Logo

கரடி வேட்டை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6760
karadi vettai

நாங்கள் கரடி வேட்டைக்காகப் போயிருந்தோம்.என் நண்பர் ஒரு கரடியைச் சுட்டார். ஆனால் அவர் சுட்டது கரடியின் உடலில் ஒரு காயத்தை உண்டாக்கியது. அவ்வளவுதான். கரடியின் உடலிலிருந்து சிந்திய இரத்தம் துளித்துளியாக பனியில் தெரிந்தது. காயம்பட்ட கரடி ஓடிப்போய் விட்டது.

காட்டில் நாங்கள் அனைவரும் ஒரே கூட்டமாக நின்றிருந்தோம்.

கரடியைப் பின்பற்றி உடனடியாக நாங்கள் செல்வதா, இல்லாவிட்டால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்துச் செல்வதா என்பதை நாங்கள் தீர்மானித்தாக வேண்டும். நாங்கள் அங்கிருந்த விவசாயிகளிடம் காயத்துடன் போன கரடியை அன்று பிடித்துவிட முடியுமா என்று கேட்டோம்.

“முடியாது... நிச்சயம் முடியாது” - என்றார் ஒரு வயதான விவசாயி. தொடர்ந்து அவர் சொன்னார்: “கரடியை கொஞ்ச நேரம் விட்டுடுங்க. அது சற்று ஓய்வு எடுக்கட்டும். ஐந்து நாட்கள்ல நீங்க அதைச்சுற்றி வளைச்சிட முடியும். இப்போ கரடியைப் பின் தொடர்ந்து போனா, நீங்க அதைத் தேவையில்லாம பயமுறுத்தினது மாதிரி இருக்கும். நிச்சயம் அது சாதாரண நிலைக்கு வராது.”

அப்போது ஒரு இளம் விவசாயி அந்த வயதான மனிதருடன் வாக்குவாதம் செய்தான். இப்போதே பின்பற்றிச் சென்றால் நிச்சயம் அந்தக் கரடியைப் பிடித்துவிடலாம் என்றான் அவன்.

“இந்த மாதிரி பனி இருக்குற நேரத்துல அந்தக் கரடி ரொம்ப தூரம் போக முடியாது. இன்னும் சொல்லப்போனா அந்தக் கரடி ரொம்பவும் தடியா வேற இருக்கு. சாயங்காலத்துக்குள்ள அது ஏதாவதொரு இடத்துல போய் அடங்கிடும். நாம பனிக் காலணிகளைப் போட்டுக்கிட்டு வேகமா போனா நிச்சயம் அந்தக் கரடியைப் பிடிச்சிட முடியும்.”

என்னுடன் இருந்த நண்பர் கரடியைப் பின்பற்றி உடனடியாகச் செல்வது என்ற எண்ணத்திற்கு எதிராக இருந்தார். சற்று தாமதித்து போவதே நல்லது என்ற கருத்தைக் கொண்டிருந்தார் அவர். நான் அவரைப் பார்த்து, “நாம தேவையில்லாம இந்த விஷயத்தைப் பற்றி விவாதம் செய்யவேண்டாம். உங்களுக்கு எப்படிப் பிரியமோ அப்படிச் செய்யிங்க. ஆனா, நான் டெம்யான் கூட சேர்ந்து கரடி போன வழியைப் பின்பற்றிப் போறேன். நாம கரடியைப் பிடிச்சிட்டோம்னா நல்லது தான். அப்படிப் பிடிக்காமப் போனா அதுனால நாம இழக்கப்போறது ஒண்ணுமில்ல. இப்பக்கூட அப்படியொண்ணும் நேரம் அதிகம் ஆகல. இன்னைக்கு நாம செய்யிற அளவுக்கு வேற வேலை எதுவும் நமக்கு இல்லைன்றதையும் நாம நினைச்சுப் பார்க்கணும்” என்றேன்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது.

மற்றவர்கள் சக்கரமில்லாத வண்டிகளில் ஏறி கிராமத்திற்குத் திரும்பினார்கள். டெம்யானும் நானும் கொஞ்சம் ரொட்டியை எடுத்து வைத்துக் கொண்டு காட்டிலேயே இருந்துவிட்டோம்.

அவர்கள் எங்களை விட்டுச் சென்றபிறகு, டெம்யானும் நானும் எங்களின் துப்பாக்கிகளை எடுத்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்தோம். கதகதப்பான மேலங்கியை இடுப்பு வாருக்குள் விட்ட நாங்கள் கரடியின் பாதையை அடியொற்றி நடந்தோம்.

தட்ப வெட்பநிலை மிகவும் நன்றாக இருந்தது. எங்கும் பனி ஆக்கிரமித்திருந்தது. சுற்றிலும் அமைதி நிலவியது. பனிக் காலணிகளை அணிந்து நடப்பது என்பது ஒருவிதத்தில் மிகவும் சிரமமான ஒன்றாகவே இருந்தது. பனி மிகவும் அடர்த்தியாகவும் மென்மையாகவும் இருந்தது. காட்டில் பனிக் கட்டியாக உறைந்திருக்கவில்லை. முந்தைய நாள்தான் அது புதிதாகப் பெய்திருக்கிறது. அதனால் எங்களின் பனிக்காலணிகள் பனிக்குள் ஆறு அங்குல ஆழத்திற்குப் புதைந்தன. சில நேரங்களில் இன்னும் அதிகமாகக் கூட உள்ளே சென்றன.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே கரடி நடந்துசென்ற தடம் மிகவும் தெளிவாகத் தெரிந்தது. அது எப்படியெல்லாம் நடந்து சென்றிருக்கிறது என்பதை அந்தத் தடத்தைக் கொண்டு எங்களால் தெரிந்துகொள்ள முடிந்தது. சில நேரங்களில் தன்னுடைய வயிற்றை வைத்துப் பனியில் உழுதுகொண்டு அது சென்றிருப்பதை எங்களால் அறிந்துகொள்ள முடிந்தது. பெரிய மரங்களுக்குக் கீழே கரடியின் சுவடுகள் நன்கு தெரிந்தன. ஆனால், சிறு செடிகள் அடர்ந்திருக்கும் புதர் பகுதிக்கு வந்தவுடன் டெம்யான் நின்றான்.

