Logo

வாய்மொழி வரலாறு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6863
vaimozhi varalaru

ன்னுடைய எழுத்துகளால் ஆரம்ப காலத்திலேயே விவாதங்களை உண்டாக்கியவர் நேடின் கார்டிமர். அவருடைய முதல் நூலான "பட்ங் ப்ஹ்ண்ய்ஞ் க்ஹஹ்ள்" 1953-ஆம் ஆண்டு பிரசுரமானதுடன், ஒரு ஐரோப்பியனின் ஆப்ரிக்காவைப் பற்றிய சிந்தனைகள் சமூகத்தில் மாறின. ஆப்ரிக்காவின் சமீபகால வரலாற்றுக்கு ஒரு புதிய வடிவம் தருவதில் கார்டிமரின் படைப்புகளின் பங்கு அதிகம். வண்ணமயமான வெளிப்பாட்டுடன் கடுமையான அணுகு முறையை அவர் தன் எழுத்துகளில் கையாண்டார்.

அழுத்தப்பட்ட சமூகத்தின் அன்றாட பிரச்சினைகள்தான் கார்டிமரின் படைப்புலகம். ஆப்ரிக்காவில் எழுதி வாழவேண்டும் என்று அவர் எடுத்த தீர்மானம், அவர் விஷயங்களுடனும் சமூகத்துடனும் கொண்டிருந்த ஈடுபாட்டையும் பொறுப்பையும் காட்டுகிறது என்று கூறுவார்கள்.

கதை, நாவல் என்ற பிரிவுகளில் உட்படாத தன்னுடைய படைப்புகளை ஐரோப்பிய ரியலிசத்தின் சட்டத்திற்குள் நிறுத்த கார்டிமர் விரும்பினார். அவரின் மூன்று படைப்புகள் தடை செய்யப்பட்டிருக்கின்றன.

"அரசியல்தான் தென் ஆப்ரிக்காவின் குணம்" என்று நேடின் கார்டிமர் கூறுகிறார். பெண் விடுதலை போன்ற விஷயங்களில் ஈடுபடாததைக் கூறி, கார்டிமருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் எழுந்ததுண்டு. ஆனால், "மனிதத்துவம்தான் தன்னுடைய படைப்புகளின் ஆதார அம்சம்" என்று அவர்களுக்கு பதில் கூறினார் கார்டிமர்.


வெள்ளைக்காரனுக்குச் சொந்தமானது என்பதைப் போல தோற்றம் தந்த ஒரு வீடு எப்போதும் திலோலா கிராமத்தில் இருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட அந்த வீட்டின் மேற்கூரையில் பட்டு சூரியனின் கதிர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பெண்கள் ஆற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக தலையில் வைத்துக்கொண்டு போகும் பாரஃபீன் பாத்திரத்தைப் போல அது மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆற்று மண்ணும் சேறும் சாம்பலும் கொண்டு உருவாக்கப்பட்ட, கிராமத்தின் மீதி வீடுகள் மூங்கில் இலைகளால் வேயப்பட்டதாகவும், மீன் செதில்களைப் போல இலைகள் சிதறி நின்று கொண்டிருக்கும் மோப் பேன் மரக் கொம்புகளுடன் உள்ளதாகவும் இருந்தன.

அது கிராமத்தின் தலைவருடைய வீடு. சில தலைவர்களுக்கு கார் சொந்தத்தில் இருந்தாலும், இந்த மனிதர் அந்த அளவுக்கு முக்கியமானவர் அல்ல. அது மட்டுமல்ல- சிறிய தலைவராக இருந்தாலும், அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து உதவிப்பணம் பெற்றுக் கொண்டிருந்தார். இனி அவர்கள் ஒரு காரே கொடுத்தாலும், அதனால் அவருக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. காரணம்- அங்கு சாலை இல்லை. இடையில் அவ்வப்போது லேண்ட்ரோவர்ஸ் ராணுவம் ரோந்து சுற்றி வரும் போதெல்லாம், கிராமத்து மனிதர்களின் கால்நடைகள் முயல்களைப் போல மோப்பேன். மரங்களுக்கு மத்தியில் பயந்து ஓடின. கிராமம் மிகவும் பழமை வாய்ந்தது. கிராமத்து தலைவரின்  தாத்தாதான் கோத்ரா இன தலைவரின் தலைவர். தன்னுடைய படை வீரர்களை அனுப்பி எதிரிகளைத் தோல்வியடையச் செய்து ஸ்காட்டிஷ் மிஷனரியிலிருந்து முதன்முதலாக பைபிளைப் பெற்ற தலைவரின் பெயர்தான் அவருடைய பெயர். மிஷனரியைச் சேர்ந்தவர்கள் அருள் வார்த்தைகளைக் கூறினார்கள்: "தேடுங்கள் கண்டடைவீர்கள்."

நுனிப்பகுதி கூர்மையாக இருக்கும் ராணுவ விமானங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை கடந்து செல்லும்போதெல்லாம் அங்குள்ள கிராமத்து மனிதர்கள் சமீபகாலமாக அவற்றைப் பார்ப்பதே இல்லை. மீன்கொத்திகள் மட்டும் தங்களுடைய எல்லைக்குட்பட்ட வானத்திற்குள் ஆக்கிரமித்து கடந்து வருபவற்றை நோக்கி குழப்பமடைந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதும் ஆரவாரங்கள் செய்வதும் உண்டு. தூரத்தில் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு படிக்கத் தெரியும். என்றாலும், அங்கு பத்திரிகைகள் எதுவும் இல்லை. எத்தனை ராணுவ வண்டிகள் தகர்க்கப்பட்டன என்பதையும் எத்தனை வெள்ளைக்கார ராணுவ வீரர்கள் அரசாங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் என்பதையும் காட்டும் அரசாங்கத்தின் கணக்குகளை அவர்கள் வானொலி மூலம் கேட்டார்கள்.

