Logo

ஜானு சொன்ன கதை

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 9713
Janu Sonna Kathai

கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி ஒரு நாள் மத்தியான நேரத்துல நான் சொன்னேன்- என் கதையை எழுதுங்க; படிக்கிறவங்க படிச்சாங்கன்னா அழாம இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு என் கதையில துக்கம் இருக்குன்னு. அப்போ மாதவிக்குட்டி அம்மா சொன்னாங்க, “ஜானு, உன் கதையை நீயே எழுது. அதை பேப்பர் நடத்துறவங்க வாங்கிக்கிட்டாங்கன்னா அதுக்குக் கிடைக்கிற பணத்தை உனக்கு நான் தர்றேன்”னு. எனக்கு கதை எழுதத் தெரியுமா என்ன?

நான் பள்ளிக்கூடத்துக்கே  போனது இல்ல. எனக்கு யாரும் இங்கிலீஷும் கற்றுத் தந்தது இல்ல. என் மாமா வேலுட்யாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? கேள்விப்படாம இருக்க முடியாது. பொன்னானி தாலுக்காவுல மாமாவைத் தெரியாதவங்க யாரும் இருக்க மாட்டாங்க. தென்னந் தோப்புக்காரர் வேல்வார் வேலுட்யார்னும் அவரைச் சொல்லுவாங்க. மாமா தான் போட்ட கோட்டுக்குள்ளே இருக்குற மாதிரி என்னை வளர்த்தாரு. வாசலை விட்டு வெளியே போறதா இருந்தா மாமாக்கிட்ட அனுமதி வாங்கிட்டுத்தான் போகணும். எங்க வீட்டுப் பொண்ணுங்க சாயங்கால நேரத்துல காத்து வாங்குறதுக்காக போறப்போ ஆம்பளைங்களைப் பார்த்தா பேசவே மாட்டாங்க. வேலை இருந்தா செய்யிறது. இல்லாட்டி ஒரு மூலையில போய் அமைதியா உட்கார்ந்துக்கிட்டு இருக்குறது... குருவாயூர்ல ஏகாதசி பார்க்குறதுக் காக ஒரு முறை போனேன். என்கூட மாமாவும் இருந்தாரு. அந்தச் சமயத்துல என் தம்பி தாமோதரன் சின்னப் பையனா இருந்தான். அவனை இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டு நடந்து நடந்து நான் வில்லு மாதிரி வளைஞ்சிட்டேன். அப்போ அவன் எந்த அளவுக்கு தடியா இருந்தான் தெரியுமா? இப்போ வயநாட்டுல அவன் வேலையில இருக்கான். இப்போ அவனைப் பார்க்கணுமே! இப்பவும் அவனைப் பற்றி நினைக்கிறப்போ... அம்மா எட்டு பிள்ளைகளைப் பெத்தாங்க. இப்போ நானும் தாமோதரனும் மட்டும்தான் எஞ்சி இருக்கோம். பாக்கி இருந்தவங்க எல்லாரும் போயிட்டாங்க! ம்... என்னைவிட மூத்தது காய்ச்சல் வந்து மூணு நாட்கள் கிடந்துச்சு... ஜுரமும் வாந்தியும்... என்ன செய்றது! கொடுப்பினை இருக்கணுமே! எது நடக்கணும்னு விதிச்சிருக்கோ அதுதான் நடக்கும். என் மாதவிக் குட்டி அம்மா, காசு இருந்தும் பிரயோஜனம் இல்ல... அறிவு இருந்தும் பயன் இல்ல... குருவாயூரப்பன் என்ன தரணும்னு நினைக்கிறாரோ, அதைத்தான் தருவாரு.

ஆ!... கதை! நான் அதை மறந்துட்டேன். என் பேரு தெரியும்ல! ஜானுன்றதுதான் என் பேரு. நான் நாயர் ஜாதியைச் சேர்ந்தவ. பள்ளிக்கூடம்... (சரி... சரி... நான் சொல்றேன். ஆரம்பத்துல இருந்து சொல்லாம எப்படி மாதவிக்குட்டி அம்மா, ஒரு கதை சொல்ல முடியும்?)

