Logo

அவன் திரும்பி வருவான்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9639
Avan Thirumpi Varuvan

முதன் முதலாக நான் பால் குடித்தது அவளிடம் தான். அவளின் மகன் ஸ்ரீதரன் என்னைவிட இரண்டு மாதங்கள் மூத்தவன். அவளின் இன்னொரு மகனாகத்தான் நான் வளர்ந்தேன். “இன்னொரு அம்மா” என்றுதான் நான் அவளை அழைப்பேன்.

நானும் ஸ்ரீதரனும் ஒன்றாகவே வளர்ந்தோம். நாங்கள் ஒன்றாகவே படித்தோம். படிப்பை நிறுத்தியது கூட ஒன்றாகவேதான். ஒரே தொழிற்சாலையில் ஒரே நாளில் இருவரும் வேலையில் சேர்ந்தோம். எங்களின் சம்பளம்கூட ஒரே மாதிரி தான். ஆனால், யூனியனில் ஸ்ரீதரனுக்கு என்னைவிட முக்கியமான இடமும் வேலைகளும் இருந்தன.

யூனியனின் தீர்மானப்படி ஒரு பொது வேலை நிறுத்தம் நடந்தது. தொழிலாளர்களின் ஒரு பிரம்மாண்டமான ஊர்வலமும் நடைபெற்றது. அன்று துப்பாக்கிச் சூடு நடப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எச்சரிக்கையும் செய்யப்பட்டது. தொழிலாளர்களின், அப்பாவி ஏழை களின் உரிமைகளைக் கேட்டுப் போராடும் அந்தப் போராட்டத்தை முதலாளிகளும், ஜன்மிகளும் அரசாங்கத்தின் உதவியுடன் எதிர்க்க திட்டமிட்டிருந்தார்கள்.

இருந்தாலும் தொழிலாளர்கள் அந்தப் போராட்ட ஊர்வலத்தை நடத்துவதில் தீர்மானமாக இருந்தார்கள்.

முதல் நாள் இரவு ஸ்ரீதரன் என்னை வந்து பார்த்தான். அவன் அப்போது சொன்ன வார்த்தைகளை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.

“ராமா, அம்மாவை உன்கிட்ட ஒப்படைக்கிறேன். நீ ஊர்வலத்துக்கு வர வேண்டாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து போக வேண்டாம். அது அறிவில்லாத ஒரு செயலாக இருக்கும்.”

மறுநாள் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஏராளமான பேர் அதில் இறந்தார்கள். சிலர் அதிலிருந்து தப்பினார்கள். சம்பவம் நடந்த இடத்திற்கு அருகிலிருந்த வீடுகள் நெருப்புக்கு இரையாகின. இறந்தவர்களில் பெண்கள், குழந்தைகள் எல்லாரும் இருந்தார்கள். துப்பாக்கிச் சூட்டில் மரங்கள்கூட சாய்ந்து விழுந்தன.

அன்று எங்களின் ஊரிலும், அருகிலிருந்த ஊர்களிலும் இருக்கும் வீடுகளில் ஒரே கூப்பாடும் அழுகையுமாக இருந்தன. அந்த வீடுகளிலிருந்து போராட்ட ஊர்வலத்திற்குப் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதற்காக அல்ல அந்த ஓலங்கள். ஏராளமான பேர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் தெரியுமே தவிர, யாரெல்லாம் இறந்தார்கள், யாரெல்லாம் தப்பினார்கள் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. தப்பித்து வந்தவர்களைப் பார்த்தும் அழுதார்கள். தப்பித்திருக்கலாம் என்று எண்ணி இறந்து போனவர்களின் உறவினர்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டும் அழுதார்கள். ஆனால், மரணம் அடைந்திருக்கலாம் என்ற எண்ணம் பொதுவாக நிலவிய அமைதியான சூழ்நிலையைக் குலைத்ததென்னவோ உண்மை.

நேரம் ஆக ஆக அந்த வயதான கிழவி ஸ்ரீதரன் இறந்துவிட்டான் என்று நம்ப ஆரம்பித்தாள்.

“அவன் ஊர்வலத்துல முன்னாடி போனானே!”

அவள் சொன்னது சரிதான். ஸ்ரீதரன் ஊர்வலத்தில் போன ஒரு பிரிவுக்கு தலைவனாக இருந்தான். இருந்தாலும் நான் அதைச் சொல்ல முடியுமா? ஸ்ரீதரன் இறக்கவில்லை என்றுதான் நான் சொன்னேன்.

