Logo

எலியாஸ்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 8823

ல வருடங்களுக்கு முன்பு உஃபா என்ற நாட்டில் எலியாஸ் என்ற பெயரைக் கொண்ட ஒரு விவசாயி வாழ்ந்தார். அவருக்குத் திருமணம் செய்து வைத்த ஒரு வருடத்தி லேயே அவருடைய தந்தை இறந்துவிட்டார். இறக்கும்போது தன் மகனுக்கு பெரிதாகக் கூறும் அளவுக்கு சொத்து எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை. அப்போது எலியாஸிடம் ஏழு செம்மறி ஆடுகளும், இரண்டு காளைகளும், இருபது வெள்ளாடுகளும் இருந்தன.

எலியாஸ் ஒரு அருமை யான நிர்வாகி. அதனால் மிகவும் குறுகிய காலத்தில் அவர் படிப்படியாக நல்ல நிலைக்கு உயர்ந்தார். அவரும் அவருடைய மனைவியும் காலையிலிருந்து இரவு வரை கடுமையாக உழைத்தார்கள். மற்றவர்களைவிட சீக்கிரமே படுக்கையைவிட்டு எழுந்து, மற்றவர்களைவிட தாமத மாகத் தூங்கச் சென்றார்கள். அவருடைய சொத்து ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே இருந்தது. தான் வாழ்ந்துகொண்டிருந்த வாழ்க்கையின் மூலம் எலியாஸ் பெரிய அளவில் பணம் சம்பாதித்தார். தனக்கு 35 வயது ஆகும்போது அவரிடம் 200 குதிரைகளும் 150 மாடு களும் 1200 ஆடுகளும் இருந்தன. வேலைக்கு அமர்த்தப் பட்ட தொழிலாளர்கள் அவருடைய ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்தார்கள். கூலிக்கு அமர்த்தப்பட்ட பெண்கள் ஆடுகளிடமும் மாடுகளிடமும் பால் கறந்து, “க்யூமிஸ்” என்ற நறுமணம் கமழும் குளிர்பானத்தை அதிலிருந்து தயாரித்தார்கள். அத்துடன் வெண்ணெயை யும், வெண்ணெய்க் கட்டியையும். எலியாஸிடம் எல்லாமும் ஏராளமாக இருந்தன. அந்த வட்டாரத்திலிருந்த ஒவ்வொருவரும் அவரைப் பார்த்துப் பொறாமைப்பட்டார்கள். அவர்கள் அவரைப் பற்றிச் சொன்னார்கள்: “எலியாஸ் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. அவர்கிட்ட எல்லாமும் ஏராளமா இருக்கு. இந்த உலகம் அவருக்கு உண்மையிலேயே சொர்க்கம் மாதிரி...”

நல்ல நிலையில் இருக்கும் மனிதர்கள் எலியாஸைப் பற்றி கேள்விப்பட்டு அவருடன் அறிமுகம் ஆகிக்கொள்ள விரும்பினார்கள். அவரைப் பார்ப்பதற்காக பிற இடங்களிலிருந்துகூட ஆட்கள் வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் வரவேற்று, அவர்களுக்கு உணவும், குடிப்பதற்கும் கொடுத்தார். எப்போது யார் வந்தாலும் அவர்களுக்கு க்யூமிஸ், தேநீர், சர்பத், மாமிசம் எல்லாம் தயாராக இருக்கும். அவரைப் பார்ப்பதற்கு ஆட்கள் வரும் போதெல்லாம் கட்டாயம் ஒரு ஆடு வெட்டப்படும். சில வேளைகளில் இரண்டு ஆடுகள்கூட. நிறைய பேர் வந்து விட்டால், ஒரு செம்மறி ஆட்டையே அவர்களுக்காக அவர் வெட்டுவார்.

எலியாஸுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்களும் ஒரு மகளும். அவர்கள் எல்லாருக்கும் அவர் திருமணம் முடித்து விட்டார். அவர் மிகவும் ஏழையாக இருந்தபோது, அவருடைய மகன்கள் அவருடன் சேர்ந்து வேலை செய்வார்கள். ஆடு, மாடுகளைப் பார்த்துக் கொள்வார்கள். ஆனால், அவர் பணக்காரராக வளர்ந்தபோது, அவர்கள் மிகவும் கெட்டுப் போனார்கள். அவர்களில் ஒருவன் குடிப்பழக்கத்திற்கு அடிமை யாகிப் போனான். மூத்த மகன் ஒரு தகராறில் கொலை செய்யப் பட்டான். இளைய மகன் தன்னிச்சை குணம் கொண்ட ஒரு பெண்ணை மணந்து, தந்தையைச் சிறிதும் மதிப்பதில்லை. அதனால் அவர்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து வாழ முடியாமல் போய்விட்டது. அதனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.

