Logo

ஜல சமாதி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6546
Jala Samathi

டு இரவில், நான்கு- பன்னிரண்டுக்கான ஷிஃப்ட் முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்தான் முனுசாமி. சைக்கிள் பழுதாகி விட்டிருந்தது. அதை சரி செய்ய வேண்டுமென்றால் அடுத்த சம்பளம் வரை காத்திருக்கவேண்டும். மங்கலான கிராமத்து வெளிச்சத்தின் வழியாக, மரங்களின் குளிரைத் தாண்டி, நான்கரைமைல் அவன் நடந்தேயாக வேண்டும். போத்திக்கலுங்கு வரை- அதாவது ஒன்றரை மைல் தூரம் வரை தன்னுடைய சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வரலாமென்று கருப்பையன் சொன்னான்.

நல்ல சுறுசுறுப்பான பையன் அவன். பி.யூ. சின்னப்பாவின் ஏதோ ஒரு பழைய பாட்டை உரத்த குரலில் பாடியவாறு கருப்பையன் அழுத்தி சைக்கிளை மிதிக்கும்போது எதிரில் காற்று வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தது.

கருப்பையன் மூக்கின் ஒரு ஓட்டையை அடைத்துக்கொண்டு  சின்னப்பா, சுந்தராம்பாள் ஆகியோரின் உண்மையான குரலை வரவழைப்பான். பாட்டுக்களைப் பாடிக் கொண்டிருக்கும்போது இடையில் அவற்றை நிறுத்திவிட்டு ஏதாவது வசனம் பேசுவான். நடிகர் திலகத்தின் அருமையான வசனங்களெல்லாம் அவனுக்கு மனப்பாடமாக இருக்கும். ஆனால், "பராசக்தி”யின் வசனத்தைவிட அவனுக்கு "மனோகரா”வில் சங்கிலியை உடைத்தெறிந்து தூண்களை கீழே விழச் செய்யும்போது பேசும் வசனங்கள்மீதுதான் விருப்பம் அதிகம்.

கூர்மையான கற்கள் சிதறிக் கிடக்கும் பாதை வழியாக, இருக்கையிலிருந்து தன்னுடைய பின் பகுதியைச் சற்று உயர்த்தி, பாதி எழுந்திருந்து அழுத்தி மிதிக்கும்போது, இந்த உலகத்திலேயே மிகவும் பிடித்தமான வாகனம் தன்னுடைய சைக்கிள்தான் என்ற உறுதியான எண்ணத்தில் இருப்பான் கருப்பையன். அவனுடைய உடம்போடு அந்த அளவிற்கு அந்த சைக்கிள் ஐக்கியமாகி விட்டிருந்தது. வேலாண்டி பட்டியின் மாட்டுச் சந்தையில் தொடர்ந்து நூறு மணி நேரம் நிறுத்தாமல் சைக்கிள் ஓட்டியதால் கிடைத்த புகழைக்கூட அவன் இதுவரை அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மழை தூறிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் நூறு மணி நேரம் முடிந்தபோது, மக்கள் ஆரவாரம் செய்து அவனைச் சுற்றி கூடினார்கள். அப்போது அவனைப் பெற்ற தாய் வேகமாக ஓடி வந்து நெஞ்சிலடித்துக் கொண்டு அவனைப் பிடித்து இறக்கவில்லையென்றால், அதற்குப் பிறகும் நூறு மணி நேரம் அவன் சைக்கிளை ஓட்டிக் கொண்டிருப்பான். அந்தச் சமயத்தில் வேலாண்டிப்பட்டியில் கிடைத்த பெருமையுடன் அவன் அதற்குப் பிறகு ஜவ்வாதுப் பட்டிக்குப் போனான்.

எருமைப் பாலத்தை தாண்டியவுடன் மங்கலான கிராமத்து வெளிச்சத்தில் உயரமாக வளர்ந்திருந்த புளிய மரங்களின் நிழல் படர்ந்த ஒரு சிறிய திருப்பம் வந்தது. அங்கிருந்து இறக்கத்தில் செல்ல வேண்டும். இருள் குகைக்குள்- அகலம் குறைவான கிராமத்துப் பாதையில் பயணம் செய்ய வேண்டும்.

கருப்பையன் சைக்கிளை விட்டு இறங்காமல் கால்களை ஊன்றியவாறு நின்றான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்திலும் கழுத்திலும் இருந்த வியர்வையையும் பனியையும் துடைத்தான். முனுசாமி பின்னாலிருந்த இருக்கையிலிருந்து இறங்கினான். அந்தத் திருப்பத்திலிருந்து மூன்று மைல் தூரம் கிழக்கு திசையில் சைக்கிளை மிதிக்க வேண்டும். கருப்பையனின் கிராமத்திற்குப் போக எவ்வளவு தூரம் இருக்கிறதோ அவ்வளவு தூரம் முனுசாமியின் வீட்டிற்கும் இருக்கும்.

சைக்கிளை அப்படியே திருப்பி ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி கருப்பையன் நின்றான். அவன் என்னவோ தீவிரமாக சிந்திப்பதைப் போல் இருந்தது. ஒரு பீடியைப் பற்ற வைத்து வேகமாக இழுத்த அவன் மெதுவான குரலில் சொன்னான்:

“நான் கொண்டு விடுறேன் அண்ணே.'' அவன் பருமனான உடலைக் கொண்டிருந்தாலும், அவனுக்கு கிளியின் குரல்தான் இருந்தது.

தேவையில்லை என்று தலையை ஆட்டினான் முனுசாமி. அந்த நடு இரவு நேரத்தில் பெரிய பெரிய கற்கள்மீது இனியும் மூன்று மைல் தூரம் சைக்கிளை மிதித்துப்போவது, பிறகு திரும்பி வருவது... வயது குறைவானவனாக இருந்தாலும், அவனுக்கு இரவு வேலையால் உண்டான களைப்பு இருக்கத்தானே செய்யும்?

கருப்பையன் மீண்டும் சந்தேகமான குரலில் கேட்டான்: “எனக்கு எந்த கஷ்டமும் இல்லை அண்ணே. நான் தயார்!''

“வேண்டாம். நீ போயி படுத்துத் தூங்கு.''

“இந்த நேரத்துல நீங்க அவ்வளவு தூரம்...?''

“அதுக்கென்னடா. தெரிஞ்ச வழிதானே?''

நன்கு பழகிப்போன வழியில் தனக்கு துணையாக வருவதற்கு அந்தப் பையன் தயாராக இருக்கிறானே என்பதை நினைத்தபோது முனுசாமிக்கு சிரிப்பு வந்தது.

என்னவோ கூறவேண்டுமென்று நினைத்து அதை உடனே கூறாமல் தயங்கியவாறு நின்றிருந்தான் கருப்பையன்.

“வீட்டுக்குப் போடா, கண்ணா.'' முனுசாமி பாசத்துடன் அவனு டைய முதுகைத் தட்டினான். “உன் பொண்டாட்டி உனக்காக காத்திருப்பா. அதுவும் புதுசா கல்யாணமான பொண்ணு...''

“அது ஒரு பக்கம் இருக்கட்டும். கேளுங்கண்ணே. இது நேரம் கெட்ட நேரம். ரொம்பவும் மோசமான காலம் இது. நீங்க தனியா போக வேண்டாம்.''

முனுசாமி தன்னையே அறியாமல் அதைக் கேட்டு நடுங்கி விட்டான். இதே வார்த்தைகளைத்தான் தொழிற்சாலையில் அந்தக் காலத்திலிருந்து அவனுடன் பணியாற்றும் ஜம்புவும் கூறினான். ஒருமுறை அல்ல, பலமுறை.

“ரொம்பவும் மோசமான காலம். கவனமா போங்க அய்யா.'' மிகவும் முரட்டுத்தனமான குரலைக் கொண்டவன் ஜம்பு. அதைக் கேட்கும்போது காதுக்குள் குடைச்சல் எடுப்பதைப்போல் இருக்கும்.

