Logo

ஸெல்ஃபிச்சிகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6497
shell pichigal

ஸெல்ஃபிச்சிகள்! அவர்களின் பெயர்கள் என்றும் வாழ்த்தப்படட்டும்! அவர்கள் தானே உயிர்களுக்கு எல்லாமாக இருப்பவர் கள்!

மேலே சொன்ன புகழ்ச்சியுடன் சேர்த்து ஒரு சிறு செய்தியை நான் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

பல நூற்றாண்டு களாக என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும்.  ஸெல்ஃப் திருமணமே செய்து கொள்ளாமல் படு சுதந்திரமான மனித னாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஒரு நல்ல நாளில் ஸெல்ஃபிற்குத் திருமணம் நடக்கிறது. இப்படித்தான் ஸெல்ஃப் பிற்கு ஒரு ஸெல்ஃபிச்சி கிடைத்தாள்.

(உலகத்தில் உள்ள எல்லா ஸெல்ஃபிச்சிகளுக்கும் இன்னொரு முறை வணக்கம்.) ஸெல்ஃபிச்சி வந்தவுடன், ஸெல்ஃபிடம் மனரீதியாக ஒரு மாற்றம் உண்டானது. நிலவில் சேவல் இறங்கினால் எப்படி இருக்கும்- அப்படி ஆகிவிட்டான் ஸெல்ஃப். எந்த விஷ யத்திலும் ஒரு நோக்கமும் இல்லை. திட்டமும் இல்லை. மொத்தத்தில்... என்ன சொல்வது? ஒரு சுகம்தான். (ஸெல்ஃப் முன்பு சீட்டு விளையாட்டில்  மிகப்பெரிய திறமைசாலியாக இருந்தான். காசு வைத்து விளையாடும் விளையாட்டுதான். எப்போது விளையாடினாலும் ஸெல்ஃப் வெற்றி பெற்று விடுவான். திருமணம் முடிந்த பிறகு ஸெல்ஃப் சந்தித்ததென்னவோ முழுக்க முழுக்க தோல்விதான். அறிவு மழுங்கிப் போய்விட்டது என்று ஆட்கள் கூறுவது வழக்கமாகிவிட்டது.) அவர்கள் அவனை அப்படிக் குறை கூறலாம். இருந்தாலும், வாழ்க்கை சுகமாகவே போய்க்கொண்டிருந்தது. அப்போது வருகிறாள் நம் நாணி!

ஸெல்ஃபைப் பொறுத்தவரை நேரம் வெளுத்து விட்டது என்று சொன்னால், மணி பத்தோ பத்தரையோ ஆகிவிட்டது என்று அர்த்தம். தூக்கம் கலைந்து எழுந்து பால் கலக்காத தேநீரை பெட் காஃபியாக குடித்து முடித்து, காலைக் கடனை முடித்து ஒரு வகை உற்சாகத்துடன் ஸெல்ஃபிச்சி தருகிற பால் கலக்காத தேநீரை, பால் கலக்காத தேநீராகவே ரசித்து குடித்து, இடையில் புகை பிடித்து ஊதியவாறு உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு நேராக முன்னால் ஒரு பெண்!

ஸெல்ஃப் அமர்ந்திருப்பது  ஸெல்ஃபிச்சியின் வீட்டில். (நாங்கள் வந்து இரண்டு மூன்று நாட்களாகிவிட்டன.) வீடு சற்று மேடான இடத்தில் இருக்கிறது. முன்பக்கம் பத்தடி பள்ளத்தில் சமதளம் இருக்கிறது. கண்ணுக்கெட்டாத தூரம் வரை தென்னை மரங்கள். இடையில் ஆங்காங்கே வீடுகள். அந்த வீடுகள் ஒவ்வொன்றும் துணியில்லாமல் நிற்பதுபோல் இருந்தன. ஒரு வீட்டுக்கும்

வேலியோ வெளிமதிலோ கிடையாது. நல்ல விஷயம்தான். எல்லாரும் எல்லாவற்றையும் பார்க்கலாமே!

ஸெல்ஃபிற்கு முன்னால் தெரிகிற பெண் இரண்டு அங்குலம் இந்தப் பக்கமோ அந்தப் பக்கமோ நகர்ந்தால்கூட தென்னை மரத்திற்குப் பின்னால் அவள் மறைந்து போவாள். நல்லவேளை- அவள் கொஞ்சம்கூட அசையாமல் நேராக நின்றிருக்கிறாள்.

