Logo

உப்புமா

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6544
Uppuma

டீச்சர் வந்ததுகூட பாஜிக்கு தெரியவில்லை. அவன் அப்போது தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கம் வருவதுகூட அவனுக்குத் தெரியவில்லை. பாஜிஉப்புமாவைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான். உண்மையாகச் சொல்லப்போனால்,அதனால்தான் பசி பற்றிய விஷயத்தைக்கூட அவன் மறந்து போயிருந்தான்.

பாஜியைச் சேர்த்துக் கொண்டார்கள் என்றாலும் இதுவரை அவனுக்கு உப்புமாகிடைக்கவில்லை. இன்று உப்புமா கிடைக்கும் என்று, அவனுடைய தந்தை அவனிடம் கூறியிருந்தான். "காலை வேலை" முடிந்து அவனுடைய தாய் திரும்பி வந்தபிறகுகூட, அவனுடைய தந்தை உடல் முழுக்கப் போர்த்திக் கொண்டு மூலையில்படுத்திருந்தான். அவனுடைய அன்னை அடுப்பில் நெருப்பு பற்ற வைக்கவேயில்லை.அவனுடைய தாய் ஒரு காகம் அல்ல. ஒரு மனிதப் பிறவியாகப் பிறந்து விட்டதால்,இனிமேல் ஒரு காகமாக பிறப்பதற்கும் அவனுடைய அன்னையால் முடியாது. பாஜியும் ஒரு காகத்தின் குஞ்சாக ஆக முடியாது. அவனுடைய அன்னை ஒரு காகமாக இருந்திருந்தால், ஏதாவதொன்றை அலகுகளுக்குள் மறைத்து வைத்துக் கொண்டு வருவாள். இரண்டு அச்சு வெல்லத்தையோ சிறிது காப்பிப் பொடியையோ ஒரு சப்பாத்தியின் சிறு பகுதியையோ கொண்டு வருவதற்கு அவனுடைய தாயால் முடியாது. "காலை வேலை" முடிந்தவுடன் அவனுடைய தாய்க்குக் கொடுத்த பழைய எச்சிலை விஷம்தின்பதைப்போல அவள் விழுங்கினாள். அவனுடைய அன்னை அந்த விஷத்தைத் தின்றபிறகும் சாகவில்லை! அவள் திரும்பி வந்தாளே, அதுதான் அவனுக்கு வேண்டும்.இறந்து விட்டால் போதும் என்று அவனுடைய தாய் சொன்னாள். இறந்து விட்டால்...பிறகு, மனிதர்களுக்குப் பசி என்பதே தெரியாது.

அவனுடைய தந்தை எழுந்து வேலைக்குச் சென்றால் அவனுக்கு சாதமும் கூட்டும் மரவள்ளிக்கிழங்கும் காப்பியும் வயிறு நிறைய கிடைக்கும். அவனுடைய தந்தைக்கு ஜுரம் இருப்பதால் வேலைக்குப் போக முடியாது. அவனுடைய தந்தை இருமும்போது நெஞ்சு வலிக்கிறது. நெஞ்சில் உயிரின் வேர்கள் துடிக்கின்றன.நெஞ்சை இறுகப் பிடித்துக் கொண்டு அவனுடைய தந்தை உயிரின் வேர்களைப் பிடுங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டு நிற்பதற்கு பாஜியால் முடியாது. அவன் புறப்படத் தயாரானபோது, நேற்றும் இரவு உணவு சாப்பிடாததால்அவனுடைய கண்கள் மங்கலாகி விடும் என்றும், ஏதாவது பேருந்தோ காரோ மோதி அவன் விழுந்து விடுவான் என்றும், அதனால் வீட்டிலேயே படுத்து இறந்தால் போதும் என்றும் அவனுடைய தாய் அவனைத் தடுத்தாள். அப்போது அவனுடைய தந்தை படுத்திருந்த பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்தான். அப்போது பாஜிக்கு சந்தோஷம் உண்டானது. அவனுடைய தந்தை இன்று வேலைக்குச் செல்வான். அப்படியென்றால் அவனுக்கு சோறும் கூட்டும் கஞ்சியும் மரவள்ளிக்கிழங்கும் காப்பியும் வெல்லமும் வயிறு நிறைய கிடைக்கும்.

