Logo

கம்யூனிஸ்ட் பாசறை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8287
Communist Pasarai

கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் பாசறை என்று இங்கு கூறுகின்ற இந்த வைக்கம் முஹம்மது பஷீரும் போலீஸ்காரர்களும் ஏ.எஸ்.பி.யும் டி.எஸ்.பி. யும் எல்லாரும் சேர்ந்து ரெய்டு செய்து, அங்கிருந்த பொருட்களையும் தஸ்தாவேஜி களையும் மற்ற சம்பந்தப்பட்ட ஆதாரங் களையும் கைப்பற்றிய கதையைத் தான் இங்கு நான் கூறப் போகிறேன்.

கதை என்று சொன்னால் வெறும் கதை அல்ல. இது ஒரு சரித்திரம். ஆனால் சம்பவங்கள் நடந்து நூற்றாண்டுகள் கடந்துவிட்ட மாதிரி. ஞாபக மறதி ஆங்காங்கே நடக்க வாய்ப்புண்டு. பிறகு... இடையில் மனரீதியாக எனக்கு குழப்பங்கள் உண்டாக வும் வழியுண்டு. எல்லாமே சுத்த பைத்தியக்காரத்தனம். கடந்த காலத்தில் நடைபெற்ற பல சம்பவங்களும்  இருளில் யாருக்கும் தெரியாமல் மறைந்து போயிருக்கின்றன. இருந்தாலும், ஞாபகத்தின் வெளிச்சம் இங்கு பல நேரங்களில் பல விஷயங்களிலும் விழாமல் இல்லை. இந்தக் கதையில் வரும் மிகவும் முக்கியமான கதாபாத்தி ரம் கம்யூனிஸ்ட் கட்சிதான். இந்த கம்யூனிஸ்ட் கட்சி அன்று ஒரு சிறு பையன். இதில் வரும் பிரதான வில்லன் சர்வஸ்ரீ மேன்மை தங்கிய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள். அவர் அப்போது திருவிதாங்கூர் மாநிலத்தையும் சேர்த்து ஆட்சி செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு மன்னரும் இருந்தார். இந்த மன்னருக்குக் கீழே ஆட்சியில் முக்கிய பங்கு வேண்டும் என்று மாநில காங்கிரஸ் என்ற அமைப்பு போராடிக் கொண்டிருந்தது.

இந்தக் காலத்திற்குச் சற்று முன்புதான் நான் பக்கத்து மாநிலமான கொச்சியை விட்டு வந்து எர்ணாகுளத்தில் குடியேறி வசிக்க ஆரம்பிக்கிறேன். பட்டினியும் எழுத்துமாக என் நாட்கள் நீங்கிக் கொண்டிருக்கின்றன. பிறகு... என் பெயரில் வாரண்டும் இருந்தது. திருவிதாங்கூரைத் தாண்டினால் கைது செய்து என்னை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். நான் ராஜ துரோகம் செய்யக்கூடிய விதத்தில் பல கட்டுரைகளையும் எழுதிய ஐந்தாறு பத்திரிகைகள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு விட்டிருந்தன. திருவிதாங்கூரில் இருந்த கூலிப் பட்டாளமும், குண்டர்களும், போலீஸ்காரர்களும் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யரின் மகத்தான தலைமையில் கொள்ளையான கொள்ளைகள் எல்லாம் நடத்திக் கொண்டிருந்தார்கள். போலீஸ்காரர்கள் லாக்-அப்பில் கைதியை அடியோ அடி  என்று அடித்துக் கொன்றார்கள். வெளியே கூட்டத்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள். இவ்வாறாக திருவிதாங்கூர் மன்னரின் ஆணையை அப்படியே பின்பற்றக்கூடிய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள் தன்னுடைய ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தார்.

