Logo

இறுதி விருந்தாளி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6418

திகாலையில் படுக்கையறையை விட்டு எழும் பழக்கம் இருந்ததால் அன்றும் ஐந்தரை மணி ஆன போது மிஸ்டர் மித்ரா கண்விழித்து விட்டார். வெளியே தெருவில் உயிரோட்டம் ஆரம்பித்திருந்தது. முதல் பேருந்து இருமியவாறு பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பியது. பைத்தியக்காரனும் எழுந்து விட்டான். "இரவில் வந்து என்னுடைய முழுப் பணத்தையும் திருடியது யார்?"- அவன் உரத்த குரலில் கத்தினான். மிஸ்டர் மித்ரா வேகமாக ஜன்னல் கதவுகளை மூடினார்.

பிறகு குளிர்சாதனப் பெட்டியின் பொத்தானை அழுத்தினார். அது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்தது. அவருடைய மனைவிக்கு குளிர்ச்சி நிறைந்த அறையில் படுத்திருப்பதுதான் பிடிக்கும். அவருக்கோ குளிர்ச்சி என்றால் தாங்க முடியாது. அதனால் அவள் தூங்கியவுடன், அவர் ஏர் கண்டிஷனரை நிறுத்திவிட்டு, ஒரு ஜன்னல் கதவைத் திறந்து விடுவார். பிறகு ஏர் கண்டிஷனரின் ஸ்விட்சை 'ஆன்' செய்வது, காலையில் அவர் படுக்கையை விட்டு எழும் போதுதான். இந்த சதிச் செயலைப் பற்றி அவளுக்குச் சிறிது கூட சந்தேகம் தோன்றாது. சந்தேகம் இருந்தால் கூட அவள் அதை ஒரு முறை கூட வெளிக்காட்டியதில்லை. அவள் எப்போதும் ஒரு குடும்பப் பெண்ணுக்குப் பொருத்தமான செயல்களை மட்டுமே செய்வாள். அவருக்குப் பல நேரங்களில் அவளுடைய மதிப்பு நிறைந்த நடத்தைக்கு முன்னால் ஒரு குற்ற உணர்வுடன் நின்றிருப்பதைப் போலவே தோன்றும்.

அவர் கட்டிலைப் பார்த்தார். சுருண்டு கிடந்த போர்வைகளுக்கு அடியில் அவள் இருப்பாள் என்ற நினைப்புடன் அவர் இருந்தார். அவள் அங்கு எங்கும் இல்லை என்பதுதான் உண்மை. அப்போது, முந்தின நாளின் விருந்து முடிந்து அவள் வரவேற்பறையிலோ வராந்தாவிலோ போய் படுத்திருக்க வேண்டும். தலைவலி இருக்கும் போது சாதாரணமாகவே அவள் வராந்தாவில் படுத்திருப்பது உண்டு. நிலவில் படுத்துத் தூங்க அவள் ஆசைப்பட்டாள்."நீ கவிதை எழுதும் பெண்ணாக இருப்பதால்தான் நிலவில் படுத்து உறங்க வேண்டுமென்று ஆசைப்படுறே!" என்று பல நேரங்களிலும் அவர் கூறியிருக்கிறார். அப்படி இல்லாதவர்களுக்கு நிலவு என்றால் பயம்தான். அது பைத்தியம் பிடிக்கச் செய்யும் என்று அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.

மனைவியைத் தேடி அவர் வரவேற்பறைக்குச் சென்றார். அங்கு சுத்தமே இல்லாமல் இருப்பதைப் போல் அவர் உணர்ந்தார். முந்தின நாள் குடித்து வைத்த கண்ணாடிக் குவளைகள் மேஜை மீதே இருந்தன. அவற்றில் மது அருந்துவதற்காக நுழைந்த பூச்சிகள் இறந்து கிடந்தன. தரையில் சிகரெட் துண்டுகள் சிதறிக் ககிடந்தன. ஆஷ்ட்ரே இருந்தும் அவர்கள் ஏன் தரையைப் பாழ் செய்ய வேண்டும்? அவர் தனக்கத்தானே கேட்டுக் கொண்டார். கவிஞர்கள், பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் முழுமையான காட்டு வாழ் மனிதர்களைப் போன்றவர்கள். அவர்களை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்து உணவும் மதுவும் தந்து மரியாதை செய்யும் தன் மனைவியை முதலில் தண்டிக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இந்த மாதிரியான விருந்துகளுக்கு அவள் எவ்வளவு பணத்தைச் செலவழிக்கிறாள்! அதை எதிர்த்துக் கூறியும் ஒரு பலனும் இல்லை. அவள் சம்பாதிக்கிற பணமாயிற்றே அது! அவளுடைய மிகப்பெரிய மனதைக் கொண்டுதானே தானும் தன்னுடைய ஒரே மகனான ரமேஷும் அங்கு பணக்காரர்களைப் போல வாழ முடிகிறது! அவ்வப்போது அதையெல்லாம் வேண்டாம் என்று உதறிவிட்டு, திரும்பவும் டாக்காவிற்குப் போக வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு உண்டாவதுண்டு. அங்கு, அவர் முன்பு வசித்திருந்த கிராமம்தான் இருக்கிறதே! அது மட்டுமல்ல- அவருடைய வீடும் அங்கு இருக்கிறது. ஒருவேளை ஏதாவதொரு முஸ்லிம் குடும்பம் இப்போது அங்கு வசித்துக் கொண்டு இருக்கலாம்.

சிகரெட் துண்டுகளை எடுத்து ஆஸ்ட்ரேயில் போட்ட அவர் சமையலறைப் பக்கம் பார்த்துச் சொன்னார்: "கொஞ்சம் தேநீர் வேணும்."

சமையலறையிலிருந்து வெளியே எட்டிப் பார்த்த வேலைக்காரி அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள். நீப்பா, மதுப்பர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அழகான தோற்றத்தைக் கொண்டவள். முப்பத்தைந்து வயது இருக்கும். அவரை அவ்வப்போது காம எண்ணத்தில் மூழ்கச் செய்பவள். ஒரு நாள் அவளுடன் உடலுறவு கொள்ள தனக்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது என்று அவர் நினைத்தார். தன்னுடைய மனைவி ஏதாவது சொற்பொழிவு நடக்கும் இடத்தில் இருக்கும் போது, தன் மகன் திரைப்படம் பார்க்கும் போது, சமையல்காரன் தன் மனைவியின் வீட்டிற்குச் சென்றிருக்கும் போது, தான் எல்லா ஜன்னல் கதவுகளையும் அடைத்துவிட்டு அந்த கறுப்புநிற பெண்ணை இறுகக் கட்டிப் பிடித்து அணைப்பதை அவர் கற்பனை பண்ணினார். தன்னை எப்போது பார்த்தாலும் புன்னகைப்பதற்குக் கிடைக்கக்கூடிய இனிய தண்டனையை அவள் அன்று அனுபவிப்பாள்.

அவர் சுற்றிலும் பார்த்தார். தன்னுடைய மனைவி எங்கே? வராந்தாவில் போடப்பட்டிருந்த கட்டில் காலியாகக் கிடந்தது.

"நீப்பா... அம்மா எங்கே?"- அவர் கேட்டார்.

"தூங்கிக்கிட்டு இருக்காங்கள்ல?"- அவள் சொன்னாள்: "நான் இன்னைக்குக் காலையில பார்க்கவே இல்லையே! நீங்களும் பார்க்கவே இல்லையா?"

