Logo

கமலத்திற்கு ஒரு கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4053

கமலத்திற்கு ஒரு கதை

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

து நான் முன்பு ஒருமுறை எழுதியது.  பத்து... முப்பது வருடங்களுக்கு முன்பு.  முதல் கதையைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன்.  அந்த வார இதழின் பெயர் ஞாபகத்தில் இல்லை.  வார இதழை நடத்திக் கொண்டிருந்தவர் டி. என். கோபிநாதன் நாயரும் ராஸ்கோட் கிருஷ்ணபிள்ளையும்.  அடூர் பாஸியும் அவர்களுடன் இருந்தார் என்று நினைக்கிறேன்.  ஆமாம்... புகழ் பெற்ற திரைப்பட நட்சத்திரம் அடூர் பாஸிதான்.  அந்த கட்டுரை இப்போது என்னிடம் இல்லை.  விஷயங்களை நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அவை மறக்கக் கூடியவை அல்ல.

நான் உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பிலோ ஐந்தாம் வகுப்பிலோ படிக்கும்போதுதான் முதல் கதையை எழுதினேன்.  குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்கு முதல் கதையைப் பற்றிய கதை நீண்டு செல்கிறது.

முன்னுரை நீண்டு செல்கிறது.  அப்படித்தானே?

கதையை ஆரம்பிக்கிறேன்.

நான் தகழியிலிருந்து தூரத்திலிருந்த ஓரிடத்தில் மூன்றாவது ஃபாரத்தில் தேர்ச்சி பெற்று, நான்காவது ஃபாரத்தில் சென்று சேர்ந்தேன்.  உயர்நிலைப் பள்ளியிலிருந்து நான்கைந்து மைல்கள் தூரத்திலிருந்த ஒரு இடத்தில் நான் தங்கியிருந்தேன்.  அங்கு என்னுடைய ஒரே ஒரு சகோதரி இருந்தாள்.  அக்கா, அக்காவின் கணவர் அங்கு எக்ஸைஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.

இடத்தின் பெயரை நான் கூற மாட்டேன்.

பள்ளிக் கூடத்திற்கு நடந்துதான் போவதும் வருவதும்.  நான் தங்கியிருந்த வீட்டின் அருகிலிருந்து இரண்டு சிறுமிகள் சேர்ந்து பள்ளிக் கூடத்திற்கு நடந்து போய், வந்து கொண்டிருந்தார்கள்.  என்னை விட சற்று அதிக வயது அவர்களுக்கு இருந்தது.  அவர்கள் உயர் வகுப்புகளில் படிப்பவர்கள்.  அப்போது அந்த ஊரிலிருந்து ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஐந்து மைல்கள் நடந்து சென்று படித்துக் கொண்டிருந்தார்கள்.

என்னுடைய பக்கத்து வீட்டு சிறுமிகள் என்னை ஒரு சிறிய பையனாக மனதில் நினைத்திருப்பதைப் போல தோன்றியது.  முல்லைப் பூக்களைப் பறிப்பதற்காக அவர்கள் என்னை பந்தலின் மீது ஏறச் சொல்வார்கள்.  அவர்களுக்கு பென்சில், மை, புத்தகம் ஆகியவற்றை வாங்கி வருவதற்காக கடைக்கு அனுப்புவார்கள்.  வெள்ளப் பெருக்கு காலத்தில் சாலையைத் தாண்டி பலமாக நீர் ஓடிக் கொண்டிருக்கும்.  அப்போது அவர்களைக் கையைப் பிடித்து அக்கரைக்குக் கொண்டு போய் சேர்ப்பது நான்தான்.  அவ்வாறு நான் கையைப் பிடிப்பதில் அவர்களுக்கு கூச்சமேயில்லை.

