Logo

இரவின் முடிவு

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6609
Iravin Mudivu

ன்னல் அருகில் வெளியே பார்த்தவாறு அந்த மனிதர் அமர்ந்திருந்தார். எப்போதும் உறங்கப் போகிற நேரம் கடந்து விட்டிருந்தது. ஆனால், இப்போது அவரின் மனதில் நேரத்தைப் பற்றியோ தூக்கத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட எண்ணம் இல்லை என்பதே உண்மை. வெறுமனே வெளியே உற்று நோக்கியவாறு அந்த மனிதர் அதே இடத்தில் உட்கார்ந்திருந்தார்.

வெளியே நல்ல இருட்டு. விளக்குகள் இன்னும் போடப்படாமல் இருந்தால், அறைக்குள்ளும் கொஞ்சம்கூட வெளிச்சமே இல்லாமல் இருந்தது. ஆனால், அப்படி இருட்டில் உட்கார்ந்திருப்பதுதான் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இருட்டில் தனியாக அமர்ந்து...

அந்த மனிதரின் கையில் பிரிக்கப்பட்ட ஒரு தாள் இருந்தது. குண்டு குண்டாக பெரிதாக நீல வர்ணத்தில் பக்கம் முழுக்க எழுதப்பட்டிருந்த ஒரு கடிதம். அவர் அவ்வவ்போது தன்னுடைய விரல்களால் கண் பார்வை தெரியாத ஒரு மனிதன் செய்வதைப் போல கடிதத்தை இறுகப் பற்றுவதும், அதை மென்மையாகத் தடவுவதுமாய் இருந்தார்.

அந்த இளம் பெண் எழுதியிருந்தாள்.

'எனக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் எனக்கு எந்தக் காலத்திலும் பதில் கடிதம் எழுதப் போவதில்லை. ஆனால், பதில் கிடைக்கிற கடிதங்களை விட பதிலே கிடைக்காத கடிதங்களைத்தான் நான் விரும்பத் தொடங்கியிருக்கிறேன். இது ஜீலை மாதத்தில் நான் எழுதும் கடிதம். அடுத்த கடிதம் எப்போது எழுதுவேன் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நான் கட்டாயம் எழுதுவேன்.

என்னை ஞாபகத்தில் இருக்கிறதா?

மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்றுதான் நாற்று நடும் வேலை தொடங்கியது. ஜன்னல் திறந்திருக்க, உடனே ஏதாவது எழுத வேண்டும் போல் தோன்றியது.

இரவு நேரத்தின் களைப்பு, தூக்கம் எல்லாவற்றையும் மறந்து எழுதுகிறேன்.

மழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அம்மா படுக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறாள்.

அங்கே நாற்று நடும் வேலை ஆரம்பமாகிவிட்டதா?

என் மேல் கோபம் உண்டாகக் கூடாது. ஏன் இப்படியெல்லாம் கடிதங்கள் எழுதுகிறேன் என்று என்னைப் பார்த்து ஒரு நாளும் கேள்வி கேட்கக் கூடாது. கேட்டால் எதற்கு நான் கடிதம் எழுதுகிறேன் என்று எனக்கே தெரியாது.

வெளியே நிலவு காய்ந்து கொண்டிருந்தது. நிலவு வெளிச்சத்தில் தூரத்தில் இருந்த காடுகள் மேலும் கறுப்பாகத் தெரிந்தன.

அந்த மனிதரின் களைத்துப் போன கண்கள் யாரையோ எதிர்பார்ப்பதைப் போல காட்டை நோக்கியும், காட்டைத் தாண்டி அப்பாலும் சென்றன.

எங்கும் ஒரு சிறு அசைவோ ஓசையோ எதுவுமே இல்லை. மொத்தத்தில் அங்கு இருந்தது நிலவு வெளிச்சமும் காட்டின் இருட்டும் மட்டுமே.

பிறகு... காட்டைக் கடந்து நிலவிற்குள் பெண் வந்தாள்.

ஆனால், அது அந்தப் பழைய இளம் பெண்தான்... அந்த மனிதருக்குச் சமீப காலமாகக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிற இளம் பெண் இல்லை. அவளிடம் கொஞ்சம் கூட மாற்றம் இல்லை. முன்பு தான் பார்த்தது மாதிரியே இப்போதும் அவள் இருப்பதாக அவருக்குப்பட்டது. அந்தப் பெண் பேசத் தொடங்கியபோது... அவளின் படபடப்பான கேள்விகளும், குலுங்கிக் குலுங்கி சிரிக்கும் சத்தமும்... முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியேதான்.