அவர் தலையை மட்டும் ஆட்டினார். அதே நிமிடத்தில் வேலைக்காரி உரத்த குரலில் கத்தியவாறு தரையில் சாய்ந்து விழுந்தாள். அவள் பார்த்த காட்சியை அப்போது அவரும் பார்த்தார். பெரிய சோஃபாவிற்குப் பின்னால் அவள் கிடந்தாள். அந்த வீட்டின் தலைவி. வெள்ளை நிறப் புடவைக்கு மத்தியில் ரத்தக் கறைகள். மார்பில் கத்தி. அவளுடைய முகத்தைப் பார்ப்பதற்குக் கூட அவருக்கு தைரியம் வரவில்லை. ஆனால், அவர் அவளுடைய இடது கையைத் தூக்கி நாடித் துடிப்பை சோதித்துப் பார்த்தார். குளிர்ந்து போயிருந்த அந்தக் கையில் நாடித் துடிப்பு இல்லை.

வேலைக்காரி மயக்கமடைந்து விட்டிருந்தாள். இனி நான் என்ன செய்ய வேண்டும்? அவர் தன்னைத்தானே கேட்டுக் கொண்டார். போலீஸுக்குத் தெரிய வைக்க வேண்டுமா? இல்லாவிட்டால், மகனை எழுப்ப வேண்டுமா? ரமேஷ் அந்த மரணத்தைப் பார்த்து வருத்தப்பட மாட்டான். காரணம்- அவனுக்கும் அவளுக்குமிடையே நல்ல உறவு இல்லாமல் போய் இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டன. ரமேஷ், ரோடரிக்ஸின் மகளும் நகரத்திலிருக்கும் ஒரு அழகு நிலையத்தில் சிகை அலங்காரம் பண்ணுபவளுமான லிஸாவைக் காதலிக்க ஆரம்பித்தவுடன், அவர்களுக்கிடையே ஒரு பனிப்போர் உண்டாக ஆரம்பித்துவிட்டது. லிஸாவைத் திருமணம் செய்து அழைத்துக் கொண்டு வரும் எண்ணம் இருப்பதாக இருந்தால், முதலிலேயே பெட்டியையும் பொருட்களையும் எடுத்துக் கொண்டு தன் வீட்டை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என்று ரமேஷிடம் அவனுடைய சித்தி கூறிவிட்டாள். "தாழ்ந்த தரத்தைச் சேர்ந்த பெண்கள் வசிக்கக்கூடிய இடம் அல்ல, தான் கஷ்டப்பட்டு உண்டாக்கிய அந்த மாளிகை" என்றாள் அவள்.


"நீங்கள் உண்மையிலேயே என் தாயாக இருந்திருந்தால், இப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்க..."- ரமேஷ் சொன்னான்.

ரமேஷின் தாய், அவனுக்குப் பத்து வயது நடக்கும் போது இறந்துவிட்டாள். பிறகு குழந்தையுடன் அவர் கவிதைகள் எழுதிக் கொண்டிருந்த அனுசூயா தேவியின் அருகில் வீடெடுத்து வசிக்க ஆரம்பித்தார். முதலில் அவள் குழந்தையிடம்தான் ஈடுபாட்டுடன் பழகினாள். அவனுக்கு இனிப்புப் பலகாரங்களைக் கொண்டு வந்து தருவது, அவனைத் திரைப்படம், சர்க்கஸ் ஆகியவற்றிற்கு அழைத்துச் சென்று பார்க்கச் செய்வது... இப்படி அந்த உறவு வளர்ந்து... அது இந்தத் திருமணத்தில் வந்து முடிந்தது. அது அவருடைய அதிர்ஷ்டமாக இருக்கலாம். இல்லாவிட்டால் அவர் இப்போதும் கஷ்டப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவ்வாக மட்டுமே இருந்து கொண்டிருப்பார். இப்போது அவர் பணக்காரர் வாழ்வதற்காக ஏதாவதொரு வேலையைப் பார்க்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை.

"அய்யோ... அய்யோ..."- வேலைக்காரி கூப்பாடு போட்டாள். அவள் மயக்கத்திலிருந்து எழுந்திருந்தாள். "யார் இந்தக் கொடுமையைச் செய்தது? அவன் தலையில் இடிதான் விழணும்..."-அவள் சொன்னாள்.

சிந்தனைகளில் இருந்து விடுபட்ட மித்ரா குனிந்து கொண்டு தன் மனைவியின் இறந்த உடலைச் சோதித்துப் பார்த்தார். கண்கள் திறந்திருந்தன. ஆனால், திகைப்பின் அடையாளம் எதுவும் அந்த முகத்தில் தெரியவில்லை. ஒரு கை அப்போதும் தரையில்தான் இருந்தது. ஔரங்கசீப்பின் உருவம் இருந்த அந்தப் பெரிய வெள்ளைநிற மோதிரம் அந்தக் கையில் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

"நான் ரமேஷை அழைக்கட்டுமா?"- அவர் கேட்டார். தன் மகனுடைய அறைக்குள் நுழைந்த பிறகு, இந்த விஷயத்தை போலீஸிடம் அறிவிக்க வேண்டும் என்பதையும், தான் சட்டங்களை முற்றிலும் மறந்துவிட்டதாகவும் அவர் நினைத்தார்.

"ரமேஷ், எழுந்திரு. ஒரு நடக்கக்கூடாத சம்பவம் நடந்திருக்கு."- அவர் சொன்னார்.

ரமேஷ் எந்த ஆர்வமும் காட்டிக் கொள்ளவில்லை. "நான் ஆடை அணிஞ்சிட்டு வர்றேன். எனக்கு ஐந்து நிமிடங்கள் தரணும்"- ரமேஷ் சொன்னான்.

மித்ரா மீண்டும் தன்னுடைய மனைவியின் இறந்த உடலுக்கு அருகில் வந்தார். வேலைக்காரி அப்போதும் தன் நெஞ்சில் அடித்துக் கொண்டிருந்தாள். "இன்னும் கொஞ்ச நேரத்துக்கு உன் அழுகையை நிறுத்து"- அவர் மெதுவான குரலில் சொன்னார்: "இனி போலீஸ்காரர்கள் வர்றப்போ அழலாம்."

நடு இரவு நேரத்திற்குப் பிறகு தான் ஒருமுறை எழுந்த போது வரவேற்பறையில் அவளுடைய உரையாடல் கேட்டதாக மித்ரா நினைத்துப் பார்த்தார். பிறகு எப்போது உரையாடல் நின்றது? இறுதி விருந்தாளி அங்கிருந்து கிளம்பியது எப்போது? இறுதி விருந்தாளிதான் கொலையைச் செய்ததா? பல கேள்விகளும் அவருடைய மனதைப் போட்டு அலட்டிக் கொண்டிருந்தன. அவளுடைய காதுகளில் கிடக்கும் வைரக் கம்மல்களையோ கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியையோ கொலை செய்த நபர் எடுக்கவில்லை. அப்படியென்றால் கொலை செய்த நபர் திருடனல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது. பிறகு அவளைக் கொலை செய்ததால், அந்த நபருக்குக் கிடைத்தது என்ன? அவளுக்கு எதிரிகள் இருந்தார்களா? அவள் மீது ஒரு பொய் வழக்கு தொடுத்து, ஒரு வருடமாக அவளுக்குத் தொல்லை கொடுத்து வரும் அந்தப் பத்திரிகை ஆசிரியராக இருக்குமோ கொலையைச் செய்த நபர்? வழக்கைத் திரும்பப் பெறும்படி அமைச்சர்வரை அவரைக் கேட்டுக் கொண்டார்கள். வழக்கைத் திரும்பப் பெற்றால் தனக்கு அவமானம் என்று நினைத்து அந்த மனிதர் அவளைக் கொலை செய்திருப்பாரோ? இல்லாவிட்டால் ரமேஷ் காதலித்த பெண்ணின் சகோதரர்கள் செய்த வேலையாக இருக்குமோ இது? அவர்கள் எந்தவொரு தொழிலும் இல்லாதவர்கள். அவ்வப்போது கள்ளச் சாராயம் காய்ச்சுவதில் ஈடுபட்டோ, கள்ளக் கடத்தல் எதிலாவது பங்கு பெற்றோ கொஞ்சம் பணம் சம்பாதிப்பார்கள். அந்த நேரங்களில் நல்ல பளபளப்பான ஆடைகளை அணிந்து கொண்டு தெருக்களில் ஏதாவது பாட்டுகளை முணுமுணுத்துக் கொண்டு அவர்கள் நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அப்படி இல்லாத நேரங்களில் அழுக்கடைந்த ஆடைகளுடன் தங்களின் வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கொண்டு வழியில் போய்க் கொண்டிருப்பவர்களைப் பார்த்து ஏதாவது வாய்க்கு வந்ததைக் கூறிக் கொண்டிருப்பார்கள். ஒருநாள் அவர்களில் ஒருவன் அனுசூயாவிற்கு ஃபோன் செய்தான். "என் தங்கச்சியின் கற்பை ரமேஷ் கெடுத்து விட்டான். அவன் உடனடியா அவளைத் திருமணம் செய்யணும். நீங்கதான் அதற்குத் தடையா இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும். கவனமா இருந்துக்கோங்க. நான் உங்களைக் குத்தி கொன்று, என் தங்கச்சியின் எதிர்காலம் நல்லா இருக்குறது மாதிரி பார்த்துக்குவேன்."

