Logo

மரணத்திற்குப் பிறகு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4051

மரணத்திற்குப் பிறகு

(மலையாளக் கதை)

தகழி சிவசங்கரப்பிள்ளை

தமிழில்: சுரா

 

ணவன் இறந்து, மனைவி சுய நினைவில்லாமல் படுத்திருக்கிறாள்.  அந்த கணவனுக்கும் மனைவிக்குமிடையே இருந்த உறவு ஊரில் ஒரு முன் மாதிரியாக இருந்தது.  அன்பு செலுத்தி... அன்பு செலுத்தி அவர்கள் ஒன்றாக ஆகி விட்டிருந்தார்கள்.  அப்படி இருக்கும்போது ஒருவர் இன்னொரு ஆளை தனியாக ஆக்கி விட்டு, எங்கோ போய் விட்ட நிலை உண்டானது.

அவர்களுக்கிடையே சாதாரணமாக நடக்கக் கூடிய ஒரு வாதம், எதிர்வாதம் இருந்தது.  யார், யாரை விட்டு விட்டு செல்வார்கள் என்று.  மனைவி கூறுவாள்: 'நான் உங்களைப் பார்த்துக் கொண்டே கண்களை மூடுவேன்' என்று.  கணவன் கோபப்படுவார். 'போடீ... உன் மடியில் தலையை வைத்து உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீங்குவேன்' என்று அவர் கூறுவார்.  மனைவி அப்போது கோபப்பட மாட்டாள்.  அவள் கூறுவாள் - 'பார்க்கலாம்... யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது' என்று.

இது மட்டுமே அங்கு நடக்கக் கூடிய தர்க்கம்.  அன்பு என்ற ஒன்று மலர்ந்து ஒளி வீசிய அருமையான வாழ்க்கையாக இருந்தது அவர்களுடையது.

அப்படி இருக்கும்போது கணவர்தான் முதலில் சென்றார்.  மனைவியின் கனவுகள் அனைத்தும் தகர்ந்து விட்டன.  வாழ்க்கையுடன் உள்ள தொடர்பு அறுந்தது.  மனைவி கணவனிடமும், கணவர் மனைவியிடமும் அன்புடன் இருந்தால், கணவர் இறந்ததற்குப் பிறகு, மனைவிக்கு வாழ்க்கையுடன் உள்ள உறவுகள் எதுவுமே எஞ்சியிருக்காது.  மனைவி-கணவர் உறவின் உரைகல் அதுதான்.

அந்த வகையில் மனைவிக்கு வாழ்க்கையுடன் உறவே இல்லாத நிலை உண்டானது.  அவள் சுய நினைவை இழந்தாள்.  மூச்சு அவளை உலகத்துடன் தொடர்பு வைத்திருக்கச் செய்தது.  அந்த மரணம் ஊரில் உள்ளவர்களுக்கு மத்தியில் படைத்த உணர்ச்சி ஒரு மரணம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல.  மரணத்தைத் தழுவிய மனிதரின் மனைவியைப் பற்றித்தான் எல்லோரும் சிந்தித்தார்கள்.  அந்த பெண் இனி வாழ்வாளா?

முகத்தில் நீர் தெளித்தார்கள்.  அப்போது சற்று கண்களைத் திறந்தாள். மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றாள்.  அது சிறிது நேரம் நீடித்து நின்றது.  டாக்டரை வரவழைக்க வேண்டியிருந்தது.  என்னவோ சிகிச்சை செய்தார்.  ஆழமான ஒரு மயக்கத்தில் மனைவி மூழ்கினாள்.

மனைவி கணவரின் இறுதிச் சடங்குகள் எதையும் செய்ய வேண்டியதில்லை.  இறுதியாக விடை கொடுக்க வேண்டும். அவ்வளவுதான்.  பொதுவாக கணவரின் பாதத்தில் நெடுஞ்சாண் கிடையாக விழுவது, தவறுகளையும் குற்றங்களையும் ஒத்துக் கொள்வது, இல்லாவிட்டால் 'எனக்கு யார் இருக்கிறார்கள்?' என்று கேட்டு அழுவது -- இவைதாம் எப்போதும் நடப்பது.  அது ஒரு சடங்கு அல்ல.  விடை கொடுப்பது மட்டுமே.  தனக்கு தெரியாத இன்னொரு உலகத்தில் வைத்து சந்திப்போம் என்று கூறுவது....  நண்பர்கள் பிரியும்போது சொல்வது இல்லையா -- பிறகு பார்ப்போம் என்று, அதேதான்.  பிண அடக்கம் சம்பந்தப்பட்ட எந்தவொரு சடங்கிலும் மனைவி செய்வதற்கு எதுவுமில்லை.

