Logo

பழம்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6495
Pazham

‘‘பழத்தைப் பார்க்குறப்போ உங்களுக்கு என்ன தோணுது ? - அவர் கேட்டார். நாங்கள் அவரின் காரை விட்டு இறங்கி மலைச் சரிவில் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லின் மேல் போய் உட்கார்ந்தோம். கார் மலைச்சரிவில் சாலையோரத்தில் இருந்த அந்த ஒரே கடையின் அருகில் வந்ததும், காரை நிறுத்திவிட்டு அவர் வெளியே இறங்கிச் சென்று கடையில் இருந்து பத்து, பன்னிரெண்டு மைசூர் பூவன்பழங்களை வாங்கிக் கொண்டு வந்து, அவற்றில் இரண்டு பழங்களை டிரைவர் கையில் கொடுத்துவிட்டு என்னையும் உடன் அழைத்துக் கொண்டு போய் சாலையோரத்தில் இருந்த கருங்கல்லில் அமர்ந்தார். பழம் எங்களுக்கு முன்னால் ஒரு தாளில் சுற்றப்பட்டு இருந்தது. நான் சொன்னேன் :

‘‘தெய்வத்தின் ஒரு அற்புதமான படைப்பு பழம். உலகத்துல உள்ள உயிரினங்கள் சாப்பிடுறதுக்குன்னே படைக்கப்பட்ட பழத்தைப் பற்றி கேட்பதற்குக் காரணம் ?-’’

‘‘காரணம் இருக்கு’’ - அவர் சொன்னா: ‘‘உங்களுக்கு எப்பாவாவது தற்கொலை செய்யணும்னு தோணியிருக்கா ?’’

நான் சொன்னேன்.

‘‘தோணியிருக்கு. மன நோயாளியாக அதாவது பைத்தியக்காரனாக நான் சானிட்டோரியத்தில் படுத்துக் கிடக்குறேன். இரவு நேரம். என் பக்கத்துல யாருமே இல்ல. மனசோட சம நிலை தவறிடுச்சு. ஒரு குண்டூசி அளவுக்குத்தான் சுய நினைவு இருந்துச்சு. அப்போ எனக்கு தற்கொலை செய்யணும்போல இருந்துச்சு. ஒரு கயிறை எடுத்து வெளியே இருந்த பலாமரத்தின் கிளையில் கட்டி தொங்கிச் சாகுறது நல்லதுன்னு மனசுல பட்டது. தற்கொலை எண்ணம் வந்த உடனே உடம்பெங்கும் ஒரு பரபரப்பு. அந்த எண்ணம் அதிகமான அதே நேரத்துல சுய நினைவும் எழும்ப ஆரம்பிச்சது. நான் வைத்தியரைக் கூப்பிட்டு விவரத்தைச் சொன்னேன். வைத்தியர் மருந்து கொண்டு வந்து என் கண்கள்ல தடவினார். அப்போ பயங்கர எரிச்சல் உண்டாச்சு. அதற்குப் பிறகு அப்படியொரு எண்ணமே மனசுல உண்டாகல. ஆராக்கியக் குறைவுதான் தற்கொலைக்கான காரணம்னு மனசுல படுது !’’

‘‘எப்பவும் சரியா இருக்கும்னு சொல்ல முடியாது. அது இருக்கட்டும். நீங்க எந்த குறையும் இல்லாத மனிதர்களைப் பார்த்திருக்கீங்களா, அதாவது பிரச்சினையே இல்லாதவர்கள்...’’

‘‘ஏன், நீங்களே இருக்கீங்களே !’’

‘‘என்னைப் பற்றி அப்படிச் சொல்ல முடியுமா என்ன ? என்ன இருந்தாலும் என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ?’’

உதவும் மனம் கொண்டவர். இரக்க சிந்தனை உள்ளவர். தர்ம பிரபு, ஜாதியும், மதமும் பார்க்காமல் யாருக்கும் உதவக் கூடியவர். எம்.ஏ.பி.எல். படித்திருக்கிறார். நீதிபதி, இரண்டு குழந்தைகள், மகன் வக்கீல், மகள் டாக்டர். இவருக்கு வயது எழுபது இருக்கும். உடல் ஆரோக்கியத்தைக் கொண்டவர். மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

நான் சொன்னேன்.

