Logo

பாதச்சுவடு

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6601
pathasuvadu

"பாதச் சுவடு” என்ற இந்தக் கதை, ஒரு அரசியல்வாதி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரவு நேரத்தில் ஒரு இலக்கியவாதியின் அறைக்குள் நுழைந்து அவரிடம் நேரில் சொன்ன ஒன்று.

இந்தக் கதையைக் கேட்ட இலக்கியவாதி சில நிமிடங்களுக்கு என்ன பேசுவதென்றே தெரியாமல் சிலை என அப்படியே நின்றுவிட்டார். இதை அந்த இலக்கியவாதியே என்னிடம் ஒருநாள் சொன்னார்.

நான் இப்போது அந்தப் பழைய கதையை நினைத்துப் பார்ப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன காரணம் என்பதைப் பின்னால் சொல்கிறேன்.

அந்த இலக்கியவாதியைப்போலவே, யாரும் கூறி அரசியல் காரியங்களில் ஈடுபடவில்லை அந்த அரசியல்வாதி. உள்மனதில் எழுந்த ஒரு உத்வேகம்... இப்படிச் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம். இதுதான் அவரை அரசியலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். தன்னைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கை அவலம் நிறைந்ததாக இருக்கிறது. காணச் சகிக்க முடியாததாக இருக்கிறது. அடிமைத்தனம் கொண்டதாக இருக்கிறது. அதனால் அழகான, ஆரோக்கியமான, சுதந்திரமான ஒரு மனித வாழ்க்கையை அந்த அரசியல்வாதி தன் மனதின் அடித்தளத்தில் கற்பனை செய்து பார்த்தார். அவர் அப்படியொன்றும் பெரிய தகுதிகள் கொண்டவர் இல்லை. அவர் பிறந்தது என்னவோ மிகவும் ஏழ்மையான ஒரு குடும்பத்தில்தான்.

பதினெட்டு வயதிலிருந்து அவரின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. பல்வேறு சமயங்களில்- மொத்தம் ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்திருக்கிறார். அவர் நன்றாகப் பேசுவார். நிறைய படிப்பார். நன்றாகச் சிந்திப்பார்.

அவர் மிகச் சில நாட்களிலேயே அந்தப் புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவராகவும் ஆனார்.

அந்தக் காலகட்டத்திற்கு முன்பே அந்த அரசியல்வாதியை அந்த இலக்கியவாதிக்கு நன்கு தெரியும். அவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே சமயத்தில் சிறைத் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் இருவருக்குமிடையே ஏகப்பட்ட விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. இருவரின் செயல்களில்கூட வேறுபாடு இருந்தன. இது ஒருபுறமிருக்க, ஒரு ஆச்சரியமான விஷயமும் அவர்களுக்கு இடையே இருந்தது. அது- அந்த அரசியல்வாதி மென்மையான மனிதர் இல்லையென்றாலும், இலக்கியவாதியுடன் பேசும்போது ஜாலியாக மனம் விட்டுச் சிரித்தவாறே பேசிக் கொண்டிருப்பார்.

அந்த இலக்கியவாதி அந்த அரசியல்வாதியிடம் அவரின் நிறத்தைப் பற்றியும், மற்ற விஷயங்கள் குறித்தும் கிண்டல் பண்ணுவார்.

"தலைவரே!'' இலக்கியவாதி கூறுவார்: "உங்கள் கண்களோட வெள்ளையும் பற்களும் மட்டுமே வெண்மை நிறத்துல இருக்கு.''

"நகங்கள்?''

"ம்... நகங்களைக்கூட சேர்த்துக்கலாம். சரி... நீங்கள் ஏன் இவ்வளவு கருப்பா இருக்கீங்க?''

"போக்கிரி! என்னோட நிறத்தைப் பற்றிப் பேசி என்னை ஒரேயடியா மட்டம் தட்டுறியா?''

