Logo

கவிதை எழுதும் பெண்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6748
kavithai ezhudum pen

'தன்னுடைய வலையில் சிக்கிக் கொண்டிருக்கும் ஒரு எட்டுக்கால் பூச்சியைப் போல...'

அவள் வாசற்படியைத் தாண்டி நடந்து தோட்டத்தை அடைந்தாள். படிகளுக்குக் கீழேயிருந்து ஒரு சிறு தவளை வெளியே வந்து அவளின் கால்களுக்கு நடுவில் ஓடியது.

'அர்த்தமில்லாத அந்த மரணத்தில் அவள் போய் விழுந்தாள்...'

அவள் தன் மனதிற்குள் கவிதை எழுதிக் கொண்டிருந்தாள். நடக்கும்போது, தூங்கும்போது என்று எல்லா நேரங்களிலும் அவள் கவிதை படைத்துக் கொண்டிருந்தாள்.

"ஆனால், அதெல்லாம் பின்னால்தான்!"

பல நாட்கள், அவள் ஒவ்வொரு மாறுபட்ட தெருக்கள் வழியாகவும் நடந்து கொண்டிருந்தாள்...

அர்த்தம் தேடிக்கொண்டு...

தோட்டத்தில் போடப்பட்டிருந்த ஒரு பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவாறு பேப்பர் படித்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் தலையை உயர்த்திப் பார்த்தான்.

"இன்னைக்கு நான் சீக்கிரமே வந்துட்டேன்."

"அப்படியா?"

அவன் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டான். அவள் அவனுக்கு நேர் எதிரில் ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டு அதில் உட்கார்ந்தாள். அவனை முத்தமிட வேண்டுமா என்று அவள் மனதிற்குள் நினைத்தாள். அவனுக்குப் பின்னால் போய் நின்று அவன்மீது தான் கொண்டிருக்கும் காதலை வெளியே தெரியுமாறு காட்டவேண்டுமோ என்று அவள் நினைத்தாள். அவனுக்கு இப்போது தேவை என்ன? தன்னிடமிருந்து விலகி விலகி அவன் மிகவும் தூரத்தில் தற்போது இருக்கிறான் என்பதை மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒருவேளை அது தவறாகக்கூட இருக்கலாம் என்று அவள் நினைத்தாள். விலகி விலகிப் போய்க்கொண்டிருக்கும் இரண்டு கிரகங்களையும் நெருக்கமாகக் கொண்டுவர தான் முயற்சித்திருக்க வேண்டும். அவன் அலுவலகத்தில் நடைபெற்ற விஷயங்களைப் பற்றி அவனிடம் தான் விசாரித்திருக்க வேண்டும். நடக்கச்சென்றபோது வழியில் கண்ட காட்சிகளைப் பற்றி அவனிடம் ஒன்றுவிடாமல் சொல்லியிருக்க வேண்டும். அதுதானே தாம்பத்யம் என்பது? சந்தோஷத்திலும் கவலையிலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு எடுக்கிறோமோ அவ்வளவு நாம் கொடுக்கவும் வேண்டும்- இப்படி பல விஷயங்களையும் அவள் மனதில் அசைபோட்டுக் கொண்டிருந்தாள். இந்த விஷயங்களெல்லாம் தெரியாமலொன்றும் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர்களைப் பார்த்து எல்லோரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்: "பொருத்தமான ஜோடி..."

உயரம், நிறம்- இரண்டிலும் அவர்கள் சரியான ஒற்றுமையைக் கொண்டிருந்தார்கள். ஆனால், அப்போது அவள் காதல், அன்பு போன்ற விஷயங்களை முழுமையாக நம்பினாள். அவனுக்காகத் தூக்கமில்லாமல் இருக்கவோ, சாப்பாட்டை விட்டுத்தரவோ கூட அவள் தயாராகவே இருந்தாள்.

"நீ ஒரு நல்ல பெண்."- அவன் சொன்னான். அவன் தன்னுடைய நண்பனின் மனைவியுடன் தன்னை மறந்து பேசியவாறு அதே அறையில் உட்கார்ந்திருந்தபோது கூட அவள் தன் கண்களை உயர்த்தவேயில்லை. அவள் கைகளில் இருந்த நடுக்கத்தையும் அந்தக் கண்களில் இருந்த ஈரத்தையும் அவன் பார்க்கவில்லை. காரணம்- சிறு வயதிலிருந்தே அவள் மிகச்சிறந்த ஒரு நடிகையாகவும் இருந்தாள். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு இளம் பெண்ணின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துக்கொண்டு அவள் எல்லோரையும் கவர்ந்து கொண்டிருந்தாள்.

"இவளுக்கு எப்பவும் சிரிப்புத்தான்..."

அவளைப் பார்த்து எல்லோரும் சொன்னார்கள். அழுகை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை அவள் எப்போதோ புரிந்து கொண்டிருந்தாள். அவள் தந்தையும் தாயும் எந்த நேரம் பார்த்தாலும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். சண்டையின் முடிவில் தன்னுடைய தாய் அழுவதைப் பார்த்து என்னவோ போலாகிவிடுவார் அவள் தந்தை.

மூக்கு சிவந்து துடித்துக் கொண்டிருக்கும் உதடுகளுடன் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் தன்னுடைய தாயைப் பார்த்தவாறு அவள் தன் மனதிற்குள் நினைத்தாள்- இனி எந்தக் காலத்திலும் அழக்கூடாது என்று. அழுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதே உண்மை.

வீட்டிலிருந்த சூழ்நிலைகளும் வாழ்க்கையில் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டிருந்த தோல்விகளும் அவளைப் பாடாய்ப்படுத்தின. ஆனால், மற்ற மனிதர்களின் முன்னால் அவள் பிரகாசிக்கும் கண்களுடன் நின்று கொண்டு புன்னகை செய்வாள்.

திருமணம் முடித்து வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது, அவள் சிறிது கூட அழவில்லை. ஆனால், எல்லோரும் சொன்னார்கள்: "அப்பாவையும், அம்மாவையும் விட்டுப் பிரிஞ்சு போறப்போ, மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கும். என்ன இருந்தாலும் அவள் செல்லமா வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணாச்சே!"

