Logo

பூவுக்குள் பூகம்பம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6589
Poovukkul-pugambam

"இனிமேல் நீங்க, அந்த ஜெயாவோட வீட்டுக்குப் போகக் கூடாது...."

மனைவி மஞ்சுளாவின் வாயில் இருந்து தீக்கங்குகள் வார்த்தைப் பொறிகளாய் வெளிவந்தன.

அதைக் கேட்ட சுகுமார் அதிர்ச்சி அடைந்தான். கூடவே ஆத்திரமும் எழும்பியது.

"படிச்ச பட்டதாரியான நீயா இப்படி அநாகரீகமா பேசற?!"

"நாகரீகமா பேசறதுக்கு நான் ஒண்ணும் அரட்டை அரங்கத்துலயோ, வேடிக்கை விளையாட்டுலயோ கலந்துக்கலை. இது என்னோட வாழ்க்கை.... ஸாரி... நம்பளோட வாழ்க்கை."

"நான் ஜெயா வீட்டுக்குப் போறதுக்கும், நம்ப வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் மஞ்சுளா?"

"நம்ம ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லாம ஆயிடக்கூடாதே..."

"இப்படி மூடு மந்திரமா பேசறதை விட்டுட்டு நேரடியா விஷயத்துக்கு வா..."

"சரிங்க. நான் வெளிப்படையா நேருக்கு நேராகவே பேசிடறேன். முதல்ல நான் கேக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லுங்க. அந்த ஜெயா யாரு?"

"உனக்கென்ன பைத்தியமா? ஏழெட்டு வருஷமா பழகின ஜெயாவை போய் அவ யாருன்னு கேக்கற?"

"நீங்கதானே சொன்னீங்க. விஷயத்தை தெளிவா பேசுன்னு. அதுக்கு நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும். சொல்லுங்க. ஜெயா யாரு?"

"ஜெயா, என்னோட நண்பன் திவாகரோட மனைவி. நீயும் ஜெயாவும் கூட சிநேகிதமா பல வருஷமா பழகி இருக்கீங்களே..."

"சரி, அவ புருஷன் திவாகருக்கு என்ன ஆச்சு?"

"நீ கேக்கற கேள்வி பேத்தலா இருக்கு. அவன் விபத்துல இறந்து போய் ரெண்டு மாசமாச்சுல்ல?"

"உங்க நண்பர் திவாகர் திடீர்னு இறந்துட்டப்ப நானும் வருத்தப்பட்டேன். ஆனா அவர் இறந்ததுக்கப்புறமும் அவர் வீட்டுக்குப போய் நீங்க எதுக்காக ஜெயாவை சந்திக்கணும்?"

"இதில என்ன இருக்கு? புருஷனை இழந்துட்ட ஒரு பெண். பிறந்த வீட்டு ஆதரவும் இல்லாம தனி மரமா நிக்கறா. குழந்தை குட்டியும் கிடையாது. திவாகர் இறந்தப்ப அவனோட காரியத்துக்கு வந்த அவளோட உறவுக்காரங்க எல்லாருமே அவளை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டாங்க. எங்கே அவங்களுக்கு பாரமா வந்துருவாளோன்னு. கொஞ்ச நேரம் அவ வீட்டுக்கு போய், அவ கூட ஆறுதலா பேசிட்டு வரேன். முப்பது வயசுக்குள்ளே புருஷனை பறிகுடுத்துட்ட அவ மேல எனக்கு அனுதாபம், பரிதாபம். இது தப்பா?"

"தப்புதான்." ஆணித்தரமாக அடித்துப் பேசிய மஞ்சுளா தொடர்ந்தாள். அந்த அனுதாபமும், பரிதாபமும் வேறு விதமா உருவாயிடக் கூடாதுன்னுதான அங்கே போக வேண்டாம்னு சொல்றேன்."

"அப்படின்னா... நீ என்னை சந்தேகப்படறே? அப்படித்தானே? நீ என்னை சந்தேகப்படறது மூலமா ஜெயாவையும் கேவலப்படுத்தற. இப்ப நான் கேக்கறேன். நீ பதில் சொல்லு. ஒரு பெண், அவளோட புருஷன் இறந்தப்புறம் அடுத்த ஆண் கூட தவறான எண்ணத்துல பழகுவாளா?"

"அவ நல்லவளாகவே இருக்கலாம். ஆனா பஞ்சும், நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்க அதிக நேரம் ஆகாதுங்க."

