Logo

பார்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8415
Bar

ரண்டு நண்பர்கள்- தாமோதரனும் ஜோஸும்- பாரில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தார்கள். ஜோஸ் சொன்னான்: “டேய், என்னை நடுங்க வைக்கிற கெட்ட கனவு மரணம் கிடையாது. செத்துப் போயிட் டேன்னு நினைச்சு என்னை உயிரோட சவப்பெட்டிக் குள்ள வச்சு மூடுறதுதான். சவக்குழிக்குள்ள என்னை மண் போட்டு மூடினதுக்கப்புறம், இனி எந்தக் காலத்திலயும் திறக்க முடியாத பெட்டிக்குள்ள படுத்தபடி நான் கண்ணைத் திறந்து பக்குறேன் பாரு... இதுதாண்டா நான் வாழ்க்கையிலேயே பயப்படற விஷயம்...”

தாமோதரன் சொன்னான்: “டேய், நீ சொன்னது ஒருவிதத்துல வினோதமான ஒரு விஷயம்தான். என்னை பயமுறுத்திக்கிட்டு இருக்குற விஷயமும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான். அதாவது நான் செத்துப் போயிட்டேன்னு என்னை சிதையில வச்சு நெருப்பை மூட்டி எரிக்கிறாங்க. நான் கண்களைத் திறந்து பாக்குறேன். ஆனா, என்னால அசைய முடியல. வாயைத் திறந்து கத்தக்கூட முடியல... கத்துறதுக்கு சக்தி இருந்தால்தானே?”

“தாமோதரா...” ஒரு மாமிசத் துண்டை வாயில் வைத்தவாறு ஜோஸ் சொன்னான்: “இது உண்மையிலேயே கேட்க பயங்கரமாகத்தான் இருக்கு. சொல்லப்போனால், நாம ரெண்டு பேருடைய பயமும் ஒரே மாதிரிதான் இருக்கு...”

தாமோதரன் தூரத்தில் எங்கோ பார்த்தவாறு சொன்னான்: “டேய், உண்மையிலேயே பார்க்கப்போனா தேவையில்லாம நாம மரணத்தைப் பற்றி பயந்துக்கிட்டு இருக்கோம்னு நினைக்கிறேன்.”

ஜோஸ் கேட்டான்: “நாம ஏன்டா மரணத்தைப் பார்த்து இப்படி பயப்படணும்? சின்னப் பிள்ளைங்களைப் பாரு- அவங்களுக்கு மரண பயம் இல்லவே இல்ல...”

“நீ சொல்றது சரிதான்.” தாமோதரன் சொன்னான்: “வளர்றப்போ நம்ம மூளையோட சுருள்ல இதெல்லாம் வந்து ஒட்டிக்குது!”

ஜோஸ் சொன்னான்: “அதுக்குப் பிறகு காமம்!”

தாமோதரன் சொன்னான்: “குரோதம்!”

ஜோஸ் சொன்னாள்:  “பொய்.”

தாமோதரன் சொன்னான்: ஆணவம்.”

இப்படியே பேசிக்கெண்டிருந்த அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்கள்.

ஜோஸ் இருவரின் கண்ணாடி டம்ளர்களிலும் ரம் ஊற்றினான். தாமோதரன் இரண்டிலும் சோடாவைக் கலந்தான். ஒரு வெயிட்டர் வந்து அவர்களைப் பார்த்தான். எதுவும் வேண்டாம் என்று அவர்கள் தலையை ஆட்டியவுடன் அவன் திரும்பிப் போனான்.

அப்போது அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு பக்கத்து மேஜையில் தனியே அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது மனிதர், அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாமல் அவர்களைப் பார்த்துப் புன்சிரித்தார். அவர் பீர் குடித்துக்கொண்டிருந்தார். பீரை குடித்து முடித்து கழுத்தில் கட்டியிருந்த மஃப்ளரை இலோசாகக் கைகளால் தளர்த்திய வண்ணம் பக்கத்தில் வந்து அவர்கள் முன் நின்றவாறு சொன்னார்: “மன்னிக்கணும். நீங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்ததை நானும் கேட்டேன். நீங்க பேசிக்கிட்டு  இருந்த விஷயத்தோட தொடர்புள்ள மாதிரியான அனுபவம் என் வாழ்க்கையிலயும் நடந்திருக்கு. உங்களுக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னா, அந்த விஷயத்தை நான் சொல்லலாமா?”

அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு இது என்ன புதுக்கதை என்பது மாதிரி அவரைப் பார்த்தார்கள். அவர் கேட்டதற்கு அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. சரி என்று சம்மதமும் சொல்லவில்லை. அவர் அப்போது அங்கேயே நின்றிருந்தார். அவரின் புன்சிரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது. அவர் திரும்பிப் போகலாம் என்று முடிவெடுத்து பின்னோக்கித் திரும்பவே, அவர்கள் இருவரும் புன்னகை தவழ அவரைப் பார்த்தவாறு, அவரை அமரும்படி கைகளால் சைகை செய்தார்கள். அவர் தான் அமர்ந்திருந்த மேஜையில் இருந்த கண்ணாடி டம்ளரில் பீரை ஊற்றியவாறு திரும்பி வந்து, டம்ளரை அவர்கள் இருந்த மேஜைமேல் வைத்து, ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தார். டம்ளரில் கையை வைத்துக்கொண்டு அவர் சொன்னார்: “தேங்க்ஸ்...” ஜோஸும் தாமோதரனும்  தங்களின் டம்ளர்களை உயர்த்திப் பிடித்தவாறு சொன்னார்கள்: “சியேர்ஸ்...”  “சியேர்ஸ்” -அவரும் சொன்னார். சொல்லிவிட்டு அவர் கொஞ்சம் பீரைக் குடித்தார். அவர்கள் அவர் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் அவரின் முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர் சொன்னார்: “நான் தண்ணி அடிச்சிட்டு இதைச் சொல்றேன்னு  நினைக்காதீங்க. நீங்க தீவிரமா சிந்திச்சுப் பேசுறதைக் கேட்டதும் எனக்கும் ஒரு தைரியம் வந்துச்சு. நான் இந்த சம்பவத்தை இதுக்கு முன்னாடி யார்கிட்டயும் சொன்னதில்ல. உங்கக்கிட்டதான் முதல் தடவையா சொல்றேன். நான் இதை எப்படி உங்கக்கிட்ட விவரிக்கப் போறேன்றதைத் தெரிஞ்சுக்க நானே ஆர்வமா இருக்கிறேன். காரணம்- நம்முடைய அனுபவமும், அந்த அனுபவத்தை விவரிச்சுச் சொல்றதும் ரெண்டு மாறுபட்ட அனுபவங்கள் இல்லையா? நீங்க பேசிக்கிட்டு இருந்ததைக் கேட்டப்போ, உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை தெரிஞ்சுக்கிறதுல நிச்சயம் ஆர்வம் இருக்கும்னு அந்த நிமிஷத்திலேயே நான் புரிஞ்சுக்கிட்டேன். என்னோட ஞாபகத்துல இருந்து எப்பவோ நடந்த சம்பவத்தை விவரிச்சு சொல்றப்போ, என்னோட அனுபவத்தை நானும் புதுப்பிச்சுக்கிட்ட மாதிரியும் இருக்கும். நான் வேகமா நடந்த சம்பவத்தைச் சொல்றேன்.” அவர், அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் அவர்களைப் பார்த்தார். அவர்கள் சம்மதம் என்கிற மாதிரி தலையை ஆட்டினார்கள்.

அவர் டம்ளரில் இருந்த பீரைக் குடித்து முடித்தார். தன் மேஜையில் இருந்த குப்பியில் இருந்து பீரை மீண்டும் டம்ளரில் ஊற்றினார். குப்பியை மீண்டும் அதே மேஜையில் திரும்பவும் வைத்தார். ஜோஸும் தாமோதரனும் தங்கள் டம்ளர்களில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தார்கள். மீண்டும் மதுவை ஊற்றி சோடாவைக் கலந்தார்கள். ஜோஸ் வறுத்த மாமிசம் இருந்த பாத்திரத்தை  அவருக்கு நேராக நீட்டினான். அவர் தலையை ஆட்டியவாறு சொன்னார்: “தேங்க்ஸ்... நான் மாமிசம் சாப்பிடுறதை நிறுத்தி ஆறு வருடங்களாச்சு...”

