Logo

யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4943
Yamunai ore sindhanaiyudan odik kondirukkiradhu

யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது

பி.கேசவதேவ்

தமிழில் : சுரா

றைத்தால் மறையாத அளவிற்கு அந்த காதல் எல்லோருக்கும் தெரிந்ததாகி விட்டது. மறைக்க வேண்டிய அவசியமோ, மறைக்க வேண்டும் என்ற ஆசையோ அவர்களுக்கு இல்லை. அந்த காதல் கல்லூரியின் கட்டுப்பாட்டை மீறவில்லை. சமூகச் சட்டங்களை அது தாண்டவுமில்லை. மரியாதையின் எல்லைகளுக்குள், மதிப்பை உண்டாக்கிக் கொண்டு, அந்த காதல் தலையை உயர்த்திக் கொண்டு நின்றது.

மதுவும் ரவியும் உயிர் நண்பர்கள். ஒருவரை விட்டு ஒருவர் பிரிய முடியாதவர்கள். மது காதலனாக ஆனான். ரவி கவிஞனாக ஆனான்.

அவர்கள் தினமும் கல்லூரிக்கு ஒன்றாகவே சேர்ந்து வருவார்கள். எப்போதும் அவர்கள்தான் முதலில் வருவார்கள். அவள் வருவதை எதிர்பார்த்து காத்துக் கொண்டு, அவர்கள் வாசலில் இருக்கும் அந்த கல் தூணுக்கு அருகில் நின்றிருப்பார்கள்.

அவள் தனியாகத்தான் கல்லூரிக்கு வருவாள். உரிய நேரத்திற்குச் சற்று முன்புதான் அவள் கேட்டிற்குள் நுழைவாள்.

அவளுடைய வருகையைப் பார்ப்பதற்காக வேறு மாணவர்களும் வேறு எதையோ பார்ப்பதைப் போல, கூட்டம் கூடி நின்றிருப்பார்கள். பார்ப்பவர்களின் பார்வை அம்புகளிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற வேட்கையுடன், விலகியும் பதுங்கியும் அவள் கேட்டைத் தாண்டி விட்டால்... பிறகு... அங்கு ஒரு பேரமைதி உண்டாகும். ஒரு தாங்க முடியாத சலனமற்ற சூழ்நிலை நிலவும்.

இடது கையால் புத்தகங்களை மார்போடு சேர்த்து அழுத்திக் கொண்டும், காற்றில் பறந்து முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டும் தலை முடிகளை வலது கையால் விலக்கி விட்டுக் கொண்டும் அவள் வாசலுக்கு வருவாள். பாதி மூடியிருக்கும், கனவில் மூழ்கியிருப்பதைப் போன்ற அந்த கண்கள் மலரும். சந்தோஷமான கனவைக் காண்பதைப் போல, அவள் அந்த தூணின் அருகே பார்ப்பாள்.

நான்கு கண்கள்- நான்கு கண்கள் அங்கு காத்து நின்றிருக்கும்- அவளுடைய பார்வையை வரவேற்பதற்காக. காதலனின் கண்கள் அகல திறந்து கொண்டு பார்க்கும். கவிஞனோ... சற்று பார்த்து விட்டு, பார்வைகளை பின்னோக்கி இழுத்துக் கொள்வான். காதலனும் கவிஞனும்!

ரவி ஒரு கவிதை எழுதினான்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று. யமுனா! - அதுதான் அவளுடைய பெயர். அந்த கவிதையை கல்லூரியின் இலக்கியக் கூட்டத்தில் வாசித்தான்.

மலையின் இடைவெளிகளின் வழியாக, காட்டு மிருகங்களுக்கு பயந்ததைப் போல, வேகமாக பாய்ந்தும் வளைந்து நெளிந்தும் உயர்ந்தும் பதுங்கியும் சோர்வடைந்தும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டும் நதி ஓடிக் கொண்டிருப்பதாக கவிதை ஆரம்பித்தது. படிப்படியாக மலைச் சரிவுகளின் வழியாக பாடலை முணுமுணுத்துக் கொண்டே, எந்தவித பயமும் இல்லாமல், உற்சாகத்துடன், அந்த நதி ஓடிக் கொண்டிருந்தது.