"மஞ்சுளா... நாக்கை அடக்கிப் பேசு. நான் ஜெயா வீட்டுக்கு தினமும் போயிட்டு வர்றதைப் பத்தி ஊர்ல யாரும் எதுவும் பேசிக்கறாங்களா? சொல்லு."

"இந்த ஊர், உலகம், நாலு பேர் பேசறதைப் பத்தியெல்லாம் எனக்கு கவலையே இல்லைங்க. நாம கஷ்டப்படும்போது இந்த ஊரும், உலகமும் கிட்டக் கூட வராது. எட்டித்தான் போகும். பெண்மையின் இயல்பான எச்சரிக்கை மணி எனக்குள்ள அடிக்குது. என்னோட வாழ்க்கையை நான் காப்பாத்திக்கணும். நமக்கு ரெண்டு குழந்தைங்க இருக்காங்க..."

"ஐயோ மஞ்சுளா, நீ விபரீதமா கற்பனை பண்ணிக்கிட்டு என் மனசை நோக வைக்கற. பல வருஷமா பழகின ஜெயாவையுமா நீ இவ்வளவு அசிங்கமா பேசற?"

"பல வருஷ கால பழக்கம், நட்பு இதுக்கெல்லாம் நானும் மதிப்பு குடுக்கறவதாங்க. ஆனா... பழகும்போது பழகணும். விலக நேரும்போது விலகிக்கணும். இதுதான் விவேகம்."

"விவேகத்துக்கு நீ தர்ற விளக்கத்தை என்னால ஒத்துக்க முடியாது. உயிருக்குயிரா பழகின நண்பன். கோரமான விபத்துல உயிரை விட்டுட்டான். அவனோட மனைவி தன்னந்தனியா துயரத்துல இருக்கும்போது ஆறுதல் சொல்ல வேண்டியது என் கடமை."

"கடமைகளை நம்ப குடும்பத்துக்கு மட்டும் செஞ்சா போதும்ங்க."

"போதாது. பொதுவான மனித நேயத்துக்கும் மதிப்பு கொடுக்கணும். என்னோட மனித உணர்வுலதான் நான் ஜெயா வீட்டுக்குப் போறது..."

"அந்த மனித நேய உணர்வு புனிதமா இருக்கற வரைக்கும் சரி... அந்தப் புனிதக் கோட்டை தாண்டிட்டா?..."

"மஞ்சுளா? நீ என்னை அவமானப் படுத்தறே..."

"மான அவமானமெல்லாம் உங்களுக்கும் மட்டும்தானா?"

"இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற?"

"நீங்க தினமும் அந்த ஜெயா வீட்டுக்குப் போறதை நிறுத்துங்க. உங்க நண்பர் திவாகர் மரணத்தோட அந்த நட்பு முடிஞ்சுப் போச்சு."

"முடிஞ்சுப் போன அவனோட வாழ்க்கைக்குத் தொடரா அவனோட மனைவி ஜெயா இருக்கா..."

"அந்த தொடர்பு, உங்க கூட தொடர்பு ஆகிடக் கூடாதே..."

"பளார்" என்று மஞ்சுளாவின் கன்னத்தில் அறைந்தான் சுகுமார்.

"இத்தனை வருஷ காலத்துல என்னை நீங்க அடிச்சதே இல்லை. இப்ப இதுக்கு யார் காரணம்? எது காரணம்? நாகரீகமா பேசுன்னு அட்வைஸ் பண்ணீங்களே, மனைவியை அடிக்கறதுதான் நாகரீகமா? ட்யூஷனுக்கு போயிருக்கற குழந்தைங்க வர்றதுக்குள்ள இந்த பிரச்னையை பேசி முடிவு எடுக்கணும்னு அவங்க இல்லாதப்ப நான் பேச ஆரம்பிச்சதுதான் நாகரீகம். இப்படி அடிக்கறது இல்லை. புரிஞ்சுக்கோங்க."

"புரிஞ்சுப் போச்சு. எல்லாமே புரிஞ்சுப் போச்சு. நீ என்னையும், ஜெயாவையும் முடிச்சுப் போட்டு சந்தேகப்படறே. ச்சீ... இதைப் பத்தி பேசவே எனக்கு அருவறுப்பா இருக்கு. ஒரு பெண்ணுக்கு பெண்ணே இழிவா பழி பேசற அவலம் இன்னும் நம்ம சமூகத்துல இருந்தும், சமுதாயத்துல இருந்தும் மறையலைங்கறதுக்கு நீயே ஒரு உதாரணம்."