எலியாஸ் தன் மகனுக்கு ஒரு வீட்டையும், கால்நடைகளில் சிலவற்றையும் கொடுத்தார். அதன் விளைவாக அவருடைய சொத்து சற்று குறைந்தது. அதற்குப் பிறகு ஒரு நோய் பரவியதில், எலியாஸின் ஆட்டுக் கூட்டத்தில் பெரும்பாலானவை இறந்தன. தொடர்ந்து வந்த அறுவடை மிகவும் மோசமாக இருந்தது. நினைத்த மாதிரி பயிரின் அறுவடை இல்லை. பயங்கர ஏமாற்றத் தைத் தந்தது. அந்தக் குளிர் காலத்தின்போது கால்நடைகளில் பெரும்பாலானவை இறந்தன. கிர்கிஸ்காரர்கள் அவருடைய மிகச்சிறந்த குதிரைகளைப் பிடித்துக்கொண்டார்கள். கடைசியில் எலியாஸின் சொத்து குறைந்துகொண்டே வந்தது. அவர் எழுபது வயதை அடைந்தபோது, தன்னிடமிருந்த கம்பளி, போர்வை, குதிரைகளின் சேணங்கள், கூடாரங்கள் எல்லாவற்றையும் விற்க ஆரம்பித்தார். கடைசியில் மீதமிருந்த கால்நடைகளையும் அவர் இழக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. சிறிது நாட்களில் அவர் பற்றாக்குறை கொண்ட மனிதராக ஆனார். இந்தச் சூழ்நிலை தனக்கு எப்படி வந்தது என்பதை நினைக்கும் நேரத்தில், அவர் தன்னிட மிருந்த எல்லாவற்றையும் இழந்திருந்தார். தங்களின் வயதான காலத்தில் அவரும் அவருடைய மனைவியும் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை உண்டானது. அணிந்திருந்த ஆடை, ஒரு உரோமத்தால் ஆன அங்கி, ஒரு தொப்பி, வீட்டுக்குள் அணியும் காலணிகள், வெளியே அணியும் காலணிகள், வயதாகிப் போன அவருடைய மனைவி ஷாம் ஷெமாகி- இவற்றைத் தவிர எலியாஸிடம் எஞ்சி இருந்தது வேறெதுவுமில்லை. அவரிடமிருந்து பிரிந்து சென்ற அவருடைய மகன் எங்கோ தூர தேசத்திற்குச் சென்று விட்டான். அவருடைய மகள் இறந்துவிட்டாள். கடைசி யில் அந்த வயதான தம்பதிகளைக் காப்பாற்றுவதற்கு இந்த உலகில் யாருமே இல்லை என்ற நிலை உண்டாகிவிட்டது.

அவர்களுக்கு பக்கத்து வீட்டிலிருந்த முஹம்மது ஷா அவர்களைப் பார்த்து இரக்கம் கொண்டார். அவர் மிகப்பெரிய பணக்காரரும் இல்லை- ஏழையும் இல்லை. ஆனால், எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். மொத்தத்தில்- அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தார். அவர் எலியாஸின் விருந்தோம்பும் குணத்தை நினைத்துப் பார்த்து அவரிடம்  சொன்னார்:

“எலியாஸ், நீங்களும் உங்க வயதான மனைவியும் என்கூட வந்து இருங்க. கோடை காலத்துல என்னோட தர்பூசணி தோட்டத்துல உங்களால எந்த அளவுக்கு முடியுதோ, அந்த அளவுக்கு வேலை செய்யலாம். குளிர்காலம் வந்திருச்சின்னா, என்னோட கால்நடை களை நீங்க பார்த்துக்கலாம். ஷாம் ஷெமாகி என்னோட ஆடுகளைக் கறந்து க்யூமிஸ் தயாரிக்கட்டும். நான் உங்க  ரெண்டு பேருக்கும் தேவையான உணவு, உடை ஆகிய விஷயங்களைப் பார்த்துக்குறேன். உங்களுக்கு ஏதாவது தேவைப்பட்டா, என்கிட்ட சொல்லுங்க. உடனே உங்களுக்கு அது கிடைக்கிற மாதிரி செய்யிறேன்.”