ஒரு சாயங்கால வேளையில் அல்லது புலர் காலைப் பொழுதில் நான் அவர்களில் யாரையாவது வலிய சென்று பிடித்திருந்தால், அவர்கள் எப்படி நடந்து கொண்டிருப்பார்கள்?  சம்மதித்து நின்றிருப்பார்களா?  எது எப்படியோ... அதற்குப் பிறகு என்னை சிறுவன் என்று நினைத்திருக்க மாட்டார்கள்.  ஒருவேளை, சம்மதிக்காமல் போயிருந்தாலும்....

நான் பல நேரங்களில் கண்களை மூடி சிந்தனையில் மூழ்கியிருக்கிறேன்.  எதைப் பற்றி என்று கேட்கிறீர்களா?  நான் அதை கூற மாட்டேன்.

நான் அவர்களுடைய பார்வையில் சிறுவனாகவேதான் இருந்தேன்.

அப்படி நடந்து... நடந்து சிறிது தூரம் சென்றதும், ஒரு சிறுமி எதிர்பார்த்து நின்றிருப்பாள்.  என்னை அல்ல -- அவர்கள் இருவரையும்.  அவர்களுடன் சேர்ந்து அல்ல என்றாலும், அவர்களுடன் சேர்ந்துதான் என்று கூறும் வகையில் சற்று பின்னால், இல்லாவிட்டால் சற்று முன்னால் நடக்கக் கூடிய நானும் அந்த கூட்டத்தில் இருந்தேன்.

அந்த சிறுமிகளுக்கு முன்னாலோ இல்லாவிட்டால் பின்னாலோ எதற்காக நடந்தேன்?

இராமாயணம், பாரதம், பாகவதம் - அனைத்தையும் வீட்டில் என் தந்தை வாசித்துக் கேட்டு வளர்ந்தவன் நான்.  படிக்கும்போது, நான் வாசிப்பவனாக ஆகி விட்டேன்.  என் தந்தை தவறுகளைத் திருத்துவார்.  என் தந்தைக்கு பல துள்ளல் கதைகளையும் தெரியும்.  நம்பியாரின் துள்ளல் கதைகளை நான் வாசிப்பேன்.  அந்த வகையில் நான் பாடல்கள் கொண்ட புத்தகங்கள் பலவற்றையும் வாசித்தேன்.  நான் பாடல்கள் எழுதியிருக்கிறேன்.  கேக - நாத - அன்னநடை, வஞ்சிப்பாட்டு ஆகிய விருத்தங்களிலெல்லாம்.  சில இயற்கை வர்ணனைகள், புராண கதைகள் - இவை மட்டுமல்ல - வாழ்க்கைக் கதைகளையும் பாடல் வடிவில் எழுதியிருக்கிறேன்.  ராமசந்திர விலாசம், சாவித்திரி மாகாத்மியம் போன்ற மகாகாவியங்களை வாசித்த காலத்தில், அனைத்தையும் கூர்ந்து கவனித்து, சுலோகங்களை மனப்பாடமாக ஆக்கியிருக்கிறேன்.  வள்ளத்தோளையும் ஆசானையும் நான் அந்தச் சமயத்தில் வாசிக்க ஆரம்பித்திருந்தேன்.  நான்காவது ஃபாரத்தில் என்னுடைய ஒரு பாட புத்தகம் 'சிந்தனையில் மூழ்கிய சீதை.'

அப்போது சிறுகதைகளின் அறிமுகம் கிடைத்தது.  இ.வி. என்று ஞாபகம்.  கதைகள் கொண்ட ஒரு மாத இதழைக் கொண்டு வந்திருந்தார்.  'கதைமாலிக' என்றோ இல்லாவிட்டால் வேறு ஏதோ பெயர்.  தாகூர் கதைகளின் மொழி பெயர்ப்புகளும் கையில் இருந்தன.  கண்ணன் ஜனார்த்தனின் தாகூர் கதைகளின் மொழி பெயர்ப்பை நான் பாட புத்தகத்தில் படித்திருக்கிறேன்.  இ.வி. யின் 'கேளீசவ்தம்' நான்கு பகுதிகளையும் மறக்கவே முடியாது.  வீட்டிலிருந்து உயர்நிலைப் பள்ளிக்கு படிப்பதற்காகச் சென்றபோது, அதிகமாக வாசித்தது கதைகளையும் நாவல்களையும்தான்.

