Logo

இருப்பவர்கள், இறந்தவர்கள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4582
Iruppavargal, Irandhavargal

இருப்பவர்கள், இறந்தவர்கள்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

சிப்பாய் கிட்டு கூறித்தான் சந்திரசேரன் இறந்த தகவலே எனக்கு தெரிய வந்தது.  என்ன உடல் நலக்கேடு என்ற விஷயம் கிட்டுவிற்குத் தெரியவில்லை. இனி தெரிந்து கொண்டு பிரயோஜனமில்லையே! இறந்த சந்திரசேகரன் திரும்பி வரப் போவதில்லை. எனக்கு வருத்தம் உண்டானது. நேற்றைக்கு முந்தைய நாள் சாயங்காலம் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து குடித்து விட்டு, கடற்கரைக்குச் சென்று வள்ளிக்காட்டிலிருக்கும் கவுசல்யாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். காற்றிற்கு ஈரம் உண்டாகி, கடற்கரை யாருமில்லாமற் போனதும், எழுந்தவாறு சந்திரசேகரன் சொன்னான்:

'வள்ளிக்காட்டிற்கு கொஞ்சம் போய் விட்டு வருவோம். எழுந்திருடா.'

நாங்கள் இரண்டு மைல்கள் நடந்து கவுசல்யாவின் வீட்டை அடைந்தோம். எனக்கு ஒரு உற்சாகமும் உண்டாகவில்லை. அதனால் வாசல் திண்ணையில் போடப்பட்டிருந்த பெஞ்சில் தொண்டையில் திகட்டிக் கொண்டிருந்த கள்ளுடன் நான் அமர்ந்திருந்தேன். சந்திரசேகரன் உள்ளே சென்றான்.

நள்ளிரவு வேளையில் நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தே திரும்பி வந்தோம்.

அலுவலகத்தில் அமர்ந்திருக்கவோ, வேலை செய்யவோ என்னால் முடியவில்லை. உயர் அதிகாரியான அப்புக்குட்டி மேனனிடம் அனுமதி வாங்கி விட்டு, நான் வெளியேறினேன். வழி முழுவதும் நான் சந்திரசேகரனைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேன். அவன் அதிர்ஷ்டமில்லாதவன் என்றும், இல்லை... அதிர்ஷ்டசாலி என்றும் நான் மாறி... மாறி தீர்மானித்தேன். இடையில் அவ்வப்போது அவனைப் பற்றி எதுவுமே சிந்திக்காமல் இருப்பதற்கு நான் முயற்சி செய்து பார்த்தேன். அவனைப் பற்றி சிந்தித்துப் பார்க்காமல் என்னால் எப்படி இருக்க முடியும்? இறந்தது சந்திரசேகரன். அவனைப் பார்ப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு நான் சென்று கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் அவனைப் பற்றி அல்லாமல் வேறு எதைப் பற்றியும் சிந்தித்துப் பார்ப்பதற்கு என்னால் முடியாதே!

சந்திரசேகரனின் வீட்டை நெருங்கியபோது, மாரார் எதிரில் வந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அவன் சந்திரசேகரனின் வீட்டிலிருந்துதான் வந்து கொண்டிருக்கிறான் என்பதை ஒரே பார்வையில் நான் புரிந்து கொண்டேன். மாராரின் கண்கள் சிவந்து போய் காணப்பட்டன. அது மட்டுமல்ல- தோளில் இட்டிருந்த துவாலையால் அவன் கண்களைத் துடைப்பதையும் தூரத்திலிருந்தே நான் பார்த்தேன். மாரார் அருகில் வந்தபோது, சந்திரசேகரனுக்கு என்ன உடல் நலக்கேடு என்பதைக் கேட்கலாமா வேண்டாமா என்று நான் தயங்கினேன். சந்திரசேகரனைப் பற்றி நான் ஏதாவது கூறினால், மாராரை அது மேலும் கவலைப்படச் செய்யும். அதனால் கேட்க வேண்டாம் என்று நான் நினைத்தேன்.

'தலை விதி அழைச்சால், போகாமல் இருக்க முடியுமா?'

