Logo

மதிப்பிற்குரிய தலைவர்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6760
mathipirkuriya thalaivar

பொது அரசியல் வாழ்க்கையையும் இலக்கிய வாழ்க்கையையும் கைபிடித்துச் செல்வது என்பது ஆப்ரிக்கன் சமூகத்திற்குப் புதிதல்ல. ஹென்றி லோபெஸ், காங்கோவின் பிரதம அமைச்சராக இருந்தவர். பொது வாழ்க்கைக்கும் தனி மனித வாழ்க்கைக்குமிடையே நடக்கும் போராட்டங்களும், பொய்மைகளும், அரசியலும் நிறைந்தவையே இவரின் படைப்புலகம்.

இவர் 1937-ஆம் ஆண்டு காங்கோவில் பிறந்தார். 1971-ஆம் ஆண்டிலிருந்து 1973 வரை காங்கோவின் வெளிநாட்டு அமைச்சர். 1973 முதல் 1975 வரை பிரதம அமைச்சர். 1972-ல் கிராண்ட் ப்ரிக்ஸ் விருதைப் பெற்றார்.

டோஸியர் க்ளோஸே, டிபாலிக்வஸ் ஆகிய புதினங்கள் உட்பட இருபது நூல்களை எழுதியிருக்கிறார்.


"காலனி ஆதிக்கம் உண்டாக்கி விட்டிருக்கும் பொருளாதார நிலை நம்முடைய சகோதரிகளை அடிமைகளாக ஆக்குகின்றன. உரிமைகள் இழக்கப்பட்ட நம்முடைய சமூகத்தைப் பொதுவாகவும், பெண்களை குறிப்பாகவும் இந்தப் பொருளாதார அவலத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டிய கடமை இந்த தருணத்தில் ஆண்களின் கைகளில்தான் இருக்கின்றது.'' (கைத் தட்டல்). "நம்முடைய பெண்களுக்கும் சில வேலைகளில் உரிமை இருக்கிறது. கல்வி கற்ற ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ள நம்முடையது போன்ற ஒரு சுதந்திர நாட்டில், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே செகரட்ரிகளாகவும் விற்பனை செய்யக்கூடிய பெண்களாகவும் வேலை கிடைக்கிறது என்ற விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.'' (கைத்தட்டல்). "சகோதரிகளே, ஏன் இந்தக் கட்டுப்பாடு என்பதை அரசாங்கத்திடமும் நேஷனல் அசெம்ப்ளியிடமும் மனம் திறந்து கேட்பதற்கு நீங்கள் கூட்டத்தின் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் நான் கூற விரும்புகிறேன். மது விடுதிகளிலும் இரவு விடுதிகளிலும் பரிமாறும் பெண்களுக்கான வேலை ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டுமென்றும், ஐரோப்பிய பெண்களை இதிலிருந்து விலக்க வேண்டுமென்றும் சட்டத்தின் எந்த பிரிவில் கூறப்பட்டிருக்கிறது?'' (ஹாலில் இருந்து எல்லாரும் எழுந்து நிற்கிறார்கள். இடி முழக்கத்தைப் போன்ற கைத்தட்டல் ஒலிபெருக்கியை விழுங்குகிறது). "இந்த வேலைகளின் மூலம் நம்முடைய பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய சம்பளம் வெள்ளைக்காரப் பெண்கள் வாங்கக்கூடிய சம்பளத்திற்கு நிகராக இருக்க வேண்டும்.'' (இடி முழக்கத்தைப் போன்ற கைத்தட்டல்).

"காரணம்.... உம்... உம்.... கூறியதைப்போல... அந்த மனிதர் கூறியதைப்போல... ஆமாம்... லா ஃபொண்டேன்... அது லா ஃபொண்டேன் ஆகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.'' (கைத்தட்டல்).

"நான் கூறியதைப்போல "சமமான வேலைக்கு சமமான சம்பளம்" என்று லா ஃபொண்டேன் கூறியிருக்கிறார். பாரம்பரியத்திற்கு பெண் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காத தந்தைகள் தங்களுடைய மூடத்தனமான எண்ணங்களை விட்டெறிய வேண்டிய நேரமிது. ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமைகள் இருக்கின்றன. அதனால்தான்... சகோதரிகளே, நான் கூறுகிறேன்- இந்த ஆண்களின் கொடுமையிலிருந்து நீங்கள் விடுதலையாக வேண்டியதிருக்கிறது.'' (கைத்தட்டல்).

"கோத்ரா இனத்தைச் சேர்ந்தவர்கள் கோபத்திற்கு ஆளாகி, உலகம் முழுவதும் ஆண்கள் பைத்தியம் பிடித்தவர்களைப் போல் தங்களுக்குள் ஒருவரோடொருவர் அடித்துக் கொன்று கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் உங்களுக்கு முன்னால் இந்தக் கூட்டத்தில் நின்று கொண்டு கூறுவதற்கு என்னை அனுமதியுங்கள். கோத்ரா இன மக்களின் நன்மைகளை மீட்டெடுப்பதற்கும் பூமியில் அமைதியான சூழ்நிலையைக் கொண்டு வருவதற்கும் பெண்களால் மட்டுமே முடியும்.'' (கைத்தட்டல்).

