Logo

ஒட்டகம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6520
Ottagam

ல்லாரும் அவனை ஒட்டகம் என்றுதான் அழைப்பார்கள். நீண்டு மெலிந்த இரும்புத் தூண்களைப்போல இருக்கும் கால்கள், கடப்பாரைகளைப் போன்ற கைகள், நீளமான கழுத்தைக் கொண்ட சீனா பெட்டியைப் போன்ற நெஞ்சு... இந்த உறுப்புகளுக்கு மேலே காய்ந்த தேங்காயைப்போல ஒரு தலை! அதுதான் ஒட்டகம்.

நீர் நிரப்பப்பட்ட ஒரு பெரிய பீப்பாய் வண்டியை இழுத்துக் கொண்டு ஒட்டகம் காலை நேரத்திலும் மாலை வேலையிலும் தெருவில் போவதே ஒரு கண் கொள்ளாக் காட்சிதான். நான்கு சிறிய சக்கரங்களைக் கொண்ட அந்த பீப்பாய் வண்டி, ஒரு வினோதமான சத்தத்தை எழுப்பியவாறு பிரசவமான பன்றியைப்போல நகர்ந்து கொண்டிருக்கும்போது, அதைப் பின்னாலிருந்து தள்ளுகிறோம் என்ற பெயரில் ஐந்தாறு சிறுவர்களைப் பார்க்கலாம். சிறுவர்களில் சிலர் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு சில குறும்புத்தனமான சேட்டைகள் செய்து, முணுமுணுத்தவாறு நடந்து கொண்டிருப்பார்கள். சிலர் கழுத்தைத் திருப்பி தெருவில் நடக்கும் ஏதாவது காட்சிகளைப் பார்த்து பல்லைக் காட்டுவார்கள். வண்டியைத் தொடாமல் அதை விரல்களால் தட்டியவாறு அவர்கள் எல்லாரும் பின்னால் நடப்பார்கள். ஒட்டகத்திற்கு அது எதுவுமே தெரியாது. அவன் மட்டும் முன்னால் தனியே, கைகள் இரண்டையும் வண்டியின் இரும்புக் கைப்பிடியில் வைத்துக்கொண்டு, உதடுகளை பலமாக இறுக்கியவாறு, முகத்தை உயர்த்தி, முன்னால் சாய்ந்தவாறு வண்டியை இழுத்து நடந்து கொண்டிருப்பான். அடிக்கொருதரம் கீழுதடை நீட்டியவாறு மூக்கை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு, தெருவின் இரண்டு பக்கங்களையும் அவன் பார்ப்பான். அந்த வினோதமான பார்வைதான் அவனுக்கு ஒட்டகம் என்ற பெயரைச் சம்பாதித்துத் தந்தது.

ஹோட்டலில் சாப்பிடும் மேஜைமீது விரிக்கப்பட்ட பழைய நாற்றமெடுத்த ஒரு துண்டுத் துணியைத்தான் அவன்

உடுத்தியிருக்கிறான். அது இல்லாமல் வலது கணுக்காலுக்கு நடுவில் ஒரு துணியையும் எந்நேரமும் அவன் சுற்றியிருப்பதைப் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்னால் உண்டான ஒரு காயத்தின் ஞாபகம் அது. காயம் முற்றிலும் குணமாகி அதற்குமேல் ரோமம் முளைத்துவிட்ட பிறகும், அந்த துணியை அவன் அந்த இடத்தில் இன்னும் கட்டிக்கொண்டுதான் இருக்கிறான். அந்தக் கட்டு அவிழ்த்துவிட்டால், தான் அந்த நிமிடமே கீழே விழுந்து எங்கே இறந்து விடுவோமோ என்று அவன் மனதில் நினைத்திருக்கலாம். காலில் ஒரு அலங்காரம் என்பதைப்போல அவன் அந்தத் துணியுடன் நடந்துகொண்டிருப்பான்.