அந்த ஊரைச் சேர்ந்த எல்லோரும் குழுமியிருந்தார்கள்.  எந்த மா மரத்தை வெட்ட வேண்டும்?  மேற்கு திசையில் நின்று கொண்டிருக்கும் ஒரு மாமரம் இருக்கிறது. எல்லா வருடமும் நன்றாக காய்க்கக் கூடிய மாமரம்.  மேற்கு பகுதியில் நிலம்  வைத்திருப்பவருக்கு அந்த மாமரம் ஒரு தொல்லையாக இருந்தது.  ஒரு அரை பறை நிலம் அந்த மாமரத்திற்குக் கீழே ஒன்றுமில்லாமல் போகும்.  இதுதான் வாய்ப்பு என்று அந்த நிலத்தின் சொந்தக்காரர் முடிவு செய்தார்.  அவர் ஊராட்சி மன்றத்தில் ஒருவர்.  அடுத்த வீட்டில் உள்ளவரும் கூட.

எப்படியாவது அந்த மாமரம் இல்லாமற் போனால் போதும் என்பதுதான் அவருடைய எண்ணமாக இருந்தது.  அவருடைய கட்டளையின்படி சலவை செய்பவர்கள் அந்த மாமரத்தின் மீது கோடறியை வைத்தார்கள்.  யாரும் கேட்பதற்கில்லை.  வேறு மாமரங்கள் அந்த வீட்டைச் சுற்றி இருந்தன.  அவை அனைத்தும் தப்பித்தன.

கேட்பதற்கு உரிமை கொண்ட மனைவி சுய நினைவில்லாமல் படுத்திருக்கிறாள்.  உறவினர்கள் வந்து சேர்ந்த சமயத்தில் மாமரம் விறகாக ஆகி விட்டிருந்தது.  அவர்களாலும் எதுவும் கூற முடியவில்லை.  நிலத்தின் சொந்தக்காரரான பக்கத்து வீட்டு மனிதரின் உற்சாகத்தில் அனைத்து காரியங்களும் நடந்து வந்தன.  ஒரு பக்கத்து வீட்டுக்காரர் செய்ய வேண்டிய காரியங்கள்தானே அனைத்தும்!

அவரே உடலை எரிப்பதற்கு இடத்தைத் தயார் பண்ணினார்.  உமி, சிரட்டை, தென்னை ஓலை -- அனைத்தையும் கொண்டு வந்தார்.  அனைத்தும் வேண்டிய வகையில் நன்கு நடந்தன.

பிணத்தைக் குளிப்பாட்டினார்கள்.  வாய்க்கரிசி போன்ற காரியங்கள் நடந்தன.  வேண்டியவர்களெல்லாம் பிணத்திற்கு அருகில் வந்து நின்றார்கள்.  மனைவியைச் சுற்றி நின்றிருந்த ஊரில் உள்ளவர்களின் பெண்களுக்கு சிறிய ஒரு பதைபதைப்பு உண்டானது.  எதையும் காட்ட வேண்டாமா?  அவர்கள் மனைவியைப் பிடித்து நிமிர வைக்க முயன்றார்கள்.  கண் விழிக்கவில்லை.  தளர்ந்து விழுந்து கொண்டிருந்தாள்.  அப்போது அந்த நல்ல பக்கத்து வீட்டுக்காரர் கூறினார்: 'இன்று அப்படிப்பட்ட மருந்தைத்தான் ஊசியின் மூலம் செலுத்தியிருக்கிறார்கள்.'

பெண்களுக்கு முன்னால் அதற்குப் பிறகும் அந்த பிரச்னை நின்று கொண்டிருந்தது.  நிரந்தரமாக பிரிந்து செல்கிறார்.  இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்த கணவன்-மனைவியைப் பார்த்ததில்லை.  சிதையில் போவதற்கு முன்பு அவளிடம் சற்று காட்ட வேண்டாமா?

டாக்டரை அழைத்துக் கொண்டு வந்து, சிறிது நேரத்திற்காவது சுய நினைவைக் கொண்டு வரக் கூடிய மருந்தைக் கொடுக்கச் செய்தால் என்ன?  அப்படியும் சிலர் நினைத்தார்கள்.  ஆனால், பெண்களின் கருத்துக்கு பெரிய மதிப்பு இல்லை.  மனைவி எந்தவொரு சடங்கையும் செய்யாமலே கணவரின் சரீரம் சாம்பலாக ஆகி விடும்.