எனினும், என் மனதிலும் அந்தச் சந்தேகம் இல்லாமலில்லை. ஸ்ரீதரன் மரணத்திலிருந்து தப்பித்திருக்க வேண்டும் என்று மனதில் விருப்பப்பட்டாலும், அவன் மரணமடைந்திருப்பதற்கான சாத்தியம்தான் அதிகம் என்பது மாதிரி மனதில் தோன்றியது. ஸ்ரீதரன் தைரியசாலி. வர்க்க உணர்வு கொண்ட தொழிலாளி. மரணத்தைப் பார்த்து பயப்படக்கூடிய ஆளில்லை அவன்.

பக்கத்து வீடுகளில் கூப்பாடும் அழுகைச் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது. தெற்குப் பக்கமிருக்கும் வீட்டில் ஐந்து சிறு குழந்தைகளும் கர்ப்பிணியாக இருக்கும் ஒரு மனைவியும் இருக்கிறார்கள். அந்த வீட்டின் தலைவன் போராட்டத்திற்குப் போனவன், இன்னும் திரும்பி வரவில்லை. வடக்குப் பக்கமிருக்கும் வீட்டில் தாய் இல்லாத மூன்று குழந்தைகள், காலையில் போன தங்கள் தந்தையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். மேற்குப் பக்கமிருக்கும் வீட்டில் ஆதரவு என்று யாருமில்லாத ஒரு சகோதரி தன்னுடைய சகோதரனை வாயால் அழைத்து அழுதுகொண்டிருக்கிறாள். அந்த அழுகைச் சத்தம் இங்கு வரை கேட்கிறது.

கிழவியும் வாய்விட்டு அழ ஆரம்பித்தாள். எனக்கு ஒரே வழிதான் தோன்றியது. அவளின் முகத்தைப் பார்த்தவாறு பிசிறில்லாமல் உறுதியான குரலில் நான் சொன்னேன்.

“ஸ்ரீதரன் இறக்கல...”

எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் அது என்பதை நினைத்துப் பாருங்கள். மகனை இழந்த அந்தத் தாயின் முகத்தில் பரவி விட்டிருக்கும் அந்தப் பாசத்தின் வெளிப்பாட்டை கண் திறந்து பார்க்க வேண்டும். அப்போது என் கால்கள் இடறி விடக் கூடாது. இதயத்தின் அனுமதியே இல்லாமல் அந்த வார்த்தைகளை நிச்சயமான குரலில் நான் கூற வேண்டும். அந்த நிமிடத்தில் எனக்கு இருக்கும் ஒரு மிகப் பெரிய பொறுப்புணர்வை சரியாக ஞாபகத்தில் வைத்துக்கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், அதை நான் சரியாகவே நிறைவேற்றினேன். கண்கள் நனையாமல், தொண்டை இடறாமல் அந்தப் பெரிய பொய்யை நான் சொன்னேன். அப்போது கிழவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

“அப்படின்னா இப்போ நடுராத்திரி நேரமாயிடுச்சே. அவன் ஏன் இன்னும் வராம இருக்கான்?”

ஒரு நொடி நேரத்திற்கு எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் போய்விட்டது. நான் தோற்றுக் கொண்டிருக்கிறேனோ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது. மூச்சைப் பிடித்துக் கொண்டுதான் நான் இவ்வளவு நேரமும் சமாளித்துக் கொண்டிருந் தேன். இன்னும் ஒரு நிமிடத்தில் என்னுடைய பொய் பிரயோஜனமில்லாத ஒன்றாகப் போகிறது. எப்படியோ என்னால் சொல்ல முடிந்தது.

“நான் நாளைக்கு அவன் எங்கே ஒளிஞ்சிருக்கான்றதை விசாரிச்சிட்டு வந்து சொல்றேன்.”

“என்னை ஒரு தடவை பார்த்துட்டு, அதுக்குப் பிறகு அவன் ஊரை விட்டு வெளியே போய் ஒளிஞ்சிக்கக் கூடாதா?”

எப்படியோ அன்றைய இரவு கழிந்தது.