ஹோட்டலுக்குப் பின்னாலிருக்கும் விறகு போடப்பட்டிருக்கும் அறைக்குப் பக்கத்தில், எச்சில் தொட்டிக்கு அருகில்தான் அவன் ஓய்வாக இருக்கும்போது அமர்ந்திருப்பான். மாலை நேரம் வேலை முடிந்த பிறகு ஒரு துண்டு சுருட்டைப் புகைத்தவாறு அவன் அங்கு கழுத்தை நீட்டிக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்திருப்பான். அவனுடைய உதவியாளர்களான தெருச் சிறுவர்கள் அவனுடைய முதுகிலும் தோளிலும் விழுந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவனுக்கு அது ஒரு பொழுதுபோக்கு மாதிரி. சிறிது நேரம் அப்படி உட்கார்ந்து விட்டு, திடீரென்று அவன் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்து நிற்பான். சிறுவர்கள் நாய்க்குட்டிகளைப்போல கீழே விழுவார்கள். அந்த தமாஷான காட்சியைப் பார்த்து அவன் கழுதை கத்தும் குரலில் விழுந்து விழுந்து சிரிப்பான்.


ஒட்டகமும் அந்தச் சிறுவர்களும் நகரத்திலிருக்கும் அந்த பெரிய ஹோட்டலை நம்பித்தான் வாழ்கிறார்கள். ஹோட்டலுக்குத் தேவைப்படும் நீர் முழுவதையும் பக்கத்திலிருக்கும் ஆற்றிலிருந்து பீப்பாய் வண்டியில் கொண்டு வருவதுதான் அவனுடைய வேலை.

பதினாறு வருடங்களாக அவன் அந்த வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான்.

பதினாறு வருடங்களுக்கு முன்பு இருந்த அவனுடைய வாழ்க்கையைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. யாரும் அதைப் பற்றி அவனிடம் விசாரித்ததும் இல்லை. அந்த பீப்பாய் வண்டியின் ஒரு பகுதியாக இல்லாமல் வேறு மாதிரி அவனுடைய வாழ்க்கையைக் கற்பனை பண்ணி பார்க்க யாராலும் முடியவில்லை.

இப்படியே அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். "எட்டு ஆளுங்க சாப்பிடுற சாப்பாட்டை இவன் ஒருவனே சாப்பிடுறான்னா சாதாரண விஷயமா!" என்ற ஒரே ஒரு குற்றச்சாட்டைத்தான் ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தின் மீது கூறுவார். நீர் கொண்டு வருவது இல்லாமல் ஹோட்டலுக்கு தேவைப்படும் விறகுகளைப் பிளக்கும் வேலையையும் அவன்தான் செய்கிறான்.

ஆகஸ்டு புரட்சியால் இந்தியா அதிர்ந்தது. இரண்டாம் உலகப்போர் முடிந்தது. இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது- இவை எதுவுமே ஒட்டகத்திற்குத் தெரியாது. இந்த உலகத்தில் அசாதாரணமான சில விஷயங்கள் நடக்கின்றன என்பதை இரண்டே முறைகளில்தான் அவன் உணர்ந்திருக்கிறான்.

ஒருநாள் காலையில் எப்போதும்போல அவன் பீப்பாய் வண்டியில் நீரை நிறைத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். பாதையோரத்திலிருந்த ஒரு தொழிற்சாலையின் முன்னால் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று ஒரு லாரி நிறைய போலீஸ்காரர்கள் வந்து இறங்கினார்கள். அவர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்தவர்களையும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் லத்தி சார்ஜ் செய்து விரட்டினார்கள். அந்த ஆரவார சூழ்நிலைக்குள் பீப்பாய் வண்டியை இழுத்துக்கொண்டு அங்கு

வந்த ஒட்டகம் மாட்டிக் கொண்டான். அவன் பீப்பாய் வண்டியைக் கீழே போட்டுவிட்டு ஓடினான். ஓடும்போது அவனுடைய முதுகில் ஒரு அடி விழுந்தது. முதுகை இரண்டு கைகளாலும் பலமாய் பிடித்துக்கொண்டு அவன் திரும்பிப் பார்க்காமல் கழுத்தை நீட்டிக் கொண்டு, கீழுதடை முன்னோக்கித் தள்ளியவாறு படுவேகமாக ஓடினான். தெருவை அடைந்த பிறகும் அவன் ஓடுவதை நிறுத்தவில்லை. அவன் தெருவின் இரண்டு, பக்கங்களிலுமிருந்த கடைக்காரர்களைப் பார்த்தவாறு தன் வாயை குகையைப் போல திறந்து வைத்துக்கொண்டு ஒரு தாழ்ந்த குரலில் "அடிக்க வர்றாங்க" என்று முன்னறிவிப்பு கூறியவாறு ஓடிக்கொண்டிருந்தான்.

