Logo

ஒரு தேச துரோகியின் தாய்

Category: சிறுகதைகள்
Published Date
Written by sura
Hits: 6351
oru-desadhrogiyin-thaai

தாய்மார்களைப் பற்றி எத்தனை நிமிடங்கள் - நாட்கள் - மாதங்கள் கூட பேசிக் கொண்டேயிருக்கலாம். நகரைப் பகைவர்கள் சூழ்ந்து கொண்டு பல நாட்கள் ஆகிவிட்டன. சிவந்த ஜுவாலையில் இருந்து கிளப்பிய வெண் புகைப்படலம் நகரைச் சுற்றிலும் பரவிக் கிடந்தது. அதன் பிழம்பை அச்சத்துடன் எல்லோரும் நோக்கிக் கொண்டிருந்தனர்; நகரைத்தைச் சுற்றிலும் தீ ஜுவாலை வலமிட்டுக் கொண்டிருந்ததென்றால், நகர மக்களின் மனதை சூனியம் ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருந்தது.

பகைவர்கள், கழுத்தை பாசக்கயிறு இறுக்குவதுபோல தங்களுடைய கொடும் பிடியை நகரைச் சுற்றிலும் செயல்படுத்திக் கொண்டிருந்தார்கள். நடுவில் அக்கினி தகித்துக் கொண்டிருக்க, அதனைச் சுற்றிலும் அந்த அமைதியான இரவு நேரத்தில் மனித நிழல்கள் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. தடித்துக் கொழுத்த குதிரைகளின் காற்குளம் பொலிகளும் அமைதியைக் கிழித்து ஆர்ப்பரித்துக் கொண்டுதானிருந்தது. ஆயுதங்களின் உரசல் ஒலிகளும் வெற்றியைக் குறிக்கும் ஆனந்த வெளிப்பாடுகளும், பாடல்களும் எங்கோ தூரத்திலிருந்து காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தன. பகைவர்களின் பாட்டு - பகைவர்களின் வெற்றிக் களிப்பு - இந்த அகன்று பரந்து கிடக்கும் உலகத்தில் இதை விட மற்றுமோர் கொடூரமான சப்தம் வேறு என்ன இருக்கிறது !

நகர மக்கள் தண்ணீர் படுக்கும் ஆறுகளில் - ஒரே சவக் குவியல்கள் ! எல்லாம் பகைவர்களின் வேலைதான் ! அவர்கள் செய்த அட்டூழியங்கள் இது ஒன்றோடு நின்று விடவில்லை. நகரத்தைச் சுற்றியிருந்த சுவரோரங்களில் அடர்ந்து கிடந்த முந்திரிச் செடிகளை வேரோடு அழித்து ஒழித்துவிட்டார்கள். சாகுபடி செய்த நிலங்களைக் காலால் மிதித்து நாசமாக்கினார்கள். பழச்செடிகளை வெட்டி எறிந்தார்கள். பகைவர்களின் அட்டூழியத்தால் நகரமே கதி கலங்கிப் போயிருந்தது. சிறிதும் இடைவெளியின்றி பகைவர்தம் துப்பாக்கியும், பீரங்கியும் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருந்தன. போர் செய்த அயர்வுடன், வயிற்றுக்கே உணவு உண்ண முடிந்த போர்வீரர்கள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு, நகரத்தின் மிகக் குறுகலான தெருக்களில் நடந்து திரிந்தார்கள். திறந்துவிடப்பட்ட சாளரங்கள் வழியே போர்க்காயம் பட்ட வீரர்களின் வேதனைக் குரல்களும், லேசான முனகல்களும், பெண்களின் வழிபாட்டுக் குரல்களும், குழந்தைகளின் அழுகையொலிகளும் காற்றோடு காற்றாய்க் கலந்து ஒலித்துக் கொண்டிருந்தன. ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ள வேண்டும் என்றால்கூட மெதுவாக, மிகமிக மெதுவாக - ரகசியம் பேசுகின்ற பாணியில்தான் பேசிக்கொண்டனர். பேச எண்ணியதைக்கூட அவர்களால் முழுமையாகப் பேசிக்கொள்ள முடியவில்லை. பாதிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, காதைக் கூர்மையாகத் தீட்டிக் கொண்ட, பகைவர்கள் யாராவது வருகிறார்களா என்று கண்களால் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பகலைவிட இரவுகள்தான் மிகவும் கொடூரமாயிருந்தது. மயான அமைதியில் வயிற்றைக் கலக்கும் ஓலங்களும், முனகல்களும், காற்றைக் கிழித்துக் கொண்டு எதிரொலிக்கும். தூரத்தில் உயர்ந்து நிற்கும் குன்று பகைவர்தம் பாசறைகளை மறைத்துக் கொண்டிருக்கும். இரவோடு இரவாய்க் கரைந்து ஏதோ கருமையான ஒரு பிராணியாய் உயர்ந்து நிற்கும் மலையின் கீழிருந்து மெல்ல மெல்ல ஏறிக் கொண்டிருக்கும் நிலவு. தங்களுடைய உயிர் மீதே நம்பிக்கை இழந்த நகர மக்கள் பசியாலும், தாகத்தாலும் ஏற்பட்ட உடல் அசதியில் தூரத்தில் தெரியும் பகைவர்தம் பாசறைகளையே வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். உலகில் உள்ள ஒவ்வொன்றுமே அவர்களிடம் மரணம் குறித்து ஓலமிடுவது போலிருந்தது. வானில் ஒரு நட்சத்திரமாவது தன்னுடைய முகத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்க வேண்டுமே ! எல்லாமே ஏதோ பயந்து போனதுபோல் மேகப் போர்வையின் பின் தங்களை மறைத்துக் கொண்டிருந்தன. விளக்கு ஏற்றுவதற்குக் கூட அவர்கள் ஒவ்வொருவரும் நடுங்கினர். நகரின் தெருக்கள் இருளால் மூடப்பட்டுக் கிடந்தன. அவ்விருளோடு இருளாய்க் கலந்து உடல் முழுவதையும் கருப்பு வண்ண துணியொன்றினால் புதைத்துக் கொண்ட ஒரு பெண், எவ்வித ஓசையுமின்றி வீதியில் மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த ஒவ்வொருவரும் என்னவோ முனகிக் கொண்டனர். ‘இது அவள்தானே ?’ ‘ஆமாம். அவளேதான் !’ தங்களுடைய முதுகுகளை வளைத்துக் கொண்டு, தலையைத் தொங்கப் போட்டவாறு, ஒவ்வொருவரும் அமைதியே வடிவாக நடந்து போய்க் கொண்டிருந்தனர். காவல் காக்கும் மனிதர்கள் மெல்ல அவர்களிடம் கேட்டனர். ‘மோனா மரியானா எங்கே போய்க் கொண்டிருக்கிறாள் -? இந்த இரவு நேரத்தில் அவளுக்கென்ன வேலை ? யாராவது பகைவன் கையில் சிக்கி உயிரை இழக்கப் போகிறாள். அவளுடைய முகத்தைக் கண்டதும், அவளுடைய முகத்துக்கு நேர் எதிரே பேச தைரியம் இல்லாததாலோ, அவள் மீது தாங்கள் கொண்டிருக்கும் மரியாதையினாலோ, யாரும் வாய் திறக்கவேயில்லை. அவளைக் கண்டதும், ஆயுதமேந்திய வீரர்கள்கூட ஒன்றுமே பேசாமல் கடந்து போய்க் கொண்டிருந்தனர். அந்த இரவு நேரத்தில் மயான அமைதியை சிறிதும் லட்சியம் செய்யாத பாணையில் அந்த மூதாட்டி நடந்து போய்க் கொண்டிருந்தாள். நகரம் முழுவதும் இரவின் கருமையில் கரைந்து போய்க் கிடந்தது. அவல ஓலங்கள் நகரத்தின் நான்கு திசைகளிலிருந்து மெல்ல எழுந்து, காற்றில் கலந்து, கரைந்து எதிர்ப்புறம் மோதி, மிகப் பெரியதாக வியாபித்துக் கொண்டிருந்தது. அக்கினி ஜுவாலை, அபயக் குரல்கள், பிரார்த்தனை மொழிகள், தோல்வியால் ஏற்பட்ட ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளும் திராணியினின்றி போர் வீரர்கள் எழுப்பிய ஓலங்கள் - ஒவ்வொன்றுமே தனித்தனியாய், மிகத் துல்லியமாய் விழுந்து கொண்டிருந்தன. அந்த மூதாட்டியும் இதே