தலைவர் ந்கோவாகு இப்படித் தொடர்ச்சியாக இருபது நிமிடங்கள் சொற்பொழிவாற்றினார். சொற்பொழிவை முடித்து விட்டு, அவர் தன்னுடைய வியர்வை அரும்பிய நெற்றியைத் துடைத்துக் கொண்டார். கட்சி அலுவலகத்தின் சொற்பொழிவு அறையில் இருந்த மக்கள் கூட்டம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது. ஆண்களும் பெண்களும் பின்பகுதியில் தட்டி ஒருவரையொருவர் பாராட்டி, வாய்விட்டுச் சிரித்து, உரத்த குரலில் கூப்பாடு போட்டார்கள். "தந்தை ந்கோவாகு... தந்தை ந்கோவாகு... அது தந்தை ந்கோவாகுதானே!''

"ஆமாம்... ஆமாம்...'' அறையின் இன்னொரு பகுதியில் பதில் வந்தது. பெண்களில் சிலர் நடனம் ஆடியபோது, தோள்களில் அவர்கள் தொங்கவிட்டிருந்த குழந்தைகள் மதியநேர தூக்கத்திலிருந்து கண்விழித்து குறும்புத்தனங்களை வெளிப்படுத்தின.

பாதுகாப்பு வீரன் தொழில்ரீதியிலான தோலாலான பட்டையைக் கழற்றி எடுத்தான். ந்கோவாகு அதில் மடித்து வைத்திருந்த சொற்பொழிவுக் குறிப்புகளை அவன் வெளியே எடுத்தான். சந்தோஷக் கடலில் மூழ்கிவிட்டிருந்த மக்கள் கூட்டத்தால் அமைதியாக இருக்கவே முடியவில்லை.

இரவு எட்டு மணிக்கு ந்கோவாகு வீட்டுக்குத் திரும்பினார். வீட்டை அடைந்தபோது வேலைக்காரச் சிறுவன் வேகமாக இறங்கிச் சென்று பெட்டியை வாங்கினான். அவர் ஒரு நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

"புக்கா... புக்கா... வந்து அப்பாவிடம் ஹலோ சொல்லு...''

குழந்தை தன்னுடைய தந்தையின் மடியில் ஏறியது. ந்கோவாகு தன்னுடைய ஏழாவது ஆண் குழந்தையை பெருமையுடன் பார்த்தார்.

"அப்பா, நீங்க எனக்கு அப்போலோ ட்வெல்வ் வாங்கித் தரவில்லை!''

"அது என்ன?''

"அக்பாய்க்கிட்ட ஒண்ணு இருக்கு. அவனுடைய அப்பா வாங்கித் தந்திருக்கிறார்!''

"எமிலின்...'' ந்கோவாகு உரத்த குரலில் கத்தினார்: "எமிலின்...''

"அவள் பள்ளிக்கூடத்திற்காக ஒரு சொற்பொழிவு எழுதிக் கொண்டிருக்கிறாள்.''  சமையலறைக் குள்ளிருந்து அவளுடைய தாய் உரத்த குரலில் சொன்னாள்.

"சொற்பொழிவு எழுதுகிறாளா? கணவனை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதை எழுத்து அவளுக்கு கற்றுத் தராது. என் செருப்பை எடுத்துக் கொண்டு வரும்படி அவளிடம் சொல்லு.''

"நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க. அந்த அப்பிராணி பெண்கிட்ட இன்னும் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க.''

"சொல்லுடி... நீ எப்போதிருந்து கணவனிடம் எதிர்த்துப் பேச ஆரம்பிச்சே? என் மகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை நீ எனக்கு கற்றுத் தரப் போறியா?''

"இங்கே இருக்கு அப்பா.... செருப்பு இங்கே இருக்கு!'' புக்கா சொன்னான்.

"நல்லது மகனே... என்னைப் பற்றி உனக்காவது கவலை இருக்கிறதே! ஆனால், இது கொஞ்சம் அதிகமாயிடுச்சு தெரியுதா? இங்கே உள்ள வேலைகளை நாம... ஆண்களா செய்வது?''

"எமிலின்...''

எமிலின் பரபரப்பாக வெளியே வந்தாள். ""இப்போதுதான் எழுதிக் கொண்டிருக்கனுமா? உன்னை நான் எத்தனை முறைகள் அழைத்தேன்?''

"ஸாரி அப்பா... நீங்க அழைத்தது என் காதில் விழவில்லை!''

"நீ எங்கே இருந்தே?''

"என் அறையில்...''