உண்மையான கொலைகாரன் அவனாக இருப்பானா?

"இதைச் செய்தது யாராக இருக்கும்?"- ரமேஷ் கேட்டான். அவனுடைய முகத்தில் எந்தவொரு கவலையும் இல்லை. உதட்டில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்ததோ என்று கூட மித்ரா சந்தேகப்பட்டார்.

"என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்?"- மித்ரா கேட்டார்: "நான் தூங்கிக் கொண்டிருந்தேன். எனக்கு எதுவும் தெரியாது."

"அந்த விஷயங்களை நீங்கள் போலீஸ்காரர்களிடம் சொல்லுங்க"- ரமேஷ் சொன்னான். தொடர்ந்து தொலைபேசி மூலம் போலீஸுக்கு நடந்த சம்பவத்தைச் சொன்னான்.

மித்ரா பதைபதைப்படைந்து வியர்வையில் நனைந்து போய் காணப்பட்டார்.

"நீ என் மீது சந்தேகப்படுறியா?"- அவர் தன் மகனிடம் கேட்டார்: "நான் அந்த அளவுக்கு மோசமானவன் என்று நீ நினைக்கிறியா? அது மட்டுமல்ல- நான் அவளை எப்போதும் அளவுக்கு மீறி வழிபாடு செய்தவனாயிற்றே!"

"அப்பா, நீங்க பணத்தையும் வழிபட்டீங்க"- ரமேஷ் சொன்னான்.

"மகா பாவி..."- மித்ரா உரத்த குரலில் கத்தினார்: "உனக்கு எப்படி தைரியம் வந்தது இப்படியொரு குற்றச்சாட்டைக் கூறுவதற்கு? நீ அந்தப் பொண்ணுடன் கொண்ட நட்பால் முழுமையாக மாறிப் போயிட்டேன்னு அனுசூயா சொன்னப்போ நான் அதை நம்பாமல் இருந்தேன். இப்போத்தான் அது உண்மைன்றதை நானே தெரிஞ்சிட்டேன்."

"உண்மை தெரிஞ்சும் பிரயோஜனம் இல்லையே!"- ரமேஷ் சொன்னான்.

"இப்படிச் சொல்றதுக்கு என்ன அர்த்தம்?"- மித்ரா கேட்டார்.

"அது இப்போதே உங்களுக்குப் புரியும்"- ரமேஷ் புன்னகைத்துக் கொண்டே சொன்னான்: "போலீஸ்காரர்கள் வரட்டும்."

வேலைக்காரி சத்தம் போட்டு அழுதாள்.

2

நேரம் எட்டரை மணி ஆனது. எனினும் நான்கு மணி நேரத்திற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்து வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும் ரோடரிக்ஸ் என்ற கிழவனுக்கு ஒரு கோப்பைத் தேநீரோ காப்பியோ தர யாரும் முயற்சிக்கவில்லை. வீட்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கடுமையான வேலைகள் இருந்தன. லிஸா குளித்து முடித்து ஆடைகள் அணிந்து நகரத்திற்குச் செல்லும் ஒன்பது மணிக்கான மின்சார வண்டியைப் பிடிக்க வேண்டும். குளிப்பதற்கு முன்னால் முந்தின நாள் அணிந்திருந்த உடுப்புகளையும் உள்ளாடைகளையும் சோப்புத் தூள் கலக்கப்பட்ட நீரில் மூழ்க வைத்து அலசிப் போட வேண்டும்.


பத்து மணி ஆகிவிட்டால் -ஒரு குழாயிலும் தண்ணீர் வராது. ஆடைகளை உலரப் போட்டு விட்டு, லிஸா குளியலறைக்குள் சரியாக எட்டு மணிக்கு நுழைவாள். பிறகு அவள் வெளியே வருவது எட்டரை மணிக்குத்தான். தொடர்ந்து முகத்தில் பவுடரும் சாயமும் தேய்த்து முடிக்க கால் மணி நேரம் ஆகும். மதிய நேரத்தில் சாப்பிடுவதற்காக சான்ட்விச், வறுத்த மீன் ஆகியவற்றை ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவுக்குள் போட்டு, அதை அவள் தன்னுடைய கருப்பு நிற பைக்குள் வைப்பாள். இவை அனைத்தும் முடியும் போது, ஸ்டேஷனுக்கு நடந்து செல்லக் கூடிய நேரம் வந்துவிடும். ஸ்டேஷன் வீட்டிலிருந்து ஒரு பர்லாங் தூரத்தில் இருக்கிறது. ஆனால், லிஸா உயரமான அடிப்பாகத்தைக் காலணிகளை அணிந்திருப்பாள். அதனால் அவளால் வேகமாக ஓட முடியாது.

"என்னுடைய தாகத்தை அடக்க முடியல"- ரோடரிக்ஸ் சொன்னான். யாரும் அதைக் காதலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

மூத்த மகன் அப்போதும் கட்டிலில் படுத்துக் கொண்டு குறட்டை விட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய வலை பின்னிய பனியன் ஆங்காங்கே கிழிந்திருந்தது. ரோமங்கள் அடர்ந்திருந்த வயிற்றில் கண்ணாடியால் ரோடரிக்ஸ் எழுதினான்: 'பன்றி'

இரண்டாவது மகன் சிரில் சமையலறையிலிருந்து ஒரு பாத்திரத்தில் தேநீருடன் வெளியே வந்தான். ஆவி உயர்ந்து கொண்டிருந்த தேநீர். கிழவனின் வாயில் நீர் ஊறியது.

"அந்தத் தேநீரை எனக்குத் தா மகனே"- அவன் சொன்னான்.

அதைக் கேட்டு சிரில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அவன் திண்ணை மீது உட்கார்ந்து கொண்டு ஊதி ஊதி தேநீரைக் குடிக்க ஆரம்பித்தான்.

"நான் அண்ணி கூட சேர்ந்து வேலை செய்ததால் எனக்குக் கிடைத்த சூடான தேநீர் இது"- அவன் கிழவனிடம் சொன்னான்: "அப்பா, இதை நான் உங்களுக்குன்னு இல்ல... கடவுளே கேட்டாலும் தர மாட்டேன்."

"எனக்கு எப்போ தேநீர் கிடைக்கும் என்று மரியாவிடம் கேள் மகனே"- ரோடரிக்ஸ் சொன்னான்: "தேநீர் குடித்தால் என் இருமல் கொஞ்சம் நிற்கும்."