நேத்து வெளுத்தேடத்து நாணி என்கிட்ட கேட்டா, “ஜானு, நீ குருவாயூருக்கு வர்றியா”ன்னு. வர்ற வெள்ளிக்கிழமை ஏகாதசி ஆச்சே! கடவுள்கிட்ட வேண்டிக்க போக வேண்டாமா? அவளும் நெய்த்து வேலை செய்யிற பாருவும் எல்லா வருடமும் சாமி கும்பிடப் போவாங்க. “கூட்டத்துல சிக்கித் திணறிப் போறதுக்கு தயார் இல்லை”ன்னு நான் சொன்னேன். அதுக்கு நாணி சொன்னா- “நான் கூட்டத்துல சிக்கிக்காம பத்திரமா உன்னை அழைச்சிட்டுப் போறேன்”னு. “அது எப்படி முடியும் நாணி”ன்னு நான் கேட்டேன். அப்போ அவள் சொன்னா- “அதுக்கு வழி இருக்கு”ன்னு. “என்ன வழி? பெரு வழியா?” நான் கேட்டேன். அதைக் கேட்டு அவள் சிரிச்சுக்கிட்டே உருண்டா. “ஜானுகூட இருந்தா சிரிக்கிறதுக்கு வேற எதுவுமே வேண்டாம்”னு சொன்னா அவ. எது வேணும்னாலும் இருக்கட்டும்னு நான் புறப்பட்டுட்டேன். ஏகாதசி ஆச்சே! அப்படி பெருசா ஏதாவது புண்ணியம் கிடைக்கிறதா இருந்தா கிடைக்கட்டும். சரிதானே மாதவிக்குட்டி அம்மா!

அப்போ யார் யார் போனது தெரியுமா? நான், வெளுத்தேடத்து நாணி, நெய்த்துக்காரி பாரு, நரை முடி விழுந்த லட்சுமி அம்மா, பிறகு அந்த துருத்தின பல்லுக்காரி கமலாக்ஷி, லட்சுமி அம்மா வோட ரெண்டாவது மகள்... மூத்தவ கோயம்புத்தூர்ல இருக்கா. அவ ஒரு பணிக்கரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. எண்பது ரூபா சம்பளம். அதுனால என்ன? மோசமான ஜாதி. எனக்கு எப்படி அது தெரியும்னு கேக்குறீங்களா? ஊர்க்காரங்க சொல்லித்தான் எனக்கே அது தெரியும். அது உண்மைதான். ஜாதி, மானம் எதுவுமே இப்போ பெருசு இல்ல பணம் உள்ளவங்களுக்கு. ஆனா எங்க யாருக்கும் பணம், படிப்பு எதுவும் கிடையாது. அதனால எங்களுக்கு கொஞ்சம் ஜாதி இருந்தது. ஒரு துலுக்கனைக் கல்யாணம் பண்ண என்னால முடியாது...

ஆ... சொல்லிச் சொல்லி கதை விஷயத்தை மறந்தே போனேன். சரியான கூத்து! நாங்க படகுல ஏறி உட்கார்ந்த உடனே லட்சுமி அம்மா கேட்டா- எனக்கு எப்படி பக்தி வந்திச்சுன்னு. அந்த அம்மாவோட நாக்கு எதையாவது பேசாம இருக்காது. நான் அப்போ சூடா ஒரு பதில் சொன்னேன். இப்போ எனக்கு அது ஞாபகத்துல இல்ல. அதைக் கேட்டு லட்சுமி அம்மா ஒரு மாதிரி ஆயிட்டா. வைக்க வேண்டிய இடத்துல வைக்கணும். இருக்க வேண்டிய இடத்துல இருக்கணும். அதுதானே சரி மாதவிக்குட்டி அம்மா? எனக்கு கோபம் வந்திருச்சா என்ன? ஏய்... ஏய்... கோபமும் இல்ல... ஒண்ணுமில்ல. அந்த அம்மாவுக்கு கர்வம் அதிகம். மகள் கோயம்புத்தூர்ல இருக்காள்ல! மருமகனைப் பார்த்தா போதும், ஒரு வாரத்துக்கு சோறு உள்ளே போகாது. ஒரு காக்காவைப் போல இருப்பான் அந்த ஆளு... அவனுக்கு மாறுகண்ணு... எனக்கு எப்படி அது தெரியும்ன்றீங்களா? நான் அந்த ஆளைப் பார்த்தது இல்ல. நான் பார்க்கவும் வேண்டாம். மத்தவங்க சொல்லிக் கேட்டதுதான்.

