Logo

விருந்து

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6321
Virundhu

ன்றும் அவர்கள் ஒரு விருந்திற்குச் செல்வதற்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வாழ்க்கை முழுவதுமே இந்த மாதிரி கண்ணாடிக்கும் முன்னால் நின்று கொண்டிருப்பதிலும், கண்ட கண்ட மனிதர்களெல்லாம் மேலிருந்து

கீழ் வரை கண்களால் ஆராய்ச்சி செய்வதிலும், பாடல்களில் திரும்பத் திரும்ப வரும் பல்லவியைப் போல கொஞ்சம் கூட மாற்றமே இல்லாத சம்பவங்களிலும் அழிந்து கொண்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். இதே காட்சி இதற்கு எத்தனை முறை அரங்கேறி இருக்கிறது! அவள் தற்போது நடந்து கொள்ளும் விதமும், தலை முடியை வாருவதும், முகத்தைச் சிறிது கூடத் திருப்பாமல் தன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான கேள்விகளும்... எல்லாமேதான்.

அவள் கூந்தலைக் கட்டி, பின்களைக் குத்தி, மீண்டும் கைகளைக் கழுவுவதற்காக குளியலறையை நோக்கி நடந்தாள்.

‘‘நான் எந்தப் புடவையைக் கட்டுறது?’’ - அவள் அங்கே நின்றவாறு அவனைப் பார்த்து கேட்டாள்: ‘‘சீக்கிரம் சொல்லுங்க மோகன், நீல நிறப் புடவையைக் கட்டட்டுமா? இல்லாட்டி வெள்ளையையா?’’

‘‘வெள்ளை...’’

அவன் சொன்னான்.

‘‘போன மாசம் நடந்த மித்ராவோட பார்ட்டிக்கு அந்தப் புடவையைத்தான் கட்டிட்டுப் போனேன். அன்னைக்கு வந்த அதே கூட்டம் இன்னைக்கு நடக்குற பார்ட்டிக்கு வராதுன்னு என்ன நிச்சயம்?’’

அவள் சொன்னாள்.

அவன் கட்டியிருக்கும் டையை ஒழுங்குப்படுத்தினான். வெள்ளை நிற கோட்டை எடுத்து அணிந்தான். பிறகு உதடுகளை ஈரமாக்கிக் கொண்டு வாசல் பகுதியை நோக்கி நடந்தான்.

‘‘ஓ... இவ்வளவு சீக்கிரம் நீங்க ட்ரெஸ் பண்ணி முடிச்சீட்டீங்களா?’’ - அவள் கேட்டாள். ‘‘நான் இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கேன்....’’

அவன் வாசலில் இருந்த பூச்செடிகளுக்கு அருகில் ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அதில் அமர்ந்தான். பக்கத்து வீட்டின் முன்னால் இருந்த தோட்டத்தில் அந்த வீட்டு தோட்டக்காரன் பெரிய ஒரு கத்தரியை வைத்து வேலியில் நீளமாக இருந்த செடிகளை வெட்டிக் கொண்டிருந்தான்.

‘‘மோகன்...’’ - உள்ளே இருந்த அந்த இளம்பெண் அழைத்தாள்.

‘‘என்ன?’’

‘‘நான் நினைக்கிறேன்... இன்னைக்கு நடக்குற பார்ட்டியில இவங்களும் இருப்பாங்கன்னு...’’

‘‘யாரைச் சொல்ற?’’

‘‘மேல இருக்குறவங்க...’’

‘‘...ம்...’’

‘‘இன்னைக்குக் காலையில நான் தையல் மெஷினோட சத்தத்தைக் கேட்டேன். இன்னைக்கு போட்டுட்டுப் போற ப்ளவுஸை அந்தப் பொம்பளை உட்கார்ந்து தச்சிருப்பான்னு நினைக்கிறேன். இந்தக் கஞ்சத்தனம் எதுக்குன்னே தெரியல. இந்தக் கொல்கத்தாவுல எத்தனை நல்ல தையல்காரங்க இருக்காங்க!’’

