Logo

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6189
Naam vasippadharkku munthiri thoppugal

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

சக்கரியா

தமிழில் : சுரா

"டேய், ராதாகிருஷ்ணா...'' சந்தீபன் என்னிடம் தொலைபேசியில் கூறினான்: “நீ கொஞ்சம் இங்கே வா. ஒரு முக்கியமான விஷயம்...''

அவன் புகழ்பெற்றவன்; பலம் வாய்ந்தவன். டில்லியில் அவனைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆனால், அவனுக்கு நான் வேண்டும். அது எனக்கும் பிடித்த விஷயம்.

நான் கேட்டேன்: “என்னடா விஷயம்?''

“தொலைபேசியில் அதைச் சொன்னால் சரியாக இருக்காது!. நீ வா...''

சற்று முன்பே நான் அலுவலகத்திலிருந்து வெளியேறி, மாலை நேரத்தில் கனாட் ப்ளேஸில் இருக்கும் அவனுடைய அலுவலகத்தை அடைந்தேன்.

அவனுடைய ரிஷப்ஷனிஸ்டுக்கும், செக்ரட்டரிக்கும், ப்யூனுக்கும் என்னைத் தெரியும். அதனால் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. அவனைச் சந்திப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு மத்தியில் நான் மிடுக்காக நடந்துசென்றேன். மல்லப்பள்ளி புனித மரியா பள்ளிக்கூடத்தில், முதல் வகுப்பிலிருந்து ஒரே பெஞ்சில் அமர்ந்து மேலே வந்தவர்கள் நாங்கள் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியுமா? அவன் மிகப்பெரிய ஆளாகிவிட்டான். நான் குமாஸ்தாவாகி விட்டேன்.

சந்தீபனின் அறை ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டதாக இருக்கும். அதன் மெதுமெதுப்பான தரை விரிப்பின் வழியாக அவனுடைய மேஜையை அடைவதற்கு பல நிமிடங்கள் ஆகுமென்று தோன்றும். "இவையெல்லாம்தானேடா நம்முடைய வித்தைகள்!' அவன், கூறுவான்: "ஷோ இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது.'

சந்தீபன் தன்னுடைய செக்ரட்டரியிடம் இன்டர்காமில் சொன்னான்: “இன்னும் பத்து நிமிடங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் எதுவும் வேண்டாம். அடுத்த விசிட்டரிடம் சிறிது தாமதமாகும் என்ற விஷயத்தைச் சொல்லிவிடு.''

தொடர்ந்து அவன் என்னிடம் சொன்னான்: “ராதாகிருஷ்ணா, மொத்தத்தில் பிரச்சினையாகிவிட்டது. மாதுரிக்கு முறை தவறிவிட்டது.''

“என்ன முறை?'' நான் கேட்டேன். மாதுரி -அவனுடைய காதலிகளில் ஒருத்தி. என்ன முறை என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. அவனைப்போல பெண்களுடன் நான் குதித்து விளையாடுவதில்லை.

“டேய், தரித்திரம் பிடிச்சவனே!'' - அவன் சொன்னான்:

“மாத முறை... அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.''

“ஓ...'' என்றேன்.

“அவ்வளவுதான் உன்னால சொல்ல முடியுதா?'' அவன் என்னிடம் கேட்டான்.
“கர்ப்பம் என்றால் கர்ப்பம்தான். வேறு என்ன பிரச்சினை?'' நான் கேட்டேன். வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

சந்தீபனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் சொன்னான்: “உன்னைப் போன்ற ஒரு பிறவியை, பிறந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். டேய், எனக்கும் மாதுரிக்குமிடையே வெறும் காதல் மட்டும்தானே இருக்கிறது. அவள் எப்படி பிள்ளை பெறுவாள்? உனக்கு இந்த மனித உருவத்தில் இருக்கிறோம் என்பதைத் தவிர, வாழ்க்கையுடன் வேறு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதுவரை நீ ஒரு பெண்ணைத் தொட்டிருக்கிறாயா?''

“தொட்டிருக்கிறேன்...'' நான் சொன்னேன்: “என்னுடைய தாயைத் தொட்டிருக்கிறேன்.''