அந்த நேரத்தில் சிரித்தால் அந்தச் சூழ்நிலைக்கு நன்றாக இருக்காது என்ற காரணத்திற்காக அவள் அப்போது சிரிக்காமல் இருந்தாள். அவள் தந்தை அவளுடைய கண்களைப் பார்க்காமல் சொன்னார்: "அடிக்கொருதரம் கடிதம் எழுதணும்."

ஒருமுறை கூட அந்த வீட்டில்தான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்ற உண்மை அவள் சொல்லாமலே அவளுடைய தந்தைக்கு நன்றாகவே தெரியும். அந்த வீட்டில் அன்பு என்ற ஒன்று இருந்ததா என்ன? எப்போது பார்த்தாலும் கோபமே வடிவாக இருக்கும் தந்தை, அழுது கொண்டேயிருக்கும் தாய், எந்தவொரு காரணமும் இல்லாமலே சதா நேரமும் சிரித்துக் கொண்டிருக்கும் மகள். அவர்களுக்கு மத்தியில் அன்பைவிட பலமாக மற்றொன்றிருந்தது. அது அவர்களின் சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளும் அறிவு. அங்கு கவலை என்ற ஒன்றைத் தவிர, மாறுபட்ட ஒரு சூழ்நிலை இருந்ததே இல்லையெனினும், மற்ற மனிதர்களுக்கு முன்னால் அவர்கள் மூன்று பேரும் ஒருவரோடொருவர் மிகவும் பாசத்துடன் இருப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.

"மகளைப் பார்க்காம ஒரு நிமிடம் கூட இருக்கக்கூடாது."

ஆட்கள் கூறுவார்கள். ஆட்கள் நிறைய கூடும் விருந்துகளிலும், ஏதாவது திருவிழாக்களிலும் அவள் தந்தை அடிக்கொருதரம் அவளை அழைத்துக்கொண்டே இருப்பார். அவள் தாய் அவளை விட்டு சற்று கூட விலகிச் செல்ல மாட்டாள். அவளுக்கு அருகிலேயே எப்போதும் தான் இருப்பது மாதிரி அவள் பார்த்துக்கொள்வாள். அவள் அவர்கள் இரண்டு பேரையும் விட்டு தனியே போய்விட்டால், எங்கே அங்கிருக்கும் மற்றவரிடம் அந்த வீட்டில் நடக்கும் ரகசியங்களைப் பற்றி அவள் சொல்லிவிடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு. அப்படி அவள் ஏதேனும் சொல்லிவிட்டால் அதற்குப்பிறகு மற்றவர்களின் முன்னால் அவர்கள் இரண்டுபேரும் தலையை உயர்த்திக்கொண்டு நடக்கமுடியாத சூழ்நிலை உண்டாகிவிடுமே! அதை நன்கு புரிந்து கொண்டதால்தான் கூடுமானவரை அவர்கள் அவளை வெளியே விடாமலே வளர்த்தார்கள்.

திருமணம் என்ற ஒன்றின் மீது நம்பிக்கை இருந்த காரணத்துக்காக அவள் திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்படியாவது அந்த வீட்டை விட்டும், அந்த வீட்டில் யாருக்குமே தெரியாமல் மறைந்திருக்கும் மகிழ்ச்சியறற சூழ்நிலையிலிருந்தும் தான் தப்பிக்க வேண்டும் என்ற ஒரே ஆசைதான் அவள் மனதில் அப்போது இருந்தது. அன்பு என்ற ஒன்றை வாழக்கையில் இதுவரை அனுபவித்திராத அவள் அதை எதிர்பார்த்து, திருமண வலைக்குள் போய் விழுந்தாள்.


தன் கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

"என்ன... என்னையே வச்ச கண் எடுக்காம நீ பார்த்துட்டு இருக்கே?"- அவன் கேட்டான்.

"நான் உங்களைக் காதலிக்கிறேன்."

"அப்படியா? அது தேவைதான்."

அவனிடம் அவள் எதிர்பார்த்த பதில் அதுவல்ல. அவள் முதல் காதலே அதுதான். தொட்டுப்பார்த்து ஆச்சரியப்படவும், கொஞ்சிக் கொண்டிருக்கவும் கிடைத்த பொருள். அதனால் அவள் அடிக்கடி அவனிடம் சொல்லுவாள்: "நான் எல்லா நேரமும் உங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கேன். நான் எந்த அளவுக்கு உங்களை விரும்புறேன் தெரியுமா?"

"அப்படியா? அப்படி இருக்குறது நல்லதுதான்."

அவனுக்கு இது முதல் காதல் அல்ல. அவள் அவனுடைய முதல் காதலியும் அல்ல. பொழுது போகாமலிருந்த பல விடுமுறை நாட்களில் அவன் பல பெண்களுடன் நெருக்கமாய்ப் பழகியிருக்கிறான். காதலைப்பற்றி பேசவோ, அவனைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர்கள் யாருமில்லை. அவர்கள் நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்கள் அல்ல. பெரிய கை விரல்களையும் விரிந்த கால் விரல்களையும் கொண்ட பெண்கள் அவர்கள். அவர்கள் எப்போதும் பணத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுடன் மட்டுமே அவர்கள் உறவு வைத்திருப்பார்கள்.

அவனுக்கு குடும்பத்தனமான தன்னுடைய மனைவியுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை. அவள் எப்போதும் அவனுக்குச் சொந்தமானவளாகவே இருந்தாள். அவள் அவ்வப்போது அவனிடம் கூறுவாள்: "நான் உங்களுக்குச் சொந்மானவள்..."

அவளின் அந்த வார்த்தைகளில் எந்த உணர்வையும் காண முடியவில்லை. அவள் காதலை, அன்பை படுக்கையறைக்குள் ஒரு நறுமணத்தைப் போல் கொண்டு வந்தபோது, அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தனக்குச் சொல்லப்போனால் தேவையானது என்ன என்பதைக்கூட அவன் மறந்துவிட்டான்.

"எப்படி அன்பை வெளிப்படுத்தி நடக்குறதுன்ற விஷயம் எனக்குத் தெரியல..."