நான்கு மைல் தூரத்தில் இருக்கிறது அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்த இடம். அந்த இடம் முழுக்க முழுக்க பட்டாளக்காரர்களின் காவலில் இருந்தது. ஒளிந்தோ அல்லது பதுங்கியோ உயிரைக் காப்பாற்றிக் கொண்டவர்களை அவர்கள் வேட்டையாடி தேடிக்கொண்டிருந்தார்கள். ஒரு எல்லையிலிருந்து பிணங்களை அவர்கள் சேகரிக்கத் தொடங்கினார்கள். அவன் இறந்துவிட்டான் என்பதை உறுதியாக எப்படிக் கூற முடியும்?

யூனியன் உறுப்பினர்கள் எல்லாரையும் பிடிக்கப் போகிறார்களாம். அப்படியென்றால் என் விஷயம்கூட ஆபத்துதான். நான் அடுத்த நிமிடம் வீட்டை நோக்கி விரைந்தேன். கிழவியை எப்படி சமாளிப்பது?

அன்றுகூட ஏதாவது சொல்லி அவளைச் சமாளித்து விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு எப்படி சமாளிப்பது? இறந்து விட்டான் என்று கூறிவிட்டால்...? அவன் மரணமடையாமல் இருந்தால் அப்படிச் சொல்வது நன்றாக இருக்காதே!

எது எப்படியோ, கிழவிக்கு ஆறுதல் உண்டாகிற மாதிரி என்னால் சிரிக்க முடிந்தது. மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேச முடிந்தது.


ஸ்ரீதரனுக்கு ஒரு ஆபத்தும் உண்டாகவில்லை என்று கூறி ஒரு கற்பனைக் கதையை உண்டாக்க என்னால் முடிந்தது. அந்தக் கதை நாக்கில் சர்வ சாதாரணமாக வரவும் செய்தது. அவன் எப்படித் தப்பித்தான் என்ற கதை!

நான் அப்படிச் செயல்பட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் என்னுடைய இதயத்தில் தாங்க முடியாத வேதனை உண்டானது. ஸ்ரீதரன் உயிருடன் இருப்பதாக நான் கிழவியிடம் சொன்னேன். அவன் ஓடிய வழியை விவரித்துக் கூறும்போது, அவன் மார்பு துளைக்கப்பட்டு நிலத்தில் விழும் காட்சியை இரண்டு முறை என்னுடைய மனக் கண்கள் பார்த்தன. அவனுடைய இறந்து போன உடலை காலைப் பிடித்து இழுத்து அந்தப் பெரிய பிணக் குவியலுக்கு மேலே தூக்கிப் போட்டார்கள். கிழவி கேட்டாள்:

“அவன் எங்கே ஒளிஞ்சிருக்கான்?”

“அதை இப்போ சொல்ல முடியுமா?”

“கூட யாரெல்லாம் இருக்காங்க?”

“நிறைய பேர் இருக்காங்க.”

அவள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளுடைய நம்பிக்கையின் வெளிப்பாடு அவளின் முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. ஏராளமானவர்கள் இறந்தார்கள் அல்லவா? எந்த காரணத்தால் அவளுடைய மகன் அந்த இறந்தவர்களின் பட்டியலில் இல்லை? அவன் அப்படி இல்லாமல் இருக்கக் கூடிய அளவுக்கு அவள் கொடுத்து வைத்தவளா என்ன! அவன் அழத் தொடங்கினாள். நான் கேட்டேன்.

“எதுக்காக அழறீங்க! அவன் தப்பிச்சதுக்கா?”

“இல்ல... உயிரோட இருந்தா நேற்று ராத்திரி என்னை அவன் வந்து பார்த்திருக்கணுமே! என்னைப் பார்க்காம என் மகன் ஊரை விட்டுப் போக மாட்டான். எனக்கு அவனை விட்டா யார் இருக்காங்க?”

அவளுடைய அறிவுக்கு முன்னால் நான் குழம்பிப் போய் நின்றேன். எனக்கு ஒரே வழிதான் இருக்கிறது. சிறிது கோபம், சிறிது கவலை என்று அவளிடம் வெளிப்படுத்த வேண்டியதுதான்.. பாவம்... வயதான கிழவிதானே? பேசாமல் இருந்து விடுவாள். நான் குரலை உயர்த்தி நடித்தவாறு கேட்டேன்.

“என்னை நிம்மதியா இருக்க விட முடியுமா? முடியாதா?”

