Logo

அடிமை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6666
adimai

கேட்டில் கார் வந்து நின்றது. நான் தலையை உயர்த்திப் பார்த்தேன். சில்க் பேண்ட்டும் சில் புஷ்கோட்டும் பொன் நிறத்தால் ஆன கைக்கடிகாரமும் ஷுவும் அணிந்த ஒரு மனிதன் காரை விட்டு இறங்கினான். அவன் டிரைவரிடம் என்னவோ சொல்லிவிட்டு கேட்டைத் தாண்டி உள்ளே வந்தான்.

நான் வராந்தாவிலிருந்த வாசலுக்கு வந்தேன். ஆச்சரியப்பட்டு நின்று விட்டேன். என்னுடைய கையைப் பிடித்து குலுக்கியவாறு அவன் கேட்டான்.

“என்னை ஞாபகம் இல்லியா?”

நான் பதிலெதுவும் கூறவில்லை. நான் என்ன பதில் சொல்வது? நான் அவனை மறந்து விட்டேன் என்பதென்னவோ உண்மைதான். ஆனால், கேட்டைக் கடந்து வந்தபோது நான் ஞாபகப்படுத்திப் பார்த்தேன். ஞாபகம் வந்ததால் தான் நான் ஆச்சரியப்பட்டு நின்றதே. அவன் என்னுடைய வீட்டைத் தேடி வருவான் என்று நான் கனவில் கூட நினைத்ததில்லை.

அவன் ஏறி வந்த அந்த ஸெடான் கார் திரும்பிப் போய்விட்டிருந்தது. முகத்தில் சற்று பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு அவன் சொன்னான்.

“என்னை நீங்கள் மறந்திருந்தீங்கன்னா, அதுல ஆச்சரியப்படுறதுக்கு ஒண்ணுமே இல்ல. நான்...”

அவனின் கையைப் பிடித்தவாறு நான் சொன்னேன்.

“ஞாபகம் இருக்கு. வரணும்...”

நாங்கள் வராந்தாவிற்கு வந்தோம். ஒருவரையொருவர் பார்த்தவாறு அமர்ந்தோம். நான் அவன் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தேன். அவனிடம் பெரிய அளவில் மாறுதல்கள் உண்டாகி விட்டிருந்தன. நான் பொறாமையுடன் பார்த்த கண்களுக்குச் சொந்தக்காரன் அவன். அன்று அந்தக் கண்களில் உணர்ச்சிகள் சிறகடித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது ஒளியற்று மங்கிப் போய் இருந்த உயிரோட்டமில்லாத இரண்டு விழிகளை நான் பார்த்தேன். சிறகற்று, துடித்துத் துடித்து கடைசியில் எந்தவித சலனமும் இல்லாமல் நடக்கும் உயிரிலிருந்து தெறித்த இரத்தத்தைப்  போல அந்தக் கண்களில் இரத்தம் தேங்கி நின்றிருந்தது.

என்னுடைய முகத்தைப் பார்க்காமலே, தன் பேண்ட் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்து ஒரு பாக்கெட் சிகரெட்டையும், தீப்பெட்டியையும் எடுத்தவாறு அவன் சொன்னான்.

“என்னை எல்லாரும் மறந்துட்டீங்க... இல்லாட்டி, எதற்கு என்னை ஞாபகப்படுத்திப் பார்க்கணும்? கோடிக்கணக்கான பேர் பிறக்கிறாங்க. கோடிக்கணக்கான பேர்களைப் பிறக்க வைக்கிறாங்க. யார் யாரை ஞாபகத்துல வச்சிக்கணும்? எதற்காக ஞாபகத்துல வச்சிருக்கணும்?”

அந்தக் கண்களின் ஆழத்தில் சிறகற்று அசையாமல் விழுந்து கிடந்த உணர்ச்சிப் பறவை இலேசாக துடிப்பது போல் எனக்குத் தோன்றியது.

அவன் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எனக்கு நேராக நீட்டினான். நான் நன்றியுடன் அதை வேண்டாமென்று சொன்னேன். அவன் ஒரு சிகரெட்டை எரிய வைத்தான். நான் வெற்றிலை போட ஆரம்பித்தேன்.

ஒருவகை ஈடுபாட்டுடன் புகைபிடித்துக் கொண்டிருந்த அவன் ஆகாயத்தையே உற்றுப் பார்த்தான். அந்த துடிப்பற்ற கண்கள் வழியாக ஆத்மாவிற்குள் நெளிந்து இறங்க முயற்சித்துக் கொண்டிருந்த அவன் மவுனமாக அமர்ந்திருந்தான்.