ஆ... சொல்ல வந்துட்டு இப்போ லட்சுமி அம்மா மகளோட புருஷனைப் பற்றி நான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! என் புத்தி எப்படிப் போகுதுன்னு பாருங்க. படகுல போறப்போ படகு ஓட்டுற ஆளு அப்போ என் முகத்தையே பார்த்துக்கிட்டு இருக்கான். பார்வைன்னா அப்படியொரு பார்வை. என் உடம்பையே துளைக்கிற மாதிரி. கொஞ்ச நேரம் நான் பொறுமையா இருந்தேன். பிறகு நான் எல்லாரும் கேக்குற மாதிரி லட்சுமி அம்மாக்கிட்ட சொன்னேன்:

“தெரிஞ்சிக்கணும்னு கேக்குறேன் லட்சுமி அம்மா. படகைச் செலுத்துறப்போ பார்வை பொம்பளைங்க முகத்து மேல இருக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?” நான் சொன்னதைக் கேட்டு லட்சுமி அம்மா சிரிச்சு சிரிச்சு ஒரு மாதிரி ஆயிட்டா. லட்சுமி அம்மா திரும்பி உட்கார்ந்தா.


அதுக்குப் பிறகு என்னைப் பார்த்தபடி கேட்டா: “கேட்டியா சங்குண்ணி, ஜானு என்ன கேக்குறான்னு? அதுக்கு பதில் சொல்ல வேண்டியது நீதான்.” அந்த ஆளோட பேருதான் சங்குண்ணி. அப்போத்தான் அந்த ஆளோட பேரே எனக்குத் தெரியும். படகோட்டி தாமனுக்கு அந்த ஆளு சொந்தக்காரனா இருப்பான்னு நான் நினைச்சேன். தாமன் காய்ச்சல் வந்து வீட்டுல படுத்திருக்காப்ல... அதுக்கு பதிலா இந்த சங்குண்ணி வேலைக்கு வந்திருக்கான். லட்சுமி அம்மாவோட ஜாதிக்கார ஆளு. மடம்பில்ன்றது அந்த ஆளோட வீட்டுப் பேரு. நான் அந்த ஆளை முதல் தடவையா அப்போத்தான் பார்க்குறேன். அந்த ஆளைப் பற்றி நான் என்ன சொல்றது? அந்த ஆளு கறுப்புன்னு சொல்ல முடியாது. வெள்ளைன்னும் சொல்ல முடியாது. மாநிறம்... பருமனான உடல்வாகு... நல்ல உயரம்... விரிஞ்ச நெஞ்சு... காதுல சிவப்பு நிறத்துல கல் வச்ச கடுக்கன்... பல் அவ்வளவு நல்லா இல்ல... வெற்றிலை போடுற ஆளுன்னு பார்க்குறப்பவே தெரிஞ்சது. அந்த அளவுக்கு பல்லுல கறை. இருந்தாலும் சிரிக்கிறப்போ அப்படியொண்ணும் வெறுப்பு தோணல. எது எப்படி இருந்தாலும் லட்சுமி அம்மாவோட வார்த்தைகளைக் கேட்டதும் அந்த சங்குண்ணி அப்படி நான் பார்க்கவே இல்லைன்னு சொல்றான். “நான் யாரையும் பார்க்கல.” அந்த ஆளு சொல்றான். நான் சொன்னேன், “பார்த்தான்”னு. என்கூட சேர்ந்து வேற யாராவது அப்படிச் சொன்னாங்களா? நான் சொன்னது எவ்வளவு பெரிய விஷயம்? நான் கேட்டேன்: “பார்க்கணும்னு சட்டம் எதுவும் இருக்கான்னு நான் கேட்டேன்ல?”