இளம் வயதில் வெளியூரைச் சேர்ந்தவர்களுடன் ஆற்று மணலில் படுத்து சண்டை போட்டுப் போட்டே தன்னுடைய உடம்பைக் கட்டுமஸ்தாக ஆக்கிக் கொண்ட ஜம்பு எதற்கும் கலங்கக் கூடியவனில்லை. எதையும் எதிர்கொள்வதற்கு எப்போதும் தைரியமாக இருக்கக்கூடியவன். ஆனால், என்ன காரணத்தாலோ இப்போது ஜம்பு கூறிய வார்த்தைகளில் ஏதோ ஒரு நடுக்கம் இருப்பதை முனுசாமியால்  உணரமுடிந்தது.

அதற்குமேல் எதுவும் கூறாமல் அந்த நிமிடமே ஜம்பு அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டாலும் அவன் சொன்னதன் அர்த்தத்தைப் பின்னர்தான் முனுசாமியால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை அவனுக்கு ஐம்பத்தொன்பது வயது ஆரம்பிக்கிறது.

இங்கு ஐம்பத்தொன்பது வயது என்பது பெரிய ஒரு திருப்பத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தது.

கடந்த பத்து, பன்னிரண்டு வருடங்களுக்குள் ஐம்பத்தொன்பது வயதைக் கடந்த எட்டு தொழிலாளிகள் நீரில் மூழ்கி இறந்திருக்கின்றனர்.

ஒவ்வொருவரும் போய் விழுவது அவர்களுக்குச் சிறிதும் அறிமுகமில்லாத பாழும் கிணறுகளில் என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க விஷயம். அவர்களை விழுங்குவதற்கு காற்றும் வெளிச்சமும் இல்லாத நீர்ப்பரப்பின் இருண்ட ஆழம் தயாராக இருந்தது.

சுற்றுப் பாதைகளிலிருந்த ஊர்களில் முட்செடிகள் வளர்ந்திருக்கும் தரிசு நிலங்களில் இப்படி எத்தனையோ பாழும் கிணறுகள். அவற்றில் சில மிகவும் ஆழம் கொண்டவையாக இருக்கும். சிலவற்றில் ஆழம் மிகவும் குறைவாக இருக்கும்.


ஐம்பத் தொன்பது வயதைக் கொண்ட ஒரு மனிதனை உள்ளே இழுப்பதற்கு எவ்வளவு நீர் இருக்க வேண்டும் என்று யாரும் கணக்கு போட்டுக் கூறவில்லை. ஆசையற்ற மனிதர்களின் உடல்களை எடுத்துக் கொள்ளும் நீருக்கு, ஈவு, இரக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

வாஸ்துவால் உண்டாகும் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்று யாரோ கூறினார்கள். தொழிற்சாலையில் பிரதான கட்டடம் இருக்கும் இடத்தில் முன்பு சுடுகாடு இருந்தது என்று வேறொரு ஆள் கண்டுபிடித்துக் கூறினார். செட்டியார்கள் அவசர அவசரமாக வாஸ்து பார்க்கும் மனிதரை அழைத்துக்கொண்டு வந்து பிரதான வாயில் இருக்கும் இடத்தை கிழக்கு மூலைக்கு மாற்றியபோது, அலுவலக நிர்வாகி அய்யர்வாள் எதுவும் கூறவில்லை. அமைதியாக உட்கார்ந்து கொண்டு வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியைத் தட்டிக் கொண்டே என்னவோ மெதுவான குரலில் பாடிக் கொண்டிருந்தார்.

தூய வெண்மை நிறத்தில் பருமனான உடலைக் கொண்ட, பஞ்சு போன்ற நீளமான தலைமுடியையும் நரைத்த அடர்த்தியான புருவங்களையும்  கொண்ட ஒரு மனிதர் அய்யர்வாள்.

யாராவது கிணற்றில் விழும்போது மட்டும்தான் தூரத்திலிருக்கும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு ஒரு வாகனம் புறப்பட்டு வரும். குண்டும் குழியுமாக இருக்கும் கிராமத்துப் பாதைகள் வழியாக சாய்ந்தும் முனகிக் கொண்டும் வந்துசேரும் அந்தப் பழைய ஜீப்... கஞ்சிப் பசையின் அடையாளம் மறையாமல் விறைத்துக்கொண்டிருக்கும் ஆடைகளுடனும் தூக்கக் கலக்கத்துடனும் இருக்கும் போலீஸ்காரர்கள்...

தற்கொலைதான். போலீஸ்காரர்களுக்கு ஒருமுறைகூட இந்த விஷயத்தில் சந்தேகம் உண்டாகாது. தற்கொலைகள் அதிகமாக நடக்கக்கூடிய ஊர் அது. அங்குள்ளவர்கள் எப்போதும் நிம்மதி தேடிக் கொள்வது ஜலசமாதி மூலம்தான்.

நேரம் அதிகம் ஆகிவிட்டிருந்தது.

“போடா கண்ணு...''

தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதைப்போல முனுசாமி கருப்பையனின் முதுகைத் தட்டினான். மஃப்ளரைத் தலையில் இறுகக் கட்டி, கொட்டாவி விட்டவாறு கருப்பையன் சைக்கிளில் ஏறினான். சக்கரங்கள் மீண்டும் கிறீச்சிட்டன. மெதுவாக தலையை ஆட்டியவாறு பி.யூ. சின்னப்பாவுடன் உறவு கொண்டு அவன் இருட்டுக்கு மத்தியில் பாதையில் செல்வதைப் பார்த்தவாறு நின்றிருந்தான் முனுசாமி.

அடுத்த நிமிடம் முனுசாமி வேகமாக நடக்க ஆரம்பித்தான். மிகவும் களைப்பாக இருந்தது. தூக்கம் வந்து கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் நிழல் விரித்து நின்று கொண்டிருந்த  பெரிய புளிய மரங்களுக்கப்பால் எதையும் தெளிவாக அவனால் பார்க்க முடியவில்லை. மங்கலான வெளிச்சத்தில், மிகவும் அருகில் முன்னால் அந்த பழைமையான கிராமத்துப் பாதை தெரிந்தது. கால்கள் வழி தவறிப் போக வாய்ப்பில்லை. எத்தனையோ வருடங்களாக நடந்து போன பாதை அது. தொழிற்சாலை வருவதற்கு முன்பு சுற்றிலும் கரும்புத் தோட்டங்கள் இருந்த பகுதி அது. சொல்லப்போனால் அப்போது பாதை என்று கூறுவதற்கு அங்கு எதுவுமில்லை. அகலம் குறைந்த சில வரப்புகள் இருக்கும். அவ்வளவுதான்.

ஆவணி மாதத்தில் ஒரு புலர்காலைப் பொழுதில் வேகமாக சீறியவாறு வந்த மூன்று நான்கு வண்டிகளிலிருந்து கூட்டமாக வேறு இடத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்து இறங்கியது அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. என்னவோ வினோதமான மொழிகளில் பேசிய, பலவிதப்பட்ட மனிதர்களாக அவர்கள் இருந்தார்கள். தரிசாகக் கிடந்த, குண்டும் குழியுமாக இருந்த அந்த கரடுமுரடான இடத்தை வெட்டி சீராக்கி சமநிலைப்படுத்திய சம்பவம் மிகவும் சீக்கிரமாக நடந்தது. பூமியைப் பிளந்த பெரிய இயந்திரங்கள் போட்ட கோடுகளில் கட்டடங்கள் எழுந்தன. அவற்றுக்கு மேலே தகதகவென மின்னிக் கொண்டிருக்கும் மேற்கூரைகள் போடப்பட்டன. பருமனாக நீண்ட புகைக் குழாய்கள் பொருத்தப்பட்டன. அதற்குப் பிறகு நீளமான லாரிகளில் பெரிய பெரிய இயந்திரங்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தன.

இரவும் பகலும் மின்னும் வெளிச்சமும் சத்தமும் ஆரவாரமும் என்றாயின. ஆள் அரவமில்லாமல் இருந்த அந்த மலைச்சரிவு ஏதோ வேறொரு உலகத்தைச் சேர்ந்த சக்திகளின் கையில் அகப்பட்டு விட்டதைப்போல், அந்த இடம் புத்துணர்ச்சி பெற்று குதூகலத்து டன் காட்சியளித்தது.

