Logo

காணாமல் போன கேசவன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4027

காணாமல் போன கேசவன்
எம். முகுந்தன்
தமிழில் : சுரா

கீ

ழே... தெருவிலிருந்து யாரெல்லாமோ பேசிக் கொண்டிப்பதைக் கேட்டுத்தான் நான் கண் விழித்தேன். சாளரங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததால், வெயில் உள்ளே விழுந்திருந்தது. நான் எழுந்து சாளரத்திற்கருகில் சென்று நின்று கீழே பார்த்தேன். உக்குவம்மாவின் நரை விழுந்த தலையைத் தான் முதலில் பார்த்தேன். அவளைச் சுற்றி கூட்டமாக நின்று கொண்ருந்தவர்களில் தேநீர்கடைக்காரன் கேளப்பனின் வழுக்கைத்  தலையும், காலி கோணிசாக்கு வியாபாரி அஸ்ஸனாரின் மொட்டைத் தலையும் தெரிந்தது.

     காலையிலேயே ஏதோ நடந்திருக்கிறது. கல்லுகுளக்கரையில் அரிதாகவே ஏதாவது நடைபெறும். அதனால் அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்குள் திடீரென்று ஆர்வம் உண்டானது. நான் என்னுடைய ஓட்டைகள் விழுந்த கையற்ற பனியனை எடுத்து, அணிந்து, கீழே இறங்கினேன். வழக்கம்போல ஏணிப்படி அசைந்து ஆடியது.

     கேளப்பனின் தேநீர் கடைக்கு முன்னால் நின்று கொண்டு அஸ்ஸனாரும் மற்றவர்களும் உக்குவம்மாவைச் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். என்பது எனக்கு உடனடியாக புரிந்து விட்டது. என்னைப் பார்த்ததும் உக்குவம்மா மூக்கைச் சீந்தவும், அழவும் ஆரம்பித்தாள்.

     ‘உக்குவம்மா... அழாமல் இருக்கணும்’­கேளப்பன் சமாதானப்படுத்தினார். ‘‘கேசவனை நாம கண்டு பிடிக்கலாம்.’’

     உக்குவம்மாவின் மகன் கேசவன் காணாமல் போய் விட்டான் என்பதும், அதுதான் சம்பவமென்பதும் எனக்கு புரிந்தது.

     ‘இவளோட அப்பன் என்னை விட்டு விட்டுப் போய் விட்டார். மகனும் இனி என்னை விட்டுட்டு போய் விட்டானா?

     உக்குவம்மா கையைச் சுருட்டி தன் மார்பில் இரண்டு முறை குத்தினாள். தன்னைத் தானே அடித்துக் கொண்ட அந்த அடியின் வேகத்தால், அவள் பின்னோக்கி சாய்ந்து விழ இருந்தபோது, அஸ்ஸனார் அவளைத் தாங்கி நிறுத்தினார்.

     ‘இங்கே வாங்க’ ­ கேளப்பன் உக்குவம்மாவின் கையைப் பிடித்து கடைக்குள் கொண்டு போவதற்கு முயற்சித்தான். ‘ஒரு தேநீரைப் பருகி மன நிம்மதியுடன் இருங்க... உங்களுடைய மகன்  உலகத்தின் எந்த மூலையில் போய் இருந்தாலும் சரி.... நாங்கள் அவனைக் கண்டு பிடிப்போம், அஸ்ஸனார் திரும்பவும் கூறினார்.

     ஆனால், உக்குவம்மாவிற்கு மன அமைதி கிடைக்கவில்லை. அவளுடைய அழுகை நிற்கவுமில்லை. தேநீர் பருக வேண்டும் என்ற கேளப்பனின் அழைப்பை அவள் நிராகரித்து விட்டாள். இறுதியில் கேளப்பனும் அஸ்ஸனாரும் சேர்ந்து அவளைக் கைளைப் பிடித்து வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார்கள்.