அவள் என்னுடைய முகத்தையே பார்த்தாள். நான் மற்றொரு ஆளுக்கு பாரமாகி விட்டிருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்ததைப் போல் இருந்தது. ஒருவித தவிப்புடன் அவள் சொன்னாள்:

“இல்ல மகனே... நீ கோபப்படாதே. இன்னொரு அம்மா கேட்டேன்னு வச்சுக்கோ... இனி என் மகனை விட்டா எனக்கு யார் இருக்காங்க? நான் எதுவுமே பேசல. போதுமா?”

“அவன் திரும்பி வருவான்.”

எவ்வளவு பெரிய துக்கத்திலும் ஆறுதல் தேட விரும்புவது மனிதனின் குணமாகும். ஒரு புல் கொடி கிடைத்தால்கூட அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஆறுதல் தேட மனித மனம் விழையும். யாரெல்லாம் இறந்திருக்கிறார்கள், யாரெல்லாம் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தெரியாததால் தனக்கு வேண்டியவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றுதான் ஒவ்வொருவரும் நம்பினார்கள். இந்த நம்பிக்கையுடனே அவர்களின் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஓடிக் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் எல்லா வீடுகளிலும் ஒரு ஆள் உண்ணக் கூடிய உணவு எப்போதும் தயாராக இருக்கும். தூக்கத்தில்கூட எல்லாரும் காதைத் தீட்டி வைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அண்ணனும் தம்பியும் சண்டை போடும்போது தம்பி அண்ணனிடம் சொல்லுவான். “அப்பா வரட்டும்... நான் உன்னை நல்லா உதைக்கச் சொல்றேன்” என்று. காதலி காதலனுக்காக காத்திருக்கிறாள். இப்படி தாமரை நூலில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆறுதல் என்ற விஷயத்தில் வாழ்க்கையின் கனவுகள் நித்தமும் புலர்வதை எல்லா இடங்களிலும் நாம் பார்க்கலாம்.

“அவன் திரும்பி வருவான்” என்று ஒரு இயந்திரத்தைப்போல நான் உறுதியான குரலில் கூறிக் கொண்டிருந்தேன். அன்று இறக்காமல் உயிரோடு இருப்பவர்கள் திரும்பி வருவதற்கு முன்பு அந்தக் கிழவி இந்த உலகை விட்டுப் போய்விடுவாள் என்று சில நேரங்களில் என் மனதில் தோன்றும். ஸ்ரீதரன் உயிரோடு இருந்து அதற்குப் பிறகும் அந்தக் கிழவியின் வாழ்க்கை நீடித்தால் அது ஒரு கொடை என்றுதான் சொல்ல  வேண்டும். அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் கிழவி உயிருடன் இருந்து, ஸ்ரீதரன் வராமலே போய்விட்டால்...? இருந்தாலும் அவளுக்குக் கிடைத்த ஆறுதல் தொடரட்டும். அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையிலேயே அவள் வாழட்டும்.

அவளுக்குத் தேவையானதையெல்லாம் ஸ்ரீதரனைவிட அதிகமாக நான் கவனித்தேன். எந்த விஷயத்திலும் அவளுக்கு ஒரு சிறு குறைபாடு கூட இருக்காமல் பார்த்துக் கொண்டேன். மகன் இல்லையே என்ற மனக்குறை அவளுக்கு உண்டாகக் கூடாது. ஆனால், நான் அப்படி அவளை மிகவும் சிரத்தை செலுத்தி கவனித்தது அவளை மேலும் அதிகமான துக்கத்தில் மூழ்கச் செய்தது. அவளிடமிருந்த அமைதி அவளை விட்டுப் போயிருந்தது. நான் அவளுக்காக ஏதாவது செய்ய முயலும்போது, “வேண்டாம்டா மகனே என்று அவள் விலக்கிக் கொண்டிருந்தாள். ஆனால், அப்படி நான் அவளை கவனிக்காமல் விட்டிருந்தால்? “என் மகன் என்கூட இல்லாததுனாலதான் எனக்கு எந்த வசதியும் கிடைக்கல” என்ற எண்ணம் அவளுடைய மனதில் உண்டாகத் தொடங்கிவிடும். உண்மையிலேயே அது ஒரு தர்மசங்கடமான நிலைதான்.