இடையில் வழியில் எங்களுடன் சேர்ந்து கொள்ளும் சிறுமி மெலிந்த தோற்றத்தைக் கொண்டிருந்தாள்.  மற்றவர்களுக்கு இருப்பதைப் போல வளர்ச்சியும், உடலில் சதைப் பிடிப்பும் இல்லை.  நல்ல நிறம், சுருண்ட முடி, அதுவும் ஏராளமாக.  நல்ல பற்களும், சிவந்த உதடும்.  அவள் என்னுடைய வகுப்பில் இருந்தாள்.

அவள் என்னை வெறும் சிறிய பையனாக நினைக்கவில்லை.  பார்வையையும் புன்சிரிப்பையும் நடவடிக்கைகளையும் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  இடையில் கூறுகிறேன் -- அவளுக்கு அழகான கண்கள் இருந்தன.

புடவை அணிந்திருந்தாலும், உள்ளே கோவணம் கட்டியிருந்தாள்.  பின்னாலிருந்து பார்த்தால், தெரிந்து கொள்ளலாம்.

நான் தனியாக வந்தேன்.  அது ஒரு தீர்மானம்.  அந்த இரண்டு சிறுமிகளும் இல்லாமல் அவள் எதிர்பார்த்து நின்றிருந்தாள்.

'அவங்க ஏன் வரல?'

'என்ன காரணமோ... எனக்கு தெரியாது.'

அந்த வார்த்தைகளில் குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அவர்களைப் பற்றிய ஒரு அலட்சியம் இருந்திருக்க வேண்டும்.  நான் தொடர்ந்து கூறினேன்:

'நான் பார்க்கவில்லை.'

அவள் எனக்குப் பின்னால் நடந்தாள்.

'எனக்கு ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸ் வாங்கித் தர முடியுமா?'

பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: அவளுடைய இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸில் ஏதோவொன்று கேடாகி விட்டது.  அதுமட்டும் விலைக்கு கிடைக்காது.  பணத்தைத் தந்தாள்.  நான் அடுத்த நிமிடம் நடந்தேன்.  மேற்கு திசையிலிருந்த கடைக்குச் சென்று இன்ஸ்ட்ரூமெண்ட் பாக்ஸ் வாங்கினேன்.  பாதை வளைந்து செல்லும் இடத்தில் அதை அவளிடம் கொடுத்தேன்.


மறுநாளும் நான் தனியாகத்தான் சென்றேன்.  அவள் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.  என்னுடன் சேர்ந்து வந்தாள்.  மற்றவர்களுக்காக அவள் நின்றிருக்கவில்லை.

நாங்கள் பேசிக் கொண்டோம்.  என்ன பேசினோம் என்பது ஞாபகத்தில் இல்லை.  பள்ளிக்கூடத்தைப் பற்றி இருக்கலாம்.  ஆசிரியர்களைப் பற்றி இருக்கலாம், சில மாணவ - மாணவிகளைப் பற்றி இருக்கலாம்.  அந்த சார் நல்லவர், இந்த சார் மோசமானவர் என்றெல்லாம்.  பிறகு சொந்த விஷயங்களையும் பேசியிருக்கலாம்.

அவள் கேட்டிருக்கலாம்:

'அவர்களுடன் சண்டையா?'

என்ன பதில் கூறுவது என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை.

எதிரில் இரண்டு பேர் வந்து கொண்டிருந்தார்கள்.

நாங்கள் பேச்சை நிறுத்தினோம்.

