Logo

போர் முடியவேண்டுமென்றால்...!

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 4493
por mudiyavendumendral

“போர் முடிய வேண்டுமென்றால்..!'' பற்களை இறுக்கமாகக் கடித்துக் கொண்டு, உதடுகளின் இடது ஓரத்தைத் திறந்து, அதன் வழியாக "ஸ்’’ என்ற சத்தத்தை உண்டாக்கி, ஆனந்தத்துடன் வறட்டுச் சொறி சொறிந்து கொண்டு, சாய்வு நாற்காலியில் மல்லாந்து படுத்துக் கிடக்கும் ஆழமான சிந்தனையாளரும், நல்ல பலசாலியும், மிகுந்த கோபம் கொண்டவருமான அந்த புகழ்பெற்ற இலக்கியவாதி, தன்னைப் பார்ப்பதற்காக வந்திருந்த பத்திரிகையாளரான இளைஞனின் கேள்விக்கு பதில் என்பதைப் போல கேட்டார்:

“போர் முடியவேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டுமென்று சொல்றே?''

“நீங்க ஒண்ணும் செய்ய வேண்டியதில்லை.'' பத்திரிகையாள் தெளிவுபடுத்தினார்: “உங்களுடைய கருத்து என்ன என்பதுதான் எங்களுக்குத் தெரிய வேண்டியது. நிரந்தரமாகப் போர் முடிய வேண்டு மென்றால், மக்கள் என்ன செய்ய வேண்டும்?''

“ஒண்ணும் செய்ய வேண்டாம்டா... நீ இங்கேயிருந்து போனால் போதும். முட்டாள்!''

“நீங்க ஏதாவது சொல்லணும். உலகத்திற்கு மிகவும் கஷ்டங்கள் உண்டாகிக் கொண்டிருக் கின்றன. பெரிய அளவில் அழிவு உண்டாகிக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் முடிவுக்கு வர வேண்டும். உலகத்தில் அமைதியும் சமாதானமும் உண்டாக வேண்டும். அதற்கு உங்களுடைய விலை மதிப்புள்ள அறிவுரை தேவைப்படுகிறது. போர் முடிய வேண்டுமென்றால்...?''

“டேய் ஆபாச மனிதா, மடையா...! என்னிடம் கேட்டு விட்டா போர் ஆரம்பமானது? பழைய காலத்திலிருந்தே போர் என்ற ஒன்று இருந்திருக்கிறதே! இப்போதைக்கு முடிந்தால், இனிமேலும் உண்டாகும். உலகத்தில் இரண்டு மனிதர்கள் எஞ்சியிருந்தால், அவர்கள் இருவரும் போரில் ஈடுபடுவார்கள். ஒருவன் மீதியிருந்தால் அவனுடைய இடது கைக்கும் வலது கைக்குமிடையே சண்டை உண்டாகும். இறுதியில் அவனும் செத்து விடுவான். பிறகு... அமைதி... புறப்படு!''

“அய்யோ! அப்படிச் சொன்னால் போதாது. இனி மேல் போர் உண்டாகக் கூடாது! நிரந்தரமாகப் போர் முடிவுக்கு வர வேண்டுமென்றால்...?''

“நீ போய் பிற முட்டாள் பெரிய மனிதர்களான சிந்தனையாளர்களிடம் கேள். என்னைத் தொந்தரவு செய்யாதே!''

“எல்லாரின் கருத்துகளும் கிடைத்து விட்டன.'' பத்திரிகையாளர் தயங்கியவாறு சொன்னார்: “உங்களுடைய கோபம் எங்கள் எல்லாருக்கும் நன்கு தெரிந்த விஷயம்தானே! உங்களை இறுதியாக அணுகியிருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உங்களுடைய கருத்துக்கு மற்றவர்களின் கருத்துகளை விட விலை மதிப்பு இருக்கிறது என்ற விஷயம் எங்களுக்குத் தெரியும்.''

“மற்றவர்களின் கருத்துகள் எப்படி இருக்கின்றன? போர் முடிய வேண்டுமென்றால்...?''

“உலகம் ஸொராஸ்டரின் மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் கன்ஃப்யூஷி யஸ்ஸின் மதத்தின்படி நடக்க வேண்டும். உலகம் ஸ்ரீகிருஷ்ணனின் புல்லாங்குழல் இசையைக் கேட்க வேண்டும். உலகம் புத்தரைப் பின்பற்ற வேண்டும். உலகம் இயேசுவின் பின்னால் நடக்க வேண்டும். உலகம் முகம்மதுவை நம்ப வேண்டும். உலகம் நானக்கை... இப்படிப் பல கருத்துகள்...''

“இவ்வளவுதானா?'' அந்த மிகப் பெரிய கோபக்காரர் வேகமாக வறட்டுச் சொறியைச் சொறிந்து கொண்டே கேட்டார்: “வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் எதுவும் கூறவில்லையா?''

“சொன்னார்கள். போர் முடிய வேண்டுமென்றால் கம்யூனிஸத்தை உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றொரு பிரிவினர் சொன்னார்கள். இன்னொரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அராஜக வாதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இன்னொரு சிந்தனையாளர் பாஷிஸம் வர வேண்டும் என்றார். இன்னும் ஒருத்தர் சொன்னார்- வன்முறையற்ற கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று. நீங்க என்ன சொல்றீங்க? போர் முடிய வேண்டுமென்றால்...?''