“நாம போற பாதையை விட்டு இப்போ விலகணும். அந்தக் கரடி அனேகமா இங்கே பக்கத்துலதான் எங்கேயாவது இருக்கணும். பனியைப் பார்க்கறப்போ உங்களுக்கே நல்லா தெரியும்- கரடி கீழ் நோக்கிப் போயிருக்குன்னு. நாம இந்தப் பாதையைவிட்டு சுற்றிப் பார்ப்போம். ஆனா, ரொம்பவும் அமைதியா நாம போகணும் எந்தவித சத்தம் எழுப்புவதோ, இருமுவதோ கூடாது. இல்லாட்டி நம்மளைப் பார்த்து அது உஷாராயிடும்.”

அதனால் நாங்கள் போய்க்கொண்டிருந்த பாதையை விட்டு, இப்போது இடது பக்கமாகத் திரும்பினோம். ஐந்நூறு கஜதூரம் நடந்திருப்போம். மீண்டும் கரடியின் சுவடுகள் எங்களுக்கு முன்னால் நன்கு தெரிந்தன. நாங்கள் அந்தச் சுவடுகளைப் பின்பற்றி நடந்தோம். அவை எங்களை ஒரு சாலையில் கொண்டுபோய் விட்டன. சாலையை அடைந்ததும் நாங்கள் நின்றோம். சாலையில் கரடி எந்தப் பக்கமாக போயிருக்கிறது என்பதை ஆராய்ந்தோம். இங்குமங்குமாக பனியில் கரடியின் பாதங்களும் நகங்களும் தெரிந்தன. சில இடங்களில் ஒரு விவசாயியின் பட்டையால் ஆன காலணியின் தடங்களும் தெரிந்தன. கரடி நிச்சயமாக கிராமத்தை நோக்கித்தான் சென்றிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

சாலையில் நாங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, டெம்யான் சொன்னான்: “இப்போ இந்த சாலையை நோட்டம் பண்ணி ஒரு பிரயோஜனமும் இல்ல. நாம அந்தக் கரடி எந்தப் பக்கம் போயிருக்குன்னு பார்ப்போம். பனியில இருக்குற தடத்தை வச்சு இடது பக்கம் போயிருக்கா இல்லாட்டி வலது பக்கம் போயிருக்கான்னு பார்க்கணும். அது எங்கேயாவது திரும்பியிருக்கணும். ஏன்னா, கிராமத்துக்குள்ள அது போக முடியாதே!”

கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் நாங்கள் அந்தச் சாலை வழியே நடந்தோம். அப்போது எங்களுக்கு முன்னால் கரடியின் காலடிச் சுவடுகள் சாலையை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்தோம். நாங்கள் அதையே உற்றுநோக்கினோம். எங்களுக்கே வியப்பாக இருந்தது! அது கரடியின் பாதம் பதிந்த தடம்தான். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் அந்தச் சுவடுகள் சாலையைவிட்டு விலகி காட்டுக்குள் போகவில்லை. மாறாக, காட்டைவிட்டு விலகி சாலைக்குள் செல்வது மாதிரி இருந்தன. பாதத்தின் முன்பகுதி சாலையை நோக்கி இருந்தது.

"இது வேற கரடியா இருக்கணும்" என்றேன் நான்.

டெம்யான் அந்தப் பாதச்சுவடையே உற்றுப் பார்த்துவிட்டு என்னவோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டான்.

"இல்ல..."- அவன் சொன்னான்: "அதே கரடியோட பாத அடையாளம்தான் இது. அது தந்திரத்தனமா இப்படியொரு காரியத்தைச் செஞ்சிருக்கு. சாலையைவிட்டு நடக்குறப்போ அது வேணும்னே பின்னோக்கி நடந்திருக்கு."


நாங்கள் அந்தக் கரடியின் பாதச்சுவடுகளைப் பின்பற்றி நடந்தோம். டெம்யான் சொன்னது சரியாகவே இருந்தது. கரடி பத்து எட்டுகள் பின்னோக்கி வைத்திருந்தது. அதற்குப்பிறகு ஒரு அத்தி மரத்திற்குப் பக்கத்தில் திரும்பி அது ஒழுங்காக முன்னோக்கி நடந்திருந்தது. டெம்யான் சிறிது நேரம் அந்த இடத்தில் நின்றுவிட்டுச் சொன்னான்:

“நாம இப்போ நிச்சயம் அந்தக் கரடி இருக்குற இடத்தைக் கண்டுபிடிச்சிட முடியும். நமக்கு முன்னாடி ஒரு சதுப்பு நிலம் இருக்கு. அந்த இடத்துல நாம பதுங்கிக்கணும். இப்போ நாம இந்த இடத்தை ஒரு சுற்று சுற்றி வருவோம்!”

