Logo

அந்த செருப்பு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7481
antha serupu

சாலையில் விட்டெறியப்பட்டுக் கிடைத்த பழைய குதிரை லாடம், வரவிருக்கும் அதிர்ஷ்டத்தைக் குறிப்பாக உணர்த்துகிற ஒரு பொருள் என்ற நம்பிக்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சில இந்திய பெரிய மனிதர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது அல்லவா? ஆங்கிலேயர்களுக்குச் சொந்தமான பங்களாக்களில் வாசற்படியின் மீது "ளீ” என்று எழுதப்பட்டதைப்போல பழைய குதிரை லாடத்தைப் பதித்து வைக்கக் கூடிய விநோதமான பழக்கம், சில கேரள வீடுகளிலும் பின்பற்றப்படத் தொடங்கியிருக்கிறது.

வாசலின் மேற்படியின்மீது நல்ல சந்தனத்தைக் குழைத்து "நமசிவாய” என்றோ "ஸ்ரீ பகவதி விளையாட வேண்டும்” என்றோ மங்களகரமான வார்த்தைகளை அழகாக எழுதி வைக்கும் பழைய கேரள பழக்க வழக்கங்கள் முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக ஏதோவொரு குதிரையின் குளம்பிலிருந்து ஆணி கழன்று கீழே விழுந்த ஒரு லாடத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு வந்து பதித்து வைப்பதைப் பார்க்கும்போது கிண்டல் பண்ணும் ஆட்கள், எங்களுடைய லாட்ஜுக்கு முன்னால் இருக்கும் வாசற்படிக்குமேலே அழகாக மாட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜோடி செருப்புகளைப் பார்க்கும்போது என்ன கூறுவார்களோ? குதிரையின் காலில் இருந்து விழுந்ததைவிட மனிதனின் காலில் இருந்து விழுந்தவை  என்று சிந்தனை செய்து நாங்கள் அந்த செருப்புகளை அங்கு இடம் பெறும்படிச் செய்யவில்லை. அதற்குப் பின்னால் சுவாரசியமான கதை இருக்கிறது.

நாங்கள் மொத்தம் ஏழு பேர். அந்த காரணத்தால்தான் எங்களுடைய லாட்ஜுக்கு "we are seven” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சில கிண்டல் பண்ணக்கூடிய மனிதர்கள் "செருப்பு இல்லம்” என்று கிண்டல் பெயருடன் அதை அழைப்பார்கள். லாட்ஜுக்கு மட்டுமல்ல- எங்கள் ஒவ்வொருவருக்கும் கிண்டலான பெயர்கள் இருக்கின்றன. லாட்ஜில் இருக்கும் மனிதர்களில் ஒருவன் இன்னொருவனை அந்த கிண்டல் பெயரைக் கூறி அழைத்தால், அவர்கள் மிகவும் நெருக்கமான நண்பர்களாக ஆகிவிட்டார்கள் என்று அர்த்தம். அந்த அளவிற்கு நெருக்கம் இல்லாத மனிதனின் வாயிலிருந்து எப்போதாவது அந்த கிண்டல் பெயரோ அதை ஒட்டிய சாயல் உள்ள வார்த்தையோ வந்து விழுந்தால், அதற்குப் பிறகு சண்டை உண்டாக ஆரம்பித்துவிடும்... பிரச்சினை உண்டாகும்... வாக்குவாதம் உண்டாகும். இறுதியில் அடி, உதை, போலீஸ் என்பதில் போய் முடியும்.

அவருடைய ஜாதகப் பெயர் கிருஷ்ணன் நம்பியார் என்றாலும், எங்களுக்கு மத்தியில் அந்த நண்பர் "அனுபவம்” என்ற கிண்டல் பெயரில்தான் குறிப்பிடப்பட்டார். பார்ப்பதற்கு எந்தவித தொந்தரவும் தராத மனிதர் என்று தோன்றக்கூடிய அந்த குள்ளமான மனிதர் நடமாடும் அறிவியல் களஞ்சியமாக இருந்தார். அறிவாளித் தனமாகப் பேசக்கூடிய மனிதராக இருந்தார். ஆனால், வாலும் தலையும் இல்லாமல் வாயில் தோன்றக் கூடியதைப் பேசி மனிதர்களைக் கஷ்டப்படுத்தக் கூடிய மனிதராக அவர் இல்லை. மெதுவான, தாழ்ந்த குரலில், எளிமையான ஒரு முழு இலக்கிய மொழியில் அவர் பேச ஆரம்பிப்பதைக் கேட்பதற்கு  ஓரு ஆர்வமும் சந்தோஷமும் உண்டாகும். ஆனால், ஆரம்பம் எப்படி இருந்தாலும், "அதுதான் நம்முடைய அனுபவம்” என்ற தனித்துவமான வார்த்தையில்தான் இறுதிப் பகுதி இருக்கும். அந்த காரணத்தால் தான் அவருக்கு "அனுபவம்” என்ற செல்லப் பெயர் கிடைத்தது. நமக்கு மத்தியில் இருக்கும் சில எழுத்தாளர்களைப்போல "ஆல்டுவஸ் ஹக்ஸ்லி என்ன கூறுகிறார்?', "சீன சிந்தனைவாதியான சீ-பூ கூறுவதைப் பாருங்கள்' என்றெல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத சில அரைவேக்காட்டுத்தனமான சொற்பொழிவுகளை உருட்டிக் கொண்டு வந்து, சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தை வெறுப்படைய வைக்காமல், தன்னுடைய சொந்த அனுபவங்களையும் சாதாரணமான சம்பவங்களையும் அடிப்படையாக வைத்துக்கொண்டு சில சுவாரசியமான விஷயங்களைத் தேவைக்கேற்றபடி பரிமாறித் தரக்கூடிய அந்த அனுபவசாலிமீது எங்களுக்கு ஒரு மரியாதை உண்டாகாமல் இல்லை. அவருடைய சொற்பொழிவை நாங்கள் மிகவும் கவனமாகக் கேட்போம். எங்களுடைய லாட்ஜில் ஒரு மனிதன் கூறுவதை இன்னொரு மனிதன் வாயை மூடிக்கொண்டு கேட்பது என்பது, எங்களைப் பொறுத்த வரையில் இருப்பதிலேயே பின்பற்றுவதற்கு மிகவும் கஷ்டமான விரதம் என்பதுதான் உண்மை. அது தியாகத்திற்கு நிகரானது. சொற்பொழிவுக்கு ஆற்றக்கூடிய- அளிக்கக்கூடிய மிகப் பெரிய மரியாதை அது. நாங்கள் திருமணமாகாதவர்கள். மனைவி என்று கூறப்படும் ஏதோ ஒரு முறையான படைப்பு உள்ளே நுழைந்து வந்து, எங்களுடைய பேச்சு சுதந்திரத்தையும் தட்டிப்பறித்து தாங்களே பயன்படுத்திக் கொள்வது வரை மட்டுமே, ஏதாவது தோன்றக் கூடியதை வெளியே கூறி எங்களால் குதூகலம் அடைய முடிகிறது என்ற விஷயம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையாகக் கூறுவதென்றால், நாங்கள் ஏழு பேரும் ஒன்றாகச் சேர்ந்த பிறகு, ஒருவன் கூறும் வார்த்தைகள் முழுவதையும் கேட்க வேண்டும் என்ற அக்கறையோ பொறுமையோ நல்ல குணமோ இன்னொருவனுக்கு இருக்கவில்லை. ஆனால், அனுபவத்தின் விஷயத்தில் மட்டும் நாங்கள் சிறிய அளவில் சில விட்டுக் கொடுத்தல்களைச் செய்து விட்டிருந்தோம்.