அவளின் எல்லா கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. அவளின் இளமை தவழும் உள்ளங்கையைத் தடவியவாறு அவர் சொன்னார்:

"எனக்கு ரொம்பவும் களைப்பா இருக்கு. போதாக் குறைக்கு நான் இப்போ ஒரு நோயாளி வேற..."

அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளாத மாதிரி அந்தப் பெண் அவரின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அவர் தொடர்ந்து சொன்னார்:

"ஆனா... பரவாயில்ல... நீ இங்கே என் பக்கத்துல இருக்குறப்போ... நீ வருவேன்னு எனக்குத் தெரியும். ஒரு தடவை... ஒரே ஒரு தடவையாவது... முதல் முதலா நாம சந்திச்சது போல..."

அந்தப் பெண்ணுக்கு அப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவள் ஒருவித குழப்பத்துடன் அந்த மனிதரின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள்.

"உனக்கு ஒரு தம்பி இருந்தானே! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... நாம முதன் முதலா சந்திச்சப்போ அவனோட கையில தகரத்தால் செய்யப்பட்ட ஒரு சின்ன விமானம் இருந்துச்சு! அது ஒரு சணல்ல கட்டப்பட்டிருந்துச்சு. தலைக்கு மேல அவன் அந்த சணலை வட்டமா சுத்திக்கிட்டே இருந்தான்..."

அந்த இளம் பெண் அவரைப் பார்த்து ஆச்சரியத்துடன் சொன்னாள்:

"நீங்க அதையெல்லாம் இன்னும் மறக்கலியா?"

"என்னால எப்படி மறக்க முடியும்?" அந்த மனிதர் கவலையுடன் சொன்னார்: "அதை மறக்கத்தான் முடியுமா? அப்படி மறந்தா என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?"

அந்தப் பெண் சொன்னாள் :

"நீங்க சொல்றது சரிதான். நானும் எதையும் மறக்கல..."

அப்போது அவர் கேட்டார் :

"ஆமா நீ சொல்லலியே... அவன் இப்போ என்ன செய்றான்?"

பெண் சிரித்தவாறு சொன்னாள் :

"அவன் இப்போ பெரிய ஆள். அமெரிக்காவுல போயி படிச்சு... அவனுக்கு இப்போ மனைவியும் ரெண்டு குழந்தைகளும் இருக்காங்க..."

அவர் அடுத்த நிமிடம் சொன்னார்:

"அப்படி இருக்குறதுதான் எனக்குப் பிடிக்கும்..."

அவள் சொன்னாள் :

"எனக்கும் தான்."

அழகான தன்னுடைய பற்கள் வெளியே தெரியும் வண்ணம் அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அப்போது அவளுடன் சேர்ந்து அவரும் சிரித்தார்.

அந்தப் பெண் என்னவோ ஞாபகத்தில் வந்த மாதிரி சொன்னாள் :

"நான் இப்போ திரும்பிப் போறதா இல்ல..."

அவர் வியப்புடன் கேட்டார்:

"பிறகு...?"

அந்தப் பெண் அவரின் தளர்ந்து போன கைகளைத் தடவியவாறு சொன்னாள் :

"நான் இங்கேயே இருக்கப் போறேன். உங்ககூட... உங்களுக்கு ஒரு துணையா..."

பலமான ஒரு காற்றில் சிக்கிக் கொண்டதைப் போல இதைக் கேட்டதும் அந்த மனிதர் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்.

"இங்கேயா? இங்கே எப்படி தங்க முடியும்? இங்கே நீ தங்குற அளவுக்கு ஒரு அறை இல்லியே! பிறகு... உனக்குச் சாப்பாடு பண்ணித் தர்றது யாரு? ஒரு கப் தேநீர் தயாரிச்சுக் கொடுக்கக் கூட என்னால முடியாதே!"

அவரின் குரலில் சந்தோஷமும் சங்கடமும் இரண்டறக் கலந்திருந்தன.

அந்தப் பெண் சொன்னாள் :

"எனக்கு எல்லாமே தெரியும். சாதம் தயார் பண்ணவும், குழம்பு வைக்கவும், பலகாரங்கள் தயார் பண்ணவும், சுவையான தேநீர் தயாரிக்கவும்... இது எல்லாம் தயார் பண்ணி விருப்பப்படி உங்களை நான்..."