‘‘...ம்...’’

‘‘என்ன இருந்தாலும் பார்க்கவே சகிக்காத ப்ளவுஸை அணிஞ்சிக்கிட்டு அவ வெளியே போகத்தானே செய்றா! அந்தப் பொம்பளையோட கணவரை நினைச்சாத்தான் எனக்கே பரிதாபமா இருக்கு! மோகன். நான் சொல்றதை நீங்க கேக்குறீங்கல்ல?’’

‘‘...ம்...’’

அவள் வாசலுக்கு வந்து அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் போனாள். அவளுடைய முகத்தில் அளவுக்கும் அதிகமாகவே ரூஜும், பவுடரும் இடப்பட்டிருந்தன. அது ஒரு விலை குறைவான பொம்மையின் முகமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் ஒரு சிகரெட்டை எடுத்து புகைத்தான்.

‘‘கவிதை எழுதுறதை நினைச்சுக்கிட்டு பயங்கர கர்வமா அவ இருக்கா. நான் கவிதை எழுதுறேன் - எனக்கு எதுக்கு அழகுன்னு நினைப்பு அவளுக்கு. அதைப் பார்க்குறப்போதான் எனக்கு மனசுல எரிச்சலே வருது. அவளோட நிறம் வெள்ளையா இல்லைன்னாலும் நல்ல கவனம் எடுத்து ஒப்பனை செஞ்சா, நிச்சயமா அவ மோசமா இருக்க வாய்ப்பே இல்ல. ஆனா...’’

‘‘கவனம் செலுத்தி ஒப்பனை செய்யலைன்னாலும் அவங்க அழகிதான்... அப்படித்தான் நான் நினைக்கிறேன்.’’

அவன் சொன்னான். அவள் மீண்டும் வெளியே வந்தாள் - உதட்டில் புன்சிரிப்பு தவழ!

‘‘என்ன மோகன், வேணும்னே என் கூட சண்டை போடணும்னு பார்க்குறீங்களா? அவ அழகின்னு இது வரை யாரும் சொன்னது இல்ல. அழகியாம் அழகி... ஹா.. ஹா...’’

அவன் தன்னுடைய மனைவியின் முகத்தையும், வெள்ளை நிற துணியால் மூடப்பட்ட அவளுடைய உடலையும் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு உற்றுப் பார்த்தவாறு அமர்ந்திருந்தான். பிறகு என்ன நினைத்தானோ அவனும் இலேசாகச் சிரித்தான்.

‘‘நல்லா இருக்கேனா? அவள் கேட்டாள்: ‘‘என் முகத்துல பவுடர் ஒண்ணும் அதிகம் இல்லியே?’’

அவன் தலையை ஆட்டினான்.

‘‘எனக்கு அந்த பொம்பளையோட பந்தாவைப் பார்க்குறப்போ கோபம் கோபமா வருது’’ - அவள் சொன்னாள்.

‘‘அப்படியா? அவங்க எப்போ அப்படி நடந்தாங்க?’’ - அவன் கேட்டான்.

‘‘நீங்க அதைப் பார்க்கலியா என்ன? அட கடவுளே... ஏன்தான் இந்த  ஆம்பளைங்க இப்படி முட்டாள்களா இருக்காங்களோ... தெரியல... அவளோட நடையை நீங்க பார்த்ததே இல்லியா? தலையைத் தூக்கி வச்சிக்கிட்டு, கொஞ்சம் கூட தரையை பார்க்காம ஒரு நடை... பிறகு... அந்தச் சிரிப்பு... அவளோட எந்த விஷயமும் எனக்கு பிடிக்கல...’’