எதையோ தேடிப்பிடிப்பதற்காக அவன் கடந்த காலத்தின் அலைகளில் நீந்திக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

“அந்தக்காலம்... அந்தக்காலம்...” -இப்படி என்னவோ அவன் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காலத்தை என்னால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. அப்போது அவன் மாணவனாக இருந்தான். அப்போது நான் யாராக இருந்தேனென்றும், என்னவாக இருந்தேனென்றும் எனக்கே நிச்சயமாகக் கூற முடியவில்லை. மாணவனாக இருந்த அவன் உணர்ச்சிகரமான ஒரு கவிஞனாகவும், திறமையான ஒரு பேச்சாளனாகவும் இருந்தான். அன்று அவன் மாணவர்களின், குறிப்பாகச் சொல்லப்போனால் மாணவிகளின் மரியாதைக்குரிய ஒரு மனிதனாக இருந்தான். மேடையில் ஏறி கவிதை பாடிய அந்த இளம் நட்சத்திரத்தை ஆசிரியர்கள் மனப்பூர்வமாகப் பாராட்டினர்.

விலை குறைவாக உணவு கிடைக்கும் ஒரு ஹோட்டலில் தான் நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். நாங்கள் இருவருமே ஏழைகளாக இருந்தோம்.

நாங்கள் இருவரும் நண்பர்களானோம். எங்களின் நட்பு ஒருவரையொருவர் மதிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், எங்கள் பழக்க வழக்கத்திலும், வாழ்க்கை மீது கொண்ட பார்வையிலும், குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் இருந்தன. போராட்டங்கள் என்றால் ஆவேசமாக கோதாவில் இறங்கும் நானும், போராட்டங்களில் விலகி நின்று நட்பு கீதம் பாடும் அவனும் ரசிக்கக்கூடிய முறையில் ஒருவருக்கொருவர் பலமாக வாதிட்டிருக்கிறோம்.

அவன் தன்னுடைய அறைக்கு சில நாட்கள் என்னை அழைப்பதுண்டு. என்னுடைய அறைக்கு அவனை அழைக்க, அன்று எனக்கென்று ஒரு அறை இல்லை என்பதே உண்மை. சில நேரங்களில் என்னுடைய ஆவேசமும், அட்டகாசங்களும் அவனுக்கும் பக்கத்து அறைகளில் தங்கியிருந்த அவனுடைய நண்பர்களுக்கும் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. ஒருநாள் கவிதையைப் பற்றி நாங்கள் காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தோம். நான் செய்த விமர்சனங்கள் மிகவும் காரமுடையதாக இருந்தன. வாழ்க்கையைத் தொடாத, ஆகாயத்தைத் தாண்டி வேறெங்கோ இருக்கும் கற்பனை உலகத்தில் மலரின் மணத்தைத் தேடி பறந்து திரியும் வண்டின் பாட்டினைப் பாடிக் கொண்டிருக்கும் கவிஞர்களை நான் பலமாகத் தாக்கிப் பேசினேன். அவனுடைய மணிநாதம் போன்ற இனிய குரலை என்னுடைய ஆவேசமான குரல் இருந்த இடம் தெரியாமல் ஆக்கியது. மூச்சுவிட முடியாத அளவிற்கு ஒரு திணறல் உண்டானதைப் போல அவன் கட்டிலில் அமர்ந்தவாறு இப்படியும் அப்படியுமாய் நெளிந்தான்.

“ஆகாயத்தின் இருட்டைப் பார்த்து ஊளையிடுகிற நாய்கள்!” என்று காட்டமாக கூறியவாறு நான் அங்கிருந்து புறப்பட்டேன்.

அதற்குப் பிறகு இருபத்து நான்கு வருடங்கள் கடந்தோடி விட்டன.

தேர்வுகளில் பெரிய அளவில் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றான். அவன் ஒரு பட்டதாரியாக ஆனான். அதற்குப் பிறகு அவன் பல பெரிய அதிகாரிகள் மற்றும் பணக்காரர்களின் கவனத்தில் படும் மனிதனாக ஆனான். ஒரு மிகப்பெரிய அதிகாரியின் அழகான மகளைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அவன் உயர்கல்வி கற்பதற்காக இங்கிலாந்திற்குச் சென்றான். பெரிய பட்டங்கள் பலவற்றையும் பெற்றுக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தான். அவன் சில நாட்களில் ஒரு பெரிய அதிகாரியாக மாறினான். உயர்வான நிலையில் இருக்கும் அந்த அதிகாரியின் மகளை ஒரு நாள் திருமணமும் செய்து கொண்டான்.