ஜோஸ் கேட்டான்: “நீங்க இப்போ என்ன சொல்லப்போறீங்க?” இந்தக் கேள்வியை அவரைப் பார்த்துக் கேட்ட அவன், கைகள் இரண்ûயும் மார்பின்மேல் கட்டியவாறு நாற்காலியில் பின்னோக் கிச் சாய்ந்தான். தாமோதரன் கண்ணாடியைக் கழற்றி கண்களைத் துடைத்து மீண்டும் கண்ணாடியை முகத்தில் அணிந்தான். அவன் சொன்னான்: “உண்மையாகச் சொல்லப் போனால், எங்களுக்கு இதெல்லாம் புரியக்கூடிய விஷயங்களே இல்ல... தெரியுதா...” அவர் புன்னகைத்தவாறு சொன்னார். “நான் ஆசிரியராகப் பணியாற்றிய ஆளுன்றதுனால, என்னால ஆளுகளோட முகங்களைப் பார்த்தே ஓரளவுக்குப் புரிஞ்சுக்க முடியும்!”

சிறிது பீர் குடித்துவிட்டு, அவர் தொடர்ந்தார்:

“நான் ஆறு வருடத்திற்கு முன்னாடி வரை, பதினைஞ்சு வருடங்கள் ஆஃப்ரிக்கா...ன்ற நாட்ல ஆசிரியரா வேலை பார்த்தேன்.


ஆறு வருடங்களுக்கு முன்னாடி நான் ஒரு குற்றம் செஞ்சிட்டேன். நடந்தது என்னன்னா...  நான் என் வகுப்பு மாணவர்களை அழைச் சுக்கிட்டு ஒரு பெரிய பாலைவனத்திற்கு கல்விச் சுற்றுலா போனேன். ஒரு பெரிய மணல் கொடுங்காத்துல, பாதையைத் தவறவிட்டுட்டோம்.  இயந்திரத்துல கோளாறு உண்டாகி, நாங்கள் போன வண்டி பாலைவனத்துல மாட்டிக்கிச்சு. கையில இருந்த உணவும், தண்ணியும் தீர்ந்திடுச்சு. வழிதேடிப் போன டிரைவரும் அந்த ஆளோட உதவியாளரும் திரும்பியே வரல. அவர்களோட செத்துப்போன உடல்களைப் பின்னொரு நாள் நாங்க பார்த்தோம். வந்த மாணவர்கள்ல கொஞ்சம் வயசு கூடின மாணவர்கள் தப்பிக்க வழி தேடிப் போனாங்க. அவங்களும் திரும்பி வரல. அவங்களோட எலுமபுக் கூடுகளை சில  மாதங்களுக்குப் பிறகு நாங்க பார்த்தோம். ஒவ்வொரு நாளும் நாங்க வண்டி நிழல்ல இருக்குறப்பவே, அங்கே இருந்த உஷ்ணத்தைத் தாங்க முடியாம மாணவர்கள் ஒவ்வொருத்தரா செத்துக்கிட்டு இருந்தாங்க. கடைசியில் உயிரோட இருந்தது நானும் எட்டு மாணவர்களும்தான். அவர்களும் நானும் கிட்டத்தட்ட மரணத்தின் நுழைவாயிலை நெருங்கிக்கிட்டு இருந்தோம். ஆனா, எங்களோட உடம்புலயோ மனசுலயோ இருந்த ஏதோ ஒண்ணு எங்களை என்னவோ பண்ணத் தூண்டிச்சு. நான் மாணவர்களைப் பார்த்துச் சொன்னேன்: “நம்மளைக் காப்பாத்துறதுக்கு யார் எப்போ  வருவாங்கன்னு யாருக்குத் தெரியும்? மத்தவங்களே தப்பிக்க முடியலைன்னும்போது, நாம மட்டும் எப்படி தப்பிக்க முடியும்? ஆனா, எவ்வளவு நாள் முடியுமோ, அவ்வளவு நான் நாம உயிரோட வாழ்ந்துதான் ஆகணும். இதற்கு ஒரே வழிதான் இருக்கு. நமக்குள்ளே இருக்குற ஒருத்தரோட ரத்தத்தை நாம குடிக்க வேண்டி இருக்கும். மாமிசத்தைச் சாப்பிட வேண்டியிருக்கும். செத்துப் போனவங்களோட உடல் ஏற்கெனவே விஷமாயிடுச்சு. இப்ப நமக்கு இருக்குற வழி ஒண்ணே ஒண்ணுதான். நம்மள்ல யார் முதல்ல சாகுறது மாதிரி தெரியுதோ, அவனோட உயிர் இருக்குறப்பவே, நல்ல ரத்தம் உடல்ல ஓடிக்கிட்டு இருக்குறப்பவே, நாம அவனை அடிச்சுக் கொன்னுடணும். அவனோட சூடான ரத்தத்தையும் இளம் மாமிசத்தையும் சாப்பிட்டுட்டு இன்னும் கொஞ்ச நாள் மத்தவங்க தாக்குப் பிடிக்கலாம். மீண்டும் மரணம் யாரைத் தழுவ வருதோ அவனை அடுத்து அடிச்சு சாப்பிட வேண்டியதுதான். இப்படி மரணத்தை உயிரோட  இருக்குறவங்களோட தன்மைக்கு வேண்டி பயன்படுத்த வேண்டியதுதான்.”