சந்திரசேகரனைப் பற்றி நான் எதுவும் கேட்கவில்லை. மாரார் அவனாகவே என்னைப் பார்த்து கூறினான்.

'உருக்கைப் போல உறுதியாக இருந்தான். உடல் நலக் கேடு வந்து நான்கு நாட்கள் படுத்துக் கிடந்து, இறந்திருந்தால் பரவாயில்லை. அந்த வயதான நாணு நாயர் இதை எப்படி தாங்கிக் கொள்வார்? கடவுளே...'

மாரார் நடந்து செல்லும்போது, மீண்டும் துவாலையை எடுத்து கண்களை ஒற்றுவதை நான் பார்த்தேன். எது எப்படி இருந்தாலும், மாராரை வழியில் பார்த்தது நல்லதாகப் போய் விட்டது. சந்திரசேகரனுக்கு உடல் நலக் கேடு எதுவும் இல்லை என்ற தகவலையாவது என்னால் தெரிந்து கொள்ள முடிந்ததே! அவன் மாரடைப்பு காரணமாக இறந்திருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்.

சந்திரசேகரனின் வீட்டிற்கு முன்னால் போய் நின்றபோது, எனக்கு தளர்ச்சி உண்டானது. செருப்பிற்குள் இருந்த கால்களில் பாதங்கள் வியர்த்தன. மனதைக் கட்டுப்படுத்த முயற்சித்தவாறு நான் வாசலுக்குச் சென்றேன். வெளி வாசலுக்கு அருகில் நாவிதர்கள் அமர்ந்திருந்தார்கள். பட்டும், தேங்காயும் அவர்களுக்குத்தானே! அவர்களைப் பார்த்ததும், என்ன காரணத்தாலோ என்னுடைய தளர்ச்சி அதிகமாகி, முகம் வியர்த்து, வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன். நான் வேட்டியின் நுனியைக் கொண்டு முகத்தைத் துடைத்து, சட்டையின் பித்தானைக் கழற்றி, மார்பில் ஊதினேன்.

'மகனே...'

யாரோ என்னுடைய தோளில் கையை வைத்து அழைத்தார்கள். நான் தலையை உயர்த்தி பார்த்தேன். எனக்கும் சந்திரசேகரனுக்கும் பாடம் சொல்லித் தந்த ராமன் மாஸ்டர். மாஸ்டர் சட்டை அணிந்திருக்கவில்லை. உரோமங்கள் வளர்ந்திருந்த நெஞ்சுப் பகுதியில் கழுத்தின் வழியாக ஒரு துண்டை அணிந்திருந்தார். வெப்பம் எனக்கு மட்டுமே தோன்றக் கூடிய ஒன்றல்ல என்பதையும், இன்று நல்ல வெப்பம் நிறைந்த நாளே என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.

'கவலைப்பட்டு என்ன பயன்? எல்லோருடைய விதியும் இதுதான், மகனே!'

நான் எதுவுமே பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தேன்.

'நண்பர்களாக இருந்தீர்கள்.'

'ஒன்றாகச் சேர்ந்து விளையாடி சிரித்து, வளர்ந்தீர்கள்.'

'கவலை இல்லாமல் இருக்குமா?'

ஒவ்வொருவரும் என்னையும் சந்திரசேகரனையும் பற்றி கூறுவதை நான் கேட்டேன். அவர்களுடைய அந்த அபிப்ராயங்கள் என்னை மேலும் கவலைக்குள்ளாக்கவே உதவின. அவர்கள் கொஞ்சம் பேசாமல் இருக்கக் கூடாதா என்று நான் மனதிற்குள் விரும்பினேன்.

மாஸ்டர் பெஞ்சின் மீது எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். நான் தலையை உயர்த்தி மாஸ்டரின் முகத்தைப் பார்த்தேன். மாஸ்டரின் கண்களும் முகமும் மிகவும் அமைதியாக இருந்தன. கவலை இருந்தாலும், அதை அடக்கிக் கொள்வதற்கு அவரால் முடியும். எதையெதையெல்லாமோ பார்த்து, எதையெதையெல்லாமோ கேட்ட மனிதர் அவர். மாஸ்டரால் அது முடியும். என்னுடைய நிலை அதுவல்ல, நானும் சந்திரசேகரனும் ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒன்றாகச் சேர்ந்துதான் நாங்கள் பள்ளிக் கூடத்திற்குச் சென்றோம். வயதான பிறகும் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம். மாஸ்டரின் தாங்கிக் கொள்ளக் கூடிய சக்தியும் எனக்கு இல்லை.