நாங்கள் எந்தவொரு அறிமுகமும் இல்லாதவர்களைப் போல நடந்தோம்.  மற்ற சிறுமிகளில் ஒருத்தி என்னிடம் கேட்டாள்:

'என்ன, எங்களுடன் சண்டையா?'

இருவரில் அவளுக்குத்தான் என் மீது சற்று மதிப்பு இருந்தது.  அவள் என்னைச் சிறிய அளவில் ஏற்றுக் கொண்டிருந்தாள்.  நான் சற்று பதறியிருக்க வேண்டும்.

'எனக்கு யாருடனும் சண்டையில்லை.'

'பிறகு... எங்களைத் தாண்டி முன்னால் ஏன் போக வேண்டும்?  திரும்பி வருவது கூட நாங்கள் போன பிறகுதான்....'

'நான் பந்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பேன்.'

அவள் அதை நம்பவில்லை.  அவள் சொன்னாள்:

'அது எதுவுமில்லை.  எங்களுக்குத் தெரியும்' - தொடர்ந்து அவள் சொன்னாள்:

'கமலம் இப்போது எங்களை எதிர்பார்த்து நிற்பதில்லை.'

அந்தச் சிறுமியின் பெயர் கமலம் அல்ல.  இந்த கதைக்காக அப்படி பெயர் இடுகிறேன்.

தொடர்ந்து அவள் சற்று முணுமுணுத்து உறுதி செய்தாள்.

எனக்கு பயம் உண்டானது.  'ஏன் பயம் என்கிறீர்களா?  நான் ஒரு பெண் மீது காதல் கொண்டிருக்கிறேன் என்று அக்காவிடம் கூறினால்....' -- பயத்திற்கான காரணம் அதுதான்.

அது ஒரு பெரிய பயமாக இருந்தது.

நான் விஷயத்தைக் கமலத்திடம் கூறினேன்.  அவளுக்குச் சிறிது கூட கூச்சமே இல்லை.

'நான் அவர்களை எதிர்பார்த்து நிற்கவில்லை.  நான் புரிந்தே செய்தேன்.  இனியும் நான் அவர்களுடன் பேச மாட்டேன்.'

தொடர்ந்து கமலம் என்னிடம் கேட்டாள்:

'பயம் இருக்கிறதா?  ஏன் பயப்படணும்?  நான் என்னுடைய அம்மாவிடம் கூறியிருக்கிறேன்.  வகுப்பில் இப்படியொரு மாணவன் படிக்கிறான் என்றெல்லாம்.  அழைத்துக் கொண்டு வரும்படி அம்மா சொன்னாங்க.  அதில் என்ன தவறு இருக்கிறது?  ஒரு நாள் வீட்டிற்கு வரலாம்.'

கமலத்தின் தாய் ஒரு ஆசிரியை.  என் அக்கா அப்படியல்ல.  கிராமப் பகுதியில் பிறந்து வளர்ந்தவள்.  அதுதான் வித்தியாசம்.

எனக்கு பயமில்லை என்று நான் கூறினேன்.  கமலம் அவர்களுடன் சண்டை போடுவாளோ என்பதுதான் பயமாக இருந்தது.  அவள் சற்று கோப குணம் கொண்டவள்.  சண்டை என்றால் அவர்கள் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.  பிடிவாதம் உண்டானால், சற்று விஷயத்தை அக்காவிடம் கூறி விடுவார்கள்.

கமலத்திடம் கூறியிருக்க வேண்டியதில்லை.

எதுவும் நடக்கவில்லை.  கமலம் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள்.  நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக் கூடத்திற்குச் செல்வோம்.  அவளுக்கு பென்சில், தாள், மை ஆகியவற்றை வாங்கித் தருவேன்.  ஏதாவது விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பேன்.

இதற்கிடையில் பள்ளிக் கூடத்தில் இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் திருமணம் செய்து கொண்டார்கள்.  வளர்ச்சியடைந்தவர்கள்.  திருமண வயதை அடைந்தவர்கள்.