போலீஸ்காரர்கள் அவரின் நிறத்தைச் சொல்லி அவரைக் கேவலமாகப் பேசியிருக்கிறார்கள். போலீஸ்காரர்களைப் பொறுத்தவரை- ஒரு ஆளைத் தரம் தாழ்த்திப் பேசுவதற்கோ அடிப்பதற்கோ பெரிய காரணம் ஒன்றும் தேவையில்லை. அந்தக் காலத்தில் நாட்டை ஆண்டு கொண்டிருந்ததே வெள்ளை நிறத்தவர்தாம். அவர்களின் அடிமைகளாகத் தவிட்டு நிறமுடைய ராஜாக்கள் இருந்தார்கள். அந்த ராஜாக்களின் அடிமைகளாகப் பொதுமக்கள் இருந்தார்கள்.

அப்படிப்பட்ட பொதுமக்களில் ஒருவனான- அதுவும் ஒரு கருப்பன்- அரசியல் விஷயங்களைப் பேசுவதா?

பொதுமக்களிடமிருந்தே இதற்கு பெரிய எதிர்ப்பு. இருந்தாலும், இதையெல்லாம் மீறி அந்த அரசியல் கட்சி வளர்ந்தது. ஆங்காங்கே நிறைய காயங்கள் அதற்கு உண்டானாலும், அது வளரவே செய்தது. அப்படி வளர்ந்து வரும் காலகட்டத்தில்... ஒரு இரவு நேரம். கிட்டத்தட்ட மணி பத்து இருக்கும். இலக்கியவாதி ஒரு பெண்ணுக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். வாசல் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது வெளியே இருந்து ஒரு குரல்-

"போக்கிரி உள்ளே இருக்காரா?''

இலக்கியவாதிக்கு வெளியே இருந்து அழைப்பது யார் என்று தெரிந்துவிட்டது. அவர் சொன்னார்:

"இல்ல... முக்கியமான ஒரு விஷயமா ஒரு இடத்துக்குப் போயிருக்காரு. உங்களுக்கு என்ன வேணும்?''

"போக்கிரி!'' அவர் சொன்னார்: "கதவைத் திற...''

இலக்கியவாதி சொன்னார்:

"திறக்க விருப்பம் இல்ல...''

அவர் வெளியில் இருட்டில் நின்றவாறு சொன்னார்:

"நான் ரெண்டரை மைல் தூரம் நடந்தே வந்திருக்கேன். வழியில் நான் இருக்க வேறு இடமே இல்லை. கதவைத் திற...''

இலக்கியவாதி சொன்னார்:

"என்னோட அறை அரசியல் பிச்சைக்காரர்களுக்குக் கட்டியிருக்கிற தர்ம சத்திரமொண்ணும் இல்ல...''

"நான் இப்போ கதவை உதைச்சு உடைக்கப் போறேன்.''

"தலைவரே... நான்தான் இதற்கு வாடகை கொடுத்துக்கிட்டு இருக்கேன்...''

"பரவாயில்ல... அதனால என்ன? பேசாம கதவைத் திற...''

"நான் உங்க கோஷ்டி இல்ல...''

"பிறகு?''

"ஒரு பெண்ணோட கோஷ்டி. அவளோட கண்கள் மலரைப்போல அழகானதா இல்ல... அவளோட கூந்தலுக்கு இரவில் பூக்குற பூவோட வாசனை எதுவும் இல்ல. இருந்தாலும் நான் அவள் பக்கம்தான்...''

இதைக் கேட்டதும் வெளியில் இருந்து ஒரு சிரிப்புச் சத்தம்.

"மனிதனுக்குப் பைத்தியம் பிடிச்சா நான் என்ன செய்யட்டும்?''

"எனக்கொண்ணும் பைத்தியம் பிடிக்கல...''

"அப்படின்னா கதவைத் திற...''

"கதவைத் திறக்கிறேன். ஆனா, ஒண்ணு செய்யணும்.''