“ஃபா...'' என்றான் சந்தீபன்.

அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். தொடர்ந்து சொன்னான்: “டேய், மாதுரிக்கு அபார்ஷன் செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். "கரோல் பாக்'கில் இருக்கும் ஒரு லேடி டாக்டரின் வீட்டில்தான் அது நடக்கப் போகிறது.

நீ என்னுடன் வரவேண்டும். தனியாக என்னால் இருக்கமுடியாது. இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து முடித்தும், மாதிரி அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறாள்.''

“என்ன காரணம்?''

“அவளுக்கு குழந்தையின்மீது பாசம் தோணுதாம். இதற்கு என்னடா பதில் சொல்றது?''

“ம்... நீ காதலிச்சப்போ இதைப் பற்றி நினைச்சிருக்கணும். அவளுக்கு குழந்தைமீது பாசம் தோன்றாமல் இருக்குமா?''

அவன் சிகரெட்டை ஒரு புழுவைப்போல ஆஷ்ட்ரேயில் நசுக்கிப் போட்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான். தொடர்ந்து சொன்னான்: “டேய், நான் இன்னும் மூன்று, நான்கு "க்ளயன்ட்'களைப் பார்க்க வேண்டியதிருக்கு. நீ கொஞ்சம் சுற்றிவிட்டுவா. சரியாக ஏழு மணிக்கு இங்கேயிருந்து புறப்படுவோம். நீ ஏமாற்றி விடாதே.''

“சரி'' என்றேன்.

நான் சென்ட்ரல் பார்க்கிற்குச் சென்று மரத்தின்மீது சாய்ந்து உட்கார்ந்தேன். மனிதர்கள் வருவதையும் போவதையும் பார்த்துக்கொண்டு, அணில்கள் ஓடித்திரிவதைப் பார்த்துக்கொண்டு, காகங்கள் தங்களின் கூடுகளுக்குள் சென்று அடைவதைப் பார்த்துக் கொண்டு, வானத்தில் என்னென்னவோ பறவைகள் எங்கெங்கெல்லாமோ பறந்து போவதைப் பார்த்துக்கொண்டு... சிறிது நேரம் கழித்து நான் புல்லின்மீது மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தேன். சந்திரனைப் பார்த்தேன். சந்திரனின் புழுதி படிந்த மண்ணில், உதித்து மேலே உயர்ந்துவரும் பூமியைப் பார்த்துக்கொண்டே நடக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. நான் சிந்திப்பதை நிறுத்தி விட்டு, கைக் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி எட்டு.

சந்தீபன் என்னைக் காணாததால் உண்டான பதைபதைப்புடன், தன் காருக்கு அருகில் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“என்னடா... பயந்துட்டயா?'' நான் கேட்டேன்.

அவனுடைய அரண்மனையைப் போன்ற கார்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். “இது என்ன கார்?'' நான் கேட்டேன்: “புதிதாக இருக்கிறதே?''

அவன் சொன்னான்: “டேய், காரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்கான நேரமில்லை இது... மாதுரி டாக்டரின் வீட்டில் எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். பின்பக்க கதவின் வழியாக நாம் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைய வேண்டும். நீ என்னுடன் இருந்தால் போதும். என்னுடைய மனநிலையை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?''

“அபார்ஷன் உனக்கில்லையே! பிறகு, நீ ஏன் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? காசு செலவாகிறதே என்பதை நினைத்தா?''

“காசு போய்த் தொலையட்டும்...'' சந்தீபன் சொன்னான்:

“இப்படிப்பட்ட காரியங்களில் உண்டாகக்கூடிய மன அழுத்தங்கள் எந்த அளவுக்கு இருக்குமென்பது என்றைக்காவது உனக்கு தெரியுமா? பயங்கரம்டா... பயங்கரம்!''

நான் எதுவும் பேசவில்லை.

நாங்கள் டாக்டரின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் காரை "பார்க்' செய்துவிட்டு, இருளோடு இருளாகக் கலந்து நடந்தோம். மூன்று நான்கு பேராவது சந்தீபனைத் திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

“நாசமாப் போச்சு...'' அவன் சொன்னான்: “இவனுங்க ஏன் பார்க்கிறானுங்க?''