அவள் தன் தலைமுடியை சிவப்பு நிற ரிப்பன் வைத்து கட்டியிருக்கிறாள். ரிப்பன் கட்டைத் தாண்டி ஒன்றரை முழம் நீளத்திற்கு முடி பிரிந்து ஸ்டைலாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. சிவப்புப் புள்ளிகள் போட்ட வெள்ளை ப்ளவுஸ். நெற்றியில் சிவப்பு நிற பொட்டு, புருவங்களுக்கு நடுவில் அழகாக வைக்கப்பட்டிருக்கிறது. சிவப்பு கரை போட்ட வெள்ளை முண்டு. அவள் பார்க்க கொஞ்சம் கருப்புதான். ஸெல்ஃபையே பார்த்தவாறு நிற்கிறாள். அதாவது- வேறு யாருடனோ அவள் பேசிக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

அவளிடம் ஒரு நல்ல  பிரேஸியர் இருக்கிறது. அதன்விலை ஆறு ரூபாய் 95 பைசா. அதை அணிந்திருப்பதால்தான் அவளின் பெண்மைத்தனம் முழுமையாக வெளிப்பட்டு நிற்கிறது. தான் அழகாக இருப்பது குறித்து அவளுக்கு உண்மையிலேயே பெருமையோ பெருமை.

ஸெல்ஃபின் கண்களும் அவளின் விழிகளும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருந்தன. அவள் கறுப்பாக இருந்தாலும், பார்க்க அம்சமாகவே இருந்தாள். அவளுக்கு இப்போது இருபது வயது இருக்கும். அவள் நிற்பது தூரத்தில் என்றாலும் இதை எல்லாம் ஸெல்ஃபால் சரியாகக் கணிக்க முடிந்தது.

“ம்ஹும்...'' ஸெல்ஃபிச்சி சொன்னாள்.

“வந்து நிற்கிறதைப் பாருங்க...''

ஸெல்ஃப்: “யாரைச் சொல்றே?''

ஸெல்ஃபிச்சி : “அந்தக் கறுப்பி நாணியைத்தான்...''

"நாணின்றது தான் பேரா? பேரு நல்லாத்தான் இருக்கு. எது எப்படியோ... நாணி, நீ அங்கே நிற்க வேண்டாம். தப்பிச்சு ஓடிடு...’’

“எங்கே இருந்தாலும் நேராக வந்து நிற்பா.'' ஸெல்ஃபிச்சி தொடர்ந்து சொன்னாள்: “அதோட விலை ஆறு ரூபா தொண்ணூற்றஞ்சு பைசா. அது ஒண்ணுதான் அவள்கிட்ட இருக்கு. ஒரு நெளிவும் ஒரு முடி கட்டும்... எவ்வளவு உதவாக்கரையாக இருந்தாலும், அடுத்த நிமிடமே அவள் காலடியிலே விழுந்திடுவான். என்னைப் பார்த்தீங்களா? நான் எவ்வளவு அழகாக இருக்கேன்? அடேயப்பா... அவளும் அவளோட பார்வையும்...''

அப்படி என்றால் நாணிக்கென்று தனியான ரசனை எதுவும் கிடையாது. எந்த உதவாக்கரையையும் உற்றுப் பார்ப்பாள். இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது ஸெல்ஃபைப் புகழ்வதற்கா இல்லாவிட்டால் இகழ்வதற்கா? இகழ்வது என்றால் சாதாரண மனிதனான இந்த ஸெல்ஃப் அப்படி என்ன பெரிய தப்பைப் பண்ணிவிட்டான்? கண் முன்னால் எது தோன்றினாலும் பார்ப்பான். பார்த்துக் கொண்டே இருப்பான். இதில் நீதி நியாயத்திற்கு இடமே இல்லை. ஸெல்ஃபுகளெல்லாம் குற்றவாளி ஆகிறார்கள். ஸெல்ஃபிச்சிகளெல்லாம் நல்லவர்கள் ஆகிறார்கள். நியாயமும் உண்மையும் ஸெல்ஃபிச்சிகள் பக்கம் மட்டுமே இருக்கின்றன.

“பிறகு...?'' ஸெல்ஃபிச்சி கேட்டாள். கேட்ட கேள்வியே தப்பு. எதுவும் பேசாதிருப்பதே உத்தமம்.

“கொஞ்சம் எந்திரிச்சு பல் தேய்ச்சு குளிச்சு ஏதாவது சாப்பிடலாமே?''