நகரத்தில் இருப்பவர்களின் முதுகில் எல்லாம் அடிவிழப்போகிறது என்பது அவனுடைய எண்ணம்.

அன்று முழுவதும் ஒட்டகம் அந்த விறகு வைக்கும் அறையிலேயே பயந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். ஹோட்டல் நிர்வாகி எவ்வளவு சொல்லியும், திட்டியும் அவன் அந்த இடத்தை விட்டு அசைவதாக இல்லை. கடைசியில் அந்தச் சிறுவர்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அந்த பீப்பாய் வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்து அங்கு சேர்த்தார்கள். அந்த வண்டி எவ்வளவு கனமாக இருக்கிறது என்பதையே அன்றுதான் அந்தச் சிறுவர்கள் தெரிந்துகொண்டார்கள்.

இரண்டாவது சம்பவம்- அந்த பீப்பாய் வண்டி அவனுடைய முதுகின்மீது கவிழ்ந்து விழுந்தது. ஒரு சாதாரண மனிதனாக இருந்தால் அந்த நிமிடத்தில் நிலைகுலைந்து போயிருப்பான். தலையும் முதுகும் பலமாக பாதிக்கப்பட, ரத்தத்தில் குனிந்தவாறு ஒட்டகம் பீப்பாய்க்குக் கீழேயிருந்து தன்னை இழுத்துக் கொண்டிருந்தான்.


சிறிது தூரத்திற்கு அவன் தரையில் தன்னை இழுத்துக் கொண்டே போய் அங்கு விழுந்தான். ஹோட்டல் நிர்வாகி அந்த நிமிடமே அவனை ஒரு ரிக்ஷா வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஒட்டகம் இறந்துவிடுவான் என்றே எல்லாரும் நினைத்தார்கள். அந்த அளவிற்கு அவன் உருக்குலைந்து போயிருந்தான். ஆனால் அவன் உயிருடன் வாழ்ந்தான்.

சுய உணர்வு வந்தபோது தான் ஒரு பளபளப்பான வெள்ளை நிற படுக்கையில் படுத்திருப்பதை அவன் பார்த்தான். அவன் தன்னுடைய உடலை காலிலிருந்து தலைவரை ஒருமுறை ஆராய்ந்தான். தலை, தாடை, எலும்பு, தோள் எல்லாமும் வெள்ளை துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. கணுக்காலைக் கூர்ந்து பார்த்தபோது, அந்த பழைய துணி அங்கு இல்லை என்பதை அவன் உணர்ந்தான். அடுத்த நிமிடம் அவன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துக் கிழித்தான். கணுக்காலில் பத்திரமாக ஒரு கட்டு கட்டிவிட்டு, திருப்தியுடன் கண்களை மூடிப் படுத்துக் கொண்டான்.

சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்து பார்த்தபோது அவனுடைய தலையிலிருந்து தாரை தாரையாக ரத்தம் வழிந்து கொண்டிருக்க, மீண்டும் அவன் சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தான்.

ஒன்றரை மாத காலம் அவன் மருத்துவமனையில் இருந்தான். வாசலின் ஒரு மூலையில் அவனுடைய கட்டில் இருந்தது.

ஒருநாள் இரவுப் பணியில் நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் வாசல் பக்கம் ஒலித்த ஒரு சத்தத்தைக் கேட்டு வந்து பார்த்தபோது, ஒட்டகம் அந்த இரும்புக் கட்டிலைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். அந்த பீப்பாய் வண்டியை இழுக்க முடியாத வெறுப்பை அந்தச் செயல் மூலம் அவன் காட்டினான்.

மறுநாளே அவனை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். ஹோட்டலை அடைந்த அடுத்த நிமிடமே அவன் தன்னுடைய பீப்பாய் வண்டியை இழுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி புறப்பட்டுவிட்டான்.