நகரத்தைச் சேர்ந்தவள்தான். அவளும் ஒரு தாய்தான். தன்னைக் குறித்தும், தன்னுடைய வயிற்றில் ஜனித்த மகனைக் குறித்தும், ஏன் இந்த நாட்டைக் குறித்தும்கூட அவள் ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துக் கொண்டுதானிருக்கிறாள். நகரத்தை வளைத்து முற்றுகையிட்டிருக்கும் எதிரிகள் பக்கம் சேர்ந்து கொண்டு தன்னுடைய நாட்டையே தன் தாய் அவதரித்த நாட்டையே எதிர்த்துப் போர் செய்து கொண்டிருப்பவன் வேறு யாருமல்ல - அவளுடைய மகன்தான். கொஞ்சமும் இதயத்தில் அன்னை நாட்டின் மீது பற்றில்லாத அந்த மகன் அவளுடைய வயிற்றில் பிறந்தவன்தான். அவனைப் பற்றித் தன்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் அவ்வன்னை எப்படி எப்படி எல்லாம் கனவுக் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்திருந்தாள் ! நாட்டின் மானம் காக்கப் பொங்கி எழக்கூடிய ஒரு மிகச் சிறந்த தளபதியாக அவன் வருவான் என்று எத்தனை தூரம் கனவு கண்டிருந்தாள் ! தான் பிறந்து வளர்ந்த இந்த நகரத்தின் மானம் காக்கும் பெரும் வீரனாக அவன் வருவான் என்று அவள் எந்த அளவிற்கு முன்னோர்களால் உடைத்து உருவாக்கப்பட்ட கற்களால் ஆனவைதாம். அந்த அளவிற்கு நகரத்தின் மூலை முடுக்கெல்லாம் தன்னுடைய முன்னோர்களின் உழைப்பினால், தன் குடும்பமே வியாபித்திருப்பதாகத்தான் அவள் உணர்ந்தாள்.


முன்னோர்களின் பிடி சாம்பலோடு, ஒன்றோடு ஒன்றாய்க் கரைந்து பிணைந்துகிடக்கும் மண்ணும், வரலாறுகளும், இசையும், மக்களின் ஆசைகளும், எதிர்பார்ப்புகளும் கூட தன்னுடன் சங்கமம் கொண்டிருப்பதாகவே அவள் கருதினாள். ஆனால் இப்போது நடந்து கொண்டிருப்பதோ -? தன் மகனின் செயலை நினைத்து அவ்வன்னையின் இதயம் குமுறிக் கொண்டேயிருந்தது. தான் நாட்டின் மீது வைத்திருக்கின்ற பற்றையும், மகன் மீது வைத்திருக்கின்ற பாசத்தையும் அளவிட்டு நோக்கியபோது, தான் பற்று அதிகம் வைத்திருப்பது யார் மீது என்று அவ்வன்னையால் தெளிவாகக் கணிக்க முடியவில்லை. இரவு முழுவதும் நகர வீதிகளில் அவள் நடந்துகொண்டே திரிந்தாள். அவளை அடையாளம் தெரியாதவர்கள், அவளை ஏதோ ஒரு வகையான பீதியுடன் நோக்கினர். ‘ஒருவேளை இது இறந்து போன ஒரு கிழவியின் ஆவியாக இருக்குமோ ?’ என்று- கூட நினைத்துக் கொண்டனர் சிலர். அவளை நன்கு அறிந்தவர்களோ, அவளுடைய முகத்தைக் கண்டதும் ஒரு தேசத்துரோகியின் அன்னைதானே இவள் ?’ என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தனர். ஒரு நாள் இரவு நேரம். பிணமொன்றின் அருகே சிறிதும் சலனமின்றி சிலையாய் அமர்ந்து ஒரு பெண் கேவிக்கேவி அழுது கொண்டிருந்தாள். வானில் மின்னிக்கொண்டிருந்த ஆயிரமாயிரம் நட்சத்திரங்களை தலையை நிமிர்த்தி நோக்கிய அவளின் கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை. மூதாட்டியின் முகத்தைக் கண்டதும் அவளை வெறித்து வெறித்து நோக்கினாள் அப்பெண். மதில்களுக்கப்பால், அதனை ஒட்டி நின்று காவல் காத்துக்கொண்டிருந்த வீரர்கள் ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள் கையிலிருந்த போர்க்கருவிகள் கல்மேல் பட்டு அடிக்கொருதரம் சப்தித்துக் கொண்டிருந்தன. மூதாட்டி கேட்டாள். ‘இது யார் ? உன் கணவனா ?’ ‘இல்லை...’ ‘பிறகு ? சகோதரனா ?’ ‘இல்லை. இவன் என் மகன். என் கணவன் இந்த உலகை விட்டுப் போய் இன்றோடு பதின்மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இப்போது இதோ என் மகனும் போய்விட்டான்.’ சிறிது இடைவெளிக்குப்பின் அப்பெண் தொடர்ந்தாள். இப்போது எனக்கு என் கணவனையும், மகனையும் நினைத்துப் பார்க்கும்போது எவ்வளவு மகிழ்ச்சி உண்டாகிறது தெரியுமா ? ‘மகிழ்ச்சியா ? ஏன் ? ஒன்றும் புரியாமல் கேட்டாள் கிழவி. ‘நாட்டின் மானத்தைக் காப்பதற்காகக் தான் பிறந்த இப்புனித தேசத்திற்காகத் தன்னுடைய உயிரையே துச்சமாகக் கருதி என் மகன் பகைவர்களால் தாக்கப்பட்டு, மரணம் அடைந்திருப்பது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது தெரியுமா ? நான் அவனைக் குறித்து எப்படியெல்லாம் கவலைப்பட்டிருக்கிறேன் தெரியுமா ? துன்பம் என்பதே என்னவென்று அறியாத அவன் எங்கே மரியானாவின் மகனைப் போல நகரத்திற்கும், நாட்டிற்கும் துரோகியாய் ஆகிவிடப் போகிறானோ என்றுகூட பயந்தேன். ஆனால் நல்ல வேளை... என் பிள்ளை தன்னைப் பெற்ற அன்னைக்கும், தான் பிறந்த மண்ணிற்கும் தன்னுடைய சாவில்கூட நற்பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டான். மரியானாவின் மகன் ஒரு நம்பிக்கைத் துரோகி, துஷ்டன், எதிரிகளுடன் சேர்ந்து தாய்நாட்டைக் காட்டிக்கொடுத்த வஞ்சகன். அவனைப் பெற்ற தாயின் கருப்பை அழியவேண்டும்.’ மரியானா பதிலுக்கு ஒன்றுமே பேசவில்லை. முகத்தைத் துணியால் மூடிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்ற அவள் பின் சிறிது நேரத்தில் இரவோடு இரவாய்க் கரைந்து போனாள். அடுத்த நாள் காலை... நகரத்தைக் காத்துக் கொண்டிருந்த வீரர்களிடம் கூறினாள் அவள். ‘என் மகன் உங்களுக்கெல்லாம் விரோதியாக மாறியிருக்கிறான். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒன்று - அவனைப்பெற்ற குற்றத்திற்காக என்னைக் கொன்று விடுங்கள். இல்லாவிட்டால், அவன் இருக்குமிடத்திற்கு என்னைப் போக அனுமதியுங்கள்.’ அவள் கூறுவதையே வைத்த கண் எடுக்காது கேட்டுக் கொண்டிருந்த வீரர்கள் சிறிது நேர சிந்தனைக்குப்பின் கூறினர். ‘மகன் செய்த குற்றத்திற்காக உன்னைக் கொல்ல எங்களுக்குப் பிரியமில்லை அது சட்டப்படி பார்க்கும்போது நேர்மையான ஒரு காரியமுமல்ல. அவன் செய்கின்ற பெரிய பெரிய தவறுகளுக்கெல்லாம் நீதான் காரணம் என்பதிலும் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அன்னையாகிய நீ படும் துன்பத்தை நாங்களும் அறியாமல் இல்லை. உன்னுடைய எண்ணத்தைத் தடைசெய்யவும் நாங்கள் விரும்பவில்லை. ‘மகனே கதி என்று  இருப்பதாக எங்களுக்கு நீ தோன்றவில்லை. உன் மகன் வஞ்சகன். துரோகி. பசுத்தோல் போர்த்திய புலி. பெற்ற தாயாகிய உன்னைக்கூட அவன் அனேகமாக இந்நேரம் மறந்து விட்டிருப்பான். உன் விருப்பப்படியே நடக்கட்டும். அதுதான் பெரிய தண்டனையென்றால், அதைத் தடுக்க யாரால் முடியும் ?’ ‘நீங்கள் சொல்வது அத்தனையும் சரி. இறுதியில் உண்மை கொடுக்கும் பரிசு என்னவோ அதுதான்.’ - கிழவி கூறினாள். வாசற்கதவைத் திறந்த அவர்கள் மரியானாவை வெளியே போக அனுமதி அளித்தனர். தன்னுடைய மகன் செய்த குற்றத்திற்காகத் தான் அவதரித்த மண்ணை விட்டே போகும் அம்மூதாட்டியை மதில்களின் அருகே நின்றவாறு போர் வீரர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தான் இதுவரை வாழ்ந்த - தன்னுடைய வாழ்வுச் சரித்திரத்தின் பெரும்பாலான பக்கங்களைக் கழித்த மண்ணை விட்டுப் பிரிய ஒரு சிறிதும் மனமில்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே போய்க் கொண்டிருந்தாள் மரியானா. வழியின் இரண்டு ஓரங்களிலும் கொல்லப்பட்டுக் கிடக்கும் போர் வீரர்களின் பிணக்குவியல்கள் முன் முழங்கால்படிய அமர்ந்து, நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த அந்த வீர புத்திரர்களுக்கு வணக்கம் செலுத்தினாள் அம்மூதாட்டி. ஒடிந்து ஒரு ஓரத்தில் கிடந்த போர்க்கொடியொன்றை வெறுப்புடன் எடுத்து வீசி எறிந்தாள் கோபத்துடன். அவள் ஏன் வெறுமனே கிடந்த அதை எடுத்து அப்படி கோபத்துடன் வீசியெறிய வேண்டும் ? உயிரைக் காப்பதற்காக அன்றி வேறு வகையில் பயன்படக்கூடும் கருவிகள் மீது எந்த அன்னைக்குமே அப்படியொரு வெறுப்பு இருக்கத்தான் செய்யும் ! வயது முதிர்ந்த அம்மூதாட்டி கூனிக்குறுகி இரவு நேரத்தின் இருளைக் கிழித்தவாறு போய்க் கொண்டிருந்தாள். அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர் போர்வீரர்கள். அவர்களுடைய உருவம் தங்கள் பார்வையை விட்டு மறைந்தவுடன், ஏதோவொரு விலை மதிப்பற்ற பொருளை இழந்துவிட்ட மாதிரியான உணர்வு அவர்களுக்கு எழுந்தது. நடந்து செல்லும்பொழுதே, அடிக்கொரு தரம் நின்று, தான் அவதரித்த மண்ணையே திரும்பித் திரும்பி பார்த்தாள் மரியானா. அவளுடைய இந்தச் செய்கை போர் வீரர்கள் மத்தியில் ஏதோ ஒருவகையான ஆச்சரியத்தைத் தோற்றுவித்தது. பகைவர்களின் முன் அவள் மட்டும் தனியே நின்று கொண்டிருப்பதையும், கரிய உருவங்கள் இங்குமங்கும் நடந்து கொண்டிருப்பதையும் அவர்கள் பார்த்துக் கொண்டேயிருந்தனர்.


‘நீ யாரம்மா ? உனக்கு என்ன வேண்டும் ?’ - எதிரிப் படை வீரர்களில் ஒருவன் அருகே வந்து விட்டான். ‘உங்கள் தலைவன் வேறு யாருமல்ல. என்னுடைய மகன்தான்’ - இதை அவள் கூறியதுதான் தாமதம். போர் வீரர்கள் அவளைச் சுற்றிக் கூடிவிட்டனர். தங்களுடைய தலைவனின் வீரம் பற்றியும், குணம் பற்றியும் வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர். தன்னுடைய மகனைப் பற்றிக் கேட்கக் கேட்க அவளுடைய உள்ளத்தில் மெல்ல மெல்ல உறுதியான உத்வேகம் எழுந்து பொங்கி நுரை கக்கிக் கொண்டிருந்தது. தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தாள் மரியானா. தன் மகன் பலசாலி... வீரன் என்று அவர்கள் கூறியதற்காக ஒன்றும், அவள் புதிதாகப் பெருமைப்பட்டு விடவில்லை. தன் மகனைப் பறி அந்த அன்னைக்கு தெரியாதா என்ன ? தன் வயிற்றில் பிறந்த அந்த