Logo

விராஜ்பேட்டையிலிருந்து வந்த பெண்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6294
veerajpettaiyilrunthu vantha pen

ண்பது வயதான எழுத்தச்சன் மரணத்தை நோக்கிப் படுத்திருந்தபோது ஒரு ஆசை உண்டானது- சதீ நம்பியாரின் கையைச் சற்று பிடிக்க வேண்டும்

யார் அந்த சதீ நம்பியார்?

பி.கெ. நம்பியாரின் மனைவி.

யார் அந்த பி.கெ. நம்பியார்?

எங்களுடைய ஊரிலேயே மிகப்பெரிய பணக்காரரும் "காண்ட்ராக்ட்” தொழில் செய்யக்கூடிய மனிதராகவும் இருப்பவர்.

இந்தக் கதை நடைபெற்ற காலம் சதீ நம்பியாரின் திருமணம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டிருந்த காலம். அவள் மூன்று, ஐந்து வயதுகளைக் கொண்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்தாள்.

எழுத்தச்சனின் வினோதமான ஆசையை அறிந்து உறைந்து போய்விட்டிருந்த- குடிசைக்கு அருகிலும் வெள்ளை நிற கரையான்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருந்த படிகளிலும் நின்று கொண்டிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கிழவன் இறுதி மூச்சை விடுவதை எதிர்பார்த்துக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குள் மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். அவர்கள் அப்படி மெதுவான குரலில் என்ன பேசிக்கொள்கிறார்கள்?

“எல்லா ஆண்களுமே இப்படித்தான். சாவை நெருங்கிக் கொண்டு படுத்திருக்கும்போதுகூட, இன்னொருத்தனின் மனைவி மீது நினைப்பு.”

பக்கத்து வீட்டு நாராயணன் மாஸ்டரின் மனைவி மெதுவான குரலில் முணுமுணுத்தாள்.

“மரணத்தை நோக்கிப் படுத்திருக்கும் மனிதரைப் பற்றி குற்றம் சொல்லக்கூடாது ஸ்ரீதேவியம்மா.” எழுத்தச்சனின் ரசிகனும் அந்த ஊர்க்காரனுமான நான் சொன்னேன்: “எல்லா தவறுகளையும் மறப்பதற்கும் மன்னிப்பதற்குமான நேரமிது. இன்று எழுத்தச்சன்... நாளை நாம்...”

பக்தராகவும் இரக்க குணம் கொண்ட மனிதராகவும் இருந்தார் எழுத்தச்சன். ஒரு காலத்தில் ஊரையே அடக்கி, விலைக்கு வாங்கக் கூடிய அளவிற்கு வசதி படைத்தவராக இருந்தார். எல்லாவற்றையும் கண்ணில் பார்ப்பவர்களுக்கெல்லாம் வாரி வாரிக் கொடுத்தார். தானம் செய்து செய்து இறுதியில் வீட்டில் ஒன்றுமே இல்லை என்ற நிலை உண்டாகி, பிள்ளைகள் நாலா திசைகளையும் நோக்கிக் சென்று விட்டார்கள். இறுதியில் பகல் வேளையில்கூட வெளிச்சம் உள்ளே வராத இருளடைந்த அந்த பழைய வீடும் ஒரு மகளும் மட்டுமே எஞ்சினார்கள். அவளும் ஒருநாள் எழுத்தச்சனை விட்டு, தன்னுடைய விருப்பப்படி போய்விடுவாள். எழுத்தச்சனின் கையில் மீதமிருக்கும் நான்கு காசில்தான் அவளுடைய கண்களே இருக்கின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியும்.

எழுத்தச்சனின் மகளின் பெயர் என்ன?

சுஜாதா சுதர்சனன்.

எழுத்தச்சன் இறந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அவரைப் பார்ப்பதற்கும் அவருக்கு தேவையானதையெல்லாம் செய்து கொடுப்பதற்கும் மிஸ்டர் சுதர்சனன் வந்திருக்கிறாரா?

ஆமாம்... வந்திருக்கிறார்.