"உன் அறையிலா? கனவு கண்டுகொண்டு இருந்திருப்பாய்!''

"இல்லை அப்பா. நான் மேத்ஸ் ஹோம் ஒர்க் செய்து கொண்டிருந்தேன்!''

"கனவு காண்பதையும் கணக்கையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது. கணக்கு படிக்க வேண்டுமென்றால், மிகுந்த கவனம் இருக்க வேண்டும். ஒரு ஆளுக்கு நல்ல கவனம் இருந்தால், அந்த ஆள் மற்றவர்கள் அழைப்பதைக் கேட்பான். சரி... எனக்கு கொஞ்சம் விஸ்கி கொண்டு வா!''


எமிலின் சுவரில் இருந்த அலமாரியை நோக்கி இயந்திரத் தனமாக நடந்தாள். அவள் போர்டிங் பள்ளிக் கூடத்தைப் பற்றி கனவு கண்டாள். வீடுகளை விட்டு விலகி இருக்கும் தோழிகளைப் பற்றி அவளுக்கு பொறாமை உண்டானது. சொந்தக் கால்களில் நிற்பது என்ற விஷயம் எந்த அளவுக்கு இனிமையான ஒன்று! தாய்- தந்தையர் தங்களுடைய நன்மைக்காகத்தான் அவர்கள் ஒவ்வொன்றையும் செய்வதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களைப் படித்துக் கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. ஓ... புட்டி காலியாக இருக்கிறது!

அலமாரியின் அறைகள் எல்லாவற்றையும் எமிலின் வீணாக ஆராய்ந்து பார்த்தாள்.

"என்னுடைய விஸ்கி என்ன ஆனது?''

"இதில் கொஞ்சம்கூட இல்லையே!''

"என்ன? கொஞ்சம்கூட இல்லையா? ம்ஹா! இரண்டு நாட்களுக்கு தோழிகளுடன் விளையாடுவதற்கு உன்னை நான் விட மாட்டேன்!''

"ஆனால்... அப்பா, இது என்னோட பிரச்சினை இல்லை!''

"புட்டி பாதியாகி விட்டது என்ற விஷயம் தெரிந்த உடனே நீ போயி ஒரு புட்டியை வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும். சரி... அப்படியென்றால் ஒரு பீர் தா!''

அவர் டி.வி.யை நோக்கி நகர்ந்தார். மரியம் மக்கேபா பாடிக் கொண்டிருந்தாள். அவளுடைய பாடலைப் பொதுவாகவே அவர் ரசிப்பதுண்டு. ஆனால், அந்த சாயங்கால வேளையில் அவள் அவரை சிறிதுகூட கவரவில்லை.

நகரத்தில் நடைபெற்ற அவளுடைய மிகவும் புதிய இசை நிகழ்ச்சியின் ஒலி நாடாவைத்தான் அவர்கள் காட்டிக் கொண்டிருந்தார்கள். வாரத்தில் இரண்டு முறைகளாவது ஒளிபரப்பிக் கொண்டிருப்பதால், அது ந்கோவாகுவிற்கு மனப்பாடமாகி விட்டிருந்தது. டி.வி. தயாரிப்பாளர்கள் விஷயங்கள் கிடைக்காமல், பொதுமக்கள் ஒரு நூறு முறை பார்த்துவிட்ட நிகழ்ச்சியாக இருந்தாலும், மீண்டும் தங்களுடைய கையில் இருக்கும் நிகழ்ச்சியையே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ந்கோவாகுவிற்கு அதிகமான வெறுப்பு உண்டானது. அவர் நேரத்தைப் பார்த்தார்.

"நாம் எப்போது உணவு சாப்பிடுவது?''

"ஐந்தே நிமிடங்களில்...'' சமையலறைக்குள்ளிருந்து அவருடைய மனைவி உரத்த குரலில் கூறினாள்.

"எனக்குப் பசிக்கிறது!''

"சாதம் வேகவில்லை!''

"எப்போதும் இதே பல்லவிதான். வேண்டிய நேரத்தில், எதுவுமே தயாராவதில்லை!''

மரியம் மக்கேபா "மலைகா" பாடிக் கொண்டிருந்தாள். ந்கோவாகு இசைக்குள் மூழ்கினார். அவருக்கு நல்ல பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். பிறகு, அந்த தென் ஆப்ரிக்க பாடகி தன்னுடைய புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றைப் பாடி நடனமாடினாள். அலைகளில் சிக்கிய படகைப்போல அவளுடைய பின் பகுதி அசைந்து கொண்டிருந்தது.

"இரவு உணவு தயாராகி விட்டது.'' அவருடைய மனைவி அழைத்தாள்.

ந்கோவாகு பதில் கூறவில்லை.

"இரவு உணவு... குளிர்ச்சியாகிக் கொண்டிருக்கிறது!''