கிராமத்தின் தலைவருக்கு படிக்கத் தெரியும். அவரிடம் ஒரு வானொலியும் இருந்தது. ராணுவத்தைத் தாக்குபவர்களுக்கு உணவையோ நீரையோ கொடுத்தாலோ, அவர்களை மறைத்து வைத்தாலோ அவர்களை சிறைகளில் அடைப்போம் என்ற அரசாங்கத்தின் உத்தரவை அவர் முக்கிய நபர்களிடம் வாசித்து, அவர்களைக் கேட்கச் செய்தார். மக்களைக் கொல்வதற்கும் குடிசைகளை எரிப்பதற்கும் எல்லைக்கு அப்பால் சென்று வெடிகளுடன் திரும்பி வருபவர்களிடமிருந்து கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக, இரவு வேளையில் காட்டில் நடந்து திரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைச் சுட்டு விடுவோம் என்ற அரசாங்கத்தின் இன்னொரு கடிதத்தையும் அவர் வாசித்தார். மது அருந்துவதற்கோ உல்லாசமாக இருப்பதற்கோ பக்கத்து கிராமத்திற்குச் செல்பவர்கள் தொலைந்தார்கள். அவர்கள் இனி தங்களின் வீட்டுக்கு வந்து தந்தையின் பாதுகாப்பில் இருக்க முடியாது. ஒருநாள் இளைஞர்கள் வேலை தேடி சுரங்கங்களுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் இவ்வாறு போராட்டப் பயிற்சிகளைப் பெறுவதற்காக எல்லைக்கு அப்பால் போகிறார்கள் என்று வானொலி கூறியது. இளைஞர்கள் மண்ணாலான குடிசைகளையும், தலைவரின் வீட்டையும், லேண்ட்ரோவர்ஸ் குழுவின் வேடம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் விட்டு, வெளியேறி நடந்தார்கள். "நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று குழந்தைகள் இளைஞர்களிடம் கேட்டார்கள். ஆனால், அவர்கள் அதற்கு பதில் கூறவோ திரும்பி வரவோ இல்லை.

யாராவது இறக்கும்போது, வெள்ளைக் கொடியை உயரத்தில் பறக்க விட்டுக் கொண்டிருக்கும், மோப்பேன் மரத்தாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் அங்கு இருந்தது. பிணங்களின் இறுதிச் சடங்குகள் ஸ்காட்லேண்டிலிருந்து வந்திருக்கும் மிஷனரிமார்களின் சடங்குகளுக்கு இணையாக நடந்தன. புதிதாக இறப்பவர்களை முன்னோர்கள் இருக்கும் இடத்திற்கு உயர்த்திக் கொண்டு செல்வதற்காக அந்தச் சடங்குகளை பழைய பழக்க வழக்கங்களுடன் இணைத்தார்கள். வெளிறிய முகங்களைக் கொண்ட பெண்கள், பாதிரியார்களின் இறுதி தீர்ப்பிற்காக அவர்களை ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தார்கள். ஒரு சிறிய சிமிழியில் எலும்புத் துண்டுகளை எறிந்து தீர்ப்பு கூறும் ஜோதிடனுடனும் தாய்மார்களிடமும் கலந்தாலோசித்து பாதிரியார்கள் புதிய பெயர்களைக் கண்டுபிடித்து குழந்தைகளுக்கு வைப்பார்கள்.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலான சனிக்கிழமைகளிலும் தலைவரும் சேர்ந்து பங்குபெறும் ஒரு "மது உபசரிப்பு" அங்கு நடக்கும். தலைவர் அமர்வதற்காக அவருடைய வீட்டிலிருந்து ஒரு நற்காலியை இதற்கென்றே கொண்டு வருவார்கள். மற்றவர்கள் தங்களின் வசதிக்கேற்றபடி இங்குமங்குமாக நிழல்களில் உட்காருவார்கள். அலங்கரிக்கப்பட்ட ஒரு வெள்ளரி ஓட்டில் தலைவர் முதலில் ருசித்து பருகுவார். (மற்றவர்கள் தேங்காய் ஓட்டின் மூலமோ உலோக பாத்திரத்தின் மூலமோ பருகுவார்கள்) இதுதான் கிராமத்து மனிதர்களின் பழக்க வழக்கமாக இருந்தது.

குலம் நின்றிருக்கும் கிராமத்திற்கும் கோத்திரம் நின்று கொண்டிருக்கும் பூமிக்கும் மேற்கு திசையில் மற்றாஸி முதல் கிழக்கு மொம்பாஸா வரை, வடக்கு என்றெபி முதல் எம்பான்ஜனி வரை இருப்பவர்களின் பழக்க வழக்கங்களும் இதேமாதிரிதான் இருந்தன.


"மது விருந்திற்கு எல்லாரும் அழைக்கப்பட்டார்கள். படகில் ஆற்றைக் கடந்து வரும் பயணிகளும், மணலின் வழியாக சைக்கிள்களில் பயணம் செய்து வரும் பயணிகளும் ஏமாற்றப்படவில்லை. காரணம்- நாய்கள் அடுப்பின் நெருப்புக்கு அருகில் தூங்கிவிட்டிருந்தன. குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருந்தன. யாருக்கும் தெரியாமல் பல மைல்களைத் தாண்டி மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் வரும்போது, கீழே விழுந்திருக்கும் காய்ந்த இலைகள் மட்டுமே அவர்கள் வருவதை அறிவித்தன. திலோலாவைத் தாண்டி, எல்லைக்கு இருபக்கங்களிலும் இருந்தவர்கள் கறுப்பு நிறத்தைக் கொண்டவர்களாகவும் ஒரே மொழியையும் பழக்க வழக்கங்களையும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இளைஞர்கள் கிராமத்தைவிட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னால், "நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று யாரும் கேள்வி கேட்காமலிருந்த காலத்தில் "மது விருந்"திற்காக பத்து மைல் தூரம் நடந்து செல்வது என்பது ஆட்களுக்கு மிகவும் சாதாரண விஷயமாக இருந்தது."