ஓடி கொண்டிருக்கும், கிச்சுக் கிச்சு மூட்டும், குளிர்ந்த, கண்ணாடியைப் போன்ற, அந்தச் சிறிய நதியை எல்லோரும் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார்கள். ஆனால், அதில் இறங்குவதற்கு தைரியம் கிடையாது. அதன் அழகு எல்லோரையும் ஈர்ப்பதைப் போலவே, அதன் புனிதத் தன்மை எல்லோருக்குள்ளும் தார்மீகமான பயத்தை உண்டாக்கியது.

'எங்கே?... எங்கே? அந்த வசந்த கால யமுனை ஓடிக் கொண்டிருக்கிறது?'- கவிஞன் கேட்கிறான். எல்லோருக்கும் தெரியும்- அந்த நதி எங்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறது என்று. ஆனால், கவிஞன் பாடுகிறான்- 'எங்கு வேண்டுமானாலும், எந்த இலக்கை நோக்கியும் ஓடிக் கொள்ளட்டும். அதன் ஒரே சிந்தனை உள்ள, அழகான கொள்கை உள்ள, ஓட்டத்தை நான் கெடுக்காமல் இருக்க வேண்டும். அந்த ஓட்டத்தின் பாடலும் அதன் தாளமும் அதன் அழகும் மட்டுமே நமக்கு உள்ளதாக இருக்கட்டும்!'

கவிதை அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களின் இதயங்களை வசீகரித்து விட்டது. பாராட்டுக்களின் உச்ச நிலையில் நிலவிக் கொண்டிருந்த பேரமைதியில் கவிஞன் மட்டும் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான்.

யமுனா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மது புன்னகைத்தான்.

சம்பவத்திலிருந்து உருவான கலை, சம்பவத்தை மறைத்து விட்டது. யமுனாவிற்கும் மதுவிற்குமிடையே உள்ள காதல் அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மை என்ற நிலையில், அது பொருட்படுத்தப் படாததாகவோ மறக்கப்படவோ செய்தது. அதற்குப் பதிலாக ரவியின் கவிதை முக்கிய பேச்சுக்கு உரிய விஷயமாக ஆனது. ரவி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தான். அவன் மாணவர்களின் வழிபாட்டுக்கு உரியவனாக ஆனான்.

யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது- எல்லா மாணவர்களின் நோட்டு புத்தகங்களிலும் இங்குமங்குமாக அவ்வாறு எழுதி வைக்கப்பட்டிருக்கும். வகுப்பறைகளின் டெஸ்க்குகளிலும் சுவர்களின் மூலைகளிலும் மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களிலுமெல்லாம் எழுதி வைக்கப்பட்டிருக்கும்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று.

ஆண்- பெண் வேறுபாடு பார்க்காமல் எல்லா மாணவர் - மாணவிகளும் அந்த கவிதையை மனப் பாடம் செய்தார்கள். கல்லூரியின் எல்லைக்குள் இருக்கக் கூடிய மரத்தடியில் நின்று கொண்டு அந்த கவிதை பாடப்படுவதைக் கேட்கலாம். வகுப்பறையில் கூக்குரல்களுக்கும் அட்டகாசங்களுக்கும் மத்தியில் அந்த பாடல் உரத்து கேட்கும். பல வேளைகளில் குளியலறைகளுக்குள்ளிருந்தும் சில நேரங்களில் உணவு விடுதிகளிலிருந்தும் அந்த கவிதை முழங்கும்.

புத்தகங்களை மார்போடு சேர்த்து அழுத்தி வைத்துக் கொண்டு, முகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டும் தலை முடிகளை விலக்கி விட்டவாறு. யமுனா தினமும் கல்லூரிக்கு வருவாள். சந்தோஷம் நிறைந்த கனவைக் காண்பதைப் போல அவள் அந்த கல் தூணுக்கு அருகே பார்ப்பாள். மது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருப்பான். ரவி சற்று பார்த்து விட்டு, பார்வைகளை பின்னோக்கி இழுத்துக் கொள்வான்.

யமுனாவும் புன்னகைப்பாள். அந்த புன்னகையில் ஏதோ ஒரு ஆழம் இருந்தது- வெண் மேகத்தால் மறைக்கப்பட்ட நிலவின் பிரகாசத்தைப் போல.

ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த ஓட்டத்தை யாரும் கெடுக்கவில்லை. அந்த பாடலின் தாளத்தில் யாரும் குறைபாடு உண்டாக்கவில்லை. அந்த சுருதியில் யாரும் பேதம் உண்டாக்கவில்லை.

