Logo

தி மிரர்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6889
The mirror

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

The mirror - தி மிரர்

(ஈரானிய திரைப்படம்)

ரு பள்ளிக் கூடம் செல்லும் சிறுமியை மைய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்ட படம். 1997ஆம் ஆண்டில் திரைக்கு வந்து பல விருதுகளையும் அள்ளிச் சென்றது.

Jafar Panahi இயக்கிய இந்தப் படம், மாறுபட்ட திரைப் படங்களை வரவேற்பவர்கள் மத்தியில் இப்போதும் கூட தலையில் வைத்து கொண்டாடப்படுகிறது.

படத்தைப் பார்க்கும்போது இப்படியெல்லாம் கூட ஒரே ஒரு சிறுமியை மட்டுமே நம்பி ஒரு அருமையான திரைப்படத்தை உருவாக்க முடியுமா என்ற கேள்வி எல்லோரின் மனங்களிலும் உண்டாகும். மாறுபட்ட ஒரு கதைக் கரு இருந்து, அதற்கு அருமையான திரைக்கதை அமைத்து, அதை சீராக படமாக்கி விட்டாலே, ஒரு படம் மிகச் சிறந்த திரைப்படமாகி விடும் என்பதற்கு சரியான உதாரணம்- ‘The mirror’தான்.

உலகமெங்கும் பாராட்டப்பட்டு, உயர்ந்த இடத்தில் வைத்து போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இப்படத்தின் கதைதான் என்ன?

மினா பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருக்கும் ஒரு சிறுமி. பள்ளிக் கூடம் முடிந்து விட்டது. எல்லா மாணவிகளையும் அவரவர்களுடைய பெற்றோர் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். எப்போதும் உரிய நேரத்திற்கு வந்து சேரக் கூடிய மினாவின் தாய் அவளை அழைத்துச் செல்வதற்கு இன்னும் வரவில்லை.

மினா பள்ளிக் கூடத்தின் வாசலில் தன் அன்னையை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கிறாள். அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் அனைவரும் கிட்டத்தட்ட அங்கிருந்து போய் விட்டனர். மினா மட்டும்தான் அங்கு நின்று கொண்டிருக்கிறாள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியைகள் கூட அங்கிருந்து கிளம்பி விட்டனர்.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் மினாவின் தாய் வரவில்லை. பள்ளிக் கூடத்திற்கு முன்னால் இருக்கும் சாலை மிகவும் பரபரப்பாக இருக்கிறது. வாகனங்கள் ஏராளமாக சாலையில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன. பேருந்துகள், கார்கள், ஜீப்கள், மோட்டார் சைக்கிள்கள், வேன்கன், சைக்கிள்கள்... அவற்றில் ஆயிரக்கணக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள்... எல்லாவற்றையும் வெறித்து பார்த்துக் கொண்டே பள்ளிக் கூடத்தின் வாசலில் நின்றிருக்கிறாள் மினா.

மினாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எப்போதும் சரியான நேரத்திற்கு வந்து தன்னை அழைத்துச் செல்லும் தன்னுடைய தாய் இன்று ஏன் வரவில்லை என்ற காரணம் தெரியாமல் அவள் தவிக்கிறாள். அவளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. எனினும், அதை அடக்கிக் கொண்டு பரிதாபமாக அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் அவளின் ஒரு கையில் பெரிய கட்டு போடப்பட்டிருக்கிறது. கை மடக்கி கட்டு போடப்பட்டு, அதன் நுணி அவளுடைய கழுத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கையை மடக்கி வைத்திருக்கும் அவள் இன்னொரு கையில் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பள்ளிக்கூட பையை வைத்திருக்கிறாள்.

நேரம் கடந்து கொண்டிருக்கிறது. டெஹ்ரான் நகரம் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும், சத்தங்களுடனும், ஆரவாரங்களுடனும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இனிமேலும் தன் அன்னைக்காக காத்திருப்பது சரியாக இருக்காது என்று நினைக்கும் மினா, அங்கிருந்து கிளம்புவது என்று தீர்மானிக்கிறாள்.

சாலையைக் கடப்பதற்காக நிற்கிறாள். சிவப்பு விளக்கு மாற்றப்பட்டு, பச்சை விளக்கு எரிகிறது. வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சாலையைக் கடப்பதற்காக நிற்பவர்கள் மிகவும் வேகமாக சாலையைக் கடக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து ‘நம் செல்லக் குட்டி’ மினாவும் சாலையைக் கடக்கிறாள்.