அறிமுகமற்றவர்கள் பொதுவாக அங்கு இல்லை. நெருப்பு வெளிச்சம் முகத்தில் படும்போது, அவர்கள் இருட்டில் மறைந்துவிடுவார்கள். யாராலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகள்கூட அவர்களைப் பார்த்து யாருடைய பலவந்தத்தாலோ வாய் பொத்தப்பட்டுவிட்டதைப்போல எதுவும் பேசாமல் இருந்துவிடுவார்கள். பெண்கள் எப்போதும்போல வீட்டின் பின் பகுதிகளில் இருந்துகொண்டு மெதுவாக சிரிக்கவோ, குறும்புத் தனங்கள் காட்டவோ செய்வார்கள். வயதானவர்கள் வெளியூர்களில் இருக்கும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பற்றிய விசேஷங்களைக் கேட்பதில்லை. ஆட்களின் கூட்டத்திலிருந்து யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க தலைவரால் முடியவில்லை. சில வயதான மனிதர்களின்மீது அவருடைய கண்கள் பாய்ந்தன. அவருடைய கூர்மையான பார்வையை அவர்கள் தெரிந்து கொள்ளவும் செய்தார்கள். அதிகாலை வேளையில் வீட்டின் பின் கதவைத் திறந்து பளபளப்பான கான்க்ரீட் படிகளில் இறங்கிச் சென்று, தலைவர் அவர்களில் ஒருவனை அழைத்தார். நொண்டிப் பசுக்களுடனும் கத்திக் கொண்டிருந்த ஆடுகளுடனும் போய்க் கொண்டிருந்த அவன் மெதுவாக நின்றான். தலைவரிடம் அந்த மனிதனைப்போல நிறம் மங்கலான, காலர் இல்லாத சட்டையையும் பழைய அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்தார். ஆனால், தலைவரின் கால்களில் செருப்புகள் இருந்தன. கடிகாரம் கட்டப்பட்டிருந்த கையால் கண்ணாடியைக் கழற்றி இன்னொரு கை விரல்களால் அவன் தன் ராசியைத் தடவிக் கொண்டிருந்தான்.

அந்த ஆளுடைய உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது. எனினும், அவனுடைய கண்கள் சூரியனின் பிரகாசத்தில் மங்கலாகிவிட்டன.

மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதனிடம் ஒரு தலைவருக்கும் வயதான மனிதனுக்குமிடையே இருக்கக்கூடிய வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, தலைவர் கேட்டார்.

"உன் மகன் எப்போது திரும்பி வருவான்?''

"எனக்குத் தெரியாது.''

"அவன் சுரங்கம் எதிலாவது சேர்ந்துவிட்டானா?''

"இல்லை...''

"ஒருவேளை புகையிலை தோட்டம் எதற்காவது போய் விட்டானா?''

"அவன் எதுவும் கூறவில்லை.''

"வேலை தேடிப் போவது... பெற்ற தந்தையிடம்கூட எதுவும் கூறாமல் இருப்பது... அவன் என்ன பையன்? நீ அவனுக்கு எதுவும் சொல்லித் தரலையா?''

தலைவரின் வீட்டைச் சுற்றி வேலியாக நின்று கொண்டிருந்த செடிகளை நோக்கி ஆடுகள் நாக்குகளை நீட்டின. கிழவன் ஆடுகளை விரட்டுவதற்காக ஒரு டப்பாவை எடுத்து அதில் தட்டி சத்தம் உண்டாக்கினான். "இவை உங்களுடைய வீட்டையே தின்றுவிடும்.'' அவன் தன் கையை உயர்த்தினான். அவற்றை விரட்டிவிடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.

"இங்கு இவை திண்பதற்கு எதுவும் இல்லை.'' தலைவர் கூறினார். முதல் மனைவி நட்டு வளர்த்த வேலியில் இருந்த செடிகளை அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தலைவர் மேலும் ஏதாவது கேட்பார் என்று கருதிய கிழவன் ஆடுகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். பிறகு... தன்னுடைய வீட்டின் வாசலை நோக்கித் திரும்பினான். எப்போதும் உள்ள சத்தங்களுடன் ஆடுகளைக் கொண்டு செல்வதற்கு பதிலாக அவன் தேவையற்றும் தொடர்ந்தும் சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தான்.

அடிக்கடி லேண்ட்ரோவர்ஸ் குழுவினர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்த நேரத்திற்குத்தான் என்ற தீர்மானம் இல்லாமலிருந்ததால், அவர்கள் எப்போது வருவார்கள் என்பதை யாராலும் முன் கூட்டியே கூற முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அவர்கள் திரும்பிப் போவதற்கு முன்னால் ஏராளமான மனிதர்கள் இறப்பைச் சந்திப்பார்கள். பல நிமிடங்கள் கடந்த பிறகும், அதன் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மோப்பேன் மரங்கள் பயந்து நடுங்கிய மிருகத்தைப்போல ஆடிக்கொண்டிருக்கும்.