வெளிச்சம் குறைவாக இருக்கும் அறையில் போடப்பட்டிருக்கும் மரணப்படுக்கைக்கு அருகில் விலகி நின்று கொண்டு ஊதுபத்தியின் வாசனை கலந்த வெள்ளை நிறப் புகையை சுவாசித்தவாறு நான் எழுத்தச்சனின் முகத்தையே பார்த்தேன். அழுது தளர்ந்த ஒரு குழந்தையைப் போல அவர் அசைவே இல்லாமல் படுத்திருந்தார். எழுத்தச்சன் இறந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததும்,எனக்கு கடுமையான கவலை உண்டானது. ஊரில் உள்ளவர்களுக்கு பணத்தையும் பொருட்களையும் வாரித் தந்த எழுத்தச்சன் எனக்கு எதுவுமே தந்ததில்லை என்பதுதான் உண்மை! இன்னும் சொல்லப்போனால், எதற்காக தரவேண்டும்? தன் சொந்தச் செலவில் எழுத்தச்சன் படிக்க வைத்த சலவைத் தொழிலாளி கண்ணனின் மகன் ஐ.ஏ.எஸ்ஸில் தேர்ச்சியடைந்துவிட்டான். முத்தப்பன்காவில் இருக்கும் சத்திரம் எழுத்தச்சன் கட்டியது. வானம் பிளந்து பருவமழை பொழியும்போது, ஊரிலுள்ள ஏழைகள் தலையைச் சாய்த்துக் கொள்வதற்கு அது ஒரு இடத்தைத் தந்தது.

எல்லாரும் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, எழுத்தச்சன் மெதுவாகக் கண்களைத் திறந்தார். ஆன்மாவின் பலம் தாழ்ந்துபோய், நரை விழுந்திருந்த அந்த கண்களில் மோகத்தின் வெளிச்சம் தெரிந்தது. எழுத்தச்சன் என்னவோ முணுமுணுத்தார்.

“என்ன அப்பா?”

மகள் தன் தந்தைக்கு முன்னால் முகத்தைத் தாழ்த்தினாள்.

“சதி வந்தாச்சா?”

கடலின் பெருமூச்சைப்போல எழுத்தச்சன் கேட்டார்.

அதைக்கேட்டு தன் தந்தையின் முகத்தைப் பார்க்காமலே மகள் தேம்பித் தேம்பி அழுதாள். சுதர்சனின் கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்து கொண்டிருந்தன. தொடர்ந்து அந்த இடம் முழுவதும் அமைதி வந்து ஆக்கிரமித்தது. வெளியே வெயில் வாட்டிக் கொண்டிருந்தது.

“ஏதாவது முடிவு செய்யுங்க.”

நாராயணன் மாஸ்டர் எழுத்தச்சனின் பாதங்களைத் தொட்டுப் பார்த்தார். பனிக்கட்டியைப் போல குளிர்ச்சியாக இருந்தது. சுதர்சனன், மாஸ்டர் கூறியது காதில் விழாததைப்போல நின்றிருந்தார். கோபம்,வெட்கம் காரணமாக அவருடைய இரண்டு காதுகளும் சிவந்துப் போயிருந்தன. இனி எப்படி வெளியில் அவர் நடப்பார்? ஆட்களின் முகத்தைப் பார்ப்பார்? இதைவிட ஒரு நாணம் கெட்ட செயல் வருவதற்கு இருக்கிறதா? தன்னையே யாரோ அவமானப்படுத்தி விட்டதைப்போல அவர் உணர்ந்தார்.

“முடிவு செய்யறதுக்கு எதுவுமே இல்லை!”

எல்லாரின் தலைகளும் என்னை நோக்கித் திரும்பின.

“ஊருக்கும் ஊரிலுள்ள மக்களுக்கும் என்னவெல்லாம் செய்த மனிதர்... எனினும், மரணத்தை நோக்கிக் கிடக்கும்போது ஒரு சிறிய ஆசை தோன்றினால், நாம வெறுமனே இருக்க முடியுமா? நல்ல கதைதான்...”

“நீ சொல்றது சரிதான் ஆனந்தா. ஆனால், நம்பியாரின் மனைவி சம்மதிப்பாங்களா? நம்பியாரிடம் போய் யார் பேசுவது? அதற்கான தைரியம் யாருக்கு இருக்கிறது?”