"நல்ல ஒரு தடிமனான ஆளா என்னை மாத்திடுவே. அப்படித்தானே?"

"இல்ல... இல்ல... நிச்சயமா உங்களை நான் தடிமனான ஆளா மாத்த மாட்டேன். எனக்குப் பொதுவா தடிமனான ஆளுங்களைக் கண்டாலே பிடிக்காது. நான் உங்களோட நோய்கள் அத்தனையும் சரிப்படுத்தி உங்களைப் பழைய மாதிரி ஆக்கப் போறேன். நான் இங்கே வந்திருக்கிறதே அதற்காகத்தான்..."

அவர் பெருமூச்சு விட்டவாறு சொன்னார் :

"முன்பு இருந்ததைப் போல..."

அவள் சொன்னாள் :

"ஆமா... முன்பு இருந்ததைப் போலத்தான்..."

அதற்குப் பிறகு இரண்டு பேருமே எதுவும் பேசாமல் மௌனமாகி விட்டார்கள்.

சில நிமிட அமைதிக்குப் பிறகு அந்தப் பெண் சொன்னாள் :

"உங்களுக்கு ஞாபகம் இருக்கா? அன்னைக்கு நீங்க தற்கொலை செய்யணும்னு புறப்பட்டுக்கிட்டு இருந்தீங்க..."

"ம்...' என்று அவர் தலையை ஆட்டியபோது அந்தப் பெண் தொடர்ந்து சொன்னாள் :

"நான்தான் உங்களை அதைச் செய்ய விடாம தடுத்து நிறுத்தினேன்..."

அவர் மெதுவான குரலில் சொன்னார் :

"ஞாபகத்துல இருக்கு... ஞாபகத்துல இருக்கு..."

அவள் சொன்னாள் :

"ஆனா, நான் அன்னைக்கு நீங்க தற்கொலை பண்ணிக்க வேண்டாம்னு ஒண்ணும் சொல்லல. தற்கொலை செய்யப் போறேன்னு நீங்களும் என்கிட்ட சொல்லல. ஆனா, எனக்கு அது தெரியும். அதனால ஒண்ணும் சொல்லாமலே நான்.. என் அன்பால மட்டும்..."

அவர் அவளைத் தடுத்தார்.

"வேண்டாம். இதற்கு மேல் ஒண்ணுமே சொல்ல வேண்டாம். எல்லாம் என்னோட ஞாபகத்துல இருக்கு..."

பெண் கவலையுடன் சொன்னாள் :

"சொல்லாம எப்படி இருக்க முடியும்? நீங்க இப்போ செய்றது கூட ஒரு வகையில தற்கொலை மாதிரி தானே! யாரையும் பார்க்காம எங்கேயும் போகாம... உங்களுக்கு நீங்களே ஒரு சிறு உலகத்தை அமைச்சிக்கிட்டு... இந்த இருட்டுக்குள்ளே முடங்கிக்கிட்டு... இது தேவையா? யாருக்காக இது? இப்படி இருக்குறதால என்ன பிரயோஜனம்? நீங்க உருப்படியா சொல்ற மாதிரி காரியங்கள் செய்து எத்தனை வருடங்களாச்சு! நான் இதையெல்லாம் புரிஞ்சுக்காம இல்ல. அதனாலதான் சொல்றேன்..."

அவர் ஒன்றுமே பேசாமல் மௌனமாக நிற்கவே, அவள் தொடர்ந்தாள் :

"இங்கே ஒரு இளம் பெண் வந்துக்கிட்டு இருந்தாள்ல? சில நேரங்கள்ல உங்களுக்குச் சாப்பாடு எடுத்துக்கிட்டு... நல்ல அழகான ஒரு இளம்பெண்! நீங்க அவளை மகளைப் போல அன்பு செலுத்தி வச்சிருந்தீங்க..."

அவர் சொன்னார்:

"என் அக்கா மகளோட மகள். அவ எனக்கு எல்லாமாக இருந்தா. நான் மகளைப் போல அவ மேல அன்பு வச்சிருந்தேன்..."

அவர் திடீர்ரென்று தான் சொல்லிக் கொண்டிருந்ததை நிறுத்தினார். பிறகு தனக்குத் தானே பேசிக் கொள்வதைப் போல மெதுவான குரலில் சொன்னார்.