‘‘உங்களைப் பற்றி கொஞ்சம் தெரியும் !’’

‘‘என் இளமைக்காலம் எப்படி இருந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க ?’’

நாங்க பழத்தைச் சாப்பிட்டோம். மாலை நேரம் கொஞ்சம் கொஞ்சமாக கடந்து கொண்டிருந்தது. கடையில் விளக்கு கொளுத்தினார்கள். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்ட ஆரம்பித்தன.

நான் சொன்னேன் :

‘‘உங்களோட இளமைக் காலத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது !’’

அவர் சொன்னார் :

‘‘நான் சொல்றேன். நேரம் போய்க்கிட்டே இருக்கு. நான் இப்போ சொல்லப் போறது அம்பது அம்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு சம்பவம். நான் அப்போ ஆங்கிலப் பள்ளிக் கூடத்துல படிச்சிக்கிட்டு இருந்தேன். அப்போ எனக்கு பதினஞ்சு வயது இருக்கும்னு நினைக்கிறேன். நான் படிச்சிட்டு இருந்தது ஐந்தாவது ஃபாரம்.


ஏற்கனவே ஒரு சம்பவத்தை நான் சொல்லல. எனக்கு நாலோ அஞ்சோ வயது நடக்குறப்போ, என் அப்பா வீட்டை விட்டு போயிட்டார். அவரைப் பற்றி எந்தவிதமான தகவலும் இல்ல. என்னோட அப்பா ஒரு மெக்கானிக்காக இருந்தார். அப்பா வீட்டை விட்டுப் போன பிறகு, நாங்க ரொம்பவும் கஷ்டப்பட ஆரம்பிச்சோம். எங்களுக்குச் சொந்தமா இருபது சென்ட் இடமும், சின்னதா ஒரு வீடும் இருந்துச்சு. நிலத்துல இருந்து சொல்லிக் கொள்கிற மாதிரி எந்தவித வருமானமும் இல்ல. அம்மா பக்கத்துல இருந்த ஒரு பணக்கார இந்து வீட்டுக்கு வேலைக்குப் போனாங்க. வீட்டு வேலைதான். அங்கே கிடைக்கிற சாதத்தை ஒரு பொட்டலமாக கட்டி அம்மா கொண்டு வருவாங்க. அதெல்லாம் எனக்கு இப்பவும் சரியா ஞாபத்துல இருக்கு. நல்ல விஷயம்னு சொல்றதா இருந்தா அம்மா என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதைத்தான் சொல்லணும். மலையாளப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினதைத்தான் சொல்லணும். மலையாளப் பள்ளிக்கூடத்துல நாலாம் வகுப்புவரை படிச்சேன். பாஸானேன். அம்மா என்னை ஆங்கில பள்ளிக் கூடத்துல சேர்த்தாங்க. பட்டினி ஆரம்பிச்சது. போடுறதுக்கு சட்டை இல்ல. வேஷ்டி இல்ல. புத்தகங்கள் இல்ல. பாட புத்தகங்களை நோட்டு புத்தகங்கள்ல காப்பி எடுப்பேன். வீட்ல இருந்து பள்ளிக்கூடத்துக்குப் போறதுன்னா அஞ்சு மைல் தூரம் நடக்கணும். காலையில பழைய கஞ்சி தண்ணியில உப்பைப் போட்டு குடிச்சிட்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவேன். பசி எடுக்குறப்போ பச்சை தண்ணியைக் குடிப்பேன். சில நேரங்கள்ல கோயில்ல இருந்து படையல் சாதம் கிடைக்கும். சில நேரங்கள்ல கிடைக்காது. பட்டினி கிடக்க வேண்டியதுதான். பசின்னா அப்படியொரு பசி இருக்கு. கூட படிக்கிற பெரும்பாலான பசங்க மதிய நேரம் வந்துட்டா ஹோட்டல்கள்ல இருந்து தோசையும், தேநீரும் வாங்கிச் சாப்பிடுவாங்க. நான் மத்த பசங்களுக்குத் தெரியாம பச்சைத் தண்ணியைக் குடிச்சு வயிறை நிறைப்பேன். அஞ்சு மைல் தூரம் நான் நடந்து களைச்சுப் போய் வீட்டுக்குத் திரும்புவேன். ஆறிப் போன சாதத்தை அம்மா கொண்டு வந்து வைப்பாங்க. அதை நான் சாப்பிடுவேன். மறுநாள் காலையில திரும்பவும் பட்டினி... இப்படித்தான் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருந்துச்சு. மனசுல கவலை குடிகொள்ள ஆரம்பிச்சது. உதவி செய்ய, ஒரு நல்ல வார்த்தை சொல்ல எனக்குன்னு இந்த உலகத்துல யாருமே இல்ல. அதைப் பார்த்து எனக்கு வெறுப்புத்தான் வந்துச்சு. கோபம் கூட வந்துச்சு. சொல்லப் போனா கடவுள் மேலதான் எனக்கு கோபமே வந்தது. கோவில்கள்ல இருந்த எல்லா கடவுள்களையும் நான் வெறுத்தேன். ஏழைகளுக்காக தெய்வம் என்ன பண்ணியிருக்கு ? ஒண்ணுமே பண்ணல. நான் தெய்வத்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன். அதைக் கேட்டு அம்மா ரொம்பவும் கவலைப்படுவாங்க. அம்மா சொல்வாங்க - ‘‘மகனே, அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தெய்வம் கருணை வடிவமானது’ன்னு.