“சட்டம் எதுவும் இல்லைன்னாலும் சில நேரங்கள்ல அப்படி பார்க்கணும்னு தோணும்”னு அந்த ஆளு சொன்னான். “பார்க்கட்டும்.... நல்லா பார்க்கட்டும்... ஆனா, என்னைப் பார்க்க வேண்டாம்.” “பார்த்தா என்ன செய்வே?” அந்த ஆளு கேக்குறான்: “பார்த்தா என்மேல வழக்கு போடுவியா?” சரியான ஆள்தான்! வெட்கம் கொஞ்சம்கூட இல்ல.. எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். சாவக்காட்டை அடையிறது வரை பல விஷயங்களையும் பேசி, சிரிச்சு சிரிச்சு நேரம் போனதே தெரியாமப் போச்சு. படகுல இருந்து எல்லாரும் இறங்கினப்போ சங்குண்ணி என் கையைப் பிடிச்சு இறக்கிவிட்டான். “நானே படகை விட்டு இறங்க முடியும். எனக்கு பயமொண்ணும் இல்ல”ன்னு நான் சொன்னேன். “நீ பயப்படுற...” அந்த ஆளு சொல்றான். நான் அந்த ஆளைப் பார்த்து, “அப்படியெல்லாம் இல்ல”ன்னு சொன்னேன். ஆனா, யார் காதுலயும் அது விழலன்னு நினைக்கிறேன். கமலாக்ஷி இருக்குறாள்ல... அந்த துருத்தின பல்லுக்காரி... அவளுக்கு ஒரே பொறாமை. சங்குண்ணி நாயர் என் கையைப் பிடிக்கிறதையும் என்னோடு ஏதாவது பேசுவதையும் அவள் பார்த்துக்கிட்டே இருந்தா. எது எப்படியோ, நாங்க நடந்து நடந்து சுமை தாங்கிக் கல்லை அடைஞ்சப்போ லட்சுமி அம்மா சொன்னா, “இதுக்கு மேல என்னால நடக்க முடியாது. ஒரு மடக்கு தேநீர் குடிக்காம என்னால ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது”ன்னு. அதுக்கு சங்குண்ணி சொன்னான். “எல்லாரும் வாங்க. இந்த தேநீர் கடைக்குள்ளே போவோம்”னு. தேநீர் கடைன்னா அழுக்கு படிஞ்ச ஒரு தேநீர் கடை. அங்கே போட்டிருந்த பெஞ்சுல அஞ்செட்டு ஆம்பளைங்க உட்கார்ந்து தேநீர் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஒரு அலமாரியில வடைகளும் புட்டும் இருந்துச்சு. சங்குண்ணி முதல்ல கடைக்குள்ளே நுழைஞ்சான். “இங்க வாங்க”ன்னு கடைக்காரன் சொன்னான்.

முதல்ல எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. இருந்தாலும் அதிகாலை நேரத்துல ஒரு மடக்கு காப்பிகூட குடிக்காம வீட்டை விட்டுப் புறப்பட்டேன்ல! தலை கத்துறது மாதிரி இருந்துச்சு. நாங்க எல்லாரும் ஒரு பக்கமா போய் உட்கார்ந்தோம். அப்போ நம்ம துருத்தின பல்லுக்காரி கமலாக்ஷி சங்குண்ணிக்குப் பக்கத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு அந்த ஆளோட முகத்தைப் பார்த்து சிரிச்சா. ச்சே...! கொஞ்சம்கூட கூச்ச நாச்சம் இருக்கா அவளுக்கு? கடையில இருந்தவங்க எல்லாரும் அதைப் பார்த்தாங்கன்னு சொல்லணுமா என்ன? அவங்களுக்கு என்ன தெரியும்? கமலாக்ஷியோட புருஷன் அந்த ஆளுன்னு அவங்க நினைச்சிருப்பாங்க. “கமலாக்ஷி...” அவளை அழைச்சு நான் சொன்னேன். “அப்படி அதிகமா சிரிக்காதே. பல் தேநீர்ல விழுந்துடப் போகுது”ன்னு. அதைக் கேட்டு அவ ஒரு மாதிரி ஆயிட்டா. சங்குண்ணி அப்போ என் முகத்தைப் பார்த்து கண்களைச் சுருக்கினான். சரியான ஆளு! தேநீருக்கான காசை சங்குண்ணியே கொடுத்துட்டான். எல்லாரும் சாப்பிட்டதுக்கான காசு எவ்வளவுன்னு பார்த்தப்போ ஒண்ணே கால் ரூபாய் வந்தது. அப்போ தெரியும்ல ஒவ்வொருத்தரும் என்னென்ன வாங்கி இருக்காங்கன்னு! லட்சுமி அம்மா மட்டும் ஆறு வடையும் ரெண்டு புட்டும் சாப்பிட்டிருந்தா. நான் ஒரு டம்ளர் தேநீர் குடிச்சேன். வேறெதுவும் சாப்பிடணும்னு எனக்குத் தோணல. அப்படியே இருந்தாலும் பொதுவா வெளியே நான் எதுவும் சாப்பிடுறது இல்ல. நான் அப்படியே வளர்ந்துட்டேன். எங்க வீட்டுப் பெண்கள் யாருக்கும் தேநீர் கடையைத் தேடிப் போய் தேநீர் வாங்கிக் குடிக்கிற பழக்கம் இல்ல. ஆம்பளைங்ககூட பேசிக்கிட்டு நிக்கிற பழக்கமும் இல்ல. ஏதாவது வேலையைப் பார்ப்போம். அது முடிஞ்சா ஒரு ஓரத்துல போய் உட்கார்ந்துக்கிட்டு இருப்போம். மாமா போட்ட கோடு அது.