"என்ன?''

"உங்களோட அரசியல் நண்பர்கள் ராத்திரி, பகல் எல்லா நேரங்கள்லயும் தேவையில்லாம இங்கே வந்து எனக்குத் தொந்தரவு தர்றாங்க. இதற்குத் தடை போட முடியுமா?''

"முடியாத விஷயம்...''

"அப்படியா?''

"சரி... கதவைத் திற...''

"திறந்து விடுவேன். இந்த நாட்டை நீங்க ஆளுகிற சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ எனக்கு என்ன உதவி செய்வீங்க?''

"உன்னை ஒரு போலீஸ் கான்ஸ்டபிளா ஆக்குறேன்.''

"எனக்கு அது வேண்டாம்.''

"அப்ப போலீஸ் இன்ஸ்பெக்டர்?''

"அதுவும் வேண்டாம்.''

"கமிஷனர்?''

"வேண்டாம்.''

"விடுதலைப் படையின் கமாண்டர் இன் சீஃப்?''

"அதுவும் வேண்டாம்.''

"பிறகு என்னதான் வேணும்?''

"என்னை ஒரு இஸ்பேட் ராஜாவா ஆக்கினா போதும்.''

"நிச்சயமா அது முடியாது. நம்ம திட்டத்திலேயே ராஜாக்கள்ன்ற ஒண்ணே இல்லியே!''

"இருந்தாலும் அது சரித்திர அடையாளம்ன்ற முறையில என்னை ஒரு ராஜாவா நீங்க ஆக்கணும். எனக்கு மக்கள் யாரும் வேண்டாம். உண்மையாவே நான் சொல்றேன். அப்பவும் நான் கதை எழுதுவேன். எனக்குத் தேவை என்ன தெரியுமா? ஏரிப் பக்கத்துல தீவு மாதிரி ஒரு இடம் இருக்குல்ல? அங்கே ஒரு சிறிய வீடு கட்டித் தரணும். அதைச் சுற்றி ஏராளமா மரங்கள் இருக்கணும். அங்கே ஒரு தாமரைக் குளமும் ஒரு பூந்தோட்டமும் இருக்கணும்...''

"பிறகு...?''

"அந்த இடத்துக்கும் வீட்டுக்கும் என்கிட்ட இருந்து வாடகை எதுவும் வசூலிக்கக் கூடாது. அங்கே ரேடியோ இருக்கணும். டெலிஃபோன் இருக்கணும்.''


"சரி... ஏற்பாடு செஞ்சிட்டா போச்சு. கதவைத் திற...''

அந்த இலக்கியவாதி கதவைத் திறந்தார். அரசியல்வாதி உள்ளே நுழைந்தார்.

இதற்கு முன்பு இப்படியொரு கோலத்தில் அவரை இலக்கியவாதி பார்த்ததே இல்லை. உடம்பில் சட்டை இல்லை. வேஷ்டி இல்லை. ஒரு கிழிந்துபோன துண்டை உடலில் சுற்றியிருந்தார்.

இலக்கியவாதியின் சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்த அரசியல்வாதி எதுவுமே நடக்காதது மாதிரி காட்டிக் கொண்டு சொன்னார்:

"ரொம்ப தாகமா இருக்கு. பசியும் எடுக்குது.''

இலக்கியவாதி சொன்னார்:

"தாகம் எடுத்தா சாப்பிடணும்... பசி எடுத்தா... ஆமா... பசி எடுத்தா என்ன செய்றது?''

அவர் அதைக் கேட்காதது மாதிரி சொன்னார்:

"எனக்கு இப்ப ஒரு சட்டையும் வேஷ்டியும் வேணும்.''

இலக்கியவாதி தன்னுடைய பெட்டியைத் திறந்து ஒரு புதிய சட்டையையும் ஒரு புதிய வேஷ்டியையும் எடுத்துத் தந்தார்.