கமலம் கூறினாள்:

'அவர்கள் காதல் வயப்பட்டிருந்தார்கள்.'

ஒருநாள் எப்போதும் பார்க்கக் கூடிய இடத்தில் கமலத்தைக் காணவில்லை.

அவள் ஏன் வரவில்லை?

அப்படி நடந்ததில்லை.  இல்லை... ஒருநாள் அவள் வரவில்லை.  முந்தைய நாள் அவள் சொன்னாள்:

'நான் நாளைக்கு பள்ளிக் கூடத்திற்கு வர மாட்டேன்.'

அவளும் அவளுடைய அம்மாவும் சேர்ந்து ஏதோ கோவிலுக்கு வழிபடுவதற்காக சென்றிருந்தார்கள்.

முந்தைய நாள் கமலம் எதுவும் கூறவில்லை.  அவளுக்கு ஏதாவது உடல் நலக் கேடு உண்டாகியிருக்குமோ?  நான் அவளுடைய வீட்டிற்குச் சென்றதில்லை.  வீடு எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது.  யாரிடம் கேட்பது?  அந்த வழியே செல்ல வேண்டும்.  அவ்வளவுதான் தெரியும்.

அடுத்த நாளும் அவள் இல்லை.

கமலத்திற்கு என்ன ஆனது?

அன்று வீட்டை அடைந்தபோது மேற்கு திசையிலிருக்கும் வீட்டில் விரிந்த நெஞ்சுப் பகுதியையும் அகலமாக முன்னோக்கி வளர்ந்திருக்கும் மார்பகங்களையும் கொண்ட, நெளிந்துகொண்டே நடக்கும் அந்த பழைய சினேகிதி என்னிடம் கூறினாள்:

'தெரியுமா?  கமலத்தை நாய் கடிச்சிடுச்சு.'

'நாயா?  எந்த நாய்?  தெரு நாயா?'

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

'நாளைக்கு நான்காவது நாள்.  குளிப்பாள்.  நாளை மறுநாள் பள்ளிக் கூடத்திற்கு வருவாள்.'

எதுவும் புரியாமல் குழம்பிப் போய் நின்றேன்.  நாய் கடித்து நான்காவது நாள் குளிக்கிறாள்.  பிறகு பள்ளிக் கூடத்திற்கு வருகிறாள்.  நான் பாதி வாயைத் திறந்தவாறு நின்றேன்.  நாய் கடித்தால் அப்படித்தான் என்று எனக்கு தெரியாது.  என்னை நாய் கடித்திருக்கிறது.  இப்போதும் காலில் அடையாளம் இருக்கிறது.  நான் நான்காவது நாள் குளிக்கவில்லை.

அவள் கூறினாள்:

'பலகாரம் வாங்கி, பொட்டலமாக கட்டிக் கொண்டு போய் கொடு.'

நாய் கடித்தால், பலகாரம் வாங்கிக் கொண்டு போய் கொடுக்க வேண்டுமா?  என்னதான் கூறுகிறாள்?  எனக்கு எதுவுமே புரியவில்லை.

மறுநாளுக்கு மறுநாள் காலையில் நான் அவள் எதிர்பார்த்து நின்றிருக்கக் கூடிய இடத்தை அடைந்தேன்.  அவள் அப்போது நடந்து அங்கு வந்தாள்.