ஒரு தாயால் தன்னுடைய மகனின் கவனக் குறைவாலோ இயலாமையாலோ விளையக்கூடிய குறைகளைத் தாங்கிக்கொள்ள முடியும். நான் அதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஸ்ரீதரன் இருந்தபோது அவளுக்கு எவ்வளவோ கஷ்டங்கள் இருந்திருக் கின்றன. ஆனால், அப்போது அவள் மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தாள்.

அவள் எனக்காக பிரசவ வேதனையை அனுபவித்ததில்லை.

நான் தீவிரமாக உருவாக்கிய நம்பிக்கை அந்தக் கிழவியின் மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பல கனவுகளையும் படைத்தது. தனியாக அமர்ந்து அவள் என்னவோ நினைவுகளில் மூழ்கிப் போயிருப்பதை இதயத்தில் வேதனை குடிகொள்ள நான் பார்த்துக் கொண்டிருப்பேன். அவளுடைய உடல் நிலை முன்பிருந்ததைவிட இப்போது நன்றாக இருந்தது. அவளின் உடல் நலம் எப்படி முன்னேற்றம் கண்டது? அது மோசமாக பாதிக்கப்பட்டு அவள் இறப்பைத் தழுவியிருக்கலாம். ஆனால், அவள் சாகவில்லை. அவன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையுடன் சாப்பிட வேண்டிய உணவை ஒழுங்காகச் சாப்பிட்டு உடம்பை நல்ல நிலையில் வைத்திருக்கிறாள் அவள். அவளின் வாழ்க்கைக் காலம் மேலும் அதிகமாகப் போகிறது!

நான் அவளை ஏமாற்றி விட்டேன். அந்த ஏமாற்றத்தில் சிக்கிக் கொண்டு அவள் சிந்திக்கிறாள். அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

சிந்தனைக்கு மத்தியில் கிழவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

“அப்போ... மகனே! ஸ்ரீதரன் வந்த பிறகு யூனியனோட தலைவனா ஆயிடுவானா?”


இதற்கு நான் என்ன பதில் சொல்வேன்? மகன் வந்த பிறகு நடக்கப் போகிற விஷயம் இது. அப்படித்தான் நடக்கும் என்று நான் சொன்னேன். சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்த அவள் மீண்டும் சொன்னாள்:

“என் பிள்ளைக்கு அதுக்குப் பின்னாடி ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். ஏதாவது வேலை நிறுத்தம் நடந்ததுன்னா, போலீஸ்காரங்க அவனைத்தான் முதல்ல பிடிச்சிட்டுப் போவாங்க.”

மனதிற்குள் சிந்தித்துச் சொன்ன இந்த வார்த்தைகளுக்குப் பிறகு கிழவி இனிமையான பல கனவுகளில் மிதக்க ஆரம்பித்தாள். ஸ்ரீதரன் திருமணம் செய்து கொள்வது, அவனுக்கு குழந்தைகள் பிறப்பது- இப்படி. இப்படி... ஆனால், கிழவியின் கனவுகளைப் பார்க்கும்போது என்னுடைய இதயம் வேதனையால் வெம்பியது. வேறு ஏதாவது வழிகளுக்கு அவளுடைய சிந்தனையைத் திருப்பிக் கொண்டு போனால் என்ன என்று நினைத்தேன். அதே நேரத்தில் இன்னொரு சிந்தனை எனக்குள். அதை நினைத்தாவது அவள் ஆனந்தத்தில் திளைத்திருக்கட்டுமே!

அவள் சொன்னாள்:

“அவனை சிறைக்குக் கொண்டு போனாக்கூட எனக்கு கவலையில்ல. நான் கொஞ்சம் கூட வருத்தப்பட மாட்டேன். அவன் நல்ல காரியத்துல ஈடுபட்டதுனாலதானே சிறைக்குப் போயிருக்கான்? யூனியன் வந்த பிறகு எல்லாருக்கும் எவ்வளவு நிம்மதி தெரியுமா? பிள்ளைகளே, உங்களுக்குத் தெரியாது. நாங்க சின்னப் பிள்ளைகளா இருக்குறப்போ கஷ்டப்பட்டு வேலை செய்யணும். ஆனா, சம்பளம் மட்டும் கேட்கக் கூடாது. அவங்களா தந்தா வாங்கிக்கணும். இப்போ... நீங்க நல்ல ஆடைகளும் வெளுத்த வேஷ்டியும் கட்டிக்கிறீங்கள்ல? அப்போ இதெல்லாம் முடியாது...”

