Logo

உடைந்த கண்ணாடி…

Category: சிறுகதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 4633
udaindha-kannadi

லுவலகம் முடிந்து அலுப்பாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் அனு. சோர்வின் உணர்விலும் அவளது முகத்தின் சோபை சிறிதும் குறையவில்லை. மெல்ல வீட்டை நெருங்கினாள்.

வீடு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியானாள். உள்ளே நுழைந்ததும் ஆச்சரியமானாள். பிரவீன், தன் உடைகளை சூட்கேசில் வைத்துக் கொண்டிருந்தான்.

“என்னங்க, இவ்வளவு சீக்கிரமா வந்துட்டீங்க? ஆபீஸ் டூரா?”

“தெரியுமில்ல, அப்புறமென்ன கேள்வி?”

சட்டென முகம் வாடினாள் அனு. ‘ஏன் இப்படி பேசறார்? சரி, ஆபிசில் என்ன பிரச்னையோ? அதான் மூடு சரி இல்லை. நினைத்தபடி அடுக்களைக்குள் நுழைந்தாள்.

காபியுடன் அவள் வருவதற்குள் பிரவீன் பாக்கிங்கை முடித்திருந்தான். “இந்தாங்க!” காபி டபராவை அவனிடம் நீட்டினாள்.

“வேண்டாம். எனக்கு பம்பாய்க்கு டிரான்ஸ்பர். நான் போறேன்!” தந்தி போல் பதில் வந்தது.

“என்ன? பம்பாய்க்கா? டிராஸ்வர் விஷயத்தையா இவ்வளவு சாதாரணமா சொல்றீங்க? அதுவும் இத்தனை அர்ஜென்ட்டாவா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஆபிசில ஏதாவது ப்ராப்ளமா?” அனு படபடத்தாள்.

அடுக்கடுக்காய் அவள் கேட்ட கேள்விகளுக்கு.

“போய் லெட்டர் போடறேன்!” ஒரே வரியில் பதில் தந்த பிரவீன் இறங்கி நடந்தான்.

ரயில் ஜன்னலில் சாய்ந்தபடி, வெளியே வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான் பிரவீன். வேகமாக செல்லும் ரயிலின் தாள லயத்திற்கு அவனின் நினைவுகள் சுருதி சேர்ந்தன.

அன்று காலை ஆபிசில் ‘பிரவீன் - பர்சனல்’ என்று வந்திருந்த கடிதத்தை எடுத்தான். கடிதம் யாரிடமிருந்து? எழுத்தை ஆராய்ந்தான்…. பிரித்தான்… படித்தான்… ஏமாளி பிரவீனுக்கு, லெட்டர் சிரித்தது. கடுப்பானான் பிரவீன். தொடர்ந்தது கடிதம். ‘நீ தாலி கட்டுவதற்கு முன்பே வேலி தாண்டியவள் உன் மனைவி அனு. காதலித்தவனை கைவிட்டு, உன்னைக் கைப்பிடித்தவள். அவனை வஞ்சித்து விட்டு உன்னோடு மஞ்சத்தை பகிர்ந்து கொண்டவள். உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.’

கலங்கிய பிரவீன் ‘கடிதம் எங்கிருந்து வந்தது,’ யோசித்தபடி கவரை மீண்டும் ஆராய்ந்தான். கடிதம் மதுரையில் இருந்து பயணித்திருந்தது. முதன் முதலாய் சந்தேகப் பேய் அவன் மனதில் வாடகையின்றி குடி புகுந்தது.

‘ஓகோ… அதான் அம்மா வீட்டிற்கு போகிறேன் என்று அடிக்கடி மதுரைக்கு கிளம்பி விடுகிறாளோ? இந்த லெட்டர் எழுதியது யார்? அனுவுக்கும், அவனுக்கும் தொடர்பு இருக்கிறது.’ அதுவரை தேனாய் இனித்த அனுவின் நினைவு தேளாய் கொட்டியது.

இனி அவள் முகத்தில் விழிப்பதும் இல்லை என்ற முடிவோடு புறப்பட்டுவிட்ட, அவனது நினைவுகள் கலையும் படியாக பம்பாய் ஸ்டேசனில் க்…ர…ச்… ரயில் நின்றது. இறங்கி பிளாட்பாரத்தில் நடந்தான்.

சலவைக்கு எந்த சோப் சிறந்தது, சிக்கனமானது என்று மாமியாரும், மருமகளும் இந்தியில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள் ‘டி.வி’யில். வேடிக்கை பார்த்தபடி சூடிதார்களும், ஜீன்சுகளும் நின்று கொண்டிருந்தன.