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. மதிய தூக்கம் முடிந்து நாங்கள் ஒவ்வொருவரும் கனமான முகங்களுடன் வாசலில் ஒவ்வொரு பொருட்களின்மீதும் இடம் பிடித்தோம். வேலைக்காரன் சுப்புவின் சூடான காப்பியை எதிர்பார்த்து மவுனமாக உட்கார்ந்து கொண்டிருந்த போது, அனுபவம் அந்தப் புதிய க்யான்வாஸ் நாற்காலியில் சற்று முன்னோக்கி நகர்ந்து உட்கார்ந்து கொண்டே மெதுவாக இருமினார். அனுபவம் ஏதோ ஒரு புதிய சொற்பொழிவுக்குத் தன்னை தயார் பண்ணிக்கொள்கிறார் என்பதற்கான அடையாளம் அது. ஒரு புதிய மலையாள பண்டிதருக்கு முன்னால் இருக்கும் மாணவர்களைப்போல நாங்கள் அக்கறையுடன் உட்கார்ந்திருந் தோம். “மிகவும் அழகான இளம் பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய கணவன்மார்கள் மிகவும் அவலட்சணமானவர்களாகவோ மிகவும் மோசமான குணங்களைக் கொண்டவர்களாகவோ இருப்பார்கள். அழகான தோற்றத்தைக் கொண்ட இளைஞர்களின் மனைவிமார்களின் கதையும் அதேதான். அதுதான் நம்முடைய அனுபவம்.''

தலையை இடதுபக்கமாக சாய்த்துக்கொண்டு, வலது கண்ணைச் சற்று சுருக்கியவாறு, உதடுகளைச் சுளித்தவாறு, சொற்பொழிவின் ஆரம்பத்தில் வெளிப்படுத்தக் கூடிய தன்னுடைய இயல்பான செய்கைகளுடன் அனுபவம் உறுதியான குரலில் கூறினார்.

கட்டிலின்மீது எழுந்து உட்கார்ந்து கொண்டு தன்னுடைய சிறிய பூனையை மடியில் வைத்துக்கொண்டு ஏதோ புத்தகத்தில் இருந்த படங்களை ஒரு சிறு குழந்தையின் ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்த அப்துல்லா திடீரென்று தலையை உயர்த்தி இனிய ஒரு புன்சிரிப்பைத் தவழ விட்டுக் கொண்டே, விழிகளை அசைத்தவாறு ஒப்புக்கொண்டு சொன்னான்: “உண்மைதான்...'' கூறுவதற்கு மத்தியில்... இந்த அப்துல்லா இருக்கிறானே... ஆள் மிகவும் நல்லவன். ஒரு மனிதனின் மனதை என்று கூட கூற வேண்டியதில்லை.