சிதையில் வைப்பதற்காக கணவரின் உடலை எடுத்தார்கள்.  அங்கு செய்ய வேண்டிய சடங்குகள் நடந்தன.

சிதைக்கு நெருப்பு வைத்தார்கள். பற்றி எரிவதற்கு நெருப்பு தயங்கவில்லை.  மனைவி பார்க்கவில்லை என்ற விஷயம் நெருப்பிற்குத் தடையாக இல்லை.  புகை வானம் அளவிற்கு உயர்ந்து பரவியது.  சில வெடித்து அழும் சத்தமும், மூக்கைச் சிந்தும் சத்தமும் கேட்டன.  மார்புப் பகுதி வெடித்து விலகியது.  மண்டையோடு வெடித்துச் சிதறியது.  அவை அனைத்தும் அங்கு கூடியிருந்தவர்களுக்கு தெரியும்.  இறுதியில் செய்ய வேண்டிய சடங்கும் முடிந்தது.  எல்லோரும் பிரிந்தார்கள்.  பக்கத்து வீட்டுக்காரரான நிலத்தின் சொந்தக்காரர் எல்லா காரியங்களையும் நல்ல முறையில் நடத்தினார்.

மனைவி கண் விழிக்கவில்லை.  ஆழமான மயக்கம்.  பக்கத்து வீட்டு பெண்கள் சிலர் சுற்றிலும் இருந்தார்கள்.  அப்படி போட்டு விட்டு எல்லோராலும் போக முடியாதே!  இடையில் இரண்டு மூன்று முறை நீர் பருகினாள்.  அது பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு நிம்மதியைத் தந்தது.  மனைவி, கணவரை உடனடியாக பின்பற்றிச் செல்ல மாட்டாள் என்று தோன்றியது.


சிதைக்கு நல்ல விறகு பயன்படுத்தப்பட்டிருந்தது.  பச்சை மாமரம்... நல்ல ஓரங்களும் இருந்தன.  பெரிய நெருப்புக் கட்டைகள் நின்று நின்று எரிந்தன, புகைந்து கொண்டிருந்தன.  நெஞ்சுப் பகுதியில் நெருப்புக் கட்டைகள் அதிகமாக மின்னின.  மனைவி மயக்கத்தில் இருந்தாள்.

மறுநாள் காலையில் அனைத்தும் அணைந்து அடங்கி, சிதை ஒரு சாம்பல் குழியாக ஆனது.  மனைவி கண் விழித்தாள்.  அவளால் எழுந்து நிற்க முடிந்தது.  நேராக தெற்கு பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவள் நடந்தாள்.  நிலத்தின் தென் கிழக்கு மூலையில் இருந்த சாம்பல் குழியை அவள் பார்த்தாள்.  சற்று பார்த்து விட்டு, சிறிது சிறிதாக அவள் மயங்கி விட்டாள்.

பக்கத்து வீட்டுக்காரர்கள் ஏதோ உணவைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.  அவள் நீரை மட்டும் குடித்தாள்.  அவள் வீட்டிற்குள் சற்று நடந்தாள்.  முகத்தைக் கழுவ பயன்படும் சொம்பைக் காணவில்லை.  பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் சொன்னாள்: 'இறுதி சடங்கைச் செய்வதற்காக அந்த சொம்பை எடுத்துச் சென்றார்கள்.'  அப்போது மனைவி கேட்டாள்: 'யார் எடுத்துட்டுப் போனாங்க?'

'யாரோ எடுத்துக் கொண்டு போவதைப் பார்த்தேன்.'

அதற்குப் பிறகுதான் மேற்குப் பகுதியில் நின்றிருந்த மாமரத்தை வெட்டிய விஷயம் மனைவிக்குத் தெரிய வந்தது.

'டேய், துரோகி... இந்த நேரத்தில் நீ அதையும் எடுத்துக் கொண்டாயா?' -- மனைவிக்கு கோபம் வந்தது. அவளுக்கு வெறி ஏறியது.  'இந்த காரியத்திற்காக உனக்கு ஒரு பாடம் கற்பிக்கிறேன்' -- மனைவி சொன்னாள்.

அன்றே அவர்களுக்கிடையே பலமான சண்டை நடந்தது.  சோர்வடைந்து காணப்பட்ட மனைவி, ஒரு ஆணுடனும் அவருடைய மனைவியுடனும் நாக்கைக் கொண்டு சண்டை போட்டாள்.  மறுநாள் -- மொத்தத்தில் ஒரு காவல் துறை வழக்காகவும் அது ஆனது.

இப்போது அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.  மனைவி கடுமையான பிடிவாதத்தில் இருக்கிறாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.