அத்தி மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியை நாங்கள் வலம் வந்தோம். நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். சொல்லப்போனால் இதற்கு மேல் நடப்பதற்கே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் புதர் வழியாக மெதுவாக நகர்ந்தேன். அப்போது என்னுடைய பனிக் காலணிகள் அதற்குள் சரியாக மாட்டிக்கொண்டன. எனக்கு முன்னால் ஒரு சிறு அத்திச்செடி நின்றிருந்தது. எனக்கு நடந்து பழக்கமில்லை யாதலால், என்னுடைய பனிக் காலணிகள் சறுக்கின. அதன் விளைவாக சறுக்கியபடி நான் பனியால் மூடப்பட்ட ஒரு மரத்துண்டிற்கு அருகில் வந்தேன். நான் மிகவும் களைத்துப் போய்விட்டேன். என்னுடைய உடம்பிலிருந்து வியர்வை அருவியென ஒழுகிக் கொண்டிருந்தது. நான் என் உடம்பிலிருந்த உரோம ஆடையை நீக்கினேன். அதே நேரத்தில் டெம்யான் படகில் சவாரி செய்வதைப் போல மெதுவாக நடந்தான். அவனுடைய பனிக்காலணிகள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் இயங்கின. எந்தப் புதரிலும் அவை சிக்கிக் கொள்ளவுமில்லை. சறுக்கிவிடவும் இல்லை. சொல்லப்போனால் என்னுடைய உரோம ஆடையை எடுத்த அவன் தன்னுடைய தோள்மீது அதைப் போட்டுக்கொண்டு என்னை வேகமாக நடக்கும்படி சொன்னான்.

மேலும் இரண்டு மைல்கள் நடந்தோம். சதுப்பு நிலத்தின் மறுபக்கத்தை நாங்கள் அடைந்தோம். நான் மிகவும் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். என்னுடைய பனிக்காலணிகள் கால்களைவிட்டு கழன்றுகொண்டே இருந்தன. என்னுடைய பாதங்கள் நடக்க முடியாமல் தடுமாறின. திடீரென்று எனக்கு முன்னால் நடந்து போய்க்கொண்டிருந்த டெம்யான் நின்று தன்னுடைய கைகளை ஆட்டினான். நான் அவனுக்கு மிகவும் நெருக்கமாக வந்தேன். அவன் இலேசாக குனிந்து தன் கையால் சுட்டிக் காட்டியவாறு மெதுவான குரலில் சொன்னான்:

“புதருக்கு மேலே பறவைகள் சத்தம் போடுறது உங்களுக்குக் கேட்குதா? தூரத்துல இருக்குற கரடியை அந்தப் பறவைகள் பார்த்திருக்கணும். நிச்சயம் அந்தக் கரடி அங்கேதான் இருக்கு...”

நாங்கள் திரும்பி மேலும் அரை மைலுக்கு சற்று அதிகமாக நடந்தோம். மீண்டும் நாங்கள் பழைய பாதைக்கே வந்து சேர்ந்தோம். சுருக்கமாகச் சொல்லப்போனால் நாங்கள் அந்தக் கரடி இருக்கும் இடத்தைச் சுற்றித்தான் இருக்கிறோம். நாங்கள் விட்டுப்போன பாதைக்கு அருகில்தான் அது எங்கோ இருக்கிறது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது. நாங்கள் நின்றோம். நான் என்னுடைய தொப்பியைக் கழற்றிவிட்டு, என் ஆடைகளை தளர்த்தி விட்டேன். நீராவியில் குளித்துவிட்டு வந்த மனிதனைப் போல உஷ்ணத்துடனும் நீரில் மூழ்கிய எலியைப் போல நனைந்துபோயும் நான் இருந்தேன். டெம்யான் கூட மிகவும் வியர்வையில் நனைந்து போயிருந்தான். அவன் தன் சட்டையின் கைப்பகுதியைக் கொண்டு முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

“சரி, சார்... நாம நம்ம வேலையை செய்திருக்கோம். இப்போ நமக்கு ஓய்வு தேவை.”

அந்தி நேரத்துச்சிவப்பு காட்டிலிருந்த மரங்கள் வழியாகத் தெரிந்தது. நாங்கள் எங்களின் பனிக் காலணிகளைக் கழற்றி அவற்றின் மீது உட்கார்ந்தோம். பைகளைத் திறந்து ரொட்டியையும் உப்பையும் வெளியே எடுத்தோம். முதலில் நான் கொஞ்சம் பனியையும் அதற்குப்பிறகு கொஞ்சம் ரொட்டியையும் சாப்பிட்டேன். ரொட்டி மிகவும் ருசியாக இருந்தது. இந்த அளவிற்கு ருசியான ரொட்டியை இதற்கு முன்பு சாப்பிட்டதாக நான் உணரவில்லை. நன்றாக இருட்டும்வரை நாங்கள் அந்த இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுத்தோம். பிறகு நான் டெம்யானிடம் “கிராமம் மிகவும் தூரத்தில் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“ஆமாம்... இங்கிருந்து கிராமம் எட்டு மைல் தூரத்துல இருக்கு. இன்னைக்கு ராத்திரி நாம அங்க போயிருவோம். ஆனா, இப்போ நாம ஓய்வெடுக்கணும். உங்க உரோம மேலாடையைப் போட்டுக்கோங்க சார். ஜலதோஷம் பிடிச்சிக்கப் போவுது” என்றான் அவன்.

டெம்யான் அத்தி மரத்திலிருந்து கிளைகளை ஒடித்து பனிமீது படுக்கை அமைத்தான். நாங்கள் இருவரும் அருகருகில் படுத்தோம். எங்கள் தலைகளை எங்களின் கைகள் மீது வைத்துக்கொண்டோம். நான் எப்படித் தூங்கினேன் என்று தெரியவில்லை. இரண்டு மணி நேரம் கழித்து, ஏதோ ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன்.