“பரிதாபமான நிலையில் என் நாடு”, “பட்டத்தின் கெட்ட கனவு” என்ற என் இரண்டு கட்டுரைகளும் பிரசுரமான பத்திரிகையை அவர்கள் தேடிக் கண்டுபிடித்தார்கள். “தர்மராஜ்ஜியம்” என்ற பெயரில் முதல் கட்டுரையை ஒரு சிறிய புத்தகமாக நான் திருவிதாங்கூரில் விநியோகம் செய்தேன். அதையும் “கெட்ட கன”வையும் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யர் தடை செய்தார். (இரண்டுக்கும் சேர்த்து இரண்டரை ஆண்டு கடும் தண்டனை எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது.) அதற்குப் பிறகு நான் எதை எழுதினாலும் அதை அவர்கள் கட்டாயம் தடை செய்வார்கள் என்ற நிலை உண்டானது. அந்தக் காலத்தில் நான் எழுதிய படைப்புகளுக்குப் பணம் தர மாட்டார்கள். கதையோ கட்டுரையோ எழுத லாம். பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரம் செய்யும். காசு மட்டும் அதற்குக் கேட்கக் கூடாது. இலக்கிய தேவியை வணங்கி நிற்க வேண்டும். அர்ச்சனை செய்ய வேண்டும். இவற்றை நான் சரியாகச் செய்தேன். ஆனால், தளர்ந்துபோய், “அய்யோ... பசிக்குதே!” என்று என்னையும் அறியாமல் நான் இடையில் கத்தி விடுவேன்.

இப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஸ்டேட் காங்கிரஸ்ஸுக்கு எர்ணாகுளத்தில் ஒரு முகாம் இருந்தது. தலைவர்கள் எல்லாம் எங்கே தங்களைக் கைது பண்ணி விடுவார்களோ என்றெண்ணி அங்கேயே தங்கி இருந்தார்கள். இந்த நிலையில் வயது குறைந்த “யூத் லீக்” அணியினர் எங்கே தாங்கள் இருப்பது என்றே தெரியாமல் எர்ணாகுளத்தில் இங்குமங்குமாய் கண்டபடி அலைந்து கொண்டிருந்தார்கள். சிலர் என்னுடன் தங்கலாம் என்று இரவு நேரங்களில் என்னுடைய அறையைத் தேடி வருவார்கள். நான் தங்கியிருந்த அறை ஒரு சிறிய சமையலறைதான். அதற்கு மாத வாடகை கால் பிரிட்டிஷ் ரூபாய். (அப்போது பிரிட்டிஷ் ரூபாயுடன், திருவிதாங்கூர் ரூபாயும் இருந்தது). இதை ஒழுங்காக நான் தருவதே பெரிய பாடாக இருந்தது. ஆனால், நான் அன்று ஒரு முரட்டு மனிதனாக இருந்தேன். இரண்டு மிலிட்டரி காலணிகள், ஒரு பேண்ட், ஒரு ஜிப்பா- இவற்றை அணிந்து, பகத்சிங் மாடல் மீசையை வைத்துக் கொண்டு, இரும்புக் கம்பியை தொண்டை வழியே விழுங்கியது மாதிரி விறைப்பாக உடலை வைத்துக்கொண்டு கம்பீரமாக நடப்பேன். எதன் முன்னாலும் தலைகுனிந்து நிற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இந்தியா முழுவதும் சுற்றிவிட்டுத் தான் நான் எர்ணாகுளத்திற்கு வந்து தாவளமடித்திருந்தேன். அதற்கு முன்பு ஒன்றிரண்டு முறை சிறையில் இருந்திருக்கிறேன். இரண்டாவது முறை சிறையை விட்டு வெளியே வந்தபோது சர்தார் பகத்சிங் என் தலைவராகிவிட்டார். சிறையில் வைத்துத்தான் பி. கிருஷ்ண பிள்ளையின் அறிமுகம் எனக்குக் கிடைத்ததோ? சரியாக ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் எர்ணாகுளத்தில்தான் அவர் எனக்கு நன்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக ஆனோம். இருவரும் சேர்ந்து போய் காபி குடிப்போம். ஒரே அறையில் உறங்கியிருக்கிறோம். ஒன்றாக அமர்ந்து பலவித விஷயங்களைப் பற்றியும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டு இருந்திருக்கிறோம்.

கிருஷ்ண பிள்ளை யாரையும் ஒரு பொருட்டாக நினைக்கக் கூடிய மனிதர் இல்லை. அவரிடம் நல்ல அறிவும் திறமையும் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் நான் பெரும்பாலும் அரசியலை விட்டு விலகி நின்றிருந்தேன். முழுக்க முழுக்க எழுத்தாளன் என்ற அங்கியை மட்டும் எனக்கு நான் அணிவித்துக் கொண்டிருந்தேன். எழுத்தாளன் என்றால் கதைகள் எழுதக்கூடிய ஆளாக நான் இருந்தேன். எனக்கு எத்தனையோ வகைப்பட்ட ஏராளமான அனுபவங்கள் இருந்தன. அந்த அனுபவங்களை வைத்து கதைகள் எழுதாமல் வேறு என்னதான் எழுதுவது? அதற்காக, கதைகளை மட்டுமே நான் எழுதிக் கொண்டிருக்கவில்லை. சின்னச்சின்ன கட்டுரைகள் எல்லாம்கூட எழுதுவேன். அந்தக் கட்டுரைகளில் தீப்பொறி பறப்பதாக பொதுவாக படிக்கும் எல்லாருமே கூறுவார்கள். அந்த வகையான எழுத்தை என்னிடமிருந்து விரட்டு வதற்குப் படாதபாடு பட்டுத்தான் இந்த வகையான எழுத்திற்கு நான் வந்தேன்.


அன்று அந்தச் சிறிய கட்டுரைகளை நானே சொந்தத்தில் எழுதுவேன். யூத் லீக்கிற்காகவும், சில நேரங்களில் ஸ்டேட் காங்கிரஸ்ஸுக்காகவும்கூட எழுதுவேன். காங்கிரஸ் சோஷியலிஸ்ட் பார்ட்டி கம்யூனிஸ்ட் பார்ட்டியாக மாறிக் கொண்டிருந்த காலமது என்று நினைக்கிறேன். சரியாக அது என் ஞாபகத்தில் இல்லை. நான் சொன்னேன் அல்லவா, வருடங்கள் அதிகமாகிவிட்டன. அந்தச் சிறு கட்டுரைகளை நான் எழுதிக்கொண்டிருந்த நாட்களில் பசியும் பட்டினியுமாக என்னுடைய வாழ்க்கை நீங்கிக் கொண்டிருந்தாலும், எனக்கொரு பட்லர் இருந்தான். அதாவது- வேலைக்காரன். அவன் எர்ணாகுளத்திற்கு அருகில் இருந்த ஒரு தீவைச் சேர்ந்தவன். படுத்துக் கிடக்கும்போது எனக்குக் கிடைத்தவன் அவன். அப்படியென்றால், ஒரு காம்பவுண்டுக்குள் இருந்த இரண்டு மூன்று கட்டடங்களில், நான் ஒரு கட்டடத்தில் தங்கிக் கொண்டிருந்தேன். எல்லா கட்டடத்திலும், ஆட்கள் அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு கட்டடத்தின் வராந்தாவில் இவன்  தூங்கிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் அவன் தூங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவனைத் தட்டி எழுப்பி, என்னுடன் வந்து இருக்கச் சொன்னேன். அவனுக்கு ஒரு புதிய பெயரையும் நான் வைத்தேன்.

“சாமி...”

சிறு கட்டுரைகள் வாங்க என்னிடம் வருபவர்கள் மதிய நேரம் வந்ததும், “நாம சாப்பிட வேண்டாமா?” என்று கேட்பார்கள். அப்போது நான் ஆட்களை எண்ணி விட்டு, பையனை அழைத்துச் சொல்வேன். “டேய், சாமி... நீ இந்த சார் கிட்ட ஒண்ணே கால் அணா வாங்கிட்டுப்போய், ஹோட்டல்ல எனக்கு ஒரு சாப்பாடு வேணும்னு சொல்லு. அப்படியே அஞ்சு இலை வேணும்னு சொல்லி வாங்கிட்டு வாடா!”

சிறு கட்டுரைகள் வாங்க வந்தவர்கள் ஒன்றே கால் அணா தருவார்கள். பையன் ஒரு கூடையுடன் ஹோட்டலுக்குள் நுழைந்து “பஷீர் சார் சோறு வாங்கிட்டு வரச் சொன்னார். அஞ்சு இலை வேணும்னு சொன்னார்” என்பான்.

சோறு தருபவன் என்னுடைய ரசிகன்! ஐந்து ஆட்கள் சாப்பிடக்கூடிய அளவுக்கு சோறு கொடுத்து அனுப்புவான்.

இந்த காலகட்டத்தில்தான் கெ.ஸி. ஜார்ஜ் (இவர் எம்.ஏ., எல்.எல்.பி. படித்தவர். கம்யூனிஸ்ட் மந்திரி சபையில் அமைச்சராக இருந்தவர்) என்னுடைய கார்டியனாக வந்து சேர்கிறார். அவர் நான் இருக்கும் கட்டடத்திற்குப் பக்கத்துக் கட்டடத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டிருந்தார். எல்லா விஷயங் களும் சுத்தமாகவும், தெளிவாகவும், முழுமையாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய மனிதர் அவர். தன்னுடைய அறையை அவரே பெருக்கி சுத்தப்படுத்துவார். தான் அணியும் சட்டையையும் வேஷ்டியையும் அவரே துவைப்பார். கொஞ்சம் உடலில் ஊனமிருந்தாலும், ஆள் நல்லவரே. அந்த நல்ல மனிதரின் அறையில் இருந்து பி. கிருஷ்ணபிள்ளை, கெ. தாமோதரன், பி.டி.  புன்னூஸ், எம்.என். கோவிந்தன் நாயர், என். ஸ்ரீகண்டன் நாயர், பி. கங்காதரன், ஆர். சுகதன், உண்ணிராஜா, ஈ.எம். சங்கரன் நம்பூதிரிப் பாடு, குளத்துங்கல் போத்தன், சர்தார் சந்த்ரோத், வர்கீஸ் வைத்யன், டி.வி. தாமஸ் ஆகியோர் வெளியே வந்ததைப் பார்த்ததாக சி.ஐ.டி. ரிப்போர்ட் இருந்தது. எது எப்படியோ... நான் சொன்ன இந்த முக்கிய நபர்கள் எல்லாரையும் எனக்கு நன்றாகத் தெரியும். இவர்களில் சிலருடன் நான் சேர்ந்து தங்கியிருக்கிறேன். ஒன்றாக சிறையில் சிலருடன் இருந்த அனுபவமும் உண்டு. சாயங்காலம் ஆகிவிட்டால் நான் அறையை விட்டு வெளியே போகக்கூடாது என்று தீர்மான மான குரலில் கூறியிருந்தார் ஜார்ஜ். மாலை நேரம் வந்துவிட்டால், தட்டுத் தடுமாறி என்னுடைய அறைக்கு அவர் வருவார்.

“நீ எங்கே போயிருந்தே?” ஜார்ஜ் கேட்பார். குரலில் ஒரு அதிகார தோரணை தொனிக்கும்.

“இங்கேதான் இருந்தேன். ஜார்ஜ்.”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்தப்போ, உன்னைக் காணலியே!”

ஜார்ஜ் என் இதயத் துடிப்பைப் பரிசோதிப்பார். நான் வேலியைத் தாண்டி வேறு எங்காவது போனேனா இல்லையா என்று.

அதற்குப் பிறகு நாங்கள் இருவரும் சேர்ந்து உணவு உண்ணப் போவோம். இல்லாவிட்டால் சினிமா பார்க்கப் போவோம். சொல்லப் போனால் நாங்கள் இருவரும் படு சுதந்திரமான மனிதர்களாக இருந்தோம். அந்தக் காலத்தில் போக்கு ஸாஹிப் என்ற பெயரைக் கொண்ட ஒரு தலைச்சேரிக்காரன், படகுத்துறைப் பக்கத்தில் ஒரு உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தான். ஒரு சாப்பாட்டின் விலை ஒன்றே கால் அணா. தேநீருக்கும் பலகாரத்திற்கும் அரையணா விலை.

அன்று ஜார்ஜ், டபுள் ரேஷன் அனுமதித்திருந்த ஒரே மனிதர் ஸ்ரீமான் என். ஸ்ரீகண்டன் நாயர். பொதுவாக எல்லாருக்கும் காலையில் இரண்டு காசுக்குப் புட்டு, ஒரு காசுக்கு கடலை, காலணாவுக்கு ஒரு சிங்கிள் தேநீர்- இவ்வளவு இருந்தாலே போதும். ஆனால் யாருக்கும் தெரியாமல் ஸ்ரீகண்டன் நாயருக்கு மட்டும் ஜார்ஜ் ஒரு அணா அனுமதிப்பார். ஓஹோ... ஒரு விஷயத்தைச் சொல்ல மறந்துவிட்டேன். நம்முடைய சர் சி.பி. ராமஸ்வாமி அய்யர் அவர்கள் அப்போது ஒரு பெரிய அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். அறிக்கை வெளிவந்தது- திருவனந்தபுரம் பக்தி விலாசத்தில் இருந்து. அறிக்கை என்னவென்றால்- எர்ணாகுளத்தில் எங்கோ ஒரு கம்யூனிஸ்ட் பாசறை இருக்கிறதாம்! சுருக்கமாகச் சொல்லப் போனால் அவரின் பார்வையில் ஸ்டேட் காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் பயங்கரமான கம்யூனிஸ்ட்டுகள்!

சர். சி.பி. ராமஸ்வாமி அய்யரின் இந்த அறிக்கை டெல்லியிருந்த வெள்ளைக்காரன், இங்க்லாண்ட் மன்னரின் பிரதிநிதியான வைஸ்ராய் வரை போய்ச் சேர்ந்தது. வைஸ்ராய்க்கும் மிகவும் வேண்டப்பட்டவரே சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யர்! இப்படிப்பட்ட ஒரு முக்கியமான மனிதர் முன் கொச்சியைப் போன்ற ஒரு சிறிய மாநிலத்தால் என்ன செய்துவிட முடியும்?

சம்பவம் என்னவென்றால் ஸ்டேட் காங்கிரஸைச் சேர்ந்த தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் கொச்சி மாநிலத்தில்தான் வசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் படு சுதந்திரமாக கொச்சி சமஸ்தானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். கொச்சி ராஜா இந்த அறிக்கையைப் பார்த்து ஒரு மாதிரி ஆகட்டும் என்ற எண்ணம்தான் அவர் மனதில். தேவைப்பட்டால் வெள்ளைப் பட்டாளத்தையே இங்கு கொண்டு வந்தால் போயிற்று என்ற எண்ணம் சர்.சி.பி. ராமஸ்வாமி அய்யருக்கு. (இங்க்லாண்ட் மன்னரின் வெள்ளைக்காரப் பட்டாளம்தான் இந்தியாவில் இருந்தது. இங்க்லாண்ட் மன்னர் இந்தியாவின் சக்கரவர்த்தி). அதனால் எர்ணாகுளம் போலீஸ் மிகவும் உஷாராகிவிட்டது. எங்கேடா இருக்கிறது இந்த கம்யூனிஸ்ட் பாசறை?

சில சி.ஐ.டிக்கள் ஸ்டேட் காங்கிரஸ் முகாமைப் போய்ப் பார்த்தார்கள். மகாத்மா காந்திக்கு ஜே! அங்கே அகிம்சையும் கதரும்தான் தெரிந்தன. அப்போது நம்முடைய சி.பி. ராமஸ்வாமி அய்யர் சொன்ன கம்யூனிஸ்ட் பாசறை எங்கே?


சில சி.ஐ.டி.க்கள் பி. கிருஷ்ண பிள்ளையின் பின்னால் போய்ப் பார்த்தார்கள். பெரிதாக ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு திருவிதாங்கூர்காரன் பின்னாலும் நடந்து போய் பார்த்தார்கள். என் பின்னாலும் சி.ஐ.டி.க்கள் நடந்து வந்தார்கள் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். சி.ஐ.டி.க்களில் இரண்டு வகைப்பட்டவர்கள் இருக்கிறார்கள். திருவிதாங்கூர், கொச்சி. சர். சி.பி. ராமஸ்வாமியின் சி.ஐ.டி.க்கள் பல வேடங்களிலும் நடந்து திரிவார்கள். ஒருநாள் நாங்கள் சினிமா பார்க்கப் போனோம். சாதாரணமாக நாங்கள் தரை டிக்கெட்தான் வாங்குவோம். கட்டணம் ஒரு அணா. ஜார்ஜ் இல்லாமல் பத்து, பன்னிரண்டு ஆட்கள் இருந்தார்கள். கெ. தாமோதரனும் அந்தக் கூட்டத்தில் இருந்தார் என்று ஞாபகம். அந்தக் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவருக்கு நன்கு தெரிந்த ஒரு தொழிலாளி டிக்கெட் வாங்குவதற்காக ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு போனான்.  அவனை இதுவரை நாங்கள் அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை. அந்த ஆள் ஒருவேளை சர்.சி.பி. ராமஸ்வாமியின் சி.ஐ.டி.யாக இருக்கலாம் என்பது எங்களின் ஊகம். அரசியல் தொண்டன் என்று வந்து எங்களுடன் உண்டு, உறங்கிக் கொண்டிருந்த ஒரு மனிதனைப் பற்றி எங்களுக்குச் சந்தேகம் உண்டானது. நாங்கள் ஒருநாள் காலாற நடந்து வரலாம் என்று புறப்பட்டோம். எங்களுடன் ஜார்ஜ் இருந்தார். டி.வி. தாமஸ் (கம்யூனிஸ்ட் மந்திரி சபையில் இவர் அமைச்சராக இருந்தவர்)  இருந்தார். வேறு சிலரும் இருந்தார்கள். நம்முடைய டி.வி. முன்பு கால்பந்து விளையாட்டு வீரராகவும், குஸ்திக்காரராகவும் இருந்தவர். எனக்கு அவர் குஸ்தி கற்றுத் தந்திருக்கிறார். அதனால் நான் “ஆசானே” என்றுதான் அவரை அழைப்பேன். நாங்கள் சிறிது தூரம் நடந்து சென்றோம். நடக்கும்போதே பல விஷயங்களைக் குறித்தும் பேசிக்கொண்டே இருந்தோம். சந்தேகம் தோன்றிய அரசியல் தொண்டனைப் பார்த்து டி.வி. என்னவோ கேட்டார். இல்லாவிட் டால் ஜார்ஜ் கேட்டாரா? எனக்கு யார் கேட்டது என்று சரியாக நினைவில் இல்லை. எது எப்படியோ... அந்த ஆள் சொன்ன பதில் எங்களுக்கு அவ்வளவு திருப்தி தரக்கூடியதாக இல்லை. அவன் பதிலில் முன்னுக்குப் பின் முரணாக பல விஷயங்கள் இருந்தன. அவ்வளவுதான். டி.வி. தாமஸ் வேகமாகப் பாய்ந்து அந்த மனிதனின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை கொடுத்தார். அடுத்த நிமிடம் அவன் சாக்கடையில் விழுந்துகிடந்தான். “இதென்ன தாமச்சா” என்று கேட்டவாறு அந்த ஆள் எழுந்து வந்தபோது, டி.வி. சொன்னார். “டி.வி. தாமஸ் உன்னை உதைச்சார்னு உன்னோட சாமிக்கிட்ட போய் சொல்லுடா... ஓடு பக்தி விலாசத்துக்கு...”

அவன் ஓடினான்.

இப்படி பல சம்பவங்களும் ஆச்சரியப்படும் விதத்திலும், சிறிது கூட எதிர்பாராத வகையிலும் நடைபெற்று நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. எல்லா நாட்களிலும் ஜார்ஜின் அறையில் நிறைய ஆட்கள் இருந்துகொண்டு தாழ்ந்த குரலில் பலவிதப்பட்ட விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலர் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். யாருக்கும் தெரியாமல் திருவிதாங் கூருக்கு அண்டர் க்ரவுண்டில் போய் விட்டு வந்திருக்கிறார்கள். இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் போவார்கள். அவர்கள் எப்போது போனார்கள் என்று எனக்குத் தெரியாது. இப்படி நாட்கள் நீங்கிக் கொண்டிருக்கும்போது வருகிறது லேசாக மழை பெய்து கொண்டிருந்த ஒரு மாலை நேரம். சரியாகச் சொன்னால் இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் இருக்கும். நான் என்னுடைய அறையில் சாய்வு நாற்காலியில் சாய்திருக்கிறேன். அப்போது ஒரு ஆள் முற்றத்தில் வந்து நிற்கிறார்.

“ஜார்ஜ் சாரை கைது பண்ணிட்டாங்க” என்று அருகில்  வந்து மெதுவான குரலில் என் காதில் அந்த ஆள் சொன்னார். சம்பவம் நடந்து அதிக நேரம் ஒன்றும் ஆகவில்லை. அந்த மனிதர் போன பிறகு, நான் ஒரு அரிக்கன் விளக்கை எடுத்துக்கொண்டு அறையைப் பூட்டி விட்டு வெளியே இறங்கினேன். எனக்கு எல்லாமே தமாஷா கத் தோன்றியது. எனக்கு அன்று நான்கு ரூபாய் கிடைத்திருந்தது. ஜார்ஜை அழைத்து தேநீர் வாங்கிக்கொடுக்க வேண்டும், ஏதாவது சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றெல்லாம் நான் திட்டம் போட்டு வைத்திருந்தேன். சரி... இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். நான் ஜார்ஜின் அறை இருக்கும் பக்கம் போனேன். அங்கே யாருமே இல்லை. ஒரே மயான அமைதி அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இப்போது நான் என்ன செய்வது? விவரம் தெரிய வந்தால் எர்ணாகுளம் போலீஸ் ஜார்ஜின் அறையைச் சோதனை போட நிச்சயம் வருவார்கள். எதற்கு? எனக்கே தெரியாது. கட்டாயம் சோதனை பண்ணுவார்கள் என்பது மட்டும் என் மனதில் நன்றாகப்பட்டது. கம்யூனிஸ்ட் பாசறை என்பது ஜார்ஜின் அறையா? அதுவும் எனக்குத் தெரியாது. எது எப்படியோ- அந்த அறையில் ஏதாவது இருக்கும் அல்லவா? ஜார்ஜ் எல்லாவற்றையும் சரி பண்ணி வைத்துவிட்டுத்தான் போனாரா? அதுவும் எனக்குத் தெரியாது... அப்படியே ஏதாவது இருந்தாலும், அது போலீஸ் கையில் சிக்கினால் நன்றாகவா இருக்கும்?

ஆல் ரைட். நான் என்னுடைய நண்பன் ஒருவனின் அறைக்கு அருகில் சென்றேன். ஆனால், அறையில் அவன் இல்லை. அறை பூட்டிக் கிடந்தது. அந்த அறையில் ஒரு பழைய க்ராமஃபோன் இருந்தது. அதைக் கழற்றி ரிப்பேர் பண்ணுவதற்கு பயன்படும் ஒரு பெரிய ஸ்க்ரூ ட்ரைவர் அங்கு இருந்தது. நான் அதை ஜன்னல் வழியாக எட்டி எடுத்தேன். போலீஸ் எப்போது வரும்? மனதில் ஒரே பரபரப்பு. நான் பையனை அழைத்தேன்.

“டேய் சாமி!”

“என்ன சார்?” அவன் ஓடி வந்தான். நான் சொன்னேன்: “நீ போய் கேட்டுக்குப் பக்கத்துல நில்லு. போலீஸ்காரங்க இங்க வந்தாங் கன்னா, நீ உன்னோட நெஞ்சில் கையை வச்சு சயரோகம் வந்தது மாதிரி தொடர்ந்து இருமணும். நம்ம ஜார்ஜ் சாரோட நண்பர்கள் யாரையும் பார்த்தேன்னு வச்சுக்கோ. உடனே அவங்களை என்கிட்ட அனுப்பி வைக்கணும். சரி போ...”

அவன் சென்று கேட்டுக்குப் பக்கத்தில் இருட்டில் நின்றிருந்தான்.

அவனின் இருமல் சத்தத்தை ஒவ்வொரு நிமிடமும் நான் எதிர்பார்த்தேன். நான் போய் ஜார்ஜின் அறையில் தாழ்ப்பாளைப் பார்த்தேன். அதில் இருந்த மூன்று ஸ்க்ரூக்களையும் கழற்றி உள்ளே போனேன். ஜார்ஜின் பெட்டியை எடுத்தேன். என்னென்னவோ புத்தகங்களும் நோட்டுப் புத்தகங்களும் அங்கு இருந்தன. எல்லாவற்றையும் ஜார்ஜின் ஒரு வேஷ்டியில் போட்டுக் கட்டினேன். வேஸ்ட் பேப்பர் போடும் கூடையை எடுத்துப் பார்த்தேன்.


சில நேரங்களில் அதில்கூட ஏதாவது கிடந்தாலும் கிடக்கும். எல்லா வற்றையும் கட்டி மேற்குப் பக்கத்தில் இருந்த படியில் வைத்தேன். பிறகு... வேறு என்ன இருக்கிறது என்று பார்த்தேன். ஜார்ஜின் ஒரு பழைய கிழிந்து போயிருக்கும் சட்டை, ஒரு வேஷ்டி, “நியூ ஏஜ்” பேப்பரின் ஒரு பிரதி (அனேகமாக ஞாபக மறதி காரணமாக இதில் தவறு இருக்கலாம். அப்போது நியூ ஏஜ் இல்லை. “நேஷனல் ஃப்ரண்ட்” என்பதுதான் சரியாக இருக்கும். இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் 40-ஆம் ஆண்டு 1966-ல் வந்தது. அதையொட்டி மலர் வெளியிடப்பட்டது. அதற்கு ஆசிரியராக இருந்தவர் ஸி. அச்சுதமேனன். அவர் கேரளத்தில் முதல் அமைச்சராக இருந்தார். அப்போது ஒரு மிகப்பெரிய பரிவாரத்துடன் என்னுடைய வீட்டுக்கு அவர் வந்திருக்கிறார்). இவைதாம் அந்த அறையில் இருந்த பொருட்கள். அறையைப் பூட்டினேன். முன்பு இருந்த மாதிரியே அறையைப் பூட்டுவதற்கு ரொம்பவும் கஷ்டப்பட வேண்டி வந்தது. எப்படியோ அதைப் பூட்டி விட்டேன். அடுத்த சில விநாடிகளில் இடையில் இருந்த சுவர்மேல் ஏறி குதித்து எல்லா பொருட்களையும் என்னுடைய அறைக்குக் கொண்டு வந்து சேர்த்தேன். என்னுடைய அறையில் ஒரு பெரிய பெட்டி இருந்தது. அது முழுக்க புத்தகங்கள் இருந்தன. அவற்றை வெளியே எடுத்துப் போட்டு, ஜார்ஜின் பொருட்களை அதில் போட்டு, மூடி ஆணியடித்து சரிப்படுத்தி னேன். எல்லாம் ஒழுங்காக திட்டமிட்டபடி நடந்தது. நான் வெளியில் இறங்கி அங்கே நின்றிருந்த பையனிடம் சொன்னேன்: “போதும்டா... எனக்கு ஏதோ தோணுச்சு. உன்னை நிக்கச் சொன்னேன். அவ்வளவுதான்!”

