Logo

பரீதின் ஆவி

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6588
parethin aavi

நான் எப்போதாவது ஒரு ஆவியை நேரில் பார்த்திருக்கிறேனா என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் பார்த்திருக்கிறேன்- ஒரு முறை மட்டும். மறக்க முடியாத ஒரு காட்சியாக இருந்தது அது. நான் அந்தக் கதையைக் கூறுகிறேன்.

நடுப்பகல் நேரத்தில் தனியாகப் போகும்போது நீங்கள் அந்தப் பக்கம் கொஞ்சம் பார்த்தால் போதும்; அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். உங்களுடைய கண்களை சிறிது நேரம் பிடித்து நிறுத்தக் கூடிய பிசாசுத்தனமான ஒரு வசீகர சக்தி அங்கே இருக்கிறது என்று தோன்றுகிறது.

ஆனால், சிறிது சிறிதாக உங்களுடைய கண்கள் செத்து வீங்குவதைப் போலவும், உங்களுடைய இதயம் காற்று இல்லாமல் போகும் ரப்பர் பலூனைப் போல் சுருங்கிப் போவதாகவும் நீங்கள் உணராமல் இருக்க மாட்டீர்கள்.

கடற்கரைத் தாண்டி, ஒரு மூலையில் மறைந்து கிடக்கும் பழைய ஒரு முஸ்லிம் சுடுகாடு அது. இடிந்து விழுந்த கற்சுவருக்குள் அது இருக்கிறது. எலும்பும் கல்லும் கலந்து இருக்கும் ஒரு மணல் பகுதி. அதிகமான பரப்பளவு இல்லை. ஆங்காங்கே அடக்கம் செய்யப்பட்ட மனிதப் பிணங்களை அடையாளம் காட்டும் செங்கற்கள், மரணத்தின் விழுந்த பற்களைப் போல சாய்ந்து கிடக்கின்றன. உள்ளங்கையின் எலும்புக்கூட்டைப் போல இருக்கும்- சிறிய முனைகளை விரித்து நின்று கொண்டிருக்கும் கடல் ஆமணக்குச் செடிகளும், இலையும் பூக்களும் விழுந்து மொட்டை யாகி, வயதான உச்சிகள் மார்பு எலும்புக் கூட்டைப்போல ஒன்றோடொன்று இறுக்கமாகப் படர்ந்து கிடக்கும் ஒரு உயரமான காட்டுச் செண்பக மரமும், எலும்புக் கட்டுகளைப் போல இருக்கும் சில கொடிகளும் அந்த ஆவி உலகத்தின் வாசலை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

நான் தனியாக உட்கார்ந்து பார்ப்பதற்கு மிகவும் விருப்பப்படுகிற ஒரு இடமாக அந்த சுடுகாடு இருந்தது- குறிப்பாக இரவு நேரத்தில். சிறு வயதிலிருந்தே இருந்த பழக்கம் காரணமாக இருக்கலாம். அந்த சுடுகாடு என்னுடைய கண்களுக்கு ஒரு விளையாட்டு மைதானமா கவே தோன்றியது. என் தந்தையின் விதவை சகோதரியின் வீட்டை யொட்டி மேற்குப் பக்கத்தில் அந்த சுடுகாடு இருந்தது. பள்ளிக் கூடம் அடைக்கப்படும் காலங்களில் நான் அந்தப் பெரியம்மாவின் வீட்டில் தங்கியிருப்பேன். ஓடு வேய்ந்த பழைய வீடு அது. மாடியில், நெல் நிறைக்கப்பட்ட அறையின் ஒரு பக்கத்தில், ஒரு பழைய பிரம்பு நாற்காலி இருந்தது. இரவு நேரத்தில் நான் அந்த அறைக்குள் நுழைந்து மேற்குப்பக்க சுவரில் எப்போதும் மூடிக்கிடக்கும் சாளரத்தை மெதுவாகத் திறப்பேன். அப்போது கீழே அந்த சுடுகாட்டை நன்றாகப் பார்க்க முடியும். நான், ஒரு மோகினி கதையை வாசிக்கும் ஆர்வத்துடன் அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றிருப்பேன். மனிதனின் லௌகீகமற்ற சிந்தனைகளை உற்சாகப் படுத்தும் சில அசைவுகள் கொண்ட கனவுகள் மற்றும் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு திரை பிடித்துக்கொண்டு நிற்கும் சில நிழல் கூத்தாட்டங்கள் பற்றி ஆச்சரியப்படும் எதிர்பார்ப்புகள்தான் என்னை நீண்ட நேரம் அங்கேயே பார்த்துக் கொண்டிருக்கத் தூண்டின.

நிலவொளியில் அந்தக் காட்சி குறிப்பிட்டுக் கூறும் வகையில் பார்க்கக் கூடியதாக இருந்தது. நான் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கனவுகள் கண்டு கொண்டிருப்பேன். அந்த சுடுகாடு கண்களுக்குப் புலப்படாத ஒரு தீவாக மாறும். பகல் வேளையில் மார்பின் எலும்புக் கூட்டைப்போல இருந்த காட்டுச் செண்பக மரம், வியக்கத்தக்க பவளப் புற்றாக மாறும். கடல் ஆமணக்கின் அடர்த்தியான பச்சை நிறம் கலந்த இலைகளில் பனித்துளிகள் முத்துக்களாக ஆகும்.