தோளில் ஒரு மண்வெட்டியுடன் கேளு அங்கே வந்தான். குழியை வெட்டி விட்டு வருகிறான் என்பதை நான் புரிந்து கொண்டேன். மண்வெட்டியின் நாக்கின் மீது புதிய மண் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தபோதுதான் எனக்கு அது புரிந்தது. கேளு நாவிதர்களுக்கு அருகில் குத்த வைத்து அமர்ந்து, ஒரு பிடியைப் புகைத்தான். யாராவது மரணமடைந்தால், கேளுவிற்கு நல்லது. படி அரிசிக்கு வழி பிறந்ததாக ஆகி விடும்.

'குழிக்குள் இருந்த இரண்டு மண்டையோடுகளைத் தோண்டி எடுத்தேன். புதைக்கிறதுக்கும் இடம் இல்லாமப் போச்சு.'

கேளு கூறுவதை நான் கேட்டேன். அவனுடைய கண்களில் இரத்தம் காய்ந்து காணப்பட்டது.

'ஒவ்வொரு நாளும் இப்படி ஆளுங்க செத்துக் கொண்டிருந்தால், அவங்களை எங்கே புதைக்கிறது?'

'குஞ்சுராமன் முதலாளி இறந்து, ஐந்து நாட்கள் ஆகல.'

பட்டு துணியின் உரிமையாளர்களில் ஒருவன் சந்தோஷம் தரும் ஒரு நினைப்பில் புன்னகைத்தான். பணக்காரரான முதலாளி இறந்தபோது, பட்டுத் துணிகள் வந்து விழுந்து மலையென கிடந்தன.

'மகனே, நீ போய் அந்த நாணு நாயரைக் கொஞ்சம் சமாதானப்படுத்து.'

அதற்குப் பிறகும் மாஸ்டர் என்னுடைய தோளில் கையை வைத்தார். நாணு நாயரைச் சமாதானப்படுத்த, என்னையே சமாதானப்படுத்திக் கொள்ள இயலாத, என்னால் முடியாதே! எனினும், மாஸ்டர் கூறினார் என்ற காரணத்திற்காக நான் பெஞ்சிலிருந்து எழுந்து, செருப்புகளை ஓரத்திலிருந்த கல்லுக்கு அருகில் கழற்றி வைத்து விட்டு, உள்ளே நுழைந்தேன். ஒரு துணி நாற்காலியில் நரைத்த தலையை நெஞ்சில் வைத்துக் கொண்டு நாணு நாயர் அமர்ந்திருந்தார். முகத்தில் வெளுத்த உரோமங்களின் ஒன்றிரண்டு நாட்களுக்கான வளர்ச்சி இருந்தது. கண் இமைகள் வீங்கியிருந்தன. நான் ஓசை எதுவும் உண்டாக்காமல் நாணு நாயரின் அருகில் சென்று நின்றேன். அவர் என்னைப் பார்க்கவோ, அசையவோ இல்லை. என்ன கூறுவது என்று தெரியாமல் நான் நாற்காலியின் அருகில் நின்றிருந்தேன். வாசலில் இருந்தவாறு ராமன் மாஸ்டர் கவனித்துக் கொண்டிருந்தார். அவர் என்னை நாணு நாயரிடம் செல்லும்படி கூறி அனுப்பிய விஷயத்தில், மாஸ்டரின் மீது எனக்கு அதிருப்தி உண்டானது. நாணு நாயரின் அருகில் இருந்த நாற்காலியில் எதுவும் பேசாமல் நான் உட்கார்ந்தேன். அப்படி அங்கு அமர்ந்திருந்தபோது, தலை கனமாகிக் கொண்டு வருவதைப் போல எனக்கு தோன்றியது. மூச்சு விடுவதற்கு சிரமமாகவும் இருந்தது. மாஸ்டர் என்னுடைய இக்கட்டான நிலையைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். கையைக் காட்டி என்னைத் திரும்பி வரும்படி அழைத்தார். நான் நாணு நாயரின் முகத்தையே இன்னொரு முறை பார்த்தேன். முன்பைப் போலவே அமர்ந்திருந்தார். நான் எதுவும் பேசாமல் படிகளில் இறங்கி, மாஸ்டரின் அருகில் பெஞ்சின் மீது போய் அமர்ந்தேன்.

