
இளையராஜா வைத்துக் கொடுத்த கேசட் கடையை இழுத்து மூடியவர்!
சுரா
வாழ்க்கையின் இறுதி மூச்சு வரை வெற்றிக்கான பாதையில் நடந்து சென்றிருக்க வேண்டிய ஒரு கலைஞன் அந்தப் பாதையில் நடந்து போவதற்கான வாய்ப்பையே இழந்துவிட்ட ஒரு சோகக் கதையை இப்போது கூறுகிறேன்.
அந்த சோகக் கதையின் கதாநாயகன்- இசையமைப்பாளர் இளைய கங்கை. இந்தப் பெயரில் சொன்னால்தான் எல்லோருக்கும் அவரைத் தெரியும் என்பதால் இப்படிக் குறிப்பிடுகிறேன். அவரின் உண்மைப் பெயர் இது அல்ல. இது சினிமாவிற்காக அவர் வைத்துக் கொண்ட பெயர்.
இளையகங்கையின் உண்மைப் பெயர் ஸ்டாலின். இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜனின் மகன்தான் இவர். தன்னுடைய தந்தையின் பெயரையும் சேர்த்து ஸ்டாலின் வரதராஜன் என்று தன் பெயரை வைத்துக் கொண்டிருந்தார்.
அவருடைய தந்தையின் முகச் சாயலை அப்படியே கொண்டிருந்தார் ஸ்டாலின். ஒல்லியான உடம்பு, கூர்மையான பெரிய கண்கள், கரிய நிறம், மஞ்சள் நிறத்தில் பற்கள், வெளிப்படையான சிரிப்பு, மதுரை மண் வாசனை வீசும் தமிழ்- இதுதான் ஸ்டாலின் வரதராஜன்.
1979ஆம் ஆண்டில் 'நூலறுந்த பட்டம்' என்ற படத்தின் மூலம் அவர் இசையமைப்பாளராக படவுலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த படம் அது. ஸ்டாலின் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு விட்டன. பாடல்களைக் கேட்டேன். கிராமத்துப் பின்னணியில் அமைந்த பாடல்களுக்கு மிகவும் அருமையாக இசையமைத்திருந்தார் ஸ்டாலின். தேனி, கம்பம் பகுதிகளில் அப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது விஜயகாந்த், படவுலக வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் இருந்தார். அதற்கு முன்பு விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'தூரத்து இடி முழக்கம்' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. முற்றிலும் முடிவடைந்துவிட்ட 'நூலறுந்த பட்டம்' படத்தை நான் பார்த்தேன். குறை சொல்ல முடியாத அளவிற்கு அப்படம் இருந்தது. ஸ்டாலின் வரதராஜன் இசையமைத்த பாடல்கள் படத்தின் காட்சிகளுடன் மிகவும் அருமையாகப் பொருந்தியிருந்தன. 'வானுயர்ந்த சோலையிலே...' என்றொரு பாடல் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தது. அந்தப் பாடலின் மெட்டுக்குச் சொந்தக்காரர் பாவலர் வரதராஜன். அதே மெட்டில் அமைந்த பாடலை பாவலர் வரதராஜனே பாட, 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது போடிநாயக்கனூரில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சார கச்சேரியில் நான் கேட்டிருக்கிறேன். அந்தச் சமயத்தில் நான் அங்கு ஐந்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாவலர் வரதராஜனுடன் அவருடைய சகோதரர்கள் இளையராஜா, பாஸ்கர், கங்கை அமரன் மூவரும் மேடையில் அமர்ந்திருந்த காட்சி இப்போதுகூட என் மனத்திரையில் ஓடுகிறது. தன் தந்தையின் அந்தப் பாடலின் மெட்டை மட்டும் அப்படியே வைத்துக் கொண்டு, வரிகளை சூழ்நிலைக்கேற்ப மாற்றி சரியான இடத்தில் பொருந்தும்படி ‘நூலறுந்த பட்டம்’ படத்தில் இடம் பெறச் செய்திருந்தார் ஸ்டாலின்.
எனினும், பலவித காரணங்களாலும், அந்தப் படம் இன்று வரை திரைக்கு வரவில்லை. ஸ்டாலின் வரதராஜனின் கலையுலகக் கனவு ஆரம்பத்திலேயே சோதனைக்குள்ளாகிவிட்டது.
அதற்குப் பிறகு 'நீறு பூத்த நெருப்பு' படத்திற்கு அவர் இசையமைத்தார். அவர் அந்தப் படத்திற்கு நன்றாகவே இசையமைத்திருந்தார். எனினும், வர்த்தக ரீதியாக அப்படம் வெற்றி பெறாததால், அவரது திறமை வெளியே தெரியாமலே போய்விட்டது.
பட வாய்ப்புக்காக பல இடங்களில் ஏறி, இறங்கி சிரமப்பட்டுக் கொண்டிருந்த ஸ்டாலினுக்கு மதுரையில் ஒரு ஆடியோ கேசட் கடை வைத்துக் கொடுத்தார் இளையராஜா.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்டாலினை சென்னையில் பார்த்தேன். மதுரையில் நடத்திய ஆடியோ கேசட் கடையை இழுத்து மூடிவிட்டதாகக் கூறினார். 'படங்களுக்கு இசையமைக்காமல் எப்படி தலைவரே, ஒரு கடைக்குள் முடங்கிக் கிடக்க முடியும்?' என்றார் என்னிடம்.
விஜயகாந்தைப் பார்த்து வாய்ப்பு கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்- அவர் கதாநாயகனாக நடித்த 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்குக் கிடைத்தது. அப்போதுதான் இளையராஜா பெயரையும், கங்கை அமரன் பெயரையும் கலந்து, இளைய கங்கை என்று தன்னுடைய பெயரை அவர் மாற்றிக் கொண்டார்.
இனி நாமும் இளைய கங்கை என்று அவரை அழைக்க வேண்டியதுதான். விஜயகாந்த் நடித்த அந்தப் படம் சரியாக ஓடவில்லை. மீண்டும் இளைய கங்கைக்கு சோதனை.
சில வருடங்களுக்குப் பிறகு விக்னேஷ் கதாநாயகனாக நடித்த 'மனதிலே ஒரு பாட்டு' என்ற படத்திற்கு இசையமைத்தார். அதுவும் ஓடவில்லை.
கடைசியாக அவர் இசையமைத்த படம்- 'காதலுக்குத் தலை வணங்கு'. ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்துக் கொண்ட நானும் இளையகங்கையும் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டோம்.
ஒரு நாள் இரவு சுமார் 11 மணி அளவில் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் அவரைப் பார்த்தேன். ஆட்டோவில் வந்து கொண்டிருந்த நான், அவரைப் பார்த்ததும் இறங்கினேன். மது அருந்திய நிலையில் இருந்த அவர், என் கைகளை நட்புணர்வுடன் பிடித்து ஐந்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அதுதான் நான் அவரை இறுதியாக பார்த்தது.
அந்தச் சம்பவத்திற்கு பிறகு சில நாட்கள் கழித்து, 'தினகரன்' நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தேன். இளையகங்கை மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவி விட்டார் என்ற செய்தி அதில் பிரசுரமாகியிருந்ததைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். ஸ்டாலின் வரதராஜன் என்ற இளையகங்கை இந்த மண்ணை விட்டு நீங்கியிருக்கலாம். ஆனால், அவருடைய முகமும், சிரிப்பும், கள்ளங்கபடமற்ற மதுரை மனம் கலந்த பேச்சும் என் மனதில் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர் இசையமைத்த பாடல்களின் வரிகளும்தான்....
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook