Logo

க்ளியோபாட்ராவின் முத்துக்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4055

க்ளியோபாட்ராவின் முத்துக்கள்
எஸ்.கெ. பொற்றெக்காட்
தமிழில்: சுரா

ப்பல் 'போர்ட்ஸெய்த்' துறைமுகத்தை அடைந்தது. சிவப்பு நிற தொப்பியும் வெள்ளை நிறத்தில் தரை வரை தொங்கிக் கொண்டிருக்கும் ஆடையும் அணிந்திருந்த எகிப்திய வியாபாரிகள் பலவிதமான பொருட்கள் நிறைக்கப்பட்ட சிறிய சிறிய படகுகளுடன் கப்பலை நெருங்கினர். சிலர் கூடைகளுடன் கப்பலுக்குள் ஏறி வந்தார்கள்.

நான் இங்க்லாண்டிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

கரையை நோக்கி கண்களைச் செலுத்தினேன். உச்சிப் பொழுது வெயிலின் ஜுவாலைகள் நடனமாடிக் கொண்டிருக்கும் கரைப் பகுதி, சூயஸ் கால்வாயின் நிர்மாணியான ஃபெர்டினார்ட் டி லிஸப்ஸின் பிரம்மாண்டமான சிலை உயரமான கட்டிடங்கள் பின்புலமாக இருக்க, கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. என்னுடைய பார்வைகள் துறைமுகத்திற்கு அப்பாலிருந்த வானத்தின் விளிம்பை நோக்கி சென்றன. தூரத்தில் எங்கோ அலெக்ஸான்ட்ரியாவின் பின்புலம் தெரிந்தது. ஆமாம்.... க்ளியோபாட்ராவின் விளையாட்டுத்தளமாக இருந்த அலெக்ஸான்ட்ரியா (அந்தப் பெயரை உச்சரிக்கும்போதே ஒரு புத்துணர்ச்சி உண்டாகிறது!) க்ளியோபாட்ராவின் பழமையான தொடர்பு உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த அழகான நகரத்தில் நான் ஐந்தாறு நாட்கள் சுற்றித் திரிந்திருக்கிறேன். எட்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது அது. க்ளியோபாட்ராவின் கால் சுவடுகள் பதிந்த நிலத்தில் சற்று படுத்து உறங்குவதற்காகவும், அவளைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து வரும் வெட்டவெளி காற்றைச் சற்று சுவாசிப்பதற்காகவும் மட்டுமே நான் அலெக்ஸான்ட்ரியாவிற்குச் சென்றிருந்தேன். அந்த நாட்களைப் பற்றியெல்லாம் நான் மீண்டும் நினைத்துப் பார்த்தேன். க்ளியோபாட்ராவைப் பற்றிய அற்புத நினைவுகளைத் தவிர, அவளுக்குச் சொந்தமானது என்று கூறுகிற மாதிரி ஒரு கல் துண்டு கூட இன்று அங்கு எஞ்சியிருக்கவில்லை. அவளுடைய மம்மியையோ, பிணம் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையையோ, இறுதியாக உறங்கும் இடம் என்று நினைக்கப்படும் ஒரு மூலையையோ இதுவரை பார்க்க முடியவில்லை. எனினும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் உண்டாக்கப்பட்ட கற்சிலைகளை விட, பிரமிடுகளை விட அவளைப் பற்றிய கதைகளுக்கு நிரந்தரத் தன்மை உண்டாகி விட்டிருக்கிறது.

'முத்து மோதிரங்கள், காதுகளில் அணியக் கூடிய அணிகலன்கள், 'ஸ்காரப்கள்', பவள மாலைகள்' - திறந்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியைக் காட்டியவாறு ஒரு அரேபியன் கப்பலின் மேல் தளத்திற்கு வந்து என்னை நெருங்கினான்.

'ஆறாயிரம் வருடங்களுக்கு முன்பு ஃபாரோ மகாராணிகள் கழுத்தில் அணிந்திருந்த மாலை இது....' - அவன் ஒரு கருப்பு நிற கல் மாலையை கை விரல்களில் தூக்கியெடுத்து, ஏற்கெனவே தயார் பண்ணிய அற்புத ரசத்தைக் கண்களில் கொண்டு வந்து என் முகத்தையே சற்று பார்த்தான்.

நான் சிரித்து விட்டேன். அற்புதப் பொருட்கள் என்று கூறி அவர்கள் இப்படி பலவற்றையும் சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னால் கொண்டு வந்து காட்டுவார்கள். க்ளியோபாட்ராவின் பதினாறாம் வயதிலும், இருபத்தேழாம் வயதிலும் இருக்கக் கூடிய மண்டையோடுகள் கூட அந்தக் கூட்டத்தினரிடமிருந்து வாங்குவதற்கு கிடைக்கும்! ஆனால், அவனுடைய பெட்டிக்குள் இருந்த ஸ்காரப் கற்கள் என்னைக் கவர்ந்தன. வண்டின் வடிவத்தில் கொத்தியெடுக்கப்பட்ட ஒரு வகையான சிறிய, பச்சை நிற கற்களுக்குப் பெயர்தான் 'ஸ்காரப்'. நான் ஒரு ஜோடி ஸ்காரப்களை வாங்கினேன். ஐந்து ஷில்லிங்....

கப்பல் துறைமுகத்தை விட்டு கிளம்பியது. நான் என்னுடைய பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுத்து, அந்த ஸ்காரப்களை அதற்குள் வைப்பதற்காக, அதைத் திறந்தேன். க்ளியோபாட்ரா சம்பந்தமாக நான் சம்பாதித்திருந்த விலை மதிப்புள்ள ஒரு ஜோடி பழைய முத்து தொங்கட்டான்களை ஒரு டப்பாவில் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். எகிப்திடம் விடை பெறக் கூடிய அந்த சந்தர்ப்பத்தில், க்ளியோபாட்ராவின் அந்த காதில் அணியக் கூடிய ஆபரணத்தைச் சற்று வெளியே எடுத்து, அதன் அழகைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ஒரு ஆர்வம் உண்டானது. தூரத்தில் அலெக்ஸான்ட்ரியாவைப் பார்த்தவாறு நான் அந்த முத்து லோலாக்குகளை கை விரல்களில் தூக்கி எடுத்தேன். அற்புத உணர்ச்சிகளுடன் அப்படியே நின்று விட்டேன். அந்த முத்து தொங்கட்டான்களுக்கு மத்தியில் க்ளியோபாட்ராவின் புகழ் பெற்ற அழகான முகம் தெரிந்து கொண்டிருப்பதைப் போல எனக்கு தோன்றியது..... திடீரென்று என்னுடைய கையை யாரோ பலமாக தட்டி விட்டதைப் போல உணர்ந்தேன். கடல் காற்றின் அடியோ, கப்பலின் குலுங்கலோ... என்னவோ.... அந்த முத்து தொங்கட்டான்கள் என் கையிலிருந்து கீழே நீல கடலின் ஆழத்திற்குள் மின்னி மறைந்து போய்ப் கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.

கரையை விட்டு நீங்கி... நீங்கிப் போய்க் கொண்டிருந்த கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு அந்த வெட்டவெளியைப் பார்த்தவாறு நான் பதைபதைப்பு கலந்த குரலில் இவ்வாறு கூறினேன்: 'க்ளியோபாட்ரா, இரண்டாயிரம் வருடங்களுக்குப் பிறகும் நீ இங்கு... இப்போதும் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். நீ என்னை ஏமாற்றி விட்டாய். எனினும், உன்னை நான் காதலிக்கிறேன்.'

கப்பல் சூயஸ் கால்வாயின் வழியாக மிகவும் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. இடது பக்கத்தில் மனதில் வெறுப்பை உண்டாக்கக் கூடிய மஞ்சள் நிற பாலைவனம். வலது பக்கத்தில் நீர் ஓடிக் கொண்டிருந்த சில வாய்க்கால்களும், பச்சை நிறத்திலிருந்த சிறிய குளங்களும், புதிய கட்டிடங்களும், பேரீச்ச மரங்களும் கலந்த எகிப்திய கிராமப் பகுதி. என்னுடைய சிந்தனைகள் அந்த இயற்கைக் காட்சிகளையெல்லாம் விட்டு விலகி, இரண்டு மாதங்களுக்கு முன்னால் லண்டனில் வைத்து ஒரு இரவு வேளையில் நான் க்ளியோபாட்ராவைப் பார்த்து, அவளுடைய முத்து லோலாக்குகளைக் கை வசமாக்கிய அந்தச் சம்பவத்தைப் பின் தொடர்ந்து கொண்டிருந்தன.

மே மாதத்தின் ஒரு இரவு வேளை. நேரம் பன்னிரண்டு மணியைத் தாண்டி விட்டிருந்தது. அதாவது - லண்டனில் அன்று சூரியன் மறைந்து ஒன்றரை மணி நேரம் ஆகியிருக்கும். நான் லண்டனில் ஒரு தெருவின் மூலையில் அமைந்திருந்த ஒரு பழமையான எகிப்திய கற் தூணையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். மார்பிள் கல் கொண்டு உருவாக்கப்பட்ட அந்த ஊசியைப் போன்ற சிலை 'க்ளியோபாட்ராவின் ஊசி' என்று அழைக்கப்படுகிறது.

'இந்த சிவப்பு நிறத்தில் ஒரே கல்லால் ஆன தூண் ஹெல்யோப்போலீஸிலிருந்து 1878 ஆம் ஆண்டில் லண்டனுக்குக் கொண்டு வரப்பட்டது. அது பிரிட்டிஷ் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு எகிப்து நாட்டு அன்பளிப்பு. அந்தத் தூண், ஒரு உயரமான இரும்புக் குழாய்க்குள் வைக்கப்பட்டு, ஒரு இணைப்புடன் சேர்த்து கட்டப்பட்டு, கடலில் மிதக்க வைத்து கொண்டு வரப்பட்டது. கடல் பயணத்திற்கு மத்தியில் இரும்புக் குழாய் உடைந்து விட்டது.


தூணுக்கும் இணைப்பிற்குமிடையே இருந்த தொடர்பு விடுபட்டு விட்டது. தூணைக் கடலிலிருந்து பாதுகாப்பாக எடுப்பதற்குச் செய்த சாகசம் நிறைந்த முயற்சியில் ஆறு பேர் மரணத்தைச் சந்தித்தார்கள். அந்த ஆறு வீர ஆன்மாக்களின் பெயர்கள் அந்த தூணின் கீழ்ப் பகுதியில் செதுக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.'

அந்த தூணைப் பற்றி வழிகாட்டி புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த தகவலை நான் வாசித்து புரிந்து கொண்டேன். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உலக அழகியான க்ளியோபாட்ரா உலக வரலாற்றில் என்னுடைய காதலியாக இருந்தாள். அழகும் புத்தி சாமர்த்தியமும் அதிகார ஆசையும் சுயநல ஆர்வமும் கலந்து நடனமாடிக் கொண்டிருக்கும் ஒரு அற்புத வாழ்க்கையாக அவளின் வாழ்க்கை இருந்தது. போர் தந்திரங்களைப் போல காதல் உறவுகளிலும் க்ளியோபாட்ரா தனக்கென்று ஒரு தனித்துவ குணத்தைக் கொண்டிருந்தாள். வாழும் காலத்தில் வெறும் பொழுது போக்கிற்காகவும் அப்படி இல்லாமலும் ஆயிரக் கணக்கான இளைஞர்களை அவள் தண்டிக்கப்பட்டு மரணமடையச் செய்திருக்கிறாள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அவள் இந்த கொடூரமான பொழுது போக்குச் செயலைத் தொடர்ந்து கொண்டிருக்கிறாள் என்பதைத்தானே அந்தத் தூணின் கீழ்ப் பகுதியில் செதுக்கி வைக்கப்பட்டிருந்த பெயர்கள் தெரிவிக்கின்றன! நான் அந்த ஊசி தூணையே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சிறிது நேரம் பார்த்தேன். க்ளியோபாட்ரா அந்த ஊசியின் நுனியில் ஏறி நின்று கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுவதைப் போல எனக்கு தோன்றியது. நான் மனதிற்குள் கூறினேன்: 'என் க்ளியோபாட்ரா, நீ உலக வரலாற்றிலேயே மிகவும் இரக்கமற்ற கொலை பாதகி. உறுதி படைத்த உடல்களைக் கொண்ட நீக்ரோ அடிமைகளை, விஷத்தைப் பருகச் செய்தும், பயங்கரமான பாம்புகளை வைத்து கடிக்கச் செய்தும், நீ கொன்றாய். எதற்காக? அவர்களுடைய மரண வேதனையைப் பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே. அவர்கள் துடித்து அங்குலம் அங்குலமாக இறப்பதைப் பார்த்து நீ புன்னகைத்தாய். கார் கூந்தலில் விஷ சக்தி படைத்த வெள்ளை நிற மலர்களை அணிந்து, நீ காதலர்களை கூறி வரவழைத்து அவர்களை இறுக தழுவினாய். விஷத்தின் மோக தூக்கத்தில் விழுந்து கிடக்கும் அவர்களுடைய கழுத்தில் நீ உன்னுடைய நீண்ட தலை முடியால் இறுக்கி அவர்களை மூச்சு விடாமற் செய்து கொன்றாய். உஷ்ணம் நிறைந்த மனித மாமிசத்தை அறுத்துக் கொடுத்துச் சாப்பிடச் செய்து வளர்த்த ஆரல் மீன்கள்தான் உனக்கு மிகவும் விருப்பமான உணவு. உலகத்தில் நீ நினைத்தால் வசீகரிக்க இயலாத ஆண் படைப்புகளே இல்லை. கிழச் சிங்கமான மன்னர் சீஸரையும், மிகப் பெரிய வீரனான ஆன்டனியையும் நீ பழைய துணியைப் போல சுருட்டி கையிடுக்கில் இறுக்கி வைத்துக் கொண்டாய். இறுதியில் ஆக்டோவியாவிற்கு முன்னால் உன்னுடைய வசீகரிக்கும் சக்தி விலை போகவில்லை என்பது தெரிந்ததும், உன்னுடைய அழகு என்ற விஷ பாணத்திற்கு பலம் குறைந்து கொண்டு வருகிறது என்ற சந்தேகம் உனக்கு உண்டானதும், நீ ஆண் அணலி பாம்பை வைத்து உன்னுடைய மார்பைக் கடிக்கச் செய்து முகத்தில் சாந்தம் நிறைந்த ஒரு புன்னகையுடன் இறந்து விழவும் செய்தாய். க்ளியோபாட்ரா, உன்னுடைய ஒவ்வொரு செயலையும் அது எந்த அளவிற்கு கேவலமானதாக இருந்தாலும், இரக்கமற்றதாக இருந்தாலும் நான் நியாயப்படுத்துகிறேன். நான் உன்னை அறிவை மறந்து விட்டு ஆராதிக்கிறேன். உன்னுடைய கையால் கிடைத்த விஷத்தை வாங்கிப் பருகி இறந்து விழுந்த இளைஞர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகிறேன். உலகத்தில் இனி எந்தச் சமயத்திலும் பார்க்க முடியாத அற்புத அழகை தங்களுக்கு முன்னால் பார்த்துக் கொண்டே அல்லவா அவர்கள் இறுதியாக கண்களை மூடியிருக்கிறார்கள்! க்ளியோபாட்ரா, அந்த காதல் இரவின் இறுதி யாமத்தில் உன் கையிலிருந்து விஷத்தை வாங்கிப் பருகிய உன்னுடைய அந்த நீக்ரோ காதலனின் கதையையும் நான் நினைத்துப் பார்க்கிறேன்: 'நான் க்ளியோபாட்ராவைக் காதலிக்கிறேன்' என்ற ஒரு காமம் நிறைந்த வாசகத்தை அம்பில் இணைத்து உன்னுடைய படுக்கையறைக்கு அனுப்பி வைத்த அந்த தைரியசாலியான இளைஞனை நீ உன்னுடைய குளியலறை இருக்கும் வீட்டின் தோட்டத்தில் வைத்து பிடித்தாய். கண்ட நிமிடத்திலேயே அந்த அழகான இளைஞன் மீது நீ காதல் வயப்பட்டு விட்டாய். ஆனால், நீ உன்னுடைய பெண்மைத் தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, மகாராணியின் மன நிலையுடன் அவனை அங்கேயே வைத்து விசாரணை செய்தாய்:

'நீ யார்?'

'நான் க்ளியோபாட்ரா மகாராணியின் படையில் ஒரு சாதாரண வீரன். ஆனால், இப்போது ஒரு காதலன்.'

'உனக்கு என்ன வேணும்?'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன்.'

'நீ மரணத்தைக் காதலிக்கிறாய்.'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன்.'
'உன்னுடைய தைரிய குணத்தை மதித்து உனக்கு நான் மன்னிப்பு அளித்திருக்கிறேன், உன்னுடைய உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நீ இப்போது இங்கிருந்து செல்லலாம்.'

'க்ளியோபாட்ரா, நான் உங்களைக் காதலிக்கிறேன். அந்த காதல் நிறைவேறிய பிறகு மட்டுமே நான் இங்கிருந்து செல்வேன்.'

'உன்னுடைய உயிருடன் நீ இப்போது போகலாம். இல்லாவிட்டால்... இன்று இரவு என்னுடன் இருப்பதற்கு நான் உன்னை அனுமதிக்கிறேன். ஆனால், நாளை காலையில் இறக்க வேண்டியதிருக்கும். இந்த இரண்டு நிலைகளில் நீ எதை ஏற்றுக் கொள்வதாக தீர்மானித்திருக்கிறாய்?'

'இரண்டாவதை...'

க்ளியோபாட்ரா, நீ கூறிய வார்த்தைகளைக் காப்பாற்றினாய். அன்று இரவு நீ அந்த படை வீரனை உன்னுடைய படுக்கையறைக்குள் வரச் செய்தாய். பொழுது புலரும் நேரத்தில் விஷம் நிறைந்த தங்கத்தால் ஆன குவளையைக் கையில் ஏந்தி நீ அவனை நெருங்கினாய். அந்த விஷம் நிறைந்த குவளையைக் கையில் உயர்த்தி பிடித்தபோது, உன்னுடைய வலது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்த விஷத்தில் விழுந்தது. உன் காதலன் உன்னுடைய கையிலிருந்து விஷத்தை வாங்கினான். உன்னுடைய கண்ணீர் விழுந்த பகுதியை உதட்டில் வைத்து இழுத்து குடித்து இறந்து விழவும் செய்தான்.

அந்த இளைஞனின் அழகான சரீரத்தைப் பார்த்து நீ ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாய். உன் இடது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் அந்த பிணத்தின் உதட்டில் விழவும் செய்தது.


தழுதழுக்கும் குரலில் நீ கூறினாய்:

'எகிப்தின் மகாராணியாக இருப்பதற்குப் பதிலாக நான் வெறும் ஒரு பெண்ணாக இருந்திருந்தால்...!'

நான் இவ்வாறு அந்த க்ளியோபாட்ராவின் தூணுக்கு அருகில் நின்று கொண்டு இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற அந்த சம்பவங்களைக் கனவு கண்டு கொண்டிருக்க, தொட்டாஞ் சிணுங்கி கொடியைப் போன்ற தலைமுடியையும், உலர்ந்த கயிறின் தோல் நிறத்தையும் கொண்ட உறுதியான சரீரத்தைக் கொண்ட ஒரு நீக்ரோ மனிதன் அந்த வழியே கடந்து சென்றான். என்னைப் பார்த்ததும் அவன் திரும்பி நின்று கழுத்தைச் சாய்த்து வைத்துக் கொண்டு சற்று பார்த்தான். முஷ்டியைச் சுருட்டி என்னுடைய முகத்தில் குத்தவோ, விருப்பப்பட்டு கை குலுக்கவோ... இரண்டிற்கும் தயார் என்பதைப் போன்ற ஒரு மிடுக்கான பார்வையாக அது இருந்தது.

லண்டனுக்கு உள்ளே இருக்கும் லண்டனைக் கண்டு பிடிக்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்தவாறு நான் அன்று வேண்டுமென்றே ஒரு பழைய பன்னாஸ் சூட்டை அணிந்து என்னுடைய ஹோட்டலிலிருந்து வெளியே வந்தேன். என்னுடைய பிச்சைக்கார தோற்றத்தைப் பார்த்து, லண்டன் தெரு அழகிகள் என்னை ஓரக் கண்களால் தூண்டில் போட்டு இழுப்பதற்கு முயற்சிக்காமல் இருக்கலாம். ஸ்நாக் பார்களுக்குள் நுழையும்போது, முன்னுரிமையோ உபசரிப்போ எனக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், லண்டன் மகாநகரத்தின் சாக்கடையின் அருகில் வாழும் உயிர்களுடன் நெருங்குவதற்கும், லண்டனின் இருண்ட கிடங்குகளில் நடைபெறும் வாழ்க்கை நாடகங்களையும், உண்மையான யதார்த்தங்களையும் நேரில் பார்ப்பதற்கும் என்னுடைய போலி தோற்றமும் கேடு கெட்ட முறையில் இருந்த என்னுடைய நடவடிக்கைகளும் உதவியாக இருக்குமென்று நான் நினைத்திருந்தேன். அது பலித்தது என்று தோன்றுகிறது.

'இந்தியா?' - அந்த கருப்பின மனிதன் தன் கீழுதடைச் சற்று நீட்டி ஒரு கேள்வி கேட்டான். அந்த கேள்விக்கான குரலும் முன்னால் கூறியதைப் போலத்தான் இருந்தது.

நானும் விட்டுக் கொடுக்கவில்லை. நான் பேன்ட்டின் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு பிஸ்டலைத் தடவி எடுப்பதைப் போல கையைப் பிசைந்து கொண்டே சற்று சாய்ந்து நின்றவாறு, கண்களைப் பாதி சிமிட்டி உதடுகளைச் சுளித்து அழுத்தி வாயின் இரு ஓரங்களையும் நோக்கி நீட்டிக்கொண்டே அலட்சியமான குரலில் 'ஆமாம்' என்று தலையை ஆட்டினேன். அந்த கருப்பின மனிதனை ஒரு முஷ்டி யுத்தத்திற்கு அழைப்பதைப் போன்ற ஒரு கிண்டலான செயலாகவும் என்னுடைய அந்த தலையாட்டலை எடுத்துக் கொள்ளலாம்.

நான் நின்று கொண்டிருந்த விதமும் நடவடிக்கைகளும் தோற்றமும் - மொத்தத்தில் அந்த கருப்பின இளைஞனுக்குப் பிடித்துவிட்டது என்று தோன்றியது. அவன் அளந்து வைத்த கால் எட்டுகளுடன் என்னை நோக்கி நகர்ந்து வந்து என்னை பாதத்திலிருந்து தலை வரை சற்று ஆராய்ந்து பார்த்தான்.

'நோ ஜாப்?' - அவன் தன் மூக்கைச் சுளித்தவாறு கேட்டான்.

'நோ ஜாப்' - மூக்கைச் சுளிக்க என்னாலும் முடியும் என்பதைப் போல, மூக்கைச் சுளித்துக் கொண்டே நானும் பதில் கூறினேன்.

வேலை எதுவும் கிடைக்காமல் லண்டனின் தெருக்களில் அலைந்து திரியும் ஒரு 'உயர்ந்த இன' மனிதன் என்பதைத் தெரிந்து கொண்டதும் அவனுக்கு என் மீது விருப்பம் தோன்றியிருக்க வேண்டும்.

'தென், கம் வித் மி' - ஒரு புதிய நண்பனின் கட்டளைக் குரலில் அவன் என்னை அழைத்தான். என் கையைப் பிடித்தான்.

நாங்கள் இளம் வயது நண்பர்களைப் போல அங்கிருந்து நகர்ந்தோம்.

'என் பெயர் முஸ்ஸெ. உங்களை நான் எப்படி அழைக்க வேண்டும்?' - அவன் என் தோளில் கையைப் போட்டவாறு கேட்டான்.

'எஸ் கெ என்று கூப்பிடு.'

'எஸ்கெயீ?' - அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

'ம்...' (அப்படியென்றால் அப்படி) - நான் தலையை ஆட்டினேன்.

நாங்கள் நடந்து... நடந்து பிக்காடலி சர்க்கஸுக்கு அருகில் சென்றோம். அங்கு தெருவின் மூலைகளில் அழகான தோற்றத்தைக் கொண்ட ஆங்கிலேய அழகிகள் நன்கு ஆடைகளணிந்து தனியாகவும் கூட்டமாகவும் நின்றிருந்தார்கள். அருகிலேயே பழைய மாடலில் இருந்த லண்டன் வாடகைக் கார்களும் ஓரத்தில் நின்று கொண்டிருந்தன. வாடகைக் கார்களுக்குள் நடக்கக் கூடிய ஒரு வகையான பயண விபச்சாரம், பிக்காடலி மூலையின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். 'என்ன.... வர்றீங்களா? சிறிது நேரத்திற்கு ஒரு சந்தோஷமான விஷயமாக இருக்குமே!' - மை தேய்த்த புருவத்தைத் தூக்கி, சாயம் தேய்த்த உதட்டில் கவர்ச்சி நிறைந்த புன்சிரிப்புடன் ஒரு தெரு அழகி ஒரு இரையைக் கண்டு பிடித்து கேட்பாள். கேள்வியைக் காதில் வாங்கிய மாலை நேர சூட் அணிந்தவன் அவள் சந்தோஷம் தருவதற்குச் சரியாக இருப்பாள் என்று தோன்றினால், சம்மதிப்பதைப் போல தலையை ஆட்டுவான். உடனே அவளுடைய வழக்கமான வாடகை வண்டிக்காரன் வண்டியுடன் வந்து நிற்பான். பிக்காடலியிலும் கவன்ட் கார்டனிலும் தெருக்களில் அந்த புதிய காதலி, காதலன்களை ஏற்றிக் கொண்டு அடைக்கப்பட்ட அந்த லண்டன் வாடகைக் கார் சுற்றிக் கொண்டிருக்கும். காருக்குள் நடக்கும் சந்தோஷம் தரும் செயலுக்கான நேரம் நீள்வதைப் பொறுத்து அவளுக்கும் வாடகைக் கார்காரனுக்கும் வாடகை அதிகமாக கிடைக்கவும் செய்யும். லண்டனில் பல உயர்ந்த மனிதர்களும் இப்படிப்பட்ட விபச்சாரத்தைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள் என்று முஸ்ஸெ கூறினான். மக்கள் அதிகமாக நிறைந்திருக்கும் தெருக்களின் மத்தியில் உடலுறவு செயல்களை நடத்திக் கொண்டிருப்பது என்பது சமுதாயத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் உள்ள வெளிப்படையான ஒரு சவால் அல்லவா என்று நானும் சொன்னேன்.

'அதே நேரத்தில் - இந்த வாடகைக் காருக்குள் ஏறிய பிறகு, ஆசனப் பகுதியில் ஹேர் பின்னால் குத்தப் படாமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்' - முஸ்ஸெ சிரித்துக் கொண்டே கூறினான் (வெண்மையாக, பிரகாசித்துக் கொண்டிருக்கும் வரிசையான பற்கள் முஸ்ஸெக்கு இருந்தன).

'முஸ்ஸெ, நீ லண்டனில் என்ன செய்கிறாய்?' - நடந்து கொண்டிருப்பதற்கு நடுவில் நான் சாதாரணமாக கேட்டேன்.

'ஒரு வெள்ளைக்காரி என்னை வைத்திருக்கிறாள்' - முஸ்ஸெ மிடுக்கு நிறைந்த குரலில் தலையை ஆட்டிக் கொண்டே கூறினான்.

நான் முஸ்ஸெக்கு ஒரு சிகரெட் கொடுத்தேன்.

'வெள்ளைக்காரிக்கு என்ன வேலை?'

'அவள் ஒரு விலை மாது' - முஸ்ஸெ சிகரெட்டை இழுத்து, வாயிலிருந்து புகை வளையங்களை ஊதி விட்டான். அவன் கூறினான்: 'ஆனால், அவள் இந்த பிக்காடலிப் பெண்களைப் போன்றவள் அல்ல. அவளுக்கு வசிப்பதற்கு சொந்தத்தில் ஒரு மாடி வீடு இருக்கிறது. வாடிக்கையாளர்களை அங்கு வரவழைத்து, மதிப்பான வகையில் என்னுடைய க்ளியோபாட்ரா வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.


அவளுடைய பெயர் என்ன என்று சொன்னாய்?' - நான் ஆச்சரியத்துடன் கேட்டேன்.

'க்ளோரியா பாட்ரிக்' - முஸ்ஸெ அந்த பெயரை தெளிவாக உச்சரித்தான்.

(ஆனால், க்ளியோபாட்ரா என்றுதான் தெளிவாக முதலில் என் காதில் விழுந்தது.)

'அவள் எங்கே இருக்கிறாள்?' - நான் என்னையும் மீறி கேட்டு விட்டேன்.

முஸ்ஸே சந்தேகப்படுவதைப் போல என் முகத்தையே பார்த்தான். பிறகு ஒரு வருத்தம் கலந்த குரலில் கூறினான்: 'நீங்கள் என்னைப் பார்த்தபோது நான் அவளுடைய அறையிலிருந்து வெளியேறி வந்து கொண்டிருந்தேன். க்ளியோபாட்ராவின் ஊசிக்குப் பின்னால் ஒரு பழைய கட்டிடத்தின் மாடியில் இருக்கும் ஒரு அறையில்தான் நாங்கள் வசிக்கிறோம். ஆனால், நான் அங்கு பகலில் மட்டுமே செல்ல முடியும்.'

க்ளியோபாட்ராவின் ஊசி, க்ளியோபாட்ரா - க்ளோரியா பாட்ரிக் - க்ளியோபாட்ரா - நீக்ரோ காதலன்... நான் மனதிற்குள் முணுமுணுத்தேன். க்ளியோபாட்ரா.... அவள் ஒரு சாதாரண பெண்ணாக மீண்டும் வந்திருக்கிறாளோ? க்ளோரியா பாட்ரிக் என்ற பெயரை உச்சரித்தால் க்ளியோபாட்ரா.... என் க்ளியோபாட்ரா....

அப்போது முஸ்ஸெயின் குரல் என் காதுகளுக்குள் கேட்டது: 'அவள் ஒரு தனி படைப்பு. அவளுக்கு விருப்பமுள்ள ஆண்களை மட்டுமே அவள் ஏற்றுக் கொள்வாள். சில நேரங்களில் அவள் ஒரு பிசாசாக மாறி விடுவாள். அப்போது நான் அவளை அடிப்பேன்... உதைப்பேன். என் அடிகளை வாங்கும்போது அவள் என் கால்களைக் கட்டிப் பிடித்து அழுதவாறு கூறுவாள் - 'என்னைக் கொன்னுடு! கொன்னுடு! கழுத்தை நெரித்து கொல்லு' என்று. என் மிதியையும் உதைகளையும் வாங்குவது என்பது அவளுக்கு ஒரு ஆனந்தமான விஷயமாக இருக்கும், நான் கோபித்துக் கொண்டு அவளை விட்டுப் போய் விடுவேனோ என்பது அவளுடைய பயம். ஆங்கிலேய நாய்....'

முஸ்ஸெ காறி தெருவில் சற்று துப்பினான் (லண்டன் தெருவில் துப்பினால், ஐந்து பவுண்ட் அபராதம் கட்ட வேண்டும் என்ற விஷயம் அவனுக்குத் தெரியாமல் இருக்கலாம்.)

நான் மீண்டும் க்ளியோபாட்ராவின் புதிய வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தேன். எவ்வளவோ ஆண்களுக்கு தண்டனை கிடைக்கச் செய்து உயிர் பிரிந்து செல்வதைப் பார்த்து ரசித்து, அந்த பெண் ரத்தினம் தான் செய்த ஒவ்வொன்றையும் மாறுபட்டு செய்ததில் தனக்குத் தானே ஆனந்தம் அடைந்திருப்பாளோ? பாவம்... க்ளியோபாட்ரா....!

நாங்கள் நடந்து... நடந்து ஸ்ட்ரான்ட்மூலையை அடைந்தோம். நேரம் மூன்று மணி கடந்து விட்டிருந்தது.

முஸ்ஸெ கூறினான்: 'நாம தேநீர் பருகுவோம்.'

நான் கேட்டேன்: 'நண்பனே, இப்போது எங்கிருந்து தேநீர் கிடைக்கும்? இந்த நேரம் கெட்ட நேரத்தில் ஏதாவது கடையும் திறந்திருக்குமா என்ன?'

'வாங்க... தேநீரும், பலகாரங்களும் கிடைக்கக் கூடிய ஒரு இடத்தை நான் காட்டுகிறேன்' - முஸ்ஸெ என்னை எங்கோ அழைத்துச் சென்றான்.

நாங்கள் சிறிது தூரம் நடந்தோம். இறுதியில் பழைய பாணியிலிருந்த ஒரு கருப்பு நிறத்திலிருந்த உயரமான கட்டிடத்தின் மூலையிலிருந்த கற்களால் ஆன படிகளில் இறங்கி, மங்கலான வெளிச்சத்திற்கு மத்தியில் நடந்து, விசாலமாக இருந்த ஒரு ஹாலுக்குள் நுழைந்தோம். ஒரு மங்கலமான மஞ்சள் நிற வெளிச்சம் அங்கு தங்கி நின்றிருந்தது. கொஞ்சம் மடிக்கக் கூடிய நாற்காலிகளும் மடிக்கக் கூடிய மேஜைகளும் அங்கு எலும்புக் கூடுகளைப் போல இங்குமங்குமாக போடப்பட்டிருந்தன. துணி விரிக்கப்பட்டிராத பெரிய பொருட்கள். அந்த நாற்காலிகளின் கைகளிலும் மேஜைகளின் மூலைகளிலும் மனித தலைகள் தெரிந்தன. பிணத்திடமிருந்து வரக் கூடிய ஒரு நாற்றமும்.... அந்த சுடுகாட்டில் இருப்பதைப் போன்ற சூழ்நிலை என்னை அமைதியற்றவனாக ஆக்கியது. அந்த இடத்திற்கு முன்பு எப்போதோ நான் வந்திருக்கிறேன் என்பதைப் போன்ற ஒரு தோணல். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அதைப் போன்ற ஒரு இடத்தில் எங்கே இருந்தேன்? நான் நினைத்துப் பார்த்தேன். திடீரென்று ஞாபகம் வந்தது - அலெக்ஸான்ட்ரியாவின் காற்றாக்கும்ப் குகைகள்! புராதன எகிப்தியர்கள் மம்மிகளாக ஆக்கிய மனிதப் பிணங்களை கற்களால் ஆன பெட்டிகளில் அடக்கம் செய்து தேன்கூட்டைப் போன்ற தோற்றத்திலிருக்கும் சுவர்களில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காற்றாக்கும்ப் குகைகள்! (க்ளியோபாட்ராவைச் சற்று கனவு காண்பதற்காக நான் அலெக்ஸான்ட்ராவின் காற்றாக்கும்ப்களுக்கு அருகில் படுத்து உறங்கியிருக்கிறேன். ஆனால், அவள் எனக்கு தரிசனம் தரவில்லை).

'லண்டனில் ஏழைகளுக்காக கார்ப்பரேஷனின் சார்பில் நடத்தப்படும் முழு இரவு ரெஸ்ட்டாரெண்ட் இது' - அப்போது முஸ்ஸெயின் வார்த்தைகள் தூரத்தில் எங்கிருந்தோ கேட்பதைப் போல எனக்கு தோன்றியது.

இரவில் உடலைச் சாய்ப்பதற்கு தங்களுக்கென்று சொந்தமாக ஒரு இடம் இல்லாத ஏழைகள் அந்த 'ஆல் நைட் ரெஸ்ட்டாரெண்ட்'டில் வந்து அபயம் தேடுகிறார்கள். பாதி பருகிய தேநீர் கோப்பையையோ, பாதி சாப்பிட்ட சேன்ட்விச் துண்டையோ முன்னால் மேஜையின் மீது டிக்கெட்களைப் போல வைத்து விட்டு, இடத்தின் தற்காலிக உரிமையை நிலைநாட்டிக் கொண்டு வறுமையின் பிடியில் சிக்கியவர்கள் நாற்காலிகளின் கைகளில் சாய்ந்தும், மேஜையின் மீது தலையைச் சாய்த்துக் கொண்டும் சிறிது நேரத்திற்கு உறக்கத்தை வரவழைத்துக் கொள்வார்கள். அழுக்கு ஆடைகள் மற்றும் அசுத்தமடைந்த காற்றின் நாற்றமும் அங்கு பரவி விட்டிருந்தது. இனம் புரியாத ஒரு அமைதிச் சூழ்நிலையும்.....

நாங்கள் அந்த கீழே இருக்கும் அறையின் மூலையில் இருந்த கவுண்டரின் அருகில் சென்றோம். சுருக்கங்கள் விழுந்த, வெளிறிப் போய் காணப்பட்ட முகத்தைக் கொண்ட ஒரு பெண் கவுண்டருக்குப் பின்னால் அசையாமல் அமர்ந்திருந்தாள். (அந்த பெண்ணைப் பார்த்தபோது, கெய்ரோ அருங்காட்சியகத்திலிருக்கும் ஒரு பெண் மம்மியின் முகம் எனக்கு ஞாபகத்தில் வந்தது.)

அவள் பேசாமல், முகத்தைச் சிறிது அசைத்தாள். என்ன வேண்டும் என்ற அர்த்தத்தில்.

'இரண்டு கப் தேநீர்... இரண்டு சேன்ட்விச்சஸ்...' - முஸ்ஸெ மிடுக்கான குரலில் ஆர்டர் பண்ணினான். பிறகு என்னை நோக்கி திரும்பி அவன் மெதுவான குரலில் கட்டளையிட்டான்:

'ஒரு ஷில்லிங் கொடுங்க!'

நான் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு ஷில்லிங் எடுத்துக் கொடுத்தேன்.

தேநீரையும் சேன்ட்விச்சஸையும் கையில் வாங்கி, நாங்கள் அமர்வதற்கு ஒரு காலியான இடத்தைத் தேடி அங்கு சுற்றித் திரிந்தோம். இறுதியில் ஒரு மூலையில் இரண்டு நாற்காலிகள் காலியாக கிடப்பதைப் பார்த்து அங்கு போய் அமர்ந்தோம்.


முஸ்ஸெ தேநீரை முன்னால் வைத்து விட்டு, கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு அமர்ந்தான். அவனுடைய முகம் ஏதோ பயங்கரமான சிந்தனையின் காரணமாக மிகவும் கோரமாக தெரிந்தது.

'முஸ்ஸே, இரவை இங்கேயே கழிப்பதா?' - நான் தேநீரை ருசித்துக் கொண்டே கேட்டேன்.

'ம்...' - அவன் ஆந்தையின் குரலில் மெதுவாக முனகினான்.

சிறிது நேர பேரமைதி.

'நான் இன்றே லண்டனை விட்டு புறப்படுகிறேன்' - முஸ்ஸெ என் முகத்தையே வெறித்துப் பார்த்தவாறு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டான்.

'ம்... ஏன்?'

அவன் என்னுடைய முகத்தையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எதுவுமே பேசாமல்.

ஐந்து நிமிடங்கள் கடந்தவுடன் அவன் என்னவோ கூறினான். தெளிவற்ற குரலில்.

'முஸ்ஸெ, என்ன சொன்னே?' - நான் கேட்டேன்.

'அவள் இறந்து விட்டாள் என்று தோணுது' - அவனுடைய தொண்டையிலிருந்து வார்த்தைகள் மிகவும் சிரமப்பட்டு வெளியே வந்தன.

