Logo

யானைத் திருடன்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4319
yanai thirudan

யானையைக் கூடையில் வாரி எடுக்க முயற்சித்த ராமன் நாயரை எல்லாரும் "யானை வாரி’’ என்று அழைக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாள் ராமன் நாயர் கூறுகிறார்:

 “யானைத் திருடன் ராமன் நாயர் என்று அழைப்பதுதான் எனக்குப் பிடித்திருக்கிறது.”

அதற்குச் சரியான காரணமும் இருக்கிறது. ஆனால், அப்படி யாரும் அழைப்பதில்லை. போலீஸ் புத்தகங்களிலும் சிறை ஆதாரங்களிலும் பதிவு செய்யப்பட்டிருப்பது "யானை வாரி ராமன் நாயர்’’ என்றுதான். அவர் நன்கு தெரிந்து கொண்டே ஐம்பது ரூபாய் ஒப்பந்தத்தில் ஒரு யானையைத் திருடினார். அந்த துணிச்சலான சம்பவம் இப்படித்தான் நடந்தது:

சாத்தங்கேரி மனையைச் சேர்ந்த இரண்டு திருமேனிகளுக்கிடையே சற்று உறவு சீராக இல்லாமல் இருந்த காலம். அண்ணனுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தர வேண்டும் என்பதற்காக தம்பி பலவகையான தகிடுதத்தங்கள் நிறைந்த செயல் களையும் செய்து கொண்டிருந்தார். நெல் அறுவடை செய்து விற்பது, மரக்கட்டைகளை வெட்டி விற்பது- அவற்றுடன் சேர்த்து ஒரு யானையையும் விற்று விடலாம் என்று தம்பி திருமேனி முடிவு செய்கிறார். ஒரு யானையைத் திருடி நதியின் மறுகரையில் இருக்கும் காட்டில் கொண்டு போய் கட்டிப் போட வேண்டும்.

யானை வாரி ராமன் நாயர் அந்த வேலையை ஐம்பது ரூபாய் கான்ட்ராக்டில் எடுத்து, பத்து ரூபாய் முன்பணமாகப் பெற்றுக் கொள்ளவும் செய்கிறார். அதைத் தொடர்ந்து அவர் நான்கைந்து நாட்கள் இரவு வேளையில் பழங்களும் சர்க்கரையும் வாங்கி பாருக்குட்டிக்குக் கொடுக்கிறார். இடையில் அவ்வப்போது கொச்சு நீலாண்டனுக்கும் கொடுப்பார். அவனிடம் அவர் கூறுவார்:

கொச்சு நீலாண்டா, “அவள் மீது வைத்திருக்கும் அன்பு காரணமாக அல்ல. ரகசியம் உனக்கு தெரியும்ல? அவளை நாம திருடி கரையைத் தாண்டி கொண்டு போக இருக்கிறோம்.''

தொடர்ந்து பாருக்குட்டியைத் தடவுவார்.

“கட்டிக் கிடக்கும் யானை!'' என்றெல்லாம் கூறுவார். அந்த வகையில் பாருக்குட்டியுடன் இருந்த எல்லா சண்டைகளும் முடிவுக்கு வந்துவிட்டதைப் போல தோன்றியது. சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் யானை வாரி கேட்டார்:

டேய் தங்கச் சிலுவை... “கொச்சு நீலாண்டனை நாம கான்ட்ராக்ட் எடுத்திருந்தால்...?''

தங்கச்சிலுவை கேட்டார்:

“நீ எடுத்திருக்கலாம் அல்லவா?''

யானைவாரி சொன்னார்:

“கொச்சு நீலாண்டனை திருடுவதற்கு மட்டும் நாம வளரவில்லை.''

தங்கச்சிலுவை சொன்னான்:

“அதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கு குடல் நடுங்கும்.''

“பிறகு... எனக்கு?''