அவனுடைய தந்தை எழுந்து நிற்கவில்லை. அவனுடைய கண்கள் பயங்கரமாக எரிந்துகொண்டிருந்தன. பாஜியின் தாய் எதற்காக பாஜியைப் பட்டினி போட்டுக் கொல்லவேண்டும்? அவனுடைய சிறிய சட்டியையும் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தந்தைசொன்னான். அன்று பள்ளிக்கூடத்தில் உப்புமா போடுவார்கள். இரண்டாவது வாரத்தில் உப்புமா கொடுக்க ஆரம்பிப்பார்கள். அவனுடைய தாய்க்கு ஒரு விஷயம் தெரியாது. இன்று உப்புமா இருக்கும்! பசியின் விஷயத்தை அத்துடன் பாஜி மறந்துவிட்டான். அவனுடைய தாய் அவனுடைய சிறிய சட்டியைக் கழுவிச் சுத்தம் செய்தாள்.


உண்மையாகச் சொல்லப் போனால் அதை கழுவிச் சுத்தம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. நேற்று முழுவதும் அந்த சட்டியில் எதுவுமே பரிமாறப்படவில்லை.இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், பள்ளிக் கூடத்திற்கு நடந்தே செல்கிறான் அல்லவா? சட்டியும் குளிக்கட்டும் என்று நினைத்திருக்கலாம். பள்ளிக்கூடத்தை அடைந்தவுடன் பாஜி தன்னுடைய இடத்தைப் பிடித்துக் கொண்டான். அவனுடைய சிறிய சட்டி உடைந்து விடக்கூடாது. எப்போது மதிய வேளை மணி அடிப்பார்கள்?பெஞ்சிற்குக் கீழே அவனுடைய சிறிய சட்டி கவிழ்ந்து இருந்தது. ற! ற என்ற எழுத்தை எழுதுவது என்பது ஒரு வேலையே அல்ல. ற! மதிய மணி அடிப்பது வரை அவன் அப்படியே உட்கார்ந்திருப்பான். பெஞ்சில் அமர்ந்து கொண்டே பாஜி தூங்கினான்.டீச்சர் வந்ததும் எல்லா பிள்ளைகளும் எழுந்து நின்றார்கள். பிள்ளைகள் எழுந்து நின்ற விஷயம் பாஜிக்கு தெரியாது. தப்பும் தவறுமாக பிள்ளைகள்கூறினார்கள்:

"நமஸ்ஸெ நமத்தே நமதே..''

ஆரவாரம் கேட்டு பாஜி கண்விழித்தான்.

வில்சன் சொன்னான்:

"டீச்சர்... டீச்சர்... பாஜி எழுந்திருக்கவில்லை!''

டீச்சர் சொன்னாள்:

"உட்காருங்க... உட்காருங்க... அவரவர்களுடைய இடங்களில் போய் எல்லாரும் உட்காருங்க.''

வில்சன் உட்காரவில்லை. அவன் நின்று கொண்டே சொன்னான்:

"டீச்சர்... டீச்சர்... பாஜி நமஸ்தெ சொல்லவில்லை!''