அவனுடைய தொழில் ரீதியான உயர்வு ஆச்சரியப்படும் விதத்தில் படு வேகத்தில் நடந்தது. மிகக் குறுகிய காலத்தில் அவன் அரசாங்கத்தின் ஒரு பிரிவுக்குத் தலைவனாக நியமிக்கப்பட்டான். அவனுடைய தொழில் ரீதியான உயர்வுகளுக்கு அவனுடைய மனைவி உதவியாக இருந்தாள் என்று அப்போது பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது உண்மையா என்பது எனக்கு தெரியாது.


ஒருநாள் நான் ஒரு திரைப்பட அரங்கிற்கு முன்னால் நின்றிருந்தேன். ஒரு ஷெவர்லெ கார் எனக்கு அருகில் வந்து நின்றது. அவன் காரிலிருந்து இறங்கினான். தன்னுடைய மனைவியை கைகொடுத்து இறங்க உதவினான். அங்கு நின்றிருந்த யாரும் அவனைப் பார்க்கவில்லை. எல்லாரும் அவனுடைய தேவதையையொத்த அழகான மனைவியையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவன் திரும்பி என்னைப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ அடுத்த நிமிடம் தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டான். அப்போது அவனுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் என்ன என்பதை என்னால் சரியாக கவனிக்க முடியவில்லை.

அவனுடைய பேரழகியான மனைவி அவன் தோளைத் தட்டியவாறு காருக்குள் எதையோ சுட்டிக் காட்டினாள். சொன்ன சொல்படி நடக்கும் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரனைப் போல் அவன் அவளுடைய ‘வேனிட்டி பேக்’கை எடுத்து அவள் கையில் தந்தான். அவள் முன்னால் நடக்க, அவளுக்குப் பின்னால் நடந்தான். அவர்கள் திரையரங்கிற்குள் நுழைந்தார்கள்.

அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தும், தனித்தனியாகவும் காரில் ஏறிப்போவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். அவன் இருக்கும் துறையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு துறையுடன் சம்பந்தப்பட்டிருக்கும் நான் அதன் பின்னால் அவனைப் பார்க்கவே இல்லை. அவனைப் பற்றி நான் நினைக்கவும் இல்லை.

கொஞ்சமும் எதிர்பார்க்காததும், ஆச்சர்யம் தரக்கூடியதாகவும் இருந்தது இந்தச் சந்திப்பு. நான் அவனுடைய முகத்தை உற்றுப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன். உதட்டில் இருந்த சிகரெட்டை தூக்கியெறிந்து விட்டு, இன்னொரு சிகரெட்டை எடுத்து அவன் உதட்டில் வைத்தான்.

“அந்தக்காலம்...! மீண்டும் கடந்த காலத்துக்கு நம்மால் பயணம் செய்ய முடியுமா என்ன...”

நான் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. ஐன்ஸ்டீனின் நான்காவது பரிமாணம் தியரியைப் பற்றி சொன்னால் என்ன என்று என் மனதிற்குள் நினைத்தேன். காலத்திற்கு அப்படி கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று எதுவும் கிடையாது என்று நான் கூறினால் இந்த விஷயத்தை அவனால் புரிந்து கொள்ளமுடியுமா என்று நினைத்து எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தேன்.

என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் இலேசாக புன்சிரிப்பு தவழச் சொன்னான்; “அப்போ நீங்க ஒரு வீரரா இருந்தீங்க.”

“இப்பவும்தான்” - என்னையும் அறியாமல் நான் இப்படி சொன்னேன்.

“நான் அப்போ...”

“உணர்ச்சிகரமான ஒரு கவிஞரா இருந்தீங்க” இதுவும் என்னை மீறி நான் சொன்னதுதான்.

“இப்போ...”

“இப்போ...”

“இப்போ நான் ஒரு சைக்கிள் மாதிரி ஆயிட்டேன்.”

“என்ன? சைக்கிள் மாதிரியா?”

“ஆமா...என் வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு சைக்கிளோட வாழ்க்கை மாதிரியே ஆயிடுச்சு.”

“சைக்கிளுக்கு வாழ்க்கைன்னு எதுவுமே இல்லையே!”