     அதற்குள் அங்கு கூடி நின்றிருந்தவர்களிடமிருந்து மேலும் தகவல்களை நான் கேட்டு தெரிந்து கொண்டேன். இன்றுடன் கேசவன் காணாமல் போய் மூன்று நாட்களாகி விட்டன. அவன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியவில்லை.

     தெருவில் வெயில் அதிகமாக இருந்தது. நான் கேளப்பனின் தேநீர் கடைக்குள் நுழைந்து, ஸ்டூலின் மீது அமர்ந்தேன். பின்னால் மூட்டை தூக்கும் கணாரியும். நாங்கள் தலா ஒரு பீடியைப் பற்ற வைத்த புகையை விட்டுக் கொண்டிருந்த போது, கேளப்பனும் அஸ்ஸனாரும் திரும்பி வருவதைப் பார்த்தோம்.

     மாஸ்டர்.... நாம கொஞ்சம் அந்த கேசவனைத் தேடிப் போவோமோ? ­ கேளப்பன் சொன்னார்.

     அஸ்ஸனார் இன்னும் கொஞ்சம் சேர்த்தார். ‘அது நம்மோட கடமை.’

     அந்த நிமிடம் வேறொரு சிந்தனை என் மனதிற்குள் கடந்து சென்றது. கல்லுகுளக்கரையைச் சேர்ந்தவர்களுக்குக் கேசவன் எப்போது இந்த அளவிற்கு விருப்பத்திற்குரிய மனிதாக மாறினான்? இதுவரை அவன் யாருக்குமே வேண்டாதவனாக அல்லவா இருந்தான்? உக்குவம்மாவே கூட அவனுடைய தலையில் இடியின் நெருப்பு விழட்டும் என்று புலம்பியிருக்கிறாளே? கல்லுகுளக்கரையில் உள்ள மனிதர்கள் மட்டுமல்ல­காகங்களும் நாய்களும் கூட அவனை வெறுக்கத்தானே செய்தன?

     நான் கல்லுகுளக்கரையைச் சேர்ந்தவனல்ல. சுமார் ஒரு வருடத்திற்கு முன்புதான் கல் பாலத்திற்கு அக்கரையில் பேருந்தை விட்டு இறங்கி, பழைய இரும்புப் பெட்டியுடன் நான் இந்த ஊருக்குள் கால் வைத்தேன். அந்த நாளை இப்போதும் நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். கல்லுகுளக்கரையில் மொத்தம் நான்கு கடைகள்தான் இருக்கின்றன. அதுதான் இந்த கிராமப் பகுதியில் கடைத் தெரு, கேளப்பனின் தேநீர் கடைக்கு மேலே இருக்கும் அறையை எனக்கு வாடகைக்கு தருவதாக அவன் ஒத்துக் கொண்டிருந்தான்.

     நான் தகரப் பெட்டியைத் தூக்கிப் பிடித்தவாறு கடைத் தெருவை நோக்கி நடந்தேன். தெருவின் ஒரு பக்கம் தாழ்வாக இருந்தது. அங்கு ஒரு வாய்க்காலும், கொஞ்சம் குடிசைகளும் இருந்தன. குடிசைகளுக்கு அப்பால் பரந்து கிடக்கும் வயல்... நான் சுமார் ஒரு ஃபர்லாங் தூரம் நடந்திருக்க வேண்டும். தெருவின் ஓரத்திலிருந்த தாழ்வான பகுதியிலிருந்து ஒரு உருவம் திடீரென்று எனக்கு முன்னால் ஏறி வந்தது. ஒரு நிமிடம் நான் அதிர்ச்சியடைந்து நின்று விட்டேன். ஆறடிக்கும் அதிகமான உயரத்தைக் கொண்ட மெலிந்த சரீரத்திற்கு மேலே பெரிய ஒரு தலை...... மூக்கின் இடத்தில் ஒரு பெரிய குழி...மேலுதடுகளைத் துளைத்து வெளியே எட்டிப் பார்த்தவாறு நின்றிருக்கும் நீளமான பற்கள்........ விரிந்து தொங்கிக் கிடக்கும் கீழுதட்டிலிருந்து எச்சில் வழிந்து விழுந்து கொண்டிருந்தது.