ந்கோவாகு தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டார். பாடலைக் கேட்கும்போது, யாராவது தொல்லை கொடுப்பது என்பது அவருக்கு விருப்பமற்ற ஒரு விஷயமாக இருந்தது. மரியம் பாடிக் கொண்டிருந்த டி.வி.க்கு எதிரில் அவர் உட்கார்ந்திருந்தார்.

"பிறகு... சாதமும் மாமிசக் கூட்டும்... அதுதானே?''

"இந்த நேரத்தில் சந்தையில் தேர்வு செய்து எடுப்பதற்கு வேறு எதுவுமே இல்லை!''

"வேறெதுவும் இல்லையா? அங்கே மீன் இல்லையா?''

"உணவைப் பற்றி நீங்கள் ஏதாவது கருத்து கூறுவது என்பதை நான் முதன்முறையாக கேட்கிறேன். ஒவ்வொரு நாளும் உணவு வகைகள் மாறிக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால், அதற்கு வரையறைகள் இருக்கின்றன. இரவு உணவுக்கு என்ன தேவை என்று நான் காலையில் கேட்டபோது நீங்கள் பெட்டியை எடுத்துக் கொண்டு வேகமாக அலுவலகத்திற்குச் சென்று விட்டீர்கள்!''

"அதுதானே இறுதி சாக்கு! உணவைவிட பெரிதாக நான் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன என்பதை நீ புரிந்து கொள்வதில்லை. ஒவ்வொரு அலுவலகத்திலும் வேலை செய்வதற்கு நீ போவது இல்லையே! பணம் கொண்டு வருவது நான் ஒரே ஒரு ஆள்!''

"சந்தோஷத்துடன் நாம் இந்த வேலைகளை மாற்றிக் கொள்வோம்!''

"நான் செய்ய வேண்டியது பெண்களின் வேலைகளை அல்ல. எத்தனையோ பெண்கள் இதேபோல பணத்தையும் ஃபிரிட்ஜையும் கொண்டு வரக்கூடிய ஒரு கணவன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும்!''

"அப்படியா? வாரத்திற்கு நீங்கள் தரும் பணத்தைக் கொண்டு இந்த பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு நான் எவ்வளவோ போராடிக் கொண்டிருக்கிறேன்!''

"உண்மைதான்... பணம் உண்டாக்குவது நீ அல்ல...''

டி.வி.யில் செய்தி வாசிப்பவர்கள் தேசிய செய்திகளை வாசிக்க ஆரம்பித்தார்கள்.

"எல்லாரும் வாயை மூடுங்க... நான் இதைக் கேட்க வேண்டும்!''

"தேசிய இடது சாரி மகளிர் அமைப்பின் தலைமையில் நடைபெற்ற மாநாடு இன்று ஆரம்பமானது. அமைப்பு உருவான பிறகு நடைபெறும் அதன் இரண்டாவது மாநாடு இது. ஆப்ரிக்காவின் பக்கத்து நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டவர்களும், ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா ஆகிய நட்பு நாடுகளின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர்."

ந்கோவாகுவிற்கு தாங்க முடியாத அளவிற்கு கோபம் வந்தது. செய்தி வாசித்த மனிதனை தண்டிப்பதைப் பற்றி நாளை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சரிடம் பேச வேண்டும். அவன் தன்னுடைய சொற்பொழிவைப் பற்றி குறிப்பாகக்கூட உணர்த்தவில்லை. ந்கோவாகு ப்ளேட்டைத் தள்ளி வைத்தார்.

"எனக்கு அப்படியொன்றும் பசி இல்லை.''

செய்தி வாசிப்பவன் நைஜீரியாவில் நடைபெறும் போரைப் பற்றி சொன்னான். அவர்கள் எதற்காக எப்போதும் போரைப் பற்றிய ஒரே படங்களையே திரும்பத் திரும்ப காட்டிக் கொண்டிருக்கிறார்கள்? ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டே ந்கோவாகு சிந்தித்தார்.

"பெண் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? வீட்டு வேலைகளிலும் சமையலிலும் அவர்கள் உனக்கு உதவியாக இருக்கக் கூடாதா? மார்ஸலின், நீ என்ன சொல்றே?''

"அப்பா... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.''

"நீ ஒரு பெண் என்பதை மறந்து விடாதே. ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானது வீட்டு வேலைதான்.''

"நீங்க மேலும் கொஞ்சம் தெரிந்து பேசுங்க.''

அவளுடைய தாய் ஞாபகப்படுத்தினாள்.

"மார்ஸலின் பள்ளிக்கூடத்தில் இறுதி வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் டிப்ளமோ தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறாள் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.''

"ஒரு டிப்ளமோவால் அவளுடைய கணவனை வீட்டில் இருக்க வைக்க முடியும் என்று நீ நினைக்கிறாயா? நல்ல உணவு உதவியாக இருக்கும்... ஆமாம்... பிறகு... இன்னும் சில விஷயங்கள்...''

"இன்னும் கொஞ்சம் அறிவோட பேசுங்க.''