"எதற்கு 'போல'ன்னு நான் சொல்லணும்? அவ எனக்கு மகள்தானே! அவ போன பிறகுதானே நான் தன்னந்தனியான ஒரு ஆளா ஆயிட்டேன் ! அதற்குப் பிறகு... எனக்குன்னு... யாருமே இல்லாம..."

அந்தப் பெண் ஆறுதல் கூறும் வகையில் சொன்னாள் :

"அப்படிச் சொல்லக் கூடாது. அப்படி நீங்க சொல்றதை நான் ஒத்துக்கவே மாட்டேன். யாருமே இல்லைன்னு சொன்னா எப்படி? நீங்க அப்படி நினைக்கிறீங்க... உங்க மனசுல அப்படித் தோணுது. உங்க மருமகளோட பொண்ணு. அவளுக்குத் திருமணம் ஆயிட்டா, அவ தன் புருஷன்கூட போக வேண்டாமா? இங்கேயே தங்கி உங்க விஷயங்களைப் பார்த்துக்கிட்டு இருக்க முடியுமா?"

அவர் எதுவும் பேசாமல் அமைதியாக நின்று கொண்டிருக்க அவள் தொடர்ந்தாள் :

"உங்களுக்குத்தான் எப்பவும் நான் இருக்கேன்ல? என்னைத் தவிர, வேற எவ்வளவு பேர் இருக்காங்க! இளைஞர்களும், வயதானவர்களும்... ஆனா, நீங்க எல்லாரிடமிருந்தும் விலகி நின்னுக்கிட்டு இருந்தா... உங்களுக்கு எப்போ பார்த்தாலும் மனசுல சந்தேகம்... நான் சொல்றது சரிதானா?"

அவர் ஒன்றும் பேசவில்லை.

வெளியே வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண் அவரின் கைகளைப் பிடித்தவாறு சொன்னாள்.

"சரி... போகட்டும். அதெல்லாம் முடிஞ்சு போன விஷயங்கள். அதைப் பற்றி இப்போ நினைக்காம இருந்தாலே நல்லது. இப்போ நாம..."

அந்தப் பெண் என்ன சொல்லப் போகிறாள் என்ற ஆவலுடன் அவள் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு நின்றிருந்தார் அவர்.

பெண் தொடர்ந்தாள்:

"இங்கே பாருங்க... இருக்குறதே கொஞ்ச நேரம்தான். கொஞ்ச நேரத்திற்காவது நாம இருண்டு போய் கிடக்குற இந்தக் குகையை விட்டு வெளியேறி... வெளிச்சமும், பிரகாசமும் இருக்குற ஏதாவதொரு இடத்திற்குப் போய்... எங்கேயாவது..."

அவர் கேட்டார்.

"ரொம்ப... ரொம்பவும் தூரத்துல போக உனக்குப் பிடிக்குமா?"

அந்தப் பெண் சிரித்தவாறு சொன்னாள் :

"நீங்க என் கூட இருந்தா... எவ்வளவு தூரத்துல இருந்தா என்ன?"

அவர்கள் இருவரும் குளக்கரையில் இருந்த ஒரு ரெஸ்ட்டாரெண்டில் அமர்ந்திருந்தார்கள். ரெஸ்ட்டாரெண்ட் என்றால்... ரெஸ்ட்டாரெண்ட் முன் இருந்த அழகான ஒரு நடைபாதையில் என்று அர்த்தம்... நடைபாதையை ஒட்டி இருந்தது அந்தக் குளம். குளத்தில் இருந்த நீரில் கருப்பும் வெள்ளையுமாக மீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. குளத்தின் கரையில் இருந்த மரங்களின் இலைகளில் மாலைநேர சூரியனின் மஞ்சள் வெளிச்சம் பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தது.

அவர் உற்சாக மிகுதியில் இருந்தார்.

அவளும்தான்.

அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு பழைய பாடலை அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

"ஜரா, தீரே, தீரே..."

அந்தப் பெண் ஆர்வத்துடன் கேட்டாள் :

"இது யாரோட பாடல்?"

அவர் உணர்ச்சி பொங்கக் கூறினார் :

"பீகம் அக்தர்... பீகம் அக்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கியா?"

அவள் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

அவர் அவளுக்கு பீகம் அக்தரைப் பற்றி சொன்னார்.

பெண் மீண்டும் கேட்டாள் :

"பாட்டுல முன்னாடி இருந்த மாதிரி இப்பவும் உங்களுக்கு ஆர்வம் உண்டா?"