பிறகு உயரமான குழாய்கள் வானத்தில் புகையைக் கக்கத் தொடங்கியதுடன் பழைய கரும்புத் தோட்டங்களைப் பற்றிய காட்சிகளை எல்லாரும் மறந்து விட்டார்கள்.

மெல்லிய காற்று வீசிக்கொண்டிருந்தது. ஒருமுறை தும்மல் வந்ததும் முனுசாமி கழுத்திலிருந்த மஃப்ளரை எடுத்து காதுகளை மூடி சுற்றிக் கட்டினான். தலையில் முன்பகுதியில் முடி முழுமையாக போனபிறகுதான் குளிர்காலங்களில் கம்பளி ஆடைகளின் முக்கியத்துவமே தெரிகிறது.

இருட்டின் ஆழங்களிலிருந்து நரிகள் ஊளையிட்டன. தலைக்குச் சற்று மேலே வவ்வால் ஒன்று சிறகடித்துப் பறந்து போனதைப் பார்த்து முனுசாமி அதிர்ச்சியடைந்தான். அவனுக்கு முன்னால் ஒரு நிறம் மங்கிப் போன புடவையைப்போல அந்த கிராமத்துப் பாதை காட்சியளித்தது. இரு பக்கங்களிலும் எதுவும் தெரியாத அளவிற்கு இருள் கருமையாகப் படர்ந்திருந்தது.

ஒரு டார்ச் விளக்கைக் கையில் எடுத்து வந்திருக்கலாம் என்று முனுசாமி அப்போது நினைத்தான். பீடியைப் பற்ற வைத்த தைரியத்தில் இருட்டைப் பார்த்து உரக்க அவன் இருமினான். அந்தச் சத்தம் மலையின் பள்ளத்தாக்குகளில் மோதி, சிறுசிறு துண்டுகளாகச் சிதறி இருட்டின் பல மூலைகளையும் நோக்கிப் பரவுவதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய நடையின் வேகத்தை அதிகரித்தான்.

திடீரென்று பின்னால் என்னவோ சத்தம் கேட்பதுபோல் இருந்தது. முனுசாமி திகைத்துப் போய் நின்றுவிட்டான்.

“யார்டா அங்கே?''

அடித்தளத்திலிருந்து வார்த்தைகள் வந்தன. தன்னுடைய குரலையே அறிமுகமில்லாததைப்போல் உணர்ந்து அவன் நடுங்கினான்.

அந்த நிமிடமே கால்களுக்கு வேகம் அதிகரித்தது. பாதங்கள் பட்டு உருளைக் கற்கள் நழுவி விழுந்தன. தடுமாறி விழாமல் அழுத்தி மிதித்தவாறு நடந்து கொண்டிருந்தபோது அவனுடைய பழைய  செருப்பின் வார்கள் இறுகி வேதனையைத் தந்தன. அவன் தன்னையே அறியாமல் உரத்த குரலில் கத்தினான்:

“முருகா... காப்பாத்துங்க...''

வானத்தில் மேகங்கள் ஒன்று கூடியபோது கொஞ்ச நஞ்சமிருந்த இயற்கை வெளிச்சமும் இல்லாமல் போனது. இருள்படர்ந்த கிராமத்துப் பாதைகள் வழியாக தன்னுடைய கால்கள் தானாகவே நடந்து போய்க்கொண்டிருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது.

கைகளை வீசியவாறு உரத்து காற்றை சுவாசிக்கும்போது, அவனுக்குள்ளிருந்து ஒரு அழுகை புறப்பட்டு வந்தது.

“முருகா!''

கிணற்றுக்குள்ளிருந்து தூக்கி பனையோலையில் படுக்க வைத்திருந்த முத்துவின் முகம் அப்போது அவனுடைய ஞாபகத்தில் வந்தது. நீரைக் குடித்து வயிறு வீங்கிப் போயிருந்தது. முகமும் வீங்கிக் காணப்பட்டது. முந்தைய நாள் நெற்றியில் வைத்த குங்குமமும் விபூதியும் சற்று அழிந்துபோய் காட்சியளித்தன.

விழித்துக்கொண்டிருந்த கண்களில் பயம் தெரிந்தது.

அந்த பயம்தான் பிறகு பல இரவுகளிலும் முனுசாமியை தூங்க விடாமல் செய்தது.


முத்துவின் தலையின் பின் பாகத்தில் இருந்த பெரிய காயத்தைச் சுட்டிக் காட்டியவாறு சுற்றிலும் நின்று கொண்டிருந்தவர்கள் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். காயத்தைச் சுற்றி ரத்தம் கட்டியிருந்தது.

ஆட்கள் தங்களுக்குள் பேசிக் கொள்வது அதிகமானவுடன், முத்துவின் மூத்த மகன் ஆறுமுகம் முன்னால் வந்து சொன்னான்:

“கிணத்துக்குள்ளே பெரிய கல் இருக்கு. பாருங்க.''

அவன் சொன்னது சரிதான். செடிகள் அடர்ந்திருந்த கிணற்றின் கற்சுவருக்குள் கூர்மையான ஒரு கல் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

ஆறுமுகத்தின் முகமும் கல்லைப்போலவே இருந்தது. கவலை நிறைந்த கண்கள் வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. அவனுடைய மனதிற்குள் இருந்த குழப்பத்தை ஊர்க்காரர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பெரிய குடும்பத்தின் சுமை முழுதும் இனிமேல் அவன் மீது தானே!

முத்துவின் உடலை கம்பெனியைச் சேர்ந்த ஆம்புலன்ஸில் ஏற்றியபோது உண்டான அழுகையை முனுசாமியால் அடக்க முடியவில்லை. அப்போது பின்னாலிருந்து அவனை யாரோ தொட்டார்கள்.

தொட்டது அய்யர்வாள்தான்.

“அழக்கூடாது.'' அய்யர்வாளின் குரல் மிகவும் சாந்தமாக இருந்தது. “அவன் எவ்வளவோ கொடுத்து வச்சவன்னுதான் சொல்லணும். இந்த மாதிரி ஒரு ஜலசமாதி கிடைக்குதுன்னா, அவாளோட குடும்பம் செய்திருக்குற புண்ணியம்னுதான்- இந்த ஊர் செய்திருக்குற புண்ணியம்னுதான் சொல்லணும்...''

எல்லாரும் மிகவும் அமைதியாக அய்யர்வாளின் வார்த்தை களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மாதத்திற்குள் அய்யர்வாளின் கையிலிருந்து வேலையில் சேருவதற்கான பேப்பரைக் கையில் வாங்கியபோது ஆறுமுகம் தரையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். கண்களில் அதே  உயிரற்ற வெளிப்பாடு அப்போதும் இருந்தது. அய்யர்வாளும் அவன் முகத்தைப் பார்க்கவேயில்லை. எதுவும் வாய்திறந்து கூறவும் இல்லை. வெள்ளியாலான வெற்றிலைப் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு ஜன்னல் பக்கம் நடந்துபோய் நாக்கை நீட்டி எச்சிலைத் துப்பினார். வெளியேயிருந்த வெண்மணலில் ரத்த நிறத்தில் கறைகள் தெரிந்தன.

பேப்பரை இரு கண்களிலும் ஒற்றியவாறு வணக்கம் போட்டுவிட்டு உயிர்ப்பே இல்லாமல் ஆறுமுகம் திரும்பி நடக்கும்போது, லேசாக என்னவோ முணுமுணுத்தவாறு அய்யர்வாள் மீண்டும் வெற்றிலை போடத் தொடங்கினார்.

தூரத்தில் எங்கோ ராக்கோழி கூவியது. கரும்புத் தோட்டங்களின் மறைவிலிருந்து நரியொன்று குறுக்கே ஓடி வேகமாக மறைந்து போனதைப் பார்த்து முனுசாமிக்கு நடுக்கம் உண்டானது. ஒரு நிமிடம் அவன் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான். கால்கள் அசையவில்லை. இருட்டும் பனியும் ஒன்று சேர்ந்த ஏதோவொன்றுடன் கண்கள் இறுக ஒட்டிக் கொண்டதைப்போல் அவன் உணர்ந்தான்.