சாலையின் ஓரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் மனதுடன் நின்றிருக்கிறாள் மினா. பரிதாபமான முகத்துடன் அழாத குறையாக நின்று கொண்டிருக்கும் அந்தச் சிறுமியைப் பார்க்கிறார் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் ஒரு மனிதர். தன்னை ‘ஜெனரல்’ என்று பெருமையாக அழைத்துக் கொள்ளும் அவர், அந்தச் சிறுமியை தன் வண்டியில் ஏறிக் கொள்ளும்படி கூறுகிறார். பேந்த பேந்த விழித்துக் கொண்டு, சாலையில் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்களைப் பார்த்தவாறு அந்த வண்டியில் பயணிக்கிறாள் மினா.

குறிப்பிட்ட தூரம் பயணம் செய்த பிறகு, அந்த வண்டி ஒரு விபத்தில் சிக்கிக் கொள்கிறது. மினா மோட்டார் சைக்கிளை விட்டு இறங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது.

அதற்குப் பிறகு எதுவுமே தெரியாமல், கண்ணில் பார்க்கும் பேருந்து ஒவ்வொன்றிலும் அவள் ஏறுகிறாள், இறங்குகிறாள். இப்படியே பல பேருந்துகள்... எந்த பேருந்தாக இருந்தாலும், அது தன்னைத் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு போய் சேர்க்கும் என்ற நினைப்பு அவளுக்கு.

பயணத்தின்போது, அவளுக்கு பல வகையான அனுபவங்கள் உண்டாகின்றன. அவளைப் பார்க்கும் எல்லோரும் அவளைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர். அவளிடம் இரக்கம் கொள்கின்றனர். அவளின் நிலைமையைப் பார்த்து மிகவும் வருத்தப்படுகின்றனர். தங்களால் முடிந்த அளவிற்கு அவளுக்கு உதவுவதற்கு முன் வருகின்றனர்.

ஒரு பேருந்தில் அவள் நின்று கொண்டே பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. கட்டுப் போட்ட கையுடன், பள்ளிக்கூட பையை வைத்துக் கொண்டு அவள் நிற்கிறாள். இப்படியே அவள் நீண்ட தூரம் கால் கடுக்க நிற்க வேண்டியதிருக்கிறது. அப்படி பயணம் செய்யும்போது, சுற்றிலும் அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும் பயணம் செய்யும் ஆண்களையும், பெண்களையும் அவள் பார்க்கிறாள். பேருந்தின் ஓட்டுனரையும், நடத்துனரையும், அவர்கள் எப்படி பேசுகிறார்கள், எப்படி பயணிகளிடம் நடந்து கொள்கிறார்கள் என்பதையும்.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் பேருந்திலிருந்து பலர் கீழே இறங்குகிறார்கள்... புதிதாக சிலர் பேருந்திற்குள் ஏறுகின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் கூர்ந்து கவனிக்கிறாள் மினா. அவர்கள் உரையாடுவதை அவள் மிகவும் கவனம் செலுத்தி கேட்கிறாள். அதன்மூலம் டெஹ்ரானில் வாழும் மக்கள், அவர்களின் வாழ்க்கை. அவர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள். கனவுகள், ஏமாற்றங்கள், சந்தோஷங்கள் அனைத்தும் காட்டப்படுகின்றன.

இப்படி எவ்வளவு நேரத்திற்குத்தான் ‘நம்ம பொண்ணு’ கால் வலிக்க பேருந்தில் நின்று கொண்டு, சிரமம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டு போவாள்’ என்று கவலையுடனும் பதைபதைப்புடனும் நாம் மினாவை கண்ணீர் மல்க பார்க்கும்போது, அவள் இந்தப் பக்கமாக திரும்புகிறாள்.

அப்போது, ‘மினா, கேமராவைப் பார்க்காதே!’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்கிறது. அதைத் தொடர்ந்து, மினா போலியாக கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்தெறிகிறாள். ‘இதற்கு மேல் நான் நடிக்க மாட்டேன். நான் வீட்டிற்குப் போகணும்’ என்று கூறியவாறு பேருந்தை விட்டு இறங்கி, வேகமாக நடக்கிறாள்.

இப்போதுதான் நமக்கே தெரிகிறது - இதுவரை நடந்தது படப்பிடிப்பு என்று. தங்களுடைய ‘குழந்தை நட்சத்திரம்’ முக்கால்வாசி படத்தின்போது ‘இனி நடிக்க மாட்டேன்’ என்று சொன்னால், அப்படத்தின் இயக்குனர் அதிர்ச்சியடைய மாட்டாரா?