"அப்பா, உங்க இருமல் நிற்பதால் அண்ணிக்கு என்ன கிடைக்கப் போகுது?" சிரில் கேட்டான். தொடர்ந்து அந்தக் கேள்வியில் மறைந்திருந்த அர்த்தத்தை ரசித்தவாறு அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

கிழவன் சுவரைத் தடவியவாறு சமையலறைக்குள் சென்றான். அங்கு கூரையிலிருந்து ஒரு பல்ப் எரிந்தவாறு தொங்கிக் கொண்டிருந்தது. மரியா இரண்டு தட்டுகளில் சப்பாத்திகள் உண்டாக்கிக் வைத்திருந்தாள். ஒன்றில் வெண்ணெய் தேய்க்கப்பட்டிருந்தது. இன்னொன்றில் காய்ந்த சப்பாத்திகள் இருந்தன. கிழவனைப் பார்த்ததும் மரியா தன்னுடைய கைக்குட்டைய எடுத்து நல்ல சப்பாத்திகள் இருந்த தட்டினை முழுமையாக மூடினாள்.

"அப்பா, நீங்க எதற்கு சமையலறைக்குள் வர்றீங்க?"- அவள் கேட்டாள். "எது வேணும்னாலும் நானே அங்கு கொண்டு வந்த தருவேன்ல?"

கிழவன் தரையில் உட்கார்ந்து மெதுவாகச் சிரித்தான். "எது எப்படியோ... நான் வந்துட்டேன். எனக்குக் கொஞ்சம் தேநீரும் நான்கு வெண்ணெய் தேய்த்த சப்பாத்திகளும் தா... உன் புருஷனுக்கு மட்டுமல்ல- எங்களுக்கும் நல்ல உணவைச் சாப்பிடணும்னு ஆசை இருக்கும்."

"அய்யோ! அப்பா, நீங்க எதையோ மனசுல வச்சுக்கிட்டு சொல்றீங்க!"- மரியா சொன்னாள்: "நான் எந்த வேறுபாடும் பார்க்கிறவள் இல்லையே!"

"அடியே மரியா! ஒரு விஷயத்தை நீ நினைச்சுப் பார்க்கணும்"- கிழவன் விரலை நீட்டியவாறு சொன்னான்: "இங்கே இருப்பவர்களில் பணம் சம்பாதிப்பது ஒரே ஒரு ஆள்தான். அது என்னுடைய மகள் லிஸா. அவள் ஒவ்வொரு மாதமும் நாநூறு ரூபாய் இந்த வீட்டிற்குக் கொண்டு வர்றா. அதில் முந்நூறு ரூபாயை அவள் உன்னிடம் தர்றா. எங்கள் எல்லாருக்கும் சமையல் செய்து தர்றதுக்காக..."

"போதும்... போதும்... எனக்கு எல்லாம் தெரியும்"- மரியா சொன்னாள்: "இதையெல்லாம் எனக்கு ஞாபகப்படுத்த வேண்டாம். நான் ஒண்ணும் மறைச்சு வச்சு தின்னுறவள் இல்ல. எடுத்துக்கோங்க... எல்லாத்தையும் தின்னுங்க."

அவள் இரண்டு தட்டுகளையும் கிழவனுக்கு அருகில் எடுத்து வைத்தாள். பிறகு ஒரு குவளையில் தேநீரையும் ஊற்றிக் கொடுத்தாள். கிழவன் இடது பக்கமோ வலது பக்கமோ பார்க்காமல் எல்லாவற்றையும் சாப்பிட்டான். தட்டுகள் காலியானவுடன், அவன் எழுந்து மீண்டும் வாசலை நோக்கி நடந்தான்.

மரியா பலமாக அழுதவாறு தன்னுடைய கணவனின் கட்டிலை நோக்கிச் சென்றாள்.

"என்னைக் கொன்னுடுங்க"- அவள் சொன்னாள்: "என்னால முடியாது. இப்படி திட்டுகளைக் கேட்டு ஒரு அடிமையைப் போல வாழ..."

அவளுடைய கணவன் கண் விழித்தான். ஆனால், அவன் பேசவில்லை. மொத்தத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போய்விட்டது என்பது மாதிரி தன் முகத்தை அவன் வைத்துக் கொண்டிருந்தான்.

மரியா உரத்த குரலில் அழுதாள்.

"என்ன அண்ணி? இந்தக் கவலைக்குக் காரணம் என்ன?"- லிஸா கேட்டாள். அவள் குளித்து முடித்து தலைமுடியைக் கட்டியவாறு அங்கு வந்தாள். அவள் கறுத்தவளாக இருந்தாலும் நல்ல அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள்.

"அப்பா சமையலறையில் இருந்த எல்லா உணவையும் சாப்பிட்டு தீர்த்துட்டாரு"- மரியா சொன்னாள்: "லிஸா, இனி நான் உனக்கு எதைத் தருவேன்? இந்த எதற்குமே லாயக்கு இல்லாத மனிதனுக்கு நான் எதைத் தருவேன்?"

சிரில் அவளுடைய வார்த்தைகளைக் கேட்டு அறைக்குள் வந்தான். "அப்பா எங்களைப் பட்டினியா இருக்கும்படி செய்துட்டாரா?"- அவன் கேட்டான்.

"மொத்தத்தில் ஒரு எலும்புக்கூடு... ஆனால் இந்த உலகம் முழுவதையும்  தட்டில் போட்டுக் கொடுத்தால் கூட தின்னும் இந்தக் கிழவன்"- சிரில் சொன்னான்.

கிழவன் அதைக் கேட்டான். அவனுக்குக் கோபம் வந்தது.

"எனக்கு இவள் தந்ததை மட்டும் தான் நான் சாப்பிட்டேன். அபகரித்து சாப்பிட்டுப் பழகினவன் நான் இல்லை"- அவன் சொன்னனன்.

"இந்த வறுமை நிலைமையிலிருந்து சீக்கிரமா தப்பிக்க நமக்கு முடியாதா லிஸா?"- சிரில் கேட்டான்: "உன் திருமணம் எப்போது நடக்கும்? தேவைப்பட்டால், உனக்காக ஒரு கொலை செய்யக்கூட நான் தயாரா இருக்கேன்."

சிரில் சிரித்தான்.

"சிரிப்பு வேறயா?"- லிஸா சொன்னாள்: "அண்ணா, நீங்க இப்படிப்பட்ட பேச்சுக்களால்தான் என் நிலைமையை மோசமாக்கியதே. இப்போ ரமேஷின் சித்தி இந்தத் திருமணம் நடக்கவே நடக்காதுன்னு சொல்றாங்க. அவங்க உயர்ந்த அந்தஸ்துல இருப்பவங்க. பணம் உள்ளவங்க. அவங்ககூட பழகும் போது கொஞ்சம் பணிவாக இருப்பது மாதிரி காட்டிக் கொள்ள வேண்டாமா?"

"போடி... உன்னுடைய உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள்!"- சிரில் சொன்னான்:


"உன்னைத் திருமணம் செய்ய ஒரு கத்தோலிக்கனும் முன் வரல. அந்த அளவுக்கு உன் பெயர் கெட்டுப் போச்சு. அது அப்படின்னா, நீ எல்லாவற்றையும் தந்து சந்தோஷப்படுத்திய அந்த இந்துவை எடுத்துக்கிட்டா... அவனுக்கு உன்னைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. லிஸா, நீ உன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டே."

"இந்த விஷயத்தைப் பற்றி இனி என்னுடன் பேசக்கூடாது"- லிஸா சொன்னாள்: "என் வாழ்க்கை என்னுடையது. திருமணம் நடக்காவிட்டால் போகட்டும். இப்படி அவ்வப்போது பார்த்துக் ª££ண்டிருந்தால் எனக்குப் போதும்."

போலீஸ் வேன் வந்த போது, வாசலில் உட்கார்ந்திருந்த கிழவன் அதிர்ச்சியடைந்து எழுந்தான். மற்றவர்கள் பதைபதைத்துப் போனார்கள்.