நான் எங்கு இருக்கிறேன் என்பதே தெரியாமல் என்னை மறந்து உறங்கியிருக்கிறேன். என்னைச்சுற்றிப் பார்த்தேன். எனக்கே வியப்பாக இருந்தது. நான் ஏதோ ஒரு ஹாலில் இருந்தேன். பிரகாசித்துக் கொண்டிருந்த வெண்மையான தூண்கள் சுற்றிலும் இருந்தன. நான் தலையை உயர்த்தி வெண்மையான பனிப் படலத்தினூடே தெரியும் இருட்டையும் அதற்கு மத்தியில் பளிச்சிடும் வண்ண விளக்குகளையும் பார்த்தேன். கூர்மையாகப் பார்த்த பிறகுதான் நானே சுய உணர்விற்கு வந்தேன். நாங்கள் காட்டில் இருப்பதையே அப்போதுதான் உணர்ந்தேன். ஒரு ஹால், தூண்கள் என்று நான் நினைத்தவை பனி படர்ந்த மரங்கள் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வண்ண விளக்குகள் என்று நான் நினைத்தவை மரக்கிளைகளுக்கு நடுவில் கண்சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்கள் என்பதே அப்போதுதான் உணர்ந்தேன்.

மரக்கிளைகள் பனி விழுந்து மிகவும் கனமாகக் காணப்பட்டன. டெம்யான் பனியால் மூடப்பட்டிருந்தான். என்னுடைய உரோம மேலாடை முழுவதும் பனியாக இருந்தது. அந்தப் பனி முழுவதும் மரங்களிலிருந்து விழுந்தது. நான் டெம்யானை எழுப்பினேன். இருவரும் எங்களின் பனிக்காலணிகளை எடுத்து அணிந்து புறப்பட்டோம். காடு மிகவும் நிசப்தமாக இருந்தது. எந்த ஒரு ஓசையும் எங்கும் கேட்கவில்லை. எங்களின் பனிக்காலணிகள் பஞ்சைப் போன்ற மென்மையான பனியில் படும்போது உண்டான சத்தம் மட்டுமே கேட்டது. அவ்வப்போது பனியில் உராயும் மரங்கள் உண்டாக்கிய சத்தமும் கேட்டது. ஒரே ஒருமுறை மட்டும் ஏதோ ஒரு உயிரினத்தின் ஓசை எங்கள் காதுகளில் விழுந்தது. ஏதோ ஒன்று எங்களுக்கு மிகவும் சமீபத்தில் ஓசை உண்டாக்கியவாறு வேகமாக ஓடியது. அது நிச்சயம் கரடியாகத்தான் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால், ஓசை கிளம்பிவந்த இடத்தைப் போய்ப் பார்த்தால் அங்கு முயல்களின் பாதச் சுவடுகள் தெரிந்தன. அந்த இடத்தில் ஏராளமான ஆஸ்பென் மரங்கள் பட்டை உரிக்கப்பட்டு நின்றிருந்தன. அந்தப் பட்டைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பல முயல்களை நாங்களே பார்த்தோம்.


மீண்டும் சாலைக்கு வந்து நாங்கள் நடையைத் தொடர்ந்தோம். பனிக்காலணிகளை அணிந்துகொண்டுதான். இப்போது நடப்பது சற்று எளிதாகவே இருந்தது. எங்களின் பனிக்காலணிகள் அந்தக் கடுமையான சாலையில் எங்களை இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக இழுத்தன. காலணிகளுக்குக் கீழே பனிக்கட்டிகள் நொறுங்கின. எங்களின் முகங்களில் பனிப்படலம் படர்ந்திருந்தது. மரங்களின் கிளைகள் வழியாக நட்சத்திரங்கள் வேகமாக எங்களைச் சந்திக்கப் பாய்ந்தோடி வருவதைப் போல் இருந்தது. சில நேரங்களில் கண்களைச் சிமிட்டிக் கொண்டு, சில நேரங்களில் மறைந்து கொண்டு என்று அவை இருந்தன. மொத்தத்தில்- முழு ஆகாயமும் உயிரோட்டத்துடன் இருந்ததை எங்களால் உணர முடிந்தது.

என்னுடைய நண்பர் நன்கு உறங்கிக் கொண்டிருந்தார். நான் அவரை எழுப்பி, கரடியைத் தேடி நாங்கள் எப்படியெல்லாம் சுற்றினோம் என்பதை விவரித்தேன். அங்கிருந்த விவசாயியிடம் காலையில் தப்பட்டை அடிக்கும் ஆட்களைத் தயார் பண்ணும்படி சொல்லிவிட்டு, சாப்பிட்டு முடித்து நாங்கள் தூங்க ஆரம்பித்தோம்.

நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். என்னுடைய நண்பர் வந்து எழுப்பியிருக்காவிட்டால், உச்சிப் பொழுதுவரை தூங்கிக் கொண்டே இருந்திருப்பேன். நான் படுக்கையைவிட்டு வேகமாக எழுந்தபோது, என் நண்பர் ஆடைகளை அணிந்து தயாராக இருந்தார். அவர் தன் துப்பாக்கியில் என்னவோ செய்து கொண்டிருந்தார்.

“டெம்யான் எங்கே?” - நான் கேட்டேன்.

“அவன் எப்பவோ காட்டை நோக்கிப் போயிட்டான். நீங்க போன பாதையில போயிட்டுவந்த அவன் இங்கே திரும்பி வந்துட்டான். இப்போ தப்பட்டை அடிக்கிற ஆட்களைப் பார்க்குறதுக்காக போயிருக்கான்.”

நான் குளித்து முடித்து ஆடைகளை அணிந்தேன். என் துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்பினேன். பிறகு சக்கரமில்லாத வண்டியில் ஏறிப் புறப்பட்டோம்.