எலியாஸ் தன் பக்கத்து வீட்டுக்கார முஹம்மது ஷாவுக்கு நன்றி சொன்னார். அவரும் அவருடைய மனைவியும் முஹம்மது ஷாவிடம் வேலைக்காரர்களாகச் சேர்ந்தார்கள். முதலில் வேலை செய்வது அவர்களுக்கு கஷ்டமாகவே இருந்தது. ஆனால், பழகப் பழக எல்லாம் சரியாகிவிட்டது. அவர்களின் உடல் எந்த அளவுக்கு ஒத்துழைக்கிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தார்கள்.


அவர்களை வேலைக்கு வைத்திருப்பது ஒரு விதத்தில் பார்க்கப் போனால் முஹம்மது ஷாவுக்கு லாபகரமான ஒரு விஷயமாகவே இருந்தது. வேலைகளைப் பற்றிய முழு அறிவும், அதை எப்படி முறையாகச் செய்வது என்பதும் அவர்களுக்கு நன்கு தெரிந்திருந் ததே அதற்குக் காரணம். அவர்கள் சோம்பேறியாக எதுவும் செய்யா மல் இருக்க சிறிதும் விரும்பவில்லை. மாறாக, அவர்களால் எந்த அளவுக்குச் செய்ய முடியுமோ, அதைச் செய்து கொண்டிருந் தார்கள். உயர்ந்த நிலையில் இருந்த அவர்களை இப்படிப்பட்ட ஒரு நிலையில் பார்ப்பதற்கு உண்மையிலேயே முஹம்மது ஷா மிகவும் வருத்தப்பட்டார்.

இதற்கிடையில் ஒருநாள் முஹம்மது ஷாவின் சொந்தக்காரர்கள் சிலர் தூர இடத்திலிருந்து அவருடைய வீட்டுக்கு விருந்தாளிகளாக வந்தார்கள். அவர்களில் ஒரு முல்லாவும் இருந்தார். முஹம்மது ஷா எலியாஸிடம் ஒரு ஆட்டைப் பிடித்துக் கொண்டு வந்து அறுக்கும் படி சொன்னார். எலியாஸ் ஆட்டை அறுத்து மாமிசத்தை வேக வைத்து விருந்தாளிகளுக்கு அனுப்பி வைத்தார். விருந்தாளிகள் மாமிசத்தைச் சாப்பிட்டார்கள். தேநீர் பருகினார்கள். பிறகு க்யூமிஸ் ஸைக் குடித்தார்கள். தரை விரிப்பின்மீது போடப்பட்டிருந்த குஷன்களில் உட்கார்ந்து அவர்கள் முஹம்மது ஷாவுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, வேலைகளை முடித்துவிட்ட எலியாஸ் திறந்திருந்த கதவு வழியாக அவர்களைக் கடந்து போனார். எலியாஸ் நடந்து போவதைப் பார்த்த முஹம்மது ஷா விருந்தாளிகளில் ஒருவரைப்  பார்த்துக் கேட்டார்:

“இப்போ நம்மைக் கடந்து போனாரே, ஒரு வயதான மனிதர்! அவரை கவனிச்சீங்களா?”

“ஆமா...” அந்த விருந்தாளி சொன்னார்: “அவரைப் பற்றி சொல்றதுக்கு ஏதாவது இருக்கா என்ன?”

“ஆமா... இந்த ஊர்ல இருக்குறவங்கள்லேயே ஒரு சமயம் மிகப்பெரிய பணக்காரரா இருந்தவர் அவர்.”  முஹம்மது ஷா சொன்னார்: “அவர் பேரு எலியாஸ். அவரைப் பற்றி நீங்க கேள்விப்பட்டிருக்கலாம்.”

“ஆமா... நான் கேள்விப்பட்டிருக்கேன்.” அந்த விருந்தாளி சொன்னார்: “அவரை நாங்க இதுக்கு முன்னாடி பார்த்தது இல்ல. ஆனா, அவரோட புகழ் தூர இடங்கள்லகூட பரவியிருக்கு...”

“நீங்க சொல்றது சரிதான்... ஆனா, இப்போ அவர்கிட்ட எதுவுமே இல்ல.” முஹம்மது ஷா சொன்னார்: “இப்போ என்னோட வேலைக்காரரா அவர் என்கூட வாழ்ந்துக்கிட்டு இருக்காரு. அவரோட மனைவிகூட இங்கேதான் இருக்காங்க. அவங்கதான் ஆடுகள்கிட்ட இருந்து பால் கறக்குறாங்க.”

அதைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார் அந்த விருந்தாளி. அவர் நாக்கால் ஒரு ஓசை உண்டாக்கியவாறு தலையை ஆட்டிக்கொண்டே சொன்னார்:

“அதிர்ஷ்டம்ன்றது ஒரு சக்கரத்தைப்போல மாறிமாறி சுழன்று கொண்டிருக்கும். ஒரு மனிதனை அது மேலே உயர்த்திவிடும். அதே நேரத்துல இன்னொரு மனிதனைக் கீழே தள்ளிவிடும். தன்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்ததற்காக அந்த வயதான மனிதர் கவலைப்படலையா?”

“யார் அதைப் பற்றி அவருக்கிட்ட கேட்கமுடியும்? அவர் எந்த பிரச்சினையும் இல்லாம மிகவும் அமைதியா வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்காரு. தான் செய்யிற வேலையை ஒழுங்கா செய்யிறாரு...”

“நான் வேணும்னா அவர்கிட்ட பேசட்டுமா?” அந்த விருந்தாளி கேட்டார்: “நான் அவரோட வாழ்க்கையைப் பற்றி அவர்கிட்ட கேட்க விரும்புகிறேன்.”

“தாராளமா...” முஹம்மது ஷா சொன்னார். சொன்னதோடு நிற்காமல் தாங்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்தே, “தாத்தா, வாங்க. எங்களோட உட்கார்ந்து ஒரு கோப்பை க்யூமிஸ் குடிங்க. உங்க மனைவியையும் இங்கே வரச்சொல்லுங்க” என்றார்.

எலியாஸ் தன் மனைவியுடன் அங்கு வந்தார். தன் முதலாளிக்கும் விருந்தாளிகளுக்கும் வணக்கம் சொன்ன அவர் ஒரு பிரார்த்த னையை வாயால் கூறியவாறு கதவுக்கு அருகில் போய் உட்கார்ந்தார். அவருடைய மனைவி திரைச்சீலைக்குப் பின்னால் தன்னுடைய எஜமானிக்கு அருகில் போய் உட்கார்ந்தாள்.

எலியாஸுக்கு ஒரு கோப்பை க்யூமிஸ் கொடுக்கப்பட்டது. அவர் விருந்தாளிகளும் தன் முதலாளியும் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று வாழ்த்தியவாறு, தலையைக் குனிந்து கொண்டு, சிறிது க்யூமிஸைக் குடித்துவிட்டு, கோப்பையைக் கீழே வைத்தார்.

“சரி, தந்தையே!” அவருடன் பேச நினைத்த விருந்தாளி சொன்னார்: “எங்களைப் பார்த்தவுடன் உங்க மனசுல வருத்தப் பட்டீங்கன்னு நான் நினைக்கிறேன். இது உங்களோட பழைய செழிப்பான வாழ்க்கையையும் இப்போ இருக்குற கவலைகளையும் ஞாபகத்துல கொண்டு வந்திருக்கலாம்.”

அதற்கு எலியாஸ் புன்னகைத்தவாறு சொன்னார்: “வாழ்க்கை யில எது சந்தோஷம் தரக்கூடிய விஷயம், எது துரதிர்ஷ்டம்னு நான் சொல்றதா இருந்தா, நீங்க நான் சொல்றதை நம்ப மாட்டீங்க. நான் சொல்றதைவிட என் மனைவி சொல்றது பொருத்தமா இருக்கும். அவ ஒரு பெண். அவ இதயத்துல என்ன  இருக்குதோ, அதுதான் வெளியேயும் வரும். அவள் எல்லா உண்மைகளையும் உங்களுக்குச் சொல்லுவா...”

விருந்தாளி திரைச்சீலையை நோக்கித் திரும்பினார்.

“சரி, பாட்டி...” அந்த விருந்தாளி தொழுதவாறு  சொன்னார்: “உங்க பழைய சந்தோஷம் நிறைந்த வாழ்க்கையையும் இப்போ இருக்குற துரதிர்ஷ்டம் வாய்ந்த வாழ்க்கையையும் பற்றிச் சொல்லுங்க...”