அவன் சொல்லியதை அவள் முழுமையாக நம்பினாள். வெளியே தெரியாத எந்த உண்மையும் உண்மையாக இருக்க முடியாது என்று அவள் முதலில் நினைக்கவில்லை. உள்ளே அன்பு என்ற ஒன்று இருக்கும்பட்சம், அதன் அறிகுறி கொஞ்சமாவது வெளியே தெரிய வேண்டுமா? அந்தக் கண்களிலோ, அந்தப் புன்சிரிப்பிலோ- எதிலாவது தெரியவேண்டுமா? அவன் தன்னுடைய வழியில் அவள் மீது அன்பு வைத்திருக்கவே செய்தான். ஒருவன் தேநீர் அருந்த விரும்புகிறான். அவன் தான் தேநீரை விரும்புவதாக ஒருவேளை கூறினாலும் கூறலாம்.

"இன்னைக்கி எங்கே போயிருந்தே?" அவன் கேட்டான். அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் பேப்பரைப் புல் மேல் வைத்துவிட்டு, அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

"சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வந்தேன்!"

"தனியாவா?"

அவன் கேட்ட அந்தக் கேள்வி தன் காதிலேயே விழவில்லை என்பது மாதிரி காட்டிக்கொண்ட அவள் எழுந்து தன்னுடைய புடவையில் இருந்த சுருக்கங்களைச் சரி பண்ணியவாறு, "நான் போயி குளிச்சிட்டு வர்றேன். நேரம் இப்பவே ஒரு மணி ஆயிடுச்சு" என்றாள்.

அவள் உள்ளே நடந்தாள். அவன் புல் மேல் பறக்க முயற்சித்துக் கொண்டிருந்த பேப்பரைப் பார்த்தவாறு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.

அன்று இரவு அவர்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தார்கள். புல்வெளியில் உணவுப்பொருட்கள் இருந்த மேஜையைச் சுற்றி நடந்து கொண்டே அவர்கள் தாழ்ந்த குரலில் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் அவர்கள் இருந்தார்கள். எந்தவொரு விஷயத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை கிடையாது என்று கூறி வாழ்க்கையில் இங்குமங்குமாய் அலைந்து திரிந்தார்கள். கோவில்களுக்கு கேமராக்களை எடுத்துக்கொண்டு போய் கடவுள்களின் நிர்வாண உருவங்களைப் புகைப்படங்கள் எடுத்து, கர்ம யோகிகளின் சிந்தனை தங்களை முற்றிலும் ஆக்கிரமித்திருக்க, திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு நாளையும் அவர்கள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஓவியர்களாக இருந்தார்கள். சிலர் கதை எழுதுபவர்களாக இருந்தார்கள். சிலர் அரசாங்க அதிகாரிகளாக இருந்தார்கள். இப்படிப் பல்வேறு வகைப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் நிறைய பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். மிகவும் குறைவாகப் பேசிய ஒரு தலைமுறையினரின் மக்கள் அவர்கள். அவர்கள் காதலைப் பற்றியும் அன்பைப் பற்றியும் பேசும்போது உதடுகளின் ஒரு ஓரத்தை வெறுப்பு மேலோங்கப் பிதுக்கினார்கள். பணத்தைப்பற்றி பேசும்போது உதடுகளின் இரண்டு ஓரங்களையும் கீழ்நோக்கி வளைத்தார்கள். தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டு கழுத்தின் பின்பகுதியை அழுக்காக வைத்துக்கொண்டு நடக்க அவர்கள் தயாராக இல்லை. ஆரோக்கியமான ஒரு வெறுப்புடன் உலகத்தைப் பார்த்தவாறு வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் அவள். காரணம்- எந்த விருந்தாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அவள் ஒரு குறிப்பிடத்தக்க நபராக இருந்தாள். அவள் ஒரு கவிதை எழுதும் பெண்ணாயிற்றே! தேவைக்கதிகமான பணமும் பதவியும் தன்னிடம் கொண்டிருக்கும் கவிதை எழுதும் பெண் அவள்! அவள் எழுதிய கவிதைகள் மக்களால் படிக்கப்படாமல் இருக்கலாம். அவை எப்போதாவது ஒரு முறை மட்டுமே அச்சில் வரக்கூடியதாக இருக்கலாம். இருப்பினும், அவர்கள் எல்லோரும் அவள் மீது மதிப்பு கொண்டிருந்தார்கள். காரணம், என்றாவது ஒருநாள் அவளுடைய மரணத்திற்குப் பிறகு அவளுக்குப் புகழ் கிடைப்பதாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அவளைப் பற்றி நிச்சயம் ஏதாவது பேசுவார்கள். அவளின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லையென்றும், அவளுக்கு நீல நிறத்தில் ஆடை அணிவதுதான் எப்போதும் பிடிக்குமென்றும் அவர்கள் அவளைப்பற்றி மற்றவர்களிடம் கூறலாம். அவர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அவசியமில்லை. ஆனால், ஏற்கனவே அவளுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்ற சுதந்திரத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லலாம்.

"எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. ஒருமுறை..." இப்படி அவர்கள் சொன்ன ஏதாவது சில வார்த்தைகள் எப்போதும் எங்காவது தங்கி இருக்கும். குண்டுகள் போடப்பட்டு உலகம் அழியாமல் இருக்கும் பட்சம், அவர்களின் சில வார்த்தைகளும் அழியாமல் நிற்கவே செய்யும். அவர்கள் விருப்பப்படுவது கூட அதைத்தானே!

"நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க" - ஒருவன் சொன்னான். "கடலுக்குப் பக்கத்திலேயே வீடு கிடைச்சிருக்கே!"

அவள் தன் கணவன் அருகில் நின்றிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.


ஆகாயத்தின் கீழ்ப்பகுதியில் இருந்த சிவப்பு நிறத்துடன் ஒன்றிரண்டு கறுப்புநிறக் கோடுகளும் இப்போது சேர்ந்திருந்தன. கடலுக்கு மேலே உயரத்தில் சில பருந்துகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

"கடலோட அழகை ரசிக்க முடியாத நிலையில நான் இருக்கேன்."

அப்படிச் சொன்ன பிறகுதான் அவளுக்கே தோன்றியது, தான் அதைச் சொல்லியிருக்க வேண்டியது இல்லை என்று. காரணம்- அவர்கள் பேசுவதைக் கேட்பதற்காக ஒன்றிரண்டு பேர் அருகில் வந்து நின்றார்கள்.