ஜோஸும் தாமோதரனும் அந்த மனிதர் சொன்ன விஷயங்களை மிகவும் ஆர்வம் மேலோங்க, கையை நாடியில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர், அவர்கள் இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார். அவர்களும் பதிலுக்குப் புன்னகைக்க முயன்றார்கள். ஆனால், அதைப் புன்னகை என்று சொல்வதைவிட உதடுகளின் இலேசான அசைவு என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். அவர்கள் டம்ளர்களில் இருந்த மதுவைக் குடித்து முடித்து, அந்த மனிதரை மீண்டும் பார்த்தார்கள். அவர் தொடர்ந்தார். “மரணம் தேடி வந்து கூப்பிட்ட முதல் மாணவன், மூடிய கண்களுடன் வண்டியோட ஒரு இருக்கையில அசைய முடியாமல் கிடந்தான். நான் மற்ற மாணவர்களைப் பார்த்துச் சொன்னேன்: “நம்மோட நண்பனை வழியனுப்பி வைக்கிறதுக்கான நேரம் வந்திடுச்சு. நீங்க எல்லாரும் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்க. நான் செய்யப் போறதைப் பார்க்கிறதோ பார்க்காம இருக்குறதோ உங்க இஷ்டம்.” நான் இப்படிச் சொன்னதும், சில மாணவர்கள் தங்களோட கண்களை மூடிக்கிட்டாங்க. சில பேர் அழுதாங்க. சிலர் முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கிட்டாங்க. எந்திரிச்சுப் போவதற்கான சக்தி ஒருத்தருக்குக்கூட இல்லை. நான் என்னோட ஸ்கவுட் பேக்கிலிருந்து வேட்டைக் கத்தியை எடுத்துக்கிட்டு மரணமடையப்போகிற மாணவனை நெருங்கினேன். அவன் நடக்கப்போறது என்னன்னு தெரிஞ்சுக்கிட்டே கொஞ்சம் கொஞ்சமா மயங்கிக்கிட்டு வர்ற கண்களைத் திறந்து என்னைப் பார்த்தான். ஒரு கண்ணோட ஒரத்துல கண்ணீர் அரும்பி வழிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நான் அவனோட கண்களை மெதுவாக மூடிவிட்டேன். என் கையில இருந்த கத்தியை உறையை விட்டு எடுத்தேன்.  கத்தியை மெல்ல இறக்கினேன். “என் தெய்வமே...” நான் சொன்னேன்: “என் தெய்வமே... இதோ உன்னோட மகன் எங்களுக்காக ரத்தமாகவும் மாமிசமாக வும் ஆகப் போறான். நீ இதைத் தெரிஞ்சிக்கணும்.”