"போலீஸா?"- சிரில் கேட்டான்: "நாங்க சாராயம் காய்ச்சுவதை நிறுத்தியே ஐந்து வருடங்களாச்சே!"

"நாங்க கள்ளச் சாராயம் விஷயமா விசாரிக்க வரல"- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் சொன்னார்: "நகரத்தில் உங்களுக்குத் தெரிந்த ஒரு வீட்டில் ஒரு பயங்கர கொலை நடந்திருக்கு. அதற்கு ஆதாரங்கள் தேடி நாங்க வந்திருக்கோம்."

"யார் கொலை செய்யப்பட்டது?"- சிரில் கேட்£ன்.

"அனுசூயாதேவி என்ற பெயரைக் கொண்ட பெண் கவிஞர்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.

3

ன்ஸ்பெக்டர் ராமச்சந்திரனுக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை. அவர் தன்னுடைய மேஜையில் அனுசூயாதேவியின் படத்தை புத்தகத்தின் மீது சாய்த்து வைத்தார். புன்னகை தவழ்ந்து கொண்டிருக்கும் உதடுகள். ஆனால், அழுது கொண்டிருக்கும் கண்கள். வெயிலும் மழையும் ஒன்று சேர்ந்த ஒரு நாளைப் போல இருந்தாள் அந்தப் பெண் கவிஞர். அவள் ஒரு பள்ளிக் கூட மாணவியாக இருந்த போது அவள் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார். அவளுடைய காதல் உணர்வு கொண்ட வரிகளை அவர் தனியாக இருக்கும் போது பாடுவது உண்டு. அவளைக் கொல்வதற்கு, மென்மையான அந்த உடலில் தன்னுடைய கத்தியைச் செருக யாருக்கு மனம் வந்தது? அவளுக்கு எதிரிகளே இல்லை என்று அவரிடம் கூறிய அவளுடைய கணவன் கூட உண்மையாகச் சொல்லப்போனால் அந்த அதிர்ஷ்டம் இல்லாத பெண்ணின் எதிரியாக இருந்தார். அவருடைய புகழை மட்டுமே அந்த மனிதர் விரும்பியிருக்கிறார். விசாரணைகள் மூலம் அவர் பலவற்றையும் தெரிந்து கொண்டார். அனுசூயாதேவி திருமணம் செய்து, தன் வீட்டில் மன்னரைப் போல வாழ வைத்த மிஸ்டர் மித்ரா பெண் பித்தராக இருந்தார். வேலைக்காரிகளும், காய்கறி போன்றவற்றை விற்கும் பெண்களும் அவருடைய காமப் பசிக்கு இரையாகியிருக்கின்றனர். அனுசூயாதேவி இறந்தால், அந்தப் பணம் முழுவதற்கும் வாரிசு மித்ராதான். அவளுடைய மரணம் அந்த மனிதருக்கு உண்மையாகச் சொல்லப்போனால் பிரயோஜனமானதுதான். ஆனால் அவர் கொலை செய்திருப்பார் என்பதை அவர் நம்பவில்லை. கனமான எந்த வகையான உணர்ச்சிக்கும் அந்தச் சிறிய தலையில் இடமிருப்பதாகத் தெரியவில்லை.

பிறகு யார் எதிரி? ரோடரிக்ஸின் மகன்களாக இருப்பார்களா? மது அருந்தி போதை தலைக்கேறி சாலையின் ஓரத்திலோ பூங்காவிலோ விழுந்து கிடக்கும் சோம்பேறிகளா? கொலை செய்யக்கூடிய அளவிற்கு அறிவு அவர்களுக்கு எந்தச் சமயத்திலும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. கொல்ல வேண்டும் என்றொரு திட்டத்தை மனதில் வரைவதற்கான பொறுமையும் அவர்களுக்கு இல்லை.

அனுசூயாதேவிமீது ஒரு பொய்யான பதிப்புரிமை வழக்கு தொடுத்து அவளுக்குத் தொல்லைகள் தந்து கொண்டிருந்த பத்திரிகை ஆசிரியர், வழக்கைத் திரும்பப் பெற பயப்பட்டார் என்ற தகவல் கிடைத்தது. அவருக்கு அவமானம் உண்டாகக்கூடிய ஒரு விஷயமாயிற்றே அது! எல்லா இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளும் அனுசூயாதேவியின் பக்கம்தான் இருந்தார்கள். பல இடங்களிலும் கூட்டங்கள் நடந்தன. விவாதங்கள் நடந்தன. அனுசூயா தேவியை இந்த பூமியை விட்டுத் துடைத்தெறிந்தால் மட்டுமே தன்னால் நான்கு பேரின் முகத்தைப் பார்த்து இனிமேல் நடக்க முடியும் என்று அந்த மனிதர் நினைத்திருக்க வேண்டும். அவர் பணம் கொடுத்துக் கொலை செய்ய வைத்திருக்கலாம்.

இல்லாவிட்டால் அனுசூயாதேவியின் குப்பைத் தொட்டில் கிடந்த கடிதத்தை எழுதிய மாதவன் பிள்ளை அந்தக் ª£கலையைச் செய்திருக்கலாம். 'பார்க்க அனுமதிக்கவில்லையென்றால், நான் பழைய ரகசியத்தை வெளிப்படுத்திவிடுவேன். அந்தக் கடிதம் என் கையில் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்'- கடிதத்தில் இருந்த வரிகள் இவை. இன்ஸ்பெக்டர் முகவரியைத் தேடிப் போன போது அவர் போய்ச் சேர்ந்த இடம் கான்டிவில்லியில் இருந்த ஒரு மஞ்சள் நிறக் கட்டிடம். வரிசையாக கட்டப்பட்டிருந்த அறைகளில் பல குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருந்தன.

"நீங்கதான் மாதவன் பிள்ளையா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

மூன்றாம் எண் அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு 'மாத்ருபூமி' வாசித்துக் கொண்டிருந்த வயதான மனிதர் திரும்பிப் பார்த்தார்.

பயமுறுத்தியபோது பிள்ளை உண்மையைக் கூறினார்: "நான் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பம்பாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ரேஷன் கார்டு சம்பந்தமா விசாரணை செய்து கொண்டு, நான் பல வீடுகளிலும் ஏறி இறங்கிக் கொண்டிருந்த காலமது. நான் அந்தத் துறையில் இன்ஸ்பெக்டராக இருந்தேன். ஒரு மதிய நேரத்தில் நான் சர்ச் கேட்டில் இருந்த ஒரு பணக்காரர்களின் குடும்பம் இருந்த இடத்திற்குப் போனேன். அங்கு பதினைந்து வயது கொண்ட ஒரு சிறுமி மட்டுமே இருந்தாள். "இப்போ இங்கே யாரும் இல்லை. பிறகு எப்பவாவது வந்தால் கார்டைக் காண்பிக்கிறோம்" என்றாள் அவள். ஏதோ உணர்ச்சியின் உந்துதலால் நான் கதவை அடைத்துவிட்டு, அந்தச் சிறுமியை இறுக அணைத்தேன். அவளால் கத்தக் கூட முடியல. இறுதியில் நான் அவளை விட்டுபிரிந்தபோது, தரை விரிப்பில் அவள் மல்லாக்க படுத்துக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். கதவை அடைத்த போது அவள் 'நீங்க யார்'னு என்னைப் பார்த்துக் கேட்டாள். 'என் பெயர் மாதவன் பிள்ளை. போலீஸ்கிட்ட சொல்லப் போறியா'ன்னு நான் கேட்டேன். எதையும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தைரியம் அந்தக் காலத்துல எனக்கு இருந்தது. அந்தச் சிறுமி எழுந்து வந்து என்னை முத்தமிட்டாள். 'இல்ல.. இதை நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்'னு அவள் சொன்னாள். அதற்குப் பிறகு நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. எனக்கு ஒரு கடிதம் வந்தது. அவளுடைய கடிதம்... அப்போதுதான் அவளுடைய பெயர் அனுசூயா என்பதே எனக்குத் தெரிய வந்தது. அவள் பெங்காலி என்பதையும் தாய்-தந்தைக்கு அவள் ஒரே மகள் என்பதையும் நான் நினைத்திருக்கவில்லை.