'யாரு?'

'க்ளோரியா பாட்ரிக்.'

'க்ளியோபாட்ராவா?' - நான் கேட்டேன்.

அவன் எதுவும் கூறவில்லை.

சிறிது நேரம் கடந்தவுடன் அவனுக்கு ஒரு உத்வேகம் கிடைத்ததைப் போல தோன்றியது. அவன் அந்த கதையை என்னிடம் விளக்கிக் கூறி கேட்க வைத்தான். அதன் சுருக்கம் இதுதான்:

இரண்டு மூன்று நாட்களாக க்ளியோபாட்ராவிற்கு உடல் நலம் சரியில்லை. அதனால் அவள் ஆட்களைத் தேடி வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே படுத்திருந்தாள். முஸ்ஸெ அவளிடம் பணம் வேண்டுமென்று கேட்டிருக்கிறான். ஒன்றிரண்டு நாட்கள் அவனும் பட்டினி கிடந்திருக்கிறான். முஸ்ஸெய்க்கு கொடுப்பதற்கு அவள் கையில் ஒரு பென்னி கூட இல்லை. அவள் பொய் சொல்கிறாள் என்றும், உடனடியாக பத்து ஷில்லிங் கிடைத்தே ஆக வேண்டுமென்றும் அவன் பிடிவாதமான குரலில் கூறியிருக்கிறான். அவள் எதுவுமே பேசாமல் இருந்திருக்கிறாள். அவனுக்கு கோபம் வந்து விட்டது. அவன் அவளுடைய தலை முடியை அள்ளிப் பிடித்து, அவளை பலமாக அடித்திருக்கிறான். முகத்தில்தான்.... அப்போது அவள் தன் கையைக் கடித்து விட்டதாக அவன் கூறுகிறான். அவன் கோபத்தின் காரணமாகவும், வேதனையாலும், தன்னையே மறந்து முழு பலத்தையும் பயன்படுத்தி அவளைத் தள்ளி விட்டிருக்கிறான். அவள் அறையின் மூலையிலிருந்த வாஷ்பேஸினில் தலை மோதி, கீழே விழுந்திருக்கிறாள். சிறிது துடித்திருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு எந்தவொரு அசைவுமில்லாமல் கிடந்திருக்கிறாள். அந்த இடத்தில் இரத்தம் கொட்டி கிடந்திருக்கிறது.... அந்த காட்சியைச் சற்று பார்த்து விட்டு, முஸ்ஸெ அங்கிருந்து வெளியேறியிருக்கிறான்.
'அவள் இறந்திருப்பாளோ?' - முஸ்ஸெ என்னுடைய முகத்தையே வெறித்து பார்த்துக் கொண்டே கேட்டான்.

நான் கூறினேன்: 'இல்லை... அவள் இறக்க மாட்டாள். க்ளியோபாட்ராவிற்கு மரணமில்லை.'

முஸ்ஸெ தன் சேன்ட்விச்சை எடுத்து வாய்க்குள் போட்டு விழுங்கி, தேநீரையும் ஒரே மடக்கில் குடித்தான். மேஜையின் மீது கையை தலையணையாக வைத்தவாறு முகத்தைச் சாய்த்து வைத்துக் கொண்டு, குனிந்து படுத்தான். ஒரு நிமிடம் கடந்ததும் அவனுடைய குறட்டைச் சத்தத்தைத்தான் அதற்குப் பிறகு நான் கேட்டேன்.

நானும் மேஜையின் மீது தலையைச் சாய்த்து, சற்று தூங்க ஆரம்பித்தேன். என் சிந்தனைகள் கனவு வயதில் க்ளியோபாட்ராவைச் சந்தித்துக் கொண்டிருந்தன. பல சம்பவங்களுக்கு மத்தியில் க்ளியோபாட்ரா மாமன்னர் சீஸருக்கு அளித்த மிகவும் பிரம்மாண்டமான விருந்து உபசரிப்பைப் பற்றியும் நான் குறிப்பாக நினைத்துப் பார்த்தேன். மிகவும் செலவு வரக் கூடிய விருந்தை ஒருவருக்கொருவர் அளிக்கக் கூடிய ஒரு வீர வாதம் அது. சீஸர் தன்னால் அளிக்க முடிந்த மிகவும் விலை மதிப்புள்ள மதுவையும் சாப்பிடக் கூடிய பொருட்களையும் ஏற்பாடு செய்து க்ளியோபாட்ராவை உபசரித்தார். க்ளியோபாட்ரா பதிலுக்கு அளித்த விருந்தில் சாப்பிடக் கூடிய பொருட்கள் அப்படியொன்றும் அதிகமாக இல்லை. ஒரு சிறிய மது அருந்தும் பாத்திரமும், கொஞ்சம் பலகாரங்களும் மட்டும்.... அந்த மது அருந்தும் பாத்திரத்தில் மதுவிற்குப் பதிலாக 'வினாகிரி' நிறைக்கப்பட்டிருந்தது. மாமன்னர் சீஸர் விருந்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்தபோது, க்ளியோபாட்ரா தன் காதில் தொங்கிக் கொண்டிருந்த லோலாக்கிலிருந்து விலை மதிக்க முடியாத அந்த பெரிய முத்துக்களைப் பிரித்தெடுத்து மது பாத்திரத்திற்குள் இட்டு கலக்கி, சீஸருக்கு பருக கொடுத்தாள். அந்த வகையில் உலக வரலாற்றிலேயே மிகவும் விலை மதிப்புள்ள விருந்து உபசரிப்பில் அவள் சீஸரைத் தோல்வியடைய வைத்தாள்.

நான் எவ்வளவு நேரம் இவ்வாறு சிந்தனைகள் நிறைந்த தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தேன் என்று உறுதியாக தெரியவில்லை. என்னை யாரோ தட்டி எழுப்பியதைப் போல நான் உணர்ந்தேன். நான் மெதுவாக கண்களைத் திறந்தேன். எனக்குப் பின்னால் மேஜையின் மீது தலையை வைத்து படுத்திருந்த வெள்ளை நிற தாடியை வைத்திருந்த ஒரு கிழவன் தூக்கத்தில் கையால் அடித்தது, என் உடலில் தட்டியதைப் போல தோன்றியதாக உணர்ந்தேன். நான் பாதி தூக்கத்துடன் முன்னோக்கி பார்த்ததும், அதிர்ச்சியடைந்ததும் ஒரே நேரத்தில் நடந்தன, எனக்கு முன்னால் ஒரு தங்க நாகம்!

நான் முகத்தை உயர்த்தினேன். ஒரு பெண் உருவம் அசையாமல் எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறது. அவளுடைய வெறும் கையைத்தான் நான் முதலில் பார்த்தேன்.