நான் சாப்பிடத் தந்த ரத்தத்தையும் மாமிசத்தையும் வேண்டாம்னு சொல்ற சக்திகூட எந்த மாணவனுக்கும் இல்ல. அவங்களோட தாகமும் பசியும் அந்த அளவுக்கு எல்லையை மீறிப் போயிருந்துச்சு. பையனோட மாமிசத்தின் ருசி மற்ற மாமிசத்தைப் போலத்தான் இருந்துச்சு. ரத்தம் புளி ரசம்போல இருந்துச்சு. எங்களோட உடல் உறுப்புக்கள் மீண்டும் செயல்படத் தொடங் கிச்சு. எங்களுக்கு அப்பத்தான் மூத்திரம் வந்துச்சு. ஒவ்வொரு துளி மூத்திரத்தையும் பிடிச்சு அதை நாங்களே குடிச்சோம். இப்படியே மூணு நாட்கள் கடந்துச்சு. அப்போதான் எங்களைக் காப்பாற்ற வந்த வண்டி தூரத்துல தூசியைப் பறக்கவிட்டுக்கிட்டு வர்றது தெரிஞ்சது.

எங்களுக்கு ரத்தத்தையும் மாமிசத்தையும் தந்த மாணவனோட மீதி இருந்த உடல், மற்ற செத்துப்போன உடல்களுடன் நகரத்துக்கு வந்து சேர்ந்துச்சு. உயிர் பிழைச்ச சிறுவர்கள் நடந்ததையெல்லாம் சொன்னாங்க. அவ்வளவுதான்- என்னைக் கைது பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க. விசாரணை நடத்தினாங்க. நான் செய்த குற்றத்தை ஒத்துக்கிட்டேன். நீதிமன்றம் எனக்கு மரண தண்டனை விதிச்சது. எனக்கு ஆதரவு தர்றதுக்கோ, எனக்காக வேண்டிக்கவோ இந்த உலகத்துல யாருமே இல்ல. காரணம்- என்னோட செயலை என்னோட நெருங்கிய நண்பர்களாலும் என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்களாலும்கூட ஏத்துக்கவே முடியல. அவர்கள் நடந்த சம்பவங்களைக் கேட்டு உறைஞ்சுபோய் நின்னாங்க. நான் சிறையில இருந்தப்போ என்னோட ஏழு வயசு மகனோட ஒரு கடிதம் என்னைத் தேடி வந்துச்சு. அந்தக் கடிதத்தில்  “அப்பா...”ன்ற ஒரு வார்த்தையை மட்டும்தான் படிக்க முடிஞ்சிச்சு. அடுத்த வார்த்தையும் அவனோட பேரும் அழிஞ்சு போயிருந்துச்சு. அவன் எனக்காக சிந்திய கண்ணீர் துளிகள் அந்த எழுத்துகளை அழிச்சிருக்கனும்ன்றதைப் புரிஞ்சிக்கிட்ட நான் சிறையோட தரையில உட்கார்ந்து அந்தக் கடிதத்தையே வச்சு கண் எடுக்காம பார்த்துக்கிட்டு இருந்தேன்.

ஒருநாள், நான் எந்த சிறுவனைக் கொன்னேனோ, அவனோட அப்பா- அம்மாவும், சகோதரி, சகோதரர்களும் என்னைப் பார்க்க வந்தாங்க. அப்பாவும் அம்மாவும் கண்ணீரோட என் கண்களையே பார்த்துக்கிட்டு ரொம்ப நேரம் நின்னுக்கிட்டு இருந்தாங்க. அவங்களுக்குப் பின்னாடி நின்ன சிறுவர்கள்ல ஒருத்தன் என்னைப் பார்த்து ஒரு தடவை சிரிச்சான். மற்றொரு நாள் என்கூட உயிர் பிழைத்த சிறுவர்கள் என்னை வந்து பார்த்தார்கள். நான் அவங்களைப் பார்த்து புன்னகை செஞ்சாலும், என்னை அவங்க பார்த்ததாகவே காட்டிக்கல. அவங்களோட பார்வைகள் என்னைத் தாண்டி வேறெங்கோ இருந்தன.”


அவர் மீண்டும்  பீர் குடித்தார். ஜோஸ் சொன்னான். “நான் கொஞ்சம் டாய்லெட் வரை போயிட்டு வர்றேன்.” தாமோதரனும் நடுத்தர வயது மனிதரும் இப்போது தனியே அமர்ந்திருந்தார்கள். தாமோதரன் பார் கவுன்டர் அருகில் இருந்த கூட்டத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். ஜோஸ் திரும்பவும் வந்து சொன்னான்: “ஸாரி...”