அவர்கள் வரும் திசையில் தூசிப் படலம் உயர்ந்து அடையாளம் தெரியாமல் ஆக்கின. விசேஷத்தைக் கூறுவதற்காக குழந்தைகள் ஓடினார்கள். பெண்கள் தங்களின் குடிசைகளிலிருந்து வேறு குடிசைகளுக்கு ஓடினார்கள். "அரசாங்கம் உங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது" என்ற செய்தியைத் தாங்கிய பறை ஓசை தலைவரின் மனைவிகளில் ஒருத்தியை ரசிக்கும்படி செய்தது. லேண்ட்ரோவர்ஸை வீட்டுக்கு முன்னால் நிறுத்தியவுடன், தலைவர் வெளியே வந்தார். ஒரு கருப்பு நிற ராணுவ வீரன் (அவன் தலைவரிடம் தாய்மொழியில் மரியாதை வார்த்தைகளை மெதுவான குரலில் கூறினான்) வேகமாக இறங்கி வெள்ளைக்காரனான ராணுவத்தைச் சேர்ந்தவனுக்கு கதவைத் திறந்துவிட்டான். கிராமத்தின் தலைவர்களின் பெயர்கள் அனைத்தும் வெள்ளைக்காரனுக்கு மனப்பாடமாகத் தெரியும். ஒரு வெள்ளைக்காரனுக்கே உரிய ஆணவத்துடன் அவன் தலைவரிடம் கேட்டான்.

"எல்லாம் சரியாக இருக்கிறதா?''

"ம்... எல்லாம் சரியாக இருக்கிறது.'' தலைவர் திரும்பக் கூறினார்.

"யாரும் தொந்தரவு தரவில்லையே?''

"இல்லை... யாரும் தொந்தரவு தரவில்லை.''

எனினும், தலைவர் தன்னுடைய கறுப்பு நிற வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். அவர்கள் ஒவ்வொரு குடிசைகள் வழியாகவும் தேடி நடந்தார்கள். கோழிக் குஞ்சுகள் நின்று கொண்டிருந்த சாம்பல் மேடுகளையும் குப்பைகளையும் துப்பாக்கி குழாய் கொண்டு தேடிப் பார்த்தார்கள். பைத்தியம் பிடித்த கிழவியின் வீட்டைப் பார்த்தபோது, இருட்டு அவர்களுடைய கண்களுக்குள் நுழைந்தது. காத்து நின்றிருந்த லேண்ட்ரோவர்ஸுக்கு அருகில் வெள்ளைக்காரன் நின்றிருந்தான். கிராமத்திலிருந்து அப்படியொன்றும் அதிக தூரமில்லாத இடங்களில் நடந்து கொண்டிருக்கும் விபத்துகளைப் பற்றி அவன் தலைவரிடம் கூறினான்: "ஐந்து கிலோ மீட்டர்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்கும் சாலை தகர்க்கப்பட்டுவிட்டது. அந்தச் சாலையில் யாரோ கண்ணி வெடியைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் சாலைகளில் இருக்கும் கேடுகளைச் சரி பண்ணி முடித்தவுடன், அவர்கள் மீண்டும் வைக்கிறார்கள். ஆற்றைக் கடந்து வரும் அவர்கள் அந்த வழியேதான் வருகிறார்கள். அவர்கள் எங்களுடைய வண்டிகளைத் தகர்க்கிறார்கள். ஆட்களைக் கொல்கிறார்கள்.''

வயதானவர்கள் அவர்களுக்கு முன்னால் வட்டமாக நின்றிருந்தார்கள்.

"அவர்களுக்கு இடம் கொடுத்தால், உங்களையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள். குடிசைகளுக்கு நெருப்பு வைப்பார்கள்... எல்லாரையும் அழிப்பார்கள்.''


"அய்யோ!'' ஒரு பெண் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

அவர்களுக்கு முன்னால் அவன் சுட்டுவிரலால் அரை வட்டத்தை வரைந்தான். "அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். என்னால் இவ்வளவுதான் கூற முடியும்.'' கடந்த வருடம் திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்த- மூத்த பேத்தியின் வயதே உள்ள தலைவரின் புதிய மனைவி, வெள்ளைக்காரன் கூறுவதைக் கேட்பதற்கு வெளியே வரவில்லை. அவன் என்ன கூறினான் என்பதை அவள் மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

"நாம் ஏன் இறக்க வேண்டுமென்று அந்த வெள்ளைக்காரன் சொன்னான்?''

காலில் எண்ணெய் தேய்த்து "பளபளப்பு" உண்டாக்கிக் கொண்டே அவள் தலைவரிடம் கேட்டாள்.

"நீ அறிவில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாய். வெறுமனே ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக மட்டும் கேட்காதே.'' அவர் சொன்னார். தன் கணவரிடம் விவாதம் செய்வதற்கோ அதற்குமேல் ஏதாவது கேட்பதற்கோ அவளால் முடியவில்லை.

ராணுவத்தின் துப்பாக்கிகள் எதிர்கரையை நோக்கிப் பாய்வதற்கு முன்பே, ஆற்றைக் கடந்து கொண்டு வந்த பெரிய படுக்கை போடப்பட்டிருந்த உறங்கும் அறைக்குள்- அவள் அவரிடம் கோபித்துக்கொண்டு தன் பச்சைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள்.

அவர் தன்னுடைய தாய் இருக்கும் குடிசையை நோக்கி நடந்தார். கிராமத்து மனிதர்கள் எல்லாரும் நம்பியிருக்கும், வரி வசூலிப்பதற்கும் சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் அணுகும் அந்த நடுத்தர வயது மனிதர் அங்கு ஒரு மகனாக மாறினார். கிழவி தன்னுடைய ஒப்பனை அறையில் இருந்தாள். கதவுக்கு வெளியே வந்து மூங்கில் தடுக்கில் உட்கார்ந்தபோது, அவளுடைய சரீரம் முழுமையாக அதில் அமர்ந்தது. அவளுடைய முகத்தைக் காட்டிய ஒரு கண்ணாடி அங்கு மாட்டப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவள் விளையாடும் பொருளாகக் கேட்கக் கூடிய, சிவப்பு நிற அவரை விதைகள் பதிக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு சிறிய சிமிழும், ஒரு கறுத்த சீப்பும் அந்தக் கிழவியின் கையில் எப்போதும் இருந்தன. பாசம், அன்பு ஆகியவை இல்லாமல் போயிருந்ததால், அவர் காத்துக் கொண்டு நின்றிருந்தார். ஒரு பெண் சிங்கத்திற்கு அதன் குட்டிகளுக்குமிடையே இருக்கும் உறவைப்போல வெளி உலகத்தை மறந்து...