ஒருநாள் ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தை தன்னுடைய அறைக்கு வரும்படி அழைத்தார்.

ஒட்டகம் அதைக்கேட்டு ஒரு மாதிரி வெலவெலத்துப் போனான். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் அவன் சிறிது நேரம் மூக்கையும் உதடையும் சுளித்துக்கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பார்த்தான். கடைசியில் மிகவும் பணிவுடன் அவன்  தன்னுடைய கழுத்தை முடிந்த அளவிற்கு முன்னோக்கி நீட்டியவாறு நிர்வாகியின் முன்னால் போய் நின்றான்.

நிர்வாகி அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு சொன்னார்:  "டேய், உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்றதுக்காகத்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன். உனக்கு என்ன வயது நடக்குது?''

ஒட்டகம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான்.

"சரியா தெரியாம இருக்கலாம். பரவாயில்லை. நீ நீண்ட காலமா இந்த ஹோட்டல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருக்குறே. உன்மேல எனக்கு தனிப்பட்ட முறையில ஒரு தனி பாசம் இருக்கு. அதனால உனக்கு நான் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன். நீ என்ன சொல்ற?''

அதைக் கேட்டு ஒட்டகம் வெளிறிப்போய் சிலையென நின்றிருந்தான்.

"பொண்ணு ரொம்பவும் நல்லவ. யாருன்னு தெரியுமா? இங்கே சமையல் வேலைக்கு வர்ற மாதுதான். நீங்க ரெண்டு பேருமே இந்த ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்கன்றதுனால, நீ அவளுக்கு தனியா

பணம் எதுவும் தர வேண்டியது இல்ல. கல்யாணச் செலவுன்னு  பார்த்தா...''


நிர்வாகி மேஜையைத் திறந்து அதில் இருந்த ஒரு பெரிய காலி சிகரெட் டின்னில் அடுக்கி வைக்கப்பட்டிருந்து ரூபாய் நோட்டுகளிலிருந்து மூன்று பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்து மேஜைமீது வைத்தார்.

"உன் சம்பளப்பணம் இங்கே இருக்கு. இது பத்தலைன்னா, என் அன்பளிப்பா கொஞ்சம் பணத்தையும் நான் தர்றேன். என்ன, உனக்கு சம்மதம்தானா?''

ஒட்டகம் பதிலெதுவும் கூறாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான்.

பெண், திருமணம் போன்ற விஷயங்கள் தனக்கு சம்பந்தமில்லாதவை என்றோ, தனக்கு அவற்றை வாழ்க்கையில் அடைய எந்தவிதமான உரிமையும் இல்லை என்றோதான் அதுவரை அவன் நினைத்திருந்தான். நிர்வாகியின் பேச்சு மரத்துப்போயிருந்த அவனுடைய நரம்புகளில் சில உணர்ச்சி ஓட்டங்களை உண்டாக்கியது. ஒட்டகம் மூக்கை ஒரு மாதிரி சுளித்து வைத்துக்கொண்டு சிரித்தவாறு அறையின் இரு பக்கங்களிலும் முகர்ந்து பார்த்தான்.

"சீக்கிரமா பதில் சொல்லு. உனக்கு சம்மதம்தானே?'' -நிர்வாகி அதிகார தோரணையில் சற்று குரலை உயர்த்திக் கேட்டார்.

ஒட்டகம் பற்களை இளித்துக் கொண்டு தலையை ஆட்டினான்.

"சரி... அப்போ நீ கிளம்பு. நாளைக்கு ராத்திரி உனக்கு கல்யாணம். நாளைக்கு நீ தண்ணி கொண்டு வர வேண்டாம். விறகு பிளக்கவும் வேண்டாம்.''

ஒட்டகம் மெதுவாகப் படிகளில் இறங்கி, ஹோட்டலின் பின்பக்கம் வந்தான். சிறிது நேரம் சென்றதும் அவன் பிச்சையெடுக்கும் சிறுவர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து அவர்களின் காதுகளில் மெதுவான குரலில் சொன்னான்: "நாளைக்கு எனக்கு கல்யாணம்.''

முதலில் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. "என்ன கல்யாணம்? சுன்னத் கல்யாணமா?'' -அவர்கள் அவனைக் கிண்டல் பண்ணினார்கள்.

அன்று மாலை ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தை அழைத்து, அவனிடம் ஒரு புதிய சட்டையையும் இரட்டை மடிப்பு வேஷ்டியையும் கொடுத்தார்.

புது மாப்பிள்ளை அணியக்கூடிய புத்தாடைகளைப் பார்த்த பிறகுதான் ஒட்டகம் கூறியது. உண்மை என்ற எண்ணம் சிறுவர்களுக்கு வந்தது.

"பொண்ணு யாரு?'' அவர்கள் ஒட்டகத்தின் முதுகில் சவாரி செய்தவாறு கேட்டார்கள்.

"நாளைக்கு தெரிஞ்சிக்கங்க...'' ஒட்டகம் மிடுக்கான குரலில் சொன்னான்.

மறுநாள் இரவு வந்தது. ஹோட்டலின் ஆரவாரமெல்லாம் ஓய்ந்து, அமைதியானது.

பத்தாம் எண் அறையில் திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டிருந்தன.

புத்தாடைகள் அணிந்து சற்று பதைபதைப்பு இருக்க, ஒட்டகம் அறைக்குள் வந்தான். அவனுடைய கணுக்காலில் துணி அப்போதும் கட்டப்பட்டிருந்தது.

மணப்பெண் கீழே விரிக்கப்பட்டிருந்த புல்லால் ஆன பாயில் புத்தாடைகள் அணிந்து உட்கார்ந்திருந்தாள். ஒட்டகம் அவளையே பார்த்தான். தவிட்டு நிறத்தில் தடித்து கொழுத்துப் போய் காணப்பட்ட

அந்தப் பெண் அந்த ஹோட்டலில் சமையல் வேலை செய்யும் மாதுதான் என்பதைப் பார்த்தவுடன் ஒட்டகம் புரிந்து கொண்டான். மிருகத்தனமான சந்தோஷம் உண்டானதை அடக்கிக் கொண்டு அவன் அவளையே கண்களை அகல விரித்துக் கொண்டு பார்த்தான்.

நிர்வாகி, அவரின் சில நண்பர்கள் ஆகியோர் முன்னிலையிலும், அவர்களின் உதவியுடனும் திருமணச் சடங்குகள் அனைத்தும் நடந்தன.

சிறுவர்களை அங்கு யாரும் நுழைய அனுமதிக்கவில்லை. அவர்கள் விறகுகள் இருக்கும் அறைக்கு மேலே ஏறி நின்று எல்லாவற்றையும் பார்த்தார்கள்.


நல்ல நிலவு வானத்தில் காய்ந்து கொண்டிருந்தாலும், திடீரென்று ஒரு மழை பெய்ய ஆரம்பித்தது.

"நரியோட கல்யாணத்திற்கு வெயிலும் மழையும்- ஒட்டகத்தோட கல்யாணத்துக்கு நிலாவும் மழையும்!'' -இப்படிக் கூறியவாறு குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே சிறுவர்கள் கீழே இறங்கி தூங்க ஆரம்பித்தார்கள்.

திருமணம் முடிந்தவுடன் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் ஒட்டகம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான். தன்னுடைய பழைய இடத்திலேயே போய் படுத்துத் தூங்கும்படி நிர்வாகி அதிகார தோரணையில் சொன்னார். சிறிது நேரம் சென்ற பிறகு சிறுவர்களுக்கு நடுவில் புது மாப்பிள்ளையும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.

தனக்கு என்ன கிடைத்தது என்பதோ, தன்னிடமிருந்து என்ன போனதென்றோ தெரியாமல் ஒட்டகம் எப்போதும் போலவே தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். வாழ்க்கையில் அவனுக்குப் புரியாத பல விஷயங்களில் ஒன்றாக இருந்தது அந்தத் திருமணம்.

மாதங்கள் ஓடின.

வெளியே பார்ப்பதற்கு ஒட்டகத்திடம் மாற்றங்கள் எதுவும் தெரியவில்லையென்றாலும், அவனுடைய மூளையில் சிந்தனையின் வெளிப்பாடுகள் தோன்றத்தான் செய்தன. பொதுவாக எந்த நோயாலும் பாதிக்கப்படாத அவனுக்கு தாங்க முடியாத அளவிற்கு ஒருவித தலைவலி உண்டானது.