சரி... சரி... நான் மறந்து போய் கதையை ஒழுங்கா சொல்லாம என் மாமாவைப் பற்றி சொல்லிக்கிட்டு இருக்கேன்! என் அறிவு அவ்வளவுதான்... எது எப்படியோ, நாங்க அந்த தேநீர் கடையை விட்டு வெளியே வந்து, ஒரு ஓடைûயைத் தாண்டி கோவிலை நோக்கி நடந்தோம். அப்போ நல்ல வெயில் அடிச்சிக்கிட்டு இருந்துச்சு. என் ஜாக்கெட் நனைஞ்சு உடம்போடு ஒட்டிக்கிடுச்சு. நான் சிவப்பு நிறத்துல சில்க் ஜாக்கெட் போட்டிருந்தேன். மத்தவங்க சாதாரண துணியில ஜாக்கெட் போட்டிருந்தாங்க. கமலாக்ஷியோட ஜாக்கெட் வாய்ல் மாதிரி தெரிஞ்சது. சரி... அது இருக்கட்டும். நாங்க கோவில் குளத்துல இறங்கி நல்லா குளிச்சோம். சங்குண்ணி வேறொரு இடத்துல நின்னுக்கிட்டு உரத்த குரல்ல சொன்னான். “ஜானும்மா... அந்த செயினைக் கழற்றி வச்சிட்டு குளத்துல இறங்க ணும்”னு. அப்போ லட்சுமி அம்மா அவனைப் பார்த்துக் கேட்டா, “அப்படின்னா எங்க யாரோட செயினும் குளத்துல போகாதா? ஜானுவோட செயின் மட்டும்தான் காணாமல் போகுமா?”ன்னு. அதுக்கு, “உங்க யாரோட செயினும் தங்கத்தால் ஆனது இல்ல. அதுனாலதான் நான் சொன்னேன்”னு சொன்னான் சங்குண்ணி.


அதைக் கேட்டு லட்சுமி அம்மாவோட முகம் ஒரு மாதிரி ஆயிடுச்சு. இருந்தாலும் அவ சொன்னா, “நீ சொல்றது சரிதான். எங்க எல்லாருக்கும் கவரிங் நகைகள் அணியிற அளவுக்குத்தான் வசதி இருக்கு. நாங்க யாரோ ஒருத்தன் நிலத்தை சீர்படுத்துற வேலைக்குப் போறது இல்ல”ன்னு.