"உதாரணம் இல்லைங்க. உஷாரா இருக்கேன். என் கணவர் எனக்கு வேணும். இந்த வாழ்க்கை எனக்கு நிலைக்கணும்ங்கற முன் எச்சரிக்கை உணர்வுலதான் நான் பேசறேனே தவிர சந்தேகம் எதுவும் கிடையாது."

"சந்தேகம் இல்லைன்னா அங்கே போறதை நீ ஏன் தடுக்கறே?"

"சில தடுப்புகள்தான் வாழ்க்கைத் தோணி சீரா போறதுக்கு நாம போடற துடுப்புகள். குழந்தை குட்டி கூட இல்லாத அந்த ஜெயா மேல எனக்கும் இரக்கம் இருக்கு. அந்த இரக்கத்துக்கு ஒரு அளவுகோல் இருக்கு."


"அளந்து பார்த்தெல்லாம் என்னால வாழ முடியாது. இயற்கையான என்னோட இயல்புகள் என்னை என்ன செய்யத் தூண்டுதோ அதைத்தான் நான் செய்வேன். செய்யறேன்."

"அப்போ... அவ வீட்டுக்குப் போறதை நிறுத்த மாட்டீங்க? முடிவா சொல்றேன். கேட்டுக்கோங்க. அந்த ஜெயா வீட்டுக்குப் போறதை நீங்க நிறுத்தலைன்னா, நான் இந்த வீட்டை விட்டு குழந்தைகளைக் கூப்பிட்டுக்கிட்டு வெளியே போயிடுவேன்."

"எங்கே போவ"

"எங்கேயோ போவேன். என்னோட வார்த்தைக்கும், உணர்வுக்கும் மதிப்பு குடுக்காத பட்சத்துல வீட்டை விட்டு வெளியேறணும்னு நான் முடிவு செஞ்சதுக்கப்புறம் நான் எங்கே போனா உங்களுக்கு என்ன? ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. போகும்படி சூழ்நிலை வந்துட்டா போய்த்தான் ஆகணும். ஆனா திரும்பி வர முடியாது. வரவும் கூடாது."

"உன்னோட முடிவு இதுதானா?"

"உங்களோட முடிவை நீங்க இன்னும் சொல்லலையே?"

"சொல்றேன் கேட்டுக்க. அந்த ஜெயா மேல உள்ள இரக்கத்தினாலயும், கருணையினாலயும் அவ மனசு ஆறுதலா இருக்கட்டுமேன்னுதான் அவ வீட்டுக்குப் போறேன். பஞ்சு, நெருப்பு, தொடர்பு இப்படியெல்லாம் நீ பேசறதைக் கேக்கவே எனக்கு நரகமா இருக்கு. பாவம் அந்த ஜெயா. அவளை திடீர்னு அம்போன்னு விட்டுட முடியாது. அதுக்கு என் மனசு இடம் தரலை. என்னோட உண்மையான களங்கம் இல்லாத மனசைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கறதானா இரு. இல்லைன்னா நீ போகலாம். ஒரு அற்பமான காரணத்துக்காக நான் ஜெயா வீட்டுக்கு போறதை நிறுத்த முடியாது. இனி உன் இஷ்டம்."

அழுத்தம் திருத்தமாக சுகுமார் பேசியதும் வாயடைத்து விக்கித்துப் போய் நின்றாள் மஞ்சுளா.

கணவர் திவாகர் இறந்து இரண்டு மாதங்கள் வீட்டை விட்டு வெளியே வராத ஜெயா, தற்செயலாய் அங்கே வர, வாசலில் இருந்தபடியே இதையெல்லாம் கேட்க நேர்ந்தது.

'சுகுமார் பரந்த மனப்பான்மையுடன் தன் வீட்டிற்கு வந்து பறவையின் மென் சிறகுகள் போல் மென்மையான வார்த்தைகளால் ஆறுதல் அளித்து வருவதன் பின்னணியில் இப்படி ஒரு பயங்கரமா? ம்ஹும். குருவிக்கூடு போன்ற அந்தக் குடும்பம் கலைந்து போவதற்கு நான் காரணமாகி விடக் கூடாது. எப்பாடு பட்டாலும் சரி, இன்று இரவே சொல்லாமல் கொள்ளாமல் வேறு ஊருக்கு போய் விட வேண்டும் திடமான முடிவுடன் திவாகரின் வீட்டுக்குள்ளே வராமல் நழுவிச் சென்றாள் ஜெயா.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.