'என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் கர்ப்பமா இருக்கிறேன். இதற்குக் காரணம் நீங்கள்தானே! உடனே என்னைப் பார்க்க வரவேண்டும்- அனுசூயா.'


கடிதம் கிடைத்ததும் நான் அங்கு போயிருக்கலாம். அவளைத் திருமணம் செய்திருக்கலாம். ஆனால், அவளுடைய தாய், தந்தைக்குப் பயந்து நான் உடனே நகரத்தை விட்டுக் கிளம்பி என் சொந்த ஊருக்கு வந்துவிட்டேன். அதற்குப் பிறகு, நான் பல இடங்களிலும் அலைந்து திரிஞ்சேன். பட்டினி கிடந்தேன். நோயால் பீடிக்கப்பட்டேன். கிழவனாக ஆனேன். எனக்கென்று யாருமில்லாத மனிதனாக ஆனேன். அப்படி இருக்கும் போதுதான் என் நாக்கில் ஒரு பழுப்பு தோன்றியது. அது புற்றுநோயாக வர வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர் சொன்னார். உடனே பம்பாய்க்குப் போகும்படியும் டாட்டா மெமோரியல் மருத்துவமனைக்குச் சென்றால், நான் ஒருவேளை காப்பாற்றப்படலாம் என்றும் அவர் சொன்னார். என் சகோதரியின் மகன் சசி பம்பாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறான். அவனுக்குக் கடிதம் எழுதிப் பணம் வரும்படி செய்தேன். அதற்குப் பிறகு இங்கே வந்தேன்."

மாதவன் பிள்ளை தொடர்ந்து சொன்னார்: "அப்போது தான் அனுசூயாதேவி இங்கே பெரிய அந்தஸ்துடன் வாழந்து கொண்டிருப்பதாக நான் கேள்விப்பட்டேன். அவளைப் பார்க்க வேண்டுமென்று நான் நினைத்தேன். நான் இழப்பதற்கு எதுவும் இல்லையே! ஏதாவது கிடைத்தால் லாபம்தானே?"

"அவங்க எழுதின கடிதம் கையில இருக்கா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

மாதவன் பிள்ளை தலையை ஆட்டினார். "அது மட்டும்தான் வாழ்க்கையில் என் சம்பாத்தியமா இருக்கு"- அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்: "நான் அவளுக்குக் கடிதம் எழுதியது தவறு என்றால், என்னை நீங்கள் தண்டிக்கலாம். நான் சிறையில் இருக்கலாமே! கொஞ்ச காலம் அரசாங்கத்தின் செலவில் இருக்கலாம். அவள் உங்களை என்னைக் கைது செய்றதுக்காக அனுப்பி வைத்தாளா? புற்று நோய் பாதித்திருக்கும் இந்தக் கிழவனை?"

"அனுசூயாதேவி என்னை அனுப்பி வைக்கல. அனுப்பவும் முடியாது"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "அவங்க இறந்துட்டாங்க. நேற்று இரவு அவங்களை யாரோ குத்திக் கொலை செய்திருக்காங்க. அது யாரென்று விசாரிப்பதற்காகத்தான் வந்திருக்கேன்."

"நான் இல்ல..."- மாதவன் பிள்ளை சொன்னார்: "நான் எந்தக் காலத்திலும் அவளைக் கொல்ல மாட்டேன். நான் எதற்கும் லாயக்கு இல்லாதவனா இருக்கலாம். ஆனால், நான் ஒரு கொலை செய்யக்கூடியவன் இல்லை."

"அது எனக்குத் தெரியும்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "உங்களுடைய மருமகன் நேற்று இரவு எங்கே போயிருந்தான்?"

"அவன் இங்கேதான் இருந்தான். படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்தான்"- பிள்ளை சொன்னார்: "அவனுக்கு அவளுடைய முகவரிகூட தெரியாது. அவனைச் சந்தேகப்படாதீங்க. அவன் நிரபராதி. அவன்கூட வசிக்க வந்ததால் அவனுக்கும் பிரச்சினையாயிடுச்சு. நான் கேரளத்திலேயே கிடந்து இறந்திருக்கலாம்."

இன்ஸ்பெக்டர் எழுந்தார்: "நான் போய் வரட்டுமா?"- அவர் சொன்னார்: "மீண்டும் எப்போதாவது பார்ப்போம்."

4

பெண்கள் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றும் சுரேந்திர மேத்தாவை எதிர்பார்த்து அவருடைய அறைக்கு வெளியில் இருந்த வராந்தாவில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அமர்ந்திருந்தார். ஒரு இளம்பெண் அவருக்கு அருகில் வந்து நின்று கொண்டு சொன்னாள்: "என்னிடம் அந்தக் கொலை வழக்கு சம்பந்தமா பல தகவல்கள் இருக்கு."

இன்ஸ்பெக்டர் எதுவும் கூறவில்லை. அவளைப் பார்க்கும் போது ஒரு ஹிஸ்டீரியா வந்தவள் என்று யாராக இருந்தாலும் கூறுவார்கள். மெலிந்து ஒட்டிப்போன உடல். ஒளிர்ந்து கொண்டிருக்கும் கண்கள்.

"என் பெயர் மேரி!"- அவள் சொன்னாள்: "நான் சுரேந்திர மேத்தாவின் சிஷ்யை. அவருடைய ரகசியங்கள் அனைத்தும் எனக்குத் தெரியும்."

"நான் மேத்தாவிடம் பேசுவதற்காகத்தான் வந்திருக்கேன். சிஷ்யையிடம் அல்ல"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.

"அவர் உணவு சாப்பிட்டுவிட்டு வரட்டும். அதுவரை என்னிடம் கேள்விகள் கேளுங்கள்"- அவள் சொன்னாள்.

சுரேந்திர மேத்தா அனுசூயாவை மதிக்கும் ஒரு மனிதர் என்று மேரி சொன்னாள். அவர்  அவளுக்குக் காதல் கடிதங்கள் எழுதி அனுப்பியது மட்டுமல்ல- அவளைப் போய் பார்ப்பதும் உண்டு. கொலை நடந்த இரவு வேளையில் அவர் அவளுடைய வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொள்வதற்காக ஆடை அணிந்து சென்றிருக்கிறார். அவர் வாடகைக் கார் பிடிப்பதைப் பார்த்த போது, 'எங்கு போகிறீர்கள்?' என்று மேரி அவரிடம் கேட்டிருக்கிறாள். அனுசூயா வீட்டில் நடக்கும் இரவு விருந்தில் கலந்து கொள்ளச் செல்வதாக அவர் கூறியிருக்கிறார். அவர் அணிந்திருந்த ஆடைகள் விநோதமாக இருந்திருக்கின்றன. கருப்பு நிற பேன்ட், கருப்புநிற சட்டை, கருப்புநிற கைக்குட்டை, மரணச் சடங்கில் அஞ்சலி செலுத்துவதற்காகப் போவதைப்போல அவருடைய அப்போதைய நிலை இருந்தது என்-று சொன்னாள் மேரி. அப்போது சுரேந்திர மேத்தா அவளிடம் எதுவும் சொல்லவில்லையாம்.