பின்னால் மிகவும் அருகில் சருகுகள் நொறுங்கும் சத்தம் கேட்டது.

நடுக்கத்துடன் முனுசாமி கேட்டான்:

“யார் அங்கே?''

பதில் எதுவும் வரவில்லை. அதற்குப் பிறகு சத்தமும் நின்று விட்டிருந்தது. ஒரு விளக்கு எரிந்து அணைந்ததைப்போல் அப்போது இருந்தது.

யாரோ பின்னால் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாக முனுசாமிக்குத் தோன்றியது. வேகமாக கால்களை முன்னோக்கி வைத்தபோது, முனுசாமி மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டான். தன்னுடைய மார்பிற்குள் என்னவோ குடைவதைப் போல் அவன் உணர்ந்தான். இனியும் பாதி தூரம் மீதமிருந்தது. கண்ணெட்டும் தூரம் வரை எந்த இடத்திலும் வெளிச்சமோ அசைவோ எதுவும் இல்லை. அலறி அழைத்தால்கூட, அதைக் கேட்பதற்கு அங்கு யாருமில்லை.

பின்னால் மீண்டும் அந்த அசையும் சத்தம் நன்கு கேட்டது. மிகவும் நெருக்கத்தில் பின்னால் சருகுகளின் சத்தம்...

முனுசாமி திடுக்கிட்டுத் திரும்புவதற்குள், பின்னால் அடி விழுந்து முடித்திருந்தது. முதலில் கழுத்தில்... பிறகு வலது தோளில்...

அவனுக்கு தலை சுற்றியது... கண்கள் மங்கலாயின. உரத்த குரலில் அழுதவாறு எங்கு போகிறோம் என்று தெரியாமலே அவன் ஓடினான். பின்னால் காலடி ஓசை மிகவும் அருகில் கேட்டது. தன்னை வந்து மோதிக் கொண்டிருந்த காற்றுக்கு எதிராக கைகளை வீசியவாறு வேகமாக நடந்தபோது, உருளைக் கற்களில் மிதித்து வழுக்கி அவன் கீழே விழுந்தான். அடுத்த நிமிடம் வேகமாக எழுந்து மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

சிறிது தூரத்திற்கு பின்னால் அதே காலடி ஓசை கேட்டுக் கொண்டேயிருந்தது. பிறகு சிறிது வெளிச்சம் தெரிந்த ஒரு திருப்பத்தில் அது திடீரென்று நின்றபோது, அவன் ஒரு வெளிச்சத்திற்கு முன்னால் விழுந்து கிடந்தான்.

பெரிய ஒரு சத்தத்துடன் அவனுக்கு எதிரே வந்து கொண்டிருந்த பைக் ப்ரேக் போட்டு நின்றது.

மறுநாள் நடுப்பகல் நேரத்தில் மரச் சட்டங்கள் போடப்பட்ட தன்னுடைய ஜன்னலை நோக்கி கண்களைத் திறந்தபோது முனுசாமிக்கு கழுத்து வலிப்பதைப்போல் இருந்தது. தோளின் பின் பகுதியில் பயங்கர வேதனை இருப்பதைப்போல் அவன் உணர்ந்தான்.

அவனுடைய இளைய மகள் காவேரி மிளகு போட்ட பால் கலக்காத தேநீருடன் அங்கு வந்தாள். அவளின் பெரிய கண்களில் பயமும் அதைவிட கவலையும் இருந்தன.

அவள் அவனைக் கட்டிலில் சாய்ந்து உட்கார வைத்தாள். பீங்கான் குவளையை உதட்டில் வைத்துப் பிடித்துக் கொண்டாள்.

“வலிக்குதாப்பா?'' அவளின் தொண்டை இடறியது.

முனுசாமியால் ஒரு வார்த்தைகூட பதில் பேச முடியவில்லை.

ஒரு சிறு டப்பாவிலிருந்து ஏதோ வழுவழுப்பாகக் காட்சியளித்த தைலத்தை எடுத்து அவள், அவனுடைய கழுத்திலும் தோளிலும் மெதுவாகத் தடவ ஆரம்பித்தாள்.

வலி இருந்தாலும் மகளின் மென்மையான விரல்கள் தடவிக் கொடுக்கும்போது அவனுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. அவன் மெதுவாக தன் கண்களை மூடினான்.

“வலிக்குதாப்பா?'' காவேரி மீண்டும் கேட்டாள்.

“இல்லம்மா. இருந்தாலும் கொஞ்சம் மெதுவா...''

தன்னுடைய இடது கையால் தந்தையின் முடிகளை விரல்களால் கோதி விட்டாள் காவேரி.

“அப்பா... இனிமேல் நீங்க வேலைக்குப் போக வேண்டாம்!''

தான் இனிமேல் வேலைக்குப் போகவேண்டாம் என்று அவள் கூறுகிறாள். அதைக்கேட்டு முனுசாமி அதிர்ச்சியடைந்தான்.

“ஏம்மா?''

“வேண்டாம். போனா அவ்வளவுதான்!''

“அப்புறம் எதை வச்சு சாப்பிடுவா அவ?''

உரத்த குரலில் ஒரு சத்தம் கேட்டது. முனுசாமி முகத்தைத் திருப்பியபோது, கதவுக்குப் பக்கத்தில் இருளடைந்த முகத்துடன் அவனுடைய மனைவி நின்றிருந்தாள்.

அந்தக் குரலில் சிறிதுகூட கனிவு என்பதே இல்லாமல் இருந் ததைப் பார்த்து மனதில் வருத்தப்பட ஆரம்பித்தான் முனுசாமி.

“வேலை முடிஞ்சு ஒழுங்கா வீட்டுக்கு வராம நிறைய தண்ணியைப் போட்டுட்டு எங்கேயாவது போயி சண்டை போட்டா, இந்த மாதிரிதான் நடக்கும்...''


தனக்குள் ஏதோ பிடித்து இறுக்குவதைப்போல் முனுசாமி உணர்ந்தான். வேலை முடிந்து எங்கோ போய் "தண்ணி” அடித்துவிட்டு அவன் சண்டை போட்டுவிட்டு வருகிறானாம்! சைக்கிளில் கேடு உண்டாகி விட்டதால், நள்ளிரவு வேளையில் இவ்வளவு தூரம் நான் மட்டும் தனியே நடந்து வந்தேன் என்று கூறினால் அவள் அதை நம்பத் தயாராக இல்லை. அவனுடைய ஆண் பிள்ளைகளும் அதை நம்ப மறுக்கிறார்கள்.

ஒரே ஒருத்தி மட்டுமே அவன் கூறுவதை நம்புகிறாள். அவள்- இந்த காவேரிதான்.

எல்லாவற்றையும் புரிந்து கொண்ட மனநிலையுடன், ஒரு அன்னையின் பாசத்துடன், காவேரி அப்போதும் தைலத்தைத் தேய்த்து விட்டு மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள். தன் தாய் கூறுவதைச் சிறிதும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறுவது மாதிரி அவள் அவனுடைய முகத்தைப் பார்த்து கண்களால் ஜாடை செய்தாள்.

சிறிது நேரம் கழித்து காவேரி டம்ளரை எடுத்துக்கொண்டு போகும்போது முனுசாமி மெதுவான குரலில் கேட்டான்.

“உன் அண்ணன் எங்கே?''

காவேரி தன் தந்தையின் முகத்தையே வெறித்துப் பார்த்தாள்.

“எனக்கு தெரியாதுப்பா. ஏதோ கோவில்ல எங்கேயோ வேலை. நேத்து சாயங்காலத்துக்குப் பிறகு நான் அண்ணனைப் பார்க்கவே இல்ல.''

அதைக் கேட்டு தனக்குள் என்னவோ முனகினான் முனுசாமி. கோவில்களுக்குத் திருவிழாவிற்காகப் போகும்போது அவனுடைய நண்பனாக இருப்பவன் முத்துவின் மகன் ஆறுமுகம்தான். எல்லாவித கெட்ட பழக்கங்களையும் அந்தத் தறுதலைப் பையன் அவனுக்குக் கற்றுக் கொடுத்து விடுவான்.