அன்னை தன்னுடைய பெரிய காதுகளைக் கைகளால் தடவினாள். வந்திருக்கும் நோக்கத்தை அவர் கூறவில்லை. கிழவி சிமிழில் இருந்து ஒரு சிறிய எலும்பாலான கரண்டியை எடுத்து மிகவும் கவனமாக வீங்கியிருந்த நாசியின் துவாரங்களுக்குள் நுழைத்தாள். காய்ந்த மூக்கு சளியையும் அழுக்கையும் எடுத்து மூக்கின் மென்மையான பகுதியைச் சுத்தம் பண்ணினாள். அழுக்கை தூரத்தில் எறிந்தாள்.

"உன் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?'' அவள் கேட்டாள்.

"தெரியும். அவர்களில் மூன்று பேர்களை இன்று இங்கு பார்க்கலாம். இரண்டு பேர் மிஷன் பள்ளிக்கூடத்தில். இளைய குழந்தை அவளுடைய தாயுடன்...'' அவருடைய புன்னகையை கிழவி கவனிக்கவில்லை. ஆண் பிள்ளைகளைப் பற்றிய பெருமைக்கும் அவருடைய மிடுக்கான நடவடிக்கைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.

"நல்லது. நீ அதைப் பற்றி சந்தோஷப்படலாம். ஆனால், மற்றவர்களிடம் அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றி விசாரிக்காதே.''

ஒரே ரத்தத்தைக் கொண்டவர்களும் ஒரே சிந்தனையில் இருப்பவர்களுமான அந்தத் தாயும் மகனும் அந்த நிமிடத்தில் ஒன்றானதைப்போல தோன்றியது. அவர் கிழவியாகவும் அந்தக் கிழவி ஆணாகவும்.

"நமக்குத் தெரிந்த பலரும் இல்லாமல் போய்விட்டாலும், அங்கு எல்லா காலங்களிலும் அந்த இடைவெளி இருக்க வேண்டும் என்றில்லை.'' அவர் சொன்னார்.

அவள் தன்னுடைய பெரிய சரீரத்தை அசைத்தாள். "எல்லா குழந்தைகளும் சொந்தக் குழந்தைகளைப்போல இருக்க வேண்டும். எல்லா பிள்ளைகளும் நம்முடைய பிள்ளைகள். இங்குள்ள மனிதர்களின் ஓல்ட்ஃபேஷன்'' அந்தக் கிழவியின் பேச்சில் ஆங்கில வார்த்தை உருளைக் கல்லைப்போல அவரிடம் சென்று விழுந்தது.

அது வசந்த காலம். மோப்பேன் மரத்தின் இலைகள் காய்ந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அழுக்கும் குருதியும் கலந்த மண் நாற்றமெடுக்கத் தொடங்கியது. ரோந்து சுற்றிய விமானங்களிலிருந்து பார்த்தபோது கிராமம் ஒரு போர்க்களத்தைப்போல தோன்றியது. ஆகஸ்டு மாதம் வந்தபிறகும் மழை பெய்யவில்லை. செடிகள் எதுவும் முளைக்கவில்லை. எனினும் கிளிகள் முட்டை போட்டு குஞ்சுகளைப் பொறித்துக் கொண்டிருந்தன. பகல் நேரங்களில் அதிகரித்த வெப்பத்தை இரவு சற்று வாங்கிக்கொண்டு அடுத்த புலர்காலைப் பொழுது வரை காப்பாற்றி வைத்தது. இந்த வெப்பம் நிறைந்த இரவுகளிலும் தலைவரின் வானொலி சத்தமாக கிராமத்துடன் பேசிக் கொண்டிருந்தது. சில ஆட்களை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் புதர்களுக்குள் இருந்து பிடித்துக் கொண்டு வந்து கொன்றார்கள். "தேடிக் கண்டு பிடிப்பது, கொல்வது" என்பதுதான் இப்போது ராணுவத்தின் உத்தியாக இருந்தது. ராணுவத்தைச் சேர்ந்த சிலரும் புதர்களுக்குள் கொல்லப்படுவதும் ட்ரக்குகளில் இருந்து கீழே விழுந்து இறப்பதும் நடந்து கொண்டிருந்தது. அவர்களை முழுமையான மரியாதைகளுடன் அடக்கம் செய்தார்கள். மழை பெய்தால் கால்கள் சேற்றுக்குள் சிக்கிவிடும் என்றும், மழைக்கு முன்பே உள்ள இறுதி வாய்ப்பு இது என்பதும் ஆக்கிரமிப்பு நடத்துபவர்களுக்குத் தெரியும். அதனால் அக்டோபர் வரை புரட்சி தொடரத்தான் செய்யும். எந்தவிதத்திலும் மனிதர்களுக்கு உறங்க முடியாத இந்த நடுங்க வைக்கும் இரவு வேளைகளில் "மது விருந்து" நன்கு இருட்டும் வரை நீண்டு கொண்டிருந்தது. ஆண்கள் அதிகமாகக் குடித்தார்கள். அதைத் தெரிந்து கொண்ட பெண்கள் அதிகமான மதுவைக் காய்ச்சி எடுத்தார்கள். அங்கு நெருப்பு மூட்டியிருந்தாலும், ஒரு ஆள்கூட அதற்கு அருகில் உட்கார்ந்திருக்கவில்லை.