வேண்டாம் என்று சவுதாமினி டீச்சர் மனதில் நினைத்தாள். டீச்சருடைய மனதில் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவளுடைய எல்லா எதிர்பார்ப்புகளையும் சம்பளப் பிரச்சினை தகர்த்தெறிந்துவிட்டது. ஒன்று ஒன்று எழுபத்துமூன்றிலிருந்து வர வேண்டிய பாக்கிப் பணம் கிடைத்தால், பணம் முழுவதையும் தந்து விடுவேன் என்ற ஒப்பந்தத்தில்தான் டீச்சர் இருபது பறை நெல்லை கடனாக வாங்கியிருந்தாள். இருபத்தெட்டு ஒன்று எழுபத்து ஆறு வரை சவுதாமினிடீச்சருக்கு எந்தவொரு பணமும் வரவேண்டியதில்லை என்ற தகவலை இன்றுதான் அவள் அலுவலகத்திலிருந்து தெரிந்து கொண்டாள். இருபத்தெட்டு ஒன்று எழுபத்தாறுக்கு ஆப்ஷன் கொடுத்தால், ஒன்று ஒன்று எழுபத்து மூன்றிலிருந்து வர வேண்டிய "அரியர்ஸ்" கிடைக்காது. கோரனின் கஞ்சி எப்போதுமே யாசித்து பெறுவதுதான்.இல்லாமை என்ற விஷயம் எப்போதும் டீச்சரைப் பின்தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. பிள்ளைகளுக்கு முன்னால் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு இருக்க முடியாதே? குடையையும் கூடையையும் ஒரு இடத்தில் வைப்பதற்காக டீச்சர் பின்னால் திரும்பினாள். நானூறு ரூபாய் கொடுக்க வேண்டும்."அரியர்ஸ்" பணம் கிடைக்கப் போவதில்லை. எனினும், குடையையும் கூடையையும்ஜன்னலின்மீது வைத்து விட்டு, பிள்ளைகளின் பக்கம் திரும்பி நிற்கும்போது டீச்சர் சிரிப்பதற்கு முயற்சித்தாள். புடவையின் முனையைப் பிடித்துடீச்சர் தன் கண்களின் ஓரத்தைத் துடைத்தாள்.

வில்சன் உட்காரவில்லை. உட்காரவோ நிற்கவோ வில்சனுக்குத் தெரியாது. முதல்வகுப்பு படித்து முடித்தவுடன் தான் ஒரு டாக்டராக ஆகிவிட வேண்டும் என்ற நினைப்பில் அவன் இருக்கிறான். நீலநிறச் சட்டையும் வெள்ளை நிற அரைக்கால் ட்ரவுசரும் அணிந்து நிற்கமுடியாத கால்களுடன் அவன் நடந்து திரிந்தான். அவனுடைய டாடி பட்டாளத்தில் இருக்கிறார். டாடி பீரங்கி வீரராக பணியாற்றுகிறார். போர்புரிந்து தன்னுடைய டாடிக்கு காயம் உண்டாகும்போது, பென்சிலினை தான் குத்திவிடவேண்டும் என்று வில்சன் நினைப்பான்.


காயம் பட்ட எல்லா போர் வீரர்களுக்கும்தான் பென்சிலின் ஊசியைப் போட வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தான் வில்சன்.பீரங்கி போர் வீரர்கள் தங்களுடைய தொப்பியில் அணிந்திருக்கும் வெள்ளிபூசப்பட்ட துப்பாக்கியை வில்சன் சட்டையில் அணிந்து நின்றுகொண்டிருக்கிறான்.

டீச்சர் சொன்னாள்:

"உட்காரு வில்சன்... நாம் பாஜியை எழுந்திருக்கச் செய்வோம்.''

சவுதாமினி டீச்சர் வருகைப் பதிவேட்டை விரித்தாள்.

பாஜி "ஹாஜர்" கூறவில்லை. பெயரை அழைத்த பிறகும், அவன் எழுந்திருக்கவில்லை.டீச்சருக்கு என்னவோ போலாகிவிட்டது. ஒரு வாரமாக "ஹாஜர்" கூறுவதற்கு அவன்கற்றுக் கொள்ளவில்லை. பட்டியலில் இருந்து முகத்தை உயர்த்திய டீச்சர்,நடந்து கொள்ள வேண்டிய விதிகளைப் பற்றி திரும்பத் திரும்பக் கூறும் பாடத்தைஆரம்பித்தாள்.

"பெயர் கூறி அழைக்கும்போது பாஜி எழுந்து நிற்க வேண்டும். பாஜியின் பெயர் என்ன?''

வில்சன் திடீரென்று எழுந்து உரத்த குரலில் சொன்னான்:

"பாஜி, ஸிஸி.''