“இந்த ஃப்ளாஸ்க்ல இருக்குற பால் இல்லாத தேநீர் முழுவதும் தீர்ந்த பிறகு எழுந்திரிப்பேன். பல் தேய்ப்பேன். குளிப்பேன். எப்பவும் நடக்குறதுக்கு மாறா நடக்கக் கூடாதுல்ல...?''

“அவளைப் பார்த்தது போதும்ல?''

“பொன்னே.... நான் அவளைப் பார்க்கல. அவளைப் பார்க்கணும்ன்ற எண்ணமும் எனக்கு இல்ல. அவள்மேல எனக் கொண்ணும் காதல் இல்ல. சும்மா... அவ எங்கே வேணும்னாலும் நின்னுட்டுப் போகட்டும். நமக்கென்ன? பாவம்...''

பெண் இனத்தைப் பொறுத்தவரை பாவங்கள் என்று சொல்வதற்கில்லை. வெறுமனே பேச்சுக்காக அப்படிச் சொன்னேன். பாவங்கள் என்று சொல்லப் போனால் ஆண் இனத்தைத்தான் கூறவேண்டும். உலக சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், இந்த உண்மை நமக்குத் தெரியவரும். ஸெல்ஃப் பேசும் போது வரும் வார்த்தைகளை கவனித்தாலே, லேசாக ஹென்பெக்ட்னஸ் இழையோடி இருப்பது தெரியும். எல்லாருமே பார்த்தால் இப்படி ஹென்பெக்ட்டாகத்தான் இருக்கிறார்கள். அப்படி இருப்பதுதான் சிறந்தது என்று இங்கு பொதுவாகக் கருதப்படுகிறது.

“விஷயம் தெரியுமா?'' ஸெல்ஃபிச்சி சொன்னாள்: “அவ ஒண்ணும் நீங்க நினைக்கிற மாதிரி பாவம் இல்ல...''

"நாணீ, ஓடிப்போயிடு! இதோ என்னுடைய ஸெல்ஃபிச்சி உன்னைக் கொல்லப் பார்க்கிறாள். எங்காவது போய்த் தப்பித்துக் கொள்.’’


“கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அவ ஒருத்தன்கூட ஓடிப்போயிட்டா!''

“பிறகு...?''

“அவளோட அண்ணன்மாருங்க போயி திருப்பி கூட்டிட்டு வந்தாங்க. இந்த விஷயத்தை யாருக்கும் தெரியாம ரகசியமா வச்சிருக்காங்க. மாமா வீட்ல அவ இவ்வளவு நாளும் இருந்தான்னு, கேக்குறவங்களுக்கு இவங்க சொல்லிக்கிட்டு இருக்காங்க!''

ஸெல்ஃபிச்சிகளிடமிருந்து யாரும் எதையும் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எவ்வளவு பெரிய ரகசியமாக இருந்தாலும், அவர்கள் அதை எப்படியும் தெரிந்து கொண்டுதான் மறுவேலை பார்ப்பார்கள். அரசாங்கம் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். ரகசிய காவல் துறையில் பெண் இனத்தை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அம்பாஸிடர்களாக பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்த வேண்டும்.

“அப்போ நாணி அவளோட மாமா வீட்ல இல்லைன்றதை எப்படி நீ கண்டு பிடிச்சே?''

“எனக்கு மட்டுமில்ல, இங்க இருக்குற எல்லா பொம்பளைங் களுக்கும் இந்த ரகசியம் தெரியும்!''

“எப்படி இவ ஒரு ஆள்கூட ஓடினா?''

“நாணியோட வீட்டுக்கு வலது பக்கம் ஒரு சின்ன வீடு இருக்கு. அங்கே கொஞ்சம் ஆளுங்க இருக்காங்க. அதுல சுருட்டை முடி வச்ச பையன் ஒருத்தன் இருக்கான்...''

“அந்த சுருட்டை முடிக்காரன்கூடத்தான் நாணி ஓடினாளா?''

“ஆமா...''