'ஆண் பிள்ளையாக இருந்தால், கொஞ்சம் தைரியமும் இருக்கணும்.'

மாஸ்டர் என்னைக் குறை கூறினாலும், அவருடைய முகத்தில் இரக்கமும் கவலையும் இருப்பதை நான் பார்த்தேன். எனக்கும் சந்திரசேகரனுக்குமிடையே இருந்த உறவு மாஸ்டருக்குத் தெரியுமே!

பட்டு துணிகள், வெற்றிலை ஆகியவற்றுடன் சந்திரசேகரனின் உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். இவ்வளவு நேரமாகியும், நான் அவனைப் போய் பார்க்கவில்லை. இறந்து கிடக்கும் அவனைப் பார்த்துக் கொண்டு நிற்பதற்கு என்னால் எப்படி முடியும் என்று எனக்கு தெரியவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டாகும்போதெல்லாம், என்னுடைய நெஞ்சு தாளம் தவறி துடித்தது. எப்படியாவது உள்ளே நுழைந்து ஒரு தடவை பார்த்தால்கூட பரவாயில்லைதான். மூன்று மணிக்குப் பிறகுதான் பிணத்தை எடுப்பார்கள். அதற்கு முன்பு என்னுடைய பலவீனம் நீங்கி விடும் என்றும், சந்திரசேகரனைச் சென்று பார்க்கக் கூடிய தைரியம் எனக்கு வந்து சேரும் என்றும் நான் நினைத்தேன்.

அலுவலகங்களும், பள்ளிக் கூடங்களும் விடக் கூடிய நேரத்தில் வாசல் ஆட்களால் நிறைந்து விட்டிருந்தது. சந்திரசேகரனின் அலுவலகத்திலிருந்து அவனுடன் பணியாற்றுபவர்கள் பூச்செண்டுகளுடன் வந்தார்கள். நான்கு பேர் இருந்தார்கள். அவர்கள் நேராக உள்ளே செல்வதையும், திரும்பி வந்து நாணு நாயரை சமாதானப்படுத்துவதையும் நான் பார்த்தேன். அவர்களுக்கு இருந்த தைரியம் எனக்கு இருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்பட்டேன். பெஞ்சில் வந்து உட்கார்ந்தார்கள். மேஜையின் மீது வெற்றிலையும் சிகரெட்டும் பீடியும் இருந்தன. கிருபாகரன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து புகையால் வளையங்கள் உண்டாக்கினான்.

'பார்த்தால், கொஞ்சம் கூட புரியவே இல்லை. இப்படியெல்லாம் கூட மாறுதல் உண்டாகுமா?'

கிருபாகரன் என்னைப் பற்றி பேசுகிறானா அல்லது சந்திரசேகரனைப் பற்றி பேசுகிறனா என்று நான் சந்தேகப்பட்டேன்.

'முகத்தில் ஒரு துளி இரத்தம் இல்லை.'

'இறந்த மனிதனின் முகத்தில் எப்படி இரத்தம் இருக்கும்?'

'இறந்தவுடன் இரத்தம் வற்றிப் போய் விடுமா?'

கிருபாகரன் மற்றும் நண்பர்களின் பேச்சு முறை எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவர்களைக் குறை கூறுவதற்கு என்னால் முடியாது. அவர்கள் சந்திரசேகரனைப் போய் பார்த்து, அவனின் மீது மலர்களை வைத்து விட்டு, நாணு நாயருக்கு ஆறுதல் கூறவும் செய்தார்களே!  நானோ? நான் இந்த இடத்தில் உட்கார ஆரம்பித்து எவ்வளவு நேரமாகி விட்டது... !