‘The mirror’ படத்தின் இயக்குனர் Jafar Panahi அதிர்ச்சியடைகிறார். சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் மனக் குழப்பத்துடன் இருக்கிறார். பின்னர் என்ன நினைத்தாரோ- பள்ளிக் கூட பையுடனும், சீருடையுடனும் நடந்து செல்லும் மினாவைத் தொடர்ந்து, படப்பிடிப்பு குழுவை போகச் சொல்கிறார். கேமரா அவள் கோபத்துடன் நடந்து செல்வதைப் படம் பிடிக்கிறது. அவள் தன்னுடைய வீடு எங்கே இருக்கிறது என்று தேடுகிறாள். பலரிடமும் விசாரிக்கிறாள். அவர்கள் காட்டிய திசையில் நடக்கிறாள். அவளை கேமராவும் பின் தொடர்ந்து படம் பிடிக்கிறது. இறுதியில் அவள் தன்னுடைய வீட்டைக் கண்டு பிடித்து அங்கு போய் சேரும் வரை, அவளை கேமராவும் பின் தொடர்ந்து செல்கிறது.

படத்தில் இதுவரை இடம் பெற்ற காட்சிகள் படத்திற்காக உருவாக்கப்பட்டவையா அல்லது நடந்த காட்சிகளை கேமராவில் அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்துக் கொண்டார்களா என்ற சந்தேகம் நமக்கு இயல்பாகவே உண்டாகிறது. அதற்குக் காரணம்- தன்னை தினந்தோறும் அழைத்துச் செல்லும் தன்னுடைய தாய் அன்று வராமல் போனது, அதனால் உண்டான மனக் கவலை, துயரத்துடன் பள்ளிக் கூடத்திற்கு முன்னால் நின்று கொண்டிருப்பது, இறுதியில் வேறு வழியில்லாமல் வீட்டிற்குப் போவதற்கு வழி தேடுவது, பல வாகனங்களிலும் பயணிப்பது, பரிதாபமான தோற்றத்துடன் பேருந்தில் நின்று கொண்டிருப்பது... இப்படி அனைத்திலும் மினா மிகவும் இயல்பாக நமக்கு முன்னால் தோன்றுவதுதான். ஒரு இக்கட்டான சூழ்நிலையை அந்தச் சிறுமிக்கு உண்டாக்கி, அதைத் தொடர்ந்து அவள் என்னவெல்லாம் செய்கிறாள் என்பதை படப்பிடிப்புக் குழு தங்களின் போக்கில், அவளுக்கே தெரியாமல் படமாக எடுத்திருப்பார்களோ என்ற எண்ணம் இயல்பாகவே நமக்கு உண்டாகிறது.

‘நான் படத்தில் நடிக்க முடியாது’ என்று மினா கூறும் காட்சியிலிருந்து அவள் இதுவரை நடந்து வந்ததற்கு முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். முன்னர் நடைபெற்ற காட்சிகளின் தொடர்ச்சியாக, படப்பிடிப்பு குழுவே எதிர்பார்க்காமல் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் திருப்பத்தைத் தொடர்ந்து, அடுத்து வரும் சம்பவங்கள் நடக்க, அவற்றையும் அக்குழு பதிவு செய்து கொண்டதோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு-

பிற்பகுதியில் வரும் ஒரு காட்சியில் மினா ஒரு வயதான கிழவியைச் சந்திக்கிறாள். அவள் மினாவுடன் பேருந்தில் பயணம் செய்தவளே. தன்னைப் பற்றி சிறிதும் கவலைப்படாத தன்னுடைய பிள்ளைகளைப் பற்றியும், தன்னுடைய துயரம் நிறைந்த வாழ்க்கையைப் பற்றியும் அவள் பேருந்தில் புலம்பிக் கொண்டு வந்தாள். அதை நாமும் பார்த்தோம், கேட்டோம். இப்போது  மினா அதே கிழவியைத் தெருவில் பார்க்கும்போது, அத்தகைய துன்பம் நிறைந்த வாழ்க்கையைத்தான் அந்தக் கிழவி வெளியே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அப்படியென்றால் பணம் கொடுக்கப்பட்டு அவள் வசனம் பேசவில்லை என்பது தெரிகிறது. அந்த கிழவி தன்னுடைய சோக வாழ்க்கையை பேருந்தில் மற்றவர்களிடம் கூறி புலம்பியிருக்கிறாள், அதை படப்பிடிப்புக் குழு படமாக்கி விட்டது என்றுதான் வெளியே இருக்கும் அவளுடைய உண்மையான வாழ்க்கையைப் பார்க்கும்போது நமக்கு நினைக்கத் தோன்றுகிறது.