நிலவு வெளிச்சம் இல்லாத இரவு வெப்பமாகவும் இருள் நிறைந்ததாகவும் இருந்தது. முழு நிலவு வந்ததும் இருட்டு குறைந்து ஒரு ஆற்றின் மாய காட்சியைப்போல தோன்றியது. சிவப்பு உதடுகள் அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளித்தன. அவர்களுடைய நாசியிலும் கைகளிலும் வியர்வை முத்துகள் உதிர்ந்தன. வேகும் அளவுக்கு வெப்பம் இருந்தாலும், தலைவர் ஷூக்களையும் சாக்ஸும் அணிந்து தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எல்லாரும் அழுகிப்போன கால்களின் நாற்றத்தை அனுபவித்தனர். தேவாலயத்திலிருந்து கிடைத்த கடவுள்களின் படங்களில் இருக்கும் ஒளி வட்டத்தைப்போல, உருகி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு வெளிச்சத்தில் அவர்களுடைய தாடியும் உதடுகளும் உயர்வதையும், மோப்பேன் மரத்தின் வெள்ளை நிற புற்றுகள் உடைந்து மின்மினிப் பூச்சிகள் வெளியேறுவதையும் தலைவர் பார்த்தார். அவர்களுடைய ஒரு வீட்டு மிருகத்தைக் கொல்வதற்காக என்றே அங்கு ஒரு திருமணமோ கொண்டாட்டமோ நடக்கவில்லை. எனினும், அவர்கள் ஒரு காளையைக் கொன்றனர். காளை மாமிசத்தின் வாசனை அந்தப் பகுதி முழுவதும் பரவிவிட்டிருந்தது. (அந்த நாய்களைப் பாருங்கள். அதை அவை தெரிந்துகொண்டுவிட்டன.)


தலைவரின் கண்கள் அறிமுகமில்லாத ஒரு மனிதனைப் பார்த்ததும், சாய்ந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போனான். ஒரு முறை மட்டுமே அப்படி நடந்திருக்கிறது. தொடர்ந்து அவர் குடித்துக் கொண்டிருக்கும் ஆதரவாளர்களின் தாடை எலும்புகள் உயர்வதையும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இளம் பெண்களைப் பார்த்து புன்னகைப்பதையும் பார்த்தார். குழந்தைகள் அவர்களை தள்ளி விலக்கி, முன்னால் மிகவும் அருகில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். நள்ளிரவு நேரம் ஆனபோது, தலைவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும் நிழலில் நின்றிருந்த ஆள் திரும்பி வரவேயில்லை. பெரும்பாலான மது விருந்துகளிலும் தலைவர் வீட்டுக்குப் போய்விட்டாலும், மற்றவர்கள் மது அருந்துவதைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.

பகலைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த மேற்கூரையைக் கொண்ட தன்னுடைய வீட்டுக்கு தலைவர் சென்றார். புதிய பெண்ணும் ஆறாவது குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குள் அவர் நுழையவில்லை. சமையலறையில் பல தலைமுறைகளாக பத்திரப்படுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்து வெளியே ஓட்ட ஆரம்பித்தார். பின்னால் மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் அவருக்கும் அவருடைய தாத்தாவுக்கும் சொந்தமான கிராமம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அவர் மண்ணின் வழியாக வேகமாக சைக்கிளை ஓட்டினார். ராணுவத்தைச் சேர்ந்த ஒரு ரோந்து குழுவை சந்திப்போம் என்றோ அவர்கள் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள் என்றோ அப்போது அவர் பயப்படவில்லை. மணல் காட்டில் அவர் தனியாக இருந்தார். தனக்கு வாழும் காலம் முழுவதும் நன்கு தெரிந்திருந்த ஒரு மணல் காட்டில், ரோந்து குழுவால் ஏதாவது செய்துவிட முடியும் என்று அவர் நினைக்கவில்லை. சைக்கிள் சவாரி மிகவும் சிரமம் நிறைந்ததாக இருந்தது. எனினும், காலையில் செய்ததைப்போல அவர் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார். பழைய சாமர்த்தியங்கள் அவரிடம் திரும்ப வந்து சேர்ந்திருப்பதைப் போல தோன்றியது. ஒரு மணி நேரத்திற்குள் அவர் ஆர்மி போஸ்ட்டை அடைந்துவிட்டிருந்தார். இயந்திரத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் தான் யார் என்று தலைவர் அறிவித்தார். தொடர்ந்து விசாரிப்புகளுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாவதற்காக ஒரு பிச்சைக்காரனைப்போல அவர் காத்து நின்றிருந்தார். அங்கு இருந்த கறுப்பு நிற ராணுவ வீரன் வெள்ளைக்கார ராணுவ அதிகாரியை அழைத்து எழுப்பினான். அவன் ஏற்கெனவே தலைவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த அதே ராணுவ அதிகாரிதான். தலைவர் வருகை தந்ததற்கான நோக்கம் என்ன என்று அவன் ஒரே பார்வையில் புரிந்துகொண்டான். சிரிப்புடனும் அதிக முன்னெச்சரிக்கையுடனும் திறந்த வாயில், நாக்கின் நுனிப்பகுதி வளைந்து தொட்டுக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் விரலைத் தொட்டு விஷயங்களை சிந்தித்துச் கூறுவதைப்போல.

"எத்தனை பேர் இருக்காங்க?''

"ஆறு... இல்லாவிட்டால் பத்து... இல்லாவிட்டால்... ஒரு வேளை ஒரு ஆள் மட்டும்... எனக்குத் தெரியாது. ஒரு ஆள் அங்கே இருந்தான். அவன் போய்விட்டான்... அவர்கள் திரும்பவும் வருவார்கள்.''

"அவர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு... தூங்கினார்கள்... பிறகு... போய்விட்டார்கள். அப்படித்தானே! ஆட்கள் அவர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் கொடுத்தார்கள். சரிதானா? யார் அதைச் செய்தது என்று உங்களுக்குத் தெரியும். யார் அவர்களை மறைத்து வைத்தார்கள் என்பதும், படுப்பதற்கு இடம் கொடுத்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையா? ம்... உங்களுக்குத் தெரியும்?''