கமலம் தன் நெற்றியில் கறுத்த ஒரு பெரிய பொட்டு வைத்திருந்தாள்.  அவள் சாதாரண குங்குமப் பொட்டைத்தான் வைப்பாள்.  அவளுடைய முகம் சிவந்து காணப்பட்டது.  பிரகாசம் படர்ந்திருந்த கன்னத்தில் இரண்டு முக பருக்கள் அரும்பியிருந்தன.  ஒரு புதிய ஒளி வந்து சேர்ந்து விட்டிருந்தது.  கண்களுக்கு ஒரு எண்ணெய்யின் வெளிப்பாடு!  அல்ல.... அடர்த்தியான நீல நிறம்!  அவை அப்படியே அசைந்து கொண்டிருந்தன.  உதடு இரத்தத்தைப் போல அல்ல...  என்ன ஒரு நல்ல நிறம்!  புன்னகையில் உண்மையிலேயே வெட்கம் கலந்திருந்தது.  நான்கு நாட்களுக்கு முன்பு அவளுடைய புன்னகை அப்படி இருக்கவில்லை.  பார்வை அந்த மாதிரி இல்லை.  அவள் மொத்தத்தில் மாறிப் போயிருந்தாள்.  நுனியைக் கட்டி பின்னால் தொங்க விடப்பட்டிருந்த கூந்தலுக்குக் கூட ஒரு தனி அழகு இருந்தது!


நான் ஆர்வத்துடன் கேட்டேன்:

'எந்த நாய் கடிச்சது?  எங்கே கடிச்சது?'

மணியோசையைப் போல ஒரு சிரிப்பு!

அவளுடைய ஓரக் கண் என் இதயத்தைத் தோண்டி எடுத்தது.  அந்த மாதிரி கமலம் எந்தச் சமயத்திலும் ஓரக் கண்களால் பார்த்ததில்லை.

என் மனதிற்குள் ஒரு போராட்டம் உண்டானது.  என்ன கேட்க வேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.  அவள் முன்னால் நடந்தாள்.  அவள் உள்ளே துணியை அணிந்திருப்பாள்.  பின் பகுதிக்கு வனப்பு வந்திருந்தது.  அவை குலுங்கின.

என் நெஞ்சு பலமாக அடித்துக் கொண்டிருந்தது.

அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

'நான் வயசுக்கு வந்துட்டேன்.'

இவையெல்லாம் உண்மை.  நான் இப்போதும் நினைத்துப் பார்க்கக் கூடிய விஷயங்கள்....

நான் கண்களை மூடி சிந்தனையில் மூழ்கினேன்.  இரவில் தூங்குவதற்காக படுக்கும்போது, நடக்கும்போது, வகுப்பில் அமர்ந்திருக்கும்போது!  என்ன சிந்தித்தேன் என்று கேட்கிறீர்களா?  நான் கூற மாட்டேன்.

அதைத் தொடர்ந்து நான் ஒரு கதை எழுதினேன்.  ஒரே இரவில்.... பாதி இரவு தாண்டிய பிறகும் என்னுடைய அறையில் வெளிச்சம் இருப்பதைப் பார்த்து, அக்கா கண் விழித்து வந்தாள்.

'என்ன குழந்தை!  நீ தூங்கலையா?'

'இல்ல.... கொஞ்சம் எழுத வேண்டியதிருக்கு.'

புலர் காலைப் பொழுதில் அக்கா கண் விழிப்பாள்.  எனக்கு மதியத்திற்குத் தேவையான சோற்றைத் தயார் பண்ண வேண்டும்.  அப்போதும் அக்கா பதைபதைப்புடன் சொன்னாள்:

'அய்யோ, குழந்தை, நீ கொஞ்சம் கூட கண்ணை மூடலையேடா!'

அதற்கு பின்னால் இருந்த வேலை - அதை பிரதி எடுப்பது.  நல்ல தாளில் அழகான எழுத்தில் சீரானது.

கதைக்கு என்ன பெயரை வைப்பது?  இறுதியில் கமலம் என்று நான் எழுதி விட்டேன்.  அந்த வகையில் பெயர் வைத்தேன்.  இந்துலேகா, சாரதா என்றெல்லாம் கதைகளுக்குப் பெயர் இருக்கின்றனவே!

