Logo

கயிறு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4060

 கயிறு

எம். முகுந்தன்

தமிழில் : சுரா

 

ரா

மகிருஷ்ணனின் மேஜையின் மீது தாள்கள் குவிந்து கிடந்தன. அவன் இரண்டு மணிக்கு அந்த தாள்களின் மீது தலையைத் திருப்பினான். நேரம் கடந்து போவதை அவன் அறியவில்லை. ஐந்து மணி தாண்டியதும், அவனுடன் பணியாற்றுபவர்களில் ஒருவனான பவ்லோஸ் கூறினான்:

'ஐந்து மணி தாண்டிருச்சுடா, மகனே!'

ராமகிருஷ்ணன் தன் கடிகாரத்தைப் பார்த்தான். ஐந்து மணி தாண்டி விட்டது என்பதை அவன் தெரிந்து கொண்டான்.

அவன் மேஜையின் மீது தாள்களை அடுக்கி வைத்தான். காற்றில் பறந்து போகாமல் இருப்பதற்காக, பேப்பர் வெய்ட்களை எடுத்து வைத்தான். மேஜையைப் பூட்டினான் - நாற்காலியிலிருந்து எழுந்தான். ஒரு பாடலை முணுமுணுத்தவாறு....

தான் பணி செய்யும் ஹால் காலியாகக் கிடப்பதை அவன் பார்த்தான்.மொத்தத்தில் - பதினான்கு பேர் இருப்பார்கள். எல்லோரும் இடத்தை காலி செய்திருந்தார்கள்.

மடியிலிருந்து அவன் குழாயை எடுத்தான். புகையிலை பையையும். புகையிலையை  குழாய்க்குள் நுழைத்தான். குழாயை வாயில் இறுக வைத்தவாறு பற்ற வைத்தான். புகையை விட்டவாறு ராமகிருஷ்ணன் வெளியேறினான்.

இலேசான வெயில் தார் போடப்பட்டிருந்த சாலையில் பரந்து கிடந்தது. உச்சிப் பொழுது வெயிலில் உருகிய தார் அவனுடைய செருப்பில் ஒட்டிப் பிடித்தது. சாலையிலிருந்து அப்போதும் ஆவி உயர்ந்து கொண்டிருந்தது.

அவன் அணைந்து விட்ட குழாயைப் பற்ற வைத்து, மீண்டும் நடந்தான். அப்போது விஜயலட்சுமியும் ராஜனும் எதிரில் நடந்து வருவதை ராமகிருஷ்ணன் பார்த்தான். அவர்களுடைய அலுவலகத்திற்கு முன்னால்தான் தான் நடந்து செல்கிறோம் என்பது அவனுக்குப் புரிந்தது.

'உன்னைப் பார்த்தது நல்லதாப் போச்சு.'

ராஜன் சொன்னான்:

'நீ திரைப்படத்திற்கு வர்றியா?'

'வரவில்லை' என்று ராமகிருஷ்ணன் கூறினான்.

'நீ என்ன திரைப்படம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்?'

'தெரியாது' என்று அவன் கூறினான்.

'நைட் ப்யூட்டீஸ்..'

விஜயலட்சுமி கூறினாள். அவள் கேட்டாள்:

'நைட் ப்யூட்டீஸைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்கள்ல?'

'இல்லை' என்று அவன் கூறினான்.

'லிங்கில் விமர்சனம் வந்திருந்தது'.

பத்திரிகைகளையோ, மாத இதழ்களையோ தான் வாசிப்பதில்லை என்று அவன் கூறினான்.

'ரினோயரின் திரைப்படம். நீனா லோலா ப்ரிழீதா நடித்தது ..... வா ....'

ராஜன் அவனுடைய கையைப் பிடித்து இழுத்தான்.

தான் 'வரவில்லை' என்று அவன் கூறினான்.

'இனியொரு வாய்ப்பு கிடைக்காது. ரினோயரின் திரைப்படத்தைப் பார்ப்பதற்கு....

ராஜன் கூறினான்.

'எங்களின் கையில் ஒரு கூடுதல் அனுமதிச் சீட்டு இருக்கு. தயவுசெய்து வாங்க'.

விஜயலட்சுமி கூறினாள்.

தான் களைப்படைந்து போயிருப்பதாக ராமகிருஷ்ணன் கூறினான். அவன் குழாயில் மேலும் கொஞ்சம் புகையிலையை நுழைத்தான். பலத்தை பயன்படுத்தி இழுத்து புகையை விட்டவாறு அவன் நடந்தான்.

அதற்குப் பிறகும் வெயிலின் அளவு குறைந்தது. நிறம் மாற ஆரம்பித்தது. குளிர்ந்த காற்று வீசியது. வானொலி நிலையத்திற்கு அருகில் கடல் காற்றை வாங்கியவாறு அவன் நடந்தான்.