"உங்களைப்போல உள்ள கருத்த ஆளுங்க முகத்துல போடுற கருப்பு பவுடர் வேணும்னா...''

"எனக்கு பசியும் தாகமுமா இருக்கு.'' அவர் சொன்னார். அவரின் குரல் மிகமிக பலவீனமாக இருந்தது. சாப்பிட்டே அதிக நாட்கள் இருக்கும்போலத் தெரிந்தது.

அடுத்த நிமிடம் இலக்கியவாதி வெளியே போனார். ஹோட்டலில் போய், சாப்பிட சிலவற்றை வாங்கிக் கொண்டு வந்தார்.

சாப்பிட்டு முடித்து தண்ணீர் குடித்து, ஒரு பீடியைப் பிடித்தவாறே அரசியல்வாதி சொன்னார்:

"ஆவ்... ஆட்சி அதிகாரம் கையில வந்திடுச்சுன்னா... நாங்க செய்யப்போற முதல் வேலை என்ன தெரியுமா?''

"தெரியும்...'' அந்த இலக்கியவாதி சொன்னார்: "எனக்கு நான் சொன்ன வீடு, படகு, மரங்கள், பூந்தோட்டம் ஆகிய விஷயங்களைச் செஞ்சு தருவீங்க...''

"நான் சொல்றதைக் கேளு...'' அரசியல்வாதி சொன்னார்: "இலக்கியவாதிகளைக் கொல்றதுதான் முதல் வேலை...''

"பிறகு?''

அவர் கேட்டார்:

"இலக்கியவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் என்ன வேறுபாடு?''

இலக்கியவாதி சொன்னார்:

"அது... அது... எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தானே!''

"இருந்தாலும் சொல்லு... என்ன வேறுபாடு?''

"அரசியல்வாதிகளுக்கு அறிவு கிடையாது. இலக்கியவாதிகளுக்கு அது இருக்கு!''

அவர் சிரித்தார். பிறகு சொன்னார்:

"இலக்கியவாதிகள் சோம்பேறிகள்... பைத்தியக்காரர்கள்... திருடர்கள்...''

இலக்கியவாதி சொன்னார்:

"ஒழுங்கா எந்திரிச்சி என்னைப் பார்த்துக் கும்பிடுங்க. என் பாதங்களைத் தொட்டு உங்க தலையில வச்சுக்கோங்க. நாங்கள் உங்களைப் பற்றி ஏதாவது சொன்னா, நடக்கிற கதையே வேறு. நாங்கள் அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நாங்க சொல்லப் போனால் ரொம்பவும் நல்லவங்க. எங்களைப்போல கடுமையா உழைக்கிற ஒரு இனத்தை...''

"நான் உன்னைக் கூப்பிட்டப்போ நீ என்ன செஞ்சிக்கிட்டு இருந்தே?''

"ஒரு பெண்ணுக்கு... அதாவது ஒரு இளம் பெண்ணுக்கு நான் கடிதம் எழுதிக்கிட்டு இருந்தேன். அவள் ஒரு கல்லூரி மாணவி...''

"அந்தக் கல்லூரி மாணவிக்கு என்ன வேணுமாம்?''

"அவளுக்கு என்ன வேணும்னு எனக்குத் தெரியாது. இல்லாட்டி, தெரியும்... அவள் ஒரு பயங்கர புத்திசாலி...''

"புத்திசாலிப் பொண்ணுன்னா ரொம்பவும் கவனமா இருக்கணும்.'' அவர் சொன்னார்: "நான் இப்போ சப்-ஜெயில்ல இருந்தப்போ தேவையில்லாம ஒரு பிரச்சினையில மாட்டிக்கிட்டேன்...''

"என்ன பிரச்சினை?''

"வேற என்ன? காதல்தான்...''

"காதல் ஒரு பிரச்சினையா என்ன?''