     உருவம் எனக்கு நேராக வந்தபோது, நான் ஓரடி பின்னால் விலகி நின்றேன். அது தன் நீளமான மெலிந்து போய் காணப்பட்ட கையை என்னை நோக்கி நீட்டியது. எதற்கு என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. பழக்கம் காரணமாக இருக்க வேண்டும்­நான் பைக்குள்ளிருந்து கால் ரூபாயை எடுத்து அவனுடைய உள்ளங் கையில் வைத்தேன். என் கணிப்பு தவறவில்லை. மூக்கின் இடத்தில் இருந்த துவாரத்தின் வழியாக பெரிய ஒரு சீழ்க்கை ஒலியை உண்டாக்கியவாறு அவன் தாழ்வாக இருந்த பகுதியில் ஓடி இறங்கி மறைந்தான். நான் கடைகள் இருக்கும் தெருவை நோக்கி நடந்தேன். அப்போதுதான் எனக்கு மூச்சு சீராக வந்தது.

     கேளப்பனின் வேலைக்காரி மேலேயிருந்த அறையைப் பெருக்கி அள்ளி சுத்தம் பண்ணி வைத்திருந்தாள். படுப்பதற்கு எண்ணெய் கறை படிந்த ஒரு பழைய படுக்கையும், உட்காருவதற்கு ஒரு ஸ்டூலும், அணியும் துணியைத் தொங்க விடுவதற்காக ஒரு கயிறும் அங்கு இருந்தன. நான் என்னுடைய தகரப் பெட்டியை அறையின் மூலையில் வைத்து விட்டு ஒரு பீடியைப் பற்ற வைத்தவாறு சாளரத்தின் அருகில் போய் நின்றேன். அந்த வகையில் கல்லுகரையில் என்னுடைய வாழ்க்கை ஆரம்பமானது.

     திடீரென்று தூரத்தில் முன்பு பார்த்த அந்த உருவம் நடந்து வருவதை நான் பார்த்தேன். நீண்ட கால்களை நீட்டி வைத்து, மிகவும் வேகமாக அது நடந்து வந்து கொண்டிருந்தது. நான் பீடியை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள், அது கேளப்பனின் கடைக்கு முன்னால் வந்து சேர்ந்திருந்தது. தெருவிலேயே நின்றவாறு உருவம் என்னென்னவோ வினோதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது.


     ‘உனக்கு யார்டா காசு தந்தது?’ ­ கேளப்பன் கேட்பதை நான் கேட்டேன். ‘எங்கிருந்துடா நீ காசைத் திருடினாய்?’

     உருவம் அப்போதும் வினோதமான சத்தங்களை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவன் தேநீரையும் புட்டையும் வேண்டும் என நினைத்திருப்பான் என்று நான் மனதிற்குள் நினைத்தேன். அவனுக்கு பசியெடுக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. காரணம்-ஒரு கையால் அவன் தன்னுடைய ஒட்டிப் போய் காணப்பட்ட வயிறை அவ்வப்போது தடவிக் கொண்டிருந்தான்.

     கேளப்பன் அவனுக்கு புட்டையோ, தேநீரையோ தரவில்லை. அதற்கு பதிலாக அவள் அவனை மோசமான வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்து என்று தெரியவில்லை... உக்குவம்மா அங்கு வந்து நின்றாள்.

     மாரிக்குறுப்பு.... என் காசை இங்கு தா....

     அவள் கேசவனின் கையிலிருந்து காசைத் தட்டிப் பறிப்பதற்கு முயற்சி செய்தாள். அவன் வினோதமான சத்தங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினான். உக்குவம்மா அவனை அடிக்கவும் குத்தவும் செய்தாள்.

     ‘பகவதீ... நீ இந்த குறுப்பின் தலையில் இடி நெருப்பை விழ வைக்காமல் இருக்கிறாயே!’

     இறுதியில் தளர்ந்து போன உக்குவம்மா தெருவில் குத்த வைத்து அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தாள்.