"என்ன காரணம்?"

அப்படிப்பட்ட அழகான எதையாவது பார்க்குறப்போ நம் மனசுல மகிழ்ச்சி உண்டாகுதுன்னா, அதற்கு நாம கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனசோட இருக்கணும். அப்படிப்பட்ட எதையாவது பார்க்குறப்போ, நான் அதைப்பற்றிய பல விஷயங்களையும் மனசுல அலச ஆரம்பிச்சுடுறேன்."

அதைக் கேட்டு அவன் சிரித்தான். அவள் தோள் மீது கையைப் போட்டு அவள் கணவன் சொன்னான்: "நான் கொடுத்து வச்சவன்..."

பொதுவாகவே அவனுக்கு இந்த மாதிரி விருந்துகள் பிடிக்காது. பெண்கள் குறைவாகவே வந்திருந்தார்கள். அப்படி வந்திருந்தவர்களில் எல்லாப் பெண்களும் மிகவும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தார்கள். மின்னாமல் இருப்பது பொன்னல்ல என்று நினைக்கக் கூடிய அவனுக்கு இந்த வகைப்பட்ட பெண்களை அழகிகளாக நினைக்கவும் முடியவில்லை. பளபளவென்று பிரகாசித்துக் கொண்டிருப்பவர்களைத்தான் அவனுக்குப் பிடிக்கும். எப்போதும் கிளிகளைப் போல கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக் கொண்டும் குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டும் ஒய்யாரமாக ஆட்டி ஆட்டி நடந்து கொண்டும் ஆண்களுடன் நெருங்கிப் பழகிக் கொண்டும் இருக்கும் பெண்களைத்தான் அவனுக்குப் பிடிக்கும். ஆனால், அறிவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இந்தவகைக் கூட்டத்தில் அவன் விரும்பக்கூடிய ரகத்தைச் சேர்ந்த பெண்களைப் பார்க்கவே முடியாது. ஒருநாள் ஒரு ஓவியனின் மனைவி அங்கு வந்திருந்தாள். பருந்துக் கூட்டத்திற்கு மத்தியில் பறந்து கொண்டிருக்கும் பட்டாம் பூச்சியைப் போல் அவள் இருந்தாள். அவள் தன்னுடைய உதடுகளில் சிவப்புச்சாயம் பூசியிருந்தாள். அவளின் கைகள் தோளில் தொங்கிக் கொண்டிருந்த தோள் பையை இறுகப் பற்றிக் கொண்டிருந்தன. அவன் அவளருகில் சென்று அமர்ந்தான். சிறிது நேரத்தில் அவள் சிரிக்கத் தொடங்கினாள். காரணம்- அவன் பேசிய மொழி அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அங்கிருந்த மற்றவர்களைப் போல உலகத்தின் முடிவைப் பற்றியும் கட்டுப்பாடு என்ற ஒன்றில்லாத கவிதைகளைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் அவன் பேசவில்லை. அவன் அவளுடைய பிரகாசித்துக் கொண்டிருக்கும் அழகைப் பார்த்து ஆனந்த அனுபவம் அடைந்தான். அவளே வெட்கப்படும்படியான சில நகைச்சுவையான விஷயங்களைச் சொல்லி அவளை அவன் சிரிக்க வைத்தான்.

இரவில் அவனுடைய மனைவி கேட்டாள்: "அந்த சின்னப் பொண்ணை உங்களுக்கு ரொம்பவும் பிடிச்சுப் போச்சுன்னு நினைக்கிறேன். எவ்வளவு நேரமா ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உட்கார்ந்து பேசிக்கிட்டே இருந்தீங்க!"

அதைக் கேட்டு அவனுக்குக் கோபம் வந்தது. "பெண்ணுன்னா பெண்ணைப் போல நடக்கணும். அப்படி இருக்குறதுதான் எனக்குப் பிடிக்கும்..." என்றான் அவன்.

அது அவளை நோக்கி அவன் எறிந்த ஒரு கல் என்றுதான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவள் சிரித்தாள்.

"என்னைப் பார்க்குறப்போ நான் ஒரு பெண் அல்ல அப்படின்ற மாதிரி தெரியுதா என்ன?"

இல்லை. அவள் ஒரு முழுமையான பெண்தான். அவளின் உடல் நல்ல சதைப்பிடிப்புடன் அளவான வளைவுகளுடன் இருந்தது. அவள் நடந்து செல்லும்போது அறையில் அமர்ந்திருக்கும் திருமணமான ஆண்கள் ஒன்று தலையை வேறு பக்கம் திருப்பிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் தலையைக் குனிந்து கொள்வார்கள். திருமணமாகாத இளைஞர்கள் அவளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு அமர்ந்திருப்பார்கள். இருந்தாலும் அவளை ஒரு முழுமையான பெண்ணாக மனதில் நினைத்துப் பார்க்க அவனால் முடியவில்லை. அதற்குக் காரணம் இப்படிப்பட்ட ஒரு பெண்ணை அவன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. சில நேரங்களில் அவளைத் தனக்கு நெருக்கமாகக் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் கூறுவான்: "இங்கே பாரு... நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்னு நினைக்கிறேன்."

"ம்... என்ன? என்று அவள் கேட்டதுதான் தாமதம், அவள் பார்வையின் கூர்மையில் அவன் சுருங்கிப்போய் நின்றிருப்பான். அவள் தன் கண்களில் மை எதுவும் தீட்டவில்லை. தன் தலைமுடியைக் கூட ஒழுங்காக வாரி இருக்கமாட்டாள். இருந்தாலும் அவளைப் பார்க்கும் போது, ஒரு பேரழகைப் பார்க்கிறோம் என்ற உணர்வு அவனிடம் உண்டாகும். அவன் எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருப்பான்.

'அவள் எப்படி இப்படி ஆனாள்?'- அவன் பல நேரங்களில் தன்னிடம் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. காதலைப் பற்றி அவனிடம் பேசிக்கொண்டிருப்பாள். அதை அப்படியே நிறுத்திவிட்டாள். பக்தியுடன் அவனையே அவள் பார்த்துக் கொண்டிருப்பாள். அதுவும் இப்போது முழுவதுமாக நின்று விட்டது. அவன் நகைச்சுவையாக என்ன சொன்னாலும் அவள் விழுந்து விழுந்து சிரிப்பாள். அதுவும் இப்போது நின்று விட்டது. அவளுக்கு என்ன நேர்ந்து விட்டது?