'உன்னிடம் ஒரு விஷயம் கேட்கணும்.'

கிருபாகரன் எனக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்தான்.

'அந்த போஸ்ட் மாஸ்டரின் இளைய மகள் பிரேமா, இருக்கால்ல... அவளுக்கும் சந்திரசேகரனுக்குமிடையே...'

நான் எதுவும் கூறவில்லை.


'விருச்சிக மாதத்தில் திருமணம் நடக்க இருந்ததாக கேள்விப்பட்டேன். உண்மையா? நீ சந்திரசேகரனின் நெருக்கமான நண்பனாயிற்றே! உனக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்குமே! அதனால்தான் கேட்கிறேன். தவறாக நினைக்காதே.'

'உண்மைதான்.'

சந்திரசேகரன்தான் நிரந்தமாக போய் விட்டானே! இனி இப்படிப்பட்ட விஷயங்களைப் பேசி என்ன பிரயோஜனம் என்று கிருபாகரனிடம் கேட்க வேண்டுமென நான் நினைத்தேன். அவன்... அவன் இனிமேலும் கேள்விகள் எதுவும் கேட்காமல் இருக்கட்டும். என்னுடைய முகத்தை வாசித்ததாலோ என்னவோ, அதற்குப் பிறகு கிருபாகரன் என்னிடம் எதுவும் உரையாடவில்லை.

ஆட்களுக்கு மத்தியில் ஒரு சலசலப்பு உண்டானது. எல்லோரும் தெருவைப் பார்ப்பதைப் பார்த்தேன். நானும் அந்தப் பக்கம் பார்த்தேன். இரண்டு பணியாட்கள் பிணத்தைத் தூக்கிச் செல்லும் கட்டிலைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் என்னுடைய மனம் பதறி விட்டது. நான்கு பக்கங்களிலும் பலகைகளைக் கொண்ட மாமரத்தால் செய்யப்பட்ட அந்தக் கட்டிலைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு இப்படிப்பட்ட உணர்வு உண்டாகும். பணியாட்கள் வாசலுக்கு வந்தபோது, கேளுவும் நாவிதர்களும் உதவினார்கள். பிணக் கட்டிலை வாசலில் இறக்கி வைத்து விட்டு, ஓய்வு எடுத்தார்கள்.

ஐந்து நாட்களுக்கு முன்பு, இதே கட்டிலில்தான் குஞ்சுராமன் முதலாளி பயணமானார்.

ஒரு ஆள் ஒரு பெரிய சொம்பில் எலுமிச்சை நீர் கொண்டு வந்தார். கண்ணாடி டம்ளரை மூழ்கச் செய்து, ஒவ்வொருவருக்கும் கொடுக்க ஆரம்பித்தார். எலுமிச்சை நீரைப் பருகி விட்டு, கிருபாகரனும் நண்பர்களும் எழுந்து உள்ளே நுழைந்தபோது, நான் பின்னால் சென்றேன். வாசலைத் தாண்டி உள்ளே கால் வைத்தபோது, பெண்களின் அழுகைச் சத்தம் காதில் விழுந்தது. தாழ்ந்த கூரையைக் கொண்ட கூடத்தில் ஆட்கள் நெருக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். கால் விரல்களில் நின்று கொண்டு, அவர்களுடைய தோள்களின் மேல் பகுதி வழியாக நான் சந்திரசேகரனை எட்டிப் பார்த்தேன். குத்து விளக்கின் வெளிச்சத்தில், சாம்பிராணி புகையில், குளித்து, புதிய சட்டையும் வேட்டியும் அணிந்து அவன் படுத்திருந்தான். அறை முழுவதும் புகையும், புகையின் வாசனையும் நிறைந்திருந்தன.

கிருபாகரனும் நண்பர்களும் என்னிடம் விடை பெற்றுக் கொண்டு வாசலை நோக்கி சென்றார்கள். அவர்கள் அலுவலகத்திற்குத் திரும்பச் செல்ல வேண்டுமே! வெளியே செல்வதற்கு முன்பு, அவர்கள் ஒவ்வொரு சிகரெட்டாக எடுத்து பற்ற வைத்து புகையை விட்டார்கள். கிருபாகரன் புகை விடுவது வளையங்களாகத்தான்.