ஒரு மிருகத்தின் மனதைக்கூட தொந்தரவு தருவதில் அவனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும். யார் என்ன கூறினாலும், ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்தி, தலையை ஆட்டியவாறு "உண்மைதான்' என்று பதில் கூறுவான். எவ்வளவு கோபத்தை வரவழைக்கக் கூடிய விஷயங்களைச் சந்திக்க நேரிட்டாலும், ஒரு கடுமை நிறைந்த மோசமான வார்த்தை அந்த எளிய மனம் கொண்ட மனிதனின் முகத்திலிருந்து வெளிவராது. பிறருக்காக மட்டுமே அவன் பிறந்தவன் என்று அந்த நல்ல மனிதனின் உதவும் குணத்தைப் பார்க்கும்போது தோன்றும். தன்னுடைய நண்பர்களுக்குத் தலைவலியைத் தாண்டிய காய்ச்சல் உண்டானால் போதும்... அப்துல்லா அன்று அந்த மனிதனை அருகில் அமர்ந்து கவனித்துப் பார்த்துக்கொள்வதற்காக அலுவலகத்தில் விடுமுறை எடுத்துவிடுவான். இறுதியில் தனக்கு ஏதாவது உடல் நலக்கேடு வரும்போது, விடுமுறை கிடைப்பதற்கு வழியில்லாமல் இருமிக்கொண்டும் முனகிக்கொண்டும் மூக்கைச் சிந்திக்கொண்டும் வேலைக்குச் செல்வதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். சம்பளமாகக் கிடைத்த பணம் முழுவதையும் செலவழித்துவிட்டு, இப்போது கையில் காசு எதுவும் இல்லாமல் முக்கிக்கொண்டும் முனகிக்கொண்டும் நடந்து செல்வதைப் பார்க்கலாம். இடையில் கண்களில் படும் நண்பர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்து தேநீர் க்ளப்பிற்கு அழைத்துக்கொண்டு சென்று பெரிய ஒரு உபசரிப்பு நடத்தவில்லையென்றால் அப்துல்லாவிற்கு ஒரு மன அமைதியும் உண்டாகாது. "அப்துல்லாவின் மனநிலை' என்று கூறினால், எங்களுடைய லாட்ஜின் மொழியில் "அந்த அளவிற்கு அதிகமான உதவும் மனம்' என்று அர்த்தம். நாங்கள் மிகவும் அதிகமாக அன்பு வைத்திருக்கும் ஒரு மனிதன் அப்துல்லா என்ற விஷயத்தை பேச்சுக்கு மத்தியில் தனிப்பட்ட முறையில் கூறிக்கொள்கிறேன்... நாம், அனுபவத்தின் காப்பி சொற்பொழிவுக்குத் திரும்பிச் செல்வோம். அவர் தொடர்ந்து சொன்னார்: “என்ன சொன்னேன்? அழகான இளம் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய கணவன்மார்கள் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவர் களாக இருப்பார்கள் என்பதை... உண்மைதானே? முன்பு நாம் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துக்கொண்டிருந்த காலத்தில், வகுப்பறையின் தெற்குப் பகுதியில் போடப்பட்டிருந்த அந்த ஒற்றை பெஞ்சில் உட்கார்ந்திருந்த அந்த அழகான இளம் பெண் இருந்தாளே? அம்புஜம்... அவளுக்கு எப்படிப்பட்ட ஆணவம் இருந்தது! பஞ்சவர்ணக்கிளி என்று அவளுக்கு நாங்கள் செல்லப் பெயர் வைத்திருந்தோம். அவள் எப்படிப்பட்ட அழகான சாகசங்களையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிந்தாள். எந்த அளவிற்கு இளமையான சிந்தனைகளால் களிமண்ணைக் குழைத்துக் கொண்டிருந்தாள். இளம் உலகு முழுவதையும் தாண்டி செல்லக்கூடிய பார்வைகளையும் கழுத்து வெட்டலையும், மேலும் பல சேட்டைகளையும் வெளிப்படுத்தி அவள் எத்தனையெத்தனை காதல் செயல்களுக்கு நூல் திரித்துக் கொண்டிருந்தாள்? சமீபத்தில் ஒருநாள் அவளும் அவளுடைய கணவனும் புகைவண்டி நிலையத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அந்த கணவன் பார்க்கப்பட வேண்டிய ஒரு பிணம்தான். ஒட்டிப் போன கன்னமும், வழுக்கைத் தலையும், நீண்டு வளைந்து காணப்பட்ட மூக்கும் உள்ள ஒரு மரங்கொத்தி அந்த பஞ்சவர்ணக் கிளிக்குக் கிடைத்திருந்தான். ஆனால், அவளுக்கு அந்த உறவில் எந்தவொரு அதிருப்தியும் இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் என்னவாக இருக்கும்? அந்தக் கதை இருக்கட்டும். முன்பு கல்லூரியில் எல்லாரின் கண்களிலும் தாண்டவமாடிக் கொண்டிருந்த அந்த பேரழகன் பாஸ்கரமேனன் இருக்கிறானே! அந்த விளையாட்டு வீரன்- அவனுடைய மனைவியைப் பாருங்கள். ஒரு பன்றியேதான். ஆனால், அந்த உறவில் அவன் எந்தவொரு குறைபாட்டையும் காணவில்லை. அதன் ரகசியம் என்னவாக இருக்கும்? பணத்திற்காக ஆசைப் பட்டோ, மனைவியின் வீட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் நல்ல ஒரு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோ, உறவினர்களின் வற்புறுத்தலாலோ, வயதான தாய் முன்பு செய்த ஒரு சபதத்தை நிறைவேற்றுவதற்காகவோ... பாவம்... தன்னைத்தானே இந்த திருமண வாழ்க்கைக்குள் இறக்கிக் கொண்டு விட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் மூளை, இதயம், கண்கள் ஆகியவற்றின் மதிப்பிற்குரிய செயல்பாடுகளைத் தாறுமாறாக ஆக்கக்கூடிய அந்த தனித்துவ குணம் கொண்ட நரம்பு நோய் இருக்கிறதே! காதல்- அதுதான் காரணமாக இருக்க வேண்டும்.''