அந்த அறையிலிருந்த ஒரே ஒரு நாற்காலியில் தலைவர் தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். வெள்ளைக்கார ராணுவ அதிகாரி அங்கே நின்றிருந்தான்.

"யார் அது?''

மனதில் இருந்த ஆசைகளையும் எண்ணங்களையும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பார்ப்பதைப்போல ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. தான் எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு அது வெளியே வரவில்லை என்பதையும் தான் புரிந்துகொண்ட அளவுக்கு அதை அவர்களிடம் கூற முடியவில்லை என்பதையும் தலைவர் தெரிந்துகொண்டார். "யார் என்று எனக்குத் தெரியவில்லை.'' -அவர் மிகவும் சிரமப்பட்டு மூச்சை விட்டார். "கிராமத்தில் எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில்... அவர்களில் யாராவது இருக்கலாம்.'' அவர் நிறுத்தி வெள்ளைக்காரனிடம் புகார் கூறுவதைப்போல தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு கூறினார். அது ராணுவ அதிகாரியை அமைதியானவனாக ஆக்கியது.

"சரி... இருக்கட்டும்... பரவாயில்லை... அவர்கள் ஆட்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆட்களால் எதையும் மறுக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? மறுத்துக் கூறுபவர்களின் செவியை அவர்கள் அறுத்தெடுத்துவிடுவார்கள். உதடுகளைப் பிய்த்தெடுத்து விடுவார்கள். கொன்றுவிடுவார்கள். பத்திரிகைகளில் நீங்கள் அந்தச் செய்திகளையும் பார்க்கவில்லையா?''

"இல்லை... நாங்கள் பார்க்கவில்லை. வானொலி மூலமாக அரசாங்கம் சொன்னதைக் கேட்டோம்.''

"அவர்கள் இப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தானே? எவ்வளவு நேரம் குடிப்பார்கள்? ஒரு மணி நேரம்...?''

வெள்ளைக்காரன் தன்னுடன் செயல்படுபவர்களை கூர்ந்து பார்த்தான். போருக்கு தயார் நிலையில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆயுதங்களை எடுத்து, அவர்கள் லேண்ட்ரோவர்ஸ் நின்று கொண்டிருந்த இருட்டுக்குள் தாவினார்கள். வெள்ளை ராணுவ வீரன் தொலைபேசியை எடுத்தான். என்னவோ தடை இருப்பதை நினைத்து பேசும் பகுதியை கையால் மூடினான்.

"சீஃப், ஒரே ஒரு நிமிடத்தில் நான் வந்துவிடுகிறேன். தெரியுதா? ஒரே ஒரு நிமிடத்தில்...'' தலைவரைப் பார்த்து அவன் சொன்னான்: "இவரை டூட்டி அறைக்கு அழைத்துக் கொண்டு போ... தேநீர் கொடு.''

ராணுவ அதிகாரி சாய்ந்து மேஜையின் இடது பக்கத்தில் இருந்த ஒரு ரகசிய அறையின் கதவைத் திருகி, அதைத் திறந்து அரை புட்டி பிராண்டியை வெளியே எடுத்தான். தலைவருக்குப் பின்னால் நின்று கொண்டு அவருக்காக அது என்பதைப்போல சைகை காட்டினான். ஒரு கறுப்பு ராணுவ வீரன் பவ்யம் கலந்த வேகத்துடன் அதை வாங்கினான்.

இரவு நீண்ட நேரம் ஆனதும், ஆர்மி போஸ்ட்டின் எதிரே உள்ள கிராமத்திலிருந்த ஒரு உறவினரின்  வீட்டுக்கு தலைவர் சென்றார். தான் ஒரு "மது விருந்"திற்குச் சென்றிருந்ததாகவும், இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் வீட்டுக்குப் போக முடியவில்லையென்றும் அவர் சொன்னார்.

கைதுகள் நடக்கும்போது தலைவர் அந்தச் செயலுடன் தொடர்பு வைத்திருக்கவோ, கிராமத்தில் இருக்கவோ கூடாது என்று ராணுவ அதிகாரி கூறியிருந்தான். அரசாங்கம் அவரிடம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்தால், அவர்கள் அவருடைய செவியை அறுத்தெடுத்து விடுவார்கள். என்ன கூறியிருக்கிறார்கள் என்பது தெரிந்தால், உதடுகளும் இல்லாமற் போய்விடும். ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது.


அங்கிருந்த பெண் அவருக்கு போர்வையைக் கொண்டு வந்து கொடுத்தாள். தலைவர் குடிசையில் அந்த பெண்ணின் வயதான தந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கினார். அவர் வந்த விஷயமோ, நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்து போன விஷயமோ எதுவுமே காது கேட்காத கிழவனுக்குத் தெரியவே தெரியாது. கடந்த இரவின் நிலவு அப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காட்டில் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த முயல்களைத் தொந்தரவு செய்யாமல் அவர் சைக்கிளை ஓட்டினார்.