“எனக்கும் வாழ்க்கை இல்ல. மற்றவர்கள் சவாரி செய்றதுக்கு உபயோகப்படுற ஒரு இயந்திரம்தான் நான்” - அவன் குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

எதற்காக அவன் அப்படிச் சிரிக்க வேண்டும்? உணர்ச்சிகரமாக கவிதைகள் பாடும் ஒரு கவிஞன், மற்றவர்கள் சவாரி செய்யப் பயன்படுத்தும் ஒரு இயந்திரமாக மாறியதற்காக உண்மையிலேயே அழத்தானே வேண்டும்!

அவன் தொடர்ந்தான்; “நான் ஒரு விலையுயர்ந்த சைக்கிள். அழகான சைக்கிள். விலை அதிகமாக இருந்தாலும் இல்லைன்னாலும், அழகா இருந்தாலும் இல்லைன்னாலும் சைக்கிளால ஒரே ஒரு பயன்தான்... அது மற்றவர்கள் சவாரி செய்ய உதவும்” இதைச் சொல்லிவிட்டு அவன் மீண்டும் விழுந்து விழுந்து சிரித்தான்.

“மதிப்பு அதிகமா இருந்தாலும் இல்லைன்னாலும் ஒரு வேலை பார்க்கும் மனிதன்- ஒரு அதிகாரி ஒரு சைக்கிள்தான்... இல்லையா?” - நான் ஆர்வத்துடன் கேட்டேன்.

அவன் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. நான் கேட்டேன்; “உங்க மனைவி நலமா இருக்காங்கல்ல?”

“சாந்தம்மா நல்ல சுகமா இருக்கா. அவளோட சுகத்துக்காகத்தான் நான் வாழறதே. அவளுக்கு எந்த கவலையும் வர நான் விடமாட்டேன். அதுதானே சரி?”

“சைக்கிளோட தர்மம் அதுவாக இருக்கலாம்.” - நான் வந்த சிரிப்பை   அடக்கிக்கொண்டு கேட்டேன்; “உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?”

“நாலு. மூணு பெண் குழந்தைங்க. ஒரு ஆண். ரெண்டு பெண் குழந்தைகளும் ரெண்டு ஆண் குழந்தைகளும் இருந்திருந்தா நல்லா இருக்கும், இல்ல?”

“அப்படியா?”

“நாலுமே பெண்ணா இருந்தா நல்லா இருக்கும்னு சாந்தம்மா விருப்பப்பட்டா...” - அவன் இதயத்திலிருந்து ஒரு சிரிப்பு சிரித்தான். உதட்டில் இருந்த சிகரெட்டை தூரத்தில் எறிந்துவிட்டு, இன்னொரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்தான்.

தேநீர் வந்தது. நான் கேட்டேன்; “உங்களுக்கு தேநீர் பிடிக்குமா? காப்பியா?”

“தேநீர்தான். ஆனால் வீட்டுல சாப்பிடுறது காப்பிதான்.”

“அதென்ன அப்படி?”

“சாந்தம்மாவுக்கு காப்பிதான் ரொம்பவும் பிடிக்கும்.”

அவன் மிகவும் ஆர்வத்துடன் தேநீரைக் குடித்தான். இடையில் சிகரெட் பிடிக்கவும் தவறவில்லை.

நான் கேட்டேன்; “இன்னும் கொஞ்சம் தேநீர் கொண்டு வரச் சொல்லட்டுமா?”

“இப்போ இது போதும்... இப்படியே தினந்தோறும் சிகரெட் பிடிக்கவு ம், தேநீர் குடிக்கவும் முடிஞ்சா, எவ்வளவு நல்லா இருக்கும்.” பிரகாசம் குறைந்து காணப்பட்ட அந்தக் கண்களில் இதைச் சொன்னபோது உயிர்ப்பு தெரிந்தது.

“இங்கே வந்தா, சிகரெட் பிடிக்கலாம். தேநீரும் குடிக்கலாம்.”

“நான் இப்போ இங்கே இருக்குற விஷயமே சாந்தம்மாவுக்குத் தெரியாது.”- அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு நிழல் படர்ந்தது.

“தெரியாம வந்திருக்கீங்களா?”- நான் சிரித்தேன்.

“நான் யார் வீட்டுக்கும் போறதை பொதுவா சாந்தம்மா, விரும்புறது இல்ல...”

“பிறகு எதுக்கு இங்கே வந்தீங்க?”