"நீ ஏன் சிரிக்கவே மாட்டேங்குற?"

"ஒண்ணு சேர்ந்து வாழறப்போ, தேவையில்லாத நாடகங்கள் எதற்கு?"

அவர்கள் இரண்டு பேருக்குமிடையே எங்கு தவறு நேர்ந்தது? இரண்டு பேரும் இந்த விஷயத்தைப் பற்றி பல நேரங்களில் தனியே அமர்ந்து சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள். சில நேரங்களில் கட்டிலில் ஒன்றாகப் படுத்திருக்கும்போது அவன் அவளுடைய கைவிரல்களை இறுகப் பிடிப்பான். அப்போது அவன் கூறுவான்:

"என்னால உன்னைப் புரிஞ்சிக்கவே முடியல..."

அவள் தன் கண்களை மூடித் தூங்குவதைப் போல பாசாங்கு செய்வாள். ஆனால், அவள் தன் இதயத்தைக் கடிவாளம் போட்டுக் கட்டிக்கொண்டு, தனக்கு வாழ்க்கையில் நடந்த ஏமாற்றங்களை அப்போது நினைத்துக் கொண்டிருப்பாள். அவன் மற்ற பெண்களுடன் பழகினான். அவளுக்கு முன்னால் பல நேரங்களில் சில பெண்களின் கண்களையே ஒரு காதலனைப்போல உற்றுப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருப்பான். அவர்களின் கைவிரல்களை அப்போது அவன் தொடுவதுகூட உண்டு. காதல் என்பது முட்டாள்தனமானது என்பதை அவளுக்கு அவன் காட்டினான். இப்படி வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு ஏமாற்றமும் அவளை மேலும் மேலும் கடினமானவளாக மாற்றியது. சிறு வயது பெண்ணாக இருந்தபோது, அழகின் மீது நாட்டம் கொண்டாள். காதலுக்கான ஒரு நுழைவாயிலாக அழகைக் கருதினாள். அப்படி அவள் நினைத்ததற்குக் காரணம்- அழகாக இருக்கும் ஒரு இளம்பெண் அவளின் நெருங்கிய தோழியாக இருந்தாள். அவர்கள் இரண்டு பேரும் ஒரு இளைஞனை விரும்பினார்கள். அவளின் தோழிக்கு நல்ல அழகான முகம். இவளோ எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாத நல்ல ஒரு குடும்பப் பின்னணியைக் கொண்டிருந்தாள்.


பணம், அறிவு, பதவி- எல்லாம் இருந்தன. இருப்பினும் காதல் கடிதங்கள் வந்ததென்னவோ அவள் தோழிக்குத் தான். இப்படிச் சின்னச்சின்ன ஏமாற்றங்களை சகித்துக்கொண்டு அன்பு என்றால் என்னவென்று தெரியாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் திருமணம் செய்து கொண்டதே அன்பு என்ற ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். அவளின் தவறுகளையும் குணங்களையும் முழுமையாக விரும்பக்கூடிய ஒரு மனிதனைக் காண அவளுடைய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, அவள் வாழ்க்கையில் அவன் கால் வைத்தான். அவனுக்கு வரதட்சணை தேவைப்பட்டது. அவளும் அதைக் கொடுக்கக்கூடிய நிலையில்தான் இருந்தாள். அவள் தன்னை அந்த அளவிற்கு முழுமனதுடன் காதலித்ததைக் கண்டபோது அவன் ஒருவித பரபரப்பிற்கு ஆளாகிவிட்டான். அதற்குக் காரணம்- அவள் தன்மீது கொண்டிருக்கும் காதலையும் அன்பையும் காண நேரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவனுக்கு தன்னிடம் இருக்கும் குறைபாடுகள் தெரிய வரும். அவளின் உதடுகளை வாழ்க்கையிலேயே முதன்முதலாகத் தொட்ட மனிதன் அவன்தான். அவளின் அந்த பரிசத்தத்தைச் சந்திப்பதற்கு அவனிடம் என்ன இருக்கிறது? வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்தும் ஒரு பெண் அவனுடைய மூத்த மகனைப் பெற்றெடுத்தாள். இதைப்போல எத்தனையோ பெண்கள் அவனுடன் இரவுகளைப் பங்கிட்டிருக்கிறார்கள். அதனால் அவனுக்கு எந்த கெட்ட பெயரும் கிடைக்கவில்லை. காரணம் அவன் எப்போதும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருந்தான். அவள் தன் மீது கொண்டிருந்த காதல் அவனுடைய கடந்த கால பாவச் செயல்களை ஞாபகத்திற்குக் கொண்டு வந்திருக்கலாம். அதற்காகவே அவன் அவளை வெறுத்தான். அவளின் கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனமும் பரிசுத்தமும் அவனை ஒரு விதத்தில் பயமுறுத்தின என்பதே உண்மை.