அதே நிலையிலேயே முனுசாமி படுத்திருந்தான். ஐந்து நாட்கள் ஆன பிறகும் கழுத்தில் இருந்த வலி சிறிதும் குறையாமல் இருந்த நிலையில், ஒரு மாலை நேரத்தில் உடலில் வெப்பம் இருப்பதைப் போல் காவேரி உணர்ந்தாள். அன்று இரவு முனுசாமிக்கு பலமாக காய்ச்சல் அடித்தது.

மறுநாள் டாக்டர் வந்து பார்த்தார். கம்பெனியில் பணி செய்யும் தொழிலாளிகளைப் பார்ப்பதற்கு சிறிதும் விருப்பமில்லாத அந்த பெரிய பரம்பரையைச் சேர்ந்த டாக்டர் முதலில் தயங்கினாலும் பிறகு காவேரியின் கண்ணீரைப் பார்த்து மனம் இரங்கிவிட்டார். கம்பெனியில் இளைஞரான அந்த டாக்டருக்கு தூசு படிந்த உடலைத் தொடுவதென்றால் கடுமையான வெறுப்பு இருந்தது. அவர் நாடியைப் பிடித்துப் பார்த்தார். கண்களையும் வாயையும் பார்த்தார். தலையை இப்படியும் அப்படியுமாக அசைத்துப் பார்த் தார். காய்ச்சலுக்கு உடல் வேதனையைவிட மனதில் இருக்கும் பயம்தான் காரணம் என்றார் அவர். துளசி இலையைப் பிழிந்து சாறைக் கண்களில் விழும்படி செய்தார். ஐந்து நாட்களுக்கான கஷாயத்தைக் குறித்துக் கொடுத்தார். மூன்று நாட்களுக்கு தேவைப்படும் மருந்தைப் பொட்டலமாகத் தந்தார்.

“கவலைப்படாதே. எல்லாம் சரியாகும்.'' டாக்டர் நெஞ்சைத் தொட்டவாறு சொன்னார்.

எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னல் வழியாகத் தெரிந்த நிலப்பகுதியைப் பார்த்தவாறு படுத்திருந்தான் முனுசாமி. தூரத்தில் வானத்தின் விளிம்பு வரை தரிசாகக் கிடக்கும் சிவந்த மண்... கரும்பனைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே இருண்ட புற்றுகளைப் போல புதர்கள்... இத்தனை நாட்களும் இரவிலும் பகலிலும் பிரம் மாண்டமான இயந்திரங்களின் சத்தத்துடன் இரண்டறக் கலந்து விட்டபிறகு அவன் பார்ப்பதற்கு மறந்துவிட்ட காட்சிகள் அவை.

அடுத்த வருடம் வேலையிலிருந்து விலகி வெளியே வந்த பிறகு இந்தக் காட்சிகளெல்லாம் தனக்கு சொந்தமாகின்றனவே என்பதை நினைத்தபோது அவனுடைய மனதில் ஒரு புத்துணர்ச்சி உண்டானது. வீட்டைச் சுற்றிலும் விசாலமான வெற்றிடம். கொத்தவோ கிளறவோ செய்யாத அந்த நிலத்தில் நீர் கொண்டு வருவதற்கான வழிவகை இருக்கிறது என்று வேளாண்மை அலுவலகத்திலிருந்து வந்த தாடிக்கார இளைஞன் சொன்னான். எவ்வளவு ஆழத்தில் வேண்டுமானாலும் போகக்கூடிய குழாய்களை இணைத்துத் தருவதாக அவன் சொன்னான். நல்ல மண் அது. தண்டும் தடியும் உள்ள இரண்டு ஆண் பிள்ளைகள் அங்கு இருக்கின்றார்களே! அவர்கள் சிறிது வியர்வை சிந்த தயாராக இருந்தால், இந்தப் பெண்மணம் போகாத மண்ணில் பொன்னே விளையச் செய்யலாம்.

ஆண் பிள்ளைகளைப் பற்றி முனுசாமி எதையும் சொல்ல வில்லை. அடுத்த வருடம் கம்பெனியிலிருந்து வெளியே வந்தபிறகு ஏதாவது செய்யலாம் என்று அவன் அந்த இளைஞனிடம் உறுதியான குரலில் சொன்னான்.

வாயை லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு, சாய்ந்து படுத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான் முனுசாமி. வாயைச் சுற்றி சற்று பெரிய அளவில் இருந்த ஒரு ஈ வட்டமிட்டுப் பறந்து கொண்டிருந்தது. வெளியே உச்சிப் பொழுது வெயில் பிளந்து கட்டிக் கொண்டிருந்தது. தரிசு நிலத்தின் வழியாக ஒரு மென்மை யான காற்று வீசிக் கொண்டிருந்தது.

திடீரென்று ஏதோ ஒரு சத்தத்தைக்கேட்டு முனுசாமி திடுக்கிட்டுக் கண்விழித்தான். கட்டிலுக்கு அருகில் ஓரத்தில் யாரோ ஒருவரின் நிழல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது.

தன்னுடைய உடலில் பலமான ஒரு நடுக்கம் உண்டாவதை முனுசாமியால் உணரமுடிந்தது. காட்சி தெளிவாகத் தெரியவில்லை. தலைக்குள் தாங்கமுடியாத அளவிற்கு ஒரு வெப்பம் இருப்பதை அவன் உணர்ந்தான்.

“அப்பா... நான்தான்...''

முனுசாமி மிகவும் சிரமப்பட்டுத்தான் கண்களையே திறந்தான்.

அவனுடைய மூத்த மகனின் குரல்தான் அது. கட்டிலின் தலைப்பகுதியை இறுகப் பற்றிக்கொண்டு அவன் தன் தந்தையின் வலி எடுத்துக்கொண்டிருந்த கழுத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வலிக்குதாப்பா?''

மகன் கழுத்தில் விரலை அழுத்தி வைத்துக்கொண்டு பார்த்த போது உண்டான வேதனையால் இப்படியும் அப்படியுமாக நெளிந் தாலும், முனுசாமி அவனைத் தடுக்கவில்லை. அவன் அவனுடைய மூத்த மகன். அவனைத் தந்தை ஆக்கியவன். ஒருநாள் அவனுடைய சிதைக்கு கொள்ளி வைக்கப் போகின்றவன். அவனுடைய பல கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் மாற்றம் வந்தது அவன் பிறந்த பிறகுதான் என்று எல்லாரும் கூறினார்கள். குழந்தையாக இருந்தபோது, அவன் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தான். கறுத்து, சதைப்பிடிப்புடன், அடர்த்தியான புருவங்களுடன், பிரகாசமான கண்களுடன், எண்ணெய் பசை கொண்ட உடலுடன்...

ஊர் வழக்கத்தையெல்லாம் மறந்து அவனுடைய காதில் ஒரு நகரத்துப் பெயரைச் சொன்னான்: "ராஜா!” அதைக் கேட்டவர்கள் மூக்கில் விரல் வைத்துவிட்டார்கள் என்றாலும் தலையை உயர்த்தி சொன்னான்.

“இவன் என் ராசாமணி! எங்க குலத்துக்கு, எங்க ஊருக்கு ராசா...''

ராஜாவின் குரல் மிகவும் அருகில் கேட்டது:

“திரும்பவும் என்னைக்கு வேலைக்குப் போறீங்க, அப்பா?''

எதுவும் பதில் சொல்லாமல் ஜன்னலுக்கு அப்பால் தெரிந்த நிலப்பகுதியைப் பார்த்தவாறு படுத்திருந்தான் முனுசாமி. அவனுடைய மகன் பதிலுக்காக காத்து நின்றிருக்க வேண்டும்.


பதில் சொல்லக்கூடிய நிலையில் தான் இல்லை என்பதை நினைத்தபோது அதனால் முனுசாமிக்கு எந்த வருத்தமும் உண்டாகவில்லை. அன்றைய சம்பவத்திற்குப் பிறகு தன்னைச் சுற்றிலும் புரிந்து கொள்ள முடியாத, கண்ணிகள் கொண்ட வலைகள் சூழ்ந்திருப்பதை அவனால் உணர முடிந்தது.

