டிசம்பர் மாதத்தின் குளிரில் நடுங்க வைத்துக் கொண்டிருந்த இரவு வேளையில், நாங்கள்... நான்கு வேட்டைக்காரர்கள் தாமரைசேரியில் இருந்த ஒரு ஹோட்டலைத் தேடிச் சென்றோம். ஹோட்டலின் உரிமையாளர் பொருட்கள் வைக்கப்படும் அறையில் இருந்த சாமன்களை இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்து, அந்த அறையை எங்களுடைய தனிப்பட்ட உபயோகத்திற்காக ஏற்பாடு செய்து வைத்திருந்தார்.
நாங்கள் சாப்பிட்டு முடித்து தூங்குவதற்காகப் படுத்தோம். அப்போது முதலில் யார் அந்த ஆபத்து நிறைந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தார்கள் என்பது தெரியவில்லை. எங்களுடைய பேச்சுக்கான விஷயம் பெண்களைப் பற்றியதாக இருந்தது. திருமணம் ஆகாத நான்கு இளைஞர்களுக்கிடையே உரையாடி சிரித்து இருக்கக் கூடிய சுவாரசியமான ஒரு விஷயமாக அது இருந்தது.
"பெண்கள் அனைவரும் வஞ்சனை செய்பவர்களும் வசியம் செய்பவர்களுமாக இருக்கிறார்கள். அவர்கள் கட்டிப்பிடித்து ஆடுவதற்கு மட்டுமே பொருத்தமானவர்கள். அவர்கள் அறிந்திருக்கக் கூடிய ஏதாவது விஷயங்கள் இருந்தால், அது நடிப்பு மட்டுமே'' என்று மிஸ்டர் மேனன் எந்தவொரு கூச்சமும் இல்லாமல் தன்னுடைய கருத்தை வெளியிட்டார். "பெண்களின் கன்னங்கள் எதனால் உண்டாக்கப்பட்டிருக்கின்றது தெரியுமா?'' ஒரு ஆசிரியர் தன்னுடைய வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் கேட்பதைப் போல மிஸ்டர் மேனன் அந்தக் கேள்வியை எங்கள் ஒவ்வொருவரையும் பார்த்து விரலை நீட்டிக் கொண்டு கேட்டார்.
"பன்னீர் இதழ்களால்...", "பவளத்தால்", "பச்சை மாமிசத்தால்..." என்று பலவகைப்பட்ட பதில்களும் எங்களிடமிருந்து வெளியே வந்தாலும், எல்லாவற்றையும் மறுப்பதைப்போல தலையை ஆட்டிய மிஸ்டர் மேனன் இறுதியில் சென்னார்: "அனைத்தும் தவறானவை. திருட்டுத் தனத்தைக் கொண்டு களவாணிகளின் கன்னங்களை கடவுள் உண்டாக்கியிருக்கிறார். களவாணி என்றால் அதற்கு அர்த்தம், களவின் ஆணி என்பதுதான். ஒரு பெண் பொய் கூறாமல் இருக்கிறாள் என்றால், அவளுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றுதான் அர்த்தம். ஒரு நாகப்பாம்பு இதுவரை யாரையும் கடிக்கவில்லை என்பதற்காக, அதற்கு விஷப்பற்கள் இல்லை என்று அர்த்தமா? பாம்புக்கு விஷப் பைகள் இருப்பதைப்போல, ஒவ்வொரு பெண்ணின் கன்னத்திலும், கண்களுக்குத் தெரியாத ஒரு திருட்டுத்தனம் நிறைந்த பை இருக்கும் என்பதுதான் என்னுடைய நம்பிக்கை!''
அந்தக் கருத்தை மிஸ்டர் பாஸ்கரன் எதிர்த்தார். அவர் கூறினார்: "பெண்களின் இதயம் காதல் உணர்வு நிறைந்தது. ஏமாற்றுவதற்கு அவளுக்கு கற்றுத் தந்தவனே ஆண்தான்.''
"பெண் ஏமாற்றுக்காரி என்றே எடுத்துக் கொண்டாலும், அது கனவைப் போல தொந்தரவே இல்லாத ஒரு ஏமாற்றுதல் என்றுதான் சொல்ல வேண்டும்'' என்று நானும் சொன்னேன்.
"நீங்கள் சொன்னது கவிதை. கவிதை என்பது இன்னொரு ஏமாற்று வேலை. அதை நான் நம்ப மாட்டேன்" என்று மிஸ்டர் மேனன் என்னுடைய கருத்தை எதிர்த்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து நாங்கள் மூன்று பேரும் எங்களுடைய நான்காவது நண்பரான மிஸ்டர் நம்பியாரை நோக்கித் திரும்பினோம். மிஸ்டர் நம்பியார் பெண்களுடன் சற்று அதிகமாகப் பழகக் கூடிய ஆணாக இருந்ததால், அவருடைய கருத்து மேலும் சிறிது விலை மதிப்பு
கொண்டாயிற்றே! ஆனால், பொதுவாகவே அப்படிப்பட்டவர்கள் செய்யக் கூடியதைப்போல, அவர் சற்று சிரித்துக் கொண்டே தன்னுடைய கருத்து எதையும் வெளியிடாமலே எங்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கினார்.
மிஸ்டர். மேனன் தொடர்ந்து சொன்னார்: "ஆழமாக, இதயப்பூர்வமாகக் காதலிக்கக் கூடிய ஆற்றல் ஆணுக்கு மட்டுமே இருக்கிறது. ஆனால், பெண் அவனை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாள். அவளுடைய நிலையற்ற போக்கும் ஆடம்பரங்கள்மீது கொண்டிருக்கும் ஈடுபாடும் அவனை சோர்வடையச் செய்கிறது. வெறுப்படைய வைக்கிறது. இந்தப் பிறவியில் நான் எந்தவொரு பெண்ணையும் நம்ப மாட்டேன்...''
"அப்படிச் சொல்லக் கூடாது சார். ஆண்களைவிட பலமாக, நிலையான மனதுடன் காதலிக்க பெண்களுக்கு முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது.''
அந்த வார்த்தைகளைக் கேட்டபிறகுதான் எங்களுடைய உரையாடலை கவனித்துக் கொண்டு ஐந்தாவதாக ஒரு மனிதர் அருகில் இருக்கிறார் என்ற உண்மையே எங்களுக்குத் தெரிந்தது. கிட்டத்தட்ட வயதான ஒரு பென்ஷன்ட் ஹெட்கான்ஸ்டபிள். அச்சுதக் குறுப்பு என்பது அவருடைய பெயர்.