அந்த மனிதர் தொடர்ந்தார். “கடைசில, ஒரு நாள் என்னோட தண்டனைக்கான நாள் வந்தது. கயிறு என் கழுத்தை இறுக்கி னப்போ, நான் இலேசாக அதிர்ந்தேன். காரணம், என்னோட ரெண்டு கண்களையும் அவங்க கட்டியிருந்ததால, நான் எதிர் பார்க்காத ஒரு சம்பவம்போல எனக்கு அது இருந்துச்சு. என் முகத்தை முழுவதையும் மூடி, கையையும் கால்களையும் கட்டி இருக்குறப்பவே எனக்கு பட்டுருச்சு- மரணமும் நானும் கருப்புதான்னு. அதாவது மரணமும் நானும் ஒண்ணா சங்கம மாயிட்டோம்னு. பிறகு எதற்கு தேவையில்லாம இந்தக் கயிறு? அந்தக் கயிறும், அதுல போடப்பட்டிருந்த முடிச்சும், எனக்கும் மரணத்துக்குமிடையே உண்டாகியிருந்த ஒரு ஒருங்கிணைப்புக் குள்ளே அனாவசியமா தலையை நீட்டின மாதிரி நான் உணர்ந்தேன். ஆனா, அது என்னோட கழுத்தை இறுக்கினப்போ அதுவும் அந்தக் கருப்போட பாகமாகவே மாறிடுச்சு. அதற்குப் பிறகு... தூக்குமரக் குழியில் விழப்போறதுதான். அதை நினைச்சு நான் விரைச்சுப் போனேன். அப்படி விழறதுல இருந்து தப்பிக்க கையையும் கால்களையும் வேகமா ஆட்டினா என்னன்ன நினைச்சேன். கழுத்தை வேகமாக இறுக்கும் கருப்பு... இதுதான் என்னோட இறுதி தண்டனை பற்றி எனக்கிருக்கும் நினைவு...”

ஒரு வெயிட்டர் வந்து அவர்களையும், மேஜைமேல் இருந்தவற்றையும் பார்த்துவிட்டுப்போனான். ஜோஸ் தன் கண்ணாடி டம்ளரில் இருந்த மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான். டம்ளருக்கு அடியில் என்னவோ ஒளிவீசிக் கொண்டிருப்பதுபோல உணர்ந்தான் ஜோஸ். மதுவிற்குள் ஒரு விரலை நுழைத்து ஒளிவீசிக்கொண்டிருப்பதை எடுத்தால் என்ன என்று அவன் நினைத்தான்.

அவர் சொன்னார்: “இந்தியாவைவிட வறுமையும், பாதுகாப்பற்ற தன்மையும், குற்றச் செயல்களும் நிறைஞ்ச நாடு அது. என் கழுத்தில் போட்டிருந்த கயிறு அறுந்து, நான் மயக்கமடைஞ்சு தூக்கு மரக்குழியில கிடக்குறேன். உயிரோட இருக்குற என் உடலைத் தூக்கிக்கிட்டு சிறை அதிகாரிங்க நெஞ்சு பதைபதைக்க இப்படியும் அப்படியுமா ஓடுறாங்க. அந்த நாட்டோட சட்டப்படி என்னை இன்னொரு தடவை தூக்குப் போடவோ தண்டனை கொடுக்கவோ முடியாது. இப்போகூட குளிர்காலம் வந்துட்டா, என் கழுத்துல தாங்க முடியாத அளவுக்கு வேதனை உண்டாகுது. அதற்காகத்தான் நான் கழுத்துல இந்த மஃப்ளரைச் சுத்தி வச்சிருக்கேன்.” அவர் தான் கழுத்தில் சுற்றியிருந்த மஃப்ளரை அவிழ்த்தார். ஜோஸும் தாமோதரனும் அவரின் கழுத்தையே உற்றுப் பார்த்தார்கள். அவர் மீண்டும் மஃப்ளரைச் சுற்றிவிட்டுத் தொடர்ந்தார்.