பீப்பாய் வண்டியை இழுத்துச் செல்லும்போது தெருவோரங்களை இப்போதெல்லாம் அவன் வெறித்துப் பார்ப்பதேயில்லை. அவனுடைய கழுத்து சுருங்கி, தலை இறங்கியது. காரணங்களே இல்லாமல் அவனுக்கு கோபம் வர ஆரம்பித்தது. அப்போது அவன் பயங்கர சத்தத்துடன் கத்துவான்.

மாதுவை அவன் சில நேரங்களில் பார்ப்பான். அவள் சமையலறையில் இருந்தவாறு தேங்காய் அரைப்பதையும் மசாலா வறுப்பதையும் அவன் பார்ப்பான். சமையலறையிலிருக்கும் தொட்டியில் நீர் நிறைக்கும்போதுதான் அவனுக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கும். ஒட்டகத்தைப் பார்க்கும்போது மாது தன் வாயை மூடிக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பாள்.

அவன் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டான்.

திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் கழிந்த பிறகு, மாது அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்தியை ஒட்டகம் கேள்விப்பட்டான்.

ஒரு நாள் மாலை நேரத்தில் பீப்பாய் வண்டியை இழுத்துக்கொண்டு அவன் போய்க் கொண்டிருந்தான்.

திடீரென்று சிறுவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள்: "ஒட்டகத்தோட குழந்தை!''

ஒட்டகம் கழுத்தைத் திருப்பிப் பார்த்தான். தெருவோரமாக மாது போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய மார்பில் அந்தப் பச்சிளம் குழந்தை இருந்தது.

ஒட்டகத்தின் கண்கள் பிரகாசித்தன. அவன் ஒரு சாதாரண மனிதனைப்போல அழகாகப் புன்னகைத்தான். பிறகு மெதுவாக வண்டியை நிறுத்தினான். மாதுவை நெருங்கி அவன் வந்தான்.

மாது பதைபதைத்துப் போய் அதே இடத்தில் நின்றுவிட்டாள். ஒட்டகம் அவளுடைய இடுப்பிலிருந்த அந்த பச்சிளம் குழந்தையை வாரி எடுத்து தன் கைக்குள் வைத்தவாறு பீப்பாய் வண்டியை நோக்கித் திரும்பி நடந்தான். குழந்தையை ஒரு கையால் இறுகப் பற்றியவாறு இன்னொரு கையால் வண்டியை இழுத்துக் கொண்டு அவன் நடக்க ஆரம்பித்தான்.

மாது உரத்த குரலில் கத்தியவாறு வண்டிக்குப் பின்னால் வேகமாக ஓடினாள். சிறுவர்கள் கத்தினார்கள். ஆட்கள் கூட ஆரம்பித்தார்கள். ஆரவாரம் கேட்டு ஒரு போலீஸ்காரர் அங்கு வந்து சேர்ந்தார்.


போலீஸ்காரரைப் பார்த்ததும் ஒட்டகம் பீப்பாய் வண்டியைப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தான்.

எங்கு ஓடலாம் என்று அவன் யோசித்தான். ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதிகளைத் தவிர, வேறு எந்த இடத்தையும் அவனால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. குழந்தையைக் கையில் இறுக்கியவாறு அவன் நேராக ஹோட்டலுக்குள் நுழைந்தான்.

அங்கும் போலீஸ்காரரின் தலை தெரிந்ததும், அவன் பதைபதைப்புடன் ஹோட்டலில் மாடிப் பகுதிக்கு வேகமாக ஏறினான். அந்தப் பழைய பத்தாம் எண் அறை திறந்து கிடந்தது. அவன் அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

ஹோட்டல் நிர்வாகியும் கொஞ்சம் ஆட்களும் மாதுவும் போலீஸ்காரரும் அறைக்கு வெளியே கூட்டமாக நின்றிருந்தார்கள்.

"டேய், கதவைத் திற'' நிர்வாகி கட்டளையிட்டார்.

பதிலில்லை.