அவன் வந்து அறைக்கு வெளியே இருந்த திண்ணையில் உட்கார்ந்தான். நான் சாய்வு நாற்காலியில் அமர்ந்து பீடி புகைக்க ஆரம்பித்தேன். திடீரென்று என்ன தோன்றியதோ- எழுந்து, அந்தப் பெட்டியை எடுத்து அவன் தலையில் வைத்து நடந்து போகும்படி சொன்னேன். அடுத்த நிமிடம் வாசல் கதவைப் பூட்டினேன். அவனுடன் நானும் சேர்ந்து நடந்தேன். ஸ்க்ரூ ட்ரைவரை போவதற்கு முன்பு எடுத்த இடத்திலேயே வைத்தேன். ஒற்றையடிப் பாதை வழியே நடந்து நாங்கள் ஜார்ஜின் ஒரு நண்பனின் வீட்டை அடைந்தோம்.

“இதுல என்னோட சில புத்தகங்கள் இருக்கு. இது ஏற்கெனவே தடை செய்யப்பட்டது. போலீஸ்...” என்று கூறிய நான் பையனிடம் இரண்டு ரூபாய் கொடுத்து விட்டு சொன்னேன்: “டேய் சாமி... நீ உன் வீட்டுக்குப் போ. நாலு நாட்கள் கழிச்சு நீ வந்தா போதும்!”

பையன் அந்த இடத்தை விட்டு நீங்கியதும், ஜார்ஜின் நண்பனிடம் எல்லா விவரங்களையும் விளக்கிச் சொன்னேன். பெட்டியை நாங்கள் மேலே இருந்த பரணில் வைத்தோம்.

நான் சாப்பிட்டு முடித்து அறையில் வந்து படுத்துறங்கினேன். எல்லாமே நல்ல முறையில் நடந்து முடிந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், போலீஸ் வராமல் நல்ல முறையில் நடந்து முடிந்ததாகச் சொல்ல முடியுமா?

மறுநாள் பகல் பத்து மணி இருக்கும். டி.எஸ்.பி., ஏ.எஸ்.பி. எல்லாரும் போலீஸ்காரர்கள் சகிதமாக வந்து ஜார்ஜின் அறையை வளைத்தார்கள். வீட்டுச் சொந்தக்காரரின் உதவியுடன் அறையைத் திறந்து அங்கிருந்த பொருட்களையும் ரகசிய தடயங்களையும் சீல் வைத்து எடுத்துக்கொண்டு போனார்கள். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் சென்றபின், என்னுடைய சில நண்பர்களின் பத்திரிகைகளில் இப்படியொரு செய்தி பிரசுரமாகி இருந்தது. வெண்டைக்காய் செய்திதான்!

“எர்ணாகுளத்தில் இருந்த கம்யூனிஸ்ட் பாசறையை போலீஸ் சுற்றி வளைத்து, பல ரகசிய ஆவணங்களையும் கைப்பற்றினார்கள். இங்குதான் திரு. கெ.ஸி. ஜார்ஜ் வசித்தார்.”

இந்தச் செய்தியைப் படித்து சர்.சி.பி. ராமஸ்வாமி, திருவனந்தபுரம் பக்தி விலாசத்தில் இருந்தவாறு சிரித்துக்கொண்டி ருப்பார்: “ஹ...ஹ... ஹ...ஹ...ஹ...”

பின்குறிப்பு: சி.பி.ராமஸ்வாமி அய்யர் சமீபத்தில் மரணத்தைத் தழுவினார். அவரின் ஆத்மாவிற்கு கடவுள் நிரந்தர சாந்தியைத் தரட்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.