சந்தோஷமாக ஒரு குளியல் முடித்துவிட்டு, கழுத்திலும் முகத்திலும் பவுடர் பூசிக்கொண்டு, சலவை செய்து இஸ்திரி போட்டு மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வெள்ளை நிற சில்க் சட்டையை அணிந்து, கழுத்திற்குப் பின்னால் இமயமலையின் சிகரத்தைப்போல சட்டையின் காலர் பகுதியை உயர்த்தி வைத்துக் கொண்டு, ஒரு சிகரெட்டை வாயில் வைத்துப் புகைத்தவாறு "ப்ரின்ஸ் சார்மிங்' சுகுமாரன் அங்கு காட்சியளித்தான். அவன் ஈ.சி சேரில் இருந்த தூசியை கவனமாகத் துடைத்து, மெதுவாக அதில் போய் உட்கார்ந்து, மெல்ல தன்னுடைய மார்புப் பகுதியைத் தடவியவாறு, சன்னமாக இருமிக்கொண்டு முகத்தைச் சுளித்துக்கொண்டு யாரிடம் என்று இல்லாமல் சொன்னான்: “நல்ல சுகம் இல்லை.''

குளியலறைக்குள்ளிருந்து உரத்த குரலில் ஒரு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது. மாதவன் நாயர் குளித்துக் கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளம் அது. குளிக்கும்போது தான் கட்டாயம் பாடியே தீர்வது என்ற கொள்கையை உடையவன் அவன்.

“பிறகு... நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?'' அனுபவம் இன்னொரு அத்தியாயத்தைத் திறந்தார்.

“மலையாள பண்டிதர்களின் பெண் பிள்ளைகள் பொதுவாகவே மிகுந்த அழகுடையவர்களாக இருப்பார்கள்.''

அனுபவத்தின் இந்த கண்டுபிடிப்பைப் பற்றி நாங்கள் தீவிரமாக விவாதிக்க முயற்சிக்கவில்லையென்றாலும், அந்த விஷயம் எங்களுடைய சில பழைய மலையாள பண்டிதர்களின் பெண் பிள்ளைகளைப் பற்றி இனிமையாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு வழி வகுத்தது. அப்போது எங்களுடைய மெஸ் மேனேஜர் சிவசங்கரப் பணிக்கர், “ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று'' என்றொரு கருத்தை உரத்த குரலில் வெளியிட்டார். இந்த சிவசங்கரப் பணிக்கர் பெரிய ஒரு பிடிவாதம் பிடித்த மனிதர். குணத்தில் அப்துல்லாவிற்கு நேர் எதிரானவர். யார் என்ன கருத்தைக் கூறினாலும், உடனடியாக அதற்கு எதிரான ஒரு கருத்தைப் பாய்ந்து கூறாமல் இருந்தால் அவளுடைய நாடி நரம்புகளில் ஒரு நடுக்கம் உணடாகி விடும். சிறிய முகம், பெரிய வயிறு- இதுதான் சிவசங்கரப் பணிக்கர். பணிக்கர் அனுபவத்தின் முகத்தையே கண்களை உருட்டிக்கொண்டு பார்த்தவாறு சொன்னார்: “என்னென்ன காரியங்களையெல்லாம் மனம் போனபடி நீ இங்கே சொல்லிக்கொண்டு இருக்கேடா? நீ சொன்னதை ஒத்துக்கொள்றதுக்கு உனக்கு முட்டாள்தனமான நண்பர்களும் கிடைச்சிட்டாங்களே? ஆனால், எனக்கு முன்னால் அவை எதுவும் செல்லுபடியாகும்னு நினைக்காதே, தெரியுதா?''

“அனுபவங்களின் மூலம் அப்படித்தான் பார்க்கிறேன்.'' அனுபவம் உறுதியான குரலில் கூறினார்.

“அனுபவம் தேங்காய் புண்ணாக்கு... கடைசியில் தூக்குல தொங்கி சாகுறதுதான் உன்னோட அனுபவமாக இருக்கும். எல்லாருக்கும் அப்படித்தான் நடக்கும் என்று கூற முடியுமா என்ன?''


“உனக்கு ஏன் இந்த அளவிற்கு கோபம் வர வேண்டும்? நாங்கள் உலக விஷயங்களைப் பற்றி அல்லவா பேசிக்கொண்டு இருக்கி றோம்?'' அனுபவம் மிடுக்கான குரலில் தலையை ஆட்டிக் கொண்டே கூறினார்.

“மலையாள பண்டிதர்களுக்கு உலகத்தில் இடம் இருக்கிறதா என்ன?'' பணிக்கர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

உஸ்மான் இந்த வாக்குவாதம் எதையும் கவனிக்காமல், கீழே போடப்பட்டிருந்த புல்லாலான பாயில் உட்கார்ந்து கொண்டு பச்சை நிறத்தில் இருந்த தாள்களைக் கொண்டு தைக்கப்பட்டிருந்த ஒரு புத்தகத்தில், ஏதோ ஒரு நாட்டின் பட்ஜெட்டைத் தயார்' பண்ணிக் கொண்டிருந்தான். ஒரே சிந்தனையுடன் என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அந்தச் சூழ்நிலையில் "டாக்டர் கோயபெல்ஸ்' என்ற பட்டப் பெயருடன் குறிப்பிடப்படும் சங்கரநாராயண மேனன் தனக்கு மிகவும் விருப்பமான ப்ளட்விட்டா டானிக் புட்டியுடன் அங்கு வந்தார். அனுபவத்திற்கும் பணிக்கருக்கு மிடையே நடந்துகொண்டிருக்கும் ஏசல் கலந்த உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த டாக்டர் கோயபெல்ஸ் மோட்டார் சைக்கிளை "ஸ்டார்ட்' பண்ணுகிற குரலில் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து ப்ளட்விட்டா புட்டியை மேஜைமீது வைத்துவிட்டு காலியாகக் கிடந்த கை இல்லாத நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