அச்சுதக் குறுப்பு மேலும் சற்று எங்களுக்கு அருகில் நகர்ந்து உட்கார்ந்து கொண்டு சொன்னார்: "நீங்கள் கூர்ந்து கேட்பதாக இருந்தால், நான் என்னுடைய அனுபவத்தில் தெரிந்து கொண்ட ஒரு கதையைக் கூறுகிறேன்.''
நாங்கள் எல்லாரும் மிகுந்த ஆர்வத்துடன் எழுந்து நின்றோம்.
குளிர் தாங்க முடியாத அளவிற்கு இருந்ததால், ஹோட்டலின் உரிமையாளர் சிறிது காய்ந்துபோன கரியைக் கொண்டு வந்து ஒரு
சிறிய கனப்பை உண்டாக்கித் தந்தார். நாங்கள் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்து கொண்டு கொஞ்சம் கதைகளைக் கூற ஆரம்பித்தோம்.
"நான் அப்போது "க-" அவுட்போஸ்ட்டில் ஒரு கான்ஸ்டபிளாக இருந்தேன். நம்மை நாமே வெறுக்கக் கூடிய ஒரு பாழாய்ப்போன வேலை அது. நான்கு பக்கங்களிலும் அடர்த்தியாக இருக்கும் மிகப்பெரிய காடு. குளிரில் வரக்கூடிய ஜுரத்திற்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு உள்ள ஒரு தனிமை வாழ்க்கை. அது போதாதென்று, வாயில் விஷ ஊசியுடன் இருக்கக் கூடிய- கண்களுக்குத் தெரியாத உடல்களைக் கொண்ட உயிரினங்கள் ஒரு பக்கம். அளவில் பெரியனவாக இருக்கும் கொசுக்கள் இன்னொரு பக்கம். அட்டை, கருந்தேள், பாம்பு என்று மனிதர்களுக்குத் தொந்தரவுகள் உண்டாக்குவதற்காக என்றே தனிப்பட்ட நோக்கத்துடன் கடவுள் எப்படிப்பட்ட உயிரினங்களையெல்லாம் படைத்துவிட்டிருப்பாரோ, அவை அனைத்தும் அங்கு குடியேறி வாழ்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கும் மேலாக, காட்டு யானைகளும் நரிகளும் உயிரைக் கொல்லக்கூடிய பிற உயிரினங்களும். அங்கு ஒரு மனிதனை நரி பிடித்துவிட்டது என்று கூறுவதற்கு, ராமனை ஒரு நாய் கடித்துவிட்டது என்று கூறுவதில் இருக்கக் கூடிய முக்கியத்துவமே இருந்தது. பிறகு... உடன் வசிக்கக்கூடியது மாதிரியான மனிதர்கள் இல்லை என்பது அதைவிட கவலைப்படக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அங்குள்ள கிராமத்து மனிதர்கள் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். அதையும் தாண்டி இருந்தவர்களும் மலை வாழ் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வெறும் இரண்டு கால்களைக் கொண்ட மிருகங்களாக இருந்தார்கள். பார்ப்பதற்கு கண்களைக் குளிரச் செய்யும் ஒரு பெண் கூட அந்த திசைகளிலேயே இல்லை.
இரண்டு மைல்களுக்கு அப்பால் ஒரு வன இலாகா அலுவலகம் இருந்தது. அங்கிருந்த க்ளார்க் கோவிந்தன் நாயர் மட்டும்தான் என்னுடைய நண்பராக இருந்தார். அவரைப் பார்ப்பதற்காக நான் அவ்வப்போது அங்கு செல்வேன். போகும் வழியில் "நரிமலைத் தோட்டம்" என்ற பெயரில் பெரிய ஒரு மிளகுத் தோட்டம் இருந்தது.
அந்தத் தோட்டம் எவ்வளவோ வருடங்களுக்கு முன், தேயிலைத் தோட்ட உரிமையாளரான ஒரு ஐரோப்பாவைச் சேர்ந்த மனிதர் உண்டாக்கியது. பிறகு அவர் தன்னுடைய நாட்டிற்குச் செல்லும்போது, அந்தத் தோட்டத்தை அந்த ஊரைச் சேர்ந்த தன்னுடைய வைப்பாட்டிக்குச் சொந்தமாக ஆக்கிவிட்டுச் சென்றார்.
நான் அங்கே இருந்த காலத்தில், அந்தத் தோட்டத்தின் உரிமையாளராக, முன்பு கூறிய பெண்ணின் சகோதரி மகளான தாலா என்ற ஒரு இளம்பெண் இருந்தாள். அவள் ஒரு தாடகையாக இருந்தாள். அவளுக்கு பயந்து யாரும் அந்த வழியாக நடந்து போக மாட்டார்கள் என்று தாலாவைப்பற்றிக் கூறுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு ராட்சசி! அவளுடைய அனுமதி இல்லாமல் அந்தத் தோட்டத்திற்குள் நுழையும் எந்தவொரு உயிரையும் அவள் துப்பாக்கியால் சுட்டு உயிரை எடுத்துவிடுவாள். பன்றி, நரி போன்ற காட்டு வாழ் உயிரினங்கள்கூட தாலாவின் பார்வையில் படாமல் பார்த்துக்கொள்ளும் என்றவொரு பழமொழி இருந்து கொண்டிருந்தது. அவள் வெளியே தெரிகிற மாதிரி வேட்டைக்குச் செல்வதில்லையென்றாலும், மிகவும் அருமையாக துப்பாக்கியால் சுடக் கூடியவள் என்று பொதுவாகவே அவளைப் பற்றிக் கூறுவார்கள்.
வெள்ளை நிறத்தில் பருமனாக, உயரம் குறைவாக, முகம் முழுவதும் அம்மைத் தழும்புகளைக் கொண்ட அவள் அழகற்றவள் என்று கூற முடியாது என்றாலும், அந்த முகத்தில் எப்போதும் ஒரு கோரத்தன்மை தெரிந்து கொண்டிருந்தது. அவளுடைய நடவடிக்கைகளைப் பார்த்தால்,
அவள் மனித இனத்தை அளவிற்கு அதிகமாக வெறுக்கிறாளோ என்று தோன்றும். வருடத்தில் பத்தாயிரம் ரூபாய்களுக்கு அதிகமாக விலைமதிப்பு இருக்கக் கூடிய மிளகு அவளுக்கு விற்பனை செய்வதற்கு இருந்தது. அதற்கும் மேலாக மூன்று யானைகளும் ஏராளமான எருமைகளும் அவளுக்கு இருந்தன. இந்த அளவிற்கு வசதி படைத்த அவளைத் திருமணம் செய்ய வேண்டுமென்று பல ஊர்களைச் சேர்ந்த முக்கிய மனிதர்களும் ஏங்கிக் கொண்டிருந்தாலும், அவள் திருமணமே செய்து கொள்ளாத பெண்ணாகத்தான் இருந்தாள். அது மட்டுமல்ல- வேலைக்காரனாக இருந்தால்கூட, எந்தவொரு ஆணையும் தன்னுடைய வீட்டிற்குள் நுழைய அவள் அனுமதிப்பதில்லை.