"ஓ... அப்பா, பாருங்க...'' புக்கா அழுதுகொண்டே அழைத்தான்.

தொலைக்காட்சியில் பயாஃப்ராவில் உள்ள குழந்தைகளைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வயிறு வீங்கிய எலும்புக் கூடுகளாகக் காட்சியளித்தார்கள். வீடு மொத்தமும் பேரமைதியாக இருந்தது.


"அந்தக் குழந்தைகள் ஏன் இந்த அளவுக்கு எலும்புக் கூடுகளாக இருக்கு?''

"அது அவர்களின் குற்றம் அல்ல, மகனே.'' தாய் திருத்தினாள்.

ந்கோவாகு எழுந்து தன்னுடைய அறைக்குச் சென்றார். சீட்டி அடித்துக்கொண்டே ஆடைகளைக் கழற்றி படுக்கையில் எறிந்தார். அவற்றை அவருடைய மனைவி பிறகு துவைத்துச் சரி பண்ணுவாள். ஒரு சாம்பல் நிற பேண்டையும் பாக்கெட்டிலும் காலரிலும் பொன்நிற  லைனிங் கொண்ட அடர்த்தியான வண்ணத்திலிருந்த ஒரு லூஸான சட்டையையும் அவர் அணிந்திருந்தார். கண்ணாடியில் அவர் மிகவும் இளைஞனாக காட்சியளித்தார். ஒரு சிகரெட்டில் நெருப்பு பற்றவைத்து சீட்டி அடித்துக் கொண்டே அவர் வெளியே இருட்டில் மறைந்தார்.

நகரத்தின் எல்லையில் இருட்டில் மூழ்கியிருந்த ஒரு தெருவில்தான் "பீக் எ.பு.பார்" இருந்தது. எனினும், பாரில் மின்சாரம் இருந்தது. மிகவும் அழகியான இளம் விதவை மார்கரீட்டாதான் அதன் உரிமையாளர் என்பதுதான் அதற்குக் காரணம். அவளுக்கு உள்ளாடைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் அழகான மார்பகங்களும் பெரிய கீழ்ப்பகுதியைக் கொண்ட செருப்புகளும் இறுக்கி ஒட்டியிருக்கும் ஆடைகளை அணியும் போது வெளியே தெரியக்கூடிய மறக்க முடியாத நீளமான கால்களும் இருந்தன.

அவள் பிறந்த காலத்திலிருந்து அவளைத் தெரிந்தவர்கள் கூறுவார்கள்- காங்கோவில் சில அமெரிக்கப் பொருட்களை விற்கத் தொடங்கியபோதிலிருந்து அவளுடைய தோல் வெளுக்க ஆரம்பித்தது என்று. மார்கரீட்டா மிகவும் புகழ்பெற்றவளாக இருந்தாள். ஒரே   நேரத்தில் எல்லாரையும் தனி ஒருத்தியே திருப்தி படுத்த முடியாது என்பதால், தன்னைப்போலவே அழகிகளாக இருக்கும் உறவுக்கார பெண்களைத் தன்னுடன் அவள் தங்க வைத்தாள். எப்போதாவது ஒரு உயர்ந்த அதிகாரி, பல அதிகாரிகளுடன் "பீக்.எ.பு.பாருக்கு" வருவதாக இருந்தால், மார்கரீட்டாவின் கன்னத்துடன் கன்னத்தைச் சேர்த்து வைத்துக் கொண்டு நடனமாட அவர்களுக்கு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்துவிட்டு, அவர் மிடுக்காக சுற்றிக் கொண்டிருப்பார். அன்று நள்ளிரவு வேளையில் அவர் மார்கரீட்டாவின் காதில் முணுமுணுத்து விட்டு "அதைச் செய்வதற்காக" சென்றார். அவளுடைய உறவுப் பெண்கள் அந்த வெளிநாட்டு அதிகாரிகளுடன் "அதைச் செய்து கொண்டிருந்தார்கள்."

இந்த சந்தோஷம் கை மாறுவதற்கிடையில் மார்கரீட்டா தனக்குத் தேவையான எல்லாவற்றையும் அடைந்துவிட்டாள். இரண்டு மாத காலம் மின்சார அமைச்சரை தொடர்ந்து கவனித்துக் கொண்டதால், அவளுடைய பாருக்கு மின்சாரம் கிடைத்தது.