“நான் இந்தப் போர் பற்றிய மிகப் பெரிய சொற்பொழிவாளர் என்பதை நீ ஒப்புக் கொள்ள வேண்டும்.''

“நான் ஒப்புக் கொள்கிறேன். மீதி உலகம்...?''

“மீதி உலகத்தை நான் சம்மதிக்க வைக்க வேண்டும். உன்னுடைய பத்திரிகையில் பிரசுரித்து விடு! நீ என்னுடைய முதல் தொண்டன் என்று அறிவிப்பு செய்!''

“ஆனால், உங்களுக்கு ஏதாவது புனித அருள் கிடைத்திருக்கிறதா? வெளிச்சத்தைப் பார்ப்பது...?''

“கிடைத்திருக்கிறதடா மடையா!'' என்று கூறிக் கொண்டே கண்களை வெறித்து, கோணல் சிரிப்பு சிரித்து, அவர் "கற கற' என்ற வறட்டு சொறி சொறிந்து ரசித்துக் கொண்டிருந்தார்.

அப்படி அமர்ந்திருந்த போது அவர் உலகத்தை மறந்து போய்விட்டார் என்று பத்திரிகையிலிருந்து வந்திருந்த இளைஞருக்குத் தோன்றியது. பத்திரிகையாளர் மெதுவாக முனகினார். அந்த மிகப் பெரிய கோபக்காரர் திரும்பிப் பார்த்தார்:

“என்னடா மடையா? நீ போகலையா?''

“இல்லை... நீங்க அந்த செய்தியைத் தரவில்லை. போர் முடியவேண்டுமென்றால்...?''

“மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து உதைக்க வேண்டும் என்ற ரகசியம் உனக்குத் தெரியுமல்லவா? டேய்... நான் என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அடித்து உதைத்து ஒன்றரை வருடங்களாகிவிட்டன. மறந்துபோய் விடுகிறேன். ஞாபக மறதி.!''

“என்ன...? கடந்த ஒன்றரை வருட காலமாக உங்களுக்கு மறதி பாதித்திருக்கிறது என்கிறீர்களா?''

“முட்டாள்! இல்லை... ஆனந்தம்! ஆனந்தம்!''

“எனக்குப் புரியவில்லை.''

“டேய்! கடந்த ஒன்றரை வருடத்திற்கு இடையில் ஏதாவது பத்திரிகை ஆசிரியரையோ செய்தியாளரையோ பதிப்பாளரையோ உதைத்து பஞ்சராக்கி இருக்கிறேனா?''

“இல்லை.''

“இந்த ஒன்றரை வருடத்திற்கு இடையில் நான் ஏதாவது புதிய புத்தகம் எழுதி பிரசுரமாகி இருக்கிறதா?''

“இல்லை''

“இந்த ஒன்றரை வருடத்திற்கு இடையில் என்னுடைய பெயரில் ஏதாவது போலீஸ் வழக்கு பதிவாகி இருக்கிறதா?''

“கேள்விப்பட்டதில்லை.''

“எதனால்? முட்டாள்...! எதனால்?''

“எனக்குத் தெரியாது!''

“நீ ஏன் கேட்கவில்லை? நான் ஒரு நல்ல செய்தி அல்லவா?''

“ஆமாம்... என்னுடைய பத்திரிகை செய்த ஒரு தவறு அது. நீங்கள் மன்னிக்க வேண்டும். போர் முடிய வேண்டுமென்றால்...?''

“கண்கள் இருக்கின்றன. பார்ப்பதில்லை. காதுகள் இருக்கின்றன. கேட்பதில்லை. முட்டாள்! அடி முட்டாள்! புறப்படு...''

“அய்யோ! அது போதாது. நீங்கள் அந்த அறிவுரையைத் தரணும்! போர் முடிய வேண்டுமென்றால்....?''

“போர் முடியவில்லையென்றால் யாருக்கு நஷ்டம்டா? உன்னுடைய பத்திரிகை விற்பனை குறைந்து போய் விடுகிறதா?''

“இல்லை.''

“என்னுடைய நூல்களின் விற்பனை குறைந்து போய்விடுகிறதா?''

“இல்லை.''

“அப்படியென்றால் நீ புறப்படு...''

“அய்யோ! நீங்க ஏதாவது அறிவுரை சொல்லணும். இந்த மிகப் பெரிய உலகத்தின் நிரந்தரமான அமைதியும் சமாதானமும் உங்களிடம்தான் இருக்கிறது. போர் முடிய வேண்டுமென்றால்....?''

“போர் முடிய வேண்டுமென்றால்...!'' அந்த மிகப் பெரிய இலக்கியவாதி "கற கற' என்று வறட்டுச் சொறியைச் சொறிந்து ஆனந்தமடைந்து கொண்டே அறிவித்தார்:

“இன்றைய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், அனைத்து மதத்தின் தலைவர்களுக்கும், அனைத்து சிந்தனையாளர்களுக்கும், அனைத்து போலீஸ்காரர் களுக்கும், மேஜிஸ்ட்ரேட்கள், நீதிபதிகள், வக்கீல்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்களுக்கும், அனைத்து பட்டாளக்காரர்களுக்கும், பூமியில் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஆண்களுக்கும்- எனக்கு இருப்பதைப்போல பயங்கரமான அரிப்பும், சுகமான வேதனையும் உள்ள பரம ரசிகனான வறட்டுச் சொறி வர வேண்டும்!’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.