"வனராணி" என்ற பெயரில்தான் அவள் எங்களுக்கு மத்தியில் அறியப்பட்டிருந்தாள். அந்த ஆச்சரியத்தை அளிக்கக்கூடிய பெண்ணுக்கு அப்படிப்பட்ட ஒரு பெயரைத் தந்தவர் கோவிந்தன் நாயர்தான்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளன்று நான் கோவிந்தன் நாயரின் காட்டு பங்களாவிற்குச் சென்றிருந்தபோது, அவர் அங்கு ஒரு மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு பண்ணியிருப்பதைப் பார்த்தேன். அங்கு கூடியிருந்தவர்களுக்கு மத்தியில் சாப்பிட்டுக் கொண்டும் குடித்துக் கொண்டும் இரவு நீண்ட நேரம் வரை நானும் இருந்தேன். அப்போதுதான் நரிமலைத் தோட்டத்தின் மூலையில், ஒரு காட்டு யானை ஒரு மலைவாழ் மனிதனை இழுத்துப்பிடித்து கிழித்துக் கொன்றுவிட்டது என்பதும், பிணம் அவுட் போஸ்ட்டிற்கு சுருட்டி எடுத்துக்கொண்டு போகப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வந்தன. ஸ்டேஷன் க்ளார்க் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்ததால், நான்தான் அந்த வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் உடனடியாக அவுட் போஸ்ட்டிற்குச் செல்ல வேண்டியதிருந்தது.
நேரம் இருட்டி ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. போக வேண்டிய பாதையைப் பற்றி நினைத்தபோது, என் வயிற்றில் கலக்கம் உண்டானது. சில நாட்களாகவே, அந்த காட்டு யானை கூட்டத்தைவிட்டுப் பிரிந்து வந்து கண்களில் படக்கூடியவர்களையெல்லாம் தொல்லைப்படுத்திக் கொண்டு நடந்து திரிந்து கொண்டிருந்தது. அதை மனதில் நினைத்தபோது பயம் அதிகமானது. எனினும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, துப்பாக்கியை எச்சரிக்கையுடன் பிடித்துக் கொண்டு ஒரு போர் வீரனின் வீரத்துடன் நான் நடந்தேன்.
இரவு நேரம் வந்துவிட்டால், அதற்குப் பிறகு காடு வெட்டுக் கிளிகளுக்கு மட்டும் சொந்தமானவையோ என்று தோன்ற ஆரம்பித்துவிடும். அவற்றின் சிறிதும் நிற்காத உரத்த சத்தத்தை அனுபவித்து தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். அந்த சத்தத்தைக் கேட்கும்போது ஒவ்வொரு கொடியின் வாயிலும் ஒவ்வொரு "பீப்பி" இருப்பதைப் போலவும், ஒவ்வொரு மரமும் கால்களில் சலங்கைகளைக் கட்டிக் கொண்டு ஆடுவதைப் போலவும் தோன்றும்.
நரிமலைத் தோட்டத்தை நெருங்கியபோது, என்னுடைய உடல் உறுப்புக்கள் சோர்வடையத் தொடங்கின. நான் சுருட்டைப் பற்ற வைத்துப் புகைத்தேன். அந்த மூலை நெருங்கிக் கொண்டிருந்தது. என்னுடைய தலை சுற்றியது. மலைவாழ் மனிதனின் இரத்தம் அப்போதும் அங்கு உறைந்து கிடந்தது. ஒரு அடிகூட முன்னோக்கி வைப்பதற்கு எனக்கு தைரியம் உண்டாகவில்லை.
அதைத் தவிர, ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. தாலாவின் தோட்டத்தின் வழியாக... அது ஒரு சுருக்கமான வழி. ஆனால், அந்த வனராணி அப்படிச் செய்வதைப் பார்த்துவிட்டால், துப்பாக்கியை வைத்து சுட்டு காலி பண்ணிவிடுவாள் என்பது மட்டும் உண்மை. எது எப்படியோ... வருவது வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு
நான் வேலியைத் தாண்டிக் குதித்து தோட்டத்திற்குள் நுழைந்தேன். ஒரு மங்கலான நிலவு வெளிச்சம் இருந்தது.
எதிரிகளின் பகுதிக்கு பதுங்கிப் பதுங்கிச் செல்லும் ஒரு போர் வீரனைப்போல, நான் துப்பாக்கியை முன்னோக்கி நீட்டிப் பிடித்துக்கொண்டு நிலத்தின் வழியாக தெற்கு திசை நோக்கி நடந்தேன். திடீரென்று... என்னை நோக்கி ஒரு உருவம் நடந்து வருவதைப்போல தோன்றியது. நான் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அதே இடத்தில் நின்றுவிட்டேன். அந்த உருவம் மிகவும் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பதைபதைப்பில் எப்படியோ... அருகிலிருந்த ஒரு தொழுவத்திற்குப் பின்னால் போய் நின்று கொண்டிருப்பதற்கு என்னால் முடிந்தது.
அந்த உருவம் எனக்கு அருகில் கடந்து சென்றபோது, எனக்கு உண்டான ஆச்சரியத்தை நான் எப்படி வெளிப்படுத்துவேன்!
அது... அந்த வனராணிதான். அவள் என்னைப் பார்க்கவில்லை. அவள் வெள்ளை நிறத் துணியால் மூடப்பட்ட ஒரு கூடையை மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டு முகத்தை குனிந்தவாறு நேராக வடக்கு நோக்கி நடந்து சென்றாள். என் கண்கள் அவளைப் பின் தொடர்ந்தன. அவள் ஒரு புதருக்குள் நுழைந்து சென்றாள். சிறிது நேரம் சென்றதும் அதற்குள்ளிருந்து ஒரு வெளிச்சம்... அந்த வெளிச்சத்தில் அவளுடைய நிழலை நான் பார்த்தேன். சிறிது நேரம் கடந்ததும், அந்த வெளிச்சமும் நிழலும் திடீரென்று காணாமல் போயின.
நான் கனவு காண்கிறேனோ என்று நினைத்தேன். இந்த வனராணி யார்? தேவதையா? பிசாசா?