‘‘ஏழரை மணி ஆயிடுச்சு!’’ - அவள் நாற்காலியை விட்டு எழுந்தவாறு சொன்னான்:

‘‘காக்டெயில் பார்ட்டிக்கு இதை விட தாமதமா போற அளவுக்கு முக்கியத்துவம் உள்ளவங்களா இப்போ நாம இல்ல.’’

அவள் அதைக் கேட்டு ஒரு மாதிரி சிரித்தாள். பிறகு, செருப்புகளைத் தேடிக் கொண்டு மீண்டும் குளியலறையை நோக்கி நடந்தாள்.

மேல் மாடியில் ஒரு பம்பரம் சுற்றும் ஓசை அவன் காதுகளில் விழுந்தது. அதைத் தொடர்ந்து குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் கேட்டது. அவன் வாசலில் நின்றவாறு மேலே தலையை உயர்த்தி பார்த்தான். ஒருவேளை மேல்மாடியில் இருக்கும் பெண் வெளியே நின்றிருக்கலாம் என்ற நினைப்புடன் அவன் மேலே பார்த்தான். அப்படியே நின்றிருந்தால் அவள் என்ன செய்வாள்? அவனைப் பார்த்து அவள் புன்னகை செய்யலாம். இல்லாவிட்டால், ‘‘உங்க மனைவி நல்லா இருக்காங்கள்ல?’’ என்று விசாரிக்கலாம். இதைத் தவிர வேறு என்ன நடக்கப்  போகிறது?

எந்தவித காரணமும் இல்லாமல் அவன் பயங்கர கோபத்துடன் அங்கிருந்த ஒரு பூந்தொட்டியை காலணியால் ஓங்கி மிதித்தான். அந்த வாசலில் இருந்த பூந்தொட்டிகள் அனைத்திலும் முட்செடிகள் நன்கு வளர்ந்திருந்தன.

‘‘நான் ரெடியாயிட்டேன்’’ - அவனுடைய மனைவி சொன்னாள். அவளின் கையில் வெள்ளியைப் போல் மினுமினுத்துக் கொண்டிருந்த துணியாலான ஒரு தொங்கு பை இருந்தது.

‘‘என்ன ஆச்சு?’’ - அவள் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தவாறு கேட்டாள்: ‘‘உங்க முகம் ஒரு மாதிரியா இருக்கே!’’

அவன் நாற்காலியில் அமர்ந்தவாறு தன்னுடைய நெற்றியைக் கையால் தாங்கினான்.


‘‘என்ன ஆச்சு மோகன் உங்களுக்கு? அவள் கேட்டாள்: ‘‘என்ன ஆச்சு?’’ அவள் பூசியிருந்த வாசனைப் பொருட்கள் அவனைப் பாடாய்ப்படுத்தின. அவன் முகத்தை உயர்த்தாமலே சொன்னான்:

‘‘தயவு செய்து இன்னைக்கு என்னை இங்கேயே இருக்க விட்டுடு...  எங்கேயும் போகணும்னு இன்னைக்கு எனக்குத் தோணல!’’

‘‘என்ன சொல்றீங்க நீங்க?’’ - அவளின் குரல் முன்பிருந்ததை விட உயர்ந்தது: ‘‘வர்றோம்னு சொல்லிட்டு இப்போ போகாம இருந்தா நல்லாவா இருக்கும்? இப்படி கீழ்த்தரமா நடக்க நீங்க எங்கதான் படிச்சீங்களோ தெரியல, உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! எனக்கு நல்லாவே தெரியும். சரி எழுந்திரிங்க... நாம போகலாம், இப்பவே மணி ஏழே முக்கால் ஆயிடுச்சு!’’

அப்போது மேலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பம்பரத்தை நூலால் சுழற்றி கொண்டிருந்தார்கள். அதன் ஓசை அவனுடைய மனதிற்குள் ஒரு வேதனையின் தொடர்ச்சியைப் போல எழும்பி திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.

‘‘நான் எங்கேயும் வரல!’’ - அவன் சொன்னான்.