எனக்கு அம்மா மேல கோபம் கோபமா வந்துச்சு. நான் இருக்குறது அம்மாவுக்கு உண்மையாகவே ஒரு சுமைதான். நான் செத்துப் போயிட்டா என்ன? தற்கொலை செய்ய வேண்டியதுதான். இங்கே பக்கத்துலயே ஒரு கோவில் இருக்கு. அதற்குப் பின்னாடி கிளை பரப்பி நிக்கிற பலாமரம் இருக்கு. அதோட கிளையில சாயங்காலம் தொங்கிட வேண்டியதுதான்!

பள்ளிக்கூட கிணத்துல தண்ணி எடுக்க பயன்படுற வாளியில கட்டியிருந்த கயிறை யாருக்கும் தெரியாம நான் அவிழ்த்து எடுத்து சுருட்டி மடியில வச்சிக்கிட்டேன். பிறகு.... பள்ளிக்கூடத்தை விட்டு புறப்பட்டேன். வழியில இருந்த ஒரு மேட்டுல கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். ஒரு சிந்தனையும் ஒடல. மரணத்தோட முகத்தை நோக்கி உட்கார்ந்திருந்தேன்.

இன்னும் பொழுது இருட்டல. நான் உட்கார்ந்திருந்தேன். வழியில பலரும் போய்க் கொண்டிருந்தாங்க. யாரும் என்னை ஒரு பொருட்டாவே நினைக்கல. நான் என் அப்பாவைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். அம்மாவை நினைச்சேன். அப்பா மட்டும் இருந்திருந்தா...!

கொஞ்ச நேரம் கழிச்சு நான் எழுந்து நடந்தேன். கடைசி நடை. நாளைக்கு நான் இருக்கப் போறது இல்ல. நான் இல்லைன்னா யாருக்கு நஷ்டம்? என்னோட அம்மா அழுவாங்க. அம்மாவுக்கு இதைத் தவிர வேறு எந்த மாதிரி நான் உதவ முடியும்? உண்மையாகச் சொல்லப் போனா, நான் ஒரு பிடிவாதக்காரன். பட்டினி கிடந்து கிடந்து எனக்கே வெறுப்பாயிடுச்சு. நேத்து பட்டினி, இன்னைக்கு பட்டினி. நாளைக்கும் பட்டினி. நான்தான் சொன்னேனே.... எங்களுக்கு உதவி செய்ய உலகத்துல யாருமே இல்ல. ஒரு நல்ல வார்த்தை சொல்ல யாருமே இல்ல. முடிஞ்சது. எல்லாமே முடிஞ்சது. கயிற்றில் தொங்கி சாக வேண்டியதுதான்!