அவள் அந்தப் பழைய கதையைச் சொன்னாள். ஏழைகள் அனுபவித்த கொடுமையான கதைகள்! வெளுத்த வேஷ்டி கட்டியதற்கு அடிகள் கிடைத்தது, குழந்தை இறந்துவிட்டது என்று தாய் அழுததற்காக அருகில் வசித்த பணக்காரன் பொறுக்க முடியாமல் அவளை வீட்டை விட்டு வெளியே போகச் சொன்னது, வாங்கிய கூலி அன்றைக்குப் போதாது என்று தனக்குத் தானே முணுமுணுத்து நின்ற ஒரு புரட்சிக்காரன் அதற்குப் பிறகு நிரந்தரமாகக் காணாமல் போனது... இப்படி நூறு கதைகள்!

அவள் சொன்னாள்:

“இப்பவும் நமக்கு எல்லாம் கிடைக்குதா, பிள்ளைகளே? நாம வேலை செய்யிறோம். முதலாளி லாபம் சம்பாதிச்சு சுகமாக இருக்காரு. அவருக்கு பிடிக்கலைன்னா, நம்மளை வேலையைவிட்டு போகச் சொல்லிடுவாரு. வேலை செய்ய முடியாம நாலு நாட்கள் படுத்துட்டா, பட்டினி கிடக்க வேண்டியதுதான்...”

நான் சொன்னேன்:

“இனியும் பல தடவை துப்பாக்கிச் சூடு பட்டு செத்தாத்தான் இதெல்லாம் சரியாகும் அம்மா.”

நான் சொன்னதற்கு தலையைக் குலுக்கி சம்மதித்தாள் கிழவி.

“நீ சொல்றது சரிதான். இப்ப செத்ததெல்லாம் இனி இருக்குற குழந்தைகளுக்காகத்தான்...”

அப்படியென்றால் ஸ்ரீதரன் துப்பாக்கிச் சூடு பட்டு இறந்தான் என்றால் அவளுக்கு அது குறித்து பெருமைதானே என்று சொல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால், அவளின் முகத்தை பார்த்து அதைச் சொல்ல எனக்குத் தோன்றவில்லை. அவள் அவனைப் பெற்ற தாய். அப்படி ஒரு மகனின் மரணத்தைப் பெருமையாக நினைத்து தன்னுடைய துக்கத்தை அடக்க ஒரு தொழிலாளியின் தாயால் முடியக் கூடிய காலம் எப்போது வரப் போகிறதோ?

அன்று தப்பித்து பூமியின் பல பகுதிகளிலும் போய் ஒளிந்து கொண்டவர்களில் பலர், ஆச்சரியப்படும் விதத்தில் ஒளிந்தும் பதுங்கியும் ஊருக்குள்ளும் வீட்டுக்கும் வந்து போகத் தொடங்கினர். ஸ்ரீதரன் இறந்திருக்க வேண்டும் என்று ஒருவன் சொன்னான். தப்பித்து விட்டான் என்று சொன்னவனால் அவன் இப்போது எங்கே இருக்கிறான் என்பதைக் கூற முடியவில்லை. அவன் தப்பித்ததை அந்த மனிதன் பார்க்கவில்லை. வெறும் யூகம் மட்டுமே.

நாட்கள் நீங்க நீங்க அந்தக் கிழவிக்கு ஒரு விரக்தி உண்டாக ஆரம்பித்தது.

“அவன் எப்போ வருவான் மகனே?” என்ற ஒரு நாளில் பத்து முறையாவது அவள் கேட்பாள். அவளின் எந்த பேச்சும் இந்தக் கேள்வியில்தான் போய் முடிந்தது. முதலில் அவன் வரப் போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்று நான் கூறிக் கொண்டிருந்தேன். எவ்வளவு நாட்கள்தான் நான் இப்படியே நடித்துக் கொண்டிருக்க முடியும்? அதே நேரத்தில் அவன் திரும்பி வருவான் என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை. இனி இருக்கும் நாட்களி லாவது பாவம் அந்த ஏழைத் தாய் நிம்மதியாக இருக்கட்டும்.