அவளைப் பின்தொடர்ந்து சொல்வதற்கு எனக்கு தைரியம் போதவில்லை. அந்த இடத்தைவிட்டுப் போவதற்கும் மனம் வரவில்லை. அதே நிலையில் அந்த இடத்திலேயே நின்றுவிட்டேன்.
எவ்வளவோ நிமிடங்கள், ஒவ்வொரு வருடத்தின் கனத்துடன் கடந்து சென்றன. நிலவு மறைய ஆரம்பித்திருந்தது. அவள் திரும்பி வருவதை எதிர்பார்த்துக் கொண்டு, நான் அதே இடத்தில் மூன்று மணி நேரங்களுக்கும் மேலாக நின்றிருந்திருக்க வேண்டும். திடீரென்று செடிகள் அடர்ந்திருந்த அந்த புதர்களுக்குள் மீண்டும் அந்த வெளிச்சம் தென்பட்டது. சிறிது நேரம் சென்றதும், அவள் அந்தக் கூடையுடன் எனக்கு அருகிலேயே கடந்து சென்றாள். எனக்கு ஒரு புதிய தைரியம் வந்து சேர்ந்திருப்பதைப்போல தோன்றியது. நான் அந்த செடிகள் அடர்ந்த புதருக்கு அருகில் சென்றேன். கையிலிருந்த டார்ச் விளக்கை எரியச் செய்தேன். நான் செடிகள் பலவற்றையும் கடந்து சென்றேன். அங்கு சுற்றிலும் பார்த்ததில் ஒரு பெரிய பாறையைத் தவிர, வேறு எதுவும் இல்லை. அந்தப் பாறையைத் தள்ளிப் பார்த்தபோது, அது அசைவதைத் தெரிந்து கொண்டேன். அதை இழுத்துப் பார்த்தபோது, அங்கு ஒரு குகையின் வாசல் தெரிந்தது. நான் அந்தக் குகைக்குள் நுழைந்தேன். சிறிது தூரம் நடந்தேன். பத்து அடிகள் கடந்ததும், அதற்குப் பிறகு இன்னொரு குகை தெரிந்தது. அதற்குள் நுழைந்து டார்ச் விளக்கை எரியச் செய்தபோது, நான் பார்த்த காட்சி...''
குறுப்பு எங்களுடைய முகத்தையே பார்த்தவாறு கைகளால் சைகை செய்து ஒரு பீடி வேண்டுமென்று கேட்டார். மிஸ்டர் பாஸ்கரன் இரண்டு பீடிகளைக் கொடுத்தார். மிஸ்டர் நம்பியார் ஒரு சிகரெட்டைத் தந்தார். சிகரெட்டையும் ஒரு பீடியையும் பாக்கெட்டிற்குள் போட்டவாறு, ஒரு பீடியைப் புகைத்துக் கொண்டே குறுப்பு தொடர்ந்து சொன்னார்: "நான் பார்த்தது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு மனிதனின் மிகவும் பயங்கரமான முகம்!''
நாங்கள் எல்லாரும் உடனடியாக மூச்சை இழுத்துக் கொண்டே சிரித்துவிட்டோம். "முகம் மட்டுமா?'' என்று மிஸ்டர் நம்பியார் ஆர்வத்துடன் கேட்டார்.
"முகம் மட்டும் ஒரு மனிதனுக்குச் சொந்தமானதாக இல்லை... பார்த்தபோது அப்படித்தான் தோன்றியது. அதற்குக் கீழே இருந்த பகுதியைப் பார்த்தபோதுதான் அது ஒரு மனிதப் பிறவிதான் என்பதையே நான் உணர்ந்தேன். அந்த அளவிற்கு அவலட்சணமான ஒரு முகம் எந்தவொரு மிருகத்திற்கும் இருக்காது. மொத்தத்தில் முகம் ஒரு கரும்பாறைத் துண்டைப்போல இருந்தது. அதில் கண்கள் எங்கே இருக்கின்றன, மூக்கு எங்கே இருக்கிறது என்பதை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. நெற்றியின் வலது பகுதியிலும் கன்னத்திலும் உதடுகளிலும் புகைபடிந்த மாமிசத்தை ஒட்டி வைத்திருப்பதைப்போல தோன்றியது. இடையில் இங்குமங்குமாக சொறி பிடித்ததைப்போல சில அடையாளங்கள் இருந்தன. இடது பக்கக் கன்னத்தின் கீழ் பகுதியும் தாடை எலும்பும் மட்டும் சற்று மினுமினுப்புடன் இருந்தன. அது முகத்தின் பயங்கரத் தன்மையை மேலும் அதிகப்படுத்தியது. அந்த மனிதனின் மற்ற உறுப்புகளுக்கும் உடலுக்கும் எந்தவொரு பாதிப்பும் உண்டாகியிருக்கவில்லை என்பது மட்டுமல்ல- அவை மிகவும் அழகு நிறைந்தவையாக இருந்தன. கடைந்தெடுத்த சந்தனக் கட்டையைப்போல அந்த உடல் இருந்தது.
அந்த மனிதன் தனக்கு முன்னால் இருந்த கிண்ணத்திலிருந்து எதையே மூழ்கிக் குடித்துக் கொண்டிருந்தார்.
என் டார்ச் விளக்கின் வெளிச்சம் முகத்தில் விழுந்ததும், அறைக்குள் என்னவோ நடக்காத ஒன்று நடக்கிறது என்பதைப்போல அவர் தன் தலையை உயர்த்தி கவனிப்பதைப்போல இருந்தது. தொடர்ந்து மெதுவான குரலில் "தாலா" என்று அழைத்தார்.
மனிதக் குரல்தான்! எனக்கு நிம்மதியாக இருந்தது. நான் அவருக்கு அருகில் நடந்து சென்று சொன்னேன்: "நான் தாலா அல்ல.''
என்னுடைய குரலைக் கேட்டதும் அவருடைய நடவடிக்கையைப் பார்க்க வேண்டுமே! கையில் இருந்த கரண்டி கீழே விழுந்தது. உடல் ஒரு சிலையைப்போல அசைவே இல்லாமல் ஆனது. அந்தப் பார்வை தெரியாத கண்கள் என்னைப் பார்ப்பதற்குத் துடித்துக் கொண்டிருந்தன.
நான் சாந்தமான குரலில் சொன்னேன்: "நீங்கள் பயப்பட வேண்டாம். நான் இங்கு வழிதவறி வந்துவிட்ட ஒரு மனிதன்...''
அவர் நிம்மதியான ஒரு பெருமூச்சைவிட்டுக் கொண்டே சொன்னார்: "நீங்கள் இந்த குகைக்குள் எப்படி வந்தீர்கள்? அய்யோ... தாலா பார்த்துவிட்டால்...!'' அவர் தன்னுடைய இரண்டு கைகளையும் தலையில் வைத்தார்.