நகரத்தின் அந்தப் பகுதிக்கு வருவதற்காக மேரி தெரேசா ஒரு வாடகைக் காரைப் பிடித்தாள். பாருக்குள் நுழைவதற்கு முன்னாள் அவள் சற்று சந்தேகப்பட்டு நின்றாள். முக்கியமாக கிராம ஃபோனுக்குத்தான் மின்சாரம் தேவைப்பட்டது என்றாலும், அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. பல்புகளில் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்ததால், ஆங்காங்கே சிவப்பு நிறத்தில் நிழல்கள் அசைந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது. அறைகளை மூங்கில்களைக் கொண்டு சிறிய சிறிய அறைகளாக ஆக்கியிருந்தார்கள். அந்த அறைகளில் இருந்தவர்கள் தேவையற்ற திருட்டுப் பார்வைகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார்கள். மேரி தெரேசா அழகான ஒரு சிறிய பெஞ்சில் போய் உட்கார்ந்தாள். மார்கரீட்டா அவளை தன்னுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த ஒருத்தியிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். உறவுப் பெண் புதிதாக வந்திருந்த பெண்ணின் அருகில் வந்து, தெரேசாவின் பாதங்களைத் தடவ ஆரம்பித்தாள்.

"நன்றி... எனக்கு இப்போது எதுவும் வேண்டாம். நான் ஒரு மனிதருக்காகக் காத்திருக்கிறேன்.''

பணிப்பெண் பாருக்குள் திரும்பி நடந்தபோது, ஒரு மனிதன் திடீரென்று அவளைத் தாவிப் பிடித்து, இடுப்பில் கையைச் சுற்றி வளைத்து, ரும்பா நடனமாடும் இடத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றான். அவளிடம் நிலவிய அமைதி திடீரென்று இல்லாமற் போய், இருவரும் பின்பகுதிகளை ஒட்ட வைத்துக் கொண்டு வேகமாக நடனமாடினார்கள். அவர்களுக்கு ஒருவரோடொருவர் மறைத்து வைப்பதற்கு எதுவுமில்லை. மேரி தெரேசா சிந்தித்தாள். வெளிச்சம் இந்த அளவுக்கு மங்கலாக இருந்தால், அவர்களின் கண்கள் மூடி இருப்பதை நம்மால் பார்க்க முடியாதே! அந்தக் காட்சியில் மேரி தெரேசா நிலைகுலைந்து போனாள்.

நடனம் முடிவடைந்தபோது, அவன் பாருக்குத் திரும்பி வந்த பணிப்பெண்களைப் பார்த்து ஆபாசமாக சிரித்தான். அடுத்த நடனம் ஆரம்பமானபோது, அவன் மேரி தெரேசாவின் அருகில் வந்தான். அவனுடைய கூர்மையான பார்வையும் அழகான கண்களும் அவளை தன்னை மறக்கச் செய்தன.

"நான் தயாராக இல்லை... நன்றி...''

"நான் என்ன அழகாக இல்லையா?''

அவள் தூரத்தில் தலையைச் சாய்த்துப் பார்த்தாள். அந்த நிமிடத்தில் ந்கோவாகு உள்ளே வந்து கொண்டிருந்தார்.

"ஓ... என்னை மன்னித்துவிடுங்கள், தலைவரே. என்னை மன்னித்துவிடுங்க. எனக்குத் தெரியாது.''

ந்கோவாகு எதுவும் கூறவில்லை. அவர் திரும்பி நின்று கொண்டு தனக்குத்தானே கூறிக் கொண்டார்: "அதோ... முட்டாள் பவாலா... யாரிடம் பேசுகிறான் என்பதை நான் கூறுகிறேன்!"

உறவுப் பெண் திரும்பி வந்து சிறிது நேரம் மதிப்பிற்குரிய தலைவரிடம் தமாஷாகப் பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள். உலகத்திலேயே மிகவும் எளிமையான ஒரு மனிதர் மதிப்பிற்குரிய தலைவர் ந்கோவாகு. தொழிலாளி வர்க்கத்தில் பிறந்தவர். அதனால் மக்களுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்வதில் அவருக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. அவர் மது வேண்டும் என்று கூறினார். உறவுப் பெண்கள் மதுவுடன் வந்தபோது, அவர் பணத்தைக் கொடுப்பதற்கு முன்வந்தார். பாரில் இருந்த மனிதன் அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டான் என்று அவள் சொன்னாள்.

ஒரு பச்சான்கா பாடத் தொடங்கியபோது, மேரி தெரேசா நடனம் ஆட ஆரம்பித்தாள். நடனமாடும் இடத்தில் யாருமே இல்லை. பாரில் இருந்த எல்லாரும் அவள் ந்கோவாகுடன் சேர்ந்து நடனம் ஆடுவதைப் பார்த்து புன்னகைத்தார்கள். இசைக்கு ஏற்றபடி இடுப்பையும் கால்களையும் அசைத்து ஒரு பெண் தன்னுடைய இளமையைத் திறந்து காட்டுவதைப் பார்த்து அவர்கள் சத்தம் போட்டுச் சிரித்தார்கள். ஐம்பது வயதுள்ள ஒரு ஆணின் தொப்பை விழுந்த வயிறும் வழுக்கைத் தலையும் சுறுசுறுப்பான காலடி வைப்புகளில் இருந்து அவரை தடுக்காமல் இருந்ததைப் பார்த்து அவர்களுக்கு சுவாரசியம் உண்டானது.