"ஒரு அரசியல்வாதியைப் பொறுத்தவரை காதல்ன்றது ஒரு பிரச்சினைதான். அதுவும் எதைப் பற்றியும் நிச்சயமா சொல்ல முடியாத இந்தக் காலகட்டத்தில்... ம்... எது எப்படியோ, நான் அதுல மாட்டிக்கிட்டேன். சீக்கிரம் அவளைக் கல்யாணம் பண்ணணும். இன்னொரு பிரச்சினை- அவ ரொம்பப் படிச்சவ.''

"பொண்ணு நல்ல அழகா?''

"பேரழகி!''

"கேட்கவே ஆச்சரியமா இருக்கு. உங்களைப்போல ஒரு கருப்பனை- சரி போகட்டும்... இது எப்படி நடந்துச்சு?''

"அவ என்னோட ரசிகையா இருந்திருக்கா!''

"ரசிகையா? கேட்கவே வினோதமா இருக்கே! கருப்பனான ஒரு அரசியல்வாதிக்கு ஒரு ரசிகையா?''

"ஆமா... நான் மேடையில பேசுறதைக் கேட்டுட்டு, எத்தனை பெண்கள் அழுதிருக்காங்க தெரியுமா? எத்தனையோ பெண்கள் கழுத்துலயும் கைகள்லயும் போட்டிருக்கிற நகைகளைக் கழற்றிக் கொடுத்திருக்காங்க...''

"உங்களோட இந்தப் பேரழகி என்னத்தைத் தந்தா?''

"அவள் என்னோட சொந்தம்னு சொல்லி என்னைப் பார்க்க வந்தா. சப்ஜெயிலுக்குப் பக்கத்துலயே அவளோட வீடு இருந்ததால, ஒவ்வொரு நாளும் சாப்பிடுறதுக்கு ஏதாவது தயார் பண்ணி அவளே என்னைத் தேடிக் கொண்டு வருவா. அவ்வளவுதான். அவள் பக்கம் ஒரேயடியா சாஞ்சிட்டேன். அவள்கிட்ட என்னை முழுமையா நான் இழந்துட்டேன்... உன்னோட அந்த இளம் ரசிகையைப் பற்றிச் சொல்லு...''

இலக்கியவாதி சொன்னார்:

"நான் ஒரு பாவமான மனுஷன்றது...''

"இது உலகமே தெரிஞ்ச விஷயமாச்சே!''

"நீங்க சொல்றது சரிதான். போன வெள்ளிக்கிழமை அவ என் கையில ஒரு கவரைக் கொண்டு வந்து கொடுத்தா. "இதுல ஒரு சிறுகதை இருக்கு. இதைப் படிச்சுப் பார்த்துட்டு, திருத்தங்கள் பண்ணிக் கொடுங்க”ன்னா. நான் இங்கே வந்து கவரைப் பிரிச்சுப் பார்த்தா, உள்ளே ஒண்ணுமே இல்ல. அஞ்சு, பத்து ரூபாய் நோட்டுகள் மட்டும் உள்ளே இருக்கு.''

"இதுதான் அவளோட சிறுகதையா! ஐம்பது ரூபாய்!''

"ஆமா...''

"அதுல இப்ப பாக்கி எவ்வளவு இருக்கு?''

"அந்தப் பணத்துல இருந்து ரெண்டு மாச அறை வாடகை கொடுத்திருக்கேன். ஹோட்டலுக்குக் கொஞ்சம் பணம் தந்திருக்கேன். புது வேஷ்டி, சட்டை வாங்கினேன். அதைத்தான் நீங்க இப்ப போட்டிருக்கீங்க.... எல்லாம் போக கையில ஆறரை ரூபா இருக்கு...''

"அதுல ரெண்டு ரூபா எனக்கு வேணும்...''

இலக்கியவாதி இரண்டு ரூபாயை எடுத்து அவர் கையில் தந்தார்.