அப்படியென்றால் நாணிக்கும் ஒரு ரசனை இருக்கிறது என்றுதான் அர்த்தம். எப்படி இருந்தாலும் ஒரு உதவாக்கரையுடன் சேர்ந்து அவள் ஓடவில்லை. ஒரு சுருட்டை முடிக்கார இளைஞனுடன்தானே ஓடியிருக்கிறாள்! அந்த அளவில் நல்ல விஷயமே. அவ்வளவுதான்- ஸெல்ஃப் அடுத்த நிமிடமே தன்னுடைய முடியைச் சுருள் முடியாக்கும் வேலையில் இறங்கிவிட்டான். ஸெல்ஃபின் தலை முடியைப் பற்றி சிறப்பாக எதுவும் கூறுவதற்கில்லை. தலை என்ற மலைக்கு இரண்டு பக்கங்களிலும் ஆங்காங்கே கொஞ்சம் முடிகள் இருக்கும். அவ்வளவுதான். ஒன்றுமே இல்லாமல் இருப்பதைவிட கொஞ்சமாவது முடி இருக்கிறது என்பது நல்ல விஷயம்தானே! இருக்கும் முடியைச் சுருட்டியவாறு ஸெல்ஃப் கேட்டான்:

“அவளோட அண்ணன்கள் எதற்கு அவளைத் திருப்பிக் கூட்டிட்டு வந்தாங்க? கல்யாணம் பண்ணி வச்சிருக்க வேண்டியது தானே?''

“அந்தச் சுருட்டை முடிக்காரனுக்கு ஏற்கெனவே பொண்டாட்டியும் புள்ளைங்களும் இருக்காங்க!''

என்ன இருந்தாலும், சுருட்டை முடிக்காரன் செய்தது தப்புதான். ஸெல்ஃப் சுருட்டிய முடியை மீண்டும் நேராக்கினான்.

“ஆனா, அதுல என்ன தப்பு இருக்கு?'' ஸெல்ஃப் கேட்டான்: “ஒண்ணுக்கு மேல மனைவிகள் இருந்தா என்ன? பதினாறாயிரத்து எட்டு பொண்டாட்டிங்க வச்சிருந்த ஆளுங்கல்லாம் இங்க இருந்திருக்கிறாங்க. அதனால ஏதாவது பிரச்சினை வந்ததா என்ன?''

ஸெல்ஃப் கொஞ்சம் கோபத்துடனும், ஆக்ரோஷத்துடனும்தான் இந்தக் கேள்வியைக் கேட்டான். ஹென்பெக்ட்னஸ்ஸுக்கு ஒரு சரியான சம்மட்டி அடி கொடுக்க வேண்டும் அல்லவா?

ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“தப்பு ஒண்ணும் நடக்கல. அந்த நல்ல நாட்களை இப்போ நினைச்சுப் பார்த்து என்ன பிரயோஜனம்? அன்னைக்கு ஒரு பெண் விருப்பப்பட்டா அஞ்சு கணவன்களைக்கூட ஒரே நேரத்துல வச்சுக்கலாம்!''

அதைக்கேட்டதும் ஸெல்ஃபிற்கு மயக்கம் வருவதைப்போல இருந்தது. கொஞ்சம் சூடான பால் போடாத தேநீரைக் குடித்தான். பீடி ஒன்றை உதட்டில் வைத்துப் பிடித்து இழுத்தான். பிறகு என்ன நினைத்தானோ, லேசாகச் சிரித்தான்.

ஸெல்ஃபிச்சி  சொன்னாள்:

“அந்த சுருட்டை முடிக்காரன் நாணியைச் சரியா பார்த்திருக்கல... தூரத்துல இருந்து பார்த்தா, நாணி பரவாயில்லன்ற மாதிரி இருப்பா...''

“பக்கத்துல பார்த்தா?''

“நாணி வாய் திறந்து எதுவும் பேசமாட்டா. காரணம் என்ன தெரியுமா? அவளோட பல் எல்லாமே உள்ளே வளைஞ்சு வளைஞ்சு இருக்கும்!''

“அது அழகில்லாத ஒண்ணுன்னு சொல்ல முடியாதோ!''

“அவளுக்கு முடி இல்ல... இருக்குற முடி ஏதோ ஒரு மிருகத்தோட வாலுதான். அதோட நுனி

சிவப்பு ரிப்பனுக்குள்ள மறைஞ்சிருக்கு...''

ஸெல்ஃப் சொன்னான்:

“சரி, நான் போய் பல் தேய்ச்சுக் குளிச்சிட்டு வர்றேன்...''

ஸெல்ஃபிச்சி இனிமையான குரலில் சொன்னாள்:

“தேநீர் இன்னும் அரை டம்ளர் இருக்கு. இதையும் குடிச்சிருங்க!''