நான் கேட்டேன்: "நீங்கள் யார்?''
அவர் அமைதியாக இருந்தார்.
நான் சொன்னேன்: "உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும் என்ற எந்தவொரு எண்ணமும் எனக்கு இல்லை. உங்களுடைய வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் மட்டுமே எனக்கு இருக்கிறது.''
எங்களுக்கிடையே நிறைய உரையாடல்கள் நடைபெற்றன. அவருக்கு என்மீது நம்பிக்கை உண்டானது. அங்கு பார்த்ததையும் கேட்பதையும் யாரிடமும் கூற மாட்டேன் என்று "பிறளிமலை முத்தப்பன்" மீது சத்தியம் செய்து கூறினால், தன்னுடைய வரலாற்றைக் கூறுவதாக அவர் ஒப்புக் கொண்டார். இறுதியில் நான் பிறளிமலை முத்தப்பன்மீது சத்தியம் பண்ணிக் கூறியதும், அவர் தன்னுடைய கதையைக் கூற ஆரம்பித்தார்.
"நான் ஒரு வட்டக் காட்டுக்காரன். இந்தக் குகைக்குள் வந்து பதினான்கு வருடங்கள் ஆகிவிட்டன. நான் ஒரு ஆணின் குரலைக் கேட்டு பதினான்கு வருடங்களுக்கும் மேலாக ஆகிவிட்டது.
ஒரு காலத்தில் நரிமலைத் தோட்டத்தின் உரிமையாளரும் இந்த பகுதியிலேயே மிகவும் செல்வாக்கு பெற்றவருமான "அன்பு" என்ற பெயரைப் பெற்றிருந்த மிகப்பெரிய மனிதரின் யானைக்காரனாக என் தந்தை இருந்தார். என் தந்தைக்கு உதவி செய்வதற்காக நானும் அவ்வப்போது இங்கு அவருடன் வந்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பதினெட்டு வயதுகளே ஆகியிருந்தன. சொந்த ஊரிலிருந்து பயிற்சி பெற்றுத் திரும்பி வந்திருந்த காலம் அது.
அன்புவின் மருமகள் தாலாவிற்கு அப்போது என்னுடைய வயதுதான். அவள் மிகவும் கர்வம் கொண்டவள் என்றும் மோசமானவள் என்றும் நான் கேள்விப்பட்டிருந்தேன். அன்புவிற்கு தன்னுடைய மருமகளின்மீது பெரிய அளவில் பாசமும் மதிப்பும் இருந்தன. இளம் வயதில் இருக்கும்போதே, வீட்டின் பொறுப்புக்களையும் நரிமலைத் தோட்டத்தின் பொறுப்பையும் அவர் அவளிடம் ஒப்படைத்தார்.
நான் தாலாவை அப்போது பார்த்திருந்தாலும், அவள் என்னைப் பார்த்ததே இல்லை.
இதற்கிடையில் மலையிலிருந்து வந்த ஒரு பெரிய நரி இந்தப் பகுதியில் பல அட்டகாசங்களையும் செய்து கொண்டிருந்தது. யாராலும் அவனைத் துப்பாக்கியால் சுட முடியவில்லை. பட்டப்பகல் வேளையில் மலையிலிருந்து கீழே இறங்கி வந்து எந்தவொரு கூச்சலும் இல்லாமல் கால் நடைகளையும், சிலநேரங்களில் மனிதர்களின் குழந்தைகளையும் அவன் தூக்கிக் கொண்டு போய்விடுவான். அவனால் மிகப் பெரிய பிரச்சினை உண்டானது. ஒரு நாள் அவனைப் பிடிப்பதற்காக அன்புவின் தலைமையில் பெரிய ஒரு நரி வேட்டை நடத்தப்பட்டது. மலையின்
பல பகுதிகளில் தேடிப் பார்த்தும், நரியின் ஒரு உரோமம் கூட கண்களில் படவில்லை என்பதுதான் உண்மை.
தாலா மிகவும் செல்லம் கொடுத்து ஒரு மான் குட்டியை வளர்த்துக் கொண்டிருந்தாள். அன்று ஒருநாள் நான் தோட்டத்தில் யானைக்கு பட்டையை வெட்டி கொடுத்துக் கொண்டிருந்தபோது, "ஊய்யோ! என் மான்குட்டியை நரி கொண்டுபோயிடுச்சே!'' என்றொரு அலறல் சத்தம் காதில் விழுந்தது. நான் ஓடிச் சென்று பார்த்தபோது, மான்குட்டியைத் தூக்கிக் கொண்டு நரி ஓடிக் கொண்டிருந்தது. வீட்டில் வேறு வயதானவர்கள் யாருமில்லை. நான் ஒரே நொடியில் வீட்டின் தெற்குப் பக்க அறையில் குண்டுகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு நரியின் பின்னால் ஓடினேன். பரவிக் கிடந்த ஒரு நிலத்தின் மத்தியில் நரியைக் குறிவைத்து ஒரு குண்டைப் பாயச் செய்தேன். நான் செய்தது ஆபத்து நிறைந்த ஒரு தவறான செயல் என்பதையே பிறகுதான் நான் உணர்ந்தேன். காரணம்- ஒரு இடத்தில் வைத்து நரியைச் சுடுவது என்பது வாழ்க்கைக்கான அபாயத்தைத் தேடி வரவழைத்துக் கொள்வதற்கு நிகரானது. என்னுடைய குண்டு நரியின் வலதுபக்க இடுப்பெலும்பில் காயம் உண்டாக்கிவிட்டுப் பறந்து போய்விட்டது. அவன் உயிர்போன வேதனையுடன் மானைக் கீழே போட்டு விட்டு என்னை நோக்கித் திரும்பினான். அவன் கோபத்துடன் பற்களை இளித்துக் கொண்டே தரையில் ஒட்டியவாறு படுத்தான். வாலை தரையில் அங்குமிங்கும் அடிக்க ஆரம்பித்தான். "மாமாவின் நோக்கம் என்மீது பாய்வதுதான்" என்பதை உடனடியாக நான் புரிந்து கொண்டேன். நான் ஒரே நிமிடத்தில் நரியின் தலையைக் குறிவைத்து இன்னொரு குண்டைப் பாயச் செய்ததும், இருபது அடிகள் தாண்டி இருந்த அடுத்த நிலத்தில் குதித்து "நீளம் தாண்டியதும்" ஒரே நேரத்தில் நடந்தன. அடுத்த நொடியே, என்னுடைய குண்டு நரியின்மீது
சரியாகப்பட்டு, அவன் நான் முன்பு நின்றிருந்த இடத்தில் குதித்துக்கிடந்து, துடித்து, உயிரைவிட்டான். இவை அனைத்தையும் தாலா தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
நான் ஒரு நரியின்மீது குண்டு துளைக்கச் சுடுவது அன்றுதான் முதல் தடவை. அதற்குள் எவ்வளவோ மனிதர்கள் அங்கு ஓடி வந்தார்கள். எல்லாரும் என்னுடைய தைரியத்தையும் திறமையையும் பாராட்டினார்கள். ஆனால், தாலாவின் பாராட்டு என்னை தனிப்பட்ட முறையில் கர்வம் கொண்டவனாக ஆக்கியது. மான்குட்டி உயிருடன் கிடைத்ததால் அவளுக்கு உண்டான சந்தோஷத்திற்கு எல்லையே இல்லை. அன்று முதன்முறையாக அவள் என்னுடன் பேசினாள். நாங்கள் இருவரும் சேர்ந்து காயம்பட்ட மான்குட்டிக்கு மருந்து தடவினோம்.