‘‘ஏன் மோகன், இப்படி சின்னப் பிள்ளை மாதிரி நடக்குறீங்க?’’ - அவள் கெஞ்சுகிற குரலில் சொன்னாள்: ‘‘நாம எப்படி போகாம இருக்க முடியும்? உங்களோட மேலதிகாரியோட பார்ட்டி இல்லியா? அந்த மனிதரை நம்மால வேண்டாம்னு ஒதுக்க முடியுமா?’’

அப்போதும் தலையைச் சொறிந்தவாறு இருந்த அவன் சொன்னான்:

‘‘நான் வர்றதா இல்ல!’’

அவள் அவனின் தலைமுடியைக் கைகளால் கோதிவிட்டாள். அவனுடைய கை விரல்களைப் பிடித்து முத்தமிட்டாள். ‘‘சரி, எந்திரிங்க மோகன்....’’ - அவள் முணு முணுக்கும் குரலில் சொன்னாள்.

‘‘அந்த ஆளை எப்படி நாம வேண்டாம்னு ஒதுக்க முடியும்?’’

அவன் எழுந்து அவளைக் கொஞ்சம் கூட பார்க்காமல், படுவேகமாக நடந்தான். இலேசாக புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு அவனை அவள் பின்பற்றினாள்.

‘‘இதுக்கு மேல தாமதமா போற அளவுக்கு முக்கியத்துவம் உள்ளவங்க நாம இல்லியே! ’’ - அவள் சொன்னாள். படிகளில் இறங்குகிறபோது, அவனின் முகத்தை அவள் பார்த்தாள். புன்சிரிப்பு, கோபத்தின் நிழலாட்டம்.... - எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. அதனால் விஷயத்தை மாற்றும் எண்ணத்துடன் அவள் கேட்டாள்:

‘‘இன்னைக்கு நல்லவேளை மழை பெய்யல. மழை பெய்தால் என்னதான் கவனமா இருந்தாலும் என் புடவை நாசமாயிடும். கார்ல ஏறி உட்கார்றதுக்குள்ள ஓரமெல்லாம் நனைஞ்சிடும். அதுதான் எனக்கு பயமே!!’’

அவன் காரை ஒட்ட ஆரம்பிக்கவும், மழை துளிகள் திடீரென்று வந்து தெருவில் விழவும் சரியாக இருந்தது.

‘‘நான் சொல்லல?’’ - அவள் சொன்னாள்: ‘‘எனக்கு முன்னாடியே தெரியும்,   இன்னைக்கு கட்டாயம் மழை பெய்யும்னு! என்னோட வெள்ளைப் புடவை...’’

அவள் இன்னொரு முறை அந்தப் புடவையைப் பற்றி ஏதாவது சொன்னால் நிச்சயமாக அவளைக் கொலை செய்வது உறுதி என்று அவன் மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

‘‘மோகன், இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?’’ - அவள் கேட்டாள்:  ‘‘உங்க கைகள் பயங்கரமா நடுங்குதே! உங்களுக்குக் காய்ச்சல் ஏதாவது இருக்கா  என்ன?’’

‘‘காய்ச்சலா...? ஹா... ஹா...’’

அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அவனுடைய தேவையற்ற அந்தச் சிரிப்பு சீக்கிரம் முடியாதா என்று மனதிற்குள் வேண்டியவாறு அவள் அமர்ந்திருந்தாள். மழைத் துளிகள் பயங்கர வேகத்துடன் காரில் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவன் மீண்டும் காரில் இருந்தவாறு பயங்கரமாகச் சிரித்தான். தன் மீது அவனுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. ஒருநாளும் விரும்பியதே இல்லையா? அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அன்று அந்த விருந்தில் வைத்து அவர்களை அழைத்திருந்த மனிதர் சொன்னார்:

‘‘உங்களோட அழகு மேலும் கூடியிருப்பதா எனக்கு படுது!’’

என்ன காரணத்தாலோ, அந்த நிமிடம் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.