வகுப்பில் நன்கு கவனிக்கக் கூடிய ஒரு மாணவனாக நான் இருந்தேன்.  தினமும் காலையிலும், மாலையிலும் ஐந்து மைல்கள் நடந்தேன்.  வழியில் கற்பித்ததை ஞாபகப் படுத்திப் பார்ப்பேன்.  வாசித்ததையும் நினைவுபடுத்திப் பார்ப்பேன்.  அது ஒரு பயிற்சி அல்லவா?  நல்ல பயிற்சி.  பாட புத்தகங்களை அந்த அளவிற்கு தீவிரமாக வீட்டில் இருக்கும்போது வாசிப்பதில்லை.  நோட்டுகளும் இல்லை.  நடந்து மிகவும் சோர்வடைந்த நிலையில்தான் வீட்டிற்கு வருவேன்.  பிறகு எப்படி வாசிப்பது?  தளர்ந்து போய் விட்டிருப்பேனே!

'கமலம்' என்ற கதையை எழுதியதிலிருந்து காலையில் செல்லும்போதும், வரும்போதும், வந்த பிறகும் கதையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பேன்.  கதைக்கு வடிவம் வரும்.  உள்ளடக்கம் உண்டாகும்.  எழுதிய கதையை பல தடவைகள் திருத்தி எழுதி, புதிய புதிய கதைகள் வடிவமெடுத்தன.  கழிவறையில் இருக்கும்போது கூட கதையை உருவாக்கிக் கொண்டிருந்தேன்.  வகுப்பில் கண்களைத் திறந்துகொண்டு அமர்ந்திருப்பேன்.  ஆனால், கதையை உருவாக்கிக் கொண்டிருப்பேன்.

நான் கதையைப் படைக்கும் உலகத்தில் இருப்பேன்.  எழுத்துடன் எழுத்து... எத்தனை கதைகள் எழுதினேன் என்று கூற இயலாது.  தினமும் ஒன்றோ இரண்டோ நோட்டு புத்தகங்களின் தாள்கள் தீர்ந்தன.

என்னுடைய முதல் கதையை கமலம் வாசிக்க வேண்டும்.  அவ்வாறு தோன்றியது.  நேரில் கொடுக்க முடியாது.  ஏன் முடியாது?  முடியுமோ என்னவோ?  அங்கு போய் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் பலமாக இருந்தது.  எப்படி கொண்டு போய் கொடுப்பேன்?  அவள் அதை திரும்ப கொடுத்து விட்டால் என்ன செய்வது?

முடியாது... பயமா? கூச்சமா?  நிச்சயமாக தெரியவில்லை.

வாடகைக் கணக்கை எழுதுவதைப் போல கமலத்தின் ஏதோ ஒரு நோட்டு புத்தகத்தை - அறிவியல் நோட்டு புத்தகம் என்று ஞாபகம் -- வாங்கினேன்.  அது இரண்டு.... மூன்று நாட்கள் என் கையிலிருந்தது.  ஒரு வாடகையையும் எழுதவில்லை.  சிந்தனையில் மூழ்கினேன்.

ஒருநாள் அந்த கதையை அந்த புத்தகத்திற்குள் வைத்தேன்.  எப்போதும் சந்திக்கும் இடத்தில் வைத்து அந்த நோட்டைக் கொடுத்தேன்.  வேகமாக நடந்து சென்றேன்.  அவள் அந்த நடையை கவனித்திருக்க வேண்டும்.  மறுநாள் எப்போதும் சந்திக்கக் கூடிய நேரத்திற்கு முன்பே நான் அவளைப் பார்க்கக் கூடிய இடத்தைக் கடந்து சென்றேன்.  வகுப்பில் நான் கமலத்தைப் பார்க்கவேயில்லை.  கமலம் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.  எனக்கு தெரியும்.

பயம்!

காதல் கதையைக் கொடுத்த பயம்!