படிப்படியாக எங்களுக்கு இடையே இருந்த அந்தப் பழக்கம் அதிகமானது. என்னிடம் அவள் நடந்து கொண்ட முறையில் திடீரென்று ஒரு மாறுதல் உண்டானது. வேறு யாரிடமும் காட்டாத ஒரு பயத்தையும் அன்பையும் அவள் என்னிடம் காட்டினாள். எனக்கு முன்னால் அந்த நரி ஒரு மான்குட்டியாக மாறியது. எதற்கு அதிகமாகக் கூற வேண்டும்? நாங்கள் ஒருவரையொருவர் ஆழமாகவும் அகலமாகவும் காதலித்தோம். அவள் என்னை எல்லையும் எதிர்ப்பும் இல்லாமல் காதலித்தாள். அவளைப் பார்க்காமல் ஒருநாள்கூட இருப்பதற்கு என்னால் முடியவில்லை. மாலை நேரம் கடந்துவிட்டால் நாங்கள் சந்திப்பதற்கு ஒரு பாறை இருந்தது. அங்கு அவள் தினந்தோறும் என்னுடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பாள். வீட்டில் தனிப்பட்ட முறையில் ஏதாவது உணவுப் பண்டத்தைத் தயாரித்திருந்தால், அதை அவள் எப்படியாவது எனக்கு கொண்டு வந்து தராமல் இருக்கமாட்டாள்.
அன்பு, மலைவாழ் மக்களுடன் கிழக்கு நோக்கி காட்டு விவசாயத்திற்குச் சென்றுவிட்டால், பிறகு.... எங்களுக்கு முழுமையாக விடுதலை கிடைத்த மாதிரி ஆகிவிடும். அந்தக் காலத்தில் ஒவ்வொரு நாளையும் நாங்கள் ஒவ்வொரு பெரிய திருவிழாவைப்போல கொண்டாடுவோம். சில நேரங்களில் அன்பு ஒரு மாத காலத்திற்கு திரும்பிவராமலே இருப்பார். அவர்கள் பகல் வேளைகளில் நிலத்தைக் கொத்திக் கொண்டும், இரவு நேரங்களில் வேட்டையாடிக் கொண்டும் காட்டிலேயே இருந்துவிடுவார்கள். அந்த நாட்களில் தாலாவும் நானும் நரிமலைத் தோட்டத்தின் மேற்பகுதியில் இருக்கும் மலைச் சோலைக்கு அருகிலும் மரங்கள் அடர்ந்திருக்கும் இடங்களிலும் பாறைகளின் மீதும் புல் வெளிகளிலும் மான்களைப்போல சந்தோஷத்துடன் நடந்து திரிவோம். அவள் எனக்கு அருகில் படுத்துக்கொண்டு, என் முகத்திலிருந்து கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டே கூறுவாள்: "ஹா... இந்தக் காட்டில் வசிக்கக் கூடிய சுதந்திரமும் நீங்களும் கிடைத்துவிட்டால், இறப்பது வரை நான் பிறகு வேறு எதற்கும் ஆசைப்படவேமாட்டேன்.''
ஆனால், நாங்கள் இருவரும் அன்புவை ஒரு எமன் என்பதைப் போல நினைத்து பயந்தோம். ஆனால், அந்த பயத்தை ஒருவருக்கொருவர் கூறிக் கொள்ளாமலே இருந்தோம்.
கோடைக் காலம். காட்டுப் புற்கள் காய்ந்து வரண்டு உயரமாக வளர்ந்திருந்தன.
அன்பு, கிழக்கு மலைக்குச் சென்று பதினைந்து நாட்கள் ஆகிவிட்டிருந்தன. அன்று சாயங்கால நேரத்தில், ஒரு மரத்திற்குக் கீழே நான் தாலாவை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருந்தேன். அன்று நகரத்திலிருந்து யாரோ அவளுக்கு கொண்டு வந்து கொடுத்த அல்வாவில் ஒரு பகுதியைப் பொட்டலமாகக் கட்டி கையில் வைத்துக் கொண்டு புன்னகையைத் தவழவிட்டவாறு அவள் சீக்கிரமே வந்து
சேர்ந்தாள். அந்தப் பாறைக்கு நடுவில் இருந்த ஒரு சிறிய ஊற்றிலிருந்து வந்த நீரை அள்ளிப் பருகி தாகத்தைத் தணித்தோம். நான் தாலாவின் மடியில் தலையை வைத்துக் கொண்டு படுத்திருந்தேன்...
திடீரென்று அவள் "ஊயி... மாமா!'' என்று கூறிவிட்டு, வேகமாக எழுந்தாள். நானும் ஒரு அதிர்ச்சியுடன் எழுந்து நின்றேன். எங்களுக்கு முன்னால், சற்று தூரத்தில் ஒரு துப்பாக்கியைத் தோளில் வைத்துக் கொண்டு அன்பு நின்று கொண்டிருந்தார்.
நான் மலையில் இருந்த புற்களுக்குள் ஒரு மரணப் பாய்ச்சல் பாய்ந்தேன். புற்களுக்கு மத்தியில் மறைந்து இருந்து கொண்டு அன்புவைப் பார்த்தேன். அவர் நான் ஒளிந்திருந்த இடத்தை சந்தேகத்துடன் பார்த்தவாறு அதே இடத்தில் நின்றிருந்தார்.
நான் மிகவும் பதைபதைப்புக்குள்ளானேன். நான் சிறிது அசைந்தால், புல்லும் அசையும். அதனால் ஒரு காட்டுக் கோழியைப்போல புற்களுக்கு மத்தியில் மறைந்து படுத்திருந்தேன். நேரம் இருட்டிவிட்டால் தப்பித்துவிடலாம் என்பதில் உறுதியாக இருந்தேன்.