"எனக்கு அனுசூயா தேவி மீது மிகப் பெரிய பொறாமை இருந்ததாக அவர் நினைத்திருந்தார். எனக்கு எதற்கு அந்த நடுத்தவர வயதைக் கொண்ட பெண்ணிடம் பொறாமை இருக்க வேண்டும். அனுசூயாதேவியைப் பற்றி காதில் கேட்க முடியாத பலதரப்பட்ட கதைகள் நகரத்தில் உலவிக் கொண்டிருந்தன. அவங்களோட சொந்த வாழ்க்கை அவ்வளவு நல்லதாக இல்லை. அவங்களுக்குப் பண்பாடு பற்றிய அக்கறையே இல்ல..."

மேரி பேசிக் கொண்டிருந்த போது சுரேந்திர மேத்தா அங்கு வந்தார். அவர் இன்ஸ்பெக்டரைத் தன் அறைக்கு அழைத்துச் சென்றார். கதவை அடைத்த பிறகு அவர் சொன்னார்:

"சுவர்களுக்கும் காது உண்டு."

"நீங்க நேற்று இரவு அனுசூயா தேவியின் விருந்திற்குப் போயிருந்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஆமா... நான் ஏழரை மணிமுதல் இரவு பதினோரு மணிவரை அங்கு இருந்தேன்"- மேத்தா சொன்னார். அவருடைய கைகள் காரணமே இல்லாமல் நடுங்கிக் கொண்டிருந்தன.

"உங்களுக்கும் அனுசூயா தேவிக்குமிடையில் உள்ள உறவு என்ன?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"எனக்கு அவங்கமீது உயர்ந்த வழிபாடு உண்டு"- சுரேந்திர மேத்தா சொன்னார்: "வாழ்க்கையில் நான் இந்த அளவுக்கு வேற யாரையும் விரும்பியது இல்லை. அவங்க மிகவும் கவலையில இருந்தாங்க. தனிமையில இருந்தாங்க. இந்த நகரத்தை விட்டு, என்னுடன் குஜராத்துக்கு வரும்படி அவங்களை நான் எத்தனையோ தடவை வற்புறுத்தினேன். அப்படி வந்திருந்தால் அவங்களோட உயிர் என்னால பிழைத்திருக்கும். இங்கே இருக்கும் எல்லோரும் அவங்களோட ரகசிய எதிரிகளா இருந்தாங்க. அவங்களோட கணவரையும் சேர்த்துத்தான் சொல்றேன். நான் அவங்களை சந்தோஷத்துல மிதக்க வைத்திருப்பேன். பாதுகாப்பான சூழ்நிலையை உண்டாக்கிக் கொடுத்திருப்பேன். ஆனால், அவங்க என்னைச் சிரிச்சு போகச் சொல்லிட்டாங்க. என்னை முட்டாள்தனமான சிறுவன் என்று அழைத்து அவங்க கிண்டல் பண்ணினாங்க. நான் வயதில் அவங்களவிட மிகவும் இளையவன். எனக்கு முப்பத்தைந்து வயதுதான் ஆகுது.


அவங்களுக்கு நாற்பது வயது ஆகியிருக்கும். ஆனால், அவங்க உதித்து மேலே வந்து கொண்டிருக்கும் சூரியனைப் போல பிரகாசத்துடன் இருப்பாங்க. ஒருமுறை அவங்களைப் பார்த்த யாராலும் அவங்களை மறக்க முடியாது."

"நேற்று இரவு அங்கு இருந்த விருந்தாளிகள் எல்லோரையும் உங்களுக்கு ஞாபகத்துல இருக்குதா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"அய்யோ.. இல்லை... இல்லை..."- மேத்தா சொன்னார்: "பல புது முகங்களையும் நான் பார்த்தேன். அவங்களோட விருந்துகளில் எல்லா நேரங்களிலும் அறிமுகமில்லாத பலரும் இருப்பார்கள். நகரத்திற்கு வந்திருக்கும் எழுத்தாளர்களும் கலைத் தொடர்பு கொண்டவர்களும் அங்கு வந்து அவங்களைப் பார்க்காமல் நிச்சயம் திரும்பிப் போக மாட்டார்கள்."

"அனுசூயாதேவியின் நடவடிக்கைகளில் ஏதாவது மாறுபாடு இருந்ததை நீங்கள் பார்த்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"எதுவும் இல்லை. அவங்க மிகவும் மகிழ்ச்சியா இருப்பது மாதிரி தெரிஞ்சது. எல்லா விருந்தாளிகளியிடமும் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தாங்க. வெள்ளைநிறப் புடவை அணிந்து, தலைமுடியில் வெற்றைநிற மாலை சூடி, சரஸ்வதி தேவியைப் போல... அந்தக் காட்சியை இனியொருமுறை என்னால் பார்க்க முடியாதே!"

மேத்தா தன் முகத்தைக் கை விரல்களால் மறைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

"அவங்களுக்கு யாராவது காதலர்கள் இருந்தார்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"நிச்சயமா இல்ல"- மேத்தா சொன்னார்: "அவங்க ஒரு பெண் சாமியாரின் வாழ்க்கையை வாழ்ந்தாங்க. திருமணமாகியும் பிரம்மசாரினி. அவங்களே அந்த விஷயத்தை என்னிடம் மனம் திறந்து சொல்லியிருக்காங்க. அவங்க விவாகரத்து வாங்கியிருக்கலாம். அந்தக் காட்டு மனிதனுடன் வாழ்க்கையைத் தொடர வேண்டிய தேவை எதுவும் அவங்களுக்கு இல்லை. ஆனால், அவங்க தன்னுடைய குடும்பத்திற்கென்று இருந்த நல்ல பெயரைப் பெரிதா நினைச்சாங்க. அதைக் களங்கப்படுத்த அவங்களுக்கு மனம் வரவில்லை."

இன்ஸ்பெக்டர் எழுந்தார். "நான் பிறகு பார்க்கிறேன். நீங்கள் அவங்களோட உண்மையான வடிவத்தை எனக்கு காட்டித் தந்தீர்கள்"- அவர் சொன்னார்.

"உண்மையான வடிவம் எனக்கு மட்டும்தான் தெரியும்"- மேத்தா சொன்னார்: "வேறு யாரிடமும் அவங்க மனதைத் திறந்து பேசியதில்லை."

"நீங்க அவங்களோட காதலனா இருந்தீங்களா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"இல்ல..." மேத்தா சொன்னார்: "அவங்க இன்னும் சிறிது காலம் உயிருடன் இருந்திருந்தால், நான் காதலனா ஆகியிருப்பேன். இந்த சனிக்கிழமை என்னுடன் கண்டாலைக்கு வர்றதா அவங்க எனக்கு வாக்குறுதி கொடுத்திருந்தாங்க. அந்தச் சுற்றுலா மையத்தில் இருக்குறப்போ, நான் அவங்களை என் காதலால் அடிமைப்படுத்த நினைத்திருந்தேன்..."

"என்ன செய்வது, உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டது!"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "உங்கள் திட்டத்தை வேறு யாரும் தெரிந்திருப்பார்களா? குறிப்பாக- இந்த அறைக்கு வெளியில் நான் பார்த்த இளம்பெண்...-?"

"அவள் என் டைரியை எடுத்துப் படிப்பதை ஒரு முறை நான் பார்த்துட்டேன். அதற்காக அவளைத் திட்டினேன். ஆனால், அவள் ஒரு வெறும் கிறுக்கு! ஜன்னல் வழியா குதிச்சுக்கூட அவள் என் அறைக்குள் நுழைவாள்."

"அவளுக்கு உங்கள்மீது ஆழமான காதல் இருக்குன்றதை நான் புரிஞ்சுக்கிட்டேன்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்.

"என்ன? அந்த அவலட்சணம் பிடிச்ச பொண்ணுக்கா? நான் கனவில் -கூட அவளை மனைவியா நினைக்க மாட்டேன்"- மேத்தா வெறுப்புடன் சொன்னார்.

"அழகற்ற பெண்களின் காதல் ஆபத்தானது"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "அதை ஞாபகத்துல வச்சிக்கணும்."