சென்ற மார்ச் மாதத்தில், சற்று ஓய்வுக்காகவும் சிகிச்சைக்காகவும் நான் பெரியம்மாவின் வீட்டில் சிறிது நாட்கள் இருந்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.

அங்கு எந்த இடத்திலும் ஒரு மாற்றமும் உண்டானதாகத் தெரியவில்லை. மேற்குப் பக்கத்தில் இருந்த அந்த சுடுகாடு அதே மாதிரியே இருந்தது. சுடுகாடு என்பது அழிவே இல்லாத ஒன்றாயிற்றே!

“நம்முடைய மீன்காரன் பரீத் மாப்பிள்ளை இன்றைக்கு காலையில் இறந்துவிட்டான்'' - பெரியம்மா ஊர் விசேஷங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் சொன்னாள்.

மீன்காரன் பரீதை எனக்கு நன்றாகத் தெரியும். அந்தக் காலத்தில் அந்தப் பகுதியிலேயே பெயர் பெற்ற மீன் வியாபாரியாக அவன் இருந்தான். கடலின் சூடு ஆறாத- உப்பு நீர் சொட்டிக் கொண்டிருக்கும் புதிய மீன்களும், மேலே கொஞ்சம் கடல் பாசிகளும் நிறைக்கப்பட்ட ஒவ்வொரு கூடையையும் மரக்கொம்பின் ஒவ்வொரு முனையிலும் தொங்கவிட்டு, கொம்பைத் தோளில் வைத்து, "கூ' என்று கூவியவாறு வரப்புகள் வழியாகவும் ஒற்றையடிப் பாதைகள் வழியாகவும் வேகமாக நடந்து போய்க் கொண்டிருக்கும் உயரமான மாப்பிள்ளையைப் பார்த்து மற்ற மீன் வியாபாரிகள்கூட பயப்பட்டார்கள். “ஒண்ணு... ஒண்ணு... ரெண்டு... ரெண்டு... மூணு... மூணு...'' -பரீத் மாப்பிள்ளை மீன்களை எண்ணுவது அரைமைல் தூரத்திற்குக் கேட்கும். மீன் விற்ற பணத்தை வாங்கிக்கொண்டு, மரக்கொம்பைத் தோளில் வைத்து, சாய்ந்தவாறு அவன் அடுத்த வீட்டைத் தேடி ஓடுவான். ஒருமுறை தன்னுடைய கூடையில் இருந்த மீனைக் கொத்திச் செல்வதற்காக இறங்கி வந்த ஒரு பருந்தின் காலை கையை வீசிப் பிடித்து, அந்த திருட்டுப் பருந்தை மரக்கொம்பில் கட்டிக் கொண்டு அவன் ஓடிய காட்சியை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அவனுடைய இரண்டு கால்களிலும் வீக்கம் இருந்தது.

காலப்போக்கில் அவனிடம் குஷ்ட நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன. முகத்தில் அந்தக் கொடிய நோயின் அடையாளங்கள் அதிகமாகத் தெரிந்தபோது, யாரும் அவனுடைய மீனை வாங்க முன்வரவில்லை. பரீது மீன் வியாபாரத்தை நிறுத்திவிட்டு, வீட்டில் இருந்துகொண்டே வலை கட்டி விற்க ஆரம்பித்தான். நாளடைவில் அவனுடைய கை விரல்கள் பாதிக்க ஆரம்பித்தபோது, வலை கட்டவும் முடியாமல் போனது. அவன் ஒரு பிச்சைக்காரனாக மாறினான்.

அவனுடைய காதும் மூக்கும் உதடும் தடித்து வீங்கி, முகம் அவலட்சணமானது. கை மரக் கரண்டியைப் போல ஆனது. கால்களுக்கு அளவும் எடையும் அதிகமானவுடன், அவனால் நகர முடியாமல் ஆனது. குஷ்ட நோயால் அவனுடைய உறுப்புகள் ஆங்காங்கே பாதிப்படைந்தபோது, காய்ந்த மரத்தில் பசை உண்டாவதைப் போல, நீரும் சிவப்பும் கலந்த சில மாமிச மலர்கள் அவனுடைய வீங்கிய கால்களில் உண்டாக ஆரம்பித்தன.

அவன் பெரிய ஒரு மரப்பெட்டிக்கு நான்கு சக்கரங்கள் இணைத்து, ஒரு தள்ளு வண்டி உண்டாக்கி, அதில் ஏறி உட்கார்ந்து, மகனை வைத்து வண்டியைத் தள்ளச் செய்து, ஒவ்வொரு தெருவாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். 