“வந்த விஷயமா? இதற்குத்தான்... சிகரெட் பிடிக்க, தேநீர் குடிக்க... பிறகு கடந்த காலத்தைப் பற்றி அசை போட்டுப் பார்க்க...” உதட்டிலிருந்த சிகரெட்டின் மீதியை வீசி எறிந்துவிட்டு, அவன் இன்னொரு சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்து எரிய விட்டவாறு கேட்டான்.

“நீங்க சிகரெட் பிடிக்கிறது இல்லியா?”

“இல்ல... எனக்கு வெற்றிலை போடத்தான் பிடிக்கும்.”

“நான் சிகரெட் பிடிக்கிறது சாந்தம்மாவுக்கு கொஞ்சம்கூட பிடிக்காது.”

“அவங்களுக்கு விருப்பமில்லாததைப் பண்ணிட்டு, அவங்ககிட்ட போறப்ப...”

“சாந்தம்மாக்கிட்ட நான் எதையும் சொல்ல மாட்டேன்.” - அவன் முகத்தில் இனம்புரியாத ஒரு பயம் நிழலாடியது. அவன் எழுந்தான்.

“நான் போகட்டுமா? நான் நாளைக்கு வருவேன். நான் திரும்பவும் தேநீர் குடிக்கணும். சிகரெட் பிடிக்கணும். கடந்த காலத்தைப் பற்றி அசைப்போட்டுப் பார்க்கணும்.” - அவன் முற்றத்தில் இறங்கி நடந்தான்.

கேட்வரை அவனுடன் சேர்ந்து போனேன். நான் கேட்டேன். “கார் இல்லாம எப்படிப் போவீங்க?”


“நான் இன்னைக்கு நடந்தே போறதா இருக்கேன்.”

“சரிதான்...”

“நான் நடக்குறது சாந்தம்மாவுக்குப் பிடிக்காது. இருந்தாலும் நான் நடந்துதான் போகப்போறேன்.”

“நாளைக்கு வருவீங்களா?”

“கட்டாயம் வருவேன்.”

அவன் சாலையில் இறங்கி நடந்தான். நான் கேட்டை அடைத்தேன். வராந்தாவிற்கு மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்தேன்.

அடுத்த நாள் சாயங்கால நேரம் ஆனபோது நான் அவனை எதிர்பார்த்து அமர்ந்திருந்தேன். அவன் பிடிக்கிற சிகரெட்டை கடையில் வாங்கிவரச் செய்து வைத்திருந்தேன். நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு மூன்று தடவைகள் தேநீர் கொண்டு வரவும் முன்கூட்டியே சொல்லி வைத்துவிட்டேன். என்னவெல்லாம் பேசுவது என்று மனதிற்குள் சில விஷயங்களை எண்ணி வைத்திருந்தேன்.

ஐந்தரை மணி ஆனபோது கார் கேட் அருகில் வந்து நின்றது. அவன் காரை விட்டிறங்கினான். அவன் கேட்டைக் கடந்து வருவதற்கு முன்பே, கார் அந்த இடத்தை விட்டு நீங்கியது.

“நான் நேற்று எந்தவித கவலையும் இல்லாம நிம்மதியா உறங்கினேன்”- இப்படி மகிழ்ச்சி ததும்ப சொன்னவாறு அவன் வராந்தாவில் தன் பாதத்தை வைத்தான். எனக்கு நேர் எதிராக நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவன் தொடர்ந்தான்.

“தேநீர் அருந்தினேன். சிகரெட் பிடிச்சேன். நடந்தேன். கடந்த கால நினைவுகளில் மூழ்கிப் போய் நான் உறங்கினேன்.” அவன்முகத்தில் ஒரு முழுமையான நிறைவின் வெளிப்பாடு தெரிந்தது.

நான் சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து அவன் கையில் தந்தேன்.

அவன் கேட்டான்; “எனக்காகவே இதை நீங்க வாங்கி வைச்சீங்களா?”

“ஆமா... என் வீட்டுக்கு வந்து உங்க பாக்கெட்ல கையை விட்டு சிகரெட்டை எடுத்து நீங்க பிடிக்குறதுன்றது அவ்வளவு நல்ல விஷயம் இல்லியே!”

தேநீர் வந்தது. நாங்கள் அதைக் குடித்தோம். அவன் அவ்வப்போது சிகரெட்டை உதட்டில் வைத்து ஊதினான்.

அவன் மாணவனாக இருந்தபோது எழுதிய கவிதையின் சில வரிகளை, தன்னையும் மீறி அவன் அதைப் பாடியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டே நான் பாடினேன். அந்தக் கவிதையின் கருத்து இதுதான்.