சிறிது நேரம் கழித்து உரத்த ஓசையுடன் கதவை இழுத்து அடைத்துவிட்டு அவன் போனபிறகு காவேரி வேகமாக அங்கு ஓடி வந்தாள்.

“அண்ணன் என்ன சொன்னான்?'' அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கேட்டாள்.

எதுவும் சொல்லவில்லையென்று தலையை ஆட்டினான் முனுசாமி.

“அவன் பேச்சை நம்பாதப்பா. உடம்பைப் பார்த்துக்கோ...'' காவேரி சொன்னாள்.

முனுசாமி அப்போதும் வெறுமனே தலையை ஆட்டினான்.

“உடம்பு சரியாகலைன்னா, வேலைக்குப் போக வேண்டாம்.''

அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்துத்தான் முனுசாமி கம்பெனிக் குச் சென்றான். கழுத்திலும் தோளிலும் வீக்கம் குறைந்திருந்தாலும் தலையை அசைக்கும்போது பயங்கரமான வலியிருந்தது.

அய்யர்வாளுக்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு கைகளால் தொழுதவாறு முனுசாமி சிறிது நேரம் நின்றிருந்தான். பருத்தியைப் போல நீளமான முடியையும் நரைத்துப்போன அடர்த்தியான புருவங்களையும் கொண்ட அய்யர்வாள்... நெற்றியில் அகலமாகப் பூசப்பட்டிருந்த திருநீறுக்கு மத்தியில் பெரிய ஒரு குங்குமப் பொட்டு... கீழே பளிங்குக் குண்டுகளைப்போல உருண்டு கொண்டிருக்கும் பளபளப்பான கண்கள்... தனக்கு ஒரு வாழ்க்கையைத் தந்த கண்கண்ட தெய்வமாக அவரை நினைத்தான் முனுசாமி.

அன்றைய சம்பவத்தைப் பற்றி அய்யர்வாள் தீவிரமாக ஏதாவது விசாரிப்பார் என்று அவன் நினைத்திருந்தாலும், அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை.

“என்னப்பா முனுசாமி? உடம்பெல்லாம் எப்படியிருக்கு?'' வழக்கமான ஒரு கேள்வி... அடர்த்தியான புருவங்களுக்கு மத்தியிலிருந்து எதையோ தேடிக் கண்டுபிடிக்க முயற்சித்தார் அய்யர்வாள்.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு அய்யர்வாள் மீண்டும் தன்னுடைய முகத்தை உற்றுப் பார்ப்பதைப்போல் அவன் உணர்ந்தான்.

தன் கண்களில் வலி இருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது. தொண்டைக்குள்  என்னவோ குடைந்து கொண்டிருந்தது.

“எல்லாத்துக்கும் முருகன் துணையா இருக்கான் அய்யா!'' அவனுடைய குரல் இடறியது.

“கெட்ட காலம் சாமி... பார்த்து நடந்துக்கணும்.'' அய்யர்வாள் சொன்னார்.

அதுவும் சம்பிரதாயமான ஒரு பேச்சுதான் என்பதை முனுசாமி யால் புரிந்து கொள்ள முடிந்தது. பழைய அதிகார தோரணை சிறிதும் வெளியே தெரியாத மாதிரி அவர் பார்த்துக் கொண்டார். எனினும், அவர் தன்னுடைய பளபளப்பான கண்களை உருட்டியவாறு அவனுடைய உடலை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

பேச நினைத்த வார்த்தைகள் தனக்குள் கிடந்து சுழன்று கொண்டிருப்பதை முனுசாமியால் உணரமுடிந்தது.

“எல்லாத்துக்கும் முருகன் துணை இருக்கான் அய்யா.''

எதற்கு அந்த வார்த்தைகளைக் கூறுகிறோம் என்று தெரியாமலே அதை மீண்டும் சொன்னபோது முனுசாமியால் அடக்க முடியவில்லை. அய்யர்வாளுக்கு முன்னால் குனிந்து நின்று கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

அழுகைச் சத்தத்தைக் கேட்டுத்தான் இருக்க வேண்டும்-வாசலில் யாரோ வந்து எட்டிப் பார்த்தார்கள்.

“சரி... சரிப்பா...'' அய்யர்வாள் தர்மசங்கடமான நிலையில் தான் இருப்பதைப் புரிந்துகொண்டு உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். என்னவோ வாயில் மெதுவான குரலில் பாடியவாறு வெற்றிலைப் பெட்டியில் தாளம் போட ஆரம்பித்தார் அவர்.

கட்டியிருந்த கைலியால் மூக்கைத் துடைத்தான் முனுசாமி.

நிதானமாக வெற்றிலை போடலாம் என்று உட்கார்ந்தபோது, அய்யர்வாள் இயந்திரத்தனமாக மீண்டும் சொன்னதையே திரும்பச் சொன்னார்:

“சரிப்பா... பார்த்து நடந்துக்கணும்.''

ஒருவாரம் விடுமுறை கேட்கலாம் என்றுதான் அவ்வளவு தூரம்  அவன் போனான் என்றாலும், அதை மட்டும் அவன் கடைசிவரை கூறவேயில்லை.

சிறிது நேரம் கழித்து கண்களைத் துடைத்துக் கொண்டே அவன் வெளியே வந்தபோது, வராந்தாவின் ஒரு மூலையில் முத்து வின் மகன் ஆறுமுகம் நின்றிருப்பதைப் பார்த்தான். அவன் சிரிக்கக்கூட இல்லை. கண்கள் எப்போதும்போல எந்த உணர்ச்சியும் இல்லாமல் இருந்தன. அவன்தான் தன்னுடைய மகன் ராஜாவை சீட்டு விளையாட்டுக் கும்பலில் சேர்த்து விட்டவன் என்ற விஷயம் முனுசாமிக்குத் தெரியும். அவன் முத்துவுக்கு கம்பெனி வேலை களைச் சொல்லித் தந்திருக்க, முத்துவின் மகன் அவனுடைய சீட்டு விளையாட்டையும், "தண்ணி” போடுவதையும் கற்றுத் தந்தான்.

தலையைக் குனிந்து கொண்டு அவன் வெளியேறி நடந்தான். கேட்டை நெருங்கியபோது டைம் அலுவலகத்திலிருந்த கூர்க்காவின் முகத்தில் பழைய சிரிப்பைப் பார்க்க முடியவில்லை. அவன் பார்க்காததைப்போல தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தான்.

வண்டிப் பேட்டையை நோக்கி நடந்தபோது ஐம்பத்தொன்பதாவது வயதில் இருக்கக்கூடிய பிரச்சினைகளைப் பற்றி முத்து கூறுவது அவன் ஞாபகத்தில் வந்தது. வேலையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னாலிருக்கும் ஒரு வருடம் வாழ்வது என்பது உண்மையிலேயே மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்தான். இன்று அய்யர்வாளின் முகத்தில் காணாமல் போயிருந்த அந்தப் பிரகாசம் வெளியே நின்றிருந்த கூர்க்காவின் முகத்திலும் வெளிப்பட்டபோது அவர்கள் எதிலிருந்தோ தங்களை மறைத்துக் கொள்ள முயல்வதை அவனால் உணரமுடிந்தது.

வீட்டுக்குத் திரும்ப வந்த பிறகுகூட அவன் யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் தன்னுடைய அந்தப் பழைய கட்டிலை நோக்கிச் சென்றான். அதே வியர்வை நாற்றம் எடுத்துக் கொண்டி ருக்கும் படுக்கை விரிப்பு. தலையணை உறையிலிருந்து கடலை எண்ணெய்யின் வாசனை புறப்பட்டு வந்து நாசிக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

சாப்பாடு எடுத்து வைத்திருப்பதாக காவேரி வந்து சொன்ன போது, அவன் வேண்டாமென்று தலையை ஆட்டினான். அதைக் கேட்டு அவள் முகம் வாடிப்போனதை அவன் பார்த்தான்.