பனி இன்னும் விழுந்து கொண்டுதானிருந்தது. சுற்றிலும் நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது. சூரியனே கண்ணில் படவில்லை. எங்களுக்கு மேலே பனி அடர்த்தியாகப் படர்ந்திருந்தது. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் பனிக்குவியல்தான்.

சாலையில் இரண்டு மைல்கள் பயணம் செய்த பிறகு நாங்கள் காட்டிற்கு மிகவும் நெருக்கமாக வந்தோம். அந்த இடத்தில் பள்ளத்திலிருந்து புகை மூட்டம் மேல்நோக்கி வந்து கொண்டிருந்தது. சற்று அருகில் சென்றபோது ஆண்கள், பெண்கள் அடங்கிய விவசாயிகள் கூட்டமாக அங்கு இருந்தார்கள். அவர்கள் கையில் குறுந்தடிகள் இருந்தன.

நாங்கள் கீழே இறங்கி அவர்களை நோக்கிச் சென்றோம். அங்கு அமர்ந்திருந்த ஆண்கள் உருளைக்கிழங்குகளை நெருப்பில் சுட்டவாறு அங்கிருந்த பெண்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

டெம்யானும் அங்கு இருந்தான். நாங்கள் அங்கு சென்றவுடன் அங்கிருந்தவர்கள் எழுந்து நின்றார்கள். டெம்யான் முந்தையநாள் நாங்கள் சுற்றிய இடத்தில் கொண்டுபோய் அவர்களை நிறுத்தினான். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் வரிசையில் நடந்தார்கள். ஆண்கள், பெண்கள் என்று அவர்கள் மொத்தத்தில் முப்பது பேர் இருந்தார்கள். பனி மிகவும் கடுமையாக இருந்தது. அவர்களின் இடுப்புப் பகுதிக்கு மேலேதான் எங்களால் பார்க்க முடிந்தது. அவர்கள் காட்டை நோக்கித் திரும்பினார்கள். என்னுடைய நண்பரும் நானும் அவர்களைப் பின்பற்றி நடந்தோம்.

என்னதான் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒரு பாதை இருந்தாலும், நடந்துசெல்வது என்பது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. இன்னொரு வகையில் பார்க்கப்போனால் யாரும் கீழே விழமாட்டார்கள். இரண்டு பனியால் ஆன சுவர்களுக்கு மத்தியில் அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்ததே காரணம்.

இதே முறையில் நாங்கள் கிட்டத்தட்ட அரைமைல் தூரம் நடந்திருப்போம். அப்போது டெம்யான் வேறொரு திசையிலிருந்து எங்களை நோக்கி வேகமாகத் தன்னுடைய பனிக்காலணிகளுடன் ஓடிவந்து, தன்னுடன் வந்து எங்களைச் சேர்ந்துகொள்ளும்படி சொன்னான். நாங்கள் அவனை நோக்கிச் சென்றோம். நாங்கள் எங்கே நிற்க வேண்டுமென்று அவன் சொன்னான். நான் என்னுடைய இடத்தில் நின்றவாறு என்னைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன்.

என்னுடைய இடது பக்கம் அத்தி மரங்கள் இருந்தன. மரக்கிளைகளுக்கு நடுவில் ஒரு அருமையான பாதை தெரிந்தது. கருப்புப் புள்ளியைப் போல மரங்களுக்குப் பின்னால் அந்தப் பாதை தெளிவாக எனக்குத் தெரிந்தது. நான் ஒரு தப்பட்டை அடிக்கும் மனிதனைப் பார்த்தேன். எனக்கு முன்னால் அத்திச் செடிகள் புதரைப் போல வளர்ந்திருந்தன. அவை ஒரு மனிதனின் உயரத்திற்கு இருந்தன. அவற்றின் கிளைகள் வளைந்து கீழ்நோக்கித் தொங்கி பனியைத் தொட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் இடைவெளியில் தான் அந்தப் பாதை தெரிந்தது. பாதை முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்தது. என்னுடைய வலது பக்கம் புதர்கள் காடென வளர்ந்திருந்தன. அந்தப் புதர்களின் முடிவில் இருந்த ஒரு வெற்றிடத்தில் என்னுடைய நண்பரை நிறுத்திக் கொண்டிருந்தான் டெம்யான்.

நான் என்னுடைய இரண்டு துப்பாக்கிகளையும் சோதித்துப் பார்த்து, எங்கு நின்றால் நன்றாக இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். எனக்குப் பின்னால் மூன்று அடிகள் தூரத்தில் ஒரு உயரமான அத்தி மரம் இருந்தது.

‘அந்த இடத்தில் நின்றால்தான் சரியாக இருக்கும்’ -எனக்குள் நான் சொல்லிக்கெண்டேன்: ‘என்னோட இன்னொரு துப்பாக்கியை மரத்து மேல சாய்ச்சு வைக்க சரியா இருக்கும்.’ பிறகு நான் அந்த மரத்தை நோக்கி நடந்தேன். என் முழங்கால்வரை பனி இருந்தது. ஒவ்வொரு அடியையும் பனிக்குள் விட்டுத்தான் எடுக்க வேண்டி இருந்தது. நான் பனியைச் சற்று ஒதுக்கிவிட்டு, ஒரு கஜம் அளவிற்கு நிற்பதற்கேற்றபடி சதுரமாக ஒரு இடத்தை உண்டாக்கினேன். ஒரு துப்பாக்கியை என் கையில் வைத்துக் கொண்டேன். இன்னொரு துப்பாக்கியைச் சுடுவதற்குத் தயார் நிலையில் அதை மரத்தின்மீது சாய்த்து வைத்தேன். பிறகு உறையிலிருந்த கத்தியை எந்த நேரத்திலும் மிகவும் எளிதாக எடுக்கும் வண்ணம் சரி செய்து வைத்தேன்.