அடர்த்தியான நிறத்தைக் கொண்ட பட்டுத் துணிகளைக் கொண்டு சுற்றி, சந்திரசேகரனை சவக் கட்டிலில் வைத்தார்கள். கூடத்தில் இருட்டிற்குள்ளிருந்து அழுகைச் சத்தத்தைக் கேட்டதும், என்னுடைய கண்கள் எரிவதைப் போலவும், கண்ணீரால் நிறைவதைப் போலவும் எனக்கு தோன்றியது. வாசலிலும் திண்ணையிலும் அமர்ந்திருந்தவர்கள் எழுந்தார்கள். ராமன் மாஸ்டரும் அப்புண்ணி நாயரும் கெ.ஸி.பணிக்கரும் ஶ்ரீதரனும் சவ மஞ்சத்தைத் தூக்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் நாணு நாயரும் அவருடைய நிழலில் நானும் நடந்தோம். பாதையெங்கும் நின்று கொண்டு சந்திரசேகரனின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவனை வழி அனுப்பி வைத்தார்கள். பலரும் உள்ளங்கையால் கண்களைத் துடைத்துக் கொள்வதைப் பார்த்தேன்.

கேளு வெட்டிய ஆறடி நீளத்தையும் நான்கடி ஆழத்தையும் கொண்ட குழிக்குள் சந்திரசேகரனை இறக்கினார்கள். தேங்காய் உடைந்தது. நாணு நாயரும் பணியாட்களும் மூன்று மூன்று பிடி மண்ணை சந்திரசேகரனின் முகத்தில் தூவினார்கள். ராமன் மாஸ்டர் கூறி, நானும் மூன்று பிடி மண்ணை அவனுடைய முகத்தில் தூவினேன்.

பிண அடக்கம் முடிவடைந்து, ஆட்கள் பிரிந்து சென்ற பிறகு, நாணு நாயரிடமும் மாஸ்டரிடமும் விடை பெற்றுக் கொண்டு நான் வீட்டை நோக்கி நடந்தேன். வீட்டிற்குப் பதிலாக நான் கடற்கரைக்குச் சென்று விட்டேன். வெப்பம் தணிந்திராத மணலில் முழங்கால்களுக்கிடையில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு நான் அமர்ந்தேன். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தேன் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை. சந்திரசேகரனின் குரல் கேட்டு நான் தலையை உயர்த்தினேன்.

'வள்ளிக்காடு வரை கொஞ்சம் போய் விட்டு வந்தேன்.'

ஒரு திருட்டுச் சிரிப்புடன் அவன் சொன்னான். நான் முற்றிலும் பதைபதைத்துப் போனேன். என் தலைக்கு இரும்பின் கனம் உண்டானது. நானா, சந்திரசேகரனா... இறந்தது யார் என்று எனக்கு சந்தேகம் வந்து விட்டது. என்னுடைய குழப்பத்தைப் பார்த்ததால் இருக்க வேண்டும்- அவன் எனக்கு அருகில் மணலில் அமர்ந்தான். அப்போது கடலிலிருந்து வந்து கொண்டிருந்த காற்றிற்கு மதுவின் வாசனை இருந்தது.

'நான் இப்படியெல்லாம் சாக மாட்டேன்டா... நான் மட்டுமல்ல. அந்த...'

என் தோளில் கையை வைத்தவாறு சந்திரசேகரன் தொடர்ந்து சொன்னான்:

'இந்த உலகத்தில் எதுவுமே இறப்பதில்லை. எதுவும் அழிவதில்லை...'

சந்திரசேகரன் கூறியது சிறிதும் எனக்கு புரியவில்லை. அவனுடைய அறிவோ, விஷயங்களைப் புரிந்து கொள்ளக் கூடிய புத்தியோ எனக்கு இல்லை. எது எப்படி இருந்தாலும், அவன் இறக்கவில்லை என்பதைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற சந்தோஷம் உண்டானது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.