செந்தாமரை மலரைப் போன்ற ஒரு பெண். கறுத்த, குட்டையான உடுப்பு அணிந்து, நிர்வாணமான கைகளையும் தோளையும் வெளியே தெரியும்படி காட்டி முகத்தைத் திருப்பிக் காட்டியவாறு அவள் நின்று கொண்டிருந்தாள். முகத்தின் வலது பக்கம் மட்டுமே தெரிந்தது. சுவரிலிருந்த விளக்கின் மஞ்சள் ஒளி அவளுடைய முகத்தில் தெளிவாக விழுந்து கொண்டிருந்தது. இந்த அளவிற்கு அற்புதமான ஒரு பெண்ணின் அழகை இந்த உலகத்திலேயே முதல் தடவையாக நான் பார்க்கிறேன்.

அவள் மேஜையின் மீது தலையைச் சாய்த்து உறங்கிக் கொண்டிருக்கும் முஸ்ஸெயை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு நான் எனக்குள் மெதுவான குரலில் முணுமுணுத்தேன்: 'க்ளியோபாட்ரா!'

அவள் முஸ்ஸெயையே பார்த்தவாறு அதே நிலையில் அங்கு எவ்வளவு நேரமாக நின்று கொண்டிருந்தாள் என்பது உறுதியாக தெரியவில்லை. அவன் சுகமான நித்திரையில் அசையாமல் படுத்திருந்தான்.

சிறிது நேரம் கடந்ததும் அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு மெதுவாக முகத்தைத் திருப்பினாள். அவளுடைய முகத்தின் இடது பகுதியைத் திடீரென்று பார்த்ததும், என்னுடைய விழிகள் மரத்துப் போய் விட்டன. இடது பக்க நெற்றி பயங்கரமாக வீங்கியிருந்தது. இடது பக்க கன்னத்தில் சூடு வைத்ததைப் போல கறுத்த அடையாளங்கள் இருந்தன. உதடு வீங்கி நீல நிறத்தில் அவலட்சணமாக இருந்தது. புருவத்திற்கு மேலே சதுர வடிவத்தில் சிறிய ஒரு ப்ளாஸ்ட்டர் ஒட்டப்பட்டிருந்தது.


முஸ்ஸெயின் பராக்கிரமச் செயலின் வெளிப்படையான சின்னங்கள்.

அவள் ஒரு ஆவியைப் போல அங்கிருந்து நகர்ந்தாள். அவள் திரும்பிச் செல்கிறாளோ? நான் சுவாசத்தை அடக்கியவாறு பார்த்தேன்.

அவள் அங்கு ஒரு நாற்காலியில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் செம்பு நிற தலைமுடியைக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணின் அருகில் சென்று அவளை எழுப்பி என்னவோ பேசியவாறு தன் காதிலிருந்து முத்து தொங்கட்டான்களை அவிழ்த்து அந்த இளம் பெண்ணிடம் காட்டிக் கொண்டிருந்ததை அதற்குப் பிறகு நான் பார்த்தேன். அந்த இளம் பெண்ணும் பார்ப்பதற்கு ஒரு தெரு பெண்ணைப் போலவே இருந்தாள்.

செம்பு நிற கூந்தலைக் கொண்டிருந்த இளம் பெண் க்ளியோபாட்ராவின் காதில் அணியும் ஆபரணத்தை வாங்கி அலட்சியமாக சற்று சோதித்துப் பார்த்து விட்டு, மறுப்பதைப் போல தலையை ஆட்டியவாறு அந்த பொருளை அவளிடமே திருப்பிக் கொடுத்தாள்.

க்ளியோபாட்ரா தன் முத்துக்களை விற்பனை செய்வதற்கு ஒரு முயற்சியைச் செய்திருக்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை வாங்குவதற்கு அந்தச் செம்பு நிற கூந்தலைக் கொண்ட பெண்ணின் கையில் தற்போதைக்கு பணம் இல்லாமலிருக்கலாம்.

தன் முத்துக்களை கையில் வைத்தவாறு க்ளியோபாட்ரா சிறிது நேரம் கவலையுடன் அங்கேயே நின்றிருந்தாள். பிறகு வேறு யாரையாவது பார்ப்போம் என்பதைப் போல அவள் இன்னொரு மூலையை நோக்கி நடந்தாள்.

நான் முஸ்ஸெயைச் சற்று பார்த்தேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

நான் மெதுவாக எழுந்தேன். சத்தமாக துடிக்கும் இதயத்துடன் க்ளியோபாட்ராவை நெருங்கினேன்.

'முத்துக்களை நான் வாங்கிக் கொள்கிறேன்' - பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு ஐந்து பவுண்ட் நோட்டை எடுத்து அவளை நோக்கி நீட்டியவாறு நான் நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினேன்:

என்னையும் என்னுடைய அசாதாரணமான நடவடிக்கையையும் என் கையிலிருந்த ஐந்து பவுண்ட் நோட்டையும் பார்த்து அவள் சிறிது நேரம் ஆச்சரியப்பட்டு விட்டதைப் போல நின்று விட்டாள். அந்த காட்சி உண்மைதானா என்பதை நம்புவதற்கு அவனால் முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அரை நிமிடம் கடந்ததும், அவளுக்கு ஒரு விழிப்புணர்வு உண்டானது. திடீரென்று அவள் இடது கையை உயர்த்தி, தன்னுடைய முகத்தின் இடது பக்கத்தை மூடியவாறு சற்று புன்னகைக்க முயற்சித்துக் கொண்டு வலது கையிலிருந்த முத்துக்களை என்னை நோக்கி நீட்டினாள். நான் நடுங்கிக் கொண்டிருக்கும் கையுடன் அதை வாங்கி அதே இடத்தில் பாக்கெட்டிற்குள் போட்டேன்.

'தேங்க் யூ சார்' - ஐந்து பவுண்ட் நோட்டை வாங்கி கையில் இறுக பற்றியவாறு அவள் எனக்கு நன்றி கூறினாள். அவளுடைய வலது கண்ணிலிருந்து ஒரு துளி கண்ணீர் உதிர்ந்து விழுவதை நான் பார்த்தேன்.

அதற்குப் பிறகு நான் அங்கு நிற்கவில்லை. மிகவும் விலை மதிப்புள்ள ஒரு பொருள், கையில் வந்து சேர்ந்த சந்தோஷம் அலையடித்துக் கொண்டிருந்த இதயத்துடன் நான் அந்த தரைப்பகுதி அறையிலிருந்து வெளியேறி தெருவிற்கு வந்தேன்.

க்ளியோபாட்ராவின் அந்த முத்துக்கள்தாம் என் கையிலிருந்து மத்திய தரைக் கடலில் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் அவளுடைய ஆன்மாவை அபகரித்துக் கொண்டு போயிருக்கின்றன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.