அந்த நிலைமையில்தான் இறுதியாக நான் அவனைப் பார்த்தேன். அந்த தள்ளு வண்டியில், அழுகி நாறும் கடல் பன்றியைப் போல சாய்ந்து உட்கார்ந்திருந்த பரீதிற்கு நான் ஒரு அணாவை விட்டெறிந்தேன். அவன் இறந்துவிட்டதாகப் பெரியம்மா சொல்கிறாள்.

அன்று சாயங்காலம், பரீதின் இறந்த உடலை மூடிப் போர்த்தி ஒரு பலகைமீது வைத்துச் சுமந்தவாறு இரண்டு மூன்று பேர் அந்த சுடுகாட்டிற்குள் வந்தார்கள். அந்த சுடுகாட்டின் கிழக்கு மூலையில் ஒரு குழியைத் தோண்டி, பிணத்தை அடக்கம் செய்து, மண் போட்டு மூடி, இறுதியாக பரீதின் வாழ்க்கையின் இறுதி மைல் கல்லையும் நட்டு வைத்துவிட்டு, அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

நாட்கள் சில கடந்தன. அன்று ஒரு வெள்ளிக்கிழமை.

இரவு, மணி பதினொன்று இருக்கும். நான் மாடியில் இருந்த அறையில் தனியாக உட்கார்ந்திருந்தேன். சாளரத்தைத் திறந்து வெளியே பார்த்தேன்.

நட்சத்திரங்கள் நிறைந்திருந்த வானத்தின் வெளிச்சத்தில் சுடுகாட்டின் இருட்டு சற்று குறைந்து தெரிந்தது. அந்தப் பக்கத்தில் கடற்கரையும், தூரத்தில் கடலும் மேலும் தெளிவாகத் தெரிந்தன. கடல் காற்று மயங்கிக் கிடந்தது.

சிறிது சிறிதாக ஆவிகளைப் பற்றிய என்னுடைய சிந்தனைகள் என் மனதில் வரிசையாக வலம் வந்தன. ஆவிகள் இருக்கின்றனவா? நான் பார்த்ததில்லை. முன்னால் சுடுகாடு இருக்கிறது அல்லவா? அங்கு இருக்குமா?

பரீதின் உடலை அடக்கம் செய்த மூலையை நோக்கி என் பார்வை சென்றது. சற்று தூரத்தில் அந்தக் காட்டுச் செண்பகம் ஒரு பூதத்தைப் போல நின்று கொண்டிருந்தது. பரீதின் ஆவி அங்கு அலைந்து திரிந்து கொண்டிருக்குமோ?

பரீதின் ஆவி! நான் தொடர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். அது எப்படி இருக்கும்? அவன் எப்படிப்பட்ட வடிவத்தில் தோன்றுவான்? தள்ளு வண்டியில் சவாரி செய்கிற மாதிரியா? மீன் கூடைகள் தொங்கும் மரக்கொம்பைத் தோளில் வைத்து, வேட்டியை மடித்துக்கட்டி சுருட்டு பிடித்தவாறா? இல்லாவிட்டால் வெள்ளைச் சட்டை, புள்ளி போட்ட துணி, தொப்பி ஆகியவற்றுடன் வெள்ளிக்கிழமை ஜுமா தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் தோற்றத்திலா? அவன் எப்படி நடப்பான் என்று நான் ஆச்சரியப்பட்டேன். திடீரென்று பரீதின் சமாதி எழுவதை நான் பார்த்தேன். நான் மூச்சை அடக்கிக்கொண்டு அங்கேயே கண்களை விரித்துக் கொண்டு பார்த்தேன்.

அந்தக் சமாதியிலிருந்து ஒரு நீல நிற வெளிச்சம் மெதுவாக உயர்ந்து பிணத்தின் அளவிற்கு அங்கே பரவியது. படிப்படியாக அது மேலும் பிரகாசத்துடன் ஜொலிக்க ஆரம்பித்தது. காற்று இல்லாமலே, அந்த பரவியிருந்த குளிர்ச்சியான நெருப்பு ஜுவாலைகள் சிறிது நேரம் ஜொலித்தன. பிறகு அது அணைந்துவிட்டது.

அந்த அற்புதமான காட்சி கண்களில் இருந்து மறைந்தவுடன், நான் மீண்டும் விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

பரீதின் பஞ்சபூதங்களால் ஆன உடல் அழிந்து மண்ணுக்குக் கீழே போகும்போது, உடலில் இருந்து "பாஸ்பரஸ்’' க்யாஸ் வெளியே வந்து காற்றுடன் கலந்து தனியாக ஜொலிக்கும் காட்சியைத்தான் நான் பார்த்தேன் என்று எனக்குப் புரிந்துவிட்டது. எனினும், என்ன ஒரு காட்சி! அந்த தள்ளு வண்டியில் உட்கார்ந்திருந்த அசிங்கமான கடல் பன்றியால் இப்படி இரத்தின ஒளியைச் சிதறக்கூடிய ஒரு அற்புத ஆவியாக மாற முடியும் என்று நான் சிறிதுகூட நினைத்ததேயில்லை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.