ஆனால், அன்பு அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.
மாலை நேரம் தாண்டியது, அன்று பௌர்ணமி நாளாக இருந்ததால், நிலவும் சற்று முன்பாகவே உதயமாகி மேலே வந்து கொண்டிருந்தது.
திடீரென்று சுற்றிலும் ஒரு சிவப்பு நிற வெளிச்சம் பரவியது. என்னுடைய வயிறு சற்று எரிந்தது. அன்பு மலைக்கு நெருப்பு வைத்துவிட்டார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.
பதினேழு மலைகள் ஒன்று சேர்ந்ததுதான் நரிமலைத் தோட்டம். என்னுடைய கேடுகெட்ட காலம் என்றுதான் கூறவேண்டும்- நான் சென்று ஏறியது, "சிறிய மலை" என்ற பெயரைக் கொண்டது. அதில்
மிளகு விளையவில்லை. அது தனியாக நின்று கொண்டிருக்கும் மிகவும் சிறிய ஒரு மலை. ஒரு பகுதி முழுவதும் புதர்களும் புற்களும் சுற்றிலும் வளர்ந்து மூடிக்கிடக்கும். இன்னொரு பகுதி முழுவதும் உயர்ந்து நின்றிருக்கும் மிகப்பெரிய ஒரு கரும்பாறை. அந்த மலையின் அடியில் ஆழமே தெரியாத ஒரு பள்ளமும்... எனக்கு தப்பித்துச் செல்வதற்கு வேறு வழியே இல்லை.
நான் கூறிய நேரத்தில் நெருப்பு, மலையின் கிழக்குப் பகுதி முழுவதும் படர்ந்து பிடித்து மேல்நோக்கித் தலையை உயர்த்த ஆரம்பித்தது. நெருப்பிலிருந்து தப்பிப்பதற்காக நான் கீழ் நோக்கி ஓடினால், நிலவு வெளிச்சத்தில் பன்றி இறங்கிச் செல்வதை பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் துப்பாக்கி ஏந்திய வேட்டைக்காரனைப் போல, அங்கு காவல்காத்துக் கொண்டு நின்றிருக்கும் அன்புவிற்கு முன்னால் போகாமல் இருக்க முடியாது. அதற்குப் பிறகு நடக்கும் கதையை நினைத்துப் பார்க்க முடிகிறது அல்லவா?
ஒரு காற்றின் ஒத்துழைப்புடன், நெருப்பு மிகவும் வேகமாகப் படர்ந்து பிடித்தது. புதர்களும் கொடிகளும் எரிந்து சாம்பலாயின. நெருப்பு அந்தக் காட்டைக் கடித்து நெரிக்கும் சத்தம் வெகு தூரம் வரை கேட்டது. நரிமலைத் தோட்டம் முழுவதும், அந்த வெளிச்சத்தில் பகலை விட மிகவும் தெளிவாகத் தெரிந்தது.
அந்த சிவந்த வெளிச்சத்தில் நிலவுகூட கரிந்து போனது.
மிக மிக மெதுவாக நான் மேல் நோக்கி நகர்ந்து சென்றேன். முயல், பன்றி, முள்ளம் பன்றி, பெருச்சாளி முதலான உயிரினங்களும், பாதியாக வெந்த பல ஊர்ந்து செல்லக்கூடிய உயிரினங்களும் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இங்குமங்கமாக ஓடிக் கொண்டிருந்தன. பாய்ந்து செல்லும்போது அவற்றில் சில, என்மீது உரசியவாறு ஒடிச் சென்றன. நெருப்பின் வெப்பம் என்னுடைய உடலில் பட ஆரம்பித்தது.
நான் கீழே பார்த்தேன். கீழே, தப்பித்துச் செல்வதற்கு எந்தவொரு வழியும் இல்லாத வகையில், நெருப்பு மலையின் முக்கால் பகுதியை விழுங்கி முடித்திருந்தது. அந்த வகையில் காட்டு நெருப்பும் பள்ளமும் அன்பும் மரணமும் என்னைச் சுற்றி வளைத்துவிட்டிருந்தார்கள்.
நான் செயலற்ற நிலையில் மேல்நோக்கிப் பார்த்தேன். வானம் புகைப்படலத்தால் மூடப்பட்டிருந்தது.
நான் நகர்ந்து நகர்ந்து மலையின் மேற்பகுதியை அடைந்தேன். அந்த வயதான மலையின் நரை விழுந்த குடுமியைப் போல ஏராளமான புற்கள் அங்கு வளர்ந்து காணப்பட்டன. அங்கிருந்து அதற்குப் பிறகு நீங்குவதற்கு இடமில்லை. நான் கால்களை பள்ளத்திற்குள் நீட்டிக் கொண்டு, ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு படுத்தேன். நெருப்பு என்னுடைய தோள்களை நக்க ஆரம்பித்தது. என்னுடைய தலை முடி பற்றி எரியும் வாசனையை நான் "கேட்டேன்". ஒரு பெரிய புகைப்படலம் என்னை மூடியது. நான் ஒரு பாம்பைப் போல தலையில் அடித்துக் கொண்டேன். எனக்கு மூச்சு அடைக்க ஆரம்பித்தது. சிறிது நேரம் நான் மூச்சைப் பிடித்துப் பார்த்தேன் அதற்குப் பிறகு வேறு எதுவும் எனக்கு ஞாபகத்தில் இல்லை.
நினைவு வந்தபோது இதோ... இந்தக் குகையில் நான் இருந்தேன். தாலா எனக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு எனக்கு செய்ய வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள். ஆனால், அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. என்னுடைய இரண்டு கண்களும் இல்லாமல் போயிருந்தன. அது மட்டுமல்ல- நெருப்புப் பிழம்புகள் என்னுடைய முகத்தை இந்த அளவிற்கு அவலட்சணமாக ஆக்கிவிட்டிருந்தன.
நான் தாலாவின் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னேன்: "தாலா, என்னை விட்டுட்டுப் போ. மாமா என்னைக் கொன்று விடுவார்.''
அவள் என்னை வருடிக் கொண்டே சொன்னாள்: "மாமா நேற்று மலைக்குப் போய் விட்டார்.''
"நான் எவ்வளவு நாட்களாக இங்கு இருக்கிறேன்?''
"உங்களை அங்கிருந்து கொண்டு வந்து நான்கு நாட்களாகிவிட்டன.''
"அப்படியென்றால் நான் பள்ளத்தில் விழுந்து கிடந்தேன், அப்படித்தானே?''