அரசியல்வாதி அவரைப் பார்த்துக் கேட்டார்:

"உங்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருப்பாங்களே!''

"நிறைய...''

"அவர்கள் யாராவது உங்களைப் பார்க்க வந்தால் நீங்கள் என்ன பண்ணுவீங்க?''

"நான் முதல்ல அவங்க வந்தவுடனே அவங்களோட பாக்கெட்டைத் தடவிப் பார்ப்பேன். அங்கே எதுவுமே இல்லைன்னா "என்னைப் பார்க்க வேண்டாம். நீங்க போகலாம்”னு சொல்லிடுவேன்...''

"எனக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்காங்க. நான் ஒரு கதை சொல்றேன். எப்படி அதை ஆரம்பிக்கிறதுன்றதுதான் தெரியல...''

"இது என்ன பெரிய விஷயமா? சும்மா ஆரம்பிங்க. முன்பு ஒரு காலத்தில்...''

"ஆமாம்...'' அந்த அரசியல்வாதி சொல்லத் தொடங்கினார்: "பல வருடங்களுக்கு முன்னாடி என்னைப்போல ஒரு கருப்பு நிற அரசியல்வாதி இருந்தார். பதினெட்டாவது வயசுல இருந்து அவர் அரசியல் காரியங்கள்ல ஈடுபட ஆரம்பிச்சார். போலீஸ்காரங்ககிட்ட நிறைய அடிகள் வாங்கி இருக்கார். நிறைய நாட்கள் பட்டினி கிடந்திருக்கார்.


தொழிலாளிகளுக்காக, விவசாயிகளுக்காக, அறிவாளிகளுக்காக- மொத்தத்தில் மக்களோட நல்வாழ்வுக்காகவும் அமைதியான சூழ்நிலைக்காகவும் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு பாடுபட்டுக்கிட்டு இருக்கிற முற்போக்குச் சிந்தனை கொண்ட ஒரு அரசியல் கட்சியோட தலைவர் அந்த மகான்”.

அவரோட தங்கும் இடம் அந்த அரசியல் கட்சியோட அலுவலகம்தான். அந்த அலுவலகம் அரசியல் பிச்சைக்காரர்களுக்கு மட்டுமல்ல- எல்லாருக்குமே ஒரு தர்மசத்திரம் மாதிரிதான். அதற்காக அவர் யார்மீதும் வருத்தப்படல. மக்களுக்காகப் பாடுபடுறவங்களைத் தேடி

மக்கள் வர்றாங்க. இரவும் பகலும் மக்கள் வந்துக்கிட்டே இருக்காங்க. இதில் என்ன தப்பு இருக்கு?

அப்படி அவர் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்குறப்போ, ஒரு இரவு நேரம் வருது.

அப்போ அவரைத் தேடி ஒரு ரசிகர் வர்றாரு. அவர் வர்றப்போ கிட்டத்தட்ட பாதி ராத்திரி நேரம் ஆயிடுச்சு. முன்னாடி இருந்த  வராந்தாவில விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கு. அந்த நேரத்தில் அந்த ஆள்- நம்மோட கருப்புத் தலைவர்- தனக்குன்னு இருந்த ஒரே வேஷ்டியையும் சட்டையையும் சோப்பு போட்டுத் துவைச்சு வராந்தாவுல காய வச்சிக்கிட்டு இருக்காரு.

நடந்து களைச்சுப்போய் வந்திருக்கிற தன்னோட ரசிகர்கிட்ட அவரு எதுவும் அதிகமாப் பேசல. வந்த ஆளு பக்கத்துல இருக்குற பட்டணத்துல ஏதோ வேலை தேடி வந்திருக்காரு.