டீச்சர் வில்சனைத் திட்டவில்லை. சொல்லப்போனால், அது தான் அங்குள்ள தவறே.எழுந்து நிற்க வேண்டியவனுக்கு நிற்பதற்கு சந்தர்ப்பம் கொடுப்பதில்லை.அவனைப் பேசுவதற்கு அனுமதிப்பதில்லை. அவனுக்காக நான் எழுந்து நிற்கிறேன்.அவர்களுக்காகப் பேசுகிறேன்.அவர்களுக்கு சற்று எழுந்து நிற்பதற்கோ எதையாவது கூறுவதற்கோ தெரியவில்லை. தெரியாது என்றும் இயலாது என்றும் நான்முடிவு செய்கிறேன். என்னிடம் கேள்வி கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்?டீச்சர் வகுப்பைப் பார்த்தாள். வில்சன் உட்கார்ந்து விட்டான். டீச்சர் பாடத்தைத் தொடர்ந்தாள்.

பாஜி சிரமேல் சேரப்பன் என்பதுதான் பாஜியின் முழுப் பெயர். பாஜியின் பெயரில் பாஜியும், பாஜியின் தந்தையும், பாஜியின் குடும்பமும் இருக்கின்றன.பாஜி அப்படியொன்றும் மோசமானவன் அல்ல. பாஜியின் தோளில் ஒரு கொடி இருக்கிறது. எல்லாரும் கொடிகளைப் பார்த்திருக்கிறார்கள் அல்லவா?

"எல்லாருடைய தோள்களிலும் கொடிகள் இருக்கின்றன.''

ஒரு சிறுவன் சொன்னான்:

"இல்லை.''

வில்சனாக இருக்குமோ என்று டீச்சர் கண்ணாடியின் வழியாகப் பார்த்தாள். அப்போது சிறுவர்கள் சொன்னார்கள்:

"என் தோளில் கொடி இல்லை.''

"எனக்கு கொடி இல்லை.''

டீச்சர் சிரித்தாள்.

எல்லாருக்கும் கொடிகள் இருக்கின்றன. இந்தக் கொடியை ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு மாணவனும் தங்களுடன் வைத்துக் கொண்டு நடக்கிறார்கள். அவன் கொடியுடனே பிறக்கிறான். சிரமேல் சேரப்பன் பாஜி. சிரமேல் என்ற குடும்பத்தின் கொடியைப் பறக்க விட்டுக் கொண்டு பாஜி பள்ளிக் கூடத்திற்கு வருகிறான்.

டீச்சர் நினைத்தாள். உன் கஞ்சி கை நீட்டிப் பெறுவதே என்று நீ பிறப்பதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. ஆனால், எல்லா சிந்தனைகளையும் பிள்ளைகளிடம் கூறிக் கொண்டிருக்க முடியாது.

"எந்தவொரு பள்ளிக்கூடத்திலும் மாணவனின் முழுப் பெயரையும் சேர்த்துஅழைப்பதில்லை. இங்கு சுருக்கப் பெயர் மட்டுமே கூறி அழைக்கப்படுகிறது. பாஜி ஸி. ஸி. பாஜி, சிரமேல் சேரப்பன்... அது பிறகு உங்களுக்குப் புரியும்.முதல் வகுப்பில் ஏ.பி.ஸி படிப்பதில்லை. முதல் வகுப்பில் நீங்கள் ர, ற, த படிக்கிறீர்கள். ற என்ற எழுத்தை எல்லாரும் கற்றுக் கொண்டீர்களா?''

வகுப்பு ஒரே குரலில் கூவியது:

"ம்...!''

பாஜி வியர்வையில் நனைந்திருந்தான். அவன் தன்னுடைய தந்தையைப் பற்றியும் தாயைப் பற்றியும் நினைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய சிறிய சட்டியை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தந்தை சொன்னான்.


டீச்சர் கேட்டாள்:

"பாஜி ஸி.ஸி என்று "ஹாஜர்" அழைக்கும்போது, பாஜி என்ன கூற வேண்டும்?''

அப்போது முதல் வகுப்பு முழுவதும் தட்டுத் தடுமாறிய குரலில் கூறினார்கள்:

"ஸாஜர்...!''

வெள்ளெழுத்துக்கான கண்ணாடிக்குப் பின்னால் டீச்சரின் கண்கள் பிரகாசித்துக்கொண்டிருந்தன. பாஜி எழுந்திருக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.பெஞ்சிற்குக் கீழே அவனுடைய சிறிய சட்டி கவிழ்ந்து கிடந்தது. தட்டி விடவோ மிதிக்கவோ முடியாது. அந்தச் சட்டி அவனுடைய முதல் பாடமாக ஆகிறது... ற!