* * * * * * * *


மது நல்ல வசதி படைத்தவன். இளைஞன். நல்ல உடல் நலத்தைக் கொண்டவன். அழகான தோற்றத்தைக் கொண்டவன். அவன் அவளுக்காக படைக்கப்பட்டவன் என்று தோன்றும். அவள் அவனுக்கென்றே என்றும்.

அவர்களுடைய தந்தைகளும் தாய்களும் ஒருவரோடொருவர் கலந்தாலோசித்தார்கள். திருமண நிச்சயமும் செய்யப்பட்டு விட்டது.

அந்தத் தகவல் கல்லூரியில் பரவியது. யாருக்கும் ஆச்சரியம் உண்டாகவில்லை. அவர்களுடைய காதல் வெற்றி பெற்றதற்காக நண்பர்களும் பேராசிரியர்களும் அவர்களை வாழ்த்தினார்கள். எல்லோரும் அந்த கவிதையைப் பாடினார்கள்- 'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.'

தேர்வு முடிவடைந்தது. வெற்றி பற்றிய எதிர்பார்ப்புகளுடனும், தோல்வியைப் பற்றிய கவலைகளுடனும் நூறு... நூறு நினைவுகளுடனும் ஒவ்வொருவராக அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தார்கள்.

ரவிக்கும் ஏராளமான நினைவுகள் இருந்தன-  இனிக்கக் கூடியதும், கசக்கக் கூடியதுமான நினைவுகள்! சிரிக்க வைக்கக் கூடியதும், அழ வைக்கக் கூடியதுமான நினைவுகள்!

சோகம் நிறைந்த ஒரு பாடலின் பல்லவியைச் சீட்டியடித்தவாறு, ரவி பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தான். புத்தகங்களையும் ஆடைகளையும் ட்ரங்க் பெட்டிக்குள் வைத்தான். படுக்கையைக் கட்டி வைத்தான். எதையோ மறந்து விட்டதைப் போன்ற ஒரு தோணல்!

அவன் சாளரத்தின் அருகில் போய் நின்றான்.

தூரத்தில்... கரும் நீல நிறத்தில் கிழக்கு திசையிலிருக்கும் மலைகள், நீல நிறத்தில் நிர்மலமாக இருந்த வானத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அந்த கரும் நீலத்திற்கும் எல்லையற்ற முழு நீல நிறத்திற்குமிடையே இருந்த காதல் உறவை கூர்ந்து பார்த்தவாறு ரவி எந்தவித அசைவும் இல்லாமல் நின்று கொண்டிருந்தான்.

அடைக்கப்பட்டிருந்த கதவில் மெதுவாக ஒரு தட்டும் சத்தம்!- தொடர்ந்து மூன்று நான்கு முறை தட்டல்கள்! ரவி மெதுவாக கதவின் அருகில் சென்று, திறந்தான். அவன் சற்று அதிர்ச்சியடைந்தான்.

'யாரு?'- அவனுடைய இதயம் வாய்க்கு வந்து விட்டது. 'யமுனா!'- கனவு காண்பதைப் போல அவன் முணுமுணுத்தான்.

அவன் பின்னோக்கி நடந்தான். அவன் சாளரத்தின் அருகில் சென்று நின்றான்.

'யமுனா!... யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது....'- அவன் அதற்குப் பிறகும் முணுமுணுத்தான்.

அவள் அறைக்குள் வந்தாள். அவள் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். அவளுடைய முகத்தில் வியர்வை அரும்பி விட்டிருந்தது. கட்டி வைத்திருந்த தலைமுடி அவிழ ஆரம்பித்திருந்தது.

உள்ளங்கையால் வியர்வையைத் துடைத்து விட்டு, தலை முடிகளை விலக்கி விட்டு அவள் ஊன்று கோலைப் போல மேஜையில் கையை ஊன்றி நின்றிருந்தாள். கனவுகள் நிறைந்த அந்த கண்கள், பூமியில் காண முடியாத அழகை வெளிக்காட்டுவதைப் போல மலர்ந்தன. அடக்கி வைக்கப்பட்ட புன்னகை, சற்று விலகியிருந்த அதரங்களுக்கு இடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது'- கனவில் இருப்பதைப் போல ரவி மீண்டும் முணுமுணுத்தான்.