“டேய்...'' நான் சொன்னேன்: “நீ பெரிய மனிதனாக வேண்டுமென்று தீர்மானித்தபோது நினைத்திருக்க வேண்டும்.''

பின்பக்கத்திலிருந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தோம். எங்களை ஒரு மனிதன் உள்ளே அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழைந்ததும் சந்தீபனும் நானும் சற்று அதிர்ச்சியடைந்து விட்டோம். அங்கு லேடி டாக்டரும், அவளுடைய கணவரும், நான்கு குழந்தைகளும், அவர்கள் போதாதென்று பக்கத்து வீடுகளைச் சேர்ந்த எட்டு, பத்து பேர்களும் குழந்தைகளுடன் சந்தீபனை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள். எங்களைக் கண்டவுடன் அவர்கள் வேகமாக எழுந்து மரியாதையுடன் கைகளைக் குவித்து வணங்கினார்கள். ஒரு சிறுமி முன்னால் வந்து சந்தீபனுக்கு ஒரு ரோஜா மலரைத் தந்தாள்.


அவனுடைய முகம் வெளிறிப் போவதை என்னால் பார்க்க முடிந்தது. அவன் உருக்கத்துடன் கையில் ரோஜா மலருடன் விழித்துக்கொண்டு நின்றிருந்தான். ஒரு சிறுமி ஆட்டோக்ராஃப் புத்தகத்துடன் வந்தாள். மற்றவர்கள் சந்தீபனிடம் நலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

அப்போது உள்ளே இருந்த கதவை சற்று திறந்து ஒரு நர்ஸ் லேடி டாக்டரை அழைத்தாள். டாக்டர் அவளிடம் என்னவோ பேசிவிட்டு சந்தீபனிடம் சொன்னாள்: “சரி... நாம் இனியும் நேரத்தை வீணாக்க வேண்டாம்...'' மற்றவர்களிடம் சொன்னாள்: “ப்ளீஸ், எக்ஸ்க்யூஸ் அஸ்...'' அங்கிருந்தவர்கள் பிரிந்து சென்றார்கள். லேடி டாக்டர் சந்தீபனின் முதுகைத் தட்டியவாறு சொன்னாள்: “டோண்ட் ஒர்ரி... எல்லாம் சரியாகும். இப்போதெல்லாம் அபார்ஷன் என்பது ஒரு சாதாரண விஷயம்...''

நாங்கள் மூவரும் உள்ளே நுழைந்தோம். அங்கிருந்த குளிர்ந்து காணப்பட்ட ஒரு அறையில், ஒரு நீளமான மேஜையில், ஒன்றிரண்டு ஸ்பாட் லைட்டுகளுக்குக் கீழே, ஒரு தொலைக்காட்சியில் படுத்திருப்பதைப்போல மாதுரி படுத்திருந்தாள். அவள் உலோகத்தால் ஆனதைப் போன்ற ஒரு ஆடையை அணிந்திருந்தாள். நாங்கள் உள்ளே நுழைந்தவுடன், மாதுரி குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள். சந்தீபன் கதவிற்கு அருகிலேயே அசையாமல் நின்றிருந்தான்.

“போங்க... போங்க... பக்கத்துல போங்க. எந்தவொரு பிரச்சினையும் இல்லை.'' டாக்டர் சந்தீபனிடம்
சொன்னாள். ஆபரேஷன் டேபிளின்மீது கொண்ட மரியாதையின் காரணமாக அவன் அருகில் செல்லாமல் இருக்கிறான் என்று அவள் நினைத்தாள். சந்தீபன் ஒரு கையால் என்னுடைய தோளைப் பற்றினான். அவனையும் என்னையும் மாதுரியால் சரியாகப் பார்க்க முடியவில்லை. எங்களுக்கு நேராக கூர்ந்து பார்த்துவிட்டு அவள் தேம்பிக்கொண்டே அழைத்தாள்: “சந்தீபா! சந்தீபா!''