நாராயணன் மாஸ்டர் ஒவ்வொருவரையும் மாறி மாறிப் பார்த்தார். எல்லாரும் அவருடைய கேள்வியைக் கேட்காதவர்களைப்போல நின்று கொண்டிருந்தார்கள். சிலர் சட்டைக்குள்ளிருந்த தங்களுடைய நெஞ்சைப் பார்த்து ஊதிக் கொண்டார்கள். "ஹா... என்ன ஒரு வெப்பம்!” என்று கூறினார்கள்.

“என்ன... யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறீர்கள்?”

நாராயணன் மாஸ்டர் கேட்டார். யாரும் எதுவும் பேசவில்லை. எல்லாரும் வானத்திலிருந்த கரிய மேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். “மழை வருவதற்கான ஒரு அறிகுறிகூட இல்லையே!” அவர்கள் கூறினார்கள்.

எழுத்தச்சனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த என்னால் அவருடைய சுவாசம் குறைந்து கொண்டு வருவதை உணர முடிந்தது. சில வேளைகளில் கண்மணிகள் மேல்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் என்னுடைய விருப்பக் கடவுளான பறஸ்ஸினிக் கடவு முத்தப்பனை மனதில் நினைத்தேன்.

“நீ எங்கே போகிறாய் ஆனந்தா?”

நாராயணன் மாஸ்டர் திண்ணையில் கழற்றி வைத்திருந்த டயரால் ஆன செருப்பை எடுத்து அணிந்து கொண்டு எனக்குப் பின்னால் வந்தார்.

கான்ட்ராக்ட் எடுக்கக் கூடிய ஆளாக இருந்தாலும், பி.கெ. நம்பியார் பி.ஏ.வில் தேர்ச்சி பெற்றிருந்தார். எங்களுடைய ஊரில் ஆங்கில நாளிதழ் வாங்கக்கூடிய அபூர்வ ஆட்களில் ஒருவராக அவர் இருந்தார். விஷயத்தைக் கூறினால், நம்பியாருக்குப் புரியாமல் இருக்காது.


சொல்லப்போனால்- எழுத்தச்சனின் இறுதி ஆசை எவ்வளவோ சாதாரணமானது! சதீ நம்பியாரின் கையைச் சற்று தொடவேண்டும் என்று மட்டும்தானே அவர் ஆசைப்படுகிறார்? இன்னும் சொல்லப்போனால்- அதைவிட அதிகமாகவே எழுத்தச்சன் வேறு ஏதாவது ஆசைப்பட்டிருக்கலாமே!

நான் தன்னம்பிக்கையுடன் பி.கெ. நம்பியாரின் மாளிகையை நோக்கி நடந்தேன். அப்போது மஞ்சள் வெயில் படிப்படியாக குறையத் தொடங்கியிருந்தது. எப்படி குறையத் தொடங்கியிருந்தது? கொன்றை மலர்கள் வாடுவதைப்போல குறைய ஆரம்பித்திருந்தது.

ஒற்றையடிப் பாதையிலிருந்து தார்போட்ட பாதையில் கால் வைத்தபோது, பின்னால் மூச்சுச் சத்தம் கேட்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தால், மாஸ்டர் என்னுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தார்.

“நீ தனியாகப் போக வேண்டாம், ஆனந்தா. அந்த மனிதர் ஏதாவது  செய்துவிட்டால்...? உனக்கும் ஒரு மனைவியும் மகளும் இருக்கிறார்களே?”

அஸ்ஸநாரின் பெட்டிக் கடைக்கு முன்னால் சென்றபோது, ஒரு பீடியை வாங்கிப் புகைத்தால் என்ன என்று தோன்றியது. ஆனால், எழுத்தச்சனைப் பற்றிய கவலை என்னை அந்த சிந்தனையிலிருந்து விலக்கியது. மூன்றாம் எண் சாராயக் கடைக்கு முன்னால் சென்றபோது, அங்கு நுழைய வேண்டும்போல தோன்றாமலில்லை. அப்போதும் மரணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் எழுத்தச்சனைப் பற்றிய சிந்தனை என்னை அதிலிருந்து பின்னோக்கி இழுத்தது. நான் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வேகமாக நடந்தேன். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றபடி இப்படி வேகமாக நடப்பதற்கான சக்தியை என்னுடைய கால்களுக்கு அளித்ததற்காக நான் முத்தப்பனுக்கு நன்றி கூறினேன்.