“நான் சிறையைவிட்டு வெளியே வந்தேன். எனக்கு எங்கே போறதுன்னே தெரியல. போறதுக்கு ஒரு இடமும் இல்ல. என்னோட பழைய நண்பர்களைத் தேடிப்போனேன். என் முகத்தைப் பார்த்த அடுத்த நிமிடமே, அவங்க தங்களோட கதவை அடைச்சிடுவாங்க. நான் மரணத்தில இருந்து தப்பிச்சு வந்ததைப் பார்த்து சந்தோஷப்படுறதுக்கு இந்த உலகத்துல  யாருமே இல்ல... அனாதைகள் தங்கி இருக்குற ஆதரவு இல்லங்கள்ல, அவங்ககூட நான் தங்கினேன். ஒரு நாள் என்கூட உயிர் தப்பிச்ச சிறுவர்கள்ல ஒருத்தனோட அப்பா என்னைப் பார்த்துட்டு, என் பக்கத்துல வந்தார்.. என் கையில் ஒரு கவரை அவர் தந்தார். அதுல, இந்தியா வுக்கு நான் போறதுக்கான டிக்கெட்டும், கொஞ்சம் பணமும் இருந்துச்சு. அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். “நாங்க எல்லாரும் சேர்ந்து பணம் போட்டு உங்களுக்காக இதை செஞ்சிருக்கோம். உங்களை வழியில வச்சு பார்க்கக்கூட நாங்க விரும்பல. தயவு செஞ்சி இந்த நாட்டைவிட்டு உடனே போங்க...”

நான் திரும்பவும் இந்தியாவுக்கு வந்தேன். எனனோட மனைவி என்னைப் பார்க்க விரும்பல. ஆனா, என் மகன் என்னைப் பார்த்து ஓடி வந்தான். என்னோட ரெண்டு கைகளையும் பிடிச்சுக்கிட்டு அவன் கேட்டான். “அப்பா நான் உங்களுக்குப் போட்ட கடிதம் கிடைச்சுதா?” நான் அவனைத் தூக்கி முத்தம் கொடுத்தவாறு சொன்னேன்: “ஆமா மகனே...” அவன் கேட்டான்: “அப்பா... நீங்க சாகுறதுக்கு முன்னாடியே அது உங்களுக்குக் கிடைச்சிருச்சா?”

“ஆமா மகனே.” நான் சொன்னேன்: “நான் சாகுறதுக்கு முன்னா டியே கிடைச்சிருச்சு. ஆனா நீ எழுதின எழுத்துக்கள் அழிஞ்சு போயிருந்துச்சு. நீ என்ன எபதியிருந்தே?” “அப்பா... நீங்க சாகக்கூடாது... அப்படின்னு நான் எழுதியிருந்தேன். அதை எழுதி முடிச்சப்போ எனக்கு அழுகை அழுகையா வந்துச்சு. அப்பா, இனி நீங்க சாவீங்களா என்ன?”

“இல்ல மகனே......” நான் சொன்னேன். ரெண்டு நாட்கள் கழிச்சு, என் மனைவி அவனையும் தன்னோட அழைச்சிட்டுப்போய், புகை வண்டிக்கு முன்னாடி பாய்ஞ்சு தற்கொலை செஞ்சிக்கிட்டா...”

அவர், அவர்களைப் பார்த்து உயிரே இல்லாமல் ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டார். ஜோஸ் டம்ளருக்குள் ஒளிர்ந்து கொண்டிருந்தது என்ன என்று சுண்டுவிரலை உள்ளே விட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான். தாமோதரன் தன் மீசையின் ஒரு ஓரத்தை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கடித்துக்கொண்டிருந்தான். அடுத்த நிமிடம் அவன் ஜோஸின் டம்ளரிலும், தன் டம்ளரிலும் மதுவை ஊற்றினான். அந்த மனிதரின் டம்ளர் காலியாக இருந்தது. அவரின் மேஜை மேல் இருந்த பீர் குப்பியும் காலியாகிவிட்டிருந்தது. தாமோதரன் அவரைப் பார்த்துக் கேட்டான்: “கொஞ்சம் ரம்?” “தேங்கஸ்...” அவர் சொன்னார். “வேண்டாம்.” டம்ளர்களில் சோடா வைக் கலந்து அவர்கள் சிறிது நேரம் மவுனமாக அமர்ந்திருந்தனர். கடைசியில் தாமோதரன் சொன்னான்: “பயங்கரம்...” ஜோஸ் தலையைக் குலுக்கியவாறு சொன்னான்: “பயங்கரம்... உண்மை யிலேயே பயங்கரமான சம்பவம்தான்...”