யமுனா முகத்தை உயர்த்தினாள். அந்த நதியில் பாடல் முணுமுணுப்பாக கேட்டது.

'அப்படி ஓடி... ஓடி  அந்த நதி... இதோ, கடலின் அலைகளுடன் கலப்பதற்காக காத்து நின்று கொண்டிருக்கிறது.'- அவள் நீண்ட பெருமூச்சை விட்டாள். அவளுடைய அவிழ்ந்து தொங்கிக் கொண்டிருந்த கூந்தல், பின் பகுதிக்குக் கீழே வட்டங்கள் உண்டாக்கியது.

சாளரத்தின் கம்பியை இறுக பிடித்துக் கொண்டு ரவி சொன்னான்:

'நதியையும் கடலையும் நான் வாழ்த்துகிறேன்.'

யமுனா நெற்றியைச் சுளித்தாள். அவள் தெளிவான குரலில் சொன்னாள்:

'நான் இங்கே வந்திருப்பது வாழ்த்து வாங்குவதற்காக அல்ல.'

'கடலின் அலைகளுடன் கலப்பதற்கு... மதுவின் கைகளுக்குள் நிம்மதி தேடுவதற்கு... அப்படித்தானே?'- அவன் புன்னகைத்தான். வருத்தப்படுகிற குரலில் அவன் தொடர்ந்து சொன்னான்:

'ஆனால், இப்போது மது இங்கே இல்லை.'

'அதனால்தான் நான் இங்கே வந்தேன்'- அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ரவியின் சரீரம் நடுங்கியது. அவன் முணுமுணுத்தான்:

'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.'

'கடலை நோக்கி...! கடலின் அலைகளை நோக்கி...'- ஆர்வத்துடன் அவள் ரவிக்கு நேராக முகத்தை உயர்த்தினாள்.

'இந்த சிறிய அறையில்...'- ரவி பாதியில் முடித்துக் கொண்டான். அவன் சாளரத்தின் கம்பியை இறுக பற்றிக் கொண்டான்.

'ஆமாம்... இந்தச் சிறிய அறையில் கடல், அலைகளைக் கொண்டு மோதிக் கொண்டிருக்கிறது'- அவள் பதிலுக்கு கூறினாள். திடீரென்று முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு, ரவியை ஓடக் கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் தொடர்ந்து சொன்னாள்:

'கடலின் அலைகளுடன் கலப்பதற்கு... அந்த கைகளுக்குள்...'- அவளுக்கு மூச்சு விட முடியவில்லை.

'யமுனா!'? ரவியின் தொண்டை தடுமாறியது. அவனுடைய பாதங்கள் முன்னோக்கி நகர்ந்தன. ஆனால், சாளரத்தின் கம்பியிலிருந்து அந்த பிடியை விடவேயில்லை.

'ரவி...!'- அவளுடைய குரலில் பதற்றம் இருந்தது.

ஒரு மின்னல்! அவள் ரவியின் கைகளுக்குள் இருந்தாள். நதி கடலின் அலைகளுடன் கலந்தது.

ஒரு பேரமைதி! ஒரு அசைவற்ற நிலை!

அவர்களுடைய முகங்கள் நெருங்கின. அவளுடைய மூச்சுக் காற்றின் வாசனையை அவன் சுவாசித்தான். அவர்களுடைய உதடுகள் ஒன்று சேர்ந்தன.

அவள் புன்னகைத்தாள்- திரையை விட்டு வெளியே வந்த நிலவின் பிரகாசம்!

அவன் புன்னகைக்கவில்லை. அவனுடைய முகம் சுருங்கிப் போய் காணப்பட்டது.

அவர்கள் விலகினார்கள்- அவள் மேஜையின் அருகிலும், அவன் சாளரத்தை நோக்கியும்.

அவளுடைய கண்களில் முழுமையான திருப்தி தெரிந்தது. அந்த கண்களின் கனவு வயப்பட்ட தன்மை மாறி விட்டது. சாதாரணமான ஒரு பிரகாசம்! அவை வெற்றியை வெளிப்படுத்தும் அடையாளக் கொடிகள்!

'ரவி!'- அவளுடைய மணி ஒலிப்பதைப் போன்ற குரல் அந்த பேரமைதியைக் கலைத்தது.