அவன் அசைவே இல்லாமல் நின்றிருந்தான். நான் அவனிடம் மெதுவான குரலில் சொன்னேன்: “நீ அருகில் சென்று ஏதாவது சொல்லு...''

“அது யார்? ராதாவா?'' மாதுரி அழுதுகொண்டே கேட்டாள். அவள் என்னை ராதா என்றுதான் அழைப்பாள்.

நகரத்தில் வாழ்பவர்களின் ஒரு நாகரீகம்...

நான் அடி விழுந்ததைப்போல அதிர்ச்சியடைந்து சொன்னேன். “ஆமாம்...'' தொடர்ந்து சந்தீபனை முன்னோக்கித் தள்ளினேன். அவன் பயிற்சியில் ஈடுபடும் பட்டாளத்துக்காரனைப்போல மேஜைக்கு அருகில் நடந்தான். மாதுரியை நோக்கி ஒரு இயந்திரத்தைப்போல கையை நீட்டினான். அவள் அதைப் பற்றினாள். அவன் அவளுடைய கையைக் குலுக்கினான். பிறகு கையை விடுவித்தான். பட்டாளத்தில் நடப்பதைப் போல திரும்பி நடந்து வெளியே வந்தான். நானும் அவனைப் பின்தொடர்ந்தேன். டாக்டர் வெளியே தலையை நீட்டிக்கொண்டே சொன்னாள்: “முடிந்த பிறகு நாங்கள் அழைக்கிறோம்.''

வரவேற்பறை ஆட்கள் யாரும் இல்லாமல் வெறுமனே இருந்தது. நான் ஒரு ஸோஃபாவிலும் சந்தீபன் இன்னொரு ஸோஃபாவிலும் போய் உட்கார்ந்தோம். எனக்கு எதுவும் பேச வேண்டுமென்று தோன்றவில்லை. அவனுடைய சிரமமான சூழ்நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. பேயைப்போல வெறித்த கண்களுடன் அவன் அமர்ந்திருந்தான். ஓரிரண்டு முறை சிகரெட்டை எடுத்தான். அதை புகைக்காமல் திரும்பவும் வைத்தான். உள்ளேயிருந்து சிறிய அழுகைச் சத்தம் கேட்டதைப்போல எனக்கு சந்தேகம் உண்டானது. அவன் என்னைப் பார்த்தான். உடனே தெளிவான ஒரு அழுகைச் சத்தம் வருவதை நாங்கள் கேட்டோம்.

சந்தீபன் எழுந்து நின்றான். நான் அவனுக்கு அருகில் சென்றேன். அவன் சொன்னான்: “ராதாகிருஷ்ணா, நீ இங்கேயே இரு. நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்.''

“டேய்...'' நான் சொன்னேன். “இப்போது மது அருந்தாமல் இருப்பதுதான் நல்லது. இனியும் மீதி வேலைகள் இருக்கின்றனவே! அது மட்டுமல்ல; உன்மீது எனக்கு நம்பிக்கை வரவில்லை. நீ பயந்து போய், வயிற்றுப் போக்கு உண்டாகி, மது அருந்திவிட்டு எங்காவது இருந்தால்...? நான் இங்கே மாட்டிக்கொள்வேன். அதனால் நீ எங்கேயும் போக வேண்டாம்.''

அவன் ஸோஃபாவில் போய் உட்கார்ந்தான்.

பின்னோக்கிச் சாய்ந்து கண்களை மூடினான். நான் எழுந்து டாக்டரின் கண்ணாடி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மருத்துவ அறிவியல் சம்பந்தப்பட்ட நூல்களின் பெயர்களை வாசித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து திரும்பிவந்து பழைய, கிழிந்து போய் காணப்பட்ட ஒரு சினிமா மாத இதழை வாசித்தேன். அதன் இறுதி பக்கத்தை அடைந்தபோது, உள்ளே இருந்த அறையின் கதவு திறந்தது.

டாக்டர் புன்னைகத்துக் கொண்டு, சற்று வியர்வை வழிய வெளியே வந்தாள். சந்தீபன் கண்களை மூடி உட்கார்ந்திருந்தான். நான் அவனைத் தொட்டு எழுப்பினேன். டாக்டர் சைகை செய்ததைத் தொடர்ந்து அவன் உள்ளே சென்றான். உள்ளேயிருந்து மீண்டும் தேம்பி அழும் சத்தங்கள்...