ஸெல்ஃப் இருந்த தேநீரைக் குடித்தான். ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“என்னோட அம்மா வயித்துல இருக்குறப்போ நாணியோட அம்மா கர்ப்பமா இருந்திருக்கா. இப்போ நாணிக்கு என்ன வயசு இருக்கும்? சொல்லுங்க.''

ஸெல்ஃப் சொன்னான்:

“ஒரு இருபது வயது இருக்குமா?''

ஸெல்ஃபிச்சி சொன்னாள்:

“அப்படின்னா நான் இதுவரை பிறந்ததே இல்லைன்னு அர்த்தம்!''

“அப்படின்னா?''

“அப்படின்னா என்னோட அம்மாவுக்கு இப்ப இருபது வயசுதான் வரும்!''

ஸெல்ஃபுக்கு மீண்டும் மயக்கம் வரும்போல் இருந்தது. அவன் கேட்டான்:

“நீ என்ன சொல்றே? சொல்றதை ஒழுங்காச் சொல்ல வேண்டியதுதானே?''

“என்னோட அம்மாவுக்கும் நாணிக்கும் ஒரே வயசு...''

“அப்படின்னா?''

“ஒண்ணுமில்ல. போய் பல் தேய்ச்சு குளிச்சு, ஏதாவது சாப்பிடுங்க. தேநீர் ஆறிடப் போகுது...''

இனி ஏதாவது பேசாமல் இருப்பதே உத்தமமான காரியம். ஆனால், பேசாமல் எப்படி இருக்க முடியும்? ஸெல்ஃப் நாணியைப் பார்ப்பதாக இல்லை. ஏன், எந்த ஒரு பெண்ணையும் ஏறிட்டுப் பார்ப்பதாக இல்லை. பார்க்க நேர்ந்தால், கண்களை மூடிக் கொள்வது என்று தீர்மானித்து விட்டான். ஸெல்ஃபிச்சியின் தாயின் வயது கொண்டவள் நாணி. இருந்தாலும், பார்க்கும்போது இருபது வயது உள்ளவள் மாதிரியே இருக்கிறாள். ஸெல்ஃபிற்கு தூரப்பார்வை இல்லை என்பது உலகமறிந்த சமாச்சாரம். இப்படியே நாட்கள் இனிமையாக கழிந்து கொண்டிருந்தன. அப்போது வருகிறது ஒருநாள். நாணியைப் பற்றிய செய்தியுடன் அது வந்தது. செய்தியைச் சொன்னவள் ஸெல்ஃபிச்சிதான்.           குரலில் ஒரு மென்மைத்தனம் இழையோட அவள் சொன்னாள்:

“நாம ஏதாவது பரிசுப்பொருள் தரணும். நாளைக்கு நாணிக்கு கல்யாணம். பிறகு... அவளையும் அவளோட புருஷனையும் வீட்டுக்கு அழைச்சு தேநீர் கொடுக்கணும். ஆமா... அவளுக்குப் பரிசா என்ன தரலாம்?''

நாணியின் திருமணம் முடிந்தது. அவளின் ஸெல்ஃபன் ஒரு தீப்பெட்டிக் கம்பெனியில் க்ளார்க்காக வேலை பார்க்கிறான். பரிசுப் பொருள் தந்தோம். வீட்டுக்கு வரவழைத்து, தேநீர் கொடுத்தோம். இரண்டும் கொடுத்தபோது, ஸெல்ஃப் அங்கு இல்லை. ஒரு முக்கிய வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு, ஐம்பது மைல் தூரத்தில் இருக்கும் ஒரு மலை உச்சிக்குப்போய் உட்கார்ந்து கொண்டு, ஆன்மிக விஷயங்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டு, ஒரு தீர்மானத் திற்கு வந்து  சந்தோஷத்துடன் அவன் திரும்பி வந்தபோது, எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்து விட்டிருந்தன. திருமண வாழ்க்கை நல்லபடி நடக்கட்டும்!

ரகசியத்தைச் சொல்லலாம் அல்லவா? நாணியை இனி பார்க்கக் கூடிய தைரியம் இந்த ஸெல்ஃபிற்கு இல்லை. இனி வரும் நூறு வருடங்களுக்கு அப்படியொரு தைரியம் இருக்கப் போவதே இல்லை. எது எப்படியோ...ஸெல்ஃபிச்சிகள் எல்லாக் காலங்களிலும் வெற்றி பெறட்டும்!

சுபம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.