‘அவளும் நானும் சேர்ந்து பாடல்கள் இசைத்து உலகமெங்கும் சுற்றித்திரிந்தோம். இருவரும் இணைந்து பல இடங்களிலும் அலைந்து பூக்களைச் சேகரித்தோம். எவ்வளவு மலர்கள் இருந்தாலும், அவளுக்குத் திருப்தி உண்டாகவேயில்லை. அவளுடைய பூக்கூடை நிறையவே இல்லை. அவள் என் தோளைத் தட்டினாள். ஆகாயத்தை விரலால் சுட்டிக் காட்டினாள். நான் ஆகாயத்தை நோக்கி உயர்ந்தேன். ஆகாயத்தில் நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருக்கின்றன. கார்மேகங்களையும், வெண் மேகங்களையும் கடந்து ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்தை நோக்கி போய்க் கொண்டே இருந்தேன் நான். அப்படி நான் உயரத்தில் செல்லச் செல்ல, அவளை மறந்தேன். அவள் பூக்கூடையையும் மறந்தேன். இப்போது நான் கீழே பார்த்தேன். பூமி கருகுமணி அளவிற்கு மிகவும் சிறியதாகத் தெரிந்தது. என் பார்வையிலிருந்து எல்லாமே மறைந்தன. நான் என்னையே மறந்து போனேன். எல்லையற்ற தன்மையுடன் இரண்டறக் கலந்து விட்டேன்.’

நான் கவிதையைப் பாடிக் கொண்டிருக்கும் போது, அவனைக் கடைக்கண்களால் பார்த்தேன். அவன் கண்களில் நீர் அரும்பி வழியத் தொடங்கியது. நான் கவிதை பாடுவதை நிறுத்தினேன். உதட்டின் அருகில் நின்றிருந்த கண்ணீர்த் திவலைகளைக் கையால் துடைத்தவாறு அவன் சொன்னான்;

“இப்பவும்- இப்பவும் அவளுக்குத் திருப்தியில்லை. இப்பவும் அவளின் பூக்கூடை நிறையவில்லை.”

“ஆகாயத்துல இருக்கிற நட்சத்திரங்களைக் கொண்டு வந்து கொடுத்தா...?” - நான் கேட்டேன்.

“அது அவளுக்குத் தேவையில்லை. ஆகாயத்துக்கு உயர்ந்து போக என்னை அவள் விடமாட்டா...” கண்ணீர் வழிய அமர்ந்திருந்த அவன் ஆகாயத்தை உயர்ந்து பார்த்தவாறு தொடர்ந்தான்;

“அவ மட்டும் என்னை வானத்துல உயர்ந்து போக அனுமதிச்சா, கார்மேகங்களையும், வெண்மேகங்களையும் தாண்டி ஆகாயத்தின் எல்லையற்ற தன்மையை நோக்கி என்னை போக அவள் அனுமதிச்சா...”

“அனுமதியில்லாம உங்களால உயரத்துக்குப் போக முடியாதா என்ன?”

அதைக் கேட்டதும் அவன் கண்களின் ஆழத்தில் சிறகற்று எந்தவித அசைவுமில்லாமல் கிடந்தன அவனுடைய உணர்ச்சிகள். அந்தக் கண்களில் திடீரென்று ஒரு பிரகாசத்தின் ரேகை தெரிந்தது. நன்றாகக் கேட்கும்படியான குரலில் அவன் சொன்னான்.

“அனுமதி தரலைன்னாலும் நான் ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்துக்கு நிச்சயம் போவேன்” - கம்பீரமாக கர்ஜிக்கும் குரலில் அவன் தொடர்ந்தான்.

“அவளும் அவளோட பூக்கூடையும்... மறக்கணும். அவளையும் அவளோட பூக்கூடையையும் நான் மறக்கணும். மறக்கணும்... ஆகாயத்தோட எல்லையற்ற உயரத்துக்கு நான் பறக்கணும்... பறந்து நான் பாடணும்.”

இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த உற்சாகமான, உணர்ச்சிமயமான அந்தக் கண்களை பல வருடங்களுக்குப் பிறகு நான் சில மணித்துளிகள் நேரத்துக்குப் பார்த்தேன். திடீரென்று அந்தக் கண்களில் ஒருவித பயம் வந்து ஒட்டிக் கொண்டது. சிறகற்ற உணர்ச்சி அசைவில்லாமல் கிடக்க ஆரம்பித்தது. அவன் தன்னுடைய தலையைக் குனிந்து கொண்டான். மீண்டும் அவனுடைய கண்களில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

“அன்று நான் ஒரு சுதந்திரமான மனிதனாக இருந்தேன். அப்போ நான் அழிவற்ற அழகின் காதலனா இருந்தேன். அப்போ நான் நிரந்தர உண்மையைத் தேடி எல்லையற்ற ஆகாயத்தில் பறந்து திரிஞ்சேன். இப்போ... இப்போ...?”