மகன் முன் நின்றாள் அம்மூதாட்டி. பட்டும், வெல்வெட்டும் தரித்து, இரத்தினங்களால் ஆன கருவிகளைக் கையில் ஏந்தி, பெருமிதத்துடன் தலைநிமிர்த்தி தன் முன் நிற்கும் தன் மகனையே நோக்கினாள் அந்த அன்புத்தாய். அவனை இதே கோலத்தில் எத்தனை முறை கனவில் தரிசித்திருக்கிறாள் அவள் ! அவள் கனவில் கண்ட அந்த கோலத்தை இன்று இதோ கண் முன்னால் பார்க்கிறாள். தன் அன்னையின் கரத்தை எடுத்து முத்தமிட்டான் மைந்தன். ‘அம்மா... இன்று நீ என் முன் வந்து நிற்கிறாய். உலகத்தையே கையில் பிடித்துவிட்ட மாதிரி உணர்கிறேன். நான் உன்னுடைய இந்த வரவு என்னுள் வீரத்தைக் கிளர்ந்து எழச் செய்கிறது. வேண்டுமானால் பார். நாளை இந்த நகரத்தையே என்னுடைய காலடிகளின் கீழ் கொண்டு வரத்தான் போகிறேன்.’’ ‘என்ன இருந்தாலும் நீ பிறந்து வளர்ந்த ஊரடா இது’ என்று மகனுக்கு ஞாபகப்படுத்தினாள் மரியானா. தன்னைக் குறித்து என்னவெல்லாமோ மிகவும் உயர்வாகக் கருதிக் கொண்ட அந்த இளைஞன் பேசிக்கொண்டே போனான். ‘இந்த மண்ணில் நான் பிறந்ததே எதற்கென்று நினைக்கிறாய் ? இந்த மண்ணை என் காலடியில் கொண்டு வருவதற்கென்றே பிறந்தவன் நான். என் பெயரைக் கேட்டாலே போதும். அக்கணமே இப்பிரபஞ்சம் ஒரு குலுங்கு குலுங்கிவிடும். எல்லாம் உன் ஒருத்திக்காகத்தான் அம்மா, நான் இந்த நகரத்திற்குக் கேடு விளைவிக்காதிருப்பதே. என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கும் நகரமிது. என்னுடைய உயர்வு நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் பாதையில் தடைக்கல்லாய் நின்று கொண்டிருப்பதும்கூட இந்த மண்தான். நாளைக்கு நடக்கப் போகின்ற எல்லாவற்றையும் உனது கண்களால் நீ பார்க்கத்தானே போகிறாய் ?’’ ‘இந்த நகரின் ஒவ்வொரு கல்லுக்கு உன்னைப் போன்ற உயிர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலுண்டு என்பதை நீ அறிவாயா, மகனே ?’’ மரியானா வினவினாள். ‘மனிதர்களே பேசாமல் இருக்கும்போது, கல் எங்கிருந்து பேசும்? உயர்ந்து நிற்கும் மாமலைகளும் என்னைத் துதிபாட வேண்டும். அதுதான் என் விருப்பமும்.’ ‘அப்படியானால் மனிதர்கள்...’ ‘யார்? மனிதர்களா? அவர்களை மட்டும் நான் மறந்து விடுவேனா என்ன? அவர்களும் எனக்கு அவசியம்தான். என்னைப் போன்ற வீரர்களின் அமரத்துமே இந்த மனிதர்களின் கையில்தானே இருக்கிறது?’ ‘மரணத்தைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல், அதையும் எதிர்த்து நின்று உயிர் காக்கிறானே, அவன்தான் உண்மையான வீரன். மரணத்தையே இங்கு உண்டாக்கிக் கொண்டிருப்பவன் உண்மையில்...’ மரியானா சொல்ல வந்ததைச் சரியாக முடிப்பதற்குள் இடைமறித்து அவன் பேசினான். ‘நீ சொல்வது போல் கிடையாது. நகரத்தை உண்டாக்கியவன் எத்தனை மகிமையுள்ளவனோ, அந்த அளவிற்கு மகிமையுள்ளவன் தான் அதை அழிப்பவனும். ரோமாபுரியை உண்டாக்கியது யாரென்று நம்மால் இன்றுகூட உறுதியாகக் கூறமுடியாது. ஈனியஸ்- ரோமுலஸ்- இவர்களில் யார் என்று உன்னால் உறுதியாகக் கூறமுடியுமா? அவர்களை இன்று யாராவது நினைத்துத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? ஆனால், இந்த நகரத்தை அழித்த அலாரிக்கிளையும், மற்ற வீரர்களையும் இன்று யாராவது மறந்து விட்டிருக்கிறார்களா? ‘அப்படிச் சொல்லாதேடா மகனே, எத்தனைப் பேர் அழிக்க வந்தாலும், அம் முயற்சிகளையெல்லாம் மீறி நித்திய ஜீவனாய் நின்று கொண்டிருக்கிறது பார்!... அந்த நகரத்தை நாம் தினமும் தினைத்துக் கொண்டுதானடா இருக்கிறோம்!’ சற்று சப்தமாகவே கூறினாள் கிழவி. அவர்களுடைய இந்த பேச்சுதான் எத்தனை மணி நேரம் தொடர்ந்து கொண்டிருந்தது! மகன் பேசுவதை அவ்வன்னையால் தடை செய்ய முடியவில்லை. அவன் பேசப்பேச அவளுடைய தலை தரையை நோக்கி வளைந்து கொண்டே இருந்தது. அவனைப் பெற்றவள் அந்த அன்னை; வளர்த்து இந்த மண்ணில் இத்தனைப் பெரிய மனிதனாக அவனை உலாவவிட்டதும் அவள் தான். அவள் படைத்தவள்- உருவாக்கினவள்-வாழ்வு தந்தவள். அந்த அன்னையிடம் போய் மரணத்தைப் பற்றியும்- அழிக்கப் போவது பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறான் மைந்தன். தாயின் எண்ணங்களையே எதிர்த்துப் பேசும் அளவிற்கு அவன் துணிந்திருக்கிறான். தான் என்ன பேசுகிறோம் என்பதைக்கூட அறியாமல் பேசுகிறான் அவன். வாழ்வு, உயிர்- எல்லாவற்றுக்கும் எதிராகவே தன்னுடைய பேச்சின் ஒவ்வொரு பகுதியும் இருக்கிறது என்பதைக்கூட அவன் அறிந்திருக்கவில்லை. அவள் மரணத்திற்கெதிரானவள். மனித உயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் கைகள் யாருடைய கைகளாக இருந்தாலும் சரி அவற்றை வெறுத்து ஒதுக்கக்கூடிய குணம் அவளுடையது. ஆனால், அப்படிப்பட்ட தாயின் வயிற்றில் பிறந்த மகனோ? மென்மைக்கப்பால், வீரமும் மன உறுதியும் தன் அன்னைக்கு உண்டு என்பதை அம்மைந்தன் அறிந்திருக்கவில்லை. அதனால் தானோ என்னவோ, தான் நினைத்தபடியெல்லாம் அவன் அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தான். மரியானா குனிந்த தலையை நிமிர்த்தவில்லை. ஆடம்பரமான அலங்காரங்களுடன் அமைக்கப்பட்டிருந்த தன் மகனின் கூடார வாசலின் வழியே வெளியே பார்த்தாள் அவள். எந்த நகரத்தில் நரக வேதனையை தாங்கிக் கொண்டு அவனைப் பெற்றாளோ, அதே நகரத்தை இன்று அதே மகன் அழிக்கிறேன் என்று கூறிக் கொண்டிருக்கிறான்! நகரம் கல்லறைக்குள் உறங்கும் பிணமாய் ஆகிப்போனது. கல்லறைகளில் எரியும் மெழுகுவர்த்திகளாய் வானில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. விளக்கேற்ற அஞ்சி, இருளோடு இருளாய் கரைந்து வீட்டினுள்ளே அடைந்து கிடக்கும் மனிதர்கள் வசிக்கும் வீடுகள்- இருந்த நெருக்கம்- வீடுகள் ஒவ்வொன்றையும் நோக்கினாள் மரியானா. நகரில் வாழும் மனிதர்கள் எல்லோருக்கும் தான்தான் அன்னை என்றுகூட அவள் அடிமனதுள் ஒரு சிறு உணர்வு- அதுவே வளர்ந்து பெரிதாகி வியாபித்தது. இருள் மூடிய மலை முகடுகளிலிருந்து வெண்மேகங்கள் தாழ்வாரத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தன. சிறகுகளை அழகாக விரித்துப் பறக்கும் வெண்புறாக்களைப்போல் வானில் சஞ்சரித்த மேகம் ஒரு இடத்தில் உறைந்து நின்றது- நகரத்திற்கு நேர் மேலே.