     ‘டேய் கேசவா.... மரியாதையா பைசாவை இங்கு தா....’

     கேளப்பன் தெருவிற்கு வந்து கேசவனின் அருகில் சென்றான். அவனுடைய கையிலிருந்த வெங்கல பாத்திரத்தில் அடுப்பிலிருந்து எடுத்த கொதிக்கும் நீர் இருந்தது.

     ‘காசைக் கொடுடா!’

     ‘இரவு கஞ்சிக்கு அரிசி வாங்குவதற்காக வச்சிருந்த காசு...’

     உக்குவம்மா தரையில் குத்த வைத்து அமர்ந்து புலம்பினாள்.

     கேளப்பன் ஆவி எழுந்து வந்து கொண்டிருந்த வெங்கல பாத்திரத்தை கேசவனின் முகத்திற்கு நேராக உயர்த்தினான். காயம் பட்ட மிருகத்தைப் போல உருவம் என்னென்னவோ சத்தங்களை எழுப்பியது. உக்குவம்மா எழுந்து நின்றாள்.

     ‘கேளப்பா.... அவனுடைய முகத்துல நீரை ஊற்று... அவன் சாகட்டும்.’

     உடனடியாக கேளப்பன் வெங்கல பாத்திரத்திலிருந்து சுடு நீரை உருவத்திற்கு நேராக வீசி எறிந்தான். காசைக் கீழே போட்டு விட்டு மூக்கின் இடத்திலிருந்த துவாரத்தின் வழியாக பெரிய ஒரு சீழ்க்கையை அடித்தவாறு உருவம் கிழக்கு நோக்கி ஓடியது. அவனுடைய உள்ளங்கையிலிருந்து சிதறி விழுந்த நாணயத்தை நான் அடையாளம் தெரிந்து கொண்டேன். நான் முன்பு கொடுத்த கால் ரூபாய்தான்.

     உக்குவம்மா அந்த நாணயத்தைக் குனிந்து எடுத்து, புடவையின் நுனியில் பத்திரப்படுத்தியவாறு, சுருங்கிய மார்பகங்களைக் குலுக்கிக் கொண்டே மேற்கு நோக்கி நடந்து சொன்றாள்.

     அன்று கேசவனைப் பற்றி நான் மேலும் சற்று கேட்டு தெரிந்து கொண்டேன். உக்குவம்மாவின் ஒரே மகன் கேசவன். அவன் பிறந்ததிலிருந்தே இவ்வாறு அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவனாகவே இருக்கிறான். பெற்று விழுந்த குழந்தையைப் பார்த்தவுடன், கேசவனின் தந்தை வெட்டுக் கத்தியை எடுத்து கழுத்தை அறுப்பதற்காகச் சென்றான். பிள்ளையைப் பெற்றவள் அவனை மார்போடு சேர்த்துப் பிடித்து, வெட்டுக் கத்தியிலிருந்து  காப்பாற்றியதால் அவன் உயிருடன் இருக்கிறான்.

     கல்லுகுளக்கரையில் வந்து தங்கியதன்  மூன்றாவது நாள் நான் மீண்டும் கேசவனைப் பார்த்தேன். பகல் உறக்கத்தின் சுகத்தில் படுக்கையில் சுருண்டு படுத்திருந்தபோது, காகங்கள் கூட்டமாக கரையும் சத்தம் கேட்டது. நான் எழுந்து சாளரத்தின் அருகில் சென்று நின்று வெளியே பார்த்தேன். மேற்கு திசையிலிருந்து ஒற்றையடிப் பாதையின் வழியாக தாழ்ந்து பறந்து வரும் காகங்களைத்தான் நான் முதலில் பார்த்தேன். தொடர்ந்து தன்னுடைய நீளமான கால்களால் ஓடிக் கொண்டிருக்கும் கேசவனையும்... காகங்கள் அவனுடைய பெரிய தலையைச் சுற்றி, சிறகடித்து பறந்து கொண்டிருந்தன. அவற்றின் அலகுகள் கேசவனின் முகத்தைக் கொத்திக் கொண்டிருந்தன. தாக்கிக் கொண்டிருக்கும் காகங்களிடமிருந்து தப்பிப்பதற்காக கேசவன் மரண ஓட்டம் ஓடிக் கொண்டிருந்தான். திடீரென்று தன்னுடைய நீளமான கால்கள் மடிய, அவன் நிலத்தில் விழுந்தான்.