ஷாம் ஷெமாகி திரைச்சீலைக்குப் பின்னாலிருந்தவாறு பதில் சொன்னாள்:

“நான் எங்க வாழ்க்கையைப் பற்றி நினைக்கிறது இதுதான். நானும் என் வயதான கணவரும் சந்தோஷத்தைத் தேடி ஐம்பது வருடங்களா வாழ்க்கையை நடத்தினோம். ஆனால், எங்களால மகிழ்ச்சின்ற ஒண்ணைப் பார்க்கவே முடியல. கடந்த ரெண்டு வருடங்களா, எங்கக்கிட்ட எதுவுமே மீதம் இல்லைன்ற சூழ்நிலை உண்டாகி நாங்க தொழிலாளர்களா ஆன பிறகுதான் உண்மையான மகிழ்ச்சியையே நாங்க பார்க்குறோம். இப்போ இருக்குறதைவிட பெரிசா நாங்க எதையும் எதிர்பார்க்கல.”

அதைக் கேட்டு விருந்தாளிகள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள். முஹம்மது ஷாவும்தான். அவர் எழுந்து அந்த வயதான பெண்ணின் முகத்தை எல்லாரும் பார்க்கும் வண்ணம் திரைச் சீலையை இழுத்து விட்டார். அந்த வயதான பெண் அங்கு கைகளைக் கட்டிக்கொண்டு தன் கணவரைப் பார்த்து புன்னகை செய்தவாறு நின்றிருந்தாள். எலியாஸ் திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தார். கிழவி தான் சொல்லிக் கொண்டிருந்ததைத் தொடர்ந்தாள்.

“நான் உண்மையைச் சொன்னேன். இதைச் சொன்னதுக்காக நான் வருத்தப்படல. அரை நூற்றாண்டு காலமாக நாங்க சந்தோஷத்தைத் தேடி அலைஞ்சோம். நாங்க பணக்காரர்களா இருந்த வரைக்கும், எங்களுக்கு அது கிடைக்கல. இப்போ எங்கக்கிட்ட எதுவும் இல்ல. தொழிலாளிகளா நாங்க வேலை செய்ய ஆரம்பித்தவுடனே, இதைவிட உலகத்துல சிறப்பானது என்ன இருக்குன்னு சொல்ற அளவுக்கு நாங்க வாழ்க்கையில சந்தோஷத்தை அனுபவிச்சிக்கிட்டு இருக்கோம்.”

“எது உங்களுக்கு சந்தோஷத்தைத் தருது?” அந்த விருந்தாளி கேட்டார்.


“இப்போ இருக்குற வாழ்க்கைதான்...” அந்த கிழவி சொன்னாள்: “நாங்க பணக்காரர்களா இருந்தப்போ, என் கணவருக்கும் எனக்கும் ஏகப்பட்ட பொறுப்புகள் இருக்கும். நாங்க ஒருவரோடு ஒருத்தர் பேசிக்கிறதுக்குக்கூட எங்களுக்கு நேரம் இருக்காது. எங்களைப் பற்றி நாங்க நினைக்கிறதுக்கும் கடவுளை வணக்குறதுக்கும்கூட நேரம் இருக்காது. எங்களைத் தேடி விருந்தாளிகள் வருவாங்க. அவங்களுக்குத் தேவையான உணவைத் தயார் பண்ணித் தரணும். அவங்களுக்குப் பரிசுகள் ஏதாவது தரணும். இல்லாட்டி எங்களைப் பற்றி அவங்க ஏதாவது தப்பா பேசுவாங்க. அவங்க கிளம்பிப் போன பிறகு நாங்க எங்க வேலைக்காரர்களைப் பார்க்கணும். அவங்க முடிஞ்ச வரையில வேலையை ஒழுங்காச் செய்யாம, நல்லா சாப்பிடணும்னு மட்டும் நினைப்பாங்க. ஆனா, நாங்க அவங்கக்கிட்ட இருந்து எந்த அளவுக்கு வேலையை வாங்க முடியுமோ, அந்த அளவுக்கு வேலையை வாங்குவோம். சொல்லப் போனா, நாங்க பாவம் செய்தோம். எங்கே ஓநாய் வந்து கன்னுக் குட்டியைத் தூக்கிக்கிட்டுப் போயிடுமோ, திருடர்கள் வந்து குதிரைகளைக் களவாடிக்கிட்டு போயிடுவாங்களோன்னு ஒவ்வொரு நிமிடமும் பயத்துலயே இருக்கணும். ராத்திரி நேரங்கள்ல எங்கே ஆடுகளை ஏதாவது மிருகங்கள் வந்து அடிச்சுக் கொன்னு தூக்கிட்டுப் போயிடுமோன்னு கொஞ்சம்கூட தூங்காம முழிச்சிக்கிட்டு இருப்போம். ஆடுகள் எல்லாம் சரியா இருக்கான்னு அப்பப்போ எழுந்து பார்த்துக்கிட்டே இருப்போம். ஒரு வேலை முடிஞ்சா, இன்னொரு வேலை தலையை நீட்டும். குளிர்காலம் வந்திருச்சுன்னா, புல் தயார் பண்ணி வைக்கணும். இது ஒருபுற மிருக்க, வயதான என் கணவருக்கும் எனக்கும் சில நேரங்கள்ல கருத்து வேறுபாடு வந்திடும். நாம இப்படிச் செய்யணும் அப்படிச் செய்யணும்னு அவர் சொல்லுவாரு. நான் அவர் கருத்துக்கு மாறுபாடா ஏதாவது சொல்லுவேன். அதன் விளைவாக எங்க ரெண்டு பேருக்குமிடையே சண்டை வரும். இப்படி மறுபடியும் பாவம் செய்வோம். இப்படியே ஒரு தொந்தரவுல இருந்து இன்னொரு தொந்தரவுக்கு... ஒரு பாவத்துல இருந்து இன்னொரு பாவத்துக்கு நாங்க போய்க்கிட்டே இருப்போம். வாழ்க்கையில சந்தோஷத்தையே பார்க்க முடியாது.”

“இப்போ?”

“இப்போ என் கணவரும் நானும் காலையில கண்விழிச்சவுடனே, ஒருத்தரையொருத்தர் இனிமையா ஒரு வார்த்தையாவது              சொல்லிக்குவோம். நாங்க ரொம்பவும் மன அமைதியா வாழ்ந்திக்கிட்டு இருக்கோம். சண்டை போடுறதுக்கான காரணமே இல்ல. எங்களுக்குன்னு பெரிய பொறுப்புகள் எதுவும் இல்ல. எங்க முதலாளிக்கு முழுமையா சேவை செய்யணும்ன்றது மட்டும்தான் மனசுல இருக்கும். எங்க உடம்புல சக்தி இருக்குற வரைக்கும் நாங்க வேலை செய்யிறோம். எங்களால எங்க முதலாளி நஷ்டமடையக் கூடாது. எங்களால அவருக்கு ஆதாயம் இருக்கணும். நாங்க வீட்டுக்குள்ளே வந்தா, எங்களுக்கு சாப்பாடு தயாரா இருக்கும். குடிக்கிறதுக்கு க்யூமிஸ் இருக்கும். குளிரா இருந்தா உஷ்ணம் உண்டாக்க விறகுகள் இருக்கு. குளிருக்கு அணியிறதுக்கு உரோம ஆடைகள் இருக்கு. பேசுறதுக்கு எங்களுக்கு நேரம் கிடைக்குது. எங்களைப்  பற்றி நினைக்கிறதுக்கு நேரம் கிடைக்குது. கடவுளைத் தொழுறதுக்கும் நேரம் கிடைக்குது. ஐம்பது வருடங்களா நாங்க சந்தோஷத்தைத் தேடினோம். ஆனா, கடைசியில இப்போதான் அதை நாங்க பார்த்திருக்கோம்.”

அதைக் கேட்டு விருந்தாளிகள் சிரித்தார்கள். அதற்கு எலியாஸ் சொன்னார்:

“சிரிக்காதீங்க, நண்பர்களே. இது சிரிக்கிறதுக்கான விஷயம் இல்ல. இதுதான் வாழ்க்கையின் உண்மை. நாங்ககூட ஆரம்பத்துல முட்டாள்களாகத்தான் இருந்தோம். எங்க சொத்து முழுவதும் எங்களை விட்டுப் போனதுக்காக நாங்க வாய்விட்டு அழுதோம். ஆனா, இப்போ கடவுள் உண்மை எதுன்றதை எங்களுக்குக் காட்டிட்டாரு. எங்க மன ஆறுதலுக்காக நாங்க இதைச் சொல்லல- உங்க நல்லதுக்காகவும்தான்...”

அப்போ முல்லா சொன்னார்:

“உண்மையிலேயே இது ஒரு புத்திசாலித்தனமான பேச்சு. எலியாஸ் எது உண்மையோ, அதைச் சொல்லியிருக்கார். இதேதான் புனித நூல்லயும் சொல்லப்பட்டிருக்கு.”

அதைக்கேட்டு விருந்தாளிகள் சிரிப்பதை நிறுத்திவிட்டு, சிந்திக்க ஆரம்பித்தார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.