அப்துல்லாவின் மடியில் சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பூனை ப்ளட்விட்டா புட்டியையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்தது. பிறகு அந்த சிறிய பூனை எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல், அந்த புட்டியை நோக்கி ஒரு பாய்ச்சல்... புட்டி கீழே விழுந்து அந்த திரவ ரத்தம் கொஞ்சம் மேஜைமீதும் கொஞ்சம் கீழே கணக்கு போட்டுக்கொண்டிருந்த உஸ்மானின் பச்சைத் தாள்களிலும், கொஞ்சம் சுகுமாரனின் சட்டை காலரிலும் தெறித்து விழுந்தது. கோயபெல்ஸ் முதலில் பூனையையும், பிறகு அதன் சொந்தக்காரனான அப்துல்லாவையும் கண்களை உருட்டி, மூக்கைச் சுளித்துக்கொண்டு பயமுறுத்துவதைப்போல வெறித்துப் பார்த்தார். உஸ்மான் கோபத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தன்னுடைய மடியிலிருந்த பாக்கு அளவில் இருந்த ஒரு பொடி டப்பியை எடுத்து, சிறிது பொடியை உள்ளங்கையில் தட்டி, அதில் சிறிதளவை எடுத்து மூக்கிற்குள் நுழைந்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். என்ன செய்வது என்று தெரியாமல் சுகுமாரன் அதே இடத்தில் அசையாமல் உட்கார்ந்திருந் தான். அப்துல்லா பாவம், செயலில் தீவிரமாக ஈடுபடுபவனைப்போல, பூனைக்குட்டியைத் தூக்கி கை இடுக்கில் வைத்துக்கொண்டு, ப்ளட்விட்டா புட்டியை நேராக நிற்கச் செய்து, சுகுமாரனின் கழுத்தையும் உஸ்மானின் பச்சை நிறத் தாளையும் சற்று வருடினான்.

சிறிது நேரம் அமைதி நிலவியது. மாதவன் நாயர் குளித்து முடித்து வந்தான். அப்புவின் காப்பியும் கொழுக்கட்டையும் வந்து சேர்ந்தன. நாங்கள் எல்லாரும் காப்பியைக் குடிப்பதற்காக உட்கார்ந்தோம்.

காப்பி பருகுவது முடிந்தது. மாதவன் நாயர் ஒரு புல்லாலான பாயை விரித்துப் போட்டு தூங்குவதற்காகப் படுத்தான். ஒரு நிமிடம் தாண்டுவதற்கு முன்பே அவன் குறட்டை விட ஆரம்பித்தான்.

அனுபவத்திற்குப் பேசுவதற்கு ஒரு புதிய விஷயம் கிடைத்தது. பூனைகளின் பழக்க வழக்கங்கள். அந்த விஷயத்திலிருந்து அவர் படிப்படியாக மாறி மாறி நாய்களின் மன அறிவியலுக்குள் நுழைந்தார். அனுபவம் பேசினார். “சந்தேகம் வரும் வண்ணம் எதையாவது பார்த்தால் நாய்களின் பழக்கம் முற்றிலுமாக மாறிவிடும். சாதாரணமாக- தோல் செருப்புகளை எங்காவது வைத்தால், கடித்துக் கிழிக்கக் கூடிய ஒரு பழக்கம் நாய்களிடம் இருக்கிறது. ஆனால், ஒரு ஜோடி செருப்பை  சாதாரணமாக வைப்பதைப்போல் இல்லாமல் ஒன்றோடொன்று தலைகீழாக  இருப்பதைப்போல வைத்தால், அதற்குப் பிறகு நாய்கள் அந்தச் செருப்புகளைத் தொடக்கூட செய்யாது.'' அவர் தொடர்ந்து சொன்னார்: “நள்ளிரவு நேரத்தில் எங்காவது ஒரு கடிக்கக் கூடிய நாயைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு வருகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய கையில் ஒரு சிறு சுள்ளிக் கொம்புகூட இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?''

எங்களுடைய ஆர்வத்திற்குக் கூர்மை தீட்டுவதற்காக அனுபவம் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்.

“என்ன செய்யணும்?'' அப்துல்லா பொறுமையை இழந்து கேட்டான்.

“அதுவா? கூறுகிறேன். உங்களுடைய தற்காப்புக்கு நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்றுதான். ஆடையை அவிழ்த்து தூரத்தில் வீசி எறிந்துவிட்டு, முடிந்த வரையில் நிர்வாண கோலத்தில் இருந்து கொண்டு, உடலை முன்னோக்கி குனிய வைத்துக்கொண்டு, முஷ்டியை சுருட்டி வைத்துக்கொண்டு கைகளை முன்னோக்கி நீட்டி, மொஹரம் காலத்தில் நரிகள் விளையாடுவதைப்போல தாளத்திற்கு ஏற்றபடி கால்களாலும் கைகளாலும் சில சேட்டை களைச் செய்து, நாயை நோக்கி நடந்து சென்றால், எப்படிப்பட்ட நரியைப் போன்ற நாயும் பின்னால் திரும்பி ஓடாமல் இருக்காது. அதுதான் என்னுடைய அனுபவம்.'' இப்படி நாயின் மன விஞ்ஞானத்தைப் பற்றிய சில புதிய தகவல்களைக் கூறிய பிறகு, அனுபவம் மனிதர்களின் அடி மனதின் செயல்களைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

அந்த விஷயத்தையொட்டி ஒரு எளிய தகவலைக் கூறிய பிறகு, அவர் தொடர்ந்து சொன்னார்: “நாம் உறங்கும்போதுகூட நம்முடைய உள்மனம் அதாவது நன்க்ஷ ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள் ம்ண்ய்க் செயல்பட்டுக் கொண்டிருக்கும். நாம் நன்கு பழக்கத்திற்குள்ளாகி நம்முடைய ஒரு பகுதியாக மாறி விட்டிருக்கும் எண்ணங்களும் செயல்களும் நமக்கே தெரியாமல் திரும்பத் திரும்ப செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலம் ஆயுதப் பயிற்சி பெற்றுப் பழகிய ஒரு வீரன் தூங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏதாவதொரு பொருளை அவனை நோக்கி எறிந்தால்,  உடனடியாக அவனுடைய கைகள் அசையவோ அந்தப் பொருளைத் தடுத்து வீசி எறியவோ செய்யும்.''