அதோ... சற்று தூரத்தில் மரங்களுக்கு மத்தியில் தெரிவது என்ன?

நம்பியாரின் மாளிகை!

அந்த அளவிற்கு மிகப்பெரிய ஒரு மாளிகை எங்களுடைய ஊரில் வேறொன்றுமில்லை. அந்த மாளிகை கட்டப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஊர்க்காரர்கள் பாதையில் வந்து நின்று ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். மாட்டுச் சந்தை இருக்கும் நாட்களில் கிழக்கு திசையிலிருந்து வரும் கிராமத்து மனிதர்கள் மாடுகளையும் கன்றுகளையும் விற்றுவிட்டும் வாங்கிக்கொண்டும் திரும்பி வரும்போது, மாளிகையைப் பார்ப்பதற்காக அங்கு சென்று நின்று கொண்டிருப்பார்கள். அந்த கிராமத்து ஆட்கள் தங்களின் கைகளில் மாடுகளையும் கன்றுகளையும் கட்டும் கயிறுகளுடன் வாயைப்  பிளந்து கொண்டு அந்த இடத்தில் பொழுது சாயும் நேரம் வரை நின்று கொண்டிருப்பார்கள்.

நாராயணன் மாஸ்டர் சற்று தூரத்தில் விலகி நின்று தன் கண்ணாடியைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்தார். அவர் மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார். வியர்வையில் அவர் நனைந்து விட்டிருந்தார்.

“நீ பங்களாவிற்குச் செல். நான் இதோ... இந்த மரத்தடியில் நின்று கொஞ்சம் காற்று வாங்கிக் கொள்கிறேன். ஹா... என்ன வெப்பம்!”

மாஸ்டர் வானத்திலிருந்த மழை மேகங்களைப் பார்க்க ஆரம்பித்தார். எடை குறைந்த சில மேகங்கள் வானத்தில் ஓரத்தில் மெதுவாக பரவிக் கொண்டிருந்தன.

“யார் அது?” காக்கி சட்டையும் ட்ரவுசரும் அணிந்திருந்த ஒரு ஆள் கேட்டிற்கு அருகில் வந்தான். வேலைக்காரனாகவோ தோட்டக்காரனாகவோ இருக்க வேண்டும். அவன் கேட்டான்:

“உனக்கு என்னடா வேணும்?”

“அய்யாவைக் கொஞ்சம் பார்க்கணும்.”

“இப்போ பார்க்க முடியாது...”

என்னுடைய கிழிந்த காலரைக் கொண்ட சட்டையையும் அழுக்கடைந்த வேட்டியையும் பார்த்த காரணத்தால் இப்படி அதிகார தொனியில் பேசினான். எது எப்படி இருந்தாலும், அவனுடன் நகைச்சுவையாக உரையாடிக் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரமில்லை. இரக்க குணம் கொண்ட மனிதரான எழுத்தச்சன் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார். நான் காக்கி ஆடைகள் அணிந்த மனிதனின் சம்மதத்திற்காக காத்துக் கொண்டிருக்காமல் முன்னோக்கி நடந்தேன். அவன் என்னைத் தடுப்பதற்கு முயன்றான். அதற்கான பலனை அவன் அனுபவிக்கவும் செய்தான்.

“திருடன்... அய்யோ... திருடன்...”

தரையிலிருந்து தட்டுத் தடுமாறி வேகமாக எழுந்து அவன் உரத்த குரலில் கத்தினான்.

காலின்மீது காலைப் போட்டு ஆங்கிலப் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டிருந்த நம்பியார் ஆரவாரத்தைக் கேட்டு என்னை நோக்கிப் பார்த்ததும், நான் தலைகுனிந்து வணங்கினேன். திருடர்கள் அப்படியெல்லாம் தலைகுனிந்து வணங்கமாட்டார்கள் என்ற விஷயம், நல்ல படிப்பையும் உலக அனுபவங்களையும் கொண்டிருக்கும் அவருக்கு நன்கு தெரிந்திருக்குமே! அதுதான் காரணமாக இருக்க வேண்டும்- நம்பியாரின் முகத்தில் எந்தவொரு பதைபதைப்பும் தெரியவில்லை.