"ஆனால், விழுந்ததில் உங்களுக்கு எதுவும் உண்டாகவில்லை. நீங்கள் ஒரு மரத்தின் கிளையில் படுத்திருப்பதை அந்த மலைவாழ் மனிதன் பார்த்திருக்கிறான்.''
"ஹா... தாலா, நான் எப்படி மேலும் சற்று கீழே விழுந்தபோது, இறக்காமல் போனேன்?''
அந்த புளித்த கண்ணீர்த் துளிகள் என்னுடைய உதட்டில் விழுந்தன. அவள் தன் பளபளப்பான கையால் என்னுடைய முகத்தைத் தடவிக் கொண்டே சொன்னாள்: "நீங்கள் இறக்க வேண்டிய அவசியம் இல்லாததால்... கவலைப்பட வேண்டாம். என்னால்தான் உங்களுக்கு இந்த ஆபத்து வந்தது. இனி, நான் இறப்பது வரை உங்களுடன்தான் இருப்பேன் என்பதை நம்புங்கள். இனிமேலும் மாமா நம்மை ஒன்றாக இருப்பதுபோல பார்த்தால், அன்று நாம் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து மரணத்தைத் தழுவுவோம்.''
அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்ந்து சொன்னாள்: "அன்று மாமா நினைக்காமலே அந்த வழியில் வந்தார். விவசாய நிலத்தில் இருந்த மாமாவின் கூட்டத்தைச் சேர்ந்த சந்துக் குறுப்பை ஒரு பன்றி தாக்கிக் கொன்றுவிட்டதால், மலைவாழ் மக்களிடம் பிணத்தை கோணியில் கட்டி ஒரு வழியில் போகும்படி மாமா கூறி அனுப்பியிருக்கிறார். இந்த மலையில் இருந்த குறுக்கு வழியில் மாமாவும் வந்த காரணத்தால், நம்மைப் பார்க்க நேர்ந்தது''.
ஆமாம்... தாலா தன்னுடைய வாக்குறுதியை இன்று வரை... ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை... நிறைவேற்றி இருக்கிறாள். பதினான்கு வருடங்களாக நான் இந்தக் குகைக்குள் கிடக்கிறேன். முதலில் இது ஒரு வெறும் நரிகள் இருக்கக் கூடிய இடமாக இருந்தது. பிறகு... காலப் போக்கில் தாலா இங்கு இப்படி சில மாற்றங்களை உண்டாக்கினாள். உங்களுக்கு இந்த இடம் ஒரு நரகத்தைப் போல தோன்றியிருக்கலாம். ஆனால், பார்வை இல்லாதவனும், அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவனும், ஆதரவு அற்றவனுமான என்னைப் பொறுத்த வரையில், இது ஒரு சொர்க்கம் என்றுதான் கூறுவேன். எனக்கு தாலாவின் தனி கவனிப்பு மட்டும் போதும். அவள் இப்போதும் அன்றைய ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் ஆனந்தத்துடனும் அன்புடனும்... ஆமாம்... காதல் உணர்வுடனும் என்னை கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்கிறாள். அன்பு மரணமடைந்து ஐந்து வருடங்களாகிவிட்டன. நரிமலைத் தோட்டத்தின் உரிமை இப்போது தாலாவிற்குத்தான். ஆனால், என்னுடைய மரணம்வரை நான் இந்தக் குகைக்குள்ளேயே இருக்கத்தான் விரும்புகிறேன்''.
"அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' அச்சுதக் குறும்பு எங்களிடம் கேட்டார்: "ஆணுக்கு பதிலாக ஒரு பெண்ணுக்கு அந்த மாதிரி அவலட்சணம் உண்டாகியிருந்தால், பதினான்கு வருடங்கள் சிறிதும் தவறாமல் அவளை தனி கவனம் செலுத்திப் பார்த்துக் கொள்ள ஒரு ஆணுக்கு முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?''
ஆனால், கான்ஸ்டபிளின் கதையில் மூழ்கிப் போயிருந்த நாங்கள் எங்களுடைய வாதங்களை மறந்துவிட்டிருந்தோம். மிஸ்டர் நம்பியார் ஆர்வத்துடன் கேட்டார்: "பிறகு... அந்தக் குகையில் நாயருக்கு என்ன நடந்தது?''
தன்னுடைய வாதத்தை நாங்கள் ஒப்புக்கொண்டதாகக் கூறினார். வெற்றி பெற்றுவிட்ட ஒரு புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு கான்ஸ்டபிள் கூறினார்: "எஞ்சிய கதையையும் சுருக்கமாகக் கூறினால், அங்கு கண்டதையும் கேட்டதையும் பற்றி யாரிடமும் பேசமாட்டேன் என்று அவரிடம் மீண்டும் சத்தியம் பண்ணிக் கூறிவிட்டு, நான் குகையை விட்டு வெளியேறி ஸ்டேஷனுக்குச் சென்றுவிட்டேன்.
மறுநாள் எனக்கு பயங்கரமாக காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. இரண்டு நாட்கள் அப்படி சிரமப்பட்டபிறகு, நான் விடுமுறை எடுத்து சொந்த கிராமத்திற்குச் சென்றேன்.
உடல் நலம் சரியானபிறகு வேலையில் சேர்ந்தது வேறொரு இடமாக இருந்தது. அதற்குப்பிறகு, ஐந்து வருடங்கள் கடந்த பிறகு, நான் மீண்டும் க- அவுட்போஸ்ட்டில் ஏட்டாக நியமிக்கப்பட்டேன்.
அப்போது தாலா இறந்து ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. அவளை யாரோ திடீரென்று துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டார்கள் என்று கூறினார்கள். அங்கு சென்ற நாளன்று இரவிலேயே நான் நரிமலைத் தோட்டத்தின் அந்தக் குகைக்குள் நுழைந்து சென்று பார்த்தேன். ஒரு மனிதரின் எலும்புக் கூட்டை மட்டுமே நான் அங்கு பார்த்தேன்.''
முக்கால் பகுதி எரிந்து விட்டிருந்த நெருப்புக் கனலில் இருந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து, எங்களிடம் "குட் நைட்" கூறிவிட்டு கான்ஸ்டபிள் கிளம்பினார். அந்தக் கதையைப் பற்றி சிந்தித்து, அதன் பல காட்சிகளையும் மனதிற்குள் நினைத்துக் கொண்டு நாங்கள் எதுவும் பேசாமல் படுத்திருந்தபோது, மிஸ்டர் மேனன் மட்டும் அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு கூறினார்: "நான் நம்பவில்லை அந்த கான்ஸ்டபிள் அவிழ்த்துவிட்ட ஒரு பொய்யான கதை அது.''