அந்த வகையில் நிம்மதி பெருமூச்சுடன் அவர்கள் பாருக்குட்டியைத் திருட முடிவு செய்தார்கள். நல்ல இருட்டும் கொஞ்சம் மழையும் இருந்த ஒரு இரவு நேரம். பழக்குலையுடன் தங்கச் சிலுவை தோமா முன்னால் நின்றிருந்தார். யானை வாரி யானையைக் கட்டியிருந்த சங்கிலியை அவிழ்த்தார். தங்கச்சிலுவை தோமா வேகமாக நடந்தார். பணிவான குரலில் யானை வாரி மெதுவாகச் சொன்னார்:

“யானையே நட...''

யானை சற்று வேகமாகவே நடந்தது. தங்கச் சிலுவை தோமா நதியில் இறங்கினார். பின்னால் யானையும். நதி இருந்த பகுதியில் இருட்டு குறைவாக இருந்தது. அப்போது யானை வாரி சரியாகப் பார்த்தார். கொச்சு நீலாண்டன்! நிறைய மனிதர் களைக் கொன்றிருக்கும் பயங்கரமான அந்த தந்தங்கள் இரண்டும் நல்ல வெள்ளை நிறத்தில் தெரிந்தன. யானை வாரியின் வாயில் நீர் வற்றிவிட்டது. தொண்டையும் உதடுகளும் வறண்டு போயின. யானை வாரி மெதுவான குரலில் சொன்னார்:

“தங்கச் சிலுவையே! திரும்பிப் பார்க்காதே. உனக்கு தைரியம் இருக்கிறதா? ஆள் மாறிவிட்டது. அவன்...!''

தங்கச்சிலுவை தோமாவிற்கு உடனடியாக விஷயம் புரிந்து விட்டது. ஒரு நிமிட நேரத்திற்கு சுய உணர்வு இல்லாமற் போனதைப் போல தோன்றியது. இல்லை. தங்கச் சிலுவை தோமா நினைத்தார்- "யானை வாரி இறக்கப் போகிறார் என்றால் நானும் இறக்கப் போகிறேன்.”

தங்கச்சிலுவை தோமா மெதுவான குரலில் கேட்டார்:

“என்ன செய்யணும்?''

“பழக்குலையை அவனிடம் கொடுத்து விட்டு... ஒரே முங்கு... வலது பக்கம் போகணும். பின்னால் நானும் வர்றேன்.''

அதைத் தொடர்ந்து இருவரும் நீருக்குள் மூழ்கி நீந்தித் தப்பித்து கரையை அடைந்தார்கள். இரண்டு பேரும் கட்டிப் பிடித்துக் கொண்டு "கிடுகிடா” என்று நடுங்கிக்கொண்டே பார்த்தார்கள். கொச்சு நீலாண்டன் நதியிலிருந்து நீரை வாரி ஊற்றிக் குளித்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அவர்கள் உயிரில்லாதவர்களைப் போல தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று படுத்து பயங்கரமான கனவுகளைக் கண்டவாறு தூங்கினார்கள்.

மறுநாள் காலையில் கொச்சு நீலாண்டன் சாத்தங்கேரி மனைக்குச் சென்றான் என்றும், சங்கரன் நம்பூதிரிப்பாடை குத்துவதற்காக விரட்டினான் என்றும் கூறப்படுவதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவன் வீட்டிற்குச் சென்றான். யானைக்காரர்கள் அவனைக் கட்டிப் போட்டார்கள்.

யானை வாரிக்கும் தங்கச் சிலுவைக்கும் ஐந்தெட்டு நாட்களுக்கு வயிற்றுப் போக்கு உண்டானது. அது நாளடைவில் குணமாகியது. சந்தோஷத்திலும் அமைதியிலும் திளைத்து வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தபோது, யானை வாரி சொன்னார்:

“டேய் தங்கச் சிலுவையே!''

“என்னடா யானை வாரி?''

“நாம திருடியது அசிங்கம் பிடிச்ச அந்த பாருக்குட்டியை என்றிருந்தால், என்ன ஒரு குறைச்சலான காரியம் அது!''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.