அகலம் அதிகமான, கருப்பு நிற கரை போடப்பட்டிருந்த வேட்டியையும் ஜிப்பாவையும் நம்பியார் அணிந்திருந்தார். அவருடைய கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்க மாலை சாயங்கால வெயில் பட்டு பிரகாசித்துக் கொண்டிருந்தது.

“நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன வேணும்?”

நம்பியார் நாற்காலியில் சற்று அசைந்து உட்கார்ந்தார். அவர் என்னிடம் வராந்தாவிற்கு வரச் சொல்லவோ அமரச்சொல்லவோ இல்லை. அதைப் பற்றி எனக்கு வருத்தமாகவும் இல்லை. ஆனந்தன் யார்? பி.கெ. நம்பியார் யார்? அவர் எவ்வளவோ பெரிய ஆள். ஆயிரம் ஆனந்தனைவிட அவர் ஒருவருக்கு இருக்கும் மதிப்பு அதிகமாயிற்றே!

எப்படி ஆரம்பிக்க வேண்டும்? எங்கிருந்து தொடங்க வேண்டும்?

நான் தயங்கிக் கொண்டு நின்றிருந்தேன்.

பிறகு மனம் முழுவதும் முத்தப்பனை நினைத்துக் கொண்டே நான் ஒரே மூச்சில் எல்லா விஷயங்களையும் கூறி முடித்து விட்டேன். நம்பியார் முழு விஷயங்களையும் மிகவும் கவனம் செலுத்தி கேட்டார். அவருடைய முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடுகளும் தெரியவில்லை.

“ஸாரி... மிஸ்டர்...” அவர் சொன்னார்: “இந்த அளவிற்கு பெரிய ஆசையை மனதில் வைத்துக் கொண்டிருப்பது ஆபத்தானது என்று எழுத்தச்சனிடம் கூறுங்கள். நீங்கள் போகலாம்.”

நம்பியார் பத்திரிகையை விரித்து வாசிப்பதைத் தொடர்ந்தார்.

“இறப்பதற்கு முன்னால் இந்தச் சிறிய ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லையென்றால், எழுத்தச்சனின் ஆன்மாவிற்கு மோட்சம் கிடைக்காது சார்.”

“ஆன்மா என்ற ஒன்று இல்லவே இல்லை. விஞ்ஞானம் அதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. அதனால் மோட்சம் அது இது என்று பிரச்சினையே இல்லை. நீங்கள் புறப்படுகிறீர்களா? இல்லாவிட்டால் நானே வெளியேற்றிவிட வேண்டுமா?”

“சார்...”

நான் குனிந்து அவருடைய பருமனான, சிவந்த பாதங்களைத் தொட்டு வணங்கினேன்.

“கடவுளை நினைத்து...”

“கடவுளும் இல்லை... விஞ்ஞானம் அதை தெளிவுபடுத்தியிருக்கிறது.”

நம்பியார் உரத்த குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

அவருடைய தங்கத்தால் செய்யப்பட்ட பற்கள் மாலை நேர வெயிலில் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

நம்பியாரின் மனம் மாறும் என்ற நப்பாசையுடன் மேலும் சிறிது நேரம் அங்கேயே நான் நின்றிருந்தேன். அதனால் எந்தவொரு பலனும் உண்டாகவில்லை. அவர் என்னை கவனிக்கக்கூட செய்யாமல், பத்திரிகை வாசிப்பதைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இனிமேலும் அங்கு நின்று கொண்டிருப்பது வீண் என்பதைப் புரிந்து கொண்டதும் நான் அங்கிருந்து நகர்ந்தேன்.


“இனி நாம என்னடா செய்றது?”

மரத்தடியில் காற்று வாங்கிக் கொண்டு நின்றிருந்த நாராயணன் மாஸ்டர் என்னுடன் சேர்ந்து நடந்தார்.

“மாஸ்டர்... நடங்க... எழுத்தச்சனிடம் இறக்க மாட்டீர்கள் என்று கூறுங்கள். ஒரு அரை மணிநேரத்திற்குள் எழுத்தச்சனின் விருப்பத்தை நான் நிறைவேற்றித் தருகிறேன் என்று கூறுங்கள்.”

“ஆனந்தா, நீ எங்கே போகிறாய்?”

“மல்லிகாவைத் தேடி...”

“என்ன?”