அவன் அதை காதிலேயே வாங்கவில்லை. அந்தச் சாளரத்தின் கம்பிகள் வழியாக எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டு, எந்தவித அசைவுமில்லாமல் நின்று கொண்டிருந்தான். கிழக்கு திசையிலிருந்த மலைகள் வானத்தின் விளிம்பைத் தொட்டுக் கொண்டிருந்தன. கரும் நீலம் எல்லையற்ற முழு நீலத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

அவளுடைய மணி ஒலிப்பதைப் போன்ற குரல் மீண்டும் அந்த பேரமைதியைக் கிழித்தது: 'எங்களுடைய திருமணத்திற்கு நான் உங்களை அழைக்கிறேன்.'


ரவி அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தான். அவளுடைய முகத்தில் சாந்தமும் உறுதித் தன்மையும் வெளிப்பட்டன. அவிழ்ந்து பறந்து கொண்டிருந்த தலைமுடியை பத்திரமாக பின்னால் கட்டிப் போட்ட அவள் தொடர்ந்து சொன்னாள்: 'எங்களுடைய திருமணத்திற்கு நீங்கள் வர வேண்டும். உங்கள் முன்னிலையில் நான் அவருடைய மனைவியாக ஆக வேண்டும்.'

ஒரு தாங்க முடியாத குளிர்! மரத்துப் போகச் செய்யும் ஒரு குளிர் அந்த அறை முழுவதும் பரவியது. ரவி எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தான். அவன் அந்த குளிர்ச்சியில் மரத்துப் போனான். அவன் ஒரு சிலையைப் போல ஆகி விட்டான்.

'வரணும்... வருவீர்களா?'- அவள் உறுதியான குரலில் கேட்டாள்.

சிலையின் உதடுகள் அசைந்தன.

'அந்த... அந்தச் சம்பவத்திற்குப் பிறகா?'

'ஆமாம்...'- அவளுடைய குரலில் இருந்த உறுதித் தன்மை அதிகரித்தது. அவள் கட்டளை இடுவதைப் போல கூறினாள்: 'ஆமாம்... அந்தச் சம்பவத்திற்குப் பிறகு!- இந்த நதி அந்த கடலின் அலைகளுடன் கலந்த பிறகு!- உங்களுடைய கைகளுக்குள்...'- அவள் பாதியில் நிறுத்திக் கொண்டு, எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். மீண்டும் முகத்தை உயர்த்தி வைத்துக் கொண்டு அவள் கட்டளையிட்டாள்:

'நீங்கள் வரணும். உங்களுடைய முன்னிலையில் எங்களுடைய திருமணம் நடக்கணும்.' -அவளுடைய தலை உயர்ந்தது. உயர்ந்த மார்பகங்கள் பெரிதாயின. அப்படி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் தோன்றும்- அவள் கடலின் அலைகளுடன் கலக்கவில்லை.... அந்த அலைகளின் தலையில் வெற்றி நடனம் ஆடிக் கொண்டிருக்கிறாள் என்று.

ரவியின்... இல்லை... சிலையின் முகத்தில் பார்வைகளைப் பதிய வைத்துக் கொண்டு, அவள் ஒரு பெரிய மந்திர சக்தி படைத்தவளைப் போல மெதுவாக அருகில் சென்றாள். அவள் புன்னகைத்தாள்.

அவள் கேட்டாள்: 'வருவீர்களா?'

சிலை முணுமுணுப்பான குரலில் கேட்டது: 'எங்கே? எதற்கு?'

அவள் சொன்னாள்: 'எங்களுடைய திருமணத்திற்கு...'

சிலையின் கை அசைந்தது. அந்த கை முகத்தில் அழுத்தி தடவியது. அந்த கண்களுக்கு பிரகாசம் உண்டானது. முகத்தில் உணர்ச்சிகள் தோன்றின. சிலை பேசியது:

'சில நிமிடங்களுக்கு முன்னால்... இந்த கடலின் அலைகளுடன் கலப்பதற்கு ஆர்வத்துடன் காத்து நின்ற... கட்டுப்படுத்த முடியாத ஆவேசத்துடன் என் கைகளுக்குள் தாவிக் குதித்த...'