கதவைத் தட்டியவாறு நிர்வாகி மீண்டும் அழைத்தார்: "மரியாதையா கதவைத் திறக்குறியா இல்லியா?''

"குழந்தையை நான் தர மாட்டேன்'' ஒட்டகம் உள்ளேயிருந்தவாறு அழும் குரலில் சொன்னான்.

"அதைப் பிறகு பார்ப்போம். நீ கதவைத் திறந்து வெளியே வா.''

"இந்தக் குழந்தை எனக்கு வேணும்'' உள்ளேயிருந்து மீண்டும் அழுகைக் குரல்.

"முதல்ல உன்னை கதவை திறக்கச் சொன்னேன்'' -நிர்வாகி பலமாக கதவைத் தட்டினார்.

"தாய் எனக்கு கிடைக்கல. குழந்தை எனக்கு வேணும்'' ஒட்டகம் கெஞ்சுகிற குரலில் சொன்னான்.

"அவன் என்ன சொல்றான்? இது யாரோட குழந்தை?'' போலீஸ்காரர் கேட்டார்.

"இது இவளோட குழந்தை'' நிர்வாகி அலட்சியமாக சொன்னார்.

"அது புரியுது. குழந்தையோட தகப்பன்?''

போலீஸ்காரரின் கேள்வியைப் பொருட்படுத்தாமல் நிர்வாகி உரத்த குரலில் உள்ளே அழைத்துக் கேட்டார். "நீ குழந்தையை என்ன செய்ய போறே?''

"நான் தனியா அதை வளர்ப்பேன். இல்லாட்டி விற்பேன். இல்லாட்டி கொல்லுவேன். இது என் குழந்தை'' ஒட்டகம் பதில் சொன்னான்.

"நீ அந்த அளவுக்கு ஆளாயிட்டியா? நீ கதவைத் திறக்கலைன்னா, கதவை உடைச்சு உள்ளே வந்து உன்னை நான் கொல்லுவேன்.''

"இனிமேல் கதவைத் தட்டினா, நான் குழந்தையை ஜன்னல் வழியா கீழே வீசி எறிஞ்சிடுவேன். ஆமா...'' ஒட்டகம் ஒரு பயங்கரமான குரலால் பயமுறுத்தினான்.

குழந்தையின் அழுகைச் சத்தம் உள்ளே கேட்டது.

"அய்யோ! அந்த மிருகம் குழந்தையைக் கொன்னுடும்'' மாது அலறினாள்.

"குழந்தை... பாவோ... பாவோ...'' உள்ளே ஒட்டகத்தின் தாலாட்டுப் பாடல் கேட்டது.

நிர்வாகி இக்கட்டான நிலையில் தவித்துக்கொண்டிருந்தார். ஆட்களில் சிலர் அங்கு இப்போது என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் பதைபதைத்துப் போய் நின்றிருந்தனர். சிலருக்கு அது ஒரு நல்ல பொழுது போக்கக் கூடிய விஷயமாக இருந்தது. "இது சிவில்தான். கிரிமினல் இல்ல. நான் இதுல ஒண்ணும் செய்யிறதுக்கு இல்ல" என்ற எண்ணத்துடன் போலீஸ்காரர் கீழே இறங்கிச் செல்ல முயன்றபோது, நிர்வாகி அவரைத் தடுத்து நிறுத்தினார்.

"இங்கே ஒரு கொலைச் செயல் நடக்கப் போற நிலைமையில் இருக்குறப்போ, அதைப் பற்றி கவலையே படாம நீங்க போனா எப்படி?'' நிர்வாகி கடுமையான குரலில் கேட்டார்.

"அது நடந்த பிறகு என்னை அழைச்சா போதும். அதுவரை எனக்கு அதுல என்ன வேலை இருக்கு?'' என்று சொன்ன போலீஸ்காரர் மிடுக்காக படிகளில் இறங்கி நடந்தார்.


என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் நிர்வாகி. பலவந்தமாக கதவை உடைத்து அறைக்குள் நுழைகிற வேலையில், பயமுறுத்தியபடி ஒட்டகம் அந்தக் குழந்தையை தெருவில் வீசி எறிந்து விட்டால் விஷயம் மிகவும் மோசமாகிவிடும்.