எல்லாம் படுவேகமாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அவள் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சில கெட்ட காரியங்கள் நடக்கவே செய்தன. கண்களை மூடிக்கொண்டு ஒரு பூனையைப் போல அவள் கனவுகள் கண்டுகொண்டிருந்தாள். மன ஆறுதலுக்காக- சில நாட்கள் மட்டுமே நிலை பெற்று நிற்கக்கூடிய, சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கக்கூடிய, தரம் தாழ்ந்த அன்பு என்பது தெரிந்தும்கூட அதற்காக அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். மரணம் வரை நிலைபெற்று நிற்கக்கூடிய அத்தனை பெரிய அன்பு தனக்கு எந்த இடத்திலும் கிடைக்காது என்று அவள் மனதில் ஆழமாகத் தோன்றியதே அதற்குக் காரணம். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் தேன் குடிப்பதைப் போல எண்ணி ஒவ்வொரு துளியாக அவள் சுவைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் எண்ணுவாள்: 'நான் எதற்காக இப்படியெல்லாம் நடக்கறேன்? இந்த அப்பாவி மனிதனை நான் ஏன் முட்டாளாக்கணும்?' அவனை முட்டாளாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதே நேரத்தில் அவளும் முட்டாளாகிக் கொண்டிருந்தாள் என்பதும் உண்மை. காரணம்- அவளுடைய அந்த காதல் காட்சிகளில் அன்பு என்ற ஒன்று ஒரு நாடகமாகவே அங்கு இருந்தது. 'நான் உங்களைக் காதலிக்கிறேன். நான் உன்னையும்...' என்று சொல்லாமல் ஒருவனின் மடிமீது சென்று விழவோ அவனை முத்தமிடவோ அவளின் குடும்பச் சொத்தான பண்பாடு அவளை அனுமதிக்கவில்லை. மனதில் காதல் இல்லாமல், அன்பில்லாமல் முத்தமிடுபவர்கள் விலைமாதுக்கள்தான் என்று அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். அவளுக்குப் பணம் தேவையில்லை. காதல் இருக்கிறது என்ற ஒரு நாடகம் போதும் அவளுக்கு. அவளின் காதலர்கள் நடிக்கவில்லை. அவர்கள் அவளை வழிபட்டார்கள். அவளின் காதல் சில நிமிடங்களே கிடைக்கக்கூடியது என்றாலும் அது மிகவும் சக்தி படைத்த ஒன்றாக இருந்தது. அவள் அவர்களின் தலைமுடியில் தன் விரல்களால் தடவினாள். ஆகாயம் சிவந்திருக்கும் மாலை நேரங்களில் கடற்கரையில் கறுத்த பாறைகளின் மேல் அமர்ந்துகொண்டு அவள் காதலைப் பற்றி, அன்பைப் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள். கவிதைகள் எழுதினாள். அவர்களின் அழகைப் பற்றி ஒரு பெண் எப்போதும் சொல்லாத விதத்தில் அவள் புகழ்ந்து சொன்னாள். அதைக் கேட்டு அவர்களுக்கே வெட்கம் வந்தது. மனதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.

"உன் முகம் எவ்வளவு அழகா இருக்கு?"- இப்படி என்னென்னவோ அவள் சொன்னாள். அவர்கள் அதையெல்லாம் நினைத்துப்பார்த்ததே இல்லை. காரணம்- அவர்களுக்கே புரியாத சில வார்த்தைகளில்தான் அவள் பெரும்பாலும் அவர்களுடன் பேசினாள். அவர்களை அவள் சில நாட்களுக்கு கடவுளாக ஆக்கினாள். அவர்கள் மீது அவள் கொண்டிருந்த காதல் ஒரு பந்தைப் போல பின்னால் இழுக்கப்பட்டபோது திடீரென்று அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அப்பிராணி மனிதர்களாக மாறினார்கள். என்ன நடந்தது என்பது கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அந்த அளவுக்கு குழப்பமான நிலையில் நின்றிருந்தார்கள். இருந்தாலும் வாழ்க்கையில் சில நாட்களுக்காவது மறக்கமுடியாத அந்த ஆனந்த அனுபவத்தைத் தந்த அவளை அவர்கள் குற்றம் சொல்லவில்லை. அதற்குக் காரணம்- அவர்களுக்கும் அவளுக்குமிடையே இருந்த பெரிய இடைவெளிதான். அவர்களின் பார்வையில் அவள் ஒரு தேவதையாக இருந்தாள்.

"என்ன, எதுவும் பேசாம இருக்கீங்க? இன்னைக்கு அப்படியென்ன ஆழமான யோசனை?"

விருந்தினர்களில் ஒருவன் கேட்டான். அவள் மரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.

"எதற்காகப் பேசணும்? நன்கு அறிமுகமானவர்கள் தங்களுக்கிடையே பேசவேண்டிய தேவையென்ன?"

அவள் அப்படிச் சொன்னதை அவன் மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டான். புதிதாகக் கிடைத்த சுதந்திர எண்ணத்துடன் அவன் பெஞ்சின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவனுடைய கால்களுக்குக் கீழே சேறு அப்பியிருந்ததை அவள் பார்த்தாள். அவன் கைவிரல்கள் நீண்டு மெலிந்து போயும் கன்னங்கள் ஒட்டிப்போயும் இருந்தன. அவள் அக்கறையில்லாத குரலில் கேட்டாள்:

"உங்களை நான் அதிகம் பார்த்தது இல்லை. பாம்பேக்கு இப்போத்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்."

அவள் தன்னுடைய பெயரை மறந்துவிட்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். இருந்தாலும், அதற்காக வருத்தப்படாமல் அவன் சொன்னான்: "என் பேரு ரஸ்ஸா. என்னை ஞாபகத்துல இல்லியா? மூணு வருடத்துக்கு முன்னாடி அந்த ஓவிய சாலையில் நாம் அறிமுகமானோம்..."

"ஓ... ரஸ்ஸா. நல்லா ஞாபகத்துல இருக்கு. பிக்காஸோவைப் பற்றி நாம மூணு மணி நேரமா பேசிக்கொண்டிருந்தோம் இல்லியா?"

"ஆமா..."

"அதற்குப்பிறகு என்ன ஆச்சு மிஸ்டர் ரஸ்ஸா? ஜெயிச்சது நீங்களா, நானா?"

"நீங்கதான்."

"நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ரகசியமா எதைப்பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க?"

அவளுடைய கணவன் அருகில் வந்தான். அவன் கையில் நீல நிறத்தில் கோடு போட்ட ஒரு பீங்கான் தட்டில் சோறு இருந்தது. மசாலாவால் ஆன கூட்டு பக்கத்தில் இருந்தது.


"அப்படி என்ன சுவாரசியமான விஷயம்? நான் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாமா?"