நேரில் கதையைக் கொடுக்காமல் இருந்ததற்குக் காரணம் என்ன என்பது தெளிவாக தெரிந்து விட்டது.  பயம்!

அவள் தலைமை ஆசிரியரின் கையில் கதையைக் கொடுத்து விட்டு, புகார் கூறி விட்டால்....?

நான் கூறுவேன்:

நான் ஒரு கதை எழுதினேன்.  அவளுடைய நோட்டு புத்தகத்திற்குள் அதை வைத்தேன்.  நோட்டு புத்தகத்தை திருப்பித் தந்தபோது, அதை எடுப்பதற்கு மறந்து போய் விட்டேன்.

கதை எழுதுவது குற்றமல்லவே!

அந்த கதையின் உள்ளடக்கம் என்ன என்று எனக்கு தெரியாது.  அப்படி பயப்படக் கூடிய அளவிற்கு அது தரம் தாழ்ந்ததாக இருந்ததா?  நான் தேவையில்லாமல் எதையாவது எழுதி விட்டேனா?  ஒரு பெண்ணிடம் தரமற்ற முறையில் நடந்து கொள்வதைப் போல.....

நான் நான்கு நாட்கள் கமலத்தைப் பார்க்காமலே நடந்தேன்.  ஒவ்வொரு நாள் முடியும்போதும் எனக்கு நிம்மதியாக இருந்தது.  தலைமையாசிரியரின் நோட்டீஸ் வரவில்லை.

ஐந்தாவது நாள் நான் போய் சேர்வதற்கு முன்பே, நாங்கள் சந்திக்கக் கூடிய இடத்தில் கமலம் எதிர்பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அழகான ஒரு புன்னகையுடன் கதையை என்னை நோக்கி நீட்டினாள்.  நான் தட்டி பறிப்பதைப் போல அதை கையில் வாங்கினேன்.  கமலம் கேட்டாள்:

'என்ன... பயந்துட்டியா?  சரிதான்...'

நான் எதுவும் கூறவில்லை.

நன்கு உருண்ட, அழகான கையெழுத்தில் கதைக்கு மேலே எழுதப்பட்டிருந்தது:

'A very Good Story. Congratulations'

எனக்கு முதல் தடவையாக கிடைத்த பாராட்டு.


தை எழுதி... எழுதி நான் ஐந்தாவது ஃபாரத்தில் தோல்வியடைந்தேன்.  பாடங்களைப் படித்து கமலம் தேர்ச்சியடைந்தாள்.  அவள்.... மேல் வகுப்பிலும் நான் கீழ் வகுப்பிலும் படிக்கிறோம்.  மாற்றுச் சான்றிதழ் வாங்கினேன்.  இலக்கியவாதியான கைனக்கரி குமாரபிள்ளையின் கையில் சென்று விழுந்தேன்.

நூற்றுக் கணக்கான கதைகளையும் 'ப்ரதிபல'னையும், 'பதித பங்கஜ'த்தையும் எழுதியதற்குப் பிறகும், அந்த முதல் கதை என்னிடம் இருந்தது.  பாராட்டுடன்.  நான் காத்தயைத் திருமணம் செய்து கொண்ட காலத்திலும் அந்த கதையை எங்கோ பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.  அது இருந்தது.  கொஞ்ச காலங்களாக காணவில்லை......

எங்கு போனதோ, தெரியவில்லை.  அந்த தோழியையும் அதற்குப் பிறகு பார்க்கவில்லை.  அவள் இப்போது பலருக்கும் பாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கலாம்.  இல்லாவிட்டால் மரணத்தைத் தழுவியிருக்கலாம்.  உயிருடன் இருந்தால், என்னை நினைப்பாளோ என்னவோ!

முதல் கதை கையில் கிடைத்திருந்தால்.... என்று எனக்கு தோன்றுவதுண்டு.  எதற்காகவும் இல்லை....  சற்று வாசித்துப் பார்க்க.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.