அவன் எப்போது வருவான் என்ற கேள்வி அவன் விரைவில் வருவானா என்று மாறியது. தொடர்ந்து அவள் நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்பாள். எல்லாமே ஸ்ரீதரன் திரும்பி வரக்கூடிய சாத்தியங்களை விமர்சிக்கக் கூடியவை. அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் உள்ள அரசியல் நிலவரங்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அந்தக் கேள்வி தொட்டது. படிப்பறிவே இல்லாத ஒரு கிழவிக்கு இதெல்லாம் எப்படித் தெரிகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன். அனுபவத்திலிருந்துதான் அரசியல் அறிவு உதயமாகிறதோ?

மகன் திரும்பி வருவதற்கு முன்பு தான் மரணமடைவது நிச்சயம் என்று உறுதியாக அந்தத் தாய் நம்பினாள். அவனை ஒரு முறையாவது பார்த்த பிறகே தான் மரணமடைய வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள். நடக்க முடியாத ஆசை... இருந்தாலும் அதை அறுதியிட்டுக் கூற எனக்கு நாக்கு வரவில்லை.

அந்த கூட்டுக் கொலை பொதுமக்கள் நீதிமன்றத்தில் ஒரு கூட்டுக் கொலையாகத்தான் தீர்ப்பு சொல்லப்பட்டது. அப்போது எங்கெங்கோ போய் ஒளிந்து கொண்டவர்கள் அஞ்சாமல் வெளியே வரலாம் என்ற சூழ்நிலை உண்டானது. ஆனால், அந்த முக்கியமான நாளன்று நோய் வாய்ப்பட்டு அவ்வப்போது சுய நினைவு வருகிற மாதிரி மரணப்படுக்கையில் படுத்துவிட்டாள் கிழவி. அன்று மூன்று முறை அவள் என்னை அழைத்துக் கேட்டாள்:

“அவன் திரும்பி வந்துட்டானா?”

இறந்து போனவர்கள் என்று நம்பப்பட்டவர்கள் திரும்பி வந்த சந்தோஷம் ஒவ்வொரு வீட்டிலும் அலையடித்துக் கொண்டிருக்கும் போது நான் என்ன பதில் சொல்வேன்? அவர்கள் வந்த விஷயம் கிழவிக்குத் தெரியாது. அவள் அதைத் தெரியாமலே இருக்கட்டும். அவன் திரும்பி வருவான் என்ற என் வார்த்தைகள் பிரம்மாண்டமாக எனக்கு முன்னால் நின்று என் முகத்தைப் பார்த்து வக்கனை காட்டின.

நாட்கள் சில கடந்தன. வர வேண்டியவர்களெல்லாம் வந்துவிட்டார்கள். அவன் திரும்பி வரவில்லை.

கிழவியின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவள் படுத்த இடத்தைவிட்டு எழுந்திருக்கப் போவதில்லை. அது மட்டும் உண்மை.


அதே நேரத்தில் அவள் தன் கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கக் கூடிய அளவிற்கு அவளுக்கு சுயநினைவு இல்லாமல் இருக்க வேண்டுமே என்று நான் கடவுளிடம் வேண்டினேன். இன்னொரு முறை அவன் எப்போது வருவான் என்று அவள் கேட்டால், அவன் திரும்பி வரப்போவதில்லை என்று நான் கூறினாலும் கூறிவிடுவேன். அந்தப் பெரிய பொய்யை இனிமேலும் சொல்ல என்னால் முடியாது.

அவள் வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருந்தாள். ஆனால் அதிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் இருந்தது. அவள் யாரையோ தனக்கு முன்னால் இருப்பது மாதிரி நினைத்துக் கொண்டு அவர்களுடன் வாதம் செய்வதைப் போல் தோன்றியது. அவள் சொன்னாள்:

“இந்த இருபத்தைந்து தென்னங்கன்றுகளையும் நாங்கதான் வச்சோம். தலைமுறை தலைமுறையாக வசிச்சு வர்ற இந்த இடத்தைவிட்டு இப்போ வேற இடத்துக்குப் போறதுன்னா எப்படி மனசு வரும்?”

அந்த “மனமில்லா நிலை”க்குத்தான் எத்தனை சக்தி இருக்கிறது! எவ்வளவு திடமாகச் சொல்கிறாள் அவள்! அப்படிச் சொல்லும்போதுதான் கிழவியின் குரலில் என்ன உறுதி! ஒரு முழுமையான உரிமை உணர்விலிருந்து வரும் வார்த்தை அது. எந்த சக்தியாலும் அந்த “மனமில்லா நிலை”யை மாற்ற முடியாது. வெறித்துப் பார்த்தவாறு அவள் கேட்டாள்:

“உங்க மண்ணா! உங்களுக்கு எங்கேயிருந்து மண்ணு வந்துச்சு?”