'ப்ரபா கஃபே' க்கு முன்னால் அவன் நடந்தான். அப்போது உள்ளேயிருந்து யாரோ அவனை அழைத்தார்கள்.

'நில்லுங்க, சார்'.

அவன் தெருவின் அருகில் விலகி நின்றான், கஃபேக்கு உள்ளே உண்ணி அமர்ந்திருப்பதை அவன் பார்த்தான்.

'இங்கே வாங்க.'

உண்ணி அழைத்தான்.

தனக்கு அவசரமாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டியதிருக்கிறது என்று அவன் உண்ணியிடம் கூறினான்.

'ஒரு கப் காபி பருகி விட்டு செல்லலாம், சார்'.

உண்ணி வெளியேறி வந்தான்.

தனக்கு பசிக்கவில்லை என்று அவன் கூறினான்.

'காபி பருக வேண்டுமென்றால், பசிக்கணுமா?'

'காபி பருக வேண்டுமென்றால், பசிக்க வேண்டிய அவசியமில்லை' என்று அவன் கூறினான்.

'அப்படின்னா... வாங்க..... ஒரு கப் காபி மட்டும் பருகினால் போதும்.... என் சந்தோஷத்திற்காக....'

தான் களைத்துப் போய் இருப்பதாக அவன் கூறினான். அவன் குழாயை எடுத்து புகையை விட்டவாறு கிழக்கு திசை நோக்கி நடந்தான்.

இரு பக்கங்களிலும் கடைகளிருந்த, அகலம் குறைவான தெருவின் வழியாக அவன் நடந்தான். அவனுடைய சரீரத்தின் மீது  பலரும் மோதினார்கள். கடுமையான எடையை ஏற்றிக் கொண்டு உந்து வண்டியைத் தள்ளியவாறு கொண்டு சென்ற கூலியாட்கள் அவனுக்கு அருகில் வந்தபோது சத்தம் போட்டு குரல் எழுப்பினார்கள்.

ஏராளமான பெண்கள், ஆண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு மத்தியில் அவன் மேற்கு நோக்கி நடந்தான்.

வழியில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பேருந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அது தான் வசிக்கும் இடத்திற்குச் செல்லக் கூடியது என்பதை அவன் புரிந்து கொண்டான். அவன் அதில் ஏறி அமர்ந்தான்.

'எங்கு போகணும்?'

நடத்துநர் கேட்டார்.

செல்ல வேண்டிய இடத்தின் பெயரை அவன் கூறினான். அவனுக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு ஆள் கூறினான்:

'பேருந்தில் புகைக்கக் கூடாது, சார்!' அவன் குழாயை அணைத்து தன் மடியில் வைத்தான். அவனுடைய வேட்டியின் ஓரத்தில் புகையிலைக் கறை படிந்திருந்தது.

'புகைவண்டிப் பாலம்...'

நடத்துநர் உரத்த குரலில் கூறினார். இரண்டு மூன்று ஆட்கள் பாலத்திற்கு அருகில் இறங்க  இருந்தார்கள். அவர்கள் இறங்கியதும், அவன் அவர்களுக்குப் பின்னால் இறுதியில் இறங்கினான்.

குழாயை எடுத்து பற்ற வைத்து பிடித்தவாறு அவன் தெற்கு நோக்கி நடந்தான்.

இளைஞர்களின் படிப்பகத்திற்கு முன்னால் சென்ற போது, உள்ளேயிருந்து ஒரு மனிதன் அழைத்தான்':

'சார்... நில்லுங்க!'

அவன் நின்றான்.

'வாங்க சார்... ஒரு ஆள் வேணும்.'

'எதற்கு ஒரு ஆள் வேண்டும்?' என்று அவன் கேட்டான்.

'ஐம்பத்தாறு விளையாடுவதற்கு... ஐந்து ஆட்களே இருக்கிறோம். வாங்க.... இரண்டு கை விளையாடலாம். வாங்க....'

தனக்கு விளையாடுவதற்கு விருப்பமில்லை என்று அவன் கூறினான்.

'சார், உங்களுக்கு விளையாடுவதில் விருப்பமில்லையென்றால், வேண்டாம். ஆனால், எங்களுக்காக விளையாடக் கூடாதா?'

தயவுசெய்து தன்னை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அவன் கூறினான்.

'அரை மணி நேரம் விளையாடினால் போதும். இல்லாவிட்டால் கால் மணி நேரம் ... வாங்க.'

ஒரு இளைஞன் அவனுடைய கையைப் பிடித்து இழுத்தான்.

அவன் இளைஞனின் கையிலிருந்து விலகி, வடக்கு நோக்கி நடந்தான். குழாயில் மேலும் கொஞ்சம் புகையிலையை நுழைத்தான்.

சிவந்த வெயில் தெருவில் புரண்டு கிடந்தது. வீடுகளில் குத்து விளக்குகள் ஏற்றப்பட்டன. குழந்தைகளின் பெயர் உச்சரிக்கும் சத்தம் நான்கு பக்கங்களிலிருந்தும் கேட்டது.