வந்திருந்த ரசிகருக்கு படுக்குறதுக்கு ஒரு பாயையும் தலையணையையும் எடுத்து அரசியல்வாதி கொடுத்து, வராந்தாவுல படுக்கச் சொன்னாரு. "காலையில பார்க்கலாம்”னு அந்த ஆளுகிட்ட சொல்லிட்டு தன்னோட அறைக்குள்ள போயி கதவை மூடிக்கிட்டாரு. ரெண்டு மூணு நாளிதழ்களைத் தரையில விரிச்சு அதுல அவர் படுத்துக்கிட்டாரு. வேற பாயும் தலையணையும் அங்கே  கிடையாது. நம்மை மாதிரியே உலகத்துல படுக்குறதுக்குக்கூட எதுவும் இல்லாம எத்தனையோ கோடி மக்கள் இருக்காங்கன்னு மனசுல நினைச்சுக்கிட்டே அந்தத் தலைவர் உறங்கிட்டாரு.

அரசியல்வாதி படுக்கையை விட்டு எழுந்தப்போ காலை எட்டு மணி ஆகியிருந்துச்சு. வாசல் கதவைத் திறந்து பார்த்தாரு. ரசிகர் அங்கு இல்லை. அவர் ஏற்கெனவே போய்விட்டிருந்தாரு. தன்கிட்ட ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் போய்விட்டதற்காக அந்த அரசியல்வாதிக்கு... அப்படி எதுவும் தோணல. காரணம்- இதற்கு முன்னாடி பலரும் இந்த மாதிரி நடந்திருக்காங்க. ஏன்- அந்த அரசியல்வாதியேகூட பல வீடுகளிலும் இரவு நேரத்தில் தங்கியிருந்துட்டு காலையில் புறப்படுறப்போ யார்கிட்டயும் ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்காமலே கிளம்பியிருக்காரு. ஒரே ஒரு வித்தியாசம் என்னன்னா- படுத்த பாயை அந்த ஆளு சுருட்டி வைக்கக்கூட இல்லை. அந்தப் பாயின் நடுவில் அதன் இதயத்தில் மிதிப்பது மாதிரி... செம்மண் பதிஞ்ச ஒரு பாதச் சுவடு...

முன்பு யாரும் இந்த மாதிரி படுத்த பாயைச் சுருட்டி வைக்காமலே போனதில்லைன்ற விஷயம் மனசில் தோன்றினாக்கூட, அந்த அரசியல் தலைவர் அதை ஒரு பெரிய விஷயமா எடுத்துக் கொள்ளல. அவர் குளிச்சு முடிச்சு, காயப்போட்டிருந்த சட்டையையும் வேஷ்டியையும் தேடிப்போனப்போ அவை இரண்டுமே அங்கே இல்லை!''

"இது நடந்தது நேத்து பகல்லயா?''

"ஆமா...''

அவர்கள் இருவரும் நீண்ட நேரம் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் அரசியல்வாதி அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்.

வருடங்கள் கடந்தோடின. இதற்கிடையில் தான் பார்த்த அந்தப் பேரழகியை அவர் திருமணம் செய்து கொண்டார்.''

என்னிடம் இந்தக் கதையைச் சொன்ன இலக்கியவாதிக்கு ஏனோ தன்னுடைய ரசிகையைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.

அந்தக் கருப்பு நிற அரசியல்வாதியை இப்போது நான் நினைத்துப் பார்க்க வேண்டிய காரணம் என்ன? பழைய போலீஸ்காரர்கள் புதிய அரசாங்கத்தைத் திருப்திப்படுத்துவதற்காக அடித்துக் கொன்றார்களோ என்னவோ... பாம்பு கடித்து இறந்துவிட்டார் அவர் என்றும் சொல்கிறார்கள். அந்த அரசியல்வாதி நேற்றைக்கு முந்தின நாள் இரவில் இறந்துவிட்டார் என்று நேற்றைய பத்திரிகையில் நான் செய்தி படித்தபோது என் கண் முன்னால் தெரிந்தது- அந்தச் செம்மண்ணால் ஆன பாதச் சுவடு.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.