பாரில் இருந்து கொண்டு அவர் தன்னுடைய கருத்தைக் கூற தயங்கவில்லை.

"ஆமாம்... சகோதரிகளே... அதுதான் ஆப்ரிக்கா... நம்முடைய நீக்ரோ இனம்... நம்முடைய கறுப்பு... நம்முடையது ஒரு நடன கலாச்சாரம்.''

ஆனால் நடனமாடிக் கொண்டிருந்த ஜோடிகள் பாரில் பார்வையாளர்களாக இருந்தவர்களை கவனிக்கவே இல்லை. அவர்கள் ஒருவரோடொருவர் ஒன்றிப் போய்விட்டிருந்தார்கள்.

மூன்று நடனங்களுக்குப் பிறகு ந்கோவாகு புறப்படுவதற்குத் தயாரானார். "இப்பவே போகணுமா?''அவள் கேட்டாள்: "இந்த இடம் எவ்வளவு அழகாக இருக்கு?''


"வேறு சில இடங்கள் இதைவிட அழகாக இருக்கின்றன.'' அவர் அவளை வாரி எடுத்து இருட்டில் மறைந்தார்.

ஹோட்டல் ரிலைஸிற்கு முன்னால் இருந்து கொண்டு ந்கோவாகு திரும்பவும் கூறினார்:

"மிஸ் பேக்கரின் பெயரில் ஒரு அறை செகரட்ரி கூறி "புக்" பண்ணப்பட்டிருக்கிறது. ரிசப்ஷனுக்குச் சென்று சாவியை வாங்கி அறையில் காத்திரு. பதினைந்து நிமிடங்களுக்குள் நான் நீ இருக்கும் இடத்திற்கு வருகிறேன்.''

அறையில் வெளிச்சம் அணைந்தபோது பலமான ஒரு கை தன்னைச் சுற்றி வளைத்து விட்டிருப்பதை மேரி தெரேசா உணர்ந்தாள்.

அவருடைய கையிலிருந்த உரோமங்கள் அவளுடைய கை உரோமங்களுடன் சேர்ந்தன. அவளுக்கு அப்போது மூச்சு அடைப்பதைப்போல இருந்தது. அவர் எப்போதும் அப்படித்தான். அவளைக் கொஞ்ச வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவளுக்குள் மூழ்கிவிடுவதற்கு அவர் விரும்பினார். வேதனை உண்டானாலும், அவளால் உரத்த குரலில் அழ முடியவில்லை.

"நான் உன்னை வேதனைப்படுத்தி விட்டேனா?''

"இல்லை... அதற்கு நேர் மாறாக...''

அவளுடைய நகங்கள் அவருடைய சதைக்குள் ஆழமாக இறங்கின. அவருடைய திறந்த வாய் தன்னுடைய முகத்திற்கு நேராக நெருங்கிக் கொண்டிருப்பதை அவள் தெரிந்து கொண்டாள். மேலும் கீழும் மூச்சு விடுவதைத் தவிர, அவளால் எதுவும் கூற முடியவில்லை. வேறு எதையும் செய்வதற்கும் முடியவில்லை. அவர் அதற்கு எப்போதும் நீண்ட நேரம் எடுப்பார். இளைஞர்களைவிட நீண்ட நேரம். அவள் அதை விரும்பினாள். தான் நாசமாகி விட்டோம் என்ற விஷயம் அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதனால் என்ன? அவள் துடித்தாள்... ஜொலித்தாள்... பிறகு, சுதந்திரமானவளாக ஆனாள்.

இறுதியில் எப்போதோ தூக்கத்தின் ஆழங்களுக்குள் விழுவதற்கு முன்னால், அந்த இரவு வேளையில் அவள் நான்கு முறை சிணுங்கவும் அழவும் செய்தாள்.

"ஓ... இது எந்த அளவிற்கு சுகமாக இருக்கு! என்னை இப்படி சந்தோஷப்படுத்துவதற்கு நீங்கள் எந்த அளவிற்கு கருணை மனம் கொண்டவராக இருக்கிறீர்கள்!''