குழந்தையின் உரத்த அழுகைச் சத்தம் மீண்டும் கேட்டது. ஒட்டகம் குழந்தையைத் தாலாட்டுகிறானா, இல்லாவிட்டால் கொல்கிறானா என்று எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

"டேய், குழந்தையை உனக்கே தர்றேன். அது பசியால இப்படியே அழுதுச்சுன்னா, செத்துப்போயிடும். நீ கதவைத் திற. நான் ஒண்ணும் செய்ய மாட்டேன்'' நிர்வாகி அமைதியான குரலில் சொல்லிப் பார்த்தார். பதில் இல்லை.

குழந்தையின் அழுகைச் சத்தம் மட்டும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது.

"அவன் அப்படி கதவை மூடிக்கிட்டு உள்ளேயே இருக்கட்டும். பசி எடுத்திருச்சுன்னா, அவனே வெளியே வந்திடுவான்'' அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்.

"மேற் கூரையின் ஓட்டை விலக்கி மெதுவா உள்ளே நுழைஞ்சா என்ன?'' இன்னொரு ஆள் சொன்னார்.

"ஆள் உள்ளே போறதுக்குள்ளே அந்த மிருகம் உள்ளே நுழையிற ஆளோட கதையை முடிச்சிடுவான்'' நிர்வாகி உறுதியான குரலில் சொன்னார்: "அவன் அங்கேயே எவ்வளவு நாட்கள் இருக்கான்னுதான் பார்த்திடுவோமே!''

"அவன் விஷயம் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். அந்தக் குழந்தை! அது பசியால செத்துப் போகாதா?'' ஹோட்டல் ஏஜண்ட் கணாரன் சொன்னான்.

"எது எப்படியிருந்தாலும் நாளைக்குப் பொழுது விடியட்டும். அப்போ அவனோட நடவடிக்கை மாறாம இருக்காது!''

அப்படியொரு தீர்மானித்திற்கு வந்த நிர்வாகியும் மற்ற ஆட்களும் அங்கிருந்து புறப்பட்டார்கள். ஏஜண்ட் கணாரன் அறையின் கதவுக்குப் பக்கத்தில் காவலுக்கு  இருந்தான்.

மறுநாள் காலையில் நிர்வாகியும் மற்ற ஆட்களும் பத்தாம் எண் அறைக்கு வெளியே நின்று அழைக்க ஆரம்பித்தார்கள்.

உள்ளே படு அமைதி.

கடைசியில் அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைய முடிவெடுத்தார்கள்.

அவர்கள் கதவை உடைத்து உள்ளே எட்டிப் பார்த்தார்கள்.

மேற்கூரையின் விட்டத்தில் ஒட்டகத்தின் நிர்வாணமான உயிரற்ற உடல் தொங்கிக் கொண்டிருந்தது.

அவனுடைய மார்பில் அந்தக் குழந்தை இருந்தது. அதை அவன் தான் கட்டியிருந்த பழைய துணியை அவிழ்த்து தன் மார்போடு சேர்ந்து பத்திரமாகக் கட்டியிருந்தான். படுக்கை விரிப்பை விட்டத்தில் கட்டி அதில் அவன் தொங்கியிருந்தான்.

நிர்வாகி அறையிலிருந்த அலமாரி மீது ஏறி ஒட்டகத்தின் மார்பிலிருந்து அந்தக் குழந்தையை அவிழ்த்தார்.

குழந்தையின் உடல் குளிரவில்லை. இதயம் மெதுவாக அடித்துத் கொண்டிருந்தது.

"குழந்தை இறக்கல... குழந்தை இறக்கல...'' என்று கூறியவாறு நிர்வாகியும் அங்கு குழுமியிருந்த ஆட்களும் மகிழ்ச்சியுடன் கூறியவாறு வெளியே ஓடினார்கள்.

அந்த நீளமான கழுத்து சாய்ந்து, நாக்கு வெளியே நீட்டிய கோலத்தில், பாதி திறந்த கண்களுடன் ஒட்டகத்தின் நிர்வாணமான உயிரற்ற உடல், ஜன்னல் வழியாக உள்ளே வந்த காற்றின் உதவியுடன், அந்தக் குழந்தையைத் திரும்பிப் பார்த்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.