5

நாக்படாவில் இருந்த ஒரு இரும்பு வியாபாரம் செய்பவன் அந்தக் கத்தியை அடையாளம் கண்டுபிடித்தான். "இது நம்ம அக்காராம் சொல்லி உண்டாக்கிய கத்தி ஆச்சே! அக்காராமைத் தெரியாதா? குழாய்களுக்குக் கேடு உண்டானால் அவற்றைச் சரி பண்ணித் தருபவன். அந்த வழுக்கைத் தலையன்... ஆமாம்... அவனேதான். அவன் பயங்கரமான ஆளு... எல்லாருக்கும் அவனைப் பார்த்து பயம்...ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் அவன் யாரை வேண்டுமானாலும் கொலை செய்வான்னு கேள்விப்பட்டிருக்கேன்."

அக்காராம் போலீஸ் வருவதை எதிர்பார்த்திருந்ததைப் போல தன்னுடைய வீட்டின் முன்பக்கம் இருந்த படியில் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்கள் கலங்கியிருந்தன.

"நீங்கதான் சர்ச் கேட்டில் நேற்று இரவு ஒரு கொலையைச் செய்ததா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"உங்களுக்கு தைரியம் இருக்கு ஸாப்..."- அக்காராம் தன் தேய்ந்து போன பற்களைக் காட்டியவாறு சொன்னான்.

"என்னைப் பார்ப்பதற்கு தனியாக, அதுவும் துப்பாக்கி எதுவும் இல்லாமல் இங்கே வர்றதுக்கு தைரியம் இருக்குதே! மகாராஷ்டிராவில் மிகவும் புகழ்பெற்ற கொலைகாரன் நான். நான் செய்த கொலைக்கான குற்றத்தை வேறு யாராவது ஒருத்தன் ஏற்றுக் கொள்வான். என்னைப் பிடிப்பதற்கான ஆதாரங்கள் எந்தச் சமயத்திலும் சட்டத்திற்குக் கிடைக்கவே கிடைக்காது."

"நீ தைரியத்துடன் பேசுறே அக்காராம்"- இன்ஸ்பெக்டர் சொன்னார். அவன் படியில் உட்கார்ந்தவாறு ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். இன்னொரு சிகரெட்டைப் பற்ற வைத்துத் தன் அருகில் அமர்ந்திருந்த மனிதனுக்குக் கொடுத்தான். இரண்டு பேரும் அமைதியாக இருந்தவாறு சிறிது நேரம் புகை பிடிப்பதில் மூழ்கிப் போய் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார்கள்.

இறுதியில் அக்காராம் சொன்னான்:

"உண்மையைச் சொல்லணுமே ஸாப்! நான் கொஞ்சம் திகைத்துப் போனதென்னவோ உண்மை. காரணம்- கொலை செய்வதற்கான கட்டணமான இரண்டாயிரம் ரூபாயை முன்கூட்டியே அந்த நபர் எனக்குத் தந்தாச்சு. பொதுவாக ஒப்பந்தம் பண்ணிக்கிறப்போ பாதி பணத்தையும், மீதி பணத்தைக் கொலை செய்த பிறகும்தான் நான் வாங்குவேன். அந்தப் பெண்ணைக் கொலை செய்ய வேண்டுமென்று சொன்ன நபர் முதலிலேயே இரண்டாயிரம் ரூபாயை என்னிடம் தந்தாச்சு. பாதிப் பணத்தை பிறகு தந்தால் போதும் என்று நான் சொன்னேன். 'அது தேவையில்ல... முழு பணத்தையும் வாங்கிக் கொள்ளணும்' என்று அந்த நபர் சொல்லியாச்சு."

"நபர் யாரு?"- இன்ஸ்பெக்டர் கேட்டார். அவருடைய இதயம் பலமாக அடிக்க ஆரம்பித்தது.

"அதைச் சொல்ல முடியாது"- அக்காராம் சொன்னான்: "முஸ்லிம் அணியக் கூடிய அடர்த்தியான சில்க் புர்க்காவை அந்த நபர் அணிந்திருந்ததை மட்டும் சொல்ல முடியும்."

"இதைச் செய்யச் சொன்னது ஒரு பெண்ணா?"- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஆமாம்... நான் கொலை செய்யச் சொன்ன நபரின் கையைப் பார்த்தேன். ஒரு பழைய நாணயத்தை வெள்ளியில் பதிய வைத்து மோதிரமாக அணிந்திருந்தது கண்ணில் பட்டது- நடு விரலில்...! வெள்ளை ஆடை அணிந்து, பூ மாலையைத் தலையில் சூடியிருக்கும் நடுத்தர வயதைக் கொண்ட பெண்ணைக் கொலை செய்யணும்னு என்கிட்ட சொன்னாங்க... எல்லா விருந்தாளிகளும் போன பிறகுதான் நான் அந்தப் பெண்ணைக் கொலை செய்தேன்.


அந்தப் பெண் தான் அந்த வீட்டின் நாயகி. கொஞ்சம்கூட பயத்தை வெளிப்படுத்தவே இல்லை. சிறிது சிரித்தாளோ என்று கூட எனக்கு சந்தேகம் உண்டானது.  வாழ்க்கையில் முதல் தடவையாக எனக்கு இரக்கம் தோன்றியது- அந்தப் பெண்ணின் இறந்த உடலுக்கு விடைகூறிவிட்டுத் திரும்பிய போது... அந்தப் பெண் ஒரு அழகான பெண்ணா இருந்தாள் ஸாப். அந்தப் பெண்ணின் முகத்தில் இருந்த ஒளி என்னை அழ வச்சிடுச்சு. என் தாயின் முகத்தை நான் அந்த நிமிடத்தில் நினைச்சேன். எனக்கு எட்டு வயது நடக்குறப்போ என்னை விட்டுப் போன என் தாய்... என் கைகள் நடுங்கின. இறந்து போய்க் கிடந்த அந்தப் பெண்ணின் பாதங்களைத் தொட்டு நான் மன்னிப்பு கேட்டேன். அவரைக் கொலை செய்வதற்குப பணம் தந்த பெண்ணை நான் மனதிற்குள் திட்டினேன். ஏதாவது தேவடியாளாக இருக்க வேண்டும! இறந்த பெண்ணின் கணவனுடைய செல்வச் செழிப்பில் கண் வைத்திருப்பவளாக இருக்க வேண்டும்... பொதுவாக, கொலை செய்ததற்கான ஆதாரத்திற்காக இறந்த உடலில் இருந்து நான் ஏதாவதொரு நகையை எடுப்பதுண்டு. ஆனால், அந்தப் பெண்ணின் நகைகளைத் தொடுவதற்குக்கூட நான் தயங்கினேன். அவளுடைய கையில் ஒரு நாணயம் பதிக்கப்பட்ட மோதிரம் இருந்தது. பணம் கொடுத்த பெண்ணின் மோதிரத்தைப் போலவே அது இருந்தது. அதை நான் கழற்றி எடுத்திருக்கலாம். ஆனால், கொலை செய்ததற்கான ஆதாரத்தை நான் யாரிடம் காட்ட வேண்டியதிருக்கிறது? கொலை செய்யச் சொன்னவள் முழுப் பணத்தையும் தந்தாச்சே! அதனால் நான் அந்த மோதிரத்தைக் கழற்றவேயில்லை. அது என் மோதிர விரலுக்கு மிகவும் சரியா இருக்கும். ஆனால் எனக்கு வெள்ளி பிடிக்காது. தங்கத்தின்மீதுதான் எனக்கு விருப்பம்..."

"வாங்க அக்காராம்"- இன்ஸ்பெக்டர் சொன்னார்: "என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க. நீங்க உங்களுடைய கடமையைச் செய்துட்டீங்க. இனி நான் என் கடமையைச் செய்யணும்ல!"

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.