'முழுமையடையாத வார்த்தைகள்...'- அவள் ஆழமாக புன்னகைத்துக் கொண்டே தொடர்ந்தாள்:

'சொல்லுங்க, ரவி. சொல்லுங்க... என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்தச் சம்பவத்தை... நான் காதலில் வெற்றி பெற்ற அந்த காட்சியை...'- உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அவள் தொடர்ந்து சொன்னாள்:

'அதை வர்ணிப்பதற்கு... அதற்கு கலைத்தன்மை தருவதற்கு... அதற்கு சாகாவரம் அளிப்பதற்கு... ரவி, உங்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். சொல்லுங்க ரவி, பாடணும்!'

ரவியின் சரீரம் நடுங்கியது. சாளரத்தின் கம்பியிலிருந்து பிடியை எடுத்த அவன் அவளையே வெறித்து பார்த்தான்.

'நான் சொல்லணும்... அப்படித்தானே? என் இதயத்தை மிதித்து நசுக்கி நீ காதலில் வெற்றி பெற்ற அந்த காட்சிக்கு நான் கலைத் தன்மை தரணும்... பாதப் புகழணும்... அப்படித்தானே?'- அவனுடைய முகம் கோபத்துடன் காணப்பட்டது. அவனுடைய பற்கள் நெரிந்தன. கர்ஜனை செய்யும் குரலில் அவன் தொடர்ந்து சொன்னான்:

'உன்னுடைய பாம்பைப் போன்ற அழகிற்கு... உன்னுடைய குரூர தன்மைக்கு... நான் சாகா வரம் தர வேண்டும். அப்படித்தானே?'

யமுனா மென்மையாக புன்னகைத்தாள். தத்துவ சிந்தனையாளனின் சாந்த நிலையும் கம்பீரமும் அவளுடைய முகத்தில் தெரிந்தன. வார்த்தைகளை எடை போட்டு பார்ப்பதைப் போல நிறுத்தி... நிறுத்தி, அவள் சொன்னாள்:

'ரவி... உங்களுடைய தார்மீகமான கோபம்... அந்த கோபத்தில் கலந்திருக்கும் கர்ஜனை- அது என்னை சந்தோஷம் கொள்ளச் செய்கிறது. வாழ்க்கையின் விமர்சகனும், வாழ்க்கையைப் பாடும் கவிஞனுமான நீங்கள், வாழ்க்கையை தார்மீகமானது என்றும் தார்மீகமற்றது என்றும் வேறுபடுத்துகிறீர்கள். வாழ்க்கையின் தார்மீக தன்மைக்கு மிகப் பெரிய அளவில் முக்கியத்துவத்தையும் மதிப்பையும் நீங்கள் தருகிறீர்கள். நானோ வாழ்க்கையை விமர்சனம் செய்பவள் அல்ல. வாழ்க்கையை, அது இருக்கும் நிலையிலேயே ஏற்றுக் கொள்ளக் கூடியவள். நான் வாழ்க்கையுடன் ஒட்டிச் சேர்ந்து நின்று கொண்டிருக்கிறேன். நான் வாழ்க்கை ஆகிறேன்... ரவி, நீங்கள் வாழ்க்கையின் போக்கை மாற்ற நினைக்கிறீர்கள். நீங்கள் ஓட்டத்திற்கு எதிராக நீந்துகிறீர்கள். நான் நீரோட்டத்துடன் சேர்ந்து நீந்துகிறவள். நானே நீரோட்டமாக ஆகிறேன். ரவி, நீங்கள் வாழ்க்கையை அலசி, ஆராய்ச்சி செய்கிறீர்கள். வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறீர்கள். நானோ... வாழ்க்கையை நிலை நிறுத்துகிறேன்.'

ரவி அசைவே இல்லாதவனாக ஆனான்... அவன் சிலையாக ஆனான். நிறைந்த அன்புடனும் அளவற்ற இரக்கத்துடனும் யமுனா தொடர்ந்து சொன்னாள்:

'ரவி... வாழ்க்கையை ஆராய்ந்து பார்க்கும் நீங்கள் பாருங்கள்... பாடிப் பாடி அழியுங்கள்... உங்களுடைய பாடல்கள் மட்டும் சாகா வரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கட்டும். எனக்கு பாடுவதற்கு நேரமில்லை. நான் வாழ்க்கை... நான் வாழ வேண்டும்... கவிஞன் அல்ல... கணவன்தான் எனக்கு தேவை'- மூச்சை அடைப்பதைப் போல அவள் சற்று நெளிந்தாள். மீண்டும் சுவாசத்தை இழுத்து விட்டு, அவள் தொடர்ந்து சொன்னாள்:

'என்னை கவனம் செலுத்தி பார்த்துக் கொள்வதற்கும் கொஞ்சுவதற்கும் இயலக் கூடிய ஒரு ஆள்... என் குழந்தைகளின் தந்தையாக இருப்பதற்கும் என்னுடைய குடும்பத்தைப் பத்திரமாக பார்த்துக் கொள்வதற்கும் திறமை கொண்ட ஒரு ஆள்- அப்படிப்பட்ட ஒரு ஆள்தான் என்னுடைய வாழ்க்கைத் தோழனாக வர வேண்டும்'- அவள் தன் முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்தாள். தலை முடிகளை ஒதுக்கி விட்டாள். அவள் ரவியின் கையைப் பிடித்தாள். சிலை அசையவே இல்லை.


அவளுடைய முகத்திலிருந்த கம்பீரத் தன்மை மறைந்து போனது. பூமியில் பார்க்க முடியாத ஒரு அழகு அவளுடைய கண்களில் நிறைந்து நின்றது.

'ரவி... நான் போகட்டுமா? எங்களுடைய திருமணத்திற்கு வருவீர்களா?'- அவளுடைய குரல் மீண்டும் இசையைப் போல ஒலித்தது.

சிலை பேசவில்லை. அசையவுமில்லை.

அவள் பின்னால் திரும்பி ஒரு அடி முன்னோக்கி வைத்தாள். திடீரென்று அவள் மீண்டும் திரும்பினாள்.

'இன்னொரு முறை... இன்னொரு முறை...'- ஆவேசத்துடன் சிலையை கட்டிப் பிடித்தாள்.

'இன்னொரு முறை... இன்னொரு முறை...'- அவள் அவளுடைய முகம் நெருங்கியது. அவர்களுடைய உதடுகள் ஒன்று சேர்ந்தன.

திடீரென்று அவள் பிடியை விட்டாள். ஓசையை உண்டாக்கிக் கொண்டு அவள் அறையை விட்டு ஓடினாள்.

சிலை அசைந்தது. அவன் கதவை நோக்கி நடந்தான்.

பூச்செடிகளுக்கு மத்தியில் யமுனை ஓடிக் கொண்டிருந்தது. அந்த நதி கேட்டைக் கடந்து சாலையின் ஓரத்தில் மெதுவாக... மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது. அவ்வாறு ஓடி... ஓடி... அந்த நதி சாலையின் திருப்பத்தில் மறைந்தது.

'யமுனை ஒரே சிந்தனையுடன் ஓடிக் கொண்டிருக்கிறது'- ரவி முணுமுணுத்தான். அவன் இருட்டையே வெறித்து பார்த்தான். சிறிது நேரம் அதே இடத்தில் நின்று விட்டு, அவன் கதவை அடைத்து தாழ்ப்பாள் போட்டான். அவன் சாளரத்தின் அருகில் வந்து நின்றான்.

அவனுடைய உதடுகள் ஈரமாக இருப்பதைப் போன்ற ஒரு தோணல்... அவன் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து கைக் குட்டையை எடுத்தான். உதடுகளை அழுத்தி துடைத்து விட்டு, அவன் கைக் குட்டையை பிரித்து பார்த்தான். மீண்டும் உதடுகளை அழுத்தித் துடைத்தான். கைக்குட்டையைச் சுருட்டி, கம்பிகளுக்கு இடையிலிருந்த இடைவெளிகளின் மூலமாக வெளியே வீசியெறிந்தான்.

அவன் தூரத்தை நோக்கி பார்த்தான். எதையும் பார்க்க முடியவில்லை. அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்து நின்றிருந்தது. அவன் தன் பாக்கெட்டிற்குள் கையை விட்டான். அங்கு கைக்குட்டை இல்லை.

நிறைந்து நின்றிருந்த கண்ணீர், கன்னங்களின் வழியாக வழிந்தது. கண்கள் தெளிந்தன. அவன் தூரத்தை நோக்கி பார்த்தான். கரும் நீலம், எல்லையற்ற சுத்த நீலத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது.

கவிஞன் புன்னகைத்தான்- சோகம் நிறைந்த ஒரு புன்னகை!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.