“என்னப்பா? என்ன ஆச்சு? பசி இல்லையா?'' காவேரி அவனுக்கு மிகவும் அருகில் வந்து நின்றாள். அவளுடைய முகம் மிகவும் சிவந்து போயிருந்தது.

ஒன்றுமில்லை என்று அவன் கையால் சைகை செய்தான்.

“கம்பெனியில் யாராவது ஏதாவது சொன்னாங்களா?''

“இல்லை...''

“அப்புறம்?''

“அப்புறம்... ஒண்ணுமில்லம்மா...''

“அந்த டாக்டர்கிட்ட ஊசி போடச் சொல்லுவோமா?''

காவேரி அவனுடைய முகத்தையும் தலையையும் மெதுவாகத் தடவினாள். கண்ணீர் வெளியே தெரியாமல் இருப்பதற்காக முனுசாமி தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.

“அப்பா, ஏன் அழுறீங்க?''

காவேரி அவனுடைய தாடையைப் பிடித்து ஆட்டினாள்.

அவனால் தாங்க முடியவில்லை. திடீரென்று திரும்பி தன் முகத்தை தலையணையில் புதைத்துக் கொண்டு அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

சிறிது நேரம் கழித்து அவனுடைய மனைவி வந்து அழைத்த பிறகும் அவன் அசையவில்லை. தலையணையில் புதைத்திருந்த அவனுடைய முகத்தை யாராலும் பார்க்க முடியவில்லை.


முனுசாமியின் மனதில் அப்போது முத்து மட்டுமே இருந்தான். முதலில் கரும்புத் தோட்டங்களில் முத்து கூலி வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனை முடி வெட்டச் செய்து, குளிப்பாட்டி, சுத்தமாக இருக்கச் செய்து, ஒரு நீல நிற ஆடையை அணியச் செய்து ஒருநாள் நிர்வாகி அய்யர்வாளுக்கு முன்னால் கொண்டு போய் தான் நிறுத்தியதை இப்போதுகூட அவன் நினைத்துப் பார்த்தான்.

என்ன காரணத்தாலோ அய்யர்வாள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்த நாள் அது. ஒரு வாரம் கழித்து வரும்படி அவர் சொன்னார். பிறகு சென்றபோது மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்துவிட்டு அங்கு சேர்ந்து கொள்ளும்படி அவர் சொன்னார். “ஒப்பந்தப் பத்திரம் எதுவும் கேட்காதே. தொடர்ந்து வேலை பார்த்தா, உரிய நேரம் வர்றப்போ செட்டியார்கிட்ட சொல்லி ஒரு ஒப்பந்தப் பத்திரம் வாங்கித் தர்றேன்'' என்றார் அவர்.

முத்து நல்ல பணிவு கொண்ட மனிதனாக இருந்தான். கண்டு கொண்டும் கேட்டுக் கொண்டும் அவன் இருந்தான். எல்லாரும் விரும்பக் கூடியவனாகவும் அவன் நாளடைவில் ஆகி விட்டான்.

அதனால் கடைசி நாட்களில் அவனிடம் திடீரென்று உண்டான மாற்றத்தை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறு நிழல் களின் அசைவைக்கூட பார்த்து பயப்பட ஆரம்பித்த முத்து, எல்லாரிடமிருந்தும் விலகி நிற்க முயன்ற விஷயம் சிறிதும் எதிர்பாராமல் நடந்தது. முகத்தை மூடிக்கொண்டு அவன் தன் வேலையில் ஈடுபட்டான். யாரிடமும் அதிகமாக அவன் எதுவும் பேசுவதில்லை. எப்போதும் அவன் கண்களில் ஒரு உயிரோட்ட மில்லாத பார்வை இருந்து கொண்டேயிருந்தது. ஒரு சிறு சத்தம் கேட்டால்கூட போதும், அவன் நடுங்கிப்போய் விடுவான்.

எல்லா இறுக்கங்களையும் இறக்கி வைப்பதற்கு முத்துவுக்கு இரண்டே இரண்டு இடங்கள்தான் இருந்தன என்பதை முனுசாமி நினைத்துப் பார்த்தான். பத்து மைல் தூரத்தில் மரங்கள் காடென வளர்ந்திருந்த ஒரு இடத்தில் இருந்த முருகன் கோவில். அதை விட்டால் முனுசாமி... அவனைவிட முத்து ஆறேழு மாதங்கள் வயதில் இளையவன் என்றாலும், முனுசாமி அவனுக்கு எப்போதும் மணி அண்ணன்தான்.

ஒருநாள் காலையில் பார்த்தபோது முத்துவின் முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டது. தூக்கம் இல்லாத கண்கள் கறுத்து வீங்கிப் போய் காணப்பட்டன.

முனுசாமி ஏதோ கேட்கிற மாதிரி பார்த்தபோது, முத்து சொன்னான்:

“படுத்தாச்சுன்னா தூக்கமே வராது மணி அண்ணே! தூங்கியாச்சுன்னா ஒரே கெட்ட கெட்ட கனவுதான்...''

கனவுகளில் ஒருவன் தன்னை மட்டுமே பார்ப்பது என்பது ஒரு மிகப்பெரிய சாபம் என்று முத்து சொன்னான். தூங்கும்போது காணும் கெட்ட கனவுகளில் கொம்பும் வாலும் நீட்டிய பற்களுமாக முத்து என்ற முத்துக்கருப்பனின் பலவிதப்பட்ட தோற்றங்கள்... கனவுகளில்தான் என்றாலும்கூட தனக்கு கொம்பும் வாலும் முளைப்பது என்ற விஷயத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை.

அத்துடன் கோவில்களைத் தேடிச் செல்லும் முத்துவின் பயணங்கள் நீள ஆரம்பித்தன. பலரும் சொல்லி கேள்விப்பட் டிருக்கும் வெளியூர்களிலிருக்கும் பல்வேறு கோவில்கள்... அலைச்சலும் சிரமங்களும் நிறைந்த பயணங்கள்... நாளைச் சொல்லி வேண்டிக் கொள்ளும் நேர்த்திக் கடன்கள்... மாதச் சம்பளத்தில் முக்கால் பகுதியை கோவில்களுக்குக் கொண்டு போய் செல வழித்தால் வீட்டுச் செலவு எப்படி நடக்கும் என்று அவனுடைய மனைவி முனுசாமியிடம் குறைபட்டுக்கொண்டாள். அதற்கு முனுசாமி பதிலெதுவும் கூறவில்லை. முத்துவிடம் அதைப் பற்றி அவன் எதுவும் கேட்கவுமில்லை. இதே மாதிரி கோவில்களையும் பிரதிஷ்டைகளையும் தேடிப்போக வேண்டிய ஒரு காலம் தனக்கும் வரும் என்று அவனுக்குள் யாரோ கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

ஆனால், இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் முத்துவின் நடத்தையில் மிகப்பெரிய மாற்றம் தெரிந்தது. முகத்தில் அந்த முரட்டுத்தனம் இல்லாமல் போனது. கேன்டீனின் வாசலில் புகையிலையை மென்றுகொண்டு நின்றிருக்கும்பொழுது அவன் சொன்னான்:

“இனி நான் கோவிலுக்குப் போக மாட்டேன், மணி அண்ணே!''

“ஏன்பா?''

“போதும்... எல்லாமே போதும்...'' முத்துவின் குரல் உணர்ச்சியற்று இருந்தது.

யாராலும் புரிந்துகொள்ள முடியாத, தொன்மையான ஒரு அமைதியில் அவனுடைய முகம் ஆழ்ந்து பிரகாசித்தது. எவ்வளவோ நாட்களுக்குப் பிறகு அந்தப் பழைய உற்சாகமான குரலில் பொழுது போக்காக பல விஷயங்களைச் சொல்லி முத்து வாய்விட்டு சிரித்தான்.

அன்று பகல் முழுவதும் முனுசாமி யாரிடமும் ஒரு வார்த்தைகூட பேசாமல் கட்டிலில் தூங்கிக்கொண்டும், கண் விழித்துக் கொண்டும் கிடந்தான். இடையில் எப்போதோ பகல் இருட்டாக ஆனதையும் மெதுவான காலடிச் சப்தங்களுடன் இரவு கடந்து வந்ததையும் அவன் பார்க்கவில்லை.