“யாரோ ஒருத்தனோட நிலத்தை சீர்செய்யப் போறதை நானே மனப்பூர்வமா ஏத்துக்கிட்டுத்தான் போறேன். அதுனால உங்களுக்கு ஏதாவது கேடு வந்ததா என்ன?”ன்னு நான் கேட்டேன். “எங்களுக்கு சரியான தொழில் கிடைக்கல. அதுக்காக நிலத்தை சரிசெய்ய  போனது உண்மைதான்”னு நான் சொன்னதைக் கேட்டு லட்சுமி அம்மாவோட முகம் போன போக்கைப் பார்க்கணுமே! அவ ஒரு மாதிரி ஆயிட்டான்றதை நான் சொல்லணுமா என்ன? “என் தொழில் என்னன்னு சொல்லு, ஜானு...”ன்னு அவ என்கிட்ட கேட்டா. அதுக்கு, “அதை இப்போ சொல்ல மாட்டேன்”னு நான் சொன்னேன். பாரு அப்போ சொன்னா, “சண்டை போட்டுக்கிட்டு இருக்காம சீக்கிரமா குளிச்சு முடிங்க”ன்னு. அந்த நேரத்துல அங்க வந்த சங்குண்ணி என் முகத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தான். இப்படிப்பட்ட ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்ல. இந்த அளவுக்கு வெட்கமில்லாமலா ஒரு மனிதன் இருப்பானா! கடவுள் முன்னாடி கைகளால் தொழுது நின்னப்போ, என்னை யாரோ தள்ளினது மாதிரி இருந்துச்சு. அவ்வளவுதான்- எனக்கு பலமா கோபம் வந்திருச்சு. “இப்படியா ஆளுங்களைத் தள்ளுறது”ன்னு நான் கேட்டேன். திரும்பிப் பார்த்தப்போ நம்ம சங்குண்ணி நின்னுக்கிட்டு இருக்கான். “உங்களுக்கு வெட்கமில்லையா சங்குண்ணி? பெண்களை இப்படியா தள்ளுறது?”ன்னு நான் கேட்டேன். அதுக்கு அந்த ஆளு என் முகத்தைப் பார்த்து சிரிக்கிறான். கமலாக்ஷி அந்தக் காட்சியைப் பார்த்துக்கிட்டு இருந்தா. அவ “நாராயணா நாராயணா”ன்னு முணுமுணுத்துக்கிட்டு கடவுளுக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருந்தா. ஆனா, அவ பார்வை முழுவதும் இந்தப் பக்கம்தான்... லட்சுமி அம்மா அப்போ சொன்னா, “இங்க பாரு... இந்த கூடல், குலவல்லாம் கோவிலுக்குள்ள வேணாம்”னு. அதுக்கு நான் பதிலுக்குக் கேட்டேன். “யார் இங்கே கூடுறது குலவுறது?”ன்னு. “என் மகளைச் சொல்றியா? என் மகள் பேரைச் சொல்லு பார்ப்போம்”னா லட்சுமி அம்மா. “ஏன்... சொன்னா என்னை யாராவது கொன்னுடுவாங்களா என்ன?”ன்னு நான் கேட்டேன்.

“சண்டை போட வேண்டாம். சீக்கிரமா கடவுள்கிட்ட வேண்டிக்கிட்டு கிளம்பு”ன்னு அப்போ பாரு சொன்னா. எது எப்படியோ, கடவுள் வழிபாடு முடிஞ்சு கோவிலை விட்டு வெளியே வந்தப்போ நடுப்பகல் நேரமாகியிருந்தது. “ஒரு தேநீர் கடையைத் தேடிப் போயி ஏதாவது பலகாரம் சாப்பிடலாம்”னு பாரு சொன்னா. “பலகாரமும் சாப்பிட வேண்டாம். தேநீரும் குடிக்க வேண்டாம். கொஞ்சம் சாதம் சாப்பிடலாம்”னு சங்குண்ணி சொன்னான். “குருவாயூர்ல இருக்குற ஹோட்டல்கள் மாதிரி நல்ல ஹோட்டல் களை வேற எங்கேயும் பார்க்க முடியாது”ன்னு சங்குண்ணி சொன்னான். அந்த ஆளு போகாத ஊரே இல்ல. காசி, ராமேஸ்வரம், பழனி, திருவில்வாமலை... இதெல்லாம் எதுக்கு சொல்லணும் மாதவிக்குட்டி அம்மா? ஒரு இடத்தைக்கூட அந்த ஆளு மீதி வைக்கல. தமிழ்ல பேசுறதைக் கேட்டா, அந்த ஆளு தமிழனா இருப்பானோன்னு யாருக்கும் தோணும். என்கிட்ட தமிழ்ல பேசினானான்னு கேக்குறீங்களா? என்கிட்ட பேசல. வேட்டிக்கார செட்டிக்கிட்ட... செட்டி மேற்குப் பக்கம் ஒரு கடையில உட்கார்ந்திருந்தாரு. சங்குண்ணியைப் பார்த்ததும் செட்டி ஓடி வந்து அவனோட சட்டையைப் பிடிச்சு உலுக்கி கேள்வி மேல கேள்வி கேட்டாரு. “போன வாரம் வர்றதா சொல்லிட்டு ஏன் வரலை?”ன்னு அவர் கேட்டாரு. அப்போ சங்குண்ணி அவர்கிட்ட தமிழ்ல பேச ஆரம்பிச்சிட்டான். மன்னிக்கணும் கின்னிக்கணும்னு  என்னென்னவோ சொன்னான். கேக்குறதுக்கு ரொம்பவும் சுவாரசியமா இருந்தது. எனக்கு தமிழ் தெரியுமான்னு கேக்குறீங்களா? எனக்கு தமிழ் தெரியாது. அதைத் தெரிஞ்சிக்கவும் வேணாம். எனக்கு கோயம்புத்தூருக்குப் போயி வசிக்கணும்ன்ற ஆசையெல்லாம் கொஞ்சம்கூட இல்ல. நான் இந்த ஜாதிக்காரங்களைப் பார்க்கவே விரும்பல. இந்த செட்டிச்சிகளை நான் பார்க்கவே விரும்பல. சனிக்கிழமை வாசல்ல ஒவ்வொருத்தரா வந்து நிக்கறதைப் பார்க்கணுமே! குழந்தையை இடுப்புல வச்சிக்கிட்டு, அம்மா அம்மான்னு தொல்லை கொடுத்துக்கிட்டு... சரியான நேரம் பார்த்து சிறைக்குள்ளே கொண்டுபோய் போடணும். காக்கா குறத்திங்க... கண் அசந்துட்டா அவ்வளவுதான்... பொருள்களைத் திருடிட்டுப் போயிடுவாங்க. என் எண்ணெய் கிண்ணத்தை கிணற்றுக் கரையில வச்சிட்டு நான் கொஞ்சம்தான் திரும்பியிருப்பேன். அதுக்குள்ள ஒருத்தி அதை எடுத்து தன் மூட்டைக்குள்ள வச்சிக்கிட்டா....