சந்தீபன் வெளியே வந்தான். அவன் மிகவும் கவலையில் இருக்கிறான் என்று அந்த முகத்திலேயே எழுதி வைக்கப்பட்டிருந்தது. எனக்கு அருகில் வந்து அவன் கூறினான்: “ராதாகிருஷ்ணா, இன்று நான் ஹாஸ்டலுக்குப் போகமுடியாது என்று மாதுரி கூறுகிறாள்.

இன்றிரவு நான் அவளுடன் இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துகிறாள். என்ன செய்வது? நீ அவளிடம் கொஞ்சம் பேசுகிறாயா?''

“சந்தீபா, நீ நல்ல ஹோட்டலில் அறை எடு. பிறகு இரவில் அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, காலையில் ஹாஸ்டலில் கொண்டுபோய் விடு.''

“ஹோட்டல் அறையா?'' அவன் கேட்டான்.

“நீ காதலிப்பதற்கு விருப்பம்போல ஹோட்டலில் அறை எடுப்பாய் அல்லவா? அதேபோல் ஒரு அறையை எடு.''

“டேய்... அதுவல்ல...'' அவன் சொன்னான்: “அவளுடன் இருக்கவேண்டுமென்று எனக்குத் தோன்றவில்லை. நீ என்னை கொஞ்சம் புரிஞ்சுக்கோ.''

“உனக்கென்ன பயமா? உன்னை அவள் ஏதாவது செய்துவிடுவாளோ என்று பயப்படுறியா? இல்லா விட்டால் அந்தக் குழந்தையின் ஆவி வந்து உன்னை பிடிச்சிடப்போகுதோன்னு தோணுதா? பயப்படாதேடா. நீயும் அவளும் கட்டிப் பிடிச்சு தூங்குங்க. கொஞ்சம் கண்ணீர் உன் உடல்மீது விழும். அவ்வளவுதான்...''

அப்போது சந்தீபன் சொன்னான்: “டேய், கட்டிப் பிடிக்கிறது இருக்கட்டும்... அவளைப் பார்க்க வேண்டுமென்றுகூட எனக்குத் தோன்றவில்லை. அவளுடன் சேர்ந்து ஒரு இரவு எப்படி இருக்க முடியும்?''

சந்தீபன் ஒரு கையால் தலையில் அடித்துக்கொண்டான். சிறிது நேரம் கழித்து அவன் சொன்னான்: “நீயும் எங்களுடன் வரணும்.''

“எங்கே?'' நான் கேட்டேன்.

“ஹோட்டல் அறைக்கு. சிறிது நேரம் கழித்து நீ போய் விடு. ஆனால், முதலில் நீ வேண்டும்.''

எனக்கு சத்தம் போட்டு சிரிக்கவேண்டுமென்று தோன்றியது. நான் சொன்னேன்: “டேய் சந்தீபா, இதுவரை நான் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இரவு நேரத்தில் தூங்கியதில்லை. இப்போது... இதோ... உனக்கும் உன்னுடைய காதலிக்கும் இரவு வேளையில் துணையாக நான்! நான் சிரிக்க வேண்டுமா அழவேண்டுமா என்று நீ சொல்லு.


நான் சீக்கிரம் அறைக்குப் போய் இன்றைய மலையாளத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். டேய்... "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' படத்தைப் பார்ப்பதற்கு நான் எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறேன் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?''

சந்தீபனின் முகம் வாடிவிட்டது. அவன் சொன்னான்:

“ராதாகிருஷ்ணா, நான் உன்னுடைய காலைப் பிடிக்கிறேன். நீ என்னைவிட்டுப் போய்விடாதே.''

“சரி... அப்படின்னா... செய்...'' நான் சொன்னேன்.