     கேளப்பனும், சுமை தூக்கும் கணாரியும் தெருவிற்கு வந்து அந்த காட்சியைப் பார்த்து கைகளைத் தட்டி சிரித்தார்கள். அவர்களுடைய சிரிப்பிற்கு நிகரான ஒரு வகையான சத்தத்தை உண்டாக்கியாவாறு, சிறகுகளைக் குடைந்து, காகங்கள் பிரிந்து சென்றன. பறந்து செல்லும் காகங்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது, அவை வெறும் பறவைகள் அல்ல என்றும், அவை கேளப்பனையும் கணாரியையும் போல உள்ள ஏதோ உயிரினம் என்றும் எனக்கு தோன்றியது.

     கல்லுகுளக்கரையைச் சேர்ந்த குழந்தைகள் அனைவரும் கேசவனைப் பார்த்து பயந்தார்கள். அவனுடைய நிழலைப் பார்த்தவுடன், அவர்கள் ஓடி ஒளிவார்கள். கல்லுகுளக்கரையின் ஒரே பணக்காரரான சாத்து முதலாளியின் இளைய மகள் ஒரு நாள் ஒரு ஒற்றையடிப் பாதையில், கண்களுக்கு முன்னால் கேசவனைப் பார்க்க நேர்ந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைக்கு ஏழு நாட்கள் காய்ச்சல்....... அப்போது சாத்து முதலாளி வெறி கொண்டவராக ஆனார். அவர் வாளை எடுத்து, கேசவனின் கதையை முடிப்பதற்காக வெறியேறினார். ஏதோ அதிர்ஷ்டத்தால் அன்றும் கேசவன் தப்பித்துக் கொண்டான்.

     ‘அந்த பாழாய் போன உக்குவம்மாவை நினைச்சுத்தான்...’ கேளப்பன் என்னிடம் கூறினான்.’ ‘இல்லாவிட்டால்... சாத்து முதலாளி அன்னைக்கே அவனுடைய கதையை முடிச்சிருப்பார்.’

     கேசவனை மிகவும் அருகில் பார்க்கவும், அவனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் முடிந்த பிறகு, அவன் எனக்குள் ஒரு காயமாக ஆகி விட்டிருந்தான். அவனுடைய பிரச்னைக்கு எந்தவொரு பரிகாரமும் இல்லை என்று எனக்கு தோன்றியது கல்லுகுளக்கரையிலிருந்த குழந்தைகள் அவனைப் பார்த்து பயந்து நடுங்கும்போதும், பறவைகள் அவனை ஆக்கிரமிக்கும் போதும், அவனுடைய மரணம் மட்டுமே ஒரே பரிகாரம் என்று எனக்கு தோன்றியது. ஆனால், அவனுடைய மரணத்தை நான் விரும்பவில்லை. அதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது?

     ‘அப்படின்னா...போவோமா, மாஸ்டர்?’-கேளப்பனும் அஸ்ஸனாரும் வேறு சிலரும் தயாராகி விட்டார்கள்.

     பீடிக்கட்டையும் தீப்பெட்டியையும் எடுத்தவாறு நானும் அவர்களுடன் சேர்ந்து வெளியேறினேன்.

     கல்லுகுளக்கரையின் ஒவ்வொரு மூலையையும் முடுக்கையும் நாங்கள் தேடி நடந்தோம். யாரும் கேசவனைப் பார்க்கவில்லை. எங்களுக்கு மேலே உச்சிப் பொழுது சூரியன் கடுமையான வெயிலை விழ வைத்துக் கொண்டிருந்தது. இறுதியில் நாங்கள் கற்பாலத்தின் மீது தளர்ந்து போய் அமர்ந்தோம். பாலத்திற்குக் கீழே கிழக்கு திசை நோக்கி பயணிக்கும் வாய்க்காலில் வெயில் நிறைந்து கிடந்தது.