இரவில் அவன் தன் கண்களை இறுக மூடிக்கொண்டு சுவரை நோக்கி சாய்ந்து படுத்துக்கொண்டு, உணவு சாப்பிட வேண்டும் என்ற வற்புறுத்தலை அலட்சியம் செய்து விட்டான். காவேரியின் குரலில் கவலையும், கோபமும், குற்றம் சாட்டலும் இருப்பதை அவனால் உணரமுடிந்தது. எது வந்தாலும் சிறிதுகூட அசைவதாக இல்லை என்று மனதிற்குள் முடிவு செய்துவிட்டு அவன் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தபோது, “அப்பா, உங்களுக்கு வேண்டாம்னா எங்களுக்கும் வேண்டாம்'' என்று காவேரி சொன்னதைத் தான் கேட்டதைப்போல் அவன் காட்டிக் கொள்ளவில்லை.

“இன்னைக்கு அப்பா, நான் உங்க அறையிலதான் தூங்குவேன்'' என்று காவேரி பிடிவாதமாகக் கூறுவது அவன் காதுகளில் விழுந்தது. அந்த விஷயத்தைப் பற்றி ஒன்று, இரண்டு என்று பேசி தாய்க்கும் மகளுக்குமிடையில் பெரிய சண்டை வந்துவிட்டது. கடைசியில் இரவு வெகு நேரம் ஆனபிறகு, தன்னுடைய கட்டிலுக் குக் கீழே தாயும் மகளும்  பாய் விரித்துப் படுத்திருப்பதை அவன் பார்த்தான். படுத்த சிறிது நேரத்திலேயே அவனுடைய மனைவி குறட்டை விடுவதையும், காவேரி இடைவெளி விட்டு பெருமூச்சு கள் விட்டதையும் அவன் கேட்டான்.

அறைக்குள் ஆக்கிரமித்திருந்த மங்கலான இருட்டை வெறித்துப் பார்த்தவாறு படுத்திருந்தபோது, ஏதோ ஒரு வினோதமான நிரந்தரத்தை நோக்கி தான் பயணம் செய்து கொண்டிருப்பதைப் போல் முனுசாமி உணர்ந்தான்.

இறுதி நாட்களில் முத்துவை மிகவும் அலைக்கழித்துக் கொண்டி ருந்தது- ஒரு சந்நியாசி கூறிய சில வார்த்தைகள்தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். காட்டுக்குள் ஆள் நடமாட்ட மில்லாத கோவிலில் கடவுளைத் தொழுது கொண்டிருக்கும் நூறு வயது மதிக்கக் கூடிய ஒரு சந்நியாசி... "இன்னொரு மனிதனின் பாவச் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பது என்பது, தானே பாவம் செய்ததைப்போல துன்பம் தரக்கூடிய ஒன்று' என்று சுவாமிஜி கூறினார்.


"இன்னொருவனின் பாவம் தன் மூலம் நம்மை எத்த னையோ பிறவிகள் வழியாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது" என்றார் அவர்.

முத்துவின் மனதிற்குள் அந்த வார்த்தைகள் ஆழமாகப் பதிந்து விட்டன. ஒருவேளை, முத்துவால் பின்பற்ற முடியாமல்போன உபதேசமாக அது இருக்கலாம்.

தூக்கம் வராமல் தன் தந்தை இப்படியும் அப்படியுமாகப் புரண்டு கொண்டு படுக்கும்போது கட்டில் கிறீச்சிடுவதை கண்களை விழித்துக் கேட்டவாறு படுத்திருந்தாள் காவேரி. அவளுக்கு சிறிதுகூட உறக்கம் வரவில்லை. அந்த இரவில் என்ன காரணத்தாலோ தன்னாலும் தன் தந்தையாலும் சிறிதுகூட உறங்க முடியவில்லை என்று அவள் அப்போது நினைத்தாள்.

இனிமேல் வரப்போகிற இரவுகளில் தன் தந்தையால் உறங்கவே முடியாதோ என்று நினைத்து அவள் பயந்தாள். "ஒருவேளை முத்து மாமாவோட வாழ்க்கையில் இருந்ததைப்போல பயணங்களின் சிரமங்கள் நிறைந்த அலைச்சல்கள் இனிமேல் இருக்கலாம். ஒரு கோவிலை விட்டு இன்னொரு கோவிலுக்கு...” காவேரி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்போது முனுசாமி ஆழம் குறைவான உறக்கத்திற்குள் விழுந்து விட்டிருந்தான். அவன் சத்தமாக குறட்டை விடுவதைக் கேட்டவாறு காவேரி மெதுவாகத் தன் கண்களை மூடினாள்.

முனுசாமி அப்போது தன்னுடைய கனவுகளில் பயணம் செய்து கொண்டிருந்தான். ஆனால், அவனுடைய கனவுகளில் அப்போது வந்து கொண்டிருந்தவை முத்து சொல்லிக் கொண்டிருக்கும் கோவில்கள் அல்ல. ஆழம் தெரியாத சில கிணறுகள்தான் கனவில் தோன்றின.

வரிசையாக வந்து கொண்டிருக்கும் கிணறுகள்... பல அளவுகளையும் மேல்வட்டத்தையும் கொண்டிருந்த கிணறுகள்... அந்தக் கிணறுகளின் ஆழங்களிலிருந்து வேறு ஏதோ உலகத்திலிருந்து வருவதைப்போல சில கொச்சையான சத்தங்கள்... கருங்கற்களால் கட்டப்பட்ட சுற்றுச் சுவருடன் காதுகளை ஒட்டி வைத்துக் கொண்டு கேட்டபோது, நீரோட்டத்துடன் இரண்டறக் கலந்து வேறொரு வித்தியாசமான சத்தமும் கேட்டது.

யாரோ உரத்த குரலில் அழைத்தார்கள்:

“மணி அண்ணே!''

ஒரு நடுக்கத்துடன் முனுசாமி அந்தக் குரலை அடையாளம் தெரிந்து கொண்டான்.

“மணி அண்ணே!''

"அது முத்துவின் குரல்தான்... என் அன்பு முத்து...' முனுசாமி தனக்குள் கூறிக் கொண்டான்.

அடுத்த நிமிடம் அவன் கண்களைத் திறந்தான். நான்கு பக்கங்களிலும் திகைப்புடன் பார்த்தவாறு, கட்டிலில் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு, கண்களை மூடிக் கொண்டு மெதுவான குரலில் அவன் பிரார்த்தனை செய்தான்.

நள்ளிரவு வேளையில் எப்போதோ ஒரு சத்தம் கேட்டு காவேரி திடுக்கிட்டுக் கண் விழித்தாள். பதைபதைப்புடன் அவள் நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். ஜன்னல் வழியாக வந்து கொண்டிருந்த மங்கலான நிலவொளியில் தன் தந்தையின் கட்டில் ஆள் இல்லாமல் கிடப்பதை அவள் பார்த்தாள்.

“அப்பா...'' அவள் ஓலமிட்டாள்.

தலைமுடியை அள்ளிக் கட்டி, தன் தாயைக் குலுக்கி எழ வைத்து, அவள் வெளியே வேகமாக ஓடினாள்.

மங்கலான இருட்டுக்கு மத்தியில் அமைதியாக இருந்த நிலப்பகுதியில் அவள் பார்வையை ஓட்டினாள்.

அங்கு எங்கும் யாரும் இல்லை.

“அப்பா...'' அவள் மீண்டும் உரத்த குரலில் அழைத்தாள்.

அதற்கு பதில் என்பது மாதிரி இருட்டின் ஆழத்திற்குள்ளிருந்து ஏதோ சில நரிகள் உரத்த குரலில் ஊளையிட்டன.

தொடர்ந்து வந்த தன்னுடைய தொண்டையே கிழிந்து விட்டதைப் போன்ற அழுகைச் சத்தம் நரிகளின் ஊளைச் சத்தத்திற்குள் மூழ்கிப் போனதை காவேரி உணரவில்லை. நரிகளின் ஒரு பெரிய கூட்டம் அப்போது அந்த கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.