புகைப்படலங்கள் கிராமத்தை மூடிவிட்டிருந்தன. அதிகாலை வேளையில் அடுப்பில் நெருப்பை எரியவிட்டிருப்பார்கள். ஆனால்,  தன்னுடைய முகத்தில் வந்து மோதும் கரும்புகையின் பகுதிகள் அடுப்பில் இருந்து வருவது அல்ல என்பது திடீரென்று அவருக்குப் புரிந்தது. மனதின் ஓட்டத்திற்கேற்றபடி சைக்கிளின் வேகமும் குறைந்ததும், அவர் குழைந்த மண்ணில் பாதங்களை ஊன்றி, தள்ளிப்  பார்த்தார். ஆனால், சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் எதிர்பயணம் நடப்பதை அவர் உணர்ந்தார். அங்கிருந்து சென்று கிராமத்தை அடைவதற்கு, முன்னால் வழி இல்லை. குழந்தைகள் மட்டும் எப்போதாவது கவனித்துக் கொண்டிருந்த விமானங்கள் இரவில் வந்து, பயப்படுவதற்கு மட்டும் யாரும் வாசிக்கவோ கேள்விப்படவோ இல்லாத ஏதோ ஒன்றை எறிந்துவிட்டுச் சென்றன. முதலில் அவர் பார்த்தது- சாய்ந்து கிடக்கும் மரத்தின் வேர்களில் ஒரு நாய் கொண்டு போய் போட்ட, ரத்தம் விழுந்து நனைந்த கம்பளியைத்தான். குடிசைகள்... பாத்திரங்கள்... பழத்தோல்கள்... போர்வைகள்... உலோகப் பெட்டிகள்... கடிகாரங்கள்... சைக்கிள்கள்... வானொலி... சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த ஷூக்கள்... இளம் பெண்கள் தலையில்  கட்டியிருந்த வெள்ளை நிற துணிகள்... முன்பு ஸ்காட்டிஷ் மிஷனரியைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்த- பொன் நிற தலை முடி கொண்ட இயேசுவின் அருகில் வெள்ளாட்டுக் கூட்டமும் நீல நிறத்தைக் கொண்ட ஆட்டுக் குட்டிகளும் நின்று கொண்டிருக்கும் அழகான ஓவியங்கள்... கிராமத்து மண் வெடித்து தான் காப்பாற்றி வைத்திருந்தவை அனைத்தையும் தூரத்தில் எறிந்தது. ஐந்து தலைமுறைகள் ஒன்றோடொன்று கொடுத்து வைத்திருந்த செல்வங்கள் அனைத்தும்... குடிசைகள் இடிந்து தகர்ந்தன. மண்ணாலான சுவர்கள் நெருப்பில் வெந்துபோக, மேற்கூரையும் தாங்கிக்கொண்டிருந்த

மரக்கொம்புகளும் சாம்பலாயின. தலைவர் உரத்த குரலில் அலறியவாறு ஒவ்வொரு குடிசையாக பைத்தியம் பிடித்த மனிதனைப்போல அலைந்து கொண்டிருந்தார். எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சுகூட பாதங்களுக்கு நடுவில் நடந்து வரவில்லை. அவருடைய வீட்டின் சுவர்கள் மட்டும் எஞ்சி இருந்தன. அது வெடித்தும், மேற்கூரை இடிந்து விழவும் செய்திருந்தன. தொழுவத்தில் சங்கிலியில் கிடந்தவாறு ஒரு வீட்டு மிருகம் வெந்து போய்விட்டிருந்தது. குடிசைகளில் ஒன்றில் அதேபோல ஒரு மனித உருவமும் வெந்து கிடந்தது- அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய இறந்த உடலில் தார் பூசியதைப்போல... அது பைத்தியக்கார கிழவியின் குடிசை. உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்தவர்கள் அவளை மறந்துவிட்டார்கள்.

எஞ்சி இருந்தவர்களுடன் தலைவரின் தாயும் இளைய மனைவியும் இல்லை. ஆனால், குழந்தை அவருடைய மூத்த மனைவிகளுடன் இருந்து வளர்ந்தது. வெள்ளைக்கார அதிகாரி கமான்டிங் ஆஃபீஸரிடம் தொலைபேசியில் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. என்ன நடக்கப் போகிறது என்று கமாண்டிங் ஆஃபீஸர் அவனிடம் கூறியிருப்பார். அப்படியே இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது அனுபவமுள்ள ஒரு வெள்ளைக்காரனுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

மோப்பேன் மரத்தில் தலைவர் தொங்கி இறந்துவிட்டார். போலீஸோ ராணுவமோ (இந்த காலத்தில் மக்களுக்கு ஒருவரையொருவர் மாறிவிட்டிருந்தனர்) அவருடைய ஆடிக்கொண்டிருந்த ஷூக்களுக்குக் கீழேயிருந்து சைக்கிளைக் கண்டெடுத்தார்கள். கிராமம் முழுவதும் தகர்ந்தபோது, தலைவர் எங்கிருந்து ஒரு கயிறைக் கண்டெடுத்தார் என்ற விஷயம் யாருக்குமே தெரியவில்லை.

மக்கள் திரும்பி வர ஆரம்பித்தார்கள். மோப்பேன் மரங்களுக்கு மத்தியில், தங்களின் தந்தையின் மண்ணில் மரணத்தைத் தழுவியர்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டனர். பெண்கள் ஆற்றிலிருந்து உலோகத்தாலான பாத்திரங்களிலும் பழங்களின் தோல்களிலும் மண் அள்ளிக்கொண்டு வந்தார்கள். உரையாடி ரசித்தவாறு அவர்கள் குடிசைகளைக் கட்டி உயர்த்த ஆரம்பித்தார்கள். அவர்களைவிட

உயரமான மரக்கொம்புகளை வெட்டி தலையில் ஏற்றிச் சுமந்து கொண்டு வந்தார்கள். மேற்கூரைக்கு தாங்கும் கொம்பாக மோப்பேன் மரத்தைக் கண்டடைந்தபோது, ஆண்களின் சத்தம் மிகவும் உரத்து கேட்டது.

வெள்ளைக்காரனிடம் இருப்பதைப் போல கட்டிய, வெள்ளை நிற சுவர்களைக் கொண்ட ஒரு வீட்டுக்கு முன்னால் இருந்த மோப்பேன் மரத்தின் கொம்பில் இந்த நேரத்தில் ஒரு வெள்ளை நிறக் கொடி பறந்து கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.