிறுமியின் மீது ஏற்றி விட்டார்.

நடிப்பு அனுபவமே இல்லாத சிறுமி Gol Ghotai நடித்திருக்கிறார் பாருங்கள்! உண்மையிலேயே அதுதான் நடிப்பு! புதிதாக நடிக்க ஆசைப்படுபவர்கள் இந்தச் சிறுமியை ‘ஒரு நடிக்க கற்றுத் தரும் நூலாக’ நிச்சயம் எடுத்துக் கொள்ளலாம். என்ன இயல்பான நடிப்பு! என்ன அருமையான முக வெளிப்பாடு! என்ன சிறப்பான உரையாடலை வெளிப்படுத்தும் திறமை! இந்தச் சிறுமியின் உடலுடன் பிறந்திருக்கும் நடிப்புத் திறமைக்காகவே படத்தைப் பார்க்கலாம்.

பத்து படங்களை இயக்க வேண்டியதில்லை... ஒரே ஒரு படத்தை இயக்கினாலும், அது ஒரு முத்திரைப் படமாக இருக்க வேண்டும். ‘Stray Dogs’ படத்தின் மூலம் அதைத்தான் செயல் வடிவில் காட்டியிருக்கிறார் Marziyeh Meshkini. இந்தப் படத்தைப் பார்த்து எவ்வளவு காலம் ஆனாலும், படம் நம் மனங்களில் நிரந்தரமாக உயிர்ப்புடன் தங்கியிருக்கும். படத்தில் நடித்த சிறுவனும், சிறுமியும், படத்தை இயக்கிய Marziyeh Meshkiniயும், போரினால் பாதிக்கப்பட்ட பரிதாபமான ஆஃப்கானிஸ்தானும், அங்குள்ள மக்களின் துயரங்களும்தான்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.