அவர் சொன்னார் :

"நிச்சயமா..."

என்னவோ சிந்தித்த அவர் மீண்டும் சொன்னார் :

"ஒரு வேளை இதுவும் இல்லைன்னா"

அவள் சொன்னாள்.

"இல்ல... இல்ல... அப்படி ஒரு போதும் நடக்கவே நடக்காது..."

அவர் மீண்டும் பீகம் அக்தரின் வரிகளை முணுமுணுக்க ஆரம்பித்தார்.

பிறகு... தான் பாடிக் கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து கேட்டார் :


 

"நாம முதன் முதலா சந்திச்சப்போ நீ பாடிய பாட்டு... ஞாபகத்துல இருக்கா?"

அந்தப் பெண் சொன்னாள்.

"சாந்தாரே, ஜாரே, ஜாரே... சரியா?"

அவர் தலையை ஆட்டினார். பிறகு... தனக்குத் தானே சொல்லிக் கொள்வதைப் போல சொன்னார் :

"காலம் எவ்வளவோ கடந்து போயிடுச்சு. நாம ரெண்டு பேரும் அதை நினைச்சுப் பார்க்கிறோம்..."

அந்தப் பெண் சிரித்தாள். ஆனால், அவளின் சிரிப்பில் மகிழ்ச்சி மட்டுமல்ல, சோகமும் கலந்திருந்தது.

பிறகு அவள் சொன்னாள்:

"நாம புறப்படலாம். இங்கே ஒரு பழைய கோட்டை இருக்குல்ல? கடற்கரையில்... முக்கால்வாசி இடிஞ்சி போய்... நாம முதல் தடவையா சந்திச்ச... ஞாபகத்துல இருக்கா? நாம அங்கே போகலாம். எனக்கு ரொம்பவும் விருப்பமான ஒரு இடம் அது..."

அவர் புன்னகைத்தவாறு சொன்னார் :

"எனக்குத் தெரியும்..."

கடற்கரையில் முக்கால் பகுதி இடிந்து போய் காணப்படும் பழைய கோட்டை. பாசி பிடித்த தளங்கள்... சிதிலமடைந்து போயிருக்கும் சுவர்கள்... எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கும் வயதான காற்றாடி மரங்கள்...

ஒரு சோகத்தில் இருப்பதைப் போல உரத்த குரலில் ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும் கடல்...

மறையப் போகிற சூரியனைப் பார்த்தவாறு அவர்கள் நீண்ட நேரம் நின்றிருந்தார்கள்.

கடைசியில் அந்தப் பெண் சொன்னாள் :

"நாம திரும்பிப் போகலாம்... இருட்ட ஆரம்பிச்சிடுச்சு..."

ஒருவரையொருவர் கைகளைக் கோர்த்தவாறு எதுவுமே பேசாமல் அவர்கள் வெளியே நடந்தார்கள்.

காலையில் சாய்ந்து கீழே விழும் நிலையில் இருக்கும் கேட்டைத் திறந்து பக்கத்து வீட்டு கிழவி என்றைக்கும் வருவதைப் போல அன்றும் கையில் பாலுடன் வந்தாள். அந்தச் சமயத்தில் அந்த மனிதர் வராந்தாவில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருப்பதைத்தான் அவள் இதுவரை பார்த்திருக்கிறாள். ஆனால்... அன்று வராந்தாவில் யாருமே இல்லை. காலியாக இருந்தது.

பத்திரிகை போடும் பையன்  வீசி எறிந்த பத்திரிகை பூமியில் கிடந்தது.

புதர் மண்டி கேட்பாரற்றுக் கிடந்த பூமியில் நடந்த கிழவி வாசலுக்கு வந்தாள். சுற்றிப் பார்த்தாள். என்னவோ அவளுக்கு இடித்தது.

வீட்டின் முன் பக்க வாசல் திறந்து கிடந்தது.

கிழவி இரண்டு மூன்று முறை அழைத்தும் யாரும் வெளியே வரவில்லை. கடைசியில் அவள் திறந்து கிடந்த வாசல் வழியே உள்ளே எட்டிப் பார்த்தாள்.

ஜன்னல்கள் பத்திரமாக அடைக்கப்பட்ட அறையில் மேஜை மேல் தலையைச் சாய்த்தவாறு அந்த மனிதர் கிடந்தார்... அவரின் இறுகப் பற்றியிருந்த கையில் ஏதோ சில தாள்கள் இருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.