கோயபெல்ஸ் சவரம் செய்வதற்காக ஒரு கண்ணாடிக் குவளையில் நீருடன் வந்திருந்தார். அனுபவத்தின் உள் மனதின் செயல்பாடுகளைப் பற்றிய சொற்பொழிவைப் பற்றி ஏதோ ஆழமாகச் சிந்தித்துக் கொண்டே அவர் குவளையில் இருந்த குளிர்ந்த நீர் முழுவதையும் கீழே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த மாதவன் நாயரின் மார்பின்மீது ஊற்றிவிட்டார். மாதவன் நாயர் திடுக்கிட்டு வேகமாக எழுந்து எதுவும் புரியாமல் நான்கு பக்கங்களி லும் பார்த்தவாறு விழித்துக் கொண்டிருந்தான். கோயபெல்ஸின் அந்த செயலைப் பார்த்து நாங்களும் ஆச்சரியப்பட்டோம். “நீ என்ன வேலைடா செஞ்சே?'' சிவசங்கரப் பணிக்கர் உரத்த குரலில் கத்தினார். கோயபெல்ஸ் முகத்தைச் சுளித்துக்கொண்ட சொன்னார். “நான் உள் மனதின் செயல்பாட்டைப் பற்றி ஒரு சோதனை செய்து பார்த்தேன். அனுபவத்தின் தியரியின்படி நீர் மேலே பட்டால், இந்த மனிதன் பாட்டு பாடத் தொடங்குவானோ என்பதைச் சோதித்துப் பார்த்தேன்.


அவ்வளவுதான்.'' இதைக் கூறிவிட்டு அசாதாரணமாக எதுவுமே நடக்காததைப்போல அவர் பிளேடை கண்ணாடிக் குவளையில் உரசி கூர்மையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தார்.

சாயங்கால நேரம் ஆனதும் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் நடப்பதற்காகச் சென்றோம். இரவில் வேலை இருந்ததால் ஏழு மணிக்கு மாதவன் நாயர் நேராக அலுவலகத்திற்குச் சென்றான். அப்துல்லா திரைப்படம் பார்ப்பதற்காகச் சென்றிருந்ததால், இரவில் மிகவும் தாமதித்துதான் திரும்பி வந்தான். அதற்குள் நாங்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்து உறங்கி விட்டிருந்தோம்.

மறுநாள் காலையில் கீழே பெரிய அளவில் ஒரு ஆரவாரம் உண்டாகிக் கொண்டிருப்பதைக் காதில் வாங்கிக் கொண்டே நான் கண் விழித்தேன். சென்று பார்த்தபோது அப்துல்லாவிற்கும் அனுபவத்திற்குமிடையே சண்டை நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். “நான் விட மாட்டேன். நீ செருப்புக்கான விலையைத் தந்தே ஆகணும். உன் வார்த்தைகளை நம்பித்தான் நான் சோதனை செய்து பார்த்தேன்'' என்று கூறிக்கொண்டே அப்துல்லா அனுபவத்தின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்தான்.

விசாரித்துப் பார்த்தபோது தெரிந்துகொண்ட விஷயம் இதுதான். அப்துல்லா திரைப்படம் பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது நான்கரை ரூபாய் விலை இருக்கக் கூடிய நல்ல ஒரு புதிய ஜோடி செருப்பை வாங்கியிருக்கிறான். நாய்களின் மன அறிவியலைப் பற்றி அனுபவம் கூறியது தலைக்குள் குடைந்து கொண்டிருந்ததால், அதைச் சற்று சோதனை செய்து பார்ப்பதற்காக அப்துல்லா அந்த செருப்பை வாசலுக்கு வெளியே ஒவ்வொன்றும் முரண்பாடாக இருக்கும்படி வைத்திருக்கிறான். காலையில் சென்று பார்த்தபோது அந்தச் செருப்பு அங்கு இல்லை. தேடிப் பார்த்தபோது எந்தவொரு இடத்திலும் அவற்றைப் பார்க்க முடியவில்லை. தன்னுடைய புதிய செருப்பை நாய் கடித்து எடுத்துக்கொண்டு போய்விட்டதென்றும், அதற்கு மூல காரணமாக இருப்பவர் அனுபவம் என்றும், அதனால் செருப்பிற்கான விலையை அனுபவம் தந்தாக வேண்டுமென்றும் அப்துல்லா கூறிக்கொண்டிருந்தான். செருப்பை எடுத்துக்கொண்டு சென்றது நாய்தான் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றும், தன்னுடைய நாய்களைப் பற்றிய அறிவியல் படிப்பில் தவறு உண்டாவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அனுபவமும் தீவிரமாக வாதம் செய்தார்.

“உன்னிடம் ஒரு செருப்பு இருந்தது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? நாங்கள் யாரும் பார்க்கவில்லையே!'' பணிக்கர் அனுபவத்தின் பக்கம் சேர்ந்து கொண்டு ஒரு புதிய வாதத்தைக் கொண்டு வந்தார்.