அந்த முடிவுடன் நான் வர்றப்போ எனக்காகக் காத்திருப்பதைப் போல ஒரு மனிதர் மலைச்சரிவின் சாலை ஓரத்துல நின்னுக்கிட்டு இருக்கார். வழுக்கைத் தலையில தொப்பி அணிஞ்சிருக்கார். இலேசா நரைத்த தாடியை கத்தரிச்சு விட்டிருக்கார். சட்டையும், வேஷ்டியும் அணிஞ்சிருக்கார். வேஷ்டியை மடிச்சுக் கட்டியிருக்கார். கையில ஒரு குடை இருக்கு. கால்கள்ல செருப்பு இருக்கு. பாக்கெட்ல ஒரு பேனா இருக்கு. கண்கள்ல மை தடவியிருக்கிறாரேன்னு ஒரு சந்தேகம். அவர் எந்த ஜாதின்னு உடனே புரிஞ்சு போச்சு. என்னைப் பார்த்த உடனே ஒரு கேள்வி கேட்டாரு - சிரிச்சிக்கிட்டே!

‘‘குழந்தை... எங்கேடா போற?’’

‘நான் பதில் சொல்லவில்லை. அவர் கேட்டார்.

‘‘குழந்தை... நீ எங்கேயிருந்து வர்ற?’’

நான் பதில் சொல்லவில்லை.

‘‘குழந்தை... ஏன்டா என்னவோ போல இருக்கே?’’

கண்களில் நீர் வழிய நான் சொன்னேன்.

‘‘பசி...’’

ஒரு மனிதர் என்னை கவனிச்சிருக்கார்! நான் என்னோட கஷ்டங்களை மெதுவான அவர்கிட்ட சொன்னேன். காலையில பழைய கஞ்சி தண்ணியில உப்பு போட்டு குடிச்சது... நான் ரொம்பவும் தளர்ந்து போயிருந்தேன். நேரம் இருட்ட ஆரம்பிச்சது. நாங்கள் மலையோட இந்தப் பக்கம் வந்தோம். அவர் அந்தக் கடையில இருந்து ரெண்டு சக்கரத்திற்கு பாளேங்கோடன் பழங்களை ஒரு தேக்கு இலையில வாங்கினார். சக்கரம்ன்றது பழைய திருவிதாம்கூர் ராஜ்யத்தின் ஒரு நாணயம்ன்றது தெரியும்ல? நீங்க மறந்திருக்க மாட்டீங்க... இருபத்தெட்டரை சக்கரம் ஒரு பிரிட்டிஷ் ரூபா.


பழம் வாங்கிக்கிட்டு வந்து அவர் என்னைச் சாப்பிடச் சொன்னார். நிறைய பழங்கள் இருந்துச்சு. நான் வயிறு நிறைய சாப்பிட்டேன். பசி அடங்கின மாதிரி இருந்தது. என்னோட சமநிலை தவறியது. நான் வாய்விட்டு அழுதேன். என் மீது யாருமே கருணை காட்டியது இல்ல. நான் அழுதுக்கிட்டே சொன்னேன்:

‘‘நான் தூக்குல தொங்கி சாகப் போறேன்!’’

சொல்லிட்டு மடியில இருந்த கயிறை எடுத்து அவர்கிட்ட காண்பிச்சேன். அவர் அதைக் கையில வாங்கினார். கடைக்குப் போயி ரெண்டு மூணு தேக்கு இலைகளை வாங்கிக்கிட்டு வந்தார். மீதியிருந்த பழங்களை அந்த இலைகள்ல கட்டினார். என் கையில அதைக் கொடுத்திட்டு சொன்னார்:

‘‘கொண்டு போயி அம்மாக்கிட்ட கொடு...’’

நாங்க நடந்தோம். கொஞ்ச தூரம் நடந்த பிறகுதான் கோவிலைப் பார்த்தேன். அதற்குப் பின்னாடி இருந்த பலாமரத்தைப் பற்றி நான் அவர்கிட்ட சொன்னேன். அவர் சொன்னார்!

‘‘தம்பி, வாழ்க்கைன்றது ஒரு வரம். இதில் கஷ்டங்கள், பிரச்சினைகள் எல்லாமே இருக்கும். வாழ்க்கையை தைரியத்தோட நாம சந்திக்கப் பழகிக்கணும். மனசுக்குத் தோணினபடி வாழ்க்கையை முடிச்சுக்க நினைக்கிறது ஒரு பாவச் செயல். சிந்திச்சுப் பார்த்து செயல்படணும். தெய்வம் எல்லா விஷயங்களையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கு. அதற்கு எல்லாவற்றையும் நல்லாவே தெரியும். நாளைக்கு என்ன நடக்கப் போகுதுன்னு குழந்தை... உனக்குத்  தெரியுமா? நீ நல்லா படிக்கணும். கஷ்டப்பட்டு படிக்கணும். தெய்வத்தோட உதவி அதற்கு கட்டாயம் இருக்கும். தெய்வம் கருணை மயமானது...’’