என்ன.. கதையா? கதையைச் சொல்லிச் சொல்லி இப்போ எண்ணெய்  கிண்ணம் வரை வந்தாச்சு. அதுதான் என் அறிவு! அப்போ... நாங்க கடவுளை வேண்டிக்கப் போயிட்டு, எல்லாம் முடிஞ்சு ஹோட்டலுக்குள்ள நுழைஞ்சு சந்தோஷமா சாப்பிட்டோம். அதுக்கான காசை நாங்க எல்லாரும் பங்கு போட்டுக் கொடுத்தோம். கடைசியில என் கையில மூணரை ரூபாய் மீதி இருந்துச்சு. அந்தப் பணத்துல ஒரு புடவை வாங்கலாம்னு நினைச்சு ஒரு கடையைத் தேடிப் போனா கமலாக்ஷி சொல்றா, “மூணரை ரூபாய்க்கு என்ன புடவை கிடைக்கும்? இப்போ புடவைகளோட விலை அதிகம்”னு. “ஏதாவது கிடைக்குமான்னு பார்க்குறேன்”னு நானும் சொன்னேன். பல வகைகள்ல புடவைகளைப் பரப்ப விட்டு அதைப் பார்த்துக்கிட்டு இருக்குறப்போ, நம்ம சங்குண்ணி சொல்றான், “ஜானும்மா... நீங்க என்ன சென்ட் உபயோகிக்கிறீங்க? எனக்கு தலையைச் சுத்துற மாதிரி இருக்கு”ன்னு. “நான் சென்ட் உபயோகிச்சா உங்களுக்கு எதுக்கு தலை சுத்தணும்”னு நான் கேட்டேன். என் பக்கத்துல அந்த ஆளு வராம இருந்தாலே போதுமே! “பக்கத்துல வர்றதுக்கு எனக்கு என்னவோ மாதிரி இருக்கு...” அந்த ஆள் சொன்னான். என் மாதவிக்குட்டி அம்மா. இந்த அளவுக்கு வெட்கமும் மானமும் இல்லாத ஒரு மனிதனை நான் பார்த்ததே இல்ல.