‘இன்று இரவே நாங்கள் இந்த நகரத்தை தாக்கப்போகிறோம். மேலும் இரவுதான் இதற்குப் பொருத்தமான நேரம். பகல் நேரங்களில் தாக்குவது என்றால், அதில் சகித்துக்கொள்ள வேண்டிய கஷ்டங்கள் நிறைய இருக்கின்றன. சூரியன் ஒளிபட்டு கையில் இருக்கிற போர்க்கருவிகள் பளபளக்கும். அது கண்களைச் கூசச் செய்து, போட்ட திட்டங்களையே பாழாக்கிவிடும். அதனால்தான் சொல்கிறேன். இரவுதான் இம்மாதிரியான லட்சியங்களுக்கு ஏற்றதென்று.’’ மகன் கூறுவதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த அன்னை ‘வாடா, நான் பெற்ற மகனே! வா... வந்து அன்னையின் மார்பில் சிறிது நேரம் முகம் புதைத்துக்கொள். நீ சிறு குழந்தையாய் இருக்கும்போது எத்தனை அன்பும், பாசமும் உள்ளவனாக இருந்தாய்! உன்னை எந்த அளவிற்கு ஒவ்வொருவரும் நேசித்தனர். வா... வந்து... சிறிது நேரம்தான் அன்னை மேல் சாய்ந்து கொள்! வாடா... என்... அன்பு மகனே!, என்றாள். அன்னையின் மார்பில் மீது தலையைச் சாய்ந்தவாறே பேசினான் அவன். கண்களிரண்டும் மூடியிருந்தன. ‘நான் நானாக இந்த உலகில் வாழ வைத்ததே நீதானம்மா. அதற்கு உன்மீது எத்தனைப் பாசம் செலுத்தினாலும் தகும். உன் மீது எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. ‘என் மீது மட்டும்தானா? மற்ற பெண்கள் மீது...? ‘ஏன்? அவர்கள் மீதும்தான். இருந்தாலும் இனிப்பான மற்ற பொருள்களின் மீது தோன்றுகிற மாதிரி, அவர்கள் மேலும் காலம் செல்லச்செல்ல வெறுப்பு உண்டாகிவிடத்தான் செய்கிறது...’ அப்படியானால் உனக்கு குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை கூட இல்லையென்று சொல்’ - அவள் குரல் சற்று தாழ்ந்து ஒலித்தது. ‘எதற்காக? குழந்தைகளைப் பெற்று என்ன பயன்? கண்டவன் கைப்பட்டுச் சாவதற்காக? என்னைப் போல ஒருவன் அவர்களைக் கொல்லுவான். அது என்னை வேதனைப்படுத்தும். நான் கிழவனாக இருக்கிறேனென்று வைத்துக்கொள். அவர்களை அந்தத் தருணத்தில் காப்பாற்றக்கூட என்னால் முடியாமல் போய்விடும்.’ ‘என்ன இருந்தாலும் நீ மின்னல் மாதிரி...’ கிழவி கூறினாள். ‘உண்மைதான். நான் மின்னலேதான்’ அதரங்களில் புன்சிரிப்பு தவழக் கூறினான் மைந்தன். அன்னையின் மார்பில் சிறு குழந்தையைப் போல் அவன் துவண்டு கிடந்தான். தன்னுடைய உடலை மூடியிருந்த கருப்பு வண்ணத் துணியால் அவனை மூடிய அன்னை. நீண்ட ஒரு கத்தியை அவனுடைய நெஞ்சுக்குள் இறக்கினாள். துடிதுடித்துக் கீழே விழுந்த அவனையே சிறிது நேரம் வைத்த கண் எடுக்காது பார்த்தாள் அவள். தான் பெற்ற மகனின் நெஞ்சுத் துடிப்பை ஒரு அன்னையைத் தவிர இந்த உலகில் யாரால் துல்லியமாகக் கணக்கிட முடியும்? என்ன செய்வதென்றே தெரியாமல் சிலையாய் திகைத்துப் போய் நின்ற போர்வீரர்களை நோக்கி மகனின் இறந்துபோன சடலத்தை வீசியெறிந்த அவள் நகரத்தை நோக்கித் திரும்பி நின்றவாறு கூறினாள். ‘இந்த மண்ணில் பிறந்தவள் என்ற முறையில் நான் பிறந்த மண்ணிற்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ, அதைத்தான் இப்போது செய்திருக்கிறேன்`. ஒரு தாய் என்ற நிலையில், நான் என்னுடைய மகனுடனே நிற்கிறேன். எனக்கு இனியொரு மகன் பிறக்கப்போவதில்லை. என்னுடைய வாழ்க்கை யாருக்கும் பயன் விளைவிக்கப் போகிறதுமில்லை.’’ மகனின் நெஞ்சைப் பதம் பார்த்த அதே கத்தியைத் தன்னுடைய நெஞ்சினுள் செருகினாள் மரியானா. கத்தியின் பெரும்பகுதி நெஞ்சிற்குள் சிக்கிக் கிடட்தது. இரண்டு உயிர்களின் குருதியையும் சுவை பார்த்த அந்தக் கத்தி சரியான இடத்தில்தான் சிக்கி விட்டிருந்தது. வேதனையின் உறைவிடமான அந்த அன்பு அன்னையின் நெஞ்சின் எந்தப் பகுதி இப்போது துடித்துக் கொண்டிருக்கும்?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.