     அப்போது சாத்து முதலாளியின் சப்பரம் சத்தம் உண்டாக்கியவாறு அந்த வழியே வந்தது. சப்பரத்தில் படுத்திருந்த முதலாளி தலையை வெளியே நீட்டி எங்களைப் பார்த்தார். நாங்கள் கேசவனைத் தேடி வெளியே வந்திருக்கிறோம். என்ற விஷயத்தைக் கூறியபோது, முதலாளி கூறினார் :

     ‘உங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, மனிதர்களே! அவன் செத்தால், இந்த ஊருக்கும் ஊரில் உள்ளவர்களுக்கும் நல்லது. எங்காவது போய் சாகட்டும்!’

     அவர் தலையை சப்பரத்திற்குள் இழுத்துக் கொண்டார். சப்பரத்தைச் சுமந்து கொண்டு வந்தவர்கள் ஓசை உண்டாக்கியவாறு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

     ‘இனி நாம போகலாம்...’ ­ கேளப்பன் எழுந்து, பின் பகுதியில் படிந்திருந்த மண்ணைத் தட்டி விட்டான். ‘நம்மால முடியக் கூடியதை நாம செய்து விட்டோம்ல? பகவதி நினைச்சபடி நடக்கட்டும்.’

     கணாரியும் அஸ்ஸனாரும் சேர்ந்து எழுந்தார்கள்.

     ‘மாஸ்டர், நீங்கள் வரலையா?’

     ‘இல்ல...’

     ‘நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீங்க?

     ‘கேசவனைக் கண்டு பிடித்து விட்டுத்தான் நான் இனி கல்லுகுளக்கரைக்கே வருவேன்.’

     ‘இனி அவனை நாம எங்கு தேடுவது, மாஸ்டர்?’

     ‘நீங்கள் செல்லுங்கள், மனிதர்களே!’

     சற்று தயங்கி விட்டு கேளப்பனும் நண்பர்களும் திரும்பி நடந்தார்கள். என்னுடைய உறுதியான குரல் அவர்களை ஆச்சரியப்படச் செய்திருக்க வேண்டும். எனக்கு என்ன ஆனது என்று அவர்கள் தங்ககளுக்குள் கேட்டுக் பார்த்திருக்க வேண்டும்.

     கற்பாலத்தின் அந்தப் பக்கத்தில் கண்களைப் பதித்தவாறு நான் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வெயில் குறைந்து கொண்டு வந்தது. ஆகாயம் சிவப்பாக ஆரம்பித்தபோது, பாலத்தின் எதிர் பக்கத்தில் கேசவன் தோன்றினான். அவன் தலையில் பிரகாசித்துக் கொண்டிருந்த ஒரு கிரீடத்தை அணிந்திருந்தான், தரையைத் தொடக் கூடிய வெண்ணிற பட்டால் ஆன ஒரு அங்கியை அணிந்திருந்தான். மேகக் கூட்டங்களுக்கு மத்தியில் என்பதைப் போல, பாலத்திற்கு மேலே அவன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான். அவன் அருகில் வந்தபோது, முகத்தில் அழகான மூக்கையும், புன்னகை ததும்பும் உதடுகளுக்கு நடுவில் அரிசிப் பற்களையும் நான் பார்த்தேன். அவனுடைய சரீரத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்த வெண்ணிற பட்டுத் துணி, சாயங்கால பொழுதின் பிரகாசத்தில் நனைந்து, சிவப்பாக தோன்றியது. அவன் எனக்கு அருகில் வரவும், அவனைக் கட்டிப் பிடிப்பதற்காக நான் கைகளை நீட்டவும் செய்தபோது, அவனுடைய கண்கள் இரண்டு பெரிய கண்ணீர் துளிகளாக மாறின.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.