அவன் வேகமாக ஃபோன் பண்ணி ஹோட்டலில் ஒரு டபுள் ரூமை புக் செய்தான். ஹோட்டலின் பெயரைக் கேட்டதும் நான் நினைத்தேன்- தொலைந்தது மூவாயிரம் ரூபாய். கருக்கலைப்பு செய்ததற்கு ஒரு இருபத்தய்யாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்- டில்லி கணக்குப்படி. இனி மாதுரிக்கு ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொடுக்கும்போது, பையனுக்கு ஒரு நாற்பது... ஐம்பது ரூபாய் அன்புப் பரிசாக கிடைக்கும். வெறும் காதல் மட்டும் காரணம்!

சந்தீபன் சொன்னான்: “நாங்கள் அறை எடுக்கும்போது நீ வரவேற்பறையில் இருந்தால் போதும். நாங்கள் லிஃப்ட்டில் நுழையும்போது, நீயும் அதற்குள் நுழைய வேண்டும். ரூம் பாய் போன பிறகு, நீ அறைக்குள் வரவேண்டும். டேய். ஏமாற்றி விடாதே.''

“டேய்... நான் இதுவரை ஆணையோ பெண்ணையோ ஏமாற்றியதே இல்லை.''

அவன் எதுவும் சொல்லவில்லை.

மாதுரி வெளியே வந்தாள். ஒப்பனை செய்திருந்தாலும், கருத்துப் போன முகத்துடனும், கலங்கிய கண்களுடனும் இருந்தாள். ஒரு நர்ஸ் அவளுடைய சூட்கேஸை உருட்டிக் கொண்டு வந்தாள். நல்ல வேளை- நான் நினைத்தேன்- இனி ஹோட்டலில் சூட்கேஸ் பிரச்சினை இல்லை. மாதுரி சிரமத்துடன் சுவரை ஒரு கையால் பற்றிக்கொண்டே நடந்தாள்.

“நீ போய் கையைப் பிடிடா.'' நான் சந்தீபனிடம் கூறினேன்.

அவன் எங்கோ பார்த்துக்கொண்டே நடந்து சென்று மாதுரியின் கையைப் பற்றி, அவளை முன்னோக்கி நடத்திக்கொண்டு வந்தான். என்னைப் பார்த்ததும் மாதுரி மிகவும் பலவீனமான குரலில் சொன்னாள்: “ஹலோ... ராதா...''

சந்தீபன் பின்வாசலுக்கு அருகில் காரைக் கொண்டு வந்தான். மாதுரி பின்னிருக்கையில் அமர்ந்தாள். பிறகு... படுத்துக் கொண்டாள். நான் முன்னால் உட்கார்ந்தேன். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலே நாங்கள் அடுத்தடுத்து ஹோட்டலின் அறைக்கே வந்தோம். ஸோஃபாக்கள் போடப்பட்டிருந்த உட்காரும் அறைக்குப் பின்னால் படுக்கையறை இருந்தது. மாதுரி கட்டிலில் போய் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். நான் அறைக் குள் நுழைந்ததும், சந்தீபன் கதவில் "டூ நாட் டிஸ்டர்ப்' போர்டைத் தொங்கவிட்டு கதவை அடைத்தான். விளக்குகள் அனைத்தையும் அணைக்க ஆரம்பித்தான்.

“இது என்ன விளையாட்டுடா?'' நான் முணுமுணுத்தேன். “இந்த இருட்டில் எப்படி உட்கார்ந்திருப்பது? டெலிவிஷன்கூட அந்த அறையில்தான் இருக்கிறது. இல்லா விட்டால்... நான் "நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.''

சிறிது நேரம் அவன் எதுவும் பேசாமலே ஸோஃபா வில் உட்கார்ந்திருந்தான். பிறகு எழுந்து நின்றுகொண்டு சொன்னான்: “ராதாகிருஷ்ணா, நீ எங்கயும் போயிடாதே...''

அவன் படுக்கையறைக்குள் தட்டுத்தடுமாறிச் சென்றான்.

என்னுடைய காலை மிதித்து அவன் விழப் போனான்.

எனக்கு கடுமையான வேதனை உண்டானது. நான் மனதிற்குள் நினைத்தேன்- காதல் என்பது இந்த அளவிற்கு பயங்கரமான ஒரு விஷயமா? இது கொஞ்சம் கஷ்டமான விஷயமாச்சே! இதைவிட என்னுடைய விஷயம் எவ்வளவோ பரவாயில்லையே!

படுக்கையறைக்குள்ளிருந்து தேம்பியழும் சத்தமும், சிணுங்கல்களும், இதுதான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய ஓசைகளும், ஒரு பூகம்பம் உண்டாவதைப்போல உண்டாக ஆரம்பித்தன. இருட்டைக் கிழித்துக்கொண்டு அவையனைத்தும் வடிவமெடுத்து என்னை நோக்கி வருவதைப்போலத் தோன்றியது.

சந்தீபன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். ஆனால், மாதுரியின் அழுகைச் சத்தத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. பஞ்சாபிப் பெண்களுக்கே இருக்கும் ஒரு பழக்கமாக அது இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். சந்தீபனின் ஒவ்வொரு முட்டாள்தனமான செயல்களையும் பார்த்தால்...! மாதுரியின் கண்ணீர் தரை வழியாகவும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அங்கே அமர்ந்திருக்கும்போது எனக்கு தோன்றியது.

நான் கால்கள் இரண்டையும் தூக்கி நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். சிறிது நேரம் சென்றதும் இருட்டுக்குள்ளிருந்து வந்த அழுகைச் சத்தத்தின் வடிவங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் மனித உருவங்களும் மிருக உருவங்களும் இருந்தன. சில வடிவங்களைச் சுற்றிலும் வெளிச்சம் இருந்தது. சில தூரத்தில் நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொன்றின் சத்தமும் வெவ்வேறாக இருந்தன.

பிறகு நான் எப்போதோ காதுகளைக் கூர்மைப் படுத்திக்கொண்டு கேட்டபோது, படுக்கையறையில் முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. நான் நீண்ட பெருமூச்சு விட்டேன். இனி சந்தீபன் அங்கு படுத்து உறங்காமல் வெளியே வந்தால் நான் இங்கிருந்து கிளம்பலாம். அப்போது இருட்டுக் குள்ளிருந்து ஏதோவொன்று என்னைத் தொட்டது. நான் அதிர்ச்சியடைந்து பின்னோக்கி நகர்ந்து நின்றேன். சந்தீபனின் குரல் முணுமுணுப்பாக வந்தது: “ராதாகிருஷ்ணா, அவள் தூங்கிவிட்டாள். நீ இன்னும் அரைமணி நேரம் இருந்தால் போதும். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்.''

“சந்தீபா...'' நான் மெதுவான குரலில் சொன்னேன்: “அதிகமாக மது அருந்தாதே. நான் இங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தை மறக்கவும் வேண்டாம். நீ வந்தாலும் வராவிட்டாலும் முப்பத்தைந்தாவது நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன்.''

“சரி...'' அவன் சொன்னான். தொடர்ந்து சத்தம் உண்டாக்காமல் கதவைத் திறந்து வெளியேறினான்.
நான் ஸோஃபாவில் நன்றாக சாய்ந்து படுத்தேன். கால்களை மீண்டும் நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். கஷ்டம்! "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' திரைப்படம் இப்போது முடிந்திருக்கும்!

அப்போது நான் அதிர்ச்சியடையும் அளவிற்கு உள்ளே இருந்து மாதுரி அழைத்தாள்: “ராதா...'' அவளுடைய குரல் சத்தமாகக் கேட்கவில்லை.

நான் சொன்னேன்: “ஹலோ...''

“இங்கே வாங்க ராதா...'' - அவள் சொன்னாள். அவள் கூறியதை மிகவும் சிரமப்பட்டே கேட்க முடிந்தது.

நான் எதுவும் பேசாமல், அசைவே இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தேன். தூக்கத்தில் கூறியிருக்க வேண்டும். தூங்கட்டும்.

அப்போது மாதுரி மீண்டும் அழைத்தாள்: “ராதா... இங்கே வாங்க.''

என்னவோ பிரச்சினையாகிவிட்டது. நான் நினைத்தேன். சந்தீபனும் இல்லை. டாக்டரின் எண்ணும் இல்லை. ஊர் சுற்றிப்பயல்... மது அருந்துவதற்கு அவன் தேர்ந்தெடுத்திருக்கும் நேரம்...

நான் அவளுடைய கட்டிலுக்கு அருகில் பதைபதைப்புடன் சென்றேன். ஒருவேளை... அவள் தற்கொலை செய்துகொண்டாளோ?

“இங்கே உட்காருங்க...'' கட்டிலின் ஓரத்தைச் சுட்டிக்காட்டியவாறு அவள் சொன்னாள்.

நான் அமர்ந்தேன். சாளரத்தின் திரைச் சீலையின் வழியாக உள்ளே வந்த சிறிய வெளிச்சத்தில் நான் அவளுடைய முகத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது.


“என்னை கட்டிப் பிடி, ராதா.'' அவள் சொன்னாள்.

நான் என்னவோ கூற முயற்சித்தேன். ஆனால், என்னுடைய குரல் வெளியே வரவில்லை.

“என்னை கட்டிப் பிடி...'' அவள் சொன்னாள்.

நான் கட்டிலின்மீது சாய்ந்து அவளைக் கட்டிப் பிடித்தேன். தொடர்ந்து எழ ஆரம்பித்தேன். அவள் கூறினாள்: “வேண்டாம்...''

சிறிது நேரம் சென்றதும் மாதுரி சொன்னாள்: “என் மார்பில் கையை வை.''

நான் அவளுடைய மார்பில் கையை வைத்தேன்.

“என் அடிவயிற்றில் தடவு...''

நான் அவளுடைய அடிவயிற்றில் தடவினேன்.

“இங்கே...'' என்னுடைய கையைப் பிடித்து வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். “என் குழந்தை இப்போது எங்கே இருக்கிறது?'' அவள் கேட்டாள். தொடர்ந்து என்னை அழுத்திப் பிடித்தாள்.

அவளுடைய தலைமுடி என்னுடைய வாயிலும், முடியில் தேய்க்கப்பட்டிருந்த நறுமணம் என்னுடைய நாசியையும் நிறைத்தன.

“என் தொடைகளில் ரத்தம் இருக்கிறதா என்று பார்.''

நான் தடவிப் பார்த்துவிட்டு சொன்னேன்: “இல்லை...''

“என் குழந்தையின் முகச்சாயல் எப்படி இருந்திருக்கும்?''

நான் எதுவும் கூறவில்லை.

“என் கண்களைத் துடைத்து விடுங்க, ராதா.'' அவள் சொன்னாள்.

நான் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டேன். கொஞ்சம் குளிர்ச்சியான ஈரம் மட்டும்...

“என் உதடுகளில் முத்தமிடுங்க...''

நான் என்னுடைய உதடுகளை அவளுடைய உதடுகளில் வைத்தேன்.

அவள் சொன்னாள்: “தேங்க்ஸ், ராதா.''

“தேங்க்ஸ்...'' நான் எழுந்து நின்றவாறு சொன்னேன். அவள் தூங்கிவிட்டாள்.

நான் ஸோஃபாவிற்குத் திரும்பிவந்து உட்கார்ந்த நேரம் -சந்தீபன் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவனிடமிருந்து நன்றாகவே மதுவின் வாசனை வந்துகொண்டிருந்தது.

“சந்தீபா...'' நான் சொன்னேன்: “நீ இனிமேல் மாதுரியை எழுப்ப வேண்டாம். இந்த ஸோஃபாவில் படுத்துத் தூங்கு.''

“சரி...'' -அவன் ஷுக்களைக் கழற்றிக்கொண்டே சொன்னான்: “உன்னை நான் நாளை அழைக்கிறேன்.''

கால்க்காஜிக்குச் செல்லும் இறுதிப் பேருந்து எனக்குக் கிடைத்தது. பேருந்தில் அமர்ந்து தூக்கம் வந்து கண்களைக் கசக்கியபோது, கைகளிலிருந்து வந்த ஒரு புதிய வாசனை என்னை ஆச்சரியப்படச் செய்தது. அதிர்ச்சியடைந்து நான் என் கைகளை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.