ஒரு பெரிய அமெரிக்கன் காரில் ந்கோவாகு வந்து தன்னை அழைத்துக் கொண்டு செல்வதை அவள் கனவு கண்டாள். கறுப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த அவள் சந்தோஷத்தில் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாள். தன்னுடைய மனைவி இறந்துபோய் விட்டாள் என்று அவர் அவளிடம் கூறினார். அவளை அழைத்துக் கொண்டு செல்வதற்காக அவர் பிணத்தின் இறுதிச் சடங்குகள் நிகழ்ச்சியிலிருந்து நேராக வந்திருக்கிறார். அவளால் அதை நம்ப முடியவில்லை. அவள் சில பழைய ஆடைகளையும் உடுப்புகளையும் எடுக்க வேண்டுமென்று நினைத்தாள். ஆனால், தன்னால் சிறிதுகூட நேரத்தை வீணாக்க முடியாது என்று ந்கோவாகு கூறினார். அவளை காரில் ஏற்றிக்கொண்டு ந்கோவாகு விமான நிலையத்திற்கு வேகமாகச் சென்றார். வழியில் ஏராளமான அறிமுகமான முகங்களை அவள் பார்த்தாள். ஒரு கிழவனை குழந்தைகளிடமிருந்து பிரித்து எடுத்தாள். மிசஸ் ந்கோவாகுவைக் கொன்றுவிட்டாள் என்று தன்மீது குற்றத்தைச் சுமத்தும் பேச்சை, காருக்கு வேகம் இருந்தாலும், அவள் தெளிவாகக் கேட்டாள். விமான நிலையத்தை அடைந்தபோது, மேரி தெரேசா வியர்வையில் குளித்து விட்டிருந்தாள். இடமில்லாமலிருந்ததால், அவர்கள் காக்பிட்டில் இருக்க வேண்டியதிருந்தது. ந்கோவாகு கட்டுப்பாட்டைத் தன் கையில் கொண்டு வந்து, இயந்திரத்தை ஸ்டார்ட் செய்தார். ரன்வேயின் வழியாக ஓடினாலும், அதனால் தரையிலிருந்து பத்து அடிகளுக்கு மேலே உயர்வதற்கு முடியவில்லை. தன்னைப்பின் தொடர்ந்து வருவதைப்போல தோன்றிய அந்த கறுப்பு நிற நாய் விமானத்திற்குள் தாவி ஏறுவதை மேரி தெரேசா பார்த்தாள்.

கனவு காட்சிகளில் இருந்து அதிர்ச்சியடைந்து சுய உணர்விற்கு வந்தபோது, மேரி தெரேசா ஆடை அணிந்து நின்று கொண்டிருக்கும் ந்கோவாகுவைப் பார்த்தாள்.

"நான் இப்போது போக வேண்டும்.''

அவருக்கு அருகில் அவள் வந்தாள்.

படுக்கையின் அருகில் அமர்ந்து அவளுக்கு முத்தம் தந்துவிட்டு அவர் திரும்பவும் கூறினார்:

"நான் போக வேண்டும்.''

"ஆனால்... நான்... நான் உங்களிடம் சில விஷயங்களைக் கூற வேண்டும்.''

"இங்கு என்னைப் பிடித்து நிறுத்தி வைப்பதற்காக நீ ஒவ்வொரு வழிகளையும் பார்க்கிறாய்.''

"இல்லை... இது மிகவும் முக்கியமான ஒரு விஷயம்.''

அவள் அவருடைய கையைப் பிடித்து போர்வைக்கு கீழே தன்னுடைய அடிவயிற்றில் வைத்தாள்.

"உங்களுடைய குழந்தை என் வயிற்றில் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.''

"என்ன? நீ தமாஷாகக் கூறுகிறாய்.''

"இல்லை... இது உண்மை.''

"ஓஹோ... இது என்னுடைய குழந்தைதான் என்பதற்கு என்ன ஆதாரம் உன்னிடம் இருக்கு?''

அவள் வயிற்றைப் பார்த்தாள். தலையணையை அழுத்திக் கடித்தாள். பிறகும்... பிறகும்... அழ ஆரம்பித்தாள். முஷ்டியைச் சுருட்டி படுக்கையை அடிக்கவும் கால்களால் உதைக்கவும் செய்தாள்.

"என்ன ஆச்சு தங்கமே?''

"போ... அயோக்கியா... வெளியே போ... வெளியே போ... அயோக்கியா... போ... வெளியே போ...''

சூரியன் வானத்தின் விளிம்பில் தலையை நீட்டியது. ஒரு வெப்பமான நாளை அளிப்பதற்காக தொடர்ந்து வானத்தை நோக்கி மெதுவாக ஏறியது. சாளரத்தின் வழியாக வந்து சேர்ந்த அதிகாலைப் பொழுது வெளிச்சம் ந்கோவாகுவின் மனைவியை எழுப்பிவிட்டது. ஆழ்ந்த உறக்கத்திலிருந்து கண் விழிக்கக்கூடிய வழக்கமான செயலைப் போல அவள் வானொலியை நோக்கி நடந்து சென்றாள். தேசிய செய்தியை கவனித்தாள்.

"நேற்று இடதுசாரி மகளிர் அமைப்பின் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்ச்சியில் மதிப்பிற்குரிய தலைவர் ந்கோவாகு மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு சொற்பொழிவை ஆற்றினார். ஆண்களுக்கு நிகரான, சிறிதும் பலவீனராக இல்லாத, நம்முடைய பெண்களை விடுதலை பெறச் செய்ய வேண்டியதன் தேவையைப் பற்றி தன்னுடைய சொற்பொழிவில் அவர் அழுத்தமாகக் கூறினார்!"

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.