அவரிடம் வானமே இடிந்து விழுந்துவிட்டதைப் போன்ற அதிர்ச்சி வெளிப்பட்டது. அவர் அதே இடத்தில் வாயைப் பிளந்து கொண்டு நின்றிருக்க, நான் மல்லிகாவின் வீட்டை நோக்கி நடந்தேன். அவள் யார் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும். தெரியாதவர்கள் யாராவது இருந்தால், மதிப்பிற்குரிய மனிதர்களே... கேட்டுக் கொள்ளுங்கள்- எங்களுடைய ஊரில் மோசமான நடத்தையைக் கொண்ட ஒரு பெண்... அவள்தான் மல்லிகா. அவள் விராஜ்பேட்டையிலிருந்து வந்து எங்களுடைய ஊரில் வசித்துக் கொண்டிருக்கிறாள். அவள் கொங்கிணியையும் தூய தமிழையும் பச்சை மலையாளத்தையும் பேசுவாள். அடர்த்தியான வண்ணங்களைக் கொண்ட புடவைகளை அணிவாள். விலைகுறைவான நறுமணத்தைக் கொண்ட பவுடரைப் பூசுவாள்.

“எழுத்தச்சா...”

நான் கட்டிலில் உட்கார்ந்து அழைத்தேன்.

“எழுத்தச்சா... இதோ... சதி... கண்களைத் திறங்க...”

எழுத்தச்சன் இனிமேல் கண்களைத் திறக்கமாட்டார் என்பதும், அப்படியே திறந்தாலும் எங்களை அடையாளம் தெரிந்து கொள்ள முடியாது என்பதும் எனக்குத் தெரியும்.

நான் எழுத்தச்சனை குலுக்கிக்கொண்டே அழைத்தேன். எழுத்தச்சனின் உடல் பனிக்கட்டியைப் போல மரத்துப் போய்விட்டிருந்தது. எல்லாரும் மூச்சை அடக்கிக் கொண்டு நின்று கொண்டிருக்க, எழுத்தச்சனின் சுருக்கங்கள் விழுந்த, மூடியிருந்த கண்களில் மெல்லிய ஒரு அசைவு உண்டானது.

“எழுத்தச்சா... சதி... சதி வந்திருக்காங்க.”

நான் மல்லிகாவின் கையை எடுத்து எழுத்தச்சனின் காலியான கிளிக்கூண்டைப்போல இருந்த நெஞ்சின்மீது வைத்தேன். கண்கள் திறந்திருக்கவில்லையென்றாலும், எழுத்தச்சனின் வலதுகை சற்று மெதுவாக அசைந்தது. மெலிந்து போயிருந்த கை விரல்கள் நடுங்கின. எழுத்தச்சனின் நடுங்கிக் கொண்டிருந்த வலது கை அவளுடைய கை விரல்களைத் தொட்டது. அப்போது மரணம் நெருங்கிக் கொண்டிருந்த எழுத்தச்சனின் முகத்தில் எங்கோ தூரத்தில் தெரியும் ஒரு சூரிய உதயத்தின் சாயல் வெளிப்பட்டது.

நான் செய்தது சரியானதா? தவறானதா? எவ்வளவோ வருடங்களாக நான் எனக்குள் கேட்டுக் கொள்ளும் ஒரு கேள்வி இது. எழுத்தச்சன் மரணத்தைத் தழுவி இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

காண்ட்ராக்டர் பி.கெ. நம்பியாரின் மூளையில் ரத்தம் உறைந்து போய்விட்டது. புகழ்பெற்ற மருத்துவர்கள் செய்த தீவிர முயற்சிகளின் பலனாக அவருடைய உயிர் பிழைத்துக் கொண்டாலும், அவருடைய இரண்டு கைகளும் நிரந்தரமாக செயல்படாமல் போய்விட்டன. மூளையில் ரத்தம் உறைந்தால் கைகள் செயல்படாமல் போகுமா? மருத்துவம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி எனக்கு சிறிதும் தெரியாது. எனினும், நம்பியாரின் கைகள் செயலற்றுப்போய்விட்டன என்ற விஷயத்தைக் கேட்டவுடன், இன்று... நீண்ட இருபத்தாறு வருடங்களுக்குப் பிறகு எழுத்தச்சனின் இறுதி நாட்களைப் பற்றிய நினைவுகளில் நான் மூழ்கிப் போய்விட்டேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.