அவளுக்கு தலைவலி வருவதைப் போல இருந்தது. மதிய நேரத்தில் ஓய்வு எடுக்காமல் இருக்கும் நாட்களில் அவளுக்கு இந்த மாதிரி தொந்தரவுகள் வருவதுண்டு. இருந்தாலும் மதிய நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அவளால் பாஸ்கரனைப் பார்க்க முடியாது. மதியம் மூன்று மணி ஆவதற்கு முன்பு அவள் அவனைப் பார்ப்பதற்காகச் செல்வாள். அவர்களின் வயதுக்கேற்றபடி அவர்களின் சந்திப்பு இருக்காது. அவள் தான் ஒரு திருமணமான பெண் என்பதை மறந்து விடுவாள். அவன் தன்னுடைய சூழ்நிலையை மறந்து விடுவான். அவர்கள் இரண்டு பேரும் தங்களை ஏமாற்றிய வாழ்க்கையை பழிக்குப் பழி வாங்குகிற மாதிரி செய்யக்கூடாததையெல்லாம் செய்தார்கள். அவனுடைய கடந்த காலத்திற்கு வறுமையின் சகிக்க முடியாத நாற்றமிருந்தது. அதனால் அவன் அந்த நாட்களை எப்போதும் மறக்கவே முயற்சித்தான்.

"உங்களுடைய சிறுபிள்ளைக் காலத்தைப் பற்றி சொல்லுங்க."

அவள் அவனை வற்புறுத்தினாள். அவன் நாட்கள் ஏடுகளைப் போல திருப்பினான். ஆராய்ந்து பார்த்தான். அதன்மூலம் அழகான ஏதாவதொரு பக்கத்தைக் கண்டுபிடித்து அவளிடம் சொல்லலாமென்று பார்த்தான். ஆனால், அப்படி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய குழந்தைகள் இருந்த வறுமை நிறைந்த ஒரு குடும்பம். கிழிந்து போன பாய்கள்.’ எண்ணெய் கறை படிந்த தலையணைகள், செல்கள்... அழகான விஷயம் ஏதாவது இருக்குமா என்று எவ்வளவு யோசித்தாலும் அவனால் அதைப் பார்க்கவே முடியவில்லை.

அதை மட்டுமே அவன் சொன்னான். அதுவும் ஒரு முழுமையான உண்மை அல்ல. தன் தாய் ஒருமுறை கூட தன்னைத் தூக்கியெடுத்து மடியில் வைத்ததாகவோ ஆசையுடன் கொஞ்சி முத்தமிட்டதாகவோ தனக்கு ஞாபகமில்லை என்றான் அவன். இருந்தாலும், மெலிந்து போன கால்களையும் பெரிய கண்களையும் கொண்டிருந்த ஒரு சிறு குழந்தையாக இருந்தபோது அவன் தன்னுடைய தாயின் அன்பிற்காக ஏங்கினான். தன் தாயின் அருகில் படுத்து தூங்க விரும்பினான். ஆனால், இரவு நேரத்தில் பக்கத்து அறையில் படுத்திருந்த அவனுடைய தாய் அழுது கொண்டிருந்தாள். பணமில்லாத ஒரு மனிதனைத் தன்னுடைய கணவனாகத் தந்த விதியை நினைத்து அதுவும் குறைப்பட்டுக்கொள்ள மட்டுமே அந்தத் தாய்க்கு நேரமிருந்தது.

"என் தாய் ரொம்பவும் அழகா இருப்பாங்க."

அதைச்சொல்லும்போது அவன் கண்கள் நீரால் நிறைந்து விட்டன. தன் தாயைப் பற்றி நினைத்ததால் அல்ல அவனுக்குக் கண்ணீர் வந்தது. தன்னுடைய சிறு வயது காலத்தை நினைத்தே அவன் அழுதான். அன்று அவன் ஆசைப்பட்டது எதுவுமே நடக்கவில்லை. சிறு ரப்பர் பந்து வேண்டும் என்றால் கூட அவனுக்கு அது கிடைக்காது.

"அவனுக்கு ரப்பர் பந்து வேணுமாம்!"- சகோதரிகள் ஆச்சரியம் கலந்த குரலில் கூறுவார்கள். தன் மனதில் இருந்த ஆசையை வெளியே சொன்னது கூட தப்பாகி விட்டதே என்று அந்தச் சிறுவன் அப்போது நினைத்தான்.

அப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இருந்து புறப்பட்டு வந்த அவனும் அவளும் இந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? முதலில் எந்த காரணமும் இல்லை என்பதே உண்மை. அவள் வீட்டிற்கு ஒருமுறை விருந்தினராக வந்தான் அவன். இளமை தாண்டிய வயது, வழுக்கையை நோக்கி போய்க் கொண்டிருந்த நெற்றி, பருமனான உடல், ஈரம் தாங்கிய கண்கள்... அவன் பெண்களைப் பற்றிப் பேசினான். திரைப்படங்களைப் பற்றிப் பேசினான். இந்த மாதிரியான ஆட்களைப் பொதுவாகவே அவளுக்குப் பிடிக்காது. வெறுமனே நடிப்பது என்பதை அவளால் சிறிதுகூட பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்களுக்குள் நன்கு அறிமுகமான பிறகு அவள் சொன்னாள்: "நடிக்குறது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காது."

"ஏன் அப்படிச் சொல்ற?"

அவள் சிரித்தாள்.

அவளுடன் பழக்கமான பிறகு தன்னுடைய நிர்வாண உடம்பை ஒரு கண்ணாடியில் பார்த்ததைப்போல் உணர்ந்தான் அவன். எதையும் மறைத்து வைக்கவேண்டிய அவசியமே இல்லை என்பதை அவன் புரிந்து கொண்டான். அதனால் அவன் சொன்னான்: "நான் ஒரு சாதாரண மனிதன்..."

அவள் மீண்டும் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனை மேலும் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாக்கியது. அப்போது வேறு எதுவும் சொல்லத் தோன்றாததால் அவன் தலையைக் குனிந்து கொண்டு சொன்னான்: "என்னை நீ வெறுத்துட மாட்டியே!"

இப்படித்தான் அவள் அவனை விரும்ப ஆரம்பித்தாள். வருடங்கள் உண்டாக்கிய மாற்றங்கள் மட்டுமல்ல- ஒரு அத்திமரத்தின் இலைகூட அவன் மேல் படாமல் அவள் பார்த்துக் கொண்டாள். அவன் மீண்டும் பெரிய கண்களையும் மெலிந்து போன கால்களையும் கொண்ட சிறு குழந்தையாக மாறினான். ஆனால், தான் தேடிக்கொண்டிருந்த காதலை வாழ்க்கையில் பெற்றாகிவிட்டது என்பதை மட்டும் அவன் புரிந்து கொண்டான்.