கோபமே படாத அப்துல்லாவிற்குக்கூட வெறி வந்துவிட்டது. “நீ அந்த இடத்தில் வாயை மூடிக்கொண்டு இருந்தால் போதும்.'' அவன் பணிக்கரைப் பார்த்து கோபத்துடன் சொன்னான்.

டாக்டர் கோயபெல்ஸ் மோட்டார் சைக்கிளை "ஸ்டார்ட்' செய்யும்போது உண்டாகக் கூடிய ஒரு சிரிப்பை மேலும் ஒரு முறை ஒலிக்கச் செய்து கொண்டே சொன்னார்: “டேய் முட்டாள்... இந்த மனிதனின் வார்த்தைகளை நம்பி உன்னைத் தவிர யாராவது நல்ல ஒரு செருப்பை இழப்பார்களா? இப்போது உனக்கு ஒரு செருப்பு தான் போயிருக்கு என்று மனதை சமாதானப்படுத்திக் கொள். இனி... இரண்டாவது தியரி... அந்த நரி விளையாட்டு வித்தை- அதைச் சோதித்துப் பார்க்க முயற்சித்திருந்தால், உன்னோட இரண்டு கால்களுமே போயிருக்கும்.''

அந்த நேரத்தில் ஒரு செருப்பின் அழுகைச் சத்தம் படிக்கு அருகில் கேட்டது. பார்த்தபோது, மாதவன் நாயர் இரவு வேலை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறான். எங்கள் எல்லாருடைய பார்வைகளும் அவனுடைய கால் பக்கம் திரும்பின. சாதாரணமாக மாதவன் நாயர் செருப்பு அணிவதில்லை. அவனுடைய காலில் ஒரு புதிய ஜோடி செருப்பு...

மாதவன் நாயர் மிடுக்காக வாசல் படிக்கு வெளியே செருப்பைக் கழற்றி வைத்துவிட்டு, உள்ளே சென்றான். அப்துல்லா குனிந்து நின்று அந்த செருப்பையே கூர்ந்து பார்த்தான். தொடர்ந்து அவனுடைய முகத்தில் வெற்றி பெற்றுவிட்டதற்கு அடையாளமாக ஒரு புன்சிரிப்பு தவழ்ந்தது. “நண்பர்களே... இதோ என்னுடைய செருப்பு!''

அதைக் கேட்டு மாதவன் நாயர் வாசல் பக்கம் வந்தான்: “நீ என்ன சொன்னே? உன்னோட செருப்பா?''

“ஆமாம்... என்னோட காணாமல் போன செருப்பு. நான் நேற்று இரவு நான்கரை ரூபாய் கொடுத்து வாங்கிய புதிய மாடல் செருப்பு. அடியில் ஒற்றைத் தோல் உள்ள ஹை க்ளாஸ் செருப்பு.'' அப்துல்லா ஒரு பாட்டைப் பாடுவதைப்போல அதைச் சொன்னான்.

மாதவன் நாயர் அப்துல்லாவையே வெறித்துப் பார்த்தான். “இது எப்போ ஆரம்பமானது?''

“எது?''

“உன்னோட பைத்தியக்காரத்தனம்.''

“பைத்தியமா? நண்பனே, விளையாட்டெல்லாம் இருக்கட்டும். சொல்லு... இது எங்கேயிருந்து கிடைச்சது?'

மாதவன் நாயருக்கு கோபம் வந்துவிட்டது. “எங்கேயிருந்து கிடைச்சதா? நான் மூணு ரூபாய் கொடுத்து வாங்கினேன்.''

அப்துல்லாவின் முகம் கறுத்துவிட்டது. “சுத்த பொய். கடையில் இந்த செருப்பு ஒண்ணு மட்டுமே எஞ்சியிருந்தது. அதை நான் வாங்கிவிட்டேன். நண்பர்களே, நான் சத்தியம் பண்ணிக் கூறுகிறேன். இது என்னுடைய செருப்பு. இதோ பாருங்க... இந்த சிவப்பு பட்டைக்கு அருகில் சிலுவை அடையாளத்தைப் போன்ற ஒன்றும், அடுத்தடுத்து இரண்டு பெரிய கருப்பு நிறப் புள்ளிகளும் இருக்கின்றன. செருப்பை வாங்கி சோதித்துப் பார்த்தபோது விசேஷமாக நான் பார்த்த அடையாளம் இவை.''

மாதவன் நாயரின் முகம் ஒரு மாதிரி ஆகியது. அவன் கோபமும் கிண்டலும் கலந்த வெறித்த ஒரு பார்வையை அப்துல்லாவை நோக்கி செலுத்தினான்: “ஏய்... மிஸ்டர்... நீ என்னை அவமானப்படுத்துகிறாய். கவனமா பேசணும். தெரியுதா? உன் செருப்பை அணிந்து கொண்டு நடக்குற ஒரு பிச்சைக்காரப் பயல் நான் இல்லை.''

அப்துல்லாவும் விடவில்லை: “உன்னை அவமானப்படுத்த வில்லை. நான் என்னுடைய செருப்புக்கு உரிமை கோருகிறேன். அவ்வளவுதான்.''

“நான் நேற்று இரவு மூன்று ரூபாய் கொடுத்து வாங்கிய செருப்புக்கு உரிமை கோருவதற்கு நீ யார்?''

அவர்கள் இவ்வாறு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். யாருடைய பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை முடிவு செய்ய எங்கள் யாராலும் முடியவில்லை. அப்துல்லாவின் செருப்பை அணிந்துகொண்டு நடக்கிற அளவிற்கு மரியாதைக் குறைவு உள்ள ஒரு மனிதன் அல்ல மாதவன் நாயர். சரியான ஆதாரமில்லாமல் ஒரு நல்ல நண்பனை செருப்பைத் திருடியதாக குற்றம் சுமத்தும் அளவிற்கு தைரியம் கொண்ட ஒரு முரட்டுத்தனமான மனிதன் அல்ல அப்துல்லா.