சிறிது நேரம் கழித்து அவன் ஒரு பழைய கதையைக் கூறத் தொடங்கினாள். அவளின் தந்தையை அடித்துக் கொன்றதை தாத்தா சகித்துக் கொண்டார் என்ற பரம்பரை பரம்பரையாக நடந்து வந்த ஒரு கொலைக் கதை அது. அவள் அழுதாள். ஆவேசம் வந்து பற்களைக் கடித்தாள். தன்னுடைய இளம் வயதில் பார்த்த அந்த கொலைக் கதைகளை அவளே நடித்துக் காட்டினாள்.

அந்தக் கதைகளை நாங்கள் கேட்டோம், கண்டோம். பாவம் அந்தக் கிழவி இந்தக் கதைகளையெல்லாம் வாழ்க்கையில் பார்த்திருக்கிறாளா என்று நினைத்தோம். அந்தக் குடும்பத்தின் அடக்கப்பட்ட ஆவேசத்தின் சின்னம்தானே ஸ்ரீதரன்? இருக்கலாம். அவனுடைய வர்க்க உணர்வு, தைரியம் ஆகியவற்றிற்கான காரணம் அந்தக் கிழவி சொன்ன குடும்பக் கதைகள் மூலம் தெரிந்தது.

மற்றொரு வீட்டு சம்பவம்... பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு கிடைத்த கூலியான ஏழு சக்கரத்தை வீட்டுக்கு கொண்டு வந்த கணவனும் மனைவியும் செலவு விஷயங்களைப் பற்றி சிந்திக்கிறார்கள். அந்தச் சுருக்கமான கணக்கிலும் ஆறு சக்கரம் குறைவாக இருக்கிறது. தன்னுடைய மகனைப் பார்த்து தாய் கூறுகிறாள்:

“என் மகனே, என்ன பாடுபட்டாவது இன்னைக்கு உனக்கு சோறு போடுவேன்.”

அதுவும் அந்தக் குடும்பத்தின் கதைதான்.

அன்று அங்கு மண்ணோடு மண்ணாகப் போய்ச் சேர்ந்த தியாகிகளின் நினைவைக் கொண்டாடும் நாள். கிராமத்தையே சுற்றி வர ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிழவி மரணப் படுக்கையில் கிடப்பதால் என்னால் அந்த நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை.

தூரத்தில் சோக மயமாக பேண்ட் வாத்தியம் முழங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தியாகியின் வீட்டின் முன்னாலும், அந்த ஊர்வலம் நின்று மரியாதை செலுத்தியது.

ஊர்வலம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. எங்களுக்கு அடுத்த வீட்டின் முன்னால் அது வந்து நின்றது. அந்தத் தாய் ஒரு தாலாட்டு பாடலைப் பாடத் தொடங்கினாள்:

“வா வ வா வ வா வோ- ஸ்ரீதரன்

வா வ வா வ வா வோ...”

அதை அங்கு கூடியிருந்த எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாங்கள் அழுது விட்டோம்.

ஊர்வலம் எங்கள் வீட்டின் முன்னால் வந்து நின்றது. அந்த இதயத்தை நெகிழச் செய்யும் பேண்ட் வாத்தியக் குழு, “எங்களுக்கு மகிழ்ச்சி தருக” என்ற பாடலை இசைத்துக் கொண்டிருந்தது.

கிழவி புன்னகை ததும்ப கண்களைத் திறந்தாள். அந்த அளவிற்கு இதயம் குளிர்ந்த ஒரு சிரிப்பை நான் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று! அவள் தன்னுடைய மகனைக் காண்கிறாள்!

அவள் கைகளை உயர்த்தி காற்றைக் கட்டிப் பிடித்தாள். அவள் என்ன செய்கிறாள்? அவளின் அணைப்புக்காக அவன் அங்கு நின்றாலும் நின்றிருக்கலாம்.

“பிள்ளைகளே, என் மகன் வந்துட்டானா?” அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அந்தக் கண்கள் மூடின.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.