"அவளால வர முடியல. குழந்தைக்கு உடம்பு சரியில்ல. காய்ச்சல். எப்போ பார்த்தாலும் அம்மா அம்மான்னு கூப்பிட்டுக்கிட்டு அழுதுகிட்டே இருக்கும்."

ஓவியன் உரத்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தான். அவளின் மனது தன்னுடைய கடந்த காலத்தை நோக்கி, ஒரு இருட்டறையை நோக்கிப் பாய்ந்தோடியது. டாக்டரின் கண் முன்னால் மேஜையின் மேல் சிறிதும் வெட்கமின்றி தான் படுத்துக்கிடந்ததை அவள் இப்போது நினைத்துப் பார்த்தாள்.

"என்ன சிரிக்கிற?"

தன் கணவன் தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறான் என்பதே அப்போதுதான் அவளின் ஞாபகத்தில் வந்தது. அவள் சொன்னாள்: "சும்மா..."

"நான் உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்!"

"ம்..."

அவன் எதையாவது பார்த்திருப்பானோ? அவளுடைய மேஜை டிராயருக்குள் கிடக்கும் கடிதங்கள், புகைப்படங்கள்- இவற்றில் எதையாவது பார்த்திருப்பானோ? அவள் கண்களை மூடியவாறு மரத்தின் மேல் தலையைச் சாய்த்துக் கொண்டாள். தோட்டத்தின் இன்னொரு பக்கத்தில் தூணுள்ள ஒரு சதுர விளக்கிற்குக் கீழே மூன்று நான்கு ஆட்கள் வட்டமாக நின்று கொண்டு தாழ்ந்த குரலில் என்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.சுவரையொட்டியிருந்த செம்பருத்திச் செடிகள் மிகவும் கறுத்துப்போய் காணப்பட்டன. ஆகாயத்தில் இங்குமங்குமாய் சில நட்சத்திரங்கள் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. அவள் அந்த நட்சத்திரங்களுக்கேற்ற வர்ணங்களை யோசித்துக் கொண்டிருந்தாள். ஆனால், களைப்படைந்து போன ஒரு குதிரையைப் போல அவள் மனம் இருந்த இடத்தை விட்டு நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. கறுப்பு, வெள்ளை, கறுப்பு, வெள்ளை...

"நமக்கென்ன ஆச்சு?"- அவளின் கணவன் அவளுக்கு மிகவும் அருகில் அமர்ந்து கொண்டு கேட்டான்.

"ம்...?"

"நம்ம வாழ்க்கை ஒரே குழப்பமா இருக்கு..."

"என் வாழ்க்கையா?"

"இல்ல... நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையும்."


அவள் அதற்கு ஒன்றும் பதில் கூறவில்லை. அவள் மடியில் வாடிப்போன ஒரு இலை வந்து விழுந்தது.

...வாழ்க்கை ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால், தாறுமாறாகக் கிடக்கும் அந்த வாழ்க்கையைச் சீப்பு எடுத்து நான் கட்டுக்களை அவிழ்க்கவோ வாரி முறைப்படுத்தவோ தயாராக இல்லை...

நான் போகும்போது இந்தக் கட்டுகள் எஞ்சி இருக்கும். இந்த மினுமினுப்பில்லாத முடியில் முன்பு எப்போதோ சூடிய முல்லை மலர்கள் காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்...

"ஓ... நீங்க ரெண்டு பேரும் இங்கேதான் இருக்கீங்கள்ல...?

ரஸ்ஸா திரும்பி வந்தான்.

"புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வந்தப்போதான் சீனாக்காரன் தன்னுடைய பொடி டப்பாவைக் கண்டுபிடித்தான். அந்த விஷயம் தெரியும்ல?"

"தெரியாது..."

"சீனாக்காரனோட பொடி டப்பா காணாமல் போய்விட்டது. அவன் உலகம் முழுக்க பயணம் செய்தான். பொடி டப்பாவை எல்லா இடங்களிலும் தேடினான். எங்கேயும் கிடைக்கல. வயசான பிறகு, வீட்டிற்குத்திரும்பி வந்தான். அப்போ தன்னோட படுக்கைக்குக் கீழே பொடி டப்பா கிடக்குறதை அவன் பார்த்தான்..."

ரஸ்ஸா தன் தலையைப் பின்னோக்கி சாய்ந்தவாறு சிரிக்கும்போது, அவனுடைய கழுத்து நரம்புகள் புடைத்து முகம் பயங்கரமாகத் தோற்றம் தந்தது. அப்போதுதான் தன்னைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் கொடூர உருவமே அவனுக்குத் தெரிய வந்தது. உடல்நலம் பாதிக்கப்பட்ட தன்னுடைய குழந்தையையும், மனைவியையும் தன்னுடைய வீட்டில் விட்டுவிட்டு விருந்திற்கு வந்த ஒரு ஓவியன், நட்பு என்றால் என்னவென்று தெரியாத நண்பர்கள், பொய்யான சிரிப்புகள், புதுமையான வெற்று வார்த்தைகள், ஒரு மனிதனும் அவனின் மனைவியும் மனப்பூர்வமாக தகர்க்கப் பார்க்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கை, மேஜைமேல் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர்ந்து கொண்டிருக்கும் உணவுப்பொருட்கள்...

"நான் உள்ளே போறேன். நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்..."

அவள் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கணவன் அருகில் நின்றிருந்த ஆளிடம் சொன்னான்: "என் மனைவியின் குணத்தை இதுவரை என்னால புரிஞ்சிக்கவே முடியல. எட்டு வருடமா நாங்க ஒண்ணா வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்..."

அவளின் உருவம் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்தபோது ரஸ்ஸா தாழ்ந்த குரலில் சொன்னான்: "அவங்க ஒரு கவிதை எழுதும் பெண்."

படுக்கை அறையில் பட்டுத்தலையணையை ஒரு குழந்தையைப் போல கட்டிப்பிடித்துக் கொண்டு குப்புறப்படுத்தவாறு அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

...நான் போகும்போது இந்தக்கட்டுகள் எஞ்சி இருக்கும். இந்த மினுமினுப்பில்லாத முடியில் முன்பு எப்போதோ சூடிய முல்லைமலர்கள் காய்ந்து ஒட்டிக்கொண்டிருக்கும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.