சுகுமாரன் தன்னுடைய சவரக்கத்தியின் முனையைப் போல மெலிதாக இருந்த மீசையைத் தடவிக்கொண்டே அப்துல்லாவிடம் சொன்னான்: “டேய், அவன் உன்னுடைய செருப்பை அணிந்து கொண்டு இங்கே தைரியமாக நுழைந்து வருவானா? அந்த அளவிற்கு மரியாதை தெரியாத மனிதனா மாதவன் நாயர்?''


அப்துல்லா செருப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான்: “மாதவன் நாயரின் மரியாதையைப் பற்றி அல்ல கேள்வி. இந்தச் செருப்பு என்னுடையதா என்பதுதான் கேள்வியே. அது என்னுடையதுதான் என்பதையும் என்னுடையது மட்டுமே என்பதையும் குதிரை பலத்துடன் நான் திரும்பத் திரும்ப கூறுகிறேன்.''

சிறிது நேரம் அமைதி நிலவியது.

அப்துல்லாவிற்கு ஒரு ஞானம் உண்டானது. அவன் வேகமாக எழுந்தான்: “சரி... ஒத்துக் கொள்கிறேன். நீ எந்தக் கடையில் இந்த செருப்பை வாங்கினே? கடையைக் காட்டு...''

மாதவன் நாயர் எதுவும் பேசவில்லை.

அப்துல்லா தொடர்ந்து சொன்னான்: “ம்... சொல்லுங்க... உனக்கு இந்தப் புதிய செருப்பு மூணு ரூபாய்க்கு எந்தக் கடையிலிருந்து கிடைச்சது?''

“சொல்றதுக்கு விருப்பமில்லை...'' மாதவன் நாயர் அலட்சியமாகக் கூறினான்.

“அப்படின்னா திருடியதாகத்தான் இருக்கும்.''

“நீ என்னடா சொன்னே?'' மாதவன் நாயர் சட்டையின் கைப் பகுதியைச் சுருட்டி விட்டுக் கொண்டே முன்னால் வந்தான்.

அவர்களுக்கிடையே வார்த்தைகளாலான சண்டை முடிந்தது. இனி உடல் பலத்தாலான ஒரு சண்டை ஆரம்பமாகப் போவதற்கான அடையாளம் தெரிந்தது.

அப்போது கிழிந்துபோன ஒரு சட்டையை அணிந்து கொண்டிருந்த ஒரு பையன் வாசலில் வந்து நின்று மாதவன் நாயரை அழைத்தான். மாதவன் நாயர் திரும்பிப் பார்த்தான். பையன் எட்டணா நாணயம் ஒன்றைக் கையில் வைத்து நீட்டிக் கொண்டே சொன்னான்: “சார்... நீங்க என்னிடம் செருப்பு வாங்கினப்போ தந்த எட்டணா கள்ள நாணயமா இருக்கு. இதற்கு பதிலா வேறு நாணயம் தாங்க.''

மாதவன் நாயரின் முகம் வெளிறிப் போனது. நாங்கள் ஒருவரை யொருவர் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டோம். படிப்படியாக அந்த ரகசியத்தின்மீது வெளிச்சம் பரவியதைப்போல தோன்ற ஆரம்பித்தது.

“டேய், இந்த ஆளுக்கு நீயாடா இந்த செருப்பை விற்றாய்?'' பணிக்கர் பையனிடம் கேட்டார்.

“ஆமாம் சார். நான்தான்.''

“உனக்கு இந்தச் செருப்பு எங்கே கிடைச்சது?''

பையன் முதலில் கூறுவதற்குத் தயங்கினான்.

பணிக்கர் கோபத்துடன் இருப்பதைப்போல காட்டிக்கொண்டு எழுந்து நின்று கேள்வியை மீண்டும் கேட்டார்.

“சார்... இதை எனக்கு விற்றது ஒரு பிச்சைக்காரன்...'' பையன் மெதுவான குரலில் சொன்னான்.

“நீ எங்கே வச்சு இதை வாங்கினாய்?''

“அந்த சந்து தெருவில் போய் சந்திக்கிற இடத்தில்...''

“சரி...''

பணிக்கர் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு எட்டணா நாணயத்தை எடுத்து பையனை நோக்கி வீசி எறிந்தார்: “ம்... சீக்கிரம் ஓடு.''

தொடர்ந்து பணிக்கர் அந்தச் செருப்பைக் குனிந்து எடுத்து, அதை வாசலுக்குமேலே வைத்து ஒரு சிறிய சொற்பொழிவை ஆற்றியவாறு இப்படி ஒரு உத்தரவையும் போட்டார்:

“மெஸ்ஸின் அக்கவுண்ட்டில் ஏழணா சேர்க்கப்பட்டிருக்கு. இனிமேல் இந்த செருப்புக்கு யாரும் உரிமை கொண்டாடக் கூடாது.''

மாதவன் நாயர் எதுவும் பேசவில்லை. அப்துல்லாவும் வாய் திறக்கவில்லை. அனுபவம் மட்டும் ஒரு வெற்றி பெற்றுவிட்ட உணர்வுடன் வேகமாக எழுந்து தலையை ஆட்டிக்கொண்டே கூறினார்: “எது எப்படியோ... நான் நாய்களைப் பற்றி சொன்னது சரிதான். அந்த வகையில் தலைகீழாக வைக்கப்பட்ட செருப்பை பிச்சைக்காரன்தான் தொடுவானே தவிர, நாய்கள் தொடாது. அது மட்டும் உண்மை.''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.