“ஆமா, நீங்கள் இப்போ கவிதை எதுவும் எழுதுறது இல்லையா?” - நான் மெதுவான குரலில் கேட்டேன்.

“கவிதையா? அவளின்... அவளின்... உதடுகள் என்னோட உதடுகளைத் தொட்டப்போ, என்கிட்ட இருந்த கவிதை என்னோட மூக்கு வழியா வெளியே பறந்து போயிடுச்சு...”

“நீங்க கவிதை பாடுறது இல்லியா?”

“நான் கவிதை பாடினா, அவளோட உதடுகள் என்னோட உதடுகளைத் தொடும். அதோட என்னோட பாட்டு ஒரு முடிவுக்கு வந்திடும்.”

அவன் தன்னுடைய தலையைக் குனிந்துகொண்டு எதுவும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான். இப்படியே சில நிமிடங்கள் ஓடியபிறகு, அவன் என்ன நினைத்தானோ, வேகமாக இருந்த இடத்தை விட்டு எழுந்தான்.

“நண்பரே, நான் போகட்டுமா?”

“ஏன்? அப்படி என்ன அவசரம்?”

“நான் ஒரு கடன்காரன். என்றைக்கும் தீராத கடன் இருக்கு...”

“தீராத கடனா? அப்படியொரு கடன் இருக்கா என்ன?”

“அவளோட அப்பா செலவழிச்ச பணத்தை வச்சித்தான் நான் பெரிய பெரிய பட்டங்களெல்லாம் படிச்சு வாங்கினது. உண்மையிலேயே அது ஒரு தீராத கடன்தான். பிறகு... பிறகு... அவளோட அழகு! அவளோட உடல் வனப்பு!”

கட்டுப்படுத்த முடியாத வெறுப்புடன் நான் சொன்னேன்.


“அவளோட அழகு! அவளோட உடல் வனப்பு! அவளோட பணம்! சொல்லப்போனால், நீங்க ஒரு அடிமை. அப்படித்தானே? நீங்க ஒரு கவிஞன் இல்ல. நீங்க எந்தக் காலத்திலேயும் ஒரு கவிஞனா இருந்தது இல்ல.”

அவன் தன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.

“நான் எந்தக் காலத்திலேயும் கவிஞனா இருந்தது இல்லியா? நான் எப்பவும் அடிமைதானா? நான் இதுல இருந்து தப்பிக்க முடியாதா? நான் இந்த நிலைமையில இருந்து விடுபட முடியாதா?” -அவன் முற்றத்தில் இறங்கி கேட்டை நோக்கி நடந்தான்.

நான் அவன் தோளைப் பற்றினேன். அவனிடம் மெதுவான குரலில் சொன்னேன்;

“அடிமைத்தனத்தின் கடைசி கட்டமாக இது இருக்கலாம். உங்களை விட்டு என்றோ காணாமல் போன கவித்துவ உணர்வை மீண்டும் நீங்க அடையிற நேரம் வந்திருக்கலாம்.” - நான் அவன் கண்ணீரைத் துடைத்தேன்.

அவன் கேட்டைக் கடந்து சாலையில் கால் வைத்தான். நான் கேட்டேன்;

“நாளைக்கு வருவீங்களா?”

“வருவேன். நாளைக்கு வரலைன்னா, பிறகு எப்பவும் நான் வரமாட்டேன்”- அவன் நடந்தான்.

ஒருவாரம் கடந்து போன பிறகும், அவன் வரவேயில்லை. இங்கு அவன் வரவில்லையென்றால், அவனை நானே தேடிப் போய் பார்ப்பது என்று முடிவெடுத்தேன். கடைசி யுத்தத்திற்கு நான் தயாராகிவிட்டேன் என்றே சொல்ல வேண்டும்.

அரண்மனைக்கு நிகராக இருந்த அந்த வீட்டின் கேட்டில் நின்றவாறு நான் உள்ளே எட்டிப் பார்த்தேன். தூக்கத்தில் ஆழ்ந்து போயிருந்த வேலைக்காரன் கண்களைத் திறந்து பார்த்தான்.