நான் சொன்னேன்:

‘‘எனக்கு தெய்வத்தின் மேல் நம்பிக்கை இல்ல...’’

‘‘இருக்கட்டும்... ஆனா, தெய்வம் கருணைமையமானதுதான். இந்த உலகத்துல பறவைகள், மிருகங்கள் எல்லாமே வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்கு! எல்லாத்துக்கும் இங்கே உணவு கிடைக்கத்தான் செய்யுது. முயற்சி பண்ணனும். பிரச்சினைகளைச் சந்திக்கணும். கஷ்டப்படணும். தன்னம்பிக்கையை விட்டுடக்  கூடாது, தெரியுதா? நானும் இந்த உலகத்துல ஒரு மனிதன்தான். நான் வாழ்வேன். குழந்தை... உன் வயசுல எனக்கும் ஒரு மகன் இருக்கான்.’’

நாங்க நடந்தோம். ஆற்றங்கரையை நெருங்கினப்போ, கையில இருந்த கயிறை அவர் ஆற்றுக்குள்ளே எறிஞ்சார்.

எங்க வீட்டுக்குப் போற வழி வந்தவுடனே நான் அவர்கிட்ட விடைபெற்றேன். அப்போ அவர் தன்னோட மடியில இருந்து ஒரு தாள் பொட்டலத்தை எடுத்து பிரிச்சு, அஞ்சு வெள்ளி ரூபாயை என் கையில தந்தார். தந்துட்டு சொன்னார்.

‘‘இத வச்சு அரிசியும், மற்ற பொருட்களையும் வாங்கிக்கோங்க...’’

அவர் நடந்தார். இன்னைக்கு இருக்குற ரூபாவோடஒப்பிட்டுப் பார்த்தா அந்த அஞ்சு ரூபாய்க்கு ஐம்பது ரூபாவோட மதிப்புன்னு சொல்லலாம். அவர் திரும்பி நின்னு சொன்னார்:

‘‘குழந்தை... உன்னை தெய்வம் காப்பாத்தட்டும்...’’

நான் வீட்டுக்குப் போய் பழத்தையும், பணத்தையும் அம்மா கையில கொடுத்துட்டு, நடந்த விஷயங்களைச் சொன்னேன். அம்மா என்னைக் கட்டிப் பிடிச்சு அழுதாங்க. அம்மா சொன்னாங்க:

‘‘மகனைக் காப்பாத்தின அந்த மனிதருக்கு கடவுள் அருள் செய்யட்டும்!‘‘

அன்னைக்கு இரவு நாங்க வயிறு நிறைய சாப்பிட்டு முடிச்சு, நிம்மதியா உறங்கினோம். காலையில பார்த்தா ஆச்சரியம்! காணாமப் போயிருந்த என்னோட அப்பா கையில ஏகப்பட்ட சாமான்களுடன் நிறைய பணத்துடன் வந்து நிக்கிறார்...’’

நான் கேட்டேன்:

‘‘அஞ்சு ரூபாயும் அந்த பழங்களையும் தந்த மனிதரோட பேர் என்னன்னு தெரியுமா?’’

‘‘தெரியாது, பேரைக் கேட்கணும்னு தோணல. அந்த மனிதரை மட்டும் நான் பார்க்காம இருந்திருந்தா, என் நிலைமை என்ன ஆகியிருக்கும்!’’

‘‘நினைச்சுப் பார்த்தா நடந்த விஷயம் ஆச்சரியமான ஒண்ணுதான்...’’

அவர் சொன்னார்:

‘‘இதுதான் பழத்தைப் பார்க்குறப்பெல்லாம் ஞாபகத்துல வர்ற - என் வாழ்க்கையில நடந்த பயங்கர சம்பவம்!’’

நாங்கள் காரில் ஏறினோம். கார் புறப்பட்டபோது, அவர் சொன்னார்:

‘‘காலம் எவ்வளவோ ஓடிச்சு. அந்த மனிதர் இப்போ இறந்திருப்பார். அவரோட ஆத்மாவுக்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தந்து அருள் செய்யட்டும்...’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.