ஒரு "ற"விற்குள் அவனுடைய வாழ்க்கை ஆரம்பமாகிறது. அதே "ற"விற்குள் அந்த வாழ்க்கை முடிவடைகிறது.

"ற" கை விலங்காகவும் ஆகிறது.

எழுத்துக்களும் சட்டங்களும் அவனை விலங்கு போடுகின்றன.

பாஜி ஸி.ஸி. சுமை தூக்கும் தொழிலாளி சேரப்பனின் வழித் தோன்றலாக ஆகிறான்.

அவன் எழுந்து நின்றபோது டீச்சர் சந்தோஷப்பட்டாள். வகுப்பில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இறுதியாக அந்த மடையன் படித்துக் கொண்டிருக்கிறான்!

எப்படியோ தட்டுத் தடுமாறி பாஜி எழுந்து நின்றான். கழன்று கொண்டிருக்கும்அரைக்கால் ட்ரவுசரைப் பற்றி எதுவுமே தெரியாமல் அவன் சொன்னான்:

"டீச்சர், உறக்கம் வருவதால் முடியல...''

டீச்சர் எழுந்தாள். ஒரு மாணவன்... ஒரு பொய் கூறும் திறமைகூட இல்லாத ஒரு மாணவன்... டீச்சர் பாஜியை அப்போதுதான் பார்த்தாள். அவள் மாணவனின் அருகே மெதுவாக நடந்தாள். சரியாக வாரியிராத சுருண்ட தலைமுடிகள் சிதறிக் கிடக்கும் அவனுடைய நெற்றியில் வியர்வை அரும்பிக் கொண்டிருந்தது. அவனுடைய நீல நிறக்கண்களில் அறிவின் முதல் பாடத்தை கண் இமைகள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

ற!

பாதியாக விரிந்திருந்த அவனுடைய மேலுதடு அவனுடைய முகத்தில் எழுதியது.

ற.

விரிந்த உதடுகளுக்கு மத்தியில் அவனுடைய முன் வரிசையில் இருந்த சிறிய பற்கள் எழுதி வைத்திருந்தன.

ற.. ற...

அவனுடைய முன் தலையிலும் நெற்றியிலும் கையை வைத்து சவுதாமினி டீச்சர் கேட்டாள்:

"காய்ச்சல் அடிக்கிறதா?''

ஆனால், டீச்சர் திடீரென்று பயந்தாள். பாஜி தாளைப்போல குளிர்ந்து காணப்பட்டான்!

பாஜி உண்மையைக் கூறினான்:

"பசிக்குது!''

அவன் விழுந்து விடுவானோ என்று டீச்சர் பயந்தாள். அவன் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டான். அவனைத் தன்னுடைய உடலுடன் சேர்த்து வைத்துக் கொண்டு பிடித்திருந்தபோது டீச்சர் பதறிப் பதறி வகுப்பறையையே பார்த்துக்கொண்டிருந்தாள். யாருக்குப் பசிக்கிறது? இனிமேலும் தளர்ந்து போய் கீழே விழப்போவது யார்?

அப்போது டீச்சர் சம்பளப் பிரச்சினையை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள்.சம்பளப் பிரச்சினைதான் எல்லா விஷயங்களுக்கும் மூல காரணம். அலுவலகத்தில் ஆப்ஷன் தேதி, அரியர்ஸ் ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்களாகவே இருந்தன.அலுவலகத்தில் ரவை, பால் பொடி, நெய் ஆகியவை இருந்தன. விறகு இருந்திருந்தால்,உப்புமா தயார் பண்ணி இருக்கலாம். ஆனால், விறகு பற்றிய விஷயத்தை யாரும் கூறவில்லை. எல்லாரும் அவரவர்களுடைய சம்பளத்தைக் கணக்குப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என் நானூறு ரூபாய்... என் இருபது பறைநெல்... பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டிய உப்புமாவைப் பற்றி ஒரு ஆள்கூட கூறவில்லை.

இன்றும் உப்புமா இல்லை!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.