உண்மையாவே சொல்றேன்... நான் பார்த்ததே இல்ல. அந்தக் கடையில உட்கார்ந்துக்கிட்டு நான் பேசுறதையும் நான் தலை முடி சீவுறதையும் அந்த ஆளு பார்த்துக்கிட்டே இருந்தான். எனக்கு பயங்கரமா கோபம் வந்தது. அழுகையும் வந்தது. ஒரே அவமானமா இருந்துச்சு. “இந்த நகர நாகரீகத்தை என்கிட்ட காட்ட வேண்டாம்”னு நான் சொன்னேன். “நாகரிகம் உள்ளவங்கக்கிட்ட நான் நாகரீகத்தைக் காட்டுவேன்”னு அதுக்கு சங்குண்ணி சொன்னான். என் ஜாக்கெட்டைப் பார்த்து, நான் பாரு, கமலாக்ஷி ஆகியோரைப் போல உள்ளவ இல்லன்னு அவன் நினைச்சிருக்கணும். துணியைத் தைக்கிறதா இருந்தா நல்லா தைக்கணும். ஆறணா கொடுக்குறது எதுக்கு? இல்லையா மாதவிக்குட்டி அம்மா? என் ஜாக்கெட்டை திருச்சூர்க்காரன் வேலாயுதன்தான தச்சான். அந்த சிவப்பு சில்க்... கொஞ்சம் ஒரு மாதிரிதான். இருந்தாலும் எனக்கு அது ரொம்பவும் பிடிச்சிருக்கு.

சங்குண்ணி என் பக்கத்துல நெருக்கமா உட்கார்ந்திருக்குறதைப் பார்த்துட்டு கடைக்காரன் சொல்றான். “இதோ உட்கார்ந்திருக்காங்க பிரேம் நசீரும் மிஸ். குமாரியும்”னு. சினிமாக்காரர்களோட பேரு! அதைக் கேட்டு எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு. புடவை வாங்கிட்டு வெளியே வர்றப்போ, சாயங்காலம் ஆயிடுச்சு. சங்குண்ணி பீடி வாங்குறதுக்காகப் போயிட்டான். அதுக்குப் பிறகு அந்த ஆளு திரும்பி வரவே இல்ல. கடைசியில வீட்டுக்குத் திரும்பிப் போறது எப்படின்றது மாதிரி ஆயிடுச்சு. படகு ஓட்டுறதுக்கு சாவக்காட்டுல இருந்த ஒரு பையனைக் கூப்பிட்டோம். பன்னிரெண்டனா அதுல போயிடுச்சு. சங்குண்ணியைப் பார்க்காத கவலையில இருந்தா கமலாக்ஷி. அவ படகுல உட்கார்ந்து அப்பப்போ கண்கள்ல நீர் வர, அதை கையை வச்சு துடைச்சிக்கிட்டு இருந்தா. அவ அந்த ஆளைக் காதலிக்கிறா போல இருக்கு.. பாவம்... ஆனா, எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியும். என் மாதவிக்குட்டி அம்மா, அந்த சங்குண்ணி கமலாக்ஷியைக் கல்யாணம் பண்ண மாட்டான். அதை என்னால உறுதியா சொல்ல முடியும். அவன் கொஞ்சம் நாகரிகமானவன்.... எல்லாம் முடிஞ்சு திரும்பி வர்றப்போ பாரு கேட்டா, “ஜானும்மா, உன் செயின் எங்கே?”ன்னு. “என் குருவாயூரப்பா, என்னை ஏமாத்திட்டியா?”ன்னு நான் கேட்டேன். முக்கால் பவுன் வரக்கூடிய செயின் ஆச்சே! அப்படி ஒரு செயினைத் திரும்பவும் வாங்கணும்னா இன்னும் எவ்வளவு நாட்கள் வேலை செய்யணும்? எங்கே போயி தேடுறது? படகுல தேடிப் பார்த்தேன். கண்ணீரும் கையுமா திரும்பினேன். இனிமேல் நான் குருவாயூருக்குப் போக மாட்டேன். என்னால அதை மறக்கவே முடியல. என் செயின் கடிகார செயின் மாதிரி இருக்கும். மாதவிக்குட்டி அம்மா, உங்களுக்கு என் செயினை ஞாபகத்துல இருக்கா? அப்பவே படகைத் திருப்பி அங்கே தேடியிருந்தா கட்டாயம் செயின் கிடைச்சிருக்கும். சங்குண்ணி கூட இருந்திருந்தா அந்த ஆளு தேடிக் கண்டுபிடிச்சு அந்த செயினைத் தந்திருப்பான். அந்த ஆளு ஒரு அன்பான மனிதன்... அது எனக்கு நல்லா தெரியும். அன்பைத் தவிர வேற எதுவுமே வேண்டாம் என் மாதவிக்குட்டி அம்மா.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.