'யார் அது? ராம் அத்தானா?'

இருள் விழுந்திருந்த வீட்டின் படியிலிருந்து யாரோ உரத்த குரலில் கூறினார்கள். தன்னுடைய முறைப் பெண்ணான பேபியின் தங்கை ராஜிதான் அது என்பதை அவன் புரிந்து கொண்டான்.

'வா.... உள்ளே வந்துட்டு போகலாம்'.

பேபியின் தந்தை உண்ணி மாமன் அழைத்தார்.

தனக்கு நேரமில்லை என்று அவன் கூறினான்.

துளசித் தரையில் விளக்கேற்றிக் கொண்டிருக்கும் பேபியை அவன் பார்த்தான். குளித்து ஈரமான தலை முடி..... வெளுத்த புடவை....நெற்றியில் சந்தனக் குறி.... அவள் துளசிச் செடியைப் பிடித்தவாறு அவனை நோக்கி புன்னகைத்தாள்.

'வாடா... சமீப காலத்துல உன்னைப் பார்க்கவே முடியலையே!'

உண்ணி மாமன் அவனுடைய தோளைத் தட்டியவாறு கூறினார்:

'வாங்க ராம் அத்தான்.... உள்ளே வாங்க.'

ராஜியும் அழைத்தாள்.

தனக்கு நேரமில்லை என்று அவன் கூறினான். அவன் குழாயை இழுத்தவாறு நடையைத் தொடர்ந்தான்.

வீடுகளின் வாசலில் பற்ற வைத்திருந்த விளக்குகள் அணைந்தன. அதற்கு பதிலாக ஆறாம் எண் விளக்குகளும், மின் விளக்குகளும் பிரகாசித்தன.

வெளிச்சமும் நிழலும் விழுந்து கிடக்கும் தெருக்களின் வழியாக அவன் நடந்தான்.

நான்கு தெருக்கள் சந்திக்கும் சந்திப்பின் வழியாக நடந்து சென்றபோது, முஹம்மது கூறினான்:

'சார், பார்க்கவே முடியலையே!'

தான் எல்லா நாட்களிலும் அந்த வழியாகத்தான் கடந்து செல்வதாக அவன் கூறினான்.

முஹம்மதுவின் வியாபாரம் மேலும் சற்று முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்பதை அவன் புரிந்து கொண்டான். கடை முழுவதும் பொருட்கள் இருந்தன. முன் பகுதியில் புதிய கயிறுகள் தொங்கிக் கொண்டிருந்தன. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் தொங்கிக் கிடந்த கயிறுகளை அவன் தொட்டான். நல்ல நீளம் இருந்தது .... பலமும் .. அவற்றுடன் ஒரு வாசனையும் ...

'கயிறு வேணுமா? புதிய கயிறு சார்?'

முஹம்மது கூறினான்.

அங்கிருந்தவற்றில் மிகவும் அழகானதாக தோன்றிய ஒரு கயிறை அவன் தேர்ந்தெடுத்தான். 'இதற்கு என்ன விலை?' என்று அவன் கேட்டான்.

'ஆறணாதான், சார்',

அவன் காசைக் கொடுத்தான். முஹம்மது கயிறைத் தாளைக் கொண்டு சுற்றினான். பொட்டலத்துடன் அவன் வெளியே வந்தான். அவன் தன்னுடைய வாடகை வீட்டை நோக்கி நடந்தான். உதட்டில் பாடலை முணுமுணுத்தான்.

வயலின் கரையிலிருந்த ஒரு சிறிய வீடுதான் அவனுடைய வசிப்பிடம். ஒவ்வொரு மாதமும் பத்து ரூபாய் வாடகை. வீட்டில் அவன் தனியாகத்தான் வசிக்கிறான்.

நட்சத்திரங்களின் பிரகாசம் விழுந்து கிடக்கும் வாசலின் வழியாக அவன் நடந்தான். சாவியை எடுத்தான். கதவைத் திறந்தான். விளக்கைப் போட்டான். அவன் தாள் பொட்டலத்தைப் பிரித்தான். புதிய கயிறின் வாசனை அவனை மூச்சை அடைக்கச் செய்தது. மேலே பார்த்தான், அங்கு தொங்க விடப்பட்டிருந்த மூன்று வளையங்கள் கண்களில் பட்டன. சாளரத்தில் ஏறி நின்று நடுவிலிருந்த வளையத்தில் கயிறைக் கட்டினான். நுனியில் முடிச்சுப் போட்டான். அவன் தன்னுடைய தலையை முடிச்சுக்குள் நுழைத்தான்... சிறிது நேரம் கடந்த பிறகு, கயிறின் நுனியில் துடித்துக் கொண்டிருந்த அவனுடைய சரீரம் அசைவற்றதாக ஆனது.

 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.