ஒரே படத்தில் Fictionஐயும் Realityஐயும் காட்டி, இரண்டிற்குமிடையே இருக்கும் வேறுபாட்டையும் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குனரின் திறமையை நாம் கட்டாயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

பெண்களைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றியும், மாறி வரும் சூழல்களால் அவர்கள் மத்தியில் உண்டாகியிருக்கும் மாற்றங்கள் பற்றியும் இப்படத்தில் ஆழமாகவே அலசப்படுகிறது.

படத்தின் இறுதி பகுதியில் ஒரு வண்டியில் பயணிக்கும் காட்சி வருகிறது. வண்டியின் ஓட்டுனரும் அதில் பயணிக்கும் பயணிகளும் ஆண்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும், சமுதாயத்தில் அவர்களுடைய பங்களிப்பு பற்றியும் விவாதித்துக் கொண்டு வருகிறார்கள். பழைய பழக்க வழக்கங்கள் அப்படியே இருக்க, புதிதாக உண்டான சில மாறுதல்கள் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கின்றன என்பதைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர். வண்டியில் அமர்ந்திருக்கும் ஒரு பெண், எந்தப் பெண்ணும் தன்னுடைய கணவனுக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்கிறாள். அவள் வெறுமனே வீட்டைப் பார்த்துக் கொண்டிருப்பவளோ, வேலைக்காரியோ அல்ல என்கிறாள். கணவர்கள் தங்களின் மனைவிகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்கிறாள். வண்டியின் ஓட்டுனரும், இன்னொரு மனிதனும் அவள் கூறியதற்கு எதிராக பேசுகிறார்கள். ஆண்கள் வெளியே பணம் சம்பாதித்துக் கொண்டு வர வேண்டும், பெண்கள் வீட்டை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள் அவர்கள். புதிய சூழ்நிலைகளும், புதிதாக உண்டாகியிருக்கும் மாறுதல்களும் எந்த அளவிற்கு இதுவரை நிலவி வந்திருக்கும் வாழ்க்கையின் போக்குகளை பலமாக பாதித்திருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இதற்கு நேர் மாறாக, பேருந்தில் ஆண்களும் பெண்களும் தனித் தனியாக பிரித்து அமர வைக்கப்பட்டிருக்கின்றனர். படத்தில் ஒரு சுவாரசியமான காட்சி. மினா பேருந்தில் அமர்ந்திருக்கும் அனைவரையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு வருவாள். இந்தப் பக்கம் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞன், அந்தப் பக்கம் அமர்ந்திருக்கும் ஒரு இளம் பெண்ணைப் பார்த்து புன்னகைப்பான். அதே மாதிரி, அவனைப் பார்த்து அவளும் புன்னகைப்பாள். ‘அவர்கள் சட்டத்தால் பிரிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், பார்வைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்’ என்ற அந்த காட்சி படம் பார்த்து முடிந்த பிறகும், நம் மனதில் தங்கி நிற்கும்.

மைக்ரோஃபோனை திரும்ப கொடுத்து விட்டு தன்னுடைய வீட்டிற்குள் செல்லும் சிறுமி மினாவின் கதையை திரைப்பட வடிவத்தில் பிரதிபலித்திருக்கிறார்கள். அதனால்தான் படத்திற்குப் பெயர் ‘The Mirror’.  மினாவின் கதையுடன் பல ஆண்களின், பெண்களின் கதைகளும் சேர்ந்து இதில் பிரதிபலிக்கப்பட்டு விடுகின்றன.

மினாவாக வந்து நம் இதயங்களில் என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமியின் பெயர் - Mina Mohammad Khani.  அடடா...! என்ன திறமை! எத்தனை வருடங்களானாலும், இந்த அழகு பெட்டகத்தை நம்மால் மறக்க முடியுமா?

படம் முழுக்க மினா... மினா... மினா... அவள்தானே படமே!

Locarno International Film Festival, Istanbul International Film Festival, Singapore International Film Festival ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் சிறந்த இயக்குனருக்கான விருதை ‘The Mirror’ படத்திற்காக பெற்றார் Jafar Panahi.

நட்சத்திர கும்பலையே படத்தில் வைத்து, தோல்விப் படங்களை தந்து கொண்டிருக்கும் நம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் ஒருமுறையாவது ‘The mirror’ போன்ற படங்களை கட்டாயம் பார்க்க வேண்டும். ‘அப்போதுதான் அவர்களுக்கு இப்படியெல்லாம் புதுமையாக படத்தை இயக்கலாம் போலிருக்கிறது!’ என்ற அறிவே உண்டாகும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.