வெளியே வந்த பிரவீன் பஸ் பிடித்து மாதுங்கா சென்றான். பஸ்சில் போய்க் கொண்டிருந்த பிரவீன் ‘கடவுளே!’ தமிழ் குரல் கேட்டு திரும்பினான். பம்பாயில் தமிழ் கடவுளைக் கூப்பிட்ட அந்த மனிதன் நீண்ட நாள் தாடியுடன் மிகவும் சோகமாக இருந்தான். அளவற்ற சோர்வை அவன் கண்கள் பிரதிபலித்தன.

தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த அவனுக்கு தண்ணீர் கொடுக்கும் எண்ணத்துடன் வாட்டர் பாட்டிலை எடுக்க குனிந்த பிரவீனின் ஷர்ட் பாக்கெட்டில் இருந்து பிரவீன் – அனு இணைந்த போட்டோ கீழே விழுந்தது. அதை பிரவீனிடம் கொடுப்பதற்காக எடுத்த, அந்த மனிதன் போட்டோவில் இருந்த அனுவை பார்த்து திடுக்கிட்டான்.

“சார்… இது… இது…?”

“இது என் மனைவி அனு. நீங்க தண்ணி குடிங்க.”

“அனுவின் கணவரா நீங்கள்…” பதறியபடி கத்திய அவனை கேள்விக் குறியோடு பார்த்தான் பிரவீன்.

அவன் தொடர்ந்தான் “நான் ஒரு கான்சர் பேஷண்ட். டாக்டர்களால் கைவிடப்பட்ட கேஸ். என்னோட வாழ்நாட்களை எண்ணிகிட்டிருக்கேன் சார். இந்த குறுகிய கால வாழ்க்கையில் நான் எந்த நல்ல காரியமும் பண்ணலை. இப்ப, இந்த சந்தர்ப்பத்திலையும் செய்யலைன்னா என் நெஞ்சு வேகாது.”

“லொக்… லொக்” இடைமறித்த இருமலின் திணறலோடு பேச்சைத் தொடர்ந்தான். “ஆறு மாசத்துக்கு முன்னால அனுவை பத்தி அவதூறா லெட்டர் போட்டது நான்தான் சார். மதுரையில அனு வேலை பார்த்த அதே ஆபிஸ்லதான் நானும் வேலை பார்த்தேன். பெண்கள் விசயத்தில நான் ரொம்ப மோசம். அனுவை தகாத முறையில் அணுகினேன். அவ என்னை கண்டபடி திட்டி அவமானப்படுத்தினா. மத்தவங்ககிட்டயும் சொல்லி கேவலப்படுத்தினா. அதனாலயும், என்னை நிராகரிச்சதாலயும் அவளை பழிவாங்க நெனைச்சேன். அவதூறா லெட்டர் எழுதிப் போட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. அனு நல்லவ. நம்புங்க. பழி உணர்வுல ஒரு பெண்ணோட வாழ்வுக்கு குழி வெட்டின பாவத்தில இருந்து என்னை மீட்டுடுங்க சார். ப்ளீஸ்,” தன் கைகளை பிடித்தபடி கெஞ்சிய அவனது வார்த்தைகளை முழுமையாக நம்பினான் பிரவீன்.

காலிங் பெல் சப்தம் கேட்டு கதவைத் திறந்த அனு திடுக்கிட்டாள். டிரான்ஸ்பர் என்று பம்பாய் போன பிரவீன் திடீரென வந்து நிற்பதைக் கண்டாள். அவனது அலட்சியப் போக்கினால் தான் பட்ட வேதனையை எல்லாம் மறந்து வர­­­வேற்றாள்.

நடந்ததை எல்லாம் சொல்லி, “மீண்டும் மகிழ்ச்சியாக வாழலாம்” என்று பேசி முடித்த அவனை தீர்க்கமாக பார்த்தாள் அனு. அவளது பார்வையின் தீவிரத்தை தாங்க முடியாத பிரவீன் தலைகுனிந்தான்.

“இத்தனை நாளா உங்க கூட உண்மையா வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்? என் பெண்மை புனிதமானதுன்னு ஒரு அந்நிய மனுஷன் செல்லித்தான் தெரிஞ்சுக்கணுமா? தான் சாகப் போறோம்ங்கறதுனால உண்மையை சொன்னான் அந்தப் பாவி. இல்லைன்னா, எவனோ ஒருத்தன் ‘அனு நல்லவ’ன்னு குடுத்த சர்ட்டிபிகேட்டை பெரிசா நெனச்சு மறுபடி என் கூட வாழ வந்திருக்கீங்க. அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. உங்க உறவு எனக்கு இனி வேண்டாம். நீங்க போகலாம்.”

அவளது குரலில் இருந்த உறுதி பிரவீனை தலைகுனிய வைத்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.