தாமோதரன் கையை நீட்டி அந்த நடுத்தர வயது மனிதரின் கையைத் தொட்டவாறு சொன்னான். “ஸாரி..” ஜேம்ஸ் அவரின் முகத்தை ஒருவித கூச்சத்துடன் பார்த்தவாறு சொன்னான். “வெரி ஸாரி...” அதற்குப் பிறகு என்ன பேசுவது என்று தெரியாமல் அவர்கள் மேஜையையும் தூரத்தையும் திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். அவரிடம் இன்னும் நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள். மனித மாமிசத்தைப் பற்றி... ரத்தத்தைப் பற்றி... மரணத்தைத் தழுவுவதற்காக கயிறில் தொங்கிய பிறகு... கண்களைத் திறந்த தருணத்தைப்பற்றி.. புகைவண்டிக்குக் கீழே இறந்த மகனைப் பற்றி... ஆனால், பதில்களைக் கேட்பதற்கான ஆர்வம் அவர்களைவிட்டுப் போய்விட்டது. அவருக்கு ஆறுதலாக என்ன சொல்வது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.

வெயிட்டர் பில்லைக் கொண்டு வந்தான். அந்த மனிதர் அவனிடம் பணத்தைத் தந்தார்.

“ஒரு ஸ்மால் குடிக்கலாமா?” ஜோஸ் கேட்டான். “ஒன் ஃபார் தி ரோட்...”

“தேங்க்ஸ்...” -அவர் சொன்னார். “வேண்டாம்.. இன்னைக்கு உள்ள என்னோட அளவு முடிஞ்சிடுச்சு...”

“நாங்க ஏதாவது உங்களுக்குச் செய்யணுமா?” தாமோதரன் கேட்டான்.

“ஒண்ணும் செய்ய வேண்டியது இல்ல... கேட்டதற்கு ரொம்பவும் நன்றி...” அவர் சொன்னார். “மீண்டும் எங்கேயாவது சந்திப்போம்.”

அவர்கள் அவரின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு சொன்னார்கள். “குட்லக்... எல்லாம் ஒழுங்கா நடக்கும். நாங்க கிளம்புறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரமாகும்.”

அவர் மஃப்ளரை கழுத்திலிருந்து அவிழ்த்து, மீண்டும் சுற்றியவாறு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

அவர்கள் மீண்டும் மது ஆர்டர் பண்ணிவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். டம்ளர்களில் ரம்மை ஊற்றியவாறு தாமோதரன் கேட்டான். “இனி இந்த ஆளு என்ன செய்வார்னு நீ நினைக்கிறே?”

ஜோஸ் சொன்னான். “தற்கொலை பண்ணிக்குவாரா?”

தாமோதரன் சொன்னான்: “இவ்வளவு நாள் கழிச்சா? அது இருக்கட்டும். ஒரு விஷயத்தை நீ கவனிச்சியா? இந்த ஆளு கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு மனிதன். அந்தச் சிறுவனைக் கொல்றப்போ, இவர் கடவுளை நினைச்சு பிரார்த்தனை பண்ணினதா சொன்னாரு. கேட்டியா?”

ஜோஸ் சொன்னான்: “ஆமா... அவர் சொன்னது ஞாபகத்துல இருக்கு...” சில நிமிடங்கள் அவர்கள் இருவரும் ஒன்றுமே பேச வில்லை. அப்போது ஜோஸ் சொன்னான்: “இதெல்லாம் கடவுளுக் குத் தெரிஞ்சுதான் நடக்குதாடா?” தாமோதரன் டம்ளரில் இருந்த மதுவைக் குடித்தவாறு சொன்னான்: “பிறகு?” ஜோஸ் சொன்னான்: “அப்படின்னா பரவாயில்ல...” இப்படிச் சொன்ன அவன், என்ன காரணத்தாலோ அழத் தொடங்கினான். தாமோதரன் அவன் அழுவதையே சிறிது நேரம் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பிறகு... அவன் தோளைத் தட்டி ஆறுதல் சொன்ன அவன், ஜோஸையும் அழைத்துக்கொண்டு பாரைவிட்டு வெளியேறினான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.