“என்ன?” - அவன் சற்று அதிகாரமான குரலில் கேட்டான்.

“அவர் உள்ளே இருக்காரா?”

“ம்...”

“நான் அவரைக் கொஞ்சம் பார்க்கணும்.”

“அனுமதி இல்லாம உங்களை உள்ளே விட முடியாது.”

“யாரோட அனுமதி வேணும்?”

“சின்னம்மாவோட.”

“சின்னம்மாவோட அனுமதியை எப்படி வாங்குறது?”

“இங்கே நில்லுங்க” - அவன் எழுந்து உள்ளே போனான்.

நான் விசாலமான ஹாலின் வாசலருகில் போய் நின்றேன்.

புடவையின் ‘சர சர’வென்று சத்தத்தைக் கேட்டு நான் தலையை உயர்த்தினேன். நீண்ட இமைகளுக்கு நடுவில் துருதுருவென்றிருந்த இரண்டு விழிகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தன.

“ம்...?”- ஒரு முணுமுணுப்பு.

“அவரைக் கொஞ்சம் பார்க்கணும்”- நான் மரியாதையான குரலில் சொன்னேன்.

“எதற்கு பார்க்கணும்?”

“அதை அவர்கிட்டதான் நான் சொல்ல முடியும்.”

“என்கிட்ட அதை சொல்லக்கூடாதா?”

“ஆமா...”

“என்கிட்ட சொல்லக் கூடாததை அவர் தெரிஞ்சிக்க வேண்டிய அவசியமே இல்ல...”

“அவர் எதைத் தெரிஞ்சிக்கணும், எதைத் தெரிஞ்சுக்கக் கூடாதுன்றதை அவர்தானே தீர்மானிக்கணும்?”

நான் சொன்னதைக் கேட்டு அவளின் புருவங்கள் நெளிந்தன. அவளின் விழிகளில் பாம்பு படம் விரித்து ஆடுவதைப் போல் நான் உணர்ந்தேன்.

“அப்படி இல்ல. அவர் எதைத் தெரிஞ்சுக்கணும், எதைத் தெரிஞ்சிக்கக்கூடாதுன்றதை தீர்மானிக்க வேண்டியது நான்தான். நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?”

“தெரியும். அழகான ஒரு பாம்பு.”

“ப்யூன்... இவளை வெளியே அனுப்பு”- கம்பீரமான ஒரு கட்டளை!

வேலைக்காரன் என்னிடம் என்னவோ சொல்ல முயன்றான்.

“ப்யூன் அனுப்பினா, வெளியே போகக்கூடிய ஆள் நான் இல்ல...” என் குரல் மேலும் உயர்ந்தது.

“இவனக் கழுத்தப் பிடிச்சு வெளியே தள்ளுடா...”

கல்லையே பிளக்கிற அளவிற்கு பயங்கரமான அவள் குரல்!

“அவர் நல்ல உடல் நலத்தோட இருக்கணும்ன்றது எனக்கு முக்கியம்.”

“ச்சீ.. வெளியே போடா” - அந்தப் பாம்பு சீறியது.

“அடச்சீ... தள்ளி நில்லுடி” - நான் உள்ளே செல்ல முயன்றேன்.

“வேண்டாம்... வேண்டாம்... நீங்க என்னைப் பார்க்க வரவேண்டாம். என்கிட்ட எதுவும் சொல்லவும் வேண்டாம்.” - அவன் என்னை வெளியே பிடித்துத் தள்ளினான்.

“நீங்க இந்த இடத்தை விட்டு புறப்படுங்க. நான் கவிஞனாக வேண்டாம். நான் சுதந்திரமான மனிதனாக இருக்க வேண்டாம். ஆகாயத்தின் எல்லையற்ற உயரத்துல பறந்து நான் பாடித்திரிய வேண்டாம். நான்... நான்... என்னோட அன்பு மனைவியின்...” - அவன் அவளுடைய கை வளையத்திற்குள் தன்னைக் கொண்டு போய் அடக்கிக் கொண்டான்.

கேட்டினருகில் சென்று நான் பின்னால் திரும்பிப் பார்த்தேன். அவளுடைய உதடுகள் அவன் உதடுகளை இறுக முத்தமிட்டுக் கொண்டிருந்தன. அவன் மெதுவான குரலில் சொல்லிக் கொண்டிருந்தான்.

“இது... இது... இதுதான் ஆனந்தம்... உன்னோட அடிமையா இருக்குறது எவ்வளவு பெரிய ஆனந்தம்!”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.