நான் இந்த முன்னேற்பாடுகளையெல்லாம் முறைப்படி செய்து முடிக்கவும் காட்டுக்குள்ளிருந்து டெம்யான் கத்தவும் சரியாக இருந்தது.

“கரடி வருது! கரடி வருது!”

டெம்யான் கத்தியவுடன் சுற்றிலும் இருந்த விவசாயிகள் மாறுபட்ட தங்கள் குரலில் பதில் சொன்னார்கள்.

“ஓ! ஓ! ஓ!” -ஆண்கள் கத்தினார்கள்.

“அய்! அய்! அய்!” - பெண்கள் உரத்த குரலில் ஓசை எழுப்பினார்கள்.

கரடி அந்த சுற்றுப் பகுதியில்தான் இருந்திருக்கிறது. டெம்யான் அதை விரட்டியவுடன், சுற்றிலுமிருந்த மக்கள் உரத்த குரலில் கத்தினார்கள். என்னுடைய நண்பரும் நானும் மட்டும்தான் அமைதியாக எந்தவித அசைவுமில்லாமல் நின்றிருந்தோம். கரடி எங்கள் பக்கம் வரட்டுமே என்பதற்காக நாங்கள் காத்திருந்தோம். நான் மிகவும் கவனமாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபொழுது என்னுடைய இதயம் படுவேகமாக அடித்துக் கொண்டது. நான் மெதுவாக நடுங்கியபடி துப்பாக்கியை இறுகப் பிடித்துக் கொண்டேன்.


‘இப்போ...’ - நான் மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்: ‘அந்தக் கரடி வரப்போகுது. நான் குறிவச்சு சுடப்போறேன். கரடி அப்படியே கீழே விழப் போகுது...’

அடுத்த நிமிடம் எனது இடப்பக்கம் சிறிது தூரத்தில் பனியில் ஏதோவொன்று விழுவது என் காதுகளில் கேட்டது. நான் உயர்ந்து நிற்கும் அத்தி மரங்களுக்கிடையே பார்த்தேன். ஐம்பது அடி தூரத்தில் கருப்பாக, பெரிதாக என்னவோ தெரிந்தது. நான் குறி வைத்து காத்திருந்தவாறு மனதிற்குள் நினைத்தேன்.

“கரடி பக்கத்துல வராமலா இருக்கும்?’

நான் காத்திருக்க, கரடி தன் காதுகளை அசைத்துக்கொண்டே திரும்பி பின்னால் நடந்தது. இங்கிருந்து பார்க்கும்பொழுது அதன் பக்கவாட்டு தோற்றம் முழுமையாக நன்கு எனக்குத் தெரிந்தது. உண்மையாகவே அது சற்று பருமன்தான். ஆர்வம் அதிகம் உண்டாக, நான் துப்பாக்கியை வெடிக்கச் செய்தேன். என் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட குண்டு ஒரு மரத்தின்மீது போய் பட்டது. புகைக்கு நடுவில் அந்தக் கரடி பின்னால் திரும்பி மரங்களுக்கு மத்தியில் மறைவதை நான் பார்த்தேன்.

'சரி...'- நான் நினைத்தேன்: 'எனக்கான வாய்ப்பு போயிடுச்சு. இனிமேல் என் பக்கம் அது வராது. ஒண்ணு என் நண்பர் அதைச் சுடணும். இல்லாட்டி வரிசையா நிக்கிற தப்பட்டை அடிக்கும் ஆட்களுக்கு அவர் அந்த வாய்ப்பை விட்டுத் தரணும். எது எப்படியோ இன்னொரு முறை எனக்கு அந்த வாய்ப்பு வராது.'

எனினும் நான் மீண்டும் துப்பாக்கிக்குள் குண்டுகளை நிறைத்து வைத்துக் கொண்டு உற்றுப் பார்த்தவாறு நின்றிருந்தேன். விவசாயிகள் சுற்றிலுமிருந்து உரத்த குரலில் கத்தினார்கள். வலது பக்கம் என் நண்பர் நின்றிருந்த இடத்திற்கு மிகவும் அருகில் ஒரு பெண் உரத்த குரலில் கத்தியது என் காதுகளில் விழுந்தது.

"கரடி இங்கே இருக்கு! இங்கே இருக்கு! இங்கே வாங்க. இங்கே வாங்க. ஓ! ஓ!அய்! அய்!"

நிச்சயம் அவள் கரடியைப் பார்த்திருக்க வேண்டும். நான் கரடி இந்தப் பக்கம் வருகிறதா என்று பார்ப்பதை நிறுத்திவிட்டு, வலது பக்கமிருந்த என் நண்பரைப் பார்த்தேன்.  அதே நேரத்தில் காலில் பனிக் காலணிகள் இல்லாமல் கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு என் நண்பர் இருக்கும் இடத்தை நோக்கி பாதையில் வேமாக ஓடிக் கொண்டிருந்தான் டெம்யான். அவன் என் நண்பருக்குப் பின்னால் மறைந்து கொண்டு கையிலிருந்த குச்சியால் எதையோ சுட்டிக் காட்டினான். அடுத்த நிமிடம் என் நண்பர் தன்னுடைய துப்பாக்கியை உயர்த்தி டெம்யான் காட்டிய திசையில் விசையை அழுத்தினார்.

'கடைசியில'- நான் எனக்குள் சொன்னேன். 'அவர் அந்தக் கரடியைக் கொன்னுட்டாரு...'

ஆனால், என் நண்பர் கரடியை நோக்கி ஓடவில்லை. ஒன்று அவர் அந்தக் கரடியைத் தவறவிட்டிருக்க வேண்டும்; இல்லாவிட்டால் குண்டு சரியாக பாயாமல் இருந்திருக்கவேண்டும்.

'அந்தக் கரடி ஓடியிருக்கும்'-நான்த நினைத்தேன்: 'அது திரும்பவும் ஓடியிருக்கும். ஆனா, நிச்சயம் இன்னொரு முறை என்கிட்ட வராது- ஆனா, இது என்ன?’

ஏதோவொன்று வேகமாக புயலைப்போல என்னை நோக்கி வந்தது. எனக்கு  மிகவும் அருகில் பனி பறப்பதைப் போல் நான் உணர்ந்தேன். நான் எனக்கு முன்னால் உற்றுப் பார்த்தேன். அந்தக் கரடி எனக்கு வலது பக்கத்தில் என் நண்பருக்குப் பின்னால் புதர்கள் வழியாகப் பாதையில் வேகமாக ஒருவகை பயத்துடன் ஓடி வந்து கொண்டிருந்தது. நான் இருக்கும் இடத்திலிருந்து ஆறு அடி தூரத்தில் இருக்கும் அது. அந்தக் கரடியை என்னால் முழுமையாகப் பார்க்க முடிந்தது. அதன் கறுப்பு நிற மார்பு,பெரிய தலை, அதிலிருக்கும் சிவப்புப் புள்ளி- எல்லாமே எனக்கு நன்கு தெரிந்தன. அது என்னை நோக்கி வேகமாக வந்தது. வரும் வழியில் பனியை நாலா பக்கங்களிலும் சிதறடித்தவாறு வந்தது. அதன் கண்களைப் பார்த்தபோது அது என்னைப் பார்க்க வில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பயத்தால் உண்டான பதற்றத்தில் கண்ணை மூடிக்கொண்டு வேகமாக பாதை வழியே வந்த கரடி நேராக நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு முன்னால் நின்றிருந்த மரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியை உயர்த்தி சுட்டேன். அது எனக்கு மிகவும் அருகில் இருந்தது. துப்பாக்கி குறி தவறிவிட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். என் குண்டு அந்தக் கரடியைத் தாண்டி சென்று விட்டது. சொல்லப்போனால் நான் சுட்ட சத்தத்தையே அது கேட்க வில்லை போலிருக்கிறது, அதனால் அது மேலும் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நான் என் துப்பாக்கியைச் சற்று இறக்கி மீண்டும் சுட்டேன். இப்போது குண்டு கரடியின் தலையைத் தொட்டுச் சென்றது. நான் கரடியைச் சுட்டுவிட்டேன். ஆனால், அது இறக்கவில்லை.

அது தன் தலையை உயர்த்தி, காதுகளை பின்னோக்கி மடக்கிக் கொண்டு பற்களைக் காட்டியவாறு என்னை நோக்கி வந்தது.

நான் என் இன்னொரு துப்பாக்கியை எடுத்தேன். நான் அதைத் தொட்டதுதான் தாமதம், கரடி என் மீது வேகமாகப் பாய்ந்து என்னை பனி மீது தள்ளிவிட்டு என்னைத் தாண்டி ஓடியது.

'நல்லவேளை... நான் பிழைத்தேன்'-எனக்குள் நான் நினைத்தேன்.

நான் இருந்த இடத்தைவிட்டு எழ முயற்சித்தேன். ஆனால், ஏதோவொன்று என்னை அழுத்தி எழவிடாமல் செய்தது. என்னைத் தாண்டி வேகமாகப் போன கரடி மீண்டும் திரும்பிவந்து என்மீது விழுந்து தன்னுடைய முழு உடம்பாலும் என்னை அழுத்தியது. ஏதோ கனமான ஒன்று என்னைப் போட்டு அழுத்துவதாகவும், ஏதோ வெப்பமான ஒன்று என் முகத்தின்மீது படுவதைப் போலவும் நான் உணர்ந்தேன். என்னுடைய முழு முகத்தையும் தன் வாய்க்குள் கொண்டு போக அது முயல்வதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. என் மூக்கு ஏற்கெனவே அதன் வாய்க்குள் இருந்தது. கரடியின் வாயின் உஷ்ணத்தை நான் முழுமையாக உணர்ந்தேன். கரடியின் இரத்த வாடை 'குப்'பென்று என்மீது அடித்தது. அது என் தோள்களைக் கீழ்நோக்கி தன் காற்பாதங்களால் அழுத்தி என்னைச் சிறிதும் அசையவிடாமல் செய்தது. என்னால் செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். அதன்படி என் தலையை கரடியின் வாயிலிருந்து என் மார்பை நோக்கி கீழே இழுத்தேன். என் மூக்கையும் கண்களையும் காப்பாற்ற முனைந்தேன். ஆனால், கரடியோ பற்களை அதன்மீது பதிக்க முயன்று கொண்டிருந்தது.


அதேநேரத்தில்அந்தக் கரடி தலைமுடிக்குக் கீழே இருக்கும் என் தலையின் முன்பகுதியை தன்னுடைய கீழ் தாடையின் பற்களைக் கொண்டு இழுத்துப் பிடித்தது. தொடர்ந்து கண்களுக்குக் கீழே இருக்கும் சதைப்பகுதியை மேற்தாடையைக் கொண்டு கவ்வியது. இப்போது தன் பற்களை மூடியது. என் முகம் கத்திகளால் வெட்டுப்படப் போவதைப்போல் நான் உணர்ந்தேன். நான் என் முகத்தை எப்படியும் வெளியே எடுப்பதற்காகப் போராடினேன். ஆனால் கரடியோ நாய் கொட்டாவி விடுவதைப் போல தன்னுடைய தாடைகளை மூட முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் என்னுடைய முகத்தைச் சற்று திருப்ப நினைத்தேன். அதே நேரத்தில் கரடி என்னுடைய முகத்தை மீண்டும் தன் வாய்க்குள் கொண்டு போக முயன்றது.

'இப்போ...'-நான் நினைத்தேன்: 'என் முடிவு வந்த மாதிரிதான்...'

திடீரென்று என் மீது இருந்த கனம் இல்லாமற்போனது. நான் மேலே பார்த்தேன். அந்தக் கரடியை இப்போது காணோம். அது அங்கிருந்து வேகமாக ஓடிப் போயிருந்தது.

கரடி என்னைக் கீழே தள்ளிக் கஷ்டப்படுத்துவதைப் பார்த்த என் நண்பரும் டெம்யானும் என்னைக் காப்பாற்ற ஓடி வந்திருக்கிறார்கள். என் நண்பர் ஓடிவந்த அவசரத்தில் இருக்கக்கூடிய பாதையில் ஓடிவராமல் குழம்பிப் போய் ஆழமான பனியில் ஓடி கீழே விழுந்து விட்டார். கரடி என்னை வாயால் கவ்வ முயற்சித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் துப்பாக்கி எதுவும் இல்லாமல் கையில் ஒரே ஒரு குச்சியை மட்டும் வைத்தவாறு டெம்யான் பாதை வழியே ஓடிவந்து கொண்டே உரத்த குரலில் கத்தினான்:

"கரடி மாஸ்டரைத் தின்னுது! கரடி மாஸ்டரைத் தின்னுது!”

ஓடி வந்துகொண்டே அவன் கரடியைப் பார்த்து சத்தம் போட்டான்:

"ஏ, முட்டாளே! என்ன செய்ற நீ? அவரை விடு! அவரை விடு!"

கரடி டெம்யானின் சத்தத்தைக் கேட்டு என்னை விட்டு அப்பால் ஓடியது.

நான் இருந்த இடத்தைவிட்டு எழுந்தபோது, ஒரு ஆடு கொல்லப்பட்டால் எப்படி இரத்தம் கிடக்குமோ, அந்த அளவிற்கு இரத்தம் பனிமீது கிடந்தது. என் கண்களுக்கு மேலே சதை தனித் தனியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. இருந்தாலும் அப்போது ஏற்பட்ட சுவாரசியத்தில் எனக்கு உண்டான வேதனையையே நான் உணரவில்லை.

என்னுடைய நண்பர் அதற்குள் அங்கு வந்தார். மற்ற ஆட்களும் வந்து என்னைச் சுற்றி நின்றிருந்தார்கள். அவர்கள் என் மீது இருந்த காயத்தைப் பார்த்து, அதன் மேல் பனிக்கட்டியை வைத்தார்கள். எனக்கு உண்டான காயத்தை மறந்துவிட்டு நான் கேட்டேன்:

"கரடி எங்கே? அது எந்த வழியே போனது?"

அப்போது என் காதில் ஒரு சத்தம் விழுந்தது:

"இங்கேதான் இருக்கு! இங்கேதான் இருக்கு!"

அடுத்த நிமிடம் கரடி எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் துப்பாக்கிகளை எடுத்தோம். ஆனால், நாங்கள் சுடுவதற்கு முன்பே கரடி படுவேகமாக எங்களைக் கடந்து ஓடியது. அது பயங்கர கோபத்தில் இருந்தது. என்னை மீண்டும் கவ்வி சாகடிக்க வேண்டும் என்பதுதான் அதன் ஆசையாக இருந்திருக்கும். ஆனால், ஏராளமான பேர் நின்றிருந்ததால், பயந்துபோய் அது ஓடிவிட்டது. அது போகும்போது பார்த்ததில் எங்களுக்கு ஒரு விஷயம் தெரியவந்தது. அதன் தலையிலிருந்து இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அதை நாங்கள் பின்பற்றிச் செல்ல நினைத்தோம். ஆனால், என்னுடைய காயங்கள் மிகவும் வேதனை தந்ததால், நாங்கள் நகரத்திற்குச் சென்று ஒரு டாக்டரைப் பார்க்க முடிவெடுத்தோம்.

டாக்டர் என் காயங்களுக்குத் தையல் போட்டார். அது சீக்கிரம் ஆறவும் செய்தது.

ஒரு மாதம் கழித்து நாங்கள் அந்தக் கரடியை மீண்டும் வேட்டையாடுவதற்காகப் புறப்பட்டோம். ஆனால், அதைக் கொல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அந்த சுற்றுப்புறத்தை விட்டு அந்தக் கரடியால் வெளியே வரமுடியவில்லை. அந்தப் பகுதிக்குள்ளேயே அது சுற்றிச்சுற்றி வந்து உரத்த குரலில் கத்திக் கொண்டே இருந்தது.

டெம்யான்தான் அதைக் கொன்றான். கரடியின் கீழ்தாடை பிய்ந்து போயிருந்தது. அதன் ஒரு பல் என் குண்டடி பட்டு கீழே விழுந்திருந்தது.

அது உண்மையிலேயே பெரிய உருவத்தைக் கொண்ட ஒரு கரடிதான். அதன் உடலில் ஏராளமான கருபபு நிற உரோமங்கள் இருந்தன.

நான் அந்தக் கரடியை பாடம் செய்து வைத்தேன். அது இப்போது என்னுடைய அறையில்தான் இருக்கிறது. என் நெற்றியில் இருந்த காயங்கள் ஆறி விட்டன. எனினும் தழும்புகள் இலேசாக அங்கு தெரியத்தான் செய்கின்றன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.