Logo

குமாருக்கு வந்த மொட்டைக் கடிதம்!

Category: சிறுகதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6650
kumarukku-vandha-mottai-kaditham

னைவி லதா உல்லாசமாக இருந்ததை நான் அறிவேன். தொழில் நிமித்தமாக நீங்கள் அடிக்கடி வெளியூர், சென்று விடுவதால் இங்கே லதாவை மற்றவன் கவனித்துக் கொள்கிறான். உங்கள் குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் நலம் விரும்பும் நண்பன்.

தனது அலுவலக அறையில் அமர்ந்து கடிதத்தைப் படித்த குமாருக்கு வியர்த்தது.

‘தான் லதா மீது எத்தனை அன்பு வைத்துள்ளோம்? அவள் தனக்கு துரோகம் செய்வாளா? அவளும் தன் மீது உயிராக தானே இருக்கிறாள்? அதெல்லாம் நடிப்பா?’ சந்தேகக் கோடு விழுந்த மனசு சஞ்சலப்பட்டது.

கோவையில் ‘பிசினஸ் மேக்னெட்’ என்று பிரபலமாக இருந்த குமார், ஏற்றுமதி – இறக்குமதி தொழில் காரணமாக அடிக்கடி வெளியூர், வெளிநாடு செல்ல வேண்டிய அவசியம் உள்ளவன்.

அவனுடைய மனைவி லதா பேரழகி. குமாரும், லதா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். காலையில் எழுந்ததில் இருந்து அலுவலகம் செல்லும் வரை ‘லதா, லதா,’ என நூறு தடவை கூப்பிட்டுக் கொண்டிருப்பான். அவனது தேவைகளை லதாதான் செய்ய வேண்டும்.

உள்ளூரில் இருக்கும்போது தான் இப்படி. வெளியூருக்கு வேலையாகப் போய் விட்டால் வீட்டு நினைவே இருக்காது அவனுக்கு. ஊர் திரும்ப ரயில் அல்லது விமானத்தில் உட்கார்ந்த பிறகுதான் வீடு, மனைவி, குழந்தையின் நினைவு வரும்.

வீட்டிற்கு வந்து விட்டால் பழையபடி லதாவைச் சுற்றிச் சுற்றி வருவான். தன் மகள் திவ்யாவைக் கொஞ்சி மகிழ்வான்.

ஐந்து வயது குழந்தைக்கு தாயான பின்னரும் கூட இளமை குலையாது, அழகு குறையாது கட்டுடலாக இருந்தபடியால் ஆடவரது பார்வை லதாவை விட்டகல மறுக்கும்.

வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் கிடைப்பது அரிது. தனக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி, மேலும் முன்னேறுவதற்காகத் தானே வெளிநாடு சென்றோம். இக்கடித்தில் உள்ளது உண்மை எனில்… நினைவே கசந்தது குமாருக்கு.

கல்லூரியில் படிக்கும் பொழுது தனக்கு வந்த காதல் கடிதங்களை பற்றி லதா கூறி இருந்ததை நினைத்துப் பார்த்தான். தான் இல்லாத நேரம் வேறு யாராவது வருகிறார்களோ என்று சந்தோகம் பிறந்தது.

மனைவியின் அன்பை மறந்தான். அந்த மொட்டைக் கடிதம் அவனைக் குழப்பியது.

வழக்கமாக ‘லதா… லதா…’ என்று கூப்பிட்டுக் கொண்டே வருபவன் மவுனமாக வருவதைக் கண்ட லதா அந்த வித்திசாயத்தை உணர்ந்து, அவனருகே வந்தாள்.

“அப்பா…” ஆசையுடன் ஓடிவந்த திவ்யாவைக் கூட கவனிக்காமல் நேராக படுக்கை அறைக்கு சென்று படுத்தவனை பின் தொடர்ந்தாள் லதா.

“என்னங்க! உடம்பு சரியில்லையா? ஏன் டல்லா இருக்கீங்க?”

“ஆமா, தலை வலிக்குது,” அவளை திரும்பிக் கூட பார்க்காமல் பேசினான்.

தலைவலி தைலத்தை எடுத்து வந்து அவனது நெற்றியில் தடவுவதற்காக நெருங்கிய லதாவை அலட்சியப்படுத்தி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

தலைவலி என்றால் தன் மடியில் படுத்துக் கிடக்க விரும்பும் குமாரின் செய்கை அவளைக் கலக்கியது.

அப்போது தொலைபேசி ஒலித்தது-

அவனுடைய அமைதி கெட்டு விடக் கூடாதே என்ற எண்ணத்தில் வேகமாகச் சென்று ரிசீவரை எடுத்தாள். மறுமுனையில் வேறு எண்களைக் கேட்டதும் ‘ராங்க் நம்பர்’ எனக்கூறி, வைத்துவிட்டு படுக்கையறைக்குள் வந்தாள்.

“போனை எடுக்க ஏன் ஓடினாய்?” அதுவரை மவுனமாக இருந்த குமார் கேட்டான்.

“நீங்க தலைவலின்று படுத்திருந்தீங்க. அதான் வேகமா போனேன்.”

“யார் பேசினா?”

“ராங்க் நம்பர்ங்க.”

‘வெளியூர் போக இருந்ததால் அவளுடைய நண்பனை வரச்சொல்லி இருப்பாளோ? அவன்தான் போன் செய்திருப்பானோ?’ சந்தேகம் குமாரின் நெஞ்சை துளைத்தது.

‘மறுபடி போன் வந்தால், தான் சென்று எடுக்க வேண்டும்’ என தீர்மானித்தான். சிறிது நேரத்தில் மறுபடி தொலைபேசி ஒலித்தது.

லதாவை முந்திக் கொண்டு அவனே போய் எடுத்துப் பேசினான்.

“ஹலோ…”

இவனது குரல் கேட்டதும் மறுமுனையில் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சந்தேகம் மேலும் வலுத்தது.

குமாரின் உள்நோக்கம் ஏதும் அறியாத லதா அவனருகில் வந்து அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு உறங்கிப் போனாள்.

அவளுடைய கைகளை விடுவித்துக் கொண்டு, ஏதேதோ சிந்தனைகளில் நிம்மதி இழந்தான் குமார்.

காலையில், காபியுடன் தன்னை எழுப்பியவளை வெறுப்பாய் பார்த்தான்.

“தலைவலி குறைஞ்சிருக்காங்க?” கனிவுடன் கேட்டாள் லதா.

“ம்… ம்…”

அலுவலகம் செல்லும் வரை எதுவுமே பேசாமல், அவன் புறப்பட்டது லதாவிற்கு மிகுந்த வேதனை அளித்தது. எதுவும் புரியாமல் தவித்தாள்.

“திவ்யா, வா உன்னை ஸ்கூலில் கொண்டு விடறேன்.”

“வரேன்ப்பா. அம்மா டாட்டா.”

போகும் வழியில் திவ்யாவிடம் பேச்சை ஆரம்பித்தான் குமார்.

“திவ்யா கண்ணு நல்லா படிக்கிறியாம்மா?”

“ஓ நான்தாம்ப்பா பார்ஸ்ட்.”

“வெரிகுட். நீ நல்லா படிச்சாதான் அப்பாவுக்கு பிடிக்கும். நான் இப்ப கேக்கறதுக்கெல்லாம் கரெக்டா பதில் சொல்லுவியாம், என்னம்மா?”

“சரிப்பா.”

“நான் ஊருக்கு போயிருக்கும்போது வீட்டுக்கு யார் யார் வருவாங்க?”

“தாத்தா, பாட்டிதான் எப்பவாவது வருவாங்க.”

“வேற யாராவது வருவாங்களா?”
“யாரும் வரமாட்டாங்கப்பா.”

“அம்மா யார் கூடயாவது போன்ல பேசுவாங்களா?”

“எப்பவாச்சும் அம்மாவோட பிரெண்ட்ஸ் பேசுவாங்க.”

“அவங்களோட பேர் உனக்கு தெரியுமா?”

“தெரியாதுப்பா.”

“ராத்திரி நேரத்துல நம்ம வீட்டுக்கு யாராவது வருவாங்களா?”

“தெரியாதுப்பா. நான் சீக்கிரமா தூங்கிடுவேன். அம்மாதான் முழிச்சிக்கிட்டிருப்பாங்க.”

“இதெல்லாம் நான் கேட்டேன்னு அம்மாகிட்டே சொல்லவே கூடாது. சொன்னீனா அப்பா உன் கூட பேசவே மாட்டேன். சரியா?”

“சரிப்பா.”


பள்ளியில் அவளை இறக்கி விட்டு அலுவலகத்திற்கு சென்றான்.

துணிகளை துவைக்கப் போடுவதற்காக வேலைக்காரியிடம் கொடுத்தாள் லதா.

“அம்மா, ஐயா சட்டைப் பையில் இருந்ததும்மா.” வேலைக்காரி கொடுத்த சிறிய பர்சை வாங்கிப் பார்த்தாள் லதா. பணத்துடன், நான்காக மடிக்கப்பட்ட உள்நாட்டு தபால் ஒன்றைக் கண்டாள். பிரித்துப் படித்தாள். அது அந்த மொட்டைக் கடிதம். அவளுக்குத் தலை சுற்றியது. கண்கள் இருண்டன. குமாரின் மாறுபட்ட நடவடிக்கையின் மர்மம் வெட்ட வெளிச்சமாகியது.

உயிருக்குயிராக நேரித்து, பூஜித்து வரும் கணவனை சந்தேகப் பேய் பிடித்து ஆட்டுவதை உணர்ந்து கொண்டாள். உள்ளத்தில் உதிரம் சொட்ட அழுதாள். சோகத்தின் எல்லையில் கோபம் எழுந்தது.

‘இப்படி ஒரு லெட்டர் தன்னைப் பற்றி வருவதற்கு என்ன காரணம்? யார் இப்படி ஒரு கேவலமான வேலையை செய்திருப்பார்கள்?’ நீண்ட நேர யோசனைக்கு பின் ஒரு சம்பவம் நினைவில் ‘பளிச்’சிட்டது.

குமார் வெளிநாடு சென்றிருந்த சமயம் வீட்டு பொருட்கள் வாங்குவதற்காக லதா பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தாள். கூட்டமாக இருந்தது. ஒவ்வொரு பகுதியாக சென்று பொருட்களை எடுத்துக் கொண்டு வரும் பொழுது எதிரே, அவளை வழிமறிப்பது போல நின்றிருந்தான் ஹரீஷ்.

‘லதா, காலேஜ்ல படிக்கும்போது இருந்த அதே அழகு, கொஞ்சம் கூட குறையாமல் இருக்கியே? யூ லுக் வெரி ஸ்வீட். நீ ஒரு குழந்தைக்கு அம்மான்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. சொல்லப் போனா முன்னை விட ரொம்ப அழகா இருக்கே. உன் கணவன், குழந்தையோட உன்னைப் பார்த்திருக்கேன். இன்னிக்குத்தான் தனியா பேசறதுக்கு சான்ஸ் கிடைச்சது’ பேசியவன் கண்ணை வேறு சிமிட்டினான்.

‘வாயை மூடுங்க. பொது இடத்துல இப்படி அநாகரிகமா பேசறீங்களே? உங்களை காலேஜ் மேட்டுன்னு சொல்லவே வெட்கமாயிருக்கு’ லதா கடுமையாகப் பேசியதும் சுற்றி இருந்தவர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.

‘இதில் வெட்கப்பட என்ன இருக்கு’ மனம் போன போக்கில் பொறுக்கித் தனமாகப் பேச முற்பட்டான் ஹரீஷ்.

கோபத்தில் முகம் சிவந்த லதா அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

பலர் மத்தியில் ஒரு பண்ணால் அவமானப்படுத்தப்பட்ட அவன், பல்லைக் கடித்தபடி அவளை முறைத்துப் பார்த்து விட்டு வெளியே சென்றான்.

அந்த ராஸ்கல்தான் தன்னைப் பழிவாங்குவதற்காக இந்த இழிவான செயலை செய்திருக்க வேண்டும் என்பது லதாவிற்கு புரிந்தது. அன்றைய சம்பவத்தை யதேச்சையாக குமாரிடம் சொல்ல மறந்து விட்டிருந்தாள்.

அந்தக் கயவன்தான் இப்படி ஒரு இழிவான கடிதத்தை எழுதினான் என்றால், தன்னில் பாதியாக ஒன்றிணைந்த கணவனும் சந்தேகச் சேற்றில் சிக்கி விட்டதை எண்ணி மனம் நொந்து போனாள்.

மாலையில் திவ்யாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்ட குமார், காபி கூட குடிக்காமல் போய் விட்டான்.

 “திவ்யா…”

“என்னம்மா?”

“அப்பா உன்கிட்ட ஏதாவது கேட்டாராம்மா?”

குழந்தை மவுனம் சாதித்தாள்.

அந்த மவுனமே குமார் ஏதோ கேட்டிருப்பான் என்று உணர்த்தியது. மிரட்டிக் கேட்டபின், குமார் கேட்ட அனைத்தையும் தெளிவாக திவ்யா கூறினாள்.

கேட்ட லதா பொங்கினாள். தன் பெண்மையை கேவலமாக எண்ணிய குமார் மீது கோபம் வந்தது.

இரவு-

அதே தெளிவற்ற முகத்துடன் வீடு திரும்பிய குமாரிடம் அந்த உள்நாட்டு கடிதத்தை வீசி எறிந்தாள்.

“இந்த லெட்டர் தானே என் கற்பை சந்தேகிக்க வைத்தது? பாராமுகமாக இருந்து இம்சித்தீர்கள்? குழந்தையிடமே என்னைப் பற்றி உளவு கேட்டீர்கள்? நீங்களே உலகமாக வாழ்ந்ததை மறந்து என்னை கேவலப்படுத்தி விட்டீர்கள். உங்கள் இதயம் இரும்பு. என்னை முழுமையாக நம்பி இருந்தால் கடிதத்தை என்னிடம் காட்டி இருப்பீர்கள். விளக்கம் கொடுத்திருப்பேன். நம்பிக்கைதான தாம்பத்திய வாழ்வின் ஜீவன். வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் போகும் உங்களை ஒரு முறையேனும் நான் தவறாக எண்ணி இருப்பேனா? என்னை நம்பாத உங்களுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை.”

தயாராக எடுத்து வைத்திருந்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு, தன் மகள் திவ்யாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள் லதா.

லதாவும், திவ்யாவும் வீட்டை விட்டுப் போனதிலிருந்து வீடே வெறிச்சோடிப் போயிருந்தது. எல்லாமே தன்னை விட்டுப் போய் விட்டதாக உணர்ந்தான் குமார்.

காலையில் விழித்து, படுக்கையில் புரண்டு படுத்தாலே தான் விழித்து விட்டதை உணர்ந்து காபி கொண்டு வரும் லதா இப்போது இல்லை.

பிரஷ் எடுத்துக் கொடுத்து, பேஸ்ட் பிதுக்கி வைத்து, குளிக்க வெந்நீர் விளாவி வைத்து… அவனது ஒவ்வொரு தேவைகளையும் கவனிக்கும் லதா இப்போது இல்லை.

அவள் இல்லாத ஒவ்வொரு வினாடியும் அவளது தேவையை உணர்ந்தான் குமார். தனிமை அவனை சிந்திக்க வைத்தது.

ஏதோ ஒரு மொட்டைக்கடிதம், அதை நம்பி நாம் அவளை சந்தேகப்பட்டது தவறுதானோ? ‘ஆம்… ஆம்…’ என்றது உள்மனம்.

தன்னை கவனிப்பதிலும், தன் நலனில் அக்கறை காட்டுவதிலும் தன் தேவைகளை சந்திப்பதிலுமே பெரும்பகுதி நேரத்தை செலவிடும் லதாவை, தான் சந்தேகப்பட்டது தவறு என்பதை உணர்ந்தான் குமார்.

அந்தக் கடிதத்தை அவளிடம் காட்டி விபரம் கேட்டிருக்கலாம். அதை விட்டு விட்டு இப்படி நடந்து கொண்டது தப்பு என தோன்றியது அவனுக்கு.

மனைவியையும், மகளையும் பார்க்கும் ஆர்வம் இதயத்தில் பொங